05 February 2010

சண்டேக் செருப்பும் சைபால் டப்பாவும் உடன் ஒழுக்கநெறிகளும்.

எந்த நேரம் பாத்தாலும் பேச்சு, அப்படி என்னதான் பேசுவீங்களோ, க்ளாஸ் ரூம் உள்ள மட்டுமில்ல, வெளியேவும் எப்படியிருக்குன்னு கொஞ்சம் எட்டிப்பார்க்கணும். உங்க வீட்டுல எல்லாம் இப்படித்தான் இருக்குமா, போய் எட்டிப்பாருங்க வெளிய, நம்ம க்ளாஸ் ரூம் எப்படியிருக்கு, மத்தவங்க க்ளாஸ் ரூம் எப்படியிருக்குன்னு, சுள்ளென்று எரிக்கும் வெய்யிலில் மாடி ஏறி வந்த மூச்சிரைப்போடு வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார் வகுப்பாசிரியரான முட்டைக்கண் விஜயலட்சுமி டீச்சர்.

சட்டென்று மயான அமைதி, மணியடித்து முடித்த பின்னும் பேசிக்கொண்டிருந்த சலசல சத்தங்கள் இந்த வகுப்பறையிலிருந்தா இதுவரை வந்தது என்பது போல் கப்சிப்.

உங்களோட ஸ்லிப்பர்ஸ் தானே, இப்படித்தான் கன்னாபின்னான்னு கோவில் வாசல்ல விடறா மாதிரி ஒன்னு மேல ஒன்னா கும்பலா விடுவீங்களா?. நீ எழுந்திரு, போய் எல்லா ஸ்லிப்பரையும் ஒழுங்கா அடுக்கு, இனிமே டெய்லி மதியானம் ஒருத்தர் வாட்ச் பண்ணி ஸ்லிப்பரை ஒழுங்கா அடுக்கி நேரா விட்டு இருக்கனும்.டெய்லி ஒருத்தர், அய்யோ நம்ம அடுக்கனுமேன்னு யோசிச்சு ஆளாளுக்கு ஒழுங்கா விட ஆரம்பிச்சிங்கன்னா ஒரு பத்து நாள்ல எல்லாம் தானே ஒழுங்கா வந்துடும்.

எங்கே க்ளாஸ் லீடர்?. நீ என்ன தான் செய்ற, பசங்கள பேச விட்டுக்கிட்டு, இப்படி க்ளாஸ் ரூம ஒழுங்கீனமா வெச்சிருக்க. டெய்லி ஒருத்தர ரொட்டீனா ஸ்லிப்பர் அடுக்க வைக்கறது இனி உன் வேலை.ஆமா, இன்னும் என்ன உக்காந்துட்டு இருக்க, இன்னொரு தடவ சொல்லனுமா, ப்போ, ஏய் நீயும் போ, ரெண்டு பேரா போங்க. ப்போய் கதைப்பேசிக்கிட்டு நிக்காதீங்க.

அகர வரிசைப்படி கடைசியாய் இருந்தாலும், உயர வரிசைப்படி முதல் நிலையில் இருப்பதால் முன்னாடி உட்கார்ந்திருந்த நாங்களிருவரும் மூச்சைக் கூட வெளியே விடாமல் எழுந்து வெளியே போனோம். சின்னதும், பெரிசுமாய், பெரும்பாலும் கருப்பு, ப்ரவுன் நிறங்களில், வெறும் பட்டையும், சிலது பட்டைகளில் அழகாய் வேலைப்பாடு செய்தும், அடர்ந்த சந்தனக்கலரில் அரக்கு கலரில் பின்னால் மாட்டும்படியான பட்டைக்கொண்ட நான்கைந்து ஜோடிகள், பழுப்பு நிறத்தில் சப்பையாய் தேய்ந்து கிடக்கும் செருப்புகள் என குவியலாய் கிடந்தது.

சுவரைப் பிடித்தபடி காலாலேயே ஜோடிக்கொன்றாய் எடுத்து அடுக்க ஆரம்பித்தோம். அடுக்க, அடுக்க நீளமாய் செருப்புகளின் அணிவகுப்பு நீண்டுக்கொண்டே இருந்தது. எப்படியும் உள்ளே போனால் கொட்டாவி விட்டுக்கொண்டுதான் இருக்கவேண்டும், அதற்கு இதையாவது செய்யலாமே என்று மிக நிதானமாய் அடுக்கிக்கொண்டிருந்தேன். உள்ளே அறிவியல் பாடம் நடத்தப்படும் சத்தம் கேட்டது. ஏய் சீக்கிரம் அடுக்குடி, வேடிக்கைப் பார்க்காம உடன் அடுக்குபவள் கிசுகிசுத்தாள்.

எல்லா செருப்புகளும் ஓவ்வொரு விதத்தை கொண்டிருந்தன. சில செருப்புகளில் கருப்பாய் விரல் தடங்கள் ஆழமாய் பதிந்திருந்தன. சில செருப்புகளை பார்க்கும் போதே தெரிந்துவிட்டது யாருடையதாக இருக்குமென்பது, உடன் ஒரு பெருமூச்சும் வந்தது. அடுக்கிவிட்டு திரும்பி ஒரு முறை பார்த்தபோது நேர்த்தியாக இருந்தது. அதிலும் அந்த பின்னால் மாட்டும்படி பட்டை வைத்த உள் பாதம் படுமிடத்தில் sandek என்று போட்டிருந்த அடர்ந்த சந்தனக்கலர் ஜோடிகள் சத்தம் போடாமல் மனதை ஈர்த்தது. வாங்கினால் இந்த செருப்பைத்தான் வாங்கவேண்டும். இடது காலை ஊனி வலது கால் பட்டையையும், வலது காலை ஊனி இடது காலினதையும் அழகாய் ஸ்டைலாக கழட்டலாம். அழகா இருக்குல்ல.

ரெண்டு பேர் போனதுக்கே இவ்ளோ நேரமா, உக்காந்து பாடத்தை கவனிங்க, சுள் அகலாத டீச்சர்

அறிவியல் போய் கணக்கு, தமிழும் முடிந்து கடைசி பீரியட் வந்துவிட்டது. கடைசி பீரியடும் வகுப்பாசிரியருடைய அறிவியல் தான். அதனால் முன்னெச்சரிக்கையாகவே கப்சிப் தொடங்கிவிட்டது.ஆனால் வந்ததென்னமோ மாரல் டீச்சர் தான். எல்லாம் இந்த அறிவியலின் ஏற்பாடாகத்தான் இருக்கும் என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துவிட்டது. மாரல் டீச்சருக்கு மத்த டீச்சர்களைப்போல கத்த வேண்டிய வேலையிருக்காது போல, காலையில் வாரிய தலை கலையாமல், மடிப்பு கலையாத புடவையோடும் மேஜையின் நுனியில் ஸ்டைலாக அமர்ந்தார். சில சமயங்களில் இவர்தான் தமிழ் இரண்டாம் பாடமும் எடுப்பார். அவரைப்பார்த்தாலே ஒப்புக்கு சப்பாணி டீச்சர் என்றுதான் தோன்றும்.

அவ்வப்போது குனிந்து தன் நீண்ட விரல் நகங்களைப் பார்த்துகொண்டே ஒழுக்கநெறிமுறைகளையும், நல்ல பழக்கவழக்கங்களும் நலமான வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியமென்று புகட்ட ஆரம்பித்தார். ஆள் பாதி, ஆடை பாதி, அதனால் சுருக்கமில்லாத ஆடைகளை அணியுங்கள். பற்களை சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.காலை, மாலை இருவேளைகளிலும் பற்பசை கொண்டு பல்துலக்கவேண்டும்.

பற்பசையா, சரியா போச்சு, அம்மா வைத்திருக்கும் அடை அடையான சாம்பல் பை மாத்திரம் மாதக்கடைசியில் குறையாகாது என்றால் நான் நான்கு வேளைகள் கூட பல்துலக்க தயாராக இருந்தது டீச்சர் அறியாதது. பல் துலக்க உதவுமென்றே அம்மா வரட்டியை அடுப்பில் எரிபோடுவார். நல்ல சாம்பல் நிறத்தில் ! சில இடங்களில் கரித்தீற்றலோடு அடை அடையாக எடுத்து பிளாஸ்டிக் கவரில் வைத்து வெளியே தொங்கவிட்டிருப்பாள். சாம்பல் அடையில் ஒரு முனையை சற்று தொட்டால் போதும், அப்படியே பொல பொலவென்று உதிரும். கையில் எடுக்கும்போதே மாவாகிவிடும். காயாத வரட்டியாக இருந்தாலோ, சரியாக எரிபோடவில்லையென்றாலோ. கட்டித்தட்டிக்கொண்டு ஒன்றுக்கும் ஆகாமல் உட்கார்ந்திருக்கும்.

