29 July 2009

டேங்க் தண்ணி வந்திருச்சேய் !!!

அது ஒரு காலம் கண்ணே! கார்காலம் பொய்த்த காலம், ஆமாம் இடைப்பட்ட 90களில் மிகுந்த தண்ணீர் கஷ்டம்.கொஞ்சம் மேடான ஏரியாவிலெல்லாம் அடி பம்ப்பில் தண்ணீர் வராமல், நாங்கள் இருந்த குடியிருப்பில் மோட்டார் தண்ணீருமில்லை.வீதியில் இருக்கும் 100 அடி நீல நிற நீள பம்ப்புதான் எங்கள் தெருவில் பலபேருக்கு நீராதாரம். அந்த நீரில் சமைக்கவோ, குடிக்கவோ முடியாது. துணி கூட துவைக்க முடியாதென்பது வேறு விஷயம். இருப்பினும் ஆலை இல்லாத தெருவுக்கு அந்த தண்ணிதான் சக்கரையா இருந்துச்சு அப்போ.

எங்கள் தெருவிலிருந்து மெயின் ரோடுக்கு வந்தால்தான் ரெண்டு, மூணு பங்களா வீடுகளில் நல்ல குடிதண்ணீர் வரும். அதில் ஒருத்தர் வீட்டுலதான் எல்லார்க்கும் தண்ணி விடுவாங்க. தண்ணீ தூக்கிகிட்டு வர தூரம், தண்ணிக்காக நிக்குற வரிசை, 10 குடம்னா எக்ஸ்ட்ரா 10 குடம் அடிக்கிற வேலை அப்படின்னு ரொம்பவே கொடுமையான காலகட்டம். இதைப் பார்த்த மாமா நைட் நேரத்துல ஆட்டோ ஓட்டிகிட்டு போய் பீச்ல இருந்து வாரத்துல ரெண்டு நாளைக்கு சேர்த்தே தண்ணி எடுத்துகிட்டு வருவாங்க. உப்பு தண்ணியில்ல நல்ல தண்ணிதான். பீச் மணல்ல சில இடங்கள்ல கொஞ்ச ஆழமா ஊத்து மாதிரி தோண்டி வெச்சு, ஒரு சின்ன பாத்திரம் போகுற அளவுக்கு துவாரமிருக்கும் அதுல நல்ல தண்ணி எடுப்பாங்க அந்த சுத்துவட்டாரத்துல இருக்கறவங்க. விழலுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடறது மாதிரி எங்க மாமா & ப்ரண்ட்ஸ் கோ ஆட்டோ எடுத்துகிட்டு போய் அந்த தண்ணிய எடுத்துக்கிட்டு வருவாங்க., அது வழியா தண்ணிய மோந்து மோந்து குடத்துல ஊத்த ஆரம்பிச்சோம்னா, 10 குடம் நிரம்ப கரெக்ட்டா 1 மணிநேரமாகிடும். பீச் காத்து, அந்த நேரத்துல படுற தண்ணியோட சில்லிப்பு ரொம்ப நல்லா இருக்குமாம், ஆனா எங்கள மாமா அந்த நேரத்துக்கெல்லாம் பீச்சுக்கு கூப்பிட்டு போகமாட்டார். மீறி அழுதோம்னா, அதுக்கப்புறம் அவர் தண்ணி எடுக்கவே போக மாட்டாருங்கன்ற ஆதங்கத்துல, அம்மா எங்கள ரெண்டு சாத்து வைக்க அழுதுகிட்டே தூங்கிப்போவோம், காலைல பார்த்தா எல்லா குடத்துலயும் நல்ல தண்ணியிருக்கும்.

