31 March 2009

அழவாணம்

உங்களுக்கு அழவாணம் வெச்சுக்கப்பிடிக்குமா? நீங்க கடைசியா எப்ப வெச்சுக்கிட்டீங்க. அது வேறொன்னும் இல்லீங்க மருதாணிதான். (எங்கம்மா அழவாணம்னுதான் சொல்லுவாங்க).

மருதாணி, அதன் சிறுசிறு இலைகளும் பச்சை வாசமும், அரைக்கும் போதே கையைப்பிடித்துக்கொள்ளும் சிவப்பும். அட அட.

சிறு வயசில, இந்த மருதாணி அரைப்பதே ஒரு பெரிய விஷயமா இருக்கும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது உடைகளுக்கும், மற்றதுக்கும் இருக்கும் முன்னுரிமை மருதாணிக்கும் இருக்கும்.

நாம வெச்சிக்கிறதா இருந்தா நாம மருதாணி அரைப்பதே வேஸ்ட் தான். அரைக்கும் போதே கையெல்லாம் திட்டு திட்டா செவப்பு ஒட்டிக்கும், அப்புறம் வெச்சு என்ன, வெக்காம என்ன. அதனால மைய மருதாணி அரைச்சு
குடுக்க ஏதாவது ஒரு அக்காவ பிடிக்கணும். (எங்கம்மா அரைச்சுக்குடுக்க மாட்டாங்க.) அவங்க அலுத்துக்கிட்டு அரைப்பாங்க. அரைக்கும் போது கட்டெறும்பு பிடித்து விடுவது, கொட்டைப்பாக்கு இது போன்ற ஏகப்பட்ட இத்யாதிகளை
சேர்த்தால் மருதாணி இன்னும் சிவக்கும் என்பது நம்பிக்கைகளின் நம்பிக்கை. அரைத்துக்கொண்டிருக்கும் போதே அதை நமக்கு யார் வைத்து விடுவார்கள் என்று ஆள் பிடிக்க வேண்டும். எனக்கு என் அக்கா வைத்து விட்டால் தான்
பிடிக்கும். இரண்டு கையிலும் வைத்துக்கொள்ள வேண்டும்.

கையின் நடுவில் அழகா ஒரு வட்டம், அதற்கு காவலைப்போல சுற்றி 5, 6 பொட்டுக்கள். இது கையின் அகலத்து உட்பட்டது. அப்புறம் விரலின் முனைப்பகுதியில், நகத்தையும் சேர்த்துதான் தொப்பி. இதுதான் அநேக மருதாணி வைப்போரின் ஃபேவரிட் டிசைன், ஆண்களுக்கும் தான். எங்க மாமா உள்ளங்கையில் மட்டும் சின்னதா ஒரு வட்டம் வெச்சுப்பாரு.
இதை வெச்சுக்கிட்டு இருக்கும் போதே தூக்கம் கண்ணுல சொக்கும். நடுவில் மருதாணி கலைஞ்சிடக்கூடாதே என்கிற கவனம் வேறு. வைத்துக்கொண்டபின் கை தனியாக ஒரு கணம் ஏறிவிடும். கூடவே மருதாணி வாசமும் தான்.
ஆஹா, அந்தப் பச்சை வாசனை. இரண்டு கையையும் தலைக்கு மேலே தொங்கப் போட்டுக்கொண்டு கவனமாக தூங்க ஆரம்பித்து இருப்போம். அப்புறம் முகத்திலும், நமது ஆடையிலும் மருதாணி பட்டிருக்கும் என்பது வேறு விடயம்.
காலையில் எழுந்திருக்கும் போது இதனைக் குறித்து எந்த யோசனையும் இருக்காது. சட்டெனப் பார்த்தால் கொஞ்சம் மருதாணி வாசனையும், நம்மைச் சுற்றி காய்ந்து உதிர்ந்து கிடக்கும் மருதாணிப் பத்து மறுபடியும் கிளப்பி விட்டுவிடும் செவப்பின் சுவாரசியத்தை.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, இரண்டு கையையும் அதில் விட்டு சுரண்டி நன்றாக கழுவும் போதும் மருதாணி வாசம், இப்போது தண்ணீ பச்சையா இருக்கும், நம்ம கை சிவப்பா இருக்கும். வெள்ளை வெளேர் என இருக்கும் உள்ளங்கையில் சிவப்பு சிவப்பு பொட்டு, கூடவே நகமெல்லாம் ஏறிப்போயிருக்கும்
சிவப்பு என நம்மோட கையைப் பார்க்கும் போது ஆசையா ஆசையா வரும். ஆனா இப்படி சந்தோஷப்பட்டுக்கொண்டே இருக்கும் போது, நம்மோடு கூட இரவு மருதாணி வைத்துக்கொண்டவங்க எல்லாம் வந்து, ஏய் பாரேன், இவ கை எவ்ளோ செவப்பா இருக்கு, உன் கையில அவ்வளோ ஒன்னும் பத்தலை என்று சொல்லிவிட்டால் போச்சு.
அவ்வளவு கனவும் டமால். ச்சே நம்ம கையிலும் நல்லாதான் செவந்திருக்கு என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டாலும், அடுத்தவளின் கையைப் பார்க்கும் போது ஒரு இனம் புரியா “இது” உண்டாகும்.

2,3 நாட்களில் கையிலிருக்கும் மருதாணி சிவப்பு கருமையேறியிருந்தால் சூட்டு உடம்பு என்று அக்கா சொல்லும். அப்புறம் மருதாணி கையோடு அபிநயமெல்லாம் பிடித்து, எழுதும் போதும், கையை வீசி நடக்கும் போதும், வகுப்பு தோழிகளிடம் காண்பிக்கும் போதும் மருதாணி வாசம் தான். எல்லாம் கொஞ்ச நாள்தான். அப்புறம் மருதாணி மங்க ஆரம்பித்து, கையிலிருந்து சிவப்பு கழண்டு விடும். ஆனால் இந்த நகத்தில் ஏறியிருக்கும் சிவப்பு மட்டும் சீக்கிரம் விடாது. பவழ சிவப்பாய் இருந்து கொண்டே இருக்கும். எப்போது அந்த சிகப்பு நம்மை விட்டகன்றது என்று நமக்கு தெரிந்திருக்கவாய்ப்பிருக்காது. மருதாணியை வைத்துக்கொள்ள காட்டும் ஆர்வம், அது மங்கும் போது தோன்றவே தோன்றாது.
டீ டிகாக்‌ஷன் விட்டால் இன்னும் சிவப்பேறும் போன்ற உத்திகளோடு மறுபடியும் மருதாணி வைத்துக்கொள்ளவும், அரைக்கவும் அடுத்து ஏதாவது ஒரு பண்டிகை வந்து விட்டிருக்கும்.

கடைசியாய் எப்போது மருதாணி இட்டேன், எனது கல்யாணத்தின் போது, ஆனால் அது ஏதோ டிசைன் போட்டு மணிக்கட்டு வரைக்கும் இட்டு விட்டது அந்தப் பெண், ஆனால் மனதோடு நெருக்கமாகவே இல்லை அந்த மருதாணியின் டிசைன். என்னதான் இருந்தாலும், பச்சென்று மனதில் ஒட்டிக்கொண்ட பச்சை மருதாணி வாசமும், சிறைப்பட்ட வட்டமும், தொப்பியும் போல வருமா!!! சொல்லுங்கள்.

26 March 2009

தெருக்கூத்து

சிறிது நாட்களுக்கு முன் மக்கள் தொலைக்காட்சியில் தெருக்கூத்தை காட்டினார்கள். ஆச்சரியமாக இருந்தது. இரவு 11 மணிக்கு மேல் டி.வி.யில் பார்த்ததால் தெருக்கூத்தை நேரில் பார்த்த எஃபெக்ட் வரலைன்னாலும் பார்த்துக்கிட்டிருந்தோம் நானும், அவரும். அதைத் தொடர்ந்து நானும் அவரும் தெருக்கூத்து, பாரதம் பற்றி பேசிவிட்டு அப்புறம் மறந்தே போனோம். ஆனால் எனக்கு தெருக்கூத்தை ஒட்டிய நினைவுகள் அவ்வப்போது எழாமலில்லை, அதன் தொடர்ச்சியே இது.

என்னைப் பொறுத்த வரையில் இந்த மானாட, மயிலாட, கோலாட, குரங்காட போன்ற ஆட்டங்களுக்கு, இந்த தெருக்கூத்துகள் ஆயிரம் முறை தேவலாம். இதில் ஆடுபவர்களை விட, நடுவர்களாக இருப்பவர்கள் போடும் வேஷங்கள் தெருக்கூத்துக்காரர்களையே மிஞ்சி விடுகிறது.

எங்க ஊரில் (செஞ்சி பக்கம்) பங்குனி உத்திரப் பெருவிழாவின் போது தெருக்கூத்து நடக்கும், அப்புறம் யாராவது இறந்து விட்டார்களானால் அப்போது காரியத்தின் முன்நாள் இரவன்று கர்ண மோட்சம் கூத்து வைப்பார்கள். கூத்து பார்ப்பதை விட, அதைப் பார்ப்பதற்காக இடம் போட்டு வைப்பதுதான் பெரிய கூத்தே. கூத்து நடக்கும் மேடைக்கு முன்னாடி, ரொம்ப வெளிச்சமும் படாமல், முன்னால் அமர்ந்திருக்கும் ஆட்களின் தலையும் மறைக்காமல் என, இடத்தை சரியாக பிடிப்பதற்கு பெரிய போட்டியே நடக்கும். நாங்கள் தேருக்கும், திருவிழாவிற்கும் மட்டும் தான் ஊர் பக்கம் போவதாகையால், நமக்கு முன்னாடியே இடம் போட்டு வைத்திருப்பார்கள் இரண்டு அத்தைகளும்.

முருகரின் கல்யாணம் பார்த்துவிட்டு, மொய் எழுதிவிட்டு அப்படியே நம்ம மக்கள் கடை போட்டிருக்கும் இடத்தில் போய் உட்கார்ந்த்து முறுக்கு, ஸ்வீட், பொரி, டீ என அள்ளிவிட்டுட்டு அப்படியே கூத்து பார்க்க போய் உட்கார்ந்தோம்னா கண்ணக்கட்டும் தூக்கம். அவ்வ்வ்வ்வ்வ் - இது கொட்டாவி.
இதுக்கு நடுவில எம் பாயில் உக்காராதே, காலை நீட்டாதே மேலப் படுது, அப்படின்னு அங்க இங்க சத்தம் வந்துக்கிட்டுருக்கும். எல்லாம் இடம் பிடித்த மக்கள் கிட்டருந்து வர்றதுதான். நாளை காலை கூத்து முடியும் வரை அவங்க பட்டா போட்ட இடமாச்சே அது, மறுக்க முடியுமா, ம்ஹூம்ம்.

