30 April 2009

அன்பின் கார்த்தி

அம்மா, அப்பாவுடன் அங்கே மகிழ்ச்சியாய் இருக்கிறாயா..? நாளைக்கு உனக்கு பிறந்தநாள், மே 1. மூன்று வருடங்களுக்கு முன்னர் மே 1 என்றால் உழைப்பாளர் தினம், விடுமுறை நாள் என்று மட்டுமே அறியப்பெற்றோம். நீ பிறந்ததால் அந்த நாள் எங்களுக்கு ஒரு விசேஷ தினமாகியது.
ஆனால் நீ பிறந்த அன்று அது விசேஷ தினமாக இல்லை, மாறாக வீபரீதமாகத்தான் போனது. சுஜாதா கதைகளில் வருவது போல, வரப்போகும் விபரீதம் அறியாமலேயே அவர்கள் மருத்துவமனைக்கு சென்றார்கள். அப்படித்தான் உன் அம்மாவுக்கு ப்ரசவ வலி எடுக்க, நாங்கள் அவளை காலை 6 மணிக்கு அந்த அரசு சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம், காலை 11.20 நீ பிறந்தாய், ஆண் குழந்தை என்று சொல்லி, ரோஜாப்பூவை போன்று உன்னைப் பார்த்தபின் அக மகிழ்ந்தோம். எங்களின் மகிழ்ச்சி 5 நிமிடம்தான், அதற்கப்புறம் உனக்கு விக்கல் எடுக்க, உன் சிவந்த மேனி இன்னும் சிவக்க, பயந்து போன நான் டாக்டரை கூப்பிட அவர்களோ நீ உன் அம்மாவின் வயிற்றுக்குள்ளேயே மலம் முழுங்கிவிட்டதாகவும், உடனே ஒரு ட்யூப் போட்டு எடுக்கவேண்டும் என்றார்கள். உடனே ஒடி அவர்கள் சொன்ன அதனை நான் வாங்கித்தந்தேன். மின்னல் ஓட்டம் என்பார்களே, வயிறு வாய்க்கு வரும் என்பார்களே அந்த ஓட்டத்தை அன்றுதான் நான் அறிந்தேன். அதனை பயன்படுத்திய பின்னர், கொஞ்ச நேரம் விக்கல் நின்றது. கொஞ்ச நேரம்தான் உடனே ஆரம்பித்தது, உடனே டாக்டர்................
வந்தார்கள். உன்னை மட்டும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துப்போக சொன்னார்கள். நான், உன் பாட்டி, தாத்தா மூவரும் சென்றோம், உடனடியாக உன்னை பரிசோதித்து ப்ரச்சினை சரி செய்யப்பட்டது. ஏதோ ஒரு மகராசியின் புண்ணியம் - அரை பாலாடை தாய்ப்பால் கொடுக்கப்பட்டது உனக்கு. அதுதான் நீ சுவைத்த தாய்ப்பால். அதுவும் உன் தாயிடம் இருந்தில்லை. பின்பு உன்னை உன் தாயோடு சேர்க்க வந்தோம். வந்த சில மணித்துளிகளிலே உன் அம்மா மயக்கமடைய, இன்னொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள், நேரம் மதியம் 3.30 மணி, ஈ.எஸ். ஐ. கல்யாணி ஹாஸ்பிட்டல். நீ ஒரு தனியறையில். உன் தாய் ஐ.சி.யு.வில். நேரம் 5 மணி.. அவளைப் பரீட்சித்த டாக்டர்கள் சொன்னது, மஞ்சள் காமலை கண்டிருப்பதாகவும், ரத்தப்போக்கு மிக அதிகமாக இருப்பதாலும் உன் தாயை காப்பாற்ற முடியாது என்றார்கள். அதனைக் கூட அந்த டாக்டர்கள் தனக்குள்ளேயே பேசிக்கொள்ள உள்ளே போன ஒரு பெருக்கித்துடைக்கும் பெண்மணி, வெளியே வந்து, ஏம்மா, அந்தப் பொண்ண சுத்தி, டாக்டர்ங்கோ காப்பாத்த முடியாதுன்னு பேசிக்கறாங்க, நீஙக் இன்னா இங்க ஒக்காந்துன்னுகிறீங்கோ, நான் சொன்னது தெரியாம உள்ளப்போங்கோ என்று அபாய மணி அடிக்க, அடித்துப் பிடித்துக்கொண்டு ஐ.சி.யுக்கு ஓட, அங்கே உன் அம்மாவைச் சுற்றி 3 டாக்டர்கள். மனிதாபிமானம் என்பது சற்றுமில்லாமல், ரொம்ப லேட்டா கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கீங்க, ஒன்னுமே செய்ய முடியாது, பேசாம வீட்டுக்கு கொண்டு போயிடுங்க என்றார்கள். உன் அம்மாவுக்கு இன்னும் சுய நினைவு இருக்கிறது. அவளது கண்ணை நான் கவனிக்கிறேன். உடனடியாக அந்த டாக்டர்களில் காலைப் பற்றினேன், ஏதாவது செய்யுங்க ஏதாவது செய்யுங்க, என் குழந்தைய காப்பாத்துங்க... எங்கள் மூவரின் அலறல் ஆஸ்பத்திரியையே அலறடிக்கிறது. எங்களால ஒன்னும் செய்யமுடியாது, வேணும்னா அப்பல்லோ ஆஸ்பிட்டலுக்கு கூப்பிட்டுப்போங்க என்கிறார்கள் டாக்டர்கள். அப்பல்லோ ஹாஸ்பிட்டல் - சாதாரணர்களுக்கு ஒத்த ஹாஸ்பிட்டலா அது. ஆனாலும் உன் அம்மாவின் உயிரைக் காப்பாற்ற எங்களுக்கு வேறொன்றும் தோன்றவில்லை. பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஓடினோம். அப்பல்லோவிற்கு. இரவு 8 மணி, எல்லா செக்கப்பும் செய்த டாக்டர்கள் சொல்கிறார்கள், சரி செய்துவிடலாம்மா, ஆனா அதற்கு உங்களுக்கு ரொம்ப நம்பிக்கையும், பணமும் தேவை. இதற்கு நடுவில் உனக்கு இதயத்துடிப்பு சீராக இல்லையென்று ஈ.எஸ். ஐ. கல்யாணி ஹாஸ்பிட்டலின் குழந்தைகள் செக்‌ஷனிலேயெ அட்மித் செய்தோம். உன்னைப் பார்த்த அந்தக் கணம், என் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. அப்போதே உனக்கு ஆக்ஸிஜன் கொடுத்திருந்தார்கள். பச்சிளங்க்குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும் இடமாதலால் மூச்சைக் கூட சற்று அடக்கியே விடுஙகள் என்று சொன்ன செவிலியர்கள் மத்தியில் அழுகையை வெளிப்படுத்தாதது என் தவறில்லை. ஆனால் அந்த அழுகையை என்னால் வெளியே இருப்பவர்களிடமும் வெளிக்காட்ட முடியாது, செய்தால் உன் பாட்டி, உன் அம்மாவுக்கு அழுவாளா, உனக்காக அழுவாளா... இறைவா.... நேரம் இரவு 12 மணி தொடுகையில், ஒரு இள்ம் வயது டாக்டர் அழைக்கிறார் என்னையும், உன் பாட்டியையும். ம்மா, ரத்தப் போக்கும் மிக அதிகமாக உள்ளது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு 30 சதவீத வாய்ப்பே உள்ளது, அதற்கும் ஒரு ஊசி போடவேண்டும் (RH factor injection) ஒரு ஊசியின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய், மூன்று ஊசிகள். 1 1/2 லட்சம் ரூபாய், நாளை காலை நீங்கள் கட்டவேண்டும், அதற்கு இப்போது செக்யூரிட்டி லெட்டர் கொடுக்கவேண்டும் என்றார். கையைப் பிசைந்து கொண்டிருக்கும் நேரமா இது. விழு காலில். நாங்கள் எத்தனை பேர் காலில் விழுந்திருப்போம் என்று எண்ண எங்களுக்கு அப்போது நேரமில்லை.... இடையில் ரத்தப்போக்கை நிறுத்த உன் அம்மாவிற்கு மற்றுமோர் ஆப்பரேஷன் வேறு ஆகியது. எண்ணி 14 நாள் கழித்து உன் அம்மா தன் நிலை வந்தாள். இடையில் பணத்துக்காகவும், உனக்கு பாலூட்டுவதற்காகவும், உன் தாயின் நிலைக்காகவும் ப்ப்ப்ப்ப்பா................................. வார்த்தைகளால் வடிக்க முடியாத நாட்கள் அவை. கூட்டுப்ப்ரார்த்தனை என்பார்களே, அதன் மகத்துவம் புரிந்த நாட்கள் அவை, 6 தெருவே உன் அம்மாவிற்காக ப்ரார்த்தனை செய்தது, இனம் பாராமல், மதம் பாராமல் பண உதவியும், ப்ரார்த்தனைகளும் நடந்தவண்ணம் இருந்தன. குறைந்த பட்சம் 100 பேராவது உன் தாய்க்கு ரத்தம் கொடுத்திருப்பார்கள். எல்லாம் சரியாகி வீட்டுக்கு வரலாம் என்று எண்ணியிருந்தபோது, உன் அம்மாவிற்கு வலது காலில் எழுந்த கொப்புளத்தால் காலே வீங்கி, நீல நிறம் காண ஆரம்பித்தது. காலை 7 மணிக்கு அதைக் கண்ட செவிலியர் ஒருவர், வாஸ்குலர் சர்ஜனிடம் சொல்லியிருக்கிறோம், மதியம் 2 1/2 மணிக்கு அவர் வருவார் என்றார். காலை 10.10 மணி. குறிப்பிட்ட டாக்டர் வந்திருந்தார். அவர் சொன்ன வார்த்தைகள் இதான்... நான் ஒரு வேளை 2 மணிக்கு வந்திருந்தா இந்தப் பொண்ணோடா வலது காலை வெட்டியெடுத்திருக்கவேண்டும். வழக்கமாக செல்லும் ஹாஸ்பிட்டலுக்கு வண்டியை செலுத்திக்கொண்டிருந்த நான், ஏதோ ஒரு யோசனையில் அப்பல்லோவிற்கு என் காரைத் திருப்பினேன். இதுதான் சரியான நேரம், காலுக்கான ட்ரீட்மெண்ட் செய்ய, இன்னும் சிறிது தாமதிருந்தாலும், உங்கள் மகள் காலை இழந்திருக்ககூடும் என்றார். அந்த டாக்டரை அங்கே குறித்த நேரத்துக்கு வரவைத்தது எது. மீண்டும் ட்ரீட்மெண்ட், சரியானது எல்லாம். உன் அம்மாவின் உடல் முற்றிலும் குணமாக 6 மாதங்கள் ஆனது. மொத்தமாய் ஆன ஹாஸ்பிட்டல் பில் 6 1/2 லட்சம் ரூபாய். நகைகள், ஒரு ஆட்டோ, வீட்டின் டாக்குமெண்ட் அடகு என எல்லாவற்றையும் முழுங்கியிருநதது அந்த 6 1/2 லட்சம். குழந்தை என்று நான் உன்னை என் அருகாமையில் வைத்து கொஞ்சியது முதன்முதலில் உன்னைத்தான், லேக்டோஜென் கலக்க கற்றுக்கொண்டதும் அப்போதுதான். கார்த்தி, உன் பிறந்த முதல் கட்ட நாட்கள் இப்படி கழிந்தது, முதல் பிறந்தநாள் எங்களோடு போனது, இரண்டாவது பிறந்தநாள் உங்கள் ஊரில் (ஹூப்ளி) உன் தாத்தாவோடு கழிந்தது. இப்போது உன் தாத்தா இல்லை.
இதோ நாளை உன் மூன்றாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி. வாழ்த்துக்களோடு இதோ பின்வருபவர்களுக்கெல்லாம் எங்களது நன்றிகளும்.
(கார்த்தி, நீ வளர்ந்த பின்னர், இதைப்படிக்கக்கூடும், அப்போது இவர்களுக்கெல்லாம் நன்றிகளை சொல்லிவிடு)

