30 April 2009

அன்பின் கார்த்தி

அம்மா, அப்பாவுடன் அங்கே மகிழ்ச்சியாய் இருக்கிறாயா..? நாளைக்கு உனக்கு பிறந்தநாள், மே 1. மூன்று வருடங்களுக்கு முன்னர் மே 1 என்றால் உழைப்பாளர் தினம், விடுமுறை நாள் என்று மட்டுமே அறியப்பெற்றோம். நீ பிறந்ததால் அந்த நாள் எங்களுக்கு ஒரு விசேஷ தினமாகியது.
ஆனால் நீ பிறந்த அன்று அது விசேஷ தினமாக இல்லை, மாறாக வீபரீதமாகத்தான் போனது. சுஜாதா கதைகளில் வருவது போல, வரப்போகும் விபரீதம் அறியாமலேயே அவர்கள் மருத்துவமனைக்கு சென்றார்கள். அப்படித்தான் உன் அம்மாவுக்கு ப்ரசவ வலி எடுக்க, நாங்கள் அவளை காலை 6 மணிக்கு அந்த அரசு சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம், காலை 11.20 நீ பிறந்தாய், ஆண் குழந்தை என்று சொல்லி, ரோஜாப்பூவை போன்று உன்னைப் பார்த்தபின் அக மகிழ்ந்தோம். எங்களின் மகிழ்ச்சி 5 நிமிடம்தான், அதற்கப்புறம் உனக்கு விக்கல் எடுக்க, உன் சிவந்த மேனி இன்னும் சிவக்க, பயந்து போன நான் டாக்டரை கூப்பிட அவர்களோ நீ உன் அம்மாவின் வயிற்றுக்குள்ளேயே மலம் முழுங்கிவிட்டதாகவும், உடனே ஒரு ட்யூப் போட்டு எடுக்கவேண்டும் என்றார்கள். உடனே ஒடி அவர்கள் சொன்ன அதனை நான் வாங்கித்தந்தேன். மின்னல் ஓட்டம் என்பார்களே, வயிறு வாய்க்கு வரும் என்பார்களே அந்த ஓட்டத்தை அன்றுதான் நான் அறிந்தேன். அதனை பயன்படுத்திய பின்னர், கொஞ்ச நேரம் விக்கல் நின்றது. கொஞ்ச நேரம்தான் உடனே ஆரம்பித்தது, உடனே டாக்டர்................
வந்தார்கள். உன்னை மட்டும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துப்போக சொன்னார்கள். நான், உன் பாட்டி, தாத்தா மூவரும் சென்றோம், உடனடியாக உன்னை பரிசோதித்து ப்ரச்சினை சரி செய்யப்பட்டது. ஏதோ ஒரு மகராசியின் புண்ணியம் - அரை பாலாடை தாய்ப்பால் கொடுக்கப்பட்டது உனக்கு. அதுதான் நீ சுவைத்த தாய்ப்பால். அதுவும் உன் தாயிடம் இருந்தில்லை. பின்பு உன்னை உன் தாயோடு சேர்க்க வந்தோம். வந்த சில மணித்துளிகளிலே உன் அம்மா மயக்கமடைய, இன்னொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள், நேரம் மதியம் 3.30 மணி, ஈ.எஸ். ஐ. கல்யாணி ஹாஸ்பிட்டல். நீ ஒரு தனியறையில். உன் தாய் ஐ.சி.யு.வில். நேரம் 5 மணி.. அவளைப் பரீட்சித்த டாக்டர்கள் சொன்னது, மஞ்சள் காமலை கண்டிருப்பதாகவும், ரத்தப்போக்கு மிக அதிகமாக இருப்பதாலும் உன் தாயை காப்பாற்ற முடியாது என்றார்கள். அதனைக் கூட அந்த டாக்டர்கள் தனக்குள்ளேயே பேசிக்கொள்ள உள்ளே போன ஒரு பெருக்கித்துடைக்கும் பெண்மணி, வெளியே வந்து, ஏம்மா, அந்தப் பொண்ண சுத்தி, டாக்டர்ங்கோ காப்பாத்த முடியாதுன்னு பேசிக்கறாங்க, நீஙக் இன்னா இங்க ஒக்காந்துன்னுகிறீங்கோ, நான் சொன்னது தெரியாம உள்ளப்போங்கோ என்று அபாய மணி அடிக்க, அடித்துப் பிடித்துக்கொண்டு ஐ.சி.யுக்கு ஓட, அங்கே உன் அம்மாவைச் சுற்றி 3 டாக்டர்கள். மனிதாபிமானம் என்பது சற்றுமில்லாமல், ரொம்ப லேட்டா கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கீங்க, ஒன்னுமே செய்ய முடியாது, பேசாம வீட்டுக்கு கொண்டு போயிடுங்க என்றார்கள். உன் அம்மாவுக்கு இன்னும் சுய நினைவு இருக்கிறது. அவளது கண்ணை நான் கவனிக்கிறேன். உடனடியாக அந்த டாக்டர்களில் காலைப் பற்றினேன், ஏதாவது செய்யுங்க ஏதாவது செய்யுங்க, என் குழந்தைய காப்பாத்துங்க... எங்கள் மூவரின் அலறல் ஆஸ்பத்திரியையே அலறடிக்கிறது. எங்களால ஒன்னும் செய்யமுடியாது, வேணும்னா அப்பல்லோ ஆஸ்பிட்டலுக்கு கூப்பிட்டுப்போங்க என்கிறார்கள் டாக்டர்கள். அப்பல்லோ ஹாஸ்பிட்டல் - சாதாரணர்களுக்கு ஒத்த ஹாஸ்பிட்டலா அது. ஆனாலும் உன் அம்மாவின் உயிரைக் காப்பாற்ற எங்களுக்கு வேறொன்றும் தோன்றவில்லை. பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஓடினோம். அப்பல்லோவிற்கு. இரவு 8 மணி, எல்லா செக்கப்பும் செய்த டாக்டர்கள் சொல்கிறார்கள், சரி செய்துவிடலாம்மா, ஆனா அதற்கு உங்களுக்கு ரொம்ப நம்பிக்கையும், பணமும் தேவை. இதற்கு நடுவில் உனக்கு இதயத்துடிப்பு சீராக இல்லையென்று ஈ.