29 June 2009

ராசிபலன்

ஜ்..ஜோசியம், கைர்..ரேகை, பேர்..ராசி பலன் என இத்யாதிகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவ்வப்போது இல்லை எப்போதாவது தேதி காலண்டரில் பேப்பரை கிழிக்கும்போதும், தினசரிகளில் போடப்படும் வார, மாத பலன்கள் கண்ணில் பட்டுவிட்டால் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தால் (சாதகமாக இருந்தால்) படிக்கும் பழக்கமுண்டு. இதனோடு ஒத்துப்போகும் சில சமீபகால நிகழ்வுகள்.

22,23 சந்திராஷ்டம் இருப்பதால்,வாக்கு வாதங்கள் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றிருக்கும், 22,23 தானே என்று அசால்ட்டாக விட்டுவிட்டால் அன்றைக்குத்தான் தேதி 23 ஆக இருக்கும். உடனே நிகழ்ந்தவைகளை ராசி பலன்களோடு பொருத்தும் நிகழ்வோடு ஈடுபட சில ஒத்துப்போகும். ஆமால்ல, நாம அவங்க கிட்ட இப்படி பேசியிருக்கக்கூடாதுல்ல. அதுனாலதானே அப்படியாச்சு என்பது போல. உடனே உள்ளிருக்கும் சாத்தான் (அதாங்க கோபம்) ஓடி வரும், நீ என்ன சும்மாவா பேசுன அன்னைக்கு சந்திராஷ்டமம் இல்ல, அதனால தான் பேசுன (இல்லன்னாலும், நாமதான் நாக்குல தேள் கொடுக்க வெச்சுக்கிட்டு அலையற ராசியாச்சே - கோபங்குறது பால் பொங்குற கணக்கா பாத்துக்கிட்டு இருக்கும்போதே புஸ் ஸுன்னு பொங்கிடுமே).

சில சமயம் பணவிரயம் ஆகும் என்றிருக்கும். எதையாவது செய்யவோ, வாங்கவோ நினைக்கும் போது வீண் வியம் ஆகும்னு போட்டிருந்துதே என்று சட்டென அந்த கருப்பு வரிகள் ஞாபகத்திற்கு வரும். உடனே மனசு, நாம என்ன வீணானதுக்க செலவு பண்ணப்போறோம் வேண்டியதற்குத் தானே என்றபடி கடைக்குள் காலடி வைத்தால், கண்டிப்பாக வாங்கிய பொருள் நன்றாக இருக்காது, இல்லையென்றால் தேவையே இல்லாவிட்டாலும் ஏதாவது ஒன்று வாங்கியாக வேண்டிய நிர்ப்பந்தம், காசு கட்டும் இடத்தில் மனம் அடித்துக்கொண்டாலும் அதான் வீண் விரயம்னு போட்டிருந்தானே, இப்படி செலவாகலனாலும் வேற எப்படியாச்சும் செலவாகியிருக்கும் என்று சுய சமாதானங்களில் ஈடுபட வேண்டியிருக்கும்.

ஒரு முறை அமித்து அப்பா உடம்பு சரியில்லாமல் வீட்டில் இருந்த போது, தேதி கிழிக்கும் காலண்டரில் அவர் ராசிக்கு சோகம் என்று ஒரு வார காலம் முழுவதும் போட்டிருந்தது, அதே நாட்களில் என் ராசிக்கு எதிராக மகிழ்வு என்று போட்டிருந்தது. எதேச்சையாக இதை கவனித்த அவர், இதைப் பாரேன் என்றார். பார்த்த, படித்த எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

வடக்கே சூலம், தெற்கே சூலம் என்றிருப்பதை சிறு வயதில் படிக்க நேரிட்டு, அம்மாவை வினவும் போதெல்லாம், அது என்ன கர்மமோ என்று சொல்லிவிடுவார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ராகு காலமும், எமகண்டமும் மட்டும்தான். படிக்கவில்லையானாலும், திங்கள் - ஞாயிறு எவ்வப்போது கால கண்டங்கள் இருக்கும் என்பது அத்துப்படியாயிருக்கும். ஆனால் எனக்கு இந்த சூலம் என்ற விஷயம் புரிபடாத ஒன்றாகையால், இதைப் பார்க்கும்போதெல்லாம், வடக்கோ, தெற்கோ கையில் சூலம் வைத்துக்கொண்டிருக்கும் ஏதாவது கடவுளை கற்பனை செய்துகொண்டு சமாதானமாகிவிடும். இது இன்றைக்கு நினைக்கும்போது சிரிப்பாக இருந்தாலும், சூலத்திற்கான அர்த்தம் விளங்கவேயில்லை.

அதே போல் எட்டு என்ற எண்ணை கவனிக்கும் நேரும்போது என் தோழி பாலஜோதியின் நினைவும் தவறாமல் நினைவுக்கு வரும். அவள் பிறந்த தேதி எட்டு. அதனால மேடம் ஒரு பெரிய லிஸ்ட்டே வெச்சிருப்பாங்க. பாருங்க இதுனாலதான் எனக்கு எதுவுமே வொர்க் அவுட் ஆகல என்பது போல். அவள் சொல்வதும் சில சமயம் மேட்ச் ஆகும். நன்றாக படித்தாலும், முதலிடம் வராதது, எம்.எஸ்ஸி, எம்.ஃபில் படித்திருந்தாலும், ஏதோ ஒரு துக்கடா கம்பெனியில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பது, இன்னும் கல்யாணம் ஆகாதது என்று மேடம் பார்க்கும் போது / போன் செய்யும் போது சொல்ல ஒரு பெரிய லிஸ்ட்டே வைத்திருப்பார்கள்.:(

எட்டென்றால் நினைவுக்கு வரும் மற்றுமொரு நபர் என் ரெண்டாவது பாஸ். மனுசர், 8,17, 26 தேதிகளில் எந்த லெட்டரிலும் கையெத்திட மாட்டார். அப்படி தலைபோகும் அவசரமென்றாலும், எப்படியும் கொரியர்லதானே போகப்போகுது, நாளைக்கி டேட்லயே லெட்டர் இருக்கட்டும் என்பார். நல்லவேளை
டெண்டர் ஃபைல் செய்யப்போகும் போது ராசியான் நபர்தான் எதிரில் வரவேண்டுமென்ற எந்த சட்டதிட்டங்களையும் வைத்துக்கொள்ளவில்லை.

இது தொடர்பாக, நினைவடுக்கில் இருந்தவொரு மிரட்டல் அனுபவம். (நான் பனிரெண்டாவது படிக்கும்போது என்று நினைக்கிறேன்) கைர்ரேக, ஜ்ஜோசியம் பாக்கறதே என்று ஒரு மதியானப் பொழுதில் ஒருவர் குரல் கொடுத்துக்கொண்டு வர, நாங்கள் குடியிருக்கும் காம்பவுண்ட்டில் இருக்கும் ஒருவர் அவரைக்கூப்பிட்டு கையைக் காட்ட, அவர் பட்டு பட்டுன்னு புட்டு புட்டு வைத்துவிட்டாராம்!!!, இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அக்காவை கவனித்த அந்த ஜோசியக்காரர், அம்மா மொகத்துல ஒரு சஞ்சலம் குடி கொண்டிருக்குது, பார்க்க சிரிச்ச மொகமா இருந்தாலும் என்று கதைவிட்டிருக்கிறார். முதலில் மிரண்டாலும், இவர் என்னதான் கதை விடுகிறார் பார்ப்போம் என, அக்காவும் கையை நீட்ட, அவர் விட்ட கதை, உனக்கும் உன் கணவருக்கும் கொஞ்ச நாளா ஆகல, அவரு ஒரு வாகன ஓட்டி, அவருக்கு ஒரு கண்டமிருக்கு, என்று சொல்லிக்கொண்டே ஜோசியக்கட்டின் உள்ளிருந்த சீட்டை எடுத்துப்போட்டதில் அதில் இரு பல்லிகள் சண்டை போட்டு, ஒன்று ரத்தக்கறைகளோடு விழுவது மாதிரியான படம். படத்தை பார்த்த அக்காவிற்கு பக். இதோடு நிற்கவில்லை பல்லி ஜோசியம். இதற்கு பரிகாரமிருக்கு.