1. முதன் முதலில் உன் தாயின் நிலையை பார்த்து விட்டு, வெளியில் கடவுளை நம்பிக்கொண்டிருந்த எங்களிடம் சொன்னார்களே அந்தப் பெயர் தெரியா பெண்மணி (ஹாஸ்பிட்டல் ஸ்வீப்பர்)
2. ரங்கா அண்ணா (உங்களை முதன் முதல் பார்த்ததே அந்த இக்கட்டில்தான்)
3. நண்பன் சங்கர்
4. மறைந்த ராஜபுஷ்பம் பெரியம்மா
5. ஜெயந்தி ஆண்ட்டி (ஹாஸ்பிட்டல் பீஸ் கட்ட, வெள்ளிக்கிழமை என்றும் பாராமல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல் பாத்ரூமில் தன் தாலியைக் கழற்றிக் கொடுத்தார்கள், மாற்றுக்கு மஞ்சள் கயிறைக்கூட போடாமல்,)
6. மே 1, 2 இரவெல்லாம் கண்விழித்து எல்லா உதவிகளுக்கும் எங்களோடு இருந்த உன் சதீஷ் மாமா(அப்போதுதான் எங்களுக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது), அவரின் நண்பர் அருண்
7. இன்னும் உன் அம்மாவிற்காக ரத்தம் கொடுத்தவர்கள்
8. கூட்டுப்ப்ரார்த்தனையை செய்தவர்கள்.
9. டாக்டர் சுமனா மனோகர் (இன்றும் உன் அம்மாவை பார்க்கும்போதெல்லாம், கடவுளை மறுபடி பார்க்கிறார் போல இருக்கிறது என்று சொல்பவர்கள்)
10. என் பாஸ் பாலன் சார்.
இன்னும் ஆறுதல்களைச் சொல்லி ஆற்றிய அனைத்து அன்பு உள்ளங்களும்


மே 1 : பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி, மறு பிறப்பெடுத்த உன் அம்மாவிற்கும் சேர்த்துதான்.

டிஸ்கி:: ஒரு தலைப்பிரசவம் - இப்படி ஆகும் என்பதை கனவில் கூட நினைத்துப்பார்க்காமல், ஒரு அரசு சுகாதார மையத்தில் வைத்தே குழந்தையப் பெற்றெடுத்து வந்துவிடுவாள் என்று நம்பியிருந்த எங்களுக்கு மூன்று வருடஙகளுக்கு முன்னர் நடந்ததுதான் இது. கார்த்தி என் அக்காவின் பேரன்.
எங்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட சம்பவமிது.

28 April 2009

வாழ்த்தலாம் வாங்க

சில பேரை பார்த்தவுடன் இன்னதுதான் காரணம் என்றே தெரியாமல் பிடித்துப் போய்விடும். அதுபோலவே சிலரின் எழுத்துக்களும். அவர் தம் எழுத்துக்களை வைத்து அவரைப் பற்றிய கற்பனையெல்லாம் வளர்ந்து கொண்டிருக்கும். பாலினம் தாண்டி எழுத்துக்களின் மேல் ஒரு இனம் புரியா சினேகம் ஏற்பட்டிருக்கும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், ஆமா இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்றீங்க என்று கேட்பவர்களுக்கு, இப்படித்தான் எழுத்தின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பால் மிகவும் பிடித்துப்போய், பின்னர் பின்னூட்டங்களால் ஒரு சினேகம் வளர்ந்தது. நாங்கள் அதிகம் பேசியதில்லை. பதிலாக அவர் தம் பதிவுகளையே முடிந்தவரை முதலாய் படித்து வைத்து, நேரில் பேசிய ஈர்ப்பினை உண்டு செய்துகொள்வேன். முதன் முதலாய் அவர்களைப் பார்த்தது கலைஞர் டி.வி.யில் காதலர் தினம் கவிதை வாசிப்பின் போதுதான். பச்சை புடவையில் வந்து, ஐந்தே நிமிடம்தான், அவசரமாய் ஒரு கவிதை படித்துவிட்டு போனார்கள். நிழல் பிம்பத்தின் மேல் ஒரு நிஜ பிம்பம் விழுந்தது. அந்த நிஜ பிம்பம் வேறு யாருமல்ல....
எழுத்தாளர், கவிஞர் பதிவர் உமாஷக்தி....




சரி அதுக்கென்ன இப்ப என்று கேட்பவர்களுக்கு, இப்ப எதுவும் இல்ல, நாளைக்குத்தான்.

