10 August 2009

பத்மா

வீரம்மாளிற்கு மூன்று மகள்கள், இரண்டாவதுதான் பத்மா. நான் அவளைப் பார்க்க நேர்ந்த போது வயது 15க்கு மிகாமல்தான் இருக்கும்.குண்டு முகமும் உடம்பும். பயங்கர துறு துறுப்பு, அடாவடி வாயாடிப் பேர்வழி. ஆனாலும் கொஞ்சம் பாசத்துக்கு அடங்கிய வெகுளி. அவளுக்கு ஒரு எதிரி, அது வேறாருமில்லை அவளின் அக்கா சாந்திதான்.வீரம்மாள் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தபடியால்,காலை வெகு சீக்கிரமே எழுந்து போய், மாலை 4,5 மணிக்குத்தான் வீடு வருவார்கள். அதுவரை அக்கா சாந்தி ராஜ்ஜியம்தான் வீட்டில்.

பத்மா நல்லா வேலையும் செய்யும், அது போலவே சாப்பாடும் நல்லா சாப்பிடும். ஆனால் சாந்திதான் நல்ல சாப்பாடே பத்மாவுக்கு கொடுக்காது. தினமும் அழுகைதான் பத்மாவிற்கு. அடிக்கடி என் அக்காவிடம் வந்து புகார் நடக்கும். பாருக்கா, அவ்ளோ தூரத்துல இருந்து 20, 30 குடம் தண்ணி தூக்கிட்டு வந்து தந்தேன். காலைல தண்ணி சோறு தரா. என்னா இது அப்டின்னு கேட்டா, வேணாம்னா கடையில இட்லி வாங்கி சாப்புடுன்னு மூஞ்சில அடிச்சா மாதிரி சொல்றாக்கா. எங்க மாமா மூஞ்சிக்காக பாக்குறேன் அவள. இல்லன்னா அக்கான்னு கூட பார்க்கமாட்டேன் என புலம்பும். சிலசமயங்களில் பத்மாவும்,சாந்தியும் அடித்துக்கொள்வதைக் கூட பார்த்திருக்கிறேன்.
சண்டையும், சமாதானமுமில்லாமல் சில காலங்கள் இப்படியே ஓட, ஒரு சுபயோக சுபதினத்தில் பத்மாவை காணவில்லை. காலையில் இருந்திருக்கிறாள். மதியத்திலிருந்து ஆளை காணவில்லை. நேரம் ஆக ஆக, எங்கள் எல்லோருக்க்கும் பத்மாவைப் பற்றிய பதட்டம் தொத்திக்கொண்டது. விதவிதமான கதைகள் பேசப்படுகின்றன. எங்க போயிருப்பா, ஏதாவது சொந்தக்காரங்க வீட்டுல இருப்பாளா என்று போன் வசதியில்லாத அந்த சமயத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சொந்தக்காரர்கள் வீடென முறை வைத்து தேடியும் பத்மா கிடைக்க வில்லை. வீரம்மா ரெண்டு நாட்களாக அழுது அரற்றி, சாந்தியைத் திட்டி, பழ வியாபாரத்துக்கூட போகவில்லை. பத்மாவின் தங்கை தனம் என் தோழி. அவளிடம் தான் அடிக்கடி எங்கள் விசாரணை. ஆரம்பத்தில் அழுதவள், நாட்கள் கடக்க, அந்த லூசு எங்க இருக்கோ? என்று சொல்லும் நிலைமைக்கு வந்துவிட்டாள்.

வீரம்மாவிடம் வெற்றிலையில் மை வைச்சு கண்டுபுடிக்கும் முறையைப் பற்றி யாரோ சொல்ல அதற்கான முயற்சிகள் செய்ய ஆரம்பித்து, அதுவும் தோற்றது. பத்மாவை மறந்தும், மறக்காத ஒரு சகஜ நிலைக்கு வந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் (கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் கழித்து) பத்மாவை மீன் விற்கும் குப்பத்தில் (குயின் மேரிஸ் காலேஜ் பின்புறம்) பார்த்ததாக ஒருவர் தகவல் தந்தார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. எல்லோரும் மூலைக்கு ஒருவராக குப்பம், அதை ஒட்டிய பீச், சாந்தோம், பட்டினப்பாக்கம் எனத் தேட, கடைசியில் பத்மா பட்டினப்பாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வீட்டுக்கு அழைத்து வரப்பட்டாள்.

