14 December 2010

கோபல்ல கிராமம்

எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு.
அதைச் சொல்வதுதான் கோபல்ல கிராமம்.

தெலுங்கு தேசத்திலிருந்து தமிழகத்தில் தஞ்சமடையும் கம்மவார்களின் வாழ்க்கை முறை பற்றி பதியப்பட்ட நாவல். அற்புதமான நடை. அங்கங்கே மெய்சிலிர்க்க வைக்கும் சில நிகழ்வுகளை கி.ரா அருமையாய் விவரித்திருக்கிறார்.

தெலுங்குதேசத்தில் வளமையான குடும்பத்தில் பிறந்த சென்னாதேவி என்ற பெண்ணின் அழகினை கேள்விப்பட்டு அவளை அடையவிரும்பும் துலுக்க ராஜா. அவரிடமிருந்து சென்னாதேவியை அழைத்துக்கொண்டு சென்னாதேவியின் குடும்பத்தார் மொத்தமும் காட்டுவழியே தப்புகிறார்கள். பின்னால் துலுக்கராஜா அனுப்பிய ஆட்கள் துரத்துகிறார்கள். அப்போது ஒரு பெரிய நதி குறுக்கிட அவர்களிடம் மாட்டிக்கொள்வதை விட நதியில் விழுந்து உயிரைமாய்த்துக்கொள்ள நினைக்கிறார்கள். நதியின் அக்கரையிலிருந்த அரசமரமொன்றுநதிக்கு குறுக்காக வீழ்ந்து அவர்கள் அனைவரையும் ஏந்திக்கொள்ள, அவர்கள் அனைவரும் நதிக்கு அக்கரைக்கு போய்சேர்கிறார்கள். துலுக்க ராஜாவின் ஆட்கள் திரும்பிவிடுகிறார்கள்.

இது தொட்டு ஆரம்பிக்கிறது இவர்களது பயணம். இடையிடையே நிறைய உதவிகளும், இடைஞ்சல்களும் ஏற்படுகிறது. காய்ச்சலாலும், தீராத நடைப்பயணத்தாலும்சென்னாதேவி இறந்துவிடுகிறாள். அவர்களோடு வந்த சில வயதாளிகளும், குழந்தைகளும் இறந்துவிடுகிறார்கள். இருப்பினும் மனம் சோராமல் நடைப்பயணம் தொடரபொட்டி அம்மன் எனப்படும் ஒரு வனதேவதையால் வழிகாட்டப்பட்டு அரவநாடு (தமிழ்நாடு) வந்தடைகிறார்கள். அவர்கள் வந்தடைந்த இடத்தை அவர்கள் தங்கள் கடின உழைப்பினால் செம்மைப்படுத்துவதே கோபல்ல கிராமம் நாவல்.

மங்கத்தாயார் என்ற 139 வயது மூதாட்டி தன் அனுபவங்களை தனது பிள்ளைகளிடம் கதை போல் பகிர்ந்துகொள்வது போல் அமைகிறது கதையின் நடை. அவரின் மகன்களான கோவிந்தப்ப நாயக்கர் முதலான எட்டு மகன்களை உள்ளடக்கிய கோட்டையார் வீடு என்று அனைவராலும் மரியாதையாக அழைக்கப்படும் இவர்களே கதையின் மாந்தர்களாக கதை நெடுகவும் பயணிக்கிறார்கள்.

கம்மாளர்கள் எனப்படும் அவர்கள் அனைவரும் தாம் வந்தடைந்த இடத்தை செம்மைப்படுத்தி வாழ்வதற்கேற்ற இடமாக மாற்றிக்கொண்டதை மிகவும் அற்புதமாக சொல்லியிருக்கிறார் கி.ரா.மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் எழுத்தாக இருக்கிறது.

ஒரு நிலையில் நாட்டை ஆண்ட கும்பினியாளர்கள் கோட்டையார் வீட்டை அணுகி கும்பினி அரசின் சார்பாக அந்த ஊர் மணியமாக இருக்க கோருகிறார்கள். இந்த ஊரின் வளமை அவர்களின் கண்ணை பிடுங்குகிறது. அறுவடைக்கு தயாராகியிருந்த கம்பம் பயிர்களையெல்லாம் விட்டில் பூச்சிகள் வந்து அழித்துவிட ஊரில் பஞ்சம் வந்துவிடுகிறது. இது குறித்து கும்பினிக்கு எழுதி போட்டாலும் எந்த ஒரு பயனுமில்லாது போய்விடவே அவர்கள் அனைவரும் மனமுடைந்து போய்விடுகிறார்கள்.

மேலும் இவர்களின் கிராமம் சாலையோரமாய் அமைந்துவிட, கும்பினியாளர்கள் பளு தூக்கிகளாக இவர்களை பயன்படுத்துகிறார்கள். வெள்ளைக்காரர்களைக் குறித்த ஏகப்பட்ட வதந்திகளாலும், கட்டபொம்முவை தூக்கிலிட்ட செய்தி அறிந்ததாலும் மனமுடைந்த நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் விக்டோரியா மகாராணியார் தானே கும்பினி ஆட்சியை எடுத்தாளப்போவதாகவும், அதன் பொருட்டு நாட்டில் அமைதி நிலவப்போகிறது என்றும் அவரின் பேரறிக்கையை எடுத்துக்கொண்டு மீண்டும் ஊருக்குள் நுழைகிறார்கள் வெள்ளையர்கள்.நிறைய வாக்குறுதிகளை தருகிறார்கள். இந்த மக்களும் விக்டோரியா மகாராணியாரை ராணி மங்கம்மாவாகுக்கு இணையானவராக இருப்பார் என்று ஒப்பிட்டு அவர்களின் வாக்குக்கு உடன்படுகிறார்களென கதை முடிகிறது.

ஆனால் கதையின் இறுதியில் // அப்போது அங்கே நிலவிய அமைதி, வரும் ஒரு புயலுக்கு முன்னுள்ளது என்று யாரும் அறியவில்லை அப்போது // என்று சொல்லியிருப்பார்.

இந்த வாக்கியங்களை படித்து முடித்தபின், இனி கம்மாளர்களின் நிலை என்னவாயிருக்கும் என்று இனம் காண முடியாத ஒரு பயம் வருவதை தவிர்க்கமுடியாது. ஏனெனில் கி.ரா கதையை நடத்திச்சென்றவிதம் அவ்வாறு இருக்கிறது.

கோபல்ல கிராமம்

ஆசிரியர்: கி.ராஜநாராயணன்

பதிப்பகம்: அன்னம்

விலை : ரூ. 80

12 April 2010

சாமி, சாமி, சாமிதான்...

அல்லல் போம், அல்லன போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம், போகாத்துயரம் போம்.... இப்படியாக நடுங்கும் குரலில் அப்பா தினமும் காலையில் பாடிவிட்டு, நெற்றி நிறைய திருநீரை எடுத்து இட்டுக்கொள்வதைப் பார்த்ததுதான் முதலில் கடவுளை பார்த்த அனுபவம். அண்ணாமலையாரே.... என்று இரண்டு கைகளையும் உயரத்தூக்கி அம்மா சாமி கும்பிடும்போதெல்லாம் சிரிப்பாய் வரும். முருகர், பிள்ளையார் போல அண்ணாமலையாரும் ஒரு தனி சாமி என்று ரொம்ப நாள் நினைத்துக்கொண்டிருந்தேன். சிவன் தான் திருவண்ணாமலையார் என்பது சர்வசத்தியமாய் நான் +2 படிக்கும்போதுதான் தெரியவந்தது!.

