10 February 2009

ஏன் எதற்கு இப்படி

போன வாரத்தில் ஒருநாள் மாலை, வழக்கமாக வழிய வழிய ஆட்களை ஏற்றிக்கொண்டுச் செல்லும் செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில். மகளிர்க்கான பெட்டி. அடித்து பிடித்து ஏறி, இருக்கைகளுக்கு நடுவே ஓரமாய் நின்று கொண்டேன். இது போன்ற கூட்ட நெரிசல் நேரத்தில், வசதியாய் நின்று வருவதே ஒரு வரம்தான்.

சேத்பட்டில் இன்னும் கூட்டம், அதில் ஒரு கர்ப்பிணி பெண்ணும் ஏறினார். அந்தப் பெண்ணும் கூட்ட நெரிசலோடு வந்து நின்று கொண்டாள். நான் அவளைப் பார்த்து உள்ளே வருமாறு சொன்னேன். அவளும் எப்படியோ நெம்பிக்கொண்டு வந்தாள். இருக்கைகளுக்கு நடுவே நிற்க அந்தப் பெண் வர தவிக்கும் போது கூட, அமர்ந்திருக்கும் பெண்களில் ஒருவர் கூட எழுந்து அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு இருக்கை தர முன் வரவில்லை. குறைந்த பட்சம், நீட்டிக்கொண்டிருக்கும் தன் காலை கூட கொஞ்சம் ஒதுக்கி அந்தப் பெண் உள்ளே வர வழிவிடவில்லை.


அதே வண்டி, அடுத்த நிறுத்தம், ஒரு பெண் கையில் குழந்தை, ஒரு பெரிய பையுடன் ஏறினாள். அவளுக்கும் அதே நிலை. அப் பெண்ணின் கையில் இருக்கும் குழந்தை அழுகையை தாண்டி அலற ஆரம்பித்திருக்கிறது. எல்லோரும் தத்தம் உடம்பை அசைத்துக்கொள்ள முன் வந்தார்களே ஒழிய எவரும் தன் மனதை அசைத்து எழுந்து அந்தப் பெண்ணுக்கு இடம் தர முன்வரவில்லை.

ஒழிகிறது, இந்தப் போராட்டத்திற்குள் அடுத்த ஸ்டேசன், அந்தப் பெண் ஓரமாக நின்றிருந்த இருக்கையினோரம் இருந்த ஒரு பெண் தன் நிறுத்தம் வந்ததன் காரணமாக எழுந்து சென்றாள். அதுவரை இருக்கையின் நுனியில் உட்கார்ந்திருந்த ஒரு காலேஜ் பெண்ணை எதிர் இருக்கையில் இருந்த ஒரு பெண் கையை பிடித்து இழுத்து வசதியாக அமர செய்தாள். இதற்கிடையே அந்த இடத்தில் உட்கார குழந்தையுடன் இருக்கும் பெண்மணி உட்கார முனைந்து, கடைசியில் அவளுக்கு அந்த நுனி ஸீட் கிடைத்தது.நுனி ஸீட்டில் உட்கார்ந்த்த அவள் குழந்தையை மடியில் போட்டுக்கொள்ள, குழந்தையின் கால்கள் வெளியே நீட்டியபடி, அடுத்த ஸ்டேசனில் இறங்கும் முனைப்பில் இருப்பவர்கள் கட்டாயம் அந்தக் குழந்தையை இடித்துக்கொண்டுதான் செல்ல நேரிடும். இன்னமும் அழுது கொண்டிருந்த அக்குழந்தையை சமாதானப் படுத்திக்கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு குழந்தை இடிபடுவது தெரியவில்லை.

