23 November 2009

நவம்பர் 24, 2007

எண்ணியபோதெல்லாம் வீடியோவில் நிகழ்வுகளாக ஓடும் ஜூலை 3, 2006 எப்படி நினைவிலிருக்கிறதோ, ஆடியோவும் வீடியோவும் இல்லாமலேயே சுவாரஸ்யமான நிகழ்வுகளும், அதை ஒட்டிய நினைவுகளுமாய் பசுமையாய் நெஞ்சில் நிற்கிறது நவம்பர் 24, 2007.

அமிர்தவர்ஷினி வந்தாள் - எங்கள் அகவுலகத்தை அழகிலும் அழகு செய்தாள்.

ங்கா,ங்கா என்று தொடங்கி... இப்போது சத்தீச்குமா.. எச்சோ என்று எங்களின் பெயரை உச்சரிக்கும் போது அக மகிழ்கிறது.

டே டே இருடா, வர்ரண்டா என்று அவள் சொல்லும்போது இருவரும் ஒருவரையொருவர் திரும்பி பார்த்து சிரித்துக்கொள்கிறோம்.

மகள் கேட்ட ஜெல்லியை வாங்கிவந்து இரவு ஒருமணிக்கு அவள் பக்கத்தில் வைத்துவிட்டு சிரிக்கின்ற எதிர்பார்க்கின்ற தந்தையின் உணர்வுகள் இதற்கு முன் நான் பார்த்திராதது.

சோர்ந்து படுத்துவிட்டால், என்னா எச்சோ, என்னா எச்சோ என்னா ஆச்சு, என்று சுற்றி சுற்றி வந்து கேட்கும் போது சட்டென்று துள்ளியெழுந்துவிடும் மனம். அம்மாவாய் நான் அவளுக்கு அதிகம் செய்ததில்லை,ஆனால் ஒரு மகளாய் எனக்கு அவள் அதிகம் தந்திருக்கிறாள். அமித்தம்மா என்ற ஒரு வார்த்தை போதாதா! சட்டென்று மனம் நிறைந்த உணர்வெழுகிறது.

பாப்பாக்கு ஆப்பி பத்தடே வா?

மங்க்கி மாதி கேக்குதான் வேணும்.

மூண்ணு டெச், யெல்லோ கலர்
என்று தன் விருப்பங்களெல்லாம் முன் மொழியப்படுகிறது.

பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதைவிடவும் என்ன இருக்கிறது வாழ்வில்??? சொல்லப்போனால் நம் பிறப்பே அதற்குத்தானே :)

நாளை (24.11.2009) அமிர்தவர்ஷினியின் பிறந்தநாள்.

தொடர்ந்து பயணித்துவரும் நண்பர்களே!

வலைப்பூவின் வாயிலாக அன்பில் நான் நனைந்த நிறைய நிகழ்வுகள் / நெகிழ்ச்சிகள் உண்டு, அதே போல் உங்களின் வாழ்த்துக்கள் அவளுக்கு மிகவும் முக்கியமானது. வளர்ந்தபின் அமித்து இதைப்படிக்க நேரிடும்போது, உங்கள் ஒவ்வொருவரையும் கேட்க முனையும் அந்த ஆச்சர்ய கணத்தை எதிர்நோக்கி....

நட்புடன்
அமித்து அம்மா

கனவெல்லாம் பலிக்குதே

பாடல்கள் என்றுமே மனதைத் தாண்டி உயிரை வருடுவன. வாசிப்பில் எவ்வளவு அலாதி சுகமோ அது போல தனிமையில் பாடல் கேட்பதும். அனைவருமே இதை உணர்ந்தவர்கள் தான் எனவே அதிகப்படியாய் சிலாகித்து சொல்ல என்ன இருக்கிறது?

சில பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும், பார்க்கும் போது காண சகிக்காது. சில பாடல்கள் விஷுவல்களுக்காகவே பார்க்கத் தோன்றும், ஆனால் வரிகள் சொதப்பலாக இருக்கும். இரண்டும் ஒன்றாய் அமைவது வரம்.