பொதுவாக, எங்கள் வீட்டில் அனைவருக்கும் ரொம்ப சாமி, சாமி என்று ஓடும் பழக்கமில்லை, ஆனால் அதையெல்லாம் நிறுத்தும் பழக்கமுமில்லை. வழிவழியாக வருவதை அப்படியே கடைப்பிடிப்பதுதான். செலவு ஜாஸ்தியாகிடும்னு நம்ப அம்மா, சாமி கூட ஒழுங்கா கும்பிடாது என்று அக்கா அடிக்கடி கேலி செய்யும். அதாவது நிறைய பழக்கவழக்கங்களை இழுத்து போட்டுக்கொள்ளாமல் இருந்தது அம்மாவின் சாமர்த்தியம். ஆனால் வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லாமல் ஆகிவிட்டதென்றால் உடனே அப்பா பத்திரிக்கை அடித்து, பானகம் கொடுத்துவிடுவார். பத்திரிக்கை என்பது வேப்பிலை என்று அறிக!. பானகம் என்பது திருநீரை நீரில் போட்டுக்கரைத்து மேலே தெளித்து குடிக்க கொடுப்பது. இதற்கும் மேலே, உனக்கு அதை செய்றேன், இதை செய்யறேன் என்று அப்பா தன் குலதெய்வத்துக்கு வேண்டிக்கொள்ளுவார், ஆனால் செய்ததாக சரித்திரமே இல்லை.

பள்ளியின் மதியவேளை முதல் பீரியடில், கொட்டாவி விடும்போது ரோஸபல் டீச்சர் பார்த்துக் கூப்பிட்டு கிள்ளாமல் இருக்கவேண்டுமென்பதே கடவுளை நோக்கிய எனது முதல் வேண்டுதலாக இருந்தது. எங்கள் க்ளாஸுக்கு பக்கத்திலேயே ஒரு வேப்பமரம் இருந்தது. சீக்கிரம் சீக்கிரமாய் சாப்பிட்டுவிட்டு, வேப்பமரத்தை 3 சுற்று சுற்றினால்
ரோஸபல் டீச்சர் அன்று கிள்ளமாட்டார் என்ற காயத்ரியின் நம்பிக்கை எ எ(ன்னை) ங்களையும் தொத்திக்கொள்ள, மூன்று சுற்று 9 சுற்றாயிற்று, கூடவே பக்தி முத்திப்போய் வெள்ளிக்கிழமைகளில் ஊதுபத்தியும், சூடமும் ஏற்றக்கூட தீர்மானமிட்டோம். காரணம் வேப்பமரம் சுற்றும் எங்கள் வேண்டுதலுக்கு நல்ல பலன் கிடைத்து, ரோஸபல் டீச்சரின் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவர் லாங்க் லீவில் போய்விட்டார். அவருக்கு பதிலாக வந்த சகுந்தலா டீச்சர், தூங்குவதில் எங்களைவிட கெட்டிக்காரர், தூங்கவைப்பதிலும். ஆக நினைவு தெரிந்து ஐந்தாவது வகுப்பில் தொடங்கிய இதுதான் எனது முதல் கடவுள் பக்தி கொள்கை.

நாளடைவில் கொஞ்சம் பக்தி முற்றித்தான் போயிற்று. நான், ஆயிஷா, ஒய்.விஜி, எம்.விஜி என எல்லோரும் செட் சேர்ந்து வெள்ளிக்கிழமை மாலைகளில் அம்மன் கோவிலுக்கு போவது. வாசலில் இருக்கும் பெரிய அக்காக்களைப் பார்த்து, நாங்களும் வியாழக்கிழமை மாலையே எல்லா பூஜைசாமான்களையும் புளி போட்டு விளக்கி பளிச்சாக்குவது. பெரிய அக்காக்களின் இந்த பூஜை சாமான் தேய்க்கும் தொழில்நுட்பம் இருக்கிறதே, அது சிவக்க சிவக்க மருதாணி அரைப்பதை ஒத்தது. புளி, கோலமாவு, எச்சில் படாத ப்ரெஷ்ஷான தண்ணீர் என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேர ப்ராஸஸ் அது. புலியை பார்த்து பூனைகள் சூடு போட்ட கணக்காய் நாங்களும் அதை தொடர ஆரம்பித்தோம், எந்த ஒரு முன் தோன்றலும் இல்லாமல்.ஆரம்பத்தில் பக்தி மார்க்கமாக தெரிந்த இந்த பூஜை சாமான் தேய்க்கும் வழக்கம், நாளடைவில் ஒரு பெரிய நேரமிழுக்கும் வேலையாக இருந்தது எனக்குப் புரியவர, ஓசைப்படாமல் நழுவிக்கொள்ள ஆரம்பித்து, அம்மாவிடம் டோஸ் வாங்க ஆரம்பித்த காலகட்டம் தான் கடவுளை இல்லையென்று சொன்ன காலகட்டமும்.

சரியாய் ஞாபகமிருக்கிறது, ஒருநாள் வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போயிருந்த வேளையின் போதுதான் பிள்ளையார் பால்குடிக்க ஆரம்பிக்க, அதனைத் தொடர்ந்து ஆச்சரியத்தில் கோயிலில் கூட்டம் அம்ம ஆரம்பித்தது. ஆளாளுக்கு ஒரு ஸ்பூனை வைத்துக்கொண்டு, பிள்ளையார் பக்கம் நின்று கொண்டிருக்க, வழக்கமாய் கூட்டம் திமிறும் எனது ஆதிகடவுள் நாகாத்தம்மன் தனிஆளாக ஆக்கப்பட்டாள். சரி கோவிலில் தான் பிள்ளையாருக்கு பால் கொடுக்க முடியவில்லையே என்று, வழிநெடுக கதை கதையாய் இதையே பேசிக்கொண்டு வீட்டிற்கு வந்து, கண்ணாடி சட்டம் போட்ட பிள்ளையாருக்கு ஒரு ஸ்பூனால் பாலை கொடுக்க முயற்சிக்க, பால் வழிந்து கண்ணாடியெல்லாம் பிசுபிசுப்பு. மறுநாள் பள்ளியில் இருகூட்டமாய் பிரிந்து,விவாதித்து, தலை சொரிந்து கடைசியில் தி.க கட்சியிலிருந்த மாமாவின் நண்பரான சேகர் அண்ணன் தான் இது போன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் விடையாய், பெரியாரின் சில புத்தகங்களை கொடுத்தார்.

தீ மிதித்தல், நெருப்பு சட்டி தூக்குதல், ராகு கால கல்யாணம், இன்னும்.. இன்னும்.. என நிறைய பரீட்சார்த்த முயற்சிகளை எங்களுக்கு காணக்கொடுத்தார். அதைத் தொடர்ந்து நான் என் சாமி பக்தியையெல்லாம் மொத்தமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு பகுத்தறிவாளியாக தொடங்கியிருந்த சமயம், +2 ரிசல்ட் வந்தது. பிஸிக்ஸில் ஊத்திக்கொண்ட என் ரிசல்ட்டைப் பார்த்த அக்கா பெண், எனக்கு அப்பவே தெரியும்மா, இது ஃபெயிலாகும்னு, சாமி இல்ல, இல்லன்னு ரொம்ப பண்ணுச்சு இல்ல, நாகாத்தம்மா கோயிலுக்கு கூட போகமாட்டாங்க இந்தம்மா.. என்று ஒரே போடாய் போட, கதிகலங்கிப்போயிருந்த என் அறிவுக்கண் பட்டென திறந்து மீண்டும் கடவுளை நம்பத்தொடங்கிவிட்டது. போதாக்குறைக்கு சேகர் அண்ணன் வேறு, குடும்பச்சண்டையில் தற்கொலை செய்து கொள்ள, சாமி இல்ல, இல்லன்னு அப்படி ஆடுனான், இப்பப்பாரு, என்ன கதியாச்சுன்னு என்று நிறைய பேர் கொளுத்திவிட, அதைத் தொடர்ந்து நிறைய எக்ஸாம்பிள்கள் காட்டப்பட, நம்பத்தான் வேணும் போல என்று மீண்டும் பக்திமார்க்கம் எனது மூளைக்குள் நிரப்பப்பட்டது.

