கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க உள்ளுக்குள் ஒரு உதறல் எடுக்கும், இனம்புரியாத ஏதோவொன்று சூழ்ந்துகொள்ளும். போயிட்டு வரேம்மா என்று சொல்லும்போதே கண்கள் குளம்கட்டி உதடுகள் மடங்கும்.போகும்போது அழக்கூடாதும்மா என்று சொல்லிக்கொண்டே அவர்கள் அழுதுகொண்டிருப்பார்கள். அக்கம் பக்கம் எல்லாம் சொல்லிக்கொண்டு, முற்றிலும் ஒரு புதிய பயணத்திற்காக அவரோடும், அவர் தம் மக்களோடும் அவரவர் வசதிக்கேற்ற வண்டியிலேறி போய்க்கொண்டிருப்போம். நாம் மட்டும் தான் போவோம், நம் நினைவுகளெல்லாம் பின்னாடி போகும், வேண்டுமட்டும் திரும்பி திரும்பி பார்த்து தலையில் ஏற்றப்பட்ட பூவின் சுமையோடு ஒரு கட்டத்தில் கழுத்தே சுளுக்கி கொள்(ல்)ளும். இனிமேல்தான் ஆரம்பிக்கும் இந்த அம்மா வீட்டு புராணம்.
எதுக்கெடுத்தாலும் எங்க வீட்டுல சட்.,நாக்கை கடித்துக்கொண்டு எங்க அம்மா வீட்டுல இப்படி செய்ய மாட்டாங்களே. அம்மா வீட்டுல இருக்குற கஞ்சி தண்ணிக்கூட இளநீர் கணக்கா இருக்கும்னு பில்டப் வேற. பிறிதொருமுறை அம்மா வீட்டுக்கு போகும் போது, அங்க போனா மறுபடியும் இந்த உங்க வீடு, எங்க வீடு ப்ரச்சினை. ஏங்க உங்க வீட்டுல செய்தாங்களே, எங்க வீட்டுல பாருங்க எப்படியிருக்குது இந்த பலகாரம் என்று சொல்லிக்கொண்டே (கூடுமானவரைக்கும் ஹஸ்கி வாய்ஸ்) சாப்பிட்டுக்கொண்டிருப்போம். எந்த இடத்தில இந்த உங்க வீடு நம்ம வீடு ஆகும்னு நமக்கே தெரியாது. ஆரம்ப காலகட்டத்துல அம்மா வீட்டுக்கு போகும் போது உபசரிப்பின்போது நடக்கும் உரையாடல்களில் உச்சரிப்பின்போது மாமியார் வீடு அவுங்க வீடு என்பதாய்தான் இருக்கும். இப்படியே தான் அங்கேயும் எங்க வீடு எங்க வீடு என்றே தொடரும், அப்ப இது யார் வீடுன்னு யாரும் கேட்டால் வரும் தர்மசங்கடம் அது ஒரு தனி தினுசு.
சட்டுன்னு ஒருநாள் சரிம்மா, நான் கெளம்பறேம்மா எங்க வீட்டுக்கு என்று நாமே தெரியாமல் உச்சரித்துக்கொண்டிருப்போம். இந்த நுண்ணிய மாறுதல் அம்மா வீட்டிற்கும் புரிய ஆரம்பித்திருக்கும் போது அனேகமாய் அது நாமிருவர் நமக்கொருவரின் தொடக்க காலமாய் இருக்கும். இடைப்பட்ட காலங்கள் அன்பும் அனுசரனையும் அதீத அக்கறையும் என ஓட, இப்போது வந்திருக்கும் முதல் பிரசவம். இனிமே வரும் முதல் மூன்று மாத கால கட்டம்தான் பெண்களின் வாழ்வில் பொற்காலமாய் இருக்கும் அனேகமாய்.
