31 March 2009

அழவாணம்

உங்களுக்கு அழவாணம் வெச்சுக்கப்பிடிக்குமா? நீங்க கடைசியா எப்ப வெச்சுக்கிட்டீங்க. அது வேறொன்னும் இல்லீங்க மருதாணிதான். (எங்கம்மா அழவாணம்னுதான் சொல்லுவாங்க).

மருதாணி, அதன் சிறுசிறு இலைகளும் பச்சை வாசமும், அரைக்கும் போதே கையைப்பிடித்துக்கொள்ளும் சிவப்பும். அட அட.

சிறு வயசில, இந்த மருதாணி அரைப்பதே ஒரு பெரிய விஷயமா இருக்கும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது உடைகளுக்கும், மற்றதுக்கும் இருக்கும் முன்னுரிமை மருதாணிக்கும் இருக்கும்.

நாம வெச்சிக்கிறதா இருந்தா நாம மருதாணி அரைப்பதே வேஸ்ட் தான். அரைக்கும் போதே கையெல்லாம் திட்டு திட்டா செவப்பு ஒட்டிக்கும், அப்புறம் வெச்சு என்ன, வெக்காம என்ன. அதனால மைய மருதாணி அரைச்சு
குடுக்க ஏதாவது ஒரு அக்காவ பிடிக்கணும். (எங்கம்மா அரைச்சுக்குடுக்க மாட்டாங்க.) அவங்க அலுத்துக்கிட்டு அரைப்பாங்க. அரைக்கும் போது கட்டெறும்பு பிடித்து விடுவது, கொட்டைப்பாக்கு இது போன்ற ஏகப்பட்ட இத்யாதிகளை
சேர்த்தால் மருதாணி இன்னும் சிவக்கும் என்பது நம்பிக்கைகளின் நம்பிக்கை. அரைத்துக்கொண்டிருக்கும் போதே அதை நமக்கு யார் வைத்து விடுவார்கள் என்று ஆள் பிடிக்க வேண்டும். எனக்கு என் அக்கா வைத்து விட்டால் தான்
பிடிக்கும். இரண்டு கையிலும் வைத்துக்கொள்ள வேண்டும்.

கையின் நடுவில் அழகா ஒரு வட்டம், அதற்கு காவலைப்போல சுற்றி 5, 6 பொட்டுக்கள். இது கையின் அகலத்து உட்பட்டது. அப்புறம் விரலின் முனைப்பகுதியில், நகத்தையும் சேர்த்துதான் தொப்பி. இதுதான் அநேக மருதாணி வைப்போரின் ஃபேவரிட் டிசைன், ஆண்களுக்கும் தான். எங்க மாமா உள்ளங்கையில் மட்டும் சின்னதா ஒரு வட்டம் வெச்சுப்பாரு.
இதை வெச்சுக்கிட்டு இருக்கும் போதே தூக்கம் கண்ணுல சொக்கும். நடுவில் மருதாணி கலைஞ்சிடக்கூடாதே என்கிற கவனம் வேறு. வைத்துக்கொண்டபின் கை தனியாக ஒரு கணம் ஏறிவிடும். கூடவே மருதாணி வாசமும் தான்.
ஆஹா, அந்தப் பச்சை வாசனை. இரண்டு கையையும் தலைக்கு மேலே தொங்கப் போட்டுக்கொண்டு கவனமாக தூங்க ஆரம்பித்து இருப்போம். அப்புறம் முகத்திலும், நமது ஆடையிலும் மருதாணி பட்டிருக்கும் என்பது வேறு விடயம்.
காலையில் எழுந்திருக்கும் போது இதனைக் குறித்து எந்த யோசனையும் இருக்காது. சட்டெனப் பார்த்தால் கொஞ்சம் மருதாணி வாசனையும், நம்மைச் சுற்றி காய்ந்து உதிர்ந்து கிடக்கும் மருதாணிப் பத்து மறுபடியும் கிளப்பி விட்டுவிடும் செவப்பின் சுவாரசியத்தை.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, இரண்டு கையையும் அதில் விட்டு சுரண்டி நன்றாக கழுவும் போதும் மருதாணி வாசம், இப்போது தண்ணீ பச்சையா இருக்கும், நம்ம கை சிவப்பா இருக்கும். வெள்ளை வெளேர் என இருக்கும் உள்ளங்கையில் சிவப்பு சிவப்பு பொட்டு, கூடவே நகமெல்லாம் ஏறிப்போயிருக்கும்
சிவப்பு என நம்மோட கையைப் பார்க்கும் போது ஆசையா ஆசையா வரும். ஆனா இப்படி சந்தோஷப்பட்டுக்கொண்டே இருக்கும் போது, நம்மோடு கூட இரவு மருதாணி வைத்துக்கொண்டவங்க எல்லாம் வந்து, ஏய் பாரேன், இவ கை எவ்ளோ செவப்பா இருக்கு, உன் கையில அவ்வளோ ஒன்னும் பத்தலை என்று சொல்லிவிட்டால் போச்சு.
அவ்வளவு கனவும் டமால். ச்சே நம்ம கையிலும் நல்லாதான் செவந்திருக்கு என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டாலும், அடுத்தவளின் கையைப் பார்க்கும் போது ஒரு இனம் புரியா “இது” உண்டாகும்.