நமக்கு பஸ்ஸில் வந்த அலுப்பு, பலகாரத்த தின்னதுன்னு தூக்கம் கண்ண கட்டும், அத்த, மடிய இப்படி வைய்யி, நான் படுக்கப்போறேன் அப்படின்னு ஆரம்பிப்போம், இரும்மா, பப்பூன்னு வந்துடுவான், செத்த பாத்துட்டு தூங்குவ, தூங்கறதுக்கா, இம்மா மின்னாடி பாய போட்டு வெச்சேன் என்று சொல்வார்கள்.
சரி என்று உட்கார்ந்தால், வந்தேனே, நான் வந்தேனே என்று இன்னதுதான் கலர் என்று இல்லாமல் இருக்கும் ஒரு ட்ரஸ்ஸை போட்டுக்கொண்டு, ரோஸ் பவுடரை அப்போ அப்புன்னு அப்பிக்கிட்டு ஒருவர் வருவார். டபுள் மீனிங்க் டயலாக்கும், டேன்ஸும், பாட்டும் என எல்லாரையும் கொஞ்ச நேரம் சிரிக்கவைப்பார். அடிக்கடி ராஜா மாதிரி இருக்கும் ஒருவரிடம் சவுக்கடியும், எட்டி எட்டி உதையும் வாங்குவார். நமக்கு தூக்க கலக்கம் நடு நடுவே தூங்கி விட்டு, இடையில் கொஞ்சம் சத்தம் ஜாஸ்தியாக இருக்கும்போது மட்டும் லேசாக கண்ணைத் திறந்து பார்ப்பேன். மங்கலான லைட் வெளிச்சத்தில் பாவாடை, தாவணி போட்டுக்கொண்டு, இடுப்பு வரைக்கும் கனகாம்பரம், மல்லி யெல்லாம் வைத்துக்கொண்டு ஒய்யார நடையும், அப்போதைய ப்ரபலமான டூயட் பாட்டு எதையாவது உல்டா செய்தோ இல்லை அப்படியே பாடிக்கொண்டிருப்பார். பார்ப்பதற்கு அப்படியே பெண் மாதிரி இருக்கும், எத்தனையோ முறை சந்தேகம் தாளாமல் அம்மாவிடம், அத்தையிடமும் நான் கேட்டு இருக்கிறேன். அத்த, இவங்க நம்மூரா. எந்தத் தெருவுல இருக்காங்க, என்றெல்லாம். அதுக்கு அத்த, ஆம்பளைங்கதான், பொம்பள வேசங்கட்டி கூத்தாடுறாங்க. வெளியூர்ல இருந்து கூத்தாடுறததுக்கா ஒபயக்காரவுங்க கூட்டியாந்துருக்காங்க அப்படின்னு சொல்லுவாங்க.

இந்தப் பெண் வேசம் கட்டுபவர்கள் எப்படித்தான் உடை மாற்றுவார்களோ என்று தெரியாது, ஜிகு ஜிகு வென்று இருக்கும் பாவாடை, ரவிக்கையுடன், புடவை, தாவணி அடிக்கடி மாற்றிக்கொண்டு வருவார்கள். பின்னாடி இருக்கும் கொட்டாயில தான் துணி மாத்துவாங்களாம். நிறைய சின்னப் பசங்க, பெரிய பசங்க கூட கொட்டா சந்துவழியா பாத்துக்கிட்டிருக்கும். யாராவது வந்து வெரட்டுவாங்க. ராஜா வேஷங்கட்டுபவர் போட்டிருக்கும் உடையை நினைத்தால் எனக்கு இப்பவும் சிரிப்புவரும். இடுப்புக்கு கீழே கூடைய கவுத்தா மாதிரி, ஃபிரில் வெச்சு (நெறைய துண்டு துணிகளை கொசுவி) பஃப் பென்று வைத்திருப்பார்கள். அட்டை கீரிடமும், கத்தியும், முகமெல்லாம் சிவப்பு அல்லது நீல வர்ணமாக அந்த உடையுமாக அணிந்து கொண்டு அவர் வந்தால் பயமாக இருக்கும் அப்போது எனக்கு.

என் மாமாவின் அப்பா இது போன்று வேஷங்கட்டுவார், பாட்டியின் சாவின் போது வைத்த “கர்ண மோட்சம்” கூத்தில் பெரிய மாமாதான் கர்ண வேஷம் போட்டார். நேரிலேயே ஆஜானுபாகுவாக இருக்கும் அவர், அந்த உடையை போட்டவுடன் கன, கம்பீரமாக இருந்தார். இரவு வரைக்கும் கூட நம் பார்த்தோமே, பின் எப்போது இது மாதிரி வேஷங்கட்டி கொண்டார் என்பது எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். காலை அவர் முகச்சாயத்தை மண்ணெண்யெய் ஊத்தி கழுவும் வரைக்கும் அவர் பின்னாடியே சுத்திக்கொண்டிருந்தேன். அதே போல் இரவில் கூத்தாடுபவர்கள் மறுநாள் காலையில் டீக்கடையிலோ இல்லை வீட்டிற்கு சாப்பிடவோ வருவார்கள். மழுமழுவென்று கன்னத்தோடு, நெறைய முடியை அப்படியே கொண்டையாக முடிந்திருப்பார்கள். அவர்களைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும், இரவு இவர் என்ன வேஷம் கட்டியிருப்பார் என்று யோசித்துக்கொண்டே இருப்பேன். அதுவும் பெண் வேடம் கட்டியிருப்பவர் யார் என்று ஆராய்ச்சி வேறு.

அடுத்தாப்பல, பரசு அண்ணன், மாமாவின் பள்ளிக்கால தோழர். ஊரிலிருக்கும் எங்கள் வீட்டின் ஒரு பகுதியில் அவர்தான் குடியிருந்தார். சினேகிதக்காரர் என்பதால் வாடகையெல்லாம் ஏதுமில்லை. அம்மாதான் அடிக்கடி ஏதாவது முணுமுணுத்துக்கொண்டிருப்பார்கள் அவரைப் பற்றி. குள்ளமாக, கருப்பாக, ஆனால் நல்ல குரல் வளத்துடன் இருப்பார் பரசு அண்ணா, காமெடியாக பேசுவதில் ஆள் பயங்கர கில்லாடி. அவரும் வேஷங்கட்டுவார் திருவிழாவின் கடைசி நாள் ஊரில் இருக்கும் ஆட்கள் (இதற்கென்றே ஒரு செட் இருக்கும் போல) இவர்கள் எல்லாம் சேர்ந்து ஆட்டம் வைப்பார்கள். கூத்து மாதிரிதான் இருக்கும், ஆனால் கர்ண மோட்சம், வாலி மோட்சம் இன்ன பிறவெல்லாம் இல்லை. ஏதாவது புரட்சிகர கருத்துக்கள் கொண்ட நாடகபாணியில் இருக்கும். கதை, திரைக்கதை, வசனமெல்லாம் மாமாவின் இன்னொரு சினேகிதர் சுப்பிரமணி.

பரசு அண்ணாவிற்கு கட்டாயம் ஏதாவது வேஷம் இருக்கும். ஊர் ஊராக போய் கூத்து கட்டும் ஆட்கள் என்றால் துணிகள் எல்லாம் செட்டாக வைத்திருப்பார்கள். புதுசு எல்லாம், இல்லை கந்தல் தான். அதை அவர்கள் நேர்த்தியாக் உடுத்தி பேசி ஆடும் விதம்தான் ஆளை அசத்தும்.

அதுவும் பரசு அண்ணா உயரத்திற்கு தோதாக உடை வேண்டுமென்றால், 7, 8 வது படிக்கும் பெண் பிள்ளைகளின் உடைகள்தான் தோதாக இருக்கும். அவர் எங்களிடம் உடை கேட்கும் பாணியே அலாதிதான்.
முதலில் ஏய் அத்தைக்காரி (எங்க அத்தையை) ஏதாவது பொடவை இருந்தா குடேண்டி, வேஷங்கட்டறதுக்கு. அதுக்கு அத்தை, ஏண்டா, உம் பொண்டாட்டிய போய் கேளு, அவதான் பொட்டி ஃபுல்லா வெச்சிருக்காளே. த்தே, அது எல்லாம் ரேஷங்கடை பொடவைடி. ஒம் மருமவ தான் ஒனக்கு சிகினா பொடவையெல்லாம் எடுத்து குடுத்துகிதே, அதுல ரெண்டு குடேன். அக்காங்க், அதையெத்து ஒன்கிட்ட குடுத்துடறேன், நீ அதுல சாயம் பூசி எத்தா. ஏன் நல்லது பொல்லதுக்கு ஒன்னு புச்சா கட்றேன்னு ஒங் கண்ண உறுத்துதா.
நடுவில் என் மாமா, ம்மா, அவந்தான் கேக்கறானே , குடேம்மா. அப்புறம் கமலாகிட்ட இருந்து வாங்கிப்ப. அடப் போடா இவன் ஒருத்தன், அவனுக்கு தோதா... என்பார்கள்.

அப்புறம் எங்களிடம் வருவார், (என்னிடம், மாமா மகளிடம்), ஏம்மா, நீங்க சுடிதார், அது இதுன்னு வெச்சிருந்தா குடுங்களேன். புதுசா ஒரு கூலிங்க்ளாசு வேற வாங்கிவெச்சிருக்கேன். உங்க ட்ரஸ்ஸையும் போட்டுக்கிட்டு அதையும் போட்டுகிட்டா நல்லா இருக்கும் இல்ல என்பார். அப்புறம் நாளைக்கு யாராவது கேட்டா இது லதா ட்ரஸ்ஸூ, யசோ ட்ரஸ்ஸூன்னு சொல்லலாமில்ல என்பார். என் மாமா மகளின் ஆடைகள்தான் அவருக்கு சரியாக பொருந்தும், இருவரும் ஒரே உயரம். ஒரு முறை அவளின் மிடியை போட்டு இவர் மேடையில் ஆட ஏகப்பட்ட அப்ளாஸாம். அந்த வருடம் நான் பத்தாவது பரிட்சையாகையால் போகமுடியாமல் போய்விட்டது.

இதோ வந்துவிட்டது, பங்குனி உத்திரப்பெருவிழாவும், ஊரிலிருந்து அழைப்பும். பசுமலை முருகனும், பரசுவும் இன்னபிறரும் இருக்கிறோம். கை பிடித்துக் கூட்டிப்போக மாமா நீயில்லையே. போக நேரிட்டாலும் அங்கு நீ இல்லாத வெறுமையை எதைக்கொண்டு தீர்ப்பது. நீ அமர்ந்து சிரித்த கல்லும், பேசிய வீட்டுத்திண்ணையையும் உன்னை ஞாபகப்படுத்துமே.

தெருக்கூத்து பதிவெழுத ஆரம்பித்து, கடைசியில் நினைவுகளில் நீராடிவிட்டேன். மறக்கமுடியவில்லை மாமா உன்னை. உன் நீங்கா நினைவுகளோடு மேற்கொண்டு எழுதமுடியாமலேயே இந்தப் பதிவை முடிக்கிறேன்.

