18 December 2009

அழகீ
இந்த அழகி எனக்கு அறிமுகமானது பத்தாம் வகுப்பில். மனப்பாடச்செய்யுளில் திருப்பாவையின் ஒரு பாடல் வர, ஆண்டாளை தமிழ் வகுப்பெடுக்கும் சத்யபாமா டீச்சர்தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். தன் தெள்ளத்தெளிவான தமிழ் உச்சரிப்பில் பெரியாழ்வார் மாலை தொடுத்ததையும், அதை கோதை தன் மீது சூடி அழகுப்பார்த்ததையும், அந்த மாலையை கடவுளுக்கு அணிவிக்கும் போது, அதில் கோதையின் தலைமுடி இருந்ததையும், பின்பு அவள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியானதையும் விளக்கும் போது கண்மூடி கேட்டோமோனால் அது மதிய உணவு இடைவேளை முடிந்துவரும் முதல் பீரியடே ஆனாலும் தூக்கம் வர வாய்ப்பே இல்லை. சத்யபாமா டீச்சருக்கு வலது கன்னம் உள் அமிழ்ந்தால் போல இருக்கும், பேசும்போது எதையோ கடித்துக்கொண்டு பேசும்போது தோன்றும், ஆனால் அதை மீறி அவர்கள் பாடம் எடுத்த அழகே தனி.


சத்யபாமா டீச்சருக்கு முன்னரே எனக்கு திருப்பாவை அனுராதா டீச்சர் மூலம் ப்ரேயர் பாடலாக அறிமுகமாகியிருந்தது. மார்கழித்திங்கள், எங்கே சத்தமா பாடுங்கோ, மார்கழித்திங்கள் என்று ப்ரேயரில் ஆரம்பித்தாரானால், ஆஹா தமிழ்ல இது மார்கழி மாசம் போல இருக்கு என்று நினைத்துக்கொள்வேன், அன்று காலையில் பெருமாள் கோவிலில் சர்க்கரைப்பொங்கல் கொடுத்த காரணமும், தெருவடைத்த கலர் கோலங்களின் காரணமும் ப்ரேயரில் நிற்கும்போதுதான் பிடிபடும்.அப்போது கூட பாடலை உற்றுக்கவனித்து பாட மனம் விழையாது, ஆஹா அப்ப இந்த மாசம் ஃபுல்லா கோவில்ல சர்க்கரைப்பொங்கல், சுண்டல் குடுப்பாங்க, மாமாவுக்கு தெரியாம எப்டி போய் வாங்குறது என்பதிலேயே மனம் குறியாய் இருக்கும்.கூடவே இந்த மாசம் ஃபுல்லா எதிர் வீட்டு விஜி கூட சண்டை போடக்கூடாது ஏன்னா அவதான் முன்னாடி ஆளா போய் லைன்ல நிப்பா என ஒவ்வொன்றாய் பின்னி பினணந்து ஊற்றாய் பொங்கி வரும்போது ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்* அப்படின்னு வந்திருக்கும், இங்க விழும் எனக்கு அடி, யசோதை இளஞ்சிங்கம் என்று கோரஸாக சொல்லிவிட்டு, என் முன்னாலிருந்து மூன்று தலைகளும், பின்னாலிருந்து நான்கு தலைகளும் திரும்பி பார்க்கும், போதாக்குறைக்கு என் பின்னாலேயே நின்று கொண்டிருக்கும் எவளாவது ஒருத்தி முடியைப்பிடித்து இழுப்பாள். அன்று க்ளாஸ் முழுக்க ஏம்மா, இளஞ்சிங்கம் இங்க வாம்மா என்றே என் பெயர் இறைபடும்.

வீட்டுக்குப்போய் விலுக் விலுக்னு உதைச்சிக்காத குறையா எனக்கு ஏன் இந்தப்பேரு வெச்ச என்று அழுதுகொண்டே கத்தினால், ஏய் வாயை மூடமாட்ட என்று கையை ஓங்கி வரும்வரை கத்தி தீர்ப்பேன். கடவுளே, நாளைக்கு காலையில் அந்தப்பாட்ட அனுராதா டீச்சர் பாடக்கூடாதுப்பா ன்னு இன்னிக்கு சாயங்காலத்துல இருந்தே ப்ரார்த்தனை தொடங்கிடும். அப்பவெல்லாம் திருப்பாவை ஆண்டாளால் கண்ணன் மேலுள்ள காதலால் பாடப்பட்டது என்ற விளக்கமெல்லாம் தெரியாது. என்ன கேலி செய்யறதுக்குன்னே யாரோ பாட்டெழுதி வெச்சிட்டு போயிருக்காங்களேன்னு கடுப்பா வரும்.

ஆனால் அதே மார்கழித்திங்களை சத்யபாமா டீச்சர் வகுப்பெடுக்கும் போது, ஆண்டாள் மேல் எனக்கு காதல் பொங்கி வந்தது தனி விஷயம். அதற்குப்பிறகுதான் எனக்கு எங்கள் எதிர்வீட்டிலிருக்கும் விஜியின் ஆயாவின் பெயரின் அர்த்தமே புலப்பட்டது. அவர்களின் பெயர் ஆண்டாளம்மாள். அதுவரை அவர்களை ஆண்டாளு அப்டின்னு யாராச்சும் கூப்பிட்டாங்கன்னா வாசலில் இருக்கும் சில அக்காக்கள் கேலியா சிரிப்பார்கள். ஏனோ தெரியவில்லை அழகான தமிழ் பெயர்களான ஆண்டாளும், அலர்மேலுவும் சென்னையின் ஒரு பகுதியினருக்கு கேலிசித்திரப்பெயர்களாகவே போய்விட்ட காரணம் இன்றுவரை விளங்கவேயில்லை. அதைவிடவும் கொடுமை ஆண்டாளு, அலமேலு என்ற பெயருக்கு முன்னாடி சிலுக்கு என்ற நடிகையின் பெயரும் சேர்த்துக்கொள்ளப்பட்டு அழைக்கப்படுவது. என்ன ஆண்டாளு ஆளையேக்காணோம் என்று சொல்வதில் மிகச்சரியான கிண்டல் தொனியிருக்கும். ஆண்டாளு, அலமேலு என்ற பெயரெல்லாம் காய்கறி விற்பவர்களுக்கும், கூடை தூக்குபவர்களுக்கும் வைக்கும் பெயர் போலத்தான் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.

அதனாலோ என்னவோ அந்தம்மாவுக்கு கடிதம் தரும் போஸ்ட்மேனைத் தவிர அனைவரும் சீட்டுக்காரம்மான்னுதான் கூப்பிடுவார்கள். அவர்கள் சீட்டுவிடும் அழகே தனிதான். ஆயிரத்தையிநூறு ரூபா ஒரு தரம்...., ரெண்டு தரம்........., கேக்கறவங்க கேக்கலாம்.... விட்டுடப்போறேன்.... ஆயிரத்தையிநூறு ரூபா மூணு தரம்... என சொல்லும்போது அவர்களின் உதட்டில் படர்ந்திருக்கும் வெள்ளைத்தேமல் மாத்திரம் தனியாய் அசைவது போல இருக்கும். அதைப்பார்ப்பதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம் 

நாளொன்று போனால் வயதொன்று கூடும்னு வருடம் பல கடந்து இருபத்து நான்கு வயதில், பாலஜோதிதான் ஆண்டாளை ரூபமாக அறிமுகப்படுத்தினாள். அதுவும் ஒரு மார்கழி மாதத்தில்தான். அக்கா வர்ரீங்களா, இன்னிக்கு ஆண்டாள் கோவிலுக்கு உங்களைக்கூட்டிக்கிட்டு போறேன் என்றாள். பாலஜோதிக்கு என் வயதோ அல்லது என் வகுப்புத்தோழியோ இல்லை. அவள் என் அக்கா பெண்ணின் உற்ற வகுப்புத்தோழி, கொஞ்சநாள் எங்கள் வீட்டருகில் குடியிருந்தார்கள். அவளும் நானும் நட்பு கொண்டது அதிசுவாரஸ்யம்!

ஆண்டாளுக்கு கோவிலா எங்கடி இருக்கு இந்த மெட்ராஸ்ல, நீங்க வர்றீங்களா சொல்லுங்க, சரிடி வர்ரேன், அப்ப நீங்க இன்னிக்கு சாயங்காலம் 21ல வந்து ராயப்பேட்டை ஹாஸ்பிட்டல் பஸ்ஸ்டாப்ல இறங்கிடுங்க, நான் அங்க வெயிட் பண்றேன். ராயப்பேட்டை ஹாஸ்பிட்டல், நான் பிறந்த பின் நாட்களிலிருந்து கடந்த ஜனவரி 30 வரை அந்த ஆஸ்பத்திரி எனக்கு நிறைய துக்ககர நிகழ்வுகளைத்தான் தந்திருக்கிறது. ஒரு காலகட்டத்தில் தினமும் அந்த வழிதான் போய் வரவேண்டும். இப்போது அவசியத்துக்காக அந்தப்பக்கம் போக நேர்ந்தால் கூட ஆஸ்பத்திரியைப்பார்த்தால் வலுக்கட்டாயமாக முகம் திருப்பிக்கொள்ளவோ, இல்லை குனிந்து கொள்ளவோ வேண்டியிருக்கிறது.