சாம்பலை வைத்து இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் விரலை கொடுத்து ரெண்டு முறை அழுத்தித் தீத்தினால் போதும், கொஞ்சம் தண்ணீர் செலவழித்து நன்றாக கொப்பளிக்கவேண்டும். இல்லையென்றால் கொஞ்ச நேரத்துக்கு வாயில் நற நற வென்று அகப்படும். அடிக்கடி எச்சில் துப்பவேண்டியிருக்கும். சாம்பலில் பல் தேய்த்து கொப்பளித்த வாயோடு ஒரு டீ குடித்தால் செமத்தியாக இருக்கும்.நினைக்கும் போதே பல் துலக்கவேண்டும் போல் இருந்தது.

பாத்ரூம் போய் வந்த பிறகு கை, கால்களை நன்றாக கழுவவேண்டும் என நான் சாம்பல் கொண்டு பல் துலக்கிக்கொண்டிருந்த நேரத்தில் அவர் பல்லில் இருந்து காலுக்கு இறங்கிவிட்டிருந்தார் .நினைவைக் கலைத்து அவசர அவசரமாய் அவரை பின் தொடர்ந்ததில் செருப்பணிந்து கொண்டுதான் கழிப்பறைக்கு செல்லவேண்டும். பெரும்பாலும் செருப்பு போட்டுக்கொண்டே நடக்க பழகவேண்டும். சாலையில் உங்களுக்கு முன் செல்லும் நபர் எச்சில் துப்பியிருந்தால், செருப்பணியாத உங்கள் கால்கள் அதன் மீது பட நேர்ந்தால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பாகிவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்த போதே எச்சில் மிதிக்கும் அபாயமும், அருவருப்பையும் தாண்டி செருப்பணியும் ஆசை வந்தது. காரணம் வேறென்ன மதியானம் அடுக்கிய sandek தான்.

நம்ம க்ளாஸ்ல யார், யார் கழிப்பறைக்கு போக செருப்பு பயன்படுத்துவீங்க? என்று சுவாரஸ்யமாய் கேட்டுக்கொண்டிருந்தார். வழக்கம் போல நான் கையைத் தூக்கவில்லை. திரும்பிப் பார்த்ததில் பெரும்பாலோர் கையைத் தூக்காமல் தான் இருந்தார்கள். மறுபடியும் ஒழுக்கநெறிகள் தொடர்ந்து, யார், யார் செருப்பணிவதில்லை என்று கேள்வியாகிற்று. நான்கைந்து கைகள் மட்டுமே உயர்ந்தது. வழக்கம் போல இதற்கும் என் கை உயரவில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்தவள்தான் வெடுக்கென்று என் இடது கையைப் பற்றி உயரே தூக்கிவிட்டாள். பொத்தாம் பொதுவாக எல்லோரையும் பார்த்துவிட்டு இன்னும் இரண்டு நாட்களில் செருப்பணியவேண்டும் என்று சொல்லுவார் என்பது எதிர்பாராதது. ஆஹா சாயங்காலம் அம்மாக்கிட்ட சொல்ல சாக்கு கிடைத்த சந்தோஷத்தில் அருகில் இருந்தவள் மீது கோபம் வரவில்லை.


பையை கொண்டு போய் ஆணியில் மாட்டிவிட்டு ம்மா, எங்க ஸ்கூல்ல மாரல் டீச்சர் இனிமே செருப்பு போட்டுக்கிட்டு வர சொன்னாங்கம்மா என்றபடியே சாப்பிட உட்கார்ந்தேன். ஆரம்பிச்சிட்டாங்களா உங்க ஸ்கூல்ல, ஏதோ நாலெழுத்து நல்லா கத்துத்தருவாங்கன்னு பணங்கட்டுற ஸ்கூல்ல சேத்தா இவளுங்களுக்கு இதே பொழப்பா போச்சே, சொளையா வருஷ பீசு வாங்கறதில்லாம அப்ப அப்ப பத்தக் கொண்டா, இருவது கொண்டான்னு இப்ப செருப்பு தொடப்பம்னு வந்து நிக்கறாங்களா, நாளைக்கு ஸ்கூலாண்ட வரேன்.

கபீரென்றது. காசு என்றாலே எப்போதும் அம்மா இப்படித்தான். ந்தா, மறுநாளே உங்க ஸ்கூலுக்கு வர்ரேன் என்று சொல்லிவிடும். சில சமய மதிய வேளைகளில் ஜன்னல் பக்கம் டீச்சரைத் தவிரவும் ஏதாவது புடவைகள் தென்பட்டால் அய்யோ, சொன்னா மாதிரியே வந்துடுச்சா என்று அடி வயிற்றில் மின்னல் வெட்டும். திரும்பி திரும்பி பார்த்து உறுதிபடுத்துவதற்குள் ச்சே என்றாகிவிடும். இன்றும் அப்படித்தான். ஆனால் நான் கொண்ட கொள்கையான sandekல் உறுதியாக இருந்ததால், அடத்தை இன்னும் அடமாக பிடிக்க ஆரம்பித்தேன். ம்ஹூம், அதெல்லாம் இல்ல, செருப்பு போட்டுக்கிட்டு போலன்னா பைன் போடுவாங்களாம். அவங்களே உன்ன கூட்டிக்கிட்டுதான் வர சொன்னாங்க என்று வாய்க்கு வந்ததை உளற ஆரம்பித்தேன். அம்மா அங்கலாய்ப்பதை நிறுத்திவிட்டு, திடீர்னு செருப்ப கொண்டாடின்னா நான் என்னா, எரவாணாத்துலயா வெச்சிருக்கேன், ஒன்னாந்தேதி பொறக்கட்டும், லஸ் புள்ளையார் கோயிலுக்கு போறச்சே வாங்கித்தரேன்.

லஸ் பிள்ளையார் கோயிலுக்கு போறதே அலாதியான விஷயம்தான். அதிலும் இந்த தடவை sandek கிடைக்குமென்றால் அய்யோ, அய்யோ,பிள்ளையாரப்பா. சீக்கிரம் ஒன்னாந்தேதிய வரவெச்சிடேன். வீட்டிலிருந்து லஸ்ஸுக்கு 21ஆம் நெம்பரும், 1ஆம் நெம்பரும் பத்து நிமிஷத்துக்கொன்னு போனாலும் அம்மா நடத்திதான் அழைத்துப்போவாள். வரும்போதும் அப்படித்தான். என்ன, போனஸாக துர்கா பவனில் எனக்கு போண்டா கிடைக்கும். அம்மா ஒரு காபி குடிப்பாள். எனக்குத் தெரிந்து அதி சிக்கனமான அம்மா செய்யும் அதிகப்படியான செலவு இது மட்டுமே.

அந்த நாளும் வந்து, மனமெல்லாம் குதியோ, குதியென்று குதிக்க லஸ்ஸை நோக்கி அதிவேக நடை. போகும் போதே செருப்புக்கடைகளை பார்த்து வைத்தாயிற்று. பெயரும் நன்றாக ஞாபகத்தில் இருந்தது. அன்றைக்கு இருந்த சுவாரசியத்தில் எப்போதும் சிறுங்கசப்போடு சுவைக்கும் விபூதி பிரசாதம் கூட உள்ளிறங்கவில்லை. கோவில் சுற்றி முடித்தபின் உட்காரும் அம்மாவை உட்காரவே விடாமல், திருப்பத்தில் ஒரு கடையில் கொண்டு வந்து நிறுத்தியாயிற்று.

ஏம்பா, கொழந்த காலுக்கு நல்லதா ஒரு செருப்பு எடுத்துக்கொடு. கிளி ஜோசியக்காரன் சீட்டெடுக்க சொல்கிறா மாதிரி கேட்டாள்.

இன்னா மாதிரி மாடலும்மா?

நான் மெதுவாக சாண்டக் செருப்புங்க. பின்னாடி மாட்டுறா மாதிரி இருக்குமே அது.

அதுவா, முன்னே வந்து கீழே குனிந்து பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்ததை எடுத்துப்போட்டு போட்டுப்பாரும்மா என்றான்.

பெரிதாக இருந்தது. இதுக்கும் முன்னாடி சைஸு.

அஞ்சாம் நெம்பர் சரியா இருக்கும், இந்தா.

வெலை எவ்ளோப்பா?

அம்பது ரூவாம்மா.

என்னாது, அம்பது ரூபாவா, சரியா போச்சுப்போ, அங்கங்க பத்துக்கும், இருபதுக்கும் விக்கிறான்.