25 March 2009

அமித்து அப்டேட்ஸ்

வர வர மாமியார் கதையாகிட்டே வருது அமித்து கதை, அதட்டல், மிரட்டல், அப்புறம் சேட்டைகள், பிடிவாதம் என லிஸ்ட் நீளுகிறது.
என் சமத்து பப்பி எங்கே காணோம் ? என்று அடிக்கடி அவளிடமே கேட்கிறேன். பதிலுக்கு மூக்கை தூக்கி ஒரு சுழிப்பு சிரிப்பு. என் நாத்தனார் பையன் (ஹரி, எல்.கே.ஜி) அவளுக்கு சிரிப்பழகி என்ற பட்டம் கொடுத்தது சரிதான் என்று தோன்றுகிறது.

கீழ்வீட்டில் இருக்கும் தாத்தாவிற்கு உடல் நடுக்கம், அதனால் ஒரு மாதிரி முனகல் சத்தம் அவரிடமிருந்து எப்போதும் வந்துகொண்டிருக்கும், நடக்கும் போதும், நிற்கும் போதும் என.
அமித்து இப்போ அவரை அப்படியே மிமிக்ரி. ம்ம் ஹூஹூம் ம்ம் ஹ்ஹூஉம் என பல்வேறு சத்தங்களுடன் உடம்பை வேறு சற்று குனிந்து கொண்டு, மேடம் மிமிக்ரிக்கு அடிக்கடி தயார் ஆகிடறாங்க.
அந்த தாத்தா மாடிக்கு துணி காயப்போட வருவாங்க. இந்தம்மா அவரைப் பாத்தவுடனே இந்த சத்தத்தை ஸ்டார்ட் செஞ்சிடுவாங்க. செய்து முடித்துவிட்டு அவங்களோட ஒரு ட்ரேட் மார்க் சிரிப்பை தந்துடுவாங்க நமக்கு.
இந்த மிமிக்ரி இப்போது யாராவது அழுதால், நான் தும்மினால், அவளின் தாத்தா இருமினால் என்று அதை அப்படியே செய்து காட்டவைக்கிறது அவளை.

அப்பா, ம்ம்மா, தாத்தா, ஆயா, அக்கா என்று அழகா ராகம் போட்டு இசைத்து கூப்பிடுகிறாள். எனக்கு மட்டும் ஒரு தடவை தான் ம்ம்ம்மா என்று சொல்வாள், பதிலில்லையெனில் அதிகாரமாக ச்சோ, என்று கூப்பிடுவாள்.

போனை எடுத்து காதில் வைத்துக்கொண்டு அல்ல்லோ என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்கிறாள், அதற்குப்பிறகு ச்சுக்க்கா, த்துதாஅ, அல்லல்லா, த்துக்கல்லல்லா என்று நமக்கு புரியாத ஒரு பாஷை ஓடும், போனை கையில் வாங்க நாம் முயன்றால், மேடம் ஒரே அழுகைதான்.

பந்து மேல் பயங்கர ஆசை இருக்கிறது. பக்கத்து வீட்டில் புட்பால் இருக்கிறது. மாலை நேரத்தில் பசங்களெல்லாம் அதைதான் விளையாடுவார்கள். நான் அவளை தூக்கிக்கொண்டால் போதும், ம்ம்மா, பாலா, பாலா என்று பந்தை கை காட்டுவாள். இத்தனைக்கும் வீட்டில் 3 பந்துகள் இருக்கின்றது.
நேற்று ஒரு ஸ்மைலி பந்து (sponge ball) வாங்கித்தந்தேன். மேடம் அதை பார்த்தவுடன் ஒரே குஷி, ஹை ஹை என்று அந்த ஸ்மைலியை தொட்டுக்கொண்டு சொல்லிக்கொண்டிருந்தாள். தாத்தாவிற்கு கேட்ச் போடுமா என்றாள், ஏட்ச் ஏட்ச் என்று பந்தை போட்டுக்கொண்டு இருந்தாள்.
இன்று காலை பார்த்தால், பாதி ஸ்மைலியை காணோம். என் ஸ்மைலி அந்த பந்தில் இருந்த ஸ்மைலியை கடித்து துப்பி வைத்திருந்தது. அவளின் ஆயா, அமித்துவிடம் யாரும்மா இப்படி பாலை கடிச்சு துப்புனது, அம்மா நேத்து தானே வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க, இப்படி பண்ணி வெச்சிருக்கியேமா என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அதற்கு அமித்து, ஆயா,.............. தாத்தா...... கட்ச்சி, கட்ச்சி. (தாத்தா பந்தை கடித்துவிட்டாராம்), சற்று நேரத்துக்கு பிறகு தாத்தா, அப்பாவாகியிருந்தது.

இப்போது அவளின் பெரியம்மாவிடம் போனில், அண்ணா, பாலா, பெய்ய பாலா என்று சொல்லிக்கொண்டிருக்கிறதில், காலையில் என் அக்கா மகன் போன் செய்து, ஞாயிற்றுக்கிழமை பாப்பாவுக்கு பெய்ய பாலா வாங்கிட்டு வரேன் என்கிறான்.
அந்த பந்து யாரிடம் கடி வாங்கப்போகிறதோ. வர்ஷினிக்கே வெளிச்சம்.

அவரின் தாத்தா நேற்று ரேஷனில் இருந்து கோதுமை, சர்க்கரை, கூடவோ பாமாயில் எண்ணெய் பாக்கெட்டும் வாங்கி வைத்திருந்தார். அந்த பையில் எண்ணெய் பாக்கெட் கொஞ்சம் வெளியே துருத்திக்கொண்டிருந்தது. அந்த எண்ணெய் பாக்கெட்டின் மீது, தற்போதைய முதல்வர் சிரித்துக்கொண்டிருந்தார். அமித்து அந்த எண்ணெய் பாக்கெட்டை வெளியே எடுத்து வைத்துக்கொண்டு, தாத்தா தாத்தா என்று தலைவரை கையை காட்டிக்கொண்டிருந்தார்கள். :)))))))))))))))))))))))

மேடத்தின் குரல் எப்போதும் ஒரு அதிகாரத்தொனியோடுதான் இருக்கிறது. இந்தா இந்தா , ந்னானா, ந்னானாஆ என்று கொஞ்சம் சத்தமாகவும் ஆனால் அழுத்தமாக சொல்லுவாள்.
எதிர்வீட்டு கார்த்தி, தன்னை அண்ணா சொல்லு என்றே சொல்லுவான், விளையாடும்போது கூட அண்ணாகிட்ட கொடும்மா என்பான், ஆனால் அமித்து அழிச்சாட்டியமாக அவனை
கார்த்தீ, கார்த்தீ என்றே கூப்பிடுவாள். ராகேஷை அண்ணா என்றுதான் கூப்பிடுகிறாள், ஆனால் ராகேஷ் தன்னை அண்ணா என்று இவளிடம் சொன்னது இல்லை.

அகமகிழ்ந்து கொண்டிருக்கிறோம் அமித்துவின் அதிகாரம் கலந்த ஆட்சியில்.

18 March 2009

ரசிக்கத்தக்கதுதான் வாழ்க்கை

அதிகாலை காகம் கரைதல், கிளியின் கிக்கீ, எங்கோ ஒலிக்கும் சுப்ரபாதம்,

யாரோ யாரையோ எழுப்பும் ஒலி, பேப்பர்க் காரனின் படக் பேப்பர் வீசல்,

வெற்றுக் கைகளை சில்லிட வைக்கும் பால் பாக்கெட்,

காரைத் தரையில், கட்டை தென்னந்துடைப்பத்தால் வரும் சர்... ரக், சர்... ரக் ஓசை,

பின்னர் வளையல் ஒலியினூடே வரும் ஸலக், ஸலக் தண்ணீர் தெளிக்கும் ஓசை.

குழாயைத் திறந்தபின் ஒரு சட சட சத்தத்துக்கு பின்னர், சில்லென்று கை மேலே படும் நீர் துளிகள்.

பார்த்துக்கொண்டே இருக்கும் போதே புஸ் ஸென பொங்கும் பால்,

ஒரு சோம்பலுடன் அடிநாக்கில் தித்திப்பும் கசப்புமாய் படரும் காபி,

சின்னதும் பெரியதுமான நீர் கொப்புளங்களுடன் சல சலவென கொதிக்கும் உலை.

ஒரு நொடியும் கடத்தாது, உள்ளிருக்கும் அழுத்தத்தை சரியான இடைவெளியில்
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று வெளியேற்றும் குக்கர்,

எங்கோ பாத்திரங்கள் உருளும் ஓசை, பூக்காரர், தயிர்க்காரரின் ரைமிங்க் கத்தல்கள்

இடையிடையே சிணுங்கலுமாய், சிரிப்புமாய் ஓடிவந்து காலை கட்டிக்கொள்ளும் செல்ல மகள்,

வியர்வையில் குளித்து வெளிவந்தபின், சில்லென முகத்தில் மோதும் வெளிக்காற்று.

என்றாவது சிரித்துக்கொண்டே டாட்டா சொல்லும் மகளின் செல்ல முகம் மெல்ல மெல்ல மறையும், ஒரு முருங்கை மரத்தின் இலைகளினூடே.

ங்க்கொய்ய்ய்ய்ங் என்று வந்து நிற்கும் மின்சார ரயில், அபூர்வமாய் வாய்க்கும் நெரிசலற்ற பயணம், இடிபட்டுக் கொண்டே ஏறினாலும் இயல்பாய் எடுத்துக்கொள்ள வைத்த மனசு,
காலை மிதித்தாலும் சாரி சொல்லாத மனிதர்கள் பார்க்கும் வெற்றுப் பார்வை

அம்மா இடுப்பில் ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டு பொக்கை வாய் சிரிப்பை உதிர்க்கும் குழந்தை

என....................

தவிர்க்கவே முடியாத அன்றாடங்களின் அவசரங்களில் அகப்பட்டு உழன்றாலும், ரசிக்கத்தக்கதுதான் வாழ்க்கை.

ருசித்து உண்ணுங்கள், ரசித்து வாழுங்கள்.

17 March 2009

சின்னதாய், செல்லமாய் சில நினைவுகள்

மிகவும் சின்ன சின்ன நிகழ்வுகள் தான் எனினும் அவை இன்னும் மனதை விட்டு அகலாதவை. எப்போதும் மனதின் ஓரத்தின் ஒரு பகுதியை ஆக்ரமித்துக்கொண்டு எனது தனிமையான நடை பயணத்தை சற்றே சுவாரஸ்யமாய் இருக்கச்செய்கின்றன்.
சில சமயம் இந்த யோசிப்பு எல்லை மீறி நான் போகும் இடத்தை விட்டு கடந்து சென்றிருக்கிறேன். நான் அடிக்கடி அசை போடும் சில நினைவுகள் இவை.