நம் உணர்வுகளோடு இழைந்து வரும் பாடல்கள் நிறைய. பழைய பாடல்கள் தான் அதில் அதிகம் இடம்பிடித்திருக்கின்றன என்றாலும், கொஞ்சம் சமீபத்தில்(2007) வெளிவந்த கிரீடம் என்ற படத்தின் இந்தப் பாடல் மனதையும் கண்களையும் ஒரு சேர நிறைத்து சிலிர்க்க வைக்கும். ரொம்ப நாள் கழித்து இன்று இந்தப் பாடலை கேட்க நேர்ந்தது. பல்விதமான உணர்வுகளின் ஊடே மாமாவும், சபரியும் இந்தப் பாடலை பார்த்துக்கொண்டே ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டதும் நினைவிலிருந்து மீண்டு வந்தது.

ராஜ்கிரணும், அஜீத்தும் நடித்த இதோ அந்தப் பாடலின் வரிகள். இந்தப்பாடலில் ராஜ்கிரணின் நடிப்புணர்வு அற்புதமாய் இருக்கும்.

கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே, வானவில் நிமிடங்கள் நனைகிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே, என்னை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே,
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான் எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே,

கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே

நடைவண்டியில் நீ நடந்த காட்சி இன்னும் கண்களிலே
நாளை உந்தன் பெயரை சொல்லும் பெருமிதங்கள் நெஞ்சினிலே
என் தோளை தாண்டி வளர்ந்ததினால் என் தோழன் நீயல்லவா
என் வேள்வியாவும் வென்றதனால் என் பாதை நீ அல்லவா
சந்தோஷ தேரில் தாவி ஏறி மனமின்று மிதந்திட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே,
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான் எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே,

கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே

கிளி கூட்டில் பொத்திவைத்து புலி வளர்த்தேன் இதுவரையில்
உலகத்தை நீ வென்று விடு உயிர் இருக்கும் அதுவரையில்
என்னாளும் காவல் காப்பவன் நான், என் காவல் நீயல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான் என் தேடல் நீயல்லவா
என் ஆதியந்தம் யாவும் இன்று ஆனந்த கண்ணீரில்
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே,
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான் எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே,

கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே

வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே, வானவில் நிமிடங்கள் நனைகிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே, என்னை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே,
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான் எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே,



மகனோ, மகளோ, ஒரு குழந்தைக்கு தாய், தந்தை என்றாகிவிட்டாலே நிறைய பெருமித கணங்களை சந்திக்க நேரிடும். அப்படி கனவில், உணர்வில் நனையும் பெருமித கணங்களை நம்மை உணரச்செய்யும் பாடல் இது.

20 November 2009

வாழ்த்தலாம் வாங்க

இன்று தன் பத்தாவது வயதில் அடியெடுத்து வைக்கும் மோனி @ மோனிகாவுக்கு (மோனிபுவன் அம்மாவின் மகள்)மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்






வாழ்வில் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று இனிதாய் வாழ வாழ்த்துவோம்.

18 November 2009

தொலைத்ததும், பெற்றதும்.

நான் அனேகமாக பொருட்களை தொலைத்ததுமில்லை,அப்படியே தொலைத்தாலும் என் இழப்பீடுகளை சமன்பாடு செய்ய பின் நாட்களில் பொருட்கள் அவ்வளவாக கிட்டியதுமில்லை. சிலருக்கு அஞ்சு ரூபா தொலைத்தால், அடுத்தாற்போல் ஐம்பது ரூபாய் கிடைக்கும் அதிர்ஷடமெல்லாம் இருந்தது.

