31 October 2008

தேவைப்பட்டால்


இரும்பாலும்
கற்களாலும்
ஆனாலும்
கூட
நேர்க்கோட்டில்
செல்லும்
தண்டவாளமும்

வளைந்து
கொள்கிறது
தேவைப்பட்ட
இடங்களில்

30 October 2008

சோறூட்டல்

இடுப்பில் அமித்து
கையில் குழைத்த பருப்பு சாதம்

எனக்கு ஒரு கை சாதம்
அவளுக்கோ அது நான்கு வாய் சாதம்

அம்மு, அங்க பாரு டாமி டாமி
ம் ஓய் ம் ம் ம் ஓய்
ஒரு வாய் உள்ளே போய் விடும்

டாமி கிட்டே போவது
எனக்கு பயம் தரும் விசயமாதலால்
தூரமாய் இருந்தே மறுபடியும் டாமி டாமி
டாமி பாரும்மா
இந்த டாமி கூப்பிட்டா வருதா பாரும்மா
ஓய் ஹோய்என்று சொல்ல வாயை திறக்கும்
வேளையில் இன்னொரு வாய்உள்ளே போகும்

அதற்கப்புறம்டாமி கூப்பிடுவது போர் அடித்துவிடும்
அம்மு மியாவ் டா குட்டி
இரண்டு காலையும் உதறி கொண்டே -ம்ம்ம் என்பாள்
இப்பொது ஒரு வாய்உள்ளே போகும்

இப்போதுடாமி, மியாவ் இரண்டும் போரடித்துவிடும்
அம்மு அம்மு அங்க பாருடா ஆட்டோ
அதோ பாருடா ஏரோப்ளேன்-
ம்ஹும்வாயை திறந்தால் தானே.

அம்மு அம்மு கோழிடா
ம் கொய்யீ இப்போ ஒரு வாய்

இடையிடையே ஏதாவது
இரு சக்கர வாகனம் வந்தால் இல்லை

ஏதேனும் சின்னப்பசங்க வந்தால்
என்று ஓரிரு வாய் உள்ளெ போகும்

இதற்கப்புறம் எல்லா உணவும் பூமிக்கு உரம்தான்

மழைக்காலங்களில்
இந்தப் பாச்சா எதுவும் பலிக்காது
எனவே இந்த மாதிரிசமயங்களில்
எங்களுக்கு கை கொடுப்பது பம்பரம்
அவரின் தாத்தா பம்பரம் விடுவார்

அது சுத்தும் போது
ஹாய் என்று அமித்து கத்தும் போது
ஒரு வாய் உள்ளே போய்விடும்

இதுபோல் சென்ற
மழைக்காலங்களில் ஒரு நாள்
சோறுட்டல் நிகழும்போது
நான் அவள் வாய் திறந்ததை 2,3 முறை தவறவிட்டு விட்டேன்
அதற்கு அவரின் தாத்தா
என்னம்மா நீ அவ வாயை திறக்கற போது ஊட்ட மாட்டேன்ற.
விட்டுடறே
உனக்கு அவளுக்கு சோறுட்டவே தெரியலம்மா.
-ம்ஹீம் என்னிடம் இருந்து பதிலே வரவில்லை. பதில் சொல்லவும் தெரியவில்லை.

ஏனோ வெண்ணிலாவின் கவிதை ஒன்று மட்டுமே ஞாபகம் வந்தது.
நானும் அந்த நாயும்குழந்தைக்கு சோறூட்டும்
அந்த மையப்புள்ளியில்சந்தித்துகொள்கிறோம்.
கையில் எடுக்கும் ஒவ்வொரு கவளமும்
உள்ளே போகவேண்டும் என்று நானும்
கீழே விழவேண்டும் என்று நாயும்
அவரவர்க்கான எதிர்பார்ப்பில்

என்ன சொல்ல, எப்படி சொல்ல


அமித்துமேல் நெறைய கம்ப்ளெயின்ட் வர ஆரம்பிச்சுடுச்சு.

அதில் ஒன்று : அவள் ஆண்பால், பெண்பால் என்று எல்லா பாலரையும், பெரியவர்களையும், ஏய், டேய் என்று சொல்லுவது.


