04 March 2009

கொடிது கொடிது

கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படு என்ற ஆட்டோ வாசகம் என்னை அதிகம் யோசிக்கவைக்கும். இதை முதுமையில் கஷ்டப்படாமல் இருக்க, இளமையில் கஷ்டப்படு என்றுதான் நான் எடுத்துக்கொண்டேன்.
அப்படி பார்த்தால் நாம் இளமையில் கஷ்டப்பட்டு முதுமையில் சந்தோஷத்தையா அனுபவிக்கிறோம்.

இளமையில் வறுமை எப்படி கொடியதோ அது போல வயோதிகத்தில் தனிமை கொடியது. நான் தினந்தோறும் பார்த்து என்னை பாதித்து கொண்டேயிருக்கும் நிகழ்வுதான் இது.
இவரைப் பற்றி அறிய முன்னுரைக்கு இங்கே போகவும்.

அறுபது வயசுக்கு மேல ஆச்சுன்னாலே அதுவும் ரத்த அழுத்தம், சர்க்கரை இருக்கும் ஆண்களின் நிலைமை சொல்லி மாளாது. இது தவிர இந்த சமயத்தில் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லையென்றால் இன்னும் மோசம்.

கஷ்டப்பட்டு படித்து, ஒரு வேலையை தேடி, கல்யாணம் செய்து, குழந்தைகளை பெற்று, அவர்களை படிக்க வைத்து, ஒரு ஐடெண்ட்டி கொடுத்து நின்று நிமிர்கையில் தான், நமக்கு ஞாபகம் வரும் மிச்ச சொச்சமிருக்கும் நம் வாழ்க்கையை நாம் எப்படி வாழ்வதென.

கணவனும் மனைவியும் ஒருங்கே இருந்து, கொஞ்சம் வருவாயும் இருந்து விட்டால் வயோதிகம் கொஞ்சும் இனிமைதான். ஆனால் ஒருவரற்று ஒருவர் இருக்கும் நிலைமை இருக்கிறதே. அது ..... அனுபவித்தால் மட்டுமே புரியும். நான் அதை தினமும் புரிந்துகொள்கிறேன் என் உயரதிகாரியின் வாயிலாக.


கணவன் இருந்து மனைவி போய்விட்டால், இருக்கும் கொடுமை ரொம்பவே. நல்ல சாப்பாட்டில் ஆரம்பித்து...., அனுசரணையான அன்பு, நல்ல பேச்சுத்துணை, இப்படி இன்னும் இன்னும் எவ்வளவோ இழக்க வேண்டிவரும். ஆனால் இவருக்கோ இருந்தும் இல்லாத நிலை.
மனைவி கோமா ஸ்டேஜ், மருத்துவமனை வாசம். அமெரிக்காவில் இருந்து வந்த பிள்ளைகளோ ஒரு கட்டத்துக்கு மேல் மருத்துவசெலவுக்கு அஞ்சுகிறார்கள். பெத்த இரண்டிற்கும் பெற்றவர்கள் இருக்கும்போதே சொத்து ப்ரச்சினை. நீ பார், ஏன் நீ பாரேன் என்று மல்லுக்கட்டு.
முடிவில் அவர் மருத்துவமனையிலேயே மனைவியின் அறைக்கு பக்கத்து அறைக்கு குடிபுகுந்துவிட்டார். மருத்துவமனை நல்லவேளையாக சொந்தத் தம்பியுடையது.

எஞ்சியிருக்கும் இந்த வாழ்வை வாழ அவர் படும் துயரங்கள். பாவமாய் இருக்கிறது. இதில் சரியாய் கண் வேறு தெரியாது. எவ்வளவோ பெயரெடுத்து என்ன, எல்லாருக்கும் சிம்ம சொப்பனமாய் இருந்ததென்ன, எல்லாமே இப்போது கானலாய். பாவம்
அவருடன் வேலை செய்து கொண்டிருக்கும் போது, இடையிடையே நான் சப்ஜெக்ட்டிலிருந்து விலகி சில கேள்விகளை கேட்பேன். அன்றும் அப்படித்தான். திடீரென சார், நீங்க சுனாமி வந்தப்போ எங்க இருந்தீங்க. அப்படின்னு கேட்டேன். ஒரு சின்னக்குழந்தையின் முகபாவத்துடன் அவர் சொன்னது இதோ.

