29 June 2009

ராசிபலன்

ஜ்..ஜோசியம், கைர்..ரேகை, பேர்..ராசி பலன் என இத்யாதிகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவ்வப்போது இல்லை எப்போதாவது தேதி காலண்டரில் பேப்பரை கிழிக்கும்போதும், தினசரிகளில் போடப்படும் வார, மாத பலன்கள் கண்ணில் பட்டுவிட்டால் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தால் (சாதகமாக இருந்தால்) படிக்கும் பழக்கமுண்டு. இதனோடு ஒத்துப்போகும் சில சமீபகால நிகழ்வுகள்.

22,23 சந்திராஷ்டம் இருப்பதால்,வாக்கு வாதங்கள் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றிருக்கும், 22,23 தானே என்று அசால்ட்டாக விட்டுவிட்டால் அன்றைக்குத்தான் தேதி 23 ஆக இருக்கும். உடனே நிகழ்ந்தவைகளை ராசி பலன்களோடு பொருத்தும் நிகழ்வோடு ஈடுபட சில ஒத்துப்போகும். ஆமால்ல, நாம அவங்க கிட்ட இப்படி பேசியிருக்கக்கூடாதுல்ல. அதுனாலதானே அப்படியாச்சு என்பது போல. உடனே உள்ளிருக்கும் சாத்தான் (அதாங்க கோபம்) ஓடி வரும், நீ என்ன சும்மாவா பேசுன அன்னைக்கு சந்திராஷ்டமம் இல்ல, அதனால தான் பேசுன (இல்லன்னாலும், நாமதான் நாக்குல தேள் கொடுக்க வெச்சுக்கிட்டு அலையற ராசியாச்சே - கோபங்குறது பால் பொங்குற கணக்கா பாத்துக்கிட்டு இருக்கும்போதே புஸ் ஸுன்னு பொங்கிடுமே).

சில சமயம் பணவிரயம் ஆகும் என்றிருக்கும். எதையாவது செய்யவோ, வாங்கவோ நினைக்கும் போது வீண் வியம் ஆகும்னு போட்டிருந்துதே என்று சட்டென அந்த கருப்பு வரிகள் ஞாபகத்திற்கு வரும். உடனே மனசு, நாம என்ன வீணானதுக்க செலவு பண்ணப்போறோம் வேண்டியதற்குத் தானே என்றபடி கடைக்குள் காலடி வைத்தால், கண்டிப்பாக வாங்கிய பொருள் நன்றாக இருக்காது, இல்லையென்றால் தேவையே இல்லாவிட்டாலும் ஏதாவது ஒன்று வாங்கியாக வேண்டிய நிர்ப்பந்தம், காசு கட்டும் இடத்தில் மனம் அடித்துக்கொண்டாலும் அதான் வீண் விரயம்னு போட்டிருந்தானே, இப்படி செலவாகலனாலும் வேற எப்படியாச்சும் செலவாகியிருக்கும் என்று சுய சமாதானங்களில் ஈடுபட வேண்டியிருக்கும்.

ஒரு முறை அமித்து அப்பா உடம்பு சரியில்லாமல் வீட்டில் இருந்த போது, தேதி கிழிக்கும் காலண்டரில் அவர் ராசிக்கு சோகம் என்று ஒரு வார காலம் முழுவதும் போட்டிருந்தது, அதே நாட்களில் என் ராசிக்கு எதிராக மகிழ்வு என்று போட்டிருந்தது. எதேச்சையாக இதை கவனித்த அவர், இதைப் பாரேன் என்றார். பார்த்த, படித்த எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

வடக்கே சூலம், தெற்கே சூலம் என்றிருப்பதை சிறு வயதில் படிக்க நேரிட்டு, அம்மாவை வினவும் போதெல்லாம், அது என்ன கர்மமோ என்று சொல்லிவிடுவார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ராகு காலமும், எமகண்டமும் மட்டும்தான். படிக்கவில்லையானாலும், திங்கள் - ஞாயிறு எவ்வப்போது கால கண்டங்கள் இருக்கும் என்பது அத்துப்படியாயிருக்கும். ஆனால் எனக்கு இந்த சூலம் என்ற விஷயம் புரிபடாத ஒன்றாகையால், இதைப் பார்க்கும்போதெல்லாம், வடக்கோ, தெற்கோ கையில் சூலம் வைத்துக்கொண்டிருக்கும் ஏதாவது கடவுளை கற்பனை செய்துகொண்டு சமாதானமாகிவிடும். இது இன்றைக்கு நினைக்கும்போது சிரிப்பாக இருந்தாலும், சூலத்திற்கான அர்த்தம் விளங்கவேயில்லை.

