Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

14 December 2010

கோபல்ல கிராமம்

எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு.
அதைச் சொல்வதுதான் கோபல்ல கிராமம்.

தெலுங்கு தேசத்திலிருந்து தமிழகத்தில் தஞ்சமடையும் கம்மவார்களின் வாழ்க்கை முறை பற்றி பதியப்பட்ட நாவல். அற்புதமான நடை. அங்கங்கே மெய்சிலிர்க்க வைக்கும் சில நிகழ்வுகளை கி.ரா அருமையாய் விவரித்திருக்கிறார்.

தெலுங்குதேசத்தில் வளமையான குடும்பத்தில் பிறந்த சென்னாதேவி என்ற பெண்ணின் அழகினை கேள்விப்பட்டு அவளை அடையவிரும்பும் துலுக்க ராஜா. அவரிடமிருந்து சென்னாதேவியை அழைத்துக்கொண்டு சென்னாதேவியின் குடும்பத்தார் மொத்தமும் காட்டுவழியே தப்புகிறார்கள். பின்னால் துலுக்கராஜா அனுப்பிய ஆட்கள் துரத்துகிறார்கள். அப்போது ஒரு பெரிய நதி குறுக்கிட அவர்களிடம் மாட்டிக்கொள்வதை விட நதியில் விழுந்து உயிரைமாய்த்துக்கொள்ள நினைக்கிறார்கள். நதியின் அக்கரையிலிருந்த அரசமரமொன்றுநதிக்கு குறுக்காக வீழ்ந்து அவர்கள் அனைவரையும் ஏந்திக்கொள்ள, அவர்கள் அனைவரும் நதிக்கு அக்கரைக்கு போய்சேர்கிறார்கள். துலுக்க ராஜாவின் ஆட்கள் திரும்பிவிடுகிறார்கள்.

இது தொட்டு ஆரம்பிக்கிறது இவர்களது பயணம். இடையிடையே நிறைய உதவிகளும், இடைஞ்சல்களும் ஏற்படுகிறது. காய்ச்சலாலும், தீராத நடைப்பயணத்தாலும்சென்னாதேவி இறந்துவிடுகிறாள். அவர்களோடு வந்த சில வயதாளிகளும், குழந்தைகளும் இறந்துவிடுகிறார்கள். இருப்பினும் மனம் சோராமல் நடைப்பயணம் தொடரபொட்டி அம்மன் எனப்படும் ஒரு வனதேவதையால் வழிகாட்டப்பட்டு அரவநாடு (தமிழ்நாடு) வந்தடைகிறார்கள். அவர்கள் வந்தடைந்த இடத்தை அவர்கள் தங்கள் கடின உழைப்பினால் செம்மைப்படுத்துவதே கோபல்ல கிராமம் நாவல்.

மங்கத்தாயார் என்ற 139 வயது மூதாட்டி தன் அனுபவங்களை தனது பிள்ளைகளிடம் கதை போல் பகிர்ந்துகொள்வது போல் அமைகிறது கதையின் நடை. அவரின் மகன்களான கோவிந்தப்ப நாயக்கர் முதலான எட்டு மகன்களை உள்ளடக்கிய கோட்டையார் வீடு என்று அனைவராலும் மரியாதையாக அழைக்கப்படும் இவர்களே கதையின் மாந்தர்களாக கதை நெடுகவும் பயணிக்கிறார்கள்.

கம்மாளர்கள் எனப்படும் அவர்கள் அனைவரும் தாம் வந்தடைந்த இடத்தை செம்மைப்படுத்தி வாழ்வதற்கேற்ற இடமாக மாற்றிக்கொண்டதை மிகவும் அற்புதமாக சொல்லியிருக்கிறார் கி.ரா.மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் எழுத்தாக இருக்கிறது.

ஒரு நிலையில் நாட்டை ஆண்ட கும்பினியாளர்கள் கோட்டையார் வீட்டை அணுகி கும்பினி அரசின் சார்பாக அந்த ஊர் மணியமாக இருக்க கோருகிறார்கள். இந்த ஊரின் வளமை அவர்களின் கண்ணை பிடுங்குகிறது. அறுவடைக்கு தயாராகியிருந்த கம்பம் பயிர்களையெல்லாம் விட்டில் பூச்சிகள் வந்து அழித்துவிட ஊரில் பஞ்சம் வந்துவிடுகிறது. இது குறித்து கும்பினிக்கு எழுதி போட்டாலும் எந்த ஒரு பயனுமில்லாது போய்விடவே அவர்கள் அனைவரும் மனமுடைந்து போய்விடுகிறார்கள்.

