29 January 2010

அமித்து அப்டேட்ஸ்

அடி என்ச் செல்லம், அடிப்பட்டு, அடி ஏன்த் தங்கோம்

இதெல்லாம் அமித்துவுக்கு என் மீது அதிக ஆசையாகிவிட்டாலோ, அவள் விரும்பிய மாதிரி நான் நடந்து கொண்டாலோ என்னைப் பார்த்து சொல்வது. சமயத்தில் இந்த செல்லக்கொஞ்சலுக்குள் அவளின் அப்பா, ஆயா அனைவருமே அடக்கம்.

....

அமித்துவின் சேட்டை தாங்கமுடியாமல் கோபமாக பேசிவிட்டு, கிள்ளிடுவேன் என்றதற்கு

ஏன் என்கிட்ட சண்ட போட்ற எச்சோ

............

வர்ஷா, உள்ள இருந்து அந்த க்ளிப் எடுத்துட்டு வாம்மா.

இர்ம்மா, பாப்பாக்கு (அவளின் பொம்மைக்கு) சாப்பாடு ஊட்றன் இல்ல, அவ்ளே துப்பூறா

..........

நான் சம்மேல் (சமையல்) செய்றேம்மா. இரண்டு ஸ்பூன், தட்டு, கிண்ணங்கள் சகிதம் ஹாலில் உட்கார்ந்துக்கொள்ளவேண்டியது.

ஒரு தட்டில் ஸ்பூன் வைத்து, இந்தா எச்சோ, சாப்புடு.

என்னாதும்மா இது

ரச்சம் புவா, ச்சூப்பரா இர்க்கும், ஆப்டேன்.

........

ஒரு விடுமுறை நாளில் அமித்து அப்பா ஆபிஸ் கிளம்ப நேரிட, தானும் உடன் வருவதாக அழுகை.

லேட்டாயிடுச்சும்மா, அப்பா சீக்கிரம் வந்துடுவேம்மா, டாட்டா சொல்லு

அப்பா நானும் வர்ரேன் ப்பா (அழுது கொண்டே)

வர்ஷினி குட் கேர்ள் இல்ல, சொன்னா கேட்பாங்களே, அப்பாக்கு பை சொல்லு.

இல்ல, நானு பேடு கேளு (பேர்ட் கேள்), நான்னும் வர்ருவேன் ஒங்கூட

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

............

இந்தப் பூ பார்ரேன், ஆய்யா மாதிரி இர்க்கு

ஆயா மாதிரி இருக்கா?

ஆம்மாம், குண்டா இர்க்கு (அவளின் ஆயாவைப் பார்த்து சிரித்துக்கொண்டே)

............

ஒரு சின்ன சொப்பு தட்டை எடுத்துக்கொண்டு என்னிடம் நீட்டி,

இந்தாங்க, கேக்கு, எங்க பாப்பாக்கு ஆப்பி பத்தடே டூ யூ, எத்துக்கோங்க.

சரிங்க, எடுப்பதைப் போல பாவனை செய்கிறேன் நான்.

இந்தாங்க, வர்ச்சினிக்கு, ஆங்க அம்மாக்கு, அப்பாக்கு.

சரிங்க, மீண்டும் பாவனை.

பை, நேத்திக்கு வர்ரேங்க

.........

டிக்காரி டிவி வைய்யி (டிஸ்கவரி சேனல்)

ஜூப்புராவ சிங்கம் கடிக்க வேண்ணா சொல்லும்மா, பாவோம் இல்ல, கடிக்க வேண்ணா சொல்லு

...

என்னாப்பா அது

அதுவா ஒரு ஆளை முதலை அடிச்சுடுச்சும்மா

அச்சுச்ச்சோஓ, இப்ப ன்னா பண்ரதுப்பா, அம்ப போய்யி கொம்ப எத்து அடிக்கலாமா கோக்கோடைல?

...

ஒட்டகச்சிவிங்கிக்கு மேடம் வைத்திருக்கும் பெயர் ஒட்டகவஞ்சி !!!!!

...

வர்ஷினி, இங்க வாம்மா

இர்ரு பாப்பா பக்கிறேன்ல, வரேய்றன்ல (வரையறேன்), கூப்புர்ர

ம்மா எங்க க்கூல்ல இன்னிக்கு டெஸ்ட்டு

ஓம் வொர்க்குல்லாம் முச்சிட்டேனே

எங்க மிச்சு என்ன இபி புச்சு முத்தா குத்தாங்ளே

ஒருநாள் விடிகாலை அவசர அவசரமாய் எழுப்பி, எச்சோ, நான் இன்னிக்கு க்கூலுக்கு போமாட்டேன், எங்க க்கூலு இன்னிக்கு லீவ்வு. நா போம்மாட்டேன் !!

கார்த்தி, அது எம் புக்கு, அத எக்காத, அப்பேர்ரம் எங்க மிச்சு அப்பாய்ங்க !!!

(இவ்வளவு கூத்துக்கும் மேடம் ஸ்கூல் போகவில்லை என்பதுதான் ஹைலைட்டே. அக்கம் பக்கத்து குழந்தைகள் ஸ்கூல் போவதை வைத்தும், அவர்கள் பேசுவதை வைத்துமே மேடம் பில்டப் ஸ்டார்ட் ஆகிவிட்டது)

....

சாண்டாக்ளாஸ் மாஸ்க்கை அமித்துவின் தாத்தா போட்டுக்கொள்ள,

கழ்ட்டூ, இதெல்லாம் பச்சங்க தான் போடுவாங்க, கழ்ட்டு தாத்தா

........

ஏன் கதுவ ச்சாத்துற, ஆயா வர்ருவாங்கல்ல, கதுவ தெற.

அவளின் கால் கொலுசை கழட்டி நீட்டாக வைத்துவிட்டு பார்ரூ பாம்பு மார்ரியே இர்க்கு. இபி கொல்ச கழ்ட்னா ஆயா அப்பாய்ங்க.

........

மாரல் ஸ்டோரி புக்கில் படத்தோடு இருக்கும் சீச்சி இந்தப் பழம் புளிக்கும் நரிக்கதையை எடுத்துக்கொண்டு

த்தோ, ஒரு ஊல்ல ஒரு நர்ரி இந்துச்சா, இபியே வந்துச்சா, அப்பேர்ரம் ஒரு எலி வந்துச்சா, அப்ப ஒர்ரு சிங்கம் வந்துச்சா, மாட்டிக்கிச்சா, ம்ம்ம்ம், அப்பேர்ரம் அபியே எட்டி எட்டி பாத்துச்சாம், வட எத்துன்னு போச்சாம். அப்போ அப்போ ஒர்ரு ....தாட்சை (திராட்சை) இந்துச்சா....

டேய், கதய மாத்தி மாத்தி சொல்லி காமெடி பண்றடா - இது சஞ்சு

ஏய், பாப்பா கத சொல்றன்ல, ஆம்பரின்னு சொல்லூற. பாரூ எச்சோ, அக்காவ, பேச்சுறா, ஏய் பேச்சாத.

........

கார்த்தி, சஞ்சு, அமித்து மூவரும் விளையாடி முடித்தபின் கார்த்தி (எதிர் வீட்டுச் சிறுவன்) தூக்கம் வருது பாப்பா, நான் போயி சாப்ட்டு தூங்கப்போறேன் பை. உடன் சஞ்சுவும் பை சொல்லிவிட்டு கிளம்பிவிட,

என் பெண்டுலாம் போய்ட்டாங்க, நானும் ப்போர்ரேன் எச்சோ

ஃபெண்டா, யார் அது?

கார்த்தி, சஞ்சூ ஆங்கல்லாம் என் பெண்டு, நாம் போய்யி விளாடப்போறேன் ஆங்க வீட்டுல.

....

இப்பல்லாம் நான் கேள்வி கேட்கறதோட சரி, மேடம்கிட்ட இருந்து வர்ர ரிப்ளையை பார்த்துவிட்டு மேற்கொண்டு எதுவும் கேட்கமுடியாமல் அப்படியே ங்ஙே’வாகிவிடுகிறேன்.

28 January 2010

மாய வித்தைக்காரி

பத்தாம் வகுப்பு பாதியில் அவள் பூத்துவிட்டாள் என்ற செய்தி வந்தது. தோழி என்றாலும் போய் பார்ப்பதற்கு ஒருவகையான நாணம் குடிகொண்டது. சரி, எப்படியும் வருவாள் என்று பார்க்காமல் விட்டதில் பத்து நாள் கழித்து பள்ளிக்கு வந்தாள். மிக அழகாக மாறியிருந்தாள். எப்போதும் போடும் மடித்துக்கட்டிய இரட்டைப்பின்னல்தான் என்றாலும், இப்போது ஸ்லைடு எடுத்து குத்தி தூக்கி வாரி என்று ஒரு மாதிரியாய் முகமாற்றமும் மலர்ச்சியுமாய் இருந்தது. நடத்தையில் கூட கொஞ்சம் பெரிய பெண் போல மாறியிருந்தாள். அவளோடு தோற்றத்தில் குள்ளமாகவும் ஒல்லியாகவும் இருந்த என்னை சிறுமி போல பாவித்தாள். சிரிப்பு வந்தது. அதுவரை உற்ற தோழியாய் நான் இருந்தாலும் அவளொத்த பெண்களோடு பேசி சிரித்தாள். மதிய உணவு இடைவேளையின் போது சினிமாக்கள் பற்றியும், கதாநாயகர்கள் பற்றியும் அதிகம் பேசினார்கள், அளவில்லாமல் சிரித்தார்கள். காதல் பாடல் வரிகளை அழகாய் மனனம் செய்து சன்னமாய் ராகமிட்டு பாடினார்கள்.

மழைத்துளி என்ன தவம் தான் செய்ததோ, மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே, மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ, நினைக்கையில் உள்ளூரக் கள்ளூறுதே என்ற பாடல் வரிகளை கிறங்கிப்போய் அடிக்கடி முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள். கண்டிப்பாக பரீட்சைக்கு வரும், அப்படி வந்தால் குடுவையை வரைந்து, சமன்பாட்டை எழுதினால் ஐந்து மார்க் சர்வ நிச்சயம் என்று நம்பிய கொஸ்டீனை மறுநாள் டெஸ்ட்டாக சயின்ஸ் டீச்சர் அறிவித்தால் டீச்சருக்கு தலைவலி வரவேண்டும் இல்லை அவர்கள் வீட்டிலிருந்து போன் வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். மாறாய் ஆசிரியை வந்து அமர்ந்து கொண்டால் இன்று டெஸ்ட் வேண்டாம் என்று வேண்டிக்கொண்டதில் இவளும் ஒருத்தியாகிப்போனாள். மாத இடைவெளிகளில் தோன்றிய இந்த மாற்றம் அதுவரை அருகிலிருந்து பார்த்த என்னை அதிரச்செய்தது.

அவசியம் கருதி பள்ளியில் ஏதாவது சயின்ஸ் எக்ஸிபிஸனுக்கோ, ஆர்ட் கேலரிக்கோ அழைத்துச் செல்ல நேர்ந்தால், பெரும்பாலும் அக்கா மாதிரி தோற்றம் கொண்டிருக்கும் அதே வகுப்பு பெண்களோடே அவள் நடந்து போக ஆரம்பித்தாள். சாலையில் நடக்கும் போதோ, இல்லை எக்ஸிபிஸனிலோ இளம் வயது ஆண்களை பார்க்க நேர்ந்தால் அதிகமாய் வெட்கப்பட்டார்கள். தன்னுள் குழுமி சிரிப்பொலி எழுப்பினார்கள். ஸ்ஸ்ஸ், எங்க இருக்கோம்னு நினைச்சிக்கோங்க, இதொன்னும் உங்க வீடில்ல என்று டீச்சர்கள் பக்கமிருந்து எச்சரிக்கை வரும்போது தலை குனிந்து வருந்தும் பாவனை செய்தார்கள் / செய்தாள். சிறுமிகள் போல் தோற்றமிருப்பவர்களை அந்த குழு ஏளனமாய் பார்த்துச் சிரித்தது.

பத்தாம் வகுப்பு முடிந்து பதினோராம் வகுப்பு தொடங்கியபோது கடந்த வகுப்பில் படித்தவர் பாதிபேர் வெவ்வேறு பள்ளிகளுக்கு போக, வீட்டருகில் பள்ளியிருந்தவர்களில் பாதிபேர் எடுத்த மார்க்குக்கு இந்த ஸ்கூலில் இரண்டாவது க்ரூப் கூடிவருவதே பெரிய விஷயம் என்பதாலும், பி செக்‌ஷன், இங்கிலீஷ் குரூப் என்று ஜம்பஸ்தாக சொல்லிக்கொள்ளலாம் என்பதாலும் அவ்வகுப்பில் பயின்ற ஏனையோர் ஒன்று கூடி சயின்ஸ் க்ரூப்பையே தேர்ந்தெடுத்தார்கள். பத்தை தொடர்ந்து பதினொன்றிலும் அக்கா, சிறுமி வேறுபாடுகள் தொடர்ந்தது.

பதினோராம் வகுப்பின் தொடக்கத்திலேயே அவள் தன் வீட்டு விசேஷத்துக்காக எண்ணூரிலிருக்கும் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு செல்வதாக வெள்ளிக்கிழமையே வகுப்பு டீச்சரிடம் விடுப்பு சொல்லிவிட்டாள். போனவள் திங்கள் போய், செவ்வாய் தொடர, புதன்கிழமை தான் வகுப்புக்கு வந்தாள். ஆளே மாறிப்போயிருந்தாள். ஒரே கற்பனை சஞ்சாரம்தான். தீவிர விசாரிப்பிற்குப் பிறகு பெயர் முருகன் என்ற பெயர் வெளியே வந்தது. முதல் நாள் பார்த்தார்களாம். இரண்டாவது நாள் இவளைப் பார்த்தவுடனே பூஜைக்கு வந்த மலரே வா பாடல் அங்கிருந்து பாடப்பட்டதாம். போன விசேஷத்தை முடித்துக்கொண்டு வரும்போது அங்கிருந்து காதலை கையோடு எடுத்து வந்திருந்தாள்.

எப்பொழுதும் தலை கவிழ்ந்து கொண்டோ, இல்லை ஆசிரியர் வகுப்பெடுத்துக்கொண்டிருக்கும் போது கரும்பலகையைப் பார்ப்பது போல் கற்பனையில் சஞ்சாரித்துக்கொண்டோ, இல்லை கீழே குனிந்து கொண்டு நோட்டில் சில “முக்கியமான” இனிஷியல்களை கிறுக்கிக்கொண்டே அதுநாள் வரை இருந்த வந்த சுபா, சுனிதா, துர்கா, கோதை உமா லிஸ்ட்டில் இவளும் சேர்ந்துகொண்டாள். அவர்களோடு சேர்ந்து எடுத்த கிறுக்கல் பயிற்சியில்
இவளுக்கும் நன்றாக ஹார்ட்டின் போடவந்தது. ஃப்ளேம்ஸ் போட்டுப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டாள். கைரேகைகளை இணைத்துப்பார்த்து காதல் கல்யாணம் கைகூடுமா என்று இணையாத கோடுகளை இணைத்துப்பார்த்தார்கள். மீறி அரேஞ்ச்டு மேரேஜ் என்று வந்தாள் ஆங்க், இதெல்லாம் சும்மா என்று கையை உதறிவிட்டுப்போனார்கள்.