இவ்வளவு நேரம் காத்த என் பொறுமை எல்லை கடந்து போய், அந்த காலேஜ் பெண்ணை நோக்கி ” ஏம்மா, நீ சின்ன பொண்ணுதானே, ஒன்னு எழுந்து நிக்கலாம், இல்ல அந்த நுனி சீட்லயாவது உட்காரலாம். அந்தம்மாவுக்கு தான் அறிவில்லை, உன் கையை பிடிச்சி இங்க உட்கார வெச்சிருக்காங்க, உம் பக்கத்துல தானே அந்தக் குழந்தை கத்திக்கிட்டு வருது, எழுந்து இடம் விடனும்னு உனக்கெல்லாம் தோணவே தோணாதா ந்னு கேட்டு விட்டேன். அந்தப் பொண்ணு என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பெரிய மனசு பண்ணி நுனி சீட்டுக்கு மாறினாள்.


பொதுவாகவே பஸ்ஸில், ட்ரெயினில் கூட நின்று வேடிக்கை பார்த்து வர பிரியப்படும் குழந்தைகளை வேண்டுமென்றே அதட்டி ம், உட்காரு, அப்புறம் இடம் கெடைக்காதுன்னு மிரட்டி உட்கார வைக்கும் எத்தனை பெண்மணிகள். அருகில் வயதான பெண்மணி இருந்தால் எழுந்து இடம் கொடுக்ககூட நினையாமல் நின்று கொண்டு வர ப்ரியப்படும் குழந்தைகளைக் கூட அமுக்கி அமர வைத்து பயணம் செய்கிறார்கள்.
பின் அந்தக் குழந்தைகளுக்கு எப்படி உதவும் எண்ணம் எழும் என்று தெரியவில்லை.

வண்டி நின்றவுடனும் எனக்குள் எழுந்த கேள்விகள். ஏன் இவ்வளவு மோசமாக மாறி விட்டிருக்கிறார்கள் மனிதர்கள். அவசரம், அவசரம் என்று சுருங்கிக்கொண்டே போகும் காலத்தின் போக்குக்கு ஏற்றவாறு செல்ல தன் மனதை சுருக்கி வைத்துக்கொள்வதுதான் செம்மையான வழி என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்களா. கொஞ்சம் மனதை விசாலப்படுத்தி வைத்தால் கூட, மனிதாபிமானம், பரிதாபம் எல்லாம் வந்து அமர்ந்துகொண்டே நம்மை யோசிக்க வைத்து விடும் என்றெண்ணி முகத்தை வேறெங்கோ திருப்பி, இல்லையென்றால் புத்தகத்திற்குள் தலையை மூழ்கடிக்குமாறு செய்துகொண்டும், தீவிரமாக நெற்றியை சுருக்கி யோசிக்குமாறு பாவனையோடும் .................

இப்படியெல்லாம் பாசாங்கு செய்ய இவர்கள் எங்கே கற்றுக்கொண்டார்கள். மாறாக யாராவது உதவ முன் வந்தால், அவர்களை கட்டுப்படுத்த நினைக்கும் எண்ணம். இவர்களின் குறைந்தபட்ச உதவும் மனோபாவம் என்ன தெரியுமா, பரிதாபத்தை காண நேரிடும் போதோ, இல்லை படிக்க நேரும் போதோ ஒரு “உச்” கொட்டி விஷயத்தை முடிப்பதுதான். மரணம் கூட அந்த வகையில் சேர்ந்துவிட்டது இப்போது.