செருப்பு சரியாக பொருந்தி வந்தது. இடதை ஊனி வலதும், வலதை ஊனி இடதும் ஸ்டைல்!! போடும்போது கொஞ்சம் தடுமாறியது. போட்டுப் பழகிடுச்சுன்னா சரியாகிடும். சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

சரி உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம் இருபத்து அஞ்சு ரூபாக்கு கொடு, அம்மா தடாலடி பேரத்துக்கு இறங்கினாள்.

நாப்பதுக்கு ஓரு ரூபா கொறைக்க முடியாதும்மா, பேரம் படியவில்லை. எனக்கு பதைபதைக்க ஆரம்பித்துவிட்டது. காலில் போட்டுப் பார்த்த செருப்பை அவிழ்த்துவிட்டு பரிதாபமாக அம்மாவை பார்க்க ஆரம்பித்தேன். கண்ணில் நீர் கோர்க்க ஆரம்பித்தது.

ம்ஹூம், அம்மா மசியவில்லை. பேரமும் படியவில்லை. கடைசியாய் இருபது ரூபாய்க்கு கிடைத்த செருப்பை வாங்கித்தந்தாள். காலில் போட்டுப்பார்க்கவே மனம் ஒப்பவில்லை. இந்தா போட்டா போடு. போடாக்காட்டிப் போ என்று வாங்கிய செருப்புகளை என் காலருகே வீசிவிட்டு கடைக்காரனிடம் ரெண்டு பத்து ரூபாயைத் தாளை கொடுத்துவிட்டு கடையை விட்டு அகன்றாள். கடைக்காரன் காசை பாக்கெட்டில் போட்டுக்கொண்டே கொழந்த, ஆசப்படுறத வாங்கிக்கொடேம்மா என்றான்.

உனக்கென்னா சொல்லாத ? என்றபடியே நடக்க ஆரம்பித்தாள். நான் வேண்டா வெறுப்பாக செருப்பு கவரை சுண்டுவிரலில் மாட்டியபடியே நடந்தேன். உள்ளே குமுறிக்கொண்டு வந்தது. அம்மா விடுவிடுவென்று போய் துர்கா பவன் வாசலில் நின்றாள். நான் அவளைக் கடந்து போக ஆரம்பித்தேன்.

பின்னாடியே வந்தவள் முதுகில் ஒன்று பட்டென்று வைத்து, இந்த வயசில இவ்ளோ ஆங்காரம் ஆகாது என்று என்னைத்தாண்டி விருட்டென்று நடந்தாள். ரோடு கிராஸ் செய்யுமிடத்தில் போய் நின்றாள். அம்மாவின் கைப்பிடிக்காமல் ஆனால் அம்மாவோடே க்ராஸ் செய்தேன்.

செருப்புக்கவரை கொண்டு போய் வீசிவிட்டு சாப்பிடாமல் படுத்துவிட்டேன். தூக்கமெல்லாம் வரவில்லை.

கொஞ்சம் சுடுதண்ணி வெக்கிறியா, கால்ல ஊத்துறதுக்கு – கேட்டுக்கொண்டே அப்பா உள்ளே நுழைந்தார்.

ஏன், என்னாச்சு? - அம்மா

காலைல வேலைக்குப் போறச்ச ஒரு பாட்டிலோடு கால்ல பொத்துக்கிச்சு. ஏற்கனவே ஆணிக்காலு வேற நடக்க முடியல. ஜிவு ஜிவுன்னு ஒரே வலி. சுடுதண்ணி ஊத்துனா கொஞ்சம் வலிக்கு எதமா இருக்கும். சைபாலு இருக்குதா. இருந்தா ஆணிக்காலு மேல தடவேன்.

ம்க்கும், சும்மா, சைபாலு, சைபாலுன்னு அதையே தடவு. ஆஸ்பத்திரிக்கி போய்ட்டு வான்னா கேட்க மாட்டேங்குற. சேத்துப்புண்ணுக்குத் தடவுறத போயி ஆணிக்காலு மேல தடவுற.

எல்லாம் மருந்துக்கடயில கேட்டதுக்கு இதத்தான் கொடுத்தான். இருந்தா எடு. இன்னிக்கு ஒரு பொழுது. நாளைக்கி சீக்கிரமா போயி ஆஸ்பத்திரில ஓ.பி சீட்டு வாங்கி பார்த்துட்டு வந்துடறேன்.

என்னாச்சும்மா, படிக்கல, இவ்ளோ சீக்கிரம் படுத்துட்ட? கேட்டுக்கொண்டே காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்டிருந்தார்.

வலியின் வேதனை போலும். அப்பா சீக்கிரம் சாப்பிட்டு படுத்துவிட்டார். ஏய், இப்ப எழுந்து வந்து சாப்பிடப்போறியா இல்லியா, இல்ல இன்னும் ரெண்டு வைக்கவா?

மனமில்லாமல் சாப்பிட எழுந்து உட்கார்ந்தேன். சரியாய் எனக்கு நேர் எதிரே அப்பா படுத்திருந்தார். குண்டு பல்பின் வெளிச்சத்தில் அப்பாவின் கால்கள். பாளம் பாளமாய் வெடித்துப்போய் கிடந்தது. ஆணிக்கால்கள் வேறு அங்கங்கு குண்டாய் எழும்பியிருந்தது. ஒரு இடம் கருப்பாய் கன்னிப்போய் இருந்தது. அங்குதான் பாட்டிலோடு குத்தியிருக்கவேண்டும். அங்கங்கே வெள்ளை வெள்ளையாய் சைபால் எட்டும் எட்டாமல் பூசப்பட்டிருந்தது.

மூஞ்சை தூக்கிவெச்சிக்கிட்டே சாப்பிடாத, ஒடம்புல ஒட்டாது. அப்பி அணைச்சி சாப்பிட்டு போய்ப்படி இல்லனா படு.

சாப்பாடு, படிப்பு எதிலும் மனம் படியவில்லை. இருப்பினும் சாயங்காலம் வேறு கோவிலுக்கு போய்விட்டதால் வீட்டுப்பாடம் எழுதவில்லை. எழுத உட்கார்ந்து எப்போது தூங்கினேன்?

பல்விளக்கி, டீ குடித்த போது பக்கத்தில் கிடந்த சைபால் டப்பா எல்லாவற்றையும் கிளறிவிட்டு அப்பா ஞாபகம் வந்தது. அப்பா எங்கம்மா?

ஓ.பி சீட் வாங்கனும்னு சீக்கிரமே கிளம்பி போயிட்டாரு. அந்த குந்துக்கால வெச்சுக்கிட்டு அவ்வளோ தூரம் எப்பிடிதான் போவப்போறாரோ?

ப்ரேயர் முடிந்து வகுப்புக்காக மாடி ஏறும்போது மடிப்புக்கலையாத புடவையோடு மாரல் டீச்சரைப் பார்க்க நேர்ந்தது.

நலமான வாழ்வுக்கு ஒழுக்கநெறிமுறைகளையும், நல்ல பழக்கவழக்கங்களையும் பழகிக்கொள்ள பற்பசையும், செருப்பும் மாத்திரமல்ல, அவைகளை வாங்க பணமும், கூடவே செருப்பற்ற கால்களுக்கு சைபால் டப்பாவும் மிகவும் அவசியம் என்று நான் முணுமுணுத்தது, புது செருப்பின் ச்சக், ச்சக் சத்தத்தில் டீச்சரின் காதில் விழுந்திருக்க நியாயமில்லை.

29 January 2010

அமித்து அப்டேட்ஸ்

அடி என்ச் செல்லம், அடிப்பட்டு, அடி ஏன்த் தங்கோம்

இதெல்லாம் அமித்துவுக்கு என் மீது அதிக ஆசையாகிவிட்டாலோ, அவள் விரும்பிய மாதிரி நான் நடந்து கொண்டாலோ என்னைப் பார்த்து சொல்வது. சமயத்தில் இந்த செல்லக்கொஞ்சலுக்குள் அவளின் அப்பா, ஆயா அனைவருமே அடக்கம்.

....

அமித்துவின் சேட்டை தாங்கமுடியாமல் கோபமாக பேசிவிட்டு, கிள்ளிடுவேன் என்றதற்கு

ஏன் என்கிட்ட சண்ட போட்ற எச்சோ

............

வர்ஷா, உள்ள இருந்து அந்த க்ளிப் எடுத்துட்டு வாம்மா.

இர்ம்மா, பாப்பாக்கு (அவளின் பொம்மைக்கு) சாப்பாடு ஊட்றன் இல்ல, அவ்ளே துப்பூறா

..........