வகுப்பின் ஒரு பக்க ஜன்னல் சாலை பார்த்து இருப்பது பெருத்த வசதியாய் போனது. போதாக்குறைக்கு துர்காவின் “ஆள்” என்று சொல்லிக்கொண்ட குள்ளன் ஒருவன் மதிய உணவு இடைவேளையின் போது அந்த சாலையோர ஜன்னல் பக்கமாய் தரிசனம் தர ஆரம்பித்ததும், இங்கேயிருந்து அங்கே பார்த்துவிட்டு, தத்தம் ஆட்களுக்கும் இது போல வரவில்லையே என்பதில் மீதியிருப்பவர்களுக்கு மிகுந்த மனவருத்தம்.
அது கூப்ட்டா வராதுடி, இவன மாறி என்ன வேலையத்தவனா?, எஞ்சினியரிங்க் காலேஜ்ல படிக்கிறாங்கல்ல என்றெல்லாம் ஆளாளுக்கு தன் ஆள் கதை சொல்லிக்கொண்டார்கள்.

ச்சே, எப்பப் பார்த்தாலும் இதுங்க தொல்லை தாங்க முடியலடா என்று சிறுமி தோற்றங்கள் முனக, ஆமா, நீங்கல்லாம் ரொம்ப நல்லவங்க, இந்த வருஷம் ஆன்வல் டே ல உங்களுக்கு பெஸ்ட் ஸ்டூடண்ட் அவார்டு தருவாங்க வாங்கிக்கோங்க என்று அவர்களும் மாறி, மாறி பொருமிக்கொண்டார்கள். பொருமல் சத்தக்காரர்களை விட முனகல் சத்தத்தில் ஆட்கள் பெரும்பான்மை அதிகமிருந்தமையால் யாரோ யாரிடமோ வத்தி வைக்க சாலையோர ஜன்னல் பக்கம் பள்ளி நிர்வாகம் சீல் வைத்துவிட்டது.

பள்ளி விடுமுறைகளும், வார சனிக்கிழமைகளும் ஸ்பெஷல் க்ளாசாக உருவெடுத்து வெளியே போக வழிவகை செய்துதந்தது போலும். போய்விட்டு வந்து கதையோ கதை அளந்தார்கள். இது அவுங்க வாங்கித்தந்தது, இந்தக் கார்டு பாத்தியா, ஏ, ஹார்ட்டின்ல க்ளிப் பாரேன், இந்த சேட்டர்டே ஸ்கூல் இருந்தா ஒரு சுடிதார் போட்டுட்டு வரேன் பார் என்றெல்லாம் மற்றவர்கள் கிளப்பிவிட்டதில் எண்ணூர் விசேஷத்துக்கு போய்விட்டு வந்தவளுக்கு
எப்படியிருந்தது என்று தெரியவில்லை. மிகுந்த மனச்சோர்வாக இருப்பதாய் காட்டிக்கொண்டாள். இவள் சோகத்தைப் பார்த்ததும், மீதியிருப்பவர்கள் கரிசனமாய் விசாரிக்க, பார்த்து ரொம்பநாளாயிற்று என்று சொன்னதில் நிறைய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ஏதாச்சும் போன் நெம்பர் இருக்குமா, இல்லை வீட்டு முகவரி, கடிதம், இல்லையென்றால் தெரிந்தவர்கள் மூலமாக தூது விடலாமா என்றெல்லாம் கிளப்பிவிட்டதில் அவளுக்கு ஏக சந்தோஷம். இந்த வாரம் கட்டாயம் பார்த்துடுவப் பாரேன் என்று கிளி ஜோசியம் சொல்வதைப்போல சொல்லி வைத்தார்கள். கொஞ்சம் உற்சாகம் ஆனமாதிரி தெரிந்தாள்.

திடீரென ஒருநாள் மிகவும் பளிச்சென வகுப்புக்கு வந்தாள். உற்சாகம் மிகுந்திருந்தது. ஸ்கூல் விட்டு வீட்டுக்கு போயிருக்கும் போது அவர் வீட்டிலிருந்தாராம். சும்மா இந்தப்பக்கம் வந்ததில், எல்லோரையும் ”பார்த்து”விட்டு போகலாமென்று தலைகாட்டினாராம். அம்மா அந்தப்பக்கம், இந்தப்பக்கம் போனதில் இவளுக்கு தனியான கவனிப்பாம். முக்கியமாய் அவருக்கும் பிரிவு வேதனையிருந்ததாம். தாடி வளர்த்திருந்தாராம்!!! முன்பை விட மெலிந்திருந்தாராம். அதுவாம், இதுவாம். டாஆஆஆஅய், பக்கத்தில் உட்கார்ந்திருந்த எங்களுக்கு காது புளித்துப்போனது.

ஒரு மாதம் போயிருக்கும், தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் சோக கீதம். மீண்டும் ஜோசியங்கள், ஆறுதல்கள். பொருமல் செட்டில் ஒருவரை மாற்றி ஒருவருக்கு ஆறுதல் சொன்னதில் ஒருவருடம் ஓடிப்போய் கூண்டோடு கைலாசமாய் பனிரெண்டாம் வகுப்புக்கு படையெடுத்தார்கள். வகுப்பில் பலருக்கு போன வருஷம் இந்த மாதிரி இருக்காதீங்க பிள்ளைகளா, ஏதோ பாஸ் பண்ணனும்னு உங்கள பாஸ் பண்ணிவிட்டோம் என்று எச்சரிக்கை வழங்கப்பட்டது. கால் பரீட்சை வந்தது. எடுத்திருந்த மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு பாதிப்பேருடைய பெற்றோர்களையும் வரவழைத்து பேசியதில்
அடுத்த ஓரிரு மாதத்தில் முன்னேற்றம் அதிகமாகியிருந்தது. மதியத்துக்கு மேல் வீசிங்கெல்லாம் வருவதில்லை. எல்லா ஸ்பெஷல் க்ளாஸும் ஒழுங்காய் அட்டெண்டஸ் வந்தது. ஒரிஜினல் நல்ல பிள்ளைகளுக்கே இவர்களை எ.கா சொல்வது மாதிரி நிலைமை தலைகீழாயிற்று. மார்க்கில் இலக்கங்கள் ஏறியதே ஒழிய இறங்கவேயில்லை. எந்த எஞ்சினியரிங் காலேஜ் நல்லா இருக்கும். எவ்வளவு கட் ஆஃப் என்றெல்லாம் திடீர் நல்ல பிள்ளைகள் பேசுவதைப்பார்த்து ஆக்சுவல் நல்ல பிள்ளைகளுக்கு கொஞ்சமல்ல நிறையவே குமைச்சல்.


திடீர் நல்ல பிள்ளைகளில் இருந்தவர்களில், தனது பழைய பள்ளியிலேயே காதல் வயப்பட்டு பதினோராம் வகுப்போடு இந்தப் பள்ளிக்கு மாறியவர்களை விடவும் எங்களுக்கு ஆச்சர்யம், எங்கள் பள்ளியிலேயே எங்களோடவே ஆறாம் வகுப்பிலிருந்து உடன் வந்த எண்ணூர் விசேஷக்காரியின் மாற்றம் தான் அதிசயத்திலும் அதிசயமாயிருந்தது. படிப்பும் கூடவே ஷார்ட்டண்ட், டைப்ரைட்டிங்க் என ஓவர்டைமில் படிக்கத்தொடங்கினாள்.

மற்றவர்களின் ஆள்”கள் எல்லாம் தாடி வளர்த்து கொண்டதாய் தெரிய வர, இவளின் ஆள் மட்டும் இவளுக்கு அண்ணன் முறையாகிப்போனாள். வேறொன்றுமில்லை. சொந்தம் வழி வந்த சொந்தத்தில் உறவுமுறையில் பூஜைக்கு வந்த மலரை பாடியவன் மாமன் இல்லையாம், அண்ணனாம். அடுத்ததாய் ஒரு வீட்டு விசேஷத்தில் எல்லோரும் கூட அப்போதுதான் அது தெரியவந்ததாம். !!!!!!!

எண்ணூர் விசேஷக்காரிக்கு எதிலும் அவசரம்தான். அவசரமாய் காதல் செய்தாள், அதை விடவும் அவசரமாய் அதையும் இதையும் படித்தாள், படிப்புக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் மார்க்கெட்டிங்க் துறையில் இறங்கினாள். நட்பு பெருகியது. பொருந்தாக் காதலொன்று கைகூடி வந்து கல்யாணத்தையும் அவசரமாய் செய்து கொண்டாள். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள், திரும்பிய பக்கமெல்லாம் பணம் பண்ணும் வித்தையைக் கற்றுக்கொண்டாள். நொடிக்கு நொடி மாறும் வாழ்வில் அவள் செய்த ஜாலங்கள் நிறைய.

மின்னல் வேகத்தில் தன் வாழ்நாளில் முன்னேற்றங்களை அமைத்துக்கொண்டதெல்லாம் சென்ற வருடம் இதே மாதம் முப்பத்தொன்றோடு எங்களை விட்டு போகத்தானா மாய வித்தைக்காரியே?

ஆழ்ந்த அஞ்சலிகளோடும், மறவா நினைவுகளோடும்....

22 January 2010

வலி’யின் ஆசை

அனேகமாய் எல்லோருக்கும் தன் பெயர் என்றில்லாது இன்னொரு பெயரும் உடன் வந்து கொண்டேயிருக்கிறது வாழ்வு முழுதும். அஜ்ஜுமா, புஜ்ஜுமா என்று பால்யத்திலோ, உடல் அமைப்பை வைத்து ஒல்லி, குண்டு, மேக்குப்பல்லு, டப்சா, க்ரைண்டர், அரைட்ரவுசர் (இன்னும் அவரவர் உடல் வசதிக்கேற்ப...) என பதின்மத்தில் ஆரம்பித்து பருவம் வந்தபிறகும் நீண்டு, நிலைத்து விடுவதுண்டு. இன்னும் சிலருக்கு அவரின் வித்தியாசமான குணநலன்களே பெயராய் அமைந்துவிடுவதுண்டு, நாம் அறிந்தோ அறியாமலோ நம்மைக்கூட சில சமயம் யாராவது அது கெடக்குது பைத்தியம், லூசு என்று அழைத்திருக்கக்கூடும்! நாமும் யாரையாவது.

மேற்கூறியது எதுவுமில்லாது ஒரு மனிதனை அவன் வாழ்நாள் முழுவதும் வலி’ என்றே அழைத்திருக்கிறீர்களா? இல்லை அழைத்திருப்பதை கண்டிருக்கிறீர்களா?

காக்காவலிப்பு என்ற நோயின் பின்பாதியில் இருக்கும் வலி’ என்பதுதான் மூர்த்தியின் காரணப் பெயர். கரேலென்று, நெட்டை, தாட்டியான உருவம். உயரத்திற்கு ஏற்ற உடம்பு. எப்போதுமிருக்கும் தாடி. மூர்த்தி தன் முப்பத்தெட்டு வயது வரைக்கும் வேலைக்குப் போனதில்லை, குழந்தைகளை கொஞ்சியதில்லை. யாரோடும் சுமுக உறவு பாராட்டியதில்லை.நண்பர்களென்று யாருமில்லை. சும்மாவே பொழுதோட்டினாலும் புறம் பேசியதில்லை.வீட்டிலோ இல்லை சுற்றுவட்டாரத்திலோ எந்தப் பெண்ணையும் தவறான நோக்கத்தில் அண்டியதில்லை.

தட்டு நிறைய சோறு போட்டு திங்கத்தெரியும். கால் பரப்பி தூங்கத் தெரியும். கோபம் வந்தால் கல்லும், பாட்டிலும் வீசி எதிரே இருப்பவர் மண்டையை உடைக்கத்தெரியும். ஏண்டா இப்புடி செய்யுற? என்று வேதனையுடன் கேட்கும் தன் அம்மாவை எல்லா உன்னாலதாண்டி, என்னை ஏன் இப்புடி பெத்த? என்று கேள்வி கேட்டுக்கொண்டே எட்டி உதைக்கத்தெரியும்.

இதையும் தவிர்த்து மூர்த்திக்கு தாயபாஸ் ஆடத் தெரியும். ஆனால் மூர்த்தியோடு தாயபாஸ் ஆட எதிராளிக்கு எப்போதும் கொஞ்சம் மனக்கிலேசம் இருக்கும். இந்த வலிக்காரனுக்கு எப்ப கோவம் வரும்னு யாருக்குத் தெரியும். தொடர்ந்து தோத்துப்போயிட்டான்னா அப்புறம் ஆட்டத்த கலைச்சிட்டு கல்லெறிஞ்சுட்டுன்னு போயிடுவானே என்ற எண்ணமிருந்தாலும் சும்மா போற பொழுதை இப்படி தாயபாஸையாவது ஆடி போக்க வைக்கலாமே என்று ஜோடி போட்டு ஆடுவதுண்டு. காசு வெச்சி ஆடலாமா? ம், அதிகபட்சம் அஞ்சு ரூபா வரைக்கும் ஆடுவார்கள். அதுக்கும் மேல போச்சுன்னா யாராவது ஒருத்தருக்கு அன்னிக்கு பீடி, டீ செலவுக்கு காசு பத்தாது.

அமாவாசை இல்லாமல் தீபாவளி, பொங்கல் வந்தால் மூர்த்தி ஆளே வேறு மாதிரியிருக்கும். சவரமெல்லாம் செய்து கொண்டு, அம்மா வாங்கித்தரும் புதுவேட்டி, சட்டை போட்டுக்கொண்டு தெருவில் குத்துக்கால் போட்டு உட்கார்ந்து பல் குத்திக்கொண்டிருக்கும். மூர்த்திக்கு தினமும் குளிக்கும் பழக்கமெல்லாம் இல்லை. ஆனால் இழுப்பு வந்து எங்காவது தெருவில் விழுந்து மண்ணும், சேறும் ஆகிவிட்டால் அதற்கு மறுநாள் வெந்நீர் வைத்து கட்டாயம் குளித்துவிடும்.

