Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

29 March 2010

கூனன் குள்ளச்சியின் காதல்

டங்ங்க்... டங்ங்க்...... யாரோ தெருபம்ப்பில் தண்ணியடிக்கும் சத்தம். அந்த நீளக் கைப்பிடியை மேலே ஒரு தூக்கு, கீழே ஒரு இறக்கு இறக்குவதற்குள் போதும் போதும் என்றாகி, ஒரு குடம் அடித்து நிரப்புவதற்குள் அப்பாடான்னு போய்விடும். டங்ங்க்..... மீறி ஒலித்தது, பெம்மாளே, என்ன ஏன் இப்படி வெச்ச, என்னக் காப்பாத்து, என் முதுவுல இருந்து இத எடு பெம்மாளே... என்ற கூனனின் குரல்

ம்ம்க்கும், இது ஒன்னுதான் கொறைச்சலு அடுத்த டங்ங்க்..க்கு நிற்பவர்களோ இல்லை அப்போது பம்ப் அடித்துக்கொண்டிருப்பவர்களின் உதடுகளோ இயல்பாக முணுமுணுக்கும்.

அறுபதடி தெரு பம்ப்புக்கு ஒட்டினாற்போலதான் அந்தச் சின்ன பெருமாள் கோயில், வாசலில் நீள கருங்கற்கள் ரெண்டு, மூணு படிகளாய் அமைந்திருக்கும். சமயத்தில் மாடுகளை கட்ட, மதிய நேரத்தில் உட்கார்ந்து தாயபாஸ் விளையாட,வீட்டில் மனைவியோடு கோவித்துக்கொள்ளும் செட்டியாருக்கு படுக்கையாக என அந்த சின்னக்கோவிலின் பக்கவாட்டுப்படிகள் மிகவும் உதவியாய் அமைந்திருந்தது. கூட, கோவிலை மேய்ப்பார் யாருமில்லை, சாயங்காலத்தில் வயதான தாத்தா ம்ம்க்கும், ம்க்கும் என்று செருமிக்கொண்டே டேய் நகருங்கடா, அந்தப்பக்கம் போய் விளையாடுங்க, இனிமே இந்தக்கோயிலுப் பக்கம் ம்க்கும்... யாரயாவது... ம்க்கும் என்றபடியே கதவைத் திறந்து தொங்கிக்கொண்டிருக்கும் மணிவிளக்கை ஏற்றிவிட்டு, கொஞ்ச நேரம் பஜனை பாடிவிட்டு கோவிலை மூடிவிடுவார்.

சந்துக்குள்ளே, அதுவும் பக்கவாட்டில் அமைந்திருந்ததால் ஏரியாவிலிருந்த மற்ற அம்மன் கோவில்களைப்போல அதிகப்பிரசித்தியாகவில்லை. பக்கவாட்டே தேவலாம் என்பதைப் போல கோவிலின் முன்புறம் நான்கு மணிக்கு மேல் களைகட்டும். ஸ்கூல் விட்டு வந்த பசங்களனைவரும் கோலி, பம்பரம் ஆட, அஞ்சு மணிக்கு மேல் உண்டைக்கார ஆயா கடலைமாவு, வாழக்காய், அரிந்த வெங்காய அலுமினிய டப்பாக்கள் சகிதம் வந்து ஒரு கட்டைப்பொட்டியை நிமிர்த்திவைத்து, பக்கவாட்டில் தகரத்தை சாய்த்து அடுப்பைப் பத்த வைத்தால் நாடா விளக்கு சகிதம் பஜ்ஜி, போண்டா வியாபாரம் ஜரூராக தொடங்கிவிடும். அதே இடத்தில் காலையில் இட்லி, தோசை வியாபாரம்.

சுல்லி வீட்டின் ஆகப்பெரும் பஞ்சாயத்துக்கள் அந்தக்கோவிலின் வாசலில்தான் நடைபெறும். வீட்டுக்குள் சேர்க்காத சுல்லியின் தம்பி சாம்பாருக்கு பெருமாள் கோவில் தான் வீடு, போதாக்குறைக்கு இரவு குடித்துவிட்டு வந்து அசிங்கசிங்கமாக பேசுவதைக்கெட்ட பெருமாளே கோவிலை விட்டு ஓடிவிட்டார், அதான் இந்தக்கோயிலு இப்படி சீந்துவாரில்லாம கெடக்குன்னு காற்று வாக்கில் வார்த்தைகள் பறக்கும்.

திருமங்கையாழ்வார் அருளிச் செய்த.... என்றபடியான கல்வெட்டுக்களை நிலைவாசப்படியில் தாங்கிய, உள்ளே எண்ணெய் பிசுக்கால் இன்னும் கருப்பாய் மாறிய பெருமாள், தாயார் விக்ரகங்களை தாங்கியபடி பழைய சுவர்களோடு நின்றிருக்கும் அந்த சின்னக்கோயில். கோயிலில் இருக்கும் பெருமாளின் பிரதான பக்தன் ஒரே ஒருவன் கூனன் தான். காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து சாம்பலில் பல்லைத்துலக்கிவிட்டு, குளிப்பானா இல்லையாவென்று அவனை வளர்த்துக்கொண்டிருக்கும் பழக்கார கிழவிக்குக்கூட தெரியாது, நெற்றியில் விபூதிப்பட்டை, காக்கி ட்ரவுசர், இன்ன கலர் தான் என்று சொல்ல முடியாத நைந்த சட்டை, மேற்சட்டைக்கும், கால்சட்டைக்கும் இடையே ஒரு ஜாண் இடைவெளி வந்து நடக்கும்போது தொப்புள் தெரியும். இதற்கு காரணம் அவன் முதுகில் துருத்திக்கொண்டிருக்கும் கூன். நல்ல கருப்பு, முதிர்ந்த முகம், பெரிய பெரிய பற்கள், சாய்ந்து சாய்ந்து நடக்கும் நடையோடு வந்து பெம்மாளே என்று குரல் கொடுக்க ஆரம்பித்தால் காலை சரியாக மணி ஆறு இருபது என்று கடிகாரம் பார்க்காமலே தெரிந்து கொள்ளலாம்.

அவன் உருவத்தை வைத்து ஏய், கூனா என்று எல்லோரும் கூப்பிட்டாலும் அவன் பெயர் சரவணன் என்று சொல்லிக்கொள்வான். இதற்கும் ஒரு வேண்டுதல் நடக்கும் பெருமாளிடம். பெம்மாளே, என்ன எல்லாரும்ம் கூனன் கூனன்னு கூப்பிடறாங்க, சரவணான்னு கூப்பிட வைய்யி பெம்மாளே என்று.

ஏனோ கூனன் கோயில் முன்வாசல் பக்கம் போய் வேண்டவே மாட்டான், பக்கவாட்டுதான், அதுவும் அந்தக்கோவிலை ஓட்டி அமைந்திருக்கும் பெரிய இரும்புக்கதவுகளிட்ட அறை, அந்த அறையில் தான் பெருமாள் தங்க நிறமிட்ட தன் கருட வாகனத்தை வைத்திருக்கிறார். மேலும் அவரின் அணிகலன்கள், இத்யாதிகள் என புரட்டாசிக்கு புரட்டாசிதான் அந்த இரும்புக்கதவே திறக்கப்படும். அதுவரை இரும்புக்கதவு மூடுவிழாதான். அந்தத் தெரு சிறுவர்களின் ப்லாக் போர்டும் அந்தக்கதவுதான்.

நல்ல சாக்பீஸால் பட்டை பட்டையாக அங்கங்கே துருப்பிடித்திருக்கும் அந்தக் கனமான இரும்புக்கதவில் எழுதினால் கல்வெட்டு மாதிரி அப்படியே இருக்கும். மஞ்சுள என்றெழுதி காற்றில் பறக்கவிட்ட காலெழுத்தை சங்கர் பிடித்து சங்கார் ஆக்கிவைப்பான். தமிழுக்கு இந்தக்கதி, ஆங்கிலமா, ம்ஹூம் இன்னும் அந்தக்கதவுக்கு பெயிண்ட் அடிக்காமலிருந்தால் சென்று பார்த்து விழுந்து புரண்டு சிரித்துவிட்டு வரலாம். காலெழுத்து, கையெழுத்துத்தான் இப்படி, இதயம் வரைந்து அம்புக்குறியிட்டு இன்ஷியல் எழுதி வைப்பது கனகச்சிதமாக நடந்தேறியிருக்கும்.

எஸ்,எல் என்பது செங்குட்டுவன், லதா தான் என்பது அவர்கள் தெருவை விட்டு இல்லை ஊரைவிட்டு ஓடியபின்புதான் எல்லோருக்கும் தெரியவந்தது. அப்போதுதான் அறுபதடி பம்ம்பில் தண்ணீரிறைத்து நான்கைந்து பேர் சேர்ந்து இரும்புக்கதவை கழுவிவிட்டார்கள்.

இவ்வளவு பிரசித்திப்பெற்ற இந்த இரும்புக்கதவுக்கு முன்னால்தான் கூனன் தனது வேண்டுதல்களை ஆரம்பிப்பான், தொடக்கத்தில் அமைதியாக இருக்கும், நேரமாக நேரமாக வெறி கொண்டவன் போல ஏண்டா பெம்மாளே, ஏண்டா என்ன இப்படி வெச்சிருக்க, நீ மட்டும் உள்ள ஒக்காந்தியிருக்கடா என்று ஏக வசனம் பாடிவிட்டு இரும்புக்கதவை டமார் டமார் என்று தட்டும் போது அவனைப்பார்த்தால் சாமி வந்தவனைப்போல இருக்கும். இப்படி ஒருநாள் டமார் டமார் என்று அடிக்கப்போய் அங்கே இரவும் பகலும் குடிகொண்டிருந்த வலிப்பு மூர்த்தியின் தூக்கம் கலைந்து, டேய் என பதிலுக்கு ஆவேசப்பட்டதில் மூர்த்தியின் காதுகள் கூனனின் பெரிய பற்களால் பதம்பார்க்கப்பட, தெருவே கூடி நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தது.

பெருமாளும் தனக்கிருக்கும் ஒரே பக்தனை எவனாவது கேள்வி கேட்டீங்கன்னா உங்களுக்கு இதுதாண்டா கதி என்று கருவிக்கொண்டே எதன்பொருட்டும் வெளியே எட்டிப்பார்க்கவில்லை. காதை கடித்துவிட்டு எதுவும் நடக்காதது போல சாய்ந்து சாய்ந்து நடந்து, அடுத்த தெரு முனையில் வெள்ளிக்கிழமையில் மட்டும் பெண்கள் கூட்டம் குடிகொள்ளும் கன்னியம்மன் கோவிலுக்கு போய்விட்டான். ஆட்டோவில் மூர்த்தி அரசு ஆஸ்பத்திரிக்கு பயணப்பட்டான்.

வேண்டுதல்கள் நீண்டாலும் கூனும் மறைந்தொழிந்தபாடில்லை. நாளுக்கு நாள் கூனனின் ஆவேசங்கள் அதிகரித்ததே அன்றி குறைந்தபாடில்லை, இப்படி வேண்டுதல்களால் நிரம்பிய கூனனின் வாழ்வில் காதல் நீர் பாய்ச்ச வந்தவள் குள்ளச்சி, அவளுக்கு இன்னொரு பெயருமுண்டு பொயலக்கட்ட. அவள் ஏன் இப்படியிருக்கிறாள் என்பது அவனது அண்ணனான ஆட்டோ ஓட்டும் கிருஷ்ணனுக்கே வெளிச்சம். கருத்த, சிறுத்த உருவம். சற்றும் பொருந்தாத ஜாக்கெட், பாவாடை, தாவணி. எப்போதும் மொட்டையடித்து முடி வளராததைப்போலவே இருக்கும் தலை. வாய் முழுவதும் செவசெவன்னு வெத்தலைப்பாக்கு, வாயில் ஒரு பக்கம் எப்போதும் உப்பலாய் வைத்திருக்கும் புகையிலை அதக்கல். ஆள்தான் சிறுத்தவளேயன்றி அவளுக்கும் முதிர்ந்த முகம். வீட்டுக்கு எதிரேயிருந்தாலும் ஏனோ அவள் இந்தக்கோயில் வாசல் பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டாள். தன் வீட்டு வாசலிலிருக்கும் முருங்கைமரத்து நிழல்தான் பெரும்பாலும் அவள் வீடு. சாப்பிட, தூங்கமட்டும்தான் உள்ளேயிருக்கும் அண்ணன் வீடு.

தானுன்டு, தன் வெத்திலை பாக்கு புகையிலையுண்டு, தன்னைச் சீண்டும் பசங்களை கொட்டுவதற்கு கையுண்டு என்றிருந்தாள். அவளைச் சீண்டிபவர்களுக்கு கிடைக்கும் வசவு வார்த்தைகளை கேட்க காதிரண்டும் போதாது. எதிரேயொரு முகமும் வேண்டும். அப்படியொரு எச்சில் தெறித்த பேச்சு.

