11 November 2009

மழையோடு விளையாடி... மழையோடு உறவாடி...

மழை வரும்போதெல்லாம் அவளுக்கு மழையின் மொழியும் ஞாபகம் வந்துவிடும். மழை ஓசை என்றால் பட்,பட்,பட் என்று வேகமாகவும் பட்... பட்... என்று நிதானமாகவும் ஒலிக்கும் ஓசைதான் நினைவுக்கு வரும். அவளென்றால் அவள் ஒரு சிறுமி. அவள் அம்மாவோடு அந்த ஒண்டுக்குடித்தன திண்ணையில் படுத்துக்கொள்ளும்போது, மழையின் சாரலிலிருந்து மறைந்துகொள்ள ஏதுவாய் அவளின் அம்மா செவ்வக வடிவ சிமெண்டு பையையெல்லாம் ஒன்றாய் தைத்து ஒரு நீள் செவ்வக படுதாவை உண்டு செய்திருந்தாள். படுதாவின் இரு முனையிலும் சணல் கட்டியிருக்கும் அதை இழுத்து திண்ணையின் இரு தூண்களிலும் கட்டிவிட்டால் மறைவு ரெடி. மழையோ, காற்றோ படுதா தாங்கிக்கொள்ளும். உள்ளே இழுத்துப்போர்த்திக்கொண்டு களைப்பின் இருப்பில் அவளின் அம்மா உறங்கிப்போயிருப்பாள். அவளோ நினைவுகளோடு விடாமல் கதைத்துக்கொண்டிருப்பாள்.

மழை வந்தால், பட், பட் டை எண்ணிக்கொண்டிருப்பது மிகவும் பிடித்தமான விஷயம், ஆனால் அதிகபட்சம் நூறைத் தாண்டியதில்லை. அதற்குள் அவள் தூங்கிப்போயிருப்பாள். இடையில் என்றாவது பெருமழை பெய்து, பெரிய பட் பட்.. கள் உண்டாகி தூக்கத்தைக் கலைத்துப்போடும். உறக்கம் கலைந்த அம்மாவின் சிடுசிடுப்பு, அவள் தொடர விழைந்த எண்ணிக்கையை தொடர விடாமல் செய்ய,இருளில் மழையின் சத்தத்தையே வெறிக்க கேட்டுக்கொண்டு சுருண்டுவிடுவாள்.

மழைநாளின் போதான பட், பட் பல்லவி அந்தப் படுதா கிழியும் வரை நிலைத்திருந்தது. பின்பு படுதா கிழியவும், அவர்கள் திண்ணையில்லாத , ஆனால் திண்ணையே சமையல் அறையாகியிருந்த வீடாக பார்த்துப்போனார்கள். அங்கே மழைவந்த போது பட், பட் ஒலி வாய்க்கவே இல்லை. ஓட்டின் மீது விழும் சட,சட தான். அதுவும் நிமிட நேரங்கள் மட்டுமே நிலைத்திருந்து, பின்னர் ஹோ வென்ற இரைச்சலாக மாறிவிடும். ஏனோ இந்த ஒலி அவளுக்கு பிடிக்கவேயில்லை.ஆனால் மழைக்கு பின்னால் போகும் நேரமே வாய்க்கவில்லை. படிப்பு, படிப்பு என்று அதன் பின்னால் ஓடிக்கொண்டிருந்தாள். அப்போது மழை பெய்தால், பள்ளிக்கு விடுப்பு என்ற நிலைதான் தோன்றியதே அன்றி எப்போதாவதுதான் அந்த பட், பட் மனதில் படர்ந்தது.

அதற்குப்பிறகு வந்த, வாய்த்த மழைக்காலங்களெல்லாம் ஒன்றும் அவ்வளவு மனதோடு இயைந்ததாக இல்லை. பருவ வயதிலும் படிப்பைத் துரத்திக்கொண்டு ஓடி, பல்கலைக்கழகத்தில் உட்கார்ந்திருந்த போது, அந்த நீள வகுப்பறையின் விசாலமான சன்னல்களின் ஊடே மழையை ரசித்ததுதான் அவளின் ஆகப்பெரும் ரசிப்பாக இருந்தது. ச்சோ வென்ற மழை, இதற்கப்புறம் பெய்யவேண்டியதெல்லாம் இப்போதே சேர்த்துவைத்து பெய்வதைப்போன்ற மழை, தூரத்தில் எல்லாம் கடலில் துளியாக வீழ்ந்து கொண்டிருப்பதை, அப்போது வானமும், கடலும் இருந்த இருப்பை, நிறத்தை அதனை இள நீல நிறம் அல்லது சாம்பல் நிறமென்று சொல்வதா?