நான் சம்மேல் (சமையல்) செய்றேம்மா. இரண்டு ஸ்பூன், தட்டு, கிண்ணங்கள் சகிதம் ஹாலில் உட்கார்ந்துக்கொள்ளவேண்டியது.

ஒரு தட்டில் ஸ்பூன் வைத்து, இந்தா எச்சோ, சாப்புடு.

என்னாதும்மா இது

ரச்சம் புவா, ச்சூப்பரா இர்க்கும், ஆப்டேன்.

........

ஒரு விடுமுறை நாளில் அமித்து அப்பா ஆபிஸ் கிளம்ப நேரிட, தானும் உடன் வருவதாக அழுகை.

லேட்டாயிடுச்சும்மா, அப்பா சீக்கிரம் வந்துடுவேம்மா, டாட்டா சொல்லு

அப்பா நானும் வர்ரேன் ப்பா (அழுது கொண்டே)

வர்ஷினி குட் கேர்ள் இல்ல, சொன்னா கேட்பாங்களே, அப்பாக்கு பை சொல்லு.

இல்ல, நானு பேடு கேளு (பேர்ட் கேள்), நான்னும் வர்ருவேன் ஒங்கூட

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

............

இந்தப் பூ பார்ரேன், ஆய்யா மாதிரி இர்க்கு

ஆயா மாதிரி இருக்கா?

ஆம்மாம், குண்டா இர்க்கு (அவளின் ஆயாவைப் பார்த்து சிரித்துக்கொண்டே)

............

ஒரு சின்ன சொப்பு தட்டை எடுத்துக்கொண்டு என்னிடம் நீட்டி,

இந்தாங்க, கேக்கு, எங்க பாப்பாக்கு ஆப்பி பத்தடே டூ யூ, எத்துக்கோங்க.

சரிங்க, எடுப்பதைப் போல பாவனை செய்கிறேன் நான்.

இந்தாங்க, வர்ச்சினிக்கு, ஆங்க அம்மாக்கு, அப்பாக்கு.

சரிங்க, மீண்டும் பாவனை.

பை, நேத்திக்கு வர்ரேங்க

.........

டிக்காரி டிவி வைய்யி (டிஸ்கவரி சேனல்)

ஜூப்புராவ சிங்கம் கடிக்க வேண்ணா சொல்லும்மா, பாவோம் இல்ல, கடிக்க வேண்ணா சொல்லு

...

என்னாப்பா அது

அதுவா ஒரு ஆளை முதலை அடிச்சுடுச்சும்மா

அச்சுச்ச்சோஓ, இப்ப ன்னா பண்ரதுப்பா, அம்ப போய்யி கொம்ப எத்து அடிக்கலாமா கோக்கோடைல?

...

ஒட்டகச்சிவிங்கிக்கு மேடம் வைத்திருக்கும் பெயர் ஒட்டகவஞ்சி !!!!!

...

வர்ஷினி, இங்க வாம்மா

இர்ரு பாப்பா பக்கிறேன்ல, வரேய்றன்ல (வரையறேன்), கூப்புர்ர

ம்மா எங்க க்கூல்ல இன்னிக்கு டெஸ்ட்டு

ஓம் வொர்க்குல்லாம் முச்சிட்டேனே

எங்க மிச்சு என்ன இபி புச்சு முத்தா குத்தாங்ளே

ஒருநாள் விடிகாலை அவசர அவசரமாய் எழுப்பி, எச்சோ, நான் இன்னிக்கு க்கூலுக்கு போமாட்டேன், எங்க க்கூலு இன்னிக்கு லீவ்வு. நா போம்மாட்டேன் !!

கார்த்தி, அது எம் புக்கு, அத எக்காத, அப்பேர்ரம் எங்க மிச்சு அப்பாய்ங்க !!!

(இவ்வளவு கூத்துக்கும் மேடம் ஸ்கூல் போகவில்லை என்பதுதான் ஹைலைட்டே. அக்கம் பக்கத்து குழந்தைகள் ஸ்கூல் போவதை வைத்தும், அவர்கள் பேசுவதை வைத்துமே மேடம் பில்டப் ஸ்டார்ட் ஆகிவிட்டது)

....

சாண்டாக்ளாஸ் மாஸ்க்கை அமித்துவின் தாத்தா போட்டுக்கொள்ள,

கழ்ட்டூ, இதெல்லாம் பச்சங்க தான் போடுவாங்க, கழ்ட்டு தாத்தா

........

ஏன் கதுவ ச்சாத்துற, ஆயா வர்ருவாங்கல்ல, கதுவ தெற.

அவளின் கால் கொலுசை கழட்டி நீட்டாக வைத்துவிட்டு பார்ரூ பாம்பு மார்ரியே இர்க்கு. இபி கொல்ச கழ்ட்னா ஆயா அப்பாய்ங்க.

........

மாரல் ஸ்டோரி புக்கில் படத்தோடு இருக்கும் சீச்சி இந்தப் பழம் புளிக்கும் நரிக்கதையை எடுத்துக்கொண்டு

த்தோ, ஒரு ஊல்ல ஒரு நர்ரி இந்துச்சா, இபியே வந்துச்சா, அப்பேர்ரம் ஒரு எலி வந்துச்சா, அப்ப ஒர்ரு சிங்கம் வந்துச்சா, மாட்டிக்கிச்சா, ம்ம்ம்ம், அப்பேர்ரம் அபியே எட்டி எட்டி பாத்துச்சாம், வட எத்துன்னு போச்சாம். அப்போ அப்போ ஒர்ரு ....தாட்சை (திராட்சை) இந்துச்சா....

டேய், கதய மாத்தி மாத்தி சொல்லி காமெடி பண்றடா - இது சஞ்சு

ஏய், பாப்பா கத சொல்றன்ல, ஆம்பரின்னு சொல்லூற. பாரூ எச்சோ, அக்காவ, பேச்சுறா, ஏய் பேச்சாத.

........

கார்த்தி, சஞ்சு, அமித்து மூவரும் விளையாடி முடித்தபின் கார்த்தி (எதிர் வீட்டுச் சிறுவன்) தூக்கம் வருது பாப்பா, நான் போயி சாப்ட்டு தூங்கப்போறேன் பை. உடன் சஞ்சுவும் பை சொல்லிவிட்டு கிளம்பிவிட,

என் பெண்டுலாம் போய்ட்டாங்க, நானும் ப்போர்ரேன் எச்சோ

ஃபெண்டா, யார் அது?

கார்த்தி, சஞ்சூ ஆங்கல்லாம் என் பெண்டு, நாம் போய்யி விளாடப்போறேன் ஆங்க வீட்டுல.

....

இப்பல்லாம் நான் கேள்வி கேட்கறதோட சரி, மேடம்கிட்ட இருந்து வர்ர ரிப்ளையை பார்த்துவிட்டு மேற்கொண்டு எதுவும் கேட்கமுடியாமல் அப்படியே ங்ஙே’வாகிவிடுகிறேன்.

28 January 2010

மாய வித்தைக்காரி

பத்தாம் வகுப்பு பாதியில் அவள் பூத்துவிட்டாள் என்ற செய்தி வந்தது. தோழி என்றாலும் போய் பார்ப்பதற்கு ஒருவகையான நாணம் குடிகொண்டது. சரி, எப்படியும் வருவாள் என்று பார்க்காமல் விட்டதில் பத்து நாள் கழித்து பள்ளிக்கு வந்தாள். மிக அழகாக மாறியிருந்தாள். எப்போதும் போடும் மடித்துக்கட்டிய இரட்டைப்பின்னல்தான் என்றாலும், இப்போது ஸ்லைடு எடுத்து குத்தி தூக்கி வாரி என்று ஒரு மாதிரியாய் முகமாற்றமும் மலர்ச்சியுமாய் இருந்தது. நடத்தையில் கூட கொஞ்சம் பெரிய பெண் போல மாறியிருந்தாள். அவளோடு தோற்றத்தில் குள்ளமாகவும் ஒல்லியாகவும் இருந்த என்னை சிறுமி போல பாவித்தாள். சிரிப்பு வந்தது. அதுவரை உற்ற தோழியாய் நான் இருந்தாலும் அவளொத்த பெண்களோடு பேசி சிரித்தாள். மதிய உணவு இடைவேளையின் போது சினிமாக்கள் பற்றியும், கதாநாயகர்கள் பற்றியும் அதிகம் பேசினார்கள், அளவில்லாமல் சிரித்தார்கள். காதல் பாடல் வரிகளை அழகாய் மனனம் செய்து சன்னமாய் ராகமிட்டு பாடினார்கள்.