2,3 நாட்களில் கையிலிருக்கும் மருதாணி சிவப்பு கருமையேறியிருந்தால் சூட்டு உடம்பு என்று அக்கா சொல்லும். அப்புறம் மருதாணி கையோடு அபிநயமெல்லாம் பிடித்து, எழுதும் போதும், கையை வீசி நடக்கும் போதும், வகுப்பு தோழிகளிடம் காண்பிக்கும் போதும் மருதாணி வாசம் தான். எல்லாம் கொஞ்ச நாள்தான். அப்புறம் மருதாணி மங்க ஆரம்பித்து, கையிலிருந்து சிவப்பு கழண்டு விடும். ஆனால் இந்த நகத்தில் ஏறியிருக்கும் சிவப்பு மட்டும் சீக்கிரம் விடாது. பவழ சிவப்பாய் இருந்து கொண்டே இருக்கும். எப்போது அந்த சிகப்பு நம்மை விட்டகன்றது என்று நமக்கு தெரிந்திருக்கவாய்ப்பிருக்காது. மருதாணியை வைத்துக்கொள்ள காட்டும் ஆர்வம், அது மங்கும் போது தோன்றவே தோன்றாது.
டீ டிகாக்‌ஷன் விட்டால் இன்னும் சிவப்பேறும் போன்ற உத்திகளோடு மறுபடியும் மருதாணி வைத்துக்கொள்ளவும், அரைக்கவும் அடுத்து ஏதாவது ஒரு பண்டிகை வந்து விட்டிருக்கும்.

கடைசியாய் எப்போது மருதாணி இட்டேன், எனது கல்யாணத்தின் போது, ஆனால் அது ஏதோ டிசைன் போட்டு மணிக்கட்டு வரைக்கும் இட்டு விட்டது அந்தப் பெண், ஆனால் மனதோடு நெருக்கமாகவே இல்லை அந்த மருதாணியின் டிசைன். என்னதான் இருந்தாலும், பச்சென்று மனதில் ஒட்டிக்கொண்ட பச்சை மருதாணி வாசமும், சிறைப்பட்ட வட்டமும், தொப்பியும் போல வருமா!!! சொல்லுங்கள்.

43 comments:

Vidhya Chandrasekaran said...

\\அப்புறம் மருதாணி கையோடு அபிநயமெல்லாம் பிடித்து, எழுதும் போதும், கையை வீசி நடக்கும் போதும், வகுப்பு தோழிகளிடம் காண்பிக்கும் போதும் மருதாணி வாசம் தான்\\

:)

Draftல நான் என் கல்யாணத்துக்கு மருதாணி வெச்ச கதையை எழுதி வெச்சிருக்கேன். ஆயிரம் மெஹந்தி டிசைன் வந்தாலும், தொப்பியையும், வட்டங்களையும் அடிச்சுக்க முடியாது:)

கார்க்கிபவா said...

சூப்பர்ங்க.. போன வாரம் என் தஙகையின் திருமணத்தின் போது வீட்டுக்கே வந்து எல்லொருக்கும் மருதனை வைத்தார் ஒருவர்.. ஜாலியா இருந்துச்சு..