அந்த நிறத்தினூடாக மழை கடலில் வீழ்ந்ததை ரசித்துக்கொண்டிருந்தாள். ஆசிரியர் கத்திக்கொண்டிருப்பதெல்லாம் காதில் விழவில்லை. திகட்ட திகட்ட ரசித்துக்கொண்டிருந்தாள். அந்த ரசிப்புத்தான் அவளை அதற்குப் பின்னர் வெகுநாட்கள் மழை வந்தால் கையோடு குடை இல்லாத அல்லது வைத்திருந்தாலும் அதை விரிக்காத ஆளாக மாற்றியிருந்தது. மழை வீழ்ந்தால், மேல் நோக்கி சாம்பல் நிறத்தைத்தான் தேடுவாள். மழையின் அடர்த்தியின் கற்றைகளின் ஊடாக அது சில சமயம் தட்டுப்படும். மகிழ்வாள். மகிழ்தலின் ஊடே மனைவியாகி பின் தாயாகிவிட்டாள். இப்போதும் மழை வருகிறது.

சில சமயம் மழையை ரசிக்கும் மனம் பல சமயம் வாய்ப்பதில்லை. நச நசவென்று வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் வடியும் தண்ணீர், வடித்து நிமிர்த்திய மாத்திரத்தில் வடிந்து போன சோற்றின் சூடு, துணி துவைத்து காயாத சமயங்கள், அதிகக்கூலி கேட்கும் ஆட்டோக்காரர், தண்ணீரை வாரி இறைத்துவிட்டுப்போகும் வாகனங்கள் எல்லாவற்றிற்கும் மேலாய் மகளுக்கு காய்ச்சலையும், சளியையும் ஒன்றாய் தோற்றுவிக்கும் காலநிலை இப்படியாய் பல விடயங்கள் மேல் நோக்கி சாம்பல் நிறத்தோடு மழையை ரசிக்கும் மன நிலைக்கு தன்னை கொண்டு செல்வதில்லையே என தன்னையே நொந்துகொண்டிருக்கிறாள். அதி சொற்பநேரங்களில் மாத்திரமே அவளும், மகளும் சன்னல் கம்பிகளின் ஊடாக மழையை ரசிப்பார்கள்.

மழ, ஏலோ பெச்சா பேய்து ப்பார்ரு என்ற மழலையின் மழை, பால்யத்தின் பட் பட்டையும், பருவத்தின் பல்கலைக்கழக மழையும் ஒரு சேர மறக்கடித்துவிடும்.

தலை கொதிக்கும் வெய்யில் தந்த சிடுசிடுப்பை எல்லாம் ஓட ஓட விரட்டியடித்து, வீட்டின் மூலையில் கருப்பையில் இருந்த இருப்பைப் போல சுருண்டு கொண்டு, அவ்வப்போது தேநீரும் சிப்ஸும், உடன் பிடித்தமான வாசிப்பும், பாடலும், எல்லோரும் ஒன்றாய் உடன் இருக்கும் மகிழ்ச்சியை ஒரு சேர கூவி, விளையாடி வெளிப்படுத்தும் மழலைச்செல்வங்களின் உற்சாகத்தைப் பார்த்து தானும் உற்சாகமாகி மீண்டும் பெய்யத்துவங்குகிறது மழை. நினைவுகளின் கீழே ஓடிப்போய் ஒண்டிக்கொள்கிறது மனம்.

32 comments:

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு அமித்து அம்மா! ரசித்தேன் - மழையை ரசிப்பது போல! ;-))))

ப்ரியமுடன் வசந்த் said...

ரசனைங்க..

பட் பட் மனம் கவர்ந்தது..

இப்போவும் ஞாபகம் வருது..

சென்ஷி said...

அருமைங்க..! மேல ஏதும் சொல்லத் தோணல. எங்களையும் நனைய வைச்சுட்டீங்க..

Anonymous said...

அப்படியே 'மழையின் துளியில் லயமிருக்குது, துளிகள் விழுந்து தடம் பதிக்குது' பாட்டும் கேட்டா சூப்பரு.

சி. முருகேஷ் பாபு said...