இரு வாரங்களுக்கு முன் ஒரு பெண், தோளில் குழந்தையோடு, கையில் இரண்டு, மூன்று மொழியில் அச்சடிக்கப்பட்ட ஒரு விண்ணப்பம். ட்ரெயினில் விநியோகித்துக்கொண்டு வந்தாள். அவள் இளம் வயது பெண் தான். குறைந்த பட்சம் வீட்டு வேலை செய்து கூட தன் குழந்தையையும், தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால் யார் இவளுக்கு இந்த உபாயம் சொல்லிக்கொடுத்தார்களோ, எல்லோருக்கும் அந்த உதவி விண்ணப்ப காகிதத்தை விநியோகித்து கொண்டு வந்தாள். அவள் தந்ததை யாரும் தொடவில்லை. அவள் எதையும் பொருட்படுத்தவில்லை. பிறரின் மடியில் அந்தக் காகிதத்தை போட்டுக்கொண்டே சென்றாள்
அதை உதறி விட்டவர்களே அதிகம். நான், இன்னும் மூன்று பெண்களும் அவள் அடுத்த முறை அந்தக் காகிதத்தை திரும்ப எடுத்துக் கொண்டு காசு வாங்க வரும் போது ஆளுக்கு பத்து ரூபாய் கொடுத்தோம். இதை பார்த்துக் கொண்டிருந்த பெண்மணி, இப்படிலாம் காசு கொடுத்து இந்த மாதிரி ஆட்களை என்கரேஜ் செய்யக்கூடாதுங்க, இப்படியெல்லாம் பணம் கெடைக்கறதால தான் இந்த மாதிரி நெறைய பேரு கெளம்பிட்டாங்க. எனக்கு ஒரு டவுட். காசு கொடுத்து என்கரேஜ் செய்ய உதவி கேட்ட பெண் ஒலிம்பிக் ஓட்ட பந்தயத்துலயா கலந்துகிட்டா. என்னங்க இது, அந்தப் பெண் ஏமாற்றுபவளாகவே இருந்தாலும், கிடைக்கும் பத்து, இருபது ரூபாய்களில், ஒரு ரூபாயாவது அந்தத் தோளில் இருக்கும் குழந்தைக்கு பசிக்கு டீ வாங்கி கொடுப்பா தானே. அட்லீஸ்ட் 1 ரூபா தர்மம் செய்த மனதிருப்தியாவாது இருக்குது இல்ல

இந்த மாதிரி தானும் உதவி செய்யாம, மற்றவங்களையும் உதவி செய்ய விடாம பேசியே காலத்தை ஓட்டும் இந்த மாதிரி மக்கள், வரிப்பணமாகவும், ஷேர் மார்க்கெட்லயும் ஆயிரக்கணக்கில பணத்தை கோட்டை விடுவாங்களே தவிர, குறைந்த பட்சம் ஒரு 10 ரூபாய் ஏழை பசியாற அனுமதிக்க மாட்டார்கள்.

சும்மாவா மாத்துனாங்க பழமொழியை, அரசன் நின்று கொல்வான், தெய்வம் அன்றே கொல்லும்னு. அதுக்கு தானே அப்ப அப்ப அனுப்பி வைக்கிறார் சத்யமான மனுசங்களை.

38 comments:

அ.மு.செய்யது said...

நீங்கள் பயணம் செய்யும் அதே ரயில் தடங்களில் தான் நானும் பயணம்
செய்கிறேன்.இந்த காட்சிகளைத் தினமும் பார்த்திருக்கிறேன்.

நான் அமர்ந்திருக்கும் போது வயது முதிர்ந்தவர்களோ,கர்ப்பிணி பெண்களோ வந்தால்
எனக்கென்னமோ பின்னால் நெருப்பு வைத்த மாதிரி உடனே எழுந்து விடுவேன்.

ஆனால் நிறைய பேர் இதையெல்லாம் சட்டை செய்யாமலே காதில் இயர் போனை
வைத்து விட்டு செல்லின் இசையில் மூழ்கிவிடுவார்கள்.

அவர்களை SELFISH என்று அழைப்பதை விட SELF CENTERED என்றழைப்பது தான் சாலச் சிறந்தது.

ராமலக்ஷ்மி said...

//கொஞ்சம் மனதை விசாலப்படுத்தி வைத்தால் கூட, மனிதாபிமானம், பரிதாபம் எல்லாம் வந்து அமர்ந்துகொண்டே நம்மை யோசிக்க வைத்து விடும் என்றெண்ணி//

உண்மை, அதை வரவிடக் கூட மனதின் வாசல் கதவுகளைத் திறந்த வைப்பதில்லை பலரும்:(!

