27 January 2009

தீராச்சோகம்

சிலவற்றை எழுதும் முன் நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது. இந்தப் பதிவு எழுதும் முன்னும்...

இந்தப் பதிவு எனது சொந்த சோகம், அதை இங்கு பகிர்ந்துகொள்ளவேண்டிய நோக்கம் ஒன்றே ஒன்றுதான். எங்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்பு வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதுதான்.

இழப்பைப் பற்றி சொல்வதானால்: அவர் குடித்த குடி, இறுதியில் அவர்
“குடி”யையே கெடுத்தது.

மஞ்சள் காமாலையினால் ஏற்பட்ட லிவர் ப்ராப்ளத்தை சரி செய்ய ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டிருக்கும் சில நாட்களிலேயே அவர் உட்கொண்ட ஆல்கஹால் அவரையே அழித்துவிட்டது. எதிர்பாராத திடீர் இழப்பு.

அவர் கைப்பிடித்து நடந்த நாட்கள் இன்னும் பசுமையாய். ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து எனக்கான கடமைகளை நிறைவேற்றினார். நான், எனது, என்ற தோன்றல்கள் என்னிடையே ஏற்படும்வரை அவருக்கும், எனக்குமான உறவு நண்பர்களைப் போன்றே இருந்தது.

குடிப்பதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி அறிந்தும், எடுத்துச்சொல்லியும், அதனை அவர் ஏற்றுக்கொண்ட போதும் அவரைப் பாடாய்படுத்தியது அவருக்கு உண்டாக்கப்பட்ட குடிப்பழக்கம்.

சிப், சிப்பாக ஆரம்பித்து, பெக், பெக்காக தொடர்ந்து, பாட்டில் பாட்டிலாக விழுங்கியது, இறுதியில் அவரையே முழுங்கி விட்டது.

நிற்கும் போதும், நடக்கும் போதும், உறங்கும் போதும் அவரின் நினைவலைகள் நீங்காமல், இறுதியாய் அவர் பேசிய பேச்சு, அவரின் செயல் என சொல்லி சொல்லி மாளாத நினைவுக்கோர்வைகள்.


டி.வி.யில் மது அருந்தும் காட்சி வரும்போது, இப்போதெல்லாம் மது உடல் நலத்திற்கு கேடு என்று போடுகிறார்கள். இதைப் பார்க்கும் போது மிக இயல்பாக கடந்து விடுகிறேன். ஏன் என்றால் மதுப் புட்டியின் மீதே ”வீட்டிற்கும், நாட்டிற்கும், உடல் நலத்திற்கு கேடு” என்று அச்சடித்திருக்கும்போதே, ஆயிரம் ஆயிரம் பேர்கள் அதனை அருந்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆயிரம் பேரில் படிக்காதவர்கள் 500 பேர் இருந்தால், படித்தவர்கள் அதற்கு சமமாய் இருப்பார்கள் அல்லவா. அவர்களைக் கூட இந்த வாசகம் பாதித்திருக்காதா.

ஒருவர் குடிப்பது அவருக்கு இன்பமாக இருக்கிறது, ஆனால் அவரின் சுற்றத்திற்கு குறிப்பாய் மனைவி, மக்களுக்கு தீராச் சோகம். இதனை அறிந்த ஆண் மக்கள் குடிப்பதுதான் வேதனை தரும் விஷயம்.

நாளை முதல் குடிக்க மாட்டேன், இது சத்தியமடி தங்கம் - இது
சத்தியமாகவே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

இழப்பை எதிர்நோக்க அவர்கள் இருக்கமாட்டார்கள், இழந்தவர்களாய் அவர்கள் இருக்கும்போதுதான் அதனருமைத் தெரியும். உங்களிடம் குடிப்பழக்கம் இருக்குமாயின் குடிப்பதற்கு முன், உங்கள் மனைவியையோ, குழந்தையோ ஒரு தரம் கண் முன் நிறுத்துங்கள்.
நண்பர்களுக்காகவென்றும், சந்தோசத்தை கொண்டாடவும், கவலையை மறக்கவும், உடல் வலி மறக்க என குடிக்கத்தான் எவ்வளவு காரணங்கள் இருக்கிறது ஒருவருக்கு.
ஆனால் அதனை மறப்பதற்கு ஒரே ஒரு காரணம் போதும், அது நீங்கள் யாருக்காக உங்களை உற்சாகமாக வைத்திருக்கிறீர்களோ, யாருக்காக உடல்வலிக்க உழைக்கிறீர்களோ, யாருக்காக கவலைப்படுகிறீர்களோ, அவர்களை மிகச் சீக்கிரமே முற்றிலுமாக இழக்க நேரிடும் என்பதே. உங்களின் இச்செயலால் உங்கள் குடும்பத்தினர் குடிக்க நேர்ந்தால் ????????