இப்படியிருந்தவளுக்கு, அடிக்கடி ஆவேசம் பொங்கும் கூனனுக்கும் நடுவே இருப்பது காதல்தான் என்று கொளுத்திப்போட்டார்கள். விஷயமொன்றும் பெரிதில்லை. கூனன் தன் கூன் முதுகு குறைய இந்த முட்டுச்சந்து பெருமாளை மட்டுமே நம்பியிருக்கவில்லை, மெயின்ரோட்டிலிருக்கும் ஒரு பெரிய கோவிலிலிருக்கும் கிருஷ்ணனையும் நம்பியிருக்கிறான் என்பது அவன் வாங்கிவரும் பிரசாதங்களிலிருந்தும், கத்தையான வெற்றிலைகளிலிருந்தும் எல்லோருக்கும் தெரியவந்தது. ஒளிவு மறைவாய் எடுத்து வர அவனென்ன மற்றவர்களைப்போல சூதுவாது தெரிந்தவனா? கடவுளையே கதவு தட்டி கேள்வி கேட்பவனல்லவா?

கிருஷ்ணன் கோவில் பிரசாதமும்,மிதமிஞ்சிப்போன வெற்றிலைக்கத்தைகளையும் கையிலடுக்கிக்கொண்டு சாய்ந்து சாய்ந்து வருவான். இப்படி அள்ளி வந்த வெற்றிலைகளை என்ன நினைத்தானோ தெரியவில்லை, தாண்டிப்போய்விட்டான். பின் திரும்பி அதே சாய்ந்த வாக்கிலேயே வந்து படுத்துக்கொண்டிருந்த குள்ளச்சியின் பக்கம் போட்டுவிட்டுப்போனான்.

த்தோ பார்ருடி இந்தக்கூத்த என்று பெருமாள் கோவில் வாசலில் உட்கார்ந்து நியாயம் பேசிக்கொண்டிருக்கும் சுல்லிதான் ஆரம்பித்து வைத்தாள். அவள் ஆரம்பித்து வைத்த எதுவும் நொடியில் தீப்பொறியாய் பற்றிப்பரவும், அப்படி ஒரு வாய் சுல்லிக்கு.

சுல்லியின் வாய்வார்த்தை பலித்தது. வெற்றிலையில் ஆரம்பித்துப் பின் சுண்டல், பொங்கல் வரைக்கும் வந்தது. வெற்றிலைப்பாக்கு எச்சிலைத் துப்பிவிட்டு, தொன்னையிலிருக்கும் சுண்டலை குள்ளச்சி அதக்கி அதக்கி மெல்லும் அழகே தனிதான். இப்படியாய் தெருவே வெறிச்சொடிப்போய் சோறு தின்றுவிட்டு வீட்டுக்குள் சோம்பல் முறிக்கும் மதியான வேளைகளில் குள்ளச்சியும், கூனனும் கால் நீட்டி முருங்கை மரத்துக்கடியில் பேசிக்கொள்ளுவார்கள். அவர்கள் பேசும்போது அவர்கள் முகத்தில் தோன்றும் உணர்ச்சி அது சிரிப்பா, சோகமா, இல்லை அதையும் மீறிய ஏதோவொன்றா என்பது யாருக்கும் சட்டென்று புலப்படாது, நிமிர்து எங்கோ பார்ப்பதைப்போல ஆனால் வாய் மட்டும் முணுமுணுத்துக்கொண்டிருக்கும். அதைக்காணும் பேறு சொற்பமானவர்களுக்கே வாய்க்கும்.

அடுத்து வந்த மார்கழி மாசத்தில் தான் அவர்கள் நட்பு பலப்பட்டது. யாரும் சீந்தாத அந்த பெருமாள் கோவிலுக்கு புரட்டாசி, மார்கழி மாசத்தில் மட்டும் தனி மவுசு வந்துவிடும். அதுவும் மார்கழி மாதமென்றால் போதும், கூட்டம் முட்டி மோதும், பெருமாளை கும்பிட அல்ல. உபயக்காரர்கள் தரும் பொங்கல்,சுண்டல், புளியோதரைக்கு.

ஒருவர் மேல் ஒருவர் ஏறி அமராத குறையாக, அடுத்தவரை அடித்துத் திட்டி, முட்டி மோதி, மேலேயும் கீழேயும் சிதறி வாங்கிக்கொண்டு வரும் அந்த உள்ளங்கை பொங்கலுக்கும், சுண்டலுக்கும் இருக்கும் சுவையே தனிதான். பெரும்பாலும் தெருவிலிருக்கும் எல்லாச்சிறுவர்களோடு சில வயதான கட்டைகளும் இந்தக்கூட்டத்திலிருப்பார்கள். இந்தக்கூட்டத்திற்கு நடுவே ஒருநாள் குள்ளச்சி வர, அவளிடமிருந்து வாங்கிய கொட்டுக்களையெல்லாம் சேர்த்து வைத்து வஞ்சம் தீர்க்க யாரோ அவளைத் தள்ளிவிட்டுவிட்டார்கள். கூட்டத்தோடு கூட்டமாய் தள்ள யார் தள்ளினார்கள் என்பதை கண்டுகொள்ளமுடியவில்லை.

பக்கவாட்டிலிருந்து வேண்டுதலை முடித்துவிட்டு கூனன் வரவும், விழுந்த குள்ளச்சியை சுல்லி முதலானவர்கள் தூக்கவும் சரியாக இருந்தது. அந்த விழுதலுக்குப் பிறகு, குள்ளச்சிக்காய் பொங்கல் சுண்டல் வாங்குவது வேண்டுதலைப்போலவே தனது தினசரி கடமையாகிப்போனது கூனனுக்கு.

பேசாம பழக்கார கெழவிக்கிட்டயும், கிருஷ்ணன்கிட்டயும் சொல்லி பேசி முடிச்சிரவேண்டியதுதான் என்று நக்கலும், நையாண்டியும் தூள் பறந்தது. பார்ரா, இப்பல்லாம் கூனன் இன்னும் அரைமணி நேரம் சேர்த்து வேண்டுறான் பெருமாளு கிட்ட, இன்னா மிஸ்டர் சரவணன், உங்க ஆளுக்காகவா? என்று சிறுவிடலைகள் கிண்டல் மொழிகளை பறக்கவிட்டன.

இது மாதிரி கிண்டல் தொனிகளை தனியாக உணர்ந்தவன் போல, பெம்மாளே, நீய்யேப் பாத்துக்கோ இந்தப் பச்சங்களை என்று வழக்கம்போல கேட்காத பெருமாளிடமே சொல்லிவிட்டுப்போய்விடுவான் கூனன்.

இப்படியாய் போய்க்கொண்டிருக்க கூனனை வளர்த்த பழக்கார கிழவி ஊரில் ஏதோ சொத்துப் பிரச்சினை என்று கூனனை கூப்பிட்டுக்கொண்டு வேலூர் பக்கம் போக, குள்ளச்சியை முருங்கை மரத்தடியில் அவ்வளவாய் பார்க்க முடிவதில்லை.

கரண்ட்டுப்போன ஒருநாள் சாயங்காலம், நல்ல காய்ச்சலோடு உடன் வலிப்பு மாதிரி ஏதோ வந்துவிட ஆட்டோவில் வைத்து குள்ளச்சியை அழைத்துக்கொண்டு போனார்கள். அடுத்த நாலு நாளுக்கு பிறகு ஸ்கூல் விட்டு வந்து கொண்டிருக்கும் மதியான நேரம் குள்ளச்சியின் வீட்டுவாசலில் பச்சை ஒலையைப் பின்னிக்கொண்டிருந்தார்கள். அவ்வளவாய் ஜனசந்தடியில்லை.

சுல்லிதான் புலம்பிக்கொண்டிருந்தது, நேரம்பார்த்து இந்தக்கூனன் பையன் ஊர்ல இல்லாமப்போச்சே, ச்சே பொயலக்கட்டைய அதக்கினு அதும்பாட்டுக்கு முருங்கை மரத்தாண்ட ஒக்காந்துக்கிட்டு கெடக்கும்மா, அதுக்கு ஆண்டவன் விதிச்சதப்பாரு என்று கண்ணை மேல் முந்தானையால் துடைத்துக்கொண்டது.

கொஞ்ச நாள் கழித்து தெருவில் கூனனைப் பார்க்கமுடிந்தது. இப்போதெல்லாம் பெம்மாளே பெம்மாளே என்ற வேண்டுதல் கேட்பதில்லை, மாறாய் கிழவிக்கு டீ வாங்க தூக்கை எடுத்துப்போகிறான், கிழவி பழக்கூடையைத் தூக்கினால் தானும் கிழவிக்குப் பின்னாலேயே போகிறான்.

தனக்கிருந்த ஒரு பக்தனின் வேண்டுதலுக்கு செவிசாய்க்காமல் போனதற்கு எந்த ஒரு குற்ற உணர்வுமில்லாமல் பெம்மாள் புரட்டாசி கருட சேவைக்குத் தயாராகிவிட்டார். எல்லோரும் குள்ளச்சியை மறந்துவிட்ட ஒரு மதியானப் பொழுதில், முருங்கை மரத்தின் நிழலில் கத்தை வெற்றிலையிருந்தது. வியாபாரம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் பழக்காரகிழவிக்குப் பின்னே சாய்ந்து சாய்ந்து கூனன் போய்க்கொண்டிருந்தான்.
..................
குறிப்பு: மேற்கூறிய சிறுகதை, மார்ச் மாத உயிரெழுத்து இதழில் வெளியானது.

கதையை அச்சில் படிக்கும்போதும், காசோலையை பார்க்கும் போதும் உங்கள் அனைவரின் ஊக்கம் மிகுந்த பின்னூட்டங்களே எனக்கு ஒரு முறை ஞாபகம் வந்துவிட்டுப்போனது. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி வரும் உங்கள் அனைவருக்கும் எனது அன்பும், நன்றியும்.

06 October 2009

சின்னஞ்சிறுசுங்க மனசுக்குள்ள...

எங்க சின்னத பாத்தியாக்கா, இந்த கருப்பன வேற காணோம், எல்லாம் வந்துடுச்சு, இத்த மட்டும் காணோம். தண்ணி வேற காட்டாத இருக்குது இதுங்குளுக்கு.

தெருமுனையில் இருக்கும் ஊர்ப்பொதுக்குழாயில் பித்தளைக்குடங்களை விளக்கிக்கொண்டும், தண்ணீர் பிடித்துக்கொண்டிருக்கும் அக்காக்களை பார்த்துக்கேட்டாள் செல்வி.

என்னாடி, சின்னது, பெரிசுன்னு, சொம்மா பேரத்தான் சொல்லேன், ஓன் ஈடுதானே அது.

அய்ய, ஆயிரம் இருந்தாலும் சின்ன மச்சினனா ஆயாச்சு, இனிமே பேர சொல்ல முடியுமா, நீ வேற அத இந்த ஓட்டு ஓட்டற.

ம்க்கும், நீதாண்டி யம்மா மெச்சிக்கனும். அவன் இந்நேரம் ஹைஸ்கோல் வாசல்ல நின்னுக்கிட்டு மோப்பம் புடிச்சிக்கினு கெடப்பான். அவுருதான் மைனராச்சே, பத்தாதக்கொறைச்சலுக்கு இதும் மாமியாரு வேற கல்யாணத்துக்கு போயிடுச்சு, தலைவரு பொழுது சாயத்தான் வருவாரு, நீ கருப்பன கண்டு புடிக்க வேற ஆளப் பாருடி யம்மா, நாளைக்கி ஒம்மாமியா ஊருல இருந்து வந்தா பிரிச்சு மேஞ்சுடுவா அத்தோட.

அதான்க்கா எனக்கும் பயம்மா இருக்கு என்றாள் செல்வி.

நீயேண்டி யம்மா பயப்படறா, ஆயிரந்தான் இருந்தாலும் அது ஒன் சொந்த அத்தயாச்சே. மத்த மருமவள மாரி உன்ன ஒன்னுஞ்சொல்லாது.

ம்க்கும், எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி வரைதான் ஆயா, பாயால்லாம், இப்பத்தான் புள்ளைய கட்டிக்கினு மருமவளாயிடிச்சுல்ல, என்னதான் தம்பி பொண்ணா இருந்தாலும் அதையெல்லாம் மாரியக்கா பாக்காது.

எல்லாருடைய பேச்சையும் கேட்டுக்கொண்டே, கடைவாய் சிரிப்பையும் உதிர்த்துக்கொண்டு மனுசனையும், மாட்டையும் ஒரே நேரத்தில் தேடும் குழப்ப ரேகைகளை கொண்டிருந்தது செல்வியின் சின்ன முகம். சரி இங்க நின்னுக்கிட்டுருந்தா வேலைக்காவாது, நாம் போயி மாட்டுக்கு தண்ணியாவது காட்டறேன் என்று வீடு நோக்கி நடந்தாள் செல்வி.