அதுவா, ஹே ஆமாம்ப்பா, நானும் ...ஜாவும் அன்னைக்கு கார்ல பாண்டிச்சேரி போய்க்கிட்டிருந்தோம். கல்பாக்கம் கிட்ட போயிருப்போம், இங்கேயே ஒரு ஹோட்டல்ல ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாம்னு ..ஜா சொல்லிச்சு. சரி அங்க ஒரு ஹோட்டல்ல நான் இட்லி சாப்பிட்டேன், அவ தோசை ஆர்டர் பண்ணா, வழக்கம் போல அது சூடா இல்ல அப்படின்னு அவனோட சண்டை, அப்புறம் அவன் சூடா போட்டு எடுத்துட்டு வந்து தந்தான். இதுலயே அரை அவருக்கு மேல ஓடிப்போச்சு. அப்புறம் கார் எடுத்துட்டு கொஞ்ச தூரம் போயிருப்போம். மரமெல்லாம் விழுந்து இருக்கு. தண்ணி ரொம்ப தூரம் வரைக்கும் வந்து எதை எதையோ அடிச்சிகிட்டு போயி ரொம்ப தூரத்துல தண்ணி நெறைய வடிஞ்சு போறது கண்ணுக்கு தெரியுது. அத பார்த்தவுடனே நான் சொல்லிட்டேன், ...ஜா இது சுனாமி, இவ்ளோ தூரம் வந்து மரமெல்லாம் விழுந்திருக்குன்னா அது சுனாமிதான். இதப்பத்தி நான் படிச்சிருக்கேன். நீ வேணும்னா பாரு, நாளைக்கு பேப்பர்ல வரும் சொல்லிக்கிட்டே கார் ஓட்டிட்டு போறேன். பாவம் எவ்ளோ ஜனங்க குய்யோ முய்யோன்னு அடிச்சிக்கிட்டு ஓடிவருதுங்க. ரொம்ப கொடுமையா இருந்துச்சு.

இதில் அவர் ஒவ்வொறு முறையும் ..ஜா, ...ஜா என்று சொல்லும்போதே அவர் கண்ணில் தெரிந்த பிரகாசம் இருக்கிறதே. அவரின் மனைவியின் நினைவுகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளும்போது ஒரு சின்னக் குழந்தையின் குதூகலம் அவரது குரலில். எங்கேயும் அந்தம்மாவின் நினைவு தொட்டு அவரின் குரல் உடையவில்லை.

எப்போதாவது சொல்வார், வாழைத்தண்டு ரைத்தா சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சு, ...ஜா இருக்கும் போது செஞ்சு தரும். நான் உக்கார்ந்து நறுக்கி தருவேன். இனிமே எப்போ வந்து எப்படி செஞ்சு,...... இப்படி எப்பவாவது பேச ஆரம்பித்தால் முடிக்கும் போது அந்த வாக்கியத்தை ம்ஹூம் என்ற பெரிய பெரூமுச்சுதான் முடித்து வைக்கும்.

மிகுந்த வலியுடனேயே அவர் சொல்வதை கேட்க நேரிடும். உடனிருப்பவர்கள் சாரோட நெலமை ரொம்ப பாவம் என்பார்கள். நல்லா இருக்கும்போதே நாம போயிடனும்னு வேற சொல்வார்கள்.

வயசுக்காலத்தில் ஈயம் பித்தளைன்னு ஆணியம் பெண்ணியம் பேசி, அன்பை குறைத்து அதிகம் ஆதிக்கமே செலுத்தியிருந்தாலும், அறுபதுக்கு அப்புறம் இவரைப் போன்றவர்களின் நிலைமை கொடிதுதான்.


