17 September 2009

இதுவரை சொல்லாதது

1. அன்புக்குரியவர்கள்: அம்மா, அப்பா, அக்கா, மற்றும் நண்பர்கள்

2. ஆசைக்குரியவர்(கள்): இருபது வயதிலிருந்து இறுதிநாள் வரை அமித்து அப்பா & இரண்டு வருடம் முன்னர் ஆசையில் பாதியை வாங்கிக்கொண்ட அமித்து.

3. இலவசமாய் கிடைப்பது: இலவசமா, அப்படின்னா, அட்வைஸைக்கூட கன்சல்டன்சியா மாத்தி பணம் புடுங்கறாங்க பய புள்ளைக :) ஆனா ஒன்னு, ப்லாக் ஆரம்பிக்கிறது முற்றிலும் இலவசம், அதிலும் நான் ஆரம்பித்தது
ஆபிஸ் கம்ப்யூட்டர், ஆபிஸ் நெட், ஆபிஸ் சேர், ஆபிஸ் ஏசி அதிலும் முக்கியமாய் ஆபிஸ் சம்பளம்

4. ஈதலில் சிறந்தது: ஆங்கோர் இயலாதவர்க்கு எழுத்தறிவித்தல்

5. உலகத்தில் பயப்படுவது: டெர்ரரான கனவுகளுக்கு

6. ஊமை கண்ட கனவு: .............. (இப்படித்தான் இருக்கும் போல)

7. எப்போதும் உடனிருப்பது: அலைக்கழிக்கும் மனது

8. ஏன் இந்த பதிவு: என் வானம் அமுதா அவர்களின் அன்பான அழைப்பால்...

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: ஐஸ்வர்யமே வேணாங்க, நல்ல உடல்நிலையும், மனநிலையும் வாழ்நாள் வரைக்கும் இருந்தா போதும்.

10. ஒரு ரகசியம்: ரகசியத்த எப்படி வெளியில சொல்றது.

11. ஓசையில் பிடித்தது: ங்ங்கா.... ங்ங்கா....

12. ஔவை மொழி ஒன்று: மொழிவது மறுக்கின் அழிவது கருமம்

13. (அ)ஃறிணையில் பிடித்தது: சிமெண்ட் தரையும், தலையணையும்


1. A – Available/Single? எதுக்கு இந்தக் கேள்வி

2. B – Best friend? : சுதாவின் மறைவிற்குப் பிறகு எனக்கு நானே

3. C – Cake or Pie?: கேக்

4. D – Drink of choice? : தாகம் அடக்கும் தண்ணீர்

5. E – Essential item you use every day? : உடையில் ஆரம்பித்து செருப்பு வரை அன்றாடம் உபயோகிப்பது அனைத்துமே முக்கியமானதுதான்.

6. F – Favorite color? : கருப்பு மற்றும் வெளிர்நிறங்கள்

7. G – Gummy Bears Or Worms?: ...........

8. H – Hometown? - செஞ்சி பிறகு சென்னை

9. J – January or February? செப்டம்பர்

10. K – Kids & their names? அமிர்தவர்ஷினி

11. L – Life is incomplete without? – அமிர்தவர்ஷினி

12. M – Marriage date? ஆனி 03

13. N – Number of siblings? அம்மாவான அக்கா ஒருவள்

14. O – Oranges or Apples? ஆரஞ்சு

15. P – Phobias/Fears? டெர்ரர் கனவுகள்

16. Q – Quote for today? : விரும்பியது கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததை விரும்பு (இன்றுமட்டுமல்ல, எப்போதும்)

17. R – Reason to smile? : காரணம் கர்த்தாவெல்லாம் தேவையில்லை, எங்கயாவது யாராவது நல்ல சோக்கு சொன்னாங்கன்னா கூடி நின்னு கும்மிதான் :)))

18. S - Season : : இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கச் சொல்லும் குளிர்காலமும், சூடாக நொறுக்குத்தீனியை தின்னச்செய்யும் மழைக்காலமும்


19. T – Tag 4 People? : யாரும் இல்லப்பா (யாம் பெற்ற துன்பம் பெறக்கூடாது இந்த வலைப்பூவகம்)

20. U – Unknown fact about me? தெரியவரும்போது தெரிவிக்கிறேன்

21. V – Vegetable you don't like? முருங்கைக்காய்

22. W – Worst habit? மூக்கு மேல் கோபம் (கொஞ்சம் குறைத்திருக்கிறேன் :)

23. X – X-rays you've had? மார்பு

24. Y – Your favorite food? மிளகாய் கிள்ளி சாம்பார், மீன் வறுவல்

15 September 2009

அமித்து அப்டேட்ஸ்

ம்மா குள்ளப்பாட்டு,குள்ளப்பாட்டு என்றாள் பார்பியை கையில் வைத்துக்கொண்டு..