அமாவாசை, பவுர்ணமி வரும் போது மட்டும் குள்ளம்மா கிழவி மூர்த்தியை எங்கேயும் போகவிடாது. எங்கயாவது போயி வலி வந்து விழுந்துட்டான்னா மாடு மாறி இருக்குற அவன யாரு இழுத்தாரது? என்று புலம்பிக்கொண்டே டேய், வீட்ட விட்டு எங்கயும் போகாதடா என்று சொல்லிவிட்டு பால் எடுக்க போய்விடும். இது மாதிரி தினங்களில் எப்போதும் மூர்க்கமாய் இருக்கும் மூர்த்தியைப் பார்க்க பாவமாய் இருக்கும். சோர்ந்து போய் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கும். சிலசமயம் அப்படி உட்கார்ந்த நிலையிலேயே காக்கா வலிப்பு வந்து இழுக்க ஆரம்பித்துவிடும். அந்த மாதிரி சமயங்களில் யாரும் அது கிட்டப்போக முடியாது. மூர்த்தி படுக்கும் இடத்தின் தலைமாட்டில் ஒரு கல் இயந்திரம் வேறு இருக்கும். கொஞ்சம் விட்டால் இழுத்து இழுத்துக்கொண்டு போய் அந்தக்கல்லில் தலை இடிக்க ஆரம்பித்துவிடும். ஆக்ரோஷமாய் முகம் கோணி, வாயில் நுரை தள்ள, கையையும், காலையும் இழுத்து இழுத்து எங்கேயாவது தேய்த்து முட்டிக்காலில் ரத்தம் வரும். மூர்த்தியின் கை, கால், தாடை, முகங்களில் எப்போதுமே ரத்தம் வந்து காய்ந்த புண்களின் பக்குகள் இருந்து கொண்டே இருக்கும். இது மாதிரி மூர்த்திக்கு வலிப்பு வரும் நேரத்தில் வாசலில் இருக்கும் பெண்கள் யாராச்சும் பார்த்தால் மூர்த்தியின் அண்ணன் பிள்ளைகளை உதவிக்குக் கூப்பிடுவார்கள். ஆனால் அவர்கள் எட்டிப்பார்த்துவிட்டு உள்ளே போய்விட, தெருவில் போகும் ஆண்கள் யாராச்சையும் உதவிக்கு கூப்பிட்டு கையையும் காலையும் மாத்திரம் அழுத்திப் பிடிக்க சொல்லுவார்கள்.

அந்தமாதிரி சமயத்தில் குள்ளம்மா கிழவி இருந்தால் அதன் நிலை ரொம்பப் பரிதாபமாக இருக்கும். அய்யோ, மண்டையப் போட்டு இடிச்சிக்கிறானே, கை முட்டிய தேச்சிக்கிட்டானே என்று ஏ வீரம்மா, சாந்தி கொஞ்சம் வாங்கடி, வந்து கொஞ்சம் புடிங்கடி என்று தன் மருமகளையும், பேத்தியையும் கூப்பிடும்., மூர்த்திக்கு இழுப்பு வந்து அடங்கி புஸ், புஸ் என்று மூச்சுவிட்டுக்கொண்டிருக்கும். ஏற்கனவே வாயில் பொங்கி வழிந்து கொண்டிருக்கும் நுரைமுட்டைகள் புஸ், புஸ்செல்லில் உடைந்து ஜொள்ளாய் வடியும். அப்போதுதான் கூப்ட்டியா அத்த என்று வீரம்மாளின் குரல் மாத்திரம் வெளியே வரும். தப்பிப்பதற்கு நேரக்கணக்கு வைத்திருப்பார்கள் போல.

சில சமயம் கிழவி மாத்திரம் கத்திக்கொண்டே காலை மட்டும் அமுக்கிப்பிடித்துக்கொண்டிருக்கும். அதுக்கே கிழவிக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஆரம்பித்துவிடும். வலிப்பு வரும் நேரத்தில் பல சமயம் மூர்த்தி தன்னை மறந்து மூத்திரம் வேறு பெய்து போட்டிருந்த துணியெல்லாம் தொப்பையாய் ஆகிவிடும். வாயில் வடியும் ஜொள் வேறு கழுத்தெல்லாம் வழிந்து வாந்தி எடுத்தா மாதிரி இருக்கும். வலி நின்ற பிறகு கிட்டப்போகவே வீச்சமடிக்கும். அதனைக்கடந்து போகும் அனைவருமே ப்ச்... என்று மூக்கைப்பிடித்துக்கொண்டு போவார்கள். மூர்த்தியே மயக்கம் தெளிந்து வேறு துணி மாற்றினால் தான் உண்டு.

கிழவிக்கு மூர்த்தியைத் தவிர இரண்டு மூத்தபிள்ளைகள் உண்டு. அவர்கள் இருவருக்குமே கல்யாணமாகி குழந்தை குட்டிகளோடு அதே வாசலில்தான் இருந்தார்கள். பின்னே அவர்களுக்கெல்லாம் அது சொந்த வீடாயிற்றே, வேறு எங்கு போவார்கள்? இருவருமே தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்றே இருந்தார்கள். குடிகாரர்களான அவர்களின் குடும்பத்தையே பெரும்பாலும் அவர்களின் மனைவிகள் தான் நடத்தினார்கள், இதில் அண்ணன்களாகவே இருந்தாலும் வலி’யின் வலிகளை அவர்கள் எங்கு பங்கு போடுவது?

ஒரே வாசலில் இருந்தாலும் மூர்த்திக்கு தன் அண்ணன்கள், அண்ணிகள், அவர்களின் பிள்ளைகள் என யாரோடும் ஒட்டுதல் இல்லை. எந்த நிலையிலும் அவர்கள் வீட்டில் சாப்பிடாது. தன் பாகத்தில் இருக்கும் ஒரு வீட்டின் வாடகையும், பணக்கார வீடுகளில் ஆவின் பால் போடுவது, முறவாசல் செய்வது என்பது போன்ற கிழவியின் சொற்ப சம்பாத்தியத்தில் தான் இருவரின் ஜீவனமும். மூர்த்திக்கு பீடி குடிக்கும் பழக்கமுண்டு. அதற்கும் கிழவிதான் வழிவகைகள் செய்தாக வேண்டும். தன் அண்ணன் பிள்ளைகளிலேயே மூர்த்திக்கு தன் இரண்டாவது அண்ணனின் மகளான அன்பரசியைத் தான் பிடிக்கும். அன்பு, அன்பு என்று கொஞ்சம் வாஞ்சையோடு இருப்பது அந்தப் பெண்ணோடு மட்டும்தான். அன்புவும் ஸ்கூல் விட்டு வந்தால், சித்தப்பா சாப்ட்டியா என்று கேட்கும். காரணப்பெயரே தன் பெயராய் நிலைத்துவிட்ட துரதிர்ஷ்டத்தில் அன்பு, தன்னை சித்தப்பா என்று கூப்பிடுவது மூர்த்திக்கு ஒரு ஆறுதல் போல. மூத்த அண்ணன் பிள்ளைகள் கூட, கிழவி வீட்டுக்குள் நுழையும் முன் ஆயா, வலி’ இருக்குதா என்று கேட்டுவிட்டுதான் பின் நுழைவார்கள். அச்சமயம் மூர்த்தி வீட்டுக்குள் இருந்தால் தீர்ந்தது, ஏய். ங்க்....... ஏன் சித்தப்பா ந்னு கூப்ட்டா கொறஞ்சிடுவியா என்று கெட்ட வார்த்தை வசவோடு ஆக்ரோஷமாய் குரல் வந்து வெளியே விழும். பிள்ளைகள் ஒரே ஓட்டம்தான்.

சொந்த அண்ணன்களோடோ, இல்லை வாசலில் இருக்கும் மற்ற சித்தப்ப, பெரியப்ப மக்களோடு ஏதாவது பங்காளி சண்டைவிட்டால் அவ்வளவுதான். வாய் பேச்சு வாயோடு இருக்கும் போதே மூர்த்தி எங்கேயாவது பெரிய கல்லாய் பொறுக்கி குறி பார்த்து வீசி எதிராளி மண்டையைப் பதம்பார்த்து விடும். கல் கிடைக்கவில்லையென்றால் இருக்கவே இருக்கிறது பாட்டில்கள். சில சமயம் வீட்டிலிருக்கும் எண்ணெய் பாட்டில்கள் கூட பறக்கும். மண்டை உடைந்தவர்கள் போலீஸ் கம்ப்ளெயிண்ட் செய்ய, மூர்த்தியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விட்டு வரும். இப்படி அடிக்கடி நேர்ந்ததால், குறிப்பிட்ட இந்த வீட்டு வாசலில் சண்டையென்று புகார் கொடுக்கப்போனால், அந்தப்பக்கமிருந்து ஏதும் ஆக்‌ஷன், ரியாக்‌ஷனே இருக்காது. தெருவில் மத்த பிரச்சினைகள் ஏதாவது இருக்கும் போது ஏரியா போலீஸ்காரர்கள் உள்ளே வந்தால், தன் குத்துக்கால் ஆசனத்திலிருந்து எழுந்து மூர்த்தி சினேகமாய் வணக்கம் சார் வைக்கும். அவர்களும் இப்பல்லாம் சண்ட போடறதில்லல்ல என்று அன்பாய் விசாரித்துவிட்டுப்போவார்கள்.

கோவில்,குளம், அண்டை அசலார் கல்யாணம், சினிமா, அது இது என்று இன்ன பிற விசேஷங்கள் எதற்கும் போவாத மூர்த்தி வீட்டை விட்டு போன இன்னொரு இடம் போலீஸ் ஸ்டேஷன். அதற்குப்பிறகு இன்னொரு இடத்துக்குப் போய் இன்னொரு இடத்துக்கு போனது, அது பின்னர் வரும்.

இப்படி தினமும் தாயபாஸ், மாதமானால் வந்துவிடும் காக்காவலி இழுப்புகள்,பங்காளி சண்டை இழுப்புகள் அதற்குப்பிறகு கிழவி ஏதாவது கேட்டால் அதை இழுத்துப்போட்டு அடிப்பது என்று இழுத்து இழுத்து தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த மூர்த்திக்கு திடீரென்று ஓரு ஆசை முளைவிட்டது. அது ஒன்னும் பெரிய வித்தியாசமான ஆசையெல்லாமில்லை. வழக்கமாய் பருவ வயது வரும் அனைவருக்கும் நடந்தேறக்கூடிய விசேஷம் தான். கல்யாணம்!

என் வயிசோட சின்னதா இருக்கறதெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிது இல்ல, அவ்ளோ ஏன் உன் பேத்திக்குக்கூட கல்யாணமாயிடுச்சு இல்ல எனுக்கு கல்யாணம் பண்ணிவை. கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனவன் பாகம் பிரிச்சிக்கிட்டு ஆளுக்கொரு வீட்டுல வாழறான் இல்ல, எனக்கும் கல்யாணம் பண்ணி வை. கிழவிக்கு இருக்கிற வலி’யெல்லாம் போதாதென்று இதுப் புதுத் தலைவலியாய் போய்விட்டது.

டேய், வேலைக்கும் போவல, பத்தாதைக்கு உடம்புல இந்த இது வேற, யாருடா பொண்ணு குடுப்பா. ஏண்டா இப்புடி பண்ற, ஏதோ வெந்த சோத்த தின்னுட்டு விதிய ஓட்டிட்டு போடா.

ஏன், நான் வேலைக்கி போவமாட்டனா, நானும் பால் எடுக்கறேன், நீ மொறவாசல் செய்யிற வீட்டு அய்யாங்க கிட்ட சொல்லி எனுக்கு ஏதாச்சும் வேலை வாங்கி குடு. செய்யிறேன். அப்றம் ஒரு வீட்ட எழுதிக்குடு. நானும் அவுனுங்க மாதிரி குடும்பம் நடத்தறேன். அவுனுங்க மத்துறம் தான் ஒண்டி சம்பாரிச்சா குடும்பம் நடத்துறானுங்க?

எல்லாஞ்சரிடா, உனுக்கு யாருடா பொண்ணக் குடுப்பானுங்க, மாசத்துல பத்து நாளு அது, இதுன்னு மயக்கமெடுத்து படுத்துக்கிரியடா? எல்லாருக்கும் உன் நெலமை தெரியும். நான் யாரப் போயி பொண்ணக் கேப்பேன், இன்னும் அவ பாவத்த வேற கொட்டிக்கனுமா? என்று கிழவி எங்கோ இருக்கும் வராத பெண்ணுக்காக வாதாடியதில் ஏய், ங்க்....... என்று ஆரம்பித்து மூர்த்தி கேட்ட வசவிலும், போட்ட போடிலும் கிழவிக்கு புத்தூர் கட்டு போடவேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது.

அவ்வப்போது சின்ன, சின்னதாய் இருந்து கடைசியில் கிழவிக்கே வேட்டு வைத்துவிட அண்ணன்கள் தலையிட்டு பெரிய ரசபாசமானதில் கிழவி பெரிய பிள்ளை வீட்டோடு தங்கிவிட்டது. ஆனாலும் அவுனுக்கு கொஞ்சோண்டு சோறு போட்டுருங்கடா என்று புலம்பிக்கொண்டிருக்கும்.

கிழவியால் வந்த வரும்படி நின்றதால், கிழவி நிறுத்திய பால் எடுக்கும் வேலைக்கு வாரிசுதாரராக மூர்த்தி செல்ல வேண்டியதாக போயிற்று. அப்படி செல்லும் வீடுகளில் கிழவியின் பழக்க தோஷத்தில் யாரச்சும் சாப்பிட கொடுத்தார்கள். இப்படியாக கொஞ்சநாள் ஓடிற்று.

என்னதான் ராயப்பேட்டை ஆஸ்பத்திரி மாத்திரைகளை விழுங்கினாலும் மூர்த்திக்கு மாதத்தில் பாதி நாட்களை வலியோடுதான் கடத்தவேண்டியிருந்தது. அப்படியும் இப்படியுமாய் போய், கிழவியின் உடல்நிலையும் மூர்த்தியை கைவிட வேண்டியதாகப் போய்விட மூர்த்திக்கு குடி பழக்கம் தொத்திக்கொண்டது. கையில் காசு இருந்தால் தானே வாங்கி குடிப்பது, இல்லையென்றால் தன்னொத்த தன் சித்தப்ப, பெரியப்ப மக்களிடம் வலியப்போய் டேய், காசு இருந்தா குடுங்கடா என்று இரந்து குடிக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. குடிப்பழக்கம் மூர்த்தியின் வைராக்கியத்தை குறைத்துவிட்டது.

மூர்த்தி ஆக்ரோஷமாய் இருக்கும் தனது கலங்கலான மஞ்சள் நிற கண்களை இடுக்கிக்கொண்டு, இழுப்பு வந்தால் இருப்பதை விடவும் முகத்தை மிகப்பரிதாபமாக வைத்துக்கொண்டு தன் பெரிய உடலை ஒரு மாதிரி குறுக்கி, தாகமாய் இருப்பவன் குடிக்க ஏதாச்சும் இருந்தா ஊத்து தாயி என்பது போல கையை ஒரு மாதிரி மடக்கி, டேய் ஏதாவது குடுங்கடா என்று காசு எடுத்து கொடுக்கும் வரை அவர்களின் சட்டைப்பாக்கெட்டையே பார்த்துக்கொண்டிருக்கும். காசு கொடுக்கும் நிலையிலிருப்பவர்கள் ஏற்கனவே மூர்த்தியின் கைங்கரியத்தால் மண்டையில் தையல் போட்டிருப்பார்கள். இந்த நிலை கண்டபின்பும் காசு தராமல் இருப்பவன் எப்படியும் கல் நெஞ்சினனாகத்தான் இருப்பான். எப்படியா இருந்தாலும் தனக்கு அண்ணன் முறையா வந்துட்டானே என்று தன் மண்டைத்தையலை தடவிக்கொண்டே தந்துவிட்டுப்போவார்கள்.