மழைத்துளி என்ன தவம் தான் செய்ததோ, மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே, மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ, நினைக்கையில் உள்ளூரக் கள்ளூறுதே என்ற பாடல் வரிகளை கிறங்கிப்போய் அடிக்கடி முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள். கண்டிப்பாக பரீட்சைக்கு வரும், அப்படி வந்தால் குடுவையை வரைந்து, சமன்பாட்டை எழுதினால் ஐந்து மார்க் சர்வ நிச்சயம் என்று நம்பிய கொஸ்டீனை மறுநாள் டெஸ்ட்டாக சயின்ஸ் டீச்சர் அறிவித்தால் டீச்சருக்கு தலைவலி வரவேண்டும் இல்லை அவர்கள் வீட்டிலிருந்து போன் வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். மாறாய் ஆசிரியை வந்து அமர்ந்து கொண்டால் இன்று டெஸ்ட் வேண்டாம் என்று வேண்டிக்கொண்டதில் இவளும் ஒருத்தியாகிப்போனாள். மாத இடைவெளிகளில் தோன்றிய இந்த மாற்றம் அதுவரை அருகிலிருந்து பார்த்த என்னை அதிரச்செய்தது.

அவசியம் கருதி பள்ளியில் ஏதாவது சயின்ஸ் எக்ஸிபிஸனுக்கோ, ஆர்ட் கேலரிக்கோ அழைத்துச் செல்ல நேர்ந்தால், பெரும்பாலும் அக்கா மாதிரி தோற்றம் கொண்டிருக்கும் அதே வகுப்பு பெண்களோடே அவள் நடந்து போக ஆரம்பித்தாள். சாலையில் நடக்கும் போதோ, இல்லை எக்ஸிபிஸனிலோ இளம் வயது ஆண்களை பார்க்க நேர்ந்தால் அதிகமாய் வெட்கப்பட்டார்கள். தன்னுள் குழுமி சிரிப்பொலி எழுப்பினார்கள். ஸ்ஸ்ஸ், எங்க இருக்கோம்னு நினைச்சிக்கோங்க, இதொன்னும் உங்க வீடில்ல என்று டீச்சர்கள் பக்கமிருந்து எச்சரிக்கை வரும்போது தலை குனிந்து வருந்தும் பாவனை செய்தார்கள் / செய்தாள். சிறுமிகள் போல் தோற்றமிருப்பவர்களை அந்த குழு ஏளனமாய் பார்த்துச் சிரித்தது.

பத்தாம் வகுப்பு முடிந்து பதினோராம் வகுப்பு தொடங்கியபோது கடந்த வகுப்பில் படித்தவர் பாதிபேர் வெவ்வேறு பள்ளிகளுக்கு போக, வீட்டருகில் பள்ளியிருந்தவர்களில் பாதிபேர் எடுத்த மார்க்குக்கு இந்த ஸ்கூலில் இரண்டாவது க்ரூப் கூடிவருவதே பெரிய விஷயம் என்பதாலும், பி செக்‌ஷன், இங்கிலீஷ் குரூப் என்று ஜம்பஸ்தாக சொல்லிக்கொள்ளலாம் என்பதாலும் அவ்வகுப்பில் பயின்ற ஏனையோர் ஒன்று கூடி சயின்ஸ் க்ரூப்பையே தேர்ந்தெடுத்தார்கள். பத்தை தொடர்ந்து பதினொன்றிலும் அக்கா, சிறுமி வேறுபாடுகள் தொடர்ந்தது.

பதினோராம் வகுப்பின் தொடக்கத்திலேயே அவள் தன் வீட்டு விசேஷத்துக்காக எண்ணூரிலிருக்கும் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு செல்வதாக வெள்ளிக்கிழமையே வகுப்பு டீச்சரிடம் விடுப்பு சொல்லிவிட்டாள். போனவள் திங்கள் போய், செவ்வாய் தொடர, புதன்கிழமை தான் வகுப்புக்கு வந்தாள். ஆளே மாறிப்போயிருந்தாள். ஒரே கற்பனை சஞ்சாரம்தான். தீவிர விசாரிப்பிற்குப் பிறகு பெயர் முருகன் என்ற பெயர் வெளியே வந்தது. முதல் நாள் பார்த்தார்களாம். இரண்டாவது நாள் இவளைப் பார்த்தவுடனே பூஜைக்கு வந்த மலரே வா பாடல் அங்கிருந்து பாடப்பட்டதாம். போன விசேஷத்தை முடித்துக்கொண்டு வரும்போது அங்கிருந்து காதலை கையோடு எடுத்து வந்திருந்தாள்.

எப்பொழுதும் தலை கவிழ்ந்து கொண்டோ, இல்லை ஆசிரியர் வகுப்பெடுத்துக்கொண்டிருக்கும் போது கரும்பலகையைப் பார்ப்பது போல் கற்பனையில் சஞ்சாரித்துக்கொண்டோ, இல்லை கீழே குனிந்து கொண்டு நோட்டில் சில “முக்கியமான” இனிஷியல்களை கிறுக்கிக்கொண்டே அதுநாள் வரை இருந்த வந்த சுபா, சுனிதா, துர்கா, கோதை உமா லிஸ்ட்டில் இவளும் சேர்ந்துகொண்டாள். அவர்களோடு சேர்ந்து எடுத்த கிறுக்கல் பயிற்சியில்
இவளுக்கும் நன்றாக ஹார்ட்டின் போடவந்தது. ஃப்ளேம்ஸ் போட்டுப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டாள். கைரேகைகளை இணைத்துப்பார்த்து காதல் கல்யாணம் கைகூடுமா என்று இணையாத கோடுகளை இணைத்துப்பார்த்தார்கள். மீறி அரேஞ்ச்டு மேரேஜ் என்று வந்தாள் ஆங்க், இதெல்லாம் சும்மா என்று கையை உதறிவிட்டுப்போனார்கள்.

வகுப்பின் ஒரு பக்க ஜன்னல் சாலை பார்த்து இருப்பது பெருத்த வசதியாய் போனது. போதாக்குறைக்கு துர்காவின் “ஆள்” என்று சொல்லிக்கொண்ட குள்ளன் ஒருவன் மதிய உணவு இடைவேளையின் போது அந்த சாலையோர ஜன்னல் பக்கமாய் தரிசனம் தர ஆரம்பித்ததும், இங்கேயிருந்து அங்கே பார்த்துவிட்டு, தத்தம் ஆட்களுக்கும் இது போல வரவில்லையே என்பதில் மீதியிருப்பவர்களுக்கு மிகுந்த மனவருத்தம்.
அது கூப்ட்டா வராதுடி, இவன மாறி என்ன வேலையத்தவனா?, எஞ்சினியரிங்க் காலேஜ்ல படிக்கிறாங்கல்ல என்றெல்லாம் ஆளாளுக்கு தன் ஆள் கதை சொல்லிக்கொண்டார்கள்.

ச்சே, எப்பப் பார்த்தாலும் இதுங்க தொல்லை தாங்க முடியலடா என்று சிறுமி தோற்றங்கள் முனக, ஆமா, நீங்கல்லாம் ரொம்ப நல்லவங்க, இந்த வருஷம் ஆன்வல் டே ல உங்களுக்கு பெஸ்ட் ஸ்டூடண்ட் அவார்டு தருவாங்க வாங்கிக்கோங்க என்று அவர்களும் மாறி, மாறி பொருமிக்கொண்டார்கள். பொருமல் சத்தக்காரர்களை விட முனகல் சத்தத்தில் ஆட்கள் பெரும்பான்மை அதிகமிருந்தமையால் யாரோ யாரிடமோ வத்தி வைக்க சாலையோர ஜன்னல் பக்கம் பள்ளி நிர்வாகம் சீல் வைத்துவிட்டது.

பள்ளி விடுமுறைகளும், வார சனிக்கிழமைகளும் ஸ்பெஷல் க்ளாசாக உருவெடுத்து வெளியே போக வழிவகை செய்துதந்தது போலும். போய்விட்டு வந்து கதையோ கதை அளந்தார்கள். இது அவுங்க வாங்கித்தந்தது, இந்தக் கார்டு பாத்தியா, ஏ, ஹார்ட்டின்ல க்ளிப் பாரேன், இந்த சேட்டர்டே ஸ்கூல் இருந்தா ஒரு சுடிதார் போட்டுட்டு வரேன் பார் என்றெல்லாம் மற்றவர்கள் கிளப்பிவிட்டதில் எண்ணூர் விசேஷத்துக்கு போய்விட்டு வந்தவளுக்கு
எப்படியிருந்தது என்று தெரியவில்லை. மிகுந்த மனச்சோர்வாக இருப்பதாய் காட்டிக்கொண்டாள். இவள் சோகத்தைப் பார்த்ததும், மீதியிருப்பவர்கள் கரிசனமாய் விசாரிக்க, பார்த்து ரொம்பநாளாயிற்று என்று சொன்னதில் நிறைய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ஏதாச்சும் போன் நெம்பர் இருக்குமா, இல்லை வீட்டு முகவரி, கடிதம், இல்லையென்றால் தெரிந்தவர்கள் மூலமாக தூது விடலாமா என்றெல்லாம் கிளப்பிவிட்டதில் அவளுக்கு ஏக சந்தோஷம். இந்த வாரம் கட்டாயம் பார்த்துடுவப் பாரேன் என்று கிளி ஜோசியம் சொல்வதைப்போல சொல்லி வைத்தார்கள். கொஞ்சம் உற்சாகம் ஆனமாதிரி தெரிந்தாள்.

