28 July 2009

தனலட்சுமி(களின்) கதை - 1

அவளை நான் முதன் முதலில் பார்த்தது 18கே பஸ்ஸில்.ஓரம் சுரண்டப்படாமல், பேனா கிறுக்கல்களில்லாமல், அழுக்கான கைத்தடங்கள் என ஏதுமில்லாமல், செவ்வக வெள்ளைத்தாளில் சதுரத்துக்குள் சிரித்துக்கொண்டிருந்தாள். பளிச் சென்ற முகம் அவளுக்கு. இரட்டைப்பின்னல், பூப்போட்ட பாவடை சட்டை. கருப்பு வெள்ளைப் படமாக இருந்தாலும், பளிச்சென்று தெரியும் விபூதிக்கீற்று சிரிக்கும் உதடுகள், குறுகுறு பார்வை. மறக்கவே முடியாதபடி பளிச்சென மனதில் ஒட்டிய முகம். ஆனால் அவளின் முகத்தை ஒரு கணம் பார்த்துவிட்டு, சட்டென்று அதன் கீழிருக்கும் எழுத்துக்களுக்குத் தான் தாண்டியது மனமும், கண்களும். செய்தி சொன்னது இவைதான்: அவள் பெயர் தனலட்சுமி, வயது 13, பள்ளிவிட்டு வரும்போது காணாமல் போய்விட்டதாகவும், வீட்டு எண், தெருப்பெயரோடு வெஸ்ட் மாம்பலம் என்றும் சொல்லப்பட்டிருந்தது.என் நிறுத்தம் வந்து பஸ்ஸை விட்டு இறங்கும் மட்டும் அவளை நானும், அவள் கண்கள் என்னையும் பார்த்துக்கொண்டேயிருந்தது. அவளோட என் பந்தம் அதோடு விடாது என எனக்கு அப்போது தெரியாது.

ஒரு வாரம் கழித்து மாம்பலம் ரயில்வே ஸ்டேசனில் இறங்கி காய் வாங்கி வர செல்லும்போது அவளைக் குறித்த போஸ்டர்கள். உடன் வந்த அமித்து அப்பாவிற்கும் சொல்ல, அவரும் வருத்தம் தோய்ந்த முகத்தோடே கடந்துவிட்டார். இப்படியாக நினைவுகளில் நின்றவள், என்னை துரத்திக்கொண்டே எக்மோர் வரை வந்துவிட்டாள். ஆம் அவளைக்குறித்த அந்த போஸ்டர் எக்மோரில் இருக்கும் ராம்ப்பின் ஒரு தூணில் ஒட்டப்பட்டிருந்தது. ட்ரெயினை விட்டு இறங்கி அவசர அவசரமாக வந்தவள், தூணில் ஒட்டப்பட்டு சிரித்துக்கொண்டிருக்கும் தனலட்சுமியின் ஃபோட்டோவைப் பார்த்தபின் பக் கென்று ஆகிவிட்டது. என்னை கண்டுபிடியேன் அக்கா என்று சொல்வதைப் போலவே துரத்திக்கொண்டே வந்தாள். இந்த நிகழ்வு நடந்து ஏறக்குறைய 4,5 மாதங்களிருக்கும். முக்கால்வாசி கிழிக்கப்ப்ட்ட நிலையில் இன்னமும் அந்தத்தூணில் தனலட்சுமியின் போஸ்டர் இருக்கிறது. அவளின் சிரிப்போடு இருக்கும் அந்த முகத்தை மட்டும் யாரோ கிழிக்காமல் விட்டு விட்டார்கள் போலும்.
கவனிக்காதது போல் முகம் திருப்பிக்கொண்டு அவளை கடக்க முடியவில்லை. ஏறெடுத்து அவளின் சிரிப்பைப் பார்த்துவிட்டே கடக்கிறேன் அவ்விடத்தை இன்னமும்..... மனது முழுக்க அவளுக்கு எதுவுமாகாமல் அவளின் பெற்றோர்களிடம் கிடைத்திருக்கவேண்டும் என்ற பிரார்த்தனை மட்டும் இருந்துகொண்டியிருக்கிறது.