குடிக்கு காசு கிடைக்கும் வரைதான் இந்த நிலை, குடித்த பின் இருக்கும் மூர்த்தியே தனி. அப்படியிருக்கும் மூர்த்தியைப் பார்க்கும் போது யாரும் அதுக்கு காக்காவலிப்பு வரும் என்று சத்தியம் செய்தால் கூட நம்பமாட்டார்கள். தண்ணியடித்த பின் மூர்த்திக்கு அதிகபட்ச வீராவேசம் வந்துவிடும். அப்படி வரும்போதெல்லாம் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப்போறியா, இல்லியா, இல்லனா அண்ணனுங்க பாகத்தையும் சேர்த்து எனக்கே எழுதி வை, எனக்குதான் ஒடம்புல குறை இருக்குல்ல, நான் இதையே வெச்சு கடைசி வரைக்கும் சாப்பிட்டுட்டு போறேன் என்று அண்ணன் வீட்டிலிருக்கும் கிழவியை வம்புக்கு இழுக்கும்.

ஏற்கனவே கிழவியை வீட்டோடு வைத்துக்கொண்டிருப்பது மருமகள் வீரம்மாவுக்கு உறுத்த, வலி’ வந்து அடிக்கடி சண்டை போடுது, வாசல்ல நின்னுக்கிட்டு அசிங்கசிங்கமா கத்துது என்று கணவனிடம் பிராது கொடுத்து கிழவியை மூர்த்தியோடே திருப்பி அனுப்பிவிட்டாள். கிழவியும் முக்கி, முனகிக்கொண்டு முடிந்தவரை ஆக்கி அரித்து தள்ளாத வயதில் உடைந்த காலை இழுத்துக்கொண்டு மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பித்தது.

மூர்த்தி நிலை பாவமா இல்லை கிழவி நிலை பாவமா என்று அகப்பட்ட நேரத்தில் ஆளாளுக்கு அவர்கள் கதையை அவலாக்கிக்கொண்டிருந்த போது, வேலைக்குப் போய் மதியானம் வந்த கிழவி வெயில் கிறுகிறுப்பில் உள்ளே போய் சோறு பொங்காமல் படுத்துவிட்டது. யாரிடமோ காசு வாங்கி முட்ட முட்ட குடித்த மிதப்பில் மூர்த்தி வீட்டுக்குள் புகுந்து சோறு இல்லையென்று டங்கு, டமாரென்று பாத்திரங்கள் உருளும் ஓசை கேட்டது. மீண்டும் வந்து கிழவியை, அண்ணன்களை, அண்ணியை, இன்னும் இருப்பவர்களை அனைவரையும் திட்டித்தீர்த்தது. வீட்டைத் தன் பேருக்கு எழுதி வைக்க சொல்லும் நியாய அநியாயங்களுக்கு எல்லோரையும் பஞ்சாயத்துக்கு கூப்பிட்டது. கடந்து செல்லும் எவரும் என்ன ஏது என்று கேட்கவில்லை.

பின்னர் தன்னிரக்கம் தாளாமல் அக்கம் பக்கமிருப்பவர்களை நோக்கி எனுக்கு சோறு போடக் கூட யாருமே இல்லையென்று ஓவென்று அழுது தீர்த்தது. பின்பு வீட்டுக்குள் புகுந்து தடாலென்று கதவு சாத்தும் சத்தம். மீண்டும் பாத்திரங்கள் உருளும் சத்தம். உளறல் சத்தம் என்று இரவு போய் காலை வந்தது. வெளியே படுத்திருந்த கிழவியும் அப்படியே எழுந்து வேலைக்குப் போய்விட்டது. எல்லோரும் தத்தம் வேலைகளைப் பார்க்கப்போய்விட்டு சோற்றுக்கு வீடு வந்த மதிய நேரத்தில், அய்யோ, எந்தலையில மண்ண வாரிப்போட்டுட்டானே என்று கதவைத்திறந்த கிழவியின் பெருத்த ஓலக்குரல் கேட்க, வாய்க்கு போன சோறு வயிற்றுக்கு போகாமல் வாசலிலிருக்கும் அனைவரும் வெளியே ஓடிவந்தார்கள். ஆஸ்பத்திரிக்கு எடுத்துப்போக மூர்த்தியின் தடித்த கழுத்திலிருந்த கிழவியின் பழைய புடவையை அறுக்கமாட்டாமல் அறுத்தார்களாம். வலி’ செத்துப்போச்சு, வலி’ மாட்டிக்கிச்சு என்று பேசிப்பேசி தீர்த்தார்கள்.

கடைசியாய் மூர்த்தியின் உடல் மார்ச்சுவரிக்குப்போய், மயானத்திற்குப்போனது. கிழவி மாத்திரம் வலி’, டேய் வலி’ நீ ஒதைச்ச காலு புண்ணுக்கூட ஆறலியேடா என்று செத்துப்போன மூர்த்தியை வலி’ந்து வலி’ந்து கூப்பிட்டுக்கொண்டிருந்தது.

18 January 2010

தூயோன் - கோபிகிருஷ்ணன்

மனநிலைகளை ஈடுகட்டப் பொருளால் என்னமோ முடியப்போவதில்லை. சந்தோஷத்துக்கு ஐம்பது ரூபாயும், எரிச்சலுக்கு ஐம்பத்து ஐந்து ரூபாயும் என்று கணக்கு வைத்துக்கொண்டால் உணர்வுகளுக்கு மதிப்பே அற்றுப்போய்விடும் //

என் தன்மைக்கான காரணங்களைத் தேடி அலைவது கூடுதல் அநீதி. எதையும் நியாயப்படுத்திக்கொள்ள விழைவதே விஷயத்தில் அநியாயம் உறைந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். இயற்கையிலேயே நான் அயோக்கியனாக இருந்தால், அப்படியே இருந்துவிட்டுப்போகிறேனே.

இப்படி முதல்கதையான தூயோனில் எடுத்த வாசிப்பு ஓட்டம் விட்டுவிட்டு ஒரு நான்கு மணி நேரத்துக்குள் கடைசி கதையான எதிர் - உளவியலுக்கு கொண்டு வந்து நிறுத்தியது.

கதையை எங்கும் தேடாமல், வார்த்தைகளுக்கும் மெனக்கெடாமல் இயல்பாய் ஒரு நகைச்சுவையை ஓடவிட்டு தன் வாழ்வனுபவத்தையே பெரும்பாலும் சிறுகதைகளாக்கியிருக்கிறார்.

இரண்டாவது கதையான தெய்வீக அர்ப்பணம், எல்லாம் அவன் செயலாக இருப்பதாகக்கொள்ளப்படும் போது ஓர் உயிரிழப்பும் கூட வாழ்க்கைமுறையை மாற்றிவிடக்கூடிய வலிமையை இழந்துதான் விடுகிறது // என்பதாய் முடியும். படித்தபின் ஒரு பெருமூச்சை மட்டுமே விடமுடிந்தது.

வயிறு என்ற சிறுகதையில், யதார்த்தத்தை உண்மையிலேயே யாருமே கண்டதில்லை.தத்தம் ஆளுமைக்குத் தகுந்தாற்போல் யதார்த்தத்தின் சுய விளக்கங்களையே காண்கின்றனர். என்று சொல்லியிருப்பார்.

புயல் என்ற சிறுகதையில், புயல் மையம் கொண்ட நாளொன்றில் கணவன் வீட்டிற்கு தாமதமாக வருவான், உள் நுழைந்தவுடன் வேலைக்குச் சென்று வந்த மனைவி ஏன் இப்படி தினமும் லேட்டா வர்றீங்க என்று எரிந்து விழுவாள். இப்படி எரிந்து விழுவதற்கான காரணத்தை அவளிடம் கேட்டறிந்த போது அவள் அன்று முழுவதும் தன் வேலை செய்யுமிடத்தில், வேலை முடித்து குழந்தையை கிரச்சிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், வீட்டிற்கு வந்தபின் ஏற்கனவே அவ்வீட்டில் குடியிருந்துவிட்டுப்போன ஒரு ஆடவன், தெருவில் இருந்த சில காலிப்பயல்கள் என இவர்கள் அனைவரும் மூலமாக தனக்கு நேர்ந்து சிற்சில பாலியல் தொந்தரவுகளை சொல்லுவாள்.

மனைவி சொல்ல சொல்ல அனைத்தையும் கேட்ட கணவன் அவளை நோக்கி, சமூகம் இன்னிக்கி உன்கிட்ட அதோட விஸ்வரூபத்தைக்காட்டியிருக்கு. அவ்வளவுதான் தூங்கு. எல்லாம் சரியாப்போகும் என்பான். அதற்கு மனைவி அழுகையினூடே உலகத்தைத் தெரிஞ்சுக்கனும்னீங்க, புரிஞ்சிக்கிட்ட வரைக்கும் சகிக்கலை என்பாள்.

முடிவிலாத யோசனைகளூடே கணவன் கடைசியில் தன் நடத்தையையும் கொஞ்சம் யோசித்து, தான் எந்தப்பாவமும் செய்யாத புண்ணியாத்மா அல்ல, ஆனாலும் பெண்களிடத்து அசிங்கமாகவோ, விகாரமாகவோ நடந்து கொண்டவனுமல்லன், பெற்றவர்கள் பண்ணிய பாவம் பிள்ளைகளைச் சேரும் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன், ஆனாலும் கணவன் செய்த பாவம் மனைவி தலைமேல் விடியும் என்று எந்தப்பெரியாரும் சொன்னதாக கேள்வி இல்லையே என்பதாய் நினைத்து வெறுப்பின் உச்சத்தில் சாக்கடையில் உழலும் பன்றிகள் என்று சொல்லி தன் இயலாமையை தீர்த்துக்கொள்வான்.

உடைமை என்ற சிறுகதையில், வீட்டு உரிமையாள கிழவியின் அராஜகத்தை தட்டிக்கேட்க இயலாத ஒண்டுக்குடித்தனவாதியின் இயலாமைகளே பிரதிபலிப்பதாய் ஒரு இடத்தில் // சூழல் ஒவ்வாததுதான். ஆனால் செத்தா போய்விடமுடிகிறது ? // என்ற ஒரு ஒற்றை வாக்கியம் வரும். படிக்கும் போது நிறைய இடங்கள் புன்னகைக்க வைத்தன, அதில் பிரதான இடம் இது.

இதே கதையில் தன் குழந்தையைப் பற்றி சொல்லும் ஒரு இடத்தில் // தகப்பன் என்ற ஸ்நானம் வந்துவிட்டாலே என் “செய்” களை, என் “செய்யாதே”க்களை அவளுள் புகுத்துவேன். என் அளவுகோல்களை அவளுக்குக் கற்பிப்பேன், என் கொள்கைகளை அவளுக்குப் போதிப்பேன். வன்முறைதானே இவையெல்லாம் ? (இது தகப்பனுக்கு மட்டுமான வாசகமல்ல, இப்போதைய சூழலில் பெற்றோருக்கான வாசகம்)

இந்தக் கதையின் இறுதியில் கலீல் ஜிப்ரான் வரிகளை தான் நினைப்பதாகவும், ஆனால் தன் மனைவிக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமலிருப்பதாகவும் பின்வரும் வரிகளை நினைவூட்டுவார்.

...”உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவைகள் உங்கள் மூலமாக உலகில் ஜனிக்கின்றன. ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவைகள் உங்களுடனிருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவைகள் அல்ல...”

இப்படியாய் வழி நெடுக நிறைய எள்ளல்களையும், யோசிக்கத்தூண்டும் வரிகளை உட்புகுத்தி வைத்துக்கொண்டு சடங்கு, இரு உலகங்கள், விழிப்புணர்வு, அம்மன் விளையாட்டு,..... என சில கதைகள் செல்கின்றன.

இதுவும் சாத்தியம் தான் என்ற ஒரு சிறுகதை, மிக அழகாக நேர்த்தியாக மிக அழகான ஒரு பெண்ணுக்கும், ஒரு ஆடவனுக்கும் பணியிடத்து தோன்றி வளரும் நட்புணர்வைச் சொல்கிறது.

ஓர் உறவுக்குப் பெயர் சூட்டிப் பாதுகாப்பை தேடிக்கொள்வதும் வரைமுறை வகுப்பதும் எரிச்சலூட்டும் பயந்தாங்கொள்ளித்தனம். தோழமைக்கு ஒரு பழிப்பு; ஒரு கொச்சைப்படுத்துதல், என்னைப்பொறுத்த மட்டில் நிர்ப்பந்திக்கப்படாத அனைத்து உறவுகளும் புனிதமானவையே என்று தன் தோழியுடனான கடைசி சந்திப்பின் போது கதாபாத்திரம் சொல்வதாய் வரும்.

இந்தத் தொகுப்பில் இருக்கும் கடவுளின் கடந்த காலம் என்ற சிறுகதை, அழியாச்சுடர்கள் என்ற இந்த வலைப்பூவில் இதோ இங்கேயிருக்கிறது.

கடைசி கதையான எதிர்-உளவியல் என்ற சிறுகதையில் மனநோயாளி என்று ஆலோசனைக்காக வரும் ஒருவருக்கும், ஆலோசகரான ஒருவருக்குமான உரையாடலே கதை. சுவாரசியமான உரையாடலில் மிக சுவாரசியமானதாக தோன்றுவது //தங்களைத் தாங்களே விமரிசித்துக்கொள்ளும் பழக்கம் உங்களிடமுள்ளதா? அப்படியிருந்திருந்தால் என்னை நாட வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏற்பட்டிருக்காது என்றே தோன்றுகிறது.//

புத்தகத்தின் பெயர்: தூயோன் பதிப்பகம்: தமிழினி விலை: ரூ. 40/-

இயல்பாய், மென்மையாய் ஊடுருவிய சிறுகதைகளின் பாதிப்பு தாளாமல் கோபிகிருஷ்ணனின் எழுத்தின் பால் உள்ள உந்துதலால் கூகிளித்ததில், திரு.ஜ்யோவ்ராம் சுந்தரின் “மொழிவிளையாட்டு” வலைப்பூவில் அவரின் நேர்காணல் தொகுப்பு ஒன்றையும் முழுதுமாக வாசிக்க நேர்ந்தது. மிகச்செறிவான ஒரு எழுத்தாளுமையின் வாழ்வியலை நான்கு பகுதிகளாக (தட்டச்சு செய்து, கடந்த ஏப்ரல் மாதம் தன் வலைப்பூவில் இட்டது இன்றுதான் என் கண்ணில் பட்டது).