எஸ். ஐ. கல்யாணி ஹாஸ்பிட்டலின் குழந்தைகள் செக்‌ஷனிலேயெ அட்மித் செய்தோம். உன்னைப் பார்த்த அந்தக் கணம், என் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. அப்போதே உனக்கு ஆக்ஸிஜன் கொடுத்திருந்தார்கள். பச்சிளங்க்குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும் இடமாதலால் மூச்சைக் கூட சற்று அடக்கியே விடுஙகள் என்று சொன்ன செவிலியர்கள் மத்தியில் அழுகையை வெளிப்படுத்தாதது என் தவறில்லை. ஆனால் அந்த அழுகையை என்னால் வெளியே இருப்பவர்களிடமும் வெளிக்காட்ட முடியாது, செய்தால் உன் பாட்டி, உன் அம்மாவுக்கு அழுவாளா, உனக்காக அழுவாளா... இறைவா.... நேரம் இரவு 12 மணி தொடுகையில், ஒரு இள்ம் வயது டாக்டர் அழைக்கிறார் என்னையும், உன் பாட்டியையும். ம்மா, ரத்தப் போக்கும் மிக அதிகமாக உள்ளது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு 30 சதவீத வாய்ப்பே உள்ளது, அதற்கும் ஒரு ஊசி போடவேண்டும் (RH factor injection) ஒரு ஊசியின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய், மூன்று ஊசிகள். 1 1/2 லட்சம் ரூபாய், நாளை காலை நீங்கள் கட்டவேண்டும், அதற்கு இப்போது செக்யூரிட்டி லெட்டர் கொடுக்கவேண்டும் என்றார். கையைப் பிசைந்து கொண்டிருக்கும் நேரமா இது. விழு காலில். நாங்கள் எத்தனை பேர் காலில் விழுந்திருப்போம் என்று எண்ண எங்களுக்கு அப்போது நேரமில்லை.... இடையில் ரத்தப்போக்கை நிறுத்த உன் அம்மாவிற்கு மற்றுமோர் ஆப்பரேஷன் வேறு ஆகியது. எண்ணி 14 நாள் கழித்து உன் அம்மா தன் நிலை வந்தாள். இடையில் பணத்துக்காகவும், உனக்கு பாலூட்டுவதற்காகவும், உன் தாயின் நிலைக்காகவும் ப்ப்ப்ப்ப்பா................................. வார்த்தைகளால் வடிக்க முடியாத நாட்கள் அவை. கூட்டுப்ப்ரார்த்தனை என்பார்களே, அதன் மகத்துவம் புரிந்த நாட்கள் அவை, 6 தெருவே உன் அம்மாவிற்காக ப்ரார்த்தனை செய்தது, இனம் பாராமல், மதம் பாராமல் பண உதவியும், ப்ரார்த்தனைகளும் நடந்தவண்ணம் இருந்தன. குறைந்த பட்சம் 100 பேராவது உன் தாய்க்கு ரத்தம் கொடுத்திருப்பார்கள். எல்லாம் சரியாகி வீட்டுக்கு வரலாம் என்று எண்ணியிருந்தபோது, உன் அம்மாவிற்கு வலது காலில் எழுந்த கொப்புளத்தால் காலே வீங்கி, நீல நிறம் காண ஆரம்பித்தது. காலை 7 மணிக்கு அதைக் கண்ட செவிலியர் ஒருவர், வாஸ்குலர் சர்ஜனிடம் சொல்லியிருக்கிறோம், மதியம் 2 1/2 மணிக்கு அவர் வருவார் என்றார். காலை 10.10 மணி. குறிப்பிட்ட டாக்டர் வந்திருந்தார். அவர் சொன்ன வார்த்தைகள் இதான்... நான் ஒரு வேளை 2 மணிக்கு வந்திருந்தா இந்தப் பொண்ணோடா வலது காலை வெட்டியெடுத்திருக்கவேண்டும். வழக்கமாக செல்லும் ஹாஸ்பிட்டலுக்கு வண்டியை செலுத்திக்கொண்டிருந்த நான், ஏதோ ஒரு யோசனையில் அப்பல்லோவிற்கு என் காரைத் திருப்பினேன். இதுதான் சரியான நேரம், காலுக்கான ட்ரீட்மெண்ட் செய்ய, இன்னும் சிறிது தாமதிருந்தாலும், உங்கள் மகள் காலை இழந்திருக்ககூடும் என்றார். அந்த டாக்டரை அங்கே குறித்த நேரத்துக்கு வரவைத்தது எது. மீண்டும் ட்ரீட்மெண்ட், சரியானது எல்லாம். உன் அம்மாவின் உடல் முற்றிலும் குணமாக 6 மாதங்கள் ஆனது. மொத்தமாய் ஆன ஹாஸ்பிட்டல் பில் 6 1/2 லட்சம் ரூபாய். நகைகள், ஒரு ஆட்டோ, வீட்டின் டாக்குமெண்ட் அடகு என எல்லாவற்றையும் முழுங்கியிருநதது அந்த 6 1/2 லட்சம். குழந்தை என்று நான் உன்னை என் அருகாமையில் வைத்து கொஞ்சியது முதன்முதலில் உன்னைத்தான், லேக்டோஜென் கலக்க கற்றுக்கொண்டதும் அப்போதுதான். கார்த்தி, உன் பிறந்த முதல் கட்ட நாட்கள் இப்படி கழிந்தது, முதல் பிறந்தநாள் எங்களோடு போனது, இரண்டாவது பிறந்தநாள் உங்கள் ஊரில் (ஹூப்ளி) உன் தாத்தாவோடு கழிந்தது. இப்போது உன் தாத்தா இல்லை.
இதோ நாளை உன் மூன்றாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி. வாழ்த்துக்களோடு இதோ பின்வருபவர்களுக்கெல்லாம் எங்களது நன்றிகளும்.
(கார்த்தி, நீ வளர்ந்த பின்னர், இதைப்படிக்கக்கூடும், அப்போது இவர்களுக்கெல்லாம் நன்றிகளை சொல்லிவிடு)