நான் ஒரு மந்திரிச்ச கயிறு தரேன், வாங்கி கட்டிக்க, இன்னிலிருந்த ஒருவாரம் அதாகப்பட்டது ஏழு நாளு என்ற ரேஞ்சில் சொன்னதையே திருப்பி திருப்பி போட்டு டயலாக்கை நீட்டி வெள்ளிக்கிழமையில் தான் இந்தப் பரிகாரத்தை செய்யவேண்டும், செஞ்சு முடிச்சவுடனே நீயா பாத்து ஒரு மூன்னூறூ ரூவா (!!!) கொடுத்துரு தங்கச்சி. அவ்ளோதான். அக்காவுக்கு பயம் அதெல்லாம் வேணாங்க என்று சொன்னாலும், அவர் கயிறு தருவதிலே குறியாயிருக்க. அந்த வீட்டில் குடியிருக்கும் ஆஜானுபாகுவான நாகராஜ் வந்து அந்த ஜோசியரை வெறும் ஐந்து ரூபாய் கொடுத்து விரட்டிவிட்டாராம். ஆனாலும் அக்காவிற்கு மனசு ஆறவில்லை. எங்களிடம் சொல்லிய பின்னர் நாங்களும் எவ்வளவோ மன அமைதி படுத்தினாலும், ஒன்னும் வேலைக்காகவில்லை. எல்லாம் சரி, அவன் எப்படி கரெக்ட்டா, வாகன ஓட்டின்னு சொன்னான், மாமா ஆட்டோ தானே ஓட்டுது என்று பாயிண்ட்டை பிடிக்க, என்ன செய்வதன்றே தெரியவில்லை. ஒரு மணி நேரத்திற்குள் வீடே தலை கீழாகிவிட்டது. சரியாக அந்த சமயம் வீட்டுக்கு வந்த மாமா, அந்த மோட்டுத் தெருவுல ஒருத்தன போட்டு அடிச்சுட்டு இருக்கானுங்க, ஒரே கூட்டம், ஆட்டோ வரவே வழியில்ல,வண்டிய அந்த முனையிலயே நிறுத்தி வெச்சுட்டு வந்துட்டேன், சீக்கிரம் சாப்பாடு போடு என்று சொல்ல, நாங்கள் என்னவாம் மாமா என்று கேட்க, அது ஒன்னுமில்லடி, ஏதோ ஜோசியக்காரனாம், பல்லி, ரத்தம் கக்கும்னு ரெண்டு, மூணு வீட்டுல சொல்லியிருக்கான் போல. அதுல யாரோ ஒருத்தவங்க இப்பத்தான் இதையே எங்க வீட்டுல (வேறு தெரு) வந்து சொன்னான், இப்ப இங்கயும் வந்து சொல்றானேன்னு விசாரிச்ச்சு அடி பின்னுக்கிட்டிருக்காங்க என்று சொன்னவுடன், எல்லோர் முகத்தில் நீண்ட நேரம் கட் ஆகி, அதிக வோல்ட்டேஜோடு வந்த கரண்ட் போல ஒரு பிரகாசம். அப்புறமும் அக்கா விடாமல், உருவ ஒற்றுமைகளையெல்லாம் மேட்ச் செய்து கன்ஃபர்ம் செய்துகொண்ட பின் தான் எங்கள் எல்லோருக்கும் சாப்பாடு கிடைத்தது.

24 June 2009

உப்பு

வீட்டை விட்டு எல்லோரும் போய்விட்ட இந்த 10 மணி காலை, ஒரு பெருமழை பெய்து ஓய்ந்த தோற்றத்தை வீட்டிலேயும், தன் மனதிலேயும் உண்டு செய்தது. காலையில் காஃபி குடித்ததோடு சரி, இன்னும் டிபன் ஆகவில்லை, பசித்தாலும் சாப்பிடும் எண்ணமே இல்லை.

எப்படி இருக்கும்? சாப்பாட்டை பார்த்தாலே சட்டென்று உப்பின் ஞாபகம்தான் வருகிறது. சமையலறைக்கு போனாலுமே உப்பின் ஞாபகம்தான். எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் எப்படியாவது கூடிவிடுகிறது, இல்லையாவது குறைந்துவிடுகிறது. ஆனால் சரிக்கு சரியாய் இல்லை. கொஞ்ச நாட்களாகத்தான் இப்படியென்றாலும், இன்று எல்லோருமே டிபனை புறக்கணித்ததால் மிகவும் சங்கடப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதுவும், உன் கை ரொம்ப பெரிசுங்கறதனால, இப்படியா உப்பை கொட்டி வைப்ப, இதுல என்று தட்டை தள்ளிவிட்டு போனபோது சற்று ஆத்திரமாய் வந்தாலும்,அதன் நிவர்த்திக்கான வழி தெரியவில்லை.

திருப்பி திருப்பி கையைப் பார்த்துக்கொள்கிறேன். பெரிசாக ஒன்றும் தெரியவில்லை, சரியாக, பொருத்தமாகத்தான் இருக்கிறது. கையையே ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டிருந்ததால், போட்டிருந்த மோதிரமும் கண்ணுக்குப் பட்டது, இவ்வளவு நாளாய் விரலோடு விரலாகத்தான் இருக்கிறது. இன்றுதான் அதன் நுட்பமான வேலைப்பாடுகள் கூடத் தெரிகிறது. சின்ன சின்ன உருண்டையாக, வளையங்களைக் கொண்டு, வளையங்களின் இடுக்கில் அழுக்கு ஏறிப்போயிருக்கிறது. சுத்தம் செய்ய வேண்டும் என்று அந்தக்கணம் தோன்றியது.ஆனால் அடுத்த கணமே உப்பின் நினைவு வந்து ஒட்டிக்கொண்டது. கை சுட்டாலும் பரவால்லை என்று சுட சுட கையில் ஊற்றி, சுவைத்துப் பார்த்தால் எல்லாம் சரியாக இருப்பது போலத்தான் தோன்றுகிறது. இது போன்று உப்பின் சுவை பார்ப்பது கடந்த சில நாட்களாகத்தான். அதற்கு முன்னரெல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒருவேளை நாக்கில் பிரச்சினை இருக்குமோ. நாக்கைப் பார்த்தால் என்ன. சட்டென்று கண்ணாடியின் அருகே போய், நாக்கைப் பார்த்தேன். இரண்டு பக்கமும் திருப்பி திருப்பி பார்த்து, நாக்கை நீட்டிப் பார்த்து என்று செய்ததில் உமிழ்நீர் சுரந்ததுதான் மிச்சம், வேறொன்றும் பலனில்லை.

ச்சே, உப்பு என்ற ஒன்றை கண்டுபிடிக்காமலேயே இருந்திருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்கும், அப்படியே அதனதன் போக்கில் சாப்பிட்டு நாக்கும் பழக்கப்பட்டு போயிருக்கும், இப்படியே யோசனை நீண்டதில், தான் எப்பவாவது உப்பில்லை என்று உணவை புறக்கணித்திருக்கோமா என்று தோன்றியது.
ஒரு முறை அத்தை வீட்டில் தான் அது நடந்திருக்கிறது. அம்மாவிற்கு பெரும்பாலும் இந்தப்பிரச்சினை வராது, பாட்டிக்கும், அப்பாவின் சத்தத்திற்கு பயந்தே பார்த்துப் பார்த்து சமைப்பாள். ஒரு முறை கூட தப்பிப்போனதில்லை, பிள்ளைகளின் மீது எவ்வளவு கவனம் வைத்திருந்தாலோ, அதே கவனம் உப்பின் மீதும் இருந்திருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. சாப்பிடும் போது ஒரு முறை கூட உப்பு வைத்திருக்கும் கலம், கூடத்திற்கு வந்ததில்லை. ஆனால் அத்தை வீட்டில் பொடி உப்பை ஒரு சிறிய டப்பாவில் போட்டு, சாப்பாட்டு மேசை மீது எப்போதுமே இருக்கும். ஓட்டலில் வைத்திருப்பதைப் போல.

அத்தைக்கு அவ்வளவாய் சாப்பாடு, சமையல் என்ற விஷயத்தில் ஈடுபாடு இருக்காது, அதற்காகவே விடுமுறை காலங்களில் அத்தை வீட்டுக்கு ஓடிப்போகத்தோன்றும், இங்கே இருந்திருந்தால் இந்தப் பாட்டியின் பேச்சைக்கேட்டு, அம்மாவும் என்னை நை, நை என்று அதைச் செய், இதைச் செய் என்று நைந்துகொண்டிருப்பாள், செய்யவில்லை என்றால் பாட்டி வைதுக்கொண்டிருப்பாள். இந்த தொந்திரவுக்கே, விடுமுறை வரும் ஒரு வாரத்துக்கு முன்னரே அத்தையை வரச்செய்து, அவளோடு தொத்திக்கொண்டு போய்விடுவது. எந்த தொந்திரவும் இல்லாமல், நினைத்ததை செய்துக்கொண்டு பொழுதோட்டுவது என அவையெல்லாம் கார்காலங்கள். அவ்வப்போது அம்மாவை நினைத்துக்கொண்டாலும், அந்த குண்டு பல்பு போட்ட சமையலைறையை நினைத்தால் கொஞ்சம் பயமாகவே இருக்கும்.

அத்தை அனேகமாய் கலந்த சாதம் மாதிரிதான் செய்வாள். அதுதான் சுலபம், ரசம், சாம்பாருன்னு செஞ்சாலும் சாதத்துல போட்டு கலந்துக்கிட்டுதானே சாப்பிடப்போறோம். தோசை சரியாகவே வார்க்கவராது, சப்பாத்தியும் அதே கதைதான். ஓவ்வொரு தோசையும், சப்பாத்தியும் ஒவ்வொரு தோற்றம் காட்டும், சில சமயம் மேப்பில் இருக்கும் சில நாடுகள் கூட அதே மாதிரி சாயலாய் இருப்பதாய் கூட நினைத்துக்கொண்டு சிரிப்பேன். அத்தை கேட்டால் சொல்லிவிடுவதுண்டு, அதற்கு அவளும் சிரித்துக்கொண்டே, எப்படியும் பிச்சு பிச்சு தானே சாப்பிடறோம், எப்படியிருந்தா என்ன, வயிறு ரொம்புதா. அதப் பாரு என்பாள். ரொம்பவும் மெனக்கெட மாட்டாள் சமையலுக்கு எப்பவுமே, மாமாவும் அதே மாதிரி இருந்ததால், அத்தைக்கு இந்த விஷயத்தில் எந்த பிரச்சினையுமில்லை.