திடீரென ஒருநாள் மிகவும் பளிச்சென வகுப்புக்கு வந்தாள். உற்சாகம் மிகுந்திருந்தது. ஸ்கூல் விட்டு வீட்டுக்கு போயிருக்கும் போது அவர் வீட்டிலிருந்தாராம். சும்மா இந்தப்பக்கம் வந்ததில், எல்லோரையும் ”பார்த்து”விட்டு போகலாமென்று தலைகாட்டினாராம். அம்மா அந்தப்பக்கம், இந்தப்பக்கம் போனதில் இவளுக்கு தனியான கவனிப்பாம். முக்கியமாய் அவருக்கும் பிரிவு வேதனையிருந்ததாம். தாடி வளர்த்திருந்தாராம்!!! முன்பை விட மெலிந்திருந்தாராம். அதுவாம், இதுவாம். டாஆஆஆஅய், பக்கத்தில் உட்கார்ந்திருந்த எங்களுக்கு காது புளித்துப்போனது.

ஒரு மாதம் போயிருக்கும், தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் சோக கீதம். மீண்டும் ஜோசியங்கள், ஆறுதல்கள். பொருமல் செட்டில் ஒருவரை மாற்றி ஒருவருக்கு ஆறுதல் சொன்னதில் ஒருவருடம் ஓடிப்போய் கூண்டோடு கைலாசமாய் பனிரெண்டாம் வகுப்புக்கு படையெடுத்தார்கள். வகுப்பில் பலருக்கு போன வருஷம் இந்த மாதிரி இருக்காதீங்க பிள்ளைகளா, ஏதோ பாஸ் பண்ணனும்னு உங்கள பாஸ் பண்ணிவிட்டோம் என்று எச்சரிக்கை வழங்கப்பட்டது. கால் பரீட்சை வந்தது. எடுத்திருந்த மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு பாதிப்பேருடைய பெற்றோர்களையும் வரவழைத்து பேசியதில்
அடுத்த ஓரிரு மாதத்தில் முன்னேற்றம் அதிகமாகியிருந்தது. மதியத்துக்கு மேல் வீசிங்கெல்லாம் வருவதில்லை. எல்லா ஸ்பெஷல் க்ளாஸும் ஒழுங்காய் அட்டெண்டஸ் வந்தது. ஒரிஜினல் நல்ல பிள்ளைகளுக்கே இவர்களை எ.கா சொல்வது மாதிரி நிலைமை தலைகீழாயிற்று. மார்க்கில் இலக்கங்கள் ஏறியதே ஒழிய இறங்கவேயில்லை. எந்த எஞ்சினியரிங் காலேஜ் நல்லா இருக்கும். எவ்வளவு கட் ஆஃப் என்றெல்லாம் திடீர் நல்ல பிள்ளைகள் பேசுவதைப்பார்த்து ஆக்சுவல் நல்ல பிள்ளைகளுக்கு கொஞ்சமல்ல நிறையவே குமைச்சல்.


திடீர் நல்ல பிள்ளைகளில் இருந்தவர்களில், தனது பழைய பள்ளியிலேயே காதல் வயப்பட்டு பதினோராம் வகுப்போடு இந்தப் பள்ளிக்கு மாறியவர்களை விடவும் எங்களுக்கு ஆச்சர்யம், எங்கள் பள்ளியிலேயே எங்களோடவே ஆறாம் வகுப்பிலிருந்து உடன் வந்த எண்ணூர் விசேஷக்காரியின் மாற்றம் தான் அதிசயத்திலும் அதிசயமாயிருந்தது. படிப்பும் கூடவே ஷார்ட்டண்ட், டைப்ரைட்டிங்க் என ஓவர்டைமில் படிக்கத்தொடங்கினாள்.

மற்றவர்களின் ஆள்”கள் எல்லாம் தாடி வளர்த்து கொண்டதாய் தெரிய வர, இவளின் ஆள் மட்டும் இவளுக்கு அண்ணன் முறையாகிப்போனாள். வேறொன்றுமில்லை. சொந்தம் வழி வந்த சொந்தத்தில் உறவுமுறையில் பூஜைக்கு வந்த மலரை பாடியவன் மாமன் இல்லையாம், அண்ணனாம். அடுத்ததாய் ஒரு வீட்டு விசேஷத்தில் எல்லோரும் கூட அப்போதுதான் அது தெரியவந்ததாம். !!!!!!!

எண்ணூர் விசேஷக்காரிக்கு எதிலும் அவசரம்தான். அவசரமாய் காதல் செய்தாள், அதை விடவும் அவசரமாய் அதையும் இதையும் படித்தாள், படிப்புக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் மார்க்கெட்டிங்க் துறையில் இறங்கினாள். நட்பு பெருகியது. பொருந்தாக் காதலொன்று கைகூடி வந்து கல்யாணத்தையும் அவசரமாய் செய்து கொண்டாள். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள், திரும்பிய பக்கமெல்லாம் பணம் பண்ணும் வித்தையைக் கற்றுக்கொண்டாள். நொடிக்கு நொடி மாறும் வாழ்வில் அவள் செய்த ஜாலங்கள் நிறைய.

மின்னல் வேகத்தில் தன் வாழ்நாளில் முன்னேற்றங்களை அமைத்துக்கொண்டதெல்லாம் சென்ற வருடம் இதே மாதம் முப்பத்தொன்றோடு எங்களை விட்டு போகத்தானா மாய வித்தைக்காரியே?

ஆழ்ந்த அஞ்சலிகளோடும், மறவா நினைவுகளோடும்....

22 January 2010

வலி’யின் ஆசை

அனேகமாய் எல்லோருக்கும் தன் பெயர் என்றில்லாது இன்னொரு பெயரும் உடன் வந்து கொண்டேயிருக்கிறது வாழ்வு முழுதும். அஜ்ஜுமா, புஜ்ஜுமா என்று பால்யத்திலோ, உடல் அமைப்பை வைத்து ஒல்லி, குண்டு, மேக்குப்பல்லு, டப்சா, க்ரைண்டர், அரைட்ரவுசர் (இன்னும் அவரவர் உடல் வசதிக்கேற்ப...) என பதின்மத்தில் ஆரம்பித்து பருவம் வந்தபிறகும் நீண்டு, நிலைத்து விடுவதுண்டு. இன்னும் சிலருக்கு அவரின் வித்தியாசமான குணநலன்களே பெயராய் அமைந்துவிடுவதுண்டு, நாம் அறிந்தோ அறியாமலோ நம்மைக்கூட சில சமயம் யாராவது அது கெடக்குது பைத்தியம், லூசு என்று அழைத்திருக்கக்கூடும்! நாமும் யாரையாவது.

மேற்கூறியது எதுவுமில்லாது ஒரு மனிதனை அவன் வாழ்நாள் முழுவதும் வலி’ என்றே அழைத்திருக்கிறீர்களா? இல்லை அழைத்திருப்பதை கண்டிருக்கிறீர்களா?

காக்காவலிப்பு என்ற நோயின் பின்பாதியில் இருக்கும் வலி’ என்பதுதான் மூர்த்தியின் காரணப் பெயர். கரேலென்று, நெட்டை, தாட்டியான உருவம். உயரத்திற்கு ஏற்ற உடம்பு. எப்போதுமிருக்கும் தாடி. மூர்த்தி தன் முப்பத்தெட்டு வயது வரைக்கும் வேலைக்குப் போனதில்லை, குழந்தைகளை கொஞ்சியதில்லை. யாரோடும் சுமுக உறவு பாராட்டியதில்லை.நண்பர்களென்று யாருமில்லை. சும்மாவே பொழுதோட்டினாலும் புறம் பேசியதில்லை.வீட்டிலோ இல்லை சுற்றுவட்டாரத்திலோ எந்தப் பெண்ணையும் தவறான நோக்கத்தில் அண்டியதில்லை.