அதே போல் எட்டு என்ற எண்ணை கவனிக்கும் நேரும்போது என் தோழி பாலஜோதியின் நினைவும் தவறாமல் நினைவுக்கு வரும். அவள் பிறந்த தேதி எட்டு. அதனால மேடம் ஒரு பெரிய லிஸ்ட்டே வெச்சிருப்பாங்க. பாருங்க இதுனாலதான் எனக்கு எதுவுமே வொர்க் அவுட் ஆகல என்பது போல். அவள் சொல்வதும் சில சமயம் மேட்ச் ஆகும். நன்றாக படித்தாலும், முதலிடம் வராதது, எம்.எஸ்ஸி, எம்.ஃபில் படித்திருந்தாலும், ஏதோ ஒரு துக்கடா கம்பெனியில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பது, இன்னும் கல்யாணம் ஆகாதது என்று மேடம் பார்க்கும் போது / போன் செய்யும் போது சொல்ல ஒரு பெரிய லிஸ்ட்டே வைத்திருப்பார்கள்.:(

எட்டென்றால் நினைவுக்கு வரும் மற்றுமொரு நபர் என் ரெண்டாவது பாஸ். மனுசர், 8,17, 26 தேதிகளில் எந்த லெட்டரிலும் கையெத்திட மாட்டார். அப்படி தலைபோகும் அவசரமென்றாலும், எப்படியும் கொரியர்லதானே போகப்போகுது, நாளைக்கி டேட்லயே லெட்டர் இருக்கட்டும் என்பார். நல்லவேளை
டெண்டர் ஃபைல் செய்யப்போகும் போது ராசியான் நபர்தான் எதிரில் வரவேண்டுமென்ற எந்த சட்டதிட்டங்களையும் வைத்துக்கொள்ளவில்லை.

இது தொடர்பாக, நினைவடுக்கில் இருந்தவொரு மிரட்டல் அனுபவம். (நான் பனிரெண்டாவது படிக்கும்போது என்று நினைக்கிறேன்) கைர்ரேக, ஜ்ஜோசியம் பாக்கறதே என்று ஒரு மதியானப் பொழுதில் ஒருவர் குரல் கொடுத்துக்கொண்டு வர, நாங்கள் குடியிருக்கும் காம்பவுண்ட்டில் இருக்கும் ஒருவர் அவரைக்கூப்பிட்டு கையைக் காட்ட, அவர் பட்டு பட்டுன்னு புட்டு புட்டு வைத்துவிட்டாராம்!!!, இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அக்காவை கவனித்த அந்த ஜோசியக்காரர், அம்மா மொகத்துல ஒரு சஞ்சலம் குடி கொண்டிருக்குது, பார்க்க சிரிச்ச மொகமா இருந்தாலும் என்று கதைவிட்டிருக்கிறார். முதலில் மிரண்டாலும், இவர் என்னதான் கதை விடுகிறார் பார்ப்போம் என, அக்காவும் கையை நீட்ட, அவர் விட்ட கதை, உனக்கும் உன் கணவருக்கும் கொஞ்ச நாளா ஆகல, அவரு ஒரு வாகன ஓட்டி, அவருக்கு ஒரு கண்டமிருக்கு, என்று சொல்லிக்கொண்டே ஜோசியக்கட்டின் உள்ளிருந்த சீட்டை எடுத்துப்போட்டதில் அதில் இரு பல்லிகள் சண்டை போட்டு, ஒன்று ரத்தக்கறைகளோடு விழுவது மாதிரியான படம். படத்தை பார்த்த அக்காவிற்கு பக். இதோடு நிற்கவில்லை பல்லி ஜோசியம். இதற்கு பரிகாரமிருக்கு.

