27 February 2009

ஒப்புக்கு அழு

தூக்கு போட்டு செத்த
நாகராஜன் அண்ணா
சாவுக்கு அழவேயில்லை
ஜானகி அக்கா
மனைவியாக இருந்தபோதும்

தம் அப்பா செத்ததற்கு
அழவேயில்லை
ராணியும், ராஜேஸ்வரி அக்காவும்

எதிர்வீட்டு பெண்ணின்
அம்மா மஞ்சள் காமலையில்
செத்த போது
அந்தச் சின்னப்பெண்ணின்
அழுகையே அன்று முழுவதும்
பேச்சாக இருந்தது.
பிணத்துடன் மாலை மாற்றிக்கொண்ட
போதுமட்டும் கடைவிழி நீர் உகுத்த
கணவனை
வசைபாடித் தீர்த்தனர் பெண்கள்

அத்தை சொன்னாள்
செத்துப்போனது
அம்மா, அப்பாவாக
இருந்தால்
இடுகாடு எடுத்துபோகும்போது
தரையில் உருண்டு
அழவேண்டுமாம்
பொறந்த பெண்கள்
அந்தக் கஷ்டத்தை கூட
எனக்கு கொடுக்கவில்லை
என் அப்பா

செத்தபின் அழவும்
அளவுகோல் உண்டு

யார் எப்படி அழுகிறார்கள்
என்ன சொல்லி அழுகிறார்கள்
என்ற ஒப்பீடு
சாவு வீட்டில் பின்னர் பேசப்படும்

வந்தா, ஒக்காந்தா
ஒப்புக்கு அழுதா
அப்படின்னு

இத்தனையும் கேட்ட, பார்த்த
பிறகு வந்த
சாவுத்தகவலுக்கு
பஸ்ஸுல போகும்போதே
ஒத்திகை பாத்தாச்சு
அங்க போய்
என்ன சொல்லி
அழணுமுன்னு.
எப்படி கதறுனுமுன்னு.

ஆகக்கூடி
அழுகை
ஆறுதலுக்கு இல்ல
ஒப்புக்குத்தான்.

படித்ததில் பிடித்தது

எனக்கு எழில்வரதனின் சிறுகதைகள் மிகவும் பிடிக்கும், எனக்குத் தெரிந்த வரையில் அவள் விகடனில் வெளிவந்த “ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு” நகைச்சுவை கலந்த தொடர் ஒரு சிறந்த அறிமுகம் என சொல்லலாம்.

இவர் தன் கதைகளுக்கு வைக்கும் தலைப்பே கொஞ்சம் அலாதிதான்.
சிறுகதைகளின் தலைப்பில் சில

வயிறுள்ளவன் நாய்களுக்கஞ்சேல், வினோத உடையுடுத்தும் தையல்காரன் மகன், வைத்தியனின் கடைசி எருமை, கண்ணீர்த் துளிகளும் கன்னிமார் ஒத்தடமும்

அவரின் நகைச்சுவைந்த கலந்த எழுத்துதான் எனக்கு மிகவும் பிடித்தமானது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நேற்று அவரின் கவிதை ஒன்று படிக்க நேர்ந்தது. அது இதுதான்,

தனித்து தோப்பாகு (எழில்வரதன்)

கண் துடைக்க மாட்டேன்
ஒரு கவளம் ஊட்டமாட்டேன்
தலைகோதி
ஆறுதல் தரவும் மாட்டேன்
துக்கத்திற்கான ஆறுதல்
என்னிலிருந்து கிடைக்காது

ஆறுதல் உனது மோட்சத்தை
எந்திரத்திலிட்டு மாவாக்கியது
உதிரப்பாசம்
உச்சியிலிருந்து வீழ்த்தியது

என் மென்மையான இறகின் கீழ்
நீ கதகதப்பாய் இல்லை
கருகிப் போனாய்

நீ நீயாக இருக்கும் பொருட்டே
விரட்டுகிறேன்
தாய்க்கோழியாய்.

