எந்த நேரம் பாத்தாலும் பேச்சு, அப்படி என்னதான் பேசுவீங்களோ, க்ளாஸ் ரூம் உள்ள மட்டுமில்ல, வெளியேவும் எப்படியிருக்குன்னு கொஞ்சம் எட்டிப்பார்க்கணும். உங்க வீட்டுல எல்லாம் இப்படித்தான் இருக்குமா, போய் எட்டிப்பாருங்க வெளிய, நம்ம க்ளாஸ் ரூம் எப்படியிருக்கு, மத்தவங்க க்ளாஸ் ரூம் எப்படியிருக்குன்னு, சுள்ளென்று எரிக்கும் வெய்யிலில் மாடி ஏறி வந்த மூச்சிரைப்போடு வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார் வகுப்பாசிரியரான முட்டைக்கண் விஜயலட்சுமி டீச்சர்.
சட்டென்று மயான அமைதி, மணியடித்து முடித்த பின்னும் பேசிக்கொண்டிருந்த சலசல சத்தங்கள் இந்த வகுப்பறையிலிருந்தா இதுவரை வந்தது என்பது போல் கப்சிப்.
உங்களோட ஸ்லிப்பர்ஸ் தானே, இப்படித்தான் கன்னாபின்னான்னு கோவில் வாசல்ல விடறா மாதிரி ஒன்னு மேல ஒன்னா கும்பலா விடுவீங்களா?. நீ எழுந்திரு, போய் எல்லா ஸ்லிப்பரையும் ஒழுங்கா அடுக்கு, இனிமே டெய்லி மதியானம் ஒருத்தர் வாட்ச் பண்ணி ஸ்லிப்பரை ஒழுங்கா அடுக்கி நேரா விட்டு இருக்கனும்.டெய்லி ஒருத்தர், அய்யோ நம்ம அடுக்கனுமேன்னு யோசிச்சு ஆளாளுக்கு ஒழுங்கா விட ஆரம்பிச்சிங்கன்னா ஒரு பத்து நாள்ல எல்லாம் தானே ஒழுங்கா வந்துடும்.
எங்கே க்ளாஸ் லீடர்?. நீ என்ன தான் செய்ற, பசங்கள பேச விட்டுக்கிட்டு, இப்படி க்ளாஸ் ரூம ஒழுங்கீனமா வெச்சிருக்க. டெய்லி ஒருத்தர ரொட்டீனா ஸ்லிப்பர் அடுக்க வைக்கறது இனி உன் வேலை.ஆமா, இன்னும் என்ன உக்காந்துட்டு இருக்க, இன்னொரு தடவ சொல்லனுமா, ப்போ, ஏய் நீயும் போ, ரெண்டு பேரா போங்க. ப்போய் கதைப்பேசிக்கிட்டு நிக்காதீங்க.
அகர வரிசைப்படி கடைசியாய் இருந்தாலும், உயர வரிசைப்படி முதல் நிலையில் இருப்பதால் முன்னாடி உட்கார்ந்திருந்த நாங்களிருவரும் மூச்சைக் கூட வெளியே விடாமல் எழுந்து வெளியே போனோம். சின்னதும், பெரிசுமாய், பெரும்பாலும் கருப்பு, ப்ரவுன் நிறங்களில், வெறும் பட்டையும், சிலது பட்டைகளில் அழகாய் வேலைப்பாடு செய்தும், அடர்ந்த சந்தனக்கலரில் அரக்கு கலரில் பின்னால் மாட்டும்படியான பட்டைக்கொண்ட நான்கைந்து ஜோடிகள், பழுப்பு நிறத்தில் சப்பையாய் தேய்ந்து கிடக்கும் செருப்புகள் என குவியலாய் கிடந்தது.
சுவரைப் பிடித்தபடி காலாலேயே ஜோடிக்கொன்றாய் எடுத்து அடுக்க ஆரம்பித்தோம். அடுக்க, அடுக்க நீளமாய் செருப்புகளின் அணிவகுப்பு நீண்டுக்கொண்டே இருந்தது. எப்படியும் உள்ளே போனால் கொட்டாவி விட்டுக்கொண்டுதான் இருக்கவேண்டும், அதற்கு இதையாவது செய்யலாமே என்று மிக நிதானமாய் அடுக்கிக்கொண்டிருந்தேன். உள்ளே அறிவியல் பாடம் நடத்தப்படும் சத்தம் கேட்டது. ஏய் சீக்கிரம் அடுக்குடி, வேடிக்கைப் பார்க்காம உடன் அடுக்குபவள் கிசுகிசுத்தாள்.