நான் ஒரு மந்திரிச்ச கயிறு தரேன், வாங்கி கட்டிக்க, இன்னிலிருந்த ஒருவாரம் அதாகப்பட்டது ஏழு நாளு என்ற ரேஞ்சில் சொன்னதையே திருப்பி திருப்பி போட்டு டயலாக்கை நீட்டி வெள்ளிக்கிழமையில் தான் இந்தப் பரிகாரத்தை செய்யவேண்டும், செஞ்சு முடிச்சவுடனே நீயா பாத்து ஒரு மூன்னூறூ ரூவா (!!!) கொடுத்துரு தங்கச்சி. அவ்ளோதான். அக்காவுக்கு பயம் அதெல்லாம் வேணாங்க என்று சொன்னாலும், அவர் கயிறு தருவதிலே குறியாயிருக்க. அந்த வீட்டில் குடியிருக்கும் ஆஜானுபாகுவான நாகராஜ் வந்து அந்த ஜோசியரை வெறும் ஐந்து ரூபாய் கொடுத்து விரட்டிவிட்டாராம். ஆனாலும் அக்காவிற்கு மனசு ஆறவில்லை. எங்களிடம் சொல்லிய பின்னர் நாங்களும் எவ்வளவோ மன அமைதி படுத்தினாலும், ஒன்னும் வேலைக்காகவில்லை. எல்லாம் சரி, அவன் எப்படி கரெக்ட்டா, வாகன ஓட்டின்னு சொன்னான், மாமா ஆட்டோ தானே ஓட்டுது என்று பாயிண்ட்டை பிடிக்க, என்ன செய்வதன்றே தெரியவில்லை. ஒரு மணி நேரத்திற்குள் வீடே தலை கீழாகிவிட்டது. சரியாக அந்த சமயம் வீட்டுக்கு வந்த மாமா, அந்த மோட்டுத் தெருவுல ஒருத்தன போட்டு அடிச்சுட்டு இருக்கானுங்க, ஒரே கூட்டம், ஆட்டோ வரவே வழியில்ல,வண்டிய அந்த முனையிலயே நிறுத்தி வெச்சுட்டு வந்துட்டேன், சீக்கிரம் சாப்பாடு போடு என்று சொல்ல, நாங்கள் என்னவாம் மாமா என்று கேட்க, அது ஒன்னுமில்லடி, ஏதோ ஜோசியக்காரனாம், பல்லி, ரத்தம் கக்கும்னு ரெண்டு, மூணு வீட்டுல சொல்லியிருக்கான் போல. அதுல யாரோ ஒருத்தவங்க இப்பத்தான் இதையே எங்க வீட்டுல (வேறு தெரு) வந்து சொன்னான், இப்ப இங்கயும் வந்து சொல்றானேன்னு விசாரிச்ச்சு அடி பின்னுக்கிட்டிருக்காங்க என்று சொன்னவுடன், எல்லோர் முகத்தில் நீண்ட நேரம் கட் ஆகி, அதிக வோல்ட்டேஜோடு வந்த கரண்ட் போல ஒரு பிரகாசம். அப்புறமும் அக்கா விடாமல், உருவ ஒற்றுமைகளையெல்லாம் மேட்ச் செய்து கன்ஃபர்ம் செய்துகொண்ட பின் தான் எங்கள் எல்லோருக்கும் சாப்பாடு கிடைத்தது.

21 comments:

Vidhya Chandrasekaran said...

\\அவர் ராசிக்கு சோகம் என்று ஒரு வார காலம் முழுவதும் போட்டிருந்தது, அதே நாட்களில் என் ராசிக்கு எதிராக மகிழ்வு என்று போட்டிருந்தது. எதேச்சையாக இதை கவனித்த அவர், இதைப் பாரேன் என்றார். பார்த்த, படித்த எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.\\

ஹா ஹா ஹா.

Chittoor Murugesan said...

யதார்த்தமா சொல்லியிருக்கிங்க நல்லாவே இருக்கு. ஆனால் ஒரு ஜோதிட ஆய்வாளன் என்ற முறையில் சிலதை சொல்லியே ஆகனும். முதல்ல இன்னைக்கு ஜோசியங்கற‌ பேர்ல செலாவணி ஆகிற நிறைய விசயத்துக்கும் ஜோசியத்துக்கும் சம்பந்தமே கிடையாது. அப்புறம் ஜோசியர் வந்து எடை பார்க்கும் மிஷின் தான் ..பிசிஷியன் கிடையாது. இன்னொரு விதமா சொன்னா ஜோசியர் வந்து நம்ம துக்ளக் சோ மாதிரி. கிரகங்களோட போக்கை ச்சும்மா அப்படி ஊகிச்சு சொல்வார் அவ்ளதான். என்ன நடக்கும்ங்கறது அவர் கையில இல்லை. மாத்தறது 200 சதம் கிடையவே கிடயாது

நட்புடன் ஜமால் said...

ஜ்..ஜோசியம், கைர்..ரேகை, பேர்..ராசி பலன்\\

அப்படியே ஒருத்தர் நேரிடையாக சொல்வது போல் இருக்கின்றது

மற்றபடி இந்த பேர்களை கேட்டாலே

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Vidhoosh said...