//இப்படிலாம் காசு கொடுத்து இந்த மாதிரி ஆட்களை என்கரேஜ் செய்யக்கூடாதுங்க, இப்படியெல்லாம் பணம் கெடைக்கறதால தான் இந்த மாதிரி நெறைய பேரு கெளம்பிட்டாங்க.//

இதை நானும் எனது இன்றைய கவிதையில் குறிப்பிட்டிருந்தேன். சரி, இவர்களின் பின்னணி, அறிவின்மை ஆகியவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும். உழைத்தும் சாப்பிடலாம் என எடுத்துச் சொல்லி புரிய வைக்கும் பொறுமை இந்த சமூகத்தும் இல்லை. ஆக அன்றைய அவள் பொழுத்துக்கு கருணை காட்டுவதில் தவறில்லை என்பதுதான் எனது கருத்தும்.

v.pitchumani said...

சரியாக சொன்னீர்கள். இதே இடத்தில் ஆண்கள் இடம் கொடுப்பார்கள் என்பதை சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் . ஆனால் எல்லா பெண்களும் அப்படி இல்லை. என்பது சதவிகதம் பெண்கள் நீங்கள் சொன்ன மாதிரித்தான் உள்ளார்கள்

சந்தனமுல்லை said...

அமித்து அம்மா..மழையா பொழிஞ்சுட்டீங்க உங்க மன ஆதங்கத்தை!!

அ.மு.செய்யது said...

ஆனால் சில இளம்பெண்கள் பேருந்துகளில் கடைசி சீட்டில் ( பெண்களுக்கென ) ஒதுக்கப்பட்ட
இருக்கைகளில் வயதான (ஆண்) முதியவர்கள் அமர்ந்திருந்தால் கூட,
அவர்கள் மீது துளியும் இரக்கம் கொள்ளாமல் எழுந்திருக்கச் சொல்லி,
அவர்களின் உரிமையைப் பெற்று புதுமைப்பெண்ணியலின் பராக்கிரமத்தைப்
பறை சாற்றுவது குறித்து உங்கள் கருத்து என்ன ?

கார்க்கிபவா said...

நெசந்தாங்க..

அபி அப்பா said...

அந்த காலேஜ் பொண்ணுக்கு ஒரு டிஷ்யூம் விட்டிருக்கனும் நீங்க!

rapp said...

me the first?

rapp said...

மொதோ விஷயம் ரொம்ப சரி. அதேசமயம் ரெண்டாவது விஷயத்தில் நான் உடன்படவில்லை. அவங்களோட ஒரு நாள் கலெக்ஷன் தெரியுமா உங்களுக்கு? அவர்கள் கொடுக்கும் மாமூலை பார்த்தே அசந்து போயிருக்கேன் நான்.

முதல் விஷயத்துல இன்னொரு கொடுமை என்னன்னா, நான் பல சமயம் இப்டி இடம் கொடுக்கும்போது, குடுகுடுன்னு சிலப்பேர் நடுவுல வந்து உக்காந்துப்பாங்க. செமக்கடுப்பா இருக்கும். அதுவும் சிலப்பேர் அவ்ளோ சின்ன குழந்தைய வெச்சிருப்பாங்க. அதுல வியாக்யானம் வேற, எதுக்குக் கொழந்தைய தூக்கிட்டு ஊர் சுத்தணும்னு. அவங்களுக்கு என்ன பிரச்சினையோ, சூழ்நிலையோ யாருக்கும் எதுவும் தெரியாது. கொஞ்சூண்டு இடம் கொடுக்க மனசு வராது. கொடுத்த இடத்த அபகரிச்சுக்கத் தெரியும். ஆனா பேச்சு மட்டும் இந்த மாதிரி குதர்க்கமா இருக்கும்.

super

எம்.எம்.அப்துல்லா said...