எல்லா செருப்புகளும் ஓவ்வொரு விதத்தை கொண்டிருந்தன. சில செருப்புகளில் கருப்பாய் விரல் தடங்கள் ஆழமாய் பதிந்திருந்தன. சில செருப்புகளை பார்க்கும் போதே தெரிந்துவிட்டது யாருடையதாக இருக்குமென்பது, உடன் ஒரு பெருமூச்சும் வந்தது. அடுக்கிவிட்டு திரும்பி ஒரு முறை பார்த்தபோது நேர்த்தியாக இருந்தது. அதிலும் அந்த பின்னால் மாட்டும்படி பட்டை வைத்த உள் பாதம் படுமிடத்தில் sandek என்று போட்டிருந்த அடர்ந்த சந்தனக்கலர் ஜோடிகள் சத்தம் போடாமல் மனதை ஈர்த்தது. வாங்கினால் இந்த செருப்பைத்தான் வாங்கவேண்டும். இடது காலை ஊனி வலது கால் பட்டையையும், வலது காலை ஊனி இடது காலினதையும் அழகாய் ஸ்டைலாக கழட்டலாம். அழகா இருக்குல்ல.
ரெண்டு பேர் போனதுக்கே இவ்ளோ நேரமா, உக்காந்து பாடத்தை கவனிங்க, சுள் அகலாத டீச்சர்
அறிவியல் போய் கணக்கு, தமிழும் முடிந்து கடைசி பீரியட் வந்துவிட்டது. கடைசி பீரியடும் வகுப்பாசிரியருடைய அறிவியல் தான். அதனால் முன்னெச்சரிக்கையாகவே கப்சிப் தொடங்கிவிட்டது.ஆனால் வந்ததென்னமோ மாரல் டீச்சர் தான். எல்லாம் இந்த அறிவியலின் ஏற்பாடாகத்தான் இருக்கும் என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துவிட்டது. மாரல் டீச்சருக்கு மத்த டீச்சர்களைப்போல கத்த வேண்டிய வேலையிருக்காது போல, காலையில் வாரிய தலை கலையாமல், மடிப்பு கலையாத புடவையோடும் மேஜையின் நுனியில் ஸ்டைலாக அமர்ந்தார். சில சமயங்களில் இவர்தான் தமிழ் இரண்டாம் பாடமும் எடுப்பார். அவரைப்பார்த்தாலே ஒப்புக்கு சப்பாணி டீச்சர் என்றுதான் தோன்றும்.
அவ்வப்போது குனிந்து தன் நீண்ட விரல் நகங்களைப் பார்த்துகொண்டே ஒழுக்கநெறிமுறைகளையும், நல்ல பழக்கவழக்கங்களும் நலமான வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியமென்று புகட்ட ஆரம்பித்தார். ஆள் பாதி, ஆடை பாதி, அதனால் சுருக்கமில்லாத ஆடைகளை அணியுங்கள். பற்களை சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.காலை, மாலை இருவேளைகளிலும் பற்பசை கொண்டு பல்துலக்கவேண்டும்.
பற்பசையா, சரியா போச்சு, அம்மா வைத்திருக்கும் அடை அடையான சாம்பல் பை மாத்திரம் மாதக்கடைசியில் குறையாகாது என்றால் நான் நான்கு வேளைகள் கூட பல்துலக்க தயாராக இருந்தது டீச்சர் அறியாதது. பல் துலக்க உதவுமென்றே அம்மா வரட்டியை அடுப்பில் எரிபோடுவார். நல்ல சாம்பல் நிறத்தில் ! சில இடங்களில் கரித்தீற்றலோடு அடை அடையாக எடுத்து பிளாஸ்டிக் கவரில் வைத்து வெளியே தொங்கவிட்டிருப்பாள். சாம்பல் அடையில் ஒரு முனையை சற்று தொட்டால் போதும், அப்படியே பொல பொலவென்று உதிரும். கையில் எடுக்கும்போதே மாவாகிவிடும். காயாத வரட்டியாக இருந்தாலோ, சரியாக எரிபோடவில்லையென்றாலோ. கட்டித்தட்டிக்கொண்டு ஒன்றுக்கும் ஆகாமல் உட்கார்ந்திருக்கும்.