மேலும் இவர்களின் கிராமம் சாலையோரமாய் அமைந்துவிட, கும்பினியாளர்கள் பளு தூக்கிகளாக இவர்களை பயன்படுத்துகிறார்கள். வெள்ளைக்காரர்களைக் குறித்த ஏகப்பட்ட வதந்திகளாலும், கட்டபொம்முவை தூக்கிலிட்ட செய்தி அறிந்ததாலும் மனமுடைந்த நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் விக்டோரியா மகாராணியார் தானே கும்பினி ஆட்சியை எடுத்தாளப்போவதாகவும், அதன் பொருட்டு நாட்டில் அமைதி நிலவப்போகிறது என்றும் அவரின் பேரறிக்கையை எடுத்துக்கொண்டு மீண்டும் ஊருக்குள் நுழைகிறார்கள் வெள்ளையர்கள்.நிறைய வாக்குறுதிகளை தருகிறார்கள். இந்த மக்களும் விக்டோரியா மகாராணியாரை ராணி மங்கம்மாவாகுக்கு இணையானவராக இருப்பார் என்று ஒப்பிட்டு அவர்களின் வாக்குக்கு உடன்படுகிறார்களென கதை முடிகிறது.

ஆனால் கதையின் இறுதியில் // அப்போது அங்கே நிலவிய அமைதி, வரும் ஒரு புயலுக்கு முன்னுள்ளது என்று யாரும் அறியவில்லை அப்போது // என்று சொல்லியிருப்பார்.

இந்த வாக்கியங்களை படித்து முடித்தபின், இனி கம்மாளர்களின் நிலை என்னவாயிருக்கும் என்று இனம் காண முடியாத ஒரு பயம் வருவதை தவிர்க்கமுடியாது. ஏனெனில் கி.ரா கதையை நடத்திச்சென்றவிதம் அவ்வாறு இருக்கிறது.

கோபல்ல கிராமம்

ஆசிரியர்: கி.ராஜநாராயணன்

பதிப்பகம்: அன்னம்

விலை : ரூ. 80

18 January 2010

தூயோன் - கோபிகிருஷ்ணன்

மனநிலைகளை ஈடுகட்டப் பொருளால் என்னமோ முடியப்போவதில்லை. சந்தோஷத்துக்கு ஐம்பது ரூபாயும், எரிச்சலுக்கு ஐம்பத்து ஐந்து ரூபாயும் என்று கணக்கு வைத்துக்கொண்டால் உணர்வுகளுக்கு மதிப்பே அற்றுப்போய்விடும் //

என் தன்மைக்கான காரணங்களைத் தேடி அலைவது கூடுதல் அநீதி. எதையும் நியாயப்படுத்திக்கொள்ள விழைவதே விஷயத்தில் அநியாயம் உறைந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். இயற்கையிலேயே நான் அயோக்கியனாக இருந்தால், அப்படியே இருந்துவிட்டுப்போகிறேனே.

இப்படி முதல்கதையான தூயோனில் எடுத்த வாசிப்பு ஓட்டம் விட்டுவிட்டு ஒரு நான்கு மணி நேரத்துக்குள் கடைசி கதையான எதிர் - உளவியலுக்கு கொண்டு வந்து நிறுத்தியது.

கதையை எங்கும் தேடாமல், வார்த்தைகளுக்கும் மெனக்கெடாமல் இயல்பாய் ஒரு நகைச்சுவையை ஓடவிட்டு தன் வாழ்வனுபவத்தையே பெரும்பாலும் சிறுகதைகளாக்கியிருக்கிறார்.

இரண்டாவது கதையான தெய்வீக அர்ப்பணம், எல்லாம் அவன் செயலாக இருப்பதாகக்கொள்ளப்படும் போது ஓர் உயிரிழப்பும் கூட வாழ்க்கைமுறையை மாற்றிவிடக்கூடிய வலிமையை இழந்துதான் விடுகிறது // என்பதாய் முடியும். படித்தபின் ஒரு பெருமூச்சை மட்டுமே விடமுடிந்தது.