பிறகொன்றும் தோன்றும் காணாமல் போனவர்கள் கிடைத்தால், ஒட்டிய போஸ்டர்களை வந்து கிழித்துப்போடமாட்டார்களா. அவர்கள் கிடைத்தார்களா, இல்லையா என்பதை நமது மனதுக்குள் கேள்வியாய் வைத்துவிட்டு போகிறார்களே என்பதாக.

இப்போதெல்லாம் ரயில்வே ஸ்டேசனில் முதியவர்கள் ஃபோட்டோ போடப்பட்ட போஸ்டர்கள்தான் அதிகமிருக்கிறது. அந்த போஸ்டரைப் பார்க்கும் போதே அந்த வயோதிக முகத்தை யார் யாரெல்லாம் ஞாபகம் வைத்து கண்டுபிடிப்பார்களென இவர்கள் ஒப்புக்கு போஸ்டர்கள் ஒட்டுகிறார்கள் எனத் தோன்றும்.வரும் போகும் இரயிலின் சத்தத்தைத் தவிரவும் எப்போதும் சில குரல்கள் இரயில்வே ஸ்டேசனில் ஒலித்துக்கொண்டே இருக்கும். அதில் யாசகம் கேட்கும் ஈனஸ்வர குரல்களும், சைகையினால் கேட்பதுமுண்டு. சில குரல்கள்தான் வித்தியாசமாய் கணீரென்று கேட்கும். அப்படி ஒரு பெண்மணி, நல்ல குண்டாய் இருப்பார், யானைக்கால் வந்து, கால் முழுதும் புண்கள். யாருடைய உதவியுமன்று உட்காரவோ எழவோ முடியாது அவர்களால். ஆனால் அவர்கள் யாசகம் கேட்பது, அம்மா, தாயே என்றிருக்காது. என் பட்டு, ராஜா, எஞ் செல்லம், நான் பெத்த புள்ளைங்களா, எம் பொண்ணே, தங்கமே.அம்மாவுக்கு ஏதாவது போட்டுட்டு போங்கடா. கம்பீரமாகவும் வாஞ்சையாகவும் ஒலிக்கும் அவர் குரல். அனேகமாக அந்தக் குரலைக் கேட்டவுடன், பையில் கையை விட்டு சில்லறையைத் துழாவாத கைகள் மிக சொற்பமே என நினைக்கிறேன்.ஊர் பிள்ளைகளை இப்படி அழைக்கும் அந்த வாய்தானே தன் பிள்ளைகளையும் கூப்பிட்டு கொஞ்சி மகிழ்ந்திருக்கும், இல்லையெனில் அந்தம்மாவையும் அவர்களின் பெற்றோர் அந்த வார்த்தைகளைச் சொல்லி சொல்லி கொஞ்சி மகிழ்ந்திருப்பார்கள் !!!

காலம் எப்போதுமே இப்படித்தான் போல, ஓவ்வொருவரையும் ஒவ்வொரு கட்டத்தில் அவரவர் எண்ணங்களிலும் வாய்களிலும் வார்த்தைகளை மாற்றி மாற்றி வைத்து விளையாடிப் பார்க்கின்றது. ஆனால் சுலபமாக நமக்குத் தேவையான சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டே காலத்துக்குத் தக்கவாறு பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

25 comments:

Anonymous said...

இப்படி பார்க்கும் எத்தனை தனலட்சுமிகளை அன்றைக்கே மறந்தும் விடுகிறோம். மனசைத்தொடும் படி எழுதியிருக்கீங்க அமித்து அம்மா.

நட்புடன் ஜமால் said...

ஆனால் சுலபமாக நமக்குத் தேவையான சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டே காலத்துக்குத் தக்கவாறு பயணித்துக்கொண்டிருக்கிறோம். ]]

மிக சுலபமாக.