அந்த கர்பிணிக்கும், பிள்ளை வைத்து இருந்த பெண்னுக்கும் உலக அறிவு பத்தல...லேடீஸ் கம்பார்ட்மெண்டில் ஏறுனதுக்கு பதிலா ஜெனரல் கம்பார்ட்மெண்டில் ஏறி இருந்தா யாராவது ஒரு ஆண் இடம் குடுத்து இருப்பான். :)

இராகவன் நைஜிரியா said...

// சும்மாவா மாத்துனாங்க பழமொழியை, அரசன் நின்று கொல்வான், தெய்வம் அன்றே கொல்லும்னு. அதுக்கு தானே அப்ப அப்ப அனுப்பி வைக்கிறார் சத்யமான மனுசங்களை. //

என்ன இது பழமொழிய மாத்திட்டாங்களே.. அப்படின்னு நினைச்சேன்..

கவனித்துப் படிச்ச பிறகு தான் புரிஞ்சது...

ஜீவா said...

மனிதர்கள். அவசரம், அவசரம் என்று சுருங்கிக்கொண்டே போகும் காலத்தின் போக்குக்கு ஏற்றவாறு செல்ல தன் மனதை சுருக்கி வைத்துக்கொள்வதுதான் ///

நீஜமாய் மனிதர்கள் மாறிவிட்டார்கள் .சில மனிதர்கள் மட்டும் விதிவிலக்காய். உங்கள மாதிரி :)

ஜீவா said...

நீஜமாய் மனிதர்கள் மாறிவிட்டார்கள் .சில மனிதர்கள் மட்டும் விதிவிலக்காய். உங்கள மாதிரி :)

தமிழன்-கறுப்பி... said...

உலகம் இதை புரிஞ்சுக்கவே முடியலைங்க...

அப்துல்மாலிக் said...

ஏன் எதற்கு எப்பாடி
விடைதெரியாமல் தவிக்குது உங்கள் பதிவு

அப்துல்மாலிக் said...

//ஏன் இவ்வளவு மோசமாக மாறி விட்டிருக்கிறார்கள் மனிதர்கள். அவசரம், அவசரம் என்று சுருங்கிக்கொண்டே போகும் காலத்தின் போக்குக்கு ஏற்றவாறு செல்ல தன் மனதை சுருக்கி வைத்துக்கொள்வதுதான் செம்மையான வழி என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்களா.//

வாழ்க்கையில் சுயநலம் அதிகமாகிவிட்டது மக்களிடையே

அப்துல்மாலிக் said...

//இந்த மாதிரி தானும் உதவி செய்யாம, மற்றவங்களையும் உதவி செய்ய விடாம பேசியே காலத்தை ஓட்டும் இந்த மாதிரி மக்கள், வரிப்பணமாகவும், ஷேர் மார்க்கெட்லயும் ஆயிரக்கணக்கில பணத்தை கோட்டை விடுவாங்களே தவிர, குறைந்த பட்சம் ஒரு 10 ரூபாய் ஏழை பசியாற அனுமதிக்க மாட்டார்கள்.//

நல்ல கேள்வி

Vidhya Chandrasekaran said...

மனிதாபிமானம் மறைந்துக்கொண்டு வருவது வருத்தப்படவேண்டிய விஷயம்:((

நட்புடன் ஜமால் said...

ஏன்

எதற்கு

இப்படி

அமித்து அம்மா

நட்புடன் ஜமால் said...

\\ஷேர் மார்க்கெட்லயும் ஆயிரக்கணக்கில பணத்தை கோட்டை விடுவாங்களே தவிர, குறைந்த பட்சம் ஒரு 10 ரூபாய் ஏழை பசியாற அனுமதிக்க மாட்டார்கள்.\\

கடைசி டச் வழக்கம் போல நச்

நட்புடன் ஜமால் said...

மனிதாபிமானம்

இதற்கு நிறைய விளக்கம் எழுதலாம் போல

மனித அபிமானம்.