1. முதன் முதலில் உன் தாயின் நிலையை பார்த்து விட்டு, வெளியில் கடவுளை நம்பிக்கொண்டிருந்த எங்களிடம் சொன்னார்களே அந்தப் பெயர் தெரியா பெண்மணி (ஹாஸ்பிட்டல் ஸ்வீப்பர்)
2. ரங்கா அண்ணா (உங்களை முதன் முதல் பார்த்ததே அந்த இக்கட்டில்தான்)
3. நண்பன் சங்கர்
4. மறைந்த ராஜபுஷ்பம் பெரியம்மா
5. ஜெயந்தி ஆண்ட்டி (ஹாஸ்பிட்டல் பீஸ் கட்ட, வெள்ளிக்கிழமை என்றும் பாராமல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல் பாத்ரூமில் தன் தாலியைக் கழற்றிக் கொடுத்தார்கள், மாற்றுக்கு மஞ்சள் கயிறைக்கூட போடாமல்,)
6. மே 1, 2 இரவெல்லாம் கண்விழித்து எல்லா உதவிகளுக்கும் எங்களோடு இருந்த உன் சதீஷ் மாமா(அப்போதுதான் எங்களுக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது), அவரின் நண்பர் அருண்
7. இன்னும் உன் அம்மாவிற்காக ரத்தம் கொடுத்தவர்கள்
8. கூட்டுப்ப்ரார்த்தனையை செய்தவர்கள்.
9. டாக்டர் சுமனா மனோகர் (இன்றும் உன் அம்மாவை பார்க்கும்போதெல்லாம், கடவுளை மறுபடி பார்க்கிறார் போல இருக்கிறது என்று சொல்பவர்கள்)
10. என் பாஸ் பாலன் சார்.
இன்னும் ஆறுதல்களைச் சொல்லி ஆற்றிய அனைத்து அன்பு உள்ளங்களும்