கூடுதலாக இவளின் சமையலின் கைத்திறமை கண்டு, சொந்தக்கார கூட்டங்கள் வந்து டெண்ட் அடிப்பதென்பது மிகமிகக் குறைவு. அத்தைக்கு சமையலில் தான் கைத்திறமை இல்லையே ஒழிய, கை வேலைப்பாடெல்லாம் அழகாய் செய்வாள், அவள் எம்ராய்டரி போட்டால் இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். அத்தையின் ஓய்வு நேரங்களெல்லாம் எம்ப்ராய்டரிதான், சில பத்திரிக்கைகள் நடத்திய போட்டியில் கலந்து கொண்டு பரிசு கூட வாங்கியிருக்கிறாள் இதற்காக. எம்ப்ராய்டரிக்கு நேரம் ஒதுக்குவதற்காகவே சமையலை சீக்கிரம் முடிக்கிறாள் போல என்று கூட தோன்றியது.

மேடம், கொரியர்.......... என்ற கட்டைக் குரல், சட்டென்று நினைவுகளை கலைக்கச்செய்தது. நேரத்தைப் பார்த்தால் 11 மணி என்று காட்டியது. ஏதோ பேங்க்கில் இருந்து வந்த கொரியர், ஸ்டாண்டில் வைத்துவிட்டு, வீட்டை ஒழுங்கு செய்யவே அரைமணி நேரம் பிடித்தது. மறுபடியும் சமையலறை. உப்பு கிலி பிடித்துக்கொண்டது. சாப்பிடத்தோணவில்லை, மீண்டும் ஒரு காபி குடித்துவிட்டு, துணிகளை துவைத்து, காயப்போட மாடிக்கு போனேன். காயப்போடும்போது, அங்கிருந்து மளிகைக்கடை கண்ணில் பட்டது. ஒரு வேளை இவன் தரும் உப்பில் ஏதேனும் ப்ரச்சினையா. அளவாய் போட்டாலும், கரிக்க செய்யும் தன்மையோ. என்ன உப்பு வாங்குகிறோம்,கீழே போய் பார்க்கவேண்டும்.

ச்சே, எங்கே போனாலும் இந்த உப்பு ப்ரச்சினை ஒட்டிக்கொண்டே வருகிறது. பசித்தது, காலையில் சாப்பிடத்தாலோ என்னவோ, தயிர் சாதம் சாப்பிடலாம் என்று தோன்றியது, சாதத்தில் தயிரை விட்டு பிசையும்போது தோன்றியது, உப்பு போடாமல் இன்று சாப்பிட்டால் என்ன, இன்று காலையிலிருந்து என்னோடு ஒட்டிக்கொண்டே வந்து உயிரை வாங்கும் இந்த உப்பு நினைவுக்கு இதுதான் சரியான தண்டனை, உன்னைப் புறக்கணிக்கிறேன் உப்பே என்றபடி தயிர்சாதத்தை வாயில் வைத்தால் என்னவோ போலிருந்தது.
என் பேச்சும், செயலும் எனக்கே சிரிப்பை வரவைத்தாலும், உப்போடு ஒரு வீராப்பு வரத்தான் செய்தது. பாரேன், உப்பு, வீராப்பு என்று, ஆழந்த சிந்தனைகளில் தொடர்பாக வார்த்தைகள் கூட அடுக்கு மொழி போல வந்து விழுகிறது. ம்ஹூம் விடுவதாயில்லை, எப்படியாவது இந்த உப்பில்லா தயிர்சாதத்தை சாப்பிட்டாவேன், இரண்டும், மூன்று வாய், குமட்டிக்கொண்டு வந்தது. கொஞ்சம் ஊறுகாய் வைத்துக்கொள்ளலாமா என்று தோன்றியது, ம்ஹூம், வேண்டாம். உப்பின் அதிக பட்ட பயன்பாடே ஊறுகாய்க்குத்தான். அதற்கு ஒரு துளி உப்பே சேர்த்துக்கொள்ளலாம்.

வேண்டாம் என்றால் வேண்டாம் தான் என்று பிடிவாதமாய், தட்டை கையிலெடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்து டி.வி.யைப் போட்டேன். போட்டவுடனேயே இந்தக் காட்சிதான் ஓடியது, ஒரு பெண்ணும், சமையலறையும்,கலராய் ஏதோ உணவு வகையறாவையும் காண்பித்து, தலைமுடி சீராய், மடிப்பு கலையாத புடவையோடு,முக்கியமாய் வியர்த்து வழியாமல்,தன் நீண்ட நெயில் பாலீஷ் விரல்களால் உப்பை அழகாய் தூவிக்கொண்டிருந்தாள். உடன் ஒரு மெல்லிய இசையும் ஒலித்தது. வாங்குங்கள் அயோடின் நிறைந்த இந்த உப்பை என்று கீச்சுக்குரலில் சொன்னாள். டி.வியை ஆஃப் செய்யவும் தோன்றாமல்,சாப்பிடவும் தோன்றாமல் தயிர் சாதத் தட்டையே வெறித்துக்கொண்டிருந்தேன் நான். பிள்ளைகள் பள்ளிவிட்டு வரும் சத்தம் கேட்டது. மீண்டும் வருமா இந்த உப்பின் யோசனை, இல்லை மீண்டு வருவோமா இந்த உப்பிலிருந்து ? மறுபடியும் உயிரைவாங்கும் இந்த உப்பின் சிந்தனையோடு கையைக் கழுவிக்கொண்டு கதவைத் திறந்தேன்.

22 June 2009

அன்புள்ள அப்பாவிற்கு

உன்னைப் பற்றி சொல்வதற்கு கொஞ்சம் நினைவுகளும்,உன்னைப் போற்றி சொல்வதற்கும் என்னிடம் சொற்ப வார்த்தைகளே உண்டு. உன் வித்தில் பிறந்தும் காயாகி, கனிந்து பின் உனக்கு நிழல் தரா மரம் நான் ஒவ்வொரு அமாவாசைக்கும் தலைக்கு தண்ணீர் ஊற்றிக்கொள்ளும்போது மறக்காமல் உன் நினைவுகளும் வந்து செல்கிறது. என்ன செய்வது உன் வயோதிகமே நமக்கிடையே ஒட்டுதலை ஏற்படுத்தாமல் போனது.

நான் யூ.கே.ஜி படிக்கறப்போ, நீ என் ஸ்கூலுக்கு க்ளாஸ் நடக்கறப்போ வந்து, ஜன்னல் வழியா என்னைக்கூப்பிட்டு சின்ன சின்ன முறுக்கும், பட்டர் பிஸ்கட்டும் எண்ணை படிந்த பேப்பரோடு கொடுத்துட்டு போவியே.அப்பவே சில ஸ்கூல் பசங்களெல்லாம், மிஸ் அங்க பாருங்க, ஒரு தாத்தா வந்து நிக்கறாரு ந்னு கூட இருக்குற பசங்க உன்னைக் கைய காட்டுனது தான் என் மனதின் அடி ஆழம் தொட்ட வார்த்தைகள்.

எனக்கு தந்தையாய் தெரிந்த நீ, மற்றவர் கண்களுக்கு தாத்தாவாகிப் போனாய். அது உன் உழைப்பின் வீரியம் என்பது நெடுநாள் கடந்துதான் எனக்கு தெரிந்தது. தெரிந்துமென்ன, உன் வயோதிகத்தின் கடைசி காலங்களில் உனக்கு அனேக நிமிடங்களில் ஆதரவாக நானில்லை. நான் மகளாக இருந்த சொற்ப கணங்கள் என் கண் முன் தெரிகிறது. ஏதோ அந்த மட்டுக்குமாவது உனக்கு நான் மகளாக இருந்திருக்கேனே.

உன் புஜத்தில் தளர்ந்த நரம்புகளுக்கிடையே இருக்கும் தள தள மருவைத் தான் அதிகம் நெருடியிருக்கேன், நினைவு தெரிந்து எனக்கும் உனக்குமான அதிக பட்ச நேசம் அதுதான். உன் வேலை நேரம் அப்படி. நமக்கிடையே ஒரு அழகான புரிதல் ஏற்படாமல் இருப்பதற்கு காலம் கூட சாட்சியாகிப்போனது.

ஒரு நாள் அம்மா என்னை ஆக்ரோஷமாக அடித்துத் தள்ள, வலி தாளாத நான் உன் வேலையிடத்தை தேடி வர, அவர்களிடம் கொஞ்சம் நேரம் கடன் கேட்டு, என்னை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டு உன் உதடுகளும் உடம்பும் உதற அம்மாவை திட்டிவிட்டுப் போனாயே, பசுமையாய் நினைவிருக்கிறது.

அப்பா, இப்போது நீ இல்லை, உனக்கு பதிலாக நான் உன் வயதில், வடிவில் இருக்கும் அனைவரையும் அப்பா என்று அழைத்துவிடுகிறேன். குறிப்பாய் என் மாமனாரை. நீ இல்லாத குறையை அவர்தான் எனக்கு தீர்த்துவைக்கிறார். வழக்கமாய் என் பிறந்தநாளுக்கு அவர் எனக்கு பூ வாங்கித் தர மறப்பதில்லை, பூ வைக்கப் பிடிக்காத நானும், அதை மறுப்பதுமில்லை.