தனித்திருக்கும் பெண்களுக்கு எப்படியாகிலும் பக்கத்து வீடு, அக்கத்து வீடுன்னு பேச்சுத்துணை ரெடியாகிவிடும். முடிஞ்ச மட்டிலும் தன் கையாலேயே சாப்பாடும். மகளோ, மருமகளோ எப்படியாகிலும் அனுசரித்து போய்விடவும் முடியும். ஆனால் வயோதிகத்தின் ஆணின் நிலைமை எவ்வளவு கவலைக்கிடம் அளிக்குமென்பது இவரைப் பார்த்தபின் கண்கூடாக தெரிகிறது. அதுவும் பணமே குறியென்று நிற்கும் பிள்ளைகளைப் பெற்றவர்களின் நிலைமை அதோகதிதான்.

கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை.

கொடிது கொடிது தனிமை கொடிது, அதனினும் கொடிது வயோதிகத்தில் தனித்திருக்கும் ஆணின் நிலைமை.

இவரைப்பற்றி எழுதி கொண்டிருக்கும்போதே, இயல்பாய் எழுகிறது, மனைவி மக்களை பொருள் வயிற் பிரிந்து தனித்திருக்கும் ஆண்களையும், பெண்களையும் சூழ்ந்திருக்கும் தனிமை என்னும் வெறுமை.
எதையிட்டும் நிரப்ப முடியாத இந்த வெற்றிடத்திற்கு என்ன பெயர் சொல்வது.
வெற்றிடத்தில் ஒலி எழுப்பினால் கூட சில வினோத சத்தங்கள் கிடைக்கப்பெறும். ஆனால் இவர்களூடான வெற்றிடம், அழுகையைக் கூட வெளிப்படுத்த முடியாமல் இருக்கப்பெறும் சூழ்நிலைக் கைதிகளாய்...

வாழ்தலின் பொருட்டு இதுவும் கடந்து போகும் என்று எடுத்துக்கொண்டாலும், கடந்து போனவைகளை நினைத்துப் பார்க்கும் போது, ஒரு ஏக்கப்பெருமூச்சுதான் வெளியிட வேண்டியிருக்கிறது.
அந்த ஏக்க பெருமூச்சுக்குள் எவ்வளவு வலி பொருந்தியிருக்கிறது என்பது அவரைவரைப் பொறுத்தது.

34 comments:

Vidhya Chandrasekaran said...

:(

"உழவன்" "Uzhavan" said...

Vanakkam!

thx for ur comment for my kavithai " Manaraga vaazhkai"

appaurama itha padichittu varen :-)

Bee'morgan said...

படித்து முடிக்கையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. ரொம்பவும் யோசிக்க வைச்சுட்டீங்க..

நட்புடன் ஜமால் said...

கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படு என்ற ஆட்டோ வாசகம் என்னை அதிகம் யோசிக்கவைக்கும். இதை முதுமையில் கஷ்டப்படாமல் இருக்க, இளமையில் கஷ்டப்படு என்றுதான் நான் எடுத்துக்கொண்டேன்.\\

நல்லாத்தான் இருக்கு.

நட்புடன் ஜமால் said...

இளமையில் வறுமை மிக(க்)கொடியதே


ரொம்பவும் சேர்த்து வைத்து


முதுமையில் வரும் செல்வம் அதனைவிடக்கொடியது

நட்புடன் ஜமால் said...

\\நமக்கு ஞாபகம் வரும் மிச்ச சொச்சமிருக்கும் நம் வாழ்க்கையை நாம் எப்படி வாழ்வதென.\\

வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்குன்னா!

நட்புடன் ஜமால் said...

