29 May 2009

கனவாய் போன

கனவாய்ப்போனதில்

பாவாடை சட்டை சிறுமியாய்
முன்பு குடியிருந்த வீட்டுக்கு
போகிறேன்
எல்லோரும் தன் பழைய வயதோடே..

எங்கோ ஒரு உணவகத்தில்
பிடித்த உணவை உண்கிறேன்

முகம் தெரியாத பலரோடு
சிரித்து, பேசி, பயந்து, ஓடி...

கோவிலில் இருக்கும்
பித்தளை விக்ரகங்களெல்லாம்
உயிர்ப்போடு
பேசி சிரிக்கின்றன
என்னோடு

மரித்த மாமா
வந்தமர்ந்து
சாப்பிட்டுக்கொண்டே பேசுகின்றார்
தன் தோரணை மாறாமல்.

இறந்தவள்
தவறாமல் வந்து
சொல்லிக்கொண்டே இருக்கிறாள்
தான் உயிரோடு இருப்பதாக

அப்பாவும் வருகிறார்
அதிசயமாக.

நெருங்கியவர்களின் மரணம் போல
ஒன்றைக் கண்டு
வியர்த்து விதிர் விதிர்த்து
நீரருந்தி
நெற்றியில் விபூதி இட்டு
மீண்டும்
உறங்கிப்போனதை
தவிர்த்துப் பார்த்தால்

மற்றதெல்லாம்
கனவாய் போனதில்
வருத்தம்தான்.

முதற்காதல்

மணற்துகள்களை
நகக்கணுக்களிலிருந்து
உதறி விட்டபிறகும்

கடற்கரை வெளியில்
மணற்வீடு கட்ட
தோண்டிய போது
கையில் பட்ட
ஈரம்
இன்னும் காயாமலே
இருக்கிறது
மனதுக்குள்.

22 May 2009

அமித்து அப்டேட்ஸ்

பொதுவாக அமித்துதான் எங்களுக்கு அலாரமே, சாதாரணமாய் எழும்போது ஒரு கத்தல் இருக்கும்.
கடந்த நாட்களில் ஒருநாள் அமித்து விழிப்பதை காணக் கொடுத்துவைத்தது. எழுவதற்கு முன்னர் ஒரு சின்னப் புரளல், பின்பு ஒரு சிணுங்கல், அப்புறம் மெதுவாக இமை பிரித்தாள்.பின்பு சுற்றும் முற்றும், மேலே ஓடிக்கொண்டிருந்த ஃபேன், ஃஷெல்பில் இருந்த பொம்மை, புக் இப்படி ஒவ்வொன்றாய் அவளின் பார்வை போனது. கொஞ்சம் நேரம் கழித்து அப்பா என்றாள். பின்பு என்னை நோக்கி எச்சோ என்றாள். எங்களிருவரிடமுமிருந்து பதிலில்லை என்றபின் அவளே ஆயா (எ)ங்க, தாத்தா எ)ங்க, அப்பு எ)ங்க என்று ஆரம்பித்து அவளே பதில் சொல்லிவிட்டாள் கீழ்ழே. பின்பு அவளின் அப்பாவை எழுப்பி அப்பா, கீழ்ழே என்ற கத்தல் தொடங்கியது.

அடிக்கடி ஃப்ரிட்ஜை திறக்கச் சொல்கிறாள். அம்மா பிட்ஜூ பிட்ஜூ என்கிறாள், நாம் தேவைக்காக திறக்கும்போது ஓடிவந்து நமக்குமுன் உள்ளே புகுந்து உள்ளிருக்கும் பண்டங்களையெல்லாம்
வெளிநடக்கச் செய்கிறாள். அப்படித்தான் ஒருநாள் காலையில் ம்மா சாக்கி என்றாள், சாக்லேட் இல்லம்மா, காலி என்றேன். காட்டு என்றாள், அவளைத்தூக்கி வழக்கமாக சாக்லேட் வைக்கும் இடத்தை காட்டினேன்.
பின்பு மாம்பழம் இருந்ததை வெளியெ எடுக்கச்சொன்னாள். நான் எடுத்து கொடுத்துவிட்டு சமையலறைக்கு சென்றேன். பின்னாடியே வந்து, ம்மா, கத்தி (எ)ங்க என்றாள். அவளின் ஆயா கத்தி எதுக்கும்மா உனக்கு
என்றார்கள். அதற்கு பழ்ழம் என்றாள். பின்பு ஒரு பொம்மை கத்தியை கொடுத்தவுடன் தான் மேடம் சமையலறையை விட்டு நகர்ந்தார்கள்.

ஞாயிற்றுக்கிழமை சமைப்பதற்காக மீனை சுத்தம் செய்து வைத்திருந்தேன். அது அமித்துவின் கண்ணில் பட்டுவிட்டது. அடிக்கடி அதனருகில் போய் போய் பார்த்துவிட்டு வந்தாள். ஒருமுறை பார்த்துவிட்டு
வந்தபின் அவளின் அப்பாவிடம், அப்பா, (உ)ள்ள மீன், மீன் என்றாள். அவளின் அப்பா சரிம்மா என்றார். பிறகும் போய் பார்த்துவிட்டு வந்தாள். நான் வர்ஷினிம்மா மீன் என்ன செய்யுது என்றேன். சிறிது நேரம்
கழித்து அப்பா மீன் ஊங்குது என்றாள், எப்படி தூங்குதும்மா என்றதற்கு தன் உடம்பையே ஒரு பக்கம் சாய்த்து, அதனை விட அவளின் தலையை மேலும் சாய்த்து மீன் தூங்குகிறது என்றாள்.
அவள் செய்ததைப் பார்த்து விழிகள் விரிய பார்த்து நின்றோம் நானும் அவளின் அப்பாவும்.

காற்று நிரப்பியிருந்த ஏரோப்ளேன் பொம்மை ஒன்றை சபரி வாங்கி கொடுத்திருந்தான் வர்ஷினிக்கு, இரண்டு நாள் கூட ஆகவில்லை, வர்ஷினி அதை கடித்து காற்று இறக்கிவிட்டதாக புகார் வந்திருந்தது.
கீழ்வீட்டு ஆச்சி ஒருநாள், உன் பொண்ணு என்ன செஞ்சா தெரியுமா, அந்த ஏரோப்ளேன் பொம்மையிலிருந்து காத்த எறக்கிட்டா. இரு நானே அவளை அதை கேக்கறேன் என்று, வர்ஷினி, ஏரோப்ளேன் காத்து
எறக்கினது யாரும்மா என்றார்கள், அதற்கு அவள் பாப்பா என்றாள். அதற்கு ஆச்சி, பாப்பாவா ? என்றார்கள். அதற்கு அமித்துவோ, ஆம்மா, நான்னு, பாப்பா என்றாளே பார்க்கனும். சிரிப்படங்க வெகுநேரமாயிற்று.

பேப்பர் எப்பம்மா வந்துது? அமித்துவின் பதில் காலீல.
அப்பா இந்தங்கோ பேப்பேர் எதையாவது கொண்டு போய் யாரிடமாவது கொடுக்கச் சொன்னால், அவர்கள் அதை வாங்கும் வரை இ)ந்தங்கோ இ)ந்தங்கோ இதே ரிப்பீட் ஆகும்.

பாப்பா பேர் என்னம்மா? அர்ச்சினி.

நான் ஆபிஸ் போனவுடன், இப்போதெல்லாம் அவளின் பாட்டியிடம் ஆயா, எச்சோ (எ)ங்க, எச்சோ (எ)ங்க என்று அடிக்கடி விசாரிப்பு நடக்கிறதாம். யாராவது உன் அம்மா எங்க, அப்பா எங்க என்று கேட்டாள், ஆப்பீச் என்று பட் டென பதில் வருகிறதாம்.