உடம்போ, முகமோ, குணமோ என எதுவுமே மாறவில்லை. என்னவோ ஊருக்குப் போய்விட்டு வந்து எல்லோரையும் குசலம் விசாரிப்பது போல ஓவ்வொருத்தரிடம் பேசிக்கொண்டிருந்தாள். நாங்களெல்லாம் அவளை வாய் பிளந்து அதிசயத்தை பார்த்த கணக்காக ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தோம்.

வியாபாரத்துக்குப் போய்விட்டு சாயங்காலம் வந்து வீரம்மாளுக்கு சந்தோஷமும், ஆத்திரமும் ஒரு சேர, பத்மாவை மொத்த ஆரம்பிக்க, ரெண்டாவது அடியிலேயே வீரம்மாவின் கை மறிக்கப்பட்டது வலுவாக. த்தோ பார், அவ சோறு போடாததாலயும்,ஒங்கிட்ட மூட்டிவிட்டு நீ அடிச்சுக்கிட்டே இருந்ததாலயும் தான் நான் ஓடிப்போனேன். மறுபடியும் இப்படியே செஞ்ச நான் மறுபடியும் போய் அந்த மீன்காரங்களோடயே இருந்துப்பேன். சொல்லிட்டேன் என்றாள். பார்த்துக்கொண்டிருந்த எல்லோருக்கும் ஒரு சேர திக் கென்று ஆனது. காணாமல் போன அன்று பத்மா போனது பீச்சுக்கு,அங்கே இங்கே சுற்றி பட்டினப்பாக்கத்தில் ஒரு மீன்கார குடும்பத்தில் அடைக்கலமாக, அவர்களும் இவள் வேலை செய்யும் திறனைப் பார்த்து அவளை வீட்டோடு சாப்பாடு போட்டு வைத்துக்கொண்டார்களாம். சோறு கண்ட இடமே சொர்க்கமாய், அடி வாங்காமல் பத்மாவும் அங்கே நன்றாக ஒட்டிக்கொண்டுவிட்டதாம். அந்த வீட்டுப்பொண்ணோடு மீன் வாங்க குப்பத்துக்கு வரும்போதுதான் பத்மா மாட்டிக்கொண்டாள். பத்மா வீட்டிற்கு வந்து சேர்ந்தபின்னாலும், அந்த மீன்கார குடும்பத்திலிருக்கும் பெண்கள் இவளைப்பார்க்க இங்கே வந்து போய்க்கொண்டிருப்பார்கள் !.

பத்மா கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் சில மாதங்களிலேயே அவசர அவசரமாய் அவளுக்கு கல்யாணம் செய்து, ஏதோ ஒரு குக்கிராமத்தில் வாக்கப்பட்டு போய், ஒரு ஆண் குழந்தையையும் பெற்று, கணவனோடு சண்டைகளும் போட்டு, காணாமல் போக முடியாத காரணத்தால், கிணத்தில் விழுந்து செத்துப்போனாள்.

24 comments:

SK said...

:(

ம்ம்ம்ம்

சந்தனமுல்லை said...

:((

butterfly Surya said...

ஆவலாய் படித்து கொண்டிருந்தேன். மிகவும் சோகமான முடிவு. இன்னும் எத்தனை பத்மாக்கள் இவ்வுலகில்..?

ராமலக்ஷ்மி said...

//காணாமல் போக முடியாத காரணத்தால்//

:(

இப்படியான முடிவுக்குத்தானே போய் விடுகிறார்கள்.

பத்மா உலுக்கி விட்டாள்.

Annam said...

naa thaan jegand:)

Annam said...

:(((((((

நட்புடன் ஜமால் said...

