19 June 2009

பிறர்க்கின்னா......

மண்ணு மேல ஒக்காந்துகிட்டு பொண்ணப் பத்தி தப்பா பேசாத சண்முகம்,என்றபடியே சிரித்துக்கொண்டே, எழுந்து நின்று லுங்கியின் பின்புறம் தட்டிக்கொண்டார் பிள்ளையார் (அவரின் உண்மை பெயர் கணேசன், எக்கச்சக்கமாக வளர்ந்த தொப்பையின் காரணமாக புள்ளையார் என்பது பெயராயிற்றாம்)யோவ் போய்யா, இவ்ளோ நேரமா ஒக்காந்து கேட்டுக்கிட்டு, நோவாம டீயையும் குடிச்சுட்டு கடைசில எனக்கே சொல்றியா. போய்யா எழுந்து வூட்டுக்கு. புதுதாய் குடிபோன வீட்டின் காம்பவுண்ட்டிற்குள் சாயந்திரம் நான் நுழைந்த போது என் காதில் விழுந்த முதல் காட்சியின் சம்பாஷணை இது.

8 குடும்பங்கள் வசிக்கும், நாங்கள் புதிதாய் குடிபோன காம்பவுண்ட்டில் சண்முகம் என்பவரும் ஒரு குடித்தனக்காரர். சண்முகம், காய் வியாபாரம் செய்பவர். அந்த தெருவில் இருப்போர் ஏனைய பேர் தூரம் கருதி மார்க்கெட்டுக்கு போகாமல் அவரிடமே காய் வாங்கிவிடுவார்கள்.

காலை 4 மணிக்கு எழுந்து மாலை 2,3 மணி வரை எல்லாக் காய்களையும் எங்கள் தெருவிலும், இன்னும் ஏனைய ஏரியாவிலும் தள்ளுவண்டியில் வைத்து விற்றுவிட்டு, மாலை 5 மணிக்கு மேல் புள்ளையாரும், அவரும் பட்டறைப் போட்டுக்கொண்டு அந்த தெரு பெண்களைப் பற்றியெல்லாம் பேசித்தீர்ப்பார்கள்.சண்முகம் என்ற காய்க்காரரின் வாய்க்குள் யாரும் தப்பாமல் போகமுடியாது. சாயங்காலம் வேலை விட்டு வீட்டுக்குப் போகும் பெண்கள், ட்யூஷன் படித்துவிட்டு வரும் , டைப் ரைட்டிங்க் க்ளாஸ் போய்விட்டு வரும் மாணவிகள் என எவரையும் அவர் விட்டு வைக்க மாட்டார். த்தோ போதே அது என்று என்னமோ ஆடு மாடை சொல்லும் ரேஞ்சுக்கு ஆரம்பித்து, கதை கதையாக கட்டுவார். ஏதாவது வேலை நிமித்தம், நாம் அந்த இடத்தை க்ராஸ் செய்தால், கண்டிப்பாய் காதில் விழும். அவர் வாய்க்கு நானும் தப்பியிருக்க முடியாதென்றே நினைக்கின்றேன்.

பேகைப் பாரு, மாட்டலைப் பாரு இந்த வயசுல, பின்னலப் பார் என்று வயசுப் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை உடை குறித்தும், நடை குறித்தும் சிரித்துக்கொண்டே அவர் பேசும் பேச்சு, இழுத்து வைத்து கன்னம் கன்னமாய் அறையலாம் போல வரும். வியப்பிலும் வியப்பு என்னவென்றால், அந்தப் பெண்கள் இவரிடம் காய் வாங்க வரும்போது அவ்வளவு இயல்பாக அளவளாவுவார். என்ன ராஜூ அம்மா, என்ன ரமேஷ் அம்மா, என்ன திவ்யாம்மா, மெக்கானிக் எப்படியிருக்காரு என்று ஆரம்பித்து 5 நிமிடம் காய் வாங்கும் நிகழ்வை 15 நிமிடம் நீட்டுவார், பலர் பொறுமை இழந்து, காய்க்காரே மீதி சில்லரை குடு என்று சிடுசிடுக்கும் வரை அவர் பேச்சு நீளும். இவரின் பேச்சு தொந்தரவுக்கு பயந்து இவரிடம் வியாபாரம் செய்யாத பெண்களின் நிலை இன்னமும் மோசம். இன்னா, ஒரு வாரமா கூடை மார்க்கெட்டுக்கே போவுது. ம், எதாவது ஆத்திர அவசரத்துக்கு நம்ம கடைக்குத்தான் வரணும் என்று திகிலூட்டவும் செய்வார். மொத்தத்தில் அவரின் வாய்க்கு பயந்தே அந்தத் தெரு பெண்கள் அவரிடம் காய் வாங்கிக் கொண்டிருந்தனர்.