புரிந்து கொள்
மிகு பாசத்தில் நெட்டி வளர்த்தால்
பள்ளிப் பிள்ளையாய்
பலப்பம் தின்பாய்
கண்டெடுக்கச் சொல்லி கத்தினால்
பழத்தின் முள்பிளந்து
வாழ்வின் ருசியறிவாய்.

(நல்லாருக்குல்ல)

18 February 2009

யூத்ஃபுல் வெரி யூஸ்ஃபுல்

அங்கீகாரம் இந்த வார்த்தைக்கு நம்மால் தரப்படும் அங்கீகாரமே தனிதான்

அங்கீகாரத்துக்கு வயது வித்யாசமெல்லாம் கிடையாது. அது 1 வயதுன்னாலும் சரி, 100 வயதுன்னாலும் சரி.

அதுபோல நமது எண்ணங்களை எல்லாம் குழைத்து நாம் ஒரு கவிதையாகவோ, கட்டுரையாகவோ, புனைவாகவோ ................ இப்படி சொல்லிக்கொண்டே போகும் நமது முயற்சிகளுக்கு

ஒரு பின்னூட்டம் கிடைத்தாலே மகிழ்ந்துவிடுகிறோம். அதுவே ஒரு முத்திரைப் பத்திரிக்கையில் வெளியானால், நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நமது அன்றாட அலுவல் சுமை, இன்னும் தனிப்பட்ட பிரச்சனைகளின் சுமை
எவ்வளவோ இருக்கும் போது இது போன்ற ஒரு தனித்த நிகழ்வு எல்லாவற்றையும் மறக்கச்செய்யும்.

இப்படி விகடன் பத்திரிக்கை நிறுவனத்தின், யூத்ஃபுல் விகடன் என்னும் மென்பத்திரிக்கையில் குட் ப்லாக்ஸ் என்ற தலைப்பின் கீழ் வெளியான படைப்பாளிகள் - தாமிரா, கார்க்கி, புதுகை தென்றல் இன்னும் இவ்வரிசையில் வந்த அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்

இப்போ நட்புடன் ஜமாலின் வேதியியல் மாற்றங்கள்” என்னும் பதிவும் இதன் கீழ் வந்துள்ளது.

மீ த பர்ஸ்ட்டாய் அனேகரின் ப்லாக் பதிவுகளுக்கு முதலாவதாக வந்து பின்னூட்டமிடும் இவரை வாருங்கள் வாழ்த்துவோம்.

13 February 2009

நூற்றுக்கு நூறு


நமக்கு எப்போதும் நூற்றுக்கு நூறின் மேல் ஒரு வித ஈர்ப்பு இருக்குமில்லையா !
அதுதான் கதை, மேற்கொண்டு படியுங்கள்


ஒரு சிறுவனும், சிறுமியும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சிறுவன் நிறைய விதவிதமான கூழாங்கற்கள் வைத்திருந்தான். சிறுமி தன்னிடம் இனிப்பு பண்டங்களை வைத்திருந்தாள். அவளிடம் வைத்திருந்த இனிப்பு பண்டங்களின் மீது ஆசை கொண்டஅச்சிறுவன், அச்சிறுமியிடம் நான் எனது கூழாங்கற்களை உனக்குத் தருகிறேன். அதற்குப் பதிலாக உன்னிடம் இருக்கும் இனிப்பை தருகிறாயா, எனக்கு சாப்பிட வேண்டும் போல இருக்கிறது என்றான்.

