30 January 2009

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் (தொடர்பதிவு)

நம்ம ஊஞ்சல் பதிவர் தாரணி பிரியா (கோயமுத்தூர் அம்மணி) கூப்பிட்டனுப்பிச்சாங்க (டேக் பண்ணியிருந்தாங்க) ஒரு தொடர் பதிவெழுத வழக்கொழிந்த தமிழ் சொற்கள் இந்த தலைப்புல.

எனக்கு ரொம்ப சந்தேகமே வந்துருச்சி, தமிழ்மொழியே வழக்குல இருக்கான்னு.
ஏன்னா நடு செண்ட்டர், டிச்சு குழி, தண்ணி டேங்க், வாட்டர் பாட்டில், டிக்கெட், ரிப்பேர், சுவிட்ச், ஃபேன், பேப்பர், லெட்டர் இப்படின்னு ஏகப்பட்ட ஆங்கிலச் சொற்கள் தமிழாகிடுச்சா, எனக்கு இப்ப எது தமிழ்னே ஒரு டவுட்டு, ச்சே சந்தேகம்.

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் - பேசாம தமிழ் விக்கிபீடியா லின்க் கொடுத்துடலாமான்னு கூட யோசிச்சேன். சரிப்பட்டு வரல.
அப்புறம் ரெண்டு, மூணு நாளா மக்கள் தொலைக்காட்சியெல்லாம் பாத்தேன். அங்கதானே வழக்கொழிந்த தமிழ் சொற்கள் உபயோகிக்கறாங்க.

நடுவண் அரசு, அண்மைச் செய்திகள் இப்படின்னு நெறைய.

எனக்குத் தெரிஞ்ச வழக்கொழிந்த சொற்கள் சில:

தளை - கட்டு, கைவிலங்கு
தடாகம் - குளம்
அன்னம் - சாதம்
தொன்மை - பழமை
இலக்கம் - எண்
விகிதம், குமிழி, மகவு, திண்மை, தமக்கை, மைந்தன்

எனக்கு மிகவும் பிடித்த தமிழ் வார்த்தை : தோழி / தோழமை

அடப்போங்க, எவ்ளோ நேரமா யோசிக்கிறேன். ஒரு வார்த்தை கூட தென்பட மாட்டேங்குது. அவ்ளோதான் மக்கா. (வர வர நான் மிகவும் குழல் விளக்காக மாறிவருகிறேன், கூப்பிட்டனுப்பிச்சாக் கூட எழுத முடிவதில்லை)

நேத்து ஆபிஸ்ல, ச்சே அலுவலகத்துல மேலதிகாரிகள் ரெண்டு பேர் பேசிக்கிட்டாங்க. திரு. திருமா கேட்டிருக்காராம், “தை” தமிழ் வார்த்தை இல்லை, சமஸ்கிருதம். பின் எப்படி அந்த மாதத்தில் தமிழ் வருடப்பிறப்பு கொண்டாடலாம்னு.

எது எப்படியோங்க, தமிழே வழக்கொழிஞ்சு போனாக்கூட ஒரே ஒரு சொல் மட்டும் வழக்காடிகிட்டு இருக்கும். அது “போர்”.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வலையுலகம் என்ற நல்ல நோக்கில், கீழ்கண்ட மூவரை தொடர்பதிவிட ஆணை, கட்டளை இல்லை மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன்.

1. பப்புவின் ஆச்சி
2. என் வானம் அமுதா
3. கண்ணாடி ஜீவன்

27 January 2009

தீராச்சோகம்

சிலவற்றை எழுதும் முன் நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது. இந்தப் பதிவு எழுதும் முன்னும்...

இந்தப் பதிவு எனது சொந்த சோகம், அதை இங்கு பகிர்ந்துகொள்ளவேண்டிய நோக்கம் ஒன்றே ஒன்றுதான். எங்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்பு வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதுதான்.

இழப்பைப் பற்றி சொல்வதானால்: அவர் குடித்த குடி, இறுதியில் அவர்
“குடி”யையே கெடுத்தது.

மஞ்சள் காமாலையினால் ஏற்பட்ட லிவர் ப்ராப்ளத்தை சரி செய்ய ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டிருக்கும் சில நாட்களிலேயே அவர் உட்கொண்ட ஆல்கஹால் அவரையே அழித்துவிட்டது. எதிர்பாராத திடீர் இழப்பு.

அவர் கைப்பிடித்து நடந்த நாட்கள் இன்னும் பசுமையாய். ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து எனக்கான கடமைகளை நிறைவேற்றினார். நான், எனது, என்ற தோன்றல்கள் என்னிடையே ஏற்படும்வரை அவருக்கும், எனக்குமான உறவு நண்பர்களைப் போன்றே இருந்தது.

குடிப்பதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி அறிந்தும், எடுத்துச்சொல்லியும், அதனை அவர் ஏற்றுக்கொண்ட போதும் அவரைப் பாடாய்படுத்தியது அவருக்கு உண்டாக்கப்பட்ட குடிப்பழக்கம்.

சிப், சிப்பாக ஆரம்பித்து, பெக், பெக்காக தொடர்ந்து, பாட்டில் பாட்டிலாக விழுங்கியது, இறுதியில் அவரையே முழுங்கி விட்டது.