ஞாயிறு இரவு எஸ்.ராவின் “உறுபசி” நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். 30 பக்கங்கள் மேல் எனக்கு அதில் மனம் செல்லவில்லை. இன்னதென்று சொல்லமுடியா ஒரு இனம்புரியா உணர்வு. புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். உறுபசியின் கதை நாயகன் இறப்பே, அதனை மேற்கொண்டு நண்பர்களிடையே அந்த நாயகனைப் பற்றி எழும் நினைவுகளே கதையின் போக்கு.
கதைநாயகனின் பெயர்
சம்பத். எனது மாமாவின் பெயரும் அதே. அவர் இறந்தது திங்கள்கிழமை.


இழப்பை எனக்கு முன்பே உணர்த்த நினைத்திருக்கிறார் கடவுள். கடைசியில் அது நடந்தே முடிந்துவிட்டது. அவரின் விதி முடிந்தது, ஆனால் அவரை இழந்து தவிப்போரின் கதி - ?.

நாம் மிகவும் நேசிக்கும் நமது உற்றத்தையும், சுற்றத்தையும் பாதிக்கும் “குடி”யை குடிக்கத்தான் வேண்டுமா, பொருளாதாரம் குறைந்தால் கூட குடும்பம் நடத்திவிடலாம், ஆனால் பொருளுக்கே ஆதாரமாக, ஆணிவேராக இருக்கும் குடும்பத்தலைவன் இழந்தால், குடும்பம் என்ற அமைப்பே குலைய நேரிடும்.
எய்ட்ஸை விடக் கொடுமையான இந்த குடிப்பழக்கத்தால் நம்மில் பலர் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ பாதிக்கப்பட்டிருப்போம்.
மருத்துவத்தால் சரி செய்ய முடியா நோய்கள் வந்து இழப்பு நேர்வது ஒரு பக்கம் ஏற்படுவது ஒருபக்கம் இருந்தாலும், இறைவன் கொடுத்த இந்த உயிர் சுமக்கும் உடலை, ஏன் தீண்டா திரவத்தை உட்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க வேண்டும்.


தோழமைக்கு உரியோர்களே யோசியுங்கள்.

41 comments:

Karthik said...

படிக்கும்போதே ரொம்ப கஷ்டமாக இருக்கு.
:(

அபுஅஃப்ஸர் said...

தீராச்சோகம்..

தலைப்பிலேயே ஒரு சோகம்

தேவையான ஒரு பதிப்பு

அபுஅஃப்ஸர் said...

//சிப், சிப்பாக ஆரம்பித்து, பெக், பெக்காக தொடர்ந்து, பாட்டில் பாட்டிலாக விழுங்கியது, இறுதியில் அவரையே முழுங்கி விட்டது//

வருந்த தக்க சோகம்

அபுஅஃப்ஸர் said...

//ஆயிரம் பேரில் படிக்காதவர்கள் 500 பேர் இருந்தால், படித்தவர்கள் அதற்கு சமமாய் இருப்பார்கள் அல்லவா.//

படித்தவர்கள் தான் அதிகமாக மது அருந்துவதாக கேள்வி..

அதற்கு ஒரு காரணம் வேறு.. சந்தோஷம், துக்கம், பார்ட்டி, இன்னும் பல.. அவர்கள் சொல்லும் காரணம்

அபுஅஃப்ஸர் said...

//இழப்பை எதிர்நோக்க அவர்கள் இருக்கமாட்டார்கள், இழந்தவர்களாய் அவர்கள் இருக்கும்போதுதான் அதனருமைத் தெரியும்.//

உண்மைதான்..
ஒவ்வொருவரும் நினைக்க வேண்டிய விடயம்

அபுஅஃப்ஸர் said...

//பொருளாதாரம் குறைந்தால் கூட குடும்பம் நடத்திவிடலாம், ஆனால் பொருளுக்கே ஆதாரமாக, ஆணிவேராக இருக்கும் குடும்பத்தலைவன் இழந்தால்//

இந்த மாதிரி ஒரு நிலமை யாருக்கும் வேண்டாம்...

மனதை புரட்டிப்போடும் ஒரு கொடுமை..