சாம்பலை வைத்து இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் விரலை கொடுத்து ரெண்டு முறை அழுத்தித் தீத்தினால் போதும், கொஞ்சம் தண்ணீர் செலவழித்து நன்றாக கொப்பளிக்கவேண்டும். இல்லையென்றால் கொஞ்ச நேரத்துக்கு வாயில் நற நற வென்று அகப்படும். அடிக்கடி எச்சில் துப்பவேண்டியிருக்கும். சாம்பலில் பல் தேய்த்து கொப்பளித்த வாயோடு ஒரு டீ குடித்தால் செமத்தியாக இருக்கும்.நினைக்கும் போதே பல் துலக்கவேண்டும் போல் இருந்தது.
பாத்ரூம் போய் வந்த பிறகு கை, கால்களை நன்றாக கழுவவேண்டும் என நான் சாம்பல் கொண்டு பல் துலக்கிக்கொண்டிருந்த நேரத்தில் அவர் பல்லில் இருந்து காலுக்கு இறங்கிவிட்டிருந்தார் .நினைவைக் கலைத்து அவசர அவசரமாய் அவரை பின் தொடர்ந்ததில் செருப்பணிந்து கொண்டுதான் கழிப்பறைக்கு செல்லவேண்டும். பெரும்பாலும் செருப்பு போட்டுக்கொண்டே நடக்க பழகவேண்டும். சாலையில் உங்களுக்கு முன் செல்லும் நபர் எச்சில் துப்பியிருந்தால், செருப்பணியாத உங்கள் கால்கள் அதன் மீது பட நேர்ந்தால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பாகிவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்த போதே எச்சில் மிதிக்கும் அபாயமும், அருவருப்பையும் தாண்டி செருப்பணியும் ஆசை வந்தது. காரணம் வேறென்ன மதியானம் அடுக்கிய sandek தான்.
நம்ம க்ளாஸ்ல யார், யார் கழிப்பறைக்கு போக செருப்பு பயன்படுத்துவீங்க? என்று சுவாரஸ்யமாய் கேட்டுக்கொண்டிருந்தார். வழக்கம் போல நான் கையைத் தூக்கவில்லை. திரும்பிப் பார்த்ததில் பெரும்பாலோர் கையைத் தூக்காமல் தான் இருந்தார்கள். மறுபடியும் ஒழுக்கநெறிகள் தொடர்ந்து, யார், யார் செருப்பணிவதில்லை என்று கேள்வியாகிற்று. நான்கைந்து கைகள் மட்டுமே உயர்ந்தது. வழக்கம் போல இதற்கும் என் கை உயரவில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்தவள்தான் வெடுக்கென்று என் இடது கையைப் பற்றி உயரே தூக்கிவிட்டாள். பொத்தாம் பொதுவாக எல்லோரையும் பார்த்துவிட்டு இன்னும் இரண்டு நாட்களில் செருப்பணியவேண்டும் என்று சொல்லுவார் என்பது எதிர்பாராதது. ஆஹா சாயங்காலம் அம்மாக்கிட்ட சொல்ல சாக்கு கிடைத்த சந்தோஷத்தில் அருகில் இருந்தவள் மீது கோபம் வரவில்லை.
பையை கொண்டு போய் ஆணியில் மாட்டிவிட்டு ம்மா, எங்க ஸ்கூல்ல மாரல் டீச்சர் இனிமே செருப்பு போட்டுக்கிட்டு வர சொன்னாங்கம்மா என்றபடியே சாப்பிட உட்கார்ந்தேன். ஆரம்பிச்சிட்டாங்களா உங்க ஸ்கூல்ல, ஏதோ நாலெழுத்து நல்லா கத்துத்தருவாங்கன்னு பணங்கட்டுற ஸ்கூல்ல சேத்தா இவளுங்களுக்கு இதே பொழப்பா போச்சே, சொளையா வருஷ பீசு வாங்கறதில்லாம அப்ப அப்ப பத்தக் கொண்டா, இருவது கொண்டான்னு இப்ப செருப்பு தொடப்பம்னு வந்து நிக்கறாங்களா, நாளைக்கு ஸ்கூலாண்ட வரேன்.
