24 July 2009

வெற்றிடங்களை நோக்கிப்போகும் வீடு

கட்டிலைப் பிரித்தாயிற்று
எந்த கீறலுமின்றி
பீரோவை ஏத்தியாயிற்று
இத்யாதிகள
அட்டைப்பெட்டிக்குள்ளும்
சாக்குப் பைகளுக்குள்ளும்

கண்ணீர் மல்க
கடைசியாய்
குடியிருந்த வீட்டைப்பார்த்த போது

பீரோவின் காலிருந்த தடமும்
பாத்ரூமில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் பொட்டும்
எண்ணெய் பிசுக்கொட்டிய சமையலறை சுவரும்
கதவுகளில் ஒட்டப்பட்டிருந்த டோரா புஜ்ஜி ஸ்டிக்கரும்
மஞ்சள், குங்குமத்தை பூசிக்கொண்ட நடுவீடும்

பொருட்களிருந்த இடங்களை
சூழ்ந்த வெறுமைத்தடங்கள்
கூவிஅழைத்தன
தன்னையும் எடுத்துப்போவென !!!

நினைவுகள் நிரப்பிய என்னை
சுமந்து கொண்டு
மெதுவாய்ப்
போய்க்கொண்டிருந்தது வீடு
வேறொரு வெற்றிடத்தை நோக்கி.

14 July 2009

காலையில்.......

இன்றைய பொழுது இனிதே விடிந்தது 6.17க்கு. வழமை போல இல்லாமல் காலநிலையும் கொஞ்சம் கூலாக் இருந்து.சுலபமாக சமையல் முடிந்தது, அது சுவையாக இருக்குமா என்பதன் ரிசல்ட் மதியம் தான் வரும்.:)))

எந்த டென்ஷனுமில்லாமல், இன்று 9.05 லேடிஸ் ஸ்பெசலை குறி வைத்து வீட்டிலிருந்து கிளம்பியது, அமித்துவையும் ரெயில்வே ஸ்டேசனுக்கு கூட்டி வந்தது என்பவை
போனஸ்கள். ஜன்னலோர இருக்கை கிடைத்தது போனஸோ போனஸ், ஐபாடில் இவ்வளவு நாளும் வைத்திருந்தாலும், இன்று நான் செலக்ட் செய்யாமலேயே பூமாலையே தோள் சேரவா! என்ற இளையராஜாவின் இனிய பாடலை கேட்க நேர்ந்தது என எல்லாமே கூடுதல் போனஸ்கள்.

சரி எதுக்கு இதெல்லாம் என்று கேட்பவர்களுக்கு, வழமையான ஆபிஸ் இத்யாதிகளை முடித்துவிட்டு, ப்லாக் கமெண்ட்டை பப்ளிஷ் செய்ய வந்தால்

திரு. செந்தழல் ரவி அவர்கள் இப்படி ஒரு கமெண்ட் இட்டிருந்தார். அதாகப்பட்டது, இதுதான், இதுதான், இஃதேதான்.

சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது கொடுத்திருக்கேன்...!!!

http://imsai.blogspot.com/2009/07/blog-post_9368.html

ஆச்சரியமாக இருந்தது, லிங்க்கை க்ளிக்கிப்பார்த்தேன், ஆறு பேருக்கு கொடுத்திருந்தார். அதில் நானு(ம்) இருந்தேன் . நன்றிகள் திரு. செந்தழல் ரவி அவர்களுக்கு.

இந்த சுவாரஸ்ய விருதின் விதிப்படி, இதை “நீங்க ஆறு பேருக்கு கொடுக்கலாம்...விருதை வலைப்பதிவில் போட்டுக்கலாம்”

விருதை வலைப்பதிவில் போட்டாச்சு, இப்ப விருது வழங்கும் விழா.