அது என்னம்மா குள்ளப்பாட்டு, அம்மாவுக்கு தெரியாதே... ஏதாவது ரைம்ஸாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே .. இது அறிவு ஜீவியான நான்.

அதில்லம்மா, ஓப்பு போட்டு குள்ளப்பாட்டு பாபிய,பாவம் பாபி ......

குள்ளப்பாட்டு என்பது குளிப்பாட்டு என்பதன் மழலை என்பதறிந்தேன்.

.........

பல்லுக்கிடையில் ஏதோ நெருட,வாய்க்குள் கையை வைத்துக்கொண்டிருந்தேன்.

ம்மா, ஆய்பக்கம், அத்து ஆய்பக்கம்... (ஆய் பழக்கம், கெட்ட பழக்கம்)

எதும்மா

இத்து இத்து என்றாள் என் வாயில் கைவைத்து நெருடுவதை எடுக்கும் முயற்சியில் சுவாரஸ்யமாய் ஈடுபட்டிருக்கும் என் கையைக் கைகாட்டி.

வெட்கித் தலைகுனிய வைத்தாள்

............

ம்மா, கண்ணம் மூடு, வாய்ல கை வை

வெச்சிட்டம்மா,

இபியில்லம்மா இபி., அவளே எனது கையை வாய்க்கும் கன்னத்துக்குமாய் சரி செய்து விட்டிருந்தாள்

சொல்லு, காப்பாத்து, கிச்சுணா காப்பாத்து

!!!!!!!!!!!

..........

ம்மா, கண்ணம் மூடு

ஏன்ம்மா,

ஓப்பு போடனும், கண்ணு எய்யும், கண்ணம் மூடு

மூடிட்டேம்மா, முகம், கைகாலுக்கும் ஓப்பு போடும் பாவனை முடிந்து, பிறகு என்னை குளிக்க வைத்த் பாவனையும் முடிந்ததென்று
நான் எழ முற்பட, இர்ரு இர்ரு, இர்ம்மா.,

என்னம்மா,

கையிலிருக்கும் சின்ன சின்னப் பாத்திரத்தை வைத்து ச்சுத்தி ச்சுத்தி என்று அவள் தலையை ஆட்டி ஆட்டி பின்னர் கீழே அதைக் கவிழ்த்தவுடன்

ம்மேல்லப் பார்ரு, அபியில்ல..., மேல்ல ஃபேன்னைப் பார்ரு

பார்த்தவுடன், இப்போது கழுத்துக்கிடையில் பவுடர் போடுவது நிஜமாகவே நடந்தது.

இது அடிக்கடி அவள் அப்பாவுடனும், எப்போதாவது என்னுடனும் நடக்கும்.

!!!!!!!!!

.........


சளிபிடித்து தொண்டை கரகரத்துக் கொள்ள, தொண்டையை ஒரு மாதிரி கரகரத்துக்கொண்டேன்.

விளையாடிக்கொண்டிருந்தவள், என்னிடம் வந்து

ஆ காட்டு, அத்தம் எங்கந்து வந்துச்சு, ஆ காட்டூ......

இங்கந்துடா, என்றேன் தொண்டையக் காட்டி..

ச்செய்யி, மீண்டும் செய்தேன், என்னையே பார்த்துக்கொண்டிருந்தவள், எங்க காண்ணோம் அத்தம்?

!!!!!!!!

..........

அங்கம், ச்செல்லம், பேத்ரா (பவித்ரா) ச்செல்லம் - இது அவளின் பெரியப்பாவின் சிறிய மகளை அமித்து கொஞ்சும் மொழி

நஞ்சக்கா (சஞ்சு).. அது என்னுது, தொடாத, வுட்டுடு ...... அவளின் பெரியப்பாவின் பெரிய மகள் இவளின் பொம்மைகளை எடுக்கும் போது சொல்வது

.......

ம்மா, இங்க வந்து பார்ரேன், இது என்ன மாதி இர்க்கு சொல்லு .......
(எது மாதிரி இது இருக்கு என்பதைதான் இப்படி கேட்கிறாள் என்பதை உணர நிறைய சந்தர்ப்பங்கள் இது போல தேவைப்பட்டது எனக்கு :)

ம்மா, இங்க வா, ச்சொலித்தா,

இது Egg... முத்தை

இது key .. இல்ல இத்து ச்சாவி

இது kite .. காத்தாடி

என்னை சொல்லித்தர கூப்பிட்டு மேடம் எனக்கு சொல்லித் தந்து, அப்படிய்யே அது விலங்குகள் பக்கம் போய் காந்தாமிக்கம் என்று முடிந்தது :)

.....

தினமும் சாயங்காலம் நான் போனபின்னர், அமித்துவைப் பற்றிய குற்றப்பத்திரிக்கை அவளின் பாட்டி மூலமாக என்னிடம் வாசிக்கப்படும்

பாத்ரூம்ல போய் தண்ணிய தெறந்துவிட்டுட்டு நிக்கறா, மாடிப்படிய எறங்கிடறா, எத வெளையாட கொடுத்தாலும் அக்கு வேற ஆணி வேற. மை டப்பா தெறந்து மையெல்லாம் எடுத்து வெளிய பூசிடறா என இத்யாதிகள்...