அவள் போன் செய்த அன்று மாலை ராயப்பேட்டை சிக்னல் தாண்டி ஒரு சந்துக்குள் இருந்த பெருமாள் கோவிலுக்கு அழைத்துப்போனாள். என்னடி ஆண்டாள் கோவில்னு சொன்ன, பெருமாள் கோயிலா இருக்கு. வாங்கக்கா என்றவாறே விடுவிடுவென கோவிலுள் நுழைந்து பக்கவாட்டில் அழைத்துப்போனாள். ஒரு சின்ன ஆலயம். உள்ளே பித்தளையில் ஆண்டாள் விக்ரகம். அழகாய் செப்புச்சிலை மாதிரி சின்ன உருவம். கண்கள், மூக்கு, தலை கொண்டையுடன் கூடிய நீள பின்னல்சடை என செய்நேர்த்தியுடன் கூடிய விக்ரகம்.

அக்கா பாருங்கக்கா, அந்தக் கண்ணை மட்டும் பாருங்கக்கா, அய்யோ, அப்படியே கையைப்பிடிச்சு கூட்டிக்கிட்டு போயிடலாம் போல இருக்கே என்றவளை ஒருமாதிரியாய் பார்த்தேன், என்னக்கா கடுப்பாயிட்டீங்களா, நான் காலையில வந்துட்டுப்போனேங்க்கா, நேத்துல இருந்து மார்கழி இல்ல, காலையில தலைக்கு குளிச்சுட்டு, இங்க வந்து திருப்பாவை முழுசும் படிச்சேன். மனசுக்கு ரொம்ப அமைதியா இருந்துச்சுக்கா என்றவாறே இந்தாங்க திருப்பாவை படிங்க என்று 30 பாசுரங்கள் அடங்கிய சின்ன புத்தகம் கொடுத்தாள். அதற்குப்பிறகு நானும் ஆண்டாள் மீது மீண்டும் காதல் தொடர கசிந்துருகி மயிலாப்பூரில் இருக்கும் பெருமாள் கோவில்களில், ஆண்டாளை மட்டும் தனியாகப்போய் பார்த்துவிட்டு வருவோம்.

இப்படி கோவில் கோவிலாய்ச்சுற்றி ஆண்டாள் விக்ரகங்களைப் பார்த்ததன் விளைவோ என்னவோ எனக்கு ஒரு கனவு வரும், அதாகப்பட்டது ஒரு பழைய கோவில், பாசைப்பிடித்த தரையிலும், சுவற்றின் மீதும் நிறைய பித்தளை விக்ரகங்கள் சிவப்புத்துணியால் சுற்றப்பட்டும், அப்படியேவாகவும் நின்று கொண்டிருக்கும். கோவிலுக்குள் நான் இருப்பேன், இன்னும் சிலரும் இருப்பதாய் புலப்படும். சில விக்ரகங்கள் நகரும், சிரிக்கும். முதல்முறை இந்தக்கனவை கண்டு பயந்து காலையில் அக்காவிடம் சொல்லும்போது, உனக்குன்னு வருது பாரு கனவு என்று சிரித்துக்கொண்டே போய்விட்டது. இந்தக்கனவு வேறு மெகா சீரியல் கணக்காய் ரொம்ப நாள் அடிக்கடி வந்துகொண்டிருந்தது. விக்ரகங்கள் சிரிக்கும் போது பயந்து எழுந்துவிடுவேன், நாளாக நாளாக பயம் மட்டுப்பட்டு போக, அதற்குப்பிறகு அந்தக்கனவு வரவேயில்லை. வந்த நாளும், போன நாளும் ஞாபகமில்லாமல் கனவு போயே போச்.

மார்கழி மாதம் எப்படி குளிராய், மனதுக்கு இதமாய் இருந்து, பெரிய பெரிய கோலங்களையும், சர்க்கரைப்பொங்கல் சுண்டல் ஞாபகங்களையும் கட்டி இழுத்துவருகிறதோ அதைப்போலவே ஆண்டாளையும் கட்டி இழுத்துவருகிறது.இது மார்கழி மாதமென்பதாலும், உடன் நேற்று எனக்கு வந்த ஒரு மெயிலின் கையொப்பத்துக்குக் கீழே இந்தப்பாடல் இருந்தது.

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்*
செய்யும் கிரிசைகள் கேளீரோ* பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி*
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி*
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்*
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்*
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி*
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


ஒரு பத்துதடவையாவது மனதுக்குள் பாடி, சிலாகித்ததில் சில மறக்கமுடியா நினைவுகளும் வர பதிந்தாயிற்று.

17 December 2009

சாமிவேலுவின் மகன்

பார்த்து இறங்கும்மா என்றபடியே சாமிவேலு தன் வேட்டியை பின்பக்கமிருந்து வலது காலால் மேலே தூக்கி பிடிபட்ட முனையை இடக்கையில் வாங்கி மடித்துக்கட்டினார். இருப்பதிலே கொஞ்சம் பெரிய பெரிய பைகளை தோளில் ஒன்றும், கைகளிலிரண்டும் தூக்கிக்கொண்டார். தனது பெண்களும், பேரப்பசங்களும் என நால்வரும் இறங்கியபின் ஆட்டோவிலிருந்து சரசு அம்மாள் கடைசியாக இறங்கி,ஆட்டோவுக்கு காசு கொடுத்தாள்.

ம், பார்த்து, பார்த்து, குழந்தைய கையில புடிம்மா, வண்டி வந்து திரும்புற இடம் என்றவாறே மனைவி, இரண்டு பெண்கள், அவர்களின் குழந்தைகள் என எல்லோரையும் முன்னே அனுப்பிவிட்டு பின்னே பாதுகாப்பாய் பைகளை தூக்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் சென்றார். 102 ஆம் நம்பர் சிவப்பு பஸ்ஸைப் பார்த்தவுடன் சாமிவேலுவுக்கு தன் ஊரையேப் பார்த்த சந்தோஷம், இன்னதுதான் என்ற உணர்வில்லாமல் தான் இருந்த இடத்திலிருந்து நாலே எட்டில் விடுவிடுவென்று வந்து பஸ்ஸுக்கு பக்கத்தில் நின்று கொண்டார். சீட் பார்த்து உட்கார்ந்துவிட்டு பைகளை சீட்டுக்கும், மேலேயும் வைத்தார். பார்த்து,பார்த்து வைங்க பை பத்திரம் என்று சரசம்மாள் சீட்டில் உட்கார்ந்தபடியாய் கத்திக்கொண்டிருந்தாள்.

ஹூம் அம்மாவுக்கு அப்பாவ விட பை மேலதான் கவனம் என்றவாறே சின்ன மகள் பெரிய மகள் காது கடித்தாள். பஸ் பாதிக்கும் மேல் நிறைந்திருந்தது. மத்தநாட்களில் இப்படியிருக்காது, இப்போது தன் ஊரில் நடக்கும் நெருப்புத்திருவிழாவை முன்னிட்டே பஸ்ஸில் பாதி சீட்டு ஃபுல் ஆகியிருக்கு என்று நினைத்துக்கொண்டார். பஸ் புறப்பட எப்படியும் இன்னும் கால் மணி நேரத்துக்கு மேலே ஆகும். அதற்குள் இன்னும் நிறைய ஊர் ஜனம் வரும் என்று நினைத்துக்கொண்டே தனக்கு தெரிந்த முகம் எதாவது இருக்கா என்று நோட்டம் விட்டார். இரண்டு மூன்று சீட்களில் துண்டும் பையும் இருந்தது. கீழே இறங்கி டீக்கடைக்குப் போனால் கண்டிப்பாய் சில முகங்கள் தென்படும் என்று நினைத்தவாறே, தோ டீக்கடை பக்கம் போயிட்டு வரேன் என்று மனைவி இருந்த பக்கம் குரல் கொடுத்துவிட்டு பஸ்ஸை விட்டு கீழ் இறங்கினார்.