நிற்கும் போதும், நடக்கும் போதும், உறங்கும் போதும் அவரின் நினைவலைகள் நீங்காமல், இறுதியாய் அவர் பேசிய பேச்சு, அவரின் செயல் என சொல்லி சொல்லி மாளாத நினைவுக்கோர்வைகள்.


டி.வி.யில் மது அருந்தும் காட்சி வரும்போது, இப்போதெல்லாம் மது உடல் நலத்திற்கு கேடு என்று போடுகிறார்கள். இதைப் பார்க்கும் போது மிக இயல்பாக கடந்து விடுகிறேன். ஏன் என்றால் மதுப் புட்டியின் மீதே ”வீட்டிற்கும், நாட்டிற்கும், உடல் நலத்திற்கு கேடு” என்று அச்சடித்திருக்கும்போதே, ஆயிரம் ஆயிரம் பேர்கள் அதனை அருந்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆயிரம் பேரில் படிக்காதவர்கள் 500 பேர் இருந்தால், படித்தவர்கள் அதற்கு சமமாய் இருப்பார்கள் அல்லவா. அவர்களைக் கூட இந்த வாசகம் பாதித்திருக்காதா.

ஒருவர் குடிப்பது அவருக்கு இன்பமாக இருக்கிறது, ஆனால் அவரின் சுற்றத்திற்கு குறிப்பாய் மனைவி, மக்களுக்கு தீராச் சோகம். இதனை அறிந்த ஆண் மக்கள் குடிப்பதுதான் வேதனை தரும் விஷயம்.

நாளை முதல் குடிக்க மாட்டேன், இது சத்தியமடி தங்கம் - இது
சத்தியமாகவே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

இழப்பை எதிர்நோக்க அவர்கள் இருக்கமாட்டார்கள், இழந்தவர்களாய் அவர்கள் இருக்கும்போதுதான் அதனருமைத் தெரியும். உங்களிடம் குடிப்பழக்கம் இருக்குமாயின் குடிப்பதற்கு முன், உங்கள் மனைவியையோ, குழந்தையோ ஒரு தரம் கண் முன் நிறுத்துங்கள்.
நண்பர்களுக்காகவென்றும், சந்தோசத்தை கொண்டாடவும், கவலையை மறக்கவும், உடல் வலி மறக்க என குடிக்கத்தான் எவ்வளவு காரணங்கள் இருக்கிறது ஒருவருக்கு.
ஆனால் அதனை மறப்பதற்கு ஒரே ஒரு காரணம் போதும், அது நீங்கள் யாருக்காக உங்களை உற்சாகமாக வைத்திருக்கிறீர்களோ, யாருக்காக உடல்வலிக்க உழைக்கிறீர்களோ, யாருக்காக கவலைப்படுகிறீர்களோ, அவர்களை மிகச் சீக்கிரமே முற்றிலுமாக இழக்க நேரிடும் என்பதே. உங்களின் இச்செயலால் உங்கள் குடும்பத்தினர் குடிக்க நேர்ந்தால் ????????


ஞாயிறு இரவு எஸ்.ராவின் “உறுபசி” நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். 30 பக்கங்கள் மேல் எனக்கு அதில் மனம் செல்லவில்லை. இன்னதென்று சொல்லமுடியா ஒரு இனம்புரியா உணர்வு. புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். உறுபசியின் கதை நாயகன் இறப்பே, அதனை மேற்கொண்டு நண்பர்களிடையே அந்த நாயகனைப் பற்றி எழும் நினைவுகளே கதையின் போக்கு.
கதைநாயகனின் பெயர்
சம்பத். எனது மாமாவின் பெயரும் அதே. அவர் இறந்தது திங்கள்கிழமை.


இழப்பை எனக்கு முன்பே உணர்த்த நினைத்திருக்கிறார் கடவுள். கடைசியில் அது நடந்தே முடிந்துவிட்டது. அவரின் விதி முடிந்தது, ஆனால் அவரை இழந்து தவிப்போரின் கதி - ?.

நாம் மிகவும் நேசிக்கும் நமது உற்றத்தையும், சுற்றத்தையும் பாதிக்கும் “குடி”யை குடிக்கத்தான் வேண்டுமா, பொருளாதாரம் குறைந்தால் கூட குடும்பம் நடத்திவிடலாம், ஆனால் பொருளுக்கே ஆதாரமாக, ஆணிவேராக இருக்கும் குடும்பத்தலைவன் இழந்தால், குடும்பம் என்ற அமைப்பே குலைய நேரிடும்.
எய்ட்ஸை விடக் கொடுமையான இந்த குடிப்பழக்கத்தால் நம்மில் பலர் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ பாதிக்கப்பட்டிருப்போம்.
மருத்துவத்தால் சரி செய்ய முடியா நோய்கள் வந்து இழப்பு நேர்வது ஒரு பக்கம் ஏற்படுவது ஒருபக்கம் இருந்தாலும், இறைவன் கொடுத்த இந்த உயிர் சுமக்கும் உடலை, ஏன் தீண்டா திரவத்தை உட்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க வேண்டும்.


தோழமைக்கு உரியோர்களே யோசியுங்கள்.