கோபிகிருஷ்ணனின் சிறுகதைகளை விடவும் மிகவும் வலி நிறைந்ததாய் இருந்தது அந்தப் பகிர்வு. (மேலும் அவரின் மற்ற படைப்புகளையும் தேடி படிக்கவேண்டும் என்று ஆவலைத்தூண்டியதும் அதே பதிவுகள் தாம்) அதனை பகிர்ந்தளித்த திரு. ஜ்யோவ்ராம் சுந்தருக்கும், அதனை அவருக்குப் பகிர்ந்த திரு. சிவராமனுக்கும் மிகுந்த நன்றிகள்.

13 January 2010

விஜி @ வேலுவின் மனைவி

எனக்குத் தெரிந்து விஜி அடி வாங்காமல் எழுந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தொடையைப்பிடித்து நறுக்கென்று ஒரு கிள்ளு கிள்ளி ஏ, ஏ, ஏய் விஜி, எழுந்திருக்கப்போறியா இல்ல தண்ணிய எடுத்தாந்து ஊத்தட்டா, அங்கங்க அதது எழுந்து சாமான் தேக்கறது, தண்ணி புடிக்கறதுன்னு என்னமா வேலை செய்யுதுங்க,இதுவுமிருக்குதே, ஒரு நாளப்போல போராட்டமா இருக்கு. மறுபடியும் ஒரு நறுக்.

ஆஆஆ.. ஏ..ஏஏய் ஏன் இப்டி கிள்ற... எழுந்துக்கறேன் இல்ல

எழுந்திரு, எழுந்திருடி

விஜியின் அனேக தினப்படிகள் இப்படித்தான் விடியும். அவ்வளவு பாசமாய் எழுப்பும் ஆயா அதை விட பாசமாய் விஜிக்கு ஒரு டம்ளர் டீயும், பொரையும் தலை மாட்டில் வாங்கி வைத்திருக்கும். எழுந்து ஒரு கையால் கோட்டுவாயைத் துடைத்துக்கொண்டு பொரையும், டீயும் உள்ளே இறங்கிய பின்னர்தான் விஜிக்கு உலகமே கண்ணுக்குத் தெரியும். அதற்குப்பிறகுதான் ஏதாவது வேலை செய்வதாய் இருந்தால் வேலை, இல்லையென்றால் ஆட்டம், அப்புறம் பள்ளிக்கூடம்.

விஜிக்கு படிப்பு மீதோ, வீட்டு வேலைகள் மீதோ எப்போதுமே பிடித்தமிருந்ததில்லை. ஏதோ தன் வயதொத்த பிள்ளைகள் அனைத்துமே பள்ளிக்கு போவதால் தானும் போகும். கார்ப்பரேஷன் ஸ்கூலாகவே இருந்தாலும் சில பிள்ளைகள் இன்ஷ்பெக்‌ஷன் அது, இது என்று திடிரென்று சாயங்கால வேளைகளில் அமர்ந்து இன்னொரு நோட்டைப் பார்த்து தன் நோட்டை நிரப்பிக்கொண்டிருக்கும். அந்த சமயம் மட்டும் விஜிக்கு படிப்பு மீது திடீர் கரிசனம் வந்து, ஆயா, எங்க ஸ்கூல்ல நாளை கழிச்சு யாரோ வர்ராங்களாம் ஆயா, எல்லா நோட்டுக்கும் அட்டைப்போட்டு, பாடமெல்லாம் எழுதிட்டு வர சொன்னாங்க ஆயா. அட்டை வாங்கனும் ஆயா, நோட்டு கூட வாங்கனும் ஆயா.

நொறுக்குத்தீனி வாங்கித்தின்ன இப்ப இப்டி ஒரு ஐடியா பண்ணிக்கிட்டு வந்திட்டியா, உங்கப்பன் வருவான் பாட்டு பாடிக்கிட்டு, அவன் வந்தான்னா க்கேளு நோட்டு, அட்டை, அது இதெல்லாம். எங்கிட்ட காசு இல்ல, எனக்கு சம்பாரிச்சு கொட்டுறவங்களும் யாருமில்ல தாயே.

இல்ல ஆயா, நெஜம்மாவே எங்க டீச்சர் சொல்லி அனுப்புனாங்க ஆயா, நீ வேணும்னா ராணி, தேவா, அம்மு எல்லாரையும் கேட்டுப்பாரு.

ம்க்கும், நீப்போம்மா, எங்கிட்ட காசு இல்ல, உங்கப்பன் வந்தான்னா கேளு, என்னக் குடுக்கறானோ அத வாங்கிக்கோ, என்ன ஆள உடு.

இந்த அண்ட சராசரத்தில் விஜி பயப்படும் ஒரே ஒரு ஆள் ஒல்லியான அவளின் அப்பா. மாணிக்கம் என்ற பெயர் கொண்டு ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த அவருக்கு விஜியின் மீது எப்போதும் பாசமிருந்ததில்லை. காரணம், ஒரு தமிழ் படத்தில் வருவதைப்போன்று மிகவும் அற்பமானது. நம்பத்தயாராகுங்கள்.

விஜி பிறந்த போது கலர், முக ஜாடை என அப்படியே அவளின் அம்மாவை உரித்து வந்திருந்தாள். பிரசவக்க்கோளாறோ, உடல் நலக்கோளாறோ விஜியின் அம்மா இறந்துவிட, ஆத்தாளாட்டமே இருந்து அவ உயிர வாங்கிருச்சு என்ற ஒற்றை வார்த்தை போதுமானதாய் இருந்தது மாணிக்கத்துக்கு விஜியை புறக்கணிக்க. அது மட்டுமே காரணமாவென்றும் தெரியவில்லை, அதற்குப்பிறகு அவருக்கு இரண்டு மனைவிகள், ஒருவர் கூட அவரோடு ஒரு வருஷம் சேர்ந்தார்ப்போல குடும்பம் நடத்தவில்லை. குடித்துவிட்டு இரவெல்லாம் முதல் மனைவி புராணம் பாடிக்கொண்டிருக்கும் அவரோடு குடும்பம் நடத்த மற்ற இருவருக்கும் மன தைரியமில்லை. கொஞ்சம் விஷய ஞானமுள்ள மூன்றாவது மனைவி மட்டும் இந்த ஆள் ஒரு சைக்கோ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அப்படியென்றால் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ள வாசலில் அனைவருமே மிகவும் ப்ரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆக மொத்தம் சம்சாரத்துக்கும் தனக்கும் எந்தவொரு குடுப்பினையுமில்லை என்று தெரிந்து கொண்ட பிறகும் அவர் விஜி மீது அதே மாறாக்கோபத்தோடே இருந்தார்.

எப்போதும் போல தள்ளாடிக்கொண்டே வந்து காக்கி சட்டையைக் கழற்றினார் மாணிக்கம்.

நோட்டு வேணும், நோட்டு வாங்கணும்..ப்பா (இந்த ப்பா என்ற உச்சரிப்பை மட்டும் கொஞ்சம் வால்யூம் குறைத்துக்கேளுங்கள்) ஏனெனில் விஜி தன் அப்பாவை கூப்பிடும்போது ப்பா என்ற வார்த்தையை அனேகமாக முழுங்கிவிடுவாள். உச்சரிப்பே வெளியே கேட்காத தொனி. அந்த நேரத்தில் விஜியின் பரிதாப முகமும், உடைந்த குரலும் பார்க்கும் நமக்கு மிகுந்த மனக்கஷ்டத்தை உண்டு செய்யும்.

கா விட்டிருந்தாலும் பரவாயில்லை, நம்ம கிட்ட இருக்குற நோட்டுல எதையாவது ஒண்ணை நம்ப அம்மாவுக்குத் தெரியாம கொடுத்துடலாமா என்றே இந்த வீட்டுத் திண்ணையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் என்னை எண்ணச்செய்யும். அனேகமாக விஜியோடு விட்ட காவெல்லாம் பழமாய் போனது அவள் அப்பாவிடம் அடிவாங்கி முடித்தபின்பு முகம் கோணி அழும் நிலை கண்ட பின்னர்தான்.

என்னாதூ, நோட்டா, எங்க இருக்குது, எல்லார்மே போயிட்டாளுங்க என்ன விட்டுட்டு, யாருமே இல்ல இப்ப என் கூட, தோ பாரு இந்த போட்டோல இருக்கர்து யாரு தெரியுதா என்று விஜியின் அம்மா போட்டோவை காண்பித்து ஆயிரத்து ஐந்நூறு சொச்சமாவது முறை மீண்டும் தான் இத்தனை காலம் பேசிய உரையையே மீண்டும் துவங்கியிருப்பார். விஜி பரிதாபமாய் மூலையில் உட்கார்ந்திருக்கும். இப்படி ஆரம்பித்த அவரின் உரை கடைசியில் விஜியின் மீது உதையாய் முடியும். வெளியே அமர்ந்திருக்கும் அவளின் ஆயா, இன்னும் இருக்கும் மற்றவர்கள் போய் மடக்கினாலே ஒழிய விஜி வெளியே வருவது சிரமம்தான்.

அன்று இரவு சாப்பிடாமலே சுருண்டுப் படுத்துக்கொள்ளும். எப்போதும் எரிந்து விழும் ஆயாக்கூட சாப்பிடுடாம்மா என்றபடியே தட்டில் சோற்றை பிசையும்.

ப்போ, உன்னாலதானே நா அடிவாங்குனேன், நீ காசு குடுத்திருந்தா நான் அடிவாங்கியிருப்பனா, ப்போ எனக்கு சோறும் வேணாம், நோட்டும் வேணாம் என்ற படி தேம்பிக்கொண்டிருக்கும்.

அவனுக்கும் எப்பதாம்மா பொறுப்பு வர்ரது. இப்படி நீ ஒன்னும் அவங்கிட்ட கேட்காம இருந்தியானா அவனும் நமக்கின்னா செலவுன்னு எல்லாத்தையும் குடிச்சு அழிக்கிறான். எனக்கு வர்ர பென்ஷன் காசுலயும், சீட்டுக் காசுலயும் நான் எப்டி குடும்பத்த ஓட்டறது சொல்லு, அதாண்டா கேக்க சொன்னேன், நீ சாப்புடுறா எம்மா என்று சோறை உருட்டி வைத்துக்கொண்டு அழும் விஜியை தேற்றிக்கொண்டிருப்பாள் விஜியின் ஆயா எனப்படும் ஆண்டாளம்மாள் என்ற சீட்டுக்காரம்மா.

பாதி சாப்பிட்டும், சாப்பிடாமலும் படுக்கும் விஜிக்கு படிப்பு மீது இருக்கும் பந்தம் அறுந்தது இப்படித்தான். அந்தத்தருணம் பார்க்க பாவமாய் தோன்றினாலும் விஜிக்கென்றே பிரத்தியேகமாய் சில கெட்ட பழக்கங்கள் இருந்தன. அதிலொன்று திருடுவது. இன்னொன்று நம்ப முடியாத ஆனால் நம்ப வைக்கக்கூடிய அளவில் பொய் சொல்வது. வீட்டில் காசு வைத்திருந்தால் திருடுவது, கடைகளுக்குப் போனால் திருடுவது என்பது விஜிக்கு கை வந்த கலை. திருடும் காசு அனேகமாய் நொறுக்குத்தீனிக்கும்,அடுத்தாற்போல அழகு சாதனங்களுக்குமே சரியாய் இருக்கும். விஜி திருடும் கடைகளும் பேன்ஸி ஸ்டோர், எதையெடுத்தாலும் அஞ்சு ரூபா என்று அது போன்ற பொருட்களை தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வரும் கடையில் தான்.

தீபாவளி, பொங்கல் சமயங்களில் நாங்களெல்லாம் ஒன்றாய் வளையல், மணி, நெகப்பாலீஷ் வாங்க கடைக்கு போக நேர்ந்தால் விஜி மட்டும் தன் ஆயா தந்திருந்த காசுக்கும் அதிகமாய்தான் எடுத்திருக்கும்?!. சில சமயம் ஆயா கொடுத்த காசில் மீதி வைத்துக்கொள்வதுமுண்டு. திருடியதாய் விஜி எப்போதும் எங்களிடம் காமித்துக்கொள்ளாது, ஆனால் எங்கள் அனைவருக்குமே தெரியும் அது திருடிய பொருட்கள் தான் என்று.

எல்லாமே நாங்கள் பயன்படுத்தியிராத வினோதமான பொருட்களாய் இருக்கும். ரோஸ் பவுடர், கன்னங்களிலும், கண்களுக்கு மீதும் போடும் ஒரு மாதிரி கலர், அப்புறம் அதுக்கு மேல் போடப்படும் ஜிகினா, லிப்ஸ்டிக், அதுக்கு மேலே போடப்படும் எண்ணெய் மாதிரியான ஒரு திரவம் எல்லாம் சின்ன சின்னப்புட்டியில் கலர் கலராய் பார்க்க அழகாய் இருக்கும். நிச்சயமாய் அது ஒருநாள் கொள்ளையாய் இருக்காது. வெவ்வேறு நாட்கள், வெவ்வேறு கடைகள் என வெவ்வேறு அக்காக்களோடு கடைக்குப்போகும் போது அடித்ததாய் இருக்கும்.

அவையனுத்துமே ஒரு நாள் குறிப்பாய் பண்டிகையின் முதல் நாளன்று தான் வெளியே வரும். வெறும் மணியும், வளையலும் மட்டுமே மேட்சிங்காக வாங்கி வைத்துக்கொண்டு கையறு நிலையில் ஒரு மாதிரி அழுகையும் ஆற்றாமையுமாய் அதனைப் பார்த்துக்கொண்டிருக்கும் எங்கள் அனைவரிடமும் காட்டிவிட்டு பார்த்தியா? என்று பெருமிதம் கொள்வதில் விஜிக்கு ஒரு மகிழ்ச்சி இருந்தது.

ஹேய், எங்கப்பா வாங்குன, எவ்ளப்பா, ஏ, ஏய், விஜி, இது மட்டும் கொஞ்சோண்டு எனக்குத் தரியாப்பா என்றபடி விஜியை நாயகியாய் நிறுத்தி நாங்களெல்லாம் பரிதாபமாய் கையேந்தும் போது, இல்லப்பா எங்க ஆயாக்கு தெரிஞ்சா திட்டும் என்று சொல்லும் விஜியின் மனது எங்களனைவரையும் அந்தக்கணம் ஜெயித்துவிட்டதற்கான திருப்தியை இந்த நிகழ்வின் மூலம் அடைந்திருக்க்கூடும்.

