30 October 2009

பாவனைகளும், வார்த்தையும் - 2

வார்த்தை

குண்டிக்கு நேரே கிழியாத ரெண்டு ட்ரவுசரும், எல்லாப் பொத்தான்களும் இருக்கும் ஒரு சட்டையையும் எடுத்து மடித்து, மடிப்பு கலையாமலிருக்க ட்ரங்கு பெட்டியின் அடியி......... இப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்தக் கதை. சோலையப்பன் என்ற எட்டாம்வகுப்பு சிறுவன் பள்ளி சுற்றுலாவுக்கு செல்ல ஆயத்தமாவதே கதை.

பள்ளியில் கன்னியாகுமரி, சுசீந்திரம் என இரண்டு நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். சோலையப்பனும் தன் பெயரை கொடுத்து, 10 ரூபாய் முன்பணமும் தந்துவிடுகிறான். ஆறுநாட்களாக பள்ளியிலும், வீட்டிலும் இதே பேச்சாகவும் ஏற்பாடாகவும் இருக்கிறது. ட்ரைவர் மாமா வீட்டிலிருந்து துணிகளும் இன்னபிறவும் எடுத்துச் செல்ல பையை வாங்கிவருகிறான். அவர்கள் வீட்டில் நல்ல ஏர் பேக் இருந்தாலும், கேட்டுப்பார்த்து அதைத் தராமல், ரொம்பவும் பழசாகிப்போன தூசி மண்டிய பேகையே தருகிறார்கள். கேட்டது கிடைக்காத ஏமாற்றத்தோடு வாங்கி வந்த பேகையே தேங்காயெண்ணெய் போட்டு துடைத்து வைக்கிறான். அவனுக்கு பாடம் சொல்லித்தரும் அண்ணனிடம் இருக்கும் கூலிங்கிளாஸை கேட்கிறான். அவரும் சோலையின் தொடர் நச்சரிப்பைத் தாள முடியாமல் நீ போற அன்னைக்கு காலைல வந்து வாங்கிக்கடா என்கிறார்.

கூட வரும் பையனோடு பவுடர், முகக்கண்ணாடி இத்யாதிகள் பகிர்ந்துகொள்ள ஏற்பாடு செய்தாயிற்று. பேப்பரில் பல்பொடியை கொட்டி மடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.இரண்டு நாள் கட்டுச்சோற்றுக்கு பேப்பரும், இலையை அவனின் அய்யா வாங்கிவருவதாக சொல்லிவிட்டார். கட்டுச்சோற்றை நினைத்தால் சோலைக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடுகிறது. அய்யாவின் துண்டை வாங்கி துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நின்றால், எழுந்தால், நடந்தால் என வகுப்பு சிறுவர்கள் அனைவருக்கும் சுற்றுலா ஞாபகந்தான். ஆசிரியரிடம் கன்னியாகுமரில என்ன சார் இருக்கும். அவரும் கடல்,விவேகானந்தர் பாறை, காந்திமண்டபம் இருக்கும் எனவும், காந்தி ஜெயந்தி அன்னிக்கு மட்டும் மண்டபத்து மேல் சூரிய ஒளி விழும் என்கிறார். சிறுவர்கள் அனைவரும், அது எப்படி சார்! அன்னிக்கு மட்டும் விழும் என கேட்க,

அது அப்படித்தாம்லே மூதி,, பாடத்தை கவனிங்க, மீதிய நாளைக்கி சொல்றேன் எனப் போய்விடுகிறார். சுற்றுலா செல்லும் நாளன்று இரவே கட்டுச்சோறும், உடைமைகள் சகிதம் பள்ளியில் வந்து தங்கிவிடவேண்டும். இரவு ஒரு மணிக்கு மேல் புறப்படும் சுற்றுலா பேருந்தில் காலை கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்ப்பதாக ஏற்பாடு. சுற்றுலா புறப்படுவதற்கான நாளும் வந்தது. காலையில் என்றுமில்லாத உற்சாகத்தையும், கனவையும் சுமந்து பள்ளிக்கு செல்கிறான் சோலை. கொஞ்ச நேரம் கழித்து, பேர் கொடுத்து முன் பணம் கட்டின பசங்களெல்லாம் மீதி காசை கொடுங்க. இல்லனா ராவுக்கு பள்ளிக்கு வரவேணாம் என்று நான்கைந்து பெயர்களை உரகக் சொல்ல,சோலையின் பெயரும் இருக்கிறது. மீதி பணம் வாங்கி வர சோலை வீடு நோக்கி ஓடுகிறான்.