மே 1 : பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி, மறு பிறப்பெடுத்த உன் அம்மாவிற்கும் சேர்த்துதான்.

டிஸ்கி:: ஒரு தலைப்பிரசவம் - இப்படி ஆகும் என்பதை கனவில் கூட நினைத்துப்பார்க்காமல், ஒரு அரசு சுகாதார மையத்தில் வைத்தே குழந்தையப் பெற்றெடுத்து வந்துவிடுவாள் என்று நம்பியிருந்த எங்களுக்கு மூன்று வருடஙகளுக்கு முன்னர் நடந்ததுதான் இது. கார்த்தி என் அக்காவின் பேரன்.
எங்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட சம்பவமிது.

28 April 2009

வாழ்த்தலாம் வாங்க

சில பேரை பார்த்தவுடன் இன்னதுதான் காரணம் என்றே தெரியாமல் பிடித்துப் போய்விடும். அதுபோலவே சிலரின் எழுத்துக்களும். அவர் தம் எழுத்துக்களை வைத்து அவரைப் பற்றிய கற்பனையெல்லாம் வளர்ந்து கொண்டிருக்கும். பாலினம் தாண்டி எழுத்துக்களின் மேல் ஒரு இனம் புரியா சினேகம் ஏற்பட்டிருக்கும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், ஆமா இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்றீங்க என்று கேட்பவர்களுக்கு, இப்படித்தான் எழுத்தின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பால் மிகவும் பிடித்துப்போய், பின்னர் பின்னூட்டங்களால் ஒரு சினேகம் வளர்ந்தது. நாங்கள் அதிகம் பேசியதில்லை. பதிலாக அவர் தம் பதிவுகளையே முடிந்தவரை முதலாய் படித்து வைத்து, நேரில் பேசிய ஈர்ப்பினை உண்டு செய்துகொள்வேன். முதன் முதலாய் அவர்களைப் பார்த்தது கலைஞர் டி.வி.யில் காதலர் தினம் கவிதை வாசிப்பின் போதுதான். பச்சை புடவையில் வந்து, ஐந்தே நிமிடம்தான், அவசரமாய் ஒரு கவிதை படித்துவிட்டு போனார்கள். நிழல் பிம்பத்தின் மேல் ஒரு நிஜ பிம்பம் விழுந்தது. அந்த நிஜ பிம்பம் வேறு யாருமல்ல....
எழுத்தாளர், கவிஞர் பதிவர் உமாஷக்தி....