சரி இதைத் திருத்தலாம் என்று, அமித்துவை மடியில் போட்டுக்கொண்டு

டேய் குட்டா
சே நானே இப்படி கூப்பிட்டா, இவளும் இதைத்தானே பாலோ பண்ணுவா, (மொதல்ல நாம திருந்தனும்) என்று

அமித்து குட்டி
நீங்க ஏன் இப்படில்லாம் பேசுறீங்க

ஏய், டேய் எல்லாம் பேசக்கூடாதுடா
நீங்க அழகா வணக்கம் சொல்றீங்க
அழகா குட்மார்னிங் சொல்றீங்க
அழகா குட்நைட் சொல்றீங்க
ஆனா
என்று நான் சொல்லி முடித்து அவள் முகத்தைப் பார்க்கையில்
அவளின் கையை நெற்றியில் வைத்து வைத்துக்கொண்டிருக்கிறாள்
(குட்மார்னிங் சொல்லு, குட்நைட் சொல்லு - நெற்றியில் கை வைத்து ஒரு சிரிப்பை உதிர்ப்பாள், இது வாடிக்கை நிகழ்வு)
(நான் அவளை குட்நைட்டா சொல்ல சொன்னேன்)

நான் என்ன சொல்ல
மீண்டும் எப்படி சொல்ல நான் அவளுக்கு சொல்ல வந்ததை.

நான் கற்றுக்கொடுக்க வந்தேன் ஒரு அன்னையாக
ஆனால் மாறிப்போனேன் ஒரு குழந்தையாக
.

24 October 2008

என் டெஸ்க்டாப்பில்

நன்றி அழைத்த தீஷு அம்மாவுக்கு.



என் டெஸ்க்டாப்பில் ஏதும் இருக்காது. (காரணம் : டெஸ்க்டாப்பில் Picture / Image ஏதேனும் இருந்தால் ஸிஸ்டம் ஸ்லோவாக இருக்கும் என்று முன்னொரு நாள் எங்கள் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் சொன்னதிலிருந்து நா படம் வைக்கறது இல்லீங்க ) இது உண்மைதானா என்று, யாராச்சும் சொல்லுங்கள். அந்த அட்மினிஸ்ட்ரேட்டரை உண்டு இல்லைனு ஆக்கிடறேன்.


ஆனால் எல்லா Picture / Image ம் உள்ளே எனது பெர்சனல் போல்டரில் இருக்கும்.
ஹி ஹி. வெளியே தானே இருக்கக்கூடாது. உள்ளே இருக்கலாமே.

21 October 2008

காதில் விழுந்து மனதை பாதித்த உரையாடல்

இன்று காலை ரயில் நிறுத்தம், சற்றே மழை நின்றிருந்த நேரம்.ஓட்டமும், நடையுமாக உள்ளே நுழைந்த என்னை சற்றே நிறுத்தி நிதானப்படுத்தியது பின்வரும் உரையாடல்.

இரண்டு முதியவர்கள் மெல்ல படியேறிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஆணுக்கு கொஞ்சம் வயது அதிகமிருக்கலாம். அவரை கை பிடித்து அழைத்து செல்லும் வயதான பெண்மணிக்கு அவரை விட சற்று குறைவான வயது இருக்கலாம்.

பாட்டி: உன்னை உங்க வூட்டுல நல்லா பாத்துக்கறாங்களா.

தாத்தா: ஆம். அதுக்கின்னா. நல்லாதான் பாத்துக்குறாங்கோ.

பாட்டி: ம். ஆமா உங்கிட்ட பணம் இருக்குது. பென்சன் வருது. நல்லாதான் பாத்துப்பாங்கோ. என்ன சொல்லு.

தாத்தா: ஏன் இன்னா

பாட்டி: ம். இருக்க சொல்லோ எல்லா நல்லாதான் இருந்தது. இப்ப நம்மகிட்ட ஒன்னியும் இல்ல. நாய் படாத பாடா இருக்கு. தோ. காலீல இருந்து இந்த மழைல ஒரு டீ த்தண்ணிக்கு விதி இல்ல வூட்டுல. யாரும் இன்னான்னு கேக்கறது இல்ல. இன்னாத்த சொல்றது.
இன்னமும் பேசிகொண்டே நடக்கிறார்கள். அதற்குள் எனக்கு வர வேண்டிய ட்ரெயின் வரவே நான் அவர்களை வேகமாக கடந்துவிட்டேன்.

ஆனால் அந்த உரையாடல் இன்னமும் என் மனதை விட்டு அகலவில்லை. நம்ம வீட்டுல இருப்பவர்களை நாமே கவனிக்காமல் போனால் பின் யார் கவனிப்பார். வீட்டிலுல்ல வயதானவர்கள் மீது இப்படி வெறுப்பை உமிழ எப்படி இந்த சமூகம் கற்றுக்கொண்டது. வயதான பின்னர் அவர்களை நம் பெற்றோர்களாய் பார்க்க மறந்தது ஏன். இப்படியாய் ஏகப்பட்ட கேள்விகள்.

