28 August 2009

தோற்றம்

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அந்தப் பெண்ணைப் பார்த்தபின்னர் தான் புரிந்தது.

கைகள் முழுவதும் நரம்புகள் புடைத்துக்கொண்டு நிற்க, வயோதிகம் முகத்தில் தெரிந்தது. வெற்றிலை பாக்கும் போடும் பழக்கமிருக்கக்கூடும்.பின் எண்ணெயறியா தலைமுடி, செம்பட்டையையும் நடுநடுவே வெள்ளைகளும். வெளுத்துப்போன கருப்பு ஜாக்கெட், பச்சை நிறத்தில் ஒரு பழம்புடவை.உடலின் தளர்ச்சி அந்தப் பெண்ணை நாற்பது (மேற்பட்டும் இருக்கலாம்) என்று சொன்னது. தோள்பட்டையில் ஒரு கருப்பு நிற நீள பை. சோகமோ, கோபமோ, இல்லை இயல்பே இப்படித்தானோ என்று எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாத முகபாவம் அந்தப் பெண்ணுக்கு. முகத்திலும் தளர்ச்சியின் கோடுகள்.

கையில் ஒரு குழந்தை. அனேகமாய் அந்தக்குழந்தைக்கும் ஒரு வயதுக்குள் தான் இருக்கவேண்டும். ஒல்லி என்ற வார்த்தையில் கடைசி ‘லி’ யில் இருக்கும் கொம்பை போலத்தான் இருந்தது அதன் கை கால்கள். ஒரு வயதாக இருந்தாலும் இருக்கலாம், ஆனால் அதன் தோற்றம் ஐந்து மாதத்தைத் தான் காட்டியது.

ட்ரெயினில் மிதமான கூட்டம், மாம்பலத்தில் நின்றால் இன்னும் கூட்டம் ஏறும் என்ற எதிர்ப்பார்ப்போடு அடுத்தடுத்து இறங்குபவர்கள் முன்னால் வர இருப்பவர்கள் நெருக்கமாகிக்கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணின் கையிலிருக்கும் அந்தக் குழந்தை அழுது கொண்டே இருந்தது. கூட்டத்தின் சலசலப்பைத் தாண்டி அந்தப் பெண்ணைப் பார்க்க அந்தக் குழந்தைதான் உதவியது. அனைவரின் எதிர்ப்பார்ப்பும் அந்தப் பெண் குழந்தையை முன் வைத்து பிச்சை எடுக்கப்போகிறாள் என்பதாகத் தான் இருந்தது. நீண்ட நேர அழுகை. தோள் மாற்றி தோள் வைத்து சமாதானமெல்லாம் செய்யும் முயற்சியெல்லாம் அந்தப் பெண் எடுக்காதது இன்னும் அதை ஊர்ஜிதப்படுத்தியது.

சிலரை சொல்வது போல, ஏம்மா இந்த கூட்ட நேரத்துல கொழந்தைய தூக்கிட்டு வந்து கஷ்டப்படுத்தறீங்க, எப்படியாவது ! உள்ள போய் யாரையாவது எழுப்பிட்டு சீட்டுல உக்காருங்க என்று முன் மொழியும் வார்த்தைகள் எந்த வாயிலுமிருந்து வரவில்லை.
அந்தப் பெண்ணை பார்த்த மாத்திரம் அனைவருமே அவள் பிச்சை எடுக்கத்தான் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்திருக்கவேண்டும் என்று முடிவு செய்திருப்பார்கள் போலும், நெருக்கத்திலும் அவள் மேல் பட்டும் படாமலுமிருக்க கற்றுக்கொண்டிருந்தார்கள் அந்த இடைவெளிக்குள்ளும்.