பிறந்து வளர்ந்து பிறகு வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நடப்பட்ட நாற்று அறுவடையாகி தாய் வீட்டுக்கு மூன்று மாத கால அவகாசம் (5.7 என்று நீட்டிக்கலாம், க்கலாம், லாம், ம்) என்ற இடைவெளியோடு அம்மா வீட்டுக்கு வரும். வேலையே செய்யாமல் வேளாவேளைக்கு சாப்பாடும், குழந்தை ஒன்றே ஆகப்பெரிய குறிக்கோளாய் இருக்கும் இந்தக்காலம், அம்மாக்களெல்லாம் நம்ம குழந்தை(யும்) அம்மாவாயிடுச்சே என்று வியந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். அம்மா, அம்மா அப்புடி ஏடாகூடமா குழந்தைய தூக்காதம்மா. ம், ஆமாண்டி, நாங்கல்லாம் ஏது புள்ளை பெத்தது, நீ தான் ஊருல இல்லாத அதிசயமா புள்ள பெத்து வெச்சிருக்க என்று கொஞ்சமாவது வாய்ப்பேச்சு நீளும். பிள்ளைப்பேறு காலத்தில் அம்மாக்களுக்கும், பெண்களுக்கும் ஒரு வாய்ப்பேச்சாவது (செல்ல சண்டைகள்) இல்லாமல் அம்மா வீட்டின் இந்த மூன்று மாத கால கட்டம் முடிவுறாது. இப்படியும் அப்படியுமாய் மூன்று மாதமுடிந்து இப்போது மீண்டும் அழுகை + அட்வைஸ் சீசன். புள்ளைய இப்படி பாத்துக்கோ, அப்படி பாத்துக்கோ என்றபடி. இனி மகளுக்கும், பேரக்குழந்தைக்கும் சேர்ந்து அன்பு போன் வழியே வழியும்.
நாட்கள் செல்ல செல்ல அம்மா வீட்டின் நினைவுகள் அடி மனதில் தங்கிக்கொண்டே அவ்வபோது அவாக்கள் வெளியே தலைநீட்டும், குழந்தையின் உடல்நலம் அது இதுவென காரணங்கள் வளர்ந்து பிரிவொன்றும் சேர்ந்தே வளரும். என்னதான் அவங்க வந்துட்டு போயிட்டு இருந்தாலும், அங்க போய் டேரா அடிக்கிற அந்த ஒரு அனுபவம் வார்த்தைகளில் வடிக்கமுடியாதது.
ஏதாவதொரு விசேஷ நாட்களில் மீண்டும் உரையாடல்கள் துவங்கும், என் மச்சினர், என் நாத்தனார், எங்க வீட்டுல இந்த விசேஷம் என்று என், உன் பின் நம்மாகி இருக்கும் நம் மாமியார் வீட்டிலிருந்து அம்மா வீட்டுக்கு அழைப்பு போகும். இனி அம்மாவும் நம் வீட்டு விருந்தாளிகளில் ஒருவளாய் போயிருப்பாள். அம்மா வீட்டு மக்களுமே !!!!!!!!!
ஏனோ இந்தப் பதிவை எழுதி முடிக்கும்போது, கடைசிக் கடைசியாக இருக்கும் எனது பெரிய சொத்தான எல்லா புத்தகங்களையும் ரெண்டு ட்ராவல் பேக் முழுதும் நிரப்பி, கணவரோடும், அவர் தம் மக்களோடும் மாமனார் வீடு வர, வீட்டுக்குள் வந்து விட்டுவிட்டு ஒரு வாய் தண்ணீர் குடித்துவிட்டு, இனிமே அது உங்க வீட்டு பொண்ணும்மா, அதுக்கு கொஞ்சம் முன்கோபம் வரும் அவ்ளோதான், ஏதாவது சொன்னா உங்க வீட்டு பொண்ணா நெனச்சுக்கோங்க என்று என் மாமியார், மாமனாரைப் பார்த்து கை கூப்பிய மாமாவின் நிழல் நெஞ்சுக்குள் நிழலாடுகிறது. என்னை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வீட்டுக்கு போனபின்னர், அந்த ஒரு பொண்ணு இந்த வீட்டுல இல்ல, என்னமோ வீடே விரிச்சோன்னு இருக்கு என்று சொன்னாயாம் நீ என் அப்பாவுமாய் இருந்திருக்கிறாய் மாமா, உன் நினைவுகளின் நிழலில் ஒண்டிக்கொண்டே என் காலம் 7 மாதம் முடிவுற்றுவிட்டது. மீத காலங்களும் அவ்வாறே.
பெண்களிருக்கும் நமது வீடுகளும் என்றாவது ஒருநாள் வெறிச்சோடுமில்லையா ????