மனிதர்களை பற்றிய அபிமானம்.

ஆனாலும் மனிதாபிமானம் என்பது அடுத்தவர் நம்மிடம் காட்ட வேண்டியது - இப்படித்தான் போகிறது உலகம்.

ரிதன்யா said...

ம் மனிதன் மாறிவிட்டான், மதத்தில் (மரத்தில்) ஏறிவிட்டான்.
பஸ்ல 2 ரூபாய் குடுத்து சீட் வாங்கிட்டே விட மனசு வரலியே, அப்புறம் அரசியல் வாதிகளை குற்றம் எப்படி குற்றம்சொல்ல முடியும்.

sa said...

நிதர்சனமான உண்மை எத்தனை சுயநலவாதிகளாய் மாறிவிட்டோம் குழந்தைகள் பெரியவர்களை பார்த்து அல்லவா கற்றுகொள்கிரர்கள்.

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

அமிர்தவர்ஷினி அம்மா said...

அ.மு.செய்யது said...

ஆனால் சில இளம்பெண்கள் பேருந்துகளில் கடைசி சீட்டில் ( பெண்களுக்கென ) ஒதுக்கப்பட்ட
இருக்கைகளில் வயதான (ஆண்) முதியவர்கள் அமர்ந்திருந்தால் கூட,
அவர்கள் மீது துளியும் இரக்கம் கொள்ளாமல் எழுந்திருக்கச் சொல்லி,
அவர்களின் உரிமையைப் பெற்று புதுமைப்பெண்ணியலின் பராக்கிரமத்தைப்
பறை சாற்றுவது குறித்து உங்கள் கருத்து என்ன ?

ம், பார்த்திருக்கிறேன். இழுத்து வைத்து அறையலாம் போல தான் இருக்கிறது அவர்களின் செயல்.
என்ன செய்ய! ஒரு முறைப்போடு அவர்களை பார்ப்பதோடு நின்றுவிடுகிறது என் மனிதாபிமானம்.

அவர்களை எழுப்பிவிட்டு அவர்கள் ஒரு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்திருப்பார்களே அதையும் கவனிக்கத் தவறியதில்லை.
என்ன செய்வது, குறைந்த பட்சம் இதிலாவது ஆணை ஜெயித்த அல்ப சந்தோஷம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எம்.எம்.அப்துல்லா said...

அந்த கர்பிணிக்கும், பிள்ளை வைத்து இருந்த பெண்னுக்கும் உலக அறிவு பத்தல...லேடீஸ் கம்பார்ட்மெண்டில் ஏறுனதுக்கு பதிலா ஜெனரல் கம்பார்ட்மெண்டில் ஏறி இருந்தா யாராவது ஒரு ஆண் இடம் குடுத்து இருப்பான். :)

:)-
ம், ஒத்துப்போகிறேன் உங்கள் கருத்துடன்.

Karthik said...

நானும் இந்த வழியில்தான் போகிறேன். இதே காட்சிகளைத்தான் பார்க்கிறேன். எனக்கு ஆச்சர்யம்தான் ஏற்படும்.

ஏனென்று தெரியவில்லை, நான் அதிகம் பிச்சை போடுவதில்லை. சொல்வதற்கு சங்கடமாகத்தான் இருக்கிறது.
:(

கிருத்திகா ஸ்ரீதர் said...

ம்ம்ம்ம் தினம் தினம் இது போன்ற காட்சிகள் நமக்கு உள்ளக்குமுறல்களைத்தான் தோற்றுவிக்கின்றன.

அதுசரி, எங்கே ஏறுவீர்கள் எங்கே இறங்குவீர்கள். பதில் சொல்லலாமென்றால் தனி மெயிலில் கூட சொல்லலாம். நானும் இரயில் பயணிதான் தினமும்.. அறிமுகம் செய்துகொள்ளலாமே...

தமிழ் அமுதன் said...