அடுத்த இறங்கப்போகும் பெண்ணுக்கு முன்னால் நிற்கும் இவளின் இருப்பு இடைஞ்சலைத் தந்ததால், அடுத்த ஸ்டேஷன்ல நிறைய பேரு இறங்கி, ஏறுவாங்க, கொஞ்சம் வழிவிட்டு உள்ளபோயிடுங்க. யாராவது ஒக்கார இடம் கொடுப்பாங்க. அவளின் இந்த வார்த்தையை இந்தப் பெண் காது கொடுத்து கேட்டிருப்பாள் போலும்,உள்ளே போகும் முயற்சி, ஆனால் ஒரு அங்குலம் கூட உடம்பை அசைக்கமுடியவில்லை, குழந்தையின் அழுகை வேறு கூடிக்கொண்டிருந்தது. எல்லோருக்கும் அவள் இன்னும் அந்தக் குழந்தையை காட்டி ஏதும் காசு வாங்காதது வேறு ஆச்சரியம், குழந்தையையும் ஆற்றுப்படுத்தவில்லை. அது பாட்டுக்கு அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரல் கூக்குரல் ஆகிற்று,

இப்போது இறங்கப்போகும் பெண் சற்று சூடாக, ஒன்னு உள்ள போ, இல்ல எனக்கு வழிவிடுங்க, இப்புடி நடுவுல குழந்தைய வெச்சிட்டு நின்னா எப்படி இறங்கறது ? என்று குரலை சற்று உயர்த்தினாள். எல்லோர் பார்வையும் இந்தப் பெண்ணின் மேல் இறங்கியது. அவளின் நோக்கம் எதுவென்று அறியமுடியாமல் இறங்கப்போகும் ஆர்வம் வேறு எல்லாரும் எல்லோர் முகத்தையும் பார்க்கச் செய்தது. எப்போதும் குழுவோடு பயணிப்பவர்கள், இது என்ன இப்படி குழந்தைய அழவிட்டு, காச கீச வாங்கறதா இருந்தா வாங்கிட்டு எறங்க வேண்டியதுதானே, என்று முணுமுணுப்பு.

எல்லோர் எண்ணங்களையும் ஒரு நொடியில் முறியடித்தாள் அந்த வயோதிக தோற்றப் பெண், நிற்கக் கூட இடமில்லாத அந்த இடத்தில் தன் உடம்பை குறுக்கி உட்கார்ந்துகொண்டு, குழந்தையை மடியில் கிடத்தினாற் போல வைத்துக்கொண்டு பால்புகட்ட ஆரம்பித்தாள். உயிர் உருப்பெற உருவாக்கிய ஜீவ அமுதம் இப்போது அந்த அழுகுரலை நிறுத்தி சப்புக்கொட்ட செய்தது. ஒரு நிமிடம் ட்ரெயினின் தடக் தடக் மட்டுமே, அனைவரின் பார்வையும் கீழ் நோக்கி, வாய் மௌனத்தை உச்சரித்தது.

நெகிழ்வு போலவும் நெஞ்சில் ஏதோ தோன்ற நிறுத்தம் வந்து இறங்கிவிட்டேன், அப்போது காதில் இந்தப் பாடல் வரிகள் ஒலித்தது.

காலம் கடந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே
நெருப்பில் எரித்தாலும் நீரில் குளித்தாலும் தங்கம் கருக்காது தாயே


இந்தப் பாடல் வரிகளுக்கும், அந்தக் காட்சிக்கும் அர்த்தப்படுத்தியது மாதிரிதான் இருக்கிறது இரண்டு நாட்கள் முன்னர் ட்ரெயினில் நான் பார்த்த அந்தக் காட்சி.

27 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

நெகிழ்ச்சியான நிகழ்வு மேம்

அந்த பெண்ணின் உணர்வுகளை யாரும் புரிந்துகொள்ளவில்லையோ அந்த இடத்தில் அதுவும் பெண்களும்...

மிக்க வருத்தம் :(

துளசி கோபால் said...

ஐயோ..... என்ன ஒரு நடை.

அசந்துபோயிட்டேன் பதிவைப் படிச்சதும்.

நல்ல கூர்மையான கவனிப்பு.
நல்வாழ்த்து(க்)கள்.

சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்...:(

//உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அந்தப் பெண்ணைப் பார்த்தபின்னர் தான் புரிந்தது.//

உண்மைதான்!