தொடர்ந்து, வாயால் மூச்சு விட ஆரம்பித்த எனது வீசிங்க் பிரச்சினைக்கு இன்னதுதான் என்றில்லாமல் எல்லா கடவுளர்களையும் நம்பி, பின்னர் ஜீஸஸ் கால்ஸுக்கு போனை போட்டு ஜபம் செய்ய வைத்தது, லெட்டர் எழுதிப்போட வைத்தது, வாராவாரம் மாலாவோடு சேர்ந்து ப்ரேயருக்கு போகச்செய்தது. இன்னும் வேலை கிடைக்க, வீட்டில் சண்டையென்றால் வேண்டிக்கொள்ள, யாருக்காவது உடம்பு சரியில்லையென்றால், கரண்ட் போனால் பயமகற்ற, வெளியே போனவர்கள் வீட்டுக்கு பத்திரமாய் திரும்பி வர என சகட்டுமேனிக்கு கடவுளை துணைக்கு வைத்துக்கொண்டேன்.

நடுவே பாலஜோதியோடு கூட்டுச்சேர்ந்து மீண்டும் ராமகிருஷ்ணமடம், சாய்பாபா கோவில், மயிலை கபாலீஸ்வரர் என நிறைய ஷேத்ராடனங்கள் புரிந்ததொரு காலகட்டமாக இருந்தது. அப்போதுதான் கல்யாணத்துக்கான வேண்டுதலும் ;) பால்குடம் எடுத்தது என அது ஒரு பெரிய லிஸ்ட்.

எனக்கு + என்னைச்சுற்றி நடந்த நிறைய பாதக / சாதக விஷயங்கள் எனது உள்ளுணர்வோடு வைத்துப்பார்த்தால் ஏதோ ஒரு சக்தி நம்மை ஆட்டுவித்துக்கொண்டு இருக்கிறது என நிறைய தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.

குறிப்பாய் அக்கா பெண்ணின் முதல் பிரசவம். அது போன்ற தீவிரமான தருணங்கள், கடவுள் மறுப்பில் இருப்பவரையும் நம்பச் செய்துவிடும். ஏனெனில் உயிர் என்பது விலை மதிக்க முடியாததாகிவிடுகிறது. அப்படி ஒரு தருணத்தில் தான் தீவிரமாய் தி.க இயக்கத்தில் செயல்பட்ட எனது தோழி கனகதுர்காவின் அப்பா கடவுளை நம்பத்தொடங்கியதும்.!

திருமணம் ஆன பின்னர் பெரிதாய் பூஜை புனஸ்காரங்கள் என்று எதையும் செய்யாமல், சும்மா கும்பலில் கோவிந்தாவாக தூங்கிக்கொண்டிருந்த எனது பக்தி மார்க்கம், பொறுத்தது போதும் பொங்கி எழு என்று அமித்துவின் வருகைக்குப் பின்னர் மீண்டும் தீவிரமடைந்தது. குழந்தை வளர்ப்பின் ஆரம்ப காலகட்டங்கள் கண்டிப்பாய் கடவுளை துணைக்கு வைத்துக்கொள்ளச்செய்யும். அதன்பின் அதை தொடர்வதும், விடுவதும் அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

குலதெய்வ வழிபாடு, ஆடி மாசம் கூழ் ஊற்றுவது, வீடு முழுக்க ஜொலிக்கும் கார்த்திகை தீபம், கிருஷ்ண ஜெயந்தி என சிறிய பண்டிகைகள் மீது எனக்கு அளவு கடந்த பிரியமுண்டு. ஆனால் பெரிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கலின் மீது ஏனோ எனக்கு ஈடுபாடு இருப்பதில்லை. பெரிதாய், தீவிரமாய் எதையும் வேண்டிக்கொள்ளாமல், உடம்பை வருத்தி எதையும் செய்யாமல், அதிகபட்சம் கற்பூரம் கூட ஏற்றாமல், ஆனால் விளக்கேற்றும் போது தோன்றும் அந்த மெல்லிய சுடர் போன்றதுதான் எனது கடவுள் நம்பிக்கை. சில சமயங்களில் என்னை கண்ணீர் விட வைக்குமளவுக்கு உடையச்செய்யும் சம்பவங்களை, ஒரு சிறிய மெல்லிய சுடர்தான் தேற்றுகிறது.

ப்ச்.. என்ன வாழ்க்கை இது என்று உடைந்து போய் மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்கச் செய்த / யும் நிறைய தருணங்கள்,அடுத்தாற் போன்று கடவுள் மீதுதான் என்னை அதிகம் நம்பிக்கை வைக்கச்செய்கிறது. கூட்டமாய் இருந்தாலும் தனியே ஒரு இடம் தேடி அமர்ந்து, மனதிலிருப்பதை முணுமுணுத்துவிட்டு வெளியே வந்தால், மனது அமைதியடைந்தாற் போன்ற ஒரு நிறைவு.

மனிதர்களோடு பேசிப்பேசி வளரும் பிரச்சினைகள் எதிரில் ஒன்று பேசாமலிருக்கின்ற போது குறைந்துவிடுகிறது. பேசாமல் இருக்கும் அந்த ஒன்றுதான் சிலருக்கு கல்லாகவும், என் போன்றோருக்கு கடவுளாகவும் தோற்றமளிக்கிறது. நம்மை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் ஏதோ ஒரு சக்திக்கு, பலிகள், உடல் வருத்தும் காணிக்கைகள், அப்படி இப்படி (உடன் சில பாடாவதி தமிழ் பக்திப்படங்கள்) என பல மாய பிம்பங்களை மனிதர்களே தோற்றுவித்து மலிவாக்கிவிட்டார்கள். இது போன்ற சிலரின் மூடநம்பிக்கைகள் பலருக்கு கேலி கூத்தாகி கடைசியில் கடவுள் என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.

நம்புகிறேன், நம்பிக்கைதானே வாழ்க்கை 

அம்மன் எஃபெக்ட் கொடுத்து என்னை எழுதச்செய்த (கூடவே யோசிக்கவும் வைத்த) முல்லைக்கு நன்றிகள். (உங்கள் இடுகை எனக்கு மிகவும் பிடித்திருந்தது முல்லை.)

29 March 2010

கூனன் குள்ளச்சியின் காதல்

டங்ங்க்... டங்ங்க்...... யாரோ தெருபம்ப்பில் தண்ணியடிக்கும் சத்தம். அந்த நீளக் கைப்பிடியை மேலே ஒரு தூக்கு, கீழே ஒரு இறக்கு இறக்குவதற்குள் போதும் போதும் என்றாகி, ஒரு குடம் அடித்து நிரப்புவதற்குள் அப்பாடான்னு போய்விடும். டங்ங்க்..... மீறி ஒலித்தது, பெம்மாளே, என்ன ஏன் இப்படி வெச்ச, என்னக் காப்பாத்து, என் முதுவுல இருந்து இத எடு பெம்மாளே... என்ற கூனனின் குரல்

ம்ம்க்கும், இது ஒன்னுதான் கொறைச்சலு அடுத்த டங்ங்க்..க்கு நிற்பவர்களோ இல்லை அப்போது பம்ப் அடித்துக்கொண்டிருப்பவர்களின் உதடுகளோ இயல்பாக முணுமுணுக்கும்.

