11 November 2008

சா பூ த்ரீ

சென்ற ஞாயிற்றுக்கிழமை நான், அமித்து, சஞ்சு (என் கணவரின் அண்ணன் மகள்) மூவரும் சா, பூ, த்ரி விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது சா, பூ என்று ஆரம்பித்தால் அமித்துவுக்கு வாய் கொள்ளாத சிரிப்பு, அவள் தன் பாட்டுக்கு கையை ஏதோதோ செய்து கொண்டிருந்தாள்.

நேற்று நானும் அமித்துவும் சா, பூ, த்ரி விளையாடினோம். அப்போதும் சிரித்தாள். ஆனால் நான் த்ரீ என்று சொல்லி முடிக்கும் போது கையை சரியாக க்ளாப் செய்தாற் போல வைத்துக்கொண்டாள். அடுத்த் அடுத்த முறை சொல்லும் போதெ அது போலவே செய்தாள். ஆனால் அவளுக்கு கையை திருப்பி வைப்பது பழகவில்லை.

ஒருநாள், எனது சர்டிபிகேட் ஒன்றை எனது பீரோவில் தேடிக்கொண்டிருந்தேன். நிறைய பேப்பர்கள் வேண்டியது, வேண்டாதது என. அதனால் எல்லாவற்றையும் கீழே எடுத்து வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் சர்டிபிகேட் ஆராய்ச்சிக்கு எனது ஆராய்ச்சி மணி அமித்துவும் மிகவும் “உறுதுணை”யாக இருந்தாள். நான் வேண்டாமென்று போடும் பேப்பரையெல்லாம் கிழிப்பது, இடையிடையே ஆய், ஊய், அச்ச்க்கா, க்காளி என்று தனக்குள்ளே பேசுகிறாள். சற்று நேரத்தில் அது போரடித்து விட்டதால் நான் வேண்டுமென்று எடுத்து வைக்கும் பேப்பர்கள் பக்கம் வந்தாள். அம்மு இதெல்லாம் உனக்கு வேண்டாண்டா என்று சொல்லியவாறே அவள் கிழித்த ஒரு பேப்பரை எடுத்து அவளிடம் கொடுத்து இந்தா, இதை கோழிக்கு போட்டுட்டுவா என்றேன். அவளும் அதை கையில் எடுத்துக்கொண்டு முட்டி போட்டுக்கொண்டே வாசல் தாண்டி போனாள், சிறிது நேரத்தில் வந்துவிட்டாள். மறுபடியும் அதகளம். பொறுக்கமாட்டாமல் மறுபடியும் ஒரு பேப்பர் துண்டினை எடுத்து, இந்தா, இதையும் கோழிக்கு போட்டுட்டுவா என்றேன். மறுபடியும் வாசல் தாண்டி முட்டி போட்டுக்கொண்டு அவளது பயணம். எனக்கு அப்போதுதான் உரைத்தது, குழந்தையை இப்படி வெளியேற்றுகிறோமே, பாவம் அவளுக்கு முட்டி வலிக்குமே, சே என்று என்னை நொந்து எட்டி பார்த்தில் இதோ இதைத்தான் அவள் செய்து கொண்டிருந்தாள்

பேப்பரை கோழி இருக்கும் திசை நீட்டி, ம், ம் கொய்யீ , ந்தா ந்தா, ச்சுக்கா, த்தா என்று ஏதேதோ பேசியவாறு.

சர்டிபிகேட்டாவது ஒன்னாவது, என் பெண்ணை தூக்கி கொஞ்சி அகமகிழ்ந்து போனேன்.