மனதை வருடும் எழுத்துக்கு சொந்தக்காரரான திருமதி. உமாஷக்தி

எனக்கு இல்லை பருக்கை, தரையோரக் கனவுகளில் நான் என எதிர் கவுஜ / பதிவு புகழ் திரு. ஆயில்யன்

எனக்கு குழந்தை வளர்ப்பை அறிமுகப்படுத்திய + அம்மாக்கள் ப்லாகை துவங்கிய பப்பு புகழ் ஆச்சி திருமதி. சந்தனமுல்லை

பிறந்த குழந்தை துள்ளி குதித்து ஓடினால் ? என அரிய பெரிய கற்பனைகளும், குடித்ததில் பிடித்தது என கலந்து கட்டி எழுதும் எழுத்தாளர் பைரவன் புகழ் திரு.கண்ணாடி ஜீவன்

ஜூன் 10 சில ஞாபகக் குறிப்புகள், கறையான்கள் அரித்த கதவுகள் என அசத்தலாக எழுதும் திரு. அ.மு. செய்யது.

கவிதை எழுதி, அதைத் தொடர்ந்து இப்போது தொடர்கதை எழுத ஆரம்பித்திருக்கும் திரு. நட்புடன் ஜமால். (எலக்‌ஷன் பகுதி ரொம்ப சுவாரசியம் நண்பரே)

நீங்களும் எல்லோருக்கும் இந்த விருதை பகிர்ந்துகொள்ளுங்கள், முக்கியமாக அந்த விருதுப் படத்தை உங்கள் ப்லாகில் இட்டுக்கொள்ளுங்கள்.

இது போன்ற ஒரு மனமகிழ்வுக்கு காரணமாய் இருந்த என் எழுத்துக்கு சொந்தக்காரியான என் மகள் அமித்துவுக்கு நன்றிகள்.

பார் மகளே பார், உன் அம்மா உனக்காக கட்டிய இந்த எழுத்துக் குடிலை நீ வளர்ந்து பார் மகளே பார்.

நன்றிகளுடன், அளவில்லா மகிழ்ச்சியுடனும்
அமித்து அம்மா.

13 July 2009

அமித்து அப்டேட்ஸ்

வந்திட்டான்யா, வந்தீட்டான்யா, இது அமித்து கார்த்தி எங்கள் வீட்டுக்கு விளையாட வரும்போது சொல்லும் வார்த்தை, இது நீண்டு இப்போது அவள் அப்பா வீட்டுக்கு வரும்போது,காக்கா வந்து உக்காரும்போது, பூனை வரும்போது என நீண்டுவிட்டது. வந்திட்டாயா காக்கா வந்தீட்டான்யா.

ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு என்று நாம் கை வைத்து விளையாட ஆரம்பிக்கும் போதே, கொய்யாஆஆஆஅ என்று கத்தி மேடம் ஆட்டத்தை அத்தோடு நிறுத்திவிடுவார்கள். இந்த கொய்யா என்ற வார்த்தை அமித்துவுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு போல, ரொம்ப ஜாலியா இருந்தாலும், இல்லை கோபமாக இருந்தாலும் சொல்லுகிறாள். அன்று தண்ணியில் விளையாடியதற்காக, அவளின் தாத்தா அவளை லேசாகத்தான் தட்டினார், இந்தம்மா உடனே, போடா கொய்யா என்று வேகமாக சொல்லிவிட்டு அழுதுகொண்டே ஓடிவந்துவிட்டாள்.

கடந்த மாதத்தில் ஒரு நாள் நாங்கள் வண்டலூர் போனோம். அங்கு அமித்து நிறையவே எஞ்சாய் செய்தாள்.

குரங்கு என்பதை கோங்கு என சொல்லக்கற்றுக்கொண்டாள்

புலியைப் பார்க்கப்போகும் போது, ஒரு புலி உலவிக்கொண்டிருந்தது. அவளின் அப்பா, அங்க பார் புலி என்றதுதான் தாமதம், ம்மா, ப்புல்லி பாரேன், அக்கா பாரேன் என ஒரே குஷி.
கொஞ்ச நேரம் உலவிய புலி,சற்று தள்ளிப்போய் உட்கார்ந்துகொண்டது. எல்லோரும் கலையத்தொடங்கினோம். திடிர்னு அமித்து, ம்மா இங்க பாரேன் ப்புல்லி, எங்கம்மா, த்தோ பேப்பேல்ல, அங்கே ஒரு புலியின் ஃபோட்டோ போட்டு அதற்கடியில் அதனைப்பற்றிய விவரங்கள் சொல்லியிருந்தார்கள்.