வயிறு என்ற சிறுகதையில், யதார்த்தத்தை உண்மையிலேயே யாருமே கண்டதில்லை.தத்தம் ஆளுமைக்குத் தகுந்தாற்போல் யதார்த்தத்தின் சுய விளக்கங்களையே காண்கின்றனர். என்று சொல்லியிருப்பார்.

புயல் என்ற சிறுகதையில், புயல் மையம் கொண்ட நாளொன்றில் கணவன் வீட்டிற்கு தாமதமாக வருவான், உள் நுழைந்தவுடன் வேலைக்குச் சென்று வந்த மனைவி ஏன் இப்படி தினமும் லேட்டா வர்றீங்க என்று எரிந்து விழுவாள். இப்படி எரிந்து விழுவதற்கான காரணத்தை அவளிடம் கேட்டறிந்த போது அவள் அன்று முழுவதும் தன் வேலை செய்யுமிடத்தில், வேலை முடித்து குழந்தையை கிரச்சிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், வீட்டிற்கு வந்தபின் ஏற்கனவே அவ்வீட்டில் குடியிருந்துவிட்டுப்போன ஒரு ஆடவன், தெருவில் இருந்த சில காலிப்பயல்கள் என இவர்கள் அனைவரும் மூலமாக தனக்கு நேர்ந்து சிற்சில பாலியல் தொந்தரவுகளை சொல்லுவாள்.

மனைவி சொல்ல சொல்ல அனைத்தையும் கேட்ட கணவன் அவளை நோக்கி, சமூகம் இன்னிக்கி உன்கிட்ட அதோட விஸ்வரூபத்தைக்காட்டியிருக்கு. அவ்வளவுதான் தூங்கு. எல்லாம் சரியாப்போகும் என்பான். அதற்கு மனைவி அழுகையினூடே உலகத்தைத் தெரிஞ்சுக்கனும்னீங்க, புரிஞ்சிக்கிட்ட வரைக்கும் சகிக்கலை என்பாள்.

முடிவிலாத யோசனைகளூடே கணவன் கடைசியில் தன் நடத்தையையும் கொஞ்சம் யோசித்து, தான் எந்தப்பாவமும் செய்யாத புண்ணியாத்மா அல்ல, ஆனாலும் பெண்களிடத்து அசிங்கமாகவோ, விகாரமாகவோ நடந்து கொண்டவனுமல்லன், பெற்றவர்கள் பண்ணிய பாவம் பிள்ளைகளைச் சேரும் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன், ஆனாலும் கணவன் செய்த பாவம் மனைவி தலைமேல் விடியும் என்று எந்தப்பெரியாரும் சொன்னதாக கேள்வி இல்லையே என்பதாய் நினைத்து வெறுப்பின் உச்சத்தில் சாக்கடையில் உழலும் பன்றிகள் என்று சொல்லி தன் இயலாமையை தீர்த்துக்கொள்வான்.

உடைமை என்ற சிறுகதையில், வீட்டு உரிமையாள கிழவியின் அராஜகத்தை தட்டிக்கேட்க இயலாத ஒண்டுக்குடித்தனவாதியின் இயலாமைகளே பிரதிபலிப்பதாய் ஒரு இடத்தில் // சூழல் ஒவ்வாததுதான். ஆனால் செத்தா போய்விடமுடிகிறது ? // என்ற ஒரு ஒற்றை வாக்கியம் வரும். படிக்கும் போது நிறைய இடங்கள் புன்னகைக்க வைத்தன, அதில் பிரதான இடம் இது.

இதே கதையில் தன் குழந்தையைப் பற்றி சொல்லும் ஒரு இடத்தில் // தகப்பன் என்ற ஸ்நானம் வந்துவிட்டாலே என் “செய்” களை, என் “செய்யாதே”க்களை அவளுள் புகுத்துவேன். என் அளவுகோல்களை அவளுக்குக் கற்பிப்பேன், என் கொள்கைகளை அவளுக்குப் போதிப்பேன். வன்முறைதானே இவையெல்லாம் ? (இது தகப்பனுக்கு மட்டுமான வாசகமல்ல, இப்போதைய சூழலில் பெற்றோருக்கான வாசகம்)

இந்தக் கதையின் இறுதியில் கலீல் ஜிப்ரான் வரிகளை தான் நினைப்பதாகவும், ஆனால் தன் மனைவிக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமலிருப்பதாகவும் பின்வரும் வரிகளை நினைவூட்டுவார்.