நாளைக்குத்தான் (29.04.2009) அவங்களோட பிறந்தநாள்.

வாழ்த்துக்கள் தோழி

ஈரமும், மென்மையுமான உங்களின் எழுத்துக்களைப் போல, தித்திக்கும் தமிழ் போல, எத்திக்கும் புகழ் மணக்க, நீடுழி வாழ எனது வாழ்த்துக்கள் மற்றும் ப்ரார்த்தனைகள்

அப்படியே இன்னொரு பதிவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க.

என் பள்ளித் தோழியும், பதிவருமான மோனி புவன் அம்மா, அவங்களுக்கு (30.04.2009) அன்று பிறந்தநாள்.

வாழ்த்துக்கள் க்ருஷ்ணா....
பல வருடங்களுக்குப் பிறகு, நான் உனது பிறந்த நாளை ஞாபகம் வைத்திருந்து வாழ்த்துகிறேன், வாழ்த்தப் போகிறேன்.

13 April 2009

உயிர்த்தண்ணீர்

உயிர்த்தண்ணீர், ஆதண்டார் கோயில் குதிரை, வெள்ளெருக்கு - இவை மூன்றும் கண்மணி குணசேகரனின் சிறுகதைத் தொகுப்புகள். கண்மணி குணசேகரனின் “அஞ்சலை” நாவலை படிக்கவேண்டும், அப்போது தமிழினி பதிப்பகத்தில் கிடைக்கவில்லை. இப்போது கிடைக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

சில வலைப்பூக்களின் / வலைப்பூவினரின் அறிமுகத்தால் தான் இவரைப் பற்றி தெரியவந்தது, இல்லையெனில் வழக்கம் போல ஏதாவது காமா, சோமா என்று வாங்கி வைத்திருப்பேன். நோட் பண்ணுங்க வாங்கி வைத்திருப்பேன், அவ்ளோதான்.

முன்னும், பின்னும் எந்தவொரு நவீனத்துவமும் இல்லாமல், யதார்த்தமாய் நெஞ்சை அள்ளி செல்கிறது இவரின் எழுத்துக்கள். இவரின் கதை மாந்தர்கள் அனைவரும் கிராமத்தின் கடைகோடி மாந்தர்களே.
விருத்தாசலமும், அதையொட்டிய கிராமங்களும், முந்திரிக்காடுகளும் இவையே கதைக்களங்கள். படிப்பவருக்கு புரிந்து கொள்ளுதலில் எந்தவொரு சிரமமும் கொடுக்காத எழுத்து நடை. பேச்சு நடையிலேயே இவரின் எழுத்து நடை இருப்பதுதான் சிறப்பு.

இவரின் கதைகளின் வட்டார எழுத்து நடையை படிக்கும் போது, பல சமயங்களில் எங்கம்மா பயன்படுத்தும் சில, பல வார்த்தை வழக்குகள் ஞாபகம் வந்து போனது.

இவரின் கதைகளை படிக்கும் போது, அப்படியே கிராமத்து போய் வந்த அல்லது போகத்தூண்டும் உணர்வு எழாமல் இருக்காது. இது என் அனுபவம், அவரைப் படித்தவர்கள் சொல்லலாம்.

இவரின் சிறுகதையில் எனக்கு நிறைய கதைகள் பிடித்திருந்த போதும், சருவு என்ற கதைதான் அடிக்கடி நினைவுக்கு வரும். கலியன் என்றொரு தாத்தா, வெற்றிலை போட்டே பழக்கப்பட்டவர். ஒரு நாள், ஒரு வாய் வெற்றிலைக்கு அவர் படும் பாடே, அந்தச் சிறுகதை, படித்து முடித்த போது, எனக்கு கலியன் தாத்தாவுக்கு உடனே வெற்றிலை வாங்கி தரனும் என்று தோன்றியது நிஜம்.
என் அம்மா, வெற்றிலை போடுவதை அடிக்கடி சொல்லி திட்டுவேன். அதுவும் கூடவே ஞாபகத்துக்கு வந்தது.

அதே போல், வனாந்திரம் என்னும் மற்றொரு சிறுகதை, படித்தவுடன் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. அன்பு கணவனை இழந்த மனைவி, மகன். முந்திரிக்கொட்டைகளை பொறுக்கி அதை விற்று வரும் ஜீவனம். மகன் என்ற கதாபாத்திரத்தின் பெயர் ராசீவ் காந்தி. எங்க ராசீவ் காந்தி வரலியாடா பள்ளிக்கோடத்துல இருந்து, என்று சக பள்ளிப்பிள்ளைகளை கேட்கும் போது, சிரிப்பு வருகிறது. ஆனால் முடிவு அதை மறக்கச் செய்து விடுகிறது. தாயும், பள்ளி விட்டு வந்த மகனும் முந்திரிக்கொட்டை சேகரிக்க செல்கிறார்கள். ஆனால் அன்று மகன் சொல்கிறான். இன்று சேகரிக்கும் முந்திரிகளை நீ விற்கக் கூடாது, எனக்கு உப்பு, மிளகாய்த்தூள் போட்டு பொரியல் செய்து தரவேண்டுமென்கிறான். சரி என்ற ஒப்புதலோடு சென்று, நிறைய சேகரித்து வருகிறார்கள். தாய்க்கோ மனது அடித்து கொள்கிறது, இதை விற்றால் இவ்வளவு காசு கிடைக்குமே என்று, மெதுவாய் மகனிடம் சொல்கிறாள், அவன் எரிச்சலோடு முகம் காட்டுகிறான், இதற்குத்தான் நான் வரமாட்டேன் என்றேன் என்று. சரி என்று மகன் விருப்பத்திற்கிணங்க அன்று கிடைத்த அத்தனை முந்திரிகளையும் பொரியல் செய்து, ரசம் வைத்து அவனை சாப்பிட கூப்பிடுகிறாள். அவனும் சாப்பிட்டு விட்டு, போதுமென சொல்லி பாதி முந்திரிப்பருப்பை அப்படியே வைத்துவிடுகிறான். பிறகு தாயை சாப்பிட சொல்கிறான். தாயோ ரசமும், ரசத்திலிருக்கும் மிளகாயை கடித்துக்கொண்டு சாப்பிடுகிறாள். இதைக்கண்ட மகன், ஏம்மா, அவ்ளோ இருக்கே, ரசத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடேன் என்கிறான். அவள் வேகமாக மறுக்கிறாள். மகனோ அழும் குரலில், உனக்காகத்தாம்மா இவ்ளோ கொட்டையும் விக்க சொல்லாம, வறுக்க சொன்னேன், இத்தனை நாள் எடுத்த கொட்டையெல்லாம் எனக்கு வெறுமே சாப்பிட கொடுப்ப, மீதிய வித்துடுவ. ஒரு நா கூட நீ ஒரு முந்திரிக்கொட்டய எடுத்து வாயில போட்டதில்ல, அதுக்குத்தாம்மா செய்ய சொன்னேன், சாப்பிடும்மா என்கிறான். அதற்கு அவளோ, இல்லப்பா, நானெல்லாம் அதுக்கு ஆசைப்படக்கூடாது, அப்பா போனவுடனயே அதயெல்லாம் விட்டுட்டேன், அப்படி அந்த சுவைக்கு ஆசைப்பட்டு ஒன்ன எடுத்து வாயில போடுவேன், அப்புறம் நாளைக்கும் அதயே வாய் கேட்கும். அப்படியே பழகும். நாம்ப இருக்குற நெலமையில நாக்கு ருசிக்கு ஆசைப்பட்டா ஒத்துவராதுப்பா, பச்சத்தண்ணிய குடிச்சா கூட, வவுறு ரொம்புதான்னு பாத்துக்கனும்பா என்கிறாள்.

இந்தக் கதையை படித்து முடித்தவுடன் ரொம்ப நேரம் எதுவுமே தோன்றாமல் அப்படியே வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்தக் கதையின் தாக்கமே இந்தப் பதிவெழுதவும் தூண்டியது.

மேற்சொன்னது ஒரு பானை சோற்றின் பதமே. கண்மணி குணசேகரனின் எழுத்துக்கள் மேலும் பரிணமிக்கட்டும். மேலும் அவரின் புது நாவல்கள் / சிறுகதைத் தொகுப்புகள் இருந்தால் பின்னூட்டத்தில் பகிரவும்.