வீடு பூட்டிக்கிடக்கிறது, கதவை ஒரு எத்தி எத்திவிட்டு ஓட, சோலையின் அம்மா, இன்னார் வீட்டு வயலில் களை எடுக்கப்போயிருப்பதாக சொல்லிகிறார்கள். ம்மா, யம்மா என்று கூப்பிடும்போதே அழுகை வந்துவிடுகிறது, அவளும் களை எடுப்பதை விட்டுவிட்டு என்ன ராசா, ஏன் இப்படி ஓடியாந்த, ஏன் அழுவுற என்கிறாள். பள்ளிக்கூடத்துல மீதி காசு கட்டனும்மா என சொல்ல, உங்க அய்யா, நாயக்கரய்யா கிட்ட சொல்லி வாங்கியாரன்னு போயிருக்காருப்பா, சாயங்காலத்துக்குள்ள வாங்கியாந்துடுவாரு, நீ பள்ளிக்கோடத்துக்குப் போ ராசா என, ப்போ, காசு இல்லாம நான் போ மாட்டேன், எனக்கு இப்ப காசு வாங்கிக்கொடு என அடம் பிடிக்க, அவளோ களை எடுத்து முடித்துவிட்டு, நாயக்கர் வீட்டுக்கு செல்கிறார்கள். நாயக்கரம்மாவோ, அவ்வளோ காசெல்லாம் எங்கிட்ட இல்ல, அய்யா வரட்டும், அவுரு உங்கூட்டுக்காரர கூட்டிக்கிட்டு மூட்டைய ஏத்திக்கிட்டு டவுனுக்கு போயிருக்காரு என்று சொல்லி, அழுது கொண்டே இருக்கும் சோலையைப் பார்த்து பரிதாபப்பட்டு, மோர் குடிக்கிறியா என்கிறாள். வேகமாக வேண்டாம் என்கிறான்.

ஏமாற்றமடைந்த சோலையின் அம்மாவும் யார் யாரிடமோ காசு கேட்டுப்பார்க்கிறாள். எல்லோரும் கைவிரித்துவிட, நேரம் கூடிக்கொண்டே போகிறது, சோலை அழுது, அழுது தொண்டை கட்டி, விடுகிறது. இதற்குள் பள்ளி விட்டு வந்த சிறுவர்கள், என்னடா சோல, நீ வல்லியா என இன்னும் அழுகை அதிகமாகி கண், மூஞ்செல்லாம் வீங்கி விடுகிறது. அவனைப் பார்த்து சோலையின் அம்மாவும் அழுகிறாள். அவ்வளவு பெரிய தொகைக்கு தானெங்கேப் போவது, நாம விசாகத்திருவிழாவுக்கு திருச்செந்தூர் போவோம்ம்பா என்றெல்லாம் சமாதானப்படுத்துகிறாள். எதற்கும் மசியாமல், இரவு சாப்பாடு கூட சாப்பிடாமல், அழுது கொண்டே தூங்கிப்போகிறான் சோலை.

ஏற்கனவே பத்து ரூபா முன் பணம் தந்திருக்கு, இப்ப பத்து ரூபா வேணா வாங்கிக்கோ, மீதிய ரெண்டு நா கழிச்சு பார்க்கலாம் என்று நாயக்கரய்யா கை விரித்து விட, இன்னும் நாலைந்து பேரிடம் கேட்டுப்பார்த்து அங்கேயும் ஒன்றும் பெயராததில், பசி வாட்டி எடுத்தாலும் அன்றைய இரவு நாயக்கர் தெரு மடத்திலேயே தங்கிவிட்டார் சோலையின் அய்யா.

ஆறேழு நாளா, ஊருக்கு போற ஆசைல இருந்த புள்ள அழுதுகிட்டு இருந்தத பாத்தவங்க வந்து சொல்ல அந்த பரிதாப முகத்தைப் தன்னால் பார்க்கவும், அவனுக்கு சமாதானம் சொல்ல தன்னிடம் வார்த்தையேதும் இல்லாமல் போக, பசி பொருட்படுத்தாது அங்கேயே துண்டை விரித்து படுத்துவிட்டார் சோலையின் அய்யா.

கதை முழுவதும் சுற்றுலா செல்வதற்கு முன்னதான ஆயத்த துள்ளலும், ஏமாற்றத்தின் வேதனையும் சோலையின் மூலமாக காட்சிப்படுத்தப்படுகிறது.