அதற்கடுத்து சிங்கம், முதலை என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு வந்தோம். சட்டென சிங்கமோ, புலியோ கர்ஜிக்கும் ஓசை கேட்டதால், அமித்து அப்பா, புலி கத்துது பத்தியா என்றார்.
புச்சில்லாமா, புச்சில்லாமா, எதைம்மா, ப்புல்லிய. சரிதாம்மா என்றேன் நான்.

எல்லா இடத்தையும் சுத்திப் பார்த்துவிட்டு, கடைசியாய் வரும்போது நாங்கள் நடந்து நடந்து செம டயர்ட்.
எல்லோரும் வரிக்குதிரைப் பார்க்கப்போய் வந்தார்கள். நாங்கள் தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டோம், கண்ணுக்கு தெரியாததால் கடந்துவிட்டோம்.
திடீரென அமித்து, ம்மா, குதுர பார்ரேன் குதுர பார்ரேன் என சவுண்டு, அவள் கைகாட்டிய இடத்தைப் பார்த்தால் அங்கே ஒரு வரிக்குதிரை தலையை வைத்து, அதற்குள் குடிதண்ணீர் குழாய் வைத்து தண்ணீர் வருமாறு செட் செய்திருந்தார்கள்.

கடைசியாய், யானை. நாங்கள் போன போது யானையை குளிப்பாட்டி, சாப்பாடு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். யான குளிரான் யான குளிரான் என அமித்து ஒரே குதியாட்டம்.

கடைசியாய் யானை சவாரி போவதற்கு யானைகளை நிறுத்தி, அதன்மேல் உட்காருவதற்கான அமைப்பை செய்திருந்தார்கள்.
அப்பா, உக்கார்லாமா, உக்கார்லாமா, எங்கம்மா, யான ம்மேல. :)))

அடுத்தவாரம் கிண்டி பார்க், வாசலிலேயே பெரிய டைனோசர் உருவம் வைத்திருந்தார்கள், கண்ணு பாரேன், பல்லு பாரேன் என போகும் போதே பாரேன் ஆரம்பித்துவிட்டது.
அங்கு போய் மான், மீன் எல்லாம் பார்த்தாலும் அமித்துவுக்கு கோங்கை பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம், நல்லவேளையாய் ரொம்ப நடக்க வைக்காமல் கிட்டத்திலேயே குரங்கை கூண்டுக்குள் வைத்திருந்தது வசதியாய்போய்விட்டது. அதற்கு முன்னர் தான் ஒரு குரங்கு வடிவ குப்பைத்தொட்டியை கோங்கு என காட்டினேன். நீருக்குள் இருக்கும் நீர்நாய் வெளியே வருவதும், உள்ளே குதிப்பதுமாய் இருக்க, அங்கேயும், ம்மா, ஜூ ஜ்ஜூ குளிரான் என்று அங்கேயும் ஆரம்பிச்சாச்சு.

வீட்டுக்கு திரும்பும் போது அக்கா (பப்பு, நந்து எங்க), அப்பு எங்க (ஜூனியர்), பாப்பா எங்க (நேஹா) என விசாரிப்புகள் வழி நெடுகிலும் வந்த வண்ணம் இருந்தது. வீட்டுக்கு போனவுடன் தட்டை அவளின் தாத்தாவிடம் காட்டி அக்கா, அக்கா, குத்தாங்க என்றாள். பாருங்க் அமுதா, க்ரெடிட்ஸ் எல்லாம் யாழுக்கு போய்டுச்சு. :))))

ஜூலை முதல் வாரம் எங்களின் திருமண நாள் வந்தது, அதற்கு முன் நாள் அமித்துவிடம்,
வர்ஷினிம்மா, நாளைக்கு அம்மாவுக்கும், அப்பாவுக்கு கை கொடுப்பியா,
என் பர்ஸை நோண்டிக்கொண்டே. ம், குட்ப்பேன்.
காசு குடுப்பியாம்மா, ம் குட்ப்பேன்,
எவ்ளம்மா குடுப்ப, பத்துவாஆ

அம்மா மம்மி, அம்மா மம்மி இதுபோல கொஞ்ச நாட்கள் என்னை அழைத்துக்கொண்டிருந்தாள், யார் மம்மி என்று சொன்னார்களென்று தெரியவில்லை. அவளின் அப்பாவையும் டாடி, டாடி என்று. இப்போ குறைஞ்சு போச்சு இப்படி சொல்றது.

