Showing posts with label சொந்தக்கதை. Show all posts
Showing posts with label சொந்தக்கதை. Show all posts

18 September 2009

கனவு காணும்..............

எனக்கு தூக்கம் வருதோ இல்லையோ கனவு கண்டிப்பாக வந்துவிடும். அந்தளவுக்கு கனவு மார்ச் பாஸ் நடக்கும் நமக்குள்ள. இதுல என்ன கொடுமைன்னா, சில சமயம் எங்கயாவது போய்க்கிட்டு இருக்கும்போது ஒரு இடம், ஒரு சூழ்நிலையை கடக்கும் போது இது மாதிரி நமக்கு இதுக்கு முன்னாடி ஆகியிருக்கே.. எங்க எங்க அப்படின்னு தோணும். யோசிச்சு பார்த்தா அது மாதிரி ஒன்னு கனவா வந்து போயிருக்கும்.

என்னோட கனவுகள் நிறைய மரணம் சம்பந்தமா தான் அமையும்,, ஏன்னே தெரியாது., முழிச்சு பார்த்து கனவு ஞாபகம் இருந்து அதை யார்கிட்டயாவது சொன்னேன்னா அந்த வாரத்தில் அது மாதிரி ஒரு நிகழ்வு சொந்தத்திலேயோ அல்லது பக்கத்து அக்கதிலேயோ நடப்பது கன்ஃபர்ம்.

இதனாலயே கமல் நான் ஒரு கனவு கண்டேன்னு அக்கா கிட்ட காலைல எழுந்து சொல்ல ஆரம்பிச்சேன்னா, அலறுவாங்க, அம்மா தாயே உன் திருவாய மூடு அப்படின்ற லெவலுக்கு கொண்டுபோய் விட்டிருந்தது இந்த கனவு பீதி.

ஒரு முறை என் கனவில் என் அக்கா இறப்பது மாதிரி கண்டு, அலறி அடித்து எழுந்து அக்காவைத் தொட்டுப் பார்த்து, வேண்டாத கடவுளர்களையெல்லாம் வேண்டி, உனக்கு அத்த செய்றேன், இத்த செய்றேன்னு அக்ரிமெண்ட்லாம் போட்டு, அந்தக் கனவை வெளிய யார்கிட்டயும் சொல்லாம இருக்க நான் பட்ட பாடு. ஹைய்யோ யப்பா, நான் நானாக ஆக ஒரு வாரம் புடிச்சது.

இந்த மாதிரி ஒரு அனுபவம் என் அக்காவுக்கும் உண்டு, அது இன்னும் பீதிய கெளப்பிவிட்டுருச்சு. ஒரு முறை என் அக்காவுக்கு காய்ச்சல் அதிகமாகி படுத்த படுக்கையாகி விட, சரியாகிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் கனவில் கடவுள் வந்து பிப்ரவரி 11ன்னோ 21ன்னோ ஏதோ ஒரு தேதி சொல்லி அன்னிக்கு நீ இறந்துடுவ, செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சு முடிச்சுக்க என்று சொல்லிட்டுப் போய்ட்டாரு. அவர் பாட்டுக்கு போய்ட்டார், இங்க எங்க பாடுதான் திண்டாட்டமா ஆகிருச்சு, எங்களையெல்லாம் கூப்பிட்டு பக்கத்துல வெச்சுக்கிட்டு ஒரே அழுகை, பத்தாத குறைக்கு அவஙக் ப்ரண்டை கூப்பிட்டு, சரசா, எனக்கு ஒன்னு ஆகிடுச்சுன்னா எம் புள்ளைங்கல (என்னையும் சேர்த்துதான்) நீ தாம்ப்பா பார்த்துக்கனும் என்று அழ(த)களம். போதாக்குறைக்கு அது சமீபத்தில்தான் தனியாக நின்று ஒரு ஃபோட்டோ எடுத்து வைத்து வீட்டில் ப்ரேம் போட்டி மாட்டிவைத்தது. ஆனா வொன்னா அத வேறப் பாத்து பாத்து அழும், ஏங்க்கா அழுவுற ந்னு ஒரு நாள் ஸ்கூல் விட்டு வந்து கேக்க, நான் செத்துட்டேன்னா நீங்க அந்த ஃபோட்டோவ வெச்சிதான் அழுவீங்கல்ல ந்னு அது அழ, நான் அழ,
அக்கா பசங்க அழ, அம்மா அழ என ஒரே ஒப்பாரி மயம். அப்புறம் குறிப்பிட்ட நாள் கடக்கும் வரைக்கும் வீடே திக் திக். பக். பக்.

பிறகு ஒருமுறை என் ப்ரண்டோட தங்கை தற்கொலை பண்ணிக்கொண்டு சாகிறா மாதிரி கனவு கண்டு வீட்டில் சொல்ல, அதற்கு ரெண்டு நாள் கழிச்சு லஷ்மி (நர்ஸ்) அவளும் என் ப்ரண்ட்தான், அன்னைக்கு காலைல ஆபிஸுக்கு போகும்போது நைட் ட்யூட்டி முடிச்சுட்டு எதிர்ல வந்தா, நல்லா பேசிட்டு போனா,
சாயங்காலம் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துல தகவல் வருது, காதல் தோல்வி, வீட்டில் தூக்கு மாட்டிக்கிட்டா அப்படின்னு, நெடுஞ்சாண்கிடையா அவளைப்பார்க்க பார்க்க அழுகையும் ஆத்தாமையும்.. வீட்டுக்கு வந்து சொல்ல, இது தான் உன் கனவுல தோத்தரிச்சு இருக்கு போல.. இது அம்மா.