//நெருக்கத்திலும் அவள் மேல் பட்டும் படாமலுமிருக்க கற்றுக்கொண்டிருந்தார்கள் அந்த இடைவெளிக்குள்ளும்.//

கலக்கல் அமித்து அம்மா! நல்ல எழுத்து நடை! :-)

விக்னேஷ்வரி said...

ஒல்லி என்ற வார்த்தையில் கடைசி ‘லி’ யில் இருக்கும் கொம்பை போலத்தான் இருந்தது அதன் கை கால்கள். //

சே, என்ன ஒரு உவமை. நல்லாருக்கு.

நெருக்கத்திலும் அவள் மேல் பட்டும் படாமலுமிருக்க கற்றுக்கொண்டிருந்தார்கள் அந்த இடைவெளிக்குள்ளும். //

இவர்கள் மனிதர்கள். :(

பதிவு படிச்சிட்டு என்ன சொல்லனு தெரியல.

Thamiz Priyan said...

///துளசி கோபால் said...

ஐயோ..... என்ன ஒரு நடை.

அசந்துபோயிட்டேன் பதிவைப் படிச்சதும்.

நல்ல கூர்மையான கவனிப்பு.
நல்வாழ்த்து(க்)கள்.////

டீச்சரே சொல்லிட்டாங்க.. வாழ்த்து(க்)கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒல்லி .. :)
அடுத்து இறங்கப்போற பொண்ணுக்குத்தான் எத்தனை முன் யோசனை..
நல்லா கவனிக்கிறீங்க நீங்க...

ஆயில்யன் said...

பார்த்த விசயத்தை சொல்லிய விதம் எங்களை நெகிழவைத்தது!

:(

மனித மனங்கள் தம்மை விட மற்றவர்களை வெகு எளிதில் எடை போட்டுவிடுகின்றது !- முதலில் வெளிப்படுத்தப்படவேண்டிய அனுதாபம் ஏனோ இன்னும் மனித மனங்களில் ஆக்ரமிக்கவில்லை :(

குடந்தை அன்புமணி said...

பிள்ளைகளுடன் பயணிக்கும் அதுவும் பால் குடி மறக்காத குழந்தைகளுடன் பயணிக்கும் இதுபோன்ற நெருக்கடியான தருணங்கள் மிகவும் தர்மசங்கமானது. வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நெகிழ்ச்சியான (பகிர்வு) பதிவு.

குடந்தை அன்புமணி said...

உங்கள் வலைத்தளத்தை கமெண்ட் பகுதியை க்ளிக்கி Show Original Post என்பதை க்ளிக் செய்துதான் படிக்க முடிகிறது. முகப்பு பக்கம் படிக்க முடியாமல் எழுத்துருக்கள் இருக்கிறது. இதை எளிய முறையில் நிவர்த்தி செய்ய, எனது வலைத்தளமான thagavalmalar.blogspot.com வருக.

SK said...

சூப்பரு

SK said...

சூப்பர் நடை ..

பெரியவங்க எல்லாம் சொல்லிடாங்க.. தோற்றத்தை பார்த்து தான் பலர் பலர் எடை போடுகின்றனர். :(

நட்புடன் ஜமால் said...

என்ன சகோ 2 மணி நேரங்களுக்கும் மேல் பதிவை திறந்து வைத்து கொண்டு பார்த்து கொண்டேயிருக்கின்றேன்

அந்த ஒல்லியான குழந்தை வெறுமை படர்ந்த வயோதீக முகம் ஏழ்மையின் தோற்றம் - ரயிலின் ‘தடக்’ ‘தடக்’ சத்தம் மக்கள் கூட்டம் இன்னும் சொல்லப்போனால் அந்த வியர்வைகளின் நாற்றம் கூட உணர்கிறேன் - அப்படி விரிகின்றது காட்சி

துவக்க வரியை முடிவில் பின்னிட்டீங்க.

அருமை பதிவு சகோ.

- இரவீ - said...

உருக்கம் ....

மாதவராஜ் said...