அமித்துவுக்கு பகல் நேர தூக்கம் ரொம்பவும் கம்மி, லேசில் தூங்க மாட்டாள், இல்லையென்றால் நேரங்கெட்ட நேரத்தில் தூங்கி சரியாக சாப்பிடமாட்டாள். இதனால் அவளை தூங்க வைக்க வேண்டுமென்றால் உள்ளே கொண்டு படுக்க வைத்து, கதவை சாத்திவிட்டு, வெளிய பூச்சிகாரன் வந்திருக்கிறான் என்றால் தான் கொஞ்சம் தூங்குவாள். இது கொஞ்சநாளாக போய்க்கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை அதையே செய்ய முற்பட படுத்திக்கொண்டிருந்த நான் வர்ஷினி கதவை சாத்திட்டு வா, தூங்கலாம் என்றேன். கதவருகே விளையாடிக்கொண்டிருந்த அவளும் கதவை சாத்தினாள், இரண்டு அடி என்னை நோக்கி வந்தவள், மீண்டும் போய் கதவை திற்ந்து ஊச்சி ஆரா, ப்போ, போ என்று சொல்லிவிட்டு மறுபடியும் கதவை சாத்தினாள். நேற்று இரவு அவளுக்கு நன்றாக தூக்கம் வந்துவிட்டது, தூங்கும் போது நடுவில் அவளாகவே அரைக்கண்ணை திறந்து ஊச்சி ஆரா ப்போ என்றுவிட்டு என்னைப் பார்த்து சிரித்தாள். என்னத்த சொல்ல?

நேற்று சாயந்திரம் அமித்துவின் அப்பா சீக்கிரம் வந்துவிட்டதால், அவர் அவளை பைக்கில் முன்னர்
உட்கார வைத்துக்கொண்டு, ரெயில்வே ஸ்டேஷனுக்கு என்னை அழைத்துப்போக வந்திருந்தார்கள். அமித்துவை குறித்த நேரத்துக்கு முன்னரே பார்த்த சந்தோஷத்தில் அவளை அங்கேயே கொஞ்சிக்கொண்டிருந்தேன், அவளோ முதலில் என்னைப் பார்த்து குஷியாகி சிரித்து விட்டு, பின்னர் ம்மா, போ, போ என்றாள், நான் எங்க என்றேன். பின்னானி பின்னானி போ என்று அவளோட சின்னக் கையை பின்னோக்கி காண்பித்தாள்.
ம்ஹூம், அம்மா சொல்லி கேட்காத பொண்ணெல்லாம், பொண்ணு சொல்லி கேட்குற அம்மாவாகியாச்சுன்னு நெனச்சுகிட்டே பின்னாடி உட்காந்தேன்.

19 May 2009

என்ன செய்தால் தகும்?

பொய் பரப்பும் தமிழ் ஊடகங்களே!
பார்த்த மாதிரியே செய்திகளை சித்தரிக்கும் பத்திரிக்கைகளே!
அவர் இறந்திருக்கத்தான் வேண்டும் என்பதை உறுதிபடுத்துவதில் அப்படியென்ன அவா உங்களுக்கு
மற்றவரின் கற்பை களங்கப்படுத்தி பணம் சம்பாதிக்கிறீர்கள்,
வளைத்து வளைத்து ஃபோட்டோ எடுத்து மற்றவரின் மரணத்திலும் சம்பாதிக்க ஆரம்பித்தீர்கள்
ஆடு குட்டி போட்டாலும் அதில் ஒரு பரபரப்பை வெளியிட்டீர்கள்
எல்லாம் சரி

மாபெரும் தலைவனின் மரணம் என்று சொல்லியா பணம் சம்பாதிப்பீர்கள்
எந்த மொழியை நீங்கள் பணம் பண்ண முதலீடாக வைத்துக்கொண்டிருக்கிறீகளோ, எந்த மொழியில் நீங்கள் அவர் மரணம் என்றறிவித்தீர்களோ
அந்த மொழி பேசும் மக்களுக்காக போரடியவனுக்கா நீங்கள் மரணம் என்றறிவிக்கிறீர்கள்.

காசுக்கு மொழியை விற்கும் உங்களுக்கு, களம் கண்ட வீரனின் செய்தியைப் பரப்ப எந்தவொரு அருகதையுமில்லை

எங்களின் சொச்ச நம்பிக்கைகளை குழிதோண்டி புதைத்து, அதில் உங்களின் பங்காக ஒரு கைப்பிடி மண்ணையும் போட்டு போகிறீர்களே???
உங்களையெல்லாம் என்ன செய்தால் தகும்?

மாவீரனுக்கு என்றும் மரணம் இல்லை
நம்புவோம்.

15 May 2009

காரசாரம்

எப்புடி... நாங்களும் பேர் வைப்போம்ல....

நடந்து முடிந்த தேர்தலின் பாதிப்பு மே 16 அன்றுதான் மீண்டும் நமக்கு உரைக்கும், ஆனால் இன்னும் அதன் பாதிப்பு தாளாமல் இருப்பவர்கள் அதற்காக உழைத்த (நெசமாத்தாங்க) கவர்ன்மெண்ட் எம்ப்ளாயீஸ் தான்.
வழக்கமாக சென்னை கார்ப்பரேஷன் ஊழியர்கள் தான் இது போன்ற பணிகளில் பெரும்பாலும் ஈடுபடுத்தப்படுவார்களாம், ஆனால் இந்த முறை தேர்தல் கமிஷன் மத்திய அரசாங்க ஊழியர்களையும் விளையாட்டில் சேர்த்துவிட்டார்களாம்.

விளைவு: நிறைய பொருமல்கள். உதாரணமாக மெஷின்களை செக் செய்து அதை எடுத்துக்கொண்டு போய் அவரவர்களுக்கென்று கொடுக்கப்பட்ட ஏரியாவில் உள்ள பூத்தில் கொடுக்க வேண்டும், மீண்டும் அதை வாங்கவும் வேண்டும்.
மெஷின்களை ஏத்தி இறக்கும் வேலையையும் இவர்களே செய்ய வேண்டிய சூழலில், செம கடுப்பாகிவிட்டார்களாம். ஏங்க செஞ்சா என்ன.

பாவம் என் நண்பர், இது போன்ற வேலையில் மாட்டிக்கொள்ள, அவருக்கு அரசால் கொடுக்கப்பட்ட தொகை ரூபாய் 550/-
ஆனால் அவர் மூன்று நாட்களாய் சாப்பாடு தூக்கமில்லாமல், மேலும் மற்றவர்களை தொடர்பு கொண்டு செல் பேச ரீசார்ஜ் செய்த தொகை, வண்டி ஓட்டிகளுக்கு டீ மற்றும் சாப்பாடு செலவு என செலவு செய்த தொகை அதையும் தாண்டிவிட்டதாம். இது எப்படி இருக்கு!

இது இப்படி இருக்க, நான் ஓட்டு போட போன பூத்தில், கையில் மை வைக்கும் இடத்தில் உட்கார்ந்திருந்த ஒருவருக்கு டீ கொடுக்கப்பட்டது. அதைப் பார்த்த அவர், என்னப்பா காலையில இருந்து இதையே கொடுத்துட்டு இருக்கீங்க, வேறெதுவும் கவனிக்க மாட்டேங்கறீங்க என்றார்.
டீ கொடுத்தவர் வெளிய வாங்க சார், பாத்துக்கலாம் என்றார் !!!!!!!!!!!!!!