நீ உயிரோடு இருக்கும் போது குறைந்த பட்சம் ஆதரவாய் எதுவும் பேசாத நான், இப்போது எனக்கு(ம்) எழுத ஒரு இடம் இருக்கும் நிலையில் உன் மீதான என் உணர்வுகளை இறக்கி வைக்கிறேன்.

தந்தையர் தின வாழ்த்துப்பதிவுகளைப் பார்க்கும் போதெல்லாம், மறக்காமல் உன் ஞாபகமும் வந்து போனது. காலம் கடந்து உன் நினைவுகளைப் பகிர நினைத்தாலும், அதில் உன் வியர்வை வாசமே இல்லை.

யாருடமும் பகிர்ந்து கொள்ள முடியாத, உனக்குமெனக்குமிடையான ஒரு வலிமையான வெற்றிடத்தை நீ எனக்கு உருவாக்கித் தந்துவிட்டுப்போயிருக்கிறாய். அந்த வெற்றிடத்தையெல்லாம் இப்போதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வரும் சில, பல நினைவுகளை வைத்து நிரப்பிக் கொள்கிறேன். அந்த நினைவுகளெல்லாம் இனிமையாய் ஆரம்பித்து, கடைசியில் இப்படித்தான் முடிகின்றன, அப்பா இருந்திருந்தா..................

அக்காவின் கனவில் வந்து, மாமா உன்னோடுதான் இருப்பதாகவும், நீங்கள் இருவரும் எங்களை பார்த்துக்க்கொண்டிருப்பதாகவும் சொன்னாயாம், பார்த்துக்கொண்டிருப்பது உண்மையோ, பொய்யோ, இந்தக் கணத்தின் என் வருத்தமும், இதை எழுதும் போது கண்ணீர் மல்கியதென்னவோ நிஜம். நீ பார்த்துக்கொண்டிருப்பது நிஜமானால் மன்னிச்சுடுப்பா.

உன்னோடு இன்னும் மனதுக்கு நெருக்கமாய் வாழ கொடுத்து வைக்காமல் போனது நான் மட்டுமல்ல, வர்ஷினியும் தான். நீ இருந்திருந்தால் எப்படி பூரித்துப்போயிருப்பாய், உன் பேத்தி செய்யும் வேடிக்கைகளை நினைத்து.

இந்த வார்த்தைகளைத் தான், நாங்கள் சின்ன வய்தாய் இருக்கும்போது நீ அடிக்கடி சொல்வாய், //முருகன் தாத்தா இருந்தா பூரிச்சுப்போயிருப்பாரு, நீங்க பேசறத கேட்டு.//
நீ சொல்லிப்போன அதே வாசகங்கள் தான் இப்போது நான் வர்ஷினியிடம் சொல்கிறேன்.

இப்படிக்கு
காலனிடம் உன்னை அனுப்பிவைத்துவிட்டு
உன்னை நேசிக்கவில்லையே என்று வருந்தும்
உன் மகள் யசோதா கந்தசாமி.

19 June 2009

பிறர்க்கின்னா......

மண்ணு மேல ஒக்காந்துகிட்டு பொண்ணப் பத்தி தப்பா பேசாத சண்முகம்,என்றபடியே சிரித்துக்கொண்டே, எழுந்து நின்று லுங்கியின் பின்புறம் தட்டிக்கொண்டார் பிள்ளையார் (அவரின் உண்மை பெயர் கணேசன், எக்கச்சக்கமாக வளர்ந்த தொப்பையின் காரணமாக புள்ளையார் என்பது பெயராயிற்றாம்)யோவ் போய்யா, இவ்ளோ நேரமா ஒக்காந்து கேட்டுக்கிட்டு, நோவாம டீயையும் குடிச்சுட்டு கடைசில எனக்கே சொல்றியா. போய்யா எழுந்து வூட்டுக்கு. புதுதாய் குடிபோன வீட்டின் காம்பவுண்ட்டிற்குள் சாயந்திரம் நான் நுழைந்த போது என் காதில் விழுந்த முதல் காட்சியின் சம்பாஷணை இது.

8 குடும்பங்கள் வசிக்கும், நாங்கள் புதிதாய் குடிபோன காம்பவுண்ட்டில் சண்முகம் என்பவரும் ஒரு குடித்தனக்காரர். சண்முகம், காய் வியாபாரம் செய்பவர். அந்த தெருவில் இருப்போர் ஏனைய பேர் தூரம் கருதி மார்க்கெட்டுக்கு போகாமல் அவரிடமே காய் வாங்கிவிடுவார்கள்.

காலை 4 மணிக்கு எழுந்து மாலை 2,3 மணி வரை எல்லாக் காய்களையும் எங்கள் தெருவிலும், இன்னும் ஏனைய ஏரியாவிலும் தள்ளுவண்டியில் வைத்து விற்றுவிட்டு, மாலை 5 மணிக்கு மேல் புள்ளையாரும், அவரும் பட்டறைப் போட்டுக்கொண்டு அந்த தெரு பெண்களைப் பற்றியெல்லாம் பேசித்தீர்ப்பார்கள்.சண்முகம் என்ற காய்க்காரரின் வாய்க்குள் யாரும் தப்பாமல் போகமுடியாது. சாயங்காலம் வேலை விட்டு வீட்டுக்குப் போகும் பெண்கள், ட்யூஷன் படித்துவிட்டு வரும் , டைப் ரைட்டிங்க் க்ளாஸ் போய்விட்டு வரும் மாணவிகள் என எவரையும் அவர் விட்டு வைக்க மாட்டார். த்தோ போதே அது என்று என்னமோ ஆடு மாடை சொல்லும் ரேஞ்சுக்கு ஆரம்பித்து, கதை கதையாக கட்டுவார். ஏதாவது வேலை நிமித்தம், நாம் அந்த இடத்தை க்ராஸ் செய்தால், கண்டிப்பாய் காதில் விழும். அவர் வாய்க்கு நானும் தப்பியிருக்க முடியாதென்றே நினைக்கின்றேன்.

பேகைப் பாரு, மாட்டலைப் பாரு இந்த வயசுல, பின்னலப் பார் என்று வயசுப் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை உடை குறித்தும், நடை குறித்தும் சிரித்துக்கொண்டே அவர் பேசும் பேச்சு, இழுத்து வைத்து கன்னம் கன்னமாய் அறையலாம் போல வரும். வியப்பிலும் வியப்பு என்னவென்றால், அந்தப் பெண்கள் இவரிடம் காய் வாங்க வரும்போது அவ்வளவு இயல்பாக அளவளாவுவார். என்ன ராஜூ அம்மா, என்ன ரமேஷ் அம்மா, என்ன திவ்யாம்மா, மெக்கானிக் எப்படியிருக்காரு என்று ஆரம்பித்து 5 நிமிடம் காய் வாங்கும் நிகழ்வை 15 நிமிடம் நீட்டுவார், பலர் பொறுமை இழந்து, காய்க்காரே மீதி சில்லரை குடு என்று சிடுசிடுக்கும் வரை அவர் பேச்சு நீளும். இவரின் பேச்சு தொந்தரவுக்கு பயந்து இவரிடம் வியாபாரம் செய்யாத பெண்களின் நிலை இன்னமும் மோசம். இன்னா, ஒரு வாரமா கூடை மார்க்கெட்டுக்கே போவுது. ம், எதாவது ஆத்திர அவசரத்துக்கு நம்ம கடைக்குத்தான் வரணும் என்று திகிலூட்டவும் செய்வார். மொத்தத்தில் அவரின் வாய்க்கு பயந்தே அந்தத் தெரு பெண்கள் அவரிடம் காய் வாங்கிக் கொண்டிருந்தனர்.

எனக்கு அவரைக்கண்டாலே எரிச்சலாக வரும். அவருக்கு செல்வி என்று ஒரு மகளும், சரவணன் என்ற மகனும் இருந்தார்கள். எப்போதாவது அவரின் டபுள் மீனிங்க் வசனங்களை கேட்க நேர்ந்தால், டென்ஷனாகி அக்காவிடம், ஒரு நா இல்லனா ஒரு நாளு, அந்த காய்க்காரு எங்கிட்ட நல்லா வாங்கிக்கட்டிக்கபோறார் பாருக்கா. ஏய், வேணாம், அந்தாளு கிட்ட வெச்சுக்காதே, தெருவுல உக்காந்து அந்தாளு ஏடா கூடமா நம்மளப் பத்தியும் பேசுவான். கடவுளேனு போ, அதுக்குண்டான பலன அவன் அனுபவிச்சுப்பான் என்று பதில் வரும். கண்டும் காணாமலேயே காலம் ஓடியது. சரியாய் செல்வி 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் அது நடந்தது.