இன்னொரு நல்ல பதிவு. அருமையான எழுத்துநடை. பார்வையும், அவதானிப்பும் சிறப்பு. வாழ்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

உங்க‌ளுடைய‌ கூர்மையான‌ அவ‌தானிப்பு தான் உங்க‌ள் எழுத்துக‌ளின் மாபெரும் ப‌ல‌மாக‌ இருக்கிறது.
மேலும் மின்சார‌ ர‌யில் ப‌ய‌ண‌ங்க‌ளைப் ப‌ற்றி சொல்ல‌ வேண்டியதில்லை.ஒவ்வொரு நாளும் விசித்திர‌மான‌
ம‌னித‌ர்க‌ளை ஏந்தி கொண்டு வ‌ந்து ந‌ம் க‌ண்முன்னே நிறுத்து விடுகின்ற‌ன‌.

எழுத்தில் நிறைய‌ மாற்ற‌ங்க‌ளை காண‌முடிகிற‌து.(குறிப்பாக‌ இந்த‌ ப‌திவில்).

Seems like you are working on it !!

Dhiyana said...

அமித்து அம்மா பேமஸ் நெகிழ்வான பதிவு.. சூப்பர் எழுத்து நடை..

sakthi said...

மிகப்பெரும் எழுத்தர்களின் நடை தங்களுடையது அமித்து அம்மா
தொடருங்கள்!!!!

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

KarthigaVasudevan said...

சக மனிதர்களை அனுமானிப்பதில் நம்மில் தான் எத்தனை எள்ளல்?!
நல்லா இருக்குங்க ...

"உழவன்" "Uzhavan" said...

ஒரு அனுபவக் குடோனே வைச்சிருக்கீங்க போல :-)

Deepa said...

அற்புதம் அமித்து அம்மா.
அந்தப் பெண்ணின் தாய்மை மனதில் உயர்ந்து நிற்கிறது.

ஆம், உருவு கண்டு எள்ளாமை வேண்டும். அழகான அவசியமான் சிந்தனை.

Thamira said...

நல்ல பதிவு.

நீங்கள் இதுபோன்ற பதிவுகளுக்கு சிறுகதைத் தோற்றம் தந்து பத்திரிகைகளுக்கு முயற்சிக்கலாம் தோழி. உங்கள் எழுத்துநடை நாளுக்கு நாள் தேர்ந்துவருகிறது.!

வாழ்த்துகள்.!

பா.ராஜாராம் said...

ரொம்ப சோர்வாக இருக்கு அமித்தம்மா.வாசித்து நிறையும் போது.
உணர தரும் நடை.உங்களது எப்போதும்.வேலை பளுவினால் உடன் வர வாய்க்க காணோம்.
இந்த ஒரு மாதம் இப்படித்தான்.மன்னியுங்கள்.அமித்துக்கு என் அன்பு நிறைய.

தமிழ் அமுதன் said...

//உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அந்தப் பெண்ணைப் பார்த்தபின்னர் தான் புரிந்தது.//

அதில் நம் தவறு் பெரிதாக ஒன்றும் சொல்லிவிட முடியாது சந்தர்ப்பமும் சூ்ழ் நிலையும்
அப்படி அமைந்து விடுகிறது...............!

சரி அது இருக்கட்டும் ...........வர வர உங்க எழுத்து நடை பதிவின் கருத்தை மறக்கடிக்க செய்து உங்க எழுத்து நடை மட்டும் மனதில் நிற்கும் வகையில் இருக்கிறது ..!
அருமை தொடருங்க ..............!!!

Sanjai Gandhi said...

நிஜ சம்பவமா இது? ரொம்ப நெகிழ்ச்சியா இருக்குங்க.

செல்வநாயகி said...

நெகிழ்ச்சியான நிகழ்வு.அருமையான எழுத்துநடை.

சென்ஷி said...

தமிழ் பிரியன் said...

///துளசி கோபால் said...

ஐயோ..... என்ன ஒரு நடை.

அசந்துபோயிட்டேன் பதிவைப் படிச்சதும்.

நல்ல கூர்மையான கவனிப்பு.
நல்வாழ்த்து(க்)கள்.////

டீச்சரே சொல்லிட்டாங்க.. வாழ்த்து(க்)கள்!
//

ரிப்பீட்டே :)