அ.மு.செய்யது said...

//ஆயிரம் பேரில் படிக்காதவர்கள் 500 பேர் இருந்தால், படித்தவர்கள் அதற்கு சமமாய் இருப்பார்கள் அல்லவா. அவர்களைக் கூட இந்த வாசகம் பாதித்திருக்காதா.//


சரியான கேள்விதான்..

அபுஅஃப்ஸர் said...

//இறைவன் கொடுத்த இந்த உயிர் சுமக்கும் உடலை, ஏன் தீண்டா திரவத்தை உட்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க வேண்டும்.//

இதுவும் தற்கொலைக்கு சமமே..

மொத்தத்தில் வாழ்க்கையை புரட்டிப்போடும் நல்ல ஒரு பதிவு..

அ.மு.செய்யது said...

உருக்கமாகவும் அதே நேரம் சிந்திக்கவும் வைத்தது பதிவு..

குடிமகன்கள் இதைப் படித்தால் நன்றாக இருக்கும்.

வித்யா said...

வருத்தங்கள்.

ராமலக்ஷ்மி said...

தீயது எனத் தெரிந்தும் தொடர்ந்து கொடுக்கிறார் தீராத சோகம் உறவுக்கு.
அவர் மறைந்த பின்னும் ஆறாது இந்த சோகம் உற்றவருக்கு.

உண்மை அமித்து அம்மா. இதே கருத்தைத்தான் புகையைப் பற்றிய என் பதிவிலும் முன் நிறுத்தியிருந்தேன், அப்படியாவது சிந்திக்க மாட்டார்களா என்று.

//மனதில்
உறுதி கொண்டால்
மறந்திட
இயலாதா புகையை?

இயலும்
உங்கள் நலத்தோடு
பின்னியது
உங்கள் நலம் நாடுவோர்
நலமும் என்பதை
இதயத்தில்
இருத்திக் கொண்டால்!//

இப்படி முடியும் அந்தக் கவிதையில் ’புகை’ எனும் இடத்தில் ‘குடி’ என்பதும் பொருந்தும்.

சந்தனமுல்லை said...

:( ஆழ்ந்த அனுதாபங்கள்!

என்னாலும் "உறுபசி" தொடர முடியவில்லை, பத்து பக்கங்களுக்கு மேல்! தாங்க முடியாததாய் இருக்கிறது இறப்பும் அதை சார்ந்த நிகழ்வுகளும்!

தங்கள் குடும்பம் இந்த் இழப்பிலிருந்து மீள பிரார்த்தனைகள்!

நட்புடன் ஜமால் said...

குடி குடியை கெடுக்கும்

உண்மையே

நட்புடன் ஜமால் said...

\\ஆனால் அவரை இழந்து தவிப்போரின் கதி\\

விடைகாண முடியாச்சோகம்.

குறைந்த பட்சம் இந்த சோகம் பிறருக்கு நடந்து விடக்கூடாதென்று தோழமையுடன் பகிர வந்த சகோதரிக்கு நன்றி.

நட்புடன் ஜமால் said...

\\ஆனால் அவரை இழந்து தவிப்போரின் கதி\\

விடைகாண முடியாச்சோகம்.

குறைந்த பட்சம் இந்த சோகம் பிறருக்கு நடந்து விடக்கூடாதென்று தோழமையுடன் பகிர வந்த சகோதரிக்கு நன்றி.

thevanmayam said...

எய்ட்ஸை விடக் கொடுமையான இந்த குடிப்பழக்கத்தால் நம்மில் பலர் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ பாதிக்கப்பட்டிருப்போம்///

அன்பு நண்பர்களே!!குடித்துவிட்டு
ஜாலியாக இருப்பது போன்ற பதிவுகளைத் தவிர்க்கவும்.அது டயம்பாஸ் ஆக இருந்தாலும்!!1
ஏனெனில் விளைவுகள் கொடுமையானவை..
உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!

தேவா...

நட்புடன் ஜமால் said...

\\அபுஅஃப்ஸர் said...

//இறைவன் கொடுத்த இந்த உயிர் சுமக்கும் உடலை, ஏன் தீண்டா திரவத்தை உட்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க வேண்டும்.//

இதுவும் தற்கொலைக்கு சமமே..\\

சரியாகச்சொன்னீர் நண்பரே.

இவ்விடயம் எல்லோரையும் சென்றடைய வேண்டும்.

எல்லோரும் ஓட்டு போடுங்கள் - இந்த விடயம் தமிழ்மணத்தில் தெரியட்டும்.