வறுமைக்கு தின்னக் கொடுத்த வாழ்க்கையில் சோத்துக்கு இல்லாதது ஒரு பக்கமிருக்க, இப்படி ஆசைகளெல்லாம் நிராசையாகப் போன இன்னொரு வேதனையான கட்டம் தானே இதுவும்.. இதனை நம்மில் பலர் கடந்து வந்திருப்போமல்லவா (சிலராக இருந்தால் மிகவும் சந்தோஷம்)

இந்தக் கதை ரொம்ப நேரம் தூக்கத்தை கெடுத்தது. பதினோராவது படிக்கும் போது பெங்களூர், மைசூர் போக ஏற்பாடு செய்து தலைக்கு 500 ரூபாயென்று சொல்ல, ஒரு மாச வீட்டு வாடகைய கொண்டு போய் அங்க எதுக்கு தண்டமழுவனும், நீ வீட்டுலயே இரு என்று சொல்லப்பட, உடனிருந்த தோழிகளெல்லாம் நான் வராத வருத்தத்தை சுமந்தபடியே பயணம் போய்வந்தார்கள். பின்னொரு நாள் ஆர்.ஆர்.பி தேர்வுக்காக பெங்களூருக்கு ட்ரெயினில் செல்கையில், அந்த ஏமாற்றத்தை சுமந்துகொண்டு சென்றேன்.

இப்படி நிராசையான ஆசைகளையெல்லாம் நினைவுபடுத்திய கதை, முழுத்தொகுதியும் படித்து முடித்து, முடிந்தால் மீதத்தையும் பகிர்கிறேன்.

28 October 2009

அமித்து அப்டேட்ஸ்

பிறரை வெறுப்பேற்றுவதில் அமித்துவுக்கு நிகர் அமித்துதான்.

சான்று 1: தீபாவளி காலையில் புது ட்ரஸ்செல்லாம் போட்டுக்கொண்டு சஞ்சுவோடும், அப்பாவுடனும் சேர்ந்து பட்டாசு வெடித்து முடித்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம்
எதிர் வீட்டு கார்த்தி எங்கள் வீட்டுக்கு வர, அமித்து அவனிடம்

கார்த்தி, நாங்கெல்லாம் நெறிய பட்டாச்சு வெச்சோமே? நீ வெச்சியா........? என ரிப்பீட்டிக்கொண்டிருக்க, ஆம் வெடிச்சேனே என்று ஒரு தடவைக்கு மேல் பதிலளிக்க முடியாமல் கார்த்தி என்னை பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

......

சான்று 2: ஆயா, தாத்தா, அமித்து மூவரும் ஊரிலிருக்கும் அத்தை வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்க, சஞ்சு தானும் வருவதாக ஒரே அழுகை. அவள் அழுவதைப் பார்த்த பின்னும் அமித்து,

பாப்பா மத்துந்தான் ஊர்ருக்கு...

இதைக்கேட்டபின் சஞ்சுவின் அழுகையின் டெம்போ இன்னும் கூடியிருக்கும் என்பதை நீஙக்ள் அறிந்திருப்பீர்கள்
....

சான்று 3: சஞ்சுவும், அமித்துவும் லாலிபாப் சாப்பிட்டுக்கொண்டிருக்க, அமித்துவின் அப்பா, அமித்துவைப் பார்த்து உனக்குப் சாக்லெட்லாம் புடிக்காதே, இப்ப என்னடான்ன இப்படி சாப்பிடற, வேணாம்மா என சொல்ல, பதிலுக்கு அமித்து, ம், ஆப்புடுவனே, என லாலிபாப்பை வாய்க்குள் வைத்து ஒரு இழு இழுத்து, எப்பூடி...? என்று சொல்ல.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

......

நான், சஞ்சு, கார்த்தி எல்லோரும் வண்டலூர் ஜூ சென்ற போது எடுத்த போட்டோக்களை கம்ப்யூட்டரில் போட்டு பார்த்துக்கொண்டிருந்தோம்.

யானை, முதலை, புலி போட்டோகள் வரும் போது, நாங்க அண்டலூர்ல ஜூ ல பாத்தமே?, யானை ஆ சாப்புடுச்சு பார்ரேன் என மேடம் ரன்னிங்க் கமெண்ட்ரி அடித்துக்கொண்டிருந்தார்கள்.

வழக்கம் போல நான் ஆ வென்று பார்த்துக்கொண்டிருந்தேன், போட்டோவை அல்ல.

.......

அதே போல் அவள் முதல் வருட பிறந்தநாள் போட்டோக்களையும் பார்த்துக்கொண்டிருந்த போது, கேக் வெட்டும் போட்டோ வரும் போது, அமித்து மிக உற்சாகமாகி, ஏ ப்பாப்பாக்கு ஆப்பி பத்த டேஏஏஏ. காலைல வந்துச்சு. (நான் வழக்கம் போல ஆ....)