10 April 2009

தலைப்பு ?

யாரும் நுழையாத
ஓர் உலகத்துக்குள்
அழைத்து சென்றது
ஆக்ரமித்தது
எனக்கான நிமிடங்களை
அம்மா
”ஆய்”
சட்டென
பொருத்திக்கொண்டேன்
என்னை
எனக்கான இடத்தில்.


.......................................


சிறுகுறிப்பு வரைக
20 வரிகளுக்கு மிகாமல்
2 பக்கங்களுக்கு குறையாமல்
இவை எல்லாவற்றிலும்
எழுதிவிட முடிகிறது
வாழ்க்கையை
எழுதத்தெரியாதவனுக்கு
இன்னும் சுலபம்
ஒரு பெருமூச்செறிதல்
இயம்பிவிடும்


.............................................

தூணிலும் இருக்கிறான்
துரும்பிலும் இருக்கிறான்
குண்டுகளிலுமா????


............................................

(தோழர் ஆதிமூலகிருஷ்ணன், கவிதைக்கு பக்கத்துலயாவது வந்திருக்கேனா ???)

08 April 2009

எங்கம்மா போற................

இந்த 10 வயதுக்குள், நம்ம கண்ணுல மண்ண தூவிட்டு இந்த அம்மாக்கள் எல்லாம் வெளியில போறது, அதான் சினிமாவோ, இல்ல வேற எங்கயாச்சோ, குறைந்த பட்சம் ஏதாவது அக்கம் பக்கத்துல நடக்கும் சின்ன விழாக்களுக்கு போனா கூட நமக்கு தெரிய வந்திடுச்சின்னு வெச்சிக்கோங்க.கதை கந்தலோ கந்தல்.

அம்மா வெளிய கிளம்பும் ஆயத்தம் அவரின் செயலிலும்,பேச்சிலுமே தெரிந்துவிடும். மக்கு அம்மா.......... சமையல் சீக்கிரமா முடிப்பது, அடிக்கடி எதிர்த்த வீட்டிலோ, பக்கத்து வீட்டுக்காரவுங்க வீட்டுக்குப் போய்
இல்ல அவங்க நம்ம வீட்டுக்கு வந்து ஏதாச்சும் குசுகுசுன்னு பேசுவது. நம்மள படி, படி ந்னு நச்சரிப்பது, இல்லனா அன்னைக்குன்னு பார்த்து ஒரு நாலணா, எட்டணா கொடுத்து நாம கேட்காததெல்லாம்
வாங்கிக்கோ, வாங்கிக்கோ என்று அதிக பிரியத்தை வெளிப்படுத்துவது இப்படியென.

நமக்கா, நல்லா புரிஞ்சிடும், ஆஹா, அம்மா எங்கயோ போறாங்க, அம்மா, எங்கம்மா, வெளிய போறியா, அவுங்க வந்திருந்தாங்களே அவுங்க வீட்டுக்கா, இல்ல இவுங்க வந்திருந்தாங்களே இவுங்க கூடவா போற. ஒரு முக மாற்றத்தோடு, இல்லை பல்லை கடித்துக்கொண்டோ, ம், டாக்டர் வீட்டுக்கு போறோம், அந்தக்கா வந்தாங்க இல்ல, அவங்களுக்கு உடம்பு சரியில்லையாம், அவுங்கள கூட்டிக்கிட்டு போகனும், பாரு அவுங்க கூட அவுங்க பொண்ண வீட்டுல விட்டுட்டுதான் போறாங்களாம். நீயும், அந்தப் பொண்ணோட வெளையாடிக்கிட்டு இரு. நாமோ நேரங்காலம் தெரியாமல், நீதான் சொல்லுவியே அடிக்கடி, அந்தப் பொண்ணு கூட சேரக்கூடாது, இப்ப மட்டும், அந்தப் பொண்ணோட இரு அப்டின்னு. இதுவரைக்கு இருந்த சாதாப் பார்வை அப்படியே அக்னிப் பார்வையா மாறும். இந்த நொட்டை கேள்வியெல்லாம் கேளு, படிக்காத, மாசமானா வாங்கிட்டு வா, 20, 30 ந்னு (மார்க்).. நம்மளை ஆஃப் பண்ண பயன்படுத்தும் ஆயுதம். அப்படியே அடக்கி வாசிப்போம், ஆனால் அவர்களைச் சுற்றி சுற்றியே பார்வை போகும்.

அப்புறம் அந்தக்கா வரும், முகமெல்லாம் பவுடர் அப்பிக்கொண்டும், புதுசா புடவை உடுத்திக்கொண்டு, உள்ளே குரல் கொடுக்கும், க்கா, நான் போய்கிட்டே இருக்கேன், வந்துடறியா, உள்ளருந்து ஏதாவது சைகை வந்திருக்க வேண்டும். வெளியிலிருக்கும் நமக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே டாக்டர் வீட்டுக்குத்தான......................,, தோ, நானும் புடவை மாத்திக்கிட்டு வர்ரேன், நீ உன் பொண்ண வீட்டுல தான விட்டுட்டு வர, நானும் இவள விட்டுட்டு தான் வரன். நீ முன்னாடி போய்கிட்டு இரு. குரல் அழுத்தமாய் கேட்கும். இங்கே நமக்கோ இது எல்லாமோ வெட்ட வெளிச்சமாய் புரிபடும், போவது டாக்டர் வீட்டுக்கில்லை, வேறெங்கோ என்று. குரலை உயர்த்தி உயர்த்தி பேசிய இருவரும், சில சமயம் கிசுகிசுப்பார்கள். இன்னார் முன்னாடியே போயாச்சு என்று. சரி நீ போ, நான் வரேன். அம்மா புடவை கட்டி, வெளிய வந்து, நம்மகிட்ட, படிச்சிகிட்டிரு, அம்மா வந்துடறேன். ம்ஹூம், கண்ணில் நீர் முட்டிக்கொண்டு ம்மா, எங்கம்மா போற.

கோபத்தில், இதெல்லாம் நல்லாத் தெரியும், போகும்போது அழுதுகிட்டு, எங்கம்மா போறியாம், எங்கம்மா போற.. போறேன் சீமைக்கு என்று தொடர்ச்சியாக வசவுகள் என்று காலை செருப்பில் மாட்டும்போது,
ஓங்காரமாய் அழுது ஆகாத்தியம் பண்ணி, முதுகில் ரெண்டு வாங்கி, தலையை மேல்படியாகவே வாரிக்கொண்டு, வீட்டுக்கு போட்டுக்கொண்டிருக்கும் கவுனோடவே இழுத்துக்கொண்டு போவார்கள்.
அம்மாவின் வாயில் வசவு வழியெல்லாம் விழுந்துக்கொண்டே வரும், நமக்கோ வெளியில் செல்வதை சாதித்த புன்னகை, அழுகையூடே.

குழந்தைகளின் உலகம்

என்னை ஆச்சரியப்படுத்திய என்னை சுற்றி இருக்கும் குழந்தைகளைப் பற்றிதான் இது.

அஸ்ஸி
நேற்று அமித்துவுக்கு சாப்பாடு ஊட்டும் போது, எங்கள் வீட்டை விட்டு கொஞ்சம் தூரத்தில் சின்னப் பசங்க விளையாடிக்கிட்டுருந்தாங்க. அங்க போனா அமித்து தன்னை மறந்து சாப்பிட்டு விடும் என்ற கணிப்போடு அங்கு போனேன். அங்கு ஒரு குண்டு குட்டிப்பையன் இருந்தான், வயது 2க்குள் தான் இருக்கும். இதுக்கு முன்னர் அவனை அந்தத் தெருவில் கவனித்ததாக தெரியவில்லை. உடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சின்னப் பெண். அவனை நோக்கி, what is your name என்றாள். அதற்கு அவன் ம நேமிஸ் அஸ்ஸி (அரிசி) மூட்டை என்றான், எனக்கு ஆச்சரியம் கலந்த சிரிப்பு. அவனை யார் எத்தனை முறை அந்தக் கேள்வி கேட்டாலும் அவனும் சலிக்காமல் மழலை மாறாத குரலில் அதையே பதிலாக சொல்லிக்கொண்டிருந்தான். கடைசி வரைக்கும் அவன் உண்மையான பெயரை தெரிந்துகொள்ளவேயில்லை நான். விருப்பமுமில்லை. அந்த மழலைக்குரலே போதுமானதாக இருந்தது.