உங்களையும் என்னையும் ஒரு புள்ளியில் நனைத்த மழைக்கு நன்றி. உங்கள் பதிவுக்குள் இருந்த பாசி படிந்த வாசனையை நானும் உணர்ந்தேன்... நன்றி தாயே!

அமுதா said...

மிக மிக அழகாக மழையோடு விளையாடும், உறவாடும் மனதைக் கூறியுள்ளீர்கள். excellent

தமிழ் அமுதன் said...

/// குடை இல்லாத அல்லது வைத்திருந்தாலும் அதை விரிக்காத ஆளாக மாற்றியிருந்தது. ///

///அதி சொற்பநேரங்களில் மாத்திரமே அவளும், மகளும் சன்னல் கம்பிகளின் ஊடாக மழையை ரசிப்பார்கள்.///

இவ்ளோ மழைலயும் என்ன இங்க மழை ய காணோமேன்னு பார்த்தேன்..!
வந்துடுச்சி அமித்து அம்மா ஸ்டைல்ல...!;;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\எல்லாவற்றிற்கும் மேலாய் மகளுக்கு காய்ச்சலையும், சளியையும் ஒன்றாய் தோற்றுவிக்கும்//
:)

அமிர்தவர்ஷினி தான் தினம் பேசி(பாடி)மகிழ்ச்சிமழை பொழியிறாங்களே..

ஆயில்யன் said...

எக்ஸலண்ட் போஸ்ட்டு அமித்து மதர் !

S.A. நவாஸுதீன் said...

அருமையா இருக்கு அமித்தம்மா.

☀நான் ஆதவன்☀ said...

இங்கே அடிக்கும் வெயிலிலும் மழையை உணர்ந்தேன் பாஸ்!

மூன்றாவது பத்தியை படிக்கும் போது சட்டென ஏதோ உறைத்து, இது புனைவாக இருக்ககூடாதா என்று நினைத்து, கடைசியில் முடியும் புன்னைகையோடு ரசிக்க வைத்துவிட்டீர்கள் :)

☀நான் ஆதவன்☀ said...

இங்கே அடிக்கும் வெயிலிலும் மழையை உணர்ந்தேன் பாஸ்!

மூன்றாவது பத்தியை படிக்கும் போது சட்டென ஏதோ உறைத்து, இது புனைவாக இருக்ககூடாதா என்று நினைத்து, கடைசியில் முடியும் புன்னைகையோடு ரசிக்க வைத்துவிட்டீர்கள் :)

Unknown said...

ஒட்டுமொத்த இடுமையுமே ஒரு கவிதை மாதிரி இருக்கு. ஒவ்வொரு காலகட்டமும் அது ஏற்படுத்தும் மாற்றங்களும் - அருமையா பதிவு செய்திருக்கிங்க.

பட் பட் எண்ணிக்கை - கூரைவீட்டுக்குள்ளே அங்கங்கே ஓழுகுற இடங்கள்ல வீட்டில் இருக்கும் பாத்திரங்களைத் தேடிப்பிடிச்சு வச்சிட்டு தூக்கம் வராமல் மழை ஓசையை எண்ணிக்கொண்டு இருந்த நாள்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருது.

//ஆனால் அதிகபட்சம் நூறைத் தாண்டியதில்லை கவுண்ட் டவுன்// - இங்கே “கவுண்ட் டவுன்” வருமான்னு கொஞ்சம் பாருங்க.

Thamira said...

சிறப்பான இன்னொரு பதிவு.

பா.ராஜாராம் said...

திருப்பி,திருப்பி வாசிக்க வைக்கிற எழுத்து அமித்தம்மா.மூன்று முறை படிச்சுட்டேன்.கண்களும் கலங்கியது.(labels: அனுபவம் என்று பார்த்த பிறகு.)என்ன சொல்லட்டும் அமித்தம்மா....நிறைய எழுதுங்க.

எவ்வளவு பொருத்தமான தளம் பெயர்!

அன்புடன் அருணா said...

மழைக்கும் பதிவுக்குமாக ரெண்டு பூங்கொத்து!

மணிநரேன் said...

மிகவும் நன்றாக இருந்தது..:)

அ.மு.செய்யது said...

ரொம்ப ரிலாக்ஸா ஃபீல் பண்றேன் அமித்து அம்மா !!

இந்த பதிவ படிச்சதுக்கப்புறம்...!!!

மயிலிறகால் மனம் வருடும் எழுத்துக்கள்னு சொல்வாங்களே!!
அப்படி இருந்தது.

கிளாஸ் !!!!