உண்மை! ஆண்கள் வயதானவர்களுக்கு இடம் கொடுப்பார்கள்

பெண்களுக்கும் இடம் கொடுப்பார்கள்!
ஆனால்? பெண்களில் பெரும்பாலும்
பெண்களுக்கே இடம் கொடுப்பதில்லை!

இதுபோல இடங்களில் சில சமயம்
மனித நேயத்தை காண முடியும்!

ஆனால் அரசு மருத்துவமனை இருக்கிறதே? அங்கே நடக்கும் கொடுமை சொல்லி
விளக்க முடியாது! இந்த கொடுமையையே பொறுத்து கொள்ள முடியாத

அமிர்த வர்ஷினி அம்மா! அரசு மருத்துவமனை பக்கம் போய் பார்த்தால்?

விஜய சாந்தி ரேஞ்சுக்கு ஆயிடுவீங்க! போல?

Radhakrishnan said...

உதவுபவர்களை 'ஏமாளிகள்' என முத்திரைக் குத்தி வைத்துவிட்ட உலகம் இப்படித்தான் இருக்கும், இன்னும் இப்படியேதான் இருக்கும். தங்களைப் போன்றவர்களால் சமுதாயத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படட்டும்.

நீங்கள் குறிப்பிட்டது போல பிறர் செய்யும் செலவு 'வெட்டியாய் செலவு செய்வது' போலத்தான் நம் கண்களுக்குப் படும். அவரவர் எடுத்துக்கொண்ட வாழ்க்கைமுறை அப்படி. ''நீ மாறு'' என ஒருவரிடம் சொல்லும்போது ''நீ மாறு'' என சொல்ல அவருக்கும் அதே உரிமை இருக்கிறது, இருப்பினும் நமது கடமை மனிதாபிமானத்தை வலியுறுத்துவாகவே எப்போதும் இருக்க வேண்டும்.

நல்ல போதனையைச் சொல்லும் அற்புத பதிவு. நன்றி.

அமுதா said...

சமீப காலங்களில் கர்ப்பிணிகள், குழந்தைகள் , முதியோர்கள் என்று கருணை காட்டி இடம் அளிப்பது என்பது ஏனோ அரிதாகிவிட்டது. நானும் மனம் வருந்தியுள்ளேன்.


/

அமுதா said...

*அந்தப் பெண் ஏமாற்றுபவளாகவே இருந்தாலும், கிடைக்கும் பத்து, இருபது ரூபாய்களில், ஒரு ரூபாயாவது அந்தத் தோளில் இருக்கும் குழந்தைக்கு பசிக்கு டீ வாங்கி கொடுப்பா தானே.*/
பிச்சையிடுவது... நீங்கள் சொல்வது போல் ஏமாற்றினால் கூட கொடுப்பதால் குறைந்து விடுவது இல்லை. ஆனால், இம்மாதிரி குழந்தைகள் எடுத்து வந்தால் வசூல் ஜாஸ்தி என்று வாடகைக்கு குழந்தைகள் கொண்டு வரப்படுவர் போன்ற செய்திகளைக் கேட்கும் பொழுது இதற்கு துணை போக வேண்டுமா என்று யோசிக்கும் மனம். இந்த விஷயத்தில் பிச்சை இடுவது/இடாதது என இரண்டின் காரணங்களுமே யோசிக்க வேண்டியதாகத்தான் உள்ளது.

SK said...

இங்கே சொல்ற போல ஆண்கள் உடனே இடம் கொடுபாங்கனும் ஒத்துக்க முடியலை. எல்லாரும் அப்படி செய்யறது இல்லை.

அமித்து அம்மா மாதிரி நிறைய பெண்களும் இருக்காங்க. அந்த கல்லூரி பெண்ணை போல நிறைய ஆண்களும் இருக்காங்க.