கார்த்திக்

இவன் எதிர் வீட்டு பையன். வயது 3 1/2 அவ்வளவுதான். ஆனால் இவனின் அறிவு என்னை எப்போதும் பிரமிக்கவைக்கும். இவன் பேச்சுதான் மற்றவரிடமிருந்து இவனை வேறுபடுத்திக்காட்டும்.

எங்களின் கீழ்வீட்டில் இருக்கும் ஆச்சி, வாசற்படியில் உட்கார்ந்து ஏதோ யோசனை செய்துக்கொண்டிருந்தார்கள். முகம் “உம்” மென இருந்திருக்கிறது. இதைக் கவனித்த இவன், தெருவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த்தை விட்டுவிட்டு ஆச்சியை நோக்கி, ஆச்சி, என்ன, ம்ன்னு இருக்கீங்க, ஏதாவது ப்ரச்சனையா என்று கேட்டிருக்கிறான். ஆச்சிக்கு அதுவரை இருந்த மனசு கஷ்டமே போய்விட்டதாம், இவன் இப்படி கேட்டவுடன்.

அதேபோல் ஏதாவது தவறான வார்த்தையை சொல்லிவிட்டு, நாம் அவனை அப்படி சொல்லக்கூடாது என்று சொன்னோமானால், சரி த்த, இனிமே ச்சொல்ல மாட்டேன், சத்தீமா ச்சொல்லமாட்டேன் என்பான்.
யார் இவனுக்கு கற்றுக் கொடுத்தது என்றாள், அவனம்மா தெரிலீங்க, ஊருக்கு போய்விட்டு வந்ததிலருந்து இத புடிச்சிக்கிட்டான் என்பார்கள்.

இப்படி நிறைய ஆச்சரியம் அவனிடம்.

கார்த்திக் (என் அக்கா பேரன்),
இவனுக்கு வரும் மே 1 வந்தால் 3 வயது ஆகப்போகிறது.

புடவை எடுப்பதற்காக சமீபத்தில் நல்லிக்கு சென்றிருந்தோம், சரி இவனுக்கும் ட்ரஸ் எடுக்கலாம் என்று குழந்தைகள் பிரிவுக்கு போனோம், அங்கு நிறைய கலரில் டி.சர்ட்கள் ஹாங்கரில் தொங்கவிடப்பட்டு அவன் உயரத்துக்கு
இருந்தது. இவன் சென்றான், அங்கு இரண்டு ட்ரஸ்களை விலக்கிவிட்டு ஒரு சிகப்பு கலர் பனியனை தன் மேலே வைத்துக்கொண்டு, ம்மா, தம்பிக்கு இந்த கலர் நல்லாருக்குமா, இத வாங்கு என்றான்.

நானும் என் அக்கா பெண்ணும், நம்ம நெனைவு தெரியவரை அம்மா எடுத்துக்குடுக்குற கலரைத்தான் போட்டுப்போம், இதப்பாரு, என்னா வெளக்கமா, தம்பிக்கு இந்த கலர் நல்லாருக்கும் என்று சொல்கிறது என்று சொல்லிக்கொண்டோம்.

அதே மாதிரி இவன் அறிவுப்பசிக்கு அளவே கிடையாது. வீட்டில் மளிகைக்கடை சாமான் மடித்து வரும் பேப்பரை கூட விடமாட்டான். எடுத்துக்கொண்டு வந்து, ச்சோ இது என்னா, அம்மா இது என்னா என்று கேட்டுக்கொண்டேயிருப்பான்.
திரும்ப, திரும்ப. சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் நாம். இவன் சொல்லி, அகர முதல எழுத்தெல்லாம் கேட்கவேண்டும். அந்த மழலை மாறாத குரலில் அவன் சொல்லும் குறள் ............ அடடா............

உமா

பக்கத்து வீட்டு பெண், எல்.கே.ஜி சேர்க்கப்போகிறார்கள். இந்தம்மா பண்ணிய சமீபத்திய காமெடிதான் டாக் ஆஃப் த டே வாக இருந்தது 2 நாட்களுக்கு முன்.

இவள் வீட்டுப்பக்கத்தில் இருக்கும் ஒரு சின்ன ஸ்கூலில் ப்ரீ.கே.ஜி படித்துக்கொண்டிருக்கிறாள். அவளின் அப்பா மிலிட்டரியில் இருப்பதால், கே.கே.நகரில் இருக்கும் மிலிட்டரி ஸ்கூலில் சேர்ப்பதாக முடிவு செய்து, அவர்கள் இவளுக்கு
ஓரல் டெஸ்ட்டுக்கு ஒருநாள் வர சொல்லியிருக்கிறார்கள். அதற்கு முன்னரே அவளின் அம்மா, வண்ணங்கள், பழங்களின் பெயர்கள், அம்மா, அப்பா பெயர்கள், ரைம்ஸ் எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் சொல்லிக்கொடுத்து அழைத்துப்போயிருக்கிறார்கள்.

அங்கு போனவுடன், அங்கிருந்த ஆசிரியர்கள், சில வண்ண அட்டைகளை இவள் முன் நீட்டி, ஆங்கிலத்தில் கலரின் பெயரை கேட்க, இவள்... பச்ச கலர், இத்து மஞ்ச கலர் என்று விலாவரியாக சொல்லியிருக்கிறாள். கரெக்ட்டாக ஆனால் தமிழில் சொல்லியிருக்கிறாள்.
அடுத்தடுத்து இவளே, அப்பா பெயர், அம்மா பெயர் என்று சொல்லிவிட்டு, கடைசியில் எனக்கு வில்லுப்பாட்டு தெரியும்மே... பாடட்டா........... வாடா மாப்புள, வாழப்பழத் தோப்புல (!!!!!!!!!!!!!!!! ??????????) என்று ஆரம்பிக்க.
அங்கிருந்த ஆசிரியர்கள் சற்றே கடுப்புடன் இவளின் அம்மாவை நோக்கி, வீட்டுக்கு லெட்டர் வரும் என்று சொல்லிவிட்டார்களாம்.


சஞ்ஞூ

இவள் வெட்கத்தின் இளவரசி, தனிமை ராணி. எல்.கே.ஜி முடித்து யு.கே.ஜி போகப்போகிறாள். ஏனோ அவளின் அம்மா, அப்பா, தாத்தா, ஆயாவை தவிர வேறு யாரிடமும் அவ்வளவாய் அதிகமாய் பேசவே மாட்டாள். எல்லாமும் தெரியும், வேறு யார்கேட்டாலும் பதில் வராது. ஸ்கூலிலாவது பதில் சொல்கிறாளா, தெரியவில்லை.

இவளின் அம்மாவிற்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. பெண் குழந்தை, நாங்களனைவரும் பார்க்க சென்றோம், திரும்பி பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது, பஸ் கொஞ்சம் காலியாக இருந்தது, அமைதியாக சென்று கொண்டிருந்தது.

இவள் எப்போதும் தன்னிச்சையாக ஏதாவது ராகமிட்டு பாடுவது போல, ஒரு வாசகத்தை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள் அது. அய்யோ, ரெண்டும் பொண்ணா போச்சே, அய்யோ ரெண்டும் பொண்ணா போச்செ. முதலில் இதை கவனிக்கவில்லை நான். கொஞ்ச நேரம் கழித்து கவனித்தேன், கையை ஒருமாதிரியாக பிரித்து பிரித்து ஒட்டி, வயதான ஆயாக்கள் சொல்லும் பேச்சுவழக்கில், அந்த வாக்கியத்தை திரும்ப திரும்ப சொன்னாள்.

போன இடத்தில் யாரோ சொல்லியிருக்கவேண்டும். சட்டென்று அவளை கலைத்து, அது மாதிரி சொல்லக்கூடாது என்றும், இன்னும் என்னன்னவோ சொல்லிப்பார்த்து, அவள் வெட்கச்சிரிப்பு சிரித்து, கண்ணை கீழ்நோக்கி வைத்துக்கொண்டாள்.

ஆனாலும் அதற்கப்புறம் யாராவது, என்னடி சஞ்ஞூ ரெண்டாவது தங்கச்சி பாப்பாவா என்று கேட்டாள், அவள் கண்கள் நிலம் நோக்கித்தான் போகிறது.