ஒரு சுபயோக சுபதினத்தில் பத்மாவை காணவில்லை]]

குசும்பு :)

------------------

கடைசியில் வருத்த நிலைக்கு ... :(

குடந்தை அன்புமணி said...

பத்மாவின் நிலை வருத்தத்திற்குரியது. எல்லாம் முடிந்து போனபிறகு என்ன சொல்ல...ப்ச்!

அ.மு.செய்யது said...

முடிவு பரிதாபகரமாய் இருந்தது.

விளிம்பு நிலை மனிதர்கள் என்பார்களே..அது இதுதானா ???

ஆயில்யன் said...

அதிகபட்ச வேகம் கொண்ட வாழ்வாக முடிந்தோ போய்விட்டதே - பிறந்த இடமும் புகுந்த இடமும் பத்மாவின் மனதில் நிறைவினை பெற்று தராத நிலையில் அவரின் முடிவு :((

ஜெனோவா said...

Hi Amithuamma,muthal muraiyaga pinnoottam aanaal vegu natkalaaga ungal pathivugal arimugam.

arumaiyaana pathivu, kadaisi para vai innum konjam neeti irukkalaamo ?

Sorry for the use of english. Don know how to post in Tamil. ( New to this blog world)

Joe

காமராஜ் said...

ஆணின் அடிமையாக மட்டும் அல்ல,
பெண்ணுக்கும் சேர்த்தே. இப்படி
கோடிக்கதைகள் எல்லாவற்றுக்கும்
பெண்களே சொந்தக்காரர்களாக.
நல்ல பதிவுகளில் இன்னொன்று.

வல்லிசிம்ஹன் said...

இன்னும் எத்தனை பத்மாக்களோ.
எங்க வீட்டுப் பக்கத்தில் இஸ்திரிப் பொண்ணு இப்படித்தான் தூக்குப் போட்டுக் கொண்டது.
காரணம் பள்ளிக்குப் போகாமல் போற வரவங்க கிட்ட வம்பு பேசியது.
அம்மா திட்டினாள் என்பதற்காக, இந்த முடிவு.

Deepa said...

கடைசி வரிகள்.... :-((
மிரட்டுகிறீர்கள் அமித்து அம்மா.

பத்மா, தனலட்சுமி, திலீப் என்று சாமான்ய மற்றும் விளிம்பு நிலை மனிதர்களை நீங்கள் உள்ளன்புடன் அணுகும் முறைக்கு பாராட்டுக்கள் பல.

Thamira said...

மிக ஆழமான விஷயங்களை அனாயசமாக போகிற போக்கில் சொல்லிவிட்டு செல்கிறீர்கள் பல பதிவுகளில். உயரங்கள் காத்திருக்கின்றன..

அப்துல்மாலிக் said...

சோகம்....

Anonymous said...

மீன் பிடிக்கறவங்கலோட நிம்மதியா இருந்திருக்க வேண்டிய பொண்ணைகூட்டி வந்து , சாகடிச்சுட்டாங்களே

அமுதா said...

/*காணாமல் போக முடியாத காரணத்தால், கிணத்தில் விழுந்து செத்துப்போனாள்.
*/
:-((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:(

Karthik said...

:-(

என்ன சொல்றதுன்னு தெரியலை. உங்களோட நிறைய பதிவுகள் leaves me like this.

தமிழ் அமுதன் said...

காணாமல் போக முடியாத காரணத்தால்!!

கிணத்தில் விழுந்து செத்துப்போனாள்.

என்ன சொல்ல?

மாதவராஜ் said...

உங்கள் எழுத்துக்களில் இருக்கிற இயல்பும், விஷயங்களில் இருக்கும் உண்மையும், பதிவுகளுக்கு உயிர் தருகின்றன. பதிவிலிருந்து மீள்வதற்கு காலமாகும்.

குடுகுடுப்பை said...

:(

"உழவன்" "Uzhavan" said...

ஒரு பெண்ணுக்கு பிறந்த வீடுமட்டுமல்ல; புகுந்த வீடும் சரியாக அமையவேண்டும் என்ற சீரிய கருத்தை ரொம்ப இயல்பா சொன்ன விதம் அருமை