SK said...

:(

உமாஷக்தி said...

உங்கள் மாமாவின் இழப்பிற்கு ஆழ்ந்த வருத்தங்கள் அமித்து அம்மா. துயரின் நடுவே சிரமப்பட்டு எழுதியிக்கிறீர்கள்...மிகவும் பயனுள்ள பதிவு. என்னுடைய அப்பா,.சித்தப்பா, மாமா என்று ஒரு பட்டாளமே பார்டிகளில் மற்றும் கல்யாண வீடுகளில் ஓரம் கட்டி பெக் பெக்காய் உள்ளே தள்ளுவார்கள். போதையின் பேச்சிலும் இடி இடிப்பது போன்ற சிரிப்பு சத்தத்திலும் அரங்கமே அதிரும்...காலையில் ஹாங்க் ஓவருடன் மண்டபத்தில் திரியும் அவர்களை பார்க்கவே எரிச்சலாக இருக்கும். என் அப்பா செட் சேர்ந்தால் போதும் நல்ல 'குடி'மகன் தான். வீட்டில் கூட அவ்வப்போது மனசு சரியில்லை என்று குடிப்பார் (என் தங்கை இறந்த சோகம் என்ற நிரந்தர காரணம் அவருக்குண்டு) நாங்கள் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்க மாட்டார். உங்கள் பதிவைப் படித்ததும் பயமாக இருக்கிறது. அப்பா Eat, Drink, Be Merry type ஆசாமி. கட்டற்ற சுதந்திர விரும்பி, எங்கள் விதயங்களிலும் அப்படித்தான். எங்களுக்கான இடத்தை சூழலை அற்புதமாய் அமைத்துக் கொடுத்தவர். ஆனால் அவர் அறையில் old monk, chewas regal என்ற பாட்டில்களைப் பார்க்கும் போது மனம் பதைத்துக் கேட்டால், எனக்கொண்ணும் ஆகாது என்று சிரித்து மழுப்புவார். இவர்களை என்ன சொல்லி திருத்த, நிறுத்து என்று சொல்லாமல் தயவு செய்து குறைத்துக் கொள்ளுங்கள் அப்பா என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்....

அமுதா said...

எனது ஆழ்ந்த வருத்தங்கள்.

//உங்களிடம் குடிப்பழக்கம் இருக்குமாயின் குடிப்பதற்கு முன், உங்கள் மனைவியையோ, குழந்தையோ ஒரு தரம் கண் முன் நிறுத்துங்கள்.

உண்மை. அவரது இழப்பால் மிகவும் துயரப்படுபவர்கள் இவர்களே. தம் குடும்பத்தைக் கண்ணென நினைக்கும் பலர் கூட இது போல் புகை, மது என அடிமையாகி விடுவது மிகவும் துயரமானது. இப்பதிவைப் படித்தாவது சிலர் மனம் மாறினால் நன்று.

பாச மலர் said...

நிறைய பேர் வாழ்வில் நடக்கும் சோகம்...தீராததுதான்..உங்கள் தலைப்பு போலவே ப்ரச்னையும்..

ஆயில்யன் said...

:(((

பெரும் சோகம் !

எம்.எம்.அப்துல்லா said...

எஸ்.கே சொல்லி இந்த இறப்பை அறிந்தேன். ஆழ்ந்த அனுதாபங்கள் :(

கணினி தேசம் said...

:((

கணினி தேசம் said...

ரொம்ப வருத்தமா இருக்குங்க.


அனா இப்ப, ஊருக்கு ரொம்ப தேவையான விடயம்.!!

நன்றி.

தாரணி பிரியா said...

உங்கள் பதிவை படித்ததும் கண்ணீருடன் தட்டச்சு செய்கிறேன். என் மாமாவும் குடியால் இரு வருடங்களுக்கு முன்னால் இறந்து விட்டார். தங்கை மகள் என்று என் மேல் என் பெற்றோரை விட‌ அவ்வளவு பாசம் வைத்து இருந்தார்.

இழந்தவர்களுக்குதான் அதன் அருமை புரியும். தயவு செய்து குடிப்பழக்கம் உள்ளவர்கள் தன் குடும்பத்தை பற்றி கொஞ்சம் நினைத்து பார்த்து நிறுத்தினால் கோடி புண்ணியமாகி போகும்.

குடுகுடுப்பை said...

உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!

RAMYA said...