இன்னமும் ஒரு இனம்புரியாத உணர்வுகளில் சஞ்ஞூவும் உடன் நானும்.
(பல புத்தகங்களைப் போலத்தான் குழந்தைகளும், புத்தகத்தைப் படிக்க படிக்க வரும் ஆச்சரியங்களும், பிரமிப்புகளும், உடன் பல அனுபவங்களும், எண்ணமெங்கும் நீக்கமற நீடிக்கும் நிலைக்கும் வார்த்தைகளும் என நீள்கிறது குழந்தைகளுடனான வாசிப்பனுபவம்).

02 April 2009

அழியாத கோலங்கள் (தொடர் பதிவு)

சுதா,

வழக்கமான அன்பின் என்ற வார்த்தையோடு நான் ஆரம்பிக்கவில்லை இந்தக் கடிதத்தை. நமக்குள் என்ன சம்பிரதாய வார்த்தைகள் தேவைப்படுகிறது சொல்லேன். அன்பு இல்லாமலா நட்பு கொண்டோம்.
நலம், நலமறிய அவா - இப்போது இது மாதிரி சம்பிரதாய வார்த்தைகள் கொண்ட கடிதங்களையே பார்ப்பதே இல்லை. இப்ப நான் அதுமாதிரி உன்கிட்ட கேட்கவும் முடியாது.
ஆனால் ஒரு முறை நீ காரைக்குடியில் இருக்கும் போது, நீ எப்படியிருக்கிறாய் என்று கேட்காமல் கடிதம் எழுதியதற்காய் போனில் கேட்டாய். சொன்னவுடன் மவுனம் கொண்டாய். கொஞ்ச நேரம் கழித்து நீயாவது என்னை நல்லா இருக்கிறியா ந்னு கேட்க மாட்டியான்னு நெனச்சேன் என்றாய்.
இப்போது மவுனம் என்னிடத்தில்.

நாம் முதலில் கடிதம் எப்போ எழுத ஆரம்பிச்சோம் தெரியுமா, எனக்கு ஞாபகம் இருக்கு, கடிதம் கூட என்கிட்ட இருக்கு, 10ஆவது லீவில். பார்க்கமுடியலன்னு ஃபீல் பண்றபோது கடிதம் எழுதுவோம்னு சொல்லிக்கிட்டோம்.
எழுதினோம், இத்தனைக்கும் உன் வீடும், என் வீடும் ரொம்ப தூரமெல்லாம் இல்ல. நான் நடந்து வந்தேன்னா உங்க அம்மா வீடு ச்சே பழக்கம் விட்டு தொலையுதா பாரு, உன் வீடு 20 நிமிசம்தான்.

6ஆம் வகுப்பில் ஆரம்பித்தது. அப்படியே கல்லூரி போகவில்லை. அதற்கு பதிலாக சென்னைப் பல்கலைக்கழகம். நினைவிருக்கிறதா, சென்னைப் பல்கலைக்கழகம் என்று நீ பிரசிடெண்சி காலேஜுக்கு என்னை
அழைத்துப் போய், நாம் அப்ளிகேஷன் வாங்க வைத்திருந்த 100 ரூபாயை அங்கே தண்டமாய் அப்ளிகேஷன் வாங்கி அழுதது. 100 ரூபாய் செலவழிந்த்ததற்காக வருத்தப்படாமல் சிரித்தோம், சிரித்தோம், நம்மைக்
கடந்தவர்கள் எல்லாம் திரும்பி பார்க்கிறார் போல. நாம் சேர்ந்து பேசினாலே அப்படித்தானே சிரிப்பு எல்லை மீறும். அதுபோல் சிரித்து ரொம்ப நாள் ஆயிடிச்சி டி. எங்கயாவது எதையாவது படிச்சு தொலைச்சா நமுட்டு
சிரிப்புதான் சிரிக்க வேண்டியிருக்கு. உனக்கு பிடிச்ச கமலஹாசன் படம் அதுவும் கிரேசி மோகன் வசனத்துல வந்தா, சிரிப்பு வீட்டுக்கூரை அதிருமில்ல. ஆமா, நாம கடைசியா பார்த்த படம் எதுடி.... நியூ, ஹைய்யோ
கொடுமையே. ப்போ. அதுக்கப்புறம் சினிமா எல்லாத்தையும் எடுத்து ஏறைக்கட்டியாச்சு. கடைசியா நான் பார்த்தது கூட உனக்கு பிடிச்ச கமல் படம்தான், தசாவதாரம், உன் கிட்ட கூட சொன்னேன்னு நினைக்கிறேன்.

கடைசியா நாம் எப்போ பேசினோம்டி, நாம புக் ஃபேர் போயிட்டு வந்த பிறகுன்னு நெனைக்கிறேன். ரொம்ப நேரம் பேசினோம் இல்ல. என்ன பேசினோம், நீ நவீன பத்தியும், சன்மதிய பத்தியும் பெருமையா பேசின,
நான் அமித்துவ பத்தி. கல்யாணம் ஆகி குழந்தை பிறந்த பிறகு குழந்தைகளத் தவிர நாம வேற ஏதாவது பேச நினைச்சாலும், பேச்சு கடைசியா அங்க தான் வந்து முடியுது. நாம விரும்பினாலும், விரும்பாட்டாலும்.

எத்தனையோ தடவ என்னோட ப்லாக் ஐடி வாங்குன, ஒரு தடவ கூட படிச்சதில்ல, இத்தனைக்கும் உன் கையில் லேட் டாப்பும், இண்டர்னெட் கனெக்‌ஷன் இருந்துச்சு. ம்ஹூம் நீ இருந்திருந்தா நான் இப்படியொரு கடிதம் தான் எழுதியிருப்பனா. இல்ல நீதான் படிச்சிருப்பியா.
ஏதோ வாழ்க்கைய யதார்த்தமா ஓட்டறதா நெனைச்சு, எத்தனையோ உள்ளுக்குள்ள புதைச்சி வெச்சு, வாழறதா பேர் பண்ணிக்கிட்டு இருக்கோம்.

வருஷா வருஷம் புத்தக காட்சிக்கு போவோம். ஸ்கூல்ல ஆரம்பிச்ச இந்த பழக்கம், அப்படியே படிப்படியா தொடர்ந்தது, நீ காரைக்குடி போனபிறகு, நான் மட்டும் தனியா இல்லனா மற்ற நண்பர்களோடு போக ஆரம்பிச்சது.
அப்புறம் நீ போன்ல ஆனந்த விகடன், அவள் விகடன்ல கவிதை, கதை பத்தி சிலாகிச்சு பேசறது இது தொடர்ந்தது. ரொம்ப வருஷமா நான் மட்டும் தனியா போன புத்தக கண்காட்சிக்கு, இந்த வருஷம் ஏண்டி, நீயும் வரேன்னு சொன்ன,
வழக்கம் போல வரமாட்டேன்னு நெனச்சேன், போன்ல வேற ஏதாவது காரணம் சொல்வன்னு பார்த்தேன். ஆனா வந்தியேடி, நீ கூட குழந்தைகளுக்காக மட்டும் 2 ட்ராயிங்க் புக் வாங்கன, ஒரு ரைம்ஸ் சி.டி. வாங்கன இல்ல. நானும் நீயும் நமக்காக எதுவும் வாங்காம வெளியில வந்தது இதான் மொதல் தடவ இல்ல.
வெளிய தேங்கா, மாங்கா, பட்டாணி, சுண்டல் வித்துச்சு, உடனே நான் கூட அப்படியே பீச் ஞாபகம் வருது சுதா, அப்படின்னவுடனே வாங்கி குடுத்தியே, அப்ப கூட நீயும் நானும் சரத்குமார், விஜயகாந்த் பத்தி ஏதோ ஒரு கமெண்ட் அடிச்சு சிரிச்ச சிரிப்பு எல்லாரையும்
நம்மை நோக்கி பார்க்க வெச்சுது. ம்ஹூம்

ஏண்டி வந்த, ஏன் வந்த, வழக்கம் போல வராம இருந்துருக்கலாம் இல்ல, ஏதாவது பொய் காரணம் சொல்லியிருக்கலாமில்ல செல்போன்ல. போன் எடுக்காததுக்கு கூட காரணம் சொல்வியே நீ.
நமக்குள்ளவே நெறைய பொய் பேச ஆரம்பிச்சிக்கிட்டோம்னு நெனைக்கும் போதுதான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குதுடி.