அண்டங்காக்கா :
எனக்கு இந்த அண்டங்காக்காயை எங்க பார்த்தாலும், எங்க அக்கா சொல்றதுதான் ஞாபகம் வரும். அது ஒரு அ. காக்காவ பார்த்தா அன்னைக்கு வீட்டுல சண்டை வரும். அது தான்.
எங்கயாவது வெளியே போயிட்டு இருக்கும், அட வீட்டுல இருந்து ஸ்கூலுக்கு போகும் வழியில் கூட எங்கயாவது ஒரு அ.காக்காவ பார்த்தா அவ்வளவுதான். அக்கா இன்னொரு காக்காவ தேட சொல்லும்.
நானும் அய்யயோ எங்க வீட்டுல சண்டை வந்துடப்போகுதோன்னோ பயந்துகிட்டு ரோட பார்க்காம மரத்தையே பார்த்துக்கிட்டு வருவேன். எங்கயாவது இன்னொன்னு தென்பட்டுச்சின்னா, அக்கா அக்கா அதோ அதோ சீக்கிரம் .... அங்க பாரு அப்படின்னு பார்க்க வெச்சிடுவேன்.. அப்புறம் தான் நிம்மதியே வரும், இல்லனா வகுப்புல இதே ஞாபகம் அடிக்கடி வந்து அதன் தொடர்ச்சியா என்னைக்காவது நடந்த சண்டை அதெல்லாம் மனசு குழம்பும்.
மதிய உணவு வேளையின் போது, நிறைய காக்கா வந்துடும், ஸ்கூல் க்ரவுண்ட்ல, அதுல சரி பாதி அ. காக்காதான். உடனே, இனிமே அக்காவ மதியானம் ஸ்கூலுக்கு வர சொல்லனும், மொத்தமா எல்லா அ.காக்காவையும் இங்கேயே பார்த்துக்கோ அப்படின்னு சொல்ல நினைப்பேன். ஆனா சொன்னதில்லை.

போன வாரம் கூட, காலை டிபன் சாப்பிடும்போது (ஆபிஸ் மாடியில்) அ. காக்காவ பார்க்க நேர்ந்தது. அதுவும் ஒன்னே ஒன்னுதான். உடனே அன்வர் சார், இன்னொரு அ. காக்காவா தேடுங்க, என்று இயல்பாய் சொல்ல நேர்ந்ததை எண்ணி ஆச்சரியப்பட்டுபோனேன்.

வேப்பமரம் :
ஐந்தாவது படிக்கும் போது, ரோஸபல் டீச்சர்னு ஒரு கணக்கு டீச்சர். இங்கிலீஷ்க்கும் அவங்கதான். ரெண்டும் பத்தாதுன்னு அவங்க தான் எங்க க்ளாஸ் டீச்சர். மத்த எல்லா க்ளாஸ் பசங்களும் எங்கள ஒரு பரிதாபமாகவே பார்ப்பார்கள். ஏன்னா, அவங்களுக்கு எப்ப எப்படி எதுக்கு கோபம் வரும்னே தெரியாது. உடனே கூப்பிட்டு வெச்சு ஒரு கிள்ளு அந்த இடம் ரத்தம் கட்டிறும். எல்லாருக்கும் அம்மை ஊசி போட்ட தழும்பு கைல இருக்கும் இல்ல, அவுங்க க்ளாஸ்ல படிச்ச பசங்களுக்கு (அதான் எங்களுக்கு) அவங்க கிள்ளுன தழும்பும் சேர்ந்தே இருக்கும். கிள்ளும்போது, கண்ணுல தண்ணி தளும்பி எதிர்ல இருக்குற பொண்ணுங்க மூஞ்சி கூட தெரியாது, அந்தளவு வலிக்கும். அதுவும் சாப்பிட்டு முடித்தவுடன் முதல் பீரியட் அவங்களோட மேக்ஸ் இல்லனா இங்கிலீஷ் பீரியட்தான். பக்கத்துல இருக்குர வேப்பமர காத்தும், சாப்பிட்ட சாப்பாடும் சேர்த்து தூக்கம் அள்ளும். அவங்க பிக்ஸ் பண்ண டார்கெட் அன்னைக்கு சரியா முடிஞ்சி போயிருக்கும், அந்தளவுக்கு 35 பேர்ல 15 பேராவது கிள்ளு வாங்கியிருப்போம். இதைத் தவிர்க்க பாதிக்கப்பட்ட நாங்கள் என்ன செய்வது என்று யோசித்து, சிவப்பு காயத்ரி ஒரு ஐடியா கொடுத்தாள்.

அதாகப்பட்டது, சீக்கிரம் சாப்பிட்டு விட்டு அந்த வேப்ப மரத்தை சுற்றுவது. அதாவது வேப்ப மரம் சாமி, அத சுத்தினா டீச்சர்கிட்ட கிள்ளு வாங்க மாட்டோம், அவங்க ஏதாவது கேள்வி கேட்டா ஒழுங்கா பதில் சொல்ல முடியும் என்றெல்லாம் முடிவு செய்து, வேப்பமரத்தை சுற்று சுற்றுன்னு சுற்றி, ஒரு கட்டத்தில்
வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருந்து மஞ்சள்,குங்குமமெல்லாம் எடுத்து வந்து அதற்கு பொட்டெல்லாம் வைக்க முற்பட்டிருக்கிறோம்.

வேப்பமரத்தை சுற்றி வர ஆரம்பித்ததிலிருந்து கிள்ளு விகிதம் குறைந்திருந்தது. மேக்ஸுக்கு வேற ஒரு டீச்சர் வர ஆரம்பித்திருந்தார்கள். அந்த டீச்சர் எங்களுக்கு முன்னாடியே கொட்டாவியை ஆரம்பித்து வைக்க எங்களுக்கெல்லாம் ஜாலி. கொஞ்ச நாள் கழித்து ரோஸபல் டீச்சர் லாங்க் லீவ், காரணம் அவரின் ஹஸ்பெண்டுக்கு மாரடைப்பு, ஆபரேஷன் என்று சொன்னார்கள். சிவப்பு காயத்ரி, என்னிடம், பார்த்தியா, வேப்ப மரம் சுத்துனதுக்கு என்னவெல்லாம் பலன் கிடைச்சிருக்கு அப்படின்னு. அத நம்பவும் முடியல, நம்பாம இருக்குவும் முடியல. ஆனா டீச்சர்கிட்ட கிள்ளு வாங்க கூடாதுன்னு தானே நாம சுத்துனோம், அவங்க ஸ்கூலுக்கே வரக்கூடாதுன்னு சுத்தலியே
அப்படின்னு பெரிய வகுப்பு போனபின்பு கூட அந்த வேப்பமரத்தை பார்க்கும் போது நான் யோசித்ததுண்டு.

தென்னை மரம்:

இதுவும் அக்கா தான். காலையில் கண் முழிக்கும் போது தென்னை மரத்தைப் பார்த்தால் அன்றைக்கு காசு கிடைக்கும் என்று கிளப்பிவிட்டது. அப்படி ஒரு பொன் காலைப்பொழுதில் தென்னை மரத்தைப் பார்க்க நேர, அன்றைக்கு பார்த்து எங்கள் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் எங்கள் கைகளில் காசை திணித்து விட்டுப்போக,
பார்த்தியா, நான் சொன்னேனே, அப்படின்னு.. சரி வொர்க் அவுட் ஆகிடுச்சு, அப்படின்னு, டெய்லி காலையில் எழுந்தவுடன் மிக ஞாபகமாய் எதையும் பார்க்காமல், படுத்திருந்த பாய், தலைகாணி முகத்தில் கூட விழிக்காமல், கவனமாய் மிக மிக கவனமாய் எழுந்து வெளியே வந்து, எங்கள் வீட்டிலிருந்து ரொம்ப தூரத்தில் தெரியும்
ஒரு தென்னை மரத்தைப் பார்க்கும் வழக்கம் உண்டானது. அது ஆரம்பிச்சதிலருந்து எப்படியாவது டெய்லி 50 பைசா கெடச்சிடும், ஏன்னா எங்க மாமா, ஆட்டோ ஓட்ட ஆரம்பித்திருந்த்தால் தினமும் காசை பார்க்க முடிந்தது. அதில் அவர் 50 பைசா, 1 ரூபாய் என்று எங்களுக்கு தருவார். இதெல்லாம் புரியாமல், தென்னை மரம்தான் காரணம் என்று
தென்னை மரம் தெய்வமானது. கூடவே முருங்கை மரத்தைப் பார்த்தால் அன்றைக்கு உதை விழும் என்று வேறு அக்கா கிளப்பி விட்டிருந்தது. தென்னை மரத்துக்கு முன்னாடி ஒரு முருங்கை மரம் ரொம்ப கிட்டத்துலயே தெரியும். ரொம்ப கஷடப்பட்டு முருங்கை மரத்தை பார்வையிலிருந்து தவிர்த்து, தென்னை மரத்தை பார்க்க வேண்டும். யப்பா, அது எவ்ளோ கஷ்டம் தெரியுமா...

இப்போது தினமும் முருங்கை மரத்தையும், தென்னை மரத்தையும் ஒரு சேரப் பார்க்கிறேன். ஆனால் காசுமில்லை, உதையுமில்லை. நினைவுகளுக்கு பஞ்சமுமில்லை.

அப்புறம் வழக்கம்போல மயிலிறகை புக்ல வைக்கறது, இதுல ஏனோ எனக்கு நம்பிக்கையே இல்ல. சும்மா ஒப்புக்கு வைத்திருப்பேன். எல்லோரும் வைத்திருக்கிறார்களே அப்படின்னு.

ரெண்டு விரல்ல ஒரு விரல்ல தொட சொல்லி அது ஒரு பழக்கம், அதுவும் அக்காதான் ரிப்பன் கட் பண்ணி தொடங்கி வச்சது. அப்படியாராவது என்னை தொட சொன்னா, முதல்ல எந்த விரலை தொட்டா நல்லது நடக்கும் என்று நினைத்திருக்கிறீர்கள் என்று கேட்பேன். அவர்களிடமிருந்து பதில் வராது, சாமியை வேண்டிகிட்டு ஏதாவது ஒரு விரலை கண்ணை மூடிகிட்டு தொடு. ஊரிலிருக்கும் எல்லா சாமியும் வேண்டப்பட்டு, அதை தொட்டால், நல்லதாக இருந்தால் சிரிப்பார்கள். கெட்டதாக இருந்தால் ஒரு ரியாக்‌ஷனும் இருக்காது. வற்புறுத்தி அவர்களிடம் காரணத்தை கேட்டோமானால் அடச் சே, இதுக்கா என்று இருக்கும் எனக்கு.