இதைக் கவனித்துக்கொண்டே வந்த அமித்து ஒருநாள் அவள் ஆயா என் எதிரே உட்கார்ந்து சொல்லிக்கொண்டிருக்க, எங்களிடையில் வந்து நின்று கொண்டு

ஒல்லாத்த, ஆய்யா ஒல்லாத என்று அதட்டும் தொனியிலும், க்கேக்காத, ம்மா, க்கேக்காத என்று என்னிடமும்..

பிறகெங்கே பஞ்சாயத்து..? எல்லாம் ஒரு சிரிப்புக்குள் ஒளிந்து ஓடி மறைந்துவிட்டது.

.......


கடந்தவாரத்தில் ஒரு மதியம் நான் ஆபிஸுல் இருந்த போது, அவளின் தாத்தா எனக்கு போன் செய்ய..

ஃபோனை வாங்கி, ம்மா, நல்லாக்கியா, ஆப்ட்டியா... என்று கேட்டுவிட்டு ஃபோனை அவளின் தாத்தாவிடம் தந்துவிட்டாள்

அப்புறம் அவளின் தாத்தா பேசியதொன்றும் காதில் விழவில்லை, கண்ணீர் தான் கீபோர்ட் மீது விழுந்தது.

......

ஒரு நாள் நடு இரவில், ம்மா, எச்சோ த்தண்ணி..

இந்தாம்மா தண்ணி

ச்சுடத் தண்ணி ஏனும்..

சுடத் தண்ணிதான், ஆறிப்போச்சு, குடி.

குடித்து முடித்தபின்.. இல்ல இத்து ஆய் தண்ணி..

இல்லம்மா நல்ல தண்ணிம்மா...

இல்ல இத்து ஆய் தண்ணி..

அம்மா ஒனக்கு ஆய் தண்ணி தருவனாம்மா ?

இல்லம்மா, ஆய் தண்ணிம்மா என்று சிணுங்கலோடவே உறக்கத்தில் சொல்லியவளை நான் எந்தமொழிக்கொண்டு வாதிட்டு சொல்ல...


இப்படி ஒவ்வொரு தருணத்திலும் என்னை வென்றுக்கொண்டே சிரிப்புடனும் சினேகத்துடனும் சில சமயம் ஏக்கத்துடனும் ஆக்ரமித்துக்கொண்டே வருகிறாள் யாதுமாகி நின்ற காளி, என் செல்ல மாகாளி :)

10 September 2009

ஆறு தன் வரலாறு கூறுதல் (தொடர்பதிவு)

நமக்கு எப்பவுமே சுயபுராணம் பாடறதுனா ரொம்ப புடிக்கும், நம்ம லேபிள் கூட சொந்தக்கதை, சோகக்கதை, அனுபவம் அப்படின்னுதான் இருக்கும். ஆறு தன் வரலாறை கூறுவதும் அந்த வகையில சேர்ந்துடுது பாருங்க :))))

ஏற்கனவே நான் பதிவெழுத வந்த கதையை ரெண்டு மூணு இடத்துல சொல்லிட்டாலும், மறுபடியும் ஒரு சிறுகுறிப்பு. புதிய அலுவலகத்தில் ஆரம்பநாட்களில் வேலை இல்லாமல் ச்சும்மா கூகிலிக்கும் போது நிலவு நணபனின் விதைகள் ப்லாக் தென்பட,அவரின் பதிவுக்கு பின்னூட்டம் போட முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கும் போது நிலவுநண்பனின் உதவியால் தொடங்கப்பட்டதே இந்த வலைப்பூ. வெறும் படத்தைப்போட்டு காலத்தை ஓட்டலாம் என்றெண்ணி எனக்கு மெயிலில் வந்த படங்களையெல்லாம் அப்லோட் செய்து கொண்டிருந்தேன். ஆச்சியின் வலைப்பூ பார்த்து ஆஹா ஆரம்பிச்சிடலாம்பா நம்ம அமிர்தவர்ஷினியின் அப்டேட்ஸை என்றெண்ணி எழுத ஆரம்பித்தேன்.
வர்ஷினியோடவே இந்த வலைப்பூவும் வளர்ந்து வருவது குறித்து எனக்கு மிகவும் சந்தோஷம்.

ஒரு முறை அமித்து அப்டேட்ஸில் திரு. கே.வி.ஆர், இரண்டு வயசுக்குள்ள இப்படி பேசுறாளா உங்க பொண்ணு ஆச்சரியமா இருக்கு அப்படின்னு ஒரு பின்னூட்டமிட்டார், எனக்கு இப்பவும் வர்ஷினி எங்கிருந்தாவது புதுசா ஒரு வார்த்தைய கத்துக்கிட்டு பேசினாலென்றால் அவரின் பின்னூட்டம் ஞாபகம் வரும். அந்தளவுக்கு நம்மக் கூடவே தொடர்ந்து வருகிறது முகம் பார்த்திராத மனிதர்களின் எழுத்தும், அன்பும்.