அந்த வீட்டில் எல்லார்க்கும் பொதுவான மாடி இருந்தது,. வெய்யிலை முன்னிட்டு குடியிருப்பவர்களில் பாதி பேர் மாடியில் தான் படுத்துக்க்கொள்வார்கள். அதில் அம்மாவும் அடக்கம், சில சமயங்களில் உடன் நாங்களும். அதில் ஒருநாள் இரவு 10 மணி வாக்கில், நாங்கள் கீழே சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அம்மா சாப்பிட்டுவிட்டு மாடிக்கு போய் படுத்துவிட்டார்கள். காய்க்காரின் மொத்த குடும்பமும் அங்கேதான் படுக்கும். அன்று செல்வி மட்டும் முன்னமே போய் படுத்துவிட்டது. காய்க்காரர், அவர் மனைவி, மகன் எல்லாரும் ஏதோ சீரியல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். திடிரென்று அம்மாவின், குரல் கேட்டது, திருடன், திருடன், புடி, புடி, சம்பத்தே, புடிப்பா புடிப்பா என்று. சாப்பிட்டுக்கொண்டிருந்த மாமா அப்படியே எழுந்து ஓட, இன்னும் வீட்டில் குடியிருப்பவர் எல்லோரும் துரத்திக்கொண்டு ஓட அடுத்தத் தெருவின் முனையில் வைத்து அவனைப் பிடித்தார்கள். நாங்கள் அனைவரும் காம்பவுண்ட்டிற்குள் அழுது கொண்டிருந்த செல்வியிடமும்,என் அம்மாவிடமும் என்னாயிற்று என்று விசாரித்துக்கொண்டிருந்தோம். விஷயம் இதுதான், அம்மா போய் படுத்த சில நிமிடங்களுக்கெல்லாம், செல்வியும் போய் படுத்திருக்கிறது. படுக்கும் போது என்ன ஆயா, சாப்டீங்களா என்று கேட்டதால் அம்மாவிற்கு விழிப்பு தட்டி முழித்துக்கொண்டுதான் படுத்திருக்கிறார்கள்.

செல்வி படுத்துவிட்ட அடுத்த சில நிமிடங்களில் ஒரு உருவம் செல்வி பக்கத்தில் படுக்க, அரைகுறை வெளிச்சத்தில் பார்த்த அம்மா சுதாரிப்பதற்குள், செல்வி கத்த, தொடர்ந்து அம்மாவும் கத்தியிருக்கிறார். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத அந்த உருவம், ஒரே பாய்ச்சலாக வெளியே ஓடிப்போனது. மாமா மற்றும் பலரும் போய் பிடித்து விசாரித்ததால், அவன் பக்கத்து வீட்டிற்கு புதிதாய் குடிவந்த கார் மெக்கானிக். குடி போதையில் தெரியாமல் இந்த மாடிக்கு வந்துவிட்டானாம், மன்னித்து விட்டுவிடுங்கள், அவன் ‘அந்த’ மாதிரி பையன் கெடையாது என்பது அவன் அம்மாவின் வாதம். சரி விஷயத்தை பெரிசு பண்ண வேண்டாம். வயசுப்பொண்ணு, ஸ்கூலுக்கு போகும் வரும் போது எதாவது ப்ரச்சனையாகப் போகுது என்று அவனை நாலு தட்டி தட்டி அனுப்பி வைத்தாயிற்று. அத்தோடு மாமா, அம்மாவையும் இனிமேல் மாடியில் போய் படுக்கக்கூடாது என்று தடை விதித்தார். நாங்களும் இனி மாடிக்குப் போய் படிக்கக்கூடாது என்று கல்விக்கும், காற்றுக்கும் 144 போட்டார்கள். காற்று வசதிப்பத்தாத அம்மாதான் ரொம்ப நாள் அந்த மெக்கானிக் பையனை கரிச்சுக்கொட்டிக்கொண்டே இருந்தார்கள். இந்த சம்பவம் நடந்த அடுத்த மூணு மாதத்திற்குள், அந்த கார் மெக்கானிக்கிற்கு கல்யாணம் நடந்துவிட்டது. அந்தப் பொண்ணு கூட அழகா இருந்தது. எங்கள் காம்பவுண்டில் இருக்கும் யாருக்கும் பத்திரிக்கை வைக்கவில்லை !!!.

அந்த சம்பவத்திற்குப் பிறகு ஏனோ காய்க்காரர் முன்பை விட கொஞ்சம் அடக்கியே வாசித்தார், அடிக்கடி சம்பத் தடுத்ததால அவன் பொழைச்சான், இல்லனா நான் அவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போயிருப்பேன் என்று உதார் விட்டுக்கொண்டிருந்தார். மாமாவிடம் கேட்டதற்கு அந்தாளு எங்கடி, அந்த பையனை ஒரு அடி கூட அடிக்கல, அப்படியே முழிச்சிக்கிட்டு நிக்கறான். தெருவுல பாதிப்பேருக்கு என்னமோ அது நம்ம வீட்டுல நடந்த விஷயம்னு நெனச்சிக்கிட்டாங்க ! என்றார்.

விதி அத்தோடு காய்க்காரரை விடவில்லை. செல்வி பத்தாவதில் இரண்டு பாடங்கள் கோட் அடித்தது. மேலும் படிக்கவும் விருப்பமில்லை என்று சொல்லி, வீட்டிலேயே இருந்துவிட்டது. வளர்ந்த பெண்ணை, எவ்வளவு நாள் வீட்டிலேயே சும்மா வைத்துக்கொண்டிருப்பது என, காய்க்காரரின் அக்கா மகனான அய்யப்பனுக்கே கட்டி கொடுக்க முடிவாகியது. அய்யப்பன், அய்யோ பாவம், செல்வியின் உடம்பில் பாதிதான் இருப்பான். செல்வியின் ஊதிப்போன உடம்புக்கு தைராய்டுதான் காரணம் என பின்வரும் வருடங்களில் தான் தெரிந்தது. கல்யாணமும் நடந்தது, நாங்களும் அந்த வீட்டைவிட்டு காலி செய்து கொண்டு அடுத்த தெரு போய்விட்டோம். பிறிதொரு நாள், அந்த காம்பவுண்டில் குடியிருக்கும் ஒருவர், சும்மா பார்த்துட்டுப்போகலாம்னு வந்தேன் என்று எங்கள் வீட்டிற்கு வந்தார். நான் சும்மா இல்லாமல், என்ன தேவியம்மா, காய்க்கார் இன்னும் அப்படியேதான் இருக்காரா. செல்விக்கு கல்யாணம் ஆச்சே, எப்படியிருக்கு என்றார். கேட்டதுதான் தாமதம், தான் வந்ததே அதை சொல்லத்தான் என்பதைப் போல, அதையேன் கேக்கறீங்க என்று நீட்டி முழக்கியதில் இடையில் 2 காபி உள்ளே போனது.

அதாகப்பட்டது, செல்வி கல்யாணமாகி கிராமத்திலிருக்கும் (வேலூர் பக்கம்) அத்தை வீட்டுக்குப் போக, அதுவரை அப்பாவின் அக்காவாக இருந்த அத்தை, செல்வி போன பிறகு அய்யப்பனின் அம்மாவாகிவிட்டார் போலும். 10 மணி வரைக்கும் தூங்குது, சாணி கரைச்சு வாசல் தெளிக்க தெரிலை, அது தெரில, இது தெரில, தெனமும், பொரியல் இருந்தாதான் சாப்பாடு எறங்குது. பத்தாத கொறைக்கு, அய்யப்பனிடம் டி.வி. வாங்க சொல்லி நச்சரிப்பாம். அய்யப்பன் என்ன வேலை செய்து கொண்டிருந்தான் என்பது அப்போதும், அதற்குப்பிறகும் எங்களுக்கு தெரியவில்லை.

இப்படியாய் குற்றப்பத்திரிக்கை நீள, ஏதோ ஒரு கல்யாணத்திற்காக சென்னை வந்த செல்வி, அப்படியே அம்மா வீட்டில் டெண்ட். கொஞ்சம் நாள் கழித்து, வேணும்னா, அய்யப்பன் இங்க வரட்டும், நான் அந்த ஊருக்கு போகமாட்டேன் என்று கொடி பிடிக்க, அய்யப்பனின் அம்மாவோ, நான் வெச்சிருக்கறது ஒத்த புள்ள, அத அங்க அனுப்பிவெச்சுட்டு இங்க காடு கழனிய யாரு பாக்குறது. அதெல்லாம் முடியாது என்று இழுக்க, இழுபறி நீண்டு விஷயம் விவாகரத்து வரைக்கும் போய்விட்டது.

நீளமாய் பேசி முடித்த தேவியம்மா, கடைசியில் சொன்னது இதுதான், மத்த பொண்ணுங்களப்பத்தி அவ்வளோ பேசினாரே, அந்தப் பாவம் சும்மா விடுமா, சொல்லுங்க. இப்ப அந்த தெருவே அதைதான் சொல்லுது. பாருங்க இப்ப, செல்வியப்பா வீட்ட விட்டு வெளிய வந்து ஓக்காரதே இல்ல. 6 மணிக்கு மேல எங்கயோ நைட் வாட்ச்மேன் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாரு. வாசல்ல கூட யார் கிட்டயும் அவ்வளவா பேசறது கெடையாது. என்ன, பாவம் அந்த வெகுளிப்பொண்ணு செல்விதான்.

பி.கு. இரண்டு வாரங்களுக்கு முன்னர் அம்மா வீட்டுக்கு போயிருக்கும்ப்போது, வழியில் காய்க்காரரை பார்க்க நேர்ந்தது. எப்படிம்மா இருக்க, குழந்த எப்படியிருக்குது என்று விசாரித்தார். நல்லா இருக்குறா என்ற ஒற்றை சொல்லைத் தவிர எதுவுமே பேசவரவில்லை அவரிடம். செல்வி எப்படியிருக்கா என்று கேட்க தோணியது, ஆனால் அவரின் தளர்ந்த நடை, என்னை என்னவோ செய்தது. மறக்காமல் இந்த பதிவின் முதல் வாக்கியமும் ஞாபகத்திற்கு வந்தது.