இப்படியே ராத்தூக்கம் கெட, மாமா அண்ட் டீம் இந்த தண்ணி பிரச்சினைக்கு முடிவு கட்ட டேங்க் தண்ணிய தெருவுக்கு கொண்டு வர முயற்சி செஞ்சாங்க. அந்த ஏரியா மெட்ரோ வாட்டர் ஜெ.ஈ, ஏ. ஈ, பி.ஈ ந்னு நாலைஞ்சி ஆல்பபெட்ஸ பார்த்து தெருவுக்கு ஒரு டேங்க் போட்டு டேங்கர் லாரிய வரவெச்சாங்க. டேங்க் வைக்குற இடைப்பட்ட காலத்துல, டேங்கர் லாரியே தெருவுக்கு வந்து தண்ணிவிடும். அந்த சமயத்துல ஏரியால சும்மா சுத்திகிட்டு இருக்குற ஒரு நாலைஞ்சு பேர் எல்லாரையும் வரிசைல வர வெச்சு ஒரு குடத்துக்கு நாலணா வாங்கிகிட்டு, தண்ணியவிட்டு, தண்ணி டேங்குக்கு பாதி, அவங்க தண்ணியடிக்க மீதின்னு தேத்திக்கிட்டாங்க. ஏரியாவுக்கும், அவங்களுக்கும் சேர்த்து தண்ணி ப்ரச்சினை தீர ஆரம்பிச்ச நேரம் எல்லாத்தெருவுக்கும் கருப்பு சிண்டெக்ஸ் டேங்க்கை போட்டாங்க. டேங்கர் லாரி வந்து தண்ணிய அதுல நிரப்பிட்டு போயிரும்.இப்ப பிரச்சினையெல்லாம் யாரு தண்ணி விடுறது என்பதுதான். எங்க தெருவில் ஆரம்பத்தில் யார் அந்த டைம் சும்மா இருக்காங்களோ அவங்க வந்து தண்ணி விட்டுக்கிட்டு இருந்தாங்க.
திடீர்னு எங்க வீட்டுல இருந்து ரெண்டு வீடு தள்ளியிருக்கிற பூனைவீட்டு அம்மா (அவங்கள அப்படித்தான் சொல்லுவாங்க) வந்து, எங்க மாமா கிட்ட யப்பா இது மாதிரி இனி நான் தண்ணி விடுறன்ப்பா, நாஞ் சும்மாத்தான இருக்குறன் வீட்டுல, ஒவ்வொருத்தர் ஒவ்வொரு நாளு விடறாங்க, நெறைய பேருக்கு தண்ணி கெடைக்கல கொஞ்சம் சொல்லுவிடுப்பா, என்பது மாதிரியான பொது நல டயலாக்ஸை அள்ளி வீச மாமாவும், சரிங்க நீங்களே விடுங்க. நான் அவனுங்க கிட்ட சொல்லிடறேன். ஆரம்பத்துல இந்த அம்மா விட அதுக்கப்புறம் இவங்க பையன் கபாலி விட, தெருவுல பாதி வீட்டுக்கு தண்ணிப்பிரச்சினை தீரல.அதாகப்பட்டது நெறைய தண்ணி இவங்க வீட்டுக்கும் வேண்டப்பட்டவங்களுக்குமே போக ஆரம்பிச்சது. ஒரு வீட்டுக்கு மூணு குடம் கணக்குன்னாலும், இவங்க வீட்டுக்கெல்லாம் கணக்கில்லாம போகும். மீறி கேட்டா டெய்லி குட சண்டை நடக்கும். இதுல வேண்டப்பட்டவங்க யாருன்னு பார்த்தா அது பொன்னி வீடு. எங்க குடியிருப்புல இருந்த இன்னொரு வீடு (ஒரே வீட்டில் கிட்டத்தட்ட 10 பேர்) அவங்களுக்கு மூணு குடமெல்லாம் ஜ்ஜூபி. ஆனாலும் முதல் ரெண்டு வாரம் மூணு குடம்தான் அவங்க வீட்டுக்கு போய்க்கிட்டிருந்துச்சு அப்புறம் திடீர்னு அவங்களும் முதல் ஆளா வந்து குறைந்த பட்சம் 10 குடமாவது பிடிக்க ஆரம்பிச்சாங்க, அப்படியே அந்த பெரிய குடும்பத்தின் ஒரே பொண்ணான பொன்னிக்கும், தண்ணி விடும் கபாலிக்கும் காதலும் பிடிக்க ஆரம்பிச்சுச்சு.