...”உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவைகள் உங்கள் மூலமாக உலகில் ஜனிக்கின்றன. ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவைகள் உங்களுடனிருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவைகள் அல்ல...”

இப்படியாய் வழி நெடுக நிறைய எள்ளல்களையும், யோசிக்கத்தூண்டும் வரிகளை உட்புகுத்தி வைத்துக்கொண்டு சடங்கு, இரு உலகங்கள், விழிப்புணர்வு, அம்மன் விளையாட்டு,..... என சில கதைகள் செல்கின்றன.

இதுவும் சாத்தியம் தான் என்ற ஒரு சிறுகதை, மிக அழகாக நேர்த்தியாக மிக அழகான ஒரு பெண்ணுக்கும், ஒரு ஆடவனுக்கும் பணியிடத்து தோன்றி வளரும் நட்புணர்வைச் சொல்கிறது.

ஓர் உறவுக்குப் பெயர் சூட்டிப் பாதுகாப்பை தேடிக்கொள்வதும் வரைமுறை வகுப்பதும் எரிச்சலூட்டும் பயந்தாங்கொள்ளித்தனம். தோழமைக்கு ஒரு பழிப்பு; ஒரு கொச்சைப்படுத்துதல், என்னைப்பொறுத்த மட்டில் நிர்ப்பந்திக்கப்படாத அனைத்து உறவுகளும் புனிதமானவையே என்று தன் தோழியுடனான கடைசி சந்திப்பின் போது கதாபாத்திரம் சொல்வதாய் வரும்.

இந்தத் தொகுப்பில் இருக்கும் கடவுளின் கடந்த காலம் என்ற சிறுகதை, அழியாச்சுடர்கள் என்ற இந்த வலைப்பூவில் இதோ இங்கேயிருக்கிறது.

கடைசி கதையான எதிர்-உளவியல் என்ற சிறுகதையில் மனநோயாளி என்று ஆலோசனைக்காக வரும் ஒருவருக்கும், ஆலோசகரான ஒருவருக்குமான உரையாடலே கதை. சுவாரசியமான உரையாடலில் மிக சுவாரசியமானதாக தோன்றுவது //தங்களைத் தாங்களே விமரிசித்துக்கொள்ளும் பழக்கம் உங்களிடமுள்ளதா? அப்படியிருந்திருந்தால் என்னை நாட வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏற்பட்டிருக்காது என்றே தோன்றுகிறது.//

புத்தகத்தின் பெயர்: தூயோன் பதிப்பகம்: தமிழினி விலை: ரூ. 40/-

இயல்பாய், மென்மையாய் ஊடுருவிய சிறுகதைகளின் பாதிப்பு தாளாமல் கோபிகிருஷ்ணனின் எழுத்தின் பால் உள்ள உந்துதலால் கூகிளித்ததில், திரு.ஜ்யோவ்ராம் சுந்தரின் “மொழிவிளையாட்டு” வலைப்பூவில் அவரின் நேர்காணல் தொகுப்பு ஒன்றையும் முழுதுமாக வாசிக்க நேர்ந்தது. மிகச்செறிவான ஒரு எழுத்தாளுமையின் வாழ்வியலை நான்கு பகுதிகளாக (தட்டச்சு செய்து, கடந்த ஏப்ரல் மாதம் தன் வலைப்பூவில் இட்டது இன்றுதான் என் கண்ணில் பட்டது).

கோபிகிருஷ்ணனின் சிறுகதைகளை விடவும் மிகவும் வலி நிறைந்ததாய் இருந்தது அந்தப் பகிர்வு. (மேலும் அவரின் மற்ற படைப்புகளையும் தேடி படிக்கவேண்டும் என்று ஆவலைத்தூண்டியதும் அதே பதிவுகள் தாம்) அதனை பகிர்ந்தளித்த திரு. ஜ்யோவ்ராம் சுந்தருக்கும், அதனை அவருக்குப் பகிர்ந்த திரு. சிவராமனுக்கும் மிகுந்த நன்றிகள்.

30 October 2009

பாவனைகளும், வார்த்தையும் - 2

வார்த்தை

குண்டிக்கு நேரே கிழியாத ரெண்டு ட்ரவுசரும், எல்லாப் பொத்தான்களும் இருக்கும் ஒரு சட்டையையும் எடுத்து மடித்து, மடிப்பு கலையாமலிருக்க ட்ரங்கு பெட்டியின் அடியி......... இப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்தக் கதை. சோலையப்பன் என்ற எட்டாம்வகுப்பு சிறுவன் பள்ளி சுற்றுலாவுக்கு செல்ல ஆயத்தமாவதே கதை.