தட்டு நிறைய சோறு போட்டு திங்கத்தெரியும். கால் பரப்பி தூங்கத் தெரியும். கோபம் வந்தால் கல்லும், பாட்டிலும் வீசி எதிரே இருப்பவர் மண்டையை உடைக்கத்தெரியும். ஏண்டா இப்புடி செய்யுற? என்று வேதனையுடன் கேட்கும் தன் அம்மாவை எல்லா உன்னாலதாண்டி, என்னை ஏன் இப்புடி பெத்த? என்று கேள்வி கேட்டுக்கொண்டே எட்டி உதைக்கத்தெரியும்.

இதையும் தவிர்த்து மூர்த்திக்கு தாயபாஸ் ஆடத் தெரியும். ஆனால் மூர்த்தியோடு தாயபாஸ் ஆட எதிராளிக்கு எப்போதும் கொஞ்சம் மனக்கிலேசம் இருக்கும். இந்த வலிக்காரனுக்கு எப்ப கோவம் வரும்னு யாருக்குத் தெரியும். தொடர்ந்து தோத்துப்போயிட்டான்னா அப்புறம் ஆட்டத்த கலைச்சிட்டு கல்லெறிஞ்சுட்டுன்னு போயிடுவானே என்ற எண்ணமிருந்தாலும் சும்மா போற பொழுதை இப்படி தாயபாஸையாவது ஆடி போக்க வைக்கலாமே என்று ஜோடி போட்டு ஆடுவதுண்டு. காசு வெச்சி ஆடலாமா? ம், அதிகபட்சம் அஞ்சு ரூபா வரைக்கும் ஆடுவார்கள். அதுக்கும் மேல போச்சுன்னா யாராவது ஒருத்தருக்கு அன்னிக்கு பீடி, டீ செலவுக்கு காசு பத்தாது.

அமாவாசை இல்லாமல் தீபாவளி, பொங்கல் வந்தால் மூர்த்தி ஆளே வேறு மாதிரியிருக்கும். சவரமெல்லாம் செய்து கொண்டு, அம்மா வாங்கித்தரும் புதுவேட்டி, சட்டை போட்டுக்கொண்டு தெருவில் குத்துக்கால் போட்டு உட்கார்ந்து பல் குத்திக்கொண்டிருக்கும். மூர்த்திக்கு தினமும் குளிக்கும் பழக்கமெல்லாம் இல்லை. ஆனால் இழுப்பு வந்து எங்காவது தெருவில் விழுந்து மண்ணும், சேறும் ஆகிவிட்டால் அதற்கு மறுநாள் வெந்நீர் வைத்து கட்டாயம் குளித்துவிடும்.

அமாவாசை, பவுர்ணமி வரும் போது மட்டும் குள்ளம்மா கிழவி மூர்த்தியை எங்கேயும் போகவிடாது. எங்கயாவது போயி வலி வந்து விழுந்துட்டான்னா மாடு மாறி இருக்குற அவன யாரு இழுத்தாரது? என்று புலம்பிக்கொண்டே டேய், வீட்ட விட்டு எங்கயும் போகாதடா என்று சொல்லிவிட்டு பால் எடுக்க போய்விடும். இது மாதிரி தினங்களில் எப்போதும் மூர்க்கமாய் இருக்கும் மூர்த்தியைப் பார்க்க பாவமாய் இருக்கும். சோர்ந்து போய் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கும். சிலசமயம் அப்படி உட்கார்ந்த நிலையிலேயே காக்கா வலிப்பு வந்து இழுக்க ஆரம்பித்துவிடும். அந்த மாதிரி சமயங்களில் யாரும் அது கிட்டப்போக முடியாது. மூர்த்தி படுக்கும் இடத்தின் தலைமாட்டில் ஒரு கல் இயந்திரம் வேறு இருக்கும். கொஞ்சம் விட்டால் இழுத்து இழுத்துக்கொண்டு போய் அந்தக்கல்லில் தலை இடிக்க ஆரம்பித்துவிடும். ஆக்ரோஷமாய் முகம் கோணி, வாயில் நுரை தள்ள, கையையும், காலையும் இழுத்து இழுத்து எங்கேயாவது தேய்த்து முட்டிக்காலில் ரத்தம் வரும். மூர்த்தியின் கை, கால், தாடை, முகங்களில் எப்போதுமே ரத்தம் வந்து காய்ந்த புண்களின் பக்குகள் இருந்து கொண்டே இருக்கும். இது மாதிரி மூர்த்திக்கு வலிப்பு வரும் நேரத்தில் வாசலில் இருக்கும் பெண்கள் யாராச்சும் பார்த்தால் மூர்த்தியின் அண்ணன் பிள்ளைகளை உதவிக்குக் கூப்பிடுவார்கள். ஆனால் அவர்கள் எட்டிப்பார்த்துவிட்டு உள்ளே போய்விட, தெருவில் போகும் ஆண்கள் யாராச்சையும் உதவிக்கு கூப்பிட்டு கையையும் காலையும் மாத்திரம் அழுத்திப் பிடிக்க சொல்லுவார்கள்.

அந்தமாதிரி சமயத்தில் குள்ளம்மா கிழவி இருந்தால் அதன் நிலை ரொம்பப் பரிதாபமாக இருக்கும். அய்யோ, மண்டையப் போட்டு இடிச்சிக்கிறானே, கை முட்டிய தேச்சிக்கிட்டானே என்று ஏ வீரம்மா, சாந்தி கொஞ்சம் வாங்கடி, வந்து கொஞ்சம் புடிங்கடி என்று தன் மருமகளையும், பேத்தியையும் கூப்பிடும்., மூர்த்திக்கு இழுப்பு வந்து அடங்கி புஸ், புஸ் என்று மூச்சுவிட்டுக்கொண்டிருக்கும். ஏற்கனவே வாயில் பொங்கி வழிந்து கொண்டிருக்கும் நுரைமுட்டைகள் புஸ், புஸ்செல்லில் உடைந்து ஜொள்ளாய் வடியும். அப்போதுதான் கூப்ட்டியா அத்த என்று வீரம்மாளின் குரல் மாத்திரம் வெளியே வரும். தப்பிப்பதற்கு நேரக்கணக்கு வைத்திருப்பார்கள் போல.

சில சமயம் கிழவி மாத்திரம் கத்திக்கொண்டே காலை மட்டும் அமுக்கிப்பிடித்துக்கொண்டிருக்கும். அதுக்கே கிழவிக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஆரம்பித்துவிடும். வலிப்பு வரும் நேரத்தில் பல சமயம் மூர்த்தி தன்னை மறந்து மூத்திரம் வேறு பெய்து போட்டிருந்த துணியெல்லாம் தொப்பையாய் ஆகிவிடும். வாயில் வடியும் ஜொள் வேறு கழுத்தெல்லாம் வழிந்து வாந்தி எடுத்தா மாதிரி இருக்கும். வலி நின்ற பிறகு கிட்டப்போகவே வீச்சமடிக்கும். அதனைக்கடந்து போகும் அனைவருமே ப்ச்... என்று மூக்கைப்பிடித்துக்கொண்டு போவார்கள். மூர்த்தியே மயக்கம் தெளிந்து வேறு துணி மாற்றினால் தான் உண்டு.

கிழவிக்கு மூர்த்தியைத் தவிர இரண்டு மூத்தபிள்ளைகள் உண்டு. அவர்கள் இருவருக்குமே கல்யாணமாகி குழந்தை குட்டிகளோடு அதே வாசலில்தான் இருந்தார்கள். பின்னே அவர்களுக்கெல்லாம் அது சொந்த வீடாயிற்றே, வேறு எங்கு போவார்கள்? இருவருமே தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்றே இருந்தார்கள். குடிகாரர்களான அவர்களின் குடும்பத்தையே பெரும்பாலும் அவர்களின் மனைவிகள் தான் நடத்தினார்கள், இதில் அண்ணன்களாகவே இருந்தாலும் வலி’யின் வலிகளை அவர்கள் எங்கு பங்கு போடுவது?