//
இந்தப் பதிவு எனது சொந்த சோகம், அதை இங்கு பகிர்ந்துகொள்ளவேண்டிய நோக்கம் ஒன்றே ஒன்றுதான். எங்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்பு வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதுதான்.//

ஆரம்பமே ரொம்ப படிக்க கஷ்டமா இருந்திச்சு.

நீங்க தாரளமா எதையும் இங்கு பகிர்ந்துக்கலாம்.

நீ சிரிக்குபோது யாருடனும் சிரி ஆனால்
அழும்போது என்கிட்டே வா நான் இருக்கேன்.

உனக்கு தோள் கொடுத்து தாங்க
அதனால் இந்த வலை உலகம்
உங்களை தாங்கும் தோள் கொடுத்து
பகிர்ந்து கொள்ளும் உங்கள் துக்கத்தை கேட்டு

RAMYA said...

அன்று உங்களக்கு தொலை பேசியில் பேசும்போது.

உங்கள் குரலில் இருந்த அந்த வேதனை என் மனதிலும் தொற்றிக் கொண்டது.

நான் என் சுமையை இறக்கி வைக்க
உங்களை தேடினேன் ஆனால் நீங்களோ
அங்கே பெரும் சுமையுடன் இருந்தீர்கள்
மனது சுக்கு நூறாக நொறுங்கியது தோழி.

RAMYA said...

//
அவர் கைப்பிடித்து நடந்த நாட்கள் இன்னும் பசுமையாய். ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து எனக்கான கடமைகளை நிறைவேற்றினார். நான், எனது, என்ற தோன்றல்கள் என்னிடையே ஏற்படும்வரை அவருக்கும், எனக்குமான உறவு நண்பர்களைப் போன்றே இருந்தது.//

பாதிப்பு ரொம்ப அதிகமா இருக்கும்
உங்கள் வேதனை புரிகிறது.

மனம் வேதனை அடைகிறந்து
நீங்க கொஞ்சம் மனம் அமைதியடைந்து
குடும்பத்தலைவரை இழந்த சகோதரி குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வேண்டிய கட்டாயத்தில்
இருக்கிறீர்கள்.

அதனால் முதலில் நீங்கள் கொஞ்சம் வெளியே வாருங்கள்.

RAMYA said...

இந்த பதிவு குடிக்கும் ஒவ்வொரு மனிதர்களும் சற்றே யோசிக்க வைக்க வேண்டும்.

உங்கள் சுகத்தை மட்டும் பெரிதாக்கி
குடிச்சுகம் அனுபவித்து விட்டு
குடும்பத்தை மீளா சோகத்தில் ஆழ்த்தி
செல்ல ஒருவருக்கும் உரிமை இல்லை
இதை தவறு செய்பவர்களை எல்லாரும்
உணர வேண்டும் என்பது இந்த
சகோதரியின் மிகத் தாழ்மையான வேண்டுகோள்.

RAMYA said...

அமித்து அம்மா உங்களக்கு எனது
ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் உங்க சுகத்தையும் கவனித்து கொள்ளவும்.

அமித்துவையும் நன்கு கவனித்துக் கொள்ளவும்

புதியவன் said...

//ஒருவர் குடிப்பது அவருக்கு இன்பமாக இருக்கிறது, ஆனால் அவரின் சுற்றத்திற்கு குறிப்பாய் மனைவி, மக்களுக்கு தீராச் சோகம். இதனை அறிந்த ஆண் மக்கள் குடிப்பதுதான் வேதனை தரும் விஷயம்.//

இது போல் குடிப்பவர்கள் இந்தப் பதிவைப் படித்து திருந்தினால் நன்றாக இருக்கும்...

தங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்...

ராம்.CM said...

உருக்கமாகவும் அதே நேரம் சிந்திக்கவும் வைத்தது பதிவு..அருமையாக உள்ளது!..

தாமிரா said...

த‌ர‌மான‌ ப‌திவு, தேவைப்ப‌டுவோர் சிந்திப்பார்க‌ள் என‌ ந‌ம்புகிறேன். உங்க‌ளுக்கு என் ஆறுத‌ல்க‌ள். என‌து ப‌திவுக‌ளில் நகை‌ப்புக்காக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் விஷ‌ய‌ம்தான் என்றாலும் இனி அதுபோன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளை குறைத்துக்கொள்ள‌ முய‌ல்கிறேன். ந‌ன்றி.

தீஷு said...

படிக்கும்போதே கஷ்டமாக இருந்தது. ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்புடன் அருணா said...