இதெல்லாம் சரியே. ஆனால் கொஞ்சம் "கொசுவர்த்தி" சுத்தி நினைவுகளின் பின்னால் சென்றால், நான் சரியல்ல.

என் அப்பா மிகவும் வயதானவர். மிகவும் என்றால், என்னை அவரோடு பார்ப்பவர்கள் நான் அவரின் பேத்தி என்று சொல்லுமளவுக்கு. எனக்கும் என் அக்காவுக்கும் 17 வயது வித்யாசம். என் அக்காவின் திரும்ணத்தின் போது எனக்கு ஒரு வயதுக்கும் குறைவே.

என் அப்பாவுக்கு வயதான காரணத்தினாலேயே என் பள்ளிக் காலத்தில் மனதளவில் பட்ட வேதனைகள் ஏராளம். எல்லாருக்கும் ப்ராக்ரஸ் கார்டு வாங்க அப்பா வருவார்கள். நான் அவர் வரக்கூடாது என்று அழுவேன். ஏனெனில் அவர் என் ஸ்கூலுக்கு வந்தால் என் சக தோழிகள் என் காது படவே கிண்டல் செய்வது என்னை மிகவும் பாதித்தது. எல்லாவற்றிற்கும் என் அக்காவையே அழைத்து செல்ல நேர்ந்தது.

பள்ளியில், வெளியில் என்று எங்குமே தனித்து விடப்பட்டவளாய் உணர்ந்தேன். பள்ளியில் எந்தப் போட்டிகளிலும் கலந்து கொள்ளமாட்டேன். அதிகம் யாருடனும் பேசமாட்டேன்.
யாரவது அப்பாவுடன் செல்வதைப் பார்தால் எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கும். அந்த ரெண்டும் கெட்ட வயது அப்படியோ, என்னால் எதையும் ஏற்றுகொள்ளவே முடியவில்லை.
பாதிப்பின் உச்ச கட்டம் அவரை கண்டாலே எனக்கு வெறுப்பாய் வரும்.

இப்படியாக நிறைய பாதிப்புகள். இந்த பாதிப்பெல்லாம் சேர்ந்து ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதை இப்படி முடியும்.

இப்படியாக
எனக்கு இன்சியல் மட்டும் தந்துவிட்டு
எதிலும் என்னுடன் வராமல்
கடைசியில் பாத பூஜைக்கு மட்டும் வந்து
முன்னிற்பாயோ
நீ என் தந்தை
என்று
சபையோர் கூற.

இக் கவிதை எழுதி சில வருடங்கள் கழித்து எனது திருமணம் நடந்தது. என் அப்பா உயிரோடு இருந்தும் பாத பூஜை செய்துக்கொள்ளவில்லை. காரணம் அதற்கு சில மாதங்கள் முன்னர் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது, கண் பார்வை மங்கிவிட்டது. அவரால் எழக் கூட முடியாத உடல்நிலை. அவரை அவரின் உடல்நலம் சரியாய் இல்லாதபோது கூட சரிவர கவனித்துக்கொண்டது கிடையாது. எல்லாம் என் அக்காவே செய்வாள்.(ஆனால் இப்போது நினைத்தால் அழுகையாய் வருகிறது)

அந்தக்கவிதையை கட்டாயம் அவர் படித்திருக்க மாட்டார். அவருக்கு எழுதப்படிக்க தெரியாது. ஆனால் அவர் என் திருமணத்திற்கு வரவும் இல்லை. அவர் காலில் விழ்ந்து ஆசி பெரும் நிகழ்வும் வாய்க்கவில்லை. (என் கவிதை எப்படி அவரின் காதில் விழுந்திருக்ககூடும். சே நான் எழுதிய அந்த வார்த்தைகள் .)

இப்போது அவர் உயிரோடு இல்லை. ஆனால் அவர் உயிரோடு இருக்க மாட்டாரா, நான் அவரை நல்லபடியாக பாத்துக்கொள்ள மாட்டேனா என்று ஏங்குகிறேன். நான் ஒரு பாவி அப்பா. எந்த ஜென்மத்திலாவது இதை வாசிக்கும் வாய்ப்பு நேர்ந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா.