தோளில் போட்டிருந்து சிவப்புத்துண்டால் முகம், கழுத்தை துடைத்தவாறே அருகிலிருந்த டீக்கடை பக்கம் நகர்ந்தார். நிறைய நீல நிற சர்ட்டுக்கள், கையில் தோள்பையை அண்டக்கொடுத்தவாறே பேசிக்கொண்டு டீக்கிளாஸை மேலும் கீழுமாய் இறக்கிக்கொண்டிருந்தன. அவர்களைத் தாண்டி போகும்போது யணா, யணா என்று பின்பக்கம் குரல் கேட்டுத்திரும்பினார். ஓட்டமும் நடையுமாய் காசி சாமிவேலுவை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

அடேய், யப்பா காசி, நம்மூரு ஜனங்களைப் பார்க்கத்தாண்டான் பஸ்ஸை விட்டு டீக்கடைப் பக்கம் வந்தேன். எம்மா நாளாச்சு, எப்டிடா இருக்க, அண்ணன், அப்பாவெல்லாம் எப்டியிருக்காப்ல? ம் நல்லாருக்காங்கண்ணே,வா டீ சாப்டுக்கிட்டே பேசுவோம் என கையைப்பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டே போனான். அப்பாக்குத் தாண்ணே காலு, கையி விழுந்திருச்சி, ஒரு ரெண்டு மாசமா படுத்த படுக்கையா இருக்காரு, சரி அவரையும் பார்த்தா மாதிரி இருக்கும், நெருப்புத்திருநா வையும் பார்த்தா மாதிரி இருக்கும்னு தான் கெளம்பினேன்.

அடக் கொடுமையே, வயசான காலத்துல, கை காலு நல்லா இருக்கறப்பவே போயிடனும்ப்பா, ஹூம் இன்னும் நம்மூரு ஆளுங்க யாராச்சும் வந்திருக்காங்களா, பஸ்ஸுல யாரு மூஞ்சும் தெரிஞ்சாப்புல இல்ல என்றவாறே டீயை உறிஞ்சினார். ம் வந்திருக்காங்கண்ணே, நம்ம கோடி வீட்டு ஜெயராமன், கோபாலு, கிருஷ்ணன், பொன்னம்மாக்கா பையன் சின்ராசு எல்லார்க்கும் இப்படி வர தேரும், திருநாவுந்தானே ஊருக்கு போற சான்ஸு, இன்னா சொல்ற ?

பொன்னம்மாக்கா பையன் சின்ராசு என்றவுடனே சாமிவேலுவுக்கு காது அடைத்துவிட்டது, முகம் ஒரு மாதிரியாகிவிட்டது. அதற்குப்பிறகு டீ குடிப்பதற்கோ,மேற்கொண்டு பேசுவதற்கோ மனம் எழவில்லை. டீக்கடைக்காரனுக்கு காசு கொடுக்க சட்டை பையைத் துழாவினார், இருண்ணே நாங் குடுக்கறேன் என்ற வாறே டீக்க்ளாஸை இன்னமும் சுழற்றிக்கொண்டிருந்தான் காசி. எதுவும் பேசாமல் பத்து ரூபாய் தாளை டீக்கடையில் கொடுத்து சில்லறை வாங்கினார். நீ போடா, நான் அந்தப்பக்கமா போயிட்டு வரேன் என்றவாறே ஒன்னுக்கு போக மறைவான இடம் தேடி அமர்ந்தார். பொன்னம்மா நினைவுக்கு வந்தாள், ரெண்டு, மூணு வருடம் கழித்து ஊருக்கு கிளம்புவது என்று முடிவானவுடனேயே உள்ளே ஒரு சின்ன ஞாபகம் எழுந்தடங்கி உடம்பு சிலிர்த்ததை நினைவுக்குக் கொண்டுவந்தார்.

டீக்கடையில் டம்ளர் தண்ணி வாங்கி கையலம்பிக்கொண்டு இருக்கும் போதே காசி எல்லோரையும் அழைத்து வந்துவிட்டிருந்தான். எப்டியிருக்கண்ணா, இன்னானா இப்டி ரொம்ப இளைச்சுப்போயிருக்க, சிரித்துக்கொண்டே வயசாவுது இல்லப்பா என்றவாறே எல்லோரையும் அடையாளங்கண்டுகொண்டார். அதில் கோடி வீட்டு ஜெயராமனுக்கு மட்டும்தான் தன் ஈடு, மீதி மூவரும் தன்னை விட நாலைந்து வயது சின்னவர்கள். எல்லோரையும் பார்த்து நலம் விசாரித்தாலும் சின்ராசைத்தான் கண் தேடியது, மனமும். கவனித்தவரைப்போல ஜெயராமன் மட்டும் தொண்டையை செருமினார்.
சரி, பஸ் எடுக்குற டைம் ஆவுது, போங்கப்பா என்றவாறே எல்லோரையும் முன்னால் அனுப்பிவிட்டு சாமிவேலுவோடு இணைந்து கொண்டார், பீடியைப் பற்ற வைத்தார், அதோ அந்த பெஞ்ச்சுல உக்காந்துட்டு இருக்கான் பாரு, நாம்போயி கையசச்சா தான் பஸ்ஸுல ஏறுவான் என்றார். அவர் கை நீட்டிய இடத்தில் காப்பிகலர் பேண்ட்,பச்சை கோடு போட்ட சட்டையோடு கருப்பு பேக் ஒன்றை மடியில் வைத்தவாறே உட்கார்ந்திருந்தான். கண்கள் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தன, ஊருக்கு வருவதற்காய் மெனக்கெட்டு சவரம் செய்திருப்பான் போல, தாடை மழ மழ வென்றிருந்தது, மீசையை ஒட்ட வெட்டியிருந்தான். மூக்கும், தாடையும் அப்படியே பொன்னம்மாவை நினைவுப்படுத்தியது.

எதையோ நினைத்து ஒரு நிமிடம் தலைகுனிந்தார். ஜெயராமன் பீடியின் கடைசி இழுப்பை இழுத்துவிட்டு ரப்பர் செருப்பிலிட்டு மிதித்தார். சின்ராசு எதிரே போய், பஸ்ஸு கிளம்பப்போவுது, போலாம் வா என்று சைகை காட்ட, அவன் பஸ்ஸை நோக்கி நடந்தான். காது கேட்கல, பேச்சுத்தான் வரலியே கண்டி பையன் நல்ல வேலைக்காரன் பையன்ப்பா, ரெண்டாளு வேலைய செய்வான். தெரியும் இல்ல, எங்க கூடத் தான் வேலைக்கு இட்டுக்கினு போய் வரேன். எப்டியும் கட்டடம் கட்ற எடத்துலயே தங்கிக்கிடுவோம், என்னிக்காவது மழை அது இதுன்னு வேலை இல்லனாதான் அவன் எதாவது கூட்டாளி புடிச்சிக்கிட்டு போய் தங்குவான், நான் எம் புள்ள ஊட்டுக்கு போயிருவேன். ஹூம், பொன்னம்மாவுக்குன்னு இருக்கறது இவன் ஒருத்தந்தானே, இந்த வார்த்தைகளுக்கு சாமிவேலு கண்கள் கலங்கின.

பக்கத்திலிருந்த ஸ்வீட் கடைக்குப்போய் காராசேவும், மிக்சரும், அரை சீப்பு வாழைப்பழமும் வாங்கி ஜெயராமனின் கையில் கொடுத்து சின்ராசுவின் பையில் வைக்க சொன்னார். ஜெயராமன் சாமிவேலுவின் முதுகை ஆதரவாகத்தட்டி ப்போ, போ பஸ்ஸுல ஏறு, நாம நெனச்சமா, பொறந்து வளந்த மண்ண விட்டு இப்புடி ஊர் பேர் தெரியாத ஊர்ல வந்து பொழப்ப ஓட்டுவோம்னு, எல்லாம் விதி, எதையும் நெனைக்காத பஸ்ஸுல ஏறு, ஹாரன் அடிச்சிட்டான் என்றவாறே இருவரும் ஏறினர்.

டீக்குடிக்கப் போனன்னு போன இம்மாந் நேரமா ஆளக்காணோம், பஸ்ஸை வேற எடுக்கப்போறான் என்று சொன்னது பஸ்ஸின் கடைசி ஹாரனை விட அதிக சத்தமாய் கேட்டது. அதான் வந்துட்டன்ல, குழந்தைய இப்புடி கொடும்மா என்றவாறே மகளிடமிருந்து பேரனை வாங்கும் சாக்கில் பின்னால் திரும்பிப் பார்த்தார், சின்ராசு பேருந்து வழியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். டிக்கெட்டு, எத்தினி பேரு பா என்றவாறே கண்டக்டர் வாகாக கம்பியில் சாய்ந்து காலை அகட்டிக்கொண்டு நின்றார். ஆறு என்றார், ஏன் ஆறு என்றவாறே பர்ஸிலிருந்து காசை உருவிக்கொண்டிருந்தாள் சரசு, நாலு பெரிய டிக்கெட்டு, ரெண்டு அரை டிக்கட்டு மொத்தம் அஞ்சுதானே என்றாள், நீ ஆறாப்போடுப்பா என்றார் சாமிவேலு,
அதுக்குள்ள எந்த சினேகிதக்காரன பார்த்த நீ என்றவாறே பின்னால் திரும்பி பஸ்ஸை நோட்டம் விட்ட சரசு அம்மாளின் முகம் மாறியது. ஆறு டிக்கெட்டுக்கு காசு எடுத்துக்கொண்டு மீதியைக்கொடுத்துவிட்டு அடுத்த சீட்டுக்கு நகர்ந்தார் கண்டக்டர். சாமிவேலு பின்னால் திரும்பி ஜெயராமனிடம் சைகை காட்டினார், ஜெயராமனும் மேலே கையைத்தூக்கி புரிந்ததாக சொன்னார்.