கண்ணிமையின் முடி கீழே விழுந்தால், அதை எடுத்து கை முட்டியின் மீது வைத்து நாம் எதையாவது நினைத்துக்கொண்டே ஊதினால், அது நடக்கும் என்று தோழிகள் சொன்னார்கள். நடந்ததாக வரலாறே இல்லை. ஆனால் சற்றே வளைவான கண்முடியே வெள்ளை யூனிபார்மின் மீது பார்க்க நேர்ந்தால் அதை எடுத்து இப்படி செய்யும் பழக்கம் ரொம்ப நாள் இருந்தது.


இதையெல்லாம் விடுத்து, என்னிடம் ஒரு பழக்கம் இருந்தது. அது ரோஜா இதழ்களை பத்திரப்படுத்துவது. சிகப்பு பெங்களூர் ரோஸை தலையில் வைத்து விட்டால், அன்று மதியமே (இதழின் ஓரங்கள் சற்றே கருத்திருக்கும்) அதன் இதழ்களை எடுத்து கொஞ்சம் தடிமனான புக்கில் வைத்து மூடி விடுவேன். இதற்கு எனக்கு மிகவும் உதவியது ஹார்ட்ஹேண்ட் புக்தான். சுமார் 300 பக்கம், குட்டியூண்டு தலையணை மாதிரி இருக்கும் இந்தப் புத்தகம் முழுவதுமே காய்ந்த ரோஜா இதழ்கள் தான். சில சமயம் டைரியில் கூட வைப்பேன். கொஞ்ச நாள் கழித்து இதழ்களை எடுத்து பார்த்தால், அதன் சிறு சிறு நரம்புகள் கூட தெரியும் வண்ணம் ப்ரவுன் கலரில் இதழ் மாறியிருக்கும். அதில் எனக்கு பிடித்தவர்கள் பெயரை எழுதிவைப்பேன். இந்தப் பழக்கம் என்னிடம் ரொம்ப நாள் இருந்தது. இப்போது கூட அந்த ரோஜா இதழ்களை எடுத்துப்பார்க்க நேர்ந்தால், அதில் எனக்குப் பிடித்தவர்களின் பெயரை காணலாம்.

முதலில் சொன்னது மாதிரியே, மிகவும் அற்பமான நிகழ்வுகள் மாதிரி தோன்றும் இவைதான் ஆயுசுக்கும் நம்மை நமக்கு மறக்கச்செய்துவிடாமல் ஒரு உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது. அதற்காகவே நான் அடிக்கடி பழசை நினைத்து என்னை புதுசாக்கிக்கொள்கிறேன்.

09 March 2009

அமித்து அப்டேட்ஸ்

என் கிட்ட ஒரு கெட்ட பழக்கம், அதாவது அப்ப அப்ப அமித்துவுக்கு ஒரு பேர் வைப்பேன். வழக்கமா இருக்குற மாதிரி அம்முக்குட்டி, பட்டுக்குட்டி இதெல்லாம் இல்லை.
லல்லி, சுல்லிப்பொண்ணு, சின் பொண்ணு, ஆன் பொண்ணு, பையா, டூட்டூன் பப்பி (இந்த பேரை எங்கருந்து கண்டு புடிச்சேன்னு எனக்கே தெரியல!!!), இந்த வரிசையில் இப்போது வர்ஷினி... பாய். இதான் லேட்டஸ்ட்.
ஆனா மேடத்துக்கிட்டருந்து எல்லாத்துக்கும் ஒரே ரியாக்‌ஷன் தான் வரும். இப்படி நான் அந்தம்மாவை விதம் விதமா பேர் வெச்சிக்கூப்பிட்டுக்கொண்டிருக்க, அவங்க ரொம்ப சாதாரணமா என் பேரை சொல்லிக் கூப்பிட ஆரம்பிச்சிருக்காங்க. எதையாவது எடுத்துக்கிட்டு வந்து யச்சோ” எச்சோ” என்று கூப்பிட்டு காண்பிக்கிறாள். நான் அவள் கூப்பிடுவதை ரசிப்பேனா, அதை விடுத்து அவள் காண்பிக்கும் பொருளை ரசிப்பேனா. ????

காலையில் அவள்தான் முதலில் எழுவாள். சில சமயம் அம்மா என்று கூப்பிடுவாள். சில சமயம் எச்சோ என்பாள், இது ரெண்டுக்குமே நாம் அசைந்து கொடுக்கவில்லை என்றால், டாஆய் என்பாள். அதற்கு மேலும் எழவில்லை என்றாள், முகத்தில் சரமாரி அடிதான்.

வழக்கம் போல சாப்பிடுவதற்கு மிகவும் அழிச்சாட்டியம். எதைக்கொடுத்தாலும் துப்ப வேண்டியது. இப்படி ஒரு நாள் மாடியில் அவள் சாப்பாட்டை துப்பி வைத்திருந்தாள். கொஞ்ச நேரம் கழித்து, பக்கத்து வீட்டிலிருந்து குட்டி பையன் ஹமீது வந்திருந்தான். அவன் நடந்து கொண்டு வரும்போது
அமித்து துப்பி வைத்திருந்ததை காலில் மிதித்துக்கொண்டு என்னமோ சொல்லிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த அமித்து மாடியில் ஓரத்தில் போட்டு வைத்திருந்த பழைய துணியை எடுத்து வந்து, அந்த சாப்பாட்டை துடைத்து விட்டு, வா என்றாளே பார்க்கணும். என்னால் என் கண்களையே நம்பமுடியவில்லை. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்னு ஏன் வள்ளுவர் பாடினார்னு இப்பதான் புரியுது.

வீட்டில் ஏதாவது பேப்பர் ஏதாவது இருந்தால், கொஞ்சமும் சலிக்காமல் அதை எடுத்துக்கொண்டு போய் குப்பை போட வைத்திருக்கும் கவரை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறுகையால் குப்பையை அதற்குள் போடுவாள். இப்படியாய் நிறைய ஆச்சர்யங்கள்...

2 வாரங்களுக்கு முன்னர் அமித்துவை அழைத்துக்கொண்டு பார்க்குக்கு போயிருந்தோம். அங்கு போனவுடன் பலூனைப் பார்த்துவிட்டு பலூன் கேட்டாள். வாங்கி கொடுத்தோம். அவளையொத்த மற்றும் பெரிய பசங்க விளையாடுவதை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். கொஞ்ச நேரம்தான். அவளின் அப்பாவை பிடித்துக்கொண்டு, அப்பா, ஆ... (வா)ப்பா என்று வந்த வழியை காட்டினாள். சரி வேறெதற்கோ அழைக்கிறாள் என்று நினைத்து அவளுடனயே சென்றோம். கொஞ்ச தூரம் போய்விட்டு அந்த இடத்திலிருந்த ஒரு பைக்கை தொட்டு அப்பா, அப்பா என்றாள். அவளுக்கு வீட்டு ஞாபகம் வந்து விட்டது போலிருக்கிறது. பார்க், விளையாட்டு, வேடிக்கை எல்லாமே மொத்தமே அரைமணி நேரந்தான். இப்ப மேடமே வழிகாட்டிவிட்டதால் விடு வீட்டுக்கு ஜூட். வீட்டுக்கு வந்தபின்னர் வெகு நேரம் அவளின் பாட்டியோடு விளையாடிக்கொண்டிருந்தாள். இன்னமும் எனக்கு விளங்கவில்லை, ஏன் அவளுக்கு அந்த பார்க் இவ்வளவு சீக்கிரத்தில் போரடித்தது என்று.

நாம் உட்கார்ந்து கொண்டிருந்தால், அமித்துக்கு பிடிப்பதில்லை. முகவாயை பிடித்து, தோளை பிடித்து நம்மை எழுப்பும் முயற்சியை செய்கிறாள். முடிவு என்ன, வழக்கம் போல, கடைசியில் அமித்துதான் ஜெயிப்பாள்.

நிறைய வார்த்தைகள் கற்று வைத்திருக்கிறாள், கல், பால், பூ என்..., மேலும் சாப்பாடு வேண்டாம் என்றாள், தலையை ஆட்டிக்கொண்டே ந்னானா என்று மறுத்துவிடுகிறாள். நாம் என்னதான் அந்தர் பல்டி அடித்தாலும் அதற்கப்பால் ஒரு வாய் கூட உள்ளே போகாது. வேணாம் என்று சொல்வதில் மேடம் மிகவும் தெளிவாக இருக்கிறதைப் பார்த்தால், இன்னும் எவ்வளவு வேணாம்கள் இருக்குமோ தெரியவில்லை. யம்மா, அமித்து, என்னைக்காவது ஒரு நாள் இந்த ப்லாகை படித்து விட்டு, உங்கம்மா எழுத்தை வேணாம்னு சொல்லிடாதம்மா.
அப்புறம் அம்மா அழுதுடுவேன், ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

06 March 2009

போராடும் பெண்மணிகள்

ஆணாதிக்க சமூகத்தில் புகுந்து புறப்பட்டு சாதித்தோம் என்றே அனேகப் பெண்களின் சாதனை விமர்சிக்கப்படுகிறது. ஆனால் சத்தமே இல்லாமல், முக்கியமாய் ஆணின் துணையே இல்லாமல் வாழ்ந்து, தன் பிள்ளைகளை சரி வர வளர்த்து, திருமணம் செய்து கொடுத்து, இன்னும் இன்ன பிற விளைவுகளை எல்லாம் சந்தித்த பெண்களைப் பற்றி பேசப்படும் பதிவுதான் இது. ஆணின் துணை இல்லாமல், அவர்களாய் விவாகரத்து என்ற பேரில் விலக்கிக்கொண்டதல்ல இது.
கணவன் இறந்தோ, இல்லை ஓடிப்போயோ இப்படியான விளைவுகளால் பாதிக்கப்பட்டு சமூகத்தில் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் இன்னதென ஒரு அடையாளத்தை அமைத்துக்கொள்ள போராடும் பெண்களைப் பற்றிய பதிவே இது. சந்தேகமே இல்லாமல் இது ஒரு மகளிர் தின சிறப்புதான்.

என் பள்ளிக்கால வயதில் பார்த்த முனியம்மா - அரை டசன் பிள்ளைகள், 2 ஆண், 4 பெண், கணவன் இறந்த போது அவர்களின் மூத்த மகனுக்கு மட்டுமே திருமணமாகியிருந்தது. 2 பெண்கள் திருமண வயதில். இவர்களுக்கோ படிப்பறிவில்லை. வீட்டுக்கு வீடு பால் போட்டு, வீட்டு வேலை செய்து மட்டுமே தன் பிள்ளைகளை கரை ஏற்றினார்கள். ஒரு ஆணின் துணை எந்த இடத்திலெல்லாம் தேவையோ அந்த இடத்தையெல்லாம் தன்னை வைத்தே பூர்த்தி செய்துகொண்டார்கள். அவர்கள் மேல் முனீஸ்வரன் சாமி வரும் என்று சொல்லி ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டார்கள் (!!!).