வாக்கு இயந்திரத்தின் கிட்டத்தில் போனவுடன், கேப்டனின் சின்னம் மறந்து போய் விட, யோசிப்பில் இருக்க, அங்கிருந்தவர்கள் புளூ பட்டனை அழுத்தும்மா, புளூ பட்டனை அழுத்தும்மா, என்று கோரஸாக சவுண்டு விட ஆரம்பித்துவிட்டார்கள். கடைசியில் பழக்க தோஷமாக என் மாமா இருந்த கட்சிக்கே போட்டுவிட்டு வந்தேன்.

.......

கலைஞர் எப்போதும் எதற்கு பெயர்வைத்தாலும் அது சுருக்கமாக (சின்னதாக) இருப்பதையே விரும்புவாராம். அண்ணா யூனிவர்சிட்டிக்கு பெயர் வைக்க அவரிடம் ஆலோசனை கேட்க, முடிவு செய்த பெயரான பேரறிஞர் அண்ணா யூனிவர்சிட்டி (ஆங்கிலச் சுருக்கம்: PAUT) என இருந்ததாம்.
கலைஞரோ இப்போ பௌட் என்பீர்கள், அப்புறம் அது அவுட் என்பீர்கள் வேண்டாம். அது அப்படியே அண்ணா யூனிவர்சிட்டியாகவே இருக்கட்டும் என்றாராம்.

இந்த தகவல் என் மேலதிகாரி தந்தது.

............

காலையில் வரும்போது சுவரொட்டிகளில் பார்த்த செய்தி: நடிகர் (?) ரித்தீஷின் படம் போட்டு, ரித்தீஷின் உயிருக்கு ஆபத்து என்றிருந்தது. உள்ளேயிருக்கும் நியூஸ் என்ன என்பதெல்லாம் தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது, எங்கே அவர் நின்ன தொகுதியில் தோத்துப்போய் மறுபடியும் நடிக்க வந்துவிடுவாரோ என்று பயந்து, அவரது ரசிக சிகாமணிகளே இது போன்ற எதாவது செயல்களை செய்ய
துணிந்திருக்கலாமோ ???

..................

கடைசியில கவிதை எழுதனுமில்ல, அதானே விதி (அட, நீங்க படிக்கப்போறதை சொல்லலீங்க) இது போன்று எழுதுவதில் கடைசியா அப்படித்தானே முடிக்கனும்.
ஃபார் எ சேஞ்ச். ஒளவையார் எழுதின மூதுரை.

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்.

12 May 2009

மே 10

திரு எஸ்.கே அவர்களுக்கு

நன்றி, இதை எத்தனை முறை உங்களுக்கு சொன்னாலும் தகும். நேற்றைய கருத்தரங்கு நன்முறையில் முடிந்தது. நிழலாகவே எல்லாவற்றையும் ஆரம்பித்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் விட்டீர்கள்.உங்களின் கருத்தாக்கத்தை செயலாக்கப்படுத்திய திரு. நர்சிம் மற்றும் சக பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகள் சொல்லிவிடுங்கள். எப்படி ஆரம்பித்து எப்படி முடியுமோ என்று நீங்கள் ஒரு வித பதட்டத்துடனே இருந்தீர்கள்,அதற்கெல்லாம் சேர்த்து, மிகவும் நேர்த்தியாக முடிந்தது.

....

எதையெல்லாம் இதுவரை பேச கூச்சப்படுவோமோ, அதையெல்லாம் ஒரு விவாதத்திற்குள் கொண்டு வந்தபின், தயக்கம் தயக்கமில்லாமல் வெளியேறிவிட்டது.

டாக்டர் ஷாலினி ஆரம்பிக்கும் போதே, உங்களை விளித்துத்தான் தன் உரையை ஆரம்பித்தார். மிகவும் பயனுள்ள தகவல்கள், டாக்டர் ருத்ரன் பேசியது, இண்ட்ராக்‌ஷன் செஷன் இதெல்லாம் என்னை மிகவும் கவர்ந்தது. வருகை தந்து, புரிதலை ஏற்படுத்திய உங்கள் இருவருக்கும் நன்றிகள் டாக்டர்ஸ்.

பெண் பதிவர்களில், முல்லை, தீபா, வித்யா, உமாசக்தி, கிருத்திகா, ரம்யா, ரம்யாவின் அக்கா இவர்களெல்லாம் வந்திருந்தார்கள். நான் என்னுடைய அலுவலக தோழியுடன் வந்திருந்தேன்.

ஆண் பதிவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அவர்களில் நிறைய பேரை அவர்களின் ஃப்ரொபைல் போட்டோ வைத்து அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. திரு. அப்துல்லா, திரு. ஆதி, திரு. கேபிள் சங்கர், திரு. பைத்தியக்காரன் (உங்க உண்மையான பெயர் தெரியலீங்க)இவர்களுக்கெல்லாம் ஒரு ஹலோ சொல்ல முடிந்தது. திரு. ஆதிமூல கிருஷ்ணனிடம், ரமா எப்படியிருக்காங்க என்று கேட்க விழைந்து பின் கேட்காமலேயே வந்து விட்டேன். பதிவர் உழவன் போலவே ஒருவரைப் பார்த்து, ஹலோ சொல்ல நினைத்து பின் சொல்லமலேயே கடந்து விட்டேன். அவர் நீங்களா இருந்தா, சாரி உழவன். பதிவர் திரு. ஜமால் வர மிகவும் பிரியப்பட்டு, கடைசி நிமிடத்தில் உடல் நிலை சரியில்லாத காரணமாக வர முடியாமல் போய்விட்டது. பின்னர் திரு. அ.மு. செய்யது, கடைசி வரைக்கும் உங்கள் அக்காவை பார்க்க முடியவில்லை, வந்திருந்தார்களா?

நேரமின்மை காரணத்தால், சீக்கிரமே ஜூட் விட நேர்ந்துவிட்டது. மேலும் பன்க்ச்சுவாலிட்டி கீப் அப் செய்த முதல் நிகழ்ச்சி இதுதான், 4.05க்கு ஆஜராகி, பின் திரும்ப, உமாவும், வித்யாவும் அடுத்தடுத்த ஆட்டோவில் வ்ந்து இறங்கினார்கள்.
வித்யாகிட்ட கேட்காமல் விட்ட கேள்வி: அடிக்கடி ஆட்டோ வரும் ஆட்டோ வரும்னு உங்களுக்கு கமெண்ட் போடறாங்க. ஆனா நீங்களே ஆட்டோல வந்துட்டீங்களே வித்யா, ஆட்டோல வந்துட்டீங்களே.!!

திரு. நர்சிம், நிகழ்ச்சி நல்லபடியா முடியறவரைக்கும் நின்று கொண்டே இருப்பதாக வேண்டிக்கொண்டாரோ என்னவோ தெரியவில்லை, கடைசி வரைக்கும் ஒரு டென்ஷனாகவே அங்குமிங்கும் நின்று கொண்டிருந்தார். சார், ஹாட்ஸ் ஆஃப் டூ யு அண்ட் யுவர் டீம்.

இரு செலிபிரிட்டிகளுக்கும் வழங்குவதற்காக. ரம்யா பொன்னாடைகள் வாங்கி வந்திருந்தார், திரு. பத்ரி, அவர்களிருவருக்கும் புத்தகங்களை பரிசாகத் தந்தார். காபி, ஸ்வீட், காரம் என்று அவ்வப்போது வழங்கி அமர்க்களப்படுத்திவிட்டார்கள்.