KarthigaVasudevan said...

அட இன்னைக்கு... இங்க... நான்
me the first !!!
இல்லனாலும் பரவாயில்லை நான் வந்து பார்க்கும் போது இங்க யாரும் இல்லை ...அதனால நான் தான் first.

மருதாணின்னதும் எனக்கு கொஞ்ச வருஷம் முன்னாடி பார்த்த ஒரு மெகா சீரியல் ஞாபகம் தான் சட்டுன்னு வந்தது ,காரணம் அதுல இருந்த கொஞ்சூண்டு கவிதைத் தனம் ,இப்போ அந்த சீரியல் பெயர் மறந்துடுச்சு .சீதா...மீரா வாசுதேவன் ...டாக்டர் ஷர்மிலி எல்லாம் நடிச்ச ஒரு சீரியல் அது .
அதுல சீதா மீரா வாசுதேவன் கிட்ட சொல்லுவாங்க ...

கை நிறைய மருதாணி வச்சு காலைல விடிஞ்சதும் அதை கழுவிட்டுப் பார்த்தா சிவக்க...சிவக்க மருதாணி அந்தக் கைல பச்சையா வாழை இலைல தயிர் சாதம் பிசைஞ்சு வச்சிக்கிட்டு அந்த இலையை மருதாணிக் கைல ஏந்திக்கிட்டு ஒவ்வொரு உருண்டையா சாப்பிடனும் ,மருதாணி வாசம்...வாழை இல்லை வாசம்...தயிர் வாசம் சூடான சாத வாசம்னு கலந்தடிச்சு ஒரு வாசம் மூக்குல ஏறும் பாரு அது ஒரு சுகமான சந்தோசம் . இதான் அந்த டயலாக் நு நினைக்கறேன்...கொஞ்சம் கொஞ்சம் மாறி இருக்கும் ஆனாலும் ஏறக்குறைய இதே தான் .கற்ப்பனை பண்ணிப் பாருங்க எல்லாருக்கும் இது பிடிக்கலாம் ..பிடிக்காமலும் போகலாம் ஆனாலும் கற்பனை நல்லா இருக்கு கலர்...கலரா சிவப்பு மருதாணி ...பச்சை வாழை இல்லை,வெள்ளை தயிர் சாதம் .

சந்தனமுல்லை said...

ஆகா..கிளம்பிட்டாங்கப்பா!
ஊருக்குப் போனா மருதாணி வச்சிப்போம் ஸ்கூல் படிக்கும்போது! ஹாஸ்டல்லேயும் இது ஒரு பெரிய பொழுதுபோக்குதான்! மருதாணி வைச்சுவிடறது, புருவம் திருத்தறதுன்னு சில அம்மணிகள் எக்ஸ்பர்ட்டா இருப்பாங்க! நீங்க சொல்ற மாதிரி, அரைச்ச மருதாணி
வைச்சுக்கிட்டு அது போனதும் சிவந்திருக்கானு பார்க்கிறதும் ஒரு சந்தோஷம்தான்!

சந்தனமுல்லை said...

இப்போ பப்புவும் மருதாணி வேணும்னு கேட்டு, எங்க பெரிம்மா ஒரு கோன் வாங்கிட்டு வந்தாங்க! அவளாவே கையிலே இழுத்துக்கிட்டா! :-))

நட்புடன் ஜமால் said...

\\இதை வெச்சுக்கிட்டு இருக்கும் போதே தூக்கம் கண்ணுல சொக்கும். நடுவில் மருதாணி கலைஞ்சிடக்கூடாதே என்கிற கவனம் வேறு\\

ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

சிவப்பு அதிகமாக என்கிட்ட ஒரு டிப்ஸ் இருக்கே!


AXE-OIL கோடாலி சாப்பு

இப்படி ஒன்று இருக்கும்

அதிகமா இதை தலைவலிக்கு தான் உபயோகம் செய்வார்கள்

இதில் சில துளிகள் இட்டால் நன்கு சிவக்கும்.

gayathri said...

பச்சென்று மனதில் ஒட்டிக்கொண்ட பச்சை மருதாணி வாசமும், சிறைப்பட்ட வட்டமும், தொப்பியும் போல வருமா!!! சொல்லுங்கள்

nechayam varathunga akka

gayathri said...

