27 November 2009

புடவை

மெயின் ரோட்டை கடந்து லஷ்மிபுரம் நெருங்கியாயிற்று, தெருமுனையின் ஆவின் பால்பூத்தில் பால்பாக்கெட்டுகளை இறக்கிக்கொண்டிருந்தார்கள். மணி மூணாயிடுச்சு போல, பிரதீப் ஸ்கூல் விட்டு வர்றதுக்குள்ள போய் துணி துவைச்சி, குளிச்சிடனும், அவன் வந்தவுடன் ரெண்டு பேரும் சாப்பிடலாம் என்று நினைத்துக்கொண்டே இடக்கையில் இருக்கும் ஒயர் கூடையை வலக்கைக்கு மாற்றி வேகமாக நடக்க ஆரம்பித்தாள் லலிதா.

முன்னே நடக்கையில் பின்னே சில பார்வைகள் தன் மீது படர்வதை அவளால் உணரமுடிந்தது. ம்ஹூம் எத்தனை வருஷமா இந்தத் தெருவுல வந்து போயிட்டு இருக்கோம், இவனுங்களப் பத்தி தெரியாதா என்று பால் பூத் ஆசாமிகளை நினைத்துக்கொண்டாள். இந்த நேரம் என்றில்லை. விடியக்கருக்கலில் வேலைக்கு வரும்போதும் அவளால் அது போன்ற பார்வைகளை தனித்து பிரித்தெடுக்கமுடியும். வக்கீல் வீட்டில் வாசல் தெளித்துக்கொண்டிருக்கும்போதே உணர்ந்துகொள்வாள் அந்த வீட்டு வாட்ச்மேனின் பார்வை எங்கே படிகிறது என்பதை. மீதமிருக்கும் பக்கெட் தண்ணியை விடாசாய் கீழே விசிறி ஊத்தும் போக்கில் அவள் கோபத்தை காண்பித்து போவாள். அதற்கப்புறம் அவன் ஒரு நான்கு நாளைக்கு லலிதா பக்கம் திரும்பமாட்டான். இப்படி நிறைய, தன் செய்கைகளாலேயே தன் மீது படரும் இந்தப் பார்வைகளை, ரெட்டை அர்த்தப் பேச்சை, சீட்டி அடிப்பதை என எல்லாவற்றையும் இடரச்செய்தாள். இல்லையென்றால் இத்தனை வருஷ காலமாய் இந்தத் தெருவில் வேலைக்கு வந்து போய்கொண்டிருக்கமுடியாது. இந்தத் தெருவில் இருக்கும் அத்தனை வீட்டு அய்யா, அம்மாக்களும் லலிதாவிற்கு அத்துப்படி. கூப்பிட்டு நிற்க வைத்து பேசுவார்கள். அந்தத் தெருவில் இருக்கும் ஏறக்குறைய எல்லா வாசல்களிலும் லலிதாவின் கைவண்ணம் இருக்கும், இதைத் தவிர்த்து சில வீடுகளிலும். இப்போதும் அப்படித்தான் சுழன்று, சுழன்று வீட்டு வேலைகளை முடித்து பிள்ளை பள்ளி விட்டு வருவதற்குள் வீட்டில் இருக்கும் வழக்கத்திற்காய் அவசரமாய் ஓடிக்கொண்டிருக்கிறாள்.

லஷ்மிபுரம் தாண்டி, தெருமுனையில் இருக்கும் ஆர்த்தி அபார்ட்மெண்ட்ஸ் பக்கம் திரும்பும் போதுதான் கவனித்தாள். வேகமாக ஒரு பைக் அவளைக் கடந்து போயிற்று. ராஜா மாதிரி இருந்திச்சில்ல என்று நினைத்து திரும்பலாமா என்று எத்தனிக்கும்போதே அந்த பைக் திரும்பி இவளை நோக்கி வந்தது.
சந்தேகமேயில்லை அது ராஜாதான். லலி, லலிதா என்று ஒரு சந்தேகக்குரலோடு பைக்கை நிறுத்தவும், அவள் திரும்பவும் சரியாக இருந்தது. உடலெல்லாம் வியர்த்துக்கொட்டி, கால்கள் பலமிழப்பதை போன்று உணர்ந்தாள். அவனை மாதிரி இருக்குன்னு நினைத்தோம், ஆனா அவனே இப்படி வந்து, தன்னை
கூப்பிடுவான் என்று சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை அவள். சொ, சொல்லு, எப்டியிருக்க, என்னா இந்தப்பக்கம் என்று இயல்பாய் இருப்பவளைப் போல் தன்னைக் காட்டிக்கொண்டாள்.

ம், நல்லாதான் இருக்கேன், நீ இங்கதான் எங்கியாவது வேலை செய்றியா, ரெண்டு, மூணு தடவ இந்தப் பக்கம் போயிருக்கேனே, உன்னப் பாத்ததில்லை என்று ராஜா கேட்டபோது, லலிதாவுக்கு தன் மீதே வெறுப்பாய் வந்தது. காலையிலிருந்து வேலைசெய்து துணி ஒரு வேஷம், தலை ஒரு வேஷமுமாய் இருக்கும் தன்னை இத்தனை வருடம் கழித்து இந்தக்கோலத்திலா பார்க்கவேண்டும். ம், ஆமா, லஷ்மிபுரம் தாண்டி என்றாள் பொதுவாக, ஆமா நீ என்ன இந்த பக்கமா?

அதுவா ஒரு ரெண்டு, மூணு நாளா இந்த ஏரியா பக்கமாதான் அலைஞ்சிட்டு இருக்கேன். மூத்தது பெரிய பொண்ணாயிடுச்சு, வீட்டுல அதுக்கு விசேஷம் வெக்கனும்னு ஒரே பிடிவாதம்,நம்ம பழைய கால பழக்கமெல்லாம் இந்த சைடுதானே, அதான் பத்திரிக்கை கொடுக்க வந்து போயிட்டு இருக்கேன். சாயந்திரம் கூட வரவேண்டியிருக்கும், இப்ப ஒரு பார்ட்டி அர்ஜெண்டா போன் பண்ணுச்சுன்னு வேலை விஷயமா செட்டுக்கு போயிட்டு இருக்கேன், சரி ஒன் அட்ரஸ் சொல்லேன்.சாயங்காலம் வீட்டுக்கு வந்து பேசறேன். எத்தன வருஷமாச்சு, முந்தாநேத்து ஒங்க பெரிம்மா வீட்டுக்கெல்லாம் கூட போயிட்டு வந்தேன் என்றான்.

விசேஷம் பண்ற அளவுக்கு அவ்ளோ பெரிய பொண்ணாயிடுச்சா, ம் எம் பையனும் பத்தாவது போப் போறான் இல்ல, எல்லாம் சரியாத்தான் இருக்கும். வீடு இங்கதான். அஞ்சாவது தெருவுல காண்ட்ராக்டர் கண்ணன் வீட்டுல குடியிருக்கோம் என்றாள்.

ஏதோ ஒரு பழைய பாடலின் ட்யூன் செல்போனில் ஒலிக்க, அதை எடுத்துப் பார்த்துக்கொண்டே, சரி சாயங்காலம் வரேன், நாலு தடவைக்கு மேல போன் வந்திடுச்சு என்று பைக்கைத் திருப்பினான். பைக்கைத் திரும்பும் போது ராஜாவின் அதே கண்களை இடுக்கிய பார்வை, சிரித்தான், கிளம்பினான்.

அந்தப் பார்வை உண்டு செய்த மாயங்கள் தான் எத்தனையெத்தனை. இந்தப் பார்வைதானே அடிக்கடி தன்னை தன் பெரியம்மா வீட்டுக்கு போகும் சாக்கை உருவாக்கியது. பெரியம்மா வீட்டுக்கு சற்றுத்தள்ளி எதிரே இருக்கும் மெக்கானிக் ஷெட்டில் தான் அப்போது ராஜா வேலைப்பார்த்துக்கொண்டிருந்தான். லலிதாவின் ஊரில் விவசாயம் பொய்த்துப்போக, தன் அக்காவும் மெட்ராஸில்தானே இருக்கிறாள் இங்கே ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்றெண்ணி வந்த அம்மாவோடு, தன் பெரிம்மா வீட்டுக்கு தஞ்சம் புகுந்திருந்தாள்.

பெரியம்மா புத்திசாலி, அம்மாவும் அவளும் இங்கு வந்த மாத்திரத்திலேயே அவர்களின் சக்திகேத்தாற் போல ஒரு வீட்டைப் பார்த்து தந்துவிட்டாள். ஆனால் ராஜாவின் பார்வை லலிதா அங்கே அவளை இருக்கவிடவில்லை. அம்மா கூட அடிக்கடி திட்டுவாள், அவதான் மொதநாளு வாழ எலை, ரெண்டாவது நாளு தைய எலை, மூணாவது நாளு கையிலன்னு காமிச்சுட்டா, நீ என்னமோ ஆனா ஊன்னா அங்க போயி ஒக்காந்துட்டு இருக்க. எங்கூட மாட வந்து எதாச்சும் வேலை செய்யிடி, அந்த அய்யாகிட்ட சொல்லி, ஒம் பத்தாவது படிப்புக்கு எதாவது வேலை வாங்கித் தரசொல்றேன் என்பாள்.