சரி அதுக்கென்ன இப்ப என்று கேட்பவர்களுக்கு, இப்ப எதுவும் இல்ல, நாளைக்குத்தான்.

நாளைக்குத்தான் (29.04.2009) அவங்களோட பிறந்தநாள்.

வாழ்த்துக்கள் தோழி

ஈரமும், மென்மையுமான உங்களின் எழுத்துக்களைப் போல, தித்திக்கும் தமிழ் போல, எத்திக்கும் புகழ் மணக்க, நீடுழி வாழ எனது வாழ்த்துக்கள் மற்றும் ப்ரார்த்தனைகள்

அப்படியே இன்னொரு பதிவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க.

என் பள்ளித் தோழியும், பதிவருமான மோனி புவன் அம்மா, அவங்களுக்கு (30.04.2009) அன்று பிறந்தநாள்.

வாழ்த்துக்கள் க்ருஷ்ணா....
பல வருடங்களுக்குப் பிறகு, நான் உனது பிறந்த நாளை ஞாபகம் வைத்திருந்து வாழ்த்துகிறேன், வாழ்த்தப் போகிறேன்.

13 April 2009

உயிர்த்தண்ணீர்

உயிர்த்தண்ணீர், ஆதண்டார் கோயில் குதிரை, வெள்ளெருக்கு - இவை மூன்றும் கண்மணி குணசேகரனின் சிறுகதைத் தொகுப்புகள். கண்மணி குணசேகரனின் “அஞ்சலை” நாவலை படிக்கவேண்டும், அப்போது தமிழினி பதிப்பகத்தில் கிடைக்கவில்லை. இப்போது கிடைக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

சில வலைப்பூக்களின் / வலைப்பூவினரின் அறிமுகத்தால் தான் இவரைப் பற்றி தெரியவந்தது, இல்லையெனில் வழக்கம் போல ஏதாவது காமா, சோமா என்று வாங்கி வைத்திருப்பேன். நோட் பண்ணுங்க வாங்கி வைத்திருப்பேன், அவ்ளோதான்.

முன்னும், பின்னும் எந்தவொரு நவீனத்துவமும் இல்லாமல், யதார்த்தமாய் நெஞ்சை அள்ளி செல்கிறது இவரின் எழுத்துக்கள். இவரின் கதை மாந்தர்கள் அனைவரும் கிராமத்தின் கடைகோடி மாந்தர்களே.
விருத்தாசலமும், அதையொட்டிய கிராமங்களும், முந்திரிக்காடுகளும் இவையே கதைக்களங்கள். படிப்பவருக்கு புரிந்து கொள்ளுதலில் எந்தவொரு சிரமமும் கொடுக்காத எழுத்து நடை. பேச்சு நடையிலேயே இவரின் எழுத்து நடை இருப்பதுதான் சிறப்பு.

இவரின் கதைகளின் வட்டார எழுத்து நடையை படிக்கும் போது, பல சமயங்களில் எங்கம்மா பயன்படுத்தும் சில, பல வார்த்தை வழக்குகள் ஞாபகம் வந்து போனது.

இவரின் கதைகளை படிக்கும் போது, அப்படியே கிராமத்து போய் வந்த அல்லது போகத்தூண்டும் உணர்வு எழாமல் இருக்காது. இது என் அனுபவம், அவரைப் படித்தவர்கள் சொல்லலாம்.