வந்து, ஏய் பாரேன், இவ கை எவ்ளோ செவப்பா இருக்கு, உன் கையில அவ்வளோ ஒன்னும் பத்தலை என்று சொல்லிவிட்டால் போச்சு.
அவ்வளவு கனவும் டமால்


mmmmm enaku eppavum ithan nadakkum

gayathri said...

அரைக்கும் போது கட்டெறும்பு பிடித்து விடுவது, கொட்டைப்பாக்கு இது போன்ற ஏகப்பட்ட இத்யாதிகளை
சேர்த்தால் மருதாணி இன்னும் சிவக்கும் என்பது நம்பிக்கைகளின் நம்பிக்கை

appram inonru akka

maruthani vaikkum pothu manasuku pudichavangala nenachiketto illa avangala maruthani vachi vettalo
nampa kaila evalavu maruthai sivakutho avla asai avanga mela irukunu solluvanga

sindhusubash said...

(((சிறு வயசில, இந்த மருதாணி அரைப்பதே ஒரு பெரிய விஷயமா இருக்கும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது உடைகளுக்கும், மற்றதுக்கும் இருக்கும் முன்னுரிமை மருதாணிக்கும் இருக்கும்.)))

உண்மை உண்மை.அதுக்காக எத்தனை பிளான் ..எவ்வளவு இலை பறிக்கணும்,யார் வீட்டு அம்மில அரைக்கணும்னு..பிடித்த தோழி,பிடிக்காத தோழினு லிஸ்ட்..இப்ப வர்ற கோனில் சுவாரஸ்யம் இல்லை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லாக்கேட்டீங்க அதுபோல இது இல்லை தான்..

காஞ்சதுக்கப்பறம் நாங்க பேப்பரில் சுரண்டிப்போட்டுட்டு தண்ணியில் கழுவாம கொஞ்சநேரம் தேங்காண்ணெய் சொட்டு விட்டு தடவி வச்சிருப்போம் அப்பத்தான் கலர் குறையாதுன்னு ஒரு நம்பிக்கை..

எனக்கு ரொம்ப காலத்துக்கு ஆரஞ்சாத்தான் செவக்கும் .எங்கப்பா ஆரஞ்சு தான் அழகு ..சிவப்பு நல்லால்லைன்னு சொல்லிடுவாங்க எனக்காக.. :)

குடந்தை அன்புமணி said...

//2,3 நாட்களில் கையிலிருக்கும் மருதாணி சிவப்பு கருமையேறியிருந்தால் சூட்டு உடம்பு என்று அக்கா சொல்லும்.//

அப்படியா?

ஆயில்யன் said...

ஒ..!

மருதாணியா???

ஆச்சுவலி எனக்கு எங்க அம்மா மருதாணிபோடவே மாட்டாங்க! ஆமாம் போட்டா சிவப்பு டிபரென்ஸ் தெரியாதாம்! ஏன்னா... நான் அம்புட்டு செவப்பு....!

Unknown said...

இப்போ தான் அம்மா கேட்டாங்க மருதாணி வெச்சிக்கறியா இல்ல மெஹந்தி போட்டுக்கறியான்னு சொல்லிட்டேன் மருதாணிதான்னு :))

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...
இப்போ பப்புவும் மருதாணி வேணும்னு கேட்டு, எங்க பெரிம்மா ஒரு கோன் வாங்கிட்டு வந்தாங்க! அவளாவே கையிலே இழுத்துக்கிட்டா! :-))
//

பிரியாணி பொட்டலத்தை நீங்க இழுத்துருப்பீங்க பாஸ்! பின்னே பாவம் பப்பு என்ன செய்யும் ???? :(

ஆயில்யன் said...

//நீங்க கடைசியா எப்ப வெச்சுக்கிட்டீங்க. அது வேறொன்னும் இல்லீங்க மருதாணிதான். (எங்கம்மா அழவாணம்னுதான் //

அட உங்களுக்கு பெயர்காரணம் தெரியாதா?