இப்படியா இன்னும் ரெண்டு இன்சிடண்ட், அதற்குப்பிறகு நாய் கடிக்கறா மாதிரி, பாம்பு கடிக்கிறா மாதிரின்னு வந்து போகும். அப்படி வந்தா ஏதோ சனியன் பிடிச்சது, விடப்போகுதுன்னு ஒரு காரணமிருக்குன்னு அக்கா சொல்லும். நமக்கிருக்குற சனியன் வாய்ல எப்பவும்தான் இருக்கே, அது எங்கே விட...

நிறைய கனவுகள் லேசா ஞாபகமிருக்கும், நூல் புடிச்சா மாதிரி அது பின்னாடி போனா மெயின் மேட்டர புடிச்சிரலாம். சில சமயம் இந்த சுவாரசியம் எனக்குப் பிடிக்கும்.

இப்போ சமீபமா ரெண்டு டெர்ரர் கனவு வந்துச்சு, அதுல ஒன்னு சிறுகதைப் பட்டறைக்கு போக இருந்த எனக்கு ஆப்பாக அமையும்னு அப்ப நினைக்கல.

கனவு இதுதான்: எங்க வீட்டுக்கு கீழ குடியிருக்குற பாட்டி, தாத்தா, பேரன் குடும்பத்துல தாத்தா இறந்து போயிடறாரு, கீழ வீட்டுல படுக்க வெச்சிருக்காங்க, ஆயா அந்த களேபரத்துலயும் போண்டா, வெஜிடபிள் பிரியாணி (!?) யெல்லாம் செஞ்சி வெச்சிட்டு எல்லாரையும் சாப்பிட சொல்றாங்க, ஆனா கொஞ்ச பேரு அழுதுகிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரம் கழிச்சு என் மாமியார் அழறாங்க, சங்கீதாவோட பாட்டி (அவங்க உறவின் முறை) இறந்துட்டாங்களாம், தகவல் வந்திருக்கு, வாங்க கெளம்பலாம்னு என் மாமனாரை கூப்பிடறாங்க. இதெல்லாம் கனவுல ஆனா நிஜத்துல பார்க்குற ஒலி / ஒளி எஃபெக்ட்டோட நடக்குது. நேரம் காலை 6-7 க்குள்.
மணியாகிடுச்சுன்னு மாமனார் வந்து எழுப்ப, எழுந்தவுடன் எந்த ஒரு முன்யோசிப்பும் இல்லாமல் என் மாமியார் கிட்ட சொல்லிட்டேன், இந்த மாதிரி கனவு, நீங்க கீழ கேட் கிட்ட நின்னு அழறீங்க அப்டின்னு. அவங்களும் கனவுல சாவு பாத்தா கல்யாணம் நடக்கும்னு அப்ப அத லைட்டா எடுத்துக்கிட்டாங்க, சரியா அதே வாரத்து சனிக்கிழமை மதியம் 4 மணிக்கு போன் வருது, மாமியார் வீட்டு நெருங்கிய சொந்தத்தில் ஒருத்தவங்க ஆக்சிடெண்ட் அப்படின்னு., கேட்டுட்டு கொஞ்ச நேரம் அழுதுட்டு இது அப்பவே அவ கனவுல தோத்தரிச்சுடுச்சு, நாந்தான் அத வேற மாதிரி எடுத்துக்கிட்டேன் அப்படின்னு.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... அப்புறம் அவங்க ஊருக்கு புறப்பட, நான் அமித்துவோட இங்க செட்டிலாகி, பட்டறைக்கனவு பட்டாசா போயிருச்சு. (இந்த மாதிரி நினைக்கறது ஒன்னு, நடக்கறது ஒன்னுன்னு நேத்து இன்னிக்கா நடக்குது, எப்பவுமே இப்படித்தானே, மனச தேத்திக்கிட்டேன்) நல்லவேளையா அந்த தாத்தா பத்திரமா இருக்கார் :)))))))))

அடுத்ததா இன்னொரு கனவு: அது செம்ம டெர்ரர்.. எங்க வீட்டுத் தெருமாதிரி தான், ஆனா கொஞ்ச வேற மாதிரி சாயலும், முருங்கை மரம்....... ரெண்டு.... ஹைய்யோ வேண்டாம் சாமி, இதுவும் பலிச்சுருச்சுன்ன்னா...............

ஆனா என் அப்பாவோ, மாமாவோ, தோழியோ இறக்கும்போது அதற்கு முந்தைய நாட்களில் எதுவுமே தோத்தரிக்கல....... :(((((((((

தினம் தினம் கனவுகளுக்கும் அதைத் தொடர்ந்து கடவுளிடம் கை கூப்புதலுக்கும் பஞ்சமில்லாமல் நாட்கள் நகர்கிறது… , ஹூம்.


பி.கு: போதுங்களா சின்ன அம்மிணியக்கோவ்..........

22 June 2009

அன்புள்ள அப்பாவிற்கு

உன்னைப் பற்றி சொல்வதற்கு கொஞ்சம் நினைவுகளும்,உன்னைப் போற்றி சொல்வதற்கும் என்னிடம் சொற்ப வார்த்தைகளே உண்டு. உன் வித்தில் பிறந்தும் காயாகி, கனிந்து பின் உனக்கு நிழல் தரா மரம் நான் ஒவ்வொரு அமாவாசைக்கும் தலைக்கு தண்ணீர் ஊற்றிக்கொள்ளும்போது மறக்காமல் உன் நினைவுகளும் வந்து செல்கிறது. என்ன செய்வது உன் வயோதிகமே நமக்கிடையே ஒட்டுதலை ஏற்படுத்தாமல் போனது.