அறுபதடி தெரு பம்ப்புக்கு ஒட்டினாற்போலதான் அந்தச் சின்ன பெருமாள் கோயில், வாசலில் நீள கருங்கற்கள் ரெண்டு, மூணு படிகளாய் அமைந்திருக்கும். சமயத்தில் மாடுகளை கட்ட, மதிய நேரத்தில் உட்கார்ந்து தாயபாஸ் விளையாட,வீட்டில் மனைவியோடு கோவித்துக்கொள்ளும் செட்டியாருக்கு படுக்கையாக என அந்த சின்னக்கோவிலின் பக்கவாட்டுப்படிகள் மிகவும் உதவியாய் அமைந்திருந்தது. கூட, கோவிலை மேய்ப்பார் யாருமில்லை, சாயங்காலத்தில் வயதான தாத்தா ம்ம்க்கும், ம்க்கும் என்று செருமிக்கொண்டே டேய் நகருங்கடா, அந்தப்பக்கம் போய் விளையாடுங்க, இனிமே இந்தக்கோயிலுப் பக்கம் ம்க்கும்... யாரயாவது... ம்க்கும் என்றபடியே கதவைத் திறந்து தொங்கிக்கொண்டிருக்கும் மணிவிளக்கை ஏற்றிவிட்டு, கொஞ்ச நேரம் பஜனை பாடிவிட்டு கோவிலை மூடிவிடுவார்.

சந்துக்குள்ளே, அதுவும் பக்கவாட்டில் அமைந்திருந்ததால் ஏரியாவிலிருந்த மற்ற அம்மன் கோவில்களைப்போல அதிகப்பிரசித்தியாகவில்லை. பக்கவாட்டே தேவலாம் என்பதைப் போல கோவிலின் முன்புறம் நான்கு மணிக்கு மேல் களைகட்டும். ஸ்கூல் விட்டு வந்த பசங்களனைவரும் கோலி, பம்பரம் ஆட, அஞ்சு மணிக்கு மேல் உண்டைக்கார ஆயா கடலைமாவு, வாழக்காய், அரிந்த வெங்காய அலுமினிய டப்பாக்கள் சகிதம் வந்து ஒரு கட்டைப்பொட்டியை நிமிர்த்திவைத்து, பக்கவாட்டில் தகரத்தை சாய்த்து அடுப்பைப் பத்த வைத்தால் நாடா விளக்கு சகிதம் பஜ்ஜி, போண்டா வியாபாரம் ஜரூராக தொடங்கிவிடும். அதே இடத்தில் காலையில் இட்லி, தோசை வியாபாரம்.

சுல்லி வீட்டின் ஆகப்பெரும் பஞ்சாயத்துக்கள் அந்தக்கோவிலின் வாசலில்தான் நடைபெறும். வீட்டுக்குள் சேர்க்காத சுல்லியின் தம்பி சாம்பாருக்கு பெருமாள் கோவில் தான் வீடு, போதாக்குறைக்கு இரவு குடித்துவிட்டு வந்து அசிங்கசிங்கமாக பேசுவதைக்கெட்ட பெருமாளே கோவிலை விட்டு ஓடிவிட்டார், அதான் இந்தக்கோயிலு இப்படி சீந்துவாரில்லாம கெடக்குன்னு காற்று வாக்கில் வார்த்தைகள் பறக்கும்.

திருமங்கையாழ்வார் அருளிச் செய்த.... என்றபடியான கல்வெட்டுக்களை நிலைவாசப்படியில் தாங்கிய, உள்ளே எண்ணெய் பிசுக்கால் இன்னும் கருப்பாய் மாறிய பெருமாள், தாயார் விக்ரகங்களை தாங்கியபடி பழைய சுவர்களோடு நின்றிருக்கும் அந்த சின்னக்கோயில். கோயிலில் இருக்கும் பெருமாளின் பிரதான பக்தன் ஒரே ஒருவன் கூனன் தான். காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து சாம்பலில் பல்லைத்துலக்கிவிட்டு, குளிப்பானா இல்லையாவென்று அவனை வளர்த்துக்கொண்டிருக்கும் பழக்கார கிழவிக்குக்கூட தெரியாது, நெற்றியில் விபூதிப்பட்டை, காக்கி ட்ரவுசர், இன்ன கலர் தான் என்று சொல்ல முடியாத நைந்த சட்டை, மேற்சட்டைக்கும், கால்சட்டைக்கும் இடையே ஒரு ஜாண் இடைவெளி வந்து நடக்கும்போது தொப்புள் தெரியும். இதற்கு காரணம் அவன் முதுகில் துருத்திக்கொண்டிருக்கும் கூன். நல்ல கருப்பு, முதிர்ந்த முகம், பெரிய பெரிய பற்கள், சாய்ந்து சாய்ந்து நடக்கும் நடையோடு வந்து பெம்மாளே என்று குரல் கொடுக்க ஆரம்பித்தால் காலை சரியாக மணி ஆறு இருபது என்று கடிகாரம் பார்க்காமலே தெரிந்து கொள்ளலாம்.

அவன் உருவத்தை வைத்து ஏய், கூனா என்று எல்லோரும் கூப்பிட்டாலும் அவன் பெயர் சரவணன் என்று சொல்லிக்கொள்வான். இதற்கும் ஒரு வேண்டுதல் நடக்கும் பெருமாளிடம். பெம்மாளே, என்ன எல்லாரும்ம் கூனன் கூனன்னு கூப்பிடறாங்க, சரவணான்னு கூப்பிட வைய்யி பெம்மாளே என்று.

ஏனோ கூனன் கோயில் முன்வாசல் பக்கம் போய் வேண்டவே மாட்டான், பக்கவாட்டுதான், அதுவும் அந்தக்கோவிலை ஓட்டி அமைந்திருக்கும் பெரிய இரும்புக்கதவுகளிட்ட அறை, அந்த அறையில் தான் பெருமாள் தங்க நிறமிட்ட தன் கருட வாகனத்தை வைத்திருக்கிறார். மேலும் அவரின் அணிகலன்கள், இத்யாதிகள் என புரட்டாசிக்கு புரட்டாசிதான் அந்த இரும்புக்கதவே திறக்கப்படும். அதுவரை இரும்புக்கதவு மூடுவிழாதான். அந்தத் தெரு சிறுவர்களின் ப்லாக் போர்டும் அந்தக்கதவுதான்.

நல்ல சாக்பீஸால் பட்டை பட்டையாக அங்கங்கே துருப்பிடித்திருக்கும் அந்தக் கனமான இரும்புக்கதவில் எழுதினால் கல்வெட்டு மாதிரி அப்படியே இருக்கும். மஞ்சுள என்றெழுதி காற்றில் பறக்கவிட்ட காலெழுத்தை சங்கர் பிடித்து சங்கார் ஆக்கிவைப்பான். தமிழுக்கு இந்தக்கதி, ஆங்கிலமா, ம்ஹூம் இன்னும் அந்தக்கதவுக்கு பெயிண்ட் அடிக்காமலிருந்தால் சென்று பார்த்து விழுந்து புரண்டு சிரித்துவிட்டு வரலாம். காலெழுத்து, கையெழுத்துத்தான் இப்படி, இதயம் வரைந்து அம்புக்குறியிட்டு இன்ஷியல் எழுதி வைப்பது கனகச்சிதமாக நடந்தேறியிருக்கும்.

எஸ்,எல் என்பது செங்குட்டுவன், லதா தான் என்பது அவர்கள் தெருவை விட்டு இல்லை ஊரைவிட்டு ஓடியபின்புதான் எல்லோருக்கும் தெரியவந்தது. அப்போதுதான் அறுபதடி பம்ம்பில் தண்ணீரிறைத்து நான்கைந்து பேர் சேர்ந்து இரும்புக்கதவை கழுவிவிட்டார்கள்.

