26 August 2009

பிறவி பிறவி பிறவி .......................

அப்போது படிப்பு எட்டாவதோ, ஒன்பதாவதோ . முதன் முதல் அப்படி ஒரு கேள்வியை சந்திக்க நேர்ந்தது. கேள்வி மிகவும் சுலபமானது, அதற்கான பதில்தான் என் கற்ப்னைகளின் எல்லையை நீட்டிக்கச்செய்து, அதனை ஒரு மிரட்சியாகவே சந்தித்தது.

அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா உங்கம்மா உன் வயித்துல வந்து பொண்ணா பொறப்பாங்க, அழாத தனம் - அம்மா இறந்த சோகத்திலிருக்கும் தனத்தை அக்கா இப்படித்தான் தேத்தியது.

அடுத்த ஜென்மமா அப்படின்னா என்ன?

அதுவா செத்தவங்க எல்லாரும் அடுத்து ஒரு பிறப்பா வருவாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஏழு பொறப்பு இருக்குன்னு சொல்லுவாங்க.

கொஞ்ச நேரம் கழித்து, அப்ப நாம கூட எப்பவோ செத்தவங்களா, ம், ஆமாம்.

அப்ப இப்ப தனம் அம்மா செத்துட்டாங்களே, அவங்க அப்படியே இவங்க வீட்டுக்கே திரும்ப வருவாங்களா?

அது அவ ஆறுதலுக்காக சொன்னது, அப்படியெல்லாம் நடக்காது.

அப்ப நான் அடுத்த ஜென்மத்துல உனக்கு தங்கச்சியா இருக்க மாட்டேனா, வேற யாராவதா இருப்பேனா க்கா.

ஆமாம்.

அப்ப, நம்ம அப்பா, மாமா, லதா, இப்ப நம்ம எல்லாருமே வேற வேறயா ஆகிடுவோமா, அப்புறமா.

ஆம்மாம்.

அவ்ளோதான், கொஞ்சம் இருட்டினாப்பல வந்து, சுவரின் மீது சாய்ந்துகொண்டேன், கற்பனைகள் நீண்டது. இப்போது இவர்களின் மீது இவ்வளவு நேசம் கொண்டிருக்கும் நான், அடுத்த ஜென்மத்தில் இவர்களை வெறுத்து ஒதுக்குவேனா? சபரி, லதா என்று உருகும் நான், அடுத்த ஜென்மத்தில் அவர்களை வேறு யாரோ மாதிரி பார்த்து விட்டு போய்க்கொண்டு இருப்பேனா? அவர்களும் அதுபோலவே நடந்து கொள்வார்களா. அப்போது இப்போது இருக்கும் இந்த நிலை இதே மாதிரி போகாதா, நான் நானாகவே இருந்து இறந்து பின் நானாகவே பிறந்து என் குடும்பத்தோடு சேரும் வாய்ப்புகள் ஏதுமில்லையா? ஒரு கருப்பு இரவில் இந்த கேள்விகள் என்னை சுற்றிக்கொண்டே இருந்தது.

பள்ளித்தோழிகளிடம் பகிர்ந்தபோது அவர்கள் சொன்னது வேறு விதமானாலும் உறுதிப்படுத்துமாறே இருந்தது, போதாக்குறைக்கு உலகம் அழிந்து எல்லோரும் ஒட்டு மொத்தமாய்
இறப்போம் என்ற கூடுதல் தகவலறிந்த போது, உள்ளுக்குள் கிடுகிடுத்தது.

ஏய் உனக்கு தெரியுமா ரெண்டாயிரம் வருஷத்துல உலகம் அழிஞ்சுருமாம். ஹேய் அப்டியா உனக்கு யாரு சொன்னா.

அதுவா புக்ல, பேப்பர்ல கூட போட்டு இருந்துதாமே, எங்கம்மா படிச்சுட்டு சொன்னாங்க. எங்க அக்கா ஸ்கூல்ல கூட இதப் பத்தி பேசிக்கிட்டாங்களாம்.

அப்டியா. ஹேய் என்னன்னு போட்டு இருந்துச்சுச்சாம்பா.

2000த்துல உலகம் அழிஞ்சுருமாம். ஆமாம் பாரு, ரேஷன் கார்டுல கூட 2000 அதோட முடிஞ்சிருக்கு,அப்புறம் ஏதும் போடலையாம் !!! (இப்படி சொன்னதற்காகவே இன்றும் பிரியாவை அடிக்கடி ஞாபகப்படுத்தி சிரித்துக்கொள்வேன்)

ஹேய் உலகம் அழிஞ்சா என்னப்பா ஆகும்.