பள்ளியில் கன்னியாகுமரி, சுசீந்திரம் என இரண்டு நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். சோலையப்பனும் தன் பெயரை கொடுத்து, 10 ரூபாய் முன்பணமும் தந்துவிடுகிறான். ஆறுநாட்களாக பள்ளியிலும், வீட்டிலும் இதே பேச்சாகவும் ஏற்பாடாகவும் இருக்கிறது. ட்ரைவர் மாமா வீட்டிலிருந்து துணிகளும் இன்னபிறவும் எடுத்துச் செல்ல பையை வாங்கிவருகிறான். அவர்கள் வீட்டில் நல்ல ஏர் பேக் இருந்தாலும், கேட்டுப்பார்த்து அதைத் தராமல், ரொம்பவும் பழசாகிப்போன தூசி மண்டிய பேகையே தருகிறார்கள். கேட்டது கிடைக்காத ஏமாற்றத்தோடு வாங்கி வந்த பேகையே தேங்காயெண்ணெய் போட்டு துடைத்து வைக்கிறான். அவனுக்கு பாடம் சொல்லித்தரும் அண்ணனிடம் இருக்கும் கூலிங்கிளாஸை கேட்கிறான். அவரும் சோலையின் தொடர் நச்சரிப்பைத் தாள முடியாமல் நீ போற அன்னைக்கு காலைல வந்து வாங்கிக்கடா என்கிறார்.

கூட வரும் பையனோடு பவுடர், முகக்கண்ணாடி இத்யாதிகள் பகிர்ந்துகொள்ள ஏற்பாடு செய்தாயிற்று. பேப்பரில் பல்பொடியை கொட்டி மடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.இரண்டு நாள் கட்டுச்சோற்றுக்கு பேப்பரும், இலையை அவனின் அய்யா வாங்கிவருவதாக சொல்லிவிட்டார். கட்டுச்சோற்றை நினைத்தால் சோலைக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடுகிறது. அய்யாவின் துண்டை வாங்கி துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நின்றால், எழுந்தால், நடந்தால் என வகுப்பு சிறுவர்கள் அனைவருக்கும் சுற்றுலா ஞாபகந்தான். ஆசிரியரிடம் கன்னியாகுமரில என்ன சார் இருக்கும். அவரும் கடல்,விவேகானந்தர் பாறை, காந்திமண்டபம் இருக்கும் எனவும், காந்தி ஜெயந்தி அன்னிக்கு மட்டும் மண்டபத்து மேல் சூரிய ஒளி விழும் என்கிறார். சிறுவர்கள் அனைவரும், அது எப்படி சார்! அன்னிக்கு மட்டும் விழும் என கேட்க,

அது அப்படித்தாம்லே மூதி,, பாடத்தை கவனிங்க, மீதிய நாளைக்கி சொல்றேன் எனப் போய்விடுகிறார். சுற்றுலா செல்லும் நாளன்று இரவே கட்டுச்சோறும், உடைமைகள் சகிதம் பள்ளியில் வந்து தங்கிவிடவேண்டும். இரவு ஒரு மணிக்கு மேல் புறப்படும் சுற்றுலா பேருந்தில் காலை கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்ப்பதாக ஏற்பாடு. சுற்றுலா புறப்படுவதற்கான நாளும் வந்தது. காலையில் என்றுமில்லாத உற்சாகத்தையும், கனவையும் சுமந்து பள்ளிக்கு செல்கிறான் சோலை. கொஞ்ச நேரம் கழித்து, பேர் கொடுத்து முன் பணம் கட்டின பசங்களெல்லாம் மீதி காசை கொடுங்க. இல்லனா ராவுக்கு பள்ளிக்கு வரவேணாம் என்று நான்கைந்து பெயர்களை உரகக் சொல்ல,சோலையின் பெயரும் இருக்கிறது. மீதி பணம் வாங்கி வர சோலை வீடு நோக்கி ஓடுகிறான்.