ஹூம், குன்னகம்பூண்டியில போயி ஜோடிப்போட்டு சினிமா பார்த்த சோக்கு இன்னம் விடுதா பாரு, விட்ட குறை, தொட்ட குறைன்னு பின்னாடியே வருது, இந்தக் கர்மத்துக்கு தான் நான் அந்த ஊருப் பக்கம் வர்ரதில்ல, சொன்னா கேட்டீங்களாடி என்று மகள்கள் மேல் எரிந்துவிழுந்து கொண்டிருப்பது பஸ்ஸுல் அனைவருக்குமே கேட்டிருக்கும், சாமிவேலுவுக்கு கேட்டிருக்காதா என்ன, தலையை குனிந்துகொண்டார். அதான் காடு, கழனின்னு எல்லாம் போச்சே, இப்ப இது வேற நொண்டிச்செல்வு வெச்சுக்கிட்டு திரியறாரு தொர என்ற தன் அம்மாவின் வார்த்தைகளுக்கு, ஆரம்பிச்சிட்டியா, ஏம்மா நீ சும்மா வர மாட்ட, நாங்க வந்தது தப்பு போல. எங்கனா நாலு நாளு நிம்மதியா இருக்கலாம்னு வந்தா உன் தொணதொணப்பு தங்கவிடாது போல என்று நொடித்தாள் சின்னவள்.

பஸ் நகரத்தைத் தாண்டி, நெடுஞ்சாலையில் பயணித்தது, இருபுறமும் மரங்கள், முகத்தில் மோதும் காற்று கொஞ்சம் வெப்பமாக இருந்தாலும், சாமிவேலுக்கு அது பிடித்திருந்தது. மடியில் பேரன் தூங்கிவிட்டான், முன் சீட்டில் அமர்ந்திருந்த சரசுவும், மகள்களும் கூட ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து விழுந்து தூங்கிக்கொண்டிருந்தனர். பஸ் ஓடும் சத்தமும், ஹாரன் அடிக்கும் சத்தமும் தவிர பஸ்ஸுக்குள் வேறேதும் சத்தமில்லை. குன்னகம்பூண்டி சினிமா கொட்டகை ஞாபகம் வந்தது, அந்த இடம்தான் தன்னையும், பொன்னம்மாவையும் சேர்த்துவைத்தது. பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்களே அந்தத் தியேட்டருக்கு வரும், அப்படி புதுசாய் படம் மாற்றும் நாளெல்லாம் கொட்டகையில் கூட்டம் பிய்க்கும். ஆண்கள் கூட்டமே அதிகமிருந்தாலும்,சொற்பமாய் பெண்களும் இருப்பார்கள். ஆண்களுக்கு சரியாய் போட்டிப்போட்டுக்கொண்டு டிக்கெட்டு வாங்குவதில் பொன்னம்மா தான் முதலில் நிற்பாள். நல்ல கருத்த நிறம், ரெண்டு மூக்கிலும் பட்டை பட்டையாய் கல் வைத்த மூக்குத்தி, காட்டு வேலை செய்து நல்ல உறுதியான தேகம், முன்னாடி தலைமயிரெல்லாம் செம்ப்ட்டை பாய்ந்திருந்தாலும், பின்னி இறுதியில் ரிப்பன் வைத்து கட்டப்பட்டிருக்கும் நீளமான முடி. எப்புடி ஆம்பள மாதிரி தள்ளிக்கினு முன்னாடி போதுப்பாரு என்று எந்தக்கெழவியாவது கத்தினால் எனில் அவ்வளவுதான், ஏன் சரிசமமா போவறதுக்கு இல்லாம இங்க இன்னா கொறஞ்சுப்போச்சு, கை, காலு மொண்டியாவா கெடக்கோம், ஆம்பளைங்கதான் டிக்கெட்டு வாங்குனம்னா நீ ஏன் தியேட்டருக்கு வந்த ஊட்டுல ஒக்காந்துக்கிட்டு கெழவன அனுப்ப வேண்டியதுதான, நோவாம டிக்கெட்டு எடுத்துக்குடுப்பாரு என்று நீட்டி முழப்பாள்.

இப்படியாய் ஒரு தடவை ரகளையில் ஆரம்பித்த சகவாசம்தான் பொன்னம்மாவுக்கும், தனக்கும். இன்னதுதான் வார்த்தையென்றில்லாமல் தூற்றி காற்றில் விட்டு, அடுத்தடுத்த ஆட்டத்திற்கு வரும்போது, முகத்தை திருப்பிக்கொண்டு போய், ஒரு முறை மாற்றப்பட்ட புதுப்படத்துக்கு பொன்னம்மாளை காணாமல் ஆட்டம் பார்த்தா மாதிரியே இல்லை சாமிவேலுவுக்கு. என்ன, ஏது என்று விசாரித்ததில் பொன்னம்மா ஆற்றுப்பாலம் கட்டுவதற்கு மண் சுமக்க கூலிக்கு போயிருப்பது தெரியவந்தது.

மறுநாள் காலை யாருக்கும் தகவல் சொல்லாமல், எல்லா வேலையும் அப்படியே போட்டுவிட்டு நான்கைந்து ஊர் தள்ளியிருக்கும் ஆற்றுப்பாலம் கட்டுமிடம் நோக்கி போய்விட்டார். தூரத்தில் பொன்னம்மா மண் சுமப்பது தெரிந்தது. கிட்டப்போய் பேசவோ, பார்க்க தைரியமில்லாமல் ரொம்ப நேரம் கால்கடுக்க அங்கேயே நின்று கொண்டிருந்தார்,சாப்பாட்டு நேரத்துக்கு மேலே ஏறி வந்த பொன்னம்மாளாய் பார்த்து, கண்களை சுருக்கி, த்தே, இன்னா இங்க, கூலிக்கா வந்திருக்க, உனுக்கின்னா தலையெழுத்து கூலிக்கு வர என்று கேட்க, சட்டென்று சொல்லிவிட்டார் உன்னப்பாக்கதான் பவுனு என்றார். பவுனு, பொன்னம்மாவை சாமிவேலு அப்படித்தான் கூப்பிடுவார்.அங்கே ஆரம்பித்த உறவுதான், வயலும், சினிமா கொட்டகையும், தேரும், திருவிழாவும் என வளர்ந்தது. பொன்னம்மாவுக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். சாமிவேலுவுக்கு உடன் பிறந்தவர்கள் அண்ணன், தங்கை என்று ஏழெட்டுப்பேர். காடு, கழனி, தோட்டம் என ஊரிலேயே சொல்லிக்கொள்கிறா மாதிரி பெரிய குடும்பம்.

யார் எதிர்த்தாலும் பவுனுவை கைப்பிடித்துவிட வேண்டும் என்பதில் சாமிவேலு உறுதியாக இருந்தார். பொன்னம்மாவுக்கு எதிர்ப்புக்கெல்லாம் ஆளிலில்லை, ஆனால் மனதிற்குள் அம்மாவைக்கண்டும், ஊர் ஜனத்தின் பொல்லாப்பு வாய் குறித்து சற்று பயமிருந்தது.ஒன்னுமில்லன்னா கூட ஊரக் கூட்டிடுவாங்கடி, அதெல்லாம் வேணாம், கூலிக்குப்போனமா வந்தமான்னு இரு என்று அம்மா அடிக்கடி எச்சரிப்பாள். மனதுக்குள் பயமிருந்தாலும், சாமிவேலுவைப் பார்த்த மாத்திரம் மகுடிக்கு மயங்கிய பாம்புதான். அதுவும் அவர் பவுனு என்று கொஞ்சம் குரலை தாழ்த்தி கூப்பிட்டால் போதும், பொன்னம்மாவுக்கு தலை கிறுகிறுத்துவிடும். கூட அறுப்புக்கு வருபவளெல்லாம் கிண்டல் செய்வார்கள், அதென்னடி பவுனாமே பவுனு, பொன்னம்மா தானே ஒம் பேரு, ஹூம் என்னம்மோம்மா பவுனு பவுனுன்னு சொல்லி ஜாஸ்தியா உரசிடப்போறாரு பாத்து என்று பரிகசிப்பார்கள்.

அக்கம்பக்கம் ஆள் நடமாட்டம் இல்லாமலிருந்தால்,வயக்காடு பக்கம் அவ்வப்போது உரசிக்கொண்டுதான் இருந்தார்கள் பவுனும், சாமிவேலும். ரெண்டு அண்ணனுக்கும், அக்காளுக்கும் கல்யாணமாகிவிட அடுத்து சாமிவேலுதான் முன் வரிசைக்கு வந்திருந்தார்.தன் அப்பா வாக்கக்கொடுத்தேன், நாக்கக்கொடுத்தேன்னு எங்கேயாவது யாருக்காவது கொடுத்துவிட்டு வருவதற்கு முன் பவுனு விஷயத்தை தன் அம்மா காதில் போட்டு அப்பாவுக்கு கொண்டு போய்விடவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார். ஆனால் விதி முழுதாக விளையாடிப்பார்த்தது.