இவரின் சிறுகதையில் எனக்கு நிறைய கதைகள் பிடித்திருந்த போதும், சருவு என்ற கதைதான் அடிக்கடி நினைவுக்கு வரும். கலியன் என்றொரு தாத்தா, வெற்றிலை போட்டே பழக்கப்பட்டவர். ஒரு நாள், ஒரு வாய் வெற்றிலைக்கு அவர் படும் பாடே, அந்தச் சிறுகதை, படித்து முடித்த போது, எனக்கு கலியன் தாத்தாவுக்கு உடனே வெற்றிலை வாங்கி தரனும் என்று தோன்றியது நிஜம்.
என் அம்மா, வெற்றிலை போடுவதை அடிக்கடி சொல்லி திட்டுவேன். அதுவும் கூடவே ஞாபகத்துக்கு வந்தது.

அதே போல், வனாந்திரம் என்னும் மற்றொரு சிறுகதை, படித்தவுடன் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. அன்பு கணவனை இழந்த மனைவி, மகன். முந்திரிக்கொட்டைகளை பொறுக்கி அதை விற்று வரும் ஜீவனம். மகன் என்ற கதாபாத்திரத்தின் பெயர் ராசீவ் காந்தி. எங்க ராசீவ் காந்தி வரலியாடா பள்ளிக்கோடத்துல இருந்து, என்று சக பள்ளிப்பிள்ளைகளை கேட்கும் போது, சிரிப்பு வருகிறது. ஆனால் முடிவு அதை மறக்கச் செய்து விடுகிறது. தாயும், பள்ளி விட்டு வந்த மகனும் முந்திரிக்கொட்டை சேகரிக்க செல்கிறார்கள். ஆனால் அன்று மகன் சொல்கிறான். இன்று சேகரிக்கும் முந்திரிகளை நீ விற்கக் கூடாது, எனக்கு உப்பு, மிளகாய்த்தூள் போட்டு பொரியல் செய்து தரவேண்டுமென்கிறான். சரி என்ற ஒப்புதலோடு சென்று, நிறைய சேகரித்து வருகிறார்கள். தாய்க்கோ மனது அடித்து கொள்கிறது, இதை விற்றால் இவ்வளவு காசு கிடைக்குமே என்று, மெதுவாய் மகனிடம் சொல்கிறாள், அவன் எரிச்சலோடு முகம் காட்டுகிறான், இதற்குத்தான் நான் வரமாட்டேன் என்றேன் என்று. சரி என்று மகன் விருப்பத்திற்கிணங்க அன்று கிடைத்த அத்தனை முந்திரிகளையும் பொரியல் செய்து, ரசம் வைத்து அவனை சாப்பிட கூப்பிடுகிறாள். அவனும் சாப்பிட்டு விட்டு, போதுமென சொல்லி பாதி முந்திரிப்பருப்பை அப்படியே வைத்துவிடுகிறான். பிறகு தாயை சாப்பிட சொல்கிறான். தாயோ ரசமும், ரசத்திலிருக்கும் மிளகாயை கடித்துக்கொண்டு சாப்பிடுகிறாள். இதைக்கண்ட மகன், ஏம்மா, அவ்ளோ இருக்கே, ரசத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடேன் என்கிறான். அவள் வேகமாக மறுக்கிறாள். மகனோ அழும் குரலில், உனக்காகத்தாம்மா இவ்ளோ கொட்டையும் விக்க சொல்லாம, வறுக்க சொன்னேன், இத்தனை நாள் எடுத்த கொட்டையெல்லாம் எனக்கு வெறுமே சாப்பிட கொடுப்ப, மீதிய வித்துடுவ. ஒரு நா கூட நீ ஒரு முந்திரிக்கொட்டய எடுத்து வாயில போட்டதில்ல, அதுக்குத்தாம்மா செய்ய சொன்னேன், சாப்பிடும்மா என்கிறான். அதற்கு அவளோ, இல்லப்பா, நானெல்லாம் அதுக்கு ஆசைப்படக்கூடாது, அப்பா போனவுடனயே அதயெல்லாம் விட்டுட்டேன், அப்படி அந்த சுவைக்கு ஆசைப்பட்டு ஒன்ன எடுத்து வாயில போடுவேன், அப்புறம் நாளைக்கும் அதயே வாய் கேட்கும். அப்படியே பழகும். நாம்ப இருக்குற நெலமையில நாக்கு ருசிக்கு ஆசைப்பட்டா ஒத்துவராதுப்பா, பச்சத்தண்ணிய குடிச்சா கூட, வவுறு ரொம்புதான்னு பாத்துக்கனும்பா என்கிறாள்.