இதற்கு ஒப்புக்கொண்ட அச்சிறுமி தன்னிடமிருந்த அத்தனை இனிப்பு பண்டங்களையும் கொடுத்துவிட்டாள், பதிலுக்கு அச்சிறுவனும் கூழாங்கற்களை கொடுத்தான், ஆனால் மிகவும் அழகாகவும், பெரிதாகவும் இருந்த கூழாங்கற்களை அவன் தன்னிடமே மறைத்து வைத்துக்கொண்டான்

விளையாடி முடித்தபின் இருவரும் தத்தம் வீட்டுக்கு சென்றனர். அன்றைய நாளின் இரவு அச் சிறுமி நன்றாக உறங்கினாள். ஆனால் அந்தச் சிறுவனோ, அன்று நடந்த நிகழ்ச்சியையே மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டிருந்தான். மறைத்து வைத்த அந்த கூழாங்கல்லை பார்த்தவாறே, நாம் மறைத்தது போல, அவள் என்ன திண்பண்டத்தை நம்மிடம் கொடுக்காமல் மறைத்திருப்பாள் என்று யோசித்துக் கொண்டிருந்ததில் அவனுக்கு உறக்கம் வரவில்லை.

இந்தக் கதையினால் அறியப்படும் நீதி:
உன்னிடமிருக்கும் 100 சதவிகித அன்பையும் உன்னை நம்புமொருவருக்கோ, உன்னைச் சார்ந்திருப்பவருக்கோ கொடுக்க முடியாமல் போனால்,
நீ எப்போதும் அடுத்தவரின் அன்பு நம் மீது 100 சதவிகிதம் இருக்காது என்ற குறையுடனே இருப்பாய்.

இந்த நீதி காதல், நட்பு, மேலாளர் - தொழிலாளி என எல்லா உறவுகளுக்குமே பொருந்தும்.

நூற்றுக்கு நூறை கொடுங்கள் , அதையே திரும்பப் பெறுங்கள்

10 February 2009

ஏன் எதற்கு இப்படி

போன வாரத்தில் ஒருநாள் மாலை, வழக்கமாக வழிய வழிய ஆட்களை ஏற்றிக்கொண்டுச் செல்லும் செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில். மகளிர்க்கான பெட்டி. அடித்து பிடித்து ஏறி, இருக்கைகளுக்கு நடுவே ஓரமாய் நின்று கொண்டேன். இது போன்ற கூட்ட நெரிசல் நேரத்தில், வசதியாய் நின்று வருவதே ஒரு வரம்தான்.

சேத்பட்டில் இன்னும் கூட்டம், அதில் ஒரு கர்ப்பிணி பெண்ணும் ஏறினார். அந்தப் பெண்ணும் கூட்ட நெரிசலோடு வந்து நின்று கொண்டாள். நான் அவளைப் பார்த்து உள்ளே வருமாறு சொன்னேன். அவளும் எப்படியோ நெம்பிக்கொண்டு வந்தாள். இருக்கைகளுக்கு நடுவே நிற்க அந்தப் பெண் வர தவிக்கும் போது கூட, அமர்ந்திருக்கும் பெண்களில் ஒருவர் கூட எழுந்து அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு இருக்கை தர முன் வரவில்லை. குறைந்த பட்சம், நீட்டிக்கொண்டிருக்கும் தன் காலை கூட கொஞ்சம் ஒதுக்கி அந்தப் பெண் உள்ளே வர வழிவிடவில்லை.


அதே வண்டி, அடுத்த நிறுத்தம், ஒரு பெண் கையில் குழந்தை, ஒரு பெரிய பையுடன் ஏறினாள். அவளுக்கும் அதே நிலை. அப் பெண்ணின் கையில் இருக்கும் குழந்தை அழுகையை தாண்டி அலற ஆரம்பித்திருக்கிறது. எல்லோரும் தத்தம் உடம்பை அசைத்துக்கொள்ள முன் வந்தார்களே ஒழிய எவரும் தன் மனதை அசைத்து எழுந்து அந்தப் பெண்ணுக்கு இடம் தர முன்வரவில்லை.