எனக்கு அவரைக்கண்டாலே எரிச்சலாக வரும். அவருக்கு செல்வி என்று ஒரு மகளும், சரவணன் என்ற மகனும் இருந்தார்கள். எப்போதாவது அவரின் டபுள் மீனிங்க் வசனங்களை கேட்க நேர்ந்தால், டென்ஷனாகி அக்காவிடம், ஒரு நா இல்லனா ஒரு நாளு, அந்த காய்க்காரு எங்கிட்ட நல்லா வாங்கிக்கட்டிக்கபோறார் பாருக்கா. ஏய், வேணாம், அந்தாளு கிட்ட வெச்சுக்காதே, தெருவுல உக்காந்து அந்தாளு ஏடா கூடமா நம்மளப் பத்தியும் பேசுவான். கடவுளேனு போ, அதுக்குண்டான பலன அவன் அனுபவிச்சுப்பான் என்று பதில் வரும். கண்டும் காணாமலேயே காலம் ஓடியது. சரியாய் செல்வி 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் அது நடந்தது.

அந்த வீட்டில் எல்லார்க்கும் பொதுவான மாடி இருந்தது,. வெய்யிலை முன்னிட்டு குடியிருப்பவர்களில் பாதி பேர் மாடியில் தான் படுத்துக்க்கொள்வார்கள். அதில் அம்மாவும் அடக்கம், சில சமயங்களில் உடன் நாங்களும். அதில் ஒருநாள் இரவு 10 மணி வாக்கில், நாங்கள் கீழே சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அம்மா சாப்பிட்டுவிட்டு மாடிக்கு போய் படுத்துவிட்டார்கள். காய்க்காரின் மொத்த குடும்பமும் அங்கேதான் படுக்கும். அன்று செல்வி மட்டும் முன்னமே போய் படுத்துவிட்டது. காய்க்காரர், அவர் மனைவி, மகன் எல்லாரும் ஏதோ சீரியல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். திடிரென்று அம்மாவின், குரல் கேட்டது, திருடன், திருடன், புடி, புடி, சம்பத்தே, புடிப்பா புடிப்பா என்று. சாப்பிட்டுக்கொண்டிருந்த மாமா அப்படியே எழுந்து ஓட, இன்னும் வீட்டில் குடியிருப்பவர் எல்லோரும் துரத்திக்கொண்டு ஓட அடுத்தத் தெருவின் முனையில் வைத்து அவனைப் பிடித்தார்கள். நாங்கள் அனைவரும் காம்பவுண்ட்டிற்குள் அழுது கொண்டிருந்த செல்வியிடமும்,என் அம்மாவிடமும் என்னாயிற்று என்று விசாரித்துக்கொண்டிருந்தோம். விஷயம் இதுதான், அம்மா போய் படுத்த சில நிமிடங்களுக்கெல்லாம், செல்வியும் போய் படுத்திருக்கிறது. படுக்கும் போது என்ன ஆயா, சாப்டீங்களா என்று கேட்டதால் அம்மாவிற்கு விழிப்பு தட்டி முழித்துக்கொண்டுதான் படுத்திருக்கிறார்கள்.