அவள் போன திசை பார்த்து அக்காக்கள் பேச்சை தொடர்ந்தார்கள், பாவண்டி அந்தப்பொண்ணு, பேசாம முருகன் பையன் கல்யாணங்கட்டின கையோட கூட்டிப்போயிருக்கலாம். அதுவுமிலாம, இதுவும்மில்லாம, ஆசைக்கு பொண்ணக்கட்டி கூட்டியாந்துட்டு, ருசி காட்டிட்டு, ரெண்டு மாசத்துலயே ஓடிட்டான் பாரு அவன்.

த்தே, அவன் இன்னா பண்ணுவாண்டி, மாரியக்காவுக்கு ஆத்திரம், மொத ரெண்டு புள்ளைங்களுக்கும் அசல்ல கட்டி எவளும் இவ வாய்க்கு பயந்தே இந்தப் பக்கம் வராம போயிட்டாளுங்க, ஏதோ தம்பி பொண்ணாச்ச, நமக்கு கடைசி காலத்துல கஞ்சி ஊத்த கடைப்படும்னு கட்டி கூட்டாந்துடுச்சு.

ம்க்கும், நல்ல ஆளப் பாத்தடியம்மா நீ, இதுவே தம்பிக்கு சொத்து இல்லனா, மாரியக்கா பொண்ணக்கட்டியிருக்கும்ன்ற. அந்தாளு ஒருத்தன், இரவது வயசுப் பொண்ண இரவத்தெட்டு வயசு ஆளுக்கு கொடுக்கறோமே, நம்ப பொண்ணு ஈட்டுல ஒரு கடைசி புள்ள அந்த ஊட்டுல இருக்கேன்னு யோசனை பண்ணியிருக்கனும். அவனும் சொத்துக்கும், நெல்லடிக்கிற மிஷினுக்கும் ஆசப்பட்டுதான பொண்ண குடுத்தான்.

வெதை ஒண்ணு போட்டா, சொரை ஒன்னாடி மொளைக்கப்போவுது, குடும்பமே பணத்துக்கு ஆசைப்பட்டது, என்னா பாவம் இந்த செல்வி பொண்ணுதான். இப்புடி ஆசை அறுவது நாளு, மோகம் முப்பது நாளு ஆவருதுக்குள்ள பொண்ணக்கட்டி உட்டுட்டு ஆர்மிக்கு பூட்டான்.

ஆமாம், பின்ன பாரேன், அந்த வெங்கிட்டு பையன் ஈடுதான் செல்வி, சொல்லப்போனா ரெண்டும் ஒன்னாதான் பள்ளிக்கோடத்துல படிச்சதுங்க. அந்தப் பொண்ணு வயுசுக்கு வந்த பின்னாடிதான், அந்த பையன நம்மூருக்கே இட்டாந்துச்சு இந்தக்கா, அதுவரைக்கும் அப்பனன கண்ணெடுத்து பாக்காத புள்ளைன்னு தம்பியாருதானே படிக்க வெச்சாரு, இதும் ஆத்தா தானே பாத்துக்குச்சு அந்தப் பையன.

த்தே, எல்லாரும் ஒன்னாதான போனீங்க, எங்க உட்டுட்டு வந்தீங்க கருப்பன மட்டும், ஒவ்வொரு மாட்டையாய் அவிழ்த்து அவளின் சின்ன நீள விரல்கள், தவிட்டைத் தண்ணியோடு லாவகமாய் கலந்துகொண்டே அவைகளோடு பேசிக்கொண்டிருந்தாள். ம்மோட்டார் பைக் சத்தம் கேட்டவுடன் கலப்பதை நிறுத்திவிட்டு எட்டிப்பார்த்தாள், ஒருவேள சின்னதா இருக்குமோ, இல்லை வேறு யாரோ கடந்துபோய்க்கொண்டிருந்தார்கள்.

வாய் சின்னது சின்னது என்று சொல்லிக்கொண்டிருந்தாலும், மனம் வெங்கிட்டு என்றுதான் அவனை அழைத்தது.தவிட்டை அளந்துகொட்டிக்கொண்டே நினைவுகளை அசைப்போட்டாள் செல்வி, வெங்கிட்டோடு ஓடி பிடித்து விளையாடியது, புளியாங்காய் அடிச்சது, ஒரு தட்டுல சாப்பிட்டது, ஆயா மடியில படுக்க ரெண்டு பேரும் போட்டி போட்டது, யேய் குள்ள செல்வி போடி அந்தாண்ட, இது எங்காயா, அட த்தோடா, போடா வெங்கிட்டு, கொங்கிட்டு, இது எங்காயா, எங்கவூடு, போடா ஒங்கூருக்கு, மூக்கொழுவி.

யெம்மா, அப்டியெல்லாம் சொல்லக்கூடாதுடா மாமன என்று செல்விய ஆற்றுப்படுத்துவாள் ஆயா.

மாமனாம் மாமன், பெரிய மூக்கொழுவி மாமன், ஆயா இவுனுக்கு ஒழுங்கா ஆட்டப்புச்சாந்து கட்டக்கூட தெரில ஆயா, நாந்தான் ஆயா கட்னேன் சாயங்காலம்.

ஏய் ஊளமுக்கி, வாயிலயே குத்துவன், நாம் புடிக்கறதுக்குல்ல இதுவே போயி புடுச்சிடுச்சி ஆயா. இப்ப எப்டி சொல்லுது பாரேன்.

எப்பப்பார்த்தாலும் ரெண்டு பேருக்குள்ளும் எதற்காவது சண்டைதான், டேய் எங்கப்பா வாங்கியாந்த பென்சில் தானடா, குட்றா எங்கிட்ட. முகஞ்சுண்டிப்போய் நிற்கும் வெங்கிட்டை சீண்டாமல் தூங்கிய பொழுதுகளே இல்லை, பார்க்கும் எல்லாருமே திட்டுவார்கள், ஏண்டி, நாள பின்ன மொறையா ஆவப்போறவன், அத்தப் புள்ள, இன்னாதான் ஒங்கூட்டுல வளர்ந்தாலும் இப்புடிதான் அடா, புடான்னு பேசுவியா.

செல்வி எவ்வளவு பேசினாலும், பதிலுக்கு வெங்கிட்டு மல்லுக்கு நின்னாலும் இருவருக்குள்ளுமே ஒரு சிறிய அன்பு இழையோடிக்கொண்டுதான் இருந்தது., அவனுக்கு கடலப்பருப்பு வடை புடிக்கும் என தீபாவளி திருநா அன்னிக்கு செய்யும்போது அவள் அம்மாவுக்கு தெரியாமல் இவனுக்கு கூட ரெண்டு எடுத்தாந்து தருவாள். அவனும் லீவுக்கு தன் ஊருக்கு போகும் போதெல்லாம் வரும்போது செல்விக்கென்று ஒரு தனி திண்பண்ட மூட்டையை கட்டிக்கொண்டு வருவான்.
இயல்பாய் ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையினூடாக இவர்கள் வளரவும் செய்தார்கள், செல்வி வயதுக்கு வர, வெங்கிட்டு பத்தாவது ஃபெயிலாக, என ரெண்டு பேரும் பிரிந்தார்கள். அதற்கு மேல் படிப்பு ஏறாமல் அண்ணன்மார்களின் கேபிள் டிவி வேலை, ஒத்தை ஆளாக மாடு கன்னுகளோடும், நில புலன்களோடும் போராடிக்கொண்டிருக்கும் அம்மாவிற்கு ஒத்தாசையாக தனது வாழ்க்கையினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக்கொண்டான் வெங்கிட்டு.

செல்வியை மேற்கொண்டு ரெண்டு வருஷம் படிக்க வைத்தார்கள், அதற்குள் கிராமத்து இலக்கண முறைப்படி, முறை மாமன்கள் படையெடுப்பு, கல்யாணம், கங்காட்சியப் பாத்துட்டு எங்கட்டைய சாய்க்குறண்டா என்ற ஆயாவின் புலம்பல், அங்க சுத்தி, இங்க சுத்தி, கடைசியாய் வெங்கிட்டுவின் மூணாவது அண்ணனான முருகனுக்கே முடிவானது. மனுசன் ஆர்மியில் இருப்பதை காரணம் காட்டி, கவர்ன்மெண்ட்டு சம்பளம், நெல்லறுக்கும் மிஷின், இத்யாதிகள் என ஆசைக்காட்டி செல்வியின் விருப்பத்தைக் கேளாமலேயே கல்யாணம் நடந்தேறியது.

கல்யாணத்தின் போது அங்குமிங்குமாய் ஓடும் வெங்கிட்டின் மீது அவ்வபோது அவளின் கவனம் போய்த்திரும்பியது. அவனைப் பார்க்கும் போதெல்லாம் தனது கையில் சிவந்திருக்கும் மருதாணியின் தொப்பியினைப் பார்த்துக்கொண்டாள். எங்கிருந்தாலும் மருதாணி பறித்துக்கொண்டு வந்து, கட்டெறும்புகளோடு மல்லுக்கட்டி பிடித்துப்போட்டு, ஆயாவின் சுருக்குப்பையிலிருந்து களிப்பாக்கை எடுத்து உடைத்து சில சமயங்களில் அவனே பக்குவமாய் அரைத்து அவளின் கையில் தொப்பி வைத்திருக்கிறான். அவன் இடது கையின் நட்ட நடுவாப்பில் செல்வியும் வட்டம் வரைந்திருக்கிறாள்.

தாலி கட்டிய பின்னர் குடும்ப ஃபோட்டோவுக்கு எல்லோரும் நிற்கும் போதுதான் வெங்கிட்டு முகத்தினை முழுமையாகப் பார்க்க முடிந்தது. ஆனால் வெங்கிட்டு இவள் பக்கம் கூட திரும்பவில்லை. தன் கணவனை மாமா என்று கூப்பிடலாம், வெங்கிட்டை இனி எப்படி கூப்பிடுவது என்றே யோசனையாய் இருந்தது செல்விக்கு. ஆயிற்று மறுவீடெல்லாம் முடிந்து அத்தை வீட்டுக்கு வந்தபின், அத்தையே பெயர் குழப்பத்திற்கு முடிவும் வைத்தாள் அதுவும் இவளைக் கேளாமல் தான்,

யெம்மா செல்வி, நான் மாடு கன்ன ஓட்டிக்கினு கொள்ளிக்கு போறன், ஒஞ் சின்ன மச்சினன் வந்தான்னா சோறு போட்டு, அறுப்புக்கு ஆளுங்கள ஏற்பாடு பண்ணிட்டு வர சொல்லு.

ம் என்று ஒத்தை வார்த்தையில் பதில் வந்தது, பிற்பாடுதான் முறையும் மரியாதையும் கருதி சின்னது என்றே அழைக்கத் தலைப்பட்டாள், அதுவும் பிறரிடம் குறிப்பிடும்போது மட்டும்தான்.

கல்யாணமாகி இங்கு வந்த மூன்று மாதத்தில் அனேகமாய் இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தைகள் சாப்பாடு போடட்டா, ம் என்ற அளவில்தான். இன்று காலைதான் மெட்ராஸில் ஒரு கல்யாணத்துக்கு மாமியார் புறப்பட்டுவிட, இருவரும் நேருக்கு நேர் பேசவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டனர். செல்விக்கு குறுகுறுப்பாகவே இருந்தது.

மாடுகளுக்கு தண்ணிக்காட்டி முடித்துவிட்டு, வாசப் பெருக்கி கோலம் போட்டு நிமிர்கையில் வண்டி வந்து நின்றது. வெங்கிட்டு இறங்கினான். சட்டென்று உடம்பு உதறிப்போட்டார் போல ஆனது செல்விக்கு.

இந்தா என்று ஒரு பேப்பர் கத்தையை செல்வியை நோக்கி நீட்டினான் வெங்கிட்டு, , மேற்கொண்டு டிகிரி படிக்க யூனிவர்சிட்டில இருந்து ஃபார்ம் வாங்கியாந்து இருக்கேன், படிச்சிப்பாரு, எல்லாத்தையும் எழுதி கையெத்துப் போட்டுக்குடு.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பேப்பர் கத்தைகளைப் வாங்கிக்கொண்டே, கருப்பன காணோம், மீதியெல்லாம் வூடு வந்துடுச்சி என்றாள்.

தெரியும், முத்து வூட்டு கொல்லிக்கா மேயுதான், புடிக்க பசங்கள அனுப்பியிருக்கேன், சரி. படிக்க இஸ்டந்தானே, இல்ல மாடு கன்ன தான் பாத்துக்கிட்டு இருக்கப்போறியா அவன் வரவரைக்கும்.

சாப்பாடு போடறேன், சாப்புடறியா.