//தோழமைக்கு உரியோர்களே யோசியுங்கள்//

யோசிக்க ஆரம்பித்தாலே போதாதா???
ஆழ்ந்த வருத்தங்கள்...
அன்புடன் அருணா

sury said...

சென்னையிலே பல அமைப்புகள் (ஆல்கஹால் அனானிமஸ் ) போன்றவை
குடிப்போரை இப்பழக்கத்திலிருந்து விடுபட பெரிதும் பாடுபடுகின்றன.

குடிப்பது துவக்கத்தில் ஒரு பொழுதுபோக்கு இன்பமாக அல்லது ஒரு மன வலிக்கு நிவாரணமாக இருப்பினும் நாளடைவில்
அது ஒரு மன வியாதியாக மாறிவிடுகிறது. அந்த நேரம் வந்து விட்டால், அந்த‌
குடிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. இந்த எண்ணம் தோன்றுவதை
நிறுத்தவேண்டும். அதற்கு முதற்கண் ஸி.பி.டி. எனப்படும் cognitive behavioural therapay தரப்படவேண்டும். அதற்கு சுற்றத்தோர் பெரிதும் உதவியாக
இருக்கவேண்டும். இந்த ஸி.பி.டி. மூலம் பழக்கம் விடுபட முடியவில்லை எனின்
சில் ஸேர்ட்ரலின் sertraline group of drugs உதவலாம். ஆனால், இதற்கு உள இயல் ம‌ருத்துவ‌ர்க‌ள் க‌ண்காணிப்பு தேவை.

பொறுப்புள்ள குடும்பத்தலைவன் இப்பழக்கத்திற்கு அடிமையாகித் தன் குடும்ப‌த்தை சோக‌த்தில் ஆழ்த்திய‌ க‌தை இன்ற‌ல்ல‌, நேற்ற‌ல்ல‌, ஐம்ப‌து ஆண்டுக‌ளாக‌த் த‌மிழ‌க‌த்தை வாட்டுகிற‌து. என‌து ந‌ண்ப‌ர்க‌ள் இருவ‌ர் ( அதில் ஒருவ‌ர் சோதிட‌க்க‌லையில் வ‌ல்ல‌வ‌ர் கூட‌) இப்ப‌ழ‌க்க‌த்தினால் லீவ‌ர் பாதிப்பில் இற‌ ந்திருக்கின்ற‌ன‌ர்.


குடியை க‌ட்டுப்ப‌டுத்த‌ ஒரு அர‌சிய‌ல் விவேக‌ம் ம‌ற்றும் துணிவு வேண‌டும்,


சுப்பு ர‌த்தின‌ம்.
http://vazhvuneri.blogspot.com

tamil24.blogspot.com said...

நண்பர்களுக்காகவென்றும், சந்தோசத்தை கொண்டாடவும், கவலையை மறக்கவும், உடல் வலி மறக்க என குடிக்கத்தான் எவ்வளவு காரணங்கள் இருக்கிறது ஒருவருக்கு.
+++++++++++++++++++++++++++++++++

அனுபவங்கள் நிறையவே பாதிப்பக்களைத் தருவது போல குடி குடியை மட்டுமன்றி ஒரு நாட்டையே அழிவில் இட்டுச் செல்லும் ஒரு தொற்றியாகவே உணர்கிறேன்.

தற்போது பல நோய்களுக்கான முதற்காரணி குடிப்பழக்கமாகவுள்ளது. ஆனால் யாரும் விடுவாதாக இல்லை.

இதே குடிப்பழக்கமே எனது தந்தையையும் மரணத்தில் கொண்டு போய் விட்டது.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.இதைவிட வேறெந்த சமாதானத்தையும் தங்களுக்குச் சொல்ல முடியவில்லை.

சாந்தி

ஸாவரியா said...

VERY VERY SORRY for your loss! :(
May god rest your uncle's soul in peace and comfort you and his family.

cheena (சீனா) said...

அன்பின் அமித்து அம்மா - நெஞ்சம் நெகிழ்கிறது - உருக்கத்தினைப் படிக்கும் போது - இழப்பு தங்களை அதிகம் பாதித்திருக்கிறது. 100 நாட்கள் ஆகி விட்டன - இப்பொழுது தான் இப்பக்கம் வந்தேன். ஆறுதலடைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

அழகான உரை - இதயத்தின் அடித்தளத்திலிருந்து எழுந்த உணர்ச்சிக்குவியல்.

ம்ம்ம்ம்ம்ம்ம்