அதது வாங்கியாரத வெளிய எடுத்தாருதுங்களா, நீ மட்டும் வாங்கித் தந்தா வெச்சிக் கடைப்பரப்பி காமிச்சிக்கிட்டு இர்ரு என்று விஜி ஆயாவின் கணீர் குரல் பெரிய வட்டத்தில் சப்பணமிட்டுக்கொண்டு காணாததை கண்டதாய் விழி விரித்துக்கொண்டிருக்கும் எங்களை நோக்கி ஒலிக்கும். ஒருவரையொருவர் கேள்விக்குறிகளுடனும், நமுட்டுச்சிரிப்புடனும் பார்த்துவிட்டு கலைந்து போவோம். விஜியின் ஆயாவால் விஜிக்கு இப்படி வாங்கித் தரமுடியாதென்பதும்,மேலும் நம்மப் போட்டு பிராண்டாம இருந்தா சரி என்று ரகசியமாய் விஜியின் திருட்டுக்கு அவர்கள் ஒன்றும் சொல்லாமல் உடனிருப்பதும் எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் அம்மாக்களுக்கும் தெரியும். அதனாலேயே விஜியோடு அதிகம் அளவளாவக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தோம்.அவளோடு அதிகம் ஒட்டுவதோ, குறிப்பாய் அவளோடு ஜோடி போட்டுக்கொண்டு கடைக்குப்போவதென்பது கூடவே கூடாது. மீறினால் முதுகுத்தோல் பழுத்துவிடும் அபாயமிருப்பதால் அனேக நேரங்களில் ரகசிய சமிக்ஞைகள் மூலம் கோவிலுக்கு போகும் சந்திப்புகள் தாம் சாத்தியப்பட்டன.

இயல்பாகவே சிகப்பாகவும் கொஞ்சம் உயரமாகவும் இருக்கும் விஜி ட்ரஸ் செய்யும் அழகே தனி. குறைந்த தலைமுடிதான் என்றாலும் அழுக்கு நிறைந்த சீப்பின் அடர்த்தியான சிறுபற்களால் முன்னால் இருக்கும் சிறுசிறு முடிகளை அப்படியே நீவி இரண்டு பக்கமும் படிய வி ஷேப்பில் செய்து கொள்ளும். இந்தப்பக்கமும், அந்தப்பக்கமும் உருளையாய் முடியை அழகாய் சுருட்டி விட்டுக்கொள்ளும். ட்ரஸுக்கு மேட்சாய் விதவிதமாய் ஒட்ற பொட்டுக்கள் வைத்துக்கொள்ளும். கண்களின் ரெண்டு பக்கமும் இழுத்து விடப்பட்ட மை, மெல்லிய புருவங்களில் அடர்த்தியாய் தடவ மைப்பென்சில் (அது ஹைப்ரோ பென்சில் என்பது அதற்கும் ரொம்ப நாளைக்குப் பிறகுதான் இந்த லூசுக்கு தெரியவந்தது!) கன்னங்களில் ஜிகினா போட்டுக்கொள்ளும். உதட்டில் சிகப்புச்சாயம், அதற்கு மேல் வழவழப்பு எண்ணெய் என பார்க்கவே வித்தியாசமாய் இருக்கும், ஆனால் அழகாய், மிக அழகாய் தெரியும்.

நல்லா ஆட்டக்காரிச்சி மாதிரி இருக்குப்பாரு என்றே நிறைய அம்மாக்களும் வளர்ந்த அக்காக்களும் முணுமுணுப்பார்கள். எல்லாம் போக விஜிக்கு எங்கேயோ ஒரு கடையில் பார்த்த மேக்கப் செட்டின் மீது அதிக ஆசை வந்திருந்தது. திருட்டினால் மட்டுமே நிறைய பொருட்களை கை கொள்ள முடியாததென்பது தெரிந்தபோது விஜி எட்டாம் வகுப்பு அரைப்பரிட்சை லீவிலேயே அந்தத் தெரு அக்காக்கள் சிலரோடு சேர்ந்து எக்ஸ்போர்ட் ஹெல்ப்பர் வேலைக்கு போக ஆரம்பித்துவிட்டது. விஜியின் ஆயாவும் ஏதும் சொல்லவில்லை, சொல்லப்போனால் அவர்கள் எதிர்பார்த்ததும் அதுதான். விஜி கல்யாணத்துக்கு விஜியே சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமிருந்ததும் ஒரு காரணம்.

சம்பளம் ஆயாவிற்கு, ஓவர் டைம் சம்பளம் தனது மேக்கப்பிற்கு என்று அப்போதே வகைப் பிரிக்கத் தெரிந்திருந்தது விஜிக்கு. எல்லாம் போக விஜிக்கு தன்னை எல்லோரும் திரும்பிப் பார்க்கச் செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்போதுமிருந்தது. நாங்கள் அண்ணன்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களையெல்லாம், விஜி, ஏ, அவன் என்னப் பார்க்கறாண்டி, வேலைக்குப் போகும் போது சைக்கிள்ள பின்னாடியே வர்ராண்டி என்பதாய் கதை சொல்லும்.

லவ்வு, லவ்வு என்று சொல்லிக்கொண்டு அங்கொன்றும், இங்கொன்றுமாய் தெருவில் சில அண்ணாக்களும், அக்காக்களும் ஆளுக்கொருவரை இழுத்துக்கொண்டு ஓடி அரும்பாகி, மொட்டாகி, பூவாகிக்கொண்டிருந்த எங்களுக்கு காதலை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

ஓஹ், அப்ப ’அது’வா இது என்றபடியே நாங்கள் குசுகுசுப்பது விஜிக்கு புளகாங்கிதத்தை தந்தது. அவன், இவன் என்று ஏக வசனத்தில் ஒரு கட்டத்தில் தெருவில் பாதிப்பேர் தன் பின்னாடி சுற்றுவதாய் பாவனை செய்துகொண்டு அளந்து விட்டுக்கொண்டிருந்தது. அந்த வயதில் எங்களுக்கும் ஒரு குறுகுறுப்பு தேவைப்பட்டதால் அப்டியா என்று வாய் பிளந்து கேட்க அந்தக் கதைகள் மிக சுவாரசியமாய் இருந்தது.

ஆனால் விஜி குறிப்பிட்ட அனைவருமே வெவ்வேறு அக்காக்களைத் தான் கல்யாணம் செய்து கொண்டார்கள். அழகாய் இருந்தாலும் விஜிக்கு காதல் தோல்வி என்று ஒன்று ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று பின்னாளில் தான் எங்களுக்குத் தெரியவந்தது. பாவாடை தாவணி முடிந்து, எங்களுக்கு புடவையை அறிமுகப்படுத்தியது விஜிதான். அதற்குப்பின்னர்தான் விஜி எங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே போனது. நட்பு என்று சொல்லிக்கொண்டிருந்த எங்களின் வட்டம் தாண்டி விஜிக்கு வெளி வட்டம் அதிகமாகத் தொடங்கியது.

தெருவில் நடந்த ஒரு பொங்கல் பண்டிகைக்கொண்டாட்டத்தின் போதுதான் விஜிக்கு வாழ்வின் இன்னொரு பக்கமும் ஆரம்பித்தது. தமிழர் திருநாள் கொண்டாட்டம் வெகு விமரிசையாகக்கொண்டாடப் படவேண்டும் என்ற சில இயக்கங்களின் சினிமா பாட்டு கொண்டாட்டத்தில் இணைந்திருந்த விஜி தனது அதிக பட்ச குதூகலத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு சூப்பராய் டேன்ஸ் ஆடியதாய் நிகழ்வுகள் காதுக்கு வந்த வண்ணமிருந்தன. அந்த ஆட்டம் அது வாழ்க்கையே மாற்றும் என்று எங்களுக்கு மட்டுமல்ல விஜிக்கும் தெரியாது.

ஒரு கொண்டாட்டம், ஒரு பாட்டு, ஒரு ஆட்டம், பொதுவில் போட்ட ஆட்டத்திற்குப் பிறகு விஜியின் கன்னம் நோக்கி நீண்ட ஒரு ஆணின் அடி. தெருவில் ஏன் இப்படி ஆடுகிறாய் என்று அடிக்குப்பின்னர் ஒலித்த குரலிலும், அடியிலும் தான் இதுவரை யாரிடம் அனுபவிக்காத அக்கறை இருப்பதாய்ப்பட்டது. அதுவரை ஆயாவிடமும், அப்பாவிடமும் வாங்கிய அடியைத் தவிர்த்து இந்த அடி பரவசம் தந்தது. அடித்த கரமே தன்னை அணைக்கும், காக்கும் என்று நம்பியது. அம்மா(க்கள்) இல்லாத, அப்பாவின் அன்புமற்று, ஆயாவின் அரவணைப்பு மட்டுமே தனக்கு உண்டு என்ற நிலையையே தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் காதலில் ஜெயித்தாள். அடுத்த பொங்கல் பண்டிகை வரும் போது விஜி கல்யாணமாகி குழந்தை பெறுவதற்கும் தயாராகி இருந்தாள்.

ஆனால் தன்னை நோக்கி நீண்ட நேசக்கரங்கள் பின்னாளில் அடிதடி, வெத்து, குட்டுக்களில் உடந்தையாயிருக்கும் என்பதோ அதனைத் தொடர்ந்து அவள் மீண்டும் தன் வாழ்க்கையின் முதல் சுற்றுக்கே போகப்போகிறாள் என்பதோ அப்போது அவளறியாதது.

தன்னை அழகுப்படுத்திக்கொள்ள மெனக்கெட்ட அளவுக்குக்கூட விஜி தன் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்க மெனக்கெடவில்லையோ? என்ன மெனக்கெட்டு என்ன?

புரியாத புதிராய் எந்த நிமிடம் சந்தோஷம், எந்த நிமிடம் துக்கம் என கண்ணெதிரே வரப்போகும் அடுத்த நொடியே நமக்கு தெரியாமல் மறைவாய் இருக்கும் வாழ்க்கை சிலருக்கு வரம், பலருக்கு சாபம். கிடைத்த சாபத்தையும் வரமாய் மாற்றிக்கொண்டவர்கள் சிலர். சாபத்தை தலையெழுத்தாக ஏந்திக்கொண்டு சகித்துக்கொண்டவர்கள் தான் பெரும்பாலும். விஜி பெரும்பாலானவர்களில் ஒருவளாய் உலவுகிறாள்.

11 January 2010

பார்த்தும் பாராத விநாடிகள்

ஒரு நிமிடத்திற்கும்
குறைவான நொடிகளே
தேவைப்படும்

சட்டென புறங்காலில்
ஏதோ பட்டதைப்போல
திரும்பவேண்டும்

நேரம் பார்ப்பதைப்போல
மணிக்கட்டை நோக்கி
தலை கவிழவேண்டும்

கடிகாரமில்லையெனில்
கைபேசியை தீவிரமாய்
ஆராயவேண்டும்

கையில் ஒரு குழந்தையிருப்பின்
இன்னும் வசதி
எங்கோ வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கும்
குழந்தையிடம்
என்னடா ஆச்சு? என்று வினவ வேண்டும்

போதும்
இடைப்பட்ட இந்த நேரத்தில்
நீங்கள் பார்த்துப்பார்த்து பழகிய நபர்
தற்செயலாய் இப்போது பார்க்க நேரிட்ட
பழக விரும்பா நபர்
உங்களை கடந்திருப்பார்

உங்களை கடந்தவரின் பின்புறம் பார்த்து
அவரை நீங்கள் புறந்தள்ளிவிட்டதாய்
ஒருபோதும் நினையாதீர்கள்

இந்த உங்களின் கால அவகாசமும்
முகம் திருப்பலும்
அவருக்கு(ம்) தேவையாயிருந்திருக்கும்
பார்த்தும் பார்க்காதது போல
உங்களைக் கடக்க.

குறிப்பு: 'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு' கவிதைப் போட்டிக்கான கவிதை

06 January 2010

காணாமல் போன செட்டியார்

புத்தருக்கு போதிமரம் போல செட்டியாருக்கு பஜனை கோவில் கருங்கல் படியே பிரதானம். உண்ண மாத்திரம் தான் வீட்டுக்கு வருவது போல தெரியும், மத்தபடி மீதி நேரமெல்லாம் அவரின் வாழ்க்கை எதிரே இருக்கும் பஜனை கோவில் கருங்கல் படியில் தான் ஒண்டிக்கொண்டிருந்தது. தன் ஒத்தை நாடி சரீரத்தை சரியாய் உள்வாங்கிக்கொண்ட அந்தக் நீள கருங்கல் இருந்தது அவருக்கு தன் வீட்டை விடவும் மிகவும் வசதியாய் போனது. படி என்றால் அப்படியே இழைத்து இழைத்தெல்லாம் செதுக்கி தெப்பக்குளம் படிகள் போல அடுக்கி வைத்தாற் போல ஒரே வரிசையாகவோ, இல்லை நம் வீட்டு வாசற்படி போலவோ இருக்காது. ச்சும்மா எங்கேயோ கிடந்த கல்லை ரோட்டோரமா நகர்த்தி விட்டாற் போல, ஒன்னுக்கு கீழ ஒன்னா கரடு முரடா மூணு நீள கருங்கல் இருக்கும்.

செட்டியார் போலவே வீட்டில் வெற்று நாட்டாமை செய்துகொண்டு இருக்கும் மீதி மூன்று பேருக்கும் அந்த கருங்கற்கள் தான் நிரந்தர இருப்பிடம். நான்கில் ஒன்று வலிப்பின் காரணமாக கல்யாணமாகா பிரம்மச்சாரி, மீதியிரண்டும் வீட்டில் மருமகள் பிடுங்கல் தாங்காமல் இங்கே உட்கார்ந்து பல் குத்திக்கொண்டிருப்பவர்கள், இதில் நமது செட்டியாருக்கு மட்டுமே ஐந்து பிள்ளைகளை கரையேற்றும் ஆகப் பெரும் பொறுப்பு இருந்தது. ஆனால் அவரோ அதை மிகச் சுலபமாக செட்டியாரம்மாள் தலையில் இறக்கிவைத்து விட்டு, மதியான நேரத்தில் கருங்கல் மீதமர்ந்து தாயபாஸ் ஆடிக்கொண்டிருந்தார். சாயங்காலம் டீக்கடை, எட்டு, எட்டரைக்கு சாப்பாடு, ஒம்பது மணிக்கு பஜனை கோவில் கருங்கல் என்று செவ்வனே பொழுதோட்டிக்கொண்டிருந்தார்.

இப்போது காலையில் என்ன செய்வார் என்று கேள்வி வருகிறதா? காலை மூன்று மணிக்கே செட்டியாரம்மாள் எழுந்து கொத்தவால் சாவடிக்கு காய்கறி வாங்க புறப்பட்டுவிடுவார். காய்கறி வாங்கிக்கொண்டு அப்படியே பஜாரில் இருக்கும் கடையில் அமர்ந்து வியாபாரம் முடித்துப் பின் இரண்டு, மூன்று மணிக்குதான் வீடு திரும்புவார்கள்.

அவர் தம் புத்திர சிகாமணிகளான மூத்தவள் உமாவை எழுப்பி பாத்திரம் தேய்த்து, வீட்டை பெருக்கி வைக்கச் செய்வது, இரண்டாமவன் மூர்த்தி தண்ணீர் பிடிக்க சொல்வது, நான்காவது மஞ்சுளாவுக்கு ஐந்தாவதும் கடைக்குட்டியுமான சுரேஷை பார்த்துக்கொள்ளும் வேலை, மூன்றாவது பையன் தேவாவுக்கு டீக்கடைக்கும், இட்லி கடைக்கும் போய் வரும் வேலை. இட்லி கடை ஆயாவுக்கு முதல் போணி ஆவதே செட்டியார் குடும்பத்தாரால் தான். வீட்டு வேலைகளெல்லாம் முடிந்த பின்னர் ஒவ்வொன்றையும் கார்ப்பரேஷன் ஸ்கூலுக்கு பத்திவிடும் மேய்ப்பன் வேலையை மட்டுமே செட்டியார் செவ்வனே செய்து வந்தார். கவனிக்கவும் “நல்” மேய்ப்பரில்லை.