ம், என்றவாறே கையை காலை கழுவிவிட்டு, டி.வி முன்னால் உட்கார்ந்தான் வெங்கிட்டு. தட்டில் சாப்பாட்டினை குழம்போடு பிசைந்துகொண்டே, இன்னா படிக்க இஷ்டமிருக்கா என்றான்.

படிக்க இஷ்டமிருக்கான்ற கேள்விய கேட்டா மாதிரியே எங்கண்ணன கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு இஷ்டமிருக்கான்னு ஒரு எட்டு வந்து கேட்டுட்டுப்போயிருக்கலாம்ல நீய்யி ?

ஆற்றாமையும்,அழுகையும், துணிவும் சேர்ந்து கட்டையாக ஒலித்த குரலில் நிலை குலைந்து போனான் வெங்கிட்டு.

இந்த வீட்டுக்கு வந்தபின் முதன்முறையாய் செல்வியின் முகம் பார்த்தான் வெங்கிட்டு, அவளோ ஆற்றாமையை வெளிப்படுத்திவிட்ட பெருத்த அமைதியில் நிலைப்படியின் ஓரம், தலை கவிழ்ந்து கொண்டு நகத்தில் மிச்சமிருக்கும் மருதாணி சிவப்பினைத் தடவிக்கொண்டிருந்தாள். ஃபோட்டோவில் அண்ணனோடு இருந்த செல்வியின் முகத்தினையும் பார்த்தான், கல்யாணக்களை அற்று, மிரட்சி கொண்ட கண்களின் ஓரம் ஒரு மென்சோகம் ஒளிந்திருந்தது.

அடர்த்தியான மெளனம் இருவரின் நினைவுகளையும் பின்னோக்கி இழுத்துக்கொண்டு போய், டேய், கருப்பன கொட்டாயில கட்டிண்டா என்ற வார்த்தைகளின் சலசலப்பில் பெருத்த பெருமூச்சின் வழியாக நிகழ்காலத்திற்கு இழுத்துவந்து தள்ளியது.

காற்றில் யார் இஷ்டப்படியுமில்லாமல் முன்னும் பின்னுமாய் சடசடத்துக்கொண்டிருந்தன மேற்படிப்பு பேப்பர் கத்தைகள். சரி, அண்ணன் போன் பண்ணா கேட்டுக்க, சுரத்தில்லாமல் ஒலித்த வெங்கிட்டின் குரலிலும்,செல்வியின் கழுத்தில் மின்னிய சரடிலும் பால்யத்தின் வாழ்வினை முற்றுமிழந்த ஒரு பெரியமனுஷத்தனம் ஊசலாடிக்கொண்டிருந்தது.

29 September 2009

ஃபேர் அண்ட் லவ்லி

ஏண்டா, காலைல நூறு தொவரம்பருப்பும், துணி சோப்பு ஒன்னும் வாங்கித்தர சொன்னதுக்கு மூஞ்சக்காட்டிட்டு போன, இப்ப இம்மாம் பெரிய ட்டூப வாங்கியாந்து வெச்சிக்கிட்டு இருக்க.....

ஆரம்பிச்சிட்டியா,ப்போ, காச ஸ்டாண்டுல வெச்சிருக்கன் பாரு, எடுத்துக்க என்று சுவாரஸ்யமாய் அந்த அம்மாம் பெரிய ஃபேர் அண்ட் லவ்லி ட்யூபை பிதுக்கி முகம் முழுக்க கரும்புள்ளி நோ ஒன்லி செம்புள்ளிகள் குத்த ஆரம்பிச்சிருப்பார் திரு. ஏழுமலை என்கிற பாக்கியராஜ் என்கிற பேரண்ட் லவ்லி (லோக்கலா ஒன்னா சேத்து சொல்லிப்பாருங்க இப்படித்தான் உச்சரிப்பு வரும். (அவருக்கு தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் டப்சா என்று பெயர் வைத்திருந்தோம்)

மனுசன் கொஞ்சம் கலரு, சுருள் முடி இடப்பக்க வகிடு க்ராப், மாசத்துக்கு ரெண்டு 250 க்ராம் ஃபேர் அண்ட் லவ்லி, ஒரு பெரிய கோகுல் சேண்டல் பவுடர் டப்பா. காலையும் மாலையும் விடுமுறை தினங்களின் போது மதியத்திலும் அந்தத் திண்ணையின் ஓரத்தில் ஒரு முகக்கண்ணாடியைப் பிடித்துகொண்டு மனுசன் பண்ற அலம்பல் தாங்கமுடியாது.

எவ்ளோ தண்ணி கஷ்டமா இருந்தாலும் அரைக்கொடத்த கவுத்து மூஞ்சக் கழுவிட்டு, நல்லா மொகத்த தொடச்சிட்டு, ட்யூபை பிதுக்கி ஒரு பாதி விரல் நீளத்துக்கு க்ரீமை வெளியே எடுத்து மூஞ்சி முழுக்க பொட்டு பொட்டா வெச்சி, அப்படியே இடதும் வலதுமா லாவகமா தேய்ப்பாரு, அப்புறம் ஒரு கையை குழியாக்கி அதுல பவுடரைக் கொட்டி ஒரு கோட் அடிச்சிப்பாரு. இப்ப மனுசனோட கண்ணையும், மீசையும் தவிர எல்லாம் வெள்ள வெளேர்னு இருக்கும். ஆச்சா அப்புறம் ரோஸ் கலர் இல்லனா சந்தன கலர்ல சைனா சில்க் ஜிப்பா வெச்சிருப்பாரு அத எடுத்து மாட்டுனார்னா நேரா தெரு முக்கு டீக்கடைக்கு போறார்னு அர்த்தம், அதுவே பேண்ட்டு, சர்ட்ட போட்டாருன்னா டோபாஸ் ப்ளேடு கம்பெனிக்கு போரார்னு அர்த்தம், அங்கதான் அவருக்கு ஃபேர் அண்ட் லவ்லியும், பவுடரும் வாங்க படியளந்துகிட்டு இருந்தாங்க. அது வாங்கனுது போங்க மீந்தது வீட்டுக்கு சாப்பாட்டுக்கொடுப்பாரு.

அவர்தான் மூத்த மகன். சோக்காளி, மீதிப்புள்ளைங்களாம் மாட்டு சாணியோடும், தவிடு புண்ணாக்கோடு பொழுதன்னிக்கும் போராட இவர் மாத்திரம் மைனராட்டும் வருவாரு போடுவாரு பொறப்படுவாரு. மனுசன் அழகுல ஒன்னும் கொறச்சலில்ல, என்னா, அவரு என்னப்பாத்தா உங்களப்பார்க்குறா மாதிரியிருக்கும் அவ்ளோதான்,அதுதான் அவருக்கு பொண்ணுப்பார்க்க போகும் போது ப்ரச்சினையாகிடுச்சு.

மூத்த புள்ளைக்கு முடிச்சாத்தான் அடுத்தடுத்தத தள்ள முடியும்னு அவர பெத்தவங்களும் எங்கங்கயோ பொண்ணு பாத்தாங்க, ஒன்னும் ஒத்து வரல, அவங்க ஒத்து வந்தா, இவரு கலரு வேணும்னுவாரு, படிக்கலன்னா கூட பரவால்ல, பொண்ணு கலரா இருக்கனும்கறதுதான் இவர் குறிக்கோள், ஆனா கலரா, அழகா இருக்குற பொண்ணுங்களுக்கு இவரோட மாறுகண்ணு ப்ரச்சினையாகி கண்ணாமூச்சி ஆடி
ஒரு வழியா திருக்கோயிலூர்ல ராணின்னு ஒரு பொண்ணப்பாத்து முடிச்சாங்க.

கல்யாணம் முடிச்சு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள வரும்போது பாத்தா, அந்த அக்கா கருப்பு, ஆச்சரியமா போயிடுச்சு, இந்த அண்ண்ன் எப்படி ஒத்துக்கிச்சு அப்படின்னு குழப்பம், ஒரே பொண்ணு, சொத்து நெறைய அப்படின்னு அவங்க அம்மா ஒத்துக்க வெச்சிட்டாங்கன்னு சொல்றாங்க ஒரு சிலரு, பொண்ண மாத்திட்டாங்கன்னு சொல்றாங்க இன்னொரு சிலரு.

என்னவோ மனுசனுக்கு கல்யாணமாகி அந்தக்காவ பண்ணாத ரவுசு பண்ணாரு, எங்கயும் வெளிய கூட்டிக்கிட்டு போகமாட்டாரு, அப்படியே போனாலும், அஞ்சடி பின்னாடிதான் அந்தக்கா போகனும், எப்பப்பார்த்தாலும் வீட்டுல வேலையேதான் செஞ்சிக்கிட்டு இருக்கும் அந்தக்கா. மனுசன் மூஞ்சிக்கொடுத்துக்கூட பேசமாட்டாரு. ரொம்பவும் பாடுபடுத்துனாரு. அப்புறம் அப்படி இப்படி அவங்க இவங்கன்னு அறிவுரை சொல்லி அவங்க வீட்டுல இன்னொரு புள்ளைக்கும் கல்யாணம் ஆனவுடனே இவரும் கொஞ்சம் மனசு மாறி ராணி அக்கா கொழந்த உண்டானாங்க. வழக்கம் போல மாமியார் மருமகள்கள் சண்டைல, பலரின் பரிந்துரையின் பேரில் மாசமாக இருக்கும் ராணி அக்காவை தனிக்குடித்தனம் கூட்டிட்டுப்போயிட்டாரு.

ஆச்சு, தனியாப்போயும் அவரு அப்படியேத்தான் இருப்பதாக வழியில பார்த்து ஒரு நாள் அந்தக்கா சொன்னாங்க.உங்களுக்கு ஆம்பிளப்புள்ளையா, பொம்பளப்புள்ளையா ராணியக்கா என்று கேட்டபோது, ஏதோ ஓன்னு, கலரா பொறந்தா சரிதான், இல்லனா அதுவும் இந்தாள் கிட்ட......

பிறகொரு நாள், ராணியக்காவுக்கு ஆண்குழந்தை பிறந்து, ஆஸ்பத்திரியேலேயே அந்தக்குழந்தையை அப்பு என்று கூப்பிட்டு மிகவும் சந்தோஷமடைந்து, புள்ள கலராத்தான் இருக்கு அவர மாதிரியே என்று போய் பார்த்தவர்களிடமில்லாம் சந்தோஷித்து, பின்னர் வந்த ஜன்னியில் ஆஸ்பத்திரியிலேயே இறந்தும் போனார் ராணி அக்கா.

நிற்க. இப்போது இரண்டாம் அத்தியாயம்.

பிறந்தது குழந்தையை வைத்து வளர்க்க ஆளில்லாமல் ராணி அக்காவின் அம்மாவே சென்னைக்கு வந்து கொஞ்ச நாள் பார்த்துக்கொண்டிருக்க, அவர்களை பார்க்க வர இருந்த அவரின் தங்கை மகளையே (ராணியக்காவுக்கு நெசம்மாவே தங்கச்சி முறை) இரண்டாம் தாரமாக மணமுடித்து வைத்துவிட்டார்கள் ஏழுமலையாருக்கு.இரண்டாம் தாரம் வந்தவுடனுன் குழந்தையை ஒப்படைத்துவிட்டு ராணி அக்காவின் அம்மா தன் சொந்த ஊருக்கே சென்று விட்டார்.

இரண்டாம் தாரம் சிகப்பாக இருப்பதனால் மனுசனுக்கு சந்தோஷம்தான் போல, அஞ்சடி தூர இடைவெளியெல்லாம் தராமல் தோள் மேல் கை பிடித்து போகாத குறையாகத்தான் வந்தார்கள், போனார்கள், வென்றார்கள்.


வென்றதில் இப்போது இந்தம்மா மாசமாகி,(ஆரம்பத்தில் அக்கா புள்ளைய நல்லாத்தான் பாத்துக்கிட்டாங்க) என்னால அது முடியாது, இது முடியாது கடைசியில புள்ளையப் பாத்துக்க முடியாது என்று புலம்ப ஆரம்பிக்க நாளொரு ப்ரச்சினையை சந்தித்தார் திருவாளர் ஃபேர் அண்ட் லவ்லி. பையனின் மீது பாசம் வேறு அவனை ஊரில் கொண்டு விட தடுத்தது. ஆனால் மனைவியின் நச்சரிப்பு அதை வென்றது.

நல்ல ஞாயித்துக்கெழமையாப் பார்த்து அப்புவை மூட்டை முடிச்சு கட்டி திருக்கோயிலூருக்கு ராணியோட அம்மா வீட்டுக்கு கொண்டு போனார், ராணியின் அம்மா காரணம் விசாரித்ததில், கலரு கலருன்னு அலைஞ்சேன், கருப்பா இருந்தாலும் எல்லாமா இருந்த மகராசி போய் சேர்ந்தா, அவளுக்கு செஞ்சதுக்கு கூலி கொடுக்கத்தானோ என்னவோ கடவுள் கலரா இருக்குற பொண்டாட்டிய அனுபவிடா இப்பன்னு அனுப்பி வெச்சிருக்கான். எல்லாத்துக்கும் என்னைய மன்னிச்சுருங்க, புள்ளைய பாத்துக்கோங்க, மாசா மாசம் பணம் அனுப்பறேன், கொஞ்சம் ப்ரச்சினை முடிஞ்சவுடனே சீக்கிரம் வந்து புள்ளைய கூட்டிக்கறேன்னு சொல்லிட்டு சென்னைக்கு வந்துட்டாரு.