அமித்து ஒரு அஞ்சு மணி அலாரம். ஆம் சரியாய் 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவாள். நமக்குதான் தூக்கம் கண்ணை பிடுங்கும். இதனால் அவளை என் கணவர் எடுத்துக்கொண்டுபோய் கீழ் ரூமில் இருக்கும் அமித்துவின் தாத்தா பாட்டிக் கிட்டே விட்டுவிடுவார். நான் 6 மணிக்கு போய் அமித்துவுக்கு அட்டெனன்ஸ் கொடுத்து விட்டு அடுத்தகட்ட வேலைகளுக்கு ஆயத்தமாவேன். போனவுடன் கையை நெற்றியில் வைத்து குட்மார்னிங் சொல்லுவாள். இப்படி இருக்க, கீழ் வீட்டில் இருக்கும் ஆச்சி, அவரின் பேரன் ராகேஷ் இருவரும் எழுந்து வரும்போது, முந்தா நாள் அமித்து, ஆக்கே ஆக்கே (ராகேஷ்) - என்று கூப்பிட்டு நெற்றியில் கைவத்து குட்மார்னிங் செய்தாளாம். இதை ஆச்சி சொல்லி சொல்லி ஆச்சர்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆத்தி - எதிர் வீட்டு கார்த்திக்கு என் மகள் வைத்திருக்கும் பெயர்.

அம்மு - மாடு எப்படி கத்தும் - ம்மா ம்மா
காக்கா எப்படி கத்தும் - கா கா
கோழி எப்ப்டி கத்தும் - கொய்யீ
பூனை எப்படி கத்தும் - நாலு பல் தெரிய சிரிப்பாள்
ஆச்சி எப்படி சிரிச்சாங்க - அவர்களை பார்த்துக்கொண்ட்டே க்கா க்கா க்கா
கார்த்தி எப்படி அழுவான் - ஆஆன் ஆஆன் ஆஅன்
அமிர்தவர்ஷினி எப்படி அழுவா - ம் ஆஅன் (அப்புறம் ஒரு சிரிப்பு)

ஆச்சி, அமிர்தவர்ஷினியை நான் ஆபிஸ் வந்ததும் விசாரிப்பார்களாம், அம்மு - யசோ எங்கே - விளையாடுவதை விட்டு விட்டு ஒரு செகண்ட் திரும்பி - BYE BYE என்று கையசைத்துவிட்டு மறுபடியும் விளையாட்டில் ஈடுபடுவாளாம் என் மகள்.

ம்.
என் மகளே,
உன்னைக் கொஞ்ச எனக்கு வாய்த்திருக்கிறது இரவுகள்
உன் குறும்புகளை ரசிக்க வாய்த்திருக்கிறது வார இறுதிகள்
இடைப்பட்ட நேரங்களில்
எல்லோரும் மகிழ, என் காதால் கேட்க
ஏதாவது செய்துகொண்டிரு.
நான் கேட்பதிலாவது இன்புற்றுகொள்கிறேன்.

22 comments:

அமுதா said...

/*ம். என் மகளே, உன்னைக் கொஞ்ச எனக்கு வாய்த்திருக்கிறது இரவுகள் உன் குறும்புகளை ரசிக்க வாய்த்திருக்கிறது வார இறுதிகள் இடைப்பட்ட நேரங்களில் எல்லோரும் மகிழ, என் காதால் கேட்க ஏதாவது செய்துகொண்டிரு. நான் கேட்பதிலாவது இன்புற்றுகொள்கிறேன். */
உங்கள் ஏக்கம் புரிகிறது. இரவுகளும், வாரயிறுதிகளும் இனிமை பொங்கட்டும்... அமித்துவின் வளரும் மழலையில்...

தமிழ் அமுதன் said...

நல்லா அழகா சின்ன புள்ளைங்களோட
வெளையாடி ரசிச்சு, அனுபவிச்சு
கதை சொல்லுறீங்க?கடைசில தான்
சின்னதா ஒரு பாரத்த தூக்கி வைச்சுட்டு
போயிடுறீங்க!

தீதும் நன்றும் பிறர் தர வாரா. சிறுமைக்கும் ஏனைப் பெருமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்

அப்புறம் இதெல்லாம் எதுக்கு?

ராமலக்ஷ்மி said...

இழக்கும் இன்பங்களும் தவற விடும் இனிய தருணங்களும் உங்கள் இளம் தளிரின் எதிர்காலத்துக்காகவும்தான் என்பதை எண்ணித் தேறிடுங்கள்.