அப்ப இந்த் கரகாட்டகாரன் கனகா வோட இம்ஃபேக்ட் ஜாஸ்தி இந்த அக்காங்ககிட்ட, யம்மா, செட் செட்டா தாவணிப்பாவாடையும், ரெட்டைசடை பின்னலும், நல்ல வேளையாய் ரெண்டு சைடும் பூ சுத்திக்காம விட்டாங்க. சூப்பருக்கும் சுமாருக்கும் நடுவே இருந்த பொன்னிக்கு ஆஹா வந்திருச்சு காதலும் அது மூலமா வீட்டுக்கு டேங்க்கு தண்ணியும். அட, அட தண்ணி டேங்க்கிட்ட இவங்க பண்ற அலம்பல் இருக்கே. டேங்க் தண்ணி வந்தவுடனே கபாலி சார் வாட்ச்செல்லாம் கட்டிக்கிட்டு, கொஞ்சம் நல்ல சட்டை போட்டுகிட்டு டேங்க்குகிட்ட வந்துடுவார் (அவர் செய்த ஒரே வேலை டேங்க்தண்ணி விட்டதுதான்) வந்த்வுடன் முன்னே அடுக்கி வைத்திருக்கும் கலர் கலர் குடங்களை எட்டி விட்டு பந்தாடுவது அவரின் ஹீரோயிசத்துக்கு நல்ல சான்று. ச்சே, எல்லாம் போங்க, பின்னாடி போங்க, டேங்க்காரன் தண்ணிய விட்டுட்டு போகட்டும் என்று சவுண்டு குடத்தை விட ஸ்பீடாய் பறக்கும். கபாலியோட அக்கா, அப்புறம் பொன்னி, இவங்க ரெண்டு பேரும் மட்டும் அப்படியே சைடு வாங்கி அப்படியே டேங்க்கு பக்கம் போய்டுவாங்க. டேங்க்கோட மோட்டார் போட்டதுதான் தாம்சம், புடிப்பாங்க புடிப்பாங்க கிட்டத்தட்ட ஒரு அம்பது கொடமாவது புடிப்பாங்க அந்த நல்லவங்க.இப்படியா எல்லோருடைய வயித்தெரிச்சலையும் கொட்டிக்கொட்டியே பொன்னி, கபாலி காதல் வளர்ந்தது. இந்தக் காதல் வெவகாரம் பொன்னியின் அண்ணன்களுக்கு தெரியவந்தவுடன் ரொம்ப பெரிய எதிர்ப்பிருக்கும்னு தெருவே எதிர்பார்த்தது. ஆனா அவங்க நல்லவங்களுக்கு நல்லவங்க போல, கபாலியோட கை குலுக்க ஆரம்பிச்சாங்க.
இப்படி ஃபுல் பீடுல ஆரம்பிச்ச லவ் ஒரு பீரியட்ல வறண்டு போக ஆரம்பிச்சுடுச்சு, அது எப்போனா, டேங்கர் லாரிகள் வாரத்துக்கு ரெண்டு இல்லனா மூன்று முறையோ தான் வர ஆரம்பிச்சுது. சில சமயம் வந்தாலும் ஆறு தெருவிலும் தண்ணீர் விட்டுவிட்டு கடைசியில் இந்தத் தெருவுக்கு தண்ணியிருக்காது. எங்கள் தெருவில் இருக்கும் எல்லோரும் மற்ற தெருவுல போய் தண்ணி பிடிக்க ஆரம்பிச்சாங்க. ஆனால் கபாலி & பொன்னி ஃபேமிலி மட்டும் ப்ரஸ்டீஜ்! பார்த்து மத்த தெருவுக்கு போக மாட்டாங்க. அப்படியே போனாலும் அங்க இவங்களுக்கு “முதல் மரியாதை” யெல்லாம் கிடைக்காது, தண்ணி காலியாகிருச்சு அப்படின்னு மொக்கை வாங்கிட்டு வரவேண்டியதுதான். இந்த சமயத்துல பொன்னிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க !. கபாலி ஃபேமிலிக்கு இருந்த ஒரே சொத்து அந்த தெருவோட டேங்க் தண்ணி மட்டும்தான், அதையும் அவங்க செய்த அராஜகத்தாலேயே அந்த தெருவில் இருப்பவங்க பிடுங்கி கொண்டுவிட்டார்கள். காத்து தெசை மாறி வீசுச்சு, கை குலுக்கிகிட்டவங்க கண்ணெடுத்தும் பார்க்காம போக ஆரம்பிச்சாங்க. கபாலி கருப்பு தாடி வெச்சு தேவதாஸ் மாதிரி ஆனார்.

பொன்னி அக்கா கனகா கெட்டப்புலயே இருந்து சுபயோக சுபதினத்தில் கண்ணாலம் செய்துகிட்டாங்க.கண்ணால்த்துக்கு அந்தத் தெருவில் கபாலி வீட்டார் மட்டும் போகவில்லை. அப்புறம் ரெண்டு மூணு வருடங்கள் கழித்து கபாலி(யும்) மாப்பிள்ளையானார்.மூன்று பிள்ளைகள் பிறந்த பின்னர் கபாலியின் சந்தேகப்பிடுங்கலினால் மனைவி தற்கொலை செய்துகொண்டாள். பொன்னி இப்போதும் சகல சௌபாக்கியங்களோடு கணவர் + குழந்தைகளோடு அம்மா வீட்டுக்கு போகிறாள். கபாலி இப்போது மூன்று பிள்ளைகளோடு வெள்ளைதாடி தேவதாஸாக இருக்கிறார்.
டிஸ்கி: பதிவு பெரிசானதுக்கு மன்னிக்கவும் :)

26 comments:

அபி அப்பா said...