தன் அண்ணன் மகள் சரசுவைத்தான் சாமிவேலுவுக்கு கட்டவேண்டும் என்பதில் சாமிவேலுவின் அம்மா உறுதியாக இருந்தாள், சொத்துவிட்டுப்போகக்கூடாது, மேலும் மூத்த மகன்களிருவரும் கணவர் வழியில் பெண்ணெடுத்துவிட்டதால் வீம்புக்காவது தன் அண்ணன் மகளை இந்த வீட்டுக்கு கொண்டு வரவேண்டுமென்று பரிசம் போடத்தயாரானார்கள். ஏற்கன்வே பொன்னம்மா விஷயம் வேறு அரசல் புரசலாக தெரிந்து வைத்தவள் ஆகையால், அக்காமார்களுக்கு பொங்கல் சீர் கொடுக்க சாமிவேலுவை அனுப்பி வைத்துவிட்டு, பெரியவங்க நாமளா பாத்து எதை செஞ்சாலும் அவன் சரின்னுடுவாண்ணே என்று தட்டு மாற்றிக்கொண்டார்கள். சாமிவேலுவின் அப்பாவிற்கு மட்டும் மனம் உறுத்திக்கொண்டே இருந்திருக்கவேண்டும், அவரே பொன்னம்மாவை வயல் பக்கம் பார்த்து கையசைத்துக்கூப்பிட்டார். விஷயத்தை சொன்னார், ஏதாவது விவகாரம் உள்ளுக்குள்ளார இருந்தா சொல்லிடு புள்ள, என்னால் ஏதாச்சும் செய்யமுடியுமான்னு பாக்குறேன் என்று சூசகமாக சொன்னார்.

வெலவெலத்துப்போன பொன்னம்மா, தாரை தாரையாக கண்ணீர் வடிய தலைகவிழ்ந்து நாற்று நட்டுக்கொண்டிருந்தாள். பொங்கல் நெருக்கத்தில் ஊருக்குத் திரும்பிய பின் தான் சாமிவேலுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டு துடிதுடித்து பவுனை பார்க்க அலைபாய்ந்தார். ஒன்றும் நடக்கவில்லை. பொன்னம்மா தன் தாய்மாமன் வீட்டுக்கு சென்றிருப்பதாக நண்பர்கள் மூலம் செய்திவந்தது. சரசுவை கட்டமாட்டேன் என்று சாமிவேல் முரண்டு பிடித்தாலும், காணா பொணமா போயிடுவேன் வேலு என்று மிரட்டிய அம்மாதான் ஜெயித்தாள். பொன்னம்மாளைத் தேடிக்கொண்டு அவளின் தாய்மாமன் ஊருக்கு சென்றதில், சோர்ந்து போன பவுனைப் பார்க்கமுடிந்தது. தலை கவிழ்ந்து நின்றார். உங்கப்பாரு கேக்கும் போது உள்ளுக்குள்ள எதுவுமில்லன்னுதான் நெனச்சேன், ஆனா அதுக்கப்புறம் தெரிஞ்சிக்கிட்டேன், உங்கம்மா குணத்திற்கும், ஊர் வாய்க்கும் பயந்து எங்கம்மா என்னைய இங்க இட்டுக்கிட்டு வந்துடுச்சி, எங்க தாய்மாமனுக்கு என்னைய ரெண்டாவதா பேசி முடிச்சிடுச்சி என்றபோது நடுமண்டையில் யாரோ ஆணியை அடித்தாற்போன்று இருந்தது. வா பவுனு, இப்படியே ஊர விட்டு ஓடிப்போயிறலாம் என்றார் பரிதாபமாக, எதுவும் சொல்லாமல் பொன்னம்மாள் தலைகவிழ்ந்து திரும்பினாள்.

சாமிவேலு எதிலும் ஒரு பிடிப்பில்லாமல் சரசுவுக்கு மாலையிட்டார். வீட்டிற்கும், சொத்திற்கும் ஒரே பெண்ணான சரசுவோ எதற்கும் பணிவதில்லை. ஏட்டிக்குப்போட்டியாகவே போனது, உடன் பொன்னம்மா விஷயம் அவள் காதுக்கும் தெரிந்துவிட வார்த்தைகளால் கொன்றெடுத்தாள். விபத்தொன்றில் பொன்னம்மாளின் தாய்மாமன் இறந்துவிட, முதல் மனைவி சொத்துக்கு எங்கே பங்கம் வந்துவிடுமோ என்று பயந்து இவளைத்துரத்தியதில், வேறுவழியின்றி தன் சொந்த ஊருக்கே சுவற்றிலடித்த பந்துபோல் திரும்பிவந்தாள். திரும்பி வரும்போது சின்ராசு நின்றான், நடந்தான், ஆனால் பேசவில்லை. பொன்னம்மாளையும், சின்ராசுவையும் பார்க்கப் பொருக்காத சாமிவேலு முழுநேர குடிகாரனாகி, தன் பங்கு சொத்தெல்லாம் குடித்தே அழித்தார். சரசுவோ எல்லாவற்றிற்கும் காரணம் பொன்னம்மாள் என்றே வைதாள். இரண்டும் மகள்களாக பிறந்த பின்னர், இனி இந்த ஊரில் இருந்தால் மீதி இருக்கும் சொத்தும் குடியால் அழிந்துவிடுமென்ற பயத்தில் சரசு பட்டணத்துக்கு போய் கடை கன்னியாவது வெச்சு பொழைச்சுக்கலாமென்று முடிவெடுத்தாள்.

முறுக்கே, கை முறுக்கே, பிஞ்சு வெள்ரீக்கா, கலரே என்ற குரல்களும், பஸ் குப்பத்துறையில பத்து நிமிஷம் நிக்கும்பா இறங்கி ஏறிக்கங்க என்ற சத்தமும் கேட்டு பஸ்ஸில் சலசலப்பு உண்டானது. குழந்தைகளையும், மூட்டை முடிச்சையும் பார்த்துக்கொள்ளும்பொருட்டு சாமிவேலு பஸ்ஸிலேயே அமர்ந்தார். பஸ்ஸில் இப்போது அவ்வளவாய் தெரிந்த முகங்கள் யாருமில்லை, பின்னால் திரும்பிப்பார்த்தார், சின்ராசு தூக்கம் கலைந்து நெட்டி முறித்தான். சுற்றுமுற்றும் திரும்புகையில் சாமிவேலு தன்னைப்பார்ப்பதை பார்த்தான். சாமிவேலுவுக்கு உள்ளே நெகிழ்ந்தது. எல்லாம் சரிவர நடந்திருந்தால் ஊரறிய பிள்ளை என்று கொண்டாடியிருக்கலாம், இன்று யாரோ மாதிரி அவனைப் பார்த்துக்கொண்டிருக்க தேவையில்லை. அவனும் இவனைத் தெரிந்துகொண்டால் மாதிரி பார்த்து, போனால் போகிறதென்று புன்னகைத்துவிட்டு திரும்பிவிட்டான்.

பஸ் புறப்பட்டது, இன்னும் ரெண்டு மணிநேரம் ஊரைத்தொட்டுவிடும். சரசுவின் கெடுபிடி, மளிகைக்கடை வேலை அது இதுவென இரண்டு, மூன்று வருஷங்களாகிவிட்டது ஊர்ப்பக்கம் போய். நெருப்புத்திருவிழா என்பது ஒரு காரணமாகி ஊரை, ஊர் மக்களை பார்க்கும் ஒரு சந்தர்ப்பம் தானேயன்றி இப்போது நாம் பார்த்து மகிழ அங்கு என்னவிருக்கிறது என்று நினைத்துக்கொண்டார். பேரன் எழுந்து அழ ஆரம்பிக்க அவனுக்கு விளையாட்டுக்காட்டியதில் சற்று நேரம் எல்லாவற்றையும் மறந்தார்.


ஊர் நெருங்குவதை மண்வாசம் சொல்லியது. படபடப்பாய் அடிவயிற்றில் சில்லென்றது சாமிவேலுவுக்கு. பஸ்ஸை விட்டு இறங்கி நேரேப்போய் சற்று இடது பக்கம் திரும்பினால் வீடு. குடியிருக்கும் வீட்டை அப்படியே போட்டுவிட்டுப்போனால் பாழடைந்துவிடும் என்ற எண்ணத்தில் சரசு அந்த வீட்டில் புண்ணியத்துக்கு தனக்கு தெரிந்தவர்களை குடியமர்த்தி வைத்திருந்தாள். பஸ் திருப்பத்திலிருக்கும் போதே எழுந்து வேட்டியை சரி செய்துகொண்டு மேலே கீழே என பெட்டிகளையும், பைகளையும் வெளியே எடுத்தார்.