அதுக்கப்புறம் அவரு ஃபேர் அண்ட் லவ்லி போடறதில்லை, அவரோட ரெண்டாவது தாரம்தான் அதைப் போட ஆரம்பிச்சாங்க.

ராணியக்கா உயிரோட இருக்குற சமயத்துல கிண்டலுக்காகவாவது மஞ்சளப் பூசறதுக்கு பதிலா அதையாவது பூசிப்பாரேன், உங்க வீட்டுக்காருக்கு மனசு மாறுதான்னுப் பாப்போம் என அக்கம் பக்கத்துக்கு அக்காமார்கள் சொல்ல, அடச்சீ போக்கா, கொழ கொழன்னு அந்த சனியன யாருப் போடுவா என்று சொல்லக் கேட்டிருக்கேன்.

03 September 2009

உளவு

உங்களுக்கு உளவு பார்த்த அனுபவமுண்டா, சிறுவயதில் யாரைவது உளவு பார்த்திருக்கிறீர்களா. அதற்குப்பின் மன உளைச்சலில் அவதி பட்டிருக்கிறீர்களா. இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள், இருக்கிறது என்றால் வேண்டாம், ஏனெனில் உங்கள் உணர்வுகளை கிளறிவிட்ட பாவம் வேறு வந்து சேர்ந்துவிடும் எனக்கு.

விவரம் தெரியாத வயதில் பார்த்த உளவு, விவரம் தெரிந்தபின்பு டிடெக்டிவ் ஏஜென்ஸி என்ற பெயரில் பெரிய அளவில் நடத்தப்படுவது குறித்து மிகுந்த ஆச்சரியமடைந்தேன். இவர்களுக்கு இது தொழில் என்றாகிவிட்டதால் குற்றவுணர்வு இல்லாமல் போய்விடுமா என்றெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வழக்கமான யோசனைகளின் அணிவகுப்பு. இப்போது இதுவா முக்கியம், நான் பார்த்த உளவு அல்லவா முக்கியம்.

ரவி ஒரு கார் மெக்கானிக் என்று அவன் வாயால் சொன்னால் கூட நீங்கள் நம்ப மாட்டீர்கள். கிரிஸ், ஆயில் கறைகள் அப்பிய அழுக்கு பேண்ட்டை அணிந்து கொண்டு, கார் அடியில் படுத்துக்கொண்டு, டேய் அந்த ஆறாம் நம்பர் ஸ்பேனர எடுடா என்று சொல்லியபடியே, வாங்க சார் ரொம்ப நாளாச்சு நம்ம கடைப்பக்கம் வந்து என்று படுத்துக்கொண்டே இன்னொரு பக்கம் திரும்பி வந்திருக்கும் உங்களைப் பார்க்கும்போதுதான் புரிந்துகொள்வீர்கள். ஏனெனில் அதன் கலரும், முக லட்சணமும் அப்படி. கார் புகை கக்கினாலும் கருப்பு படியாத சிவப்பு நிறம், சிரித்தால் குழி விழும் குண்டு முகம், அளவெடுத்த உயரம், தன்மையான பேச்சு, அலைபாயும் கண்கள் என ரவி அண்ணன் அந்த வாசலில் ஒரு அழகான கார் மெக்கானிக்.

சுமதி, அழுந்த வாரினாலும் படியாத சுருட்டை முடி, ரவிக்கு சற்றே குறைவான நிறம், மூக்குத்தியைத் தவிர பொட்டுத்தங்கம் இல்லையென்றாலும் அழகுக்கு பங்கமில்லாத களையான முகம்,அவள் வீட்டு வேலை செய்பவள் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.ஏனெனில் அவளின் குடும்ப அமைப்பு அப்படி, ஒரு குக்கிராமத்தில் ஆறு பிள்ளைகளைப் பெற்ற குடிகார அப்பாவிற்கு பிறந்த இரண்டாவது மகள். சாப்பாட்டுக்கே சிக்கி சீரழியும் நிலையை காண சகியாத அவளை,பெற்றோரின் ஒப்புதலுடன் அவளின் அத்தை சென்னைக்கு அழைத்துவந்து ஒரு வீட்டில் வேலை வாங்கித்தந்தாள். ஏதோ அவள் வயிற்றையும், மாச சம்பளத்தில் மற்ற பிள்ளைகளின் ஒரு சில தேவைகளுக்கும் அவள் உதவியாக இருந்தாள். அப்படியே இருந்திருக்கலாம் தானே, அவளை யார் ரவியை காதலிக்க சொன்னது.

எப்படி காதலிக்காமல் இருக்கமுடியும், இருபது ஒண்டுக்குடித்தனத்தில் ரவியின் குடும்பமும் ஒன்று, சுமதி வேலைக்கு போக வரும் வழியில் தான் ரவியின் கடை. ஒரே வீடு, ஒரே வாசல், ஒரே வழி, ஒன்றே குலமில்லை, காதல் எங்கே அதெல்லாம் பார்த்துத் தொலைக்கிறது. பருவ வயது காதலாகி கசிந்துருக ஆரம்பித்தாயிற்று. இவர்களின் காதல் விவகாரமும் வெளியே கசிந்துருக ஆரம்பித்துவிட்டது, அரசல் புரசலாக அத்தையின் காதுக்கு வந்தவுடன், அய்யோ, அந்த குடிகாரனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன், ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா என்ன வெட்டிக்கடாசிடுவானே,இது இம்மா நாளா எங்காதுக்கு வரலியே, வந்திருந்தா அவள அன்னைக்கு மூட்ட முடிச்ச கட்டி இழுத்தும்போய் ஊர்ல உட்டுட்டு வந்துருப்பேனே, வரட்டும் அந்த ஓடுகாலி முண்ட இன்னிக்கு வூட்டுக்கு, ரெண்டுல ஒன்னு பாத்துடறேன், அம்மா வீறு கொண்டு எழுந்து அழுது புரண்டாள்.

அக்காதான், ச்சே, எவளோ சொன்னான்னு நம்ம வீட்டு பொண்ண சந்தேகப்படற, நம்ம கண்ணால பாக்கனும், அப்புறம் கேக்கனும், நீ ஏதாவது கேட்டு வெச்சு ஒன்னு கெடக்க ஒன்னு ஆவப்போவுது. நாம் ரெண்டு நாள் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறி, பார்க்கலாம் என்ற போது என்னைப் பார்த்தது அக்கா.

புரிந்தும் புரியாமலும் நானும் அக்காவைப் பார்த்தேன், நீ என்ன பண்ற, நாளக்கி காலைல, சுமதி வேலைக்கு போவும் போது அதுக்கு தெரியாமயே பின்னாடி போற, போயி அது வழில யார் கூடவாவது நின்னு பேசுதா ந்னு சொல்ற. சரியா. நானும் உள்ளமெல்லாம் புளகாங்கிதமாய் சரி என்று வேகமாய் தலையாட்டி மனதுக்குள் அப்போதே எதிர் வீட்டு விஜியை அழைத்துக்கொண்டு உளவு பார்க்க புறப்பட்டேன்.

நான் தலையாட்டிய வேகத்தின் எதிர்வேகத்தில் குரல் வந்தது, கூட யாரையாவது கூட்டுக்கிட்டு போன அவ்ளோதான், நீ போறதும் தெரியக்கூடாது, வரதும் தெரியக்கூடாது, அங்க என்னப் பாத்தன்னு எங்ககிட்ட தான் சொல்லனும். போய் பசங்க கிட்டலாம் இதை சொல்லி வக்காத. சுர் ரென்று சுவாரஸ்யம் இறங்கினாலும் உளவின் புளகாங்கிதம் உடம்பு முழுக்க.

அடுத்தநாள் காலை, சுமதிக்கு முன்னரே நான் எழுந்துவிட்டேன், அன்றைய எனது தலையாய பணியான உளவு மேற்கொள்ளல் அப்போதே துவங்கிவிட்டது. சுமதி எழுந்தது. வெளியே இருந்து தண்ணி எடுத்து வந்து எல்லா பக்கெட், குடத்தையும் நிரப்பியது. ஒன்றிரண்டு பாத்திரத்தை விளக்கியது. குளித்தது. அதனிடமிருக்கும் மூன்று தாவணிப்பாவாடையில் ஒன்றான கத்தரிப்பூ கலர் பாவாடை தாவணியை அணிந்து கொண்டு அழுந்த அழுந்த அதன் அடங்காத தலைமுடியை வாரிக்கொண்டது. பவுடர் போட்டுக்கொண்டது, மூஞ்சி மட்டுமே தெரியக்கூடிய அந்த சாயம் போன கண்ணாடியில் ரெண்டு தடவை அதன் முகத்தை இப்படியும் அப்படியுமாய் திருப்பி திருப்பு பார்த்துக்கொண்டது. வர்ரேன் சித்தி, உள்ளேப் பார்த்து குரல் கொடுத்துவிட்டு, ரப்பர் செருப்பை எடுத்துப்போட்டுக்கொண்டு புறப்பட்டது.

அது வாசலை தாண்டியதுதான் தாமதம், எழுந்து வாயைக் கொப்பளித்துக்கொண்டு, ஒழுகும் தண்ணீரைத் துடைத்துக் கொண்டே ஓடுகிறேன். சுமதி தெருமுனை டீக்கடையைத் தாண்டியதும், நான் நடக்கவும், கொஞ்சம் ஓடவும் ஆரம்பித்தேன், தெருநாய்கள் அங்கங்கே சோம்பல் முறித்து குலைக்க ஆரம்பிக்க, ஓட்டத்தை நிறுத்திக்கொண்டேன். நாய்களைப் பார்த்து பயந்ததில் சுமதி தெரியவில்லை. அய்யயோ வுட்டுட்டோமேடா, எந்த சந்துக்கா திரும்பியிருக்கும் என்னா பண்றது என்று முக்கூட்டில் நின்று கொண்டு யோசித்துக்கொண்டே சரி பஞ்சாப் ஸ்கூல் (கில் ஆதர்ஸ் ஸ்கூல் !) வழியாவே போய்ப் பார்ப்போம் என்று விரைய, பஞ்சாப் ஸ்கூல் போய் திரும்பி பார்த்தால் சுமதி நேராக போகாமல், அதன் எதிர் சந்தில் போய்க்கொண்டிருந்தது தெரிந்தது.

வேலை செய்ற வீட்டுக்கு ஏன் இப்புடி போவுது ? என்று நெஞ்சு படக் படக் என்று அடித்துக்கொள்ள, அதன் பின்னாடியே போனேன். பங்களாக்கள் நிறைந்த அந்த சந்தில் ஒரு கார் அருகே சுமதி நின்று கொண்டிருந்தது, சர்.. ரென ஸ்கூட்டரில் ரவி அண்ணன். நம்ம வீட்ட தாண்டி போம் போதெல்லாம் ம்ஹூக்கும் என்று கனைக்கும் ரவி அண்ணனா அது, குனிந்த தலை நிமிராமல் போகும் வரும், அந்தப் புள்ள இருக்கறதே தெரியாதுன்னு பேர் எடுத்த ரவி அண்ணனா அது, சுமதியின் பக்கத்தில் ஸ்கூட்டரை வைத்துக்கொண்டு நின்று பேசிக்கொண்டு இருப்பது.

இன்னதுதான் என்று சொல்லத்தெரியாத ஒரு குறுகுறுப்பு உடலில் ஓட, அசோக மரத்தின் பின்னாடி நின்று கொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன், அந்த மரமும், ரோஸ் கலர் பெயிண்ட் அடித்த அந்த வீட்டுக் காம்பவுண்டும், காரும், சுமதியின் குனிந்த தலையும், சிரிப்பு சத்தமும், ரவி அண்ணன் ஏதோ சொல்லி விட்டு வண்டியை எடுக்கும்போது, கண்டதில் உறைந்து போய் அடுத்து என்ன செய்வது என்று திகைத்திருந்த என்னைப் பார்த்துவிட்டது.

சுமதியிடம் ஏதோ சொல்ல சுமதியும் என்னைப் பார்த்தது. அவ்வளவுதான், முழு உடம்பும் வெட, வெட என்று நடுங்கியது.