( 3 நாட்க‌ள் விடுப்பில் சென்னை வ‌ந்திருப்ப‌தால்
தாம‌த‌ பின்னூட்ட‌த்திற்கு ம‌ன்னிக்க‌வும் )

காமராஜ் said...

வெளியே பெய்த துளிகளை ரசிக்கவும், வீட்டுக்குள்ளே புகுந்த அதைச் சபிக்கவுமாக வாய்த்த காலங்களுக்கு இந்த பதிவு இழுத்துக் கொண்டு போகிறது.

உதறிக்கொண்டு ஓடமுடியாத முடியாத ஈர்ப்பும் கண்ணீரும் இந்தப்பதிவுக்கு அர்ப்பணம்.


அமித்தம்மா.
க்ரேட்.

தமயந்தி said...

ம்மா...

Karthik said...

நல்லா இருக்கு...

ராமலக்ஷ்மி said...

ரசித்தேன் அமித்து அம்மா:)!

"உழவன்" "Uzhavan" said...

//மகிழ்தலின் ஊடே மனைவியாகி பின் தாயாகிவிட்டாள்//
நடந்து கொண்டிருக்கும்போதே பல மைல்களைத் தாண்டும் அளவில் ஒரு ஜம்ப் :-)
 
வித்தியாசமான ரசனையான அனுபவம். இதுதான் "மழை" தோன்றியதிற்கான காரணமா?

Ungalranga said...

மா...சூப்பர்..

ரசனையை சொல்லி ரசிக்க வெச்சிட்டீங்க எங்களை..

எதோ ஒரு அமைதி வந்து சேருகிறது இந்த பதிவை படிக்கும் போது.

ஒரு வேளை மழை முடிந்ததும் காற்று நின்றுபோய்,

இலைத்துளிகள் சரிந்து தரைவிழும்போது கலைக்கப்படுமே ஒரு மௌனம்..அதை போன்ற உணர்வோ என்னவோ?

மா..ஒரு விஷயம் கவனிச்சீங்களா?
நீங்கள் பதிவிட்ட நேரம் 11:11 AM, 11.11.2009!!!

2009 கூட்டு எண்ணும் 11 தான்.!!

Iyappan Krishnan said...

நல்லா இருக்குங்க :)

suvaiyaana suvai said...

நல்லாருக்கு ரசித்தேன்

Rajasurian said...

மழை போலவே மனதுக்கு இதம் தரும் எழுத்து. கவிதை போன்ற உங்களின் உரைநடை வடிவம் அற்புதமாய் இருக்கிறது :)

சுண்டெலி(காதல் கவி) said...

நான் உன் வலைபதிவுக்கு புது வரவு.மழைக்காக கட்டப்படும் படுதாவின் நினைவையும்,மழலைப் பருவ மழை நாட்களையும் கண்முன் நிறுத்துகிறது உங்கள் எழுத்து.வாழ்த்துக்கள்.நேரம் இருந்தால் என் வலைப்பதிவிற்கு வருகை தரவும்.

நட்புடன் ஜமால் said...

”மழை”யில் மழை.

(எ)ச்சோன்னு பேஞ்சிருக்குங்க ...

-----------

மனல் சுவரு தாங்கி
தென்னை ஓலையில் கூறைகள் வேய்ந்து
மழை காலங்களில் குடும்பமாக ஒடுங்கி குளிரோடும் மழையின் நசநசப்போடும் இருக்கும் அந்த காலங்களுக்குள் சென்று வந்தாயிற்று

வெளிச்சமாக இருந்தது அந்த காலங்கள்

இப்பொ மெர்க்குரி வெளிச்சத்திலும் ஏனோ வாழ்க்கை இருட்டாக இருக்கு ...

Chitra said...

மழையில் நனைந்து மனதை பறி கொடுத்து ....... அருமையான பதிவு....

Deepa said...

கவித்துவமான மனத்துடன் மழையை ரசிப்பதையும் ஒரு தாயாக, நடைமுறையில் மழை தரும் இடைஞ்சல்களையும் இரண்டையும் மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

அது சரி, பதிவுக்கே மழை என்று பெயர் வைத்தவராயிற்றே! :-)

KarthigaVasudevan said...

மழை ...அழகான பதிவு சாரதா...படுதா மறைத்த திண்ணை ...திண்ணை வீடு...பல்கலைக் கழகம் என்று மழையோடு பயணித்த அந்தப் பெண் அடுத்து என்ன ஆனாள்?

மழை எப்போதும் ரசனையானதே.