பஸ் டீக்கடைப்பக்கமாய் சென்று வளைந்து திரும்பியது. எப்படியும் இந்த பஸ்ஸில் தனக்கு வேண்டப்பட்டவர்கள் வருவார்கள் என செய்தி வந்திருக்கும் போல, நிறைய தலைகள் காத்திருந்தது தெரிந்தது. எல்லோரும் ஓவ்வொருவராய் இறங்க, ரெண்டு மூணு பெரிய பைகளை எடுத்துக்கொண்டு கடைசியாய் இறங்கினார் சாமிவேலு.

பாவிங்கண்ணுல பூவிழுந்ததுல இருந்து ஒன்னுந்தெரியாமப்பூடுச்சே, தே யாராச்சும் எம்புள்ள சின்ராசு இந்த பஸ்ஸுல வருதான்னு பார்த்து சொல்லுங்களேன் உழைப்பு உருக்குலைத்துப்போட்ட வயோதிகத்தோலோடு ஒரு கையில் கம்பை ஊன்றிக்கொண்டு, ஒரு கையை கண்களுக்கு மேல் வைத்துக்கொண்டு முடிந்தமட்டும் கண்களை சுருக்கிப்பார்த்துக்கொண்டிருந்தாள் பொன்னம்மா, குனிந்து இறங்கிய சாமிவேலுவின் காதில் ஈட்டியாய் இறங்கியது எம்புள்ள சின்ராசு என்ற வார்த்தை. குரல் வந்த திக்கு திரும்பாமல், பஸ்ஸின் அந்தப்பக்கமாய் இறங்கி ஜனங்களும், பைகளும் இருந்த சந்தடிக்கு நடுவே தன் அம்மா அழைப்பது தெரியாமல் நின்று கொண்டிருந்த சின்ராசுவை கைப்பிடித்து அழைத்துப்போய் பொன்னம்மாளின் அருகே விட்டு பவுனு, புள்ள என்று தழுதழுத்தார். தூரத்தில் சரசு தலையலடித்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தாள்.

08 December 2009

பள்ளங் க்ளாஸ்

ஹோவென்ற இரைச்சலோடு உணவு இடைவேளை தொடங்கிவிட்டது அந்தப்பள்ளியில். வசதிக்கேற்றார் போல சாப்பாட்டு கூடையும்,சத்துணவுக்கு தட்டுமாய் படையெடுக்க ஆரம்பித்துவிட்டன சிட்டுக்குருவிகள். பத்து நிமிடத்துக்குள் உணவு உள்ளே செல்ல, மீத இருபது நிமிட இடைவெளிகளில், மைதானம் முழுவதும் அங்கங்கே சாப்பாட்டு டப்பாக்கள் புடைசூழ குழு,குழுவாய் அமர்ந்திருக்கும் ஏனைய வகுப்பு மாணவர்களின் ஊடே புகுந்தோடி கால் மண் அவர்கள் மீது தெறிக்க திட்டும், சண்டையுமில்லாமல் கழியும் உணவு இடைவேளையும் ஒரு இடைவேளையா?

ஐந்திலிருந்து எட்டாம்வகுப்பு வரை படிக்கும் ஏ,பி,சி,டி செக்‌ஷன் வகுப்புகளுக்கான கட்டிடம் அது. இரண்டு மாடி.வரிசையாய் வகுப்பறைகள். நீள பச்சை நிற பெஞ்சுகள். உட்கார்வதெல்லாம் தரையில்தான். ஒவ்வொரு வகுப்பறையின் கரும்பலகை மூலையிலும் ப்ரசண்ட்: 35 என்று வெள்ளையெழுத்திலிருக்கும். உடல்நிலையைப் பொறுத்து ஒன்றிரண்டு குறையக்கூடும். கீழ்த்தளத்தில் ஆறு நீள வகுப்பறையின் வலது பக்க கடைசியில்தான் இருந்தது பள்ளங்கிளாஸ். பள்ளவகுப்பு என்று தமிழாசிரியர் கூட குறிப்பிட்டதில்லை. ஏ, போய் பள்ளங்க்ளாஸ்ல விஜயலஷ்மி டீச்சர் இருக்காங்களான்னு பார்த்துட்டு வா என்றுதான் தமிழ் வகுப்பெடுக்கும் கஸ்தூரி டீச்சர் சொல்வார்கள். இந்த வகுப்பறைக்கு மட்டும் நான்கைந்து படிகள் உட்புறமாக இருக்கும், அது இறங்கிதான் வகுப்பறை நுழையவேண்டும். அந்த வகுப்பை ஒட்டித்தான் பெரிய ஸ்டேஜ் இருந்தது. நீள நீளமாய் ஏழெட்டு படிகள்.

எல்லோரும் சாப்பிட்டு, ஓடிக்களைத்து உட்கார்ந்து தலை கவிழ்ந்து மூச்சு வாங்கினால் அந்த படிகள் தான் அதை பெரும்பாலும் வாங்கிக்கொள்ளும். அந்த ஸ்டேஜ் மீதுதான் தையல் க்ளாஸ் நடக்கும். அந்த வகுப்பறையின் வெளிப்புறம் சுவற்றோடு சுவராய் இருக்கும் பெரிய கரும்பலகையில்தான் ரோஸ்பல் டீச்சர் கைவண்ணத்தில் பள்ளியின் சின்னமான ஆலமரம் வேரூன்றி உட்கார்ந்திருக்கும்.

அடையாளம் சொல்ல, உட்கார்ந்து மூச்சு வாங்க, பள்ளங்கிளாஸ் பி செக்‌ஷன் எல்லாத்துலயுமே பர்ஸ்ட் என்பதாய் காலர் தூக்கிக்கொள்ள என பள்ளங்கிளாஸ் ஒரு பெருமையின் சின்னமாய் இருந்தது. எல்லாவற்றையும் விட பழைய டீச்சரான பாலகுஜம்,சகுந்தலா டீச்சரிலிருந்து புதுவரவான பொன்னெழில் டீச்சர் வரை ஒரு குழுவாய் அமர்ந்து உணவருந்துவதும் பள்ளங்கிளாஸ் தான். டீச்சர்கள் சாப்பிட்டு முடித்து வெளியேறும் வரை யாரும் உள்ளே போகக்கூடாது என்பது எழுதப்படாத விதி. அதனால் கிசுகிசுக்களெல்லாம் பிற்பாடுதான் நிகழும்.

ஹே, இன்னிக்கு எம் பெஞ்ச்சு கிட்ட உக்காந்துதான் விஜயலஷ்மி டீச்சர் சாப்ட்டாங்க தெரியுமா?, ஆமாம்பா. உன் பெஞ்ச்சுகிட்ட யாரு தெரியுமா, அந்த ரோஸ்மேரி டீச்சர், ப்போ நீ மதியானம் நல்லா தூங்கப்போற அது மாதிரியே, அந்த பாலகுஜம் டீச்சர் இல்ல அது மோரையெல்லாம் என் பெஞ்ச்சு மேல ஊத்தி வெச்சுருந்துது இப்படியாய் பள்ளங்கிளாஸ் பல சம்பாஷனைகளுக்கு கதாநாயகியாய் ?/ கனாய் ? இருந்தது.

எதுவரை,

எப்போழுதும் போல, காலாண்டு பரிட்சைக்கு முன் வந்த அந்த உணவு இடைவேளை வரை.

ஹோவென்ற இரைச்சலுக்குப் பின் டமார் என்ற பேரிரைச்சலும் வரும் என்று தெரியாமல் தொடங்கியது அந்த உணவு இடைவேளை, வழக்கம்போல கிடுகிடு சாப்பாடு, குடுகுடு ஓட்டம். சாப்பாட்டுக்கு முன்னர் வந்த பீரியடில் வனிதாவோடு நிகழ்ந்த ஆகப்பெரும் சண்டையில் முறுக்கிக்கொண்டு விளையாடப்போகாமல் ஒருவளை நிறுத்திவைத்திருந்தது. ஏய், என்னா விளாடப்போல கேள்வி கேட்டது தடியன் ஹரி (முகமெல்லாம் மறந்தே போய்விட்டது) இல்ல என்று தலைகுனிந்த முகவாய்க்கட்டையை பச்சை பெஞ்ச் தாங்கிக்கொண்டது. இனி வனிதா வந்து பக்கத்தில் உட்கார்ந்தால், சண்டையிட்ட அவள் மேல் படாமல் தான் எப்படி உட்கார்வது என்ற சீரிய சிந்தனை. சிந்தனை தொடங்கி வினாடிகள் ஓடி நிமிடம் தொட ஆரம்பிக்கும் தருவாயில் டம்மாஆஆஆஆஆஆஆஆர், ஆஆஆஆஆஆஆஅ, அய்யோ, அய்யோ.....,,,,

எல்லாரும் கிளாஸ விட்டு வெளிய ஓடி வந்துடுங்க, யாரும் க்ளாஸுக்குள்ள இருக்காதீங்க, பள்ளங்கிளாஸ் விழுந்துடுச்சு, பயத்தில் உடம்பு உதற என்ன ஏது என்று நின்று நிதானிப்பதற்குள் பள்ளங்கிளாஸின் விழாமல் நின்றிருந்த ஒரு சுவரின் பின்னர் அமர்ந்திருந்தவளை ஒரு கை வேகமாய் இழுத்துக்கொண்டு வெளியேறியது. இப்போது அனைவரும் கூட்டம் கூட்டமாக இன்னொரு கட்டிடத்துக்கு மாறிக்கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸ் அலறல் கேட்டது. இடிபாடுகள் சிக்கியவர்கள் மீட்கப்பட ஆரம்பித்தனர். எல்லோர் கண்களிலும் மிரட்சி. பயத்தில் அழுகை. இப்போது ஆறுதலுக்கு வனிதா நெருக்கமாய் அமர்ந்திருந்தாள். மற்ற வகுப்பிலும் முக்கியமாய் பள்ளங்கிளாஸின் எல்லாப் பிள்ளைகளும் இருக்கிறார்களா என்று பரிசோதிக்கப்பட்டது.