சரியென்று மனதை கட்டுப்படுத்திக்கொண்டு அங்குப்போகாமலிருந்தாலும், நேற்று ராஜாவின் கடையில் ஒலித்த சினிமா பாட்டு ஏதாவது பக்கத்து வீட்டு ரேடியோவில் ஒலிக்கும். சில பாடல்களை இவள் ரசிக்கிறாள் என்று தெரிந்து சற்று சவுண்ட்டு கூட்டி வைப்பான் இல்லையென்றால் மறுபடி அதையே போடுவான், இவளும் புரிந்துகொள்வாள். சரியாய் அந்தபாட்டு இவள் பக்கத்து வீட்டு ரேடியோவில் ஒலிக்க இந்தப்பாம்பும் மகுடிக்கு மயங்கி சரசரவென்று பெரிம்மா வீட்டு திசை நோக்கி போகும். ரெண்டுநாள் வராத பாம்பின் தலையை கண்டவுடன், ஷெட்டில் இருக்கும் ராஜா என்கிற நாகம் சோகப்பாட்டாய் வைக்கும். உருகினாள் / னார்கள். எல்லாக்காதல் பாடல்களிலும் சுற்றி நின்ற வெள்ளை உடை தேவதைகள் இவர்களையும் சுற்றி சுற்றி வருவதாய் நினைத்து காதல் செய்தார்கள். கல்யாணம், குழந்தைகள் என்று எதிர்ப்பார்ப்பு பெரிசாகி கோவில், சினிமா என்று பயணப்பட்டது காதல். ராஜாவின் கைங்கரியத்தில் ஹேர்கிளிப்பில் தொடங்கி புடவை வரை புழக்கமாகியிருந்தது. ஆனால் விஷயம் கேள்விப்பட்ட லலிதாவின் அம்மாவோ, தன் மகளுக்கு கடிமணம் செய்ய ஆயத்தமாகியிருந்தாள்.

ஊரைக்கூட்டி ஒப்பாரி வைக்காமல் காதும் காதும் வைத்தா மாதிரி ஊருக்கு அழைத்துப்போய் ஏற்கனவே பேசி வைத்திருந்த மாப்பிள்ளைக்கு மணமுடித்து சென்னைக்கு அழைத்துவந்துவிட்டாள். மாலையும், கழுத்துமாய் லலிதா போய் நின்றது பெரியம்மா வீட்டுக்குத்தான். அதற்குள் விஷயம் கேள்விப்பட்ட ராஜா அங்கே இல்லவே இல்லை. அங்கிருந்த மூன்று நாட்களும் முள் மேல் நிற்பதாய் உணர்ந்தாள்.

தனிக்குடித்தனம் ஆரம்பமாயிற்று. சகல கெட்டபழக்கங்களில் ஒன்றுக்கும் குறை வைக்காமல் கற்றுத்தேர்ந்திருந்த கணவானாய் இருந்தான் லலிதாவுக்கு வாய்த்த கணவன். ஆகக்கூடி நீ பெரிய தப்பு செஞ்சிருக்க, அதனால அடங்கித்தான் போகனும் என்று வந்த அறிவுரையில் அரண்டு நின்றபோது, லலிதா கர்ப்பமாகியிருந்தாள். குழந்தை ப்ரதீப் பிறந்து ஒரு வயது ஆவதற்குள், ராஜாவின் காதல் விஷயம் கேள்விப்பட்ட கணவன், அடி உதைக்கும் குறைவில்லாமல் அர்ச்சனையை ஆரம்பித்திருந்தான். பொறுத்துப்பொறுத்துப் பார்த்து ஒரு சுபயோக சுபதினத்தில் மறுபடி அம்மா வீட்டுக்கே வந்துவிட்டாள் லலிதா. குழந்தை ப்ரதீப்பை அம்மாவிடம் விட்டுவிட்டு அப்போது சேலையை தூக்கி செருகி வீட்டு வேலைக்கு ஆயத்தமானவள் தான், ஆயிற்று விளையாட்டுப்போல பதினான்கு, பதினைந்து வருடங்கள்.

அவ்வபோது கணவனின் கண்மறைவு டார்ச்சர்கள்,இடையிடையே கேள்விப்பட்ட ராஜாவின் செய்திகள்,பிள்ளை வளர்ப்பு,படிப்பு என வாழ்க்கை அதன் போக்கில் எல்லாவற்றையும் இழுத்துக்கொண்டு ஓடி இதோ ஆர்த்தி அபார்ட்மென்ட்ஸ் தள்ளி அசைபோட்டபடி நடந்துகொண்டிருக்கிறது. எதிரே ஸ்கூல் பிள்ளைகளெல்லாம் வர ஆரம்பித்திருந்தன. கூச்சலில் கவனம் கலைந்து வீடு நோக்கி ஓட்டம்,அவசர அவசரமாய் எல்லாத்துணிகளையும் அலசிப்போட்டு, குளித்துமுடித்தாள்.

புடவை கட்டும்போதுதான் லலிதாவுக்கு சட்டென்று அந்தப் புடவையின் நினைப்பு வந்தது. அதை எடுத்து கட்டினாலென்ன, சாயங்காலம் ராஜா வரும்னு சொல்லியிருக்கே, அதுக்கு ஞாபகமிருக்குமா இந்தப்புடவை என்றெல்லாம் ஒருபக்கம் யோசிக்க, இன்னொரு பக்கம் ஆமா அவனே பொண்ணுக்கு விசேஷம்னு பத்திரிக்கை எடுத்துட்டு வர்ரான் அதுல இதத்தான் யோசிச்சிட்டு இருப்பான் என்று புத்தி சொன்னாலும் மனம் வென்றது.

மேலிருந்து சின்ன ட்ரங்கு பொட்டியை எடுத்தாள், அதிலிருந்த நான்கைந்து நல்ல புடவைகளுக்கு அடியில், அவளின் கல்யாணப்பட்டுப்புடவைக்கு கீழே இருந்தது அந்த இள நீல நிறத்தில் சிறுசிறு பூக்கள் போட்ட காட்டன் புடவை. எடுத்து நீவி வாசம் முகரும் போதே, உள்ளே என்னவோ செய்தது. ஏதோ ஒரு படத்தில் ஒரு நடிகை இதைப்போலவே கட்டியிருந்தாள் என அதுபோலவே கடை கடையாய் ஏறி தனக்காய் வாங்கி வந்திருந்ததாய் சொன்ன வார்த்தைகள், அதைத் தான் கட்டிச் சென்று அவனைப் பார்த்தது, திரும்ப வரும்போது பெய்த மழை என எல்லாம் புடவையைப் பிரிக்க பிரிக்க பழைய நினைவுகள் கிளர்ந்தன.

எடுத்து கட்டிக்கொண்டு ஒரு முறை கண்ணாடிப் பார்க்கலாம் என்று நினைத்தபோது, அம்மா, அம்மா என்று ப்ரதீப்பின் குரல் கேட்டு, அவனை கொஞ்சி, கெஞ்சி ஸ்கூல் விவரமெல்லாம் பேசிக்கொண்டே இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர். என்னம்மா, இன்னிக்கு புதுப் பொடவையெல்லாம் கட்டிக்கிட்டு இருக்க, எங்கயாச்சும் கல்யாணத்துக்குப் போறியாம்மா என்றான்.

லலிதாவுக்கு சட்டென்று ஒருமாதிரியாய் இருந்தது. என்ன சொல்வது என்று தெரியாமல், இல்லப்பா ரொம்ப நாளாச்சு கட்டி, ஆசையா இருந்துச்சு, அதான், இதான் என்று ஏதேதோ பேச்சை மாற்ற, சரிம்மா நான் வெளிய விளாடப்போறேன் என்று குதித்தோடினான் ப்ரதீப்.
சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து, கொஞ்சம் வீட்டிலிருக்கும் பொருட்களை ஒழுங்கு செய்து, ராஜா வந்தால் காபி கலந்து கொடுக்கலாம் என்று ஒரு சின்ன பாக்கெட் பால் வாங்கி என ஏதேதோ மனம் போன போக்கில் செய்ய, ரொம்ப அதிகமா செஞ்சிக்கிட்டு இருக்கமோ என்று தன் மீதே ஒரு கேள்வி வந்தது.

இதாங்க லலிதா வீடு என்று குரல் கேட்டு வெளியே எட்டிப்பார்த்தாள், ராஜா நின்றிருந்தான், வாங்க, உள்ள வாங்க என்ற்படி லலிதா உள்ளே போக, வா ராஜி உள்ள என்றான். ராஜாவின் பின்னரே ராஜாவின் பெருத்திருந்த உடலுக்கு சற்றும் குறைவில்லாமல் உடன் ஒரு பெண்,அவன் மனைவியாக இருக்கக்கூடும். பட்டுப்புடவை, நகை என்று தன் ஜம்பஸ்த்துகளை காட்ட முற்பட்டு அதற்கு சற்றும் அவள் தோற்றம் உடன்படாமலிருந்தது. வாங்க உட்காருங்க என்றபடியே பாயை விரித்தாள். காபி சாப்பிடுங்க என்று காபி கலக்க போனாள்.