(ஹாப்பி பர்த் டே வார்த்தை உபயம் சுட்டி டிவி) தினமும் அதில் குழந்தைகளின் போட்டோவோடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரும். ஒருநாள் வர்ஷினி என்று ஏதோ ஒரு குழந்தையின் போட்டோவுடன் பெயர் உச்சரிப்பாகி விட, அர்ச்சினி சொன்னாங்கே என்று வெட்கச்சிரிப்பு வேறு மேடத்துக்கு.

...

அமித்துவுக்கு கோன் மருதாணி, நெயில் பாலீஷ், கலர் சாந்து போன்றவை விருப்பமாயிருக்கின்றன.

ஒரு முறை நெயில் பாலீஷ் அவள் கை விரலுக்கு வைத்து முடித்தவுடன், இங்க, காலுல என்றாள். வைத்தேன்.

பிறகு நெயில் பாலிஷை கையிலெடுத்துக்கொண்டு என்னிடம் நீ வெச்சிக்கோ என்றாள். வேணாம்மா, அம்மாக்கு வைக்க வேணாம் என்று கையை மடக்கிக்கொண்டேன்.பிறகு காலில் வைத்துக்கொள்ள சொன்னாள். வேணாம்மா, அம்மாக்கு புடிக்காது என்றேன்.

கொஞ்ச நேரம் நெயில் பாலிஷை தன்னிடமே வைத்துக்கொண்டு, என்னை நோக்கி வேணாமா, நல்லா இக்கும், சூப்பா இக்கும் வேணாமா உனுக்கு என்று கேட்க, சிரித்துக்கொண்டே சரி காலிலாவது வைத்துக்கொள்கிறேன் என கீழ்ப்படிந்தாகிவிட்டது.

.......

ஏதாவது பொம்மைப் போட்ட புக்கை எடுத்து வைத்துக்கொண்டு, எச்சொ, ம்மா, இங்க ஆ, சொல்லிக்குடு என்றாகிறது

சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தோமானால், மேடம் எனக்கு முன்னாடியே மீனு, கொங்கு, இங்கம், புலி, பட்டப்ளை என வாசிப்பு தொடங்கி விட, நான் தான் மழலை மொழியில் ரிப்பீட்டிக்கொண்டிருக்கிறேன்.

.....

மேடம் கடந்த சனிக்கிழமையிலிருந்து தொடர்ந்த நான்கு நாட்கள் அவள் அத்தை வீட்டில் ஆயா, தாத்தாவோடு டேரா. இன்று காலை சென்னை ரிட்டர்ன். காலையில் அவளின் மாமா போன் செய்து, உங்க பொண்ணு கெளம்பிட்டா, தைதாப்பேட்டக்கு போறேன், பாய் அப்படின்னு சொன்னா.

நான் அவளுக்கு ஒரு பேரு வெச்சிருக்கேன், உலக மகா வாயாடின்னு.., இந்தப் பட்டத்திற்கான அவர் சொன்ன சான்றுகளில் ரெண்டு.(நானும் ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் அம்மாவாக நினைத்துக்கொண்டு ம் கொட்டிக்கொண்டிருந்தேன்)

சான்று 1: குண்டு மிளகாயை காம்போடு பேனா மூடியில் கவிழ்த்து விட்டு தலைகீழாழ் வைத்து மாமா ஆப்பிள் பார்ங்க என்று சொல்லியிருக்கிறாள்.

பதிலுக்கு அவரோ இல்லம்மா, இது மிளகாய் என்றிருக்கிறார்.

பேனா மூடியிலிருந்து மிளகாயை வெளியே எடுத்துப்பின் நேராக வைத்து ஆம்மா, இது மெளகா, காதும் என்றிருக்கிறாள்.

....

சான்று 2: அங்கு போன போது பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணியைப் பார்த்து, தாத்தா தண்ணி என்று கேட்க, பதிலுக்கு அவர் சூடா இருக்கும்மா, ஆறட்டும் என சொல்ல, ஏதாவது கிடைக்காமல் போனால் அது கிடைக்கும் வரை ஆஆஆஆ ந்ன்னு ஒரு ஸ்டார்ட் மீஜிக்கை எப்போதும் தன் வாய் வசம் வைத்திருக்கும் அலறலை ஆரம்பிக்க, தம்ளரில் தண்ணி தரப்பட்டிருக்கிறது.

குடித்துவிட்டு தம்ளரை திருப்பித் தரும்போது, தண்ணி ஜில்லுன் தான் இக்கு, சூடா இல்லியே.