15 June 2009

நிகழ்வுகள்

கிழக்கு பதிப்பகத்தார், ஒரு புத்தகம் இலவசமாக வீட்டுக்கு அனுப்பப்படும் என்ற லிங்க்கில் (லிங்க் உபயம்: திரு. குசும்பன் ப்லாகில் ஒருவர் இட்ட பின்னூட்டம்)
பதிவு செய்தபடியே, வீட்டுக்கு இன்ப அதிர்ச்சியாக புத்தகம் வந்து சேர்ந்தது. நன்றிகள் கிழக்கு பதிப்பகத்தார் + பின்னூட்டியவர்

புத்தகத்தின் பெயர்: ஆதவன் எழுதிய இரவுக்கு முன் வருவது மாலை,
சிறிது நாட்களுக்கு முன்னர் தூறல் கவிதைகள் திரு. ச.முத்துவேல் இந்தப் புத்தகத்துக்கு விமர்சனம் செய்திருந்தார்.
(முதல் கதை எனக்கு புரியவே இல்ல), முதற் கதையே கிர்ர்ர்ர் ஆனதில், மீதியை இனிமேல் தான் படிக்கவேண்டும்.

.............

இரு வாரங்களுக்கு முன்னர் ட்ரெயினில் முதுமையை தொட்டுக்கொண்டிருக்கும் பெண்மணி ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த வழக்கமாக வாழைப்பழம் விற்கும் இருக்கும் ஆயா (தள்ளாத வயது), அவரைப் பார்த்து, கையி, காலு எல்லாம் நல்லாத்தானே இருக்கு.ஏதாச்சும் வூட்டு வேலை செஞ்சாவது சாப்புடலாமில்ல, ஒரு ப்பழம் வித்தா கூட 50 பைசா கெடைக்கும், அத விட்டுட்டு பிச்ச எடுக்கற என எல்லார் முன்னிலையிலும் அந்தப் பெண்மணியை கேட்க, அடுத்த ஸ்டேசனில் அந்த பிச்சை எடுத்த பெண்மணியை காணோம், அதற்கப்புறமும்.

சில இடத்தில் சொல்வார் சொன்னால்தான், கேட்பவருக்கு எடுபடுது. இதையே நாம் சொன்னா, போடறது ஒரு ரூவா, இதுலப் பேச்சப் பாரு என்று நினைக்கக்கூடும்.

.............

”பசங்க” படம் பார்க்க கொடுத்து வைத்தது. படம் சூப்பர். பாராட்டு என்ற விஷயத்தை ஒரு மெல்லிய நூல் போல எடுத்து படத்தில் இழையோட விட்டிருக்கிறார்கள்
சிரிக்கவும் சிந்திக்கவும் அருமையான வசனங்கள். குறிப்பாக அந்த வாத்தியாரும், அன்பரசின் அப்பாவும் பேசிக்கொள்ளும் இடம். நச்.

நடுவில் பக்கடா என்ற கேரக்டர் கையில் ஊற்றிய தேனை குடிக்க முனைய, ஜீவா அந்தப் பையனை ஏய் நக்கி என்று சொல்ல, காமெடியாக இருந்தது. டி.வி.டியில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது, குறுக்க நெடுக்க ஓடிக்கொண்டிருந்த அமித்துவின் காதில் அது விழுந்து, நக்கி, நக்கி என்று சொல்லி இன்னும் காமெடியாப் போனது. படத்தின் க்ளைமாக்ஸில் அன்பரசு பிழைக்க கைத் தட்டும் போது வர்ஷினியும் உடன் கைத்தட்டியது.

பாராட்டு என்ற விஷயம் எவ்வளவு பயன் தருகிறது.
சொல்லப்போனால் நம்மை உயிர்ப்போடும் ஒரு உத்வேகத்தோடும் வைத்துக்கொண்டிருக்கிறது.

ப்லாக் எழுதறவங்களுக்கு ஒரு பெரிய கொடுப்பினை என்னன்னா, கொறைஞ்சது ஒரு 10 பாராட்டாவது கெடச்சு, மனசு மத்தத யோசிக்காம இருக்க வைக்குது.
மனச விட்டுப் பாராட்டிப்போம். இதுவே ஒரு பெரிய ரிலாக்‌ஷேஷன் தானே.

10 June 2009

அமித்து அப்டேட்ஸ்

ஒரு ஊல்ல ஒரு ச்சிங்கம், கச்சிச்சீ, மானு தொத்திச்சி - இது அமித்து எனக்கு சொன்ன ஒன்லைன் ஸ்டோரி.

கேட்ச், இக்சர், அவுட்டு, பேட்டு , பால்லு - இதெல்லாம் அமித்துவோட கிரிக்கெட் வார்த்தைகள்.

டென்னிஸ் பேட்டை பார்த்தால், உடனே கார்க் எங்க என்பாள் (தெருப்பசங்க விளையாடும்போது பார்த்து கார்க் என்ற வார்த்தையை கற்றுக்கொண்டாள் போல)

பேப்பரைப் பார்த்தால் கிழிக்கும் அமித்து, நான் படிக்கும் புத்தகஙக்ளை கிழிப்பதில்லை, எடுத்து வைத்து, படமிருந்தால் பார்த்து,
ம்மா, இத்து, இத்துன்னா, ந்ன்னா என்று கேள்வி கேட்பதோடு சரி. ஏன் அமித்தும்மா, ரொம்ப சமத்தாயிட்டே.

இட்டுனவேணீ - இது அமித்து அவள் ஆயாவை கூப்பிடும் மழலை.

ம்மா, ஊக்கம்மா, ஊக்கு - இரு கையை நீட்டி என்னை அவள் தூக்கச்செல்லும் அழகே தனிதான். ஒரு தடவை இப்படி சொல்லும் போது நான் பதிலுக்கு, ஏம்மா ஊக்கனும், சொல்லுங்க என்றேன், அதுக்கு ஒரு நொடி யோசித்து விட்டு, ம், ம், ல்ல, ஊக்கம்மா என்றாள்,:)-

அமித்துவுக்கு சாப்பாடு ஊட்டுவதற்கு, கிண்ணத்தை எடுத்தால், முதலில் ம்மா, கீழ்ழே என்பாள், சரி கீழ போலாம்மா என்று கீழே போனவுடன், ம்மா, மியாவ், பூன்ன என்பாள், இவளைப் பார்த்தாலே ஒரு கருப்பு வெள்ளை பூனை ஓடிவந்துவிடும், அமித்து சாப்பாடை அழகாய் வாயில் வாங்கி கீழே துப்பிவிட்டு, ம்மியா, ஆப்புடு, ஆப்புடு என்பாள். என்னத்த சொல்ல.

தண்ணீர், பால் என்று எதாவது பெட்ஷீட் மேலேயோ, இல்லை தரையிலோ பட்டுவிட்டால், ம்மா, ஊத்திக்கிச்சு, பாரேன், பாரேன் என்று அழைத்தாகிறது.

வேடிக்கை பார்க்க, ஜன்னலைத் திறந்தாலோ, ஜன்னலின் மேலுள்ள ஸ்கீரீன் அடிக்கடி அமித்து மேல் விழுந்து அமித்துவை டிஸ்டர்ப் செய்யும். இரண்டு நாட்களுக்கு முன்னர், ஸ்கீரினை எடுக்காமல் ஜன்னலைத் திறந்து வைத்து வந்துவிட்டேன். கொஞ்ச நேரம் கழித்துப் போய் பார்த்தால் அமித்து ஸ்கீரினின் ஒரு முனையைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டி எடுத்துக்கொண்டு போய் ஜன்னல் கம்பியின் இடையில் சொருக ஆரம்பித்திருந்தாள். !!!

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை, வேலையெல்லாம் முடித்துவிட்டு படுத்திருந்த மதிய நேரம்,தாகமாக இருந்தது எனக்கு. நான் சும்மானாச்சும் அமித்துவிடம்,வர்ஷினி அம்மாக்கு தண்ணீ தாகம் எடுக்குதுடா என்றேன், சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால், அமித்து கையில் ஒரு சொம்பு, அதனை எடுத்துக்கொண்டு போய் தண்ணீர் குடத்தில் இருந்து கொஞ்சம் (கொஞ்சமே கொஞ்சம்) தண்ணீர், ஒரு கையால் சொம்பை இறுக்கி அணைத்துக்கொண்டு, ஒரு கையால் சுவற்றைப் பிடித்து அவள் வந்ததைப்
எடுத்துக் கொண்டு வந்து எச்சோ, ம்மா ந்தா தண்ணீ என்றாளே பார்க்கணும்.

என் கையில் கொஞ்சம் சூடு பட்டுவிட்டிருந்தது. அது கருப்பாக கொஞ்சம் கொப்புளம் ரேஞ்சுக்கு இருந்தது. அமித்து இதைப்பார்த்துவிட்டு ம்மா, இத்து ன்னா என்றாள்.
நான், அம்மா கையில ஊ மா. சுட்டுச்சு என்றேன். அதைப்பார்த்துவிட்டு போய்விட்டாள், சிறிது நேரம் கழித்து வந்து ம்மா, கை காட்டு என்றாள், அவளின் கைவிரல்கள் ஈரமாக இருந்தது. அதை என் கையிலிருக்கும் தீக்காயத்தின் மீது தடவினாள். இதைப் பார்த்தியா, இதுக்குத்தான் நீ பக்கெட் தண்ணில கைய விட்டியாம்மா என்றபடியே அவளை தூக்கிக்கொண்டார்கள் அவளின் பாட்டி.