வீடு பூட்டிக்கிடக்கிறது, கதவை ஒரு எத்தி எத்திவிட்டு ஓட, சோலையின் அம்மா, இன்னார் வீட்டு வயலில் களை எடுக்கப்போயிருப்பதாக சொல்லிகிறார்கள். ம்மா, யம்மா என்று கூப்பிடும்போதே அழுகை வந்துவிடுகிறது, அவளும் களை எடுப்பதை விட்டுவிட்டு என்ன ராசா, ஏன் இப்படி ஓடியாந்த, ஏன் அழுவுற என்கிறாள். பள்ளிக்கூடத்துல மீதி காசு கட்டனும்மா என சொல்ல, உங்க அய்யா, நாயக்கரய்யா கிட்ட சொல்லி வாங்கியாரன்னு போயிருக்காருப்பா, சாயங்காலத்துக்குள்ள வாங்கியாந்துடுவாரு, நீ பள்ளிக்கோடத்துக்குப் போ ராசா என, ப்போ, காசு இல்லாம நான் போ மாட்டேன், எனக்கு இப்ப காசு வாங்கிக்கொடு என அடம் பிடிக்க, அவளோ களை எடுத்து முடித்துவிட்டு, நாயக்கர் வீட்டுக்கு செல்கிறார்கள். நாயக்கரம்மாவோ, அவ்வளோ காசெல்லாம் எங்கிட்ட இல்ல, அய்யா வரட்டும், அவுரு உங்கூட்டுக்காரர கூட்டிக்கிட்டு மூட்டைய ஏத்திக்கிட்டு டவுனுக்கு போயிருக்காரு என்று சொல்லி, அழுது கொண்டே இருக்கும் சோலையைப் பார்த்து பரிதாபப்பட்டு, மோர் குடிக்கிறியா என்கிறாள். வேகமாக வேண்டாம் என்கிறான்.

ஏமாற்றமடைந்த சோலையின் அம்மாவும் யார் யாரிடமோ காசு கேட்டுப்பார்க்கிறாள். எல்லோரும் கைவிரித்துவிட, நேரம் கூடிக்கொண்டே போகிறது, சோலை அழுது, அழுது தொண்டை கட்டி, விடுகிறது. இதற்குள் பள்ளி விட்டு வந்த சிறுவர்கள், என்னடா சோல, நீ வல்லியா என இன்னும் அழுகை அதிகமாகி கண், மூஞ்செல்லாம் வீங்கி விடுகிறது. அவனைப் பார்த்து சோலையின் அம்மாவும் அழுகிறாள். அவ்வளவு பெரிய தொகைக்கு தானெங்கேப் போவது, நாம விசாகத்திருவிழாவுக்கு திருச்செந்தூர் போவோம்ம்பா என்றெல்லாம் சமாதானப்படுத்துகிறாள். எதற்கும் மசியாமல், இரவு சாப்பாடு கூட சாப்பிடாமல், அழுது கொண்டே தூங்கிப்போகிறான் சோலை.

ஏற்கனவே பத்து ரூபா முன் பணம் தந்திருக்கு, இப்ப பத்து ரூபா வேணா வாங்கிக்கோ, மீதிய ரெண்டு நா கழிச்சு பார்க்கலாம் என்று நாயக்கரய்யா கை விரித்து விட, இன்னும் நாலைந்து பேரிடம் கேட்டுப்பார்த்து அங்கேயும் ஒன்றும் பெயராததில், பசி வாட்டி எடுத்தாலும் அன்றைய இரவு நாயக்கர் தெரு மடத்திலேயே தங்கிவிட்டார் சோலையின் அய்யா.

ஆறேழு நாளா, ஊருக்கு போற ஆசைல இருந்த புள்ள அழுதுகிட்டு இருந்தத பாத்தவங்க வந்து சொல்ல அந்த பரிதாப முகத்தைப் தன்னால் பார்க்கவும், அவனுக்கு சமாதானம் சொல்ல தன்னிடம் வார்த்தையேதும் இல்லாமல் போக, பசி பொருட்படுத்தாது அங்கேயே துண்டை விரித்து படுத்துவிட்டார் சோலையின் அய்யா.

கதை முழுவதும் சுற்றுலா செல்வதற்கு முன்னதான ஆயத்த துள்ளலும், ஏமாற்றத்தின் வேதனையும் சோலையின் மூலமாக காட்சிப்படுத்தப்படுகிறது.