அங்கு நடந்து உரையாடல்களை பதிந்திருக்கிறார்கள். அனைவரும் பயன்பெறுவதற்காக வலையேற்றுவதாக உத்தேசம் என கிழக்கு பதிப்பகம் திரு. பத்ரி சொன்னார். நன்றி சார்
அதன் மூலம் அங்கு நடந்தவற்றை நீங்கள் கேட்கமுடியும், ஆடியோ வடிவத்தில்.

5 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் 8 மணிக்கு இனிதே முடிந்தது.

விரியத்துவங்கும் குழந்தைகளின் உலகத்தை ஒரு புரிதலோடு விரிவாக்க, துவக்கப்புள்ளி வைத்த சிதறல்கள் தீபா, புள்ளியை வட்டமாக்க முதல் முயற்சி எடுத்த எஸ்.கே,
வட்டத்தை நேர்த்தியாக வரைந்து முடித்த திரு. நர்சிம் மற்றும் சக பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

நட்புடன்
அமித்து அம்மா.

11 May 2009

காக்காணி

இலையோடு இலை கூட அசையவில்லை, காற்றே இல்லை, மேல் துண்டால் விசிறி விசிறி விட்டுக்கொண்ட சின்னையனுக்கு தூக்கமே வரவில்லை, எழுந்து வீட்டுக்குள் போனார், சிம்னி விளக்கு ஆடாமல் அசையாமலிருக்கும் ஒரு சுடரைக் கொண்டு அந்த இருட்டுக்கு ஒளி பிறப்பித்துக்கொண்டிருந்தது. இவர் வீட்டுக்குள் சென்ற சிறு வேகம் அந்தச்சுடரை ஏதேனும் செய்திருக்க வேண்டும்சற்றே இடப்பக்கம் சாய்ந்து பின் நிமிர்ந்தது.

பழக்கப்பட்ட இருள், ஒற்றைச்சுடர் கொண்டு வந்த சிறு வெளிச்சத்தில், ஏற்கனவே கந்தலாகிப் போயிருக்கும் ஒரு வேட்டியின் முனையை கொஞ்சம் கிழித்தார், ஈரப்படுத்திக்கொண்டார், அந்நேரத்தில் மஞ்சளுக்கு எங்கே போவது என்று யோசித்தார்.சாமி படத்தில் குங்குமத்தைப் பற்றி இருந்து கொஞ்ச காய்ந்த மஞ்சளையே அந்த ஈரத்துணியால் துடைத்துக்கொண்டார். கவனமாக ஒரு ரூபாயை முடிச்சிட்டார். சாமி போட்டோ வைத்திருந்து அந்த ஆணி மேலேயே அந்த நாணய முடிச்சை முடிச்சிட்டார். ஒரு பெருமூச்சிட்டு வீட்டுக்கு வெளியில்வந்து பீடியைப் பற்ற வைத்தார். யோசனைகள் அலை பாய்ந்தது. நாளைக்கு அவன் வந்துடுவானோ, இந்த காக்காணியும் இல்லாம பூடுமோ.. அன்னிக்கு வந்த வேகத்துல சரின்னு சொல்லிட்டாலும். இதுவும் கைய விட்டு பூட்டா, என்னாத்த செய்யுறது. நமக்குத்தான் வயசாயிடுச்சி, பாத்துக்க முடியாமபோய்ட்டாலும், போகியத்துக்காவது போட்டு உடலாம், வருசத்துக்கு அஞ்சாறு மூட்டையாவோ, இல்ல பணமாவோ வாங்கிடலாம், காணிய கண்ணுல பாத்துக்கிட்டே இருக்குற இந்த கொற காலத்த ஓட்டிரலாம் என்று எண்ணியிருந்ததின் மீது நாளை கை நாட்டு வைத்துவிடுவோமோ. ம்ஹூம் பொன்னாத்தா, நீயிருந்தா இதெல்லாம் பாத்துப்ப, நான் பாட்டுக்கு கழனிக்கு போனனா, வந்தனான்னு இருந்திருப்பேன். நீயும் போயி, இப்ப நெலமும் போவப்போகுது என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே, கண்ணோரம் ஈரத்தை கைத் துண்டால் துடைத்து, மூக்கை சிந்திப்போட்டார்.

இந்தப் பன்னாட பையன் மட்டும் வரலன்னா, நான் நின்னவாக்குலயே நின்னிருப்பன். அன்னிக்கு அத்தன பங்காளி பயலுவளும் ஒத்துக்கினு எங்கிட்ட பேச வந்தானுங்க, அன்னிக்கி நா இன்னா ஒத்துக்கனன்னா. எத்தினி பேரு எத்தினி சொன்னானுங்க, ரோட்டோரம் நெலமா கெடக்குது, அந்த கம்பேனிக்காரவுனுக்கு வித்துபுடு, அதுவும் உன்னோட காணி கெடக்கறது நடுவுல. சுத்து பட்டுல இருக்குறது உம் பங்காளிகளோடதுதான். அதுவுமில்லாம கெணறும் பாகத்துல வருது, நாலக்கி அவனுவல்லாம் நெலத்த வித்தா கெணத்தோட சேர்த்துதான் விப்பானுங்கோ. அப்ப நீ மட்டும் விக்காம வெவசாயம் பண்ண தண்ணிக்கி எங்கயா போவ. ஒன்னு காஞ்சி கெடுக்குது, இல்ல பேஞ்சி கெடுக்குது இந்த மானம். இத்த நம்பி நீ இன்னாத்த போடுவ. அதுவுமில்லாம வயசாவுதுய்யா உனக்கு, கண்ணும் தெரியலன்னுட்டு சொல்லிகினு திரியற. இந்த லட்சணத்துல நீ ஒருத்தன் எப்டிய்யா இந்த நெலத்தோட போராடிக்கினு கெடக்கப்போற?. பேசாம நாஞ் சொல்றத கேளு. உம் பங்காளிங்கள்ளாம் ஒத்துகினானுங்கோ, செண்ட்டுக்கு 10000 ரூவா, ஏதோ பெரிய கம்பேனிக்காரன் வந்து வாங்கிக்கப்போறானுங்களாம்
நீ ஒருத்தந்தான் மொரண்டு புட்ச்சிகினுகிற. ஒங் காணி ஓரஞ்சாரமா கெடந்தாலும் உட்டு கெடாசிட்டு பூடலாம். நீ நட்ட நடுவுல வெச்சிகினு விக்கமாட்டன்னு புடியா புட்ச்சிகினுகிற. அவனுங்க மட்டும் இன்னா, வேணும்னா விக்கப்போறானுங்க, கடா மாரி வளத்துவுட்ட புள்ளைங்கல்லாம் கெளப்பிவுடுதுங்கோ, நல்ல வெலைக்கு கேட்கறான், குத்துடு, குட்த்துடு, அப்டினு, இவனுங்களும் கொட்ச்சல் தாங்காமத்தான வித்துக்குட்த்துட்டு ஒழிச்சிடலாம்னு நெனைக்கிறானுங்க.

