22 June 2009

அன்புள்ள அப்பாவிற்கு

உன்னைப் பற்றி சொல்வதற்கு கொஞ்சம் நினைவுகளும்,உன்னைப் போற்றி சொல்வதற்கும் என்னிடம் சொற்ப வார்த்தைகளே உண்டு. உன் வித்தில் பிறந்தும் காயாகி, கனிந்து பின் உனக்கு நிழல் தரா மரம் நான் ஒவ்வொரு அமாவாசைக்கும் தலைக்கு தண்ணீர் ஊற்றிக்கொள்ளும்போது மறக்காமல் உன் நினைவுகளும் வந்து செல்கிறது. என்ன செய்வது உன் வயோதிகமே நமக்கிடையே ஒட்டுதலை ஏற்படுத்தாமல் போனது.

நான் யூ.கே.ஜி படிக்கறப்போ, நீ என் ஸ்கூலுக்கு க்ளாஸ் நடக்கறப்போ வந்து, ஜன்னல் வழியா என்னைக்கூப்பிட்டு சின்ன சின்ன முறுக்கும், பட்டர் பிஸ்கட்டும் எண்ணை படிந்த பேப்பரோடு கொடுத்துட்டு போவியே.அப்பவே சில ஸ்கூல் பசங்களெல்லாம், மிஸ் அங்க பாருங்க, ஒரு தாத்தா வந்து நிக்கறாரு ந்னு கூட இருக்குற பசங்க உன்னைக் கைய காட்டுனது தான் என் மனதின் அடி ஆழம் தொட்ட வார்த்தைகள்.

எனக்கு தந்தையாய் தெரிந்த நீ, மற்றவர் கண்களுக்கு தாத்தாவாகிப் போனாய். அது உன் உழைப்பின் வீரியம் என்பது நெடுநாள் கடந்துதான் எனக்கு தெரிந்தது. தெரிந்துமென்ன, உன் வயோதிகத்தின் கடைசி காலங்களில் உனக்கு அனேக நிமிடங்களில் ஆதரவாக நானில்லை. நான் மகளாக இருந்த சொற்ப கணங்கள் என் கண் முன் தெரிகிறது. ஏதோ அந்த மட்டுக்குமாவது உனக்கு நான் மகளாக இருந்திருக்கேனே.

உன் புஜத்தில் தளர்ந்த நரம்புகளுக்கிடையே இருக்கும் தள தள மருவைத் தான் அதிகம் நெருடியிருக்கேன், நினைவு தெரிந்து எனக்கும் உனக்குமான அதிக பட்ச நேசம் அதுதான். உன் வேலை நேரம் அப்படி. நமக்கிடையே ஒரு அழகான புரிதல் ஏற்படாமல் இருப்பதற்கு காலம் கூட சாட்சியாகிப்போனது.

ஒரு நாள் அம்மா என்னை ஆக்ரோஷமாக அடித்துத் தள்ள, வலி தாளாத நான் உன் வேலையிடத்தை தேடி வர, அவர்களிடம் கொஞ்சம் நேரம் கடன் கேட்டு, என்னை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டு உன் உதடுகளும் உடம்பும் உதற அம்மாவை திட்டிவிட்டுப் போனாயே, பசுமையாய் நினைவிருக்கிறது.

அப்பா, இப்போது நீ இல்லை, உனக்கு பதிலாக நான் உன் வயதில், வடிவில் இருக்கும் அனைவரையும் அப்பா என்று அழைத்துவிடுகிறேன். குறிப்பாய் என் மாமனாரை. நீ இல்லாத குறையை அவர்தான் எனக்கு தீர்த்துவைக்கிறார். வழக்கமாய் என் பிறந்தநாளுக்கு அவர் எனக்கு பூ வாங்கித் தர மறப்பதில்லை, பூ வைக்கப் பிடிக்காத நானும், அதை மறுப்பதுமில்லை.

நீ உயிரோடு இருக்கும் போது குறைந்த பட்சம் ஆதரவாய் எதுவும் பேசாத நான், இப்போது எனக்கு(ம்) எழுத ஒரு இடம் இருக்கும் நிலையில் உன் மீதான என் உணர்வுகளை இறக்கி வைக்கிறேன்.

தந்தையர் தின வாழ்த்துப்பதிவுகளைப் பார்க்கும் போதெல்லாம், மறக்காமல் உன் ஞாபகமும் வந்து போனது. காலம் கடந்து உன் நினைவுகளைப் பகிர நினைத்தாலும், அதில் உன் வியர்வை வாசமே இல்லை.