கபீரென்றது. காசு என்றாலே எப்போதும் அம்மா இப்படித்தான். ந்தா, மறுநாளே உங்க ஸ்கூலுக்கு வர்ரேன் என்று சொல்லிவிடும். சில சமய மதிய வேளைகளில் ஜன்னல் பக்கம் டீச்சரைத் தவிரவும் ஏதாவது புடவைகள் தென்பட்டால் அய்யோ, சொன்னா மாதிரியே வந்துடுச்சா என்று அடி வயிற்றில் மின்னல் வெட்டும். திரும்பி திரும்பி பார்த்து உறுதிபடுத்துவதற்குள் ச்சே என்றாகிவிடும். இன்றும் அப்படித்தான். ஆனால் நான் கொண்ட கொள்கையான sandekல் உறுதியாக இருந்ததால், அடத்தை இன்னும் அடமாக பிடிக்க ஆரம்பித்தேன். ம்ஹூம், அதெல்லாம் இல்ல, செருப்பு போட்டுக்கிட்டு போலன்னா பைன் போடுவாங்களாம். அவங்களே உன்ன கூட்டிக்கிட்டுதான் வர சொன்னாங்க என்று வாய்க்கு வந்ததை உளற ஆரம்பித்தேன். அம்மா அங்கலாய்ப்பதை நிறுத்திவிட்டு, திடீர்னு செருப்ப கொண்டாடின்னா நான் என்னா, எரவாணாத்துலயா வெச்சிருக்கேன், ஒன்னாந்தேதி பொறக்கட்டும், லஸ் புள்ளையார் கோயிலுக்கு போறச்சே வாங்கித்தரேன்.
லஸ் பிள்ளையார் கோயிலுக்கு போறதே அலாதியான விஷயம்தான். அதிலும் இந்த தடவை sandek கிடைக்குமென்றால் அய்யோ, அய்யோ,பிள்ளையாரப்பா. சீக்கிரம் ஒன்னாந்தேதிய வரவெச்சிடேன். வீட்டிலிருந்து லஸ்ஸுக்கு 21ஆம் நெம்பரும், 1ஆம் நெம்பரும் பத்து நிமிஷத்துக்கொன்னு போனாலும் அம்மா நடத்திதான் அழைத்துப்போவாள். வரும்போதும் அப்படித்தான். என்ன, போனஸாக துர்கா பவனில் எனக்கு போண்டா கிடைக்கும். அம்மா ஒரு காபி குடிப்பாள். எனக்குத் தெரிந்து அதி சிக்கனமான அம்மா செய்யும் அதிகப்படியான செலவு இது மட்டுமே.
அந்த நாளும் வந்து, மனமெல்லாம் குதியோ, குதியென்று குதிக்க லஸ்ஸை நோக்கி அதிவேக நடை. போகும் போதே செருப்புக்கடைகளை பார்த்து வைத்தாயிற்று. பெயரும் நன்றாக ஞாபகத்தில் இருந்தது. அன்றைக்கு இருந்த சுவாரசியத்தில் எப்போதும் சிறுங்கசப்போடு சுவைக்கும் விபூதி பிரசாதம் கூட உள்ளிறங்கவில்லை. கோவில் சுற்றி முடித்தபின் உட்காரும் அம்மாவை உட்காரவே விடாமல், திருப்பத்தில் ஒரு கடையில் கொண்டு வந்து நிறுத்தியாயிற்று.
ஏம்பா, கொழந்த காலுக்கு நல்லதா ஒரு செருப்பு எடுத்துக்கொடு. கிளி ஜோசியக்காரன் சீட்டெடுக்க சொல்கிறா மாதிரி கேட்டாள்.
இன்னா மாதிரி மாடலும்மா?