16 January 2009

புழுக்கள்

புழுக்கள்

பச்சையாய்
நீலமாய்
வெள்ளையாய்
புழுக்கள்

நெளியும் விதத்தை
பார்த்தவுடனே
அருவெறுப்புடன்
அடுத்த நிமிடம்
அடித்துப் போடத்தான்
தோன்றுகிறது

எறும்பை கொன்றால்
ஏற்படும் குற்ற உணர்வுகூட
புழுக்களை கொன்றால்
வருவதில்லை

ஆயினும்
முசுமுசுக்கை இலை வைத்து
பட்டுப்புழு வளர்த்தாகிறது
நெருப்பை வைத்து
கம்பளிப்பூச்சை கொன்றாகிறது

அட!
புழு, பூச்சிலும்
என்னவொரு
மனிதப் பெருந்தன்மை.


....ம்....
வார்த்தை சிதறலில்
தொடங்கிய
மௌனத்தை
மேலும்
தொடரச்செய்கிறது
...ம்.......
என்னும்
ஒற்றைச்சொல்


இடி
எதிரே பார்த்து
வரும்போது
எதிர்பாராமல்

எதிர்பாராமல்
வரும்போது
எதிர்பார்த்தே

எப்படியாகிலும்
வந்த
நோக்கம்
நிறைவேறிவிடும்

எப்போதும்
வாய்வசம்
வைத்திருங்கள்
சில பல
கெட்ட வார்த்தைகளை

கூட்டங்களில்
இடிபடப்போகும்
நம்மை
குறி வைத்தே
வரும்
இடி(க்கும்)மன்னர்களுக்காக.


வல்கெனோ

அனைவரினுள்ளும்
தகதகத்துக் கொண்டிருக்கிறது
வன்ம லாவா
சந்தர்ப்பங்கள்
வாய்த்தால்
வெளிப்பட

பெரும்
சத்தத்தையும்
வெப்பத்தையும்
எதிர்நோக்கிக்கொண்டே
இயல்பாய்
இருப்பதைப் போல

எப்போதும்
இருக்கவேண்டியிருக்கிறது.

15 January 2009

பொருத்தமற்ற தலைப்பு

வழக்கம் போல இன்று காலை, அலுவலகத்துக்கு செல்ல, ரெயில்வே ஸ்டேசனுக்கு வந்தால், கூட்டமே இல்லை. இருக்கும் சொற்ப மக்களின் முகத்திலும் ஒரு பரபரப்பே இல்லை. மிகவும் இயல்பாக செல்போனில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

குறிப்பாய் மின்சார ரயிலில் கூட்டமே இல்லை. எல்லா சீட்டும் காலியாகத்தான் இருந்தது. கூட்ட நாளில் இடுக்கி அடித்துக்கொண்டு, மூன்று பேர் வசதியாக அமரும் இருக்கையில் இடுக்கி அடித்துக்கொண்டு நான்காக அமர்ந்திருக்கும் இருக்கைகள் எல்லாம் இன்று தன்னை முழுமையாக வெளிப்படுத்திக்கொண்டு, தன் பங்குக்கு அதுவும் காற்று வாங்கிக்கொண்டிருந்தது.
எனக்கு பிடித்தாற் போல சன்னல் ஓர இருக்கை, எதிரே யாருமில்லாததால் எதிர் இருக்கையில் கால் நீட்டி, அழகிய கண்ணே, உறவுகள் நீயே என்ற பாட்டை காதில் பொருத்திக்கொண்டு, இன்னமும் ஈரம் வடியாத காற்றை முகத்தில் வாங்கிக்கொண்டு பயணித்தேன். அப்படியே அந்த இரயிலோடவே போய்விடலாமா என்று தோன்றியது என் நிறுத்தம் வந்தது.
இது போல் எப்பவாவது அற்ப சொற்பமாய் நிகழ்கையில் அப்படியே ட்ரெயினோடு போய் திரும்பி வருவோமா என்று எண்ணியதுண்டு. மனம் நினைத்துக்கொண்டிருக்கும் போதே, கால்கள் இயல்பாய் எழுந்துவிடும்.

இது மாதிரி நமக்கே நமக்கான தருணங்கள் சில நேரங்கள் மட்டுமே வாய்க்கும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தைகள் என்று நிறைய இருந்தாலும், நமக்கென்று பிடித்தமான சில தருணங்கள் இருக்கும், அது நமக்கு இணையானவர்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும், நம் மனதுக்கு மிகவும் நெருக்கமான நிகழ்வுகள் அவை.

அலைகள் மோதும் கடற்கரையில் நடப்பதும்,பேசுவதும், விண்டோ ஷாப்பிங் செய்வது, 10 ரூபாய் பெறாத ஒரு பொருளுக்கு 20 ரூபாய் விலை வைத்து சொல்லும் தி.நகரின் நடைபாதையோர வியாபாரிகளிடம் பேரம் பேசுவது, பிடித்த புத்தகத்தோடு ஊறிப் போய், ஏதோ ஒரு உலகுக்கு போய் திரும்பி வருவது, சூடான காபியை, ரசித்து ருசித்து, எதையதையோ யோசித்துக்கொண்டு, வெளிக்காற்று வாங்கிக்கொண்டே குடிப்பது (காப்பியை) என அவரவர் ருசிக்கேற்றார் போல இந்த லிஸ்ட் நீளும்.