இந்தக் கதையை படித்து முடித்தவுடன் ரொம்ப நேரம் எதுவுமே தோன்றாமல் அப்படியே வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்தக் கதையின் தாக்கமே இந்தப் பதிவெழுதவும் தூண்டியது.

மேற்சொன்னது ஒரு பானை சோற்றின் பதமே. கண்மணி குணசேகரனின் எழுத்துக்கள் மேலும் பரிணமிக்கட்டும். மேலும் அவரின் புது நாவல்கள் / சிறுகதைத் தொகுப்புகள் இருந்தால் பின்னூட்டத்தில் பகிரவும்.

10 April 2009

தலைப்பு ?

யாரும் நுழையாத
ஓர் உலகத்துக்குள்
அழைத்து சென்றது
ஆக்ரமித்தது
எனக்கான நிமிடங்களை
அம்மா
”ஆய்”
சட்டென
பொருத்திக்கொண்டேன்
என்னை
எனக்கான இடத்தில்.


.......................................


சிறுகுறிப்பு வரைக
20 வரிகளுக்கு மிகாமல்
2 பக்கங்களுக்கு குறையாமல்
இவை எல்லாவற்றிலும்
எழுதிவிட முடிகிறது
வாழ்க்கையை
எழுதத்தெரியாதவனுக்கு
இன்னும் சுலபம்
ஒரு பெருமூச்செறிதல்
இயம்பிவிடும்


.............................................

தூணிலும் இருக்கிறான்
துரும்பிலும் இருக்கிறான்
குண்டுகளிலுமா????


............................................

(தோழர் ஆதிமூலகிருஷ்ணன், கவிதைக்கு பக்கத்துலயாவது வந்திருக்கேனா ???)

08 April 2009

எங்கம்மா போற................

இந்த 10 வயதுக்குள், நம்ம கண்ணுல மண்ண தூவிட்டு இந்த அம்மாக்கள் எல்லாம் வெளியில போறது, அதான் சினிமாவோ, இல்ல வேற எங்கயாச்சோ, குறைந்த பட்சம் ஏதாவது அக்கம் பக்கத்துல நடக்கும் சின்ன விழாக்களுக்கு போனா கூட நமக்கு தெரிய வந்திடுச்சின்னு வெச்சிக்கோங்க.கதை கந்தலோ கந்தல்.

அம்மா வெளிய கிளம்பும் ஆயத்தம் அவரின் செயலிலும்,பேச்சிலுமே தெரிந்துவிடும். மக்கு அம்மா.......... சமையல் சீக்கிரமா முடிப்பது, அடிக்கடி எதிர்த்த வீட்டிலோ, பக்கத்து வீட்டுக்காரவுங்க வீட்டுக்குப் போய்
இல்ல அவங்க நம்ம வீட்டுக்கு வந்து ஏதாச்சும் குசுகுசுன்னு பேசுவது. நம்மள படி, படி ந்னு நச்சரிப்பது, இல்லனா அன்னைக்குன்னு பார்த்து ஒரு நாலணா, எட்டணா கொடுத்து நாம கேட்காததெல்லாம்
வாங்கிக்கோ, வாங்கிக்கோ என்று அதிக பிரியத்தை வெளிப்படுத்துவது இப்படியென.