20 October 2008

அது ஒரு காலம் கண்ணே கார்காலம்



ஒரு மழைக்காலத்தின்
இரவில்

மெல்லிய குளிரின்
கனம் தாங்காமல்
கம்பளி போர்த்திக்கொண்ட
போது
உணர்ந்தேன்
நண்பனே

நம் கடைசிப்பிரிவின்
கைக்குலுக்கல்களின்
வெம்மையை
.

15 October 2008

சினிமானுபவங்கள்

என்னைய எழுத சொல்லி வற்புறுத்திய (!?!) சந்தனமுல்லை மற்றும் குடுகுடுப்பையாருக்கும் நன்றி. (ஏண்டா சொன்னோம்னு இருக்குல்ல)

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்.

முதல் அனுபவம்: என்ன படம்னுலாம்னு நினைவில்லை. ஊர்ல எங்க அம்மாவோட பாத்தது. தரை (மண்) டிக்கெட், சேர்(கட்டை சேர்) டிக்கெட், என்னை சேர்ல உக்கார வெக்கலைன்னு அழுதுகிட்டே தூங்கிட்டேன்.
அப்புறம் எதோ ஒரு சாமி படம். இது நல்ல ஞாபகமிருக்கு. கடைசியில ராதாரவின்னு நினைக்கிறேன். அவரை சுட்டுடுவாங்க. அவர் சுடப்பட்டு உடம்பெல்லாம் ரத்தமாகி செத்துடுவார். இதைப் பாத்துட்டு அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு இன்னொரு படம் பார்க்கிறேன். அதில் அதே ராதாரவி உயிரொடு இருக்கிறார்.
எனக்கு அந்தப் படத்தில் மனம் செல்லவேயில்லை. எனது மனம் முழுதும் எப்படி செத்தவர் திரும்பி வந்தார்னுதான் சந்தேகம்.

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தசாவதாரம். நான், அமித்து, அமித்து அப்பா மற்றும் அவரின் நண்பர் குடும்பம், மாயஜால் அரங்கில் பார்த்தோம். நான் பாதிவரை படம் பார்க்கவில்லை. அமித்துவை தான் பார்த்துகொண்டு இருந்தேன். இடைவேளை வரை ஒரு சிறு அழுகை கூட இல்லாமல் சும்மா சூப்பரா ரசிச்சாங்க.

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?பிரிவோம் சந்திப்போம். வீட்டில் வீ சி டியில் பார்த்தேன். கொசு கடித்ததைதான் உணர்ந்தேன்

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

அந்தக் கொடுமைய எப்படி சொல்றது."செல்வம்"ன்னு ஒரு படம். இயக்குனர் அகத்தியன் இயக்கியது.எனக்கு அந்த நடிகரை ஆம் நன்தா அவரை ரொம்ப பிடிக்கும் (ஹி ஹி)அதனால ஃப்ரெண்டோட பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ. சக்தி அபிராமி தியேட்டர்.3 1/2 மணி ஷோ. 3 3/4 வரை ஆரம்பிக்கவே இல்லை. அப்புறம் ஒரு வழியா 4 மணிக்கு ஆரம்பிச்சாங்க.மொத்தம் 12 பேர் அந்த ஹாலில்.நான், எனது ஃப்ரெண்ட், ஒரு 45 வயது பெண்மணி, 6 வாலிபர்கள், மீதி மூவர் நடுத்தர வயது ஆண்கள்.ப்பா மண்டை காஞ்சிடுச்சி. நானும் எம் ஃப்ரெண்டும் ஒருத்தர ஒருத்தர் பாத்து சிரிச்சிக்கிறதை தவிர வேறு வழி இல்லை.இதுல கொடும என்னன்னா, படம் முடிஞ்சி வெளியே வந்தா,நடிகர் நந்தா, அப்படத்தின் இயக்குனர், ப்ரொடியூசர் எல்லாம் இருக்காங்க.அதில் அப்பட ப்ரொடியூசர் மேடம் படம் நல்லா இருக்கா என்று கேட்டாரே பார்க்கலாம். ஒரே ஓட்டம்தான். ஆனா அந்த ப்ரொடியூசரை பாக்க ரொம்ப பாவமா இருந்துச்சி.

மற்றபடி என்னை பாதித்த சினிமா

உதிரிபூக்கள், நீங்கள் கேட்டவை, குருதிப் புனல், அன்பே சிவம்

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

அப்ப அப்ப நடக்கிற நடிகர்களின் அரசியல் ப்ரவேசங்கள்


தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ஆனந்த விகடனின் சினிமா விமர்சனம்.