முதன் முதலாய் நான் தொலைக்க வேண்டிவந்தது பரிசாய் கிடைத்த குண்டு நீல நிற பேனா, கடையில் இங்க் நிரப்ப தந்தால், நிரப்பிவிட்டு பதினைந்து பைசா வாங்கிக்கொள்வார்கள். நார்மல் பேனாவுக்கு பத்து பைசாதான். பட்டையான பித்தளை நிப், மூடியின் கூடுதலாக சில்வர் கம்பியின் முனையில் பட்டாணி கொட்டை சைஸுக்கு குண்டாய் இருக்கும் அது எனக்கு ரொம்ப பிடித்த பேனா, அது எனக்கு மட்டுமல்ல மஹாலஷ்மிக்கும் பிடிக்கும் என்பது பிற்பாடுதான் தெரிய வந்தது.

வழக்கம் போல ஸ்கூலில், நோட்டில் எழுதிவிட்டு அதற்குள்ளேயே பேனாவை வைத்துவிட்டு, சாப்பாட்டு மணி அடித்ததும் ஹோ வென்று மைதானத்துக்கு வந்தாயிற்று. அவசரமாய் விழுங்கிவிட்டு, தலைமுடி பறக்க, முட்டிக்கால் முகத்தில் இடிக்க என எவ்வளவு விளையாட முடியுமோ அவ்வளவு விளையாடுவதற்குள் அடுத்த மணியும் அடித்தாயிற்று. ச்சே எவ்வளவு சீக்கிரம்ப்பா என்று நொந்து வகுப்பறைக்குள் நுழைந்து நோட்டைத் திறந்தால் பேனாவைக் காணோம். அங்குமிங்கும் தேடி, அழாத குறையாக அவளையும் இவளையும் கேட்டதில் நீ க்ளாஸ்ல வெச்சுட்டு போனியா, இல்லை கையோட எடுத்திட்டு போனியா என்று என்னையே குற்றவாளி குண்டில் நிறுத்தினார்கள். பேனாவுக்காக மெனக்கெட்டு யோசித்ததில், போகும் போது வாயைப்பிளந்து கொண்டு குண்டாக இருந்தது நன்றாக ஞாபகமிருந்தது. அதை சொல்ல வருவதற்குள், டீச்சர் வந்து, டீச்சரிடம் சொல்ல வருவதற்குள் அழுகை வந்தது.

சொல்ல வாயெடுப்பதற்குள் கலைச்செல்வி தன்னிடம் இருக்கும் இன்னொரு பேனாவை என் பக்கம் தள்ளி வைத்துவிட்டாள். அப்போதைக்கு கவனம் டீச்சர் மேல் இல்லாவிட்டாலும் இருப்பது காண்பிப்பது ஒரு மாணவியான எனது கடமை, இல்லாவிட்டால் சாப்பிட்டு வந்த முதல் பீரியட் தூக்கமாய் வரும்,அப்படி தூங்கி கொட்டாவி விடுபவர்களை கொட்டுவதற்காகவே டீச்சர் சிலரை நியமித்திருந்தார்கள். ஏற்கனவே இரு முறை கொட்டு வாங்கிய அனுபவத்தால் அப்போதைக்கு டீச்சர், ப்ளாக் போர்ட், புக் என்று பாவ்லா காட்டிக்கொண்டு மானசீகமாய் குண்டு பேனாவை தேடிக்கொண்டிருந்தேன். ம்ஹூம் கிடைக்கவேயில்லை.