இவ்வளவு பிரசித்திப்பெற்ற இந்த இரும்புக்கதவுக்கு முன்னால்தான் கூனன் தனது வேண்டுதல்களை ஆரம்பிப்பான், தொடக்கத்தில் அமைதியாக இருக்கும், நேரமாக நேரமாக வெறி கொண்டவன் போல ஏண்டா பெம்மாளே, ஏண்டா என்ன இப்படி வெச்சிருக்க, நீ மட்டும் உள்ள ஒக்காந்தியிருக்கடா என்று ஏக வசனம் பாடிவிட்டு இரும்புக்கதவை டமார் டமார் என்று தட்டும் போது அவனைப்பார்த்தால் சாமி வந்தவனைப்போல இருக்கும். இப்படி ஒருநாள் டமார் டமார் என்று அடிக்கப்போய் அங்கே இரவும் பகலும் குடிகொண்டிருந்த வலிப்பு மூர்த்தியின் தூக்கம் கலைந்து, டேய் என பதிலுக்கு ஆவேசப்பட்டதில் மூர்த்தியின் காதுகள் கூனனின் பெரிய பற்களால் பதம்பார்க்கப்பட, தெருவே கூடி நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தது.

பெருமாளும் தனக்கிருக்கும் ஒரே பக்தனை எவனாவது கேள்வி கேட்டீங்கன்னா உங்களுக்கு இதுதாண்டா கதி என்று கருவிக்கொண்டே எதன்பொருட்டும் வெளியே எட்டிப்பார்க்கவில்லை. காதை கடித்துவிட்டு எதுவும் நடக்காதது போல சாய்ந்து சாய்ந்து நடந்து, அடுத்த தெரு முனையில் வெள்ளிக்கிழமையில் மட்டும் பெண்கள் கூட்டம் குடிகொள்ளும் கன்னியம்மன் கோவிலுக்கு போய்விட்டான். ஆட்டோவில் மூர்த்தி அரசு ஆஸ்பத்திரிக்கு பயணப்பட்டான்.

வேண்டுதல்கள் நீண்டாலும் கூனும் மறைந்தொழிந்தபாடில்லை. நாளுக்கு நாள் கூனனின் ஆவேசங்கள் அதிகரித்ததே அன்றி குறைந்தபாடில்லை, இப்படி வேண்டுதல்களால் நிரம்பிய கூனனின் வாழ்வில் காதல் நீர் பாய்ச்ச வந்தவள் குள்ளச்சி, அவளுக்கு இன்னொரு பெயருமுண்டு பொயலக்கட்ட. அவள் ஏன் இப்படியிருக்கிறாள் என்பது அவனது அண்ணனான ஆட்டோ ஓட்டும் கிருஷ்ணனுக்கே வெளிச்சம். கருத்த, சிறுத்த உருவம். சற்றும் பொருந்தாத ஜாக்கெட், பாவாடை, தாவணி. எப்போதும் மொட்டையடித்து முடி வளராததைப்போலவே இருக்கும் தலை. வாய் முழுவதும் செவசெவன்னு வெத்தலைப்பாக்கு, வாயில் ஒரு பக்கம் எப்போதும் உப்பலாய் வைத்திருக்கும் புகையிலை அதக்கல். ஆள்தான் சிறுத்தவளேயன்றி அவளுக்கும் முதிர்ந்த முகம். வீட்டுக்கு எதிரேயிருந்தாலும் ஏனோ அவள் இந்தக்கோயில் வாசல் பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டாள். தன் வீட்டு வாசலிலிருக்கும் முருங்கைமரத்து நிழல்தான் பெரும்பாலும் அவள் வீடு. சாப்பிட, தூங்கமட்டும்தான் உள்ளேயிருக்கும் அண்ணன் வீடு.

தானுன்டு, தன் வெத்திலை பாக்கு புகையிலையுண்டு, தன்னைச் சீண்டும் பசங்களை கொட்டுவதற்கு கையுண்டு என்றிருந்தாள். அவளைச் சீண்டிபவர்களுக்கு கிடைக்கும் வசவு வார்த்தைகளை கேட்க காதிரண்டும் போதாது. எதிரேயொரு முகமும் வேண்டும். அப்படியொரு எச்சில் தெறித்த பேச்சு.

இப்படியிருந்தவளுக்கு, அடிக்கடி ஆவேசம் பொங்கும் கூனனுக்கும் நடுவே இருப்பது காதல்தான் என்று கொளுத்திப்போட்டார்கள். விஷயமொன்றும் பெரிதில்லை. கூனன் தன் கூன் முதுகு குறைய இந்த முட்டுச்சந்து பெருமாளை மட்டுமே நம்பியிருக்கவில்லை, மெயின்ரோட்டிலிருக்கும் ஒரு பெரிய கோவிலிலிருக்கும் கிருஷ்ணனையும் நம்பியிருக்கிறான் என்பது அவன் வாங்கிவரும் பிரசாதங்களிலிருந்தும், கத்தையான வெற்றிலைகளிலிருந்தும் எல்லோருக்கும் தெரியவந்தது. ஒளிவு மறைவாய் எடுத்து வர அவனென்ன மற்றவர்களைப்போல சூதுவாது தெரிந்தவனா? கடவுளையே கதவு தட்டி கேள்வி கேட்பவனல்லவா?

கிருஷ்ணன் கோவில் பிரசாதமும்,மிதமிஞ்சிப்போன வெற்றிலைக்கத்தைகளையும் கையிலடுக்கிக்கொண்டு சாய்ந்து சாய்ந்து வருவான். இப்படி அள்ளி வந்த வெற்றிலைகளை என்ன நினைத்தானோ தெரியவில்லை, தாண்டிப்போய்விட்டான். பின் திரும்பி அதே சாய்ந்த வாக்கிலேயே வந்து படுத்துக்கொண்டிருந்த குள்ளச்சியின் பக்கம் போட்டுவிட்டுப்போனான்.

த்தோ பார்ருடி இந்தக்கூத்த என்று பெருமாள் கோவில் வாசலில் உட்கார்ந்து நியாயம் பேசிக்கொண்டிருக்கும் சுல்லிதான் ஆரம்பித்து வைத்தாள். அவள் ஆரம்பித்து வைத்த எதுவும் நொடியில் தீப்பொறியாய் பற்றிப்பரவும், அப்படி ஒரு வாய் சுல்லிக்கு.

சுல்லியின் வாய்வார்த்தை பலித்தது. வெற்றிலையில் ஆரம்பித்துப் பின் சுண்டல், பொங்கல் வரைக்கும் வந்தது. வெற்றிலைப்பாக்கு எச்சிலைத் துப்பிவிட்டு, தொன்னையிலிருக்கும் சுண்டலை குள்ளச்சி அதக்கி அதக்கி மெல்லும் அழகே தனிதான். இப்படியாய் தெருவே வெறிச்சொடிப்போய் சோறு தின்றுவிட்டு வீட்டுக்குள் சோம்பல் முறிக்கும் மதியான வேளைகளில் குள்ளச்சியும், கூனனும் கால் நீட்டி முருங்கை மரத்துக்கடியில் பேசிக்கொள்ளுவார்கள். அவர்கள் பேசும்போது அவர்கள் முகத்தில் தோன்றும் உணர்ச்சி அது சிரிப்பா, சோகமா, இல்லை அதையும் மீறிய ஏதோவொன்றா என்பது யாருக்கும் சட்டென்று புலப்படாது, நிமிர்து எங்கோ பார்ப்பதைப்போல ஆனால் வாய் மட்டும் முணுமுணுத்துக்கொண்டிருக்கும். அதைக்காணும் பேறு சொற்பமானவர்களுக்கே வாய்க்கும்.

அடுத்து வந்த மார்கழி மாசத்தில் தான் அவர்கள் நட்பு பலப்பட்டது. யாரும் சீந்தாத அந்த பெருமாள் கோவிலுக்கு புரட்டாசி, மார்கழி மாசத்தில் மட்டும் தனி மவுசு வந்துவிடும். அதுவும் மார்கழி மாதமென்றால் போதும், கூட்டம் முட்டி மோதும், பெருமாளை கும்பிட அல்ல. உபயக்காரர்கள் தரும் பொங்கல்,சுண்டல், புளியோதரைக்கு.

