காட்சி 1
இடம்: சைதை இரயில்வே ஸ்டேஷன், நேரம் : மாலை 6.37 மணி
காட்சி விவரிப்பு: பத்து படிக்கட்டுகளில் இரண்டிரண்டு படிக்கட்டுகள் விட்டு முறையே மூன்று அம்மா தாயேக்கள் அமர்ந்திருக்கிறார்கள்.அவர்களை கண்டும் காணாமல் பலர் இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு பாட்டியும், தோற்றத்தில் ஐந்து வ்யது மிகாத பேத்தியும் பின்னே நானும்.
பாட்டி : நின்னு நின்னு அவாள எல்லாம் பார்க்காம நேரா நட, சீக்கிரமா ஆத்துக்கு போகனும்.
பேத்தி : ஏன் பாட்டி அவாள்லாம் அங்க ஒக்காந்துட்டிருக்கா
பாட்டி : அவாளுக்கு நைட்டு சாப்பிட மம் மம் வேணும்ல, அதுக்காத்தான் ஒக்காந்துருக்கா...
பேத்தி : யாரு அவாளுக்கு மம் மம் கொடுப்பா ?
பாட்டி : நாம போடுற காசுல அவா மம் மம் வாங்கி சாப்பிட்டுண்டுருவா..
பேத்தி : நீ அவாளுக்கு காசே போடலையே ?
பாட்டி : .......... சீக்கிரம் நட ஆத்துக்கு போயி நீ மம் மாம் சாப்பிடனும், நாழியாயிடுத்து.
பேத்தி : பாவம் பாட்டி அவாள்லாம்
பாட்டி : ஆமா.. பாவம், பாரு மம் மம் க்காக கஷ்டப்படறா, ஆனா நீ மம் மம் சாப்பிட அடம் பண்றே பாட்டிக்கிட்ட. இன்னிக்கு சமத்தா சாப்பிட்டறனும், ச்சரியா
பேத்தி : பாட்டி, சமர்த்தா சாப்பிடலனா மம் மம்ம அவாளுக்கு கொடுத்தடறியா..
பாட்டி : .............. நாழியாறது.
(எம்புட்டு வெவரமா இருக்குங்க பயபுள்ளைங்க)
........
காட்சி 2
இடம்: முருகன் கோவிலருகில்
நேரம் : மாலை 6.45
காட்சி விவரிப்பு :இரு பெண்மணிகள், ஒரு சிறுவன், பின்னே நான்.
பெ 1 : ஏங்க, உங்க பையன் இப்ப எப்படி படிக்கிறான்,
பெ 2 : பையனின் தலையில் கைவைத்த படியே, அவங்க க்ளாஸ் மிஸ்ஸுக்கு சப்ஜெக்க்டே தெரியாம ரொம்ப கஷ்டமா இருந்துச்சுல்ல. அப்புறம் இப்போ ட்யூஷன் சேர்த்தப்புறம் பரவால்லைங்க. ஏதோ படிக்கிறான்
(பசங்கள ஸ்கூல்ல சேர்க்கறதுக்கு பதிலா, ட்யூஷன்லா சேத்து விட்டுட்டா என்ன ?)
.......
காட்சி 3நேரம் : 6.50
இடம் : வீட்டில்
நிறைய செல்லங்கொஞ்சலுக்குப் பிறகு, அமித்துவிடம்,
நீங்க அப்பா செல்லமா, அம்மா செல்லமாடா பட்டா ?
குழைவான சிரிப்புடன் அப்பா ச்செல்லம்
அப்ப அம்மா ச்செல்லம் இல்லியா ?
ஆயு ச்செல்லுமும் இல்ல...
ஆச்சரியத்துடன் நான், அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுடா குட்டா. நீங்க அப்பா ச்செல்லமாவே இருந்துக்கோங்க.
சரி, ஆயுமே இல்ல. ஆயுமே இல்ல ........
(இந்த வரிகள் நேயர் விருப்பமின்றி நிறைய முறை ரிப்பீட் செய்யப்பட்டது.)
என்னை சமாதானப்படுத்த விழைகிறாயா மகளே ?! :)