கொஞ்ச வாய்த்த இரவுகளும் ரசிக்க வாய்த்த வார இறுதிகளும் பொக்கிஷங்களாக இருக்க இடைப்பட்ட நாட்களின் தடங்கலைத் தாங்கிடுங்கள்.

நல்ல பதிவு.

குடுகுடுப்பை said...

மகள் பாசம் புள்ளரிக்க வைக்குதுங்க.
ஆனாலும் உத்தியோகம் பெண்கள் லட்சணம். படிச்சது வீணாக கூடாது.

நந்து f/o நிலா said...

ஆஹா அருமை.

9 மாத குழந்தையா ரொம்ப ரொம்ப இண்ரெஸ்டிங் டைம் இது :). புதிது புதிதாய் முளைக்கும் ஒவ்வொரு வார்த்தையும் அந்த நாள் முழுவதையும் ஆக்ரமித்துக்கொள்ளும் :)

ஏன் பாரா பிரித்து எழுதுவதில்லை?

செட்டிங்க்ஸில் எதுவும் ப்ரச்சனையா?

cheena (சீனா) said...

அருமைச் செல்லம் அமித்துவின் கொஞ்சலும் குறும்பும் அமித்து அம்மாவினை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தத் தானெ செய்யும். நல்வாழ்த்துகள் பதிவினிற்கு - நல்லாசிகள் அமித்துவிற்கு

மோனிபுவன் அம்மா said...

இல்லை டி நீ சொன்னவுடன் அதை படித்தேன் மிகவும் சந்தோஷமாக இருந்தது. என் பிள்ளைகளை நியாபகம் படுத்தியது அமிர்தாவின் சேட்டைகள்.

Anonymous said...

ரெம்பவே அனுபவித்து ரசித்து எழுதியிருக்கிறீர்கள்.
என்னோட கண்மணிக்கு இன்னும் பதினைந்து நாட்களில் மூன்று வயதாகப் போகிறது . நானும் வேலைக்கு போவதால் கிடைக்கும் நேரத்தில் அவளுடன் enjoy பண்ணுவேன்.
இருந்தாலும் சில நேரங்களில் , பேசாமல் வேலையை விட்டுவிட்டால் என்ன என்று தோன்றும்.

தமிழ்நதி said...

அமிர்தவர்ஷினி, இது உங்கள் சொந்தப் பெயரானால் உங்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. அமித்து என்பவள்'அமிழ்து'இற்கு இணையானவளாகத்தான் இருக்கவேண்டும். அதை எத்தனை ரசித்து எழுதியிருக்கிறீர்கள்! தாய்மையின் அழகை அந்த எழுத்தில் காணமுடிந்தது. சின்னச் சின்னச் சந்தோசங்களாலானது வாழ்க்கை என்கிறார்கள். 'சின்னச் சின்னச் சந்தோசங்கள்'என்று இங்கு குறிப்பிடுவது மழலைகளைத்தானோ... எனது வலைப்பூ பக்கம் வந்து வாசித்துப் போயிருந்தீர்கள். மிகவும் நன்றி. நான் இன்னமும் எழுதப் பழகிக்கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். என்றாலும் அமிர்தா,யாராவது புகழ்ந்து சொன்னால் மகிழ்ச்சியாகத்தானிருக்கிறது:)

தமிழ்நதி said...

ம் அமிர்தவர்ஷினி என்பது உங்கள் மகளின் பெயராக இருக்கும். அதைத்தான் 'அமித்து'என்றழைக்கிறீர்கள் போல... நான்தான் தவறாகப் புரிந்துகொண்டேன். மன்னிக்கவும்.

Unknown said...