எவ்வளவோ மறைச்ச, அதுக்குதான் கடைசியா எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பிச்சியா, மாமா சாவுக்கு நான் உன்கிட்டதாண்டி முத முதல்ல சொன்னேன், ஆனா நீ வரல. 10 நாள் கழிச்சு ஒரு மெசேஜ் வந்துது. யூ ந்னோ மை பேமிலி சிட்சுவேஷன் வெரி வெல். ப்ளீஸ் பர்கிவ் மீ அப்படின்னு.
கொஞ்ச நாள் வெச்சிட்டு இருந்து அப்புறம் ஒரு நாள் உன் மேல இருக்குற கோபத்துல அத அழிச்சேன். ஆனா நான் அழிச்சது எந்த கெட்ட நேரத்துலயோ தெரியாது, நீயே அழிஞ்சத உன் கணவர் ரொம்ப மெதுவா என் கிட்ட போன்ல சொல்றாரு. மாமாவோட காரியம் முடிஞ்ச கையோட உன்னோட இறப்பு செய்தி வந்தது.
என்னால தாங்க முடியல, உன் கணவர் போன் வந்த போது, என் கையில பாலகுமாரனோட புக் இருந்துச்சு. நீ வாசிக்க பிள்ளையார் சுழி போட்ட பாலகுமாரனோட புக். அப்படியே விதிர் விதிர்த்து நின்னுட்டேன். ஒரு சொட்டு கண்ணீர் கூட வரலடி, உடம்பு ஃபுல்லா அப்படியே உதறுது. அக்காவுக்கு போன் பண்ணி சொல்றேன்,
அருணுக்கு ட்ரை பண்றேன். நான் என்ன பண்றேன்னு சில நிமிடங்கள் எனக்கே தெரியல. அப்புறம் என் அவர்கிட்ட சொன்ன பிறகுதான் சுயநினைவுக்கே வந்தேன்.

நீ இறந்த்தா செய்தி மட்டும் தான் கெடச்சுது. நீ இறந்ததா நான் இன்னும் நினைக்கவேயில்லை. எப்பவாச்சும் போன் செஞ்சு ஏதாவது ஒரு காரணம் சொல்வேன்னு எதிர்பார்த்துகிட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடி உன்னோட நினைப்புகள் எனக்கு அதிகம் வராதுடி.
போன்ல பேசும் போது, இல்லனா உனக்கு பிடிச்ச எதையாவது பார்க்கும் போது அப்ப மட்டும் நெனச்சிப்பேன். ஆனா இப்ப அடிக்கடி ஞாபகத்துக்கு வரடி. மறக்கவே முடியலப்பா. அன்னைக்கு கனவுல வந்து நீ சாகல அப்படின்னு என் கிட்டயே சொல்ற. நானும் இது
நெஜமா இருக்கக்கூடாதுன்னு கொஞ்ச நேரம் நெனைச்சிக்கிட்டேன்.

எல்லோரும் உயிரோட இருக்குற நண்பர்களுக்கு, கற்பனையில கடிதம் எழுதறாங்க, நான் மட்டும்தாண்டி செத்த உனக்காக கடிதம் எழுதறேன், பைத்தியக்காரி, தொடரோட பேரைப் பாத்தியா, அழியாத கோலங்கள், அப்படித்தாண்டி நீ இருக்குற என் மனசுல.


(கடிதம் எழுத வாய்ப்பு தந்த சந்தனமுல்லைக்கு நன்றி. மனசுல இருக்குறத கொட்டிடேன்ப்பா. இதுவும் மனச பிழியற மாதிரிதான் இருக்கும் ஏன்னா இது என்னை வாட்டும் நிஜம்.)

இந்த தொடர் பதிவைத் தொடர என் வானம் அமுதாவை அழைக்கிறேன்.

கொடிது கொடிது

கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படு என்ற ஆட்டோ வாசகம் என்னை அதிகம் யோசிக்கவைக்கும். இதை முதுமையில் கஷ்டப்படாமல் இருக்க, இளமையில் கஷ்டப்படு என்றுதான் நான் எடுத்துக்கொண்டேன்.
அப்படி பார்த்தால் நாம் இளமையில் கஷ்டப்பட்டு முதுமையில் சந்தோஷத்தையா அனுபவிக்கிறோம்.

இளமையில் வறுமை எப்படி கொடியதோ அது போல வயோதிகத்தில் தனிமை கொடியது. நான் தினந்தோறும் பார்த்து என்னை பாதித்து கொண்டேயிருக்கும் நிகழ்வுதான் இது.
இவரைப் பற்றி அறிய முன்னுரைக்கு இங்கே போகவும்.

அறுபது வயசுக்கு மேல ஆச்சுன்னாலே அதுவும் ரத்த அழுத்தம், சர்க்கரை இருக்கும் ஆண்களின் நிலைமை சொல்லி மாளாது. இது தவிர இந்த சமயத்தில் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லையென்றால் இன்னும் மோசம்.

கஷ்டப்பட்டு படித்து, ஒரு வேலையை தேடி, கல்யாணம் செய்து, குழந்தைகளை பெற்று, அவர்களை படிக்க வைத்து, ஒரு ஐடெண்ட்டி கொடுத்து நின்று நிமிர்கையில் தான், நமக்கு ஞாபகம் வரும் மிச்ச சொச்சமிருக்கும் நம் வாழ்க்கையை நாம் எப்படி வாழ்வதென.

கணவனும் மனைவியும் ஒருங்கே இருந்து, கொஞ்சம் வருவாயும் இருந்து விட்டால் வயோதிகம் கொஞ்சும் இனிமைதான். ஆனால் ஒருவரற்று ஒருவர் இருக்கும் நிலைமை இருக்கிறதே. அது ..... அனுபவித்தால் மட்டுமே புரியும். நான் அதை தினமும் புரிந்துகொள்கிறேன் என் உயரதிகாரியின் வாயிலாக.



கணவன் இருந்து மனைவி போய்விட்டால், இருக்கும் கொடுமை ரொம்பவே. நல்ல சாப்பாட்டில் ஆரம்பித்து...., அனுசரணையான அன்பு, நல்ல பேச்சுத்துணை, இப்படி இன்னும் இன்னும் எவ்வளவோ இழக்க வேண்டிவரும். ஆனால் இவருக்கோ இருந்தும் இல்லாத நிலை.
மனைவி கோமா ஸ்டேஜ், மருத்துவமனை வாசம். அமெரிக்காவில் இருந்து வந்த பிள்ளைகளோ ஒரு கட்டத்துக்கு மேல் மருத்துவசெலவுக்கு அஞ்சுகிறார்கள். பெத்த இரண்டிற்கும் பெற்றவர்கள் இருக்கும்போதே சொத்து ப்ரச்சினை. நீ பார், ஏன் நீ பாரேன் என்று மல்லுக்கட்டு.
முடிவில் அவர் மருத்துவமனையிலேயே மனைவியின் அறைக்கு பக்கத்து அறைக்கு குடிபுகுந்துவிட்டார். மருத்துவமனை நல்லவேளையாக சொந்தத் தம்பியுடையது.

எஞ்சியிருக்கும் இந்த வாழ்வை வாழ அவர் படும் துயரங்கள். பாவமாய் இருக்கிறது. இதில் சரியாய் கண் வேறு தெரியாது. எவ்வளவோ பெயரெடுத்து என்ன, எல்லாருக்கும் சிம்ம சொப்பனமாய் இருந்ததென்ன, எல்லாமே இப்போது கானலாய். பாவம்
அவருடன் வேலை செய்து கொண்டிருக்கும் போது, இடையிடையே நான் சப்ஜெக்ட்டிலிருந்து விலகி சில கேள்விகளை கேட்பேன். அன்றும் அப்படித்தான். திடீரென சார், நீங்க சுனாமி வந்தப்போ எங்க இருந்தீங்க. அப்படின்னு கேட்டேன். ஒரு சின்னக்குழந்தையின் முகபாவத்துடன் அவர் சொன்னது இதோ.