காலையில் ஒரு பிடித்தமான நிகழ்வு நடந்து விட்டதும், டொய்ங்ங்க்க்க் என கொசுவர்த்தி சுற்ற ஆரம்பித்து விட்டது மனது.

அலைகள் வந்து கால் நனைக்க, கால் விரல்களில் மண் குறுகுறுக்க அப்படியே காலார பிடித்தமானவர்களோடு நடந்து போவது. நானும் என் தோழியும் மெட்ராஸ் யூனிவர்சிடி போகும் போது, அண்ணா சமாதியில் ஆரம்பித்து, நினைத்தையெல்லாம் பேசிக்கொண்டு, அப்படியே அலையோரம் நடந்து வந்து, காந்தி சிலையில் முடிப்போம். அங்கிருந்து வீடு வரைக்கும் நடையே.

பாலகுமாரன் நாவலை கையில் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தால், வெளியில் வெட்டி மடிந்தாலும் தெரியாது. நாவலை முடித்து விட்டு வீட்டுக்கு வெளியில் வந்து பார்த்தால் இருட்டிப் போயிருக்கும். ஏதோ ஒரு புது உலகில் இருந்து, வெளியேறி வந்தாற் போன்ற ஒரு பிரமை நம்மை ஆட்கொண்டிருக்கும். அந்த கதாபாத்திரங்களையே சிந்திக்க துவங்கியிருக்கும் மனம், கதை முடிந்தாலும்.
இதுபோல் நிறைய முறை நடந்து, என் அம்மா மற்றும் அக்காவிடம் திட்டு, உதை எல்லாம் வாங்கியதுண்டு.

அப்புறம் விண்டோ ஷாப்பிங், ரொம்ப பேருக்கு பிடிக்கும். உங்க தங்கமணிங்களை கேட்டுப் பாருங்க. இது மாதிரி ஷாப்பிங்க் போவதற்கு ரங்கமணிகளையெல்லாம் அழைத்துக்கொண்டு போனால் அவ்ளோதான். பிடிக்குதோ பிடிக்கலையோ வாங்குகிறோமோ இல்லையோ சும்மாவாச்சும் உள்ளே போய் சுற்றிப்பார்த்து விட்டு வரவேண்டும். ஆனால் இதற்கு தோதுபட்டாற் போல நண்பர்கள் அமைவது ரொம்பக் கஷ்டம்.

அப்புறம் கோயில், நான் சொல்றது நம்ம வீடு மாதிரியே எட்டுக்கு எட்டு இருக்குற கோயில் இல்லை. நல்ல விசாலமா, பெரிய பிரகாரங்களோடு இருக்கும் கோவில்கள். சாமி கும்பிடுறோமோ இல்லையோ, அங்கே போய் அந்தப் ப்ரகாரங்களின் கற்தரையில் உட்கார்ந்தாலே போதும். அப்படியே ஏதோ ஒரு அமைதி நம்மை உள்வாங்கிக்கொள்ளும். இதற்கும் இணையான ஆள் தோதுபட்டால் போதும். எனக்கு கோவில் விஷயத்தில் பிடிபட்டவள், பாலஜோதிதான். என்னை விட 5 வயது சின்னவள், என் அக்கா மகளின் தோழி. எனக்கு தோழியாகி விட்டு, நாங்கள் வெளியே புறப்பட்டால் அது கோவிலாகத்தான் இருக்கும் என்பது எழுதப்படாத விதி.

நமக்குப் பிடித்த பாடல்களை கேட்பதும், எழுத்துக்களைப் படிப்பதும், அதைப் பற்றி பேசி சிலாகித்துக்கொள்ள ஒத்த உணர்வுகளைவுடைய நண்பர்கள் வாய்ப்பதும் என மிகவும் அரிதான நிகழ்வுகள் அவை.

இந்த இயல்பையெல்லாம் மீண்டும் கொத்திக்கொள்ள மனது துடித்தாலும், இப்போதைய இருப்புகள் அதுக்கெல்லாம் தோதுபட்டாற் போல வாய்ப்பதில்லை நம்மில் நிறைய பேருக்கு.

எங்கு சென்றாலும், குழந்தையின் நினைவை சுமந்துகொள்வதால், 6 மணி அடித்தவுடன் உள்ளே பல்பு எரிந்துவிடும், இயல்பாய் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டுவிடும்.
6 மணிக்கு மேல் ஏதாவது அலுவலக நிகழ்ச்சியோ, தவிர்க்க முடியாதவர்களின் கல்யாண வரவேற்போ, இல்லை இன்ன பிற நிகழ்ச்சிகளோ, எதோடும் மனது ஒட்டாமல் அரைகுறையாய் அமர்ந்துவிட்டு, சாப்பிடக் கூட தோன்றாமல், தெரிந்தவர்களை, பிடித்தமானவர்களைப் பார்த்தாலும் ஒரு ஹாய் ஹலோ சொல்லிவிட்டு ஓடிப்போகத்தான் துடிக்கிறது.