சரி தோ பாரு சின்னைய்யா, இன்னிக்கி இல்லனாலும், நாள பின்ன, மெட்ராஸ்ல இருக்குற ஒம் புள்ள இந்த நெலத்த விக்கத்தான் போறான், அப்ப இன்னா நீ ஒக்காந்து பாத்துக்கிட்டா இருக்கப்போற, இல்ல அப்ப நெலந்தான் இந்த வெளைக்கு போவுமா சொல்லு. இந்த கரம்புக்கெல்லாம் எவன்யா இம்மாங் காசு குட்த்து வாங்குவானுங்கோ. ஏதோ நெல ப்ரோக்கருக்க கம்பெனிகாரனுங்கள் கூப்ட்டுகினு வந்தானுங்களோ, இது இம்மா வெல போவுது, கூட நெலம் வேற ரோட்டோராம் கீது. அதான். பாரு, பட்டுன்னு முடிவெடு, அடுத்த வாரம் அந்த கம்பேனிக்காரவுனுங்க வரானுங்களாம். நெலத்துக்கு பாத்தியத ஆன நீங்க 6 பேரும் ஒன்னா இருந்து கையெழுத்து போட்டுக் கொடுங்க, போட்ட கையோட பணத்த செட்டில் பண்ணிக்குங்க என்றார்கள். டீக்கடையில் இது ஏதோ ஒரு மேடைக்கூட்டம் மாதிரி நடந்த்து. சுற்றிலும் 10 ஊர்க்காரனுங்க, 6 பங்காளிங்க என்று பல்குத்திக்கொண்டும், பீடி குடித்துக்கொண்டும், பேசினா....................ர்கள். இது எதுக்கும் புடி கொடுக்காமல் பேசிவிட்டு வந்தார் சின்னையன். ரெண்டே நாள்தான்.

ஒரு நா, பத்து மணி வாக்குல புள்ளகாரன் வீட்டு வாசல்ல வந்து நிக்கறான். திண்ணையில் குந்திக்கொண்டிருந்த சின்னையன், அவன் வந்து நின்றதைப் பார்த்தவுடனே புரிந்துகொண்டார், செத்தாதான் வருவான்னு நெனச்சோம், பரவால்ல உயிரோட இருக்கும்போதே வந்துட்டான், எந்த பொறம்போக்கோ இவனுக்கு போன் பண்ணி சொல்லியிருக்கும், அதான் கலெக்டர் மயிரு வந்துட்டாரு கண்டுக்கிட்டு போவ என்று எண்ணியபடி,துண்டை உதறி மேலே போட்டுக்கொண்டு, இடுப்பு வேட்டியை சரி செய்தார். வா என்று நிலத்தைப் பார்த்து கூப்பிட்டவாறே, உள்ளே போய் ஒரு சொம்பு தண்ணிய எடுத்தாந்து திண்ணையில் வைத்து விட்டு, தொண்டையை கனைத்தார், ஊர்ல புள்ளைங்க, அவ, எல்லாம் சொகந்தானே, படிக்குதுங்களா?. பதிலுக்கு, உம், ரெண்டும் பள்ளிக்கூடத்துக்கு போவுதுங்க. பெரிசுக்கு தான் 2 நாளா காய்ச்ச. இல்லனா ஞாத்திக்கெழமையே வந்திருப்பேன் என்று பதில் சொன்னான்

ராஜேந்திரன், சின்னையன், பொன்னம்மா தம்பதியின் ஒரே மகன். இந்நேரம் பொன்னம்மா இருந்திருந்தா, புள்ள வந்து வாசல்ல நின்னத பாத்தவொடனே, யப்பா, ராசா, வந்தியான்னு மூக்க சிந்திப்போட்டுட்டு, கோழி வெட்டவா, ஏரி மீன் புடிக்க சொல்லவா ந்னு லிஸ்ட்டு போடுவா. இவனும் மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு, மைனர் மாறி ஊர் சுத்திக்கிட்டிருப்பான்.

ஒரே புள்ள, ஊட்டி ஊட்டி வளர்த்து, பத்தாவதுக்கு மேல படிப்பேறாம, ஊர்ல இருக்கறதுங்களோட சேர்ந்துக்கினு மெட்ராஸ்ல போய் கழட்டபோறன்னு போச்சு, அங்க போயி எவன் கிட்ட ஒதையும், திட்டும் வாங்குச்சோ, இன்னாவோ, கார் மெக்கானிக்கா ஆயிடுச்சு. ஒரு நா ஞாயித்துக்கெழமை, ஒரு ஓட்ட கார எடுத்துக்கினு, நாலு பசங்கள கூட்டுக்கினு ஊருக்கு வந்தவுடனே, பொன்னம்மாளுக்கு கை, கால் புரியவில்லை. யப்பா, காரா ஓட்டற, காரா ஓட்டற, என்று புள்ள தேர் ஓட்டுறா மாதிரி 10 தடவயாவது கேட்டாள். பத்தாததுக்கு ஊர் முழுக்க புள்ள கார்ல வந்தத தமுக்கடிச்சா. எவ கண்ணு பட்டுச்சோ, எண்ணி 6 மாசம் கூட ஆவல, ஒரு நா, ஒரு பொண்ண இட்டுக்கினு வந்து, தோ இவளதான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு சொல்றான். எவ்வளவோ வாதாட்டம். பொன்னம்மாவும் மூக்க சிந்திப்பாக்குறா, பட்டினி கெடந்து பாக்குறா, ஒன்னும் வேலைக்காவாத, தான் புட்ச்சதே புடின்னு அவன் கல்யாணம் பண்ணிக்கொண்டான். கொஞ்ச நா, பங்காளிங்களோட பேச்சு வார்த்த கூட இல்லாமதான் இருந்த்து. அப்புறம் பொன்னம்மா செத்தவுடந்தான் ஏதோ ஒரு நா, கெழமைன்ன பண்டம், பலகாரம் குடுக்கன்னு ஒட்டனானுங்க. ம்ஹூம், பொன்னம்மாவோட போச்சு, வாய்க்கு ருசியா சாப்புட்டது, கண்ணுக்கு அழகா கட்டுனதும். அவ வேட்டிய தோச்சான்னா, தும்பப்பூவு கணக்கா இருக்கும். கருவாட்டுக்கொழம்பு வெச்சான்னா, மணக்க மணக்க இருக்கும். இன்னாதான் கழனில, கொள்ளில இல்ல கூலிக்கு போய் மாடு மாதிரி ஒழைச்சிட்டு வந்து அலுப்பு சுலுப்பா இருந்தாலும் முக்கிகிட்டு மொணறிகிட்டாவது ஒரு கொழம்ப வெச்சிடுவா. சுட சோறும், கொழம்பும் ஒரு நா தவறுனதுல்ல.

ம்க்கும், இப்ப எங்க, உப்பு இருந்தா, ஒரப்பு இல்ல, நான் வெக்குற கொழம்புல என்று நீ.....ண்ட யோசனையை, ஒரு தொண்டை கனைப்பு கலைத்தது. நிமிர்ந்து பாத்தால், புள்ள, இன்னும் ஊர்க்காரனுங்க நாலு பேரும் நிக்கறானுங்க. ராஜேந்திரன் பேசினான், வயசாயிடுச்சு, இனிம இந்த நெலத்த வெச்சிக்கிட்டு இன்னாப் பண்ண போற, நல்ல வெலைக்கு வருது, குடுத்துட்டு, பணத்த நீ பேங்க்குல போட்டுக்க, வர்ர வட்டிய வெச்சு சாப்புடு. பின்னாடி பாத்துக்கலாம். அட கம்னேட்டி, இத சொல்லத்தான் மெட்ராஸ்ல இருந்து வந்தியா என்று நினைத்துக்கொண்டார் சின்னையன்.