இங்க வா, சுமதி கூப்பிட்டது, மிரட்சியுடனும், சிரிப்புடனும் நான் அதனருகே போனேன், இன்னம்மா, இங்க வந்திருக்க, சித்தி அனுப்புச்சா? என்று பாயிண்ட்டை பிடித்துவிட்டது, இல்ல, ல்ல, க்கோர்ட்டஸுக்கு பால் வாங்க வந்தேன், நீ போனியா, அதான் உங்கூடவே போலாம்னு....... எப்படி முடிப்பது என்று தெரியாமல், கையிலிருக்கும் பால் வாங்கும் தூக்கு என்னைவிட வேகமாய் ஆடியது என் உடம்பு போட்ட உதறலில்.
சரி பத்திரமா பால் வாங்கிட்டு வீட்டுக்குப் போ என்று போய்விட்டது. ஆனால் அதன் முகத்தில் இன்னதுதான் என்று சொல்லத்தெரியாத ஒரு கலக்கம் இருந்தது. ரவி அண்ணன் சற்று தொலைவே வண்டியை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தது.

ரவியும் சுமதியும் லவ் பண்றாங்களா. பார்த்தை வீட்டில் சொல்லலாமா, வேண்டாமா, விஜி கிட்ட கேக்கலாமா என்று என உதறல் அடங்காமல் வீட்டுக்குள் நுழைந்தேன், அக்கா என்னை எதுவுமே கேட்கவில்லை, கொஞ்சம் நிம்மதியாக ஸ்கூலுக்கு கிளம்ப ஆரம்பித்தேன், மாமா எதற்கோ வெளியே போயிருக்க,அக்கா எனக்கு தலை வாரிக்கொண்டே, சுமதி என்ன பண்ணுச்சு, வேலை செய்ற வீட்டுக்கு போச்சா ? என்று கேள்விக்கணைகள். இல்லை என்று சொல்வதா, ஆமாம் என்று சொல்வதா என்று தெரியாமல் கண்ணை கட்டி வீட்டில் விட்டதுபோல உணர்ந்தேன். சொல்லு என்றது அக்கா, அது வந்து சுமதி வேலைக்குதான் போச்சு. பார்த்தேன் என்றேன். அக்கா கொஞ்சமும் நம்பவில்லை. நீ இப்ப ஸ்கூலுக்கு போ, சாயங்காலம் அம்மா வந்து உன்னை கேட்கறா மாரி கேட்கும், அப்ப சொல்லுவ என்றது. ஆனால் அம்மா கேட்கறா மாதிரியெல்லாம் கேட்கலை, வாயில் வெற்றிலைச்சாறு வடிய சிரிப்புடனே, ஏ பட்டூ, என்னத்த பாத்த என்றவுடனே கடகடவென கணக்கு பாடம் ஒப்பிக்கும் கணக்காய் ஒப்பித்துவிட்டேன்.

என் உளவுக்கூற்றினை அடிப்படையாக வைத்து 1987 லவ் ஸ்டோரி முடிவுக்கு வந்துவிட்டது. மறுநாள் சுமதி வேண்டாம் வேண்டாம் என சொல்ல, ஊர்ல திருவிழாவாண்டி, உங்கப்பன் லெட்டர் போட்டிருந்தான் என்று வலுக்கட்டாயமாக ஊருக்கு அழைத்துச்செல்லப்பட்டது. வேலை செய்ற வீட்ல சொல்லனும் அத்த என்றதற்கு அதெல்லாம் நான் பாத்துக்கறேன், நீ கெளம்பு என்றவாறே சுமதி அழது கொண்டே கிளம்ப மனமில்லாமல் கிளம்பியதாம். நல்லவேளையாய் நான் அதைப்பார்க்கவில்லை, ஸ்கூலுக்கு போய்விட்டேன். அதற்குப்பிறகு ஒரு வாரத்திலேயே சொந்த தாய்மாமனோடு கோவிலில் கல்யாணம் என்று முடிவு செய்து அம்மா அங்கேயிருந்து அக்காவுக்கு தகவல் அனுப்ப, அக்கா மாமா சகிதம் போய் முடித்து வைத்துவிட்டு வந்தார்கள். சுமதி பயங்கர அழுகையாம், பட்டுப்புடவை கூட கட்டிக்கவில்லையாம், தலையொரு வேஷமும், துணியொரு வேஷமுமாய் தாலி கட்டிக்கொண்டதாம். அக்கா கதை கதையாய் சரசக்காவிடம் சொன்னது. ரவி ஊருக்கு போய் சுமதியைப் பார்த்தது, ஊரில் மாமா சண்டை போட்டு அதை திருப்பி அனுப்பியது என அவ்வப்போது திகிலூட்டும் கதைகள் காதில் விழுந்தது.

அதற்குப்பின்னர் ரவி அண்ணன் முகத்தைப்பார்க்கவே பிடிக்கவில்லை,சூனியம் வைத்தா மாதிரி இருந்தது. என்னை ரெண்டு அடி கூட அடிச்சிருக்கலாம் அந்த அண்ணன், ஆனா கன்னமிரண்டில் குழி விழ சிரிச்சிக்கிட்டே என் கன்னத்த செல்லமாய் கிள்ளி விட்டு வீடை காலி பண்ணிப் போய்விட்டது. அதற்குப்பிறகும் என்னை எங்கே பார்த்தாலும் சிரிக்கும், ஆனால் எனக்குதான் அந்த அண்ணனை நேருக்கு நேர் பார்க்கும் சக்தி இல்லாமல் குற்றவாளி கணக்காய் தலை குனிந்து போகும் நிலை வாய்த்துவிட்டது.

ஒரு உளவின் கூற்றுக்கு வாழ்க்கையை பிளந்து போடும் சக்தி உண்டா ? இன்றும் இந்தக் கேள்வி சுமதியின் அடங்காத தலைமுடியினைப்போலவே என் அடிநெஞ்சில் இருக்கிறது.

24 June 2009

உப்பு

வீட்டை விட்டு எல்லோரும் போய்விட்ட இந்த 10 மணி காலை, ஒரு பெருமழை பெய்து ஓய்ந்த தோற்றத்தை வீட்டிலேயும், தன் மனதிலேயும் உண்டு செய்தது. காலையில் காஃபி குடித்ததோடு சரி, இன்னும் டிபன் ஆகவில்லை, பசித்தாலும் சாப்பிடும் எண்ணமே இல்லை.

எப்படி இருக்கும்? சாப்பாட்டை பார்த்தாலே சட்டென்று உப்பின் ஞாபகம்தான் வருகிறது. சமையலறைக்கு போனாலுமே உப்பின் ஞாபகம்தான். எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் எப்படியாவது கூடிவிடுகிறது, இல்லையாவது குறைந்துவிடுகிறது. ஆனால் சரிக்கு சரியாய் இல்லை. கொஞ்ச நாட்களாகத்தான் இப்படியென்றாலும், இன்று எல்லோருமே டிபனை புறக்கணித்ததால் மிகவும் சங்கடப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதுவும், உன் கை ரொம்ப பெரிசுங்கறதனால, இப்படியா உப்பை கொட்டி வைப்ப, இதுல என்று தட்டை தள்ளிவிட்டு போனபோது சற்று ஆத்திரமாய் வந்தாலும்,அதன் நிவர்த்திக்கான வழி தெரியவில்லை.

திருப்பி திருப்பி கையைப் பார்த்துக்கொள்கிறேன். பெரிசாக ஒன்றும் தெரியவில்லை, சரியாக, பொருத்தமாகத்தான் இருக்கிறது. கையையே ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டிருந்ததால், போட்டிருந்த மோதிரமும் கண்ணுக்குப் பட்டது, இவ்வளவு நாளாய் விரலோடு விரலாகத்தான் இருக்கிறது. இன்றுதான் அதன் நுட்பமான வேலைப்பாடுகள் கூடத் தெரிகிறது. சின்ன சின்ன உருண்டையாக, வளையங்களைக் கொண்டு, வளையங்களின் இடுக்கில் அழுக்கு ஏறிப்போயிருக்கிறது. சுத்தம் செய்ய வேண்டும் என்று அந்தக்கணம் தோன்றியது.ஆனால் அடுத்த கணமே உப்பின் நினைவு வந்து ஒட்டிக்கொண்டது. கை சுட்டாலும் பரவால்லை என்று சுட சுட கையில் ஊற்றி, சுவைத்துப் பார்த்தால் எல்லாம் சரியாக இருப்பது போலத்தான் தோன்றுகிறது. இது போன்று உப்பின் சுவை பார்ப்பது கடந்த சில நாட்களாகத்தான். அதற்கு முன்னரெல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒருவேளை நாக்கில் பிரச்சினை இருக்குமோ. நாக்கைப் பார்த்தால் என்ன. சட்டென்று கண்ணாடியின் அருகே போய், நாக்கைப் பார்த்தேன். இரண்டு பக்கமும் திருப்பி திருப்பி பார்த்து, நாக்கை நீட்டிப் பார்த்து என்று செய்ததில் உமிழ்நீர் சுரந்ததுதான் மிச்சம், வேறொன்றும் பலனில்லை.

ச்சே, உப்பு என்ற ஒன்றை கண்டுபிடிக்காமலேயே இருந்திருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்கும், அப்படியே அதனதன் போக்கில் சாப்பிட்டு நாக்கும் பழக்கப்பட்டு போயிருக்கும், இப்படியே யோசனை நீண்டதில், தான் எப்பவாவது உப்பில்லை என்று உணவை புறக்கணித்திருக்கோமா என்று தோன்றியது.
ஒரு முறை அத்தை வீட்டில் தான் அது நடந்திருக்கிறது. அம்மாவிற்கு பெரும்பாலும் இந்தப்பிரச்சினை வராது, பாட்டிக்கும், அப்பாவின் சத்தத்திற்கு பயந்தே பார்த்துப் பார்த்து சமைப்பாள். ஒரு முறை கூட தப்பிப்போனதில்லை, பிள்ளைகளின் மீது எவ்வளவு கவனம் வைத்திருந்தாலோ, அதே கவனம் உப்பின் மீதும் இருந்திருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. சாப்பிடும் போது ஒரு முறை கூட உப்பு வைத்திருக்கும் கலம், கூடத்திற்கு வந்ததில்லை. ஆனால் அத்தை வீட்டில் பொடி உப்பை ஒரு சிறிய டப்பாவில் போட்டு, சாப்பாட்டு மேசை மீது எப்போதுமே இருக்கும். ஓட்டலில் வைத்திருப்பதைப் போல.

அத்தைக்கு அவ்வளவாய் சாப்பாடு, சமையல் என்ற விஷயத்தில் ஈடுபாடு இருக்காது, அதற்காகவே விடுமுறை காலங்களில் அத்தை வீட்டுக்கு ஓடிப்போகத்தோன்றும், இங்கே இருந்திருந்தால் இந்தப் பாட்டியின் பேச்சைக்கேட்டு, அம்மாவும் என்னை நை, நை என்று அதைச் செய், இதைச் செய் என்று நைந்துகொண்டிருப்பாள், செய்யவில்லை என்றால் பாட்டி வைதுக்கொண்டிருப்பாள். இந்த தொந்திரவுக்கே, விடுமுறை வரும் ஒரு வாரத்துக்கு முன்னரே அத்தையை வரச்செய்து, அவளோடு தொத்திக்கொண்டு போய்விடுவது. எந்த தொந்திரவும் இல்லாமல், நினைத்ததை செய்துக்கொண்டு பொழுதோட்டுவது என அவையெல்லாம் கார்காலங்கள். அவ்வப்போது அம்மாவை நினைத்துக்கொண்டாலும், அந்த குண்டு பல்பு போட்ட சமையலைறையை நினைத்தால் கொஞ்சம் பயமாகவே இருக்கும்.

அத்தை அனேகமாய் கலந்த சாதம் மாதிரிதான் செய்வாள். அதுதான் சுலபம், ரசம், சாம்பாருன்னு செஞ்சாலும் சாதத்துல போட்டு கலந்துக்கிட்டுதானே சாப்பிடப்போறோம். தோசை சரியாகவே வார்க்கவராது, சப்பாத்தியும் அதே கதைதான். ஓவ்வொரு தோசையும், சப்பாத்தியும் ஒவ்வொரு தோற்றம் காட்டும், சில சமயம் மேப்பில் இருக்கும் சில நாடுகள் கூட அதே மாதிரி சாயலாய் இருப்பதாய் கூட நினைத்துக்கொண்டு சிரிப்பேன். அத்தை கேட்டால் சொல்லிவிடுவதுண்டு, அதற்கு அவளும் சிரித்துக்கொண்டே, எப்படியும் பிச்சு பிச்சு தானே சாப்பிடறோம், எப்படியிருந்தா என்ன, வயிறு ரொம்புதா. அதப் பாரு என்பாள். ரொம்பவும் மெனக்கெட மாட்டாள் சமையலுக்கு எப்பவுமே, மாமாவும் அதே மாதிரி இருந்ததால், அத்தைக்கு இந்த விஷயத்தில் எந்த பிரச்சினையுமில்லை.