உங்கள் மொழி வழியே அமித்துவை எங்களுக்கும் காண்பித்து விடுகிறீர்கள்..என் மகளுக்கு பத்து வயதாகிறது, அவள் இப்போது எப்போதும் ப்ரஷ்ஷும் கையுமாக காண்பவை அனைத்தையும் ஓவியமாக்கிக் கொண்டிருக்கிறாள்...குழந்தைகளின் உலகம் தான் எத்தனை இன்பமானது, வண்ணமயமானது, நாமெல்லாம் குழந்தையாக இருக்கும் போது எவ்வளவு இலகுவாக இருந்தோம்..என் மகனின் சேட்டைகள் அவனைப் போலவே நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருக்கிறது...எல்.கே.ஜி படிக்கும் அவன் செய்யும் ரகளைகள்...திட்டினாலோ, அட்வைஸ் டோனில் எதாவது சொன்னால் போதும் ஹை பிட்சில் 'காட்ட்ட்ட்ஜில்ல்லா' என்று கத்துவான்...(அவனுக்கும் அந்த காட்ஜில்லாவுக்கும் என்ன பிணைப்போ, கோபமோ ப்ரியமோ அவனுக்கு மிருகங்கள் தேவை)...நாம் அடங்கும் வரை அவன் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்...ம்மா என்ற சொல்லுக்கு முன்னே இந்த உலகில் எதை வைத்தாலும் அது ஈடாகுமா அமிர்தவர்ஷனி அம்மா...உங்கள் அமித்துவுக்கு என் ப்ரியங்கள்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி அமுதா

நன்றி ஜீவன்
:)-)))))))))

நன்றி ராம் அம்மா உங்களின் அறிவுரைகளுக்கு

நன்றி குடுகுடுப்பை நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்

நன்றி நிலா ப்ஃரண்ட்
அமித்துக்கும் இந்த மாதத்தோடு ஒரு வயது நிறைவடையப்போகிறது. என் ப்ரொபைல் அப்டேட் பண்ணவில்லை. பண்ணனும்.

நான் எழுதும் போது எல்லாம் ஒழுங்காதான் இருக்குறா மாதிரி இருக்கு. போஸ்ட் பண்ணுன பிறகு பார்த்தா எல்லாமே வேற மாதிரி இருக்கு. என்னா செட்டிங்க்ஸோ எனக்கு ஒன்னும் விளங்கல. ஏதோ ஆயில்ஸ் அண்ணனை நச்சரித்ததுல ஏதோ செய்து கொடுத்தார். ஆனா ஏன் இவ்வளவு மோசமா இருக்குதுன்னு தெரியல. என்ன பண்றதுன்னும் புரியல.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி. திரு. சீனா,
முதல் வருகைக்கும்
எனது எல்லா பதிவிற்கும் பின்னூட்டமளித்ததற்கும்

நன்றி கிருஷ்னா

நன்றி குந்தவை முதல் வருகைக்கு.

நன்றி தமிழ்நதி முதல் வருகைக்கு
நான் இன்னமும் எழுதப் பழகிக்கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன்//
இதைத்தான் பெரியோர்கள் தன்னடக்கம் என்கிறார்களோ.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி உமாஷக்தி

உங்கள் பிள்ளைகளுக்கும் எனது பிரியங்களை சொல்லிவிடுங்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

குழந்தைகளின் உலகம் தான் எத்தனை இன்பமானது, //

ஆம் திகட்டவே திகட்டாத இனிப்பான உலகமது.

நந்து f/o நிலா said...

ரொம்ப சிம்பிள் settings->formatting போங்க.

அங்க Convert line breaks ல yes கொடுங்க

save settings கொடுங்க.

அம்புட்டுதான்.


ஹிஹி எனக்கும் இப்படி ஆச்சு. இதுக்கு நாலு நாள் போராடினேன்.

Unknown said...

யக்கா அமித்து ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோஓஓஓஓ ஸ்வீட்.. :))))))
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதார் நிஜமான உண்மை.. :)))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

தெய்வமே
உங்க கையை காட்டுங்க.

ரொம்ப நன்றி நிலா ப்ஃரண்ட்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ஸ்ரீமா

ஆமா மழலை சொல் இனிது
செயல்கள் அதனினும் இனிது.

Unknown said...

Akka naan anuppina mail vandhadhaa??

Bee'morgan said...

அப்பா.. என்னமா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.. படிக்கும் போதே அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு.. :) :)

Uma said...

உங்களின் கவிதை என் நிலையையும் சித்தரிக்கிறது.