பேனா தொலைத்ததற்கு வீட்டில் திட்டு வாங்கி, பச்சை நிறத்தில் மொக்கை பேனா ஒன்று கைக்கு வந்தது. நாலைந்து நாள் கழித்து கொடுத்த நோட்டைத் திருப்பி வாங்க, அன்று காலை மஹாலஷ்மி வீட்டுக்குப்போனேன், வீடு திறந்து கிடந்தது, எனது நோட், அதற்குக் கீழே அவளின் நோட், அதற்கு மேலே எனது குண்டுப் பேனா. பார்த்தவுடன் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. வீட்டில் யாரையும் காணோம், மஹா என்று கூப்பிடுவதற்குள் சமையலறையில் இருந்து மஹாவின் அம்மா, மஹா வை கடைக்கு அனுப்பியிருப்பதாக பதில் வந்தது. என் நோட்டு கேட்க வந்தேன் என்று சொன்னாலும், பேனா மீது தான் என் கண்கள் இருந்தது. மஹாவும் வந்துவிட்டாள், சட்டென்று அவளின் முகம் மாறியதாக எனக்குத் தோன்றியது, ஆனால் ஏய் நோட்டு, நான் க்ளாசுல தரேன்ப்பா என்றாள், இல்ல இப்ப வேணும் என்றேன். நோட் கைக்கு வந்தது, ப்பேனா மஹா என்றேன் மிகவும் பரிதாபமாக.

பேனாவா ?, ம்மா இங்க வாயேன் என்றதும் எனக்கு சகலமும் ஒடுங்கிப்போனது, கையில் கரண்டியும் கலைந்த தலையுமாக மஹாவின் அம்மாவைப் பார்த்தவுடன் பேச்சே வரவில்லை, மஹா தான், ம்மா இந்தப் பேனா நம்ம சரவணன் மாமா தானே ஊர்ல இருந்து வாங்கியாந்து தந்தது என்றாள். ஆமாம், இப்ப என்ன அதுக்கு என்ற மஹாவின் அம்மாவையும், மஹாவையும் பார்க்க எனக்கு அழுகை கண்ணில் முட்டிக்கொண்டு வந்தது.

இல்ல ஆண்ட்டி, அது என் பேனா, நான் ஸ்கூல்ல தொலைச்சிட்டேன், நாலு நாளா தேடிக்கிட்டிருக்கேன், எங்கம்மா கூட என்னத் திட்டினாங்க.

ஒலகத்திலயே ஒன் பேனா மாதிரி ஒன்னுதான் இருக்குமா, வேற இருக்காதா, இது உன் பேனாதான்றதுக்கு என்னா அத்தாச்சி? இத கேட்கதான் நோட்டு கேட்கற சாக்குல வந்தியா?

இல்ல அது நீல கலர், குண்டு, முனையில் இன்னொரு குண்டு என்று சொல்லிக்கொண்டே வந்தாலும் அது மஹாவுடைய பேனாதான் என்று நிரூபிக்க அவளின் அம்மா வாதாடிக்கொண்டிருந்தார்கள். மஹா என்னையேப் பார்த்துக்கொண்டிருந்தாள். வாதப் பிரதிவாதங்களின் சாமர்த்தியங்கள் ஏதும் அப்போது என் வாய் வசம் வரும் அனுபவங்களைப் பெற்றிருக்கவில்லை ஆதலால்,சட்டென்று எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு விலகிவிட்டேன். என் முகம் மாறி இருந்ததை கண்ணாடி பார்க்காமலேயே என்னால் உணரமுடிந்தது.

வீட்டில் என்னவென்று கேட்டதற்கு எதுவும் சொல்லாமல், ஸ்கூலுக்கு வந்தாயிற்று. ஸ்கூலில் அதே முகபாவம்தான். யார் பொருட்டும், எதன் பொருட்டும் முகம் மாறவேயில்லை, நிகழ்வுகளையொத்து முகபாவங்கள் மாறும் நாள் என்னிலிருந்து அன்று தான் தொடங்கியிருக்கவேண்டும். மஹா வந்தாள், வழக்கம் போல லேட்டாக.

சகஜமாக எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தாலும், என் மீது அவளின் பார்வை வீச்சு அதிகமாக இருப்பதாகப் பட்டது. அவள் வீட்டில் நடந்த நிகழ்வை நான் அதுவரையிலும் யாரிடமும் சொல்லவேயில்லை.