சரசக்கா - அக்காவின் தோழி, குடும்ப சண்டையின் காரணமாக பிரிந்து போன கணவர், தன் தாயிடமும், தந்தையிடமும் போய் சேர்ந்துவிட, அவர்கள் அவருக்கு 2ம் திருமணம் செய்துவைக்கும் போது, இவர்களுக்கு ஒரு வயது ஆண்குழந்தை.
இப்போது அவன் 11ம் வகுப்பு படிக்கிறான். இவரும் பகுதி நேரமாக வீட்டு வேலை செய்தே தன்னையும் தன் மகனையும் காப்பாற்றுகிறார். முழு நேரமாக ஒரு அலுவலகத்தில் காப்பி, டீ போட்டு கொடுக்கும் வேலை. தன்னை பாதுகாத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், சக குடும்ப உறுப்பினர்கள் (அண்ணன்கள், அண்ணிகள்) இவருக்கெல்லாம் உதவும் மனப்பான்மை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்

லலிதாக்கா - கல்யாணம் செய்து கொள்ளும்போது இவரின் கருப்பு நிறம் தெரியாத கணவன், குழந்தை பிறந்த பின், இவரின் கருப்பு நிறம் உறுத்த கைவிடப்பட்டார். இவரும் வீட்டு வேலைதான். வீட்டு வேலை செய்தே தன் மகனுக்காக பாண்டிச்சேரியில் ஒரு சொந்த வீடு கட்டி வைத்துள்ளார். இவர் செய்த காரியம் இன்னும் எனக்கு வியப்பளிக்கும்

விதவை உதவிப்பணம் பெறுவதற்காக, விபூதி வைத்து போட்டொ எடுத்து அனுப்பி, விதவை உதவிப்பணம் பெறுகிறார். ஏங்க்கா இப்படி செய்தீங்க, ப்ரதீப் அப்பா தான் இருக்கிறாரே என்றால், அவரு இருப்பதனலா எனக்கு என்ன லாபம், அவர் இல்லையென்று சொன்னதால தானே எனக்கு கவர்ன்மெண்ட் 400 ரூபா கொடுக்குது. அது ஏதோ ஒரு செலவுக்கு ஆகுதில்லையா. இன்னவரைக்கும் அவர் எனக்கு ஒத்தை ரூபா சம்பாதித்து தரல, ஆனா உயிரோட இருக்காரு என்றார்கள்.
எதிர்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை எனக்கு.


என்னதான் அலுவலக உயரதிகாரியாய் இருந்தாலும், லட்சங்களில் சம்பாதித்தாலும் ஒரு பெண் தன்னை முழுமைப்படுத்திக்கொள்ளும் இடம் குடும்பம், குழந்தை, இதையிரண்டும் இவர்கள் மிகச்சரியாக செய்தார்கள் ஆண் துணையற்று.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இன்னும் ஏராளமனவர்களைப் பற்றி.

பெண்கள் தின வாழ்த்துக்கள் என்று இவர்களிடம் சொன்னால் என்னாதுடி, அன்னைக்கு டி.வில படம் போடுவானாடி என்று கேட்டுட்டு போகும் இவர்களை, என்னால் ஒரு பதிவிட்டு வாழ்த்த முடியும் என்பதே பெரும் பாக்கியம்.
வாழ்த்துக்கள் அம்மா, அக்காஸ். நீங்களும் வாழ்த்துவீர்கள் என்ற நம்பிக்கையோடு உலக மகளிருக்கும், உங்கள் வீட்டு மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

உறங்காத இரவுகள்

சரியாக, பத்தாவதின் பாதியில் தான் அது என்னை பாதித்தது. தூக்கம் இல்லை, பசி இருக்கும் உணவு உள்ளிறங்காது. படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செயல்படுத்த முடியாமல் இப்படியே வரிசையாக அடுக்கலாம்.தூக்கமில்லாமல் நட்சத்திரங்களை எண்ணி, எண்ணி, கண் சிமிட்டிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களுக்கே நான் கண் வைத்தது வலித்திருக்கும். இப்படியாய் தொடர்ந்தே வந்து பனிரெண்டாம் வகுப்பின் போது உச்ச கட்டத்தை அடைந்தது. எனது இந்த நிலை குறித்து அம்மா ரொம்பவும் விசனப்பட்டார்கள்.இப்படியிரு, அப்படியிரு என்று ஏகப்பட்ட அட்வைஸ்கள். அதன் பாதிப்பின் வலி இங்கே அனேகம் பேருக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆம், நான் பாதித்தது வீசிங்க் என்று பரவலாக அறியப்படும் மூச்சிரைப்பினால். வார்த்தைகளால் வடிக்க முடியாத நாட்கள் அவை. தூசி என்று எழுதி அதைப் படித்தால் கூட தும்மல் வந்துவிடும். அந்த அளவுக்கு அலர்ஜி.

திண்ணையில் படுத்துக்கொண்டே நட்சத்திரங்களை எண்ணி, நிலாவோடு பேசிய வலி மிகுந்த நாட்கள், என்றும் மறக்க முடியாது. எத்தனையோ மருத்துவர்கள், விதவிதமான மருத்துவங்கள். ஒன்றுக்கும் அசைந்து கொடுக்கவில்லை. ஆசையாக ஐஸ்க்ரீம் கூட சாப்பிட முடியாது.பனிரெண்டாம் வகுப்பின் முக்காவாசி நாட்கள் கண்சொருகி, மேசை மேலேயே தலை கவிழ்ந்த நாட்களே அதிகம். +2 வில் என் வகுப்புத் தோழிகள் வீசிங்க் என்று சொல்வார்கள். க்ளாஸ் டெஸ்ட் வந்தாலே உடனே வீசிங்க் வந்துவிடும். டீச்சருக்கு அத்துப்படி, டெஸ்ட் வீசிங்கா, நிஜ வீசிங்கா என்று கண்டுபிடித்து விடுவார்கள்.என் எதிரிக்கு கூட வீசிங்க் வரக்கூடாது என சொல்வேன்.


நடந்தால் மூச்சிரைக்கும். மூச்சை வெளியே இழுத்து விடமுடியாமல், உள்ளுக்குள்ளேயே ங்கொய்.... ங்கொய்.... என்று இழுத்துக்கொண்டிருக்கும். மாத்திரை போட்டால் நிற்கும். இரண்டே நாள்தான். உடனே அழையா விருந்தாளியாகிவிடும். இப்படியே தொடர்ந்து வேலைக்கு போகும் வரை நீடித்தது.பாவம், ஷெர்லி மாலா என்ற அலுவலக தோழிதான், வீசிங்கோடு ஆபிஸ் வந்தால், உடனே ஜீஸஸ் கால்ஸூக்கு போன் செய்து ஜெபம் செய்ய சொல்வார்கள். ஜெபம் நடக்கும் போது போனை என் காதில் வைத்துவிடுவார்கள். அதற்குபின்னர் நோயின் தீவிரம் கொஞ்சம் குறைந்தால் போல மனதுக்கு படும்.


அலுவலக விடுமுறை நாட்களில் எனது தலையாய வேலையே ஜீஸஸ் கால்ஸூக்கு என் நிலை குறித்து கடிதம் எழுதுவதுதான். எண்ணி ஏழு நாட்களுக்குள் பதில் கடிதம் வரும். ஜெபம் செய்ததாக். பின்னர் அதற்கு நன்றி கூறி என்னிடமிருந்து கடிதம் போகும். இந்த கடிதப்போக்குவரத்து நெடுநாள் நீடித்தது.

ஒரு கட்டத்தில் மாத்திரை சாப்பிட்டால் தான் உடம்பு நன்றாக இருக்கிறது என்று நானே நினைத்துக்கொண்டே, பெட்னிலானை (Betnelan) தினந்தோறும் சாப்பாட்டுக்கு பதிலாக கூட, விழுங்க ஆரம்பிக்க விளைவு. காலையில் எழுந்து முகத்தைப் பார்த்தால், பூசணிக்காய் போல இருக்கும். அந்த வீக்கம் வடியவே மதியமாகிவிடும்.
வீட்டில் எல்லோரும் திட்ட, திட்ட நான் இதை விடாப்பிடியாக செய்துகொண்டிருந்தேன். இந்த பூசணிக்காயே நாளடைவில் பழக்கமாகிவிட, எதேச்சையா ஈ.எஸ். ஐ ஹாஸ்பிட்டலிலுக்கு ச்சும்மா போனேன். ஒருமுறையாவது அங்கே சென்று காண்பிக்காவிட்டால் பின்னாலில் லாஸ் ஆஃப் பேவின் போது ஈ.எஸ்.ஐ.சி.யின்பலனை பெறமுடியாது என்று அலுவலகத்தில் மிரட்டி வைத்திருந்தார்கள்.

நான் சென்ற அந்த ஈ.எஸ்.ஐ மருத்துவமனை டாக்டர்தான், என்னை கடைசியாக எச்சரித்தார் - நீங்கள் தொடர்ந்து இந்த மாத்திரையை உட்கொண்டால் உங்களின் கர்ப்பப்பை பாதிக்கும் வாய்ப்பிருக்கிறது. நீங்கள் சாப்பிடும் மாத்திரையில் கீடோன் காம்பவுண்ட் இருக்கிறது. அதுவே இதற்கு காரணம் ஜாக்கிரதை என்றார். திரும்ப வரும்போது பயங்கர யோசனை.என்னடா வசமா போய் ஒரு காம்பவுண்டில் மாட்டிக்கொண்டிருக்கிறோமே என்று, யோகா, பிரணாயாமம் என்று இப்போது வேறுபக்கம் திசை திரும்பியது.


அப்படி இப்படி என கடைசியாய் அந்த மாத்திரையின் பிடியில் இருந்து என்னை விடுவித்துக்கொண்டேன். எனது முந்தைய நிலைமைக்கு இப்போது எவ்வளவோ தேவலாம். எப்பவாவதுதான் விருந்தாளியா, நம்ம வீசிங்க் சார் வருவார். வந்தவுடனேயே ஒரு பெட்னிலான். அப்புறம் போய்விடுவார்.



டிஸ்கி : ஏன் இப்போது இந்தப்பதிவு என்று கேட்பவர்களுக்கு, எனக்கு இப்போ வீசிங்க் வரா மாதிரி இருக்குது, அதனாலதான் இந்த கொசுவத்தி.

04 March 2009

கொடிது கொடிது

கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படு என்ற ஆட்டோ வாசகம் என்னை அதிகம் யோசிக்கவைக்கும். இதை முதுமையில் கஷ்டப்படாமல் இருக்க, இளமையில் கஷ்டப்படு என்றுதான் நான் எடுத்துக்கொண்டேன்.
அப்படி பார்த்தால் நாம் இளமையில் கஷ்டப்பட்டு முதுமையில் சந்தோஷத்தையா அனுபவிக்கிறோம்.