டோட்டல் பேமிலியும் பல்பு வாங்கியிருக்கிறார்கள்.

யாம் பெற்றுக்கொண்டிருக்கும் இன்பம் பெறுக இவ்வையகம்.

27 October 2009

மத்தாப்பூ, பாம்பூ, பட்டாசு, ஆக்கெட்டு, தீபாளி - தொடர்பதிவு

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
அமிர்தவர்ஷினி அம்மா (அமித்துவுக்கு அம்மாவான பிறகுதான் வாழ்க்கை சுவாரஸ்யமடைந்ததால் இந்தப் பெயரே ஒரு சிறுகுறிப்புதான்!)

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?
ஐந்தாவதோ இல்லை ஆறாவது படிக்கும்போதா என்று நினைவில்லை. தீபாவளி அன்று இரவு அம்மா, நான், அக்கா மூவரும் ஆளுக்கொரு பென்சில் வெடிகளை கையில் வைத்துக்கொண்டு முனையைப் பற்றிக்கொண்டிருக்க, பரபரவென்று எரிந்து கொண்டே வந்து டப்பென்று வெடித்து எனக்கும் அம்மாவுக்கும் கையெல்லாம் தீக்காயம். அது மறக்கமுடியாதது.

அதையடுத்து வந்த இன்னொரு தீபாவளியில் மதியம் தூங்கி எழுந்திருக்க லேட் சாயங்காலம் ஆகிவிட்டது. அலறி பிடித்து எழுந்து கதவிடுக்கு வழியே வெளியே பார்த்தால் காலை விடியலைப்போல இருந்தது.அடப்பாவி மக்கா, எல்லாரும் என்னை விட்டு எல்லா வெடியையும் வெடிச்சுட்டு, வடை, பாயாசத்தையெல்லாம் தின்னு காலி செஞ்சிருப்பாங்களேன்னு நினைக்க நினைக்க அழுகை ஆத்தாமையா பொங்கிட்டு வந்து, பக்கத்தில் படுத்திருந்த அக்காவை என்ன ஏன் எழுப்பல, என்ன ஏன் எழுப்பல, இப்ப விடிஞ்சுடுச்சு பாரு என கத்த,
அரை குறை தூக்கத்திலிருந்து எழுந்த அக்கா, சரியான ஈயத்தை காச்சு காதுல ஊத்துனாங்க பாருங்க ச்சான்ஸே இல்ல. இன்னிக்கும் தீபாவளி அன்னிக்கு சாயங்காலமாச்சுன்னா எனக்கு இந்த ஞாபகம் வந்துரும்.


3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?
சென்னையில்.

4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
பால்யத்தை தொலைத்தவர்கள் தத்தம் குழந்தைகளின் பால்யத்தின் பரவசத்துக்காகவே, இனிப்பு, புத்தாடை, பட்டாசு என பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாடுவதாகவே நினைக்கத் தோன்றுகிறது.


5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
அமித்துவுக்கு மட்டும் ரெண்டு செட் ட்ரஸ். ஒன்னு அந்தம்மா கேட்ட யெல்லோ கலர்.


6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?
முறுக்கு, அதிரசம், தட்டை (செய்தது நானல்ல, மாமியார் & கம்பெனி)


7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
என் கிட்ட இருக்க கெட்ட பழக்கம். இது போன்ற பண்டிகைகளுக்கு அவ்வளவு ஈடுபாடோடு யாருக்கும் வாழ்த்து தெரிவிக்க மாட்டேன். யாராவது வாழ்த்துகள் அனுப்பினால் பதிலுக்கு நன்றி நவிலல் மட்டுமே.

8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?
தீபாவளி அன்னிக்கு வெளிய சுத்தறதா,என்னா பட்டாசு வெடிக்குதுங்க பய புள்ளைங்க. பட்டாச கீழ வெச்சு வெடிங்கன்னா ராக்கெட்டு கணக்கா எல்லாம் மேலதான் பறக்குது :) தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.


9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?
உதவுவதெதற்கு தீபாவளி, திருநாள் எல்லாம். உண்மையான தேவையிருப்போருக்கு, தேவைப்படுமிடங்களில், தேவைப்படும் நேரங்களில் (நம் கைக் காசைப் பொறுத்து).இல்லனா இப்படி ஒரு தேவையிருக்காம், உதவறீங்களான்னு கூசாம அடுத்தவங்கள கேட்டுடறது.
கேக்கறதுல என்ன குறைஞ்சுடப்போறோம் சொல்லுங்க?.


10) நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
முன்னும், பின்னும் என தீபாவளியைப் பற்றி அனேகமா எல்லாருமே பதிவெழுதிட்டாங்க. தீபாவளி பற்றி படிக்காதது ஒரு சில வலைப்பூக்களில் மட்டுமே. அவர்களில் நால்வர்.

1. பால்யத்தில் நீங்கள் கொண்டாடிய தீபாவளி பற்றி படிக்க ஆசை பா.ராஜாராம் http://karuvelanizhal.blogspot.com/
2. ஆஸ்திரேலியால பட்டாசு கெடைக்குமாங்க சின்ன அம்மிணி :) http://chinnaammini.blogspot.com/
3. நான் ஆதவன் (நல்லா சுத்திவிடுங்க பாஸ், இன்னொரு கொசுவத்தியை :) http://nanaadhavan.blogspot.com/
4. உழவன் (அகமதியோடு கொண்டாடிய தீபாவளி பத்தி சொல்லுங்க) http://tamiluzhavan.blogspot.com/

தேவதைக்கு தேவதை ட்ரஸ்தானே போடனும், என அழகா சொல்லி உடன் என்னையும் தொடர்பதிவில் இணைத்த திரு. கே.வி.ஆருக்கு நன்றிகள். தொடங்கிவைத்த நானானி அம்மாவுக்கும்.


டிஸ்கி: பதிவின் தலைப்பில் இருக்கும் மத்தாப்பூ, பாம்பூ, பட்டாசு, ஆக்கெட்டு, தீபாளி - அமித்து மொழிந்த வார்த்தைகள்

26 October 2009

விருதெனப்படுவது யாதெனின்........

அன்பு, ஆம் வலைப்பக்கங்களில் விருதெனப்படுவது எழுத்துக்கள் வாயிலாக அறிந்தவர்களிடம் தனது அன்பினை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பே.

முதலில் கலங்க கலங்க கவிதை எழுதும் அன்புக்குரிய பா. ராஜாராம்

பிறகு நீதிபதி என்கிற ஈஸ்ட்மென் கலர் படத்துக்கு மிக சுவாரஸ்யமாக விமர்சனம் எழுதிய ப்ரியத்துக்குரிய சின்ன அம்மிணி

இப்போது, நேசத்துக்குரிய மொழிபெயர்ப்பு ஸ்பெஷலிஸ்ட் தீபா (சாதத் ஹசன் மாண்டோ வோட “சாலையோரமாய்” கதைய மொழிபெயர்த்தாங்களே! ஹப்பா, சான்ஸே இல்ல)






இவர்கள் மூவரும் எனக்களித்த அன்பினை, ப்ரியத்தை, நேசத்தை இன்னும் பல பெயர்களோடு, உலகம் உள்ளளவும் மாந்தர் உய்ய உலவிக்கொண்டிருக்கும், யாதுமாகி நின்ற அன்பை இவர்களோடு பகிர்கிறேன்.

இங்கிட்டு தமயந்தி, அங்கிட்டு யாரு என நெல்லை பாஷையில் பட்டாசாக கொளுத்திப் போடும் நிழல்வலை தமயந்தி

தான் கொண்டு வந்த உணர்வுகளை வார்த்தை அடுக்குக்குள் ரகசியமாய் வைத்துவிட்டு படிப்போரை தேடச் செய்யும் சென்ஷி

எல்லையில்லா வாசிப்பனுவத்தை உள்ளடக்கி வைத்திருக்கும் கிருஷ்ணபிரபு

எப்போதுமிருந்து இப்போது அவ்வப்போது வந்து தலைகாட்டிப் போகும் கோவை குசும்புக்கு பெயர் போன தாரணி பிரியா

சந்திப்பினை கூட தன் சுவாரஸ்ய எழுத்தால் சுவை கூட்டி, அவ்வப்போது இயற்பியல் பதிவுகளையும் அள்ளித் தெளிக்கும் வானவில் வீதி கார்த்திக்

பதிவுக்கான பின்னூட்டங்களில் பூங்கொத்துக்களை பரிசளிக்கும் அன்புடன் அருணா மேடம்

எங்கு போனார்கள் என அவ்வப்போது எண்ண அலைகளிலெழுந்து தேடவைக்கும் வடிகால் க்ருத்திகா

கவச குண்டலத்தோடு கர்ணன் பிறந்தா மாதிரி, கையில் கேமிராவோடு பிறந்தார்களா என வியக்க வைக்கும் பொழுதொரு போட்டோவோடு நாளொரு பதிவெழுதும் துளசி டீச்சர்

நகவெட்டியைக் கூட கவிதையின் பாடுபொருளாக்கி, உடன் லேட்டஸ்டாக அகமதி அப்டேட்ஸில் களமிறங்கியிருக்கும் உழவன்

எண்ணற்றவர்களுக்கு ஏணிப்படிகள் வைத்து உதவும் எஸ்.கே

இன்னும் அன்பை பகிர நினைத்தவர்கள் நிறைய பேர், இதோ மேற்கூறியவர்கள் மூலம் அந்த அன்பு நிறைய பேருக்கு விருதின் வாயிலாக பல்கிப் பெருகும் என்று விட்டுவைக்கிறேன் :)

நன்றி.