நமக்கு பிடித்தமான நிகழ்வுகளில் நாம் மட்டும் ஒன்றிப்போய் பின் அதிலிருந்து விடும்படும்போது ஏதோ ஒரு குற்ற உணர்வோடு உடன் படவேண்டியிருக்கிறது, நம்முடைய குழந்தைகளை, இணையானவர்களை அந்தக்கணங்கள் நிராகரித்ததால் அப்படி ஒரு குற்ற உணர்வு வருகிறதா என்று தெரியவில்லை.
ச்சே எவ்வளவு சுயநலமா இருந்திருக்கோம் என்று தோன்றி அதற்காக பிராயச்சித்தம் எல்லாம் செய்யவேண்டியிருக்கிறது. இத்தனைக்கும் அது ஒரு அல்பமான நிகழ்வாய்தான் இருக்கும், அல்பமான நிகழ்வுகளைத்தானே நம் பொருட்டு நிகழ்ந்தால் அதை அற்புதம் என்று கொண்டாடுகிறோம்.
செயற்கைத்தனமிகுந்த, வாழ்தலின் பொருட்டு நம்மையே தொலைத்த, இதையே இயல்பென்று சொல்லித் திரியும் நம் வாழ்வில் எப்போதாவது துழாவி நமக்கான கணங்களை தேடி எடுத்துக்கொண்டாலும், அதுவும் ஒரு குற்ற உணர்ச்சியோடு முடிவது எவ்வளவு அபத்தமாய் போய்விடுகிறது.
இசையும் எழுத்துமாய இனிமையாகவே இருந்தாலும், எப்போதும் அசை போட்ட பாடலாகவே இருந்தாலும், காலப்போக்கில் மறந்த பாடல்களைப் போல.

09 January 2009

ச்சுக்கா க்கா... ஆலி,

அமித்துவுக்கு இப்போது விளம்பரங்கள் பார்க்க பிடிக்கிறது,
"MOTO LIFE Engine oil" விசிலடிக்கும் தாத்தா அவளை கவர்ந்துவிட்டார் போலும், கைதட்டி வரவேற்கிறாள்.
அப்புறம் குழந்தைகள் வரும் விளம்பரங்களும் அவளை கவருகின்றன, கண் சிமிட்டாமல் பார்க்கிறாள்.
சில சமயம், குழந்தைகள் அழுவது போல் சீரியலிலோ, படத்திலோ ஏதோ காட்சி ஓடினால், அதைப் பார்க்காமலே, தானும் அழுவதைப் போல மிமிக்ரி செய்கிறாள். நாம் கவனித்தால் சிரிக்கிறாள். வர்ஷினி எப்படி அழுவா, என்றாள் அழுது காண்பித்து விட்டு சிரிக்கிறாள்.
அதே போல் யாராவது இருமினாலோ, தொண்டையை கனைத்தாலோ, அதே போல் தானும் செய்கிறாள், அவர்களைப் பார்க்காமலே.

கழுத்தை கட்டிப்பிடித்து தூங்குகிறாள், முகத்தோடு முகம் வைத்து, ஏதேதோ கொஞ்சுகிறாள். முத்தம் கொடுப்பது போல், கடித்து வைத்துவிட்டு, நாம் கத்தினால், சிரிக்கிறாள்.
ஏதாவது பொம்மையை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, ஊ, ஊ என்று நம்மை பயமுறுத்துகிறாள். நாம் பயப்படுவது போல் ஆக்‌ஷன் செய்தால், அவளுக்கும் இன்னமும் மகிழ்ச்சியாகிவிடுகிறது.

அவளுக்கென்று வாங்கிய குட்டி சைக்கிளின் மீது ஏதாவது துணி வைத்திருந்தால், தூக்கி தூர போட்டுவிடுகிறாள். ரொம்ப பத்திரமா பாதுகாத்து வைத்துக்கொள்வாள் போல் அவளின் பொருட்களை.

A,B,C,D என்று பட்டன் ப்ரஸ் செய்தால், மியூசிக்கோடு ஒலிக்கும் ஒரு பியானோ வடிவ pad இருக்கிறது. அதை வைத்து சொல்லிக்கொடுத்தால், அந்த பட்டனை மட்டும் அழுத்தி விட்டு ஓய்ந்துவிடுகிறாள்.
ஆனால் நாம் ஏ, பி, சி, டி, pad எங்கே, என்றால் அதை தேடி எடுத்து தருகிறாள்.

ரோடில் கார் செல்லும் போது கார் என்று சொல்லி விரல் நீட்டுகிறாள். கார் என்னும் வார்த்தை ஈஸியா வாயில் நுழைகிறது. (தாயுமானவர் இதை நோட் பண்ணாரான்னு தெரியலை)

பொங்கலுக்கு ட்ரஸ் வேணுமா, வேகமாக வேண்டாம் என்று தலையாட்டினாள், புரிந்து சொன்னாளா, புரியாமல் சொன்னாளா தெரியவில்லை, தாயுமானவர் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு, அவ வேணாம்னாலும் நீ விடமாட்டியே என்ற வாசகங்களோடு.