சொல்றத கேளு, இனிமே எதுக்கு வேவா வெயில்ல கஷ்டப்பட்டுக்கினு, அம்மாவும் இல்ல. பேசாம வித்துட்டு மெட்ராஸ் பக்கமா ஒரு எடம் வாங்கிப்போடலாம்,. கடசி காலத்துல நீயும் அங்க வந்து வுழுந்து கெட என்றான். ம்க்கும் இம்மான்னாளு இங்க கஷ்டப்பட்ட, கொற நாள மெட்ராஸ்ல வந்து கஷ்டப்பட்டுக்கினு இருன்னு சொல்றியா என்று நினைத்தவாறே, இப்ப இன்னா, அந்தக் காணி இருக்கறது உங்க எல்லார் கண்ணுலயும் உறுத்துது, அம்மாந்தானே, த்தே, இங்க பாருடா, நானும் வித்துக்குடுக்க ஒத்துக்கனன்னு போய் சொல்லிடு, இம்மாந் நாளு அதுதாண்டா எனுக்கு சோறு போட்டிச்சி, பெத்த புள்ள கூடப் போட்டதில்ல ஒரு வா. அத்த விக்கனும்னு ஆய் போச்சு, நாஞ் செய்யலனாலும், என்ன செய்ய வெச்சிட்டீங்க, ப்போய் சொல்லு, சின்னையன் ஒத்துக்கினாருன்னு.

ராஜேந்திரன், த்தே, அப்படி ஒன்னு எனாமா, யாசமா நீ ஒன்னும் தூக்கிக்குடுக்க வாணாம், எனக்குன்னா, நா கத்துக்குன கைத்தொழில் இருக்குது, அது கஞ்சி ஊத்தும், எந்த மயிரானாவது வித்துக்குனு போங்க, இல்ல விக்காட்டி போங்க என்று விசுக்கென்று சொல்லியவாறே கூட்டாளிகளோடு குடிக்க போய்விட்டான். மறுபடியும் போதை ஏற்றிக்கொண்டு வந்து இன்னும் நாலு வார்த்த பேசித் தீர்த்தான், கடைசியில அழுது முடித்தான். சின்னையனுக்கு வெறுத்துப்போனது. ச்சே என்று ஆகிவிட்டு, வித்துபோடுவோம் என்று ஒத்துக்கொண்டார்.

இருந்தாலும் ஏதோ மனசு அடித்துக்கொள்ள, விக்காம இருந்தா நல்லா இருக்கும், கடசி காலத்துல எனக்கு தொணையா இருக்கும், என் காலத்துக்குப்பின்ன அவன் வித்து பொழைச்சிக்கிட்டும், என்ற வேண்டுதலோடுதான் ஒற்றை ரூபாயை முடிச்சிட்டார். பொன்னம்மாவின் பழக்கம் அது, என்ன மனக்கஷடமிருந்தாலும், உடம்பு கஷ்டமிருந்தாலும், ஒத்த ரூபா முடிச்சுதான், எண்ணி ஒரு வாரம் எல்லாம் சரியாகிவிடுமென்பது அவளின் நம்பிக்கை. சில சமயம் இரவு நேரங்களில் வெத்தலை பாக்கு போட்டுக்கொண்டே, தான் நேர்ந்து கொண்டதையும் உடன் அது பலித்ததையும் சொல்லிக்கொண்டிருப்பாள். பதிலுக்கு இவர், அப்ப ஒம் புள்ள இழுத்துகினு போம் போது ஒரு ரூவா முடியறதுதானே, திரும்பி வந்துட்டிருப்பான் என்று கேலி பேசுவார். பொன்னம்மாவோ, ஆயிரம் இருந்தாலும் அது நம்ம புள்ள, நேர்ந்துகிட்ட பின்ன அதுக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிப்போச்சுன்னா, நாமதானே வெச்சுக்கினு படனும் என்பாள். இப்படியாய் அன்றிரவு பொன்னம்மாளின் நினைவுகளைப் போர்த்தி உறங்கிப் போனார் சின்னையன்.

மறுநாள் காலை, கம்பெனிகாரனுங்க வந்தானுங்க. அளவெடுத்தானுங்க, இத்தனை செண்ட்டுக்கு இவ்வளோ ரூவா, இத்தனாந் தேதி ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம் என்று பேச்சாகியது. சின்னையன் பேசாமல் கிடந்தார். இரண்டு நா கூட ஆகலை, அரசல் புரசலா செய்தி வந்தது, ஒரு செண்டுக்கு பத்தாயிரம் ரூவா இல்லியாம், அஞ்சாயிரம்னு வேணா பேசி முடிக்க சொல்லியிருப்பதாக ப்ரோக்கர் சொன்னான், காரணம் கேட்டதுக்கு ரியல் எஸ்டேட் பிஸினஸ் கொஞ்சம் இறங்குமுகமாக இருப்பதாகவும் சொன்னான். அவன் அவன் வேலையே இல்லாம வீட்டுக்கு போயிட்டு இருக்கானுங்க, இந்த நெலமையில எங்கத்த நெலத்த வாங்கிப்போடுவானுங்க. ஒயரத்துக்கு போனதெல்லாம், கீழ ஒக்கார ஆரம்பிச்சிருக்கு.அஞ்சுக்கு ஒத்துக்கறீங்களா, இதுவும் நல்ல வெளைதான் இந்த எடத்துக்கு என்றான்.

பலாப்பழம் கிடைக்கும் என்று எண்ணியிருந்தவர்கள், சுளைதான் கெடைக்கும் என்றாகியபோது, பக் கென்று ஆனார்கள். சின்னையன் நினைத்துக்கொண்டார், என்னிக்குமே எம் மண்ணு, எங் காணி குடி கெடுக்காதுடா. தலைமொறை தலைமொறையா பசி தீர்த்த பூமிடா இது. இத வித்து கூறு போடாதீங்கடான்னு அன்னிக்கே சொன்னேன், கேட்டீங்களா. பத்துக்கு வாய பொளந்தீங்களே, இன்னிக்கு அஞ்சு ந்ன்றான். இப்ப இன்னாடா பண்ணப் போறீங்க என்றார்.அவரின் குரலில் எகத்தாளமிருந்தது. அங்கிருந்த அனைவரும் கலைந்தார்கள். சின்னையன் போய் நிலத்தில் காலை வைத்தார், வெயில் கொளுத்தியது, ஆனால் சின்னையனுக்கு மண் சுடவில்லை, மாறாய் ஈரப்பதம் கொடுத்தது. பொழுதோடு வீட்டுக்கு வந்தவர், மறக்காமல் ஒற்றை ரூபாய் முடிச்சைப் பார்த்தார். அங்கே பொன்னம்மாள் சிரித்துக்கொண்டிருந்தாள்.


டிஸ்கி: என் முதல் சிறுகதை முயற்சி. நிறையோ, குறையோ உங்களின் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்