ஒருவர் மேல் ஒருவர் ஏறி அமராத குறையாக, அடுத்தவரை அடித்துத் திட்டி, முட்டி மோதி, மேலேயும் கீழேயும் சிதறி வாங்கிக்கொண்டு வரும் அந்த உள்ளங்கை பொங்கலுக்கும், சுண்டலுக்கும் இருக்கும் சுவையே தனிதான். பெரும்பாலும் தெருவிலிருக்கும் எல்லாச்சிறுவர்களோடு சில வயதான கட்டைகளும் இந்தக்கூட்டத்திலிருப்பார்கள். இந்தக்கூட்டத்திற்கு நடுவே ஒருநாள் குள்ளச்சி வர, அவளிடமிருந்து வாங்கிய கொட்டுக்களையெல்லாம் சேர்த்து வைத்து வஞ்சம் தீர்க்க யாரோ அவளைத் தள்ளிவிட்டுவிட்டார்கள். கூட்டத்தோடு கூட்டமாய் தள்ள யார் தள்ளினார்கள் என்பதை கண்டுகொள்ளமுடியவில்லை.

பக்கவாட்டிலிருந்து வேண்டுதலை முடித்துவிட்டு கூனன் வரவும், விழுந்த குள்ளச்சியை சுல்லி முதலானவர்கள் தூக்கவும் சரியாக இருந்தது. அந்த விழுதலுக்குப் பிறகு, குள்ளச்சிக்காய் பொங்கல் சுண்டல் வாங்குவது வேண்டுதலைப்போலவே தனது தினசரி கடமையாகிப்போனது கூனனுக்கு.

பேசாம பழக்கார கெழவிக்கிட்டயும், கிருஷ்ணன்கிட்டயும் சொல்லி பேசி முடிச்சிரவேண்டியதுதான் என்று நக்கலும், நையாண்டியும் தூள் பறந்தது. பார்ரா, இப்பல்லாம் கூனன் இன்னும் அரைமணி நேரம் சேர்த்து வேண்டுறான் பெருமாளு கிட்ட, இன்னா மிஸ்டர் சரவணன், உங்க ஆளுக்காகவா? என்று சிறுவிடலைகள் கிண்டல் மொழிகளை பறக்கவிட்டன.

இது மாதிரி கிண்டல் தொனிகளை தனியாக உணர்ந்தவன் போல, பெம்மாளே, நீய்யேப் பாத்துக்கோ இந்தப் பச்சங்களை என்று வழக்கம்போல கேட்காத பெருமாளிடமே சொல்லிவிட்டுப்போய்விடுவான் கூனன்.

இப்படியாய் போய்க்கொண்டிருக்க கூனனை வளர்த்த பழக்கார கிழவி ஊரில் ஏதோ சொத்துப் பிரச்சினை என்று கூனனை கூப்பிட்டுக்கொண்டு வேலூர் பக்கம் போக, குள்ளச்சியை முருங்கை மரத்தடியில் அவ்வளவாய் பார்க்க முடிவதில்லை.

கரண்ட்டுப்போன ஒருநாள் சாயங்காலம், நல்ல காய்ச்சலோடு உடன் வலிப்பு மாதிரி ஏதோ வந்துவிட ஆட்டோவில் வைத்து குள்ளச்சியை அழைத்துக்கொண்டு போனார்கள். அடுத்த நாலு நாளுக்கு பிறகு ஸ்கூல் விட்டு வந்து கொண்டிருக்கும் மதியான நேரம் குள்ளச்சியின் வீட்டுவாசலில் பச்சை ஒலையைப் பின்னிக்கொண்டிருந்தார்கள். அவ்வளவாய் ஜனசந்தடியில்லை.

சுல்லிதான் புலம்பிக்கொண்டிருந்தது, நேரம்பார்த்து இந்தக்கூனன் பையன் ஊர்ல இல்லாமப்போச்சே, ச்சே பொயலக்கட்டைய அதக்கினு அதும்பாட்டுக்கு முருங்கை மரத்தாண்ட ஒக்காந்துக்கிட்டு கெடக்கும்மா, அதுக்கு ஆண்டவன் விதிச்சதப்பாரு என்று கண்ணை மேல் முந்தானையால் துடைத்துக்கொண்டது.

கொஞ்ச நாள் கழித்து தெருவில் கூனனைப் பார்க்கமுடிந்தது. இப்போதெல்லாம் பெம்மாளே பெம்மாளே என்ற வேண்டுதல் கேட்பதில்லை, மாறாய் கிழவிக்கு டீ வாங்க தூக்கை எடுத்துப்போகிறான், கிழவி பழக்கூடையைத் தூக்கினால் தானும் கிழவிக்குப் பின்னாலேயே போகிறான்.

தனக்கிருந்த ஒரு பக்தனின் வேண்டுதலுக்கு செவிசாய்க்காமல் போனதற்கு எந்த ஒரு குற்ற உணர்வுமில்லாமல் பெம்மாள் புரட்டாசி கருட சேவைக்குத் தயாராகிவிட்டார். எல்லோரும் குள்ளச்சியை மறந்துவிட்ட ஒரு மதியானப் பொழுதில், முருங்கை மரத்தின் நிழலில் கத்தை வெற்றிலையிருந்தது. வியாபாரம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் பழக்காரகிழவிக்குப் பின்னே சாய்ந்து சாய்ந்து கூனன் போய்க்கொண்டிருந்தான்.
..................
குறிப்பு: மேற்கூறிய சிறுகதை, மார்ச் மாத உயிரெழுத்து இதழில் வெளியானது.

கதையை அச்சில் படிக்கும்போதும், காசோலையை பார்க்கும் போதும் உங்கள் அனைவரின் ஊக்கம் மிகுந்த பின்னூட்டங்களே எனக்கு ஒரு முறை ஞாபகம் வந்துவிட்டுப்போனது. தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி வரும் உங்கள் அனைவருக்கும் எனது அன்பும், நன்றியும்.

25 March 2010

21,5C,45B,12G,1 மற்றும் 18K

தலைப்பில் குறிப்பிடப்பட்ட எண்களை தாங்கிய பேருந்துதான் அதிகம் என்னைத் தாங்கியிருக்கிறது.

முதன்முதலில் வேலைக்காக ராயப்பேட்டையிலிருந்து சென்னை மவுண்ட்ரோட் ஜி.பி.சாலைக்கு வரவேண்டியிருந்தது. முதல் இரண்டு நாட்கள் மாமாவின் புண்ணியத்தில் ஆட்டோவில் வந்துவிட்டேன். மூன்றாவது நாள் பஸ் பயணம், வீட்டிலிருந்து ஜரூராக 21ல் (இடையே மூன்று நிறுத்தங்கள் மட்டுமே) பயணித்து ஸ்பென்சர் ப்ளாசா சிக்னலில் கும்பலாக நிறைய பேர் இறங்க,வெளியே தலையை விட்டுப்பார்த்ததில் கட்டிடமெல்லாம் உயரமாக இருக்க, இது எல்.ஐ.சியாகத் தான் இருக்கவேண்டும் என்று நம்ம்ம்ம்பி இறங்கியதில், நான்கு மூலை ரோட்டின் ஓரமாய் நின்று கொண்டு எந்தப்பக்கம் போவது என்று தெரியாமல் அரைமணி நேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே இருந்து, பின்னர் யார் யாரையோ கேட்டு ஜி.பி. ரோட்டுக்கு போய், அந்த ஆபீஸுக்கு போகும்போது மணி பத்தை தாண்டியிருந்ததால் சரியாய் வாங்கிக்கட்டிக்கொள்ள நேர்ந்தது.