என் அம்மாவை எல்லோருமே கமலாம்மா என்றுதான் கூப்பிடுவார்கள். தன் மூத்த மகளையே தன் பெயர் அடையாளமாகக் கொண்டு தன் இயற்பெயரான ருக்குவை கையெழுத்திடமட்டும் வைத்துக்கொண்டிருந்தாள் அம்மா. அது போல வர்ஷினி அம்மா என்று யாராவது நம்மை கூப்பிட்டால் எப்படியிருக்கும் என்று குழந்தை பிறந்து கொஞ்ச நாளிலேயே கனவு காணதொடங்கிவிட்டேன். என்னை அடையாளப்படுத்திக்கொள்ள என் மகளின் பெயர்தான் சரி என்று முடிவு செய்த பின்னரே அமிர்தவர்ஷினி அம்மா என்று ப்ரொஃபைலில் பேரிட்டு, பின்னர் பின்னூட்டங்களில் அந்தப் பெயரை நான் கண்டபோது, அமித்து அம்மா என்று வலைப்பூக்களில் விளிக்கும்போது அடைந்த / அடைகிற மகிழ்ச்சிக்கு எல்லை என்ற ஒன்றை என்னால் எந்நாளும் வைக்கமுடியாது.

அமித்து அம்மா என்ற அடைமொழியை என் மகள் எனக்கு தந்தா மாதிரி நான் அவளுக்கு அம்மா என்பதைத் தவிரவும் வேறு என்ன அடையாளத்தை தருவது என்று முதல்முறையாய் உருப்படியாய்!யோசித்து ஏதோ ஒன்னு செய்யனும், ஏதோ ஒன்னு செய்யனும் அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிக்கொண்டு, நிறைய நிறைவான வாசிப்புகளுக்கு என் மனதையும் நேரந்த்தையும் தந்து, எழுத ஆரம்பித்த பின்னர்தான் அந்த ஏதோ ஒன்னு இதுதான் அப்படின்னு நினைத்துக்கொண்டேன். எனக்குள் இருந்த அந்த ஏதோ ஒன்னை கண்டறிய காரணமாக இருந்தது உங்களனைவரின் பின்னூட்டங்களே. நன்றிகள் அனைவருக்கும்

தொட்டதுக்கெல்லாம் கோபமடைந்து என்னையும், என்னைச்சுற்றி இருப்பவரையும் அலைக்கழிப்பதையே தொழிலாக கொண்டிருந்த நான், வலைப்பூவிற்கு வந்தபின்னர் என் மனதை நிறைய செப்பனிட்டு வருகிறேன் என்பதை உணரும் பொழுது, இந்தமாற்றம் ஒன்றே போதும், வலைப்பூவிற்கு வந்த வாழ்நாள் பலனாய் நிறைந்திருக்க.

விதம் விதமாய், மனித மனங்கள் கண்டதை, கேட்டதை,அனுபவித்ததை ரகம் ரகமாய் பிரித்து அவரவர் பாணியில் எழுதுவதைப் பார்க்கும்போது நேரும் பிரமிப்பு அனுதினமும் தொடர்கிறது. விகடன், குமுதம், குங்குமம், தேவதை என வளர்ந்த, வளர்ந்து கொண்டிருக்கும் இதழ்களில் யாராவது ஒருவரின் ப்லாக்ஸ்பாட் அறிமுகத்தையோ, அல்லது எழுத்தையோ கண்டுவிட்டால், ஹைய், இவங்கள எனக்குத் தெரியுமே என மனதுக்குள் ஒரு குரல் எழுந்து அடங்கி புன்னகையுடன் விழிவிரிய நேரிடுகிறது.

இளையராஜவின் இசையில் ஜென்சி பாடிய ஆயிரம் மலர்களே என்ற பாடலில் பின்வரும் வரிகள் வரும்.

”கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்
எழுதிச்செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ”


வலைப்பூ தான் நம் அனைவரையும் சேர்த்துவைத்திருக்கிறது.நட்பால், எழுத்தால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இன்பமோ, துன்பமோ ஏதாவது ஒரு வகையில் பகிர்ந்துகொள்ளவைக்கிறது.
காலதேவனின் கணக்கில் இது ஒரு மிகப்பெரிய கொடுப்பினை. அனுதினமும் எழுத்தை ஏதோ ஒரு வடிவில் சமைத்தும், சுவைத்தும் கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாய் உணர்ந்திருப்பார்கள்.
உணரவைத்த, உறைய வைத்த கணங்கள் நிறைய நெஞ்சினில். மீண்டும் நன்றிகள் அனைவருக்கும்.

இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைத்த சிதறல்கள் தீபாவிற்கு நன்றிகள்

அழைக்கப் போகும் ஐவர்

1. தாமிரா @ ஆதிமூலகிருஷ்ணன் (உங்கள் ட்ராப்ட் பதிவுகளை தடுக்கவே இந்த முயற்சி :)))))))))
2. விபாஷாவின் டைரியை எழுதிக்கொண்டிருக்கும் மிஸஸ். தேவ்
3. ஆபிஸில் ஆணி அதிகமாகி அதனால் அவதியுற்று முதன் முதலாய் வந்து கைகொடுக்க முடியாத தவிப்பில் இருக்கும் நட்புடன் ஜமால்
4. பதிவெழுத வந்து ஒரு வருட காலம் ஆகப்போகும் எழுத்தாளர் பைரவன் @ கண்ணாடி ஜீவன்
5. நத்தையை போட்டுவிட்டு அதற்குப்பிறகு நகராமல் இருக்கும் அ.மு. செய்யது


விதிமுறை:

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 அல்லது அதிலும் கூட பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைப்பவர்களுக்கு அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

(மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.)

03 September 2009

உளவு

உங்களுக்கு உளவு பார்த்த அனுபவமுண்டா, சிறுவயதில் யாரைவது உளவு பார்த்திருக்கிறீர்களா. அதற்குப்பின் மன உளைச்சலில் அவதி பட்டிருக்கிறீர்களா. இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள், இருக்கிறது என்றால் வேண்டாம், ஏனெனில் உங்கள் உணர்வுகளை கிளறிவிட்ட பாவம் வேறு வந்து சேர்ந்துவிடும் எனக்கு.

விவரம் தெரியாத வயதில் பார்த்த உளவு, விவரம் தெரிந்தபின்பு டிடெக்டிவ் ஏஜென்ஸி என்ற பெயரில் பெரிய அளவில் நடத்தப்படுவது குறித்து மிகுந்த ஆச்சரியமடைந்தேன். இவர்களுக்கு இது தொழில் என்றாகிவிட்டதால் குற்றவுணர்வு இல்லாமல் போய்விடுமா என்றெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வழக்கமான யோசனைகளின் அணிவகுப்பு. இப்போது இதுவா முக்கியம், நான் பார்த்த உளவு அல்லவா முக்கியம்.

ரவி ஒரு கார் மெக்கானிக் என்று அவன் வாயால் சொன்னால் கூட நீங்கள் நம்ப மாட்டீர்கள். கிரிஸ், ஆயில் கறைகள் அப்பிய அழுக்கு பேண்ட்டை அணிந்து கொண்டு, கார் அடியில் படுத்துக்கொண்டு, டேய் அந்த ஆறாம் நம்பர் ஸ்பேனர எடுடா என்று சொல்லியபடியே, வாங்க சார் ரொம்ப நாளாச்சு நம்ம கடைப்பக்கம் வந்து என்று படுத்துக்கொண்டே இன்னொரு பக்கம் திரும்பி வந்திருக்கும் உங்களைப் பார்க்கும்போதுதான் புரிந்துகொள்வீர்கள். ஏனெனில் அதன் கலரும், முக லட்சணமும் அப்படி. கார் புகை கக்கினாலும் கருப்பு படியாத சிவப்பு நிறம், சிரித்தால் குழி விழும் குண்டு முகம், அளவெடுத்த உயரம், தன்மையான பேச்சு, அலைபாயும் கண்கள் என ரவி அண்ணன் அந்த வாசலில் ஒரு அழகான கார் மெக்கானிக்.

சுமதி, அழுந்த வாரினாலும் படியாத சுருட்டை முடி, ரவிக்கு சற்றே குறைவான நிறம், மூக்குத்தியைத் தவிர பொட்டுத்தங்கம் இல்லையென்றாலும் அழகுக்கு பங்கமில்லாத களையான முகம்,அவள் வீட்டு வேலை செய்பவள் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.ஏனெனில் அவளின் குடும்ப அமைப்பு அப்படி, ஒரு குக்கிராமத்தில் ஆறு பிள்ளைகளைப் பெற்ற குடிகார அப்பாவிற்கு பிறந்த இரண்டாவது மகள். சாப்பாட்டுக்கே சிக்கி சீரழியும் நிலையை காண சகியாத அவளை,பெற்றோரின் ஒப்புதலுடன் அவளின் அத்தை சென்னைக்கு அழைத்துவந்து ஒரு வீட்டில் வேலை வாங்கித்தந்தாள். ஏதோ அவள் வயிற்றையும், மாச சம்பளத்தில் மற்ற பிள்ளைகளின் ஒரு சில தேவைகளுக்கும் அவள் உதவியாக இருந்தாள். அப்படியே இருந்திருக்கலாம் தானே, அவளை யார் ரவியை காதலிக்க சொன்னது.