ஆனால் இரண்டு பீரியட் இடைவேளையின் போது, அவள் தான் என் பெஞ்ச்சில் இருக்கும் எல்லோரிடமும் சொன்னாள், நான் அவள் வீட்டுக்குப்போனதையும், பேனா கேட்டதையும். பாருப்பா இது இவ பேனாவாப்பா, என்று பேனாவை வெளியே எடுத்துக்காட்டிய போது, பேனாவின் முனையிலிருக்கும் சில்வர் குண்டு உடைபட்டிருந்தது, என் பேனாவில் இருந்த பித்தளை நிப் சில்வர் கலராக உருமாறியிருந்தது.

மீண்டும் அழுகை முட்டிக்கொண்டுவந்தது, கலைச்செல்வி என்னைத் தேற்றினாள். அழுவாதப்பா, அவ எல்லாத்தையும் செய்றவதான், நீ அழுவாதப்பா.

இல்ல கலை, என் பேனா வை அவ எடுத்துக்கிட்டது கூட பெரிசில்ல, காலைல அவங்க வீட்டுல பார்க்கும் போது அந்தப் பேனா நல்லா இருந்துச்சு, இப்பப் பாரு, அந்த குண்டு உடைஞ்சுப்போயிருக்கு என்று அழுத அழுகையின் ஊடே தெரிந்த மரப்பெஞ்சின் மழமழப்பு இப்போதும் கண்ணில் பசுமையாய் தெரிகிறது.

நீ ஒன்னுத்துக்கும் லாயக்கில்ல, அதது என்ன ஜித்தா, சாமர்த்தியமா பொழைக்குதுப்பாரு என்று அடிக்கடி முழங்கும் அம்மாவின் கூற்று உண்மைதானோ என்று மனதுக்குள் தோன்றி மறைந்தது.

எடுக்கவும், எடுத்ததை மறைக்கவும், மறைத்ததை தனதென்று வாதாட என்னொத்த மஹாலஷ்மிக்கு கற்றுத்தந்தது எது, அவளொத்த எனக்கு கற்றுத்தராதது எது? இப்படி சில நிகழ்வுகள் தான் சிறுமியாக இருந்த எனக்குள் வார்த்தை ஜாலங்களையும்,வாய் சாமர்த்தியங்களையும் கைக்கொள்ளவில்லையானால், நீ மக்கு என்று எடுத்துக்காட்டியதோ?

வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு பின் எங்க எத சொல்லனும், எங்க எத பேசனும்னு கூட தெரியாதா உனக்கு என்ற கேள்விக்கணைகள் துளைத்த பின்னர், நாசூக்காய் பேச, சிரிக்க என எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கை வந்தது.

நீயா ஏன் எல்லாத்தையும் இப்படி முன்னாடியே உளறிக்கொட்டற என்றும், மற்றவர்கள் வாயில் வந்ததை வைத்தே அவர்களை மடக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இன்னும் பற்பல உபதேசங்கள் சாமர்த்திய வாழ்தலை, பிழைத்தலை முன்னிறுத்தியே சொல்லப்பட்டது. சொல்றத சொல்லிட்டு, கடைசியா சிரிச்சுடு என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அது ஒன்றுதான் இன்று வரை கை மன்னிக்கவும் வாய் வரப் பெறவில்லை.

மனதில் தோன்றியதை சட்டென்று சொல்லவும், செய்யவும் முடியாமல், மறைத்து வைத்துக்கொண்டு எப்படி சிரிப்பது அதுவும் சினேகமாய்?

16 November 2009

அமித்து அப்டேட்ஸ்

டெத்தால் இல்லனா சாப்பாடு ல்ல,
சாப்பாடு இல்லனா டெத்தால் ல்ல

அமித்துவின் லேட்டஸ்ட் விளம்பர ரைமிங்க் சாங்க்.

..........

அமித்து தன் கழுத்தில் கை வைத்துக்கொண்டு, ம்மா பாப்பாக்கு ஜுரம் அடிக்குது பார்ரேன்.

இல்லமா.

ல்ல, பாப்பாக்கு ஜூரம் அடிக்குது.