புத்திர சிகாமணிகள் நான்காய் இருக்கும் வரை எந்தப்பிரச்சினையுமில்லை. மழைக்காலம் வந்ததால் செட்டியாரின் கருங்கல் மெத்தைக்கும் பங்கம் வந்தது, மெத்தை அடித்துக்கொண்டெல்லாம் போகவில்லை, ஓங்கி அடிக்கும் மழைச்சாரலில் செட்டியார் எங்கே அடித்துக்கொண்டு போய்விடுவாரோ என்று பயந்து வீட்டுக்குள் ஒண்ட, விளைவு ஐந்தாவது நான்காம் மாதத்தில் பால்குடி நிறுத்தியதால் சதாசர்வகாலமும் கை சூப்பிக்கொண்டிருந்தது. இப்போது இந்தக் கடைக்குட்டியை மேய்ப்பதுதான் பெரிய த்ராபையாய் இருந்தது செட்டியாருக்கு.

குடித்தன வாசலே காலியாயிருக்கும் ஒரு பத்துமணிக்காய் மூக்கொழுகிக்கொண்டிருக்கும் பிள்ளையைத்தூக்கிக்கொண்டு பஜாருக்குப் போவார். பிள்ளையை செட்டியாரம்மாவிடம் கொடுத்துவிட்டு அவர் வியாபாரம் செய்வார் என்று கனவிலும் நினையாதீர்கள். பிள்ளையை மடியில் கிடத்திக்கொண்டும், பக்கத்து டீக்கடையிலிருந்து பால் வாங்கிக்கொடுத்துக்கொண்டும் கூடவே வியாபாரத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் பொறுப்பு செட்டியாரம்மாளையே சாரும். அங்கே போயும் நம்மாளுக்கு மேற்பார்வைதான். என்னா இது, இன்னும் இந்தக்காய் விக்கவே காணும், ஏன் இதைப்போயி வாங்கியாந்த. அந்தக்காய்தான் போனவாரமே மீந்துப்போச்சே அதையேன் இந்தவாரம் வாங்கியாந்து அழுக வைக்கிறே, எது விக்கிதோ அதப்பார்த்து வாங்கியாரத் தெரியாதா உனக்கு என்று சவுண்டு விடுவதன் மூலம் தான் குடும்பத்தலைவன் என்பதை பஜாரின் அக்கம்பக்கத்து கடையாட்களுக்கு நிரூபிப்பார். இரண்டு மணிவரை வேவா வெயிலில் உட்கார்ந்து கொண்டு காயை விற்றுவிட்டு, அந்தப் பெரிய கூடையை தூக்க மாட்டாமல் தூக்கிக்கொண்டு செட்டியாரம்மாள் பின்னால் வர, கடைக்குட்டியைத் தூக்கிக்கொண்டு செட்டியார் சிட்டாட்டம் வீடுவந்து பூட்டைத் திறப்பார். அதோடு அவரின் அன்றைய கடமைகள் முடிந்தது.

அப்படியேத் திரும்பி எதிரே இருக்கும் பஜனைகோவிலுக்கு போனாரென்றால் களை கட்டத்தொடங்கும் தாயபாஸ். இங்கே செட்டியாரம்மாள் அடுப்போடு புஸ், புஸ் ஸென்றும், லொக்,லொக்கென்றும் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு அன்னலட்சுமி அவதாரம் எடுக்கத்தொடங்கியிருப்பார்கள். ஊத ஆரம்பித்து அரைமணி நேரம் கூட போயிருக்காது, தாயபாஸில் நான்கு நடுக்கட்டங்களிலும் காயை கட்டிவிட்டு, த்தோ சாப்பாட்டுக்கு போய்ட்டு வந்துடறேன் என்றபடி தன் தலைக்கு பங்கம் வராதபடி ஒரு ஆளை நியமித்துவிட்டு வருவார். அந்த காய் வேவாத சாம்பார வெக்க எவ்ளோ நேரம், ஆன வரைக்கும் போதும், போடு என்றபடியே அவசர அவசரமாய் விழுங்கிவிட்டு தலை வெட்ட புறப்பட்டுவிடுவார். அடுத்தாற் போல ஆளுக்கொன்றாய் ஓடிவரும் ஸ்கூல் பிள்ளைகளுக்கு சாப்பாடு போட்டு, தானும் சாப்பிட்டு, துணி துவைத்து, செட்டியாரின் வேட்டிகளுக்கு நீலம் போட்டு, செட்டியாரம்மாள் குளித்து முடிக்கும்போது மணி ஏழைத்தொட்டு இருக்கும். இதற்கிடையில் ஒரு தோப்பு, ரெண்டு ஜெயிப்பு (எல்லாம் தாயபாஸில் தான்)எனப் பார்த்துவிட்டு டீக்கடைக்கு அரசியல் நியாயம் பேசப் போய்விடுவார்.எல்லாத்தையும் ஒரு சேர முடித்துவிட்டு வெறுந்தரையில் தன் சேலையை விரித்து தலைக்கு கையை அண்டக்கொடுத்தவாறே ஏய், உமா தம்பிய பார்த்துக்கோ..... கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று அலுப்பில் குறட்டை விட ஆரம்பித்துவிடுவார். அதற்குப்பிறகு அந்த வீட்டின் மீது இடியே விழுந்தாலும் உமா தான் தாங்க வேண்டும்.

ஒன்பது மணிக்கு செட்டியார் வந்து தன் வயிறை ரொப்பி உங்கம்மாவ எழுப்பி சாப்பிட சொல்லும்மா என்றபடியே வேட்டியின் ஒரு முனையால் வாயைத்துடைத்துக்கொண்டு, பாய் தலைகாணி சகிதம் பஜனை கோவில் கருங்கல்லில் கட்டையை சாய்க்கக்கிளம்பிவிடுவார் இதற்குப்பிறகு எம்பெருமான் செட்டியார் துயிலெழ காலை மணி ஐந்து அடிக்கவேண்டும்.

முன் தூங்கி முன்பதற்கு முன்பே எழுந்த செட்டியாரம்மாவோ மறுநாள் காலை சிற்றுண்டிக்கான செலவை மாடத்தில் வைத்துவிட்டு, மூலைக்கொன்றாய் தூங்கும் பிள்ளைகளைத் தாண்டி தாண்டி கொத்தவால் சாவடிக்கு புறப்பட்டுவிடுவார். நாய் குரைத்து முடித்து உறங்கத் துவங்கியிருக்கும் நிசியில் அந்த ஒத்தை பொம்பிளை கூடையை நகர்த்திக்கொண்டு கொத்தவால் சாவடிக்கு பத்திரமாய் போய் வருவது குடியிருக்கும் வாசலில் இருக்கும் அனைத்துப்பெண்களுக்கும் இன்ஷ்பிரேஷனாய் சொல்லிக்கொள்ள வாய்த்தது. .
இதை சொல்லி சொல்லியே செட்டியாரம்மாவுக்கு குளுக்கோஸ் ஏற்றி அவரிடம் இருக்கும் மீந்த காய்கறிகளை சும்மாவோ இல்லை ரெண்டு ரூபாய்க்கோ வாங்கிப்போய் தன் வீட்டில் குழம்பு வைத்துவிடுவார்கள்.

இப்படி செட்டியாரம்மா காய்கறிகளை விற்க, செட்டியார் காய்களை வெட்ட (மறந்துவிடாதீர்கள் தாயபாஸ்) என ஊர்ந்துகொண்டிந்த அவர்களின் வாழ்க்கை மேல் மாநகராட்சி பஸ்ஸை விட்டது. வேறொன்றுமில்லை, சில பேருந்துகளை அந்தப்பக்கம் வரச்செய்ய ஏதுவாய் பஜார் ரோட்டை அகலப்படுத்தும் பணி துவங்கியது. நடைபாதைக் கடைகள், அதற்குக்கீழே காய்கறி விற்பவர்கள் என அனைவருக்கும் வேறு இடம் காட்டி அங்கு போய் கடை விரிக்கச்சொல்லிவிட்டது. சமயம் பார்த்து செட்டியாரம்மா தன் தம்பி கல்யாணத்துக்கு செட்டியாரிடம் இரண்டு நாள் விடுப்பு வாங்கிக்கொண்டு போயிருந்தார். அம்மா வீட்டுக்கு போனவுடன் அது நான்கு நாட்களாக நீட்டிக்கப்பட்டது.


மாதத்தில் வரும் அமாவாசை, கிருத்திகை, இன்னபிற பண்டிகை நாட்களில் எவ்வளவு முக்கியமான வீட்டு விசேஷமாக இருந்தாலும் செட்டியாரம்மாவை செட்டியார் அதற்கு அனுப்பமாட்டார். காரணம் அன்றுதான் காய்கறிகள் கொஞ்சம் கூட விற்று செட்டியாரும் தன் பங்குக்கு கொஞ்சம் கல்லா கட்டிக்கொள்ள முடியும். அதனாலேயே செட்டியாரம்மாவின் தம்பி கல்யாணம் பண்டிகை நாட்கள் பக்கம் வராதமாதிரி பார்த்துக்கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் கார்ப்பரேஷன்காரன் வந்து ரோட்டை கலைப்பான் என்று செட்டியாருக்கு தெரியாத காரணத்தால் பர்மிஷன் அளித்து உடன் தானும் போய் கல்யாணவீட்டில் அமர்ந்துகொண்டார். திரும்பி இங்கு வந்து பஜார் ரோட்டுக்கு போனால், அங்கு ரோடே விரிச்சோ என்றாகி நியமிக்கப்பட்ட இடங்களை ஏற்கனவே மற்ற கடைக்காரர்கள் துண்டு போட்டுவிட்டார்கள். போனால் போகுதென்று செட்டியாரம்மாவுக்கு மூலையில் ஒரு இடம் ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

இதற்கு முன்னர் கடை வைத்திருந்த இடம் எல்லோர் பார்வையிலும் பட்டு நன்றாக வியாபாரமாகி நாலு காசு பார்க்கமுடிந்தது. இப்போது நிலைமை தலை கீழ், வாடிக்கையாளர்கள் இவ்வளவு தூரம் வர பால்மாறிக்கொண்டு முனைக்கடையிலேயே தன் கொள்முதலை முடித்துக்கொண்டது செட்டியாரம்மாவின் வியாபாரத்துக்கு மட்டுமல்ல செட்டியாரின் பாக்கெட்டு சில்லறைக்கும் வந்த இடி இப்படியே ஒரு மாதம் போகவில்லை, வியாபாரத்தில் வரும் வருமானம் போதவில்லையென்று செட்டியாரம்மாவை விட செட்டியார் மிகவும் கவலைப்பட்டார். கவலைப்பட்டதோடு நிறுத்திக்கொண்டார். ஆனால் செட்டியாரம்மாதான் இதே மாதிரி இருந்தா ரெண்டு பொம்பளை பிள்ளைகளை கரை சேர்ப்பது எப்படி என்ற கவலையில் செட்டியாரை ஏதாவது வேலைக்கு போக சொல்லிவிட்டார்கள். அவ்வளவுதான் செட்டியார் மூஞ்சை தூக்கி வைத்துக்கொண்டு முடக்கடி செய்ய ஆரம்பித்துவிட்டார். பதிலுக்கு செட்டியாரம்மாவின் உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் பஞ்சாயத்தை ஆரம்பித்து ஏழு பேர் கொண்ட குடும்பத்துக்கு,செட்டியாரும் ஒரு வேலைக்கு போயே ஆகவேண்டும் என்று தீர்ப்பளிக்க, மறுநாள் காலை கருங்கல் படுக்கை காலியாக இருந்தது.

அன்று காலை பிள்ளைகள் அப்பாவை காணாமல் வியாபாரத்துக்கு போயிருந்த அம்மாவிடம் போய் முறையிட, அனைவரும் ஆளுக்கொரு மூலையாய் தேடினார்கள். இரண்டு நாள் கழித்து செட்டியாரே தான் திருக்கழுக்குன்றத்தில் தன் உறவினர் ஒருவர் வீட்டிலிருப்பதாய் செய்தி அனுப்பினார். சகல மரியாதைகளோடு அவரை அங்கிருந்து கூட்டிவந்து, வீட்டில் யாரும் ஏதும் சொல்லாமல் வேளா வேளைக்கு கருங்கல் மேடைக்கு டீயும், சாப்பிட வா ப்பா என்று பிள்ளைகளை தூதனுப்பியும் செட்டியாரம்மாள் சௌகரியத்துக்கு குறை வராமல் பார்த்துக்கொண்டார்கள். செட்டியாரும் முகச்சவரமும், மடித்துவிட்ட நீளக் கை சட்டையுமாய் புதுப்பொலிவுடன் வளையவந்தார். இவர் இப்படி இருப்பது வேலைக்குப் போய் குடும்பத்தை பார்த்துக்கொண்டிருக்கும் மத்த ஆண்களுக்கு உறுத்தி, அவர்கள் கண் பட்டதன் திருஷ்டியோ என்னவோ செட்டியாரின் அமைதி வாழ்கைக்கு மீண்டும் பங்கம் வந்தது. இந்த முறை இதற்குக்காரணம் மாநகராட்சி அல்ல, மூத்த பெண் உமா.

பெரியவளாகி உட்கார்ந்துவிட, சடங்குகளெல்லாம் முடிந்த பின்னர் மீண்டும் செட்டியாரம்மாவின் கவலை தலைதூக்க முணுமுணுப்பு தொடங்கியது. செட்டியாரும் தன் பங்குக்கு தாடி வளர்த்துக்கொண்டு தானும் கவலை கொள்வதாய் பாவ்லா காட்டினாலும் யாரும் ஏற்றுக்கொள்ளாமல் மீண்டும் அவரை வேலைக்கு அனுப்ப செய்வதிலேயே குறியாய் இருந்தனர். மீண்டும் கருங்கல் படுக்கை காலியானது. இந்த முறை செட்டியாரம்மா தேடவுமில்லை, போகாதே போகாதே என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்று பாடவுமில்லை. போனவருக்கு வரத்தெரியும் என்று இருந்துவிட்டார்கள். அவரும் இவர்கள் தேடுவார்கள் என்று எதிர்பார்த்து, உறவினர் வீடு, அங்கே இங்கே என்று சுற்றி பத்துநாள் கழித்து வீடுவந்தார். மீண்டும் யுத்தம் தொடங்கியது.