செல்வி படுத்துவிட்ட அடுத்த சில நிமிடங்களில் ஒரு உருவம் செல்வி பக்கத்தில் படுக்க, அரைகுறை வெளிச்சத்தில் பார்த்த அம்மா சுதாரிப்பதற்குள், செல்வி கத்த, தொடர்ந்து அம்மாவும் கத்தியிருக்கிறார். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத அந்த உருவம், ஒரே பாய்ச்சலாக வெளியே ஓடிப்போனது. மாமா மற்றும் பலரும் போய் பிடித்து விசாரித்ததால், அவன் பக்கத்து வீட்டிற்கு புதிதாய் குடிவந்த கார் மெக்கானிக். குடி போதையில் தெரியாமல் இந்த மாடிக்கு வந்துவிட்டானாம், மன்னித்து விட்டுவிடுங்கள், அவன் ‘அந்த’ மாதிரி பையன் கெடையாது என்பது அவன் அம்மாவின் வாதம். சரி விஷயத்தை பெரிசு பண்ண வேண்டாம். வயசுப்பொண்ணு, ஸ்கூலுக்கு போகும் வரும் போது எதாவது ப்ரச்சனையாகப் போகுது என்று அவனை நாலு தட்டி தட்டி அனுப்பி வைத்தாயிற்று. அத்தோடு மாமா, அம்மாவையும் இனிமேல் மாடியில் போய் படுக்கக்கூடாது என்று தடை விதித்தார். நாங்களும் இனி மாடிக்குப் போய் படிக்கக்கூடாது என்று கல்விக்கும், காற்றுக்கும் 144 போட்டார்கள். காற்று வசதிப்பத்தாத அம்மாதான் ரொம்ப நாள் அந்த மெக்கானிக் பையனை கரிச்சுக்கொட்டிக்கொண்டே இருந்தார்கள். இந்த சம்பவம் நடந்த அடுத்த மூணு மாதத்திற்குள், அந்த கார் மெக்கானிக்கிற்கு கல்யாணம் நடந்துவிட்டது. அந்தப் பொண்ணு கூட அழகா இருந்தது. எங்கள் காம்பவுண்டில் இருக்கும் யாருக்கும் பத்திரிக்கை வைக்கவில்லை !!!.

அந்த சம்பவத்திற்குப் பிறகு ஏனோ காய்க்காரர் முன்பை விட கொஞ்சம் அடக்கியே வாசித்தார், அடிக்கடி சம்பத் தடுத்ததால அவன் பொழைச்சான், இல்லனா நான் அவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போயிருப்பேன் என்று உதார் விட்டுக்கொண்டிருந்தார். மாமாவிடம் கேட்டதற்கு அந்தாளு எங்கடி, அந்த பையனை ஒரு அடி கூட அடிக்கல, அப்படியே முழிச்சிக்கிட்டு நிக்கறான். தெருவுல பாதிப்பேருக்கு என்னமோ அது நம்ம வீட்டுல நடந்த விஷயம்னு நெனச்சிக்கிட்டாங்க ! என்றார்.

விதி அத்தோடு காய்க்காரரை விடவில்லை. செல்வி பத்தாவதில் இரண்டு பாடங்கள் கோட் அடித்தது. மேலும் படிக்கவும் விருப்பமில்லை என்று சொல்லி, வீட்டிலேயே இருந்துவிட்டது. வளர்ந்த பெண்ணை, எவ்வளவு நாள் வீட்டிலேயே சும்மா வைத்துக்கொண்டிருப்பது என, காய்க்காரரின் அக்கா மகனான அய்யப்பனுக்கே கட்டி கொடுக்க முடிவாகியது. அய்யப்பன், அய்யோ பாவம், செல்வியின் உடம்பில் பாதிதான் இருப்பான். செல்வியின் ஊதிப்போன உடம்புக்கு தைராய்டுதான் காரணம் என பின்வரும் வருடங்களில் தான் தெரிந்தது. கல்யாணமும் நடந்தது, நாங்களும் அந்த வீட்டைவிட்டு காலி செய்து கொண்டு அடுத்த தெரு போய்விட்டோம். பிறிதொரு நாள், அந்த காம்பவுண்டில் குடியிருக்கும் ஒருவர், சும்மா பார்த்துட்டுப்போகலாம்னு வந்தேன் என்று எங்கள் வீட்டிற்கு வந்தார். நான் சும்மா இல்லாமல், என்ன தேவியம்மா, காய்க்கார் இன்னும் அப்படியேதான் இருக்காரா. செல்விக்கு கல்யாணம் ஆச்சே, எப்படியிருக்கு என்றார். கேட்டதுதான் தாமதம், தான் வந்ததே அதை சொல்லத்தான் என்பதைப் போல, அதையேன் கேக்கறீங்க என்று நீட்டி முழக்கியதில் இடையில் 2 காபி உள்ளே போனது.