யாருடமும் பகிர்ந்து கொள்ள முடியாத, உனக்குமெனக்குமிடையான ஒரு வலிமையான வெற்றிடத்தை நீ எனக்கு உருவாக்கித் தந்துவிட்டுப்போயிருக்கிறாய். அந்த வெற்றிடத்தையெல்லாம் இப்போதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வரும் சில, பல நினைவுகளை வைத்து நிரப்பிக் கொள்கிறேன். அந்த நினைவுகளெல்லாம் இனிமையாய் ஆரம்பித்து, கடைசியில் இப்படித்தான் முடிகின்றன, அப்பா இருந்திருந்தா..................

அக்காவின் கனவில் வந்து, மாமா உன்னோடுதான் இருப்பதாகவும், நீங்கள் இருவரும் எங்களை பார்த்துக்க்கொண்டிருப்பதாகவும் சொன்னாயாம், பார்த்துக்கொண்டிருப்பது உண்மையோ, பொய்யோ, இந்தக் கணத்தின் என் வருத்தமும், இதை எழுதும் போது கண்ணீர் மல்கியதென்னவோ நிஜம். நீ பார்த்துக்கொண்டிருப்பது நிஜமானால் மன்னிச்சுடுப்பா.

உன்னோடு இன்னும் மனதுக்கு நெருக்கமாய் வாழ கொடுத்து வைக்காமல் போனது நான் மட்டுமல்ல, வர்ஷினியும் தான். நீ இருந்திருந்தால் எப்படி பூரித்துப்போயிருப்பாய், உன் பேத்தி செய்யும் வேடிக்கைகளை நினைத்து.

இந்த வார்த்தைகளைத் தான், நாங்கள் சின்ன வய்தாய் இருக்கும்போது நீ அடிக்கடி சொல்வாய், //முருகன் தாத்தா இருந்தா பூரிச்சுப்போயிருப்பாரு, நீங்க பேசறத கேட்டு.//
நீ சொல்லிப்போன அதே வாசகங்கள் தான் இப்போது நான் வர்ஷினியிடம் சொல்கிறேன்.

இப்படிக்கு
காலனிடம் உன்னை அனுப்பிவைத்துவிட்டு
உன்னை நேசிக்கவில்லையே என்று வருந்தும்
உன் மகள் யசோதா கந்தசாமி.

30 comments:

நட்புடன் ஜமால் said...

பதிவு முழுவதுமே மனம் கணத்து தான் போகின்றது

\உன்னை நேசிக்கவில்லையே என்று வருந்தும்
உன் மகள் யசோதா கந்தசாமி.
\

இந்த வரிகளில் வலி கொஞ்சம் கூடுதல்.

ஆயில்யன் said...

//தந்தையர் தின வாழ்த்துப்பதிவுகளைப் பார்க்கும் போதெல்லாம், மறக்காமல் உன் ஞாபகமும் வந்து போனது. காலம் கடந்து உன் நினைவுகளைப் பகிர நினைத்தாலும், அதில் உன் வியர்வை வாசமே இல்லை.

யாருடமும் பகிர்ந்து கொள்ள முடியாத, உனக்குமெனக்குமிடையான ஒரு வலிமையான வெற்றிடத்தை நீ எனக்கு உருவாக்கித் தந்துவிட்டுப்போயிருக்கிறாய். அந்த வெற்றிடத்தையெல்லாம் இப்போதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வரும் சில, பல நினைவுகளை வைத்து நிரப்பிக் கொள்கிறேன். அந்த நினைவுகளெல்லாம் இனிமையாய் ஆரம்பித்து, கடைசியில் இப்படித்தான் முடிகின்றன, அப்பா இருந்திருந்தா///

கண் கலங்கிப்போனேன் சகோதரி!

Deepa said...

அமித்து அம்மா...
கண் கலங்க வெச்சுட்டீங்க.

உங்க அப்பா நிச்சயம் உங்களையும் வர்ஷினியையும் பார்த்துப் பூரிச்சுக்கிட்டுத் தான் இருப்பார். இந்தப் பதிவையும் சேர்த்துத் தான்.

ganesh said...

படிக்கும்போது அவரவர் அப்பாக்கள் நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாது. நன்றாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

www.ganeshwrites.blogspot.com

Vidhoosh said...

எல்லாத் தந்தைகளுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

நல்ல கதை அமிர்தவர்ஷினி அம்மா:)

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு.

தமிழ் அமுதன் said...

///தந்தையர் தின வாழ்த்துப்பதிவுகளைப் பார்க்கும் போதெல்லாம், மறக்காமல் உன் ஞாபகமும் வந்து போனது. காலம் கடந்து உன் நினைவுகளைப் பகிர நினைத்தாலும், அதில் உன் வியர்வை வாசமே இல்லை.///

எண்ணத்தில் உதித்ததை வார்த்தைகளில் சொல்லி இருக்கும் விதம் நன்று!