//என் ராசிக்கு எதிராக மகிழ்வு என்று போட்டிருந்தது.//

நான்கூட அப்படி ஒரு தரம் மாட்டி இருக்கேன்.

what a coincidence...

அன்புடன் அருணா said...

நானெல்லாம் எந்த ராசிக்கு நல்லது போட்டிருக்கோ அந்த ராசிக்கு அன்னிக்கு மட்டும் மாறிக் கொள்கிற ரகம்!! நம்மகிட்டேவா???

கே.என்.சிவராமன் said...

அமித்து அம்மா,

தகவலுக்காக. சூலம் என்றால், அந்தப் பக்கம் செல்லக் கூடாது என்று பொருள்.

பிறகு, வாழ்க்கை சார்ந்த அனுபவங்களை மெல்லிய நகைச்சுவையுடன், (அது சோகமாக இருந்தாலும்) பகிர்ந்துக் கொள்வது உங்கள் ஸ்டைல். இந்தப் பதிவிலும் அது வெளிப்பட்டிருக்கிறது.

அசை போடும்போது, இதிலுள்ள பல அனுபவங்கள் எல்லோரையும்போல் நானும் அனுபவித்ததுதான் :-) நல்லா இருக்கு.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

சந்தனமுல்லை said...

:-)) கூல் போஸ்ட் அமித்து அம்மா! எங்க வீட்டுலேயும் அப்படி நம்பிக்கை எல்லாம் இல்லாததாலே எனக்கும் ரொம்ப பெரிய அனுபவம் எல்லாம் இல்ல! ஆனா,ஹாஸ்டல்லே சும்மா காமெடிக்காக நடக்கும்..யாராவது சும்மா ஆரம்பிப்பாங்க..அப்படியே ஒரு ரவுண்ட் வரும்..ஆனா அது சும்மா ஜாலி! பெசந்த் நகர் பீச்சுலே கையிலே கோல் வச்சுக்கிட்டு, ஜோசியம் பாருன்ங்கன்னு சொல்றவங்களை பார்த்தாதான் பாவமா இருக்கும்! :(

சந்தனமுல்லை said...

//Blogger அன்புடன் அருணா said...

நானெல்லாம் எந்த ராசிக்கு நல்லது போட்டிருக்கோ அந்த ராசிக்கு அன்னிக்கு மட்டும் மாறிக் கொள்கிற ரகம்!! நம்மகிட்டேவா???//

LOL!

S.A. நவாஸுதீன் said...

ஜோசியம்னு சொன்னாலே அமைதிப்படை சத்யராஜ்தான் நினைவுக்கு வருவார். (அதில் அவருக்கு நேரம் சரியில்லை என்று சொல்லும் ஜோதிடரிடம் அவரின் ஆயுள்ரேகைப்பற்றிக் கேட்டு அவரைக் கொல்லும் காட்சி, ரொம்ப சூப்பரா இருக்கும்)

குடந்தை அன்புமணி said...

எனக்கும் இதுபோன்ற அனுபவம் நிகழ்ந்தது... எனக்கு ஜாதகம், ஜோசியத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லையென்றாலும் என் மனைவியின் விருப்பத்திற்காக கிளி ஜோசியம் பார்க்கப்போக, அவன் நாக தோசம் இருக்கு என்று சொல்லி அதற்கு ஒரு தகடு வாங்கி அதை வீட்டிற்கு பின்பக்கத்தில் உள்ள எருக்கஞ் செடியில் கட்டிவிட்டால் சரியாகிவிடும். என்றும் இல்லாவிட்டால் ஆபத்து என்று கொழுத்திப்போட, மனைவியின் பயத்தை போக்க அப்படியே செய்யவேண்டியதாகி விட்டது. தகடு எவ்வளவு என்று கேட்க 121 ரூபாய் தண்டம் அழுதேன். அவர்கள் இதே வேலையாகத்ததான் அலைகிறார்கள் என்பதை பின்பு புரியவைத்த பிறகு கிளி ஜோசியக்காரனை பார்த்தாலே அவளுக்கு கிலி பிடித்துவிடும்.

அ.மு.செய்யது said...

உங்களைப் போன்றே எனக்கும் இந்த ஃபார்ச்சூன் பாக்குறதெல்லாம் நம்பிக்கை இல்லைன்னாலும்,

வழக்கம் போல பதிவில் சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லை.

நல்லா எழுதியிருக்கீங்க..

( அப்புறம் "உப்பு" சிறுகதை படிச்சேன்.நிறைய சொல்லணும்னு தோணுச்சு.முத்துவேல்,ஆதி எல்லாம் ஆல்ரெடிசொல்லிட்டாங்க...இருந்தாலும் இப்போதைக்கு மாஸ்டர் பீஸ்.. )

Deepa said...