நான் யூ.கே.ஜி படிக்கறப்போ, நீ என் ஸ்கூலுக்கு க்ளாஸ் நடக்கறப்போ வந்து, ஜன்னல் வழியா என்னைக்கூப்பிட்டு சின்ன சின்ன முறுக்கும், பட்டர் பிஸ்கட்டும் எண்ணை படிந்த பேப்பரோடு கொடுத்துட்டு போவியே.அப்பவே சில ஸ்கூல் பசங்களெல்லாம், மிஸ் அங்க பாருங்க, ஒரு தாத்தா வந்து நிக்கறாரு ந்னு கூட இருக்குற பசங்க உன்னைக் கைய காட்டுனது தான் என் மனதின் அடி ஆழம் தொட்ட வார்த்தைகள்.

எனக்கு தந்தையாய் தெரிந்த நீ, மற்றவர் கண்களுக்கு தாத்தாவாகிப் போனாய். அது உன் உழைப்பின் வீரியம் என்பது நெடுநாள் கடந்துதான் எனக்கு தெரிந்தது. தெரிந்துமென்ன, உன் வயோதிகத்தின் கடைசி காலங்களில் உனக்கு அனேக நிமிடங்களில் ஆதரவாக நானில்லை. நான் மகளாக இருந்த சொற்ப கணங்கள் என் கண் முன் தெரிகிறது. ஏதோ அந்த மட்டுக்குமாவது உனக்கு நான் மகளாக இருந்திருக்கேனே.

உன் புஜத்தில் தளர்ந்த நரம்புகளுக்கிடையே இருக்கும் தள தள மருவைத் தான் அதிகம் நெருடியிருக்கேன், நினைவு தெரிந்து எனக்கும் உனக்குமான அதிக பட்ச நேசம் அதுதான். உன் வேலை நேரம் அப்படி. நமக்கிடையே ஒரு அழகான புரிதல் ஏற்படாமல் இருப்பதற்கு காலம் கூட சாட்சியாகிப்போனது.

ஒரு நாள் அம்மா என்னை ஆக்ரோஷமாக அடித்துத் தள்ள, வலி தாளாத நான் உன் வேலையிடத்தை தேடி வர, அவர்களிடம் கொஞ்சம் நேரம் கடன் கேட்டு, என்னை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டு உன் உதடுகளும் உடம்பும் உதற அம்மாவை திட்டிவிட்டுப் போனாயே, பசுமையாய் நினைவிருக்கிறது.

அப்பா, இப்போது நீ இல்லை, உனக்கு பதிலாக நான் உன் வயதில், வடிவில் இருக்கும் அனைவரையும் அப்பா என்று அழைத்துவிடுகிறேன். குறிப்பாய் என் மாமனாரை. நீ இல்லாத குறையை அவர்தான் எனக்கு தீர்த்துவைக்கிறார். வழக்கமாய் என் பிறந்தநாளுக்கு அவர் எனக்கு பூ வாங்கித் தர மறப்பதில்லை, பூ வைக்கப் பிடிக்காத நானும், அதை மறுப்பதுமில்லை.

நீ உயிரோடு இருக்கும் போது குறைந்த பட்சம் ஆதரவாய் எதுவும் பேசாத நான், இப்போது எனக்கு(ம்) எழுத ஒரு இடம் இருக்கும் நிலையில் உன் மீதான என் உணர்வுகளை இறக்கி வைக்கிறேன்.

தந்தையர் தின வாழ்த்துப்பதிவுகளைப் பார்க்கும் போதெல்லாம், மறக்காமல் உன் ஞாபகமும் வந்து போனது. காலம் கடந்து உன் நினைவுகளைப் பகிர நினைத்தாலும், அதில் உன் வியர்வை வாசமே இல்லை.

யாருடமும் பகிர்ந்து கொள்ள முடியாத, உனக்குமெனக்குமிடையான ஒரு வலிமையான வெற்றிடத்தை நீ எனக்கு உருவாக்கித் தந்துவிட்டுப்போயிருக்கிறாய். அந்த வெற்றிடத்தையெல்லாம் இப்போதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வரும் சில, பல நினைவுகளை வைத்து நிரப்பிக் கொள்கிறேன். அந்த நினைவுகளெல்லாம் இனிமையாய் ஆரம்பித்து, கடைசியில் இப்படித்தான் முடிகின்றன, அப்பா இருந்திருந்தா..................

அக்காவின் கனவில் வந்து, மாமா உன்னோடுதான் இருப்பதாகவும், நீங்கள் இருவரும் எங்களை பார்த்துக்க்கொண்டிருப்பதாகவும் சொன்னாயாம், பார்த்துக்கொண்டிருப்பது உண்மையோ, பொய்யோ, இந்தக் கணத்தின் என் வருத்தமும், இதை எழுதும் போது கண்ணீர் மல்கியதென்னவோ நிஜம். நீ பார்த்துக்கொண்டிருப்பது நிஜமானால் மன்னிச்சுடுப்பா.

உன்னோடு இன்னும் மனதுக்கு நெருக்கமாய் வாழ கொடுத்து வைக்காமல் போனது நான் மட்டுமல்ல, வர்ஷினியும் தான். நீ இருந்திருந்தால் எப்படி பூரித்துப்போயிருப்பாய், உன் பேத்தி செய்யும் வேடிக்கைகளை நினைத்து.

இந்த வார்த்தைகளைத் தான், நாங்கள் சின்ன வய்தாய் இருக்கும்போது நீ அடிக்கடி சொல்வாய், //முருகன் தாத்தா இருந்தா பூரிச்சுப்போயிருப்பாரு, நீங்க பேசறத கேட்டு.//
நீ சொல்லிப்போன அதே வாசகங்கள் தான் இப்போது நான் வர்ஷினியிடம் சொல்கிறேன்.