என்னைப்பொறுத்தவரையில் ஈன்ற பொழுதும் பெரிதுவத்த பயனாய் இந்த இரு நிகழ்வுகளே போதும், இனியும் அமித்துவால் நான் பெரிதாய் உவக்க நேரிடுமெனில் அவையெல்லாம் எனக்கு கூடுதலே.

05 June 2009

நாலணா

யம்மா, யம்மாவே

இன்னா, இன்னாடா, நொய் நொய்ன்னு - வெளியே இருக்கும் அனலை அப்படியே உள்வார்த்த ஆஸ்பெஸ்டாஸ் சீட்டின் சூடும், பம்ப் ஸ்டவ்வின் பக்கத்திலிருப்பதால் எழுந்த அனலும், கிருஷ்ணாயில் வாடையும், பக், பக் கென்று எரியாமல் படுத்தும் பம்ப் ஸ்டவ்வின் இம்சையும் எல்லாம் சேர்ந்து எரிச்சலூட்டி, அது அப்படியே பக்கத்திலிருந்த தீலிபை நோக்கிச் கத்தலாக மாறியது.

அவளின் இந்தக் கத்தலை எதிர்ப்பார்க்காத திலீபின் முகம் சட்டென சுருங்கியது, சுருங்கிய முகத்துடனேயே நாலணா கேட்டேன்ல என்றான்.

இப்பத்தான எட்டணா வாங்கிக்கினு போன.

அது, கக்கூஸ் போறதுக்கு.

குளிக்க : 1 ரூபா , ரெண்டுக்கு: எட்டனா, ஒன்னுக்கு : நால்னா என்ற பொதுகழிப்பிடத்தின் கரி எழுத்துக்கள் கண் முன்னாடி தோன்ற எதுவும் பதில் சொல்லத்தோணாமல் ம்க்கும் என்று முனகிவிட்டு, இப்ப இன்னாத்துக்கு நாலணா என்றாள். பக் பக்கென்று எரியும் பம்ப் ஸ்டவ்வுக்கு பின்னை போட்டு நோண்டிக்கொண்டே.

ராஜி அக்கா வீட்டுல போய், மை டியர் பூதம் பாக்க மா என்றான் திலீப் கண்ணாடியே இல்லாத கடிகாரத்தின் முற்களைப் பார்த்தவாறே.

மை டியர் பூதம் பாக்கவா, அதுக்கின்னாத்துக்கு காசு, போய் ஒக்காந்து பாரு என்றாள்.

இல்லம்மா, அது வந்து, அந்தக்கா சும்மா ஒக்காந்து பாத்தா சிடு சிடுன்னு மூஞ்சி காமிக்கும், இல்லனா பாதி ஓடிக்கினு இருக்கும்போதே, டிவியை ஆஃப் பண்ணிட்டு, டேய் வெளிய போய் வெளையாடுங்கடான்னு சொல்லிடும். நாலணா கொடுத்தா எதுவும் சொல்லாதும்மா, கூடவே அது சாப்புடுற ஒடச்ச கடலை இல்லனா பிஸ்கட்டு இதுல பாதி குடுக்கும்மா.நாலணா குடும்மா, ஆரம்பிச்சிட்டுருக்கும் என்றான்.

எதுவும் சொல்லத் தோணாமல், திலீபின் முகத்தைப் பார்த்த படியே, இடுப்பில் சொருகி இருந்த சில்லறைகளில் தடவி நாலணாவை கொடுத்தனுப்பினாள்.

உலை கொதித்துக்கொண்டிருந்தது, கச கசவென்றிருந்தது. கொஞ்சம் வெளிக்காத்து வாங்கினால் தேவலாம் போன்றிருந்தது. தண்ணிக்குடம் ரெண்டும் காலியா இருந்தது, காத்து வாங்குனா மாதிரியும் ஆச்சு, தண்ணி புடிச்சா மாதிரியும் ஆச்சு என்பதாய், தண்ணீ டேங்க்கிடம் போனாள். அருகிலிருந்த டப்பாவில் எட்டணாவை போட்டு விட்டு, சற்று தூரத்தில் பேசிக்கொண்டே நின்றிருந்தவர்களை நோக்கி, யண்ணா, ரெண்டு கொடம் புடிச்சிக்கிறேன், எட்டணா டப்பாவுல போட்டுட்டேன். இப்பத்தான் தண்ணீ வந்து விட்டுட்டு போயிருப்பான் போல டேங்க்குல. கொஞ்சம் ஜில்லுன்னு இருந்தது தண்ணி, ரப்பர் ட்யூபை கைகளால் பிடிக்கமுடியவில்லை. மேலெல்லாம் பட்டது, அதுவும் அந்த கச கசப்புக்கு நல்லாதான் இருந்தது.

தண்ணி பிடித்து வைத்துவிட்டு, உலையை துழாவிக்கொடுத்தாள், சாதம் வேகவில்லை. இந்த ஒரு ரூவா அரிசி இந்த தபா, போட்டது சரியில்லை, மாடாட்டம் எம்மா நேரம் நின்னு வேவுது என்றபடி, ஒயர்கூடையை ஆராய்ந்தாள். வேலை செய்யும் வீட்டில் இருந்து எடுத்து வந்த பாட்டிலில் இருவருக்கு ஆகுறமாதிரி கொழம்பு இருந்தது. அதை வெளியே எடுத்து வைத்தாள். இந்த கொழம்பே போதும், இந்தப் பையனுக்கு மட்டும் ஒரு முட்டை வாங்கியாந்து பொரிச்சு குடுத்துட்டா ஒழுங்கா துன்னுட்டு போயிடும்.
இடுப்புச் செருகலை ஆராய்ந்ததில் எட்டணா வெளியில் வந்து விழுந்தது. சாமி ஸ்டாண்டு மேல கையை விட்டு துழாவியதில் எண்ணெய் பிசுபிசுப்போடு ரெண்டு ஒரு ரூவா கிடைத்தது. ச்சேய், இந்த குண்டு லைட்டுல வெளிச்சமும் தெரியல, ஒரு மண்ணும் தெரியல, இந்தப்பையன் ஸ்கூல் ஆரம்பிக்கறதுக்குள்ள ஒரு ட்யூபு லைட்ட போட்டுறனும். அதுக்கே எரநூறு ஆவும்ன்றான் அந்த கடக்காரன். ஸ்கூலு பீஸு கட்டுறதுல எதாவது மீறுதான்னு பாத்துதான் செய்யனும் என்று தனக்குள் பேசிக்கொண்டபடியே, கைப் பிசுபிசுப்பை கழுவிவிட்டு சோறைத் துழாவினாள். இன்னும் வேகலை. கொஞ்சம் தீயை அடக்கி வெச்சுட்டு, முட்டை வாங்கியாந்துருவோம். இந்தப் பையன் வந்துதுனா சோறைப்போட்டுட்டு அக்கடா ந்னு விழுவோம், பம்பு ஸ்டவ்வை திருகி கொஞ்சம் காற்றை வெளியேற்றினாள், மெதுவாக எரிந்தது அது. கதவை ஒருக்களித்தாள். நாளைக்கி அந்த வக்கீல் வூட்டு ஐயாகிட்ட மறுபடியும் ஸ்கூலு பீஸுக்கு ஞாபகப்படுத்தனும் என்று நினைத்துக்கொண்டாள்.

பலவருடங்களாக பெயிண்ட்டையே பார்க்காத ஹவுஸிங்க் போர்டு அடுக்கு மாடிக்கு கீழே பொட்டி பொட்டியாய் இருக்கும் நீண்ட ஆஸ்பெஸ்டாஸ் குடியிருப்புகள். முன்பு குடிசையாய்தான் இருந்தது, ”அடிக்கடி” தீ பிடித்துக்கொள்வதால் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்டுக்கொண்டார்கள். இந்தப் பொட்டி வூட்டுக்கே வாடகை 500 ரூவா. மல்லிகா, மாசானம், இருவரும் லவ் பண்ணி, ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கொண்டார்கள். மல்லிகாவிற்கு அண்ணன் முறையாக ஒருத்தன் இருந்ததனால் இப்படி கல்யாணமானது.அவன் இதோட விட்டுது சனி என்றிருந்தது தெரிந்திருந்தால்,ஓடாமலேயே, உள்ளூரிலேயே எதாவது கோயிலில் கல்யாணம் பண்ணியிருந்திருக்கலாம். பண்ணியிருந்தா மட்டும், விதி யாரை விட்டது. அவ்வப்போது மாசானத்தின் குடிப்பழக்கத்தினால் எழும் சில பிரச்சனைகளோடு, எல்லாம் நல்லாத்தான் போய்க்கொண்டு இருந்தது அதுவும் திலீப் பொறந்து 1 வயசு ஆகும் வரைக்கும்.

மாசானம் சித்தாள் வேலை செய்து கொண்டிருந்தான். வேலை செய்த இடத்தில், ஏற்கனவே கல்யாணமான பெண்ணோடு தொடர்பேற்பட்டு, இப்போது அவர்களிருவரும் ஆந்திரா பக்கம் இருப்பதாக கேள்வி.