ஏதோ தலையை ஆட்டிக்கொண்டே, ச்சுக்கா க்கா... ஆலி, த்த்துக் கோழீஈஈஈ, ஆஆஆ என்று சொல்லும்போது, ஒன்றும் புரியா பின் நவீனத்துவ கவிதை மாதிரியே இருக்கிறது.
வழக்கம் போல சிரித்து வைக்கிறோம், அமித்துவின் ஆக்‌ஷன், ரியாக்‌ஷன் எல்லாவற்றிற்கும்.

இயந்திரத்தனமான வாழ்க்கையினூடே, ஒளிந்திருக்கும் நமக்கான சில தருணங்களை நாம் உணரச்செய்ய கடவுள் உண்டாக்கிய படைப்புதான் குழந்தையோ!

07 January 2009

பட்டாம்பூச்சி விருது

நண்பர் திரு. அதிரை ஜமால் (நட்புடன் ஜமாலாகிவிட்டார் இப்போது), எனது எழுத்துக்களால் கவரப்பட்டு (!?!) பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்கிறார்.

இந்த வருடத்தின் முதல் விருது, இந்த வயது வரைக்கும் இதுவே எனக்கு கிடைத்த முதல் விருது. நன்றி ஜமால்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே! உடன் என் மகளுக்கும் ( அவ பேரை வெச்சு தானே கடையை நடத்திட்டு வரேன்) ஏதோ மொதலுக்கு மோசமில்லாம ஓடிட்டு இருக்கு.

இனிமே இப்படியே ஓட உங்களோட ஆதரவு தேவை. ஏதோ பார்த்து செய்யுங்க மக்கா.

இதை நான் ஏழு பேருக்கு பகிர்ந்தளிக்கவேண்டும், இது இந்த விருதின் விதிமுறைகளில் ஒன்று.

இந்த விதிமுறையை மீறாமல் (ஆஹா, இந்த விதிமுறையையாவது ஃபாலோ செய்யறேனே), இப்போது பட்டாம்பூச்சி விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.

Now, the award goes to



the one and only (இந்தப் பேருல இவங்க ஒருத்தர்தான் இருக்கமுடியும், அப்புறம் என்ன ஒன் அண்ட் ஒன்லி, டூ அண்ட் த்ரீலி அப்படின்னு, உனக்குதான் பீட்டர்னா அலர்ஜியாச்சே, அப்புறம் எதுக்கு இந்த வெட்டி பந்தா)

1. சந்தனமுல்லை (ஆச்சியைப் பத்தி நான் அதிகம் சொல்லவேண்டியதில்லை, பப்பு பேரவையை நடத்தும் அத்தனை பேருக்கும் இவர் அத்துப்படி)

2. ஆயில்ஸ் - அண்ணாச்சிக்கு அறிமுகமே தேவையில்லை. ஆயிரம் கோடி அன்பு நெஞ்சங்களில் நிறைந்தவர் (இது ஒரு எதுகை மோனைக்காக எழுதினேன், 1000ம் எல்லாம் இல்ல)
(கத்தாரின் கருப்பு சிங்கமே, தங்கைகளின் தங்கமே, தமிழகம் நீ இல்லாமல் தவிக்கிறது, பத்திரமாக வந்து சேருங்க)

3. கண்ணாடி - ஜீவன்( இவரைப் பத்தியும் உங்களுக்கு தெரியும், கொஞ்சமே எழுதினாலும், நிறைவா எழுதுவார்.
(தோட்டம் வைத்து “தண்ணி” ஊத்துவதில் ஆர்வம் அதிகம் என்று இப்பதான் தெரிந்துகொண்டேன்)

4. என் வானம் - அமுதா - (அம்மணியின் எழுத்துக்களும் அசத்தல் ரகமே, தன் பெண்களைப்பற்றியும், பொதுவாகவும் எழுதித் தள்ளுவார். திண்ணையின் கதை செம)

5. பொலம்பல்கள் - எஸ்.கே, எப்பவாச்சும் எழுதுனாலும், மெசெஜோட எழுதிடுவார்.

6. உமாஷக்தி - எழுத்தாளர், அறிமுகமே தேவையில்லை - இவரின் எழுத்துக்கு

7. என் தேவதையின் பெயர் மதி - அவ்வளவாய் அடையாளம் கண்டுகொள்ளப்படாத கவிஞர்.





(குறிப்பு: விருதை ப்ரேம் போட்டு, உங்க ப்லாக்ல மாட்டிடுங்க.)

அன்றில் தாய்கள்

அடுத்தவர் பொறுப்பில்
தம் குழந்தையை
விட்டு விட்டு
அலுவலகம் செல்லும்
அனைத்து அம்மாக்களும்
நித்தம் பிரிவுக்கொடுமையை
அனுபவிக்கும்
அன்றில் அம்மாக்களே..

அன்றாட தேவைகளின்
கோடிட்ட இடங்களை
நிரப்புவதற்கு
தன் பங்கினை
இயன்றவரை செய்யும்
இவர்களிடம்
தன் குழந்தைகள்
குறித்தான
ஏக்கக் காய்ச்சல்
எப்போதும் இருக்கும்..