கூடுதலாக இவளின் சமையலின் கைத்திறமை கண்டு, சொந்தக்கார கூட்டங்கள் வந்து டெண்ட் அடிப்பதென்பது மிகமிகக் குறைவு. அத்தைக்கு சமையலில் தான் கைத்திறமை இல்லையே ஒழிய, கை வேலைப்பாடெல்லாம் அழகாய் செய்வாள், அவள் எம்ராய்டரி போட்டால் இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். அத்தையின் ஓய்வு நேரங்களெல்லாம் எம்ப்ராய்டரிதான், சில பத்திரிக்கைகள் நடத்திய போட்டியில் கலந்து கொண்டு பரிசு கூட வாங்கியிருக்கிறாள் இதற்காக. எம்ப்ராய்டரிக்கு நேரம் ஒதுக்குவதற்காகவே சமையலை சீக்கிரம் முடிக்கிறாள் போல என்று கூட தோன்றியது.

மேடம், கொரியர்.......... என்ற கட்டைக் குரல், சட்டென்று நினைவுகளை கலைக்கச்செய்தது. நேரத்தைப் பார்த்தால் 11 மணி என்று காட்டியது. ஏதோ பேங்க்கில் இருந்து வந்த கொரியர், ஸ்டாண்டில் வைத்துவிட்டு, வீட்டை ஒழுங்கு செய்யவே அரைமணி நேரம் பிடித்தது. மறுபடியும் சமையலறை. உப்பு கிலி பிடித்துக்கொண்டது. சாப்பிடத்தோணவில்லை, மீண்டும் ஒரு காபி குடித்துவிட்டு, துணிகளை துவைத்து, காயப்போட மாடிக்கு போனேன். காயப்போடும்போது, அங்கிருந்து மளிகைக்கடை கண்ணில் பட்டது. ஒரு வேளை இவன் தரும் உப்பில் ஏதேனும் ப்ரச்சினையா. அளவாய் போட்டாலும், கரிக்க செய்யும் தன்மையோ. என்ன உப்பு வாங்குகிறோம்,கீழே போய் பார்க்கவேண்டும்.

ச்சே, எங்கே போனாலும் இந்த உப்பு ப்ரச்சினை ஒட்டிக்கொண்டே வருகிறது. பசித்தது, காலையில் சாப்பிடத்தாலோ என்னவோ, தயிர் சாதம் சாப்பிடலாம் என்று தோன்றியது, சாதத்தில் தயிரை விட்டு பிசையும்போது தோன்றியது, உப்பு போடாமல் இன்று சாப்பிட்டால் என்ன, இன்று காலையிலிருந்து என்னோடு ஒட்டிக்கொண்டே வந்து உயிரை வாங்கும் இந்த உப்பு நினைவுக்கு இதுதான் சரியான தண்டனை, உன்னைப் புறக்கணிக்கிறேன் உப்பே என்றபடி தயிர்சாதத்தை வாயில் வைத்தால் என்னவோ போலிருந்தது.
என் பேச்சும், செயலும் எனக்கே சிரிப்பை வரவைத்தாலும், உப்போடு ஒரு வீராப்பு வரத்தான் செய்தது. பாரேன், உப்பு, வீராப்பு என்று, ஆழந்த சிந்தனைகளில் தொடர்பாக வார்த்தைகள் கூட அடுக்கு மொழி போல வந்து விழுகிறது. ம்ஹூம் விடுவதாயில்லை, எப்படியாவது இந்த உப்பில்லா தயிர்சாதத்தை சாப்பிட்டாவேன், இரண்டும், மூன்று வாய், குமட்டிக்கொண்டு வந்தது. கொஞ்சம் ஊறுகாய் வைத்துக்கொள்ளலாமா என்று தோன்றியது, ம்ஹூம், வேண்டாம். உப்பின் அதிக பட்ட பயன்பாடே ஊறுகாய்க்குத்தான். அதற்கு ஒரு துளி உப்பே சேர்த்துக்கொள்ளலாம்.

வேண்டாம் என்றால் வேண்டாம் தான் என்று பிடிவாதமாய், தட்டை கையிலெடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்து டி.வி.யைப் போட்டேன். போட்டவுடனேயே இந்தக் காட்சிதான் ஓடியது, ஒரு பெண்ணும், சமையலறையும்,கலராய் ஏதோ உணவு வகையறாவையும் காண்பித்து, தலைமுடி சீராய், மடிப்பு கலையாத புடவையோடு,முக்கியமாய் வியர்த்து வழியாமல்,தன் நீண்ட நெயில் பாலீஷ் விரல்களால் உப்பை அழகாய் தூவிக்கொண்டிருந்தாள். உடன் ஒரு மெல்லிய இசையும் ஒலித்தது. வாங்குங்கள் அயோடின் நிறைந்த இந்த உப்பை என்று கீச்சுக்குரலில் சொன்னாள். டி.வியை ஆஃப் செய்யவும் தோன்றாமல்,சாப்பிடவும் தோன்றாமல் தயிர் சாதத் தட்டையே வெறித்துக்கொண்டிருந்தேன் நான். பிள்ளைகள் பள்ளிவிட்டு வரும் சத்தம் கேட்டது. மீண்டும் வருமா இந்த உப்பின் யோசனை, இல்லை மீண்டு வருவோமா இந்த உப்பிலிருந்து ? மறுபடியும் உயிரைவாங்கும் இந்த உப்பின் சிந்தனையோடு கையைக் கழுவிக்கொண்டு கதவைத் திறந்தேன்.

11 May 2009

காக்காணி

இலையோடு இலை கூட அசையவில்லை, காற்றே இல்லை, மேல் துண்டால் விசிறி விசிறி விட்டுக்கொண்ட சின்னையனுக்கு தூக்கமே வரவில்லை, எழுந்து வீட்டுக்குள் போனார், சிம்னி விளக்கு ஆடாமல் அசையாமலிருக்கும் ஒரு சுடரைக் கொண்டு அந்த இருட்டுக்கு ஒளி பிறப்பித்துக்கொண்டிருந்தது. இவர் வீட்டுக்குள் சென்ற சிறு வேகம் அந்தச்சுடரை ஏதேனும் செய்திருக்க வேண்டும்சற்றே இடப்பக்கம் சாய்ந்து பின் நிமிர்ந்தது.

பழக்கப்பட்ட இருள், ஒற்றைச்சுடர் கொண்டு வந்த சிறு வெளிச்சத்தில், ஏற்கனவே கந்தலாகிப் போயிருக்கும் ஒரு வேட்டியின் முனையை கொஞ்சம் கிழித்தார், ஈரப்படுத்திக்கொண்டார், அந்நேரத்தில் மஞ்சளுக்கு எங்கே போவது என்று யோசித்தார்.சாமி படத்தில் குங்குமத்தைப் பற்றி இருந்து கொஞ்ச காய்ந்த மஞ்சளையே அந்த ஈரத்துணியால் துடைத்துக்கொண்டார். கவனமாக ஒரு ரூபாயை முடிச்சிட்டார். சாமி போட்டோ வைத்திருந்து அந்த ஆணி மேலேயே அந்த நாணய முடிச்சை முடிச்சிட்டார். ஒரு பெருமூச்சிட்டு வீட்டுக்கு வெளியில்வந்து பீடியைப் பற்ற வைத்தார். யோசனைகள் அலை பாய்ந்தது. நாளைக்கு அவன் வந்துடுவானோ, இந்த காக்காணியும் இல்லாம பூடுமோ.. அன்னிக்கு வந்த வேகத்துல சரின்னு சொல்லிட்டாலும். இதுவும் கைய விட்டு பூட்டா, என்னாத்த செய்யுறது. நமக்குத்தான் வயசாயிடுச்சி, பாத்துக்க முடியாமபோய்ட்டாலும், போகியத்துக்காவது போட்டு உடலாம், வருசத்துக்கு அஞ்சாறு மூட்டையாவோ, இல்ல பணமாவோ வாங்கிடலாம், காணிய கண்ணுல பாத்துக்கிட்டே இருக்குற இந்த கொற காலத்த ஓட்டிரலாம் என்று எண்ணியிருந்ததின் மீது நாளை கை நாட்டு வைத்துவிடுவோமோ. ம்ஹூம் பொன்னாத்தா, நீயிருந்தா இதெல்லாம் பாத்துப்ப, நான் பாட்டுக்கு கழனிக்கு போனனா, வந்தனான்னு இருந்திருப்பேன். நீயும் போயி, இப்ப நெலமும் போவப்போகுது என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே, கண்ணோரம் ஈரத்தை கைத் துண்டால் துடைத்து, மூக்கை சிந்திப்போட்டார்.

இந்தப் பன்னாட பையன் மட்டும் வரலன்னா, நான் நின்னவாக்குலயே நின்னிருப்பன். அன்னிக்கு அத்தன பங்காளி பயலுவளும் ஒத்துக்கினு எங்கிட்ட பேச வந்தானுங்க, அன்னிக்கி நா இன்னா ஒத்துக்கனன்னா. எத்தினி பேரு எத்தினி சொன்னானுங்க, ரோட்டோரம் நெலமா கெடக்குது, அந்த கம்பேனிக்காரவுனுக்கு வித்துபுடு, அதுவும் உன்னோட காணி கெடக்கறது நடுவுல. சுத்து பட்டுல இருக்குறது உம் பங்காளிகளோடதுதான். அதுவுமில்லாம கெணறும் பாகத்துல வருது, நாலக்கி அவனுவல்லாம் நெலத்த வித்தா கெணத்தோட சேர்த்துதான் விப்பானுங்கோ. அப்ப நீ மட்டும் விக்காம வெவசாயம் பண்ண தண்ணிக்கி எங்கயா போவ. ஒன்னு காஞ்சி கெடுக்குது, இல்ல பேஞ்சி கெடுக்குது இந்த மானம். இத்த நம்பி நீ இன்னாத்த போடுவ. அதுவுமில்லாம வயசாவுதுய்யா உனக்கு, கண்ணும் தெரியலன்னுட்டு சொல்லிகினு திரியற. இந்த லட்சணத்துல நீ ஒருத்தன் எப்டிய்யா இந்த நெலத்தோட போராடிக்கினு கெடக்கப்போற?. பேசாம நாஞ் சொல்றத கேளு. உம் பங்காளிங்கள்ளாம் ஒத்துகினானுங்கோ, செண்ட்டுக்கு 10000 ரூவா, ஏதோ பெரிய கம்பேனிக்காரன் வந்து வாங்கிக்கப்போறானுங்களாம்
நீ ஒருத்தந்தான் மொரண்டு புட்ச்சிகினுகிற. ஒங் காணி ஓரஞ்சாரமா கெடந்தாலும் உட்டு கெடாசிட்டு பூடலாம். நீ நட்ட நடுவுல வெச்சிகினு விக்கமாட்டன்னு புடியா புட்ச்சிகினுகிற. அவனுங்க மட்டும் இன்னா, வேணும்னா விக்கப்போறானுங்க, கடா மாரி வளத்துவுட்ட புள்ளைங்கல்லாம் கெளப்பிவுடுதுங்கோ, நல்ல வெலைக்கு கேட்கறான், குத்துடு, குட்த்துடு, அப்டினு, இவனுங்களும் கொட்ச்சல் தாங்காமத்தான வித்துக்குட்த்துட்டு ஒழிச்சிடலாம்னு நெனைக்கிறானுங்க.

சரி தோ பாரு சின்னைய்யா, இன்னிக்கி இல்லனாலும், நாள பின்ன, மெட்ராஸ்ல இருக்குற ஒம் புள்ள இந்த நெலத்த விக்கத்தான் போறான், அப்ப இன்னா நீ ஒக்காந்து பாத்துக்கிட்டா இருக்கப்போற, இல்ல அப்ப நெலந்தான் இந்த வெளைக்கு போவுமா சொல்லு. இந்த கரம்புக்கெல்லாம் எவன்யா இம்மாங் காசு குட்த்து வாங்குவானுங்கோ. ஏதோ நெல ப்ரோக்கருக்க கம்பெனிகாரனுங்கள் கூப்ட்டுகினு வந்தானுங்களோ, இது இம்மா வெல போவுது, கூட நெலம் வேற ரோட்டோராம் கீது. அதான். பாரு, பட்டுன்னு முடிவெடு, அடுத்த வாரம் அந்த கம்பேனிக்காரவுனுங்க வரானுங்களாம். நெலத்துக்கு பாத்தியத ஆன நீங்க 6 பேரும் ஒன்னா இருந்து கையெழுத்து போட்டுக் கொடுங்க, போட்ட கையோட பணத்த செட்டில் பண்ணிக்குங்க என்றார்கள். டீக்கடையில் இது ஏதோ ஒரு மேடைக்கூட்டம் மாதிரி நடந்த்து. சுற்றிலும் 10 ஊர்க்காரனுங்க, 6 பங்காளிங்க என்று பல்குத்திக்கொண்டும், பீடி குடித்துக்கொண்டும், பேசினா....................ர்கள். இது எதுக்கும் புடி கொடுக்காமல் பேசிவிட்டு வந்தார் சின்னையன். ரெண்டே நாள்தான்.