/// உன்னோடு இன்னும் மனதுக்கு நெருக்கமாய் வாழ கொடுத்து வைக்காமல் போனது நான் மட்டுமல்ல, வர்ஷினியும் தான். நீ இருந்திருந்தால் எப்படி பூரித்துப்போயிருப்பாய், உன் பேத்தி செய்யும் வேடிக்கைகளை நினைத்து.//

;;((

நாமக்கல் சிபி said...

டச்சிங்கான பதிவு! நெகிழ்ச்சியாக இருக்கிறது!

அமுதா said...

சொல்ல வார்த்தைகளில்லை அமித்து அம்மா. அப்பா உங்களை இன்னும் அதிகமாக நேசித்துகொண்டிருப்பார். உங்கள் வீட்டில் தென்றல் காற்றாக வந்து வர்ஷினியைக் கொஞ்சிக் கொண்டிருப்பார்.

Vidhya Chandrasekaran said...

நெகிழ வைத்துவிட்ட பதிவு. கண்களில் நீர் கோர்ப்பதை தவிர்க்க முடியவில்லை.

விக்னேஷ்வரி said...

ஒரு நாள் அம்மா என்னை ஆக்ரோஷமாக அடித்துத் தள்ள, வலி தாளாத நான் உன் வேலையிடத்தை தேடி வர, அவர்களிடம் கொஞ்சம் நேரம் கடன் கேட்டு, என்னை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டு உன் உதடுகளும் உடம்பும் உதற அம்மாவை திட்டிவிட்டுப் போனாயே, பசுமையாய் நினைவிருக்கிறது. //

ஐயோ, எல்லா பெண்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும். ரொம்ப அழகா எழுதிருக்கீங்க.

வழக்கமாய் என் பிறந்தநாளுக்கு அவர் எனக்கு பூ வாங்கித் தர மறப்பதில்லை, பூ வைக்கப் பிடிக்காத நானும், அதை மறுப்பதுமில்லை. //

உறவுகளின் உணர்வுகளின் அழகான வெளிப்பாடு.

மொத்தத்துல தந்தையர் தினத்துக்கு அழுத்தமான அழவைக்கும் பதிவு.

சந்தனமுல்லை said...

மறுபடியும் செம touchy போஸ்ட் அமித்து அம்மா! மிக உருக்கமாகவும் உண்மையாகவும் இருக்கிறது அமித்து அம்மா!

அமிர்தவர்ஷினி அம்மா said...

Vidhoosh said...
எல்லாத் தந்தைகளுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

நல்ல கதை அமிர்தவர்ஷினி அம்மா:)

கதை அல்ல நிஜம் திரு. விதூஷ்.

இதற்கு பின்னூட்டமிட்டவர்கள் அனேகம் பேர் சொன்னது போல், இந்தப் பதிவை எழுதும் போது, நான் அழுதேன் என் அப்பாவை நினைத்து.

உணர்வுகளை உணர்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள்

Rithu`s Dad said...

நெகிழ்ச்சியாக இருக்கிறது! மிக அருமையான பதிவு..! இதை வாசிக்கும் அனைவரின் தந்தையர்களயும் நீங்கள் கண்டிப்பாக நினைவு கூறவைத்துள்ளீர்கள்.. ஒன்று கவனித்தீர்களா.. அவர் அவர் தாயகவோ தந்தையாகவே ஆனால் மட்டுமே அதன் மதிப்பு தெரிகிறது!! இல்லயா???

துபாய் ராஜா said...

நெகிழ வைத்தன அனைத்து வரிகளுமே.

அக்கா சொன்னதுபோல் அப்பா எப்போதும் உங்களையும், வர்ஷூவையும் பார்த்து கொண்டுதான் இருப்பார்.

வர்ஷூவின் அப்பாவிற்கும் தந்தையர்தின வாழ்த்துக்கள்.

கே.என்.சிவராமன் said...

ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு அமித்து அம்மா... எதை பின்னூட்டமா எழுதினாலும், அது உங்க உணர்வுகளை பகிர்ந்துக்கறதா சத்தியமா ஆகாது. Life is stranger than fiction.. இது நகுலன் சொன்னது... இதை நான் வழிமொழியறேன்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Thamira said...

நெகிழ்ச்சியான இன்னொரு பதிவு அமித்து அம்மா. என்ன பதிலிடுவது என்றே தெரியவில்லை.

sakthi said...

இதை எழுதும் போது கண்ணீர் மல்கியதென்னவோ நிஜம்.