20 October 2009

வலி சுமந்த வாழ்வினள்

கடந்த வாரம் முழுவதும் மகப்பேறு மருத்துவமனை வாசம். மருத்துவமனை என்றாலே ஒரு பரபரப்பு இருந்துகொண்டே இருக்கிறது. பார்ப்பவர்களையும் அந்தப் பரபரப்பு தொற்றி அவர்களின் பின்னுக்கு போன நினைவலைகளையும் இழுத்து வர செய்துவிடுகிறது.

அக்கா பெண்ணின் முதல் பிரசவத்தில் ஏகப்பட்ட மன + பண உளைச்சல்களிலிருந்து இன்னும் சரி வர மீளாத நிலையில் இரண்டாவது பிரசவம். கடவுளையும் உடன் சில மனிதர்களையும் தவிர துணைக்கு யாரையும் அழைக்கவில்லை. எங்களின் பிரார்த்தனைகள் வீணாகவில்லை, சுகப் பிரசவத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து, ப்பாடா என்று மூச்சு விட முடிந்தது.

அனேகரின் எதிர்பார்ப்புகளையும் முறியடிக்கும் விதமாக இரண்டாவது, மூன்றாவது என தொடர்ச்சியாக பெண்ணாகவே பிறக்க சம்பந்தப்பட்டவர்களின் முகத்தில் சலிப்பை காண நேர்ந்தது. மொத ரெண்டும் பொண்ணும்மா, மூணாவதாவது புள்ளையா இருக்கும்னு பார்த்தோம்..., ரெண்டாவது சிசேரியன், வலியோட வலியா ஒரு புள்ளையா பொறந்திடுச்சின்னா நல்லா இருக்கும், கடவுள் என்ன வெச்சிருக்காரோ என வழி நெடுகிலும் ஆண் பிள்ளைகளுக்கான ஏக்கம் ப்ரார்த்தனைகளினூடே வார்த்தைகளில் தொனித்துக்கொண்டே இருந்தது. மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளில் பத்தில் ஒன்றுதான் ஆண் குழந்தையாக இருந்தது!!!

தொடர்ச்சியாக மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணின் அம்மாவின் சலிப்பான வார்த்தகளை தாங்க முடியாமல் சக பெண்மணி ஒருவர், ஏம்மா, பொண்ணா இருந்து நம்மளே பொண்ணு வேணாம்னு சொன்னா எப்படிம்மா, இதெல்லாம் நம்ம கைய்யிலியா இருக்குது என்ற வார்த்தைகளுக்கு, அந்தப் பெண்ணின் அம்மா , நாமளும் பொண்ணா இருக்கறதாலதாம்மா இதுவும் பொண்ணா போச்சேன்னு ஆதங்கப் படவேண்டியிருக்கு, அப்படி இப்படின்னு பாத்து பாத்து வளர்த்து, ஒருத்தன் கையில புடிச்சு குடித்து, அதுவும் அந்த வலி, இந்த வலின்னு ஏகப்பட்டத அனுபவிக்கனுமா ந்னு இருக்குதும்மா என்று கண்ணில் நீர் துளித்தபடியே சொன்ன வார்த்தைகள் அந்த வார்டை விட்டு வெளியேறிய பின்னும் இன்னும் இம்சித்துக் கொண்டே இருக்கச் செய்கிறது.

பெருத்த வயிற்றை சாய்த்துக்கொண்டு அரை மணிக்கொரு தரம் பாத்ரூமுக்கும், பெட்டுக்குமாக மனைவி பிரசவ வேதனையில் அலைய நேர, அதனை பார்க்க நேரிடும் கணவன்மார்களின் முக வேதனையை நன்றாக உணர முடிகிறது. ப்ரார்த்தனைகளுக்கு வளர்த்து வைத்த தாடியில் புதைந்திருக்கும் முகத்தை மீறி கண்ணில் வலி தெரிகிறது. பார்க்க வரும் நண்பர்களையோ, உறவினர்களையோ பார்த்து சிரிக்க நேர்ந்தாலும் அந்த சிரிப்பு வெறுமையாக இருப்பதை எதிர் இருப்பவர்களால் நன்றாக உணர முடியும் என்றே நினைக்கிறேன். பயப்படாதப்பா, ஒன்னும் பிரச்சினையிருக்காது என்று தோளை தட்டுகிறார்கள்.