\\கணவனும் மனைவியும் ஒருங்கே இருந்து, கொஞ்சம் வருவாயும் இருந்து விட்டால் வயோதிகம் கொஞ்சும் இனிமைதான். ஆனால் ஒருவரற்று ஒருவர் இருக்கும் நிலைமை இருக்கிறதே. அது ..... அனுபவித்தால் மட்டுமே புரியும். நான் அதை தினமும் புரிந்துகொள்கிறேன் என் உயரதிகாரியின் வாயிலாக.\\

இளமையிலேயே

இருந்தும்

இல்லாமல்

இருக்கும்

நிலையை

நாங்களே காசுக்காக வாங்கி வச்சிருக்கோம்

நட்புடன் ஜமால் said...

அவர் கோமா என்பதை விட

அவருக்கு உதவ மறுப்பவர்களை நினைத்துதான் அதிகம் வருத்தம் வரும்.

நட்புடன் ஜமால் said...

\\வயசுக்காலத்தில் ஈயம் பித்தளைன்னு ஆணியம் பெண்ணியம் பேசி, அன்பை குறைத்து அதிகம் ஆதிக்கமே செலுத்தியிருந்தாலும், அறுபதுக்கு அப்புறம் இவரைப் போன்றவர்களின் நிலைமை கொடிதுதான்.\\

சூப்பர்

கார்க்கிபவா said...

ம்ம்.. பயமா இருக்கு.. உங்க வயச எனக்கு மட்டும் மெயிலில் சொல்லுங்க. உங்க திங்கிங், எழுத்து எல்லாம் ரொம்ப மெச்சூர்டா இருக்கு. வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

\\அந்த ஏக்க பெருமூச்சுக்குள் எவ்வளவு வலி பொருந்தியிருக்கிறது என்பது அவரைவரைப் பொறுத்தது.\\

மிக(ச்)சரியே ...

அமுதா said...

கொடிது கொடிது வயோதிகத்தில் தனிமை :-((

அ.மு.செய்யது said...

//கணவன் இருந்து மனைவி போய்விட்டால், இருக்கும் கொடுமை ரொம்பவே.//

நிதர்சனமான கருத்துகள்.

எனக்கு தெரிந்து மனைவியை இழந்த வயோதிகர்கள் நிறைய பேர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகி விடுகின்றனர்.

எப்படி இப்படியெல்லாம் எழுதுறீங்க...ஆழ்ந்த கருத்துகள் அமித்து அம்மா.

புதியவன் said...

////கணவன் இருந்து மனைவி போய்விட்டால், இருக்கும் கொடுமை ரொம்பவே.///

ஆழமான உண்மை...எண்ணங்களிலும் எழுத்துக்களிலும் மிகுந்த பக்குவம் தெரிகிறது...

narsim said...

//வாழ்தலின் பொருட்டு இதுவும் கடந்து போகும் என்று எடுத்துக்கொண்டாலும், கடந்து போனவைகளை நினைத்துப் பார்க்கும் போது, ஒரு ஏக்கப்பெருமூச்சுதான் வெளியிட வேண்டியிருக்கிறது//

கலக்கல்!! வழக்கமான..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிஜம்மா வயசுக்காலம் கொடுமை தான்..நேரில் பல கதை பார்க்கிறோமே.. காசு இல்லாம துணைஇழந்த வயசான பெண் மட்டும் வாழ்வது ஒரு கொடுமை.காசு இருந்தும் வயசானக்காலத்தில் ஆண் தனித்து வாழ்வதும் கொடுமை..

Unknown said...