படிக்கும் போது எனக்கும் அமித்துஅம்மா....

நசரேயன் said...

அன்பு கடிதம் கடிதம் நல்லா இருக்கு

குடுகுடுப்பை said...

தந்தையர் தினம் வந்தவுடன் உங்கள் ஞாபகம்தான் வந்தது.

அடுத்த ஆண் பிள்ளை பிறந்தால் அப்பா பேர வெச்சிடுங்க..

மாதேவி said...

படிக்கும் ஒவ்வொருவருக்கும் தந்தையின் அன்புடன் கூடிய இனிய நினைவுகளை வரவைத்துவிட்டீர்கள்.

எல்லாத் தந்தைகளுக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.

நர்சிம் said...

//எனக்கு தந்தையாய் தெரிந்த நீ, மற்றவர் கண்களுக்கு தாத்தாவாகிப் போனாய்//

இது போன்ற நிறைய வரிகள் மிக அற்புதமாய் என்ற வார்த்தையை விட மிக நெருக்கமாய் சொன்ன வார்த்தைகள் என்றே படுகிறது..

மிக நல்ல பதிவு.

Dhiyana said...

மனம் கனத்து விட்டது அமித்து அம்மா. கண் கலங்கி விட்டது. மற்றுமொரு நெகிழ்வான பதிவு..

"உழவன்" "Uzhavan" said...

உறவுகளின் வலிமையை உணர்வுப்பூர்வமாகச் சொல்லியுள்ளீர்கள்.
பின்னூட்டமிட வேறு வார்த்தைகளில்லை

குடந்தை அன்புமணி said...

அழுத்தமாகவும், உருக்கமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது இப்பதிவு!

அ.மு.செய்யது said...

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

உங்களுடையை ஏக்கத்தையும் மனச்சுமையையும் கொட்டி தீர்த்து
வைத்திருக்கிறீர்கள்.கொஞ்ச‌ம் க‌ண்க‌ள் குள‌மாகி போன‌தென்னவோ
உண்மை தான்.

வலையுலகம் வடிகால் தானே...

மாதவராஜ் said...

மெனக்கெடாத வார்த்தைகளால், எவ்வளவு அழுத்தத்தையும், அடர்த்தியான நினைவுகளையும் மீட்ட முடிகிறது! உண்மைக்கும், எளிமைக்கும் இருக்கும் வலிமை எதற்கும் இல்லை என்பதை தெளிவு படுத்துகின்றன உங்கள் எழுத்துக்கள்.

அன்புடன் அருணா said...

படித்ததும் மனம் நெகிழ்ந்தது....அருமையான மனதைத் தொடும் பதிவு....

ஜாபர் அலி said...

மாதவராஜ் அவர்களின் வலைப்பூ வழியாய் இங்கு வந்தேன். அவர் சொல்லியுள்ளதுபோல், உண்மைக்கும், எளிமைக்கும் பலம் அதிகம்தான். இப்பதிவு என்னை மிகவும் கலங்க வைத்தது; உங்களை நினைத்து மட்டுமல்ல, என் மகளை நினைத்தும்தான். ஆம்.. இதேபோல் ஒரு மடல் அவளும் எழுதுவாள் பின்னொரு நாள். ஆனால் அன்று நான்......

காயப்படும்போதெல்லாம், ‘எப்படி.... எப்படி இது சாத்தியமானது?' என்று மனம் குழம்பும்; தவிக்கும். கடந்த காலம் அத்தனையும், பொடிப்பொடியாய் உடைந்து நொறுங்கும். அதன் விளைவாய், கனவுகளால் கட்டப்பட்ட எதிர்காலமும், காற்றில் கரைந்து அழிந்து மறையும். நாம் மட்டும் அந்தரத்தில் தனியாய்; அனாதையாய்.

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதை, விஞ்ஞானமும், மெய்ஞானமும் அவரவர் பாதையில் விளக்குகின்றன. கிடைத்த வினையை, நமது (பழைய) வினைக்கான எதிர்வினையாகக் கொண்டால், நம் வினையும் அழியும்; நாம் நேசிப்பவர்களுக்கும் புதிய வினைக் கணக்கு தொடங்காதிருக்கும். இதுவே நாம் நம் குழந்தைகளுக்குச் செய்யும் பேருதவி. காலத்தால் மட்டுமல்ல, காயத்தாலும் காக்க பெற்றோர்களால் இயலும்.

வாழ்த்துக்களுடன்
ஹரன்.

Unknown said...

மாதவராஜ் அவர்களின் வலைப்பூ வழியாய் இங்கு வந்தேன்.

இதை படிக்கும்போது என் கண்ணீர் மல்கியதென்னவோ நிஜம்