அதாகப்பட்டது இந்த மருதாணி எப்பவும் கையில இரவு நேரத்துலதான் போடுவாங்க - குரங்குங்க அப்பத்தான் தூங்கிடுமேன்னு ஒரு டிரிக் - பட் அப்பவும் நாம ஓஓஓஓஒன்னு அழுவோமா அப்ப சொல்லுவாங்க அழவேணாம் அழவேணாம்ன்னு - அவ்ளோதான் இந்த கதையை போய் ஊரொல்லாம் சொல்லுங்க - காப்பிரைட் ஆயில்யன்

ஆயில்யன் said...

//சிறு வயசில, இந்த மருதாணி அரைப்பதே ஒரு பெரிய விஷயமா இருக்கும்,//

ஆமாம் சின்னவயசுல,பாவம் எம்புட்டு வெயிட்டான குழவிக்கல்லை வைச்சு அரைக்கறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா....!

ஆயில்யன் said...

//அரைக்கும் போது கட்டெறும்பு பிடித்து விடுவது,//

அடப்பாவிகளா...

உலகம் அதான் சீக்கிரமே சூடாகுது போல :))))))

ஆயில்யன் said...

//இப்போது தண்ணீ பச்சையா இருக்கும், நம்ம கை சிவப்பா இருக்கும்.//

அடேங்கப்பா எம்புட்டு கவனமா ஃபாலோ பண்ணியிருக்கீங்க பாஸ்!

ஆயில்யன் said...

//ஏய் பாரேன், இவ கை எவ்ளோ செவப்பா இருக்கு, உன் கையில அவ்வளோ ஒன்னும் பத்தலை என்று சொல்லிவிட்டால் போச்சு.
அவ்வளவு கனவும் டமால்//

அது சரி!

ஒரு கலர மட்டும் கையில வைச்சுக்கிட்டு நீங்க பாட்டுக்கு கலர் கலர் கனவுகள் கண்டா அப்படித்தான் டமால் டூமால் ஆகும்!

ஆயில்யன் said...

//அடுத்தவளின் கையைப் பார்க்கும் போது ஒரு இனம் புரியா “இது” உண்டாகும்.
//

அதுக்குத்தான் விதவிதமான பேரு
ஆவேசம்
வில்லத்தனம்
பொறாமை
கோபம்

:))))))))))))))))

ஆயில்யன் said...

//எனது கல்யாணத்தின் போது, ஆனால் அது ஏதோ டிசைன் போட்டு மணிக்கட்டு வரைக்கும் இட்டு விட்டது அந்தப் பெண், ஆனால் மனதோடு நெருக்கமாகவே இல்லை //

மனசில மாம்ஸ் ஃபுல்லா ஆக்கிரமிச்சிருக்கும்போது மருதாணிக்கு எப்படி இடம் கிடைக்கும்...?

ஆயில்யன் said...

// ஸ்ரீமதி said...
இப்போ தான் அம்மா கேட்டாங்க மருதாணி வெச்சிக்கறியா இல்ல மெஹந்தி போட்டுக்கறியான்னு சொல்லிட்டேன் மருதாணிதான்னு :))
///

வாழ்த்துக்கள் பாஸ் :)

narsim said...

ம்

சென்ஷி said...

:-))

அப்பாவி முரு said...

//அரைக்கும் போது கட்டெறும்பு பிடித்து விடுவது சேர்த்தால் மருதாணி இன்னும் சிவக்கும்//

அது மருதாணியோட சிவப்பு இல்லை.,

எறும்போட ரத்தமோ....

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

அப்பாவி முரு said...

//அரைக்கும் போது கட்டெறும்பு பிடித்து விடுவது, கொட்டைப்பாக்கு இது போன்ற ஏகப்பட்ட இத்யாதிகளை
சேர்த்தால் மருதாணி இன்னும் சிவக்கும் என்பது நம்பிக்கைகளின் நம்பிக்கை//

எங்க அக்காவெல்லாம் புளி வச்சு அரைப்பாங்க.,

ஊருக்கொரு நம்பிக்கை.,

தமிழ் அமுதன் said...

எனக்கு அதிகமா மருதாணி பத்தி தெரியாது! தீவாளி,பொங்கல் வந்தா வீட்டுல மருதாணி பறிச்சுகிட்டு வரசொல்லுவாங்க! தெரிஞ்சவங்க வீட்டுல பறிச்சு கொண்டாந்து கொடுப்பேன். மருதாணி மரத்துல செவப்பு கலர்ல ஒரு வகை எறும்பு இருக்கும் அது
கடிச்சா பயங்கரமா வலிக்கும்.