ஒழிகிறது, இந்தப் போராட்டத்திற்குள் அடுத்த ஸ்டேசன், அந்தப் பெண் ஓரமாக நின்றிருந்த இருக்கையினோரம் இருந்த ஒரு பெண் தன் நிறுத்தம் வந்ததன் காரணமாக எழுந்து சென்றாள். அதுவரை இருக்கையின் நுனியில் உட்கார்ந்திருந்த ஒரு காலேஜ் பெண்ணை எதிர் இருக்கையில் இருந்த ஒரு பெண் கையை பிடித்து இழுத்து வசதியாக அமர செய்தாள். இதற்கிடையே அந்த இடத்தில் உட்கார குழந்தையுடன் இருக்கும் பெண்மணி உட்கார முனைந்து, கடைசியில் அவளுக்கு அந்த நுனி ஸீட் கிடைத்தது.நுனி ஸீட்டில் உட்கார்ந்த்த அவள் குழந்தையை மடியில் போட்டுக்கொள்ள, குழந்தையின் கால்கள் வெளியே நீட்டியபடி, அடுத்த ஸ்டேசனில் இறங்கும் முனைப்பில் இருப்பவர்கள் கட்டாயம் அந்தக் குழந்தையை இடித்துக்கொண்டுதான் செல்ல நேரிடும். இன்னமும் அழுது கொண்டிருந்த அக்குழந்தையை சமாதானப் படுத்திக்கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு குழந்தை இடிபடுவது தெரியவில்லை.

இவ்வளவு நேரம் காத்த என் பொறுமை எல்லை கடந்து போய், அந்த காலேஜ் பெண்ணை நோக்கி ” ஏம்மா, நீ சின்ன பொண்ணுதானே, ஒன்னு எழுந்து நிக்கலாம், இல்ல அந்த நுனி சீட்லயாவது உட்காரலாம். அந்தம்மாவுக்கு தான் அறிவில்லை, உன் கையை பிடிச்சி இங்க உட்கார வெச்சிருக்காங்க, உம் பக்கத்துல தானே அந்தக் குழந்தை கத்திக்கிட்டு வருது, எழுந்து இடம் விடனும்னு உனக்கெல்லாம் தோணவே தோணாதா ந்னு கேட்டு விட்டேன். அந்தப் பொண்ணு என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பெரிய மனசு பண்ணி நுனி சீட்டுக்கு மாறினாள்.


பொதுவாகவே பஸ்ஸில், ட்ரெயினில் கூட நின்று வேடிக்கை பார்த்து வர பிரியப்படும் குழந்தைகளை வேண்டுமென்றே அதட்டி ம், உட்காரு, அப்புறம் இடம் கெடைக்காதுன்னு மிரட்டி உட்கார வைக்கும் எத்தனை பெண்மணிகள். அருகில் வயதான பெண்மணி இருந்தால் எழுந்து இடம் கொடுக்ககூட நினையாமல் நின்று கொண்டு வர ப்ரியப்படும் குழந்தைகளைக் கூட அமுக்கி அமர வைத்து பயணம் செய்கிறார்கள்.
பின் அந்தக் குழந்தைகளுக்கு எப்படி உதவும் எண்ணம் எழும் என்று தெரியவில்லை.

வண்டி நின்றவுடனும் எனக்குள் எழுந்த கேள்விகள். ஏன் இவ்வளவு மோசமாக மாறி விட்டிருக்கிறார்கள் மனிதர்கள். அவசரம், அவசரம் என்று சுருங்கிக்கொண்டே போகும் காலத்தின் போக்குக்கு ஏற்றவாறு செல்ல தன் மனதை சுருக்கி வைத்துக்கொள்வதுதான் செம்மையான வழி என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்களா. கொஞ்சம் மனதை விசாலப்படுத்தி வைத்தால் கூட, மனிதாபிமானம், பரிதாபம் எல்லாம் வந்து அமர்ந்துகொண்டே நம்மை யோசிக்க வைத்து விடும் என்றெண்ணி முகத்தை வேறெங்கோ திருப்பி, இல்லையென்றால் புத்தகத்திற்குள் தலையை மூழ்கடிக்குமாறு செய்துகொண்டும், தீவிரமாக நெற்றியை சுருக்கி யோசிக்குமாறு பாவனையோடும் .................