நாம எல்லாரும் மொத்தமா செத்துடுவோம், செத்து வேறமாதிரி வேறமாதிரி பொறப்போம் பா.

இறப்பு குறித்த பயம் அதிகமாய் இருந்தது, கூடவே யாராவது இறக்க நேரிட்டால் இன்னும் பீதி, இவர்கள் அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பார்கள் என்ற ஓயாத மண்டை குடைச்சல்.

பின்பு பாலகுமாரன் நாவல் ஏதோ ஒன்றில் மனிதனுக்கு ஏழு பிறப்புகள், கடைசி பிறப்பு நாய் என்பதாக படித்தறிந்தேன்.அதன் பின்பு ரொம்ப நாள் எங்கே நாயைப் பார்த்தாலும், இதற்கு முன்னர் இது என்ன பிறவியாய் இருந்திருக்கும் என்று கற்பனை காற்றில் விரியும். அதுவும் கொஞ்ச நாள்தான், எதற்கோ ஒருமுறை அம்மா, போன ஜென்மத்துல இது நாயா இருந்துச்சா, இந்த மாதிரி எரி எரின்னு மேல விழுது அப்படின்னு என்னைத் திட்டியபோது அந்த நாய் கற்பனையும் கலைந்து போனது.

இப்படி வித விதமான எண்ணக் குடைச்சல்களிருந்தாலும், முதல் முதல் அந்த பிறவி குறித்தான உரையாடலும், அதைத் தொடர்ந்து யோசித்துக்கொண்டே போக கடைசியில் நாம் வந்தோம், வாழ்ந்தோம், இறப்போம், ஆனால் பேசி, சிரித்து, அழுது, அம்மா, அப்பா என்று உறவுகொண்டு வாழ்ந்த இந்த மக்களுடன் மீண்டும் எந்த தொடர்புமிருக்காது, உறவற்று போகும், வேறொரு பிறப்பாய் பிறப்போம் என்று அறிந்துகொண்டபின் ஏதோ ஒன்று ஏற்படுத்திய ஒரு பயம் (அந்த பயம் கருப்பாய் இருந்தது), தொண்டை அழுத்த அடைத்துக்கொண்ட அழுகை போன்ற ஒரு உணர்வும் இன்றும் ஏதோ செய்யத்தான் செய்கிறது.

21 comments:

Thamiz Priyan said...

ரொம்ப யோசிச்சி இருக்கீங்க... அதான் இம்புட்டு பிரச்சினை எல்லாம்.. :)

நமக்கு 7 மேல நம்பிக்கை இல்ல.. ஒன்னு தான்னு நம்புறேன். ஆனா இறந்ததற்குப் பிறகு வேறு ஒரு உலகிற்கு செல்வோம் என்று நம்புகின்றேன்.

நட்புடன் ஜமால் said...

உனக்கு தங்கச்சியா இருக்க மாட்டேனா, வேற யாராவதா இருப்பேனா க்கா.]]


:(


:)

கே.என்.சிவராமன் said...

நல்ல அனுபவப் பகிர்தல் அமித்துமா. 'நான் யார்ர்' கேள்வி விடாம துரத்திட்டு இருக்கு. அதுக்கான பதில், பொருளாதாரம், அனுபவம் சார்ந்து மாறிக்கிட்டே இருக்கு. விடைகள் மாறினாலும் வினாக்கள் மட்டும் மாறாமயே இருக்கு.

இதேமாதிரியான ஒரு கேள்விய நீட்ஷே கேட்டிருக்காரு. இன்னிவரைக்கும் அது பதில் சொல்லத் தெரியாம அல்லது பிடிக்காம மவுனமா இருக்கேன்.

'இன்னொரு பிறவி கிடைத்து, இதே அப்பா, அம்மா, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன், மனைவி, காதலி, குழந்தைகள், நண்பர்கள்... என இதே வாழ்க்கையைத்தான் வாழ வேண்டும் என்றால், வாழத் தயாரா'

நீட்ஷே சொன்னதோட நீர்த்துப்போன வடிவம் இது.

இதுக்கு என்ன விடையளிக்க?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

butterfly Surya said...

அருமை.

ஆரம்பத்தின் முடிவா..?? அல்லது முடிவின் ஆரம்பமா..?? யாருக்கு தெரியும்..