நீ சும்மா சும்மா இதையே சொன்னனா, கண்டிப்பா ஜூரம் வந்துடும். அப்புறம் அம்மா மருந்து ஊத்திருவேன்.

இல்ல ஜூரம் அக்கிது.

சரி மருந்து எடுத்துவரேன் என்று என்னை மறந்து நான் ரிப்பீட்டிக்கொண்டிருக்க, மேடமும் என்னை நோக்கி ஒரு வரியை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

முதலில் புரியாமல் பின்பு அவளிடமே க்ளாரிஃபை செய்ததில் தெரிய வந்த வாக்கியம்

ஏன் இபி அதம்(அடம்) புக்கிற ?????

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

.............

பூனையை, காக்காவை பார்க்கா நேர்ந்தால், எச்சோ, ஆங்க அம்மா எங்க?.

இங்கதாம்மா எங்கியாவது இருக்கும்.

டிஸ்கவரில் நரிகளைப் பற்றி காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.மூன்று குட்டி நரிகள் உலவிக்கொண்டிருந்தன. தூரத்தில் அம்மா நரி ஓடிக்கொண்டிருந்தது.

ம்மா, ஆங்க அம்மா எங்க?

அதோ போகுது பாரு, பெரிசா இருக்கே அதான் அவுங்க அம்மா. அம்மாவை காண்பித்த மகிழ்ச்சியில் நான்.

ஆங்க அம்மா ஆபிச்சுக்கு போவுதா?

:(

...............


அவளின் சின்ன சைக்கிளை ஓட்டிக்கொண்டிருப்பாள், நடுவில் இறங்கி குனிந்து எதையோ செய்வாள்.

என்னமா செய்ற ஓட்டறத விட்டுட்டு?

வண்டி இப்பேர் ஆயிச்சு,

ஓ அப்டியா

சிக் சிக்.. வண்டி ச்சரியாய்ச்சு. ட்டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

..........

மழை நாட்களின் போது, ஆயா பாத்தூம் வர்து.

மழை பெய்தேம்மா,சரி வா என்று குடையைப் பிடித்துக்கொண்டு டாய்லெட் அழைத்துப்போயிருக்கிறார்கள்

ரொம்ப நேரமா அமித்து ஒன்றும் செய்யாமல் இருக்க, என்னமா, பாத்ரூம் போகலியா?

இல்ல ஆய்யா, ச்ச்சும்ம்மாதான் ச்சொன்னேன்.

.......

ஏதோ ஒன்றிற்காக அவளை கிறுக்கி என்று சொன்னேன். பதிலுக்கு அவளும் கிரக்கீ என்றாள்.

இப்போது எனக்கு கிறுக்கியை விட கிரக்கீ என்பது மிகவும் அழகான சொல்லாகப்படுகிறது!!!

..........

ஒருநாள் காலை ஆபிசுக்கு கிளம்பிக்கொண்டிருக்கும் போது, அமித்து சாக்லேட்டைப் பிரித்து கையில் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

சாக்லேட் சாப்பிட்டா இருமல் ஜாஸ்தியாகும், தயவு செய்து கீழ போடு

நாணிக் கோணி சிரித்துக்கொண்டே மறுபடியும் சாக்லேட் வாயிடம் போனது.

வர்ஷா, நீ இப்ப சாக்லேட் சாப்பிட்ட, நான் ட்ரெயினுக்கு உன்னை கூட்டிட்டு போ மாட்டேன். யார் சொன்னாலும், நீ அழுதா கூட கூட்டிட்டு போ மாட்டேன்.

ஒரு நொடிக்கூட தாமதமில்லை, ஆக்கிலேட் ஆய், ஆந்தி வர்ரும், கீழ போட்டுர்ரேன் என்று ஜன்னலை திறந்து வெளியே வீசிவிட்டாள்.

அப்போது சிரித்தாலும்,வெரிகுட் சொன்னாலும்,அன்றையநாள் முழுவதும் குற்ற உணர்வு குறுகுறுத்துக்கொண்டே இருந்தது என்னுள்.

.........