தன் குழந்தையின்
வாடிய முகமோ
துறு துறு கண்களோ
மழலையின் கொஞ்சலோ
அழுகையின் சத்தமோ
ஏதோ ஒன்று
உள்ளிருந்து
துளைத்துக் கொண்டும்
ஒலித்துக்கொண்டும்
இருக்கையில்,
தன்னிலை மீறி வரும்
விழிநீரை விலக்கிவிட்டு
வேதனைகளை ஒதுக்கிவைத்து
வேலைகளில் கவனம் செலுத்தும்
அத்தனை அம்மாக்களும்
பிரிவுத்துயரை
புரிந்தும், புரியாமலிருக்கும்
குழந்தைகளின்
நினைவுகளை
தற்காலிகமாக
ம(றை)றக்கும் அன்றில்களே

ஆறிப்போன சோற்றை
அவசரமாய் அள்ளி
விழுங்கும் போது
கூடவே விழுங்கப்படும்
தன் பிள்ளை
சாப்பிட்டிருக்குமோ
என்ற நினைவும்...

ஒப்பனைகளோடு
அமர்ந்து
உதடசைத்துக்கொண்டிருக்கும்
அலுவலக மீட்டிங்கின்
குரலெழுப்புதல்களிக்கிடையே,
சுவர்க்கடிகாரத்திடம்
சொல்லிக்கொண்டிருப்பார்கள்
இது
குழந்தை
பள்ளியிலிருந்து
திரும்பும் வேளையென..

மார்மேலும், தோள்மேலும்
இல்லை
நெஞ்சில் நினைவுகளால்
நிதமும் சுமக்கும்
இவர்களைனைவருக்கும்
பிள்ளை பெற்ற பிறகும்
பிரசவ வேதனைதான்
என்றுமே...

பொருளாதாரத்தை
பூர்த்தி செய்யும்
தாரமாக வாய்த்த
அன்றில் அம்மாக்கள்
அனைவருக்கும்
இந்த எழுத்து
சமர்ப்பணம்...

06 January 2009

பணத்தின் ருசி....

ஆயிரத்திற்குள் அடங்கும் நோட்டுக்குள் பர்ஸுக்குள் பத்திரமாய், அத்துடன் இன்னபிற கார்டுகள்.. வட்டி செலுத்த வாட்டமாய்...., தேவைகளையும், சில சமயம் தேவையற்றவைகளையும் நிரப்ப பொருளாதார சுதந்திரமும், தனி மனித உரிமையும் இருபாலருக்கும் இருக்கிறது. எதை எதையோ வாங்குகிறோம், உண்ண, உடுத்த, பார்க்க, படிக்க இப்படி ஏராளம்.
இருப்பினும் இந்த ருசி நாவில் ஒட்டவேயில்லை.

அழுது அடம்பிடித்து வாங்கிய கோடு போட்ட நோட்டில் இருக்கும் வாசமும், 50 பைசா வாடகை தந்து படித்த பழைய புத்தகமும் கொடுத்த வாசனை,
இன்னமும் நாசிகளில் நிரம்பியிருக்கிறது, நம் பணத்தில் நாம் விரும்பி, மற்றவர்கள் பரிந்துரை செய்து புத்தகங்கள் வாங்கினாலும், புத்தக வாசனை வரத்தான் செய்கிறது.
ஆனால் இன்னும் 20 வருடங்கள் கழித்து அப்புத்தகத்தை பார்க்கவோ, வாசிக்கவோ ஏன் நினைக்கவோ நேரிட்டால், நினைவுகளின் வாசம் நிரம்பி வழியுமா என்றால் அது சந்தேகம்தான்...

அம்மா திட்டிக் கொண்டே தரும் சில்லறைகளில் 10 பைசா தேன் மிட்டாய், தேங்காய் பிஸ்கேட், பால் ஐஸ் இப்படி ஏகப்பட்ட திண்பண்டங்களின் ஒன்றின் ருசி கூட,
இப்பொது நாம் விரும்பி போய் சாப்பிட்டாலும், இல்லை ட்ரீட் என்ற பேரில் நிரப்பி கொண்டாலும், அப்போது ருசித்தாலும். அடுத்த முறை அவ்விடத்தை கடக்க நேரும்போது, ஒரு ருசியும் தருவதில்லை.
கடந்தகாலத்தின் திண்பண்டங்கள் அடிநாவின் சுவை மொட்டுக்களில் ருசியை நிரப்பி சென்றதைப்போலவே நினைவையும் நிரப்பி சென்றிருக்கிறது.
அஞ்சறைப் பெட்டியில், முந்தானை முடிச்சில், சாமி ஸ்டாண்டின் இடுக்கில், இப்படி எங்கிருந்தாவது துழாவி, வசவோடு சேர்த்துத் தரும் சில்லறைகள் தந்த இதத்தை, இப்போது ATM-ல் எடுக்கும் புது நோட்டு தருவதில்லை.

