உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அந்தப் பெண்ணைப் பார்த்தபின்னர் தான் புரிந்தது.
கைகள் முழுவதும் நரம்புகள் புடைத்துக்கொண்டு நிற்க, வயோதிகம் முகத்தில் தெரிந்தது. வெற்றிலை பாக்கும் போடும் பழக்கமிருக்கக்கூடும்.பின் எண்ணெயறியா தலைமுடி, செம்பட்டையையும் நடுநடுவே வெள்ளைகளும். வெளுத்துப்போன கருப்பு ஜாக்கெட், பச்சை நிறத்தில் ஒரு பழம்புடவை.உடலின் தளர்ச்சி அந்தப் பெண்ணை நாற்பது (மேற்பட்டும் இருக்கலாம்) என்று சொன்னது. தோள்பட்டையில் ஒரு கருப்பு நிற நீள பை. சோகமோ, கோபமோ, இல்லை இயல்பே இப்படித்தானோ என்று எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாத முகபாவம் அந்தப் பெண்ணுக்கு. முகத்திலும் தளர்ச்சியின் கோடுகள்.
கையில் ஒரு குழந்தை. அனேகமாய் அந்தக்குழந்தைக்கும் ஒரு வயதுக்குள் தான் இருக்கவேண்டும். ஒல்லி என்ற வார்த்தையில் கடைசி ‘லி’ யில் இருக்கும் கொம்பை போலத்தான் இருந்தது அதன் கை கால்கள். ஒரு வயதாக இருந்தாலும் இருக்கலாம், ஆனால் அதன் தோற்றம் ஐந்து மாதத்தைத் தான் காட்டியது.
ட்ரெயினில் மிதமான கூட்டம், மாம்பலத்தில் நின்றால் இன்னும் கூட்டம் ஏறும் என்ற எதிர்ப்பார்ப்போடு அடுத்தடுத்து இறங்குபவர்கள் முன்னால் வர இருப்பவர்கள் நெருக்கமாகிக்கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணின் கையிலிருக்கும் அந்தக் குழந்தை அழுது கொண்டே இருந்தது. கூட்டத்தின் சலசலப்பைத் தாண்டி அந்தப் பெண்ணைப் பார்க்க அந்தக் குழந்தைதான் உதவியது. அனைவரின் எதிர்ப்பார்ப்பும் அந்தப் பெண் குழந்தையை முன் வைத்து பிச்சை எடுக்கப்போகிறாள் என்பதாகத் தான் இருந்தது. நீண்ட நேர அழுகை. தோள் மாற்றி தோள் வைத்து சமாதானமெல்லாம் செய்யும் முயற்சியெல்லாம் அந்தப் பெண் எடுக்காதது இன்னும் அதை ஊர்ஜிதப்படுத்தியது.
சிலரை சொல்வது போல, ஏம்மா இந்த கூட்ட நேரத்துல கொழந்தைய தூக்கிட்டு வந்து கஷ்டப்படுத்தறீங்க, எப்படியாவது ! உள்ள போய் யாரையாவது எழுப்பிட்டு சீட்டுல உக்காருங்க என்று முன் மொழியும் வார்த்தைகள் எந்த வாயிலுமிருந்து வரவில்லை.
அந்தப் பெண்ணை பார்த்த மாத்திரம் அனைவருமே அவள் பிச்சை எடுக்கத்தான் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்திருக்கவேண்டும் என்று முடிவு செய்திருப்பார்கள் போலும், நெருக்கத்திலும் அவள் மேல் பட்டும் படாமலுமிருக்க கற்றுக்கொண்டிருந்தார்கள் அந்த இடைவெளிக்குள்ளும்.
அடுத்த இறங்கப்போகும் பெண்ணுக்கு முன்னால் நிற்கும் இவளின் இருப்பு இடைஞ்சலைத் தந்ததால், அடுத்த ஸ்டேஷன்ல நிறைய பேரு இறங்கி, ஏறுவாங்க, கொஞ்சம் வழிவிட்டு உள்ளபோயிடுங்க. யாராவது ஒக்கார இடம் கொடுப்பாங்க. அவளின் இந்த வார்த்தையை இந்தப் பெண் காது கொடுத்து கேட்டிருப்பாள் போலும்,உள்ளே போகும் முயற்சி, ஆனால் ஒரு அங்குலம் கூட உடம்பை அசைக்கமுடியவில்லை, குழந்தையின் அழுகை வேறு கூடிக்கொண்டிருந்தது. எல்லோருக்கும் அவள் இன்னும் அந்தக் குழந்தையை காட்டி ஏதும் காசு வாங்காதது வேறு ஆச்சரியம், குழந்தையையும் ஆற்றுப்படுத்தவில்லை. அது பாட்டுக்கு அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரல் கூக்குரல் ஆகிற்று,
இப்போது இறங்கப்போகும் பெண் சற்று சூடாக, ஒன்னு உள்ள போ, இல்ல எனக்கு வழிவிடுங்க, இப்புடி நடுவுல குழந்தைய வெச்சிட்டு நின்னா எப்படி இறங்கறது ? என்று குரலை சற்று உயர்த்தினாள். எல்லோர் பார்வையும் இந்தப் பெண்ணின் மேல் இறங்கியது. அவளின் நோக்கம் எதுவென்று அறியமுடியாமல் இறங்கப்போகும் ஆர்வம் வேறு எல்லாரும் எல்லோர் முகத்தையும் பார்க்கச் செய்தது. எப்போதும் குழுவோடு பயணிப்பவர்கள், இது என்ன இப்படி குழந்தைய அழவிட்டு, காச கீச வாங்கறதா இருந்தா வாங்கிட்டு எறங்க வேண்டியதுதானே, என்று முணுமுணுப்பு.
எல்லோர் எண்ணங்களையும் ஒரு நொடியில் முறியடித்தாள் அந்த வயோதிக தோற்றப் பெண், நிற்கக் கூட இடமில்லாத அந்த இடத்தில் தன் உடம்பை குறுக்கி உட்கார்ந்துகொண்டு, குழந்தையை மடியில் கிடத்தினாற் போல வைத்துக்கொண்டு பால்புகட்ட ஆரம்பித்தாள். உயிர் உருப்பெற உருவாக்கிய ஜீவ அமுதம் இப்போது அந்த அழுகுரலை நிறுத்தி சப்புக்கொட்ட செய்தது. ஒரு நிமிடம் ட்ரெயினின் தடக் தடக் மட்டுமே, அனைவரின் பார்வையும் கீழ் நோக்கி, வாய் மௌனத்தை உச்சரித்தது.
நெகிழ்வு போலவும் நெஞ்சில் ஏதோ தோன்ற நிறுத்தம் வந்து இறங்கிவிட்டேன், அப்போது காதில் இந்தப் பாடல் வரிகள் ஒலித்தது.
காலம் கடந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே
நெருப்பில் எரித்தாலும் நீரில் குளித்தாலும் தங்கம் கருக்காது தாயே
இந்தப் பாடல் வரிகளுக்கும், அந்தக் காட்சிக்கும் அர்த்தப்படுத்தியது மாதிரிதான் இருக்கிறது இரண்டு நாட்கள் முன்னர் ட்ரெயினில் நான் பார்த்த அந்தக் காட்சி.