இப்படிக்கு
காலனிடம் உன்னை அனுப்பிவைத்துவிட்டு
உன்னை நேசிக்கவில்லையே என்று வருந்தும்
உன் மகள் யசோதா கந்தசாமி.

04 December 2008

நடுவீடும், கண்ணாடியும்

எப்படி ஆரம்பிக்கறது.

ம், இந்த நடுவீடு இல்ல நடுவீடு, தெரியாதவங்க இங்கன போய் படிச்சிட்டு வாங்க. இதை கழுவி மஞ்சள், குங்குமம் வைப்பது எனக்கு ரொம்ப பிடித்தமாய் இருந்தது. -ஹி ஹி இப்ப் இப்பவும் பிடிக்க்க்க்க்குது.

ஸ்கூல் படிக்கிற கால கட்டத்துல எங்கம்மாவின் கட்டாயத்தின் பேரில் ஆரம்பிச்சது இது. நானும், என் அக்காவின் பெண்ணும் ஒரு வாரம் அவள், ஒரு வாரம் நான் என்று செய்ய வேண்டும்.வியாழன் இரவே பூஜை சாமான்களை புளி போட்டு விளக்கி, பொட்டு வைத்து, அப்படியே நடுவீடு, வாசக்கால் எல்லாத்துக்குமே மஞ்சள் குங்குமம் வைத்துவிட வேண்டும்.
வெள்ளிக்கிழமை வீடு மட்டும் துடைத்துவிட்டால் போதும். பூஜை செய்வதெல்லாம் எங்கம்மா, எங்கக்காவின் வேலை.

இப்படியாய் கட்டாயத்தின் பேரில் ஆரம்பித்த இந்த வியாழக்கிழமை வேலை அப்படியே பிடித்தமாகிவிட்டது.

வாழ்வில் நிறைய விஷயங்கள் இப்படித்தாங்க. பெத்தவங்க, மத்தவங்க சொல்றாங்களேன்னு கேக்க ஆரம்பிச்சு, நாளடைவில் அப்படியே அதுல நாம உள்வாங்கப்பட்டுடறோம். என்னைக்காவது சுனாமி வந்து ஆட்டம் ஆடும்னு வெச்சுக்கோங்க.

பள்ளி, கல்லூரி, ஆபிஸ் செல்லும் வரை அம்மா வீட்டில் இந்த பழக்கமிருந்து வந்தது. கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்கு வந்தப்புறமும் இதேதான், ஆனா ஒரு மாற்றம். அந்த மாற்றத்தைத்தான் நான் மாத்தவேயில்லை முதல்ல.

அம்மா வீட்டில் நடுவீட்டில் குங்குமத்தை விபூதி பட்டை இடுவது போல் வைத்து, அதை சுற்றி பொட்டுக்கள் இடுவோம். மாமியார் வீட்டில் நாமம் போல் இடுவார்கள், நீட்டு வாக்கில் குங்குமம் வைத்து, நாமக்கட்டியை குழைத்து வி ஷேப்பெல்லாம் போடனும்.

மாமியார் வீட்டிற்கு சென்றபின் வந்த மூன்றாவது வெள்ளிக்கிழமை, அப்போது பார்த்து ஏதோ விஷேச நாள் வேறு.
நான் பூஜைபாத்திரமெல்லாம் தேய்த்து வைத்து விட்டு, நடுவீடு கழுவி எங்கம்மா வீட்டில் செய்வது போலவே செய்து விட்டேன்
(தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சும்மாவா சொல்லி வச்சாங்க பெரியவங்க)

நாமம் போடாம பட்டைய போட்டு நடுவீடு ரெடியாயிடுச்சு.

மறுநாள் காலை, கற்பூரம் ஏத்த வந்த என் மாமியார் இதைப் பார்த்து, இது என்னா இது நம்ம வழக்கமில்லா வழக்கமா நடுவீடு இப்படியிருக்குது.
எல்லாம் நம்ம தசாவதாரம் கல்லை மட்டும் கண்டால் அஞ்சும் எட்டும் தான் மேட்டர்.

நான் அப்படியே வெலவெலத்து போனேன். ம். புதுப் பொண்ணாயிற்றே. ஆஹா ஆரம்பிச்சுடுச்சுய்யான்னு யுத்தம்னு நெனச்சேன், நல்ல வேளையா என் மாமனார் என்னைக் காப்பாத்திட்டார்.


இப்படித்தாங்க இந்த கட்டாயத்தின் பேரில் ஆரம்பிக்கும் சில விஷயங்கள், நம்மளுக்கு பழக்கம் இல்லனா கூட நம்மளயே மாத்திடுது, அது நல்ல விஷயமா இருந்த்தாக்கூட..,
நமக்குப் புடிக்காதது எப்படி நல்ல விஷயமா இருக்க முடியும், இருக்குதே, பாருங்க

உதாரணமா

எனக்கு பூ வைக்க, வளையல் போட பிடிக்காது. எனக்கு கல்யாணம் ஆகும் வரை இந்த ரெண்டு விஷயத்தை நான் செஞ்சதே இல்லை. சில பேரின் கட்டாயத்துக்க அப்ப அப்ப ஆட்பட்டா கூட அப்படியே கழண்டுப்பேன்.

எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகும் போது என் அத்தைக்கு (அப்பாவின் தங்கை) பயங்கர சிரிப்பு. நான் ரொம்ப கோபமாக அவங்ககிட்ட போய் இப்ப என்ன, ஏன் இப்படி சிரிக்கிற நீ, அப்படின்னு கேட்டேன்.
அதுக்கு அவுங்க நீ எப்படி கல்யாணத்துக்கு ஜடையெல்லாம் தச்சு, பூ வெல்லாம் வெச்சுப்பன்னு நெனச்சி பாத்தேன். அதனால தான் சிரிச்சேன்னாங்க. அப்ப அவங்கள முறைச்சுட்டு வந்துட்டேன்.

ஆனா இப்ப அந்த உதாரணத்துல இருந்த உதாரெல்லாம் போய், வெறும் ரணம் மட்டும்தான் மிச்சம்.
வளையல் போட்டு, பூ வெச்சுக்கிட்டு, அதான் சொன்னேனே கட்டாயத்தின் பேரில்.
இப்ப ஆளே மாறியாச்சு.

எப்பவாச்சும் கண்ணாடி முன்னாடி கொஞ்ச நேரம் நின்னா உள்ள இருந்து ஒரு குரல்

அவளா நீய்யீ...





11 November 2008

சா பூ த்ரீ

சென்ற ஞாயிற்றுக்கிழமை நான், அமித்து, சஞ்சு (என் கணவரின் அண்ணன் மகள்) மூவரும் சா, பூ, த்ரி விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது சா, பூ என்று ஆரம்பித்தால் அமித்துவுக்கு வாய் கொள்ளாத சிரிப்பு, அவள் தன் பாட்டுக்கு கையை ஏதோதோ செய்து கொண்டிருந்தாள்.

நேற்று நானும் அமித்துவும் சா, பூ, த்ரி விளையாடினோம். அப்போதும் சிரித்தாள். ஆனால் நான் த்ரீ என்று சொல்லி முடிக்கும் போது கையை சரியாக க்ளாப் செய்தாற் போல வைத்துக்கொண்டாள். அடுத்த் அடுத்த முறை சொல்லும் போதெ அது போலவே செய்தாள். ஆனால் அவளுக்கு கையை திருப்பி வைப்பது பழகவில்லை.

ஒருநாள், எனது சர்டிபிகேட் ஒன்றை எனது பீரோவில் தேடிக்கொண்டிருந்தேன். நிறைய பேப்பர்கள் வேண்டியது, வேண்டாதது என. அதனால் எல்லாவற்றையும் கீழே எடுத்து வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் சர்டிபிகேட் ஆராய்ச்சிக்கு எனது ஆராய்ச்சி மணி அமித்துவும் மிகவும் “உறுதுணை”யாக இருந்தாள். நான் வேண்டாமென்று போடும் பேப்பரையெல்லாம் கிழிப்பது, இடையிடையே ஆய், ஊய், அச்ச்க்கா, க்காளி என்று தனக்குள்ளே பேசுகிறாள். சற்று நேரத்தில் அது போரடித்து விட்டதால் நான் வேண்டுமென்று எடுத்து வைக்கும் பேப்பர்கள் பக்கம் வந்தாள். அம்மு இதெல்லாம் உனக்கு வேண்டாண்டா என்று சொல்லியவாறே அவள் கிழித்த ஒரு பேப்பரை எடுத்து அவளிடம் கொடுத்து இந்தா, இதை கோழிக்கு போட்டுட்டுவா என்றேன். அவளும் அதை கையில் எடுத்துக்கொண்டு முட்டி போட்டுக்கொண்டே வாசல் தாண்டி போனாள், சிறிது நேரத்தில் வந்துவிட்டாள். மறுபடியும் அதகளம். பொறுக்கமாட்டாமல் மறுபடியும் ஒரு பேப்பர் துண்டினை எடுத்து, இந்தா, இதையும் கோழிக்கு போட்டுட்டுவா என்றேன். மறுபடியும் வாசல் தாண்டி முட்டி போட்டுக்கொண்டு அவளது பயணம். எனக்கு அப்போதுதான் உரைத்தது, குழந்தையை இப்படி வெளியேற்றுகிறோமே, பாவம் அவளுக்கு முட்டி வலிக்குமே, சே என்று என்னை நொந்து எட்டி பார்த்தில் இதோ இதைத்தான் அவள் செய்து கொண்டிருந்தாள்

பேப்பரை கோழி இருக்கும் திசை நீட்டி, ம், ம் கொய்யீ , ந்தா ந்தா, ச்சுக்கா, த்தா என்று ஏதேதோ பேசியவாறு.

சர்டிபிகேட்டாவது ஒன்னாவது, என் பெண்ணை தூக்கி கொஞ்சி அகமகிழ்ந்து போனேன்.

அமித்து ஒரு அஞ்சு மணி அலாரம். ஆம் சரியாய் 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவாள். நமக்குதான் தூக்கம் கண்ணை பிடுங்கும். இதனால் அவளை என் கணவர் எடுத்துக்கொண்டுபோய் கீழ் ரூமில் இருக்கும் அமித்துவின் தாத்தா பாட்டிக் கிட்டே விட்டுவிடுவார். நான் 6 மணிக்கு போய் அமித்துவுக்கு அட்டெனன்ஸ் கொடுத்து விட்டு அடுத்தகட்ட வேலைகளுக்கு ஆயத்தமாவேன். போனவுடன் கையை நெற்றியில் வைத்து குட்மார்னிங் சொல்லுவாள். இப்படி இருக்க, கீழ் வீட்டில் இருக்கும் ஆச்சி, அவரின் பேரன் ராகேஷ் இருவரும் எழுந்து வரும்போது, முந்தா நாள் அமித்து, ஆக்கே ஆக்கே (ராகேஷ்) - என்று கூப்பிட்டு நெற்றியில் கைவத்து குட்மார்னிங் செய்தாளாம். இதை ஆச்சி சொல்லி சொல்லி ஆச்சர்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆத்தி - எதிர் வீட்டு கார்த்திக்கு என் மகள் வைத்திருக்கும் பெயர்.