நமக்கா, நல்லா புரிஞ்சிடும், ஆஹா, அம்மா எங்கயோ போறாங்க, அம்மா, எங்கம்மா, வெளிய போறியா, அவுங்க வந்திருந்தாங்களே அவுங்க வீட்டுக்கா, இல்ல இவுங்க வந்திருந்தாங்களே இவுங்க கூடவா போற. ஒரு முக மாற்றத்தோடு, இல்லை பல்லை கடித்துக்கொண்டோ, ம், டாக்டர் வீட்டுக்கு போறோம், அந்தக்கா வந்தாங்க இல்ல, அவங்களுக்கு உடம்பு சரியில்லையாம், அவுங்கள கூட்டிக்கிட்டு போகனும், பாரு அவுங்க கூட அவுங்க பொண்ண வீட்டுல விட்டுட்டுதான் போறாங்களாம். நீயும், அந்தப் பொண்ணோட வெளையாடிக்கிட்டு இரு. நாமோ நேரங்காலம் தெரியாமல், நீதான் சொல்லுவியே அடிக்கடி, அந்தப் பொண்ணு கூட சேரக்கூடாது, இப்ப மட்டும், அந்தப் பொண்ணோட இரு அப்டின்னு. இதுவரைக்கு இருந்த சாதாப் பார்வை அப்படியே அக்னிப் பார்வையா மாறும். இந்த நொட்டை கேள்வியெல்லாம் கேளு, படிக்காத, மாசமானா வாங்கிட்டு வா, 20, 30 ந்னு (மார்க்).. நம்மளை ஆஃப் பண்ண பயன்படுத்தும் ஆயுதம். அப்படியே அடக்கி வாசிப்போம், ஆனால் அவர்களைச் சுற்றி சுற்றியே பார்வை போகும்.

அப்புறம் அந்தக்கா வரும், முகமெல்லாம் பவுடர் அப்பிக்கொண்டும், புதுசா புடவை உடுத்திக்கொண்டு, உள்ளே குரல் கொடுக்கும், க்கா, நான் போய்கிட்டே இருக்கேன், வந்துடறியா, உள்ளருந்து ஏதாவது சைகை வந்திருக்க வேண்டும். வெளியிலிருக்கும் நமக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே டாக்டர் வீட்டுக்குத்தான......................,, தோ, நானும் புடவை மாத்திக்கிட்டு வர்ரேன், நீ உன் பொண்ண வீட்டுல தான விட்டுட்டு வர, நானும் இவள விட்டுட்டு தான் வரன். நீ முன்னாடி போய்கிட்டு இரு. குரல் அழுத்தமாய் கேட்கும். இங்கே நமக்கோ இது எல்லாமோ வெட்ட வெளிச்சமாய் புரிபடும், போவது டாக்டர் வீட்டுக்கில்லை, வேறெங்கோ என்று. குரலை உயர்த்தி உயர்த்தி பேசிய இருவரும், சில சமயம் கிசுகிசுப்பார்கள். இன்னார் முன்னாடியே போயாச்சு என்று. சரி நீ போ, நான் வரேன். அம்மா புடவை கட்டி, வெளிய வந்து, நம்மகிட்ட, படிச்சிகிட்டிரு, அம்மா வந்துடறேன். ம்ஹூம், கண்ணில் நீர் முட்டிக்கொண்டு ம்மா, எங்கம்மா போற.

கோபத்தில், இதெல்லாம் நல்லாத் தெரியும், போகும்போது அழுதுகிட்டு, எங்கம்மா போறியாம், எங்கம்மா போற.. போறேன் சீமைக்கு என்று தொடர்ச்சியாக வசவுகள் என்று காலை செருப்பில் மாட்டும்போது,
ஓங்காரமாய் அழுது ஆகாத்தியம் பண்ணி, முதுகில் ரெண்டு வாங்கி, தலையை மேல்படியாகவே வாரிக்கொண்டு, வீட்டுக்கு போட்டுக்கொண்டிருக்கும் கவுனோடவே இழுத்துக்கொண்டு போவார்கள்.
அம்மாவின் வாயில் வசவு வழியெல்லாம் விழுந்துக்கொண்டே வரும், நமக்கோ வெளியில் செல்வதை சாதித்த புன்னகை, அழுகையூடே.