நல்லா சொல்லியிருக்கீங்க சகோ!

இப்படித்தான் பல விடயங்களில், ஜாதிகளாகட்டும், அரசியலாகட்டும், நமக்கு எது வசதியோ அதை எடுத்து கொண்டு வியாக்கியானம் செய்துகொண்டு

மட்டுமல்லாது

நம்மை நாமே சமாதானம் செய்து கொள்கிறோம் ...

Suresh Kumar said...

ஆனால் சுலபமாக நமக்குத் தேவையான சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டே காலத்துக்குத் தக்கவாறு பயணித்துக்கொண்டிருக்கிறோம். ///////////////

நிதர்சனம்

அ.மு.செய்யது said...

கவிதையிலிருந்து தனலட்சுமிக்கு கட்டுரைக்கு புரமோஷன் கொடுத்து விட்டீர்களா...

மனதை கனக்கச் செய்த பதிவு ...

கடைசி பத்தி, இது ஒரு தேர்ந்த எழுத்தாளரின் பக்கம் என எனக்கு அறிவுறுத்துகிறது..

சந்தனமுல்லை said...

மனதைத் தொட்ட பதிவு, அமித்து அம்மா ஸ்டைலில்!!

சந்தனமுல்லை said...

அழகா எழுதியிருக்கீங்க..கடைசி பத்தி நச்!

/.ஆனால் சுலபமாக நமக்குத் தேவையான சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டே காலத்துக்குத் தக்கவாறு பயணித்துக்கொண்டிருக்கிறோம்./

ஹ்ம்ம்...

S.A. நவாஸுதீன் said...

டிவியிலும் நாளிதழ்களிலும் வரும் காணாமல் போனவர்களின் புகைப்படம் பார்க்கும்போது (மிகச்) சுலபமாக அதை மறந்தும் விடுவதுண்டு. இந்தப் பதிவைப் படித்ததும் மனது மிகவும் கனக்கிறது.

ஈரோடு கதிர் said...

//எதுவுமாகாமல் அவளின் பெற்றோர்களிடம் கிடைத்திருக்கவேண்டும் என்ற பிரார்த்தனை மட்டும் இருந்துகொண்டியிருக்கிறது//


இது மட்டுமே சாத்தியமாகிறது

வலியூட்டும் பதிவு

sakthi said...

காலம் எப்போதுமே இப்படித்தான் போல, ஓவ்வொருவரையும் ஒவ்வொரு கட்டத்தில் அவரவர் எண்ணங்களிலும் வாய்களிலும் வார்த்தைகளை மாற்றி மாற்றி வைத்து விளையாடிப் பார்க்கின்றது. ஆனால் சுலபமாக நமக்குத் தேவையான சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டே காலத்துக்குத் தக்கவாறு பயணித்துக்கொண்டிருக்கிறோம்.


உண்மை அமித்து அம்மா

அபி அப்பா said...

பதிவைபடித்ததும் வயித்தை பிசைந்தது. உடனே ஊருக்கு போக மனம் அடிச்சுக்குது. பெண்ணை பெற்றவன் ஆயிற்றே!!!!

கார்க்கிபவா said...

இன்றுதான் பார்த்தேன்...

நட்சத்திர வாழ்த்துகள்..

Unknown said...

வேகமாக பாதையைக் கடக்கும் போது எதிர்படும் உன்னிப்பான விஷயங்களைக் கவனிக்கிறீர்கள் என்றால் நிச்சயம் பிரகாசிக்கப் போகிறீர்கள். எந்த விதத்தில் என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும். நல்ல பதிவு. தொடருங்கள் சாரதா....

"உழவன்" "Uzhavan" said...

இதுபோன்ற சுவரொட்டிகளைப் பார்க்கும்போது நம் மனதிற்குள் பல கேள்விகள் எழும். எல்லோரும் இயல்பாய்ப் பார்த்துவிட்டு இயல்பாய்க் கடந்துபோகும் இயல்பான வாழ்வில் அச்சுவரொட்டி உங்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது கண்டு வியக்கிறேன்.