அதாகப்பட்டது, செல்வி கல்யாணமாகி கிராமத்திலிருக்கும் (வேலூர் பக்கம்) அத்தை வீட்டுக்குப் போக, அதுவரை அப்பாவின் அக்காவாக இருந்த அத்தை, செல்வி போன பிறகு அய்யப்பனின் அம்மாவாகிவிட்டார் போலும். 10 மணி வரைக்கும் தூங்குது, சாணி கரைச்சு வாசல் தெளிக்க தெரிலை, அது தெரில, இது தெரில, தெனமும், பொரியல் இருந்தாதான் சாப்பாடு எறங்குது. பத்தாத கொறைக்கு, அய்யப்பனிடம் டி.வி. வாங்க சொல்லி நச்சரிப்பாம். அய்யப்பன் என்ன வேலை செய்து கொண்டிருந்தான் என்பது அப்போதும், அதற்குப்பிறகும் எங்களுக்கு தெரியவில்லை.

இப்படியாய் குற்றப்பத்திரிக்கை நீள, ஏதோ ஒரு கல்யாணத்திற்காக சென்னை வந்த செல்வி, அப்படியே அம்மா வீட்டில் டெண்ட். கொஞ்சம் நாள் கழித்து, வேணும்னா, அய்யப்பன் இங்க வரட்டும், நான் அந்த ஊருக்கு போகமாட்டேன் என்று கொடி பிடிக்க, அய்யப்பனின் அம்மாவோ, நான் வெச்சிருக்கறது ஒத்த புள்ள, அத அங்க அனுப்பிவெச்சுட்டு இங்க காடு கழனிய யாரு பாக்குறது. அதெல்லாம் முடியாது என்று இழுக்க, இழுபறி நீண்டு விஷயம் விவாகரத்து வரைக்கும் போய்விட்டது.

நீளமாய் பேசி முடித்த தேவியம்மா, கடைசியில் சொன்னது இதுதான், மத்த பொண்ணுங்களப்பத்தி அவ்வளோ பேசினாரே, அந்தப் பாவம் சும்மா விடுமா, சொல்லுங்க. இப்ப அந்த தெருவே அதைதான் சொல்லுது. பாருங்க இப்ப, செல்வியப்பா வீட்ட விட்டு வெளிய வந்து ஓக்காரதே இல்ல. 6 மணிக்கு மேல எங்கயோ நைட் வாட்ச்மேன் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாரு. வாசல்ல கூட யார் கிட்டயும் அவ்வளவா பேசறது கெடையாது. என்ன, பாவம் அந்த வெகுளிப்பொண்ணு செல்விதான்.

பி.கு. இரண்டு வாரங்களுக்கு முன்னர் அம்மா வீட்டுக்கு போயிருக்கும்ப்போது, வழியில் காய்க்காரரை பார்க்க நேர்ந்தது. எப்படிம்மா இருக்க, குழந்த எப்படியிருக்குது என்று விசாரித்தார். நல்லா இருக்குறா என்ற ஒற்றை சொல்லைத் தவிர எதுவுமே பேசவரவில்லை அவரிடம். செல்வி எப்படியிருக்கா என்று கேட்க தோணியது, ஆனால் அவரின் தளர்ந்த நடை, என்னை என்னவோ செய்தது. மறக்காமல் இந்த பதிவின் முதல் வாக்கியமும் ஞாபகத்திற்கு வந்தது.

20 comments:

கே.என்.சிவராமன் said...

எல்லாரோட வாழ்க்கைலயும் இப்படி முற்பகல் - பிற்பகல் அனுபவம் இருக்கு இல்லையா? தப்பு செஞ்சா, தண்டனை கிடைக்கும்ங்கறா மாதிரி.

ஒரு புனைவா இதை எழுதியிருக்கலாம்னு தோணுது அமித்து அம்மா.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நிஜத்தை புனைவாக்கத் தோணலை திரு. சிவராமன்.

வருகைக்கு நன்றி.

நட்புடன் ஜமால் said...

படித்து கொண்டிருக்கையிலேயே அந்த குறள் தான் ஞாபகம் வந்தது ...

ஆனால்

பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்

இதுவும் ஞாபகம் வந்தது ...

ஜானி வாக்கர் said...

ஊருக்கு ஒருவர் இதுபோல இருப்பது வாடிக்கை, பூக்காரி, காய்கறி வண்டிக்காரர் என்று.

இன்று புறம் பேசுபவர்க்கு நாளை நிச்சயம் காலம் பதில் சொல்லும் என்பது நியதி.

அப்படி பேசுவதை கண்டு மனம் வெதும்பாமல் நாம் உண்டு நாம் வேலை உண்டு என்று இருந்தால் பெரிய பதிப்பு இருக்காது.

அப்பாவி முரு said...

நிஜமோ, புனைவோ

பாதிக்கப்பட்ட செல்வியின் வாழ்கைக்கு விடையில்லையே

Thamira said...