Thamira said...

அழக்க்க்கான நினைவுகள். டீ டிகாக்ஷன் உட்பட நீங்கள் எழுதியிருந்த அத்தனை நுணுக்கங்களும் உணர்ந்தவை. மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.

அப்புறம் ஸ்ரீமதியின் பின்னூட்டத்தில் உள்ள நுண்ணரசியலை யாரும் கவனிக்கலை போல தெரியுது.

தாரணி பிரியா said...

ஆஹா இப்பவும் தோணிச்சுன்னா மருதாணி வெச்சுக்குவேன். எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்

தாரணி பிரியா said...

மருதாணி வெச்ச கையால தயிர்சாதம் சாப்பிடணும். அந்த டேஸ்ட் சூப்பரா இருக்கும்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆமாம் வித்யா,

அப்படியா கார்க்கி

மிகவும் ரசனையான பின்னூட்டம் மிஸஸ். தேவ். ரொம்ப நேரம் ரசித்தேன் உங்கள் பின்னூட்டத்தை.

வாங்க முல்லை. அப்படியா.

அப்படியா ஜமால், இனிமே மருதாணி இட்டுக்கிட்டா செய்து பார்க்கிறேன்.

வாங்க காயத்ரி. பிடிச்சவங்கள நெனச்சு வெச்சுகிட்டா செவக்கும், ம்ம்
இது கூட சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன்.

ஆமாங்க சிந்து சுபாஷ், கோனில் சுவாரஸ்யமில்லை தான்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அப்படியா முத்து, அப்பாங்க எப்பவுமே பொண்ணுங்க பக்கம் தான் பேசுவாங்க போல.

வருகைக்கு நன்றி திரு. அன்புமணி.

ஆயில்ஸ் அண்ணா, நீங்க அம்பூட்டு செவப்பா. அதான் ப்ரொபைலே செகப்பா இருக்கா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஸ்ரீமதி said...

இப்போ தான் அம்மா கேட்டாங்க மருதாணி வெச்சிக்கறியா இல்ல மெஹந்தி போட்டுக்கறியான்னு சொல்லிட்டேன் மருதாணிதான்னு :))

ஸ்ரீமா, நீ வெட்கப்பட்டதில் இந்த அழவாணப் பதிவே சிவந்து போச்சு போ.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாங்க ஆயில்ஸ் அண்ணே,

உங்க கைக்கு இன்னைக்கு அவல் இந்தப் பதிவா...?

ரசித்து சிரித்தேன் உங்கள் அத்தனை பின்னூட்டங்களையும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி நர்சிம் சார், சென்ஷி, அப்பாவி முரு.

தீவாளி - ஊரு பக்கமெல்லாம் இப்படித்தான் சொல்லுவாங்கல்ல, ஜீவன்.

நன்றி ஆதி (நுண்ணரசியல் கவனிக்கப்பட்டது)

வாங்க தாரணி பிரியா, (அது ஏங்க சாப்பிடறதுலயே குறியா இருக்கீங்க)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

"உழவன்" "Uzhavan" said...

சே.. மருதாணியில இவ்வளவு சுகமான நினைவுகளா? நான் ஒருபோதும் வைத்ததேயில்லை. உங்க எல்லோருடைய கதையையும் படிக்கும்போது பெண்ணாய் பிறந்திருக்கலாமோ என தோன்றுகிறது. :-)

அமுதா said...

/*/*ஆனால் இந்த நகத்தில் ஏறியிருக்கும் சிவப்பு மட்டும் சீக்கிரம் விடாது*/
அழகா பிறை நிலவா மாறிகிட்டே வரும் ...

/*என்னதான் இருந்தாலும், பச்சென்று மனதில் ஒட்டிக்கொண்ட பச்சை மருதாணி வாசமும், சிறைப்பட்ட வட்டமும், தொப்பியும் போல வருமா!!! சொல்லுங்கள்.*/
உண்மைதான். இன்னும் எங்கம்மா இப்படிதான் வச்சுக்குவாங்க... என் பொண்ணுங்களுக்கும் வச்சு விடுவாங்க. அந்த மருதாணி வாசமே தனி... மருதாணி பூ வாசம் கூட ....