சூப்பர்!!!அந்த 89ல் நானும் சென்னைல தண்ணீருக்காக கஷ்ட்டப்பட்டு இருக்கேன்!!!

சென்ஷி said...

:-)

//டிஸ்கி: பதிவு பெரிசானதுக்கு மன்னிக்கவும் :)//

நல்லவேளை டிஸ்கி சின்னதா முடிஞ்சுடுச்சு!

சந்தனமுல்லை said...

சுவாரசியமா சொல்லி இருக்கீங்க அமித்து அம்மா! கரகாட்ட கனகா இம்பேக்ட் - :-))

சந்தனமுல்லை said...

கபாலி...:-(..ஹ்ம்ம்..!

தமிழ் அமுதன் said...

டேங்க் தண்ணில ஆரம்பிச்சு!

மாமா ,பீச்,சின்டெக்ஸ் ,கபாலி,பொன்னி ,காதல்,சோகம் ,கருப்பு தாடி ;) பொன்னி கல்யாணம், கபாலி கல்யாணம்,கபாலி பொண்டாட்டி தற்கொலை.

அடேங்கப்பா ...! வெளில தண்ணி புடிக்க போனா எவ்ளோ தகவல்கள் கிடைக்குது?

தண்ணி பஞ்சமே இல்லாத ஒரு எடம் இருக்கு! அங்க தண்ணி அடிக்க போனாகூட இம்புட்டு தகவல் கிடைக்காது! ;;)))

Unknown said...

ஊர் வம்புன்னு சொல்லிருவாங்கம்மா. அதனால லேபிளில் புனைவுன்னு சேர்த்துட்டா கண்டுக்க மாட்டாங்க. அதுதானே தமிழ்மண மரபு. :))

நட்புடன் ஜமால் said...

அப்ப இந்த் கரகாட்டகாரன் கனகா வோட இம்ஃபேக்ட் ஜாஸ்தி இந்த அக்காங்ககிட்ட, யம்மா, செட் செட்டா தாவணிப்பாவாடையும், ரெட்டைசடை பின்னலும்,]]

ஹா ஹா ஹா

சூப்பருக்கும் சுமாருக்கும் இடையே ... அட நல்லாயிருக்கே

பல வெள்ளை தாடி தேவதாஸ்கள் அதிகம்

நினைவுகளை மீட்டேடுத்து அருமையா சொல்றீங்க ...

கே.என்.சிவராமன் said...

நைஸ் அப்சர்வேஷன் அமித்து அம்மா...

சென்னை நகரத்தோட தண்ணீர் பஞ்சம் பத்தின பதிவுல ஒரு லவ் ஸ்டோரிய பதமா, அழகா மிக்ஸ் பண்ணியிருக்கீங்க... வேதனையோட தாக்கம் இதுமாதிரியான சுவாரஸ்யங்களாலதான் மட்டுப்படுது.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

butterfly Surya said...

தண்ணீர்.. தண்ணீர்..

அருமை.

pudugaithendral said...

டாங்கர் லாரித்தண்ணியப்பத்தி நான் கொசுவத்தி சுத்தனும்னு நினைச்சுகினு இருந்தேன். நீங்க சுத்திட்டீங்க. பதிவு பெருசா இருந்தா என்ன சுவாரசியமா இருந்துச்சு.

Bee'morgan said...

கொசு வர்தினு படிக்க ஆரம்பிச்சா, அதுக்குள்ள இப்படி ஒரு காதல் கதையா..?
அருமை.. :)

ஈரோடு கதிர் said...

அற்புதமா எழுதியிருக்கீங்க...
கடைசிவரை ஒரு திரில் இருந்ததுங்க

அன்புடன் அருணா said...

டேங்க் தண்ணிலெ இவ்வ்ளோ மேட்டரா????

குடந்தை அன்புமணி said...

நல்ல கொசுவர்த்திங்க. இடுகை பெரிசா இருந்தாலும் சுவாரசியமா இருந்ததுல தெரியவேயில்லை.

SK said...

சரி ரைட்டு :-)

"உழவன்" "Uzhavan" said...