வறுமைக்கு தின்னக் கொடுத்த வாழ்க்கையில் சோத்துக்கு இல்லாதது ஒரு பக்கமிருக்க, இப்படி ஆசைகளெல்லாம் நிராசையாகப் போன இன்னொரு வேதனையான கட்டம் தானே இதுவும்.. இதனை நம்மில் பலர் கடந்து வந்திருப்போமல்லவா (சிலராக இருந்தால் மிகவும் சந்தோஷம்)

இந்தக் கதை ரொம்ப நேரம் தூக்கத்தை கெடுத்தது. பதினோராவது படிக்கும் போது பெங்களூர், மைசூர் போக ஏற்பாடு செய்து தலைக்கு 500 ரூபாயென்று சொல்ல, ஒரு மாச வீட்டு வாடகைய கொண்டு போய் அங்க எதுக்கு தண்டமழுவனும், நீ வீட்டுலயே இரு என்று சொல்லப்பட, உடனிருந்த தோழிகளெல்லாம் நான் வராத வருத்தத்தை சுமந்தபடியே பயணம் போய்வந்தார்கள். பின்னொரு நாள் ஆர்.ஆர்.பி தேர்வுக்காக பெங்களூருக்கு ட்ரெயினில் செல்கையில், அந்த ஏமாற்றத்தை சுமந்துகொண்டு சென்றேன்.

இப்படி நிராசையான ஆசைகளையெல்லாம் நினைவுபடுத்திய கதை, முழுத்தொகுதியும் படித்து முடித்து, முடிந்தால் மீதத்தையும் பகிர்கிறேன்.

13 April 2009

உயிர்த்தண்ணீர்

உயிர்த்தண்ணீர், ஆதண்டார் கோயில் குதிரை, வெள்ளெருக்கு - இவை மூன்றும் கண்மணி குணசேகரனின் சிறுகதைத் தொகுப்புகள். கண்மணி குணசேகரனின் “அஞ்சலை” நாவலை படிக்கவேண்டும், அப்போது தமிழினி பதிப்பகத்தில் கிடைக்கவில்லை. இப்போது கிடைக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

சில வலைப்பூக்களின் / வலைப்பூவினரின் அறிமுகத்தால் தான் இவரைப் பற்றி தெரியவந்தது, இல்லையெனில் வழக்கம் போல ஏதாவது காமா, சோமா என்று வாங்கி வைத்திருப்பேன். நோட் பண்ணுங்க வாங்கி வைத்திருப்பேன், அவ்ளோதான்.

முன்னும், பின்னும் எந்தவொரு நவீனத்துவமும் இல்லாமல், யதார்த்தமாய் நெஞ்சை அள்ளி செல்கிறது இவரின் எழுத்துக்கள். இவரின் கதை மாந்தர்கள் அனைவரும் கிராமத்தின் கடைகோடி மாந்தர்களே.
விருத்தாசலமும், அதையொட்டிய கிராமங்களும், முந்திரிக்காடுகளும் இவையே கதைக்களங்கள். படிப்பவருக்கு புரிந்து கொள்ளுதலில் எந்தவொரு சிரமமும் கொடுக்காத எழுத்து நடை. பேச்சு நடையிலேயே இவரின் எழுத்து நடை இருப்பதுதான் சிறப்பு.

இவரின் கதைகளின் வட்டார எழுத்து நடையை படிக்கும் போது, பல சமயங்களில் எங்கம்மா பயன்படுத்தும் சில, பல வார்த்தை வழக்குகள் ஞாபகம் வந்து போனது.

இவரின் கதைகளை படிக்கும் போது, அப்படியே கிராமத்து போய் வந்த அல்லது போகத்தூண்டும் உணர்வு எழாமல் இருக்காது. இது என் அனுபவம், அவரைப் படித்தவர்கள் சொல்லலாம்.

இவரின் சிறுகதையில் எனக்கு நிறைய கதைகள் பிடித்திருந்த போதும், சருவு என்ற கதைதான் அடிக்கடி நினைவுக்கு வரும். கலியன் என்றொரு தாத்தா, வெற்றிலை போட்டே பழக்கப்பட்டவர். ஒரு நாள், ஒரு வாய் வெற்றிலைக்கு அவர் படும் பாடே, அந்தச் சிறுகதை, படித்து முடித்த போது, எனக்கு கலியன் தாத்தாவுக்கு உடனே வெற்றிலை வாங்கி தரனும் என்று தோன்றியது நிஜம்.
என் அம்மா, வெற்றிலை போடுவதை அடிக்கடி சொல்லி திட்டுவேன். அதுவும் கூடவே ஞாபகத்துக்கு வந்தது.