ச.முத்துவேல் said...

அழவாணம்ங்கிறப் பேரைப்பார்த்துமே புடிச்சுடிச்சி. எங்க ஊரு மொழியாச்சே.அழவாந்தழைன்னும் சொல்வாங்க.கடந்த கால நினைவுகளை,அழவாணம் ஈரத்தோடயும்,வண்ணத்தோடையும் மீட்டுக்கொடுத்து,மறந்துபோன பலரை நினைக்கவச்சுடுச்சி இப்பதிவு.ஆனா, சின்ன வயசிலகூட நான்அழவாணம் வச்சுக்க விரும்புவதில்ல.பேன் கூட வச்சு அரைப்பாங்கதானே?
/கடைசியாய் எப்போது மருதாணி இட்டேன், /
ஆமா,இதுதான் ரொம்ப முக்கியம்.இது எல்லோருக்குமே பொருந்தும்.கடந்த கால நினைவுகள் கடந்தகாலகமாகவே போயிடுச்சு.இல்லீங்ளா?
கிட்டத்தட்ட மருதாணி பற்றி, எல்லாத்தையும் அழகா,கவித்துவமா,பால்ய நினைவுகளின் ஈரம் காயாம எழுதிட்டீங்க. நல்ல பதிவு.

Deepa said...

அழவாணம்னு பேரைப் பார்த்தது ஏதோ அமித்துக் குட்டியோட புது மழலை மொழின்னு நெனச்சேன்! மருதாணியா?

ஹ்ம். நான் தூங்கறதுக்கு முன்னாடி வெச்சுக்கிட்டேன்னா பக்கத்தில் படுத்திருக்கறவங்க மூஞ்சிக்கெல்லாம் மேக்கப் போட்டுடுவேன். ஸோ பொறுமையா பகல் பூரா கையை விரிச்சு வெச்சிருப்பேன். அதில நெறய லாபம். சாப்பாடு ஊட்டி விடுறதுலேர்ந்து மூக்க சொறிஞ்சு விடற வரைக்கும் யாரையாவது படுத்தி எடுக்கலாம்!

பாலராஜன்கீதா said...

ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களின் தாளிக்கும் ஓசை பதிவின் ஒரு இடுகையில் வாசித்தது

http://mykitchenpitch.wordpress.com/2007/01/12/thayir-saadham-maargazi-28/

பாட்டி வலதுகையால் சாதத்தைக் கையில் போட, நாங்கள் கட்டைவிரலால் அதில் நடுவில் குழித்துக் கொண்டால், இடதுகையால் ஒரு ஸ்பூனில் கீரைக் கலவையை பாட்டி அதில் விட, நாங்கள் சாப்பிட… சொல்ல மறந்த முக்கிய விஷயம், முதல்நாள் கைகளில் மருதாணி இட்டு அழித்திருந்தால் (கடைகளில் வாங்கிய பொடியாக இல்லாமல், பசுமையான இலையை அரைத்து இட்டிருக்க வேண்டும்) அதற்காக இந்திர லோகத்தையே எழுதிவைக்கலாம். வாயருகே சாதத்தைக் கொண்டுவரும் போதெல்லாம், அந்த வாழைப்பூ மடல், தயிர்சாதம், கீரை, வத்தக்குழம்புடன் மருதாணியின் கலவையான வாசனைக்கும் சுவைக்கும் பாட்டியின் வாஞ்சையும் சேர்ந்து, என்னைக் கேட்டால், உலகின் மிகச் சிறந்த மேட்ச் ஃபிக்சிங் இதுதான்.

butterfly Surya said...

அருமை. என் திருமணத்தின் போது என் சகோதரிகளுடன் சண்டை போட்டு நானும் மருதாணி இட்டு கொண்டேன். It is a nice attraction.


இன்றும் என் மனைவி அந்த போட்டோக்களை குழந்தைகளிடம் காண்பித்து கிண்டலடிப்பாள்.

கொசுவத்தியை சுத்த வச்சுடீங்க..