எப்படி காதலிக்காமல் இருக்கமுடியும், இருபது ஒண்டுக்குடித்தனத்தில் ரவியின் குடும்பமும் ஒன்று, சுமதி வேலைக்கு போக வரும் வழியில் தான் ரவியின் கடை. ஒரே வீடு, ஒரே வாசல், ஒரே வழி, ஒன்றே குலமில்லை, காதல் எங்கே அதெல்லாம் பார்த்துத் தொலைக்கிறது. பருவ வயது காதலாகி கசிந்துருக ஆரம்பித்தாயிற்று. இவர்களின் காதல் விவகாரமும் வெளியே கசிந்துருக ஆரம்பித்துவிட்டது, அரசல் புரசலாக அத்தையின் காதுக்கு வந்தவுடன், அய்யோ, அந்த குடிகாரனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன், ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா என்ன வெட்டிக்கடாசிடுவானே,இது இம்மா நாளா எங்காதுக்கு வரலியே, வந்திருந்தா அவள அன்னைக்கு மூட்ட முடிச்ச கட்டி இழுத்தும்போய் ஊர்ல உட்டுட்டு வந்துருப்பேனே, வரட்டும் அந்த ஓடுகாலி முண்ட இன்னிக்கு வூட்டுக்கு, ரெண்டுல ஒன்னு பாத்துடறேன், அம்மா வீறு கொண்டு எழுந்து அழுது புரண்டாள்.

அக்காதான், ச்சே, எவளோ சொன்னான்னு நம்ம வீட்டு பொண்ண சந்தேகப்படற, நம்ம கண்ணால பாக்கனும், அப்புறம் கேக்கனும், நீ ஏதாவது கேட்டு வெச்சு ஒன்னு கெடக்க ஒன்னு ஆவப்போவுது. நாம் ரெண்டு நாள் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறி, பார்க்கலாம் என்ற போது என்னைப் பார்த்தது அக்கா.

புரிந்தும் புரியாமலும் நானும் அக்காவைப் பார்த்தேன், நீ என்ன பண்ற, நாளக்கி காலைல, சுமதி வேலைக்கு போவும் போது அதுக்கு தெரியாமயே பின்னாடி போற, போயி அது வழில யார் கூடவாவது நின்னு பேசுதா ந்னு சொல்ற. சரியா. நானும் உள்ளமெல்லாம் புளகாங்கிதமாய் சரி என்று வேகமாய் தலையாட்டி மனதுக்குள் அப்போதே எதிர் வீட்டு விஜியை அழைத்துக்கொண்டு உளவு பார்க்க புறப்பட்டேன்.

நான் தலையாட்டிய வேகத்தின் எதிர்வேகத்தில் குரல் வந்தது, கூட யாரையாவது கூட்டுக்கிட்டு போன அவ்ளோதான், நீ போறதும் தெரியக்கூடாது, வரதும் தெரியக்கூடாது, அங்க என்னப் பாத்தன்னு எங்ககிட்ட தான் சொல்லனும். போய் பசங்க கிட்டலாம் இதை சொல்லி வக்காத. சுர் ரென்று சுவாரஸ்யம் இறங்கினாலும் உளவின் புளகாங்கிதம் உடம்பு முழுக்க.

அடுத்தநாள் காலை, சுமதிக்கு முன்னரே நான் எழுந்துவிட்டேன், அன்றைய எனது தலையாய பணியான உளவு மேற்கொள்ளல் அப்போதே துவங்கிவிட்டது. சுமதி எழுந்தது. வெளியே இருந்து தண்ணி எடுத்து வந்து எல்லா பக்கெட், குடத்தையும் நிரப்பியது. ஒன்றிரண்டு பாத்திரத்தை விளக்கியது. குளித்தது. அதனிடமிருக்கும் மூன்று தாவணிப்பாவாடையில் ஒன்றான கத்தரிப்பூ கலர் பாவாடை தாவணியை அணிந்து கொண்டு அழுந்த அழுந்த அதன் அடங்காத தலைமுடியை வாரிக்கொண்டது. பவுடர் போட்டுக்கொண்டது, மூஞ்சி மட்டுமே தெரியக்கூடிய அந்த சாயம் போன கண்ணாடியில் ரெண்டு தடவை அதன் முகத்தை இப்படியும் அப்படியுமாய் திருப்பி திருப்பு பார்த்துக்கொண்டது. வர்ரேன் சித்தி, உள்ளேப் பார்த்து குரல் கொடுத்துவிட்டு, ரப்பர் செருப்பை எடுத்துப்போட்டுக்கொண்டு புறப்பட்டது.