இளமையில் வறுமை எப்படி கொடியதோ அது போல வயோதிகத்தில் தனிமை கொடியது. நான் தினந்தோறும் பார்த்து என்னை பாதித்து கொண்டேயிருக்கும் நிகழ்வுதான் இது.
இவரைப் பற்றி அறிய முன்னுரைக்கு இங்கே போகவும்.

அறுபது வயசுக்கு மேல ஆச்சுன்னாலே அதுவும் ரத்த அழுத்தம், சர்க்கரை இருக்கும் ஆண்களின் நிலைமை சொல்லி மாளாது. இது தவிர இந்த சமயத்தில் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லையென்றால் இன்னும் மோசம்.

கஷ்டப்பட்டு படித்து, ஒரு வேலையை தேடி, கல்யாணம் செய்து, குழந்தைகளை பெற்று, அவர்களை படிக்க வைத்து, ஒரு ஐடெண்ட்டி கொடுத்து நின்று நிமிர்கையில் தான், நமக்கு ஞாபகம் வரும் மிச்ச சொச்சமிருக்கும் நம் வாழ்க்கையை நாம் எப்படி வாழ்வதென.

கணவனும் மனைவியும் ஒருங்கே இருந்து, கொஞ்சம் வருவாயும் இருந்து விட்டால் வயோதிகம் கொஞ்சும் இனிமைதான். ஆனால் ஒருவரற்று ஒருவர் இருக்கும் நிலைமை இருக்கிறதே. அது ..... அனுபவித்தால் மட்டுமே புரியும். நான் அதை தினமும் புரிந்துகொள்கிறேன் என் உயரதிகாரியின் வாயிலாக.


கணவன் இருந்து மனைவி போய்விட்டால், இருக்கும் கொடுமை ரொம்பவே. நல்ல சாப்பாட்டில் ஆரம்பித்து...., அனுசரணையான அன்பு, நல்ல பேச்சுத்துணை, இப்படி இன்னும் இன்னும் எவ்வளவோ இழக்க வேண்டிவரும். ஆனால் இவருக்கோ இருந்தும் இல்லாத நிலை.
மனைவி கோமா ஸ்டேஜ், மருத்துவமனை வாசம். அமெரிக்காவில் இருந்து வந்த பிள்ளைகளோ ஒரு கட்டத்துக்கு மேல் மருத்துவசெலவுக்கு அஞ்சுகிறார்கள். பெத்த இரண்டிற்கும் பெற்றவர்கள் இருக்கும்போதே சொத்து ப்ரச்சினை. நீ பார், ஏன் நீ பாரேன் என்று மல்லுக்கட்டு.
முடிவில் அவர் மருத்துவமனையிலேயே மனைவியின் அறைக்கு பக்கத்து அறைக்கு குடிபுகுந்துவிட்டார். மருத்துவமனை நல்லவேளையாக சொந்தத் தம்பியுடையது.

எஞ்சியிருக்கும் இந்த வாழ்வை வாழ அவர் படும் துயரங்கள். பாவமாய் இருக்கிறது. இதில் சரியாய் கண் வேறு தெரியாது. எவ்வளவோ பெயரெடுத்து என்ன, எல்லாருக்கும் சிம்ம சொப்பனமாய் இருந்ததென்ன, எல்லாமே இப்போது கானலாய். பாவம்
அவருடன் வேலை செய்து கொண்டிருக்கும் போது, இடையிடையே நான் சப்ஜெக்ட்டிலிருந்து விலகி சில கேள்விகளை கேட்பேன். அன்றும் அப்படித்தான். திடீரென சார், நீங்க சுனாமி வந்தப்போ எங்க இருந்தீங்க. அப்படின்னு கேட்டேன். ஒரு சின்னக்குழந்தையின் முகபாவத்துடன் அவர் சொன்னது இதோ.

அதுவா, ஹே ஆமாம்ப்பா, நானும் ...ஜாவும் அன்னைக்கு கார்ல பாண்டிச்சேரி போய்க்கிட்டிருந்தோம். கல்பாக்கம் கிட்ட போயிருப்போம், இங்கேயே ஒரு ஹோட்டல்ல ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாம்னு ..ஜா சொல்லிச்சு. சரி அங்க ஒரு ஹோட்டல்ல நான் இட்லி சாப்பிட்டேன், அவ தோசை ஆர்டர் பண்ணா, வழக்கம் போல அது சூடா இல்ல அப்படின்னு அவனோட சண்டை, அப்புறம் அவன் சூடா போட்டு எடுத்துட்டு வந்து தந்தான். இதுலயே அரை அவருக்கு மேல ஓடிப்போச்சு. அப்புறம் கார் எடுத்துட்டு கொஞ்ச தூரம் போயிருப்போம். மரமெல்லாம் விழுந்து இருக்கு. தண்ணி ரொம்ப தூரம் வரைக்கும் வந்து எதை எதையோ அடிச்சிகிட்டு போயி ரொம்ப தூரத்துல தண்ணி நெறைய வடிஞ்சு போறது கண்ணுக்கு தெரியுது. அத பார்த்தவுடனே நான் சொல்லிட்டேன், ...ஜா இது சுனாமி, இவ்ளோ தூரம் வந்து மரமெல்லாம் விழுந்திருக்குன்னா அது சுனாமிதான். இதப்பத்தி நான் படிச்சிருக்கேன். நீ வேணும்னா பாரு, நாளைக்கு பேப்பர்ல வரும் சொல்லிக்கிட்டே கார் ஓட்டிட்டு போறேன். பாவம் எவ்ளோ ஜனங்க குய்யோ முய்யோன்னு அடிச்சிக்கிட்டு ஓடிவருதுங்க. ரொம்ப கொடுமையா இருந்துச்சு.

இதில் அவர் ஒவ்வொறு முறையும் ..ஜா, ...ஜா என்று சொல்லும்போதே அவர் கண்ணில் தெரிந்த பிரகாசம் இருக்கிறதே. அவரின் மனைவியின் நினைவுகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளும்போது ஒரு சின்னக் குழந்தையின் குதூகலம் அவரது குரலில். எங்கேயும் அந்தம்மாவின் நினைவு தொட்டு அவரின் குரல் உடையவில்லை.

எப்போதாவது சொல்வார், வாழைத்தண்டு ரைத்தா சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சு, ...ஜா இருக்கும் போது செஞ்சு தரும். நான் உக்கார்ந்து நறுக்கி தருவேன். இனிமே எப்போ வந்து எப்படி செஞ்சு,...... இப்படி எப்பவாவது பேச ஆரம்பித்தால் முடிக்கும் போது அந்த வாக்கியத்தை ம்ஹூம் என்ற பெரிய பெரூமுச்சுதான் முடித்து வைக்கும்.

மிகுந்த வலியுடனேயே அவர் சொல்வதை கேட்க நேரிடும். உடனிருப்பவர்கள் சாரோட நெலமை ரொம்ப பாவம் என்பார்கள். நல்லா இருக்கும்போதே நாம போயிடனும்னு வேற சொல்வார்கள்.

வயசுக்காலத்தில் ஈயம் பித்தளைன்னு ஆணியம் பெண்ணியம் பேசி, அன்பை குறைத்து அதிகம் ஆதிக்கமே செலுத்தியிருந்தாலும், அறுபதுக்கு அப்புறம் இவரைப் போன்றவர்களின் நிலைமை கொடிதுதான்.


தனித்திருக்கும் பெண்களுக்கு எப்படியாகிலும் பக்கத்து வீடு, அக்கத்து வீடுன்னு பேச்சுத்துணை ரெடியாகிவிடும். முடிஞ்ச மட்டிலும் தன் கையாலேயே சாப்பாடும். மகளோ, மருமகளோ எப்படியாகிலும் அனுசரித்து போய்விடவும் முடியும். ஆனால் வயோதிகத்தின் ஆணின் நிலைமை எவ்வளவு கவலைக்கிடம் அளிக்குமென்பது இவரைப் பார்த்தபின் கண்கூடாக தெரிகிறது. அதுவும் பணமே குறியென்று நிற்கும் பிள்ளைகளைப் பெற்றவர்களின் நிலைமை அதோகதிதான்.

கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை.

கொடிது கொடிது தனிமை கொடிது, அதனினும் கொடிது வயோதிகத்தில் தனித்திருக்கும் ஆணின் நிலைமை.

இவரைப்பற்றி எழுதி கொண்டிருக்கும்போதே, இயல்பாய் எழுகிறது, மனைவி மக்களை பொருள் வயிற் பிரிந்து தனித்திருக்கும் ஆண்களையும், பெண்களையும் சூழ்ந்திருக்கும் தனிமை என்னும் வெறுமை.
எதையிட்டும் நிரப்ப முடியாத இந்த வெற்றிடத்திற்கு என்ன பெயர் சொல்வது.
வெற்றிடத்தில் ஒலி எழுப்பினால் கூட சில வினோத சத்தங்கள் கிடைக்கப்பெறும். ஆனால் இவர்களூடான வெற்றிடம், அழுகையைக் கூட வெளிப்படுத்த முடியாமல் இருக்கப்பெறும் சூழ்நிலைக் கைதிகளாய்...

வாழ்தலின் பொருட்டு இதுவும் கடந்து போகும் என்று எடுத்துக்கொண்டாலும், கடந்து போனவைகளை நினைத்துப் பார்க்கும் போது, ஒரு ஏக்கப்பெருமூச்சுதான் வெளியிட வேண்டியிருக்கிறது.
அந்த ஏக்க பெருமூச்சுக்குள் எவ்வளவு வலி பொருந்தியிருக்கிறது என்பது அவரைவரைப் பொறுத்தது.

02 March 2009

என்னைக் கவர்ந்தவர்கள் (தொடர் பதிவு)

நமக்கு பிடித்தமான இசை, வாசிப்பு, நட்பு இன்னும் பல நம் மனதுக்கு நெருக்கமான விஷயங்களில் நம்மை எத்தனையோ பேர் கவர்ந்திருப்பார்கள். ஆனால் இன்னதுதான் காரணம் என்றே தெரியாமல் ஒரு சிலர்
நம் மனதை ஆக்ரமித்திருப்பார்கள். அவர்களில் ஒரு சிலர்தான் என்னைக் கவர்ந்தவர்களாக இங்கே அறிமுகப்படுத்தப் போகிறேன்.

1. டென்சிங்க் பால்டன்

கோலிகுண்டு கண்கள், அதில் தெரியும் ஒரு சோகம். குட்டியூண்டு முடி, நான் அண்ணாந்து பார்க்கும் உயரம், நல்ல வெளிர் நிறம் இப்படித்தான் எனக்கு அறிமுகமானால் டென்சிங்க். +1 ல் நான் சயின்ஸ் பாடப்பிரிவு. 10ம் வகுப்பு வரை
தமிழிலியே படித்துவிட்டு, +1 ல் சர்வம் இங்கிலிஷ் மயம், நல்லவேளையாக தமிழை மட்டும் தமிழிலேயே படிக்கச் சொன்னார்கள். யாரைப் பார்த்தாலும் ஒரு பயம், நம்மளோட பேச்சு எல்லாம் நம்மள மாதிரியே தமிழ்ல 10வது வரைக்கும் படிச்சு +1 சேர்ந்த
மக்களோட மட்டும் தான். தப்பித் தவறி அந்தப் பக்கம் தாவற்தேயில்லை. அவர்களை கடந்து போக நேரிட்டாலும் ஒரு சிரிப்பு மட்டுமே. இப்படியிருந்த வேளையில் நானாய் போய் பேச ப்ரியப்பட்டது டென்சிங்கிடம் மட்டும்தான். காரணம் ஏனென்று தெரியாது.