கார்த்தியிடம் விளாடலாமா, விளாடலாமா என்று கேட்க ஆரம்பித்திருக்கிறாள். எதையாவது காட்டினால், பாக்கலாம்மா, பாக்கலாம்மா என்று கேள்வி வருகிறது.

ஓமித்தா, ஓமித்தா - இது வேறொன்றுமில்லை, எதிர் வீட்டு மோஹிதாவை வர்ஷினி இப்படித்தான் அழைக்கிறாள்.மோஹிதா தண்ணீரை தீர்த்தம் என்று சொல்வாள். அதைப் பார்த்தபின் ம்மா, தண்ணி தீத்தம் கொய்ங்க இது அமித்து.

இரண்டு வாரங்களுக்கு முன் அமித்துவுக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. மருந்து என்றாலே அவளுக்கு அலர்ஜி.அவளை உள்ளே உட்காரவைத்துவிட்டு வெளியே வைந்து மருந்தை அளந்து எடுத்துக்கொண்டிருந்தேன். வெளியே வந்து இதைப் பார்த்த அமித்து.

மருந்து வேணாம்மா.

உனக்கு இல்லம்மா, பார்பிக்கு.

பார்பிக்கா ?

ம், ஆமாம்மா, பார்பிக்கு ஓடம்பு சரியில்ல இல்ல.

கொஞ்ச நேரம் போல யோசித்துவிட்டு, பாவம் என்றாள்.

யாரும்மா பாவம்.

பாபி பாவம்.

ஏன்ம்மா பாவம்.

மந்து (மருந்து) குடிரான். பாவம் :(


காலையில் நாங்கள் மூவரும் ரெயில்வே ஸ்டேசனுக்கு வந்துகொண்டிருந்தோம். மேடம், இன்று தலைக்கு குளித்திருந்தால், முடி பறந்து அவளின் முகத்திற்கு நேராய் மோதியது. சும்மாவே குத்துது, குத்துது என்பாள், எதிர் காற்று வேறு, முன்னாடி உட்கார்ந்து கொண்டு, அப்பா, முடி, முடி என்று குரலெழுப்பிக்கொண்டிருந்தாள். அவரோ, இரண்டு பக்கமும் சேர்த்து இப்படி புடிச்சுக்கோ என்றார். இறங்கும் போது பார்க்கிறேன்.அவர் சொன்னார் போலவே அவள் கை தலைமுடியையே பிடித்துக்கொண்டிருந்தது. நான் அவரைப் பார்க்க, அவரோ நான் சொன்ன நேரத்துல இருந்து இங்க வர வரைக்கும் அவ தலைல இருந்து கைய எடுக்கல என்றார். என்ன சொல்ல.

சில பல செய்கைகளின் மூலமாக குழந்தைகள் எப்போதும் பெரியவர்களாகிவிடுகிறார்கள். நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது போல.
வாழ்க்கை இன்னும் நிறைய கற்றுத்தரும் என் அமித்து மூலமாக.

09 July 2009

இயல்பை தொலைத்தவர்கள்

அம்மா அவன் அடிக்கிறான்
என்று கைநீட்டியபோது

ஆட்காட்டி விரல்
எதிரிருப்பவனைச் சுட்டி
ஒன்று மேலே நோக்கி

மீத மூன்றும் நம்மையே
பார்த்துக்கொண்டிருக்கும்
அந்தவொரு
அற்புத ! கணத்தில்தான்

நாம்
குழந்தை இயல்பைத்
தொலைத்து
மனிதர்களானோம்.