இல்ல, அதெல்லாம் வேணாம்பா, நாங்க இன்னும் நாளு எடத்துக்கு பத்திரிக்கை வைக்கப்போகனும் என்று இருவரும் நின்று கொண்டிருந்தார்கள். அதுக்கென்ன ராஜா, காபி குடிச்சுட்டு... என்று லலிதாவின் குரல் சற்று உரிமையாய் எழும்ப, சட்டென்று ராஜா, நான் சொன்னேனில்ல ராஜி, எங்க சித்தப்பா வழில, தூரத்து சொந்தம் அப்படின்னு, இதான் அது, பேரு லலிதா. மனைவியைத் தவிர எல்லாப்பெண்களும் தனக்கு தங்கைதான் என்ற அவதானிப்பை தன் மனைவிக்கு உணர்த்த முற்படும் ஒரு அவசரத்தொனியில் அவன் தொடர்ந்து பேசியதெல்லாம் லலிதாவின் காதில் விழவில்லை.

அப்டிங்களாங்க என்று அந்தப் பெண்மணி லலிதாவின் காது,கழுத்து என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே பத்திரிக்கையைக் கொடுத்தாள், ராஜாவின் கையும் பத்திரிக்கையைப் பிடித்திருந்தது. அவசியம் வந்துடுங்க, எங்க வீட்டுல மொத பங்ஷனு என்றவாறே வாசல் தாண்டினாள், பின்னே ராஜாவும். அவள் அசைந்து முன்னே செல்ல, ராஜா இவளைப் பரிதாபமாகப் பார்த்தான். மதியம் பார்த்த பார்வைக்கும், இப்போதைக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாய் உணர்ந்தாள் லலிதா உடன் அவன் பேச்சிலும்.
ம்மா, நான் படிக்கப்போறம்மா என்றவாறே உள் நுழைந்தான் பிரதீப். என்னம்மா, நான் வெளிய போய் வெளாடிட்டு வர்றதுக்குள்ள பழையபுடவை கட்டிக்கிட்டு இருக்க, அந்தப் புடவைல எங்க டீச்சர் மாதிரி இருந்தம்மா, ஏம்மா, கழட்டிட்ட என்றான் இப்போது உடுத்தியிருக்கும் பழைய புடவையை திருகியவாறே.

இல்லப்பா, ரொம்ப வருஷமாச்சுல்ல, புடவைல அங்கங்க நெறைய பொத்தல் விழுந்துடுச்சி, அதான் பாத்திரக்காரனுக்கு போட்டுடலாம்னு எடுத்துவெச்சிட்டேன் என்ற திசையில், ஆசையாய் நீவி, முகர்ந்து பிரித்த புடவை மடிக்கப்படாமல் குவியலாய் இருந்தது.

23 November 2009

நவம்பர் 24, 2007

எண்ணியபோதெல்லாம் வீடியோவில் நிகழ்வுகளாக ஓடும் ஜூலை 3, 2006 எப்படி நினைவிலிருக்கிறதோ, ஆடியோவும் வீடியோவும் இல்லாமலேயே சுவாரஸ்யமான நிகழ்வுகளும், அதை ஒட்டிய நினைவுகளுமாய் பசுமையாய் நெஞ்சில் நிற்கிறது நவம்பர் 24, 2007.

அமிர்தவர்ஷினி வந்தாள் - எங்கள் அகவுலகத்தை அழகிலும் அழகு செய்தாள்.

ங்கா,ங்கா என்று தொடங்கி... இப்போது சத்தீச்குமா.. எச்சோ என்று எங்களின் பெயரை உச்சரிக்கும் போது அக மகிழ்கிறது.

டே டே இருடா, வர்ரண்டா என்று அவள் சொல்லும்போது இருவரும் ஒருவரையொருவர் திரும்பி பார்த்து சிரித்துக்கொள்கிறோம்.

மகள் கேட்ட ஜெல்லியை வாங்கிவந்து இரவு ஒருமணிக்கு அவள் பக்கத்தில் வைத்துவிட்டு சிரிக்கின்ற எதிர்பார்க்கின்ற தந்தையின் உணர்வுகள் இதற்கு முன் நான் பார்த்திராதது.

சோர்ந்து படுத்துவிட்டால், என்னா எச்சோ, என்னா எச்சோ என்னா ஆச்சு, என்று சுற்றி சுற்றி வந்து கேட்கும் போது சட்டென்று துள்ளியெழுந்துவிடும் மனம். அம்மாவாய் நான் அவளுக்கு அதிகம் செய்ததில்லை,ஆனால் ஒரு மகளாய் எனக்கு அவள் அதிகம் தந்திருக்கிறாள். அமித்தம்மா என்ற ஒரு வார்த்தை போதாதா! சட்டென்று மனம் நிறைந்த உணர்வெழுகிறது.

பாப்பாக்கு ஆப்பி பத்தடே வா?

மங்க்கி மாதி கேக்குதான் வேணும்.

மூண்ணு டெச், யெல்லோ கலர்
என்று தன் விருப்பங்களெல்லாம் முன் மொழியப்படுகிறது.

பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதைவிடவும் என்ன இருக்கிறது வாழ்வில்??? சொல்லப்போனால் நம் பிறப்பே அதற்குத்தானே :)

நாளை (24.11.2009) அமிர்தவர்ஷினியின் பிறந்தநாள்.

தொடர்ந்து பயணித்துவரும் நண்பர்களே!

வலைப்பூவின் வாயிலாக அன்பில் நான் நனைந்த நிறைய நிகழ்வுகள் / நெகிழ்ச்சிகள் உண்டு, அதே போல் உங்களின் வாழ்த்துக்கள் அவளுக்கு மிகவும் முக்கியமானது. வளர்ந்தபின் அமித்து இதைப்படிக்க நேரிடும்போது, உங்கள் ஒவ்வொருவரையும் கேட்க முனையும் அந்த ஆச்சர்ய கணத்தை எதிர்நோக்கி....

நட்புடன்
அமித்து அம்மா

கனவெல்லாம் பலிக்குதே

பாடல்கள் என்றுமே மனதைத் தாண்டி உயிரை வருடுவன. வாசிப்பில் எவ்வளவு அலாதி சுகமோ அது போல தனிமையில் பாடல் கேட்பதும். அனைவருமே இதை உணர்ந்தவர்கள் தான் எனவே அதிகப்படியாய் சிலாகித்து சொல்ல என்ன இருக்கிறது?

சில பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும், பார்க்கும் போது காண சகிக்காது. சில பாடல்கள் விஷுவல்களுக்காகவே பார்க்கத் தோன்றும், ஆனால் வரிகள் சொதப்பலாக இருக்கும். இரண்டும் ஒன்றாய் அமைவது வரம்.

நம் உணர்வுகளோடு இழைந்து வரும் பாடல்கள் நிறைய. பழைய பாடல்கள் தான் அதில் அதிகம் இடம்பிடித்திருக்கின்றன என்றாலும், கொஞ்சம் சமீபத்தில்(2007) வெளிவந்த கிரீடம் என்ற படத்தின் இந்தப் பாடல் மனதையும் கண்களையும் ஒரு சேர நிறைத்து சிலிர்க்க வைக்கும். ரொம்ப நாள் கழித்து இன்று இந்தப் பாடலை கேட்க நேர்ந்தது. பல்விதமான உணர்வுகளின் ஊடே மாமாவும், சபரியும் இந்தப் பாடலை பார்த்துக்கொண்டே ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டதும் நினைவிலிருந்து மீண்டு வந்தது.

ராஜ்கிரணும், அஜீத்தும் நடித்த இதோ அந்தப் பாடலின் வரிகள். இந்தப்பாடலில் ராஜ்கிரணின் நடிப்புணர்வு அற்புதமாய் இருக்கும்.

கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே, வானவில் நிமிடங்கள் நனைகிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே, என்னை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே,
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான் எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே,

கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே

நடைவண்டியில் நீ நடந்த காட்சி இன்னும் கண்களிலே
நாளை உந்தன் பெயரை சொல்லும் பெருமிதங்கள் நெஞ்சினிலே
என் தோளை தாண்டி வளர்ந்ததினால் என் தோழன் நீயல்லவா
என் வேள்வியாவும் வென்றதனால் என் பாதை நீ அல்லவா
சந்தோஷ தேரில் தாவி ஏறி மனமின்று மிதந்திட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே,
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான் எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே,

கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே

கிளி கூட்டில் பொத்திவைத்து புலி வளர்த்தேன் இதுவரையில்
உலகத்தை நீ வென்று விடு உயிர் இருக்கும் அதுவரையில்
என்னாளும் காவல் காப்பவன் நான், என் காவல் நீயல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான் என் தேடல் நீயல்லவா
என் ஆதியந்தம் யாவும் இன்று ஆனந்த கண்ணீரில்
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே,
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான் எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே,

கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே

வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே, வானவில் நிமிடங்கள் நனைகிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே, என்னை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே,
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான் எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே,



மகனோ, மகளோ, ஒரு குழந்தைக்கு தாய், தந்தை என்றாகிவிட்டாலே நிறைய பெருமித கணங்களை சந்திக்க நேரிடும். அப்படி கனவில், உணர்வில் நனையும் பெருமித கணங்களை நம்மை உணரச்செய்யும் பாடல் இது.

20 November 2009

வாழ்த்தலாம் வாங்க

இன்று தன் பத்தாவது வயதில் அடியெடுத்து வைக்கும் மோனி @ மோனிகாவுக்கு (மோனிபுவன் அம்மாவின் மகள்)மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்






வாழ்வில் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று இனிதாய் வாழ வாழ்த்துவோம்.

18 November 2009

தொலைத்ததும், பெற்றதும்.