பள்ளியின் எந்தப்பிள்ளைகளுக்கும் எந்த சேதமுமில்லாமல், பள்ளங்கிளாஸில் சாப்பிட போன டீச்சர்களில் பாதி பேர் காயமுற்றிருந்தனர், அதில் இடுப்பில் பெரிய சுவர் விழ அதிக சேதத்திற்குட்பட்டு, அதுவரை கல்யாணமாகியிராத அழகே உருவான, கரும்பலகையின் இந்தக்கோடிக்கும், அந்தக்கோடிக்குமாய் நடந்துகொண்டே வகுப்பெடுக்கும், டீச்சர்ஸ்டேயின் போது எல்லோரும் போட்டிப்போட்டுக்கொண்டு சிகப்பு, மஞ்சள் ரோஜாக்கள் நீட்ட சிரித்துக்கொண்டே வாங்கும் பொன்னெழில் டீச்சர், நீண்டநாள் கழித்து சக்கர நாற்காலியில் சுழன்று வந்து பாடம் சொல்லித்தந்தார்.

காலப்போக்கில் காட்சிகளிலிருந்து அகன்று போன பள்ளங்கிளாஸின் திட்டுகள் பொன்னெழில் டீச்சரின் சக்கர நாற்காலியோடு சேர்ந்து சுழன்றுகொண்டிருந்தது. கொண்டிருக்கும்.

01 December 2009

அமித்து அப்டேட்ஸ்

அமித்துவின் பிறந்தநாள் உற்சாகமாக கழிந்தது. வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.
அமித்துவுக்கு இன்னும் பர்த்டே பைத்தியம் விட்ட பாடில்லை. நேற்று காலை சாக்லேட் கையில் வைத்துக்கொண்டு, அக்கா இன்னிக்கு பாப்பாக்கு பத்த டே, இந்தா ஆக்கிலேட்டு என்று சொல்ல, சஞ்சுவோ டேய் போதுண்டா, எப்பப் பார்த்தாலும் இதையே சொல்ற, தாங்க முடியலடா!

சஞ்சுவின் உபயத்தால் அமித்து சமீபத்தில் கற்றுக்கொண்ட வார்த்தை

”ஒர்ரு ஆம்பரி பண்ணுறாங்கப்பா “ (ஒரே காமடி பண்றாங்கப்பா) அமித்து சொல்ல ஆரம்பித்த நாளாக இந்த ஆம்பரிக்கு அர்த்தம் புரியாமல் படிப்படியாக சென்று விளங்கிக்கொண்ட பின்னர் புரிந்தது, காமெடி ஆம்பரியாக திரிந்த உண்மை.


..........

அக்கா வீட்டில் பிரியாணி இருந்த குக்கரை திறக்க, பார்த்த அமித்து, அய்! பெம்மா, பொங்கல் சேஞ்சு இர்க்காங்க.

பிரியாணி ஸ்பெஷலிஸ்ட்டான என் அக்காவுக்கோ, தான் பல்பு வாங்கியது புரியாமல் அமித்துவை கொஞ்சிக்கொண்டிருந்தார்கள்.

.........

பர்ஸில் இருந்து ரூபாய் நோட்டையெல்லாம் வெளியே எடுத்துப்போட்டும் கையில் வைத்துக்கொண்டும் இருந்தாள். வேணாம் வர்ஷா, கிழிஞ்சுடும், எல்லாத்தையும் உள்ள வெச்சிடலாம் தா என்றதற்கு

ஒர் நிம்சம், இர்ரூ.. காந்தித் தாத்தா பாத்துட்டு தர்றேன்

...........


எங்கனா சொன்ன பேச்ச கேக்கறியாம்மா நீ என்று அமித்துவிடம் அவளின் ஆயா சொல்லிய, கொஞ்ச நேரத்திற்குப் பின்னர் அவர்கள் தண்ணீரில் ஏதோ செய்து கொண்டிருக்க

தண்ணில்ல விளாடற, ச்சொன்னா ச்சொன்னா கேக்கே மாட்ற......

அவளின் ஆயாவோ, சரிதாம்மா,கேக்கறேன்.


........

டிவி நியூஸில் ஒபாமா இங்கிலீஷில் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்க, கொஞ்ச நேரம் அதையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த அமித்து, எதிரே உட்கார்ந்திருந்த சஞ்சுவைப் பார்த்து

வாத் தூ வேன்? என்று ரிப்பீட்ட, சஞ்சுவுக்கு புரியவில்லை. எனக்கும்தான்.

கொஞ்ச நேரம் கழித்துதான் விளங்கியது அவளிடம் என்றோ ஒரு நாள் வாட் டூ யூ வாண்ட் என்று சொல்லும்போது அவள் அதை வாத் தூ வேனாக என்னை நோக்கி உச்சரித்தது.

...........


ஆயா, பூச்சிக்காரன் வந்துக்கான், படீல நிக்குர்றான் என்றாள்.

அவர்களோ, பூச்சிக்காரனை சொன்னால் அமித்து கீழே இறங்கமாட்டாள் என்று நினைத்து ஆமாம்மா, கீழே இறங்காத, வந்துடு.

அமித்துவோ, நா போய்யி தொத்திட்டு வர்ரேன், நீ இங்கீயே இர்ரு ஆயா, இல்லன்னா பூச்சிக்காரா புச்சிப்பான் என்று படிக்கட்டில் இறங்க ஆயத்தமானாள்.

.......

அமித்து ஒரு புக்கை வைத்துக்கொண்டு காண்டாமிர்கம் என்று கரெக்ட்டாக சொல்ல, சஞ்சுவோ சித்தீ, இதப்போயி காண்டாமிருகம்னு பாப்பா சொல்லுது என்றாள்.

அதனைப்பார்த்த நானும், இல்லம்மா இது காண்டாமிருகம்தான், அவ சரியாத்தான் சொல்றா என, கவனித்துக்கொண்டிருந்த அமித்துவோ

அக்கா, நீ தப்பா தப்பா ச்சொல்லூற .........

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

..............

என் பட்டும்மா, தங்கம், ச்செல்லம் இதையெல்லாம் அமித்து, சமீபத்தில் என் அக்கா பெண்ணுக்கு பிறந்த குழந்தையைப் பார்த்துக்கொஞ்சியது.

ஒரு கவிதை
இன்னொரு கவிதையை
கொஞ்சுகிறதே
ஹைய்
ஆச்சர்யக்குறி

...........

மதியத்தில் அமித்துவின் பாட்டி, அமித்துவுக்கு சாப்பாடு ஊட்ட முனையும் போது,

இபிலாம் பண்ண, எச்சோ கிட்டியே ச்சொல்லிடுவேன் உன்ன......

இந்த கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கில்லை அவளின் ஆயாவுக்கு
........

நேற்று மாலை பெய்த சிறுமழையில் நனைந்து கொண்டே வீட்டுக்குள் நுழைந்தேன். பார்த்துக்கொண்டிருந்த அமித்து,

இபி மழலையே நெஞ்சீட்டு வர்ர......

ராஜாக்குட்டி, உனதன்பில் நனையவே பிறந்திருக்கிறேன் போல நான்.

ஜிகினா & ஜிங்குச்சான் ஷோக்கள்

வாரத்துக்கு ஒரு ஒளியும் ஒலியும், திரைமலர், ஒரு தமிழ் படம், டாம் & ஜெர்ரி, லாரல் & ஹார்டி, சார்லி சாப்ளின்னு எவ்வளவோ அழகா போச்சு வாழ்க்கை. இதுல ஒளியும் ஒலியும் போடும் போது கரண்டு போச்சுன்னா மகனே! அந்த கரண்ட்காரனுக்கு விழுற வசவ கேட்டான்னா கண்டிப்பா அவன் தொங்கிடுவான், அப்படியிருக்கும். பத்து பேருக்கு ஒத்த பேர் வீட்டுல டிவி, ஒலியும் ஒளியும் பார்க்கறதுக்கு நாலணா, படத்துக்கு எட்டணா ந்னு இருந்த சில்லரை வாழ்க்கையே நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா இப்ப போடுறாங்களே ரியாலிட்டி ஷோன்னு ஷ்ஷ் ப்பா இப்பவே கண்ணக்கட்டுதே.