06 July 2009

பெட்டிக்குள் தாலி

நேற்று அக்கா வீட்டுக்கு போயிருந்தேன்,அக்கா வீடு காலி பண்ணவேண்டியிருந்ததால், பொருட்களை ஒழித்து, அடுக்கும் வேலையிருந்தது.வேண்டும், வேண்டா பொருட்களை பிரித்தெடுத்து தனியாக கட்டி வைத்துவிட்டு, அலமாரிகளை குடைந்தோம்.கொஞ்சம் அடுக்கு டப்பாக்கள், இதர பாத்திரங்கள் என்று எல்லாவற்றையும் எடுத்து வெளியே வைத்தாயிற்று. ஒரு ரவுண்டு டப்பாவை திறந்தால், அதற்குள் ஒரு சின்ன சில்வர் டப்பா, அப்புறம இந்த நகைக்கடைகளில் நகை வாங்கும் போது கொடுக்கும் பிளாஸ்டிக் டப்பா இருந்தது. ஆர்வ மிகுதியால் ஒன்றை நான் திறந்துப் பார்த்தேன்.

கொஞ்சம் அதிர்ச்சி, அதில் அம்மாவின் சங்கிலியற்ற தாலி, அப்புறம் குண்டு மணிகள் இருந்தது. எந்த உணர்ச்சியும் காட்டாமல், அந்த டப்பால என்ன இருக்கு என்றேன். அதற்குள் அக்கா சில்வர் டப்பாவை திறந்து பார்த்து, இதுல என்னோடது இருக்குடி என்றாள். பார்த்ததில் அதிலேயும் தாலி,கால் காசு போன்ற இத்யாதிகள். அதை அரைக்கணம் பார்த்துவிட்டு மூடிவைத்து விட்டாள் அக்கா. ஆனால் அந்த நிமிஷம் அக்காவின் மனதில் என்ன உணர்ச்சி எழுந்திருக்கும் என்று என்னால் உணர்ந்து உண்ரமுடியா நிலை.
இதே பொருள், கிட்டத்தட்ட 28 வருடங்களாக அவள் இதயத்தோடு இதயமாய், உயிரோடு உயிராய், உணர்வோடு உணர்வாய் ஒன்றப்பட்டு இருந்த விஷயம் தானே. அம்மா அந்த டப்பாவில் என்னவென்று கேட்க, எதுவும் சொல்லாமல் டப்பாவை திறந்துகாட்டினேன். இதுவா, எடுத்து உள்ள வை என்ற வார்த்தைகள் வெளிப்பட்டது. அவர்களிருவருக்கும் இது ஒரு சாதாரணமாய் (சாதா ரணமா அது) விஷயமாகப்போய்விட்டது.

ஆனால் இதே அம்மாவும், அக்காவும் இதற்கு கொடுத்த முக்கியத்துவங்கள் எத்தனை. எங்கள் திருமண நிகழ்வுகளின் போது, இருவருமே தாலி கட்டும் நேரத்தின் போது ஒரு படப்படப்போடும், பிறகு தாலியை முடிப்பதில் யார் யார் முன்னாடி இருக்கவேண்டும் என்று பார்த்துக்கொண்டதிலும், பின்பு மூன்றாவது மாதம் தாலி பிரித்து மாற்றும் போது எத்துணை சம்பிரதாயங்கள். நேரம் காலம் எனப் பார்த்து பார்த்து. அதிலும் தாலி கோர்க்கப்பட்டிருக்கும் மஞ்சள் கயிற்றை மாற்றவேண்டுமென்றால் நாள், கிழமை, நட்சத்திரம், பார்த்து என நீளும் சம்பிரதாயங்கள் அவை. அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த ஒரு பொருளை வெறுமனே பிளாஸ்டிக், சில்வர் டப்பாவில் பார்க்கும் போது எழுந்த உணர்வுகள் இருக்கிறதே. அவை சொல்லி மாளாது.