நான் அனேகமாக பொருட்களை தொலைத்ததுமில்லை,அப்படியே தொலைத்தாலும் என் இழப்பீடுகளை சமன்பாடு செய்ய பின் நாட்களில் பொருட்கள் அவ்வளவாக கிட்டியதுமில்லை. சிலருக்கு அஞ்சு ரூபா தொலைத்தால், அடுத்தாற்போல் ஐம்பது ரூபாய் கிடைக்கும் அதிர்ஷடமெல்லாம் இருந்தது.

முதன் முதலாய் நான் தொலைக்க வேண்டிவந்தது பரிசாய் கிடைத்த குண்டு நீல நிற பேனா, கடையில் இங்க் நிரப்ப தந்தால், நிரப்பிவிட்டு பதினைந்து பைசா வாங்கிக்கொள்வார்கள். நார்மல் பேனாவுக்கு பத்து பைசாதான். பட்டையான பித்தளை நிப், மூடியின் கூடுதலாக சில்வர் கம்பியின் முனையில் பட்டாணி கொட்டை சைஸுக்கு குண்டாய் இருக்கும் அது எனக்கு ரொம்ப பிடித்த பேனா, அது எனக்கு மட்டுமல்ல மஹாலஷ்மிக்கும் பிடிக்கும் என்பது பிற்பாடுதான் தெரிய வந்தது.

வழக்கம் போல ஸ்கூலில், நோட்டில் எழுதிவிட்டு அதற்குள்ளேயே பேனாவை வைத்துவிட்டு, சாப்பாட்டு மணி அடித்ததும் ஹோ வென்று மைதானத்துக்கு வந்தாயிற்று. அவசரமாய் விழுங்கிவிட்டு, தலைமுடி பறக்க, முட்டிக்கால் முகத்தில் இடிக்க என எவ்வளவு விளையாட முடியுமோ அவ்வளவு விளையாடுவதற்குள் அடுத்த மணியும் அடித்தாயிற்று. ச்சே எவ்வளவு சீக்கிரம்ப்பா என்று நொந்து வகுப்பறைக்குள் நுழைந்து நோட்டைத் திறந்தால் பேனாவைக் காணோம். அங்குமிங்கும் தேடி, அழாத குறையாக அவளையும் இவளையும் கேட்டதில் நீ க்ளாஸ்ல வெச்சுட்டு போனியா, இல்லை கையோட எடுத்திட்டு போனியா என்று என்னையே குற்றவாளி குண்டில் நிறுத்தினார்கள். பேனாவுக்காக மெனக்கெட்டு யோசித்ததில், போகும் போது வாயைப்பிளந்து கொண்டு குண்டாக இருந்தது நன்றாக ஞாபகமிருந்தது. அதை சொல்ல வருவதற்குள், டீச்சர் வந்து, டீச்சரிடம் சொல்ல வருவதற்குள் அழுகை வந்தது.

சொல்ல வாயெடுப்பதற்குள் கலைச்செல்வி தன்னிடம் இருக்கும் இன்னொரு பேனாவை என் பக்கம் தள்ளி வைத்துவிட்டாள். அப்போதைக்கு கவனம் டீச்சர் மேல் இல்லாவிட்டாலும் இருப்பது காண்பிப்பது ஒரு மாணவியான எனது கடமை, இல்லாவிட்டால் சாப்பிட்டு வந்த முதல் பீரியட் தூக்கமாய் வரும்,அப்படி தூங்கி கொட்டாவி விடுபவர்களை கொட்டுவதற்காகவே டீச்சர் சிலரை நியமித்திருந்தார்கள். ஏற்கனவே இரு முறை கொட்டு வாங்கிய அனுபவத்தால் அப்போதைக்கு டீச்சர், ப்ளாக் போர்ட், புக் என்று பாவ்லா காட்டிக்கொண்டு மானசீகமாய் குண்டு பேனாவை தேடிக்கொண்டிருந்தேன். ம்ஹூம் கிடைக்கவேயில்லை.

பேனா தொலைத்ததற்கு வீட்டில் திட்டு வாங்கி, பச்சை நிறத்தில் மொக்கை பேனா ஒன்று கைக்கு வந்தது. நாலைந்து நாள் கழித்து கொடுத்த நோட்டைத் திருப்பி வாங்க, அன்று காலை மஹாலஷ்மி வீட்டுக்குப்போனேன், வீடு திறந்து கிடந்தது, எனது நோட், அதற்குக் கீழே அவளின் நோட், அதற்கு மேலே எனது குண்டுப் பேனா. பார்த்தவுடன் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. வீட்டில் யாரையும் காணோம், மஹா என்று கூப்பிடுவதற்குள் சமையலறையில் இருந்து மஹாவின் அம்மா, மஹா வை கடைக்கு அனுப்பியிருப்பதாக பதில் வந்தது. என் நோட்டு கேட்க வந்தேன் என்று சொன்னாலும், பேனா மீது தான் என் கண்கள் இருந்தது. மஹாவும் வந்துவிட்டாள், சட்டென்று அவளின் முகம் மாறியதாக எனக்குத் தோன்றியது, ஆனால் ஏய் நோட்டு, நான் க்ளாசுல தரேன்ப்பா என்றாள், இல்ல இப்ப வேணும் என்றேன். நோட் கைக்கு வந்தது, ப்பேனா மஹா என்றேன் மிகவும் பரிதாபமாக.

பேனாவா ?, ம்மா இங்க வாயேன் என்றதும் எனக்கு சகலமும் ஒடுங்கிப்போனது, கையில் கரண்டியும் கலைந்த தலையுமாக மஹாவின் அம்மாவைப் பார்த்தவுடன் பேச்சே வரவில்லை, மஹா தான், ம்மா இந்தப் பேனா நம்ம சரவணன் மாமா தானே ஊர்ல இருந்து வாங்கியாந்து தந்தது என்றாள். ஆமாம், இப்ப என்ன அதுக்கு என்ற மஹாவின் அம்மாவையும், மஹாவையும் பார்க்க எனக்கு அழுகை கண்ணில் முட்டிக்கொண்டு வந்தது.

இல்ல ஆண்ட்டி, அது என் பேனா, நான் ஸ்கூல்ல தொலைச்சிட்டேன், நாலு நாளா தேடிக்கிட்டிருக்கேன், எங்கம்மா கூட என்னத் திட்டினாங்க.

ஒலகத்திலயே ஒன் பேனா மாதிரி ஒன்னுதான் இருக்குமா, வேற இருக்காதா, இது உன் பேனாதான்றதுக்கு என்னா அத்தாச்சி? இத கேட்கதான் நோட்டு கேட்கற சாக்குல வந்தியா?

இல்ல அது நீல கலர், குண்டு, முனையில் இன்னொரு குண்டு என்று சொல்லிக்கொண்டே வந்தாலும் அது மஹாவுடைய பேனாதான் என்று நிரூபிக்க அவளின் அம்மா வாதாடிக்கொண்டிருந்தார்கள். மஹா என்னையேப் பார்த்துக்கொண்டிருந்தாள். வாதப் பிரதிவாதங்களின் சாமர்த்தியங்கள் ஏதும் அப்போது என் வாய் வசம் வரும் அனுபவங்களைப் பெற்றிருக்கவில்லை ஆதலால்,சட்டென்று எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு விலகிவிட்டேன். என் முகம் மாறி இருந்ததை கண்ணாடி பார்க்காமலேயே என்னால் உணரமுடிந்தது.

வீட்டில் என்னவென்று கேட்டதற்கு எதுவும் சொல்லாமல், ஸ்கூலுக்கு வந்தாயிற்று. ஸ்கூலில் அதே முகபாவம்தான். யார் பொருட்டும், எதன் பொருட்டும் முகம் மாறவேயில்லை, நிகழ்வுகளையொத்து முகபாவங்கள் மாறும் நாள் என்னிலிருந்து அன்று தான் தொடங்கியிருக்கவேண்டும். மஹா வந்தாள், வழக்கம் போல லேட்டாக.

சகஜமாக எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தாலும், என் மீது அவளின் பார்வை வீச்சு அதிகமாக இருப்பதாகப் பட்டது. அவள் வீட்டில் நடந்த நிகழ்வை நான் அதுவரையிலும் யாரிடமும் சொல்லவேயில்லை.

ஆனால் இரண்டு பீரியட் இடைவேளையின் போது, அவள் தான் என் பெஞ்ச்சில் இருக்கும் எல்லோரிடமும் சொன்னாள், நான் அவள் வீட்டுக்குப்போனதையும், பேனா கேட்டதையும். பாருப்பா இது இவ பேனாவாப்பா, என்று பேனாவை வெளியே எடுத்துக்காட்டிய போது, பேனாவின் முனையிலிருக்கும் சில்வர் குண்டு உடைபட்டிருந்தது, என் பேனாவில் இருந்த பித்தளை நிப் சில்வர் கலராக உருமாறியிருந்தது.

மீண்டும் அழுகை முட்டிக்கொண்டுவந்தது, கலைச்செல்வி என்னைத் தேற்றினாள். அழுவாதப்பா, அவ எல்லாத்தையும் செய்றவதான், நீ அழுவாதப்பா.

இல்ல கலை, என் பேனா வை அவ எடுத்துக்கிட்டது கூட பெரிசில்ல, காலைல அவங்க வீட்டுல பார்க்கும் போது அந்தப் பேனா நல்லா இருந்துச்சு, இப்பப் பாரு, அந்த குண்டு உடைஞ்சுப்போயிருக்கு என்று அழுத அழுகையின் ஊடே தெரிந்த மரப்பெஞ்சின் மழமழப்பு இப்போதும் கண்ணில் பசுமையாய் தெரிகிறது.