அதுவா, ஹே ஆமாம்ப்பா, நானும் ...ஜாவும் அன்னைக்கு கார்ல பாண்டிச்சேரி போய்க்கிட்டிருந்தோம். கல்பாக்கம் கிட்ட போயிருப்போம், இங்கேயே ஒரு ஹோட்டல்ல ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாம்னு ..ஜா சொல்லிச்சு. சரி அங்க ஒரு ஹோட்டல்ல நான் இட்லி சாப்பிட்டேன், அவ தோசை ஆர்டர் பண்ணா, வழக்கம் போல அது சூடா இல்ல அப்படின்னு அவனோட சண்டை, அப்புறம் அவன் சூடா போட்டு எடுத்துட்டு வந்து தந்தான். இதுலயே அரை அவருக்கு மேல ஓடிப்போச்சு. அப்புறம் கார் எடுத்துட்டு கொஞ்ச தூரம் போயிருப்போம். மரமெல்லாம் விழுந்து இருக்கு. தண்ணி ரொம்ப தூரம் வரைக்கும் வந்து எதை எதையோ அடிச்சிகிட்டு போயி ரொம்ப தூரத்துல தண்ணி நெறைய வடிஞ்சு போறது கண்ணுக்கு தெரியுது. அத பார்த்தவுடனே நான் சொல்லிட்டேன், ...ஜா இது சுனாமி, இவ்ளோ தூரம் வந்து மரமெல்லாம் விழுந்திருக்குன்னா அது சுனாமிதான். இதப்பத்தி நான் படிச்சிருக்கேன். நீ வேணும்னா பாரு, நாளைக்கு பேப்பர்ல வரும் சொல்லிக்கிட்டே கார் ஓட்டிட்டு போறேன். பாவம் எவ்ளோ ஜனங்க குய்யோ முய்யோன்னு அடிச்சிக்கிட்டு ஓடிவருதுங்க. ரொம்ப கொடுமையா இருந்துச்சு.

இதில் அவர் ஒவ்வொறு முறையும் ..ஜா, ...ஜா என்று சொல்லும்போதே அவர் கண்ணில் தெரிந்த பிரகாசம் இருக்கிறதே. அவரின் மனைவியின் நினைவுகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளும்போது ஒரு சின்னக் குழந்தையின் குதூகலம் அவரது குரலில். எங்கேயும் அந்தம்மாவின் நினைவு தொட்டு அவரின் குரல் உடையவில்லை.

எப்போதாவது சொல்வார், வாழைத்தண்டு ரைத்தா சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சு, ...ஜா இருக்கும் போது செஞ்சு தரும். நான் உக்கார்ந்து நறுக்கி தருவேன். இனிமே எப்போ வந்து எப்படி செஞ்சு,...... இப்படி எப்பவாவது பேச ஆரம்பித்தால் முடிக்கும் போது அந்த வாக்கியத்தை ம்ஹூம் என்ற பெரிய பெரூமுச்சுதான் முடித்து வைக்கும்.

மிகுந்த வலியுடனேயே அவர் சொல்வதை கேட்க நேரிடும். உடனிருப்பவர்கள் சாரோட நெலமை ரொம்ப பாவம் என்பார்கள். நல்லா இருக்கும்போதே நாம போயிடனும்னு வேற சொல்வார்கள்.

வயசுக்காலத்தில் ஈயம் பித்தளைன்னு ஆணியம் பெண்ணியம் பேசி, அன்பை குறைத்து அதிகம் ஆதிக்கமே செலுத்தியிருந்தாலும், அறுபதுக்கு அப்புறம் இவரைப் போன்றவர்களின் நிலைமை கொடிதுதான்.



தனித்திருக்கும் பெண்களுக்கு எப்படியாகிலும் பக்கத்து வீடு, அக்கத்து வீடுன்னு பேச்சுத்துணை ரெடியாகிவிடும். முடிஞ்ச மட்டிலும் தன் கையாலேயே சாப்பாடும். மகளோ, மருமகளோ எப்படியாகிலும் அனுசரித்து போய்விடவும் முடியும். ஆனால் வயோதிகத்தின் ஆணின் நிலைமை எவ்வளவு கவலைக்கிடம் அளிக்குமென்பது இவரைப் பார்த்தபின் கண்கூடாக தெரிகிறது. அதுவும் பணமே குறியென்று நிற்கும் பிள்ளைகளைப் பெற்றவர்களின் நிலைமை அதோகதிதான்.

கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை.

கொடிது கொடிது தனிமை கொடிது, அதனினும் கொடிது வயோதிகத்தில் தனித்திருக்கும் ஆணின் நிலைமை.

இவரைப்பற்றி எழுதி கொண்டிருக்கும்போதே, இயல்பாய் எழுகிறது, மனைவி மக்களை பொருள் வயிற் பிரிந்து தனித்திருக்கும் ஆண்களையும், பெண்களையும் சூழ்ந்திருக்கும் தனிமை என்னும் வெறுமை.
எதையிட்டும் நிரப்ப முடியாத இந்த வெற்றிடத்திற்கு என்ன பெயர் சொல்வது.
வெற்றிடத்தில் ஒலி எழுப்பினால் கூட சில வினோத சத்தங்கள் கிடைக்கப்பெறும். ஆனால் இவர்களூடான வெற்றிடம், அழுகையைக் கூட வெளிப்படுத்த முடியாமல் இருக்கப்பெறும் சூழ்நிலைக் கைதிகளாய்...

வாழ்தலின் பொருட்டு இதுவும் கடந்து போகும் என்று எடுத்துக்கொண்டாலும், கடந்து போனவைகளை நினைத்துப் பார்க்கும் போது, ஒரு ஏக்கப்பெருமூச்சுதான் வெளியிட வேண்டியிருக்கிறது.
அந்த ஏக்க பெருமூச்சுக்குள் எவ்வளவு வலி பொருந்தியிருக்கிறது என்பது அவரைவரைப் பொறுத்தது.

01 April 2009

நீயாகிப் போன நான்

என் கனவுகளின் நிஜம் நீ

திகட்ட திகட்ட காதலித்தும்
இன்னும் திகட்டவுமில்லை
தீரவுமில்லை
மாறாய் பெருகுகிறது
உன் மீதான காதல்

குறைய குறைய
பெருகும்
அட்சயபாத்திரமாய்
வளர்கிறது
உன் மீதான அன்பு

என்
உயிர்த் தோட்டத்தின்
ஒற்றை ரோஜாப்பூ நீ

காலை உன்
கையசைப்பில்
உறைந்து போகும்
எனது உலகம்
மாலை உன்
ஒய்யார ஒற்றைச்சிரிப்பில்
உயிர் பெறுகிறது.

உன் மீதான
என் தீராக் காதலை
உன் மேல் நித்தமும்
வார்த்தைகளாக பொழிகிறேன்
புரிந்தும் புரியாமலும்
ஓடுகிறாய்

உனது
மழலைச் சொற்களை
மனனம் செய்து
மொழிபெயர்க்க எத்தனிக்கும் போது
இடையில் நீ சிரிக்கும் சிரிப்பை
எந்த மொழிகொண்டு சொல்வேன்.

உன் அனைத்து கேள்விகளுக்கும்
நான் ஓயாமல் பதில் தேடுகிறேன்.
என் எல்லா
கேள்விகளுக்கும்
பதிலாய் நீ
ஒற்றைச் சிரிப்பைத் தருகிறாய்.

உன்னை வியப்படைய
செய்ய எத்தனையோ
விளையாட்டு பொம்மைகள்
வாங்குகிறேன்.
நீயோ
உன் ஒரு சின்னஞ்சிறு
செய்கையால்
என்னை
விழி விரிக்க செய்கிறாய்.

என்
அத்தனை வார்த்தைகளுக்குள்ளும்
ஒளிந்து கொண்டிருக்கிறாய் நீ
உன்னை கவிதையாய்
உருமாற்ற முயல்கிறேன்
நான்.

பிடிக்க முடியாதபடி
ஓடி மறைகிறாய்
என் நெஞ்சகத்துள்.

உன் கால்கொலுசொலி
என் காதுக்குள்.

உனக்கான கனவுகள்
என் கண்ணுக்குள்

உன் சிரிப்பு
இப்போது என் உதட்டுக்குள்.

என் சுவாசமும்
உந்தன் பொருட்டே

நான் என்னும் நான்
இப்போது
நீயாகிப் போய் நிற்கிறேனடி
என் கனவு தேசத்தின்
ராஜகுமாரியே !!!!