அம்மு - மாடு எப்படி கத்தும் - ம்மா ம்மா
காக்கா எப்படி கத்தும் - கா கா
கோழி எப்ப்டி கத்தும் - கொய்யீ
பூனை எப்படி கத்தும் - நாலு பல் தெரிய சிரிப்பாள்
ஆச்சி எப்படி சிரிச்சாங்க - அவர்களை பார்த்துக்கொண்ட்டே க்கா க்கா க்கா
கார்த்தி எப்படி அழுவான் - ஆஆன் ஆஆன் ஆஅன்
அமிர்தவர்ஷினி எப்படி அழுவா - ம் ஆஅன் (அப்புறம் ஒரு சிரிப்பு)

ஆச்சி, அமிர்தவர்ஷினியை நான் ஆபிஸ் வந்ததும் விசாரிப்பார்களாம், அம்மு - யசோ எங்கே - விளையாடுவதை விட்டு விட்டு ஒரு செகண்ட் திரும்பி - BYE BYE என்று கையசைத்துவிட்டு மறுபடியும் விளையாட்டில் ஈடுபடுவாளாம் என் மகள்.

ம்.
என் மகளே,
உன்னைக் கொஞ்ச எனக்கு வாய்த்திருக்கிறது இரவுகள்
உன் குறும்புகளை ரசிக்க வாய்த்திருக்கிறது வார இறுதிகள்
இடைப்பட்ட நேரங்களில்
எல்லோரும் மகிழ, என் காதால் கேட்க
ஏதாவது செய்துகொண்டிரு.
நான் கேட்பதிலாவது இன்புற்றுகொள்கிறேன்.

05 November 2008

வழக்கொழிந்த விளையாட்டுகளும், விழுப்புண்ணும்.

வருங்கால முதல்வரில் எழுதியிருந்த கொழுக்கட்ட கொழுக்கட்ட ஏன் வேகலை? என்ற பாடல் நேற்று முழுவதும் நிறைய ஞாபகங்களை கிளறிவிட்டது. அதன் விளைவே இந்தப்பதிவு.

விளையாட்டு 1
ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்தது, ரெண்டு கொடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்தது.
ரெண்டு பேர் எதிரெதெரே கையை மேலெ உயர்த்தி, இரண்டு பேரின் கை விரல்களையும் சேர்த்து வைத்துக்கொள்ளுவார்கள். ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னர் சற்றே தள்ளி தள்ளி நிற்பார்கள். எல்லாரும் அந்தப் பாடலை பாடிக் கொண்டே அந்தக் கை வளையத்தினுல் நுழைந்து வெளி வரவேண்டும். பாடிக்கொண்டே சட்டென இருவரின் கைகளயும் சேர்த்து லாக் பண்ணுவார்கள் . அப்போது யார் லாக் ஆனார்களோ அவர்கள் அவுட். பூ பூப்பது 7 எண்ணிக்கையை தாண்டிவிட்டால் சற்றே கிட்ட கிட்ட நிற்பார்கள். கட கடவென பாடல் ஓடும், அவுட் ஆகிக்கொண்டே இருப்பார்கள்.