நீ ஒன்னுத்துக்கும் லாயக்கில்ல, அதது என்ன ஜித்தா, சாமர்த்தியமா பொழைக்குதுப்பாரு என்று அடிக்கடி முழங்கும் அம்மாவின் கூற்று உண்மைதானோ என்று மனதுக்குள் தோன்றி மறைந்தது.

எடுக்கவும், எடுத்ததை மறைக்கவும், மறைத்ததை தனதென்று வாதாட என்னொத்த மஹாலஷ்மிக்கு கற்றுத்தந்தது எது, அவளொத்த எனக்கு கற்றுத்தராதது எது? இப்படி சில நிகழ்வுகள் தான் சிறுமியாக இருந்த எனக்குள் வார்த்தை ஜாலங்களையும்,வாய் சாமர்த்தியங்களையும் கைக்கொள்ளவில்லையானால், நீ மக்கு என்று எடுத்துக்காட்டியதோ?

வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு பின் எங்க எத சொல்லனும், எங்க எத பேசனும்னு கூட தெரியாதா உனக்கு என்ற கேள்விக்கணைகள் துளைத்த பின்னர், நாசூக்காய் பேச, சிரிக்க என எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கை வந்தது.

நீயா ஏன் எல்லாத்தையும் இப்படி முன்னாடியே உளறிக்கொட்டற என்றும், மற்றவர்கள் வாயில் வந்ததை வைத்தே அவர்களை மடக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இன்னும் பற்பல உபதேசங்கள் சாமர்த்திய வாழ்தலை, பிழைத்தலை முன்னிறுத்தியே சொல்லப்பட்டது. சொல்றத சொல்லிட்டு, கடைசியா சிரிச்சுடு என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அது ஒன்றுதான் இன்று வரை கை மன்னிக்கவும் வாய் வரப் பெறவில்லை.

மனதில் தோன்றியதை சட்டென்று சொல்லவும், செய்யவும் முடியாமல், மறைத்து வைத்துக்கொண்டு எப்படி சிரிப்பது அதுவும் சினேகமாய்?

16 November 2009

அமித்து அப்டேட்ஸ்

டெத்தால் இல்லனா சாப்பாடு ல்ல,
சாப்பாடு இல்லனா டெத்தால் ல்ல

அமித்துவின் லேட்டஸ்ட் விளம்பர ரைமிங்க் சாங்க்.

..........

அமித்து தன் கழுத்தில் கை வைத்துக்கொண்டு, ம்மா பாப்பாக்கு ஜுரம் அடிக்குது பார்ரேன்.

இல்லமா.

ல்ல, பாப்பாக்கு ஜூரம் அடிக்குது.

நீ சும்மா சும்மா இதையே சொன்னனா, கண்டிப்பா ஜூரம் வந்துடும். அப்புறம் அம்மா மருந்து ஊத்திருவேன்.

இல்ல ஜூரம் அக்கிது.

சரி மருந்து எடுத்துவரேன் என்று என்னை மறந்து நான் ரிப்பீட்டிக்கொண்டிருக்க, மேடமும் என்னை நோக்கி ஒரு வரியை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

முதலில் புரியாமல் பின்பு அவளிடமே க்ளாரிஃபை செய்ததில் தெரிய வந்த வாக்கியம்

ஏன் இபி அதம்(அடம்) புக்கிற ?????

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

.............

பூனையை, காக்காவை பார்க்கா நேர்ந்தால், எச்சோ, ஆங்க அம்மா எங்க?.

இங்கதாம்மா எங்கியாவது இருக்கும்.

டிஸ்கவரில் நரிகளைப் பற்றி காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.மூன்று குட்டி நரிகள் உலவிக்கொண்டிருந்தன. தூரத்தில் அம்மா நரி ஓடிக்கொண்டிருந்தது.

ம்மா, ஆங்க அம்மா எங்க?

அதோ போகுது பாரு, பெரிசா இருக்கே அதான் அவுங்க அம்மா. அம்மாவை காண்பித்த மகிழ்ச்சியில் நான்.

ஆங்க அம்மா ஆபிச்சுக்கு போவுதா?

:(

...............


அவளின் சின்ன சைக்கிளை ஓட்டிக்கொண்டிருப்பாள், நடுவில் இறங்கி குனிந்து எதையோ செய்வாள்.

என்னமா செய்ற ஓட்டறத விட்டுட்டு?

வண்டி இப்பேர் ஆயிச்சு,

ஓ அப்டியா

சிக் சிக்.. வண்டி ச்சரியாய்ச்சு. ட்டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

..........

மழை நாட்களின் போது, ஆயா பாத்தூம் வர்து.

மழை பெய்தேம்மா,சரி வா என்று குடையைப் பிடித்துக்கொண்டு டாய்லெட் அழைத்துப்போயிருக்கிறார்கள்

ரொம்ப நேரமா அமித்து ஒன்றும் செய்யாமல் இருக்க, என்னமா, பாத்ரூம் போகலியா?

இல்ல ஆய்யா, ச்ச்சும்ம்மாதான் ச்சொன்னேன்.

.......

ஏதோ ஒன்றிற்காக அவளை கிறுக்கி என்று சொன்னேன். பதிலுக்கு அவளும் கிரக்கீ என்றாள்.

இப்போது எனக்கு கிறுக்கியை விட கிரக்கீ என்பது மிகவும் அழகான சொல்லாகப்படுகிறது!!!

..........

ஒருநாள் காலை ஆபிசுக்கு கிளம்பிக்கொண்டிருக்கும் போது, அமித்து சாக்லேட்டைப் பிரித்து கையில் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

சாக்லேட் சாப்பிட்டா இருமல் ஜாஸ்தியாகும், தயவு செய்து கீழ போடு

நாணிக் கோணி சிரித்துக்கொண்டே மறுபடியும் சாக்லேட் வாயிடம் போனது.

வர்ஷா, நீ இப்ப சாக்லேட் சாப்பிட்ட, நான் ட்ரெயினுக்கு உன்னை கூட்டிட்டு போ மாட்டேன். யார் சொன்னாலும், நீ அழுதா கூட கூட்டிட்டு போ மாட்டேன்.

ஒரு நொடிக்கூட தாமதமில்லை, ஆக்கிலேட் ஆய், ஆந்தி வர்ரும், கீழ போட்டுர்ரேன் என்று ஜன்னலை திறந்து வெளியே வீசிவிட்டாள்.

அப்போது சிரித்தாலும்,வெரிகுட் சொன்னாலும்,அன்றையநாள் முழுவதும் குற்ற உணர்வு குறுகுறுத்துக்கொண்டே இருந்தது என்னுள்.

.........

11 November 2009

மழையோடு விளையாடி... மழையோடு உறவாடி...

மழை வரும்போதெல்லாம் அவளுக்கு மழையின் மொழியும் ஞாபகம் வந்துவிடும். மழை ஓசை என்றால் பட்,பட்,பட் என்று வேகமாகவும் பட்... பட்... என்று நிதானமாகவும் ஒலிக்கும் ஓசைதான் நினைவுக்கு வரும். அவளென்றால் அவள் ஒரு சிறுமி. அவள் அம்மாவோடு அந்த ஒண்டுக்குடித்தன திண்ணையில் படுத்துக்கொள்ளும்போது, மழையின் சாரலிலிருந்து மறைந்துகொள்ள ஏதுவாய் அவளின் அம்மா செவ்வக வடிவ சிமெண்டு பையையெல்லாம் ஒன்றாய் தைத்து ஒரு நீள் செவ்வக படுதாவை உண்டு செய்திருந்தாள். படுதாவின் இரு முனையிலும் சணல் கட்டியிருக்கும் அதை இழுத்து திண்ணையின் இரு தூண்களிலும் கட்டிவிட்டால் மறைவு ரெடி. மழையோ, காற்றோ படுதா தாங்கிக்கொள்ளும். உள்ளே இழுத்துப்போர்த்திக்கொண்டு களைப்பின் இருப்பில் அவளின் அம்மா உறங்கிப்போயிருப்பாள். அவளோ நினைவுகளோடு விடாமல் கதைத்துக்கொண்டிருப்பாள்.

மழை வந்தால், பட், பட் டை எண்ணிக்கொண்டிருப்பது மிகவும் பிடித்தமான விஷயம், ஆனால் அதிகபட்சம் நூறைத் தாண்டியதில்லை. அதற்குள் அவள் தூங்கிப்போயிருப்பாள். இடையில் என்றாவது பெருமழை பெய்து, பெரிய பட் பட்.. கள் உண்டாகி தூக்கத்தைக் கலைத்துப்போடும். உறக்கம் கலைந்த அம்மாவின் சிடுசிடுப்பு, அவள் தொடர விழைந்த எண்ணிக்கையை தொடர விடாமல் செய்ய,இருளில் மழையின் சத்தத்தையே வெறிக்க கேட்டுக்கொண்டு சுருண்டுவிடுவாள்.