டென்சிங்க் ஒரு நேபாள ஃரெப்யூஜி (இப்படி அவளைப் பற்றி சொல்லப்பட்டபோது எனக்கு ரெப்ஃயூஜியின் அர்த்தம் தெரியாது, ஆனால் அந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் கண்டு கொண்டபின் அவளைப் பார்த்தபோதெல்லாம் எனக்கு வலித்தது) எங்கள் பள்ளியின் ஹாஸ்டல் வாசம், அவளது தங்கையுடன். 5ம் வகுப்பு முதலே இங்குதான். அவர்கள் அம்மா அப்பா எல்லோரும் வேலூர் பக்கம் எங்கேயோ இருக்கிறார்கள். இதையெல்லாம் நான் அவளைப் பற்றி பிறரிடம் விசாரித்தது. அவளுடன் நான் பேச தடையாய் இருந்தது மொழி, அவளுக்கு ஆங்கிலம் தண்ணி பட்ட பாடு, தமிழ் பால் குடிக்கற் மாதிரி ஒரு நாளைக்கு ஒரு தடவைதான். லேங்க்வேஜ் கூட ஹிந்தி எடுத்து படித்தாள். இப்படியிருக்க நான் அவளுடன் பேசுவது எட்டாக்கனிதான்.

ஆனால் சிரிக்க மட்டும் தவறுவதேயில்லை. ஆனால் சில நாட்கள் அந்த சிரிப்பு கூட மிஸ்ஸிங்க். காரணம் தெரியாது, அவள் சிரிக்காத அன்று மட்டும் எனக்கு என்னவோ போல இருக்கும்.

+2வின் கடைசி நாட்களில்தான் என் அரைகுறை ஆங்கில அறிவை வைத்து அவளிடம் பேச முற்பட்டேன். அவளும் பேசினாள். எனக்கு வராத பிஸிக்ஸ் சப்ஜெக்ட்டை அவள் சொல்லித் தருவதாக சொன்னாள். கூடவே சில அட்வைஸும் படிப்பை பற்றி. ஆரம்பத்தில் நான் மிகுந்தஹார்ட்வொர்க் செய்ததாகவும், நாளடைவில் சுதா (சமீபத்தில் இறந்த என் தோழி) வோடு சேர்ந்து அதிகம் பேசி, கதைப்புத்தகங்கள் படித்து நான் வீணாகப்போவதை சுட்டிக் காட்டினாள். என்னைப் பற்றியும், என் குடும்ப சூழ்நிலைகள் பற்றியும் அவளும் பிறரிடம் விசாரித்திருக்கிறாள். நான் அவளை ஆரம்ப நாட்களில் விசாரித்ததை போலவே.

இதனால் தான் அந்த அட்வைஸ் எனக்கு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அவள் சி.எம்.சி. யில் நர்சிங்க் படிப்பதுதான் தனது வாழ்க்கை லட்சியம் என்றும் சொன்னாள். அதுபோல் எனக்கு ஏதாவது இருக்கிறதா என்று வினவினாள். அப்போதுதான் அது போன்ற எந்த எண்ணத்தையும் நான் உருவாக்கிக்கொள்ளவில்லை என்று அறிந்தேன்.

எனது ஆட்டோகிராஃப் புத்தகத்தில் கையொப்பமிட்டாள். அது இப்படி இருந்தது. நீ நல்லவள். கடின உழைப்பாளி. எப்படியாவது படித்து முன்னேறும்(?) எண்ணமுள்ளவள். ஆனால் இது சுதாவோடு சேர்ந்திருக்கும் வரை நடக்காது. அவளுடனான உனது ஃப்ரெண்ட்ஷிப்பை கட் செய்து கொண்டு, இருக்கும் கொஞ்ச நாட்களாவது படிப்பில் கவனம் செலுத்து. சுதா ஒரு மாயவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறாள், அவளுடன் சேர்ந்து நீயும அப்படியாகிவிடாதே. வித் லவ் என்று ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்திட்டிருந்தாள்.

அத்துடன் முடிந்தது, +2 எக்ஸாம் ரிசல்ட் முடிந்து மார்க் லிஸ்ட் வாங்கும் போது பார்த்தது. அன்றே கடைசி. பின்னொரு நாள் பள்ளித் தோழிகளிடம் விசாரித்ததில் அவள் சி.எம்.சியில் செவிலியர் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பதாக சொன்னார்கள்.

டென்சிங்க், நீ எங்கிருக்கிறாய். இப்போது நான் உன்னைப் பற்றி நினைத்து எழுதுகிறேன். நீ குறைந்த பட்சம் என்னை நினைக்கவாவது செய்வாயா டென்சிங்க் பால்டன்.

2. ராணி மிஸ்

இவர்கள் எனது பள்ளி ஆசிரியை அல்ல. வெஸ்லி ஸ்கூலில் அவர்களிடம் 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்த என் அக்கா மகனால் எனக்கு அறிமுகமானார்கள். பார்த்த முதல் நாளே என்னைக் கவர்ந்தவர்கள். ஏ புள்ள என்று ஆரம்பித்து இவர்கள் பேசும் தொனியே அலாதிதான். என் வாழ்வின் சிரமமான கால கட்டத்தில் எனக்கு மிகவும் உதவினார்கள் ஆறுதல் பேச்சுக்களாலும், முன்னேற்ற வார்த்தைகள் கூறியும். நன்றி மிஸ். அவர்களை இன்னமும் ராணி மிஸ் என்றே கூப்பிட்டு பழகிவிட்டேன் என் அக்கா பையனைப் போல. எப்போது அவர்கள் வீட்டுக்கு போனாலும் எங்களுக்காக குறிப்பாய் என் நலனுக்காக ப்ரேயர் செய்வார்கள்.

ராணி மிஸ்ஸுக்கு குழந்தை கிடையாது. தத்தெடுப்பதிலும் அவ்வளவு மும்முரமில்லை. பள்ளிக்கூட வேலையே அவர்களுக்கு சரியாயிருந்தது.

ஒரு முறை சுரண்டையிலிருக்கும் தனது மாமியார் வீட்டுக்கு சென்று வந்த போது ஒரு கைக்குழந்தையுடன் வந்தார்கள்.எங்களுக்கு ஒரே ஆச்சரியம். என்ன மிஸ். யார் என்று கேட்டதில் மிஸ் சொன்னது :

ராணி மிஸ்ஸின் மாமியார் வீட்டில் வேலை செய்யும் பெண்மணிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள். இந்தக் குழந்தை மூன்றாவது கர்ப்பமாக இருக்கும் போது அந்தம்மாளின் கணவர் யாருடனோ ஓடிப் போய்விட்டார்களாம். இந்தம்மா ஏற்கனவே இரு குழந்தைகளுடனும், இப்போது இந்தக் குழந்தையுடனும் மிகுந்த சிரமப்பட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

கைக்குழந்தையை தன்னுடன் எடுத்துக் கொண்டு வந்தே வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பெண்மணியின் நிலையைக் கேட்ட மிஸ், குழந்தையை தத்தெடுத்துக் கொண்டார்களாம். இதில் அந்த வேலைக்காரப் பெண்மணிக்கும் பெருத்த சந்தோஷமாம். எங்கேயோ இந்தக் குழந்தை நல்லா இருந்தா போதும் என்று. ஆனால் எதிர்ப்பு மாமியாரிடமிருந்தும், இன்னும் சில உறவினர்களிடமிருந்துதான்.

தத்தெடுக்க இந்தக் குழந்தைதான் கிடைத்தா, வேறு எவ்வளவோ நல்ல, அழகான குழந்தைகள் இருக்கிறதே. அதுவும் வேலைக்காரப் பெண்ணோட குழந்தையாச்சே, பின்னாடி சொத்து ப்ராப்ளம் அது இதுன்னு வருமேன்னு ஏகப்பட்ட ப்ரச்சனைகள். இதை எதுவும் பெரிசு படுத்தாமல் குழந்தையை தன்னுடன் சென்னைக்கு எடுத்துக்கொண்டு வந்து விட்டார்கள் ராணி மிஸ்.

மிஸ் தன் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வந்தபோது குழந்தை சவலைக் குழந்தை போல ஒல்லியாய், வயிறு மட்டும் முட்டிக்கொண்டு பார்க்கவே பயமாகவும் பாவமாகவும் இருந்தது. அந்த சிறு வயதிலேயே அவனுக்கு சிறுநீர் போகும்போது ஏதோ தொந்தரவு இருந்தது. இதையெல்லாம் சரி செய்து எப்போதும் அழுது கொண்டேயிருக்கும் அவனைப் பார்த்துக் கொள்வதற்காக
தன் பள்ளிக்கூட வேலையை ராஜினாமா செய்து, வீட்டிலேயே ட்யூசன் எடுத்து குழந்தையின் மருத்துவ செலவைப் பார்த்துக்கொண்டார்கள். சென்னையில் வெஸ்லி சர்ச்சில் தான் அவனுக்கு பிரான்ஸிஸ் கிருபாகரன் என்று ஞானஸ்தானம் செய்யப்பட்டது.

நாளடைவில் எல்லா உறவுகளைப் போலவே ராணி மிஸ்ஸின் தொடர்பும் இல்லை. தொலைபேசுவது கூட மறக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் மாமா இறந்த செய்தியை (போஸ்டரில் பார்த்து) விசாரிக்க வந்தபோது அவர்களுடன் பேச நேர்ந்தது. அப்போது கிருபா எப்படியிருக்கிறான் என்று விசாரித்தேன். கடவுள் க்ருபையால நல்லா இருக்கான் புள்ள. எட்டாவது படிக்கிறான் கோபாலபுரம் டி.ஏ.வி ல என்றார்கள்.

ஏனோ இப்போது ராணி மிஸ்ஸை இன்னமும் அதிகமாக பிடித்தது.


நினைவுகளை வெளிக்கொணர வாய்ப்பு தந்த கண்ணாடி ஜீவனுக்கு எனது நன்றிகள்.
எல்லாருக்குமான தனிப்பட்ட சுவாரஸ்யமான மனதைக் கவர்ந்தவர்கள் எப்போதுமே இருக்கத்தானே செய்கிறார்கள் குழந்தைப் பருவத்திலிருந்து. அதனால் இந்தத் தொடரை எழுத பிடித்தவர்கள் தொடரலாம்.