06 May 2009

பயணங்கள் முடிவதில்லை

சென்னையில் சமீபத்திய இரயில் கடத்தல் ( ! ?) தொடர்பான இரயில் விபத்து அனைவரும் அறிந்ததே. அது நடந்த நன்று எப்படி நடந்திருக்கும், டிரைவர் மேல தப்பா, சிக்னல் ப்ரச்சனையா என்று ஏகப்பட்ட குழப்பங்களில் பொதுஜனங்கள் குழப்பிக்கொண்டிருக்க, வழக்கம் போல மாலை தாம்பரம் வண்டியில் சைதைக்கு சென்று கொண்டிருந்தேன். பெணகள் பெட்டியில் ஒரு அம்மா நல்ல காலை நீட்டி வைத்து உட்கார்ந்து கொண்டு காலை ரயில் விபத்தை முழக்கிக்கொண்டிருந்தார். அந்தம்மா சக பயணியிடம் பேசிக்கொண்டு ட்ரெயின் ஆக்ஸிடெண்ட்ட அப்படியே நேர்ல பாக்குற எஃபெக்ட்ட கொண்டு வந்தாங்க, அவங்க சொன்னதுல ஒன்னு, “சிக்னல் கொடுக்காமயே ட்ரெயின் போயிடுச்சாம், அப்புறம் தான் சிக்னல் கொடுக்கறவரு வந்து பார்த்து, ட்ரெயின் பின்னாடியே ஓடறாராம்”. பாவம் எப்படி ஏத்தி வெச்சிருக்காம் பாரு.
மேலும் சீட்டில் உட்கார்ந்திருந்த இரு இளம் பெண்கள் செல்போனை நோண்டிக்கொண்டே, ஏய் ஆக்ஸிடெண்ட் ஆன ட்ரெயின ஒரு லூசு ஓட்டிச்சுன்னு சொல்லிக்கிறாங்க. அய்யோ சாமி, இந்த ட்ரெயின யாரு ஓட்டறாங்களோ தெரியலயே என்று சொல்ல, இன்னொரு செல்போன் நோண்டி, இல்லடி, இந்த ட்ரெயின லூசு ஓட்டல, ஒக்காந்துட்டு வருது என்று ஒருவரை ஒருவர் ஓட்டிக்கொண்டிருந்தார்கள். அன்று எனக்கு சீட் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தது நல்லதாக போனது.

கடைசியாக இது ட்ரெயின் கடத்தல் என்று போலீஸ் சந்தேகிப்பதாக பேப்பரில் அறிந்தேன். நாலு பேர் செத்தாலும், பத்து பேர் பாதிக்கப்பட்டாலும் சக பயணிகள் வழக்கம் போல பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ரயில்வே டிபார்ட்மெண்ட்டுக்கு இன்னும் பீதி அடங்கவில்லை போலிருக்கிறது.

பெண்கள் கம்பார்ட்மெண்ட்டில் எப்போது பார்த்தாலும் ஒரு ரயில்வே போலீஸ் இருக்கிறார். போலீஸ்கார், போலீஸ்கார், சென்னையில் ரயில் கடத்தல் நடந்தாலும், கடத்தறவங்க, பெண்கள் கம்பார்ட்மெண்ட தனியா கழட்டிவிட்டுத்தான் கடத்துவாங்க. உங்களுக்கு கடைசி பென்ச் ஆண்ட்டிகள பத்தி தெரியாது போல... போலீஸ்கார்

ப்பா, காலை, மாலை இரு வேளைகளிலும் நான் செல்லும் நேர ட்ரெயின் லேடீஸ் கம்பார்ட்மெண்ட்களை அதிகம் ஆக்ரமித்திருப்பது அரசுத்துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களே. அப்படியே ஒரு செட் ஆக்ரமித்திருக்கும். கடைசி நீள இருக்கைதான் இவர்களின் ஆக்ரமிப்புக்கான இடம். (ஸ்கூல்ல ஆரம்பிச்சு, ட்ரெயின் வரைக்கும், இந்த கடைசி பென்ச் தொல்லை தாங்கமுடியலப்பா!). லேடிஸ் ஸ்பெசல் ட்ரெயினாக இருந்தால் கடைசி 5 பெட்டிகள் பெண்களுக்கானது. சில சமயம் ட்ரெயின விட்டுருவோமோ என்ற பரபரப்பில் ஏதாவது ஒன்று, இரண்டு ஆண்கள் ஏறிவிட்டால் அவ்ளோதான். ஏம்பா, பாத்தா தெரியல. இது லேடீஸ் கம்பார்ட்மெண்ட்டுப்பா, இறங்குப்பா. ஒரு நான்கைந்து குரல்கள் கோரஸாக எழும். இத்தனைக்கும் அவர்கள் அடுத்த ஸ்டேஷனில் ஆண்கள் பெட்டிக்கு மாறிவிடுவார்கள். சில சமயம் பரபரப்பில் ஏறும் அந்த ஆண்களை பார்க்கும்போது பாவமாக தோன்றும். வியர்த்து விறுவிறுத்து (?) ட்ரெயின் அடுத்த ஸ்டேசன் போறதுக்குள்ள ஒரு மூணு தடவையாவது வாட்ச பாத்து, ட்ரெயின் அடுத்த ஸ்டேஷன் நுழையும்போதே ஒரு காலை கீழே வைத்துக்கொள்ளாத குறையாக தொங்குவார்கள். அடுத்த ஸ்டேஷன் வந்தவுடன் அலைபாய்ந்து முன்னிருக்கும் ஆண்கள் பெட்டிக்கு ஓடுவார்கள்.

இந்தப் கடைசி சீட் பெண்களை பார்க்கும்போது உண்மையில் இவர்கள்தான் வாழ்க்கையை வாழப்பிறந்தவர்களோ என்று கூட தோன்றும். அந்தளவுக்கு பேச்சும், சிரிப்பும் பின்னிப் பிடலெடுத்துக்கொண்டு வருவார்கள்.சிலர் கோரஸாக சில பக்திப்பாடல்களை பாடிக்கொண்டு வருவார்கள். அரியர்ஸ்ல ஆரம்பிச்சு அடுத்த சீட் ஆள் வரைக்கும் இவர்கள் கலாய்த்தல் செம ஹாட் & டெர்ரர்.

அதிலும் ஒரு தடவை ஒரு பெண் பாடிக்கொண்டு வந்த மாமன் ஒரு நா, மல்லியப்பூ கொடுத்தான் என்ற பாட்டு, அப்படியே கம்பார்ட்மெண்டே ஆடிப்போச்சு. செம சூப்பரா பாடுனாங்க. இடையிடையே சிரிப்பு. அவரின் அந்த சிரிப்பு, கம்பார்ட்மெண்ட்டின் சில உம்மனா மூஞ்சிகளையும் சிரிக்க வைத்தது அன்று. அந்தப் பெண்ணின் முகத்தை என்னால மறக்கவே முடியாது. நிறைய பழைய பாடல்கள் பாடுவாங்க. ஆனால் அப்படி சிரித்து, பாடிக்கொண்டிருக்கும் பெண்களை ஏனோ சில பெண்களுக்கே பிடிக்காது போல. அன்று அந்தப் பெண் பாட்டைக் கேட்டுவிட்டு கீழிறங்கும்போது, ட்ரெயினிலிருந்து எனக்கு முன்னால் இறங்கிய இரு பெண்களின் கமெண்ட் என்னால் மறக்க முடியவில்லை. இதுக்கெல்லாம் வீட்டுல வேலையே இருக்காது போல, பாடறதுக்குன்னே ட்ரெயின்ல ஏறி ஒக்காந்துக்குமா?, நம்மளே ஆயிரம் டென்ஷன்ல ஆபீஸுக்கு வர்ரோம் என. எப்ப பாத்தாலும் கெக்க பிக்கன்னு சிரிச்சிட்டே இருக்கும் பாத்திருக்கியா நீ என. ச்சே. பிறர் சிரிக்க வாழ்ந்தாதான் தப்பு, தான் சிரித்து வாழ்ந்தா கூடவா தப்பு. மாறுங்க மக்கா. நம்மள நாம சந்தோஷமா வெச்சுக்கலன்னாலும், பிறரின் சந்தோஷம் நம்மள தொத்திக்கொள்ளும் அந்த சில கணங்களாவது நாம சந்தோஷமா இருப்போம்.

04 May 2009

அமித்து அப்டேட்ஸ்

என்ன சொல்றதுன்னு சொல்வதைவிடவும் எவ்வளவு சொல்வது அப்படின்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும்னு நெனைக்கிறேன்.