தாலி கட்டப்படும் நேரத்தில் இருக்கும் முக்கியத்துவத்தை, எம் மக்கள் அதை கழட்டப்படும் போதும் வழங்கினார்கள் என் அம்மாவுக்கும் பிறகு அக்காவிற்கும். ஏன், பெண்கள் சுமங்கலியாக போகவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்ற வாக்கியத்தின் அர்த்தத்தை உணர்நத நேரம் அது. இது போன்ற ஒரு அனுபவத்தை கற்பனைகளிலும் நினைக்கமுடியாது. மரணத்தை விடவும் கொடுமையான அனுபவங்கள். உடம்பே உதறலெடுத்து, அய்யோ வேண்டாம் வேண்டாம் என்ற அக் கணம் நிகழ்ந்தே விட்டது, வாழ்வில்.முக்காடு போட்ட அம்மாவின் முகத்தைப் பார்க்கக்கூட திராணியில்லாமல், பெருங்குரலெடுத்து கத்தியழுத போது, மிகவும் சாதாரணமாக சொன்னது சில உறவுகள். என்னடி புதுசா, என்னமோ உங்கம்மாவுக்கு மட்டும்தான் இப்படி ஆன மாதிரி, இதை விட சின்ன வயசுல இருக்கறதுங்களுக்கே நடக்குது. நாங்கல்லாம் இல்ல இப்போ என வரிசையாய் எனக்கு நேர்ந்தது, இவளுக்கு இப்போது நேர்ந்துவிட்டதே, அவ்ளோதான், இதைப்போய் என்ற ரேஞ்சில் இருந்தது அவர்களின் வார்த்தைகள். அதற்கடுத்து வந்த நாட்கள் இதை விடவும் கொடுமை, பூவும், பொட்டும், கழுத்துச்சங்கிலி என வளைய வந்த அம்மா, எதுவுமற்று விபூதியோடு கைவிடப்பட்டார்கள். ஏதாவது வச்சிக்கோம்மா என்றபோது, ம்ம்ச்சும், விடும்மா என்ற வார்த்தைகளோடு போய்விட்டார்கள். ஆனால் வருடாந்திரமாய் குங்குமம் வைத்துவந்த பச்சைத்தடம், அதன் மேல் பொருந்தா விபூதி, கண்ணாடி அல்லாத உலோக வளையல்கள் என அம்மாவை நேருக்கு நேராக பார்க்க கொஞ்சமல்ல நிறையவே சங்கடங்கள். இத்தோடு முடிந்ததடா கூத்து என்று நாட்களோடு சகஜமாகி விட நேரும்போது, இன்னும் நீ பார்க்கவேண்டியது நிறைய என்று கடவுள் உணர்த்தி விதி அக்காவின் வாழ்வில் விளையாடியது. இந்த முறை, மாமாவின் உடல், மயானததிற்கு எடுத்துச்சென்றவுடனே எனக்குப் பிடித்த கிலி, அடுத்து வரும் பதினாறாம் நாள் காரியம் தான்.

காரியத்துக்கு நாள் பார்க்க, அய்யருக்கு சொல்ல, சாப்பாட்டுக்கு, காரிய பத்திரிக்கைக்கு என வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டேயிருந்தாலும், உள்ளுக்குள் பயம் உதறலெடுத்துக்கொண்டிருந்தது. அந்த பதினாறாம் நாள் வராமயே போனா நல்லாஇருக்குமே என்று எண்ணியபடி,
அதற்கு முந்திய நாள் வீட்டிற்கு வந்த உறவுகளுக்கு, ரொம்ப சடங்கெல்லாம் செஞ்சு சங்கடம் வேணாம், அப்படியே விட்டுடங்க, அக்காவ என்ற போது, எதுவும் சொல்லவில்லை யாரும். இதற்கென்றே மெனக்கெட்டு வந்த ஒரு ஆயா மட்டும், அத காலையில பாத்துக்கலாம் என்றது.
அப்படியே குத்திக்கொல்லலாம் போல வந்தது ஆத்திரம். ஆச்சு, அதிகாலை வந்து எல்லாம் முடிந்து, அழகான அக்காவை அலங்கோலப் படுத்தி தனியறையில் அமரவைத்து, போதாக்குறைக்கு போய்ப் பார், போய்ப்பாரு என்று உறவுகளின் கூச்சல் வேறு.