பஸ்ஸில் ஏறினாலே ஒரு மிரட்சி, உள்ளே போகாமல் படியின் அருகில் இருக்கும் கம்பிக்கு பக்கத்திலேயே நின்று கொள்வது (நிறம் உட்பட எனக்கும், கம்பிக்கும் அதிக வித்தியாசம் ஏதுமில்லை). எப்படா இறங்குவோம், எங்க மாத்தி இறங்கிடுவோமோ என்ற பயத்திலேயே உள்ளங்கையில் இருக்கும் பஸ்டிக்கெட் நனைந்து பச, பச என்றாகிவிட எல்.ஐ.சியைப் பார்த்தவுடன் தப்பிப்பிழைத்த மாதிரி இறங்கிடுவேன். இதில் மற்றவர்களைப் பார்ப்பதோ, அதோ, இதோ, ம்ஹூம்.

இந்த பஸ் பிரச்சினையை முன்னிறுத்தியே அந்த ஆபீஸிலிருந்து கழண்டுகொண்டு, ஆழ்வார்ப்பேட்டையிலிருக்கும் இன்னொரு ஆபிஸுக்கு பயணப்பட்டேன். நல்லவேளையாக இந்த ஆபிஸுக்கு பஸ்ஸில் பயணித்துதான் வரவேண்டுமில்லை, கொஞ்சம் முன்னாடி கிளம்பினால் நடராஜா சர்வீஸே நம்மைக் கொண்டு போய் சேர்த்துவிடும். ராதாகிருஷ்ணன் சாலையின் இருபக்கமும் இருந்த பெரிய ப்ளாட்பாரமும், அதை ஒட்டிய மரங்களும் நடக்க அவ்வளவு ரம்மியமாக இருக்கும். லேட்டானாலும் ப்ரச்சினையில்லை, 5சி அல்லது 5 கட் காலியாக வரும். வெள்ளை நிற போர்டில் உருண்டையாக கரிய பெரிய எழுத்தில் 5c என்ற எழுத்துடனான அந்தப்பேருந்தை பார்க்கும்போதே மனதில் குதூகலம் கொண்டாடும். ஏனோ அந்த பஸ்ஸை அவ்வளவு பிடித்திருந்தது எனக்கு. அதில் திருவொற்றியூரிலிருந்து வரும் சுப்புலட்சுமி என்ற தோழியும் கிடைத்தாள். இன்றும் அந்தப் பேருந்தை பார்க்க நேர்ந்தால், அதே போல் விவரம் புரியாமல் மனசில் ஒரு சந்தோஷம் ஓடத்தான் செய்கிறது.

இந்த ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில்தான் அமித்து அப்பாவை கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன். ஆனால் நாங்களிருவரும் சேர்ந்து சென்னையில் எந்த பஸ்களிலும் ஒன்றாய் பயணித்ததில்லை. மனிதனுக்கு பஸ் என்றாலே அலர்ஜி. சைக்கிள் இல்லையென்றால் நடந்தே சைதையில் இருந்து ஆழ்வாருக்கு வந்துவிடுவார்.

இதே வரிசையில் 45பி, 12ஜி இரண்டுமே ஆழ்வார்ப்பேட்டையிலேயே இருந்த இன்னொரு அலுவலகத்துக்கு நான் பயணப்பட உதவியது. இதில் 45பி யில் ஏறினால் காலை வேளை ரகளையாக இருக்கும். நந்தனம் ஆர்ட்ஸின் மாணவர்கள் அனைவரும் அவ்வளவு அழகாக பஸ்ஸின் மேற்கூரையில் தாளமிசைப்பார்கள், தாளத்துக்கு இசைவாக யாராவது ஒருவர் கானா பாடுவார். அந்தப்பாட்டுக்கு கண்டிப்பாய் யாராவது ஒரு பெண் நமுட்டு சிரிப்போடு பஸ்ஸில் பயணிப்பாள். காரணப்பெயராய் அவள் தானே இருக்கிறாள். அக்காவுக்கு கோபம் வந்தாதான் ஆச்சரியம். அந்த காலைவேளை கசகசப்பிலும் அதை ரசிக்கமுடியும். இடையே இடித்தல், உதைத்தல், அய்யோ என் பர்ஸை காணோம் என்ற ரீதியிலான டயலாக்குகளையும் நிறைய கேட்கலாம்.

அடுத்ததாய் ஒன்னாம் நம்பர் பஸ். திருவொற்றியூர் டூ திருவான்மியூர். அடிக்கொருதரம் வரும் பஸ் என்பதாலோ, எங்கள் வீட்டிலிருந்து மவுண்ட்ரோட் திருப்பத்திற்கு வர பத்தே நிமிடம். எக்மோரில் இருந்த என் ஆபீஸுக்கு சுமார் 6 1/2 வருட காலம் இந்த பஸ்ஸில்தான் காலை, மாலை இருவேளை பயணம். இந்த ரூட்டில் இந்த பஸ் சர்வீஸ் அதிகம் என்பதால் குறைந்தபட்சம் இடிபடாமல் நின்றுகொண்டு வரலாம் என்பதே இந்த பஸ்ஸின் சிறப்பு. டீலக்ஸும், ஏசி பஸ்ஸும் வந்துவிட்ட போதிலும் மஞ்சள் போர்டில் சிகப்பிலோ அல்லது கருப்பிலோ பட்டை நாமம் போல ஒன்றை இட்டு வரும் அதிகபட்சம் காலியாகவே இருந்த இந்த பஸ்ஸின் மீது ஏதோ ஒரு இனங்காண முடியாத பிரியம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.

18கே - மவுண்ட் ரோட்டை கடந்து மேற்கு சைதாப்பேட்டைக்கு செல்லும் ஒரே பஸ். இந்த பஸ் பிடித்ததன் காரணமே அது போகும் ஏரியாவுக்காகத்தான். பின்ன, அந்த ஏரியாவுல தான் நான் இப்ப வாக்கப்பட்டு போயிருக்கறது ;) மவுண்ட்ரோட்டில் ஒன்றாம் நம்பர் பஸ்ஸுக்காக நின்றுகொண்டிருக்கும் போதெல்லாம் இந்த பஸ் சிக்னலில் நிற்கும் இல்லையென்றால் என்னை கடந்து போகும். அப்போதெல்லாம் என்னமோ காணாததை கண்ட கணக்காய் வெட்கப்பட்டிருக்கிறேன். தலை குனிந்திருக்கிறேன். ஏன் கற்பனையில் மிதந்திருக்கேன். கவிதை கூட மனதினடியில் எழுதியிருக்கிறேன். திருமணமான பின்னர், அந்தப் பேருந்தில் சைதை டூ மவுண்ட்ரோட் தினமும் பயணிக்க வேண்டிவர, கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் ஆன வெறுப்பில் 18கே என்றாலே கடுப்பாகிவிடுவேன். பத்தாதகுறைக்கு, சைதை போகும் வரை அந்த பஸ்ஸில் கடைசி வரைக்கும் உட்கார இடம் கிடைக்காது. அடச்சே, இந்த பஸ்ஸை பார்த்தா கவுந்தடிச்சு, கற்பனையில் மூழ்கி கவிதையெல்லாம் எழுதினோம்னு இருக்கும். விதி வலியது :)))))

நல்லவேளையாய் இப்போது மேற்சொன்ன எந்த நம்பருமில்லாமல், சென்னை மெட்ரோ இரயில்வேயின் புண்ணியத்தில் போய்வந்து கொண்டிருக்கிறேன்.
என்னடா, பேருந்தில் காதல்னு தலைப்பு வெச்சா, பதிவில் அதைப்பத்தி ஒன்னுமே காணோம்னு நினைப்பவர்களுக்கு,, சாரி பாஸ், நானும் என் சக்திக்கு மீறி பஸ் டயரை (அதுவும் ரவுண்டாதானே இருக்கு ஹி.. ஹி) சுத்திப்பார்த்துட்டேன், அதுமாதிரி ஒரு சீன் கூட என் நினைவுக்கு வரலை. வர்ரதெல்லாம் இடிச்சது, உதைச்சது, மேற்கொண்டு அதுக்காக சண்டைப்போட்டது அப்படின்னு கொஞ்சம் டெர்ரராதான் இருக்கு. அதையெல்லாம் சொன்னா கண்டிப்பா சைதை தமிழரசியாகும் வாய்ப்புகள் அதிகம் ;)

தொடர்பதிவிட அழைத்த தீபாவிற்கு நன்றி. விருப்பமிருப்பவர்கள் தொடரலாம்.