சிறுகதை படித்த உணர்வு. இறுதி வரிகளில் செல்வி பாவம் என்று முடித்திருப்பது யோசனைக்குரியது..

நர்சிம் said...

மிக நல்ல, தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக் கொண்ட பதிவு.

அமுதா said...

/*என்ன, பாவம் அந்த வெகுளிப்பொண்ணு செல்விதான்.
*/
ஆமாம். அப்பா செஞ்ச தப்புக்கு பொண்ணு கஷ்டப்படறது பாவம். நல்ல நடை அமித்து அம்மா.

அன்புடன் அருணா said...

இதுமாதிரி பூக்கார,பால்காரர் கதைகளெல்லாம் சுவாரஸ்யமானது அமித்து அம்மா!

"உழவன்" "Uzhavan" said...

இப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது என்பதைக் கூறும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அமித்துமா.

//இப்ப அந்த தெருவே அதைதான் சொல்லுது//

இப்போது இவர்களும் அவரைப்போலவே பேச ஆரம்பித்து விட்டார்களா? :-(

பிடிக்காத குடும்பங்களை அழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில், செய்வினை அது இது என்று வைத்த குடும்பங்கள், தன் வாழ்நாளிலேயே அந்த பாவத்தை அனுபவிப்பதை இன்னும் கிராமங்களில் காணமுடிகிறது. வள்ளுவன் சொன்னது போல "பிறர்க்கின்னா.. பிறர்க்கின்னா தான்"

குடந்தை அன்புமணி said...

ஊருக்கு நாலு பேரு இப்படித்தான் இருப்பாங்க. அவங்களுக்குன்னு வந்தபிறகுதான் வலியின் வேதனை புரியும். செல்விக்கு விடிவு பிறக்கட்டும்!

Vidhya Chandrasekaran said...

தனக்கு வந்தா தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்ங்கற சொல்லுக்கு ஏற்ற பதிவு.

ச.முத்துவேல் said...

சிறுகதை என்று ஏன் label போடவில்லையோ? கோபி கிருஷ்ணன்கூட தன்னோட வாழ்வில் ஏற்பட்டிருக்கிற அனுபவங்களைத்தான் சிறுகதைகளாக எழுதியிருக்காரு. பேச்சு வழக்கில் எழுதியிருப்பது நெருக்கமாக இருக்கிறது.

அ.மு.செய்யது said...

//ஒரு புனைவா இதை எழுதியிருக்கலாம்னு தோணுது அமித்து அம்மா.//

இதையே தான் நானும் சொல்லலாம்னு நினைச்சேன்.

ஒரு சிறுகதையாக்கியிருக்கலாம்.இண்ட்ஸ்ரஸ்டா போச்சு.நீளம் தெரியல..

கிருத்திகா ஸ்ரீதர் said...

கலக்குறீங்க அமித்து அம்மா... வாழ்த்துக்கள்.

RAMYA said...

புறம் பேசுபவர்கள் பேசிவிட்டு அதை மறந்தும் விடுவார்கள்
ஆனால் பாதிக்கப் பட்டவர்கள்..

அவர்களுக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

பாதிக்கப் பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றங்களும் நிகழ வேண்டும் அமிர்தவர்ஷினியாம்மா!

சந்தனமுல்லை said...

எனக்கும்,எங்கள் ஊர் சண்முகம் கேரக்டர் நினைவுக்கு வந்து விட்டது! ஹ்ம்ம்....

தமிழ் அமுதன் said...

இதை ஒரு சிறுகதை வடிவில் கொடுத்து இருக்கலாமோ என நினைக்க தோன்றுகிறது! நல்ல இயல்பான நடை! அதன் உள்ளிருக்கும் நீதி பாராட்டுக்குரியது!

விக்னேஷ்வரி said...

அதையேன் கேக்கறீங்க என்று நீட்டி முழக்கியதில் இடையில் 2 காபி உள்ளே போனது. //

ஹாஹாஹா.... இந்த மாதிரி நிறைய பேர் ஓசி காபிக்காகவே வருவாங்க.

பாவம் காய்கறிக்காரர். ஆனாலும் பிறர்க்கின்னா.... சரிதானோ?

துபாய் ராஜா said...

அரசன் அன்று கேட்பான்.தெய்வம் நின்று கேட்கும் என்றாலும் பரிதாபபடாமல் இருக்கமுடியவில்லை.