விஷயம் தெரிந்து ஆரம்பத்தில் அழுது தீர்த்து, அவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் சில மேஸ்திரிகளை பார்க்கப்போனதில், அவர்கள் இவளை ”பார்ப்ப”திலே குறியாக இருந்தார்கள். வெறுத்துப்போய் போனவன் போய் தொலைந்தான், இருக்குறதையாவது பார்ப்போம் என்று நாலைந்து வீடுகளில் வேலை செய்து அதன் வருமானத்திலேயே இப்போது இருவரின் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது. பணம் கட்டிப் படிக்கும் ஸ்கூலில்தான் திலீபனை சேர்த்திருந்தாள். வருசா வருசம் திலீபனின் ஸ்கூல் பீஸ் அவள் வேலை செய்யும் வக்கீல் வீட்டு ஐயாவின் உதவியாக இருந்தது.நல்ல வேளையாக திலீபனும் நன்றாகவே படித்தான்.

நாட்டாரே, ஒரு முட்டை குடு என்றபடி இடுப்பிலிருந்த சில்லறைகளை எடுத்து கண்ணாடி பாட்டிலின் மூடி மேல் வைத்தாள். காசை ஒரு கண்ணால் பார்த்தபடி, முட்டையை பேப்பரில் சுத்தியபடி, ம்மோவ், முட்டை இரண்டே முக்காரூபா. ன்னும் நாலணா குடு என்றார்.
நால்ணா வா? இல்ல நாடாரே, நான் ரெண்டாரூபா வா இருக்கும்னு சரிக்கு சரியா துட்டை எடுத்தாந்தேன். அப்பறமா வாங்க்கிக்கயேன், வேற ஏதாச்சும் வாங்கும் போது சேர்த்துத் தரேன். இப்ப குடு முட்டைய.

ம்மோவ், போம்மா, அந்தாண்ட, வர்றவங்கல்லாம் இதையே சொன்னா, நான் எங்கப்போறது, நான் இன்னா ஐநூறு, ஆயிரத்துக்கா வேபாரம் பண்றேன். வர்றதே நூறு, எரநூறு கூட தேற மாட்டேங்குது, இதுல வேற எட்டணா, நாலணா, கொசுறு. மொதல்ல,அப்பறம் சேத்து தருவேன்னு சொல்லுவீங்க, அப்புறம் நானா, தரணும்? எப்ப அப்டின்னு இழுப்பீங்க. ந்தா, இந்த கதையே வேணாம் நீ முந்தா நேத்தி வாங்கும்போது பாக்கி வெச்ச எட்டணாவ குடு. ஏம்மா, உனுக்கின்னாம்மா வோணும் என்றான் அடுத்தவரை நோக்கி. எனுக்கு ரெண்டு முட்டை குடு நாடாரே என்றவாறே ஐந்து ருபா தாளையும் கூடவே ஒரு ரூபாயையும் வைத்து தந்தாள், எனக்கு வுட்ட்தை பார்த்து உஷாரா சரியா காசு கொடுத்துட்டாளோ என்று தோன்றியது மல்லிகாவிற்கு.

ஒரு மாதிரியாக இருந்தது. ச்சே நாலணா வுக்கு இந்தப் பேச்சு பேசறானே இந்தாளு, என்றபடி, இந்தா ஒன் எட்டணா என்று கொடுத்துவிட்டு சற்று தூரம் நடந்தாள். திலீப் நாலணா கேட்கும் போது வாடிய முகம் ஞாபகம் வந்தது. பாவம் புள்ள, நாலஞ்சு நாளாவே வேலை செய்யற வூட்டு கொழம்பே தான் போடறேன், ஒன்னுஞ் சொல்லாம வெளாட்டு குஷியில துன்னுட்டு ஓடிப்பூடுது.
இன்னா சத்து கீது அதுக்கு என்று நினைத்து மறுபடியும் கடைக்குப் போய், நாட்டாரே, ஒடஞ்ச முட்டையா இருந்தா கொடேன், என்றவாறு ரெண்டு ரூபாவை தந்தாள்.

ரெண்டே கால் ரூபா குடு.

ஒடஞ்ச முட்டை கூடவா. இன்னா நாட்டாரே ஒன்னாரபா க்கு கூட வாங்கியிருக்கன், ரெண்டே கால் ரூபான்ற.

ம்மோவ், இன்னாமா நீ, முட்டை நாளுக்கு ஒரு வெலை விக்குது. நீ இன்னமோ உன்னும் பழைய கதையே பேசிக்கினு இருக்குற. ஒரு ருவா, ஒன்னார்ரூவா ந்னு. போம்மா அப்பால.

முகம் சுண்டிப் போய் நடந்தாள் மல்லிகா. ராஜி வீட்டு டி.வியிலிருந்து மை டியர் பூதம் வழங்கியவர்கள், காம்ப்ளான், சன்பீஸ்ட் பிஸ்கட்ஸ், ஆசிர்வாத் ஆட்டா என்று ஒலித்த ஆணின் குரல் மிக நிதானமாய் அவளின் காதுக்கு கேட்டது. ஹே என்று கத்திக்கொண்டு வெளியே ஓடிவந்தான் திலீபன்.

04 June 2009

32 கேள்விகள்

01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

இந்தப் பெயர் என் மகளால வந்தது (அமிர்தவர்ஷினி அம்மா)
என் இயற்பெயரான “யசோதா” என்பது பிடிக்காத போனதால், நானே எனக்கு சாரதா ந்னு பெயர் வச்சிக்கிட்டேன்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

இரண்டு நாட்களுக்கு முன், எம்.ஜி.ஆர் பாடல்களை தொடர்ந்து கேட்க நேரிட, மாமாவின் நினைவு வந்து அழகான காலை, அழுகை காலை ஆகிவிட்டது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

மிக, மிக, மிக.......

4).பிடித்த மதிய உணவு என்ன?

தயிர்சாதம் (மதிய உணவு மட்டுமல்ல, மூணு வேளை கொடுத்தா கூட அதுவே போதும்)


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நட்புன்னாலே வேறு யாரோடவாவது தானே வெச்சுக்கணும். ஹி. ஹி.
ஆனா நான் நட்பு கொண்டாடறது, ரொம்பவே கஷ்டம்.


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

ரெண்டுமே ரொம்ப பயம், சந்தோஷமா இது ரெண்டுத்துலயும் குளிக்கறவங்கள பார்க்கப்பிடிக்கும்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

ஹேர் ஸ்டைல் (சொம்மா கண்ணு கண்ணுன்னு சொன்னா, போரடிக்குது)

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

கோபம்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

பிடித்தது: பொறுமை
பிடிக்காதது: எல்லை கடந்த பொறுமை

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

சமீபத்தில் இறந்த என் மாமா

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

ப்ளாக் & வொயிட் சுடிதார்

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பாட்டா, ம்ஹூம்,
(ஆபிஸ்ல பதிவு எழுத வுடறதே பெரிய விஷயம், பாட்டு கேட்க வுடறது...??)

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெளிர் நீலம்

14.பிடித்த மணம்?

வாசல் தெளிக்கும் போது / மழை பெய்யும் முன் எழும் ஈர மண் வாசனை.
குழந்தையின் வாசனை.

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

உமாஷக்தி, தீபா , வித்யா , நிழல் வலை தமயந்தி, ஊஞ்சல் தாரணி ப்ரியா

இவங்களயெல்லாம் பத்தி அதிகம் சொல்லத் தேவையில்லை.
அழைக்கக்காரணம்: அழைக்கனும் கேள்வி கேட்டுட்டு அப்புறம் அழைக்கக் காரணம் கேட்டா எப்புடிங்க?

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

ஜீவன் @ எழுத்தாளர் பைரவன்
சுகமாய் ஒரு பிரசவம்

17. பிடித்த விளையாட்டு?

கல்லாங்கல் & பல்லாங்குழி

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

பழைய திரைப்படங்களே அதிகம் பிடிக்கும்

20.கடைசியாகப் பார்த்த படம்?

கே.டி.வியில போட்ட ”ரிதம்”

21.பிடித்த பருவ காலம் எது?

குளிர்காலம், இந்தக் காலத்தில் உடல் தோலெல்லாம் சொர சொரன்னு இருந்தாலும், ஜன்னலோர பயணம்-முகத்தில் மோதும் சில் காற்று, சூடான தேநீர், போர்வைத் தூக்கம், கச கசன்னு இல்லாத ஒரு சூழல் .,,, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

அ.வெண்ணிலா வின் பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில் - சிறுகதைத் தொகுப்பு

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

டெஸ்க்டாப்பில் படமே வெச்சிருப்பதில்லை.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடிச்சது: மழலைகளின் குரல்
பிடிக்காதது: சத்தம் (சரியான தமிழ்ல சொன்னா சவுண்ட் விடறது)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

ஹூப்ளி (கர்நாடகா) கி.மீட்டர் கணக்கெல்லாம் தெரியாது

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ம், அதான் எழுதறது.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம்மைப் பற்றி அறிந்தவர்களே, நம்மை சில சமயம் அவர்களின் சுயலாபத்திற்காய் பயன்படுத்திக்கொள்வது.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மூணார்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

சாரதா வாக

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

இதை என் கணவரிடம் தான் கேட்கனும்.(அதிக பட்சம் அவர் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருக்கும்: நண்பர்களோடு சுற்றுலா போவது)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

மரணத்தின் வாசல் வரை படித்துக்கொண்டே இருக்கக்கூடிய அனுபவம் + சுவாரஸ்யம் நிறைந்த புத்தகம்.