நான் மெதுவாக சாண்டக் செருப்புங்க. பின்னாடி மாட்டுறா மாதிரி இருக்குமே அது.
அதுவா, முன்னே வந்து கீழே குனிந்து பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்ததை எடுத்துப்போட்டு போட்டுப்பாரும்மா என்றான்.
பெரிதாக இருந்தது. இதுக்கும் முன்னாடி சைஸு.
அஞ்சாம் நெம்பர் சரியா இருக்கும், இந்தா.
வெலை எவ்ளோப்பா?
அம்பது ரூவாம்மா.
என்னாது, அம்பது ரூபாவா, சரியா போச்சுப்போ, அங்கங்க பத்துக்கும், இருபதுக்கும் விக்கிறான்.
செருப்பு சரியாக பொருந்தி வந்தது. இடதை ஊனி வலதும், வலதை ஊனி இடதும் ஸ்டைல்!! போடும்போது கொஞ்சம் தடுமாறியது. போட்டுப் பழகிடுச்சுன்னா சரியாகிடும். சமாதானம் சொல்லிக்கொண்டேன்.
சரி உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம் இருபத்து அஞ்சு ரூபாக்கு கொடு, அம்மா தடாலடி பேரத்துக்கு இறங்கினாள்.
நாப்பதுக்கு ஓரு ரூபா கொறைக்க முடியாதும்மா, பேரம் படியவில்லை. எனக்கு பதைபதைக்க ஆரம்பித்துவிட்டது. காலில் போட்டுப் பார்த்த செருப்பை அவிழ்த்துவிட்டு பரிதாபமாக அம்மாவை பார்க்க ஆரம்பித்தேன். கண்ணில் நீர் கோர்க்க ஆரம்பித்தது.
ம்ஹூம், அம்மா மசியவில்லை. பேரமும் படியவில்லை. கடைசியாய் இருபது ரூபாய்க்கு கிடைத்த செருப்பை வாங்கித்தந்தாள். காலில் போட்டுப்பார்க்கவே மனம் ஒப்பவில்லை. இந்தா போட்டா போடு. போடாக்காட்டிப் போ என்று வாங்கிய செருப்புகளை என் காலருகே வீசிவிட்டு கடைக்காரனிடம் ரெண்டு பத்து ரூபாயைத் தாளை கொடுத்துவிட்டு கடையை விட்டு அகன்றாள். கடைக்காரன் காசை பாக்கெட்டில் போட்டுக்கொண்டே கொழந்த, ஆசப்படுறத வாங்கிக்கொடேம்மா என்றான்.
உனக்கென்னா சொல்லாத ? என்றபடியே நடக்க ஆரம்பித்தாள். நான் வேண்டா வெறுப்பாக செருப்பு கவரை சுண்டுவிரலில் மாட்டியபடியே நடந்தேன். உள்ளே குமுறிக்கொண்டு வந்தது. அம்மா விடுவிடுவென்று போய் துர்கா பவன் வாசலில் நின்றாள். நான் அவளைக் கடந்து போக ஆரம்பித்தேன்.
பின்னாடியே வந்தவள் முதுகில் ஒன்று பட்டென்று வைத்து, இந்த வயசில இவ்ளோ ஆங்காரம் ஆகாது என்று என்னைத்தாண்டி விருட்டென்று நடந்தாள். ரோடு கிராஸ் செய்யுமிடத்தில் போய் நின்றாள். அம்மாவின் கைப்பிடிக்காமல் ஆனால் அம்மாவோடே க்ராஸ் செய்தேன்.
செருப்புக்கவரை கொண்டு போய் வீசிவிட்டு சாப்பிடாமல் படுத்துவிட்டேன். தூக்கமெல்லாம் வரவில்லை.
கொஞ்சம் சுடுதண்ணி வெக்கிறியா, கால்ல ஊத்துறதுக்கு – கேட்டுக்கொண்டே அப்பா உள்ளே நுழைந்தார்.