மழைநாளின் போதான பட், பட் பல்லவி அந்தப் படுதா கிழியும் வரை நிலைத்திருந்தது. பின்பு படுதா கிழியவும், அவர்கள் திண்ணையில்லாத , ஆனால் திண்ணையே சமையல் அறையாகியிருந்த வீடாக பார்த்துப்போனார்கள். அங்கே மழைவந்த போது பட், பட் ஒலி வாய்க்கவே இல்லை. ஓட்டின் மீது விழும் சட,சட தான். அதுவும் நிமிட நேரங்கள் மட்டுமே நிலைத்திருந்து, பின்னர் ஹோ வென்ற இரைச்சலாக மாறிவிடும். ஏனோ இந்த ஒலி அவளுக்கு பிடிக்கவேயில்லை.ஆனால் மழைக்கு பின்னால் போகும் நேரமே வாய்க்கவில்லை. படிப்பு, படிப்பு என்று அதன் பின்னால் ஓடிக்கொண்டிருந்தாள். அப்போது மழை பெய்தால், பள்ளிக்கு விடுப்பு என்ற நிலைதான் தோன்றியதே அன்றி எப்போதாவதுதான் அந்த பட், பட் மனதில் படர்ந்தது.

அதற்குப்பிறகு வந்த, வாய்த்த மழைக்காலங்களெல்லாம் ஒன்றும் அவ்வளவு மனதோடு இயைந்ததாக இல்லை. பருவ வயதிலும் படிப்பைத் துரத்திக்கொண்டு ஓடி, பல்கலைக்கழகத்தில் உட்கார்ந்திருந்த போது, அந்த நீள வகுப்பறையின் விசாலமான சன்னல்களின் ஊடே மழையை ரசித்ததுதான் அவளின் ஆகப்பெரும் ரசிப்பாக இருந்தது. ச்சோ வென்ற மழை, இதற்கப்புறம் பெய்யவேண்டியதெல்லாம் இப்போதே சேர்த்துவைத்து பெய்வதைப்போன்ற மழை, தூரத்தில் எல்லாம் கடலில் துளியாக வீழ்ந்து கொண்டிருப்பதை, அப்போது வானமும், கடலும் இருந்த இருப்பை, நிறத்தை அதனை இள நீல நிறம் அல்லது சாம்பல் நிறமென்று சொல்வதா?

அந்த நிறத்தினூடாக மழை கடலில் வீழ்ந்ததை ரசித்துக்கொண்டிருந்தாள். ஆசிரியர் கத்திக்கொண்டிருப்பதெல்லாம் காதில் விழவில்லை. திகட்ட திகட்ட ரசித்துக்கொண்டிருந்தாள். அந்த ரசிப்புத்தான் அவளை அதற்குப் பின்னர் வெகுநாட்கள் மழை வந்தால் கையோடு குடை இல்லாத அல்லது வைத்திருந்தாலும் அதை விரிக்காத ஆளாக மாற்றியிருந்தது. மழை வீழ்ந்தால், மேல் நோக்கி சாம்பல் நிறத்தைத்தான் தேடுவாள். மழையின் அடர்த்தியின் கற்றைகளின் ஊடாக அது சில சமயம் தட்டுப்படும். மகிழ்வாள். மகிழ்தலின் ஊடே மனைவியாகி பின் தாயாகிவிட்டாள். இப்போதும் மழை வருகிறது.

சில சமயம் மழையை ரசிக்கும் மனம் பல சமயம் வாய்ப்பதில்லை. நச நசவென்று வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் வடியும் தண்ணீர், வடித்து நிமிர்த்திய மாத்திரத்தில் வடிந்து போன சோற்றின் சூடு, துணி துவைத்து காயாத சமயங்கள், அதிகக்கூலி கேட்கும் ஆட்டோக்காரர், தண்ணீரை வாரி இறைத்துவிட்டுப்போகும் வாகனங்கள் எல்லாவற்றிற்கும் மேலாய் மகளுக்கு காய்ச்சலையும், சளியையும் ஒன்றாய் தோற்றுவிக்கும் காலநிலை இப்படியாய் பல விடயங்கள் மேல் நோக்கி சாம்பல் நிறத்தோடு மழையை ரசிக்கும் மன நிலைக்கு தன்னை கொண்டு செல்வதில்லையே என தன்னையே நொந்துகொண்டிருக்கிறாள். அதி சொற்பநேரங்களில் மாத்திரமே அவளும், மகளும் சன்னல் கம்பிகளின் ஊடாக மழையை ரசிப்பார்கள்.

மழ, ஏலோ பெச்சா பேய்து ப்பார்ரு என்ற மழலையின் மழை, பால்யத்தின் பட் பட்டையும், பருவத்தின் பல்கலைக்கழக மழையும் ஒரு சேர மறக்கடித்துவிடும்.

தலை கொதிக்கும் வெய்யில் தந்த சிடுசிடுப்பை எல்லாம் ஓட ஓட விரட்டியடித்து, வீட்டின் மூலையில் கருப்பையில் இருந்த இருப்பைப் போல சுருண்டு கொண்டு, அவ்வப்போது தேநீரும் சிப்ஸும், உடன் பிடித்தமான வாசிப்பும், பாடலும், எல்லோரும் ஒன்றாய் உடன் இருக்கும் மகிழ்ச்சியை ஒரு சேர கூவி, விளையாடி வெளிப்படுத்தும் மழலைச்செல்வங்களின் உற்சாகத்தைப் பார்த்து தானும் உற்சாகமாகி மீண்டும் பெய்யத்துவங்குகிறது மழை. நினைவுகளின் கீழே ஓடிப்போய் ஒண்டிக்கொள்கிறது மனம்.

06 November 2009

நீளாத கை

அடித்துப்பிடித்து
ஆபிஸுக்குப்போய் வந்து
அக்கடான்னு சாஞ்சி,
அரக்கப் பறக்க தின்னாம
அள்ளி கிள்ளி ஆசையா
ஒரு வாய்
உள்ள போக

அடுத்த வாய்க்கு
அடுத்த வாய்
அபுக்குன்னு பிடுங்குவ,
உள்ள போகப்போன
ஒரு கை சோத்தை.

மூஞ்சக்காட்ட முகத்த தூக்குனா
சிரிச்சுக்கிட்டே சோத்தைப் பிடுங்கி
இப்புடி ஒரு சுத்து
அப்புடி ஒரு சுத்து
துப்புடி ஒரு துப்பு தூன்னு
பட்ட திருஷ்டி பறந்தோடி
போகட்டும்னு
வாய்க்கிட்ட கை நீட்டுவ.

இப்பலாம் சோத்தை
தின்னும்போது
நீ பிடுங்க எதிர்பார்த்தே
காத்திருக்கேன்.

உன் கைதான்
அங்கிருந்து
இங்க வரைக்கும்
நீளல ம்மா.

05 November 2009

விருப்பும்,வெறுப்பும்

தொட‌ர்ப‌திவுக்கு அழைத்த‌ அ.மு.செய்யது, சின்ன அம்மிணி மற்றும் ஜீவன் அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி.

************************

அரசியல் தலைவர்

பிடித்தவர்: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
பிடிக்காத‌வ‌ர்: கலைஞர்

நடிகர்
பிடித்தவர்: தனுஷ், சூர்யா
பிடிக்காத‌வ‌ர்: சிம்பு, எஸ்.ஜே.சூர்யா

சிரிப்பு நடிகர்:
பிடித்தவர்: கல்யாணப்பரிசு தங்கவேல், நாகேஷ்
பிடிக்காதவர்: சின்னி ஜெயந்த்,தாமு

இயக்குநர்
பிடித்தவர்: பாரதிராஜா, பாசில், பாலா
பிடிக்காதவர்: இராம.நாராயணன், கஸ்தூரி ராஜா

ந‌டிகை
பிடித்தவர்: பானுமதி ராமகிருஷ்ணா, ஷோபா, சிம்ரன்
(இதில் நடிகை பானுமதி அவர்களின் பன்முகத்திறமையும், துணிச்சலும் மிகப்பிடித்தமானது, அவரைப் பற்றி பத்திரிக்கையில் படித்தறிந்த செய்தி ஒன்று: எம்.ஜி.ஆருடன் நடித்த படத்தில், எம்.ஜி.ஆர் அவர்கள் வாள் சண்டையிட்டு பானுமதியைக் காப்பாற்றுவது போன்றான காட்சி. இந்த காட்சி, கிட்டத்தட்ட
ஏழெட்டு டேக்குகள் வாங்கிவிட, பொறுமையிழந்த பானுமதி, மிஸ்டர் எம்.ஜி.ஆர், அந்த வாளை எங்கிட்ட கொடுங்க, நானே சண்டைப் போட்டு என்னைக் காப்பாத்திக்கிறேன் என்றாராம்..)

பிடிக்காத‌வ‌ர்: சரோஜா தேவி (கோப்..பா..ல் அய்யய்யோ ஆள விடுங்க கன்னடத்துப் பைங்கிளி),
நயன்தாரா (ஐயா படத்துல அழகா இருந்து இப்போ ஆயா மாதிரி ஆகிட்டாங்க)

இசையமைப்பாளர்
பிடித்தவர்: என்றென்றும் இளையராஜா
பிடிக்காதவர்: இமான் (ஒரு படத்துல இசையமைச்சு,நமீதா அக்காவுக்கு அவரே பாட வேற செஞ்சிருப்பாரு, அவர் என்ன பாடுறார்னு அவருக்கே கேட்டிருக்குமான்னு தெரியல)

நடன இயக்குநர்
பிடித்தவர்: பிரபுதேவா
பிடிக்காதவர்:கலா மாஸ்டர் (மானாட மயிலாடல வந்து ஓவரா நடிக்காதீங்கன்னு சொன்னா கேக்கறீங்களா, பாருங்க இப்ப கெமிஸ்ட்ரி ஒர்க் பண்ணல)

பாடலாசிரியர்
பிடித்தவர்: பட்டுக்கோட்டையார்,கண்ணதாசன், நா.முத்துக்குமார்
பிடிக்காதவர்:வர்றாண்டா, போறாண்டா, டமுக்கு டப்பா ன்ற ரேஞ்சுல பாட்டெழுதறவங்க எல்லோரும்.