அமித்து அம்மா, என் அலுவலகத்திலும் ஒருவர் அப்படி இருக்கிறார். வேலை வேலை என்று தன்னை மாய்த்துக் கொள்ளும் மனிதர் அவர், மனைவி இறந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. அவ்ருக்கு 75 வயதிருக்கும், இந்த வயதிலும் அவரின் சுறுசுறுப்பு ஆச்சரியம் தரும். ஆனால் இவர் விதயத்தில் பிள்ளைகள் அவரை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள், நாங்களும் (எங்கள் ஆபிஸ் ஒரு குடும்பம் போலத்தான்) அவரை மரியாதையுடனும் பிரியத்துடனும் கவனித்துக் கொள்வோம். வயதானவர்களை உதாசீனப் படுத்துவோரை என்னால் மன்னிக்கவே முடியாது. நமக்கும் அந்த வயது வரும் என்று இவர்களுக்கு ஏன் புரியாமல் போகிறது, இவர்கள் என்ன மார்க்கண்டேயர்களா? வயசாளிகளை பொதுவாக எல்லோரும் தொணதொணப்பு தாங்கமுடியலை என்று குறை கூறுவார்கள், அதற்கு என்ன செய்வது, அவர்களுக்கு insecured feeling மற்றும் மரண பயம், நோய்மையின் படுத்தல்கள் என்று எவ்வளவோ பிரச்சனைகள். அன்பு, அக்கறை, அணுசரணை இவைதான் அவர்களுக்குத் தேவையான மருந்து. உங்கள் அன்பான உள்ளத்தைக் கண்டு நெகிழ்ந்து போனேன் அமித்து அம்மா. நல்ல பதிவு...எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.

சந்தனமுல்லை said...

நல்லா எழுதியிருக்கீங்க அமித்து அம்மா..கொஞ்சம் பயம் வருகிறது உண்மைதான்!

தமிழ் அமுதன் said...

உங்களின் சிறந்த பதிவுகளில் இந்த பதிவும் ஒன்று!

கஷ்டத்தை அனுபவிப்பவரை அருகிலிருந்து பார்த்து உணர்ந்து
எழுதி இருக்கீங்க!

இந்த விசயத்தில் எனக்கு ஒரு கருத்து உண்டு!

தள்ளாத வயது! ஒரு பொறுப்புள்ள கணவனாக (கிழவனாக)
யோசித்து பார்க்கிறேன்! என் மரணத்திற்கு பின்னர் என் மனைவி எப்படி
கஷ்ட பட போகிறாளோ என பத பதைத்து நிம்மதியில்லாமல் மரணமடைவதை
விட மனைவியை முன்னே அனுப்பி விட்டு பின்னே சென்று சேர்வதே மேல் என தோன்றுகிறது! சில விசயங்களில் ஆண்களால்வயோதிகத்தில் தனிமையை சமாளிக்க முடியும்
ஆனால் பெண்களால் (வயோதிகத்தில்) சில விசயங்களை சமாளிக்க முடியாமல் போகலாம்!

Poornima Saravana kumar said...

//ஒருவரற்று ஒருவர் இருக்கும் நிலைமை இருக்கிறதே. அது ..... அனுபவித்தால் மட்டுமே புரியும்.//

ரொம்ப கொடுமையான வாழ்க்கைங்க அது!

தமிழ் அமுதன் said...

யூத் விகடனில் இந்த பதிவு

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!!

Thamira said...

தேர்ந்த நடையில் ஒரு நல்ல பதிவு.

Poornima Saravana kumar said...

விகடன் குட் பிளாக்கில் உங்கள் பதிவு!! வாழ்துக்கள்:))

இராகவன் நைஜிரியா said...

வயோதிகான காலத்தில் தனிமை என்பது மிக கொடுமையானது.

வயதான காலத்தில் மனைவியை இழந்தவர்கள், மனைவி இறந்த சில மாதங்களிலேயே இறந்து விடுகின்றனர்.

என்னதான் பிள்ளைகள் பாசம் செலுத்தினாலும், அவர்களால் மனைவியின் இழப்பை தாங்க இயலுவதில்லை.

இராகவன் நைஜிரியா said...

// இயல்பாய் எழுகிறது, மனைவி மக்களை பொருள் வயிற் பிரிந்து தனித்திருக்கும் ஆண்களையும், பெண்களையும் சூழ்ந்திருக்கும் தனிமை என்னும் வெறுமை. //

நேற்றுதான் மனைவியுடன் இதைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தேன். 2 வயதில் என் மனைவி, மகனைப் பிரிந்து வெளிநாட்டிற்கு வேலைக்குப் போய்விட்டு, அவருக்கு 7 வயது ஆகும் போதுதான் இந்தியாவில் மறுபடியும் வந்து செட்டில் ஆனேன். பணத்திற்காக, அந்த வயதில் குழந்தையின் சேட்டைகளை எவ்வளவு இழந்துவிட்டேன் என்று.
இப்போது நினைத்து பார்த்து பெருமூச்சுதான் விட முடிந்தது.

goma said...