ஏன், என்னாச்சு? - அம்மா
காலைல வேலைக்குப் போறச்ச ஒரு பாட்டிலோடு கால்ல பொத்துக்கிச்சு. ஏற்கனவே ஆணிக்காலு வேற நடக்க முடியல. ஜிவு ஜிவுன்னு ஒரே வலி. சுடுதண்ணி ஊத்துனா கொஞ்சம் வலிக்கு எதமா இருக்கும். சைபாலு இருக்குதா. இருந்தா ஆணிக்காலு மேல தடவேன்.
ம்க்கும், சும்மா, சைபாலு, சைபாலுன்னு அதையே தடவு. ஆஸ்பத்திரிக்கி போய்ட்டு வான்னா கேட்க மாட்டேங்குற. சேத்துப்புண்ணுக்குத் தடவுறத போயி ஆணிக்காலு மேல தடவுற.
எல்லாம் மருந்துக்கடயில கேட்டதுக்கு இதத்தான் கொடுத்தான். இருந்தா எடு. இன்னிக்கு ஒரு பொழுது. நாளைக்கி சீக்கிரமா போயி ஆஸ்பத்திரில ஓ.பி சீட்டு வாங்கி பார்த்துட்டு வந்துடறேன்.
என்னாச்சும்மா, படிக்கல, இவ்ளோ சீக்கிரம் படுத்துட்ட? கேட்டுக்கொண்டே காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்டிருந்தார்.
வலியின் வேதனை போலும். அப்பா சீக்கிரம் சாப்பிட்டு படுத்துவிட்டார். ஏய், இப்ப எழுந்து வந்து சாப்பிடப்போறியா இல்லியா, இல்ல இன்னும் ரெண்டு வைக்கவா?
மனமில்லாமல் சாப்பிட எழுந்து உட்கார்ந்தேன். சரியாய் எனக்கு நேர் எதிரே அப்பா படுத்திருந்தார். குண்டு பல்பின் வெளிச்சத்தில் அப்பாவின் கால்கள். பாளம் பாளமாய் வெடித்துப்போய் கிடந்தது. ஆணிக்கால்கள் வேறு அங்கங்கு குண்டாய் எழும்பியிருந்தது. ஒரு இடம் கருப்பாய் கன்னிப்போய் இருந்தது. அங்குதான் பாட்டிலோடு குத்தியிருக்கவேண்டும். அங்கங்கே வெள்ளை வெள்ளையாய் சைபால் எட்டும் எட்டாமல் பூசப்பட்டிருந்தது.
மூஞ்சை தூக்கிவெச்சிக்கிட்டே சாப்பிடாத, ஒடம்புல ஒட்டாது. அப்பி அணைச்சி சாப்பிட்டு போய்ப்படி இல்லனா படு.
சாப்பாடு, படிப்பு எதிலும் மனம் படியவில்லை. இருப்பினும் சாயங்காலம் வேறு கோவிலுக்கு போய்விட்டதால் வீட்டுப்பாடம் எழுதவில்லை. எழுத உட்கார்ந்து எப்போது தூங்கினேன்?
பல்விளக்கி, டீ குடித்த போது பக்கத்தில் கிடந்த சைபால் டப்பா எல்லாவற்றையும் கிளறிவிட்டு அப்பா ஞாபகம் வந்தது. அப்பா எங்கம்மா?
ஓ.பி சீட் வாங்கனும்னு சீக்கிரமே கிளம்பி போயிட்டாரு. அந்த குந்துக்கால வெச்சுக்கிட்டு அவ்வளோ தூரம் எப்பிடிதான் போவப்போறாரோ?
ப்ரேயர் முடிந்து வகுப்புக்காக மாடி ஏறும்போது மடிப்புக்கலையாத புடவையோடு மாரல் டீச்சரைப் பார்க்க நேர்ந்தது.
நலமான வாழ்வுக்கு ஒழுக்கநெறிமுறைகளையும், நல்ல பழக்கவழக்கங்களையும் பழகிக்கொள்ள பற்பசையும், செருப்பும் மாத்திரமல்ல, அவைகளை வாங்க பணமும், கூடவே செருப்பற்ற கால்களுக்கு சைபால் டப்பாவும் மிகவும் அவசியம் என்று நான் முணுமுணுத்தது, புது செருப்பின் ச்சக், ச்சக் சத்தத்தில் டீச்சரின் காதில் விழுந்திருக்க நியாயமில்லை.