வாய்ச்சொல்லால் எத்தனை பேரை வீழ்த்த முடியும் ?. அக்காவை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் நிலையற்ற கண்களோடும், மனதோடும் பொங்கி வந்த அழுகையோடும் உள்ளே போகும் போது, அங்கே எனக்கு முன்னரே எனது அண்ணன் (சித்தி பையன்) அழுது வீங்கிய கண்களோடு.
அவரைப் பார்த்தபின் சொல்லத்தான் வேண்டுமா. எத்துணை மன தைரியம் வாய்க்கப்பெற்ற ஆண்களாக இருந்தாலும் கலங்கும் நேரம் என்று ஒன்று உண்டானால் அது அனேகமாக இது போன்ற சங்கடமான சம்பிரதாய கால நேரமாகத்தான் இருக்கும். என் அண்ணனுக்கு வாய்த்த இந்த நேரம் எத்துணையோ அண்ணன்களுக்கும் நேர்ந்திருக்கும், உணர்வுகளை அவர்களும் மென்று விழுங்கியிருப்பார்கள். தந்தை போன அவஸதை ஒரு புறமும், தாயாரின் இந்தக் கோலமும் ஒரு சேரத்தாங்கும் மனவலிமையையும் பெற்று, மேலும் ஆக வேண்டியதை ! பார்க்க வேண்டிய காலகட்டமல்லவா அது.

அது என் அக்கா மகனுக்கும் வாய்த்தது, காரியத்திற்கான வெளி சம்பிரதாயங்களுக்கு செல்லும் முன் அக்காவை பார்க்கவந்த அவன், சொல்லிய சொல், ம்மா, (உடைந்த ஒரு குரலோடு) நான் வரம்போது, நீ இப்டியிருக்கக்கூடாதும்மா, சொல்லிட்டேன் என்ற படி போனான். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி எதையுமே நடக்கவிடவில்லை எம்மக்கள். நீட்டி.......க்கப்பட்ட சம்பிரதாயங்கள், கோபம் வந்தாலும் மறுத்து சொன்னாலும், நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருந்தன எல்லாம். எல்லாவற்றையும் கடந்து வந்தபின், எங்களின் வற்புறுத்தலுக்காக அக்கா ஒரு சிறிய பொட்டு வைக்க ஒத்துக்கொண்டாள். ஆனால் அவளுக்கு பிடித்த கண்ணாடி வளையல்கள் ?

இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர், நெற்றி நிறைய குங்குமத்தோடு இருக்கும் பெண்களை, வயதான அம்மாக்களை கண்ணெடுத்துப்பார்க்கவே அவ்வளவு மனதுக்குள் குறுகுறுப்பாய் இருந்தது. உடன் சொல்லமுடியாத எண்ணங்கள் எழுந்து அது ப்ரார்த்தனையில் போய் முடியும். இப்போதும் வழியிலோ, ட்ரெயினிலோ, திருமணங்களிலோ இது போன்ற அலங்காரங்களோடு இருக்கும் பெண்களை பார்க்க நேர்ந்தால், சில எண்ணங்கள் எழவே செய்கிறது. தீபாவின் நகைப்புக்காக அல்ல படிக்கும் போது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. நாம் வழக்கமாக அணியும் ஒரு செயின் போல, தாலிச்செயினுக்கும் மிகப்பெரிய முக்கியத்துவமென்று ஏதுமிராமலிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அது போன்றே பூவுக்கும், குங்குமத்திற்கும் மற்றும் கண்ணாடி வளையல்களுக்கும்.

காலம் காலமாய், சடங்கு, சம்பிரதாயங்களில் ஊறிப்போனவர்களுக்கு, இப்படி கொடுத்துப்பின் பிடுங்கினால் அது எப்படியிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. இறப்புக்குப் பின்னர் இப்படியொரு இழிநிலையும், மீண்டும் எல்லாவற்றையும் போட்டுக்கொண்டால் பிறரால் வரும் பழிநிலையும் மாற என்னிடம் வேண்டுதல்கள் மட்டுமே உள்ளன. உங்களிடம்?