அதே போல், வனாந்திரம் என்னும் மற்றொரு சிறுகதை, படித்தவுடன் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. அன்பு கணவனை இழந்த மனைவி, மகன். முந்திரிக்கொட்டைகளை பொறுக்கி அதை விற்று வரும் ஜீவனம். மகன் என்ற கதாபாத்திரத்தின் பெயர் ராசீவ் காந்தி. எங்க ராசீவ் காந்தி வரலியாடா பள்ளிக்கோடத்துல இருந்து, என்று சக பள்ளிப்பிள்ளைகளை கேட்கும் போது, சிரிப்பு வருகிறது. ஆனால் முடிவு அதை மறக்கச் செய்து விடுகிறது. தாயும், பள்ளி விட்டு வந்த மகனும் முந்திரிக்கொட்டை சேகரிக்க செல்கிறார்கள். ஆனால் அன்று மகன் சொல்கிறான். இன்று சேகரிக்கும் முந்திரிகளை நீ விற்கக் கூடாது, எனக்கு உப்பு, மிளகாய்த்தூள் போட்டு பொரியல் செய்து தரவேண்டுமென்கிறான். சரி என்ற ஒப்புதலோடு சென்று, நிறைய சேகரித்து வருகிறார்கள். தாய்க்கோ மனது அடித்து கொள்கிறது, இதை விற்றால் இவ்வளவு காசு கிடைக்குமே என்று, மெதுவாய் மகனிடம் சொல்கிறாள், அவன் எரிச்சலோடு முகம் காட்டுகிறான், இதற்குத்தான் நான் வரமாட்டேன் என்றேன் என்று. சரி என்று மகன் விருப்பத்திற்கிணங்க அன்று கிடைத்த அத்தனை முந்திரிகளையும் பொரியல் செய்து, ரசம் வைத்து அவனை சாப்பிட கூப்பிடுகிறாள். அவனும் சாப்பிட்டு விட்டு, போதுமென சொல்லி பாதி முந்திரிப்பருப்பை அப்படியே வைத்துவிடுகிறான். பிறகு தாயை சாப்பிட சொல்கிறான். தாயோ ரசமும், ரசத்திலிருக்கும் மிளகாயை கடித்துக்கொண்டு சாப்பிடுகிறாள். இதைக்கண்ட மகன், ஏம்மா, அவ்ளோ இருக்கே, ரசத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடேன் என்கிறான். அவள் வேகமாக மறுக்கிறாள். மகனோ அழும் குரலில், உனக்காகத்தாம்மா இவ்ளோ கொட்டையும் விக்க சொல்லாம, வறுக்க சொன்னேன், இத்தனை நாள் எடுத்த கொட்டையெல்லாம் எனக்கு வெறுமே சாப்பிட கொடுப்ப, மீதிய வித்துடுவ. ஒரு நா கூட நீ ஒரு முந்திரிக்கொட்டய எடுத்து வாயில போட்டதில்ல, அதுக்குத்தாம்மா செய்ய சொன்னேன், சாப்பிடும்மா என்கிறான். அதற்கு அவளோ, இல்லப்பா, நானெல்லாம் அதுக்கு ஆசைப்படக்கூடாது, அப்பா போனவுடனயே அதயெல்லாம் விட்டுட்டேன், அப்படி அந்த சுவைக்கு ஆசைப்பட்டு ஒன்ன எடுத்து வாயில போடுவேன், அப்புறம் நாளைக்கும் அதயே வாய் கேட்கும். அப்படியே பழகும். நாம்ப இருக்குற நெலமையில நாக்கு ருசிக்கு ஆசைப்பட்டா ஒத்துவராதுப்பா, பச்சத்தண்ணிய குடிச்சா கூட, வவுறு ரொம்புதான்னு பாத்துக்கனும்பா என்கிறாள்.

இந்தக் கதையை படித்து முடித்தவுடன் ரொம்ப நேரம் எதுவுமே தோன்றாமல் அப்படியே வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்தக் கதையின் தாக்கமே இந்தப் பதிவெழுதவும் தூண்டியது.

மேற்சொன்னது ஒரு பானை சோற்றின் பதமே. கண்மணி குணசேகரனின் எழுத்துக்கள் மேலும் பரிணமிக்கட்டும். மேலும் அவரின் புது நாவல்கள் / சிறுகதைத் தொகுப்புகள் இருந்தால் பின்னூட்டத்தில் பகிரவும்.