விளையாட்டு 2
கல்லாங்கல்
வேறுதுமில்லை.கருங்கற்களை நிறைய தரையில் பரப்பி கற்களை கையால் மேலெழுந்தவாரியாக விட்டு அப்புறம் பிடிப்பதுதான்.
ஒன்னாங்கா, ரெண்டாங்கா, அஞ்சாங்கா வரைக்கும் போகும். இந்த கருங்கல் எடுத்துக்கொண்டு வர பெரிய பெரிய அக்கால்லாம் எங்களை அனுப்பிடுவாங்க. எங்க வீடு கட்டுறாங்களோ அந்த இடத்தில கொட்டுற ஜல்லியை ஆளாளுக்கு கொஞ்சம் பாவாடையில் கட்டி எடுத்துவருவோம். முதன் முதல் எடுத்து வரும் கற்கள் ஒரு மினுமினுப்போடு இருக்கும். நாளடைவில் கைப் பட்டு கைப் பட்டு ஒரு வழவழப்பு வந்துவிடும். அதன் கோனிக்கல் ஷேப்பும் அடடா, அடடா.
அந்தப் பழைய கற்கள் ஒரு பொக்கிசமாகவே பாதுகாக்கப்படும். விளையாட்டு முடிந்தவுடன் கற்களை எண்ணி எண்ணி சேமித்து வைப்போம்.
விளையாட்டு 3
ரிங்கா ரிங்கா ரோஸஸ், பாக்கெட் ஃபுல்லா ரோஸஸ், அஸ்ஸா புஸ்ஸா ஆல் பார் டவுன்.
வட்டமாக ஓடிக்கொண்டே இருப்பவர்கள் டவுன் என்று சொன்னவுடன் உட்கார்ந்திட வேண்டும். நிற்பவர்கள் அவுட்
விளையாட்டு 4
நொண்டி
தரையில் பாக்ஸ் பாக்ஸாக வரைந்துவிட்டு , கையில் ஒரு சில்லை வைத்துக்கொண்டு முகத்தை மேல் நோக்கி வைத்துக்கொண்டு, போதாக்குறைக்கு கண்ணை மூடிக்கொண்டு அதன் மேல் சில்லை வேறு வைத்துக்கொள்ள வேண்டும். அப்புறம் ஒரு ஒரு பாக்ஸாக தாண்டா வேண்டும். தாண்டும் போது ரைட்டா, ரைட்டு, ரைட்டா, ரைட்டு, ரைட்டா, கொய்ட்டு. அபீட்டே, அதாங்க அவுட்டு.
விளையாட்டு 5
ஒரு பத்து பதினைந்து பேர் சேர்ந்து கொண்டு சா பூ த்ரி போடுவோம். சா பூ த்ரியில் அவுட் ஆவோர் வெளியில் வந்து கண்மூடி சுவற்றை நோக்கி நின்று கொள்ளவேண்டும்.
மீதியிருக்கும் கும்பல் ஏதாவ்து ஒரு கலரை தேர்ந்தெடுத்துக்கொண்டு, அந்த சுவற்றை நோக்கி நிற்கும் பெண்ணின் அருகில் நின்று கொண்டு “கலர் கலர் வாட் கலர், டூ யு நோ” என்று கேட்கவேண்டும். ரெட் - இல்ல, ப்ளு - இல்ல, மஞ்சள் - இல்ல, க்ரீன் - இல்ல. பச்ச - ஆமாம். எடு ஓட்டம் ஆளாளுக்கு எங்கெங்கேயோ ஓடுவோம். துரத்திவந்தவர் நம்மைப் பிடித்துவிட்டால், நாம்தான் சுவற்றை நோக்கி நிற்கவேண்டும்.
விளையாட்டு 6
சொப்பு சாமான் விளையாட்டு - இது அனேகம் பேருக்கு தெரிந்திருக்கும். அறுபத்து மூவர் எப்போ வரும் என்று காத்திருந்து விதம் விதமாய் மண்ணில், ஸ்டீலில் சொப்பு சேர்த்த காலம் உண்டு.
(அம்மா அது என்து மா, அவ எடுத்துனு போயிட்டாமா. இப்ப அவுள்துனு சொல்றாமா. கேட்டு வாங்கிக்குடுமா.
சனியனே, வீட்டுக்குள்ளியே வெச்சிக்கினு விளையாடுனு சொன்னா கேக்கறியா, எடுத்துன் போய் வெளிய வெச்சிக்கினு வெளயாடிட்டு இப்ப அவ எடுத்துக்கினா, இவ எடுத்துக்கினா, இனிமே சொப்புன்னு எங்கிட்ட வந்து கேட்டுப்பாரு.)
ஓகே கேம் ஓவர்.
இப்பல்லாம் இந்த மாதிரி டொமஸ்டிக் கேம்ஸ் யாராவது விளையாடுறாங்களான்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.
இப்படி இன்னும் நிறைய உண்டு. சில ஞாபக வலையில் சிக்கவேயில்லை. ஆனால் எனக்கு அவ்வளவாய் விளையாட்டு பிடிக்காது. கல்லாங்கல் தவிர மற்ற விளையாட்டுகள் சற்றே அலர்ஜிதான். வேடிக்கை பார்க்கப்பிடிக்கும். ஓடிப்பிடிக்கும் அத்தனை விளயாட்டில், சீக்கிரம் கொயிட் (அவுட்) ஆகிடுவேன். நமக்கு எப்பவுமே வாசிப்புதான். வெள்ளை பேப்பரில் கருப்பு புள்ளி வெச்சிருந்தா போதும்.
ஸ்கூலில் எனக்கு பிடிக்காத க்ளாஸ் கேம்ஸ் களாஸ், முக்கால்வாசி நாள் உடம்பு சரியில்லை என்று காரணம் காட்டிவிட்டு லைப்ரரியில் உட்கார்ந்து கொள்வேன். இதனால் எனக்கும் கேம்ஸுக்கும் செம அண்டர்ஸடாண்டிங். ஒரு நாள் கேம்ஸ் என்னை கூப்பிட்டு அனுப்பியது, போனேன் என்ன நீ கேம்ஸ் க்ளாஸுக்கே வரதில்ல. எப்ப பாத்தாலும் லைப்ரரியிலே உக்காந்து இருக்கியாம். (ஆஹா எவளோ போட்டு குடுத்துட்டாயா) வந்தாலும் ரிங் தவிர எதையும் விளையாடறதில்ல. ம் என்ன கதை உன்னுது. ஸ்போர்ட்ஸ் டே வரப்போகுது இன்னிக்கு ஒழுங்கா போய் கொக்கோ விளையாடற. நான் இங்கருந்து வாட்ச் பண்ணுவேன். போ . ....... இல்ல மிஸ். எனக்கு,,,,,,,,,,,,,, போய் விளையாடு. ம் வருவதை எதிர்கொள்வோம் என்று கொக்கோ விளையாடப் போனேன். ரூல்ஸும் தெரியாது, ஒரு மண்ணும் தெரியாது.
வரிசையாய் ஒரு பத்து பேரு எதிரும், புதிருமாய் ஒடும் வாக்கில் உட்கார்ந்திருந்தார்கள். நான் போய் கடைசியாய் அதே போல் உட்கார்ந்தேன். உடனே கோ கோ என்று ஒரு குரல் கேட்டது, முதுகில் பலமாய் ஒரு அடி (ஆக்சுவலா அது ஒரு தட்டுதான்) நாம் தான் மிக திடகாத்திரமான ஆளாயிற்று, நமக்கு அது அடியாகிவிட்டது. எங்கே ஓடுவது, தட்டிய வேகத்திலேயே கீழே விழுந்து வாயில் மண்ணைக் கவ்வி, முட்டி, முழங்கை சிராய்த்து, விழுப்புண் பலமாகிவிட்டது. யாரோ என்னைக் கைத்தாங்கலாக க்ளீனிக் அழைத்துப் போனார்கள். வேறு யாருமல்ல போட்டுக்கொடுத்த புண்ணியவதி, என் க்ளாஸ் லீடர்தான் என்னைக் கைத்தாங்கலாக அழைத்துப் போனாள்.
ம்ஹும் வீரர்களுக்கு இதெல்லாம் சகசம்.