அது வாசலை தாண்டியதுதான் தாமதம், எழுந்து வாயைக் கொப்பளித்துக்கொண்டு, ஒழுகும் தண்ணீரைத் துடைத்துக் கொண்டே ஓடுகிறேன். சுமதி தெருமுனை டீக்கடையைத் தாண்டியதும், நான் நடக்கவும், கொஞ்சம் ஓடவும் ஆரம்பித்தேன், தெருநாய்கள் அங்கங்கே சோம்பல் முறித்து குலைக்க ஆரம்பிக்க, ஓட்டத்தை நிறுத்திக்கொண்டேன். நாய்களைப் பார்த்து பயந்ததில் சுமதி தெரியவில்லை. அய்யயோ வுட்டுட்டோமேடா, எந்த சந்துக்கா திரும்பியிருக்கும் என்னா பண்றது என்று முக்கூட்டில் நின்று கொண்டு யோசித்துக்கொண்டே சரி பஞ்சாப் ஸ்கூல் (கில் ஆதர்ஸ் ஸ்கூல் !) வழியாவே போய்ப் பார்ப்போம் என்று விரைய, பஞ்சாப் ஸ்கூல் போய் திரும்பி பார்த்தால் சுமதி நேராக போகாமல், அதன் எதிர் சந்தில் போய்க்கொண்டிருந்தது தெரிந்தது.

வேலை செய்ற வீட்டுக்கு ஏன் இப்புடி போவுது ? என்று நெஞ்சு படக் படக் என்று அடித்துக்கொள்ள, அதன் பின்னாடியே போனேன். பங்களாக்கள் நிறைந்த அந்த சந்தில் ஒரு கார் அருகே சுமதி நின்று கொண்டிருந்தது, சர்.. ரென ஸ்கூட்டரில் ரவி அண்ணன். நம்ம வீட்ட தாண்டி போம் போதெல்லாம் ம்ஹூக்கும் என்று கனைக்கும் ரவி அண்ணனா அது, குனிந்த தலை நிமிராமல் போகும் வரும், அந்தப் புள்ள இருக்கறதே தெரியாதுன்னு பேர் எடுத்த ரவி அண்ணனா அது, சுமதியின் பக்கத்தில் ஸ்கூட்டரை வைத்துக்கொண்டு நின்று பேசிக்கொண்டு இருப்பது.

இன்னதுதான் என்று சொல்லத்தெரியாத ஒரு குறுகுறுப்பு உடலில் ஓட, அசோக மரத்தின் பின்னாடி நின்று கொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன், அந்த மரமும், ரோஸ் கலர் பெயிண்ட் அடித்த அந்த வீட்டுக் காம்பவுண்டும், காரும், சுமதியின் குனிந்த தலையும், சிரிப்பு சத்தமும், ரவி அண்ணன் ஏதோ சொல்லி விட்டு வண்டியை எடுக்கும்போது, கண்டதில் உறைந்து போய் அடுத்து என்ன செய்வது என்று திகைத்திருந்த என்னைப் பார்த்துவிட்டது.

சுமதியிடம் ஏதோ சொல்ல சுமதியும் என்னைப் பார்த்தது. அவ்வளவுதான், முழு உடம்பும் வெட, வெட என்று நடுங்கியது.

இங்க வா, சுமதி கூப்பிட்டது, மிரட்சியுடனும், சிரிப்புடனும் நான் அதனருகே போனேன், இன்னம்மா, இங்க வந்திருக்க, சித்தி அனுப்புச்சா? என்று பாயிண்ட்டை பிடித்துவிட்டது, இல்ல, ல்ல, க்கோர்ட்டஸுக்கு பால் வாங்க வந்தேன், நீ போனியா, அதான் உங்கூடவே போலாம்னு....... எப்படி முடிப்பது என்று தெரியாமல், கையிலிருக்கும் பால் வாங்கும் தூக்கு என்னைவிட வேகமாய் ஆடியது என் உடம்பு போட்ட உதறலில்.
சரி பத்திரமா பால் வாங்கிட்டு வீட்டுக்குப் போ என்று போய்விட்டது. ஆனால் அதன் முகத்தில் இன்னதுதான் என்று சொல்லத்தெரியாத ஒரு கலக்கம் இருந்தது. ரவி அண்ணன் சற்று தொலைவே வண்டியை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தது.