கார்க்கிபவா said...

http://youthful.vikatan.com/youth/bcorner.asp

இதுல இதுவரைக்கும் அவங்க கொடுத்த எல்லாருடைய லின்க்கும் இருக்கு. பழக்கதோஷத்துல பப்ளிஷ் பண்ணிடாதீங்க :)))

Thamira said...

உங்கள் ஆதங்கத்தை தெளிவாக சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். பிச்சையளிப்பதில் மாற்றுக்கருத்துகள் உள்ளது. அது வேலையே செய்யாமலிருக்க அவர்களை ஊக்கப்படுத்துவதாகவே கருதுகிறேன். அதே போல பிறருக்கு இடமளிப்பது (நீங்கள் சொன்ன உதாரணங்களை நான் குறிப்பிடவில்லை) என்பதைப்பார்த்தால்.. கூட்டத்தில் நசுங்கி ஒன்றரை மணி நேரம் பயணிப்பதற்கு பயந்து முன்னமே மெனக்கெட்டு வந்து அமர்ந்திருப்பவர்களை சாவதானமாக வந்து எழுப்பிவிட்டு அமர்வது (தென்தமிழக பேருந்துகளில்) பெண்கள் ஆண்களுக்கு செய்யும் கொடுமைகளில் ஒன்று. நின்று கொண்டு வருவது பெரிய விஷயமில்லை, ஆனால் பிறருடன் முட்டிமோதிக்கொண்டு, தும்மல்கள், இருமல்களை சகித்துக்கொண்டு வருவதுதான் கொடுமை.

Poornima Saravana kumar said...

என் குட்டி என் வயிற்றில் இருக்கும் போது ஒரு முறை பேருந்தில் செல்ல நேர்ந்தது.. என்னால் நிற்க கூட முடியலை அவ்வளவு கூட்டம்.. ஒரு பெண்மணி கூட எனக்கு அமர இருக்கை தரவில்லை.. பின்னாடி நின்றிருந்த ஆண்கள் சத்தம் போடவே, அவர்களை திட்டியபடியே ஒரு பெண் பெருந்தன்மையுடன் எனக்கு இருக்கை தந்தாள்!!

தாரணி பிரியா said...

எங்க ஊருல எல்லாம் பரவாயில்லை போல இருக்குங்க. நிச்சயமா எழுந்து இடம் குடுத்து இருப்பாங்க. இல்லாட்டி அந்த குழந்தையை வாஙகியாவது வச்சு இருப்பாங்க. அதே போலதான் வயசானவங்க வந்தா கண்டிப்பா இடம் குடுக்கறாங்க.

அப்புறம் தர்மம் செய்யறது நான் அதிகமா செய்யறது இல்லைங்க ஏன்னு தெரியலை :(

Deepa said...

நல்லா இடித்துரைக்கிற மாதிரி எழுதி இருக்கீங்க‌.

இதே போல் நான் சந்தித்த் சில சந்தர்ப்பங்களில் எழுந்து உட்கார‌ இட‌ம் கொடுத்த போது "இவ‌ பெரிய‌ இவ" என்றோ "பிக்பாக்கெட்காரியாக‌ இருப்பாளோ" என்ற ச‌ந்தேக‌த்துட‌ன் தான் பார்த்திருக்கின்ற‌னர் சக பயணிகள்.
ஆண்க‌ள் பெண்க‌ள் என்னும் பாகுபாடு இல்லை. வெட்க‌ங்கெட்ட‌ சுயந‌ல‌வாதிக‌ளாக இருப்பதும், அப்படி இல்லாவிட்டால் ஏமாளிகள் என்று அழுத்த‌மாக‌ ந‌ம்புவதும் தான் இந்த‌ ந‌க‌ர‌ வாழ்க்கையின் இல‌க்கண‌மாக‌ இருக்கிற‌து.

Senthil Prabu said...

Amirtha mma,

i want to be ur child...
Can u adopt me...
u r also thinking like my mum...

my grandma (mum's mum) used to act like that Dont care abt others,not allow to help sumone.. becos of that even i got a name as "muttal"

urs child