இப்படியெல்லாம் பாசாங்கு செய்ய இவர்கள் எங்கே கற்றுக்கொண்டார்கள். மாறாக யாராவது உதவ முன் வந்தால், அவர்களை கட்டுப்படுத்த நினைக்கும் எண்ணம். இவர்களின் குறைந்தபட்ச உதவும் மனோபாவம் என்ன தெரியுமா, பரிதாபத்தை காண நேரிடும் போதோ, இல்லை படிக்க நேரும் போதோ ஒரு “உச்” கொட்டி விஷயத்தை முடிப்பதுதான். மரணம் கூட அந்த வகையில் சேர்ந்துவிட்டது இப்போது.

இரு வாரங்களுக்கு முன் ஒரு பெண், தோளில் குழந்தையோடு, கையில் இரண்டு, மூன்று மொழியில் அச்சடிக்கப்பட்ட ஒரு விண்ணப்பம். ட்ரெயினில் விநியோகித்துக்கொண்டு வந்தாள். அவள் இளம் வயது பெண் தான். குறைந்த பட்சம் வீட்டு வேலை செய்து கூட தன் குழந்தையையும், தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால் யார் இவளுக்கு இந்த உபாயம் சொல்லிக்கொடுத்தார்களோ, எல்லோருக்கும் அந்த உதவி விண்ணப்ப காகிதத்தை விநியோகித்து கொண்டு வந்தாள். அவள் தந்ததை யாரும் தொடவில்லை. அவள் எதையும் பொருட்படுத்தவில்லை. பிறரின் மடியில் அந்தக் காகிதத்தை போட்டுக்கொண்டே சென்றாள்
அதை உதறி விட்டவர்களே அதிகம். நான், இன்னும் மூன்று பெண்களும் அவள் அடுத்த முறை அந்தக் காகிதத்தை திரும்ப எடுத்துக் கொண்டு காசு வாங்க வரும் போது ஆளுக்கு பத்து ரூபாய் கொடுத்தோம். இதை பார்த்துக் கொண்டிருந்த பெண்மணி, இப்படிலாம் காசு கொடுத்து இந்த மாதிரி ஆட்களை என்கரேஜ் செய்யக்கூடாதுங்க, இப்படியெல்லாம் பணம் கெடைக்கறதால தான் இந்த மாதிரி நெறைய பேரு கெளம்பிட்டாங்க. எனக்கு ஒரு டவுட். காசு கொடுத்து என்கரேஜ் செய்ய உதவி கேட்ட பெண் ஒலிம்பிக் ஓட்ட பந்தயத்துலயா கலந்துகிட்டா. என்னங்க இது, அந்தப் பெண் ஏமாற்றுபவளாகவே இருந்தாலும், கிடைக்கும் பத்து, இருபது ரூபாய்களில், ஒரு ரூபாயாவது அந்தத் தோளில் இருக்கும் குழந்தைக்கு பசிக்கு டீ வாங்கி கொடுப்பா தானே. அட்லீஸ்ட் 1 ரூபா தர்மம் செய்த மனதிருப்தியாவாது இருக்குது இல்ல

இந்த மாதிரி தானும் உதவி செய்யாம, மற்றவங்களையும் உதவி செய்ய விடாம பேசியே காலத்தை ஓட்டும் இந்த மாதிரி மக்கள், வரிப்பணமாகவும், ஷேர் மார்க்கெட்லயும் ஆயிரக்கணக்கில பணத்தை கோட்டை விடுவாங்களே தவிர, குறைந்த பட்சம் ஒரு 10 ரூபாய் ஏழை பசியாற அனுமதிக்க மாட்டார்கள்.

சும்மாவா மாத்துனாங்க பழமொழியை, அரசன் நின்று கொல்வான், தெய்வம் அன்றே கொல்லும்னு. அதுக்கு தானே அப்ப அப்ப அனுப்பி வைக்கிறார் சத்யமான மனுசங்களை.