கவிஞர்
பிடித்த‌வ‌ர்: அ.வெண்ணிலா, அறிவுமதி
பிடிக்காத‌வ‌ர்: யாரையும் சொல்லத் தெரியல.

எழுத்தாள‌ர்
பிடித்தவர்: பாலகுமாரன்,சுஜாதா,கண்மணி குணசேகரன்,ச.தமிழ்ச்செல்வன்
பிடிக்காத‌வ‌ர்: சாருநிவேதிதா


இந்தத் தொடரை, தொடர அழைப்பவர்கள் சகோ. ஜமால், உழவன், பொலம்பல்கள் எஸ்.கே மற்றும் அன்புடன் அருணா மேடம்.

04 November 2009

குப்புசாமியி(களி)ன் விண்ணப்பம்

இதோட ரெண்டாவது சிகரெட் காலியாகப்போவுது, உள்ள போன இந்த மூணாவது வீட்டுக்காரன் இன்னும் வரல. இப்படி கக்கூஸ் போறதுக்கு முன்னாடியே ரெண்டு சிகரெட் காலியானா உள்ள போய் என்னத்த புடிக்கறது? ச்சேய், காலைலியே தரித்திரம் ஆரம்பிச்சசிருதப்பா. இப்படித்தான்ப்பா கக்கூஸ் போறதுல ஆரம்பிச்சு தூங்கற வரைக்கும் டெய்லி இந்த குடித்தனக்காரங்களோட போராட்டமா இருக்குது. மனுசன் ஒருநா நிம்மதியா போக முடியுதா, குளிக்க முடியுதா, டி.வி. பார்க்க முடியுதா இல்ல தூங்கதான் முடியுதா. இவ்வளவு பொலம்பற நான்தான் அதோ நொழஞ்சவொடனே மொதல்ல இருக்கற வீட்டு குடித்தனக்காரன், நாங்க ஆறு குடித்தனக்காரங்க, மும்மூணு பொட்டியா எதிரெதிர்த்தாப்புல ஆறு வீடு, நடுவுல ஒரு ஒத்தக்கல் செவருதான்.


ஒவ்வொரு பொட்டியிலயும் ச்சே வீட்டுலயும் சமையல் மேடைக்கு கொஞ்ச இடம் ஒதுக்கிட்டு, கொஞ்சம் பெரிய ஹாலா அகலமா விட்டுருப்பாங்க. தின்றது, பொழங்கறதுன்னு எல்லாமே இங்கதான் செஞ்சுக்கனும. உங்களுக்கு நெனச்சு பார்க்க கஷ்டமாதான் இருக்கும், ஆனா இதுக்கே இந்த மாசத்துல இருந்து எட்டு நூறா ஆக்கப்போறதா மாடில இருக்குற வீட்டு ஓனர் கெழவி கத்துச்சாம், இஷ்டமிருந்தா இருங்க, இல்லாதவங்க வேற வீடு பாத்துக்கங்கன்னு பொதுவுல வந்து கத்திட்டுப்போச்சுன்னு சொன்னா பார்வதி. பார்வதிக்கு புருஷனான என் பேர் பரமசிவன் இல்லீங்க, குப்புசாமி. பெயிண்டரா இருக்கேன், ரெண்டு புள்ளைங்க. கவர்ன்மெண்ட்டு ஸ்கூ.... அய்யோ இருங்க, இருங்க, யப்பா அவன் வெளிய வந்துட்டான், நான் உள்ள போயிட்டு மீதிய வந்து சொல்றேன்.

ஷ்ஷ் ப்பா, மனுஷன் இம்மா நேரம் உள்ள ஒக்காந்து இருந்தானே, ஒழுங்கா தண்ணிய ஊத்துனானா?, ச்சே, அந்தக் கருமம் எதுக்கு இப்போ, ஆங்க்.. எங்க வுட்டேன். ம் கவர்ன்மெண்ட்டு ஸ்கூல்லலாம் புள்ளைங்கல சேர்த்தா ஒழுங்கா படிப்பு வராதுன்னு பார்வதி, பக்கத்துலயே ஒரு பணம் கட்டுற கான்வெண்ட்டு ஸ்கூல்ல புள்ளைங்க ரெண்டையும் சேத்துடுச்சு. அதுங்களும் ஏதோ நல்லாதான் படிக்குது. அதுவும் பொண்ணு தஸ்ஸூ, புஸ்ஸூன்னு இங்கிலீசுல படிக்கறத கேக்கும் போது, ஊர்ல இருந்து இந்த மெட்ராஸ்ல இப்படி ஒரு பொழப்பு பொழைக்கற சலிப்பெல்லாம் மறந்து போயிடுது.

பேச்சுவாக்குல பாத்ரூம்க்கு பக்கெட்ல தண்ணிய வெக்க மறந்துட்டேன் பாருங்க, இல்லனா எங்க பக்கத்து வூட்டு அழகி உள்ள போச்சுன்னா, இன்னிக்கெல்லாம் குளிக்கும். ஒரு நா இப்படித்தான் ஏதோ டி.வி. பெராக்குல பாத்ரூம் கிட்ட பக்கிட்டு வெக்க மறந்துட்டேன், அப்புறம் அவசர அவசரமா குளிக்கப்போனா அழகி குளிக்க ரெடியாகி சோப்பு டப்பாவெல்லாம் எடுத்துட்டு வந்துடுச்சி. பார்வதிதான், அவுரு குளிச்சுட்டு வந்துடட்டும், வேலைக்கு போக மணியாகுதுன்னு சொல்ல, அழகிக்கு கோவம் வந்துடுச்சு, நாங் குளிக்க வரும்போதுதான் எல்லாருக்கும் இப்படி ஆவும், எனக்கு ஊட்டுல வேலை இல்ல, எம்புள்ளைங்கள ஸ்கூலுக்கு கூட்டிக்கிட்டு போகவேணாம் அப்படி இப்படின்னு பேச, பார்வதியும் பதிலுக்கு பேச அய்யோ அன்னிக்கு புல்லாவுமே விட்டு விட்டு சண்டைதானாம். நைட்டு பார்வதி பாவம் அழாத கொறையா சொல்லுச்சு.

அதுல இருந்து அழகி, அதும் புள்ளைங்கல சாக்கிட்டு சம்பந்தா சம்பந்தமில்லாம பேச ஆரம்பிக்கும். கு.சா, கு.சா (என்னியத்தான்) ந்னு கூசாம சாக்கிட்டு பேசும். நானும் பல்லக்கடிச்சுக்கிட்டு கேட்டுக்கினு இருப்பேன், ஆனா இவ்வளவுக்கும் சேர்த்து வெச்சு, அவுங்கூட்டுக்காரன் நைட்டு வந்து வேட்டு வெச்சுருவான். அது ஒரு தனிக்கத.


ஒத்தக்கல் செவருதானே, பொழுதெல்லாம் சாரங்கட்டி பெயிண்ட் அடிச்சுட்டு, அக்கடான்னு வந்து எட்டு மணிக்கு செவத்துல சாஞ்சுக்கினு எதையாவது பாக்கலாம்னு டிவி பொட்டிய போட்டா, நாம வெக்குற நியூஸ் சேனலுக்கு எதிர்மாறா ஒரு ஊட்டுல இருந்து ஆதித்யா பாரு, ஆயுசு நூறுன்னு வரும், ஒரு ஊட்டுல இருந்து திருமதி செல்வத்தோட மாமியார் கருவிக்கிட்டு கெடக்கற சத்தம் வரும், இன்னொரு வூட்டுல உங்கள் கே.டி.வியில்... நு கத்த ஆரம்பிச்சுருப்பான், பக்கத்து வூட்டுல ரீக ரீகமா எம் மாமா ந்னு எப்பவுமே குத்துப்பாட்டுதான். நம்ம வூட்டு டி.வி. சத்தமே நமக்கு கேக்காது, எழுந்து போயி சொல்லலாம்னு பாத்தா அவ வாய்க்கு பயந்து நானும் டி.வி. சவுண்ட ஜாஸ்தியாக்கிருவேன். நல்ல வேள புள்ளைங்க அதுக்குல்லயும் ட்யூசன்ல போயி படிச்சுட்டு வந்துரும், பரிட்ச வரும்போதுதான் கொஞ்சம் கஷ்டம், டி.வி. சவுண்ட கம்மியா வைங்கன்னு பொதுவுல சொல்ல வேண்டியிருக்கும். ஏதோ முக்கி முனகி, தான் ஊட்டுலயும் புள்ளைங்க படிக்கறத வெச்சு அவங்கவுங்களும் கம்மியா வெப்பாங்க. சரி, பத்து மணிக்கு எல்லாம் சவுண்டும் கொஞ்சம் அடங்கி தலகாணிய போட்டா, கரெக்டா ஆரம்பிச்சுருவான் பக்கத்துவூட்டுக்காரன் தனிக்கச்சேரிய.