நீயா நானான்னு ஒரு ப்ரோக்ராம்,அதுல ஒரு அம்மணியோட காதல் கணவர் அவங்ககிட்ட ஐ லவ் ஊ, ச்சே யூ ந்னு சொல்லி அஞ்சு வருஷம் ஆச்சுன்னு ஓ... ந்னு அழ, அந்த காம்பியர் மத்தியஸ்தம் செய்ய, பிற்பாடு கணவர் வந்து ஐ லவ் யூ ந்னு சொல்ல.அந்த அம்மணி ஆனந்தக்கண்ணீர் விட்டு மீண்டும் விட்ட எடத்துல இருந்து அழ ஆரம்பிக்கிறாங்க. இதுக்கு என்ன ரீஸன்னு கேட்டா அவர் அவுங்கள ஹேமூ ந்னு கூப்பிட்டும் அஞ்சு வருஷம் ஆச்சாம். இப்பல்லாம் முழுப்பேர சொல்லிதான் கூப்பிடறாராம். அய்யகோ.
இந்த மாதிரி விவகாரத்தையெல்லாம் கணவன் மனைவி இருவரும், இந்த ப்ரோக்ராமுக்கு அப்ளை செஞ்சு,நாலு பேர் இல்ல நாப்பது லட்சம் பேரு பார்க்கத்தான் சொல்லனுமா? நாலு சுவர் லேதா?

அடுத்து பாய்ஸ் & கேர்ள்ஸ் நு ஒரு ப்ரோக்ராம், இதுல ஒன்னு சண்ட போடுவாங்க இல்ல அழுவாங்க, டேன்ஸ் ஆடுவாங்களான்னு கேட்டா அதுலாம் தெரியாது, நான் பார்த்த ட்ரைலர் கிளிப்பிங்க்ஸ்லலாம் சண்டை போடுறதையும், அழுவதையும் தான் மாத்தி மாத்தி காட்டுனாங்க.

ஆச்சா, அப்புறம் அணு அளவும் பயமில்லை, ஹைய்யோ இத பார்க்க நமக்குத்தான் பயமில்லாம இருக்கனும். மேல இருந்து குதிக்கறேன், தண்ணில தாவறேன், ஐஸை ஒடைக்கறேன் செய்யுற குரங்கு சேஷ்டைல பாதி அக்காவுங்க ஒக்காந்து ஓ ந்நோ, என்னால முடியல, சம்திங்க் குத்திங்க் அப்படின்னு கத்திங். ஒரு நாளு ரெயில்வே ஸ்டேசன் பக்கம் அது இதுன்னு வந்து பாருங்க அம்மணிங்களா, ஏழெட்டு மாச வயித்து சுமையோட ரெண்டு கையில நாலஞ்சு வெயிட்டான பேகு இல்லனா தலையில கொய்யாக்கா கூடை சுமந்துகிட்டு, ட்ரெயின் நின்னு புறப்படற ரெண்டு நிமிஷ கேப்புல அடுத்த கம்பார்ட்மெண்ட்டு இல்ல எதிர்த்தாப்புல ட்ரெயினுன்னு,ஓடி ஓடி சில்லரை வியாபாரம் செய்யுறவங்களை. ஹும்... எண்ணித்துணிக கருமம், துணிந்தபின் அழுவது ச்சே எண்ணுவதென்பது இழுக்கு.

ஓவர் டூ சன் டி.வி.

ராஜா, ராணின்னு என்னன்னமோ பேரு வெச்சு ப்ரோக்ராம் போட ஆரம்பிச்சுருக்காங்க. ஆடுற ஆட்டத்தைப் பார்த்தாலே பயம்மா இருக்கு, யார் யாரெல்லாம் நடுவரா வரப்போறாங்களோன்னு நெனச்சாலே கதி கலங்குது.

அடுத்தாப்புல சமீபத்திய சூப்பர் டூப்பர் ஹிட்டான (?) டீலா நோ டீலா, ஏங்க அம்மிணி, தெருவுக்கொரு பேங்க்கு வெச்சுக்கிட்டு, உடம்பைக் குறைக்கறதில இருந்து, காரு, கப்படா எல்லாத்துக்கும் லோனு தராங்களே அவங்க எல்லாம் உங்க கண்ணுல பட மாட்டாங்களா, போயும் போயும் இந்த ப்ரோக்ராம் தானா கெடச்சது காரு வாங்க, கடைசியில இவுங்க வாங்குனாங்களான்னு தெரியல.
வீட்டுல டென்ஷனாகற மாதிரியே டி.வி.லயும் டென்ஷனாகிட்டாங்க போல. பாவம் வீட்டுக்காரர், அவர் வேற ஆறுதல் சொல்ற மாதிரி சீன் போட வேண்டியதா போச்சு.

இப்படியா போனவாரம், கொடுமை கொடுமைன்னு சானல் மாத்திக்கிட்டே போனா அங்க மூணு கொடுமைங்க ஒன்னா ஒக்காந்துட்டு ஜீபூம்பா ந்னு சொல்லுச்சு பாருங்க, அப்படியே அலறி, எம்மா, என்னிய மாரியாத்தா கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போயி மந்திரிச்சு கூட்டியாம்மான்னு சொல்ல, பக்கத்துல இருந்த அக்கா பையன் இங்க இருந்து பாக்குற உனக்கே இப்படின்னா அந்த கேமராமேன் நெலமைய கொஞ்சம் யோசிச்சுப் பாரு அப்படின்னான். என்னன்னு பாத்தா, மானாட மயிலாடல,இந்த வாரம் ஹாரர் எபிசோடாம் எல்லாரும் பேய் மாதிரி வேஷம் போட்டு ஆடுவாங்களாம். இந்த வாரம் மட்டுமா ஹாரர் வாரம், அப்ப இதுக்கு முன்னாடி ஆடுனதெல்லாம்?

இந்த கெரகத்தையெல்லாம் பார்க்குறதுக்கா இலவச கலர் டிவி குடுத்தீங்க?

இந்த தமிழ்சேனல்லாம் எப்பயுமே இப்படித்தான் பாஸ்னு, டிஸ்கவரி சேனலுக்கு மாத்துனா எங்கெட்ட நேரம், கக்கூஸ் கழுவுற ப்ரோக்ராம் போல, பேண்ட்டு சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு ஒருத்தர், ஆண்கள் டாய்லெட் அவ்வளவு மோசமில்லை, ஆனா பெண்கள் டாய்லெட் ஏன் இவ்வளவு அழுக்கா இருக்கு அப்படின்னு ஆரம்பிக்க, லேடிஸ் டாய்லெட் க்ளீன் செய்ய வந்த அம்மணி ஹி, ஹி, ஹி அது ஏன்னு எனக்குத் தெரியல, ஆன்னா புரியல அப்படின்னு மொக்கை தமிழாக்கத்தை கேட்க சகியாமல், இப்பல்லாம் கக்கூஸ்ல இருந்து ஆரம்பிச்சுட்டாங்களா இந்த வெவகாரத்தை அப்படின்னு யோசிச்சுக்கிட்டே டிவிய பாக்க தலைய நிமித்தினா, ஹைய்யோ அத காண சகிக்கலடா சாமீ, கடுப்புல டி.விய ஆஃப் செஞ்சதுதான் மிச்சம்.

சேனல்களில் வரும் இந்த பொய்யாலிட்டி ஷோ, சீரியல் என எல்லாத்தையும் எடுத்து ஏறக்கட்டி விட்டதில் கம்ப்யூட்டரில் ஆர்கேட் கேம்ஸும், பஸீல் கேம்சுமாய் பொழுதோட்ட முடிகிறது, என்ன, கண்ணு கொஞ்சம் எரியும். மேல சொன்ன கஷ்டத்துக்கு கண்ணெரிச்சலே தேவலாம்.

இருந்தும் இப்போதைய எனது ஃபேவரிட்டாக மூன்று நிகழ்ச்சி முன்னணியில் இருக்கிறது 1.டிஸ்கவரி சேனல் விலங்குகள் 2. பொதிகையில் ஒளிபரப்பப்படும் மங்கையர்க்கரசியின் சொற்பொழிவு (இவர கிருபானந்தவாரியாரின் பேத்தின்னு சொல்றாங்க) 3. ஆஹா என்ன ருசி, இந்த ப்ரோகிராமின் கடைசியில் ஒளிபரப்பப்படும் சொதப்பல் ஷாட்ஸ் சூப்பரா இருக்கும்.

எதையெடுத்தாலும் நாலு பேரை அழவிட்டால் போதும், கல்லா கட்டிவிடலாம் என்ற வேண்டுதல்களோடு தொடங்கப்படும் ஜிகினா & ஜிங்குச்சான் ஷோக்களிலிருந்து தமிழ் கூறும் சானல் உலகத்துக்கும், விதி யாரை விட்டது என்று பார்க்கத்துவங்கும் நமக்கும் என்று விடிவுகாலம் வருமோ?