அட்டகாசம்!
பதிவு முழுக்க ரசித்துப்படித்தேன்.
கடைசி மேட்டர் hilarious!

//வடக்கே சூலம், தெற்கே சூலம் என்றிருப்பதை சிறு வயதில் படிக்க நேரிட்டு, அம்மாவை வினவும் போதெல்லாம், அது என்ன கர்மமோ என்று சொல்லிவிடுவார்கள். //
வெரிகுட்! :-) எல்லாவற்றையும் இப்படிச் சொல்லலாமென்பது என் கருத்து!


நாமதான் நாக்குல தேள் கொடுக்க வெச்சுக்கிட்டு அலையற ராசியாச்சே - கோபங்குறது பால் பொங்குற கணக்கா பாத்துக்கிட்டு இருக்கும்போதே புஸ் ஸுன்னு பொங்கிடுமே).

:-))) நல்லாருக்கே உதாரணம்!

மணிநரேன் said...

மிக சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள்.

//பார்த்த, படித்த எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.//

ஹா ஹா ஹா...

அப்துல்மாலிக் said...

நமக்கும் இதுக்கும் ரொம்ப தூரம்....

அமுதா said...

/*சூலத்திற்கான அர்த்தம் விளங்கவேயில்லை*/
எனக்கும் தான்

/*எதேச்சையாக இதை கவனித்த அவர், இதைப் பாரேன் என்றார். பார்த்த, படித்த எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
*/
:-))

Unknown said...

நல்லா எழுதி இருக்கீங்க சாரதா... வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எவ்வளோ அழகா கோர்வையா சொல்லி இருக்கீங்க. ரத்தத்தில் ஊறிய சில விஷயங்களில் இது போன்ற ஜோசியங்களும் ஒன்று. நம்ப மாட்டேன் என்பவர்கள் கூட தந்தியிலோ, தி ஹிண்டுவிலோ மேலோட்டமாக பார்ப்பார்கள் என்பது என்னுடைய அபிப்ராயம்.

மற்ற படி நல்ல பதிவு.

தமிழ் அமுதன் said...

ஜோசியத்துல சில உண்மைகள் இருக்கத்தான் செய்கிறது! ஆனா கிளி ஜோசியம் ,பல்லி ஜோசியம் எல்லாம் எதோ ஆறுதலுக்கு பார்க்கபோய் அவஸ்தையை இழுத்து கொள்கிற வேலை!

இனி சந்திராஷ்டமம் வந்தா நீங்க கவலை பட வேணாம்! நியாயமா பார்த்தா உங்க பக்கத்துல இருக்குறவங்கதான் அதுக்கு கவலை படனும் போல!;)

துபாய் ராஜா said...

பல்லி படத்தை காண்பித்து ஏமாற்றுவதை நானும் பார்த்திருக்கிறேன்.

Dhiyana said...

//நாமதான் நாக்குல தேள் கொடுக்க வெச்சுக்கிட்டு அலையற ராசியாச்சே - கோபங்குறது பால் பொங்குற கணக்கா பாத்துக்கிட்டு இருக்கும்போதே புஸ் ஸுன்னு பொங்கிடுமே//

பாத்து நடந்துகிறேன் அமித்து அம்மா.

"உழவன்" "Uzhavan" said...

நமக்கும் ஜோசியத்துக்கும் ரொம்ப தூரம். பொதுவாகவே எங்க வீட்டுல இந்த கைரேகை, கிளி ஜோசியம்னு யாரையும் பக்கத்திலேயே விடுறதில்லை. இவனுங்க இப்படி எதையாச்சும் சொல்லிட்டு போயிருவாங்க. அப்புறம் நம்ம மனசு கெடந்து இப்படி அடியா அடிக்கும்.
இருந்தாலும் இப்பவும் வீட்டுல பெரியவங்க இந்த சூலம், சூலாயுதம்லாம் பார்ப்பாங்க. அவங்களுக்காக சரினு சொல்லிடுறது.
நல்ல சுவராஸ்யமா படிக்க முடிந்தது. வழமை போல் அருமை..

அன்புடன்
உழவன்

நாஞ்சில் நாதம் said...

\\பார்த்த, படித்த எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.\\

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.

சில நேரம் வயசான ஜோதிடரிடம் நான் கை நீட்டியிருக்கிறேன் (அவருடைய தோறறத்துக்காக)