விளம்பரங்களால் கவரப்பட்டு, அங்கேயே அப்போதே போட்டுப் பார்த்து, நினைத்த நேரத்தில், பிடித்த வண்ணத்தில், பிடித்த விதத்தில் வித விதமாய் உடைகள், வருடத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ எடுத்துத் தரும் பூப் போட்ட பச்சைப் பாவாடை, நீல ட்ரவுசர் (அனேகம் பேருக்கு பரிச்சயப்பட்டிருக்கும்) தந்த மகிழ்ச்சி இணையே இல்லை.
ஒவ்வொரு முறையும் புதுசு எடுக்கும் போதோ, உடுத்தும் போதோ, என் முதல் பச்சைப் பூப் போட்ட பாவாடையும், கருப்பில் ரோஸ் பூப் போட்ட கவுனும் மறக்க முடிவதே இல்லை. நன்றாக நினைவு தெரியும் வரையில் பொங்கலுக்கு மட்டுமே புத்தாடைகள்.
நம் விருப்பத்திற்கு ஒவ்வாத நிறமாய் இருப்பினும் சரி, கட்டாயத்தின் பேரில் அணிந்தாலும் சரி, அந்த நிறங்களும், உடைகளும் தந்த நினைவுகள், நாம் இப்போது ஆயிரம் ஆயிரமாய் கொட்டி கொடுத்து எடுக்கும் உடைகளில் ஒரு போதும் தெரிவதில்லை. பத்தோடு பதினொன்றாய் இதுவும் ஒரு ஆடையாக அணிகிறோம் அவ்வளவே...
அக்காவின் பட்டுப் புடவையில் பாவாடை தாவணி அணிந்த போது (எனக்கு நீண்ட பாவாடை, என் அக்கா பெண்ணிற்கு அதில் குட்டி பாவாடை, சட்டை) பழையது தான் என்றாலும் அது தந்த பரவசம் போல், பீரோவில் தூங்கும் கல்யாண பட்டுப்புடவைகள் கூட தந்ததில்லை...

ஒன்றுமில்லா மாதக் கடைசியின் மிளகாய் கிள்ளி போட்ட சாம்பாரின் சுவை, இப்போது பருப்பை அள்ளிக் கொட்டி செய்தாலும் வருவதேயில்லை..

வெள்ளிக்கிழமை “ஒலியும் ஒளியும்”, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகிய திரைமலர், காலையில் போடும் டாம் அண்ட் ஜெர்ரி, சார்லி சாப்ளின், லாரல் அண்ட் ஹார்டி, பழுதடைந்த பழைய டிவியை தட்டி தட்டிப் நிகழ்ச்சிகளைப் பார்த்த சுகம், என்னதான் அவற்றை மீண்டும் டிவிடியில் பார்த்தாலும் நிறைவைத்தருவதில்லை.
போட்டிப்போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகள் தந்தாலும், ஒரு ஒளியும், ஒலியும் தந்த நிறைவினை, எந்த நிகழ்ச்சியும் தந்ததேயில்லை எனக்கு. அரை ஆடையும், குறைத் தமிழுமாய், ஆண்களும் பெண்களும், பிடித்த பாடல்களையே மீண்டும் மீண்டும்................. காணக் கிடைத்தாலும், ஒலியும் ஒளியும் தந்த நினைவலைகள்...... இன்னமும் பசுமைதான்..

இப்படி ஏகமான கொசுவத்திகள் எல்லாருக்கும் இருக்கும், நான் சொல்ல விழைவது இதுவே...

பணத்தின் பிடியில் நாம் ஏகமானதை நமக்கும், நம் குழந்தைகளுக்கும் தேர்வு செய்கிறோம், வாங்கி கொடுக்கிறோம், சிலது அவர்களுக்கு அக்கணம் பிடித்திருக்கிறது, நமக்கும் அவ்வாறே.
அதற்கப்புறம் அதுவும் ஒரு பொருளாகிவிடுகிறது அவ்வளவே. உயிர்ப்பில்லை.

நீங்கள் தேர்வு செய்யும் எல்லாவற்றிற்கும் ஒரு உயிர்ப்பு இருக்கவேண்டுமா, அதை உங்கள் நினைவலைகளோடு இசையுங்கள்,
வாங்கும் எல்லாப் பொருட்களுக்கும் ஒரு காரணம் கண்டுபிடியுங்கள், உணவுகளுக்கும் கூட.
பொருட்கள் வீணாகினாலும், நினைவுகளை சேமித்து வையுங்கள், இதை, இப்போது, இதற்காக, எடுத்தோம் என்ற நினைவுகள் இருக்கட்டும்,

சில சமயம் நம்மில் பலருக்கு, தான் வாங்கிய பொருட்களாய் இருந்தாலும், இதை எப்போ எடுத்தோம்ம்,, எங்க வாங்கினோம் என்ற எண்ணம் எழக்கூடும்..

மதிப்பு 10 ரூபாயோ, 10 ஆயிரம் ரூபாயோ, அப்பொருட்களோடு நினைவுகளையும் முடிச்சிட்டு வையுங்கள். நினைவுகளுக்கு என்றுமே மக்கும் சக்தியில்லை..
பணத்தை டெப்பாஸிட் செய்து, வட்டியோடு சேர்த்து திரும்பி வந்த அதனை செலவழிக்கும் போது, நினைவினை மட்டும் நிறுத்தி வையுங்கள்.

குறைந்த பட்சம் பதிவிடவாவது, இல்லை, அதிகபட்சம் முதுமையின் கடைசி நாட்களின் தனிமையில் அசை போட்டு மென்று திங்க, உங்கள் நினைவுகளாவது உதவும்.