30 October 2008

சோறூட்டல்

இடுப்பில் அமித்து
கையில் குழைத்த பருப்பு சாதம்

எனக்கு ஒரு கை சாதம்
அவளுக்கோ அது நான்கு வாய் சாதம்

அம்மு, அங்க பாரு டாமி டாமி
ம் ஓய் ம் ம் ம் ஓய்
ஒரு வாய் உள்ளே போய் விடும்

டாமி கிட்டே போவது
எனக்கு பயம் தரும் விசயமாதலால்
தூரமாய் இருந்தே மறுபடியும் டாமி டாமி
டாமி பாரும்மா
இந்த டாமி கூப்பிட்டா வருதா பாரும்மா
ஓய் ஹோய்என்று சொல்ல வாயை திறக்கும்
வேளையில் இன்னொரு வாய்உள்ளே போகும்

அதற்கப்புறம்டாமி கூப்பிடுவது போர் அடித்துவிடும்
அம்மு மியாவ் டா குட்டி
இரண்டு காலையும் உதறி கொண்டே -ம்ம்ம் என்பாள்
இப்பொது ஒரு வாய்உள்ளே போகும்

இப்போதுடாமி, மியாவ் இரண்டும் போரடித்துவிடும்
அம்மு அம்மு அங்க பாருடா ஆட்டோ
அதோ பாருடா ஏரோப்ளேன்-
ம்ஹும்வாயை திறந்தால் தானே.

அம்மு அம்மு கோழிடா
ம் கொய்யீ இப்போ ஒரு வாய்

இடையிடையே ஏதாவது
இரு சக்கர வாகனம் வந்தால் இல்லை

ஏதேனும் சின்னப்பசங்க வந்தால்
என்று ஓரிரு வாய் உள்ளெ போகும்

இதற்கப்புறம் எல்லா உணவும் பூமிக்கு உரம்தான்

மழைக்காலங்களில்
இந்தப் பாச்சா எதுவும் பலிக்காது
எனவே இந்த மாதிரிசமயங்களில்
எங்களுக்கு கை கொடுப்பது பம்பரம்
அவரின் தாத்தா பம்பரம் விடுவார்

அது சுத்தும் போது
ஹாய் என்று அமித்து கத்தும் போது
ஒரு வாய் உள்ளே போய்விடும்

இதுபோல் சென்ற
மழைக்காலங்களில் ஒரு நாள்
சோறுட்டல் நிகழும்போது
நான் அவள் வாய் திறந்ததை 2,3 முறை தவறவிட்டு விட்டேன்
அதற்கு அவரின் தாத்தா
என்னம்மா நீ அவ வாயை திறக்கற போது ஊட்ட மாட்டேன்ற.
விட்டுடறே
உனக்கு அவளுக்கு சோறுட்டவே தெரியலம்மா.
-ம்ஹீம் என்னிடம் இருந்து பதிலே வரவில்லை. பதில் சொல்லவும் தெரியவில்லை.

ஏனோ வெண்ணிலாவின் கவிதை ஒன்று மட்டுமே ஞாபகம் வந்தது.
நானும் அந்த நாயும்குழந்தைக்கு சோறூட்டும்
அந்த மையப்புள்ளியில்சந்தித்துகொள்கிறோம்.
கையில் எடுக்கும் ஒவ்வொரு கவளமும்
உள்ளே போகவேண்டும் என்று நானும்
கீழே விழவேண்டும் என்று நாயும்
அவரவர்க்கான எதிர்பார்ப்பில்

என்ன சொல்ல, எப்படி சொல்ல


அமித்துமேல் நெறைய கம்ப்ளெயின்ட் வர ஆரம்பிச்சுடுச்சு.

அதில் ஒன்று : அவள் ஆண்பால், பெண்பால் என்று எல்லா பாலரையும், பெரியவர்களையும், ஏய், டேய் என்று சொல்லுவது.


சரி இதைத் திருத்தலாம் என்று, அமித்துவை மடியில் போட்டுக்கொண்டு

டேய் குட்டா
சே நானே இப்படி கூப்பிட்டா, இவளும் இதைத்தானே பாலோ பண்ணுவா, (மொதல்ல நாம திருந்தனும்) என்று

அமித்து குட்டி
நீங்க ஏன் இப்படில்லாம் பேசுறீங்க

ஏய், டேய் எல்லாம் பேசக்கூடாதுடா
நீங்க அழகா வணக்கம் சொல்றீங்க
அழகா குட்மார்னிங் சொல்றீங்க
அழகா குட்நைட் சொல்றீங்க
ஆனா
என்று நான் சொல்லி முடித்து அவள் முகத்தைப் பார்க்கையில்
அவளின் கையை நெற்றியில் வைத்து வைத்துக்கொண்டிருக்கிறாள்
(குட்மார்னிங் சொல்லு, குட்நைட் சொல்லு - நெற்றியில் கை வைத்து ஒரு சிரிப்பை உதிர்ப்பாள், இது வாடிக்கை நிகழ்வு)
(நான் அவளை குட்நைட்டா சொல்ல சொன்னேன்)

நான் என்ன சொல்ல
மீண்டும் எப்படி சொல்ல நான் அவளுக்கு சொல்ல வந்ததை.

நான் கற்றுக்கொடுக்க வந்தேன் ஒரு அன்னையாக
ஆனால் மாறிப்போனேன் ஒரு குழந்தையாக
.