துளசி கோபால் said...

ப்ச்.........(-:

அன்புடன் அருணா said...

இப்ப்டி அடிக்கடி மனதில் ஒட்டிக் கொள்வார்கள் தனலட்சுமிகள்!!!அழகாகப் பதிந்திருக்கிறீர்கள்!பூங்கொத்து!!!

துபாய் ராஜா said...

தனலட்சுமி கிடைத்திருப்பாள் என நம்புவோம்.

அமுதா said...

/*ஆனால் சுலபமாக நமக்குத் தேவையான சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டே காலத்துக்குத் தக்கவாறு பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
*/
நன்றாகச் சொன்னீர்கள்

Radhakrishnan said...

பல விசயங்களைத் தெளிவுபடுத்திய பதிவு. அவரவர் ஓட்டத்தில் தெரியும் விசயங்கள் கரைந்து போய்விடுகிறது காலப்போக்கில். திடீரென நினைவின் ஓரத்தில் வந்து உட்கார்ந்தும் கொள்(ல்)கிறது. அருமையான பதிவு.

கோபிநாத் said...

மனமார்ந்த நட்சத்திர வாழ்த்துக்கள் ;))

கதை - ;(

Deepa said...

//.ஊர் பிள்ளைகளை இப்படி அழைக்கும் அந்த வாய்தானே தன் பிள்ளைகளையும் கூப்பிட்டு கொஞ்சி மகிழ்ந்திருக்கும், இல்லையெனில் அந்தம்மாவையும் அவர்களின் பெற்றோர் அந்த வார்த்தைகளைச் சொல்லி சொல்லி கொஞ்சி மகிழ்ந்திருப்பார்கள் !!!//

கண்கள் கலங்க வைத்த வரிகள். உங்கள் எண்ணங்களும் எழுத்துக்களும் உயர்ந்து கொண்டே செல்கின்றன. வாழ்த்துக்கள்.

தமிழ் அமுதன் said...

///என்னை கண்டுபிடியேன் அக்கா என்று சொல்வதைப் போலவே துரத்திக்கொண்டே வந்தாள்.///

இது போன்ற எண்ணங்கள்தான் சமுக சேவகர்களை உருவாக்குகிறது!!

//ஆனால் சுலபமாக நமக்குத் தேவையான சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டே
காலத்துக்குத் தக்கவாறு பயணித்துக்கொண்டிருக்கிறோம்.//

இது சுய நலம் அல்ல ! சந்தர்ப்ப சூழ் நிலையும் இயலாமையும்தான்!!

Oorsutri said...

neengal kathaiyai arambitha vitham....mika arumai...etho camera valiyaka cinema parthathu pondra unarvu

மாதவராஜ் said...

அருமை! எழுத்தும், பார்வையும் மிகச் சிறப்பு. தொடருங்கள்....

கல்யாண்குமார் said...

காணாமல் போன ’போஸ்டர் பூக்குட்டி’க்காக நிஜமான வருத்தம் கொள்ளும் உங்கள் மனசின் வலியை எங்களுக்கும் கொடுத்துவிட்டீர்கள். எங்கே, எப்படி இருக்கிறாளோ அந்த பூந்தளிர். பெற்றோரைச் சேர்ந்தடைய பிரார்த்திப்போம்!

குழந்தைகளின் மீதான உங்கள் நேசிப்பு தொடரட்டும். உங்களிடம் சிறுகதைகளுக்கான விஷயங்கள் நிறைய இருக்குமென தெரிகிறது. அவைகளை சிறுகதைகளாக பதிவு செய்து பிரபல பத்திரிக்கைகளுக்கு அனுப்புங்கள். வாழ்த்துக்கள்!

M.Rishan Shareef said...

அருமையான கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் அம்மா..நல்ல மொழி. நல்ல பதிவு..!

பாராட்டுக்கள் அம்மா !