புரியாத புதிர் தான் இந்த வாழ்க்கை. ஆனால் அது என்றுமே அலாதிதான்.

பகிர்விற்கு நன்றி.

Anonymous said...

//இறப்பு குறித்த பயம் அதிகமாய் இருந்தது,//

இறந்ததுக்கப்பறம் எங்கே போறோம்னு தெரிஞ்சா எல்லாருமே சீக்கிரம் இறக்கணும்னு நினைப்பாங்க. ஏன்னா எல்லாருமே சொர்க்கத்துக்குதான் போவோம். :)

Karthik said...

நல்ல பதிவு. :)

சின்ன வயசில் நல்ல பையனாக இருந்து சொர்க்கத்துக்கு போய்விட வேண்டும் என்று மட்டும் நினைத்திருக்கிறேன். மறுபிறவி பற்றிய பயம் இருந்ததில்லை. அவ்வளவு நம்பிக்கை! ;)

குடந்தை அன்புமணி said...

அடுத்த ஜென்மம்
அசைக்கமுடியாத நம்பிக்கை
கண்தானம்.


நான் எழுதிய இந்த அய்க்கூதான் ஞாபகத்திற்கு வந்தது. மற்றபடி அப்படி ஒன்று இருக்கான்னு தெரியலைங்க. நல்ல பகிர்வு.

அன்புடன் அருணா said...

நிறைய யோசிச்சுருக்கீங்க!!!..

சந்தனமுல்லை said...

:-) நல்லா இருக்கு அமித்து அம்மா!
எனக்கும் சாவு பத்திய பயம் உண்டு..முதன்முதல்ல எப்போ வந்துதுன்னு தெரியலை..எங்க பால்கார அண்ணா மெலே காஸ் வண்டி மோதினப்போதான் நினைக்கறேன்...சாவை விட எந்தமாதிரியான சாவு என்பதுதான் எனக்கு முக்கியமான பயமா இருந்து இருக்கு!! இறந்தவங்க காக்காவா வருவாங்க கொஞ்ச நாள்னு எங்க ஆயா சொன்னதுலேர்ந்து பால்கனிக்கு வர்ற காக்காங்களை வாட்ச் பண்ணியிருக்கேன்..கொஞ்ச நாள்.வெட்டியா உட்கார்ந்துக்கிட்டு...இவங்களா இருக்குமோ..அவங்களா இருக்குமோன்னு! அதிலயும் அந்த மூக்கு உடைஞ்ச காக்கா யாரா இருக்கும்னும்!! :)))

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

"உழவன்" "Uzhavan" said...

இதற்கு சரியான விளக்கம் யாருக்கும் தெரியாததால்தான் இன்று சில மந்திரவாதிகளுக்கும், சாமியார்களுக்கும் பிழைப்பு ஓடுது.
 
//ஆமாம் பாரு, ரேஷன் கார்டுல கூட 2000 அதோட முடிஞ்சிருக்கு,அப்புறம் ஏதும் போடலையாம்
அதன் பின்பு ரொம்ப நாள் எங்கே நாயைப் பார்த்தாலும், இதற்கு முன்னர் இது என்ன பிறவியாய் இருந்திருக்கும் என்று கற்பனை காற்றில் விரியும்//
 
ஹிஹிஹி.. சரியான காமெடிதான் போங்க
 
செத்தவர்கள் யாராவது வந்து உண்மை என்னனு சொன்னாதான், இதற்கான சரியான பதில் கிடைக்கும்.

- இரவீ - said...

//ரேஷன் கார்டுல கூட 2000 அதோட முடிஞ்சிருக்கு,அப்புறம் ஏதும் போடலையாம் !!! //

:)))) Sirippa adakka mudiyala...

Nalla ninaivu pathivu.

அ.மு.செய்யது said...

புண‌ர்ஜென்ம‌ம் ப‌ற்றி என‌க்கு ந‌ம்பிக்கை இல்லையென்றாலும்,உங்க‌ள் ப‌திவும் எழுத்தும் வெகுசுவார‌ஸிய‌ம்.

இன்று தான்,எஸ்.ரா.வின் உறுப‌சி ப‌டித்து முடித்தேன்.அந்த‌ பாதிப்பிலிருந்தே நான் இன்னும் மீள‌வில்லை.அத‌ற்குள் இப்ப‌டியொரு ப‌திவா ??

காமராஜ் said...