லேபர் வார்டு கதவை திறந்து கொண்டு புழு, பூச்சி வந்தால் கூட உள்ளே இருப்பவளை குறித்தான விசாரணை நடக்கின்றது. நொடி, நிமிடம், மணி நேரம், பகல், இரவு என தொடர்ச்சியாக நீள நீள, இரு சார்பிலும் வேதனையை அனுபவித்தபின் உலகிற்கு வந்தடைந்து சில நிமிடத்துளிகளே ஆன ரோஜாப்பூவை துணியில் சுற்றி சம்பந்தபட்டவர்களின் பெயரை சொல்லி அழைக்கிறார்கள்.
குடும்பமே பதட்டமும், ஆவலுமாய் ஓடி வந்து அத்தனை மணி நேர வேதனையும் வாய் முழுக்க பல்லாய், சிரிப்பாய் வெளிப்படுத்தி குழந்தையைப் பார்த்தபின் பெருமூச்சு விட்டு பெரிய உயிரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்து விடுகிறது.

அதுவரை வலியில் துடித்த பின், பூவாய் குழந்தையைப் பார்த்தபின் அதற்கு உணவு தர விழைகிறாள். பின் தனக்கும். துடிதுடித்தடங்கிய வலியில் வயிற்று தசைகள் சுருங்கி பசிக்கு அலையும் போலும். நார்மல் டெலிவரியாகி நான்கு மணி நேரமான பெண்ணுக்கு இட்லி, இடியாப்பம் இப்படி எதுனா கொடுங்க என்று ஆஸ்பத்திரி ஆயா கட்டளை விடுத்துப் போக, அந்தப் பெண்ணுக்கு ஹோட்டலிலிருந்து இட்லியும், சாம்பாரும் வரவழைத்து தரப்பட்டது.
பத்து நாள் சாப்பாட்டையே கண்ணில் பார்க்காத மாதிரி, பறந்தலைந்து கொண்டு அந்தப் பெண்ணும் இட்லியும், சாம்பாரும் குழைத்து இட்லிகளை உள்ளிறக்க, எங்கிருந்தோ ஒடி வந்த அந்தப் பெண்ணின் அம்மா, எம்மா, எம்மா இப்டி சாம்பார ஜாஸ்தியா தொட்டுக்கிட்டு சாப்பிடாதடா, வயிறு உள்ள புண்ணா தான் இருக்கும், பட்டதும் படாமா சாப்பிடும்மா, இனிமே இப்படி பாத்து பாத்துதான் சாப்பிடனும்மா என்று அனுபவமும் அனுசரனையுமாக வார்த்தைகளை விட (இதே அம்மாதான் அந்தப் பெண்ணுக்கு பார்த்து பார்த்து சமைத்துப் போட்டு சாப்பிட வைத்து அழகு பார்த்திருக்கக் கூடும்!), பாவம் அந்தப் பெண் கண்ணில் ஏக்கத்துடனே சாம்பாரைப் பார்த்துக்கொண்டு மீதி இட்லியை எப்படியோ உள்ளிறக்கினாள்.

ஒரு உயிரைத் தருவித்தவுடன் சாப்பாட்டில் ஆரம்பிக்கும் சமரசம் தான், அவள் வாழ்வு முழுதும் தொடர்ச்சியாக சமரசங்களுக்கு உட்பட வைக்கிறதோ? பார்த்து பார்த்து சாப்பிட்டு, பாதி தூங்கி, மீதி முழித்து,பிள்ளைகளை வளர்ப்பதற்காகவே நேசித்துச் செய்யும் வேலையை விடுவது என தொடர்ச்சியாக வாழ்வு நெடுகிலும் சமரசங்கள்.

உயிர் ஜீவிப்பதற்காய் விரிந்து சுருங்கிய வயிற்றின் மீதான வரிகள் அழிய, ஏதேதோ எண்ணெய்களை கண்டுபிடிக்கிறார்கள். தன் பிறப்பிற்கும், இறப்பிற்கும், ஆசாபாசங்களுக்கும் நடுவில் இன்னொரு ஜீவனை உயிர்ப்பித்தலின் பொருட்டு சமரசங்களுக்காக சுருங்கிக்கொண்டே போகும் அவளது வாழ்வின் வலிகளை அழிக்க அப்படி ஏதேனும் கண்டுபிடிப்பிருக்கிறதா?