ரவியும் சுமதியும் லவ் பண்றாங்களா. பார்த்தை வீட்டில் சொல்லலாமா, வேண்டாமா, விஜி கிட்ட கேக்கலாமா என்று என உதறல் அடங்காமல் வீட்டுக்குள் நுழைந்தேன், அக்கா என்னை எதுவுமே கேட்கவில்லை, கொஞ்சம் நிம்மதியாக ஸ்கூலுக்கு கிளம்ப ஆரம்பித்தேன், மாமா எதற்கோ வெளியே போயிருக்க,அக்கா எனக்கு தலை வாரிக்கொண்டே, சுமதி என்ன பண்ணுச்சு, வேலை செய்ற வீட்டுக்கு போச்சா ? என்று கேள்விக்கணைகள். இல்லை என்று சொல்வதா, ஆமாம் என்று சொல்வதா என்று தெரியாமல் கண்ணை கட்டி வீட்டில் விட்டதுபோல உணர்ந்தேன். சொல்லு என்றது அக்கா, அது வந்து சுமதி வேலைக்குதான் போச்சு. பார்த்தேன் என்றேன். அக்கா கொஞ்சமும் நம்பவில்லை. நீ இப்ப ஸ்கூலுக்கு போ, சாயங்காலம் அம்மா வந்து உன்னை கேட்கறா மாரி கேட்கும், அப்ப சொல்லுவ என்றது. ஆனால் அம்மா கேட்கறா மாதிரியெல்லாம் கேட்கலை, வாயில் வெற்றிலைச்சாறு வடிய சிரிப்புடனே, ஏ பட்டூ, என்னத்த பாத்த என்றவுடனே கடகடவென கணக்கு பாடம் ஒப்பிக்கும் கணக்காய் ஒப்பித்துவிட்டேன்.

என் உளவுக்கூற்றினை அடிப்படையாக வைத்து 1987 லவ் ஸ்டோரி முடிவுக்கு வந்துவிட்டது. மறுநாள் சுமதி வேண்டாம் வேண்டாம் என சொல்ல, ஊர்ல திருவிழாவாண்டி, உங்கப்பன் லெட்டர் போட்டிருந்தான் என்று வலுக்கட்டாயமாக ஊருக்கு அழைத்துச்செல்லப்பட்டது. வேலை செய்ற வீட்ல சொல்லனும் அத்த என்றதற்கு அதெல்லாம் நான் பாத்துக்கறேன், நீ கெளம்பு என்றவாறே சுமதி அழது கொண்டே கிளம்ப மனமில்லாமல் கிளம்பியதாம். நல்லவேளையாய் நான் அதைப்பார்க்கவில்லை, ஸ்கூலுக்கு போய்விட்டேன். அதற்குப்பிறகு ஒரு வாரத்திலேயே சொந்த தாய்மாமனோடு கோவிலில் கல்யாணம் என்று முடிவு செய்து அம்மா அங்கேயிருந்து அக்காவுக்கு தகவல் அனுப்ப, அக்கா மாமா சகிதம் போய் முடித்து வைத்துவிட்டு வந்தார்கள். சுமதி பயங்கர அழுகையாம், பட்டுப்புடவை கூட கட்டிக்கவில்லையாம், தலையொரு வேஷமும், துணியொரு வேஷமுமாய் தாலி கட்டிக்கொண்டதாம். அக்கா கதை கதையாய் சரசக்காவிடம் சொன்னது. ரவி ஊருக்கு போய் சுமதியைப் பார்த்தது, ஊரில் மாமா சண்டை போட்டு அதை திருப்பி அனுப்பியது என அவ்வப்போது திகிலூட்டும் கதைகள் காதில் விழுந்தது.

அதற்குப்பின்னர் ரவி அண்ணன் முகத்தைப்பார்க்கவே பிடிக்கவில்லை,சூனியம் வைத்தா மாதிரி இருந்தது. என்னை ரெண்டு அடி கூட அடிச்சிருக்கலாம் அந்த அண்ணன், ஆனா கன்னமிரண்டில் குழி விழ சிரிச்சிக்கிட்டே என் கன்னத்த செல்லமாய் கிள்ளி விட்டு வீடை காலி பண்ணிப் போய்விட்டது. அதற்குப்பிறகும் என்னை எங்கே பார்த்தாலும் சிரிக்கும், ஆனால் எனக்குதான் அந்த அண்ணனை நேருக்கு நேர் பார்க்கும் சக்தி இல்லாமல் குற்றவாளி கணக்காய் தலை குனிந்து போகும் நிலை வாய்த்துவிட்டது.

ஒரு உளவின் கூற்றுக்கு வாழ்க்கையை பிளந்து போடும் சக்தி உண்டா ? இன்றும் இந்தக் கேள்வி சுமதியின் அடங்காத தலைமுடியினைப்போலவே என் அடிநெஞ்சில் இருக்கிறது.

01 September 2009

வாழ்த்தலாம் வாங்க

இவர்களுக்கெல்லாம் இன்றைய நாள் இனியநாள், இந்த இனிய நாளை கொண்டாடும் இவர்களுக்கு எனது இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கண்ணாடி ஜீவனின் மூத்தமகள் அமிர்தவர்ஷினி






சாரல் பூர்ணிமா சரவணக்குமாரின் மகன் பரீக்‌ஷித்



பிரவாகம் புகழ் ஜி3 என்ற காயத்ரி













MANY MORE HAPPY RETURNS OF THE DAY





டிஸ்கி: பிறந்தநாள் ட்ரீட்டிற்கு சம்பந்தப்பட்ட லிங்க்கினை அழுத்தி அணுகவும். ட்ரீட்டிற்கு கம்பெனி பொறுப்பாகாது. :))))))))))))))))))