//சபரி, லதா என்று உருகும் நான், அடுத்த ஜென்மத்தில் அவர்களை வேறு யாரோ மாதிரி பார்த்து விட்டு போய்க்கொண்டு இருப்பேனா?//

இந்த எழுத்து இருக்கும்
அதற்குள் இருக்கும் அன்புமாறாமல்.
மற்றதெல்லாம் மாறிப்போகும்.

ப்ரியமுடன் வசந்த் said...

பயம்...

இருக்கும்போதே இறப்பதை பற்றி ஏன்?

Deepa said...

//காத்தா அலைஞ்சாலும், கடலாக நீ இருந்தாலும், ஆகாசமா ஆன போதிலும், என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்தே தான் பொறக்கணும்...//

ஏனோ உங்கள் பதிவைப் படிக்கும் போது இது ஞாபகம் வந்தது.
விருமாண்டி படத்தில் ”ஒன்ன விட” பாடலில் எனக்கு மிகவும் பிடித்த் வரிகள். மனதை என்னமோ செய்யும், உங்களின் இந்தப் பதிவைப் போலவே.

kathirvelmuniyammal said...

கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதத்தையும்' வேதாத்திரி மகரிஷியின் ...நமது
பதிவுகள் நமது சந்ததிகளுக்கு எப்படி பரிமாறப் படுகிறது என்பதையும் படியுங்கள்..
மனம் லேசாகும்....தீர்வு கிடைக்கும்.

அமுதா said...

/*தொண்டை அழுத்த அடைத்துக்கொண்ட அழுகை போன்ற ஒரு உணர்வும் இன்றும் ஏதோ செய்யத்தான் செய்கிறது*/
:-( அதுவும் பிரியமானவர்களின் மறைவின் பொழுது இந்த கேள்வியின் தாக்கம் பலமாக இருக்கிறது. அவர்கள் எங்கே பிறந்து இறப்பார்கள் என்று ஓயாமல் ஒலிக்கிறது கேள்வி

Unknown said...

"பிறவி பிறவி பிறவி.............."

தாகூரின் கீதாஞ்சலி படித்த போது ரசித்த வரிகள் ஞாபகம் வருகிறது...(சிறுவயதில் படித்தது ஆகவே வார்த்தைகள் மாறி இருக்கலாம்)

தூரத்தில் தெரிகிறது தொடுவானம்
தொட்டுவிடும் ஆர்வத்தில்
தினம் தினம் நடக்கிறேன்...
அடிவானத்தை தொடமுடியவில்லை

பிறவியைப் பற்றி பேசுவதும் தொடுவானத்தைத் தொடும் முயற்சிதான்... ஒரு சில விஷயங்களை ருசியுடன் பேசலாம்...ரசிக்கலாம்... ஆராய முற்பட்டால் கஷ்டம் தான்..."தொண்டையை அழுத்தமாக அடைத்துக்கொண்ட மாதிரி இருக்கும்... அழுகை போன்ற ஒரு உணர்வும் உண்டாகும்."

நல்ல பதிவு சாரதா... தொடருங்கள்

மாதவராஜ் said...

நம்பிக்கை எல்லாம் தாண்டி, ரசிக்க வைத்த பதிவு. இந்தப் பிறவிதானே இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது.

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு ...! இதுபோல பதிவ போட்டா.... இதுக்கு கருத்து சொல்ல ஒரு பதிவு போடும் அளவுக்கு யோசிக்க வேண்டி இருக்கு ..!

நீங்க சொல்லி இருக்குற விஷயங்கள் நெறைய எனக்கும் தோணி இருக்கு!

//சபரி, லதா என்று உருகும் நான், அடுத்த ஜென்மத்தில் அவர்களை வேறு யாரோ மாதிரி பார்த்து விட்டு போய்க்கொண்டு இருப்பேனா? ///

///அவர்களும் அதுபோலவே நடந்து கொள்வார்களா. ///

சின்ன வயதில் மறுபிறவி பற்றிய ஒரு எண்ணத்தை ,பயத்தை நல்ல முறையில் சொல்லி இருக்கீங்க ....!!


//2000த்துல உலகம் அழிஞ்சுருமாம். ஆமாம் பாரு, ரேஷன் கார்டுல கூட 2000 அதோட முடிஞ்சிருக்கு,அப்புறம் ஏதும் போடலையாம் !!! (இப்படி சொன்னதற்காகவே இன்றும் பிரியாவை அடிக்கடி ஞாபகப்படுத்தி சிரித்துக்கொள்வேன்)///

அந்த பிரியா உங்களபத்தி தெரிஞ்சுதான் சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கி்றேன் !;)