//டிஸ்கி: பதிவு பெரிசானதுக்கு மன்னிக்கவும் :)//
 
இப்ப எதுக்கு இந்த டிஸ்கி? பதிவு பெருசுனு நாங்க எப்பவாவது பீல் பண்ணிருக்கமா :-)
 
//ஜெ.ஈ, ஏ. ஈ, பி.ஈ ந்னு நாலைஞ்சி ஆல்பபெட்ஸ பார்த்து
ஏரியாவுக்கும், அவங்களுக்கும் சேர்த்து தண்ணி ப்ரச்சினை தீர ஆரம்பிச்ச நேரம்
சவுண்டு குடத்தை விட ஸ்பீடாய் பறக்கும்...
 
இப்படி நிறைய இடங்களை ரசிக்க முடிந்தது.
 
சென்னையின் தண்ணீர் பஞ்சத்திற்கு நானும் விதி விலக்கல்ல. பத்து வாட்டர் பாக்கெட் வாங்கி காலைக் கடன்களை முடித்து பெர்ஃயூம் துணையோடு ஆபீஸ் சென்ற அனுபவம் உண்டு :-)

rapp said...

//செட் செட்டா தாவணிப்பாவாடையும், ரெட்டைசடை பின்னலும், நல்ல வேளையாய் ரெண்டு சைடும் பூ சுத்திக்காம விட்டாங்க.//

சான்சே இல்லை:):):)

அப்துல்மாலிக் said...

ஹா ஹா அது ஒரு காலம் இல்லே?

Unknown said...

சூப்பர் அமித்தும்மா! கலக்குங்க.

Unknown said...

எங்கூர்ல தண்ணில் கஷ்டம் இருக்கலை.. பக்கத்தில ஒரு கோயிலிலும் இன்னொரு வீட்டிலும் நல்ல தண்ணி அள்ளிடுவோம்.. மத்த தண்ணி எல்லாம் வீட்டிலேயே ரண்டு கிணறில எடுத்துடுவோம்.. ஆனா தண்ணி அள்ள ஆண்டிங்களும் நம்ம மாதிரி இளவட்ட பசங்களும் மட்டுமே வருவாங்க... பொண்ணுங்க தலையே காட்டமாட்டாங்க.. ஹூம்.. நானும் சென்னையில் தண்ணி லாரி வர்ற ஒரு ஏரியாவில பிறந்திருக்கலாம்

அமுதா said...

ம்... சுவாரசியம். ஒரு காலத்தில் நானும் குடம் தூக்கியிருக்கேன். அந்த பெருமை இந்த சென்னை தண்ணீர் பஞ்சத்திற்கே சேரும் :-)

தேவன் மாயம் said...

அந்த சமயத்துல ஏரியால சும்மா சுத்திகிட்டு இருக்குற ஒரு நாலைஞ்சு பேர் எல்லாரையும் வரிசைல வர வெச்சு ஒரு குடத்துக்கு நாலணா வாங்கிகிட்டு, தண்ணியவிட்டு, தண்ணி டேங்குக்கு பாதி, அவங்க தண்ணியடிக்க மீதின்னு தேத்திக்கிட்டாங்க. ///

நல்லா இருக்கே நம்ம மக்கள் வேலை!!!

☀நான் ஆதவன்☀ said...

எங்க ஏரியாவுல தண்ணிவிட்ட பெரிய மனுசங்க நாங்க தான் :) வீட்ல சும்மா இருக்கான்னு என்னைய கூட்டிட்டு போயிருவாங்க.

ஆனா அது நடந்தது இப்ப தான் 97,98ல. 90 இந்த மாதிரி நடந்தது லைட்டா நினைவிருக்கு

Anonymous said...

சூப்பரா எல்லாத்தையும் கவனிச்சிருக்கீங்க. கனகா கெட்டப் போட்டு எத்தினி பேர் அலைஞ்சாங்க ஒருகாலத்துல ;)

அ.மு.செய்யது said...

ஆஹா...இன்னிக்கு ஏதோ சமூகப்பிரச்சனை கைல எடுத்துறீக்கீங்கன்னு பாத்தா,
பின்னாடி ஒரு அதிரடி காதல் கதைல வந்து நிக்குது..

அடிச்சி ஆட்றீங்க...வாழ்த்துக்கள் !!!

அ.மு.செய்யது said...

//அபி அப்பா said...
சூப்பர்!!!அந்த 89ல் நானும் சென்னைல தண்ணீருக்காக கஷ்ட்டப்பட்டு இருக்கேன்!!!
//

அப்போ எனக்கு நாலுவயசு....வெவரம் தெரியாது பாருங்க..