நம்முடைய சந்தோஷத்துக்கு நாம் அடுத்தவரை[நாம் பெற்ற குழந்தைகளையும் சேர்த்துதான் சொல்கிறேன்]
சார்ந்திருக்கும் நிலையே அனைத்து கவலைகளுக்கும் ஒரு காரணம்.

தனித்திரு விழித்திரு

இதன் அர்த்தம் என்னவென்று ஆராய்ந்து பார்ப்போம்

வேத்தியன் said...

யூத்ஃபுல் விகடன் குட்ப்ளாக்கில் வந்தது அறிந்தேன்...
வாழ்த்துகள்...

"உழவன்" "Uzhavan" said...

கண் முன்னால் நடக்கும் இது போன்ற நிகழ்வுகளை, மனதால் பார்த்திருக்கிறீர்கள். படிக்கும்போதே மனம் வலிக்கும் ஒரு உணர்வு. அருமை!

சுனாமி பற்றி வரும்போது, எனக்கும் சுனாமி அன்று நடந்த நினைவுகள். சுனாமி என்று தெரியாமலேயே, என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்காக மகாபலிபுரம் வரை நண்பர்களோடு பைக்கில் சென்று வந்த ஞாபகம் வந்தது. :-)

சுனாமி அன்று எழுதிய கவிதையின் சில வரிகள்..

தாளிக்கும் நேரத்தில்
எங்கள்
தாலி அறுந்து போச்சு !
கூலிகளாய் வேலைசெய்து
குருவிபோல் சேர்த்த பணம்
கூரையோடு சேர்ந்து போச்சு !

சுனாமி நினைவுதினம் பற்றிய இன்னொரு கவிதை இது http://tamiluzhavan.blogspot.com/2008/12/blog-post_28.html


முடிந்தால் விகடன்ல வந்த என் இந்த கவிதையை படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க :-)

http://youthful.vikatan.com/youth/uzhavanpoem030309.asp


அன்புடன்,
உழவன்

ராமலக்ஷ்மி said...

முத்துலெட்சுமி சொல்லியிருப்பதை வழி மொழிகிறேன். தள்ளாடும் வயதில் தனித்திருத்தல் மிகவும் கஷ்டமே. என்னதான் பிறருக்குக் தொந்திரவாய் இருக்கக் கூடாதென அறிவு சொன்னால் தளர்ந்த உடலால் மனமும் தளர்ந்திடுவது தவிர்க்கவே முடியாததாய் இருக்கிறது.

நல்ல பதிவு அமித்து அம்மா.

விகடன் குட் ப்ளாக்ஸில்.

வாழ்த்துக்கள்.

குடந்தை அன்புமணி said...

உங்களின் இந்த பதிவை இப்போதுதான் படித்தேன். பதிவை படித்ததும், வருங்காலத்தை நினைத்துப்பார்க வைத்துவிட்டீர்கள். விகடனில் தங்கள் பதிவு வந்திருப்தற்கு எனது மனமுவந்த வாழ்த்துகள்! தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம்!

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துக்கள் அமித்து அம்மா விகடன் குட்பிளாகில் வந்ததற்க்கு:)

narsim said...

வித்யா said...
வாழ்த்துக்கள் அமித்து அம்மா விகடன் குட்பிளாகில் வந்ததற்க்கு:)
//

வாழ்த்துக்கள்!! இன்னும் நிறைய எழுதுங்கள்!!

அமுதா said...

வாழ்த்துக்கள் குட்பிளாக்கர்...

ஜீவா said...

வாழ்த்துக்கள் அமித்து அம்மா விகடன் குட்பிளாகில் வந்ததற்க்கு மற்றும உங்களின் பதிவுக்கும்


தோழமையுடன்
ஜீவா