செட்டியார் வீட்டில் முறைத்துக்கொண்டு சாப்பிடாமல் இருந்து பார்த்தார். ம்ஹூம் ஒன்றும் வேலைக்காகவில்லை. இந்த முறை தான் பீச்சில் விழுந்து சாகப்போவதாக மிரட்ட, அந்தத் தாக்குதலுக்கு மொத்தக்குடும்பமும் பணிந்தது. செட்டியாரம்மாவும் ஏதும் சொல்லத் தோன்றாமல், படித்துக் கொண்டிருந்த தேவாவையும், மூர்த்தியையும் படிப்பை நிறுத்திவிட்டு தச்சப்பட்டறைக்கு அனுப்பி வைத்தார். உமாவும் தன் பங்குக்கு வீட்டு வேலை செய்ய ஆரம்பித்தது. பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் தான் செல்லாக்காசுக்கும் மதிப்பில்லாமல் போவதை உணர்ந்த செட்டியார் மீண்டும் காணாமல் போனார். பிள்ளைகளுக்கு கல்யாணமாகும் வரையாவது இந்த மனிதனின் இருப்பு தேவையென்று செட்டியாரம்மாவே தன் பங்குக்கு தேடி அவரை மீட்டுக்கொண்டு வந்தார். இப்படியாய் உமா கல்யாணம் வரை தன் கண்ணாமூச்சி விளையாட்டைத் தொடர்ந்தார்.


உமாவின் கல்யாணத்துக்கு நிறைய கடன் ஆனதை காரணம் காட்டியும், மாமனார் என்ற புது அந்தஸ்து பெற்றிருப்பதாலும், மாப்பிள்ளை வீட்டுக்கு வரப்போக இருக்கும் போது ஏதாவது சொல்லிக்கொள்ள தேவையென்றும் செட்டியார் குறைந்தபட்சம் செக்யூரிட்டி வேலைக்காவது போகவேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்பட்டார். பகலெல்லாம் தாயபாஸ் ஆடினாலும், இரவு வாட்ச்மேன் வேலைக்காவது போவது நல்லது என்று செட்டியாரம்மாள் தன் முணுமுணுப்பை தொடங்க, மறுபடியும் கருங்கல் படுக்கை காலியானது.

எப்போதும் நடப்பதுதானே இப்போதும் என்றபடி செட்டியாரம்மாவும் அசட்டையாய் இருக்க இந்த முறை செட்டியாரம்மா கழுத்தில் பழுப்பேறி ஊசலாடிக்கொண்டிருந்த தாலிக்கயிறு கழற்றப்பட்டு, நெற்றியில் திருநீறு வைக்கவேண்டியதாய் போயிற்று. வேலைக்குப் போவதைக்காட்டிலும் சாவதே சாலச்சிறந்தது என்று செட்டியார் தன் உறவினர் வீட்டுக்குப்போய் தூக்கு மாட்டிக்கொண்டார்.

சாகற மனுசன் என் வீட்டுல செத்திருந்தாலும் இவ்வளவு நாள் என் வீட்டுல ராஜா மாதிரி இருந்த குறைக்கு கவுரமா தூக்கிப்போட்டு இருக்கலாம், இப்படி இன்னொருத்தர் வீட்டுல போய் செத்து தொலைச்சி காலத்துக்கும் எனக்கு கெட்டப்பேரு வாங்கிக்கொடுத்துட்டு போயிட்டாரே, இருக்கும்போதும் என்னை நல்லா வெச்சுக்கலை, செத்தும் என்னை நல்லா வெச்சுக்கலை என்றபடியே மூன்று மணி இருட்டுக்கு துணையாய் இருக்கட்டும் என்று காற்றில் தன் வார்த்தைகளை பறக்கவிட்டு காய் கூடையை சுமக்கிறார் செட்டியாரம்மாள். இன்னமும்.......

குறிப்பு: ஒடு வேய்ந்த ஒற்றைச்சதுரத்தை வீடு என சொல்லி, அதற்கு மாதம் நானூறு வாடகை வசூலித்து இந்தப்பக்கம் பத்து, அந்தப்பக்கம் பத்து என்று அடுக்கப்பட்ட இருபது குடித்தனங்களில் ஒவ்வொரு வீட்டிலும் சொல்ல நூறு கதைகள் இருந்தன. பண்டிகைகளும், திருவிழாக்களும் வந்தபோது அந்த வீட்டில் குடியிருப்பதே பிறவிப்பயன். காணும் பொங்கலுக்கு சோறு கட்டிக்கொண்டு கூட்டமாய் பீச்சுக்கு போகும்போது பெரியவர்களும், குழந்தைகளுமாய் ஒரு ஊரே கிளம்பிப்போவது போல் இருக்கும். அப்படி ஒரு ஊரைப்போல இருந்த நீள வரிசை வீடுகள் நான்கு சகோதரர்களால் பாகம் பிரிக்கப்பட்டு, ஆளுக்கொரு பக்கம் மாடிவீடு எழுப்பிக்கொண்டார்கள். ஆனால் அங்கு வாழ்ந்த மனிதர்களின் வாழ்வு இன்னமும் அங்குதான் உலவிக்கொண்டு இருக்கிறது. அப்படி அங்கு வாழ்ந்த மனிதர்களில் நெஞ்சில் நின்ற சிலரின் வாழ்க்கைதான் இருபது குடித்தனக்கதைகள் என்ற பெயரில் பதியப்படுகிறது இங்கே. இருபது குடித்தனத்தில் எங்களின் எதிர்வீட்டில் குடியிருந்தவர்களின் கதைதான் இது.சாதத்தில் உப்பு போட்டு வடித்து, குழம்பில் குறை உப்பு போடும் பழக்கம் அவர்களுடையது. ஒரு முறை அவர்கள் வீட்டு குழம்பை எங்கள் வீட்டு சோற்றில் பிசைந்து சாப்பிட, அய்யய்ய செட்டியாரம்மா, நீங்க குழம்புல உப்பே போடல என்று சொல்ல,நாங்க சாதத்துல உப்பு சேர்ப்போம்டி என்று சிரித்துக்கொண்டே உப்பு இடாத செட்டியாரம்மாள் இன்னும் நெஞ்சில் நிற்கிறார்.


04 January 2010

அமித்து அப்டேட்ஸ்

அனைவருக்கும் அமித்துவின் சார்பாக புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நான் அமித்துவிடம் : ஹாப்பி நியூ இயர்னா என்னம்மா ?

அமித்து: எல்லார்க்கும் கைகுடுக்கர்து, அதான் ஆப்பி ......

........

இந்த எண்ணத்தையெல்லாம் கொஞ்சம் மாத்துங்கம்மா என்ற வார்த்தைகளோடு ஒரு விளம்பரம் வரும்.

அமித்துவுக்கு சாப்பாடு ஊட்டும்போது இந்த விளம்பரம் கண்ணில் பட அந்த வரிகளை அவளிடம் ரீப்பீட் செய்தேன்.

இந்த எண்ணத்தையெல்லாம் கொஞ்சம் மாத்துங்கம்மா என்று அவளிடம் சொல்லிய போது,
பதிலுக்கு அமித்து அவளின் கைவிரல்களை துப்பாக்கி போல் நீட்டி, சிக்.. (சவுண்ட் எஃபெக்ட்டுங்க) மாத்திட்டேன், பார்ரு.

!!!!!!!!!!!!!!

.........

மழைபெய்து கொண்டிருந்த ஒருநாள் காலை, நானும் அமித்துவும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தோம். நனைந்து போய் ஒரு காக்கா சுவற்றின் மேல் வந்து உட்கார்ந்தது.

அமித்து: ஆந்த காக்கா பாவம்மா

நான்: ஆமாம்மா

அமித்து: ஆங்க அம்மா எங்க?

நான்: அது எங்கயாவது போய் இருக்கும்மா

அமித்து: அப்ப நீ காக்காக்கு அம்மாவா ப்போ

நான்: அப்ப உனக்கு அம்மா?

அமித்து: என்க்கு அம்மா சத்தீச், உள்ள தூங்குது, நீ காக்காக் கூட ப்போ. ப்போ, ஏந்திர்ரு...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

.........

அமித்துவும் அப்பாவும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். நாந்தான் கடக்கார், நீ எங்கிட்ட வாங்கு.

தக்காளி எவ்ளம்மா? அஞ்சுபா, பொம்ம எவ்வளவும்மா? பத்துபா, இந்த டர்ன் முடிந்து இப்போ அப்பா டர்ன், இப்போ நீ தான் கடக்கார்ரு, சூ (ஷூ) விய்யி என்றாள்.

சரிம்மா.

அமித்து: சூ எவ்ளோ ?

அப்பா: இருநூத்தி அம்பது ரூபாம்மா.

அமித்து: சர்ரி, இர்ரு, சூ சரியா இர்க்கான்னு ப்போட்டு பாக்குறேன்.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

.......


கதை விடுவதில் மேடம் செம கில்லாடி. ஏ,பி,சி,டி புக்கை எடுத்து வைத்துக்கொண்டு அதில் w for Watch என்றிருந்தால் அதுக்கும் மேடம் கதை சொல்லுவார்கள்.

ஒரு ஊல்ல ஒரு வாட்ச்சு இந்துதா, ஒர்ரு ஆள்ளு அதக் கட்டிக்னாரா, அப்றம், அப்றம் இப்போ மேடம் அவங்க ஒரு விரலை எடுத்து மோவாய்க்கும் கீழ் உதட்டுக்கும் சாய்வா வெச்சுப்பாங்க (நாங்க யோசிக்கிறோம்ல)
ம், அப்றம், அந்த வாட்ச்சு டேம் காட்டுச்சு?

நான்: ஏலோ டைம்மா?

அமித்து: எட்டு மணிம்மா

....

டிசம்பர் 12லிருந்து எதையாவது செய்துவிட்டு, நாங்கல்லாம் ஆர்ரு, ரஞ்சனில்ல (ரஜினி இல்ல) என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

ரெண்டு, மூணு நாள் சென்றபின், தெளிவாக நாங்கல்லாம் ஆர்ரு, ரஜினியில்ல என்றானது.

இப்போதெல்லாம், எதையாவது செய்துவிட்டு, நாங்கல்லாம் யார்ரு, வர்ச்சினியில்ல? என்றாகிறது

!!!

........


அமித்து சொன்னவுடன் அவளைத் தூக்கிக்கொள்ள வேண்டும், கீழ்ழ போலாம்மா என்றாள் உடனே போகவேண்டும்.

அவள் சொன்னதை செய்யாமல் நாம் பாட்டுக்கு நமது வேலையை செய்துகொண்டிருந்தால்,

மேடம் ஒரு சிணுங்கலோடு, ஏன் எச்சோ, இபி பண்ணுற, ச்சொன்ன பேச்ச கேக்காம....... பாப்பா சொல்றன்ல.. தூக்கும்ம்மா..

:))))))))

.........

அமித்துவை சாப்பிட வைப்பது மிகவும் கடினம். சாப்பாடு கிண்ணத்தை வைத்துக்கொண்டு, டிஸ்கவரி சேனல் போட்டுவிட்டு சிங்கம் பாக்கலாம்ம்மா, சாப்பிடுமா

வேணாம்

சாப்ட்டுக்கிட்டே ரக்‌ஷன் வீட்டுக்கா போய் வேடிக்க பாக்கலாமா?

வேணாம்

கீழ போய்

வேண்ணாம்

சரி, நம்ம எல்லாரும் பார்க் போலாம், நீங்க சீக்கிரம் சாப்பிட்டுருங்க

வேண்ணாம், இப்போ பார்க்கு மூடி இர்க்கும்.

........

நோட்டில் கலர் பென்சில் வைத்துக்கொண்டு முட்டை, முட்டையாய் எதையாவது கிறுக்கிவிட்டு,

அப்பா, கரக்க்ட்டா இது என்னான்னு சொல்லு?

பதிலுக்கு அமித்து அப்பாவும், ஹைய் இது காக்காடா, பாப்பா சூப்பரா வரைஞ்சுட்டீங்களே!!

ஓக்கே, இப்போ இத்து என்னான்னு ச்சொல்லு? இப்போது இன்னும் கொஞ்சம் சாய்வாக இன்னொரு முட்டை

ஹே, இது பூனைடா?

இல்ல, த்தப்பு, இத்து கோழ்ழீ

.......

அமித்து அப்பாவின் பென் ட்ரைவை சஞ்சு எடுத்து இது என்னது சித்தப்பா என்று கேட்டுக்கோண்டிருக்க,

அமித்துவோ, ஏய் அக்கா அத எக்காத, வெச்சிடு, எத்தின்னா அப்பாவ ஆப்பிச்ல அடிப்பாங்க? வெச்சுடு........

......

கார்த்தி அமித்துவிடம், பாப்பா, நாங்க எல்லாரும் பாய் போறோமே என்றான்.

பதிலுக்கு மேடமோ, நாங்க கூட தான்டா, எங்க அப்பா, எங்க யச்சோ, எங்க அம்மா, எங்க மம்மீ எல்லார்ரும் போர்றோம்.

!!!

........

ஒரு பொம்மை செல்போன் இருக்கிறது, மேடம் யாருக்காவது போன் செய்யவேண்டுமென்றால் அதைத்தான் பயன்படுத்துவார்கள் (சிலசமயங்களில்)

ஹல்லோ, யார்ரு, உம்மா (உமா) ஆண்ட்டியா? நல்லாக்கீங்களா?

போனை பக்கத்தில் இருந்த கார்த்தியிடம் தந்து, இந்தாடா கார்த்தி, உம்மா ஆன்ட்டிடா, பேசுடா என்றாள்.

அவன் போனை வாங்கிவிட்டு என்னைப்பார்த்து வெட்கசிரிப்பு சிரித்துவிட்டு, இந்தா பாப்பா, அவுங்க பேசலை என்று திருப்பி தந்துவிட்டான்.

ஹல்லோ, .......ம்ம்ம்... ஒரே டையோடாஆ இர்க்கா? சர்ரி, போன்ன வெச்சிர்ரன்.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்... (டையோடா = டையர்டா)

.........

வேர்ர வேர்ர வேர்ர வேட்டக்காரந்தான்டா வேண்ணும்

வர்ஷினி, அதெல்லாம் சொல்லக்கூடாது

நான் சொல்லல எச்சோ, வேட்டக்காரன் தான் சொன்னான்

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

.........


வீட்டில் மீன் தொட்டி இருக்கிறது. நானும், அமித்துவும் மீன் தொட்டியை வேடிக்கைப்பார்த்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கும் போது,

அமித்து: மீன்னு, எச்சோவ வந்து கடி, வா

நான்: மீன் தொட்டில இருக்கே, என்னை எப்படி கடிக்கும்?

அமித்து: அது தொட்டில இருந்து அபி ஏறி, இபி வந்து, இபி பெட்டு மேல வந்து அபியே உன்னக் கச்சீரும்

நான்: அம்மாக்கு வலிக்கும்ல, ரத்தம் வரும்ல

அமித்து: மீன்னு எச்சோவ கடிக்காத, எச்சோ பாவம், நல்ல பொண்ணு நீ கடிக்காத போய்டு உங்க வீட்டுக்கு.


நாங்கல்லாம் யார்ரு, நல்ல பொண்ணுல்ல ;))))))))