23 March 2010

அமித்து அப்டேட்ஸ்

ரிங்கா ரிங்கா ரோச்சஸ்
பாக்கெட் புல்லா ரோச்சச்
அஸ்கா புஸ்கா, ஆளப்பாரு டவுன்

பா பா ப்ளாக்சீப் ஆ ஊ எனி உல்
எச் சார் எச் சார் தீ பேக் குல்

ஆப்பி பர்த்த டே டூ ய்யூ
மே கா பளஸ் சூர்யா (யூ ஆல் என்ற வார்த்தை மருவி சூர்யா வாக இருப்பதாக அறிகிறேன்)

மேடத்தின் படிப்பார்வம் தாளமுடியாததாய் இருக்கிறது. உச்சமாய் சில சமயங்களில்,

ஏப் பச்சங்களா, படிங்க. நாந்தான் லத்தா மிச்சு.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

(லதா மிஸ்!, அனேகமாய் கார்த்தியின் வகுப்பாசிரியை பெயராக இருக்கலாம்)

......

ஒரு காக்கா பந்து வந்துச்சாம். அதுக்கு தண்ணி தாகமா எத்துச்சாம். அபியே உக்காந்துச்சாம். கல்லு எத்து எத்து போட்டுச்சாம். தண்ணி அபியே மேல வந்துச்சாம். குச்சீட்டு அபியே சந்தோச்சமா பந்து போயிச்சாம்.

இந்த சந்தோச்சமா பந்து போயிச்சாம் பினிஷிங்க், மேடம் சொல்லும் எல்லா மிக்ஸிங்க் கதைகளிலும் உண்டு.

.....

நான் சொல்ற பேச்சையே நீ கேட்க மாட்டன்ற வர்ஷா. சும்மா சும்மா உன்னை தூக்க சொல்லாத. என்னால முடியாது.

கொஞ்ச நேரம் கழித்து வந்து, அம்மா, இன்னிமே நீச் சொல்ற பேச்ச நான் கேட்கறேன் ந்னா. என்னத் தூக்கு.

.........

அம்மா, ஒர் நாள்ளு நான் சாப்ட்டு, டிவி பாத்துட்டு தூங்கிட்டு இந்தனா, அப்போ ஒரு பூச்சிக்காரன் வந்து அம்ப வீட்டு கதுவ தட்டனான்.

நான் கொம்ப எத்து அவன ஏப் போ, போ அபி சொன்னேன். ஏ, எங்க வீட்டுக்கு வராத, நா ப்போலீச்கார் பொண்ணு, உன்ன அச்சீர்வேன் அபி சொன்னேன்.

அவன், அவன், அபியே பயுந்து ஓட்டான். ஹாஹ்ஹாஆஆ.


அடடே ஆச்சர்யக்குறி.

...........

அவள் விருப்பத்திற்கு மாறாய் நடக்கும் சமயங்களில்,

ஏ, நீ லாம் அம்மாதான்ன, அபிலாம் செய்யக்கூடாது. நான் பாப்பா இல்ல.

மேடத்திடமிருந்து வரும் மிரட்டலெல்லாம் அதிபயங்கரமாக இருக்கிறது.

ந்நீ என்கிட்ட செம்ம அடிதான் வாங்கப்போற ஆய்யா. கொம்ப எத்து.........

இது அவளின் ஆயா மிரட்டல்களை சமாளிப்பதற்காய், அமித்து சொல்வது.

.....

அம்மா, என் காத்தாடிய அக்கா வந்து தூக்கிட்டு போயிட்டா, எனுக்கு வாங்கிக்குடு.

என் பொம்மைய காணோம், அவன் எத்துன்னு போயிட்டான்.

இங்கதாம்மா இருக்கு, டேபிள் மேல,

கண்ணைத் திறக்காமலே சில சமயம், அந்த பொம்ம இல்ல, வேற பொம்ம.

என் ச்சேக்கிள் ஒஞ்சிப்போச்சி, ஒச்சிட்டாங்க. கதுவ தெற, நான் வெளிய்ய போனோம்.

இது போன்ற புகார்களை நாங்கள் கேட்கும் நேரம்,தீவிர தூக்க நேரமான அதிகாலை 2 டூ 5.
(புகார் பிறகு பரீசீலிக்கப்படும் என்ற எங்களின் கோரிக்கை சில சமயம் மேடத்தால் நிராகரிக்கப்பட்டு, தொடர் அழுகைக்கு ஆயத்தமாவார்கள்.)

.......

கீழே தனியாக போகக்கூடாது என்ற அறிவுரைக்குப்பிறகு, அமித்துவிடமிருந்து வந்த வடிவேலு பாணி டயலாக் (அவள் வடிவேலுக்கு வைத்திருக்கும் பெயர்: ஆதித்யா)

நான் கீழ்ழ போறன், கீழ்ழ போறன், கீழ்ழ போறன்.

......

ம்மா, கதச் சொல்லும்மா, டால்பின் கத, ஜீப்ரா கத சொல்லு.

சரி..............

ஆவ்வ்வ்., கொட்டாவி விட்டபடியே. எனுக்கு தூக்கம் வருது, நீ கதல்லாம் ச்சொல்லாத. ச்சாப் (ஸ்டாப்)

.................

அமித்துவுக்கு தலைக்கு குளிப்பாட்டிவிட்டு, துவட்டிக்கொண்டிருக்கும் போது

அம்மா, என்ன தூக்கிட்டே தொட.

யாராச்சும் தூக்கிட்டே துடைப்பாங்களா. நீ சரியா இப்டி நில்லு, நான் சீக்கிரம் துடைச்சிடுவேன்.

அந்த, அந்த பாப்பா ஆங்க அம்மா தூக்கிட்டே தொச்சாங்கல்ல.

எந்த பாப்பாவோட அம்மா?

அதான், அம்ப சாப்புட போம்போது பாத்தமே, தம்பிப் பாப்பா ஆங்க அம்மா தூக்குனாங்களே. அபியே தொச்சாங்களே. நீ என்னத் தூக்கு.

(அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. அமித்துவுக்கு சாப்பாடு ஊட்டும் போது எதிர்வீட்டில் இருக்கும் ஒருவயதுக்குழந்தையை குளிப்பாட்டி, இடுப்பில் உட்காரவைத்து தலை துவட்டிவிட்டிக்கொண்டிருந்தார்கள் அந்தக்குழந்தையின் அம்மா)

பெத்தவங்க நம்ம குழந்தையை மத்த குழந்தைகளோடு ஒப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க, ஆனா நம்ம குழந்தைங்க நம்மளை மத்த அம்மா, அப்பா கூட ஒப்பிடலாமா.?

......

சைக்கிள் ஓட்டிக்கொண்டே இருப்பாள், சில சமயம் நிறுத்திவிட்டு இறங்கி டயர் பக்கமாய் ஏதோ செய்வாள்.

என்னமா செய்ற?

சிக்,சிக், சிக் (பேக்ரவுண்ட் ம்யூசிக்கோடு) பெட்ரோல் போர்றம்மா.

(நாங்கல்லாம் சைக்கிளுக்கே பெட்ரோல் போட்டவங்க, தெரியும்ல :)