அவன் பொண்டாட்டிய திட்டுவான், திட்டுவான், அப்புடி திட்டுவான், கேட்கற நமக்கு பாவமா இருந்தாலும், அவ பண்ணுற ராங்கிக்கு அது பத்தாதுன்னு பார்வதி சொல்லும். இவன் வாய்ப்பாட்ட கேக்க முடியாம நான் வெளிய வர, மூணாவது வூட்டுக்காரனும் வெளிய எட்டிப்பாத்தான், சரின்னு ரெண்டு பேர் இருக்கறதால, கொஞ்சம் தெகிரியமா, ஏன்யா அக்கம் பக்கத்துல இருக்குறவங்க தூங்கனுமா வேணாமா, ஒரு நாளப்போல இதே ராவடியா இருந்தா எப்புடியா குடித்தனம் பண்றது, காலைல நாங்கல்லாம் எழுந்து வேலைக்கு போவ வேணாம்? னு சவுண்டு காட்டினதிலருந்து ஒரு ஒருவாரம் போல அடங்கிக்கிடந்தான். த்தோ நேத்துல இருந்து மறுபடியும் ஆரம்பிச்சுருச்சு. பார்வதியும், நானும் மூஞ்ச மூஞ்ச பாத்துக்கிட்டோம். என்னாத்த பண்றது. வெளிய போயிட்டு வர நமக்கே இப்படி! ஊட்டுல இருந்து இன்னும் ஜாமான் தொலக்க, துணிமணி தோய்க்க, காயப்போட இன்னும் அது இதுன்னு ஆயிரம் வேலை செய்யுதே பார்வதிக்கு எம்புட்டு சங்கடம் இருக்கும். அதுலயும் ஒன்னொன்னுக்கும் இருக்குற வாய்க்கு.

பாவம் பார்வதி, ஊர்ல இருந்து கல்யாணம் பண்ணி கூட்டியாறச்ச பூச்சி மாதிரிதான் இருந்துச்சு,அதுக்கு கொஞ்சம் கூட இந்த குடித்தனவாசல் புடிக்கல.ஊர்ல காடு, கண்ணி, நெலம், நீச்சுன்னு நல்லா விஸ்தாரமா பொழங்கிட்டு, ஆரம்பத்துல முணுமுணுன்னு மூஞ்சக்காட்டிக்கிட்டே இருக்கும். இப்போ ரெண்டு புள்ளைங்க ஆன பின்னாடி, எல்லாத்தையும் போட்டு வாங்க கத்துக்கிச்சு.

நான் மட்டும் என்னா, ஊர்ல கெணத்துலயும், கொளத்துலயும் குளிச்சுட்டு, என்னிக்காவது அவசர ஆபத்துக்கு பம்புசெட்டுல குளிச்சாலே ஒடம்பெல்லாம் அரிக்கறா மாதிரி இருக்கும். ஆனா இங்க பொழைக்க வந்து, வேல கத்துக்க ஊர்க்கார பசங்களோட தங்கி, தண்ணி வராத அன்னிக்கு குளிக்காம இருந்த நாள் கூட இருக்குது. ம்ஹூம் என்னவோ பொழப்பு, பொழப்புன்னு எல்லாத்தையும் வுட்டு போட்டு இப்படி ஒண்டு குடித்தனம் பண்ணனும்னு தலையில எழுதியிருக்கு. இந்த கங்காட்சிய பார்க்கக்கூடாதுன்னே அப்பன்,ஆத்தாவையெல்லாம் இங்க இட்டாரது கெடயாது, இட்டாந்தாலும் அதுங்களுக்கு கால நீட்டக்கூட வசதியில்லாம திட்டிக்கிட்டே, பீச்சு, அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதின்னு பாத்துட்டு, ரெண்டு நாள் கூட தாங்காம ஊரப் பாத்து ஓடிரும்.

எனக்கும் ஆச தான், அட சொந்தமா ஒரு ஊடு இல்லன்னாலும், கூட ஒரு ரூம்போட ஒரே ஒரு குடித்தனமா இருக்குற வீடா பாத்து போகனும்னு, ரொம்ப நாளா பார்வதியும் சொல்லிக்கிட்டுதான் இருக்குது, புள்ளைங்க வேற பெரிசாகிட்டு வருது, அதுக்குள்ள எப்படியாவது நான் நெனக்கிற மாதிரி ஒரு வூடு கெடச்சி குடித்தனம் போயிட்டேன்னா, எங் கொலசாமிக்கு பொங்கலே வெச்சுருவேன். அத மாதிரி எதாவது ஒரு வூடு ஆயிரம் ரூவா வாடகைல இருந்தா சொல்லுங்க சாமிங்களா, புண்ணியமாப்போகும். அதுக்கு மேல குடுக்கவும் நம்மால ஆகாது, வாங்குற கூலியில வூட்டு வாடக, நாலு பேர் சாப்பாடு, இன்னும் ஸ்கூலு பீஸு, அது இதுன்னு யம்மா, ஏதோ பார்வதியும் ரெண்டு வூடு வேல செய்யறதால ஏதோ கடன் வாங்காத கவுரமா ஓடுது வாழ்க்க.

அய்யோ, எம்மா நேரமா பேசிக்கிட்டே இருந்துட்டேன், புள்ளைங்க கூட இஸ்கூலுக்கு கெளம்பிடுச்சு. அழகி வந்துடப்போறா, குளிச்சுட்டு பொழப்ப பார்க்க ஓடனும். என்னா பொலம்பனாலும் ராத்திரிக்கு இந்த எலி வலைக்குத்தானே வந்தாவனும். இன்னும் எத்தினி நாளைக்கு இப்புடி எல்லார்கிட்டயும் பொலம்பிக்கிட்டு இருக்கப்போறனோ??

03 November 2009

அமித்து அப்டேட்ஸ்

அப்பாவுடன் சேர்ந்து என்னோடு டவுடன் டேம் (தவுஸண்ட் டைம்) கா விட்டாகிறது. நானும் சும்மா விடுவதில்லை பதிலுக்கு டூ டவுடன் டேம் கா விட்டு, கொஞ்ச நேரத்துக்கு பிறகு இரண்டு விரலை வளைத்து பழமும் விட்டுவிடுவேன்.

....

புதிய தலைமுறை புத்தகத்தின் ஒரு பக்கத்தில் இறகு படம் ஒன்றினைப் போட்டு இருந்தார்கள்.

படம் பார்ப்பதற்காக திருப்பிக்கொண்டே வந்த அமித்து, ம்மா, ங்க பார்ரேன், காக்காம்முடி போட்டிக்காங்க.

வந்து படத்தைப் பார்த்த எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

......

சனிக்கிழமை மதியம் தூங்குவதற்காக கதவையெல்லாம் சாத்திவிட்டு அமித்துவையும் தூங்க செய்தால். எழுந்து, எழுந்து உட்கார்ந்துகொண்டாள்.

தூங்கலன்னா பூச்சிக்காரன் வருவான் வர்ஷா, அதான் அம்மா கதவெல்லாம் சாத்திட்டேன், தூங்கு. காலைல இருந்து தூங்கல இல்ல.

அமித்து: பூச்சிக்காரா அவ்வாங்களா

ஆமாம், படுத்துக்கோ

அமித்து: பூச்சிக்காரா போங்க

அம்மா: பூச்சிக்காரா வாங்க

அமித்து: பூச்சிக்காரா போங்க

அம்மா: பூச்சிக்காரா வாங்க

அமித்து: பூச்சிக்காரா போங்க

அமித்து: பூச்சிக்காரா ஆங்க

இவள் பூச்சிக்காரரை கூப்பிட்டதும் ஏன் கூப்பிடுகிறாள் என்று புருவத்தை சுருக்கி கேள்விக்குறியுடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மேடம் முகத்தை கொஞ்சம் மாற்றிவைத்துக்கொண்டு, பூச்சிக்காரா ஆங்க, நான் ஆங்கூடயே போறேன், கது தெற

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அமித்து அப்பா வீட்டுக்கு வந்தவுடன் மேற்கூறிய டயலாக்கை சொன்னவுடன், அவர் சிரித்துக்கொண்டே நீ சொன்னியாம்மா.

ம்ச்ச்.. என்று தலையை ஆட்டிக்கொண்டு, ல்ல, அபி சொல்லல ப்பா.

கிர்ரோஓஓஓஓ கிர்.......

.........

குள்ள குள்ள வாத்து பாட்டு ரொம்ப பிடித்துவிட்டது போலும். அடிக்கடி குள்ள வாத்து, குவா வாத்து என்று சொல்லிக்கொண்டிருந்தாள்

இன்று காலை குள்ள வாத்தூ, குள்ள வாத்தூ என்று ரெண்டு, மூன்று முறை அதையே ரிப்பீட்ட நான் குழந்தை மறந்துவிட்டதாக்கும் என்று நினைத்து குவா குவா வாத்து என்று எடுத்துக்கொடுக்க, சட்டென்று பதில் வந்தது மேடத்திடமிருந்து.

நீ ச்சொல்லாத............

........

ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க, புள்ள வளர்றதுக்குள்ள தின்னு பாத்துடனும், பொண்ணு வளர்றதுக்குள்ள போட்டு பாத்துடனும் அப்படின்னு,
இப்ப இந்தப் பழமொழி கூட பொண்ணு வளர்றதுக்குள்ளா பேசி பாத்துடணும்னும் ஒரு வார்த்த சேர்த்துடலாம்னு இருக்கேன் :)