கிசுகிசு ஏரியா நோ. ஒற்றை எழுத்து நடிகை, மீசை நடிகர் என்று ஆரம்பித்தவுடன் யாராயிருக்கும் அவர் என்று ஆராய்வதிலே பாதி நேரம் வேஸ்ட். அதனால் இந்த ஏரியா கொஞ்சம் அலர்ஜி.

தமிழ் சினிமா இசை?

MSV யில் இருந்து இப்போதைய யோகி.பி வரை நல்ல பாடல்கள் எதுவாக இருப்பினும் ஐ பாடில் டவுன்லோட் தான்.

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நான் பார்த்த வேற்று மொழி திரைப்படம் ஜுராசிக் பார்க் மற்றும் கடந்த வாரம் சன்னில் பார்த்த அனகோன்டா.

தாக்கிய படங்கள் ஜாக்கி சானுடையது. உபயம் விஜய் டிவி.

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நா. முத்துக்குமார் மற்றும் அறிவுமதியுடன் கொஞ்சம் தொடர்பு இருந்தது.அதுவும் கவிதைக்காகவும் கவிதை நூல்களுக்காகவும். இதனால் நான்தான் மேம்பட்டேன்(!?!)


தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஏதோ அப்ப அப்ப அமீர், தங்கர், சேரன், சசிகுமார் மாதிரி வந்து ஏதோ செய்றாங்க.
ஆனா நம்ம ஹீரோங்க எல்லாம் பன்ச் டயலாக் பேசியும், ஹீரோயினுங்க குட்டை பாவாடை டேன்ஸ் ஆடியே அதையெல்லாம் காலி பண்ணிடறாங்க.

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

பத்திரிக்கைகள் சர்க்குலேசன் தான் பாதிக்கப்படும்.

அப்புறம் உலக தொலைக்காட்சி வரலாற்றில் என்ற புகழ் பெற்ற வாசகம் வழக்கொழிந்து போயிருக்கும்.

தமிழ் மக்கள் மெகா சீரியலில் மூழ்கி முழு பைத்தியமாக வாய்ப்புகள் அதிகம்.

நான் அழைப்பது

ரம்யா

மற்றவரை எல்லாம் ஏற்கனவே அழைத்துவிட்டார்கள்.

10 October 2008

பொருள் வழிப் பிரிவு



எட்டி எட்டி வரும்
உன் சிங்கார சிறு கையை
விலக்கிவிட்டு
கன்னத்தில் சின்னக் கிள்ளல்
வைத்துக்கொண்டே
அம்மா
ச்சாயங்காலம் சீக்கிரம்
ஆபிச் லந்து வந்துடுவேன் டா
அம்மாவுக்கு
நாளைக்கு லீவுடா
உன்கூடவே இருப்பேன்டா
என்று சொல்லி
அலுவலகத்துக்கு புறப்படும்
என்னை
கழுத்து வளைத்து பார்க்கிறாய்
ஆயாவின் இடுப்பில் அமர்ந்துகொண்டே
கையை அசைத்து டாட்டா சொல்கிறாய்
தாத்தா சொல்லிக்கொடுத்தாற் போலவே
புருவம் சுருக்கி,
கண்கள் இடுக்கி
இதழ்கள் மலர
சிரித்துகொண்டிருக்கிறாய்
.

ஆனால்
உன் புருவம் சுருக்குதல்
சொல்லிவிட்டது
மகளே
இவள் எங்கே போகிறாள் என்று நீ நினைப்பதை.
ஆனாலும் எனக்கு
புரியவில்லை
உன் சிரிப்பு
நான் சொல்லியது
புரிந்தா நீ சிரித்திருப்பாய்.
ரயில் பிடிக்கும்
அவசரத்தில்
அப்போது மறந்தாலும்
ஆபிஸில் வந்து
அழுது கொண்டே
நினைத்துக்கொள்கிறேன்
உன் சிரிப்பை

09 October 2008

சாப்பாட்டு பிரியர்களுக்கு

வீணை மீட்டும் கைகளே DEAR STUDENTS

இந்த செருப்புதான் கடிக்கவே இல்லை
நான் சிகப்பு மனிதன்

ஆறடி சுவருதான் ஆசையை பிரிக்குமா

இரு வந்து உன்னை புழியறேன். ஐயோ வெறும் காத்துதான்ப்பா வருது

Bun-னின் கையில் உற்றுப்பார்த்தேன் ஒற்றை நாணயம்.
அழகோவியம் குளிக்கப் போகுது
ஓ பட்டர்ஃப்ளை


ரொம்பக் கடி ச்சிட்டேன்னு தெரியுது
சாரி
யாரும் என்னிய திட்டாதீங்க