ஒரு நா, பத்து மணி வாக்குல புள்ளகாரன் வீட்டு வாசல்ல வந்து நிக்கறான். திண்ணையில் குந்திக்கொண்டிருந்த சின்னையன், அவன் வந்து நின்றதைப் பார்த்தவுடனே புரிந்துகொண்டார், செத்தாதான் வருவான்னு நெனச்சோம், பரவால்ல உயிரோட இருக்கும்போதே வந்துட்டான், எந்த பொறம்போக்கோ இவனுக்கு போன் பண்ணி சொல்லியிருக்கும், அதான் கலெக்டர் மயிரு வந்துட்டாரு கண்டுக்கிட்டு போவ என்று எண்ணியபடி,துண்டை உதறி மேலே போட்டுக்கொண்டு, இடுப்பு வேட்டியை சரி செய்தார். வா என்று நிலத்தைப் பார்த்து கூப்பிட்டவாறே, உள்ளே போய் ஒரு சொம்பு தண்ணிய எடுத்தாந்து திண்ணையில் வைத்து விட்டு, தொண்டையை கனைத்தார், ஊர்ல புள்ளைங்க, அவ, எல்லாம் சொகந்தானே, படிக்குதுங்களா?. பதிலுக்கு, உம், ரெண்டும் பள்ளிக்கூடத்துக்கு போவுதுங்க. பெரிசுக்கு தான் 2 நாளா காய்ச்ச. இல்லனா ஞாத்திக்கெழமையே வந்திருப்பேன் என்று பதில் சொன்னான்

ராஜேந்திரன், சின்னையன், பொன்னம்மா தம்பதியின் ஒரே மகன். இந்நேரம் பொன்னம்மா இருந்திருந்தா, புள்ள வந்து வாசல்ல நின்னத பாத்தவொடனே, யப்பா, ராசா, வந்தியான்னு மூக்க சிந்திப்போட்டுட்டு, கோழி வெட்டவா, ஏரி மீன் புடிக்க சொல்லவா ந்னு லிஸ்ட்டு போடுவா. இவனும் மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு, மைனர் மாறி ஊர் சுத்திக்கிட்டிருப்பான்.

ஒரே புள்ள, ஊட்டி ஊட்டி வளர்த்து, பத்தாவதுக்கு மேல படிப்பேறாம, ஊர்ல இருக்கறதுங்களோட சேர்ந்துக்கினு மெட்ராஸ்ல போய் கழட்டபோறன்னு போச்சு, அங்க போயி எவன் கிட்ட ஒதையும், திட்டும் வாங்குச்சோ, இன்னாவோ, கார் மெக்கானிக்கா ஆயிடுச்சு. ஒரு நா ஞாயித்துக்கெழமை, ஒரு ஓட்ட கார எடுத்துக்கினு, நாலு பசங்கள கூட்டுக்கினு ஊருக்கு வந்தவுடனே, பொன்னம்மாளுக்கு கை, கால் புரியவில்லை. யப்பா, காரா ஓட்டற, காரா ஓட்டற, என்று புள்ள தேர் ஓட்டுறா மாதிரி 10 தடவயாவது கேட்டாள். பத்தாததுக்கு ஊர் முழுக்க புள்ள கார்ல வந்தத தமுக்கடிச்சா. எவ கண்ணு பட்டுச்சோ, எண்ணி 6 மாசம் கூட ஆவல, ஒரு நா, ஒரு பொண்ண இட்டுக்கினு வந்து, தோ இவளதான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு சொல்றான். எவ்வளவோ வாதாட்டம். பொன்னம்மாவும் மூக்க சிந்திப்பாக்குறா, பட்டினி கெடந்து பாக்குறா, ஒன்னும் வேலைக்காவாத, தான் புட்ச்சதே புடின்னு அவன் கல்யாணம் பண்ணிக்கொண்டான். கொஞ்ச நா, பங்காளிங்களோட பேச்சு வார்த்த கூட இல்லாமதான் இருந்த்து. அப்புறம் பொன்னம்மா செத்தவுடந்தான் ஏதோ ஒரு நா, கெழமைன்ன பண்டம், பலகாரம் குடுக்கன்னு ஒட்டனானுங்க. ம்ஹூம், பொன்னம்மாவோட போச்சு, வாய்க்கு ருசியா சாப்புட்டது, கண்ணுக்கு அழகா கட்டுனதும். அவ வேட்டிய தோச்சான்னா, தும்பப்பூவு கணக்கா இருக்கும். கருவாட்டுக்கொழம்பு வெச்சான்னா, மணக்க மணக்க இருக்கும். இன்னாதான் கழனில, கொள்ளில இல்ல கூலிக்கு போய் மாடு மாதிரி ஒழைச்சிட்டு வந்து அலுப்பு சுலுப்பா இருந்தாலும் முக்கிகிட்டு மொணறிகிட்டாவது ஒரு கொழம்ப வெச்சிடுவா. சுட சோறும், கொழம்பும் ஒரு நா தவறுனதுல்ல.

ம்க்கும், இப்ப எங்க, உப்பு இருந்தா, ஒரப்பு இல்ல, நான் வெக்குற கொழம்புல என்று நீ.....ண்ட யோசனையை, ஒரு தொண்டை கனைப்பு கலைத்தது. நிமிர்ந்து பாத்தால், புள்ள, இன்னும் ஊர்க்காரனுங்க நாலு பேரும் நிக்கறானுங்க. ராஜேந்திரன் பேசினான், வயசாயிடுச்சு, இனிம இந்த நெலத்த வெச்சிக்கிட்டு இன்னாப் பண்ண போற, நல்ல வெலைக்கு வருது, குடுத்துட்டு, பணத்த நீ பேங்க்குல போட்டுக்க, வர்ர வட்டிய வெச்சு சாப்புடு. பின்னாடி பாத்துக்கலாம். அட கம்னேட்டி, இத சொல்லத்தான் மெட்ராஸ்ல இருந்து வந்தியா என்று நினைத்துக்கொண்டார் சின்னையன்.

சொல்றத கேளு, இனிமே எதுக்கு வேவா வெயில்ல கஷ்டப்பட்டுக்கினு, அம்மாவும் இல்ல. பேசாம வித்துட்டு மெட்ராஸ் பக்கமா ஒரு எடம் வாங்கிப்போடலாம்,. கடசி காலத்துல நீயும் அங்க வந்து வுழுந்து கெட என்றான். ம்க்கும் இம்மான்னாளு இங்க கஷ்டப்பட்ட, கொற நாள மெட்ராஸ்ல வந்து கஷ்டப்பட்டுக்கினு இருன்னு சொல்றியா என்று நினைத்தவாறே, இப்ப இன்னா, அந்தக் காணி இருக்கறது உங்க எல்லார் கண்ணுலயும் உறுத்துது, அம்மாந்தானே, த்தே, இங்க பாருடா, நானும் வித்துக்குடுக்க ஒத்துக்கனன்னு போய் சொல்லிடு, இம்மாந் நாளு அதுதாண்டா எனுக்கு சோறு போட்டிச்சி, பெத்த புள்ள கூடப் போட்டதில்ல ஒரு வா. அத்த விக்கனும்னு ஆய் போச்சு, நாஞ் செய்யலனாலும், என்ன செய்ய வெச்சிட்டீங்க, ப்போய் சொல்லு, சின்னையன் ஒத்துக்கினாருன்னு.

ராஜேந்திரன், த்தே, அப்படி ஒன்னு எனாமா, யாசமா நீ ஒன்னும் தூக்கிக்குடுக்க வாணாம், எனக்குன்னா, நா கத்துக்குன கைத்தொழில் இருக்குது, அது கஞ்சி ஊத்தும், எந்த மயிரானாவது வித்துக்குனு போங்க, இல்ல விக்காட்டி போங்க என்று விசுக்கென்று சொல்லியவாறே கூட்டாளிகளோடு குடிக்க போய்விட்டான். மறுபடியும் போதை ஏற்றிக்கொண்டு வந்து இன்னும் நாலு வார்த்த பேசித் தீர்த்தான், கடைசியில அழுது முடித்தான். சின்னையனுக்கு வெறுத்துப்போனது. ச்சே என்று ஆகிவிட்டு, வித்துபோடுவோம் என்று ஒத்துக்கொண்டார்.

இருந்தாலும் ஏதோ மனசு அடித்துக்கொள்ள, விக்காம இருந்தா நல்லா இருக்கும், கடசி காலத்துல எனக்கு தொணையா இருக்கும், என் காலத்துக்குப்பின்ன அவன் வித்து பொழைச்சிக்கிட்டும், என்ற வேண்டுதலோடுதான் ஒற்றை ரூபாயை முடிச்சிட்டார். பொன்னம்மாவின் பழக்கம் அது, என்ன மனக்கஷடமிருந்தாலும், உடம்பு கஷ்டமிருந்தாலும், ஒத்த ரூபா முடிச்சுதான், எண்ணி ஒரு வாரம் எல்லாம் சரியாகிவிடுமென்பது அவளின் நம்பிக்கை. சில சமயம் இரவு நேரங்களில் வெத்தலை பாக்கு போட்டுக்கொண்டே, தான் நேர்ந்து கொண்டதையும் உடன் அது பலித்ததையும் சொல்லிக்கொண்டிருப்பாள். பதிலுக்கு இவர், அப்ப ஒம் புள்ள இழுத்துகினு போம் போது ஒரு ரூவா முடியறதுதானே, திரும்பி வந்துட்டிருப்பான் என்று கேலி பேசுவார். பொன்னம்மாவோ, ஆயிரம் இருந்தாலும் அது நம்ம புள்ள, நேர்ந்துகிட்ட பின்ன அதுக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிப்போச்சுன்னா, நாமதானே வெச்சுக்கினு படனும் என்பாள். இப்படியாய் அன்றிரவு பொன்னம்மாளின் நினைவுகளைப் போர்த்தி உறங்கிப் போனார் சின்னையன்.

மறுநாள் காலை, கம்பெனிகாரனுங்க வந்தானுங்க. அளவெடுத்தானுங்க, இத்தனை செண்ட்டுக்கு இவ்வளோ ரூவா, இத்தனாந் தேதி ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம் என்று பேச்சாகியது. சின்னையன் பேசாமல் கிடந்தார். இரண்டு நா கூட ஆகலை, அரசல் புரசலா செய்தி வந்தது, ஒரு செண்டுக்கு பத்தாயிரம் ரூவா இல்லியாம், அஞ்சாயிரம்னு வேணா பேசி முடிக்க சொல்லியிருப்பதாக ப்ரோக்கர் சொன்னான், காரணம் கேட்டதுக்கு ரியல் எஸ்டேட் பிஸினஸ் கொஞ்சம் இறங்குமுகமாக இருப்பதாகவும் சொன்னான். அவன் அவன் வேலையே இல்லாம வீட்டுக்கு போயிட்டு இருக்கானுங்க, இந்த நெலமையில எங்கத்த நெலத்த வாங்கிப்போடுவானுங்க. ஒயரத்துக்கு போனதெல்லாம், கீழ ஒக்கார ஆரம்பிச்சிருக்கு.அஞ்சுக்கு ஒத்துக்கறீங்களா, இதுவும் நல்ல வெளைதான் இந்த எடத்துக்கு என்றான்.

பலாப்பழம் கிடைக்கும் என்று எண்ணியிருந்தவர்கள், சுளைதான் கெடைக்கும் என்றாகியபோது, பக் கென்று ஆனார்கள். சின்னையன் நினைத்துக்கொண்டார், என்னிக்குமே எம் மண்ணு, எங் காணி குடி கெடுக்காதுடா. தலைமொறை தலைமொறையா பசி தீர்த்த பூமிடா இது. இத வித்து கூறு போடாதீங்கடான்னு அன்னிக்கே சொன்னேன், கேட்டீங்களா. பத்துக்கு வாய பொளந்தீங்களே, இன்னிக்கு அஞ்சு ந்ன்றான். இப்ப இன்னாடா பண்ணப் போறீங்க என்றார்.அவரின் குரலில் எகத்தாளமிருந்தது. அங்கிருந்த அனைவரும் கலைந்தார்கள். சின்னையன் போய் நிலத்தில் காலை வைத்தார், வெயில் கொளுத்தியது, ஆனால் சின்னையனுக்கு மண் சுடவில்லை, மாறாய் ஈரப்பதம் கொடுத்தது. பொழுதோடு வீட்டுக்கு வந்தவர், மறக்காமல் ஒற்றை ரூபாய் முடிச்சைப் பார்த்தார். அங்கே பொன்னம்மாள் சிரித்துக்கொண்டிருந்தாள்.


டிஸ்கி: என் முதல் சிறுகதை முயற்சி. நிறையோ, குறையோ உங்களின் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்