நிறையவே பேசுகிறாள்.. ம் எங்களின் மனது நிறையவே பேசுகிறாள்.

ம்மா, எச்சோ, காலு, காலு மேல ஏத்தான்.. இது கார்த்தி, ஹரி வீட்டில் சைக்கிள் ஓட்டும் போது அவர்கள் மீது அமித்து சொன்ன புகார், அவர்கள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு கொஞ்சம் நகர்ந்தால் போதும்,

இல்லை அந்த சைக்கிள் இவள் மீது உராய்ந்தால் கூட போதும், உடனே புகார் தொடங்கிவிடும், ம்மா, க்கா, ஆயா, தாத்தா, அத்த, அப்பா என்று எல்லாரிடம் அவர்கள் மீதான புகார் சொல்லப்படும்.

இப்படித்தான் கார்த்தி வீட்டுக்குள் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் போது, நான் காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அவன் சிரித்துக்கொண்டே சைக்கிளை என் காலில் மீது ஏற்றி இறக்கிவிட்டான்.
நான் வலியில், கார்த்தி,, யசோ கால் வலிக்குதுடா என்றேன். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அமித்து, உடனே, ஏ ஏ, காத்தி, காலுடா, ம்மா, காலு, என்றபடியே என் காலின் மீதிருந்த உடையை சற்றி விலக்கி
காலை தேய்த்துவிட்ட அவளின் செய்கையில் இயல்பாய் என் கண் கலங்கியது. அள்ளிக் கொண்டேன் அவளை.

தள்ளான், தள்ளியான் - தள்ளிவிடுகிறான் என்று பொருள் கொள்க...

குளானம் - குளிக்க வைக்கவேண்டும்,
இந்த வெயிலுக்கு கொஞ்சம் கச கச என்று இருந்தாலும் போதும், அமித்து ஆரம்பித்துவிடும்.
ஆயா... வா குளானம் குளாலம் இப்படி இரண்டு வார்த்தைகளில் ஏதேனும் ஒன்றில் கோரிக்கை வைக்கப்படும். வெயிலா இருக்குமா, இன்னும் கொஞ்ச நேரம் போட்டும்மா என்று கோரிக்கை

நிராகரிக்கப்பட்டால் கவலைப்படுவதே அவள். நேராக சென்று தன் உடையின் மீதே நீரை எடுத்து ஊற்றிக்கொள்கிறாள்.

அமித்துவை எந்தக் கடைக்கு அழைத்து சென்றாலும், ம்மா, பாப்பாக்கூ என்று உடனே கேட்கிறாள். ஊருக்கு சென்றிருந்தபோது, வளையல் கடைக்கு சென்றோம். என் கைக்கான வளையல் அளவு பார்க்க, ஒரு வளையலைத் தேர்ந்தெடுத்தபோது, அமித்துவும் தன் கையை நீட்டி எச்சோ, பாப்பாக்கூ என்று ஆரம்பித்தாள். அதுதான் அவளின் முதல் கேட்டல் என்னிடம். சொல்லி மாளாத மகிழ்ச்சி.

வெள்ளிக்கிழமை விடுமுறையின் போது, நான், அமித்து, அவளின் பாட்டி தாத்தா அனைவரும் கோயிலுக்கு சென்றிருந்தோம். ஒருவர் மாற்றி ஒருவர் அவளை தூக்கிக்கொண்டு நடந்தோம். ஒருவர் மீது அமர்ந்தால், மீதி இருவரை தேட ஆரம்பித்து விடுகிறாள். தாத்தாவிடம் இருந்தாள் என்னையும், அவளின் பாட்டியையும். இப்படியே மாற்றி மாற்றி, ஆனால் ஒருவரையும் மிஸ் பண்ணிவிடாமல் அனைவரையும் உடனே வைத்திருக்கிறாள். வழி நெடுக நிறைய கடைகள், பொம்மைகள், ராட்டினம் இப்படி நிறைய இருக்க, ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே, இங்க பாரேன் கார் பொம்மை, பஸ் பொம்மை, ராட்டினம் என்று சொல்லிக்கொண்டே வந்தோம். பல்லுன்னூ என்று கேட்டதால் பலூன் வாங்கித்தரப்பட்டது. அப்புறம் பால், வள்ளேல் (வளையல்) இப்படியாய் எல்லாம் சொல்லிக்கொண்டும் / கேட்டுக்கொண்டும் வீட்டுக்கு திரும்பி வரும்போது, ஒரு கடையில் காற்றடிக்கப்பட்ட பெரிய பொம்மைகள் தொங்க விடப்பட்டிருந்தன. நான் அதைக் கவனிக்காமல் அமைதியாக வரவும், அமித்து, எச்சொ, பாரேன், மொம்ம என்றாள். நான் அவளுக்கு ஆச்சரியத்தை தர நினைத்தேன். ஆனால் அமித்துவின் பேச்சில் நான் ஆச்சரியத்தில் விளிம்பில்....

காலையில் குப்பை வண்டியின் மணி சத்தம் கேட்டால், உடனே, தாத்தா வாயேன், உப்ப ண்டி என்கிறாள். இது போலவே பூக்காரர் வந்தாலும், பூ, பூ என்று மொழியப்படுகிறது.

ஹரி (நாத்தனார் மகன்), கார்த்தி - நாங்கள் சில சமயங்களில் அவர்கள் இருவரையும் அப்படிக்கூப்பிடுவோம். அதைக்கவனித்த அமித்து இருவரையுமே, அப்பு என்றுதான் கூப்பிடுகிறாள். அப்பு, வா, க்காரு என்கிறாள். ஆனால் அவர்கள் விளையாடும் பொம்மைகள்தான் இவளுக்கும் வேண்டும் என்று கத்தும்போதுதான் சமாதானங்கள் கூட சமாதானமாகிவிடுகிறது. அமித்துவின் அலறல் அடங்கமறுக்கிறது.
வர்ஷினிமா... ப்ளீஸ். வால்யூம் கொஞ்சம் கொறைச்சுக்கோம்மா...

உடை விஷயத்தில் அமித்துவின் செய்கை சொல்லி மாளாது. உதாரணமாய் இந்த ஃப்ராக் மாதிரி உள்ளே துணி வைத்து தைத்த உடைகள் போட்டாலே போதும். ம்மா, உத்துதுமா என்று சிணுங்க ஆரம்பித்து, குத்துது என்று ஃபைன் ட்யூன் செய்து, குத்துது , கேழ்ட்டே (கழட்டு) என்று அழ ஆரம்பித்துவிடுகிறாள். இது போன்ற உடைகளை அவளுக்கு இனிமேல் போட முடியமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
அதுவும் அந்த ஃப்ராக்கை போட்டது போட்டோவுக்காக மட்டுமே. ஆனால் அவள் விட்ட சவுண்டில் அலறி, வேறு உடைக்கு மாற்றிய பின்னர்தான் அவள் அழுகை நிற்கிறது. அதுவரை அமித்துவின் கண்களில் நயாகரா...

அமித்துவின் சமீபத்திய ஆச்சரியம், நண்பர் வாங்கித்தந்த பாடும், ஆடும் பார்பி பொம்மைதான், முதலில் அதைப் பார்த்த போது அய் என்றவள், அப்புறம் மொம்ம என்றாள். நான் அதன் பெயர் பார்பி பொம்மை என்றவுடன், இப்போதெல்லாம் பாபி என்றும் சொல்ல ஆரம்பித்திருக்கிறாள்.

சொல்ல சொல்ல இனிக்கிறது.... அமித்துவின் செய்கைகளை....