ஒரே வாசலில் இருந்தாலும் மூர்த்திக்கு தன் அண்ணன்கள், அண்ணிகள், அவர்களின் பிள்ளைகள் என யாரோடும் ஒட்டுதல் இல்லை. எந்த நிலையிலும் அவர்கள் வீட்டில் சாப்பிடாது. தன் பாகத்தில் இருக்கும் ஒரு வீட்டின் வாடகையும், பணக்கார வீடுகளில் ஆவின் பால் போடுவது, முறவாசல் செய்வது என்பது போன்ற கிழவியின் சொற்ப சம்பாத்தியத்தில் தான் இருவரின் ஜீவனமும். மூர்த்திக்கு பீடி குடிக்கும் பழக்கமுண்டு. அதற்கும் கிழவிதான் வழிவகைகள் செய்தாக வேண்டும். தன் அண்ணன் பிள்ளைகளிலேயே மூர்த்திக்கு தன் இரண்டாவது அண்ணனின் மகளான அன்பரசியைத் தான் பிடிக்கும். அன்பு, அன்பு என்று கொஞ்சம் வாஞ்சையோடு இருப்பது அந்தப் பெண்ணோடு மட்டும்தான். அன்புவும் ஸ்கூல் விட்டு வந்தால், சித்தப்பா சாப்ட்டியா என்று கேட்கும். காரணப்பெயரே தன் பெயராய் நிலைத்துவிட்ட துரதிர்ஷ்டத்தில் அன்பு, தன்னை சித்தப்பா என்று கூப்பிடுவது மூர்த்திக்கு ஒரு ஆறுதல் போல. மூத்த அண்ணன் பிள்ளைகள் கூட, கிழவி வீட்டுக்குள் நுழையும் முன் ஆயா, வலி’ இருக்குதா என்று கேட்டுவிட்டுதான் பின் நுழைவார்கள். அச்சமயம் மூர்த்தி வீட்டுக்குள் இருந்தால் தீர்ந்தது, ஏய். ங்க்....... ஏன் சித்தப்பா ந்னு கூப்ட்டா கொறஞ்சிடுவியா என்று கெட்ட வார்த்தை வசவோடு ஆக்ரோஷமாய் குரல் வந்து வெளியே விழும். பிள்ளைகள் ஒரே ஓட்டம்தான்.

சொந்த அண்ணன்களோடோ, இல்லை வாசலில் இருக்கும் மற்ற சித்தப்ப, பெரியப்ப மக்களோடு ஏதாவது பங்காளி சண்டைவிட்டால் அவ்வளவுதான். வாய் பேச்சு வாயோடு இருக்கும் போதே மூர்த்தி எங்கேயாவது பெரிய கல்லாய் பொறுக்கி குறி பார்த்து வீசி எதிராளி மண்டையைப் பதம்பார்த்து விடும். கல் கிடைக்கவில்லையென்றால் இருக்கவே இருக்கிறது பாட்டில்கள். சில சமயம் வீட்டிலிருக்கும் எண்ணெய் பாட்டில்கள் கூட பறக்கும். மண்டை உடைந்தவர்கள் போலீஸ் கம்ப்ளெயிண்ட் செய்ய, மூர்த்தியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விட்டு வரும். இப்படி அடிக்கடி நேர்ந்ததால், குறிப்பிட்ட இந்த வீட்டு வாசலில் சண்டையென்று புகார் கொடுக்கப்போனால், அந்தப்பக்கமிருந்து ஏதும் ஆக்‌ஷன், ரியாக்‌ஷனே இருக்காது. தெருவில் மத்த பிரச்சினைகள் ஏதாவது இருக்கும் போது ஏரியா போலீஸ்காரர்கள் உள்ளே வந்தால், தன் குத்துக்கால் ஆசனத்திலிருந்து எழுந்து மூர்த்தி சினேகமாய் வணக்கம் சார் வைக்கும். அவர்களும் இப்பல்லாம் சண்ட போடறதில்லல்ல என்று அன்பாய் விசாரித்துவிட்டுப்போவார்கள்.

கோவில்,குளம், அண்டை அசலார் கல்யாணம், சினிமா, அது இது என்று இன்ன பிற விசேஷங்கள் எதற்கும் போவாத மூர்த்தி வீட்டை விட்டு போன இன்னொரு இடம் போலீஸ் ஸ்டேஷன். அதற்குப்பிறகு இன்னொரு இடத்துக்குப் போய் இன்னொரு இடத்துக்கு போனது, அது பின்னர் வரும்.

இப்படி தினமும் தாயபாஸ், மாதமானால் வந்துவிடும் காக்காவலி இழுப்புகள்,பங்காளி சண்டை இழுப்புகள் அதற்குப்பிறகு கிழவி ஏதாவது கேட்டால் அதை இழுத்துப்போட்டு அடிப்பது என்று இழுத்து இழுத்து தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த மூர்த்திக்கு திடீரென்று ஓரு ஆசை முளைவிட்டது. அது ஒன்னும் பெரிய வித்தியாசமான ஆசையெல்லாமில்லை. வழக்கமாய் பருவ வயது வரும் அனைவருக்கும் நடந்தேறக்கூடிய விசேஷம் தான். கல்யாணம்!

என் வயிசோட சின்னதா இருக்கறதெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிது இல்ல, அவ்ளோ ஏன் உன் பேத்திக்குக்கூட கல்யாணமாயிடுச்சு இல்ல எனுக்கு கல்யாணம் பண்ணிவை. கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனவன் பாகம் பிரிச்சிக்கிட்டு ஆளுக்கொரு வீட்டுல வாழறான் இல்ல, எனக்கும் கல்யாணம் பண்ணி வை. கிழவிக்கு இருக்கிற வலி’யெல்லாம் போதாதென்று இதுப் புதுத் தலைவலியாய் போய்விட்டது.

டேய், வேலைக்கும் போவல, பத்தாதைக்கு உடம்புல இந்த இது வேற, யாருடா பொண்ணு குடுப்பா. ஏண்டா இப்புடி பண்ற, ஏதோ வெந்த சோத்த தின்னுட்டு விதிய ஓட்டிட்டு போடா.

ஏன், நான் வேலைக்கி போவமாட்டனா, நானும் பால் எடுக்கறேன், நீ மொறவாசல் செய்யிற வீட்டு அய்யாங்க கிட்ட சொல்லி எனுக்கு ஏதாச்சும் வேலை வாங்கி குடு. செய்யிறேன். அப்றம் ஒரு வீட்ட எழுதிக்குடு. நானும் அவுனுங்க மாதிரி குடும்பம் நடத்தறேன். அவுனுங்க மத்துறம் தான் ஒண்டி சம்பாரிச்சா குடும்பம் நடத்துறானுங்க?

எல்லாஞ்சரிடா, உனுக்கு யாருடா பொண்ணக் குடுப்பானுங்க, மாசத்துல பத்து நாளு அது, இதுன்னு மயக்கமெடுத்து படுத்துக்கிரியடா? எல்லாருக்கும் உன் நெலமை தெரியும். நான் யாரப் போயி பொண்ணக் கேப்பேன், இன்னும் அவ பாவத்த வேற கொட்டிக்கனுமா? என்று கிழவி எங்கோ இருக்கும் வராத பெண்ணுக்காக வாதாடியதில் ஏய், ங்க்....... என்று ஆரம்பித்து மூர்த்தி கேட்ட வசவிலும், போட்ட போடிலும் கிழவிக்கு புத்தூர் கட்டு போடவேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது.

அவ்வப்போது சின்ன, சின்னதாய் இருந்து கடைசியில் கிழவிக்கே வேட்டு வைத்துவிட அண்ணன்கள் தலையிட்டு பெரிய ரசபாசமானதில் கிழவி பெரிய பிள்ளை வீட்டோடு தங்கிவிட்டது. ஆனாலும் அவுனுக்கு கொஞ்சோண்டு சோறு போட்டுருங்கடா என்று புலம்பிக்கொண்டிருக்கும்.

கிழவியால் வந்த வரும்படி நின்றதால், கிழவி நிறுத்திய பால் எடுக்கும் வேலைக்கு வாரிசுதாரராக மூர்த்தி செல்ல வேண்டியதாக போயிற்று. அப்படி செல்லும் வீடுகளில் கிழவியின் பழக்க தோஷத்தில் யாரச்சும் சாப்பிட கொடுத்தார்கள். இப்படியாக கொஞ்சநாள் ஓடிற்று.

என்னதான் ராயப்பேட்டை ஆஸ்பத்திரி மாத்திரைகளை விழுங்கினாலும் மூர்த்திக்கு மாதத்தில் பாதி நாட்களை வலியோடுதான் கடத்தவேண்டியிருந்தது. அப்படியும் இப்படியுமாய் போய், கிழவியின் உடல்நிலையும் மூர்த்தியை கைவிட வேண்டியதாகப் போய்விட மூர்த்திக்கு குடி பழக்கம் தொத்திக்கொண்டது. கையில் காசு இருந்தால் தானே வாங்கி குடிப்பது, இல்லையென்றால் தன்னொத்த தன் சித்தப்ப, பெரியப்ப மக்களிடம் வலியப்போய் டேய், காசு இருந்தா குடுங்கடா என்று இரந்து குடிக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. குடிப்பழக்கம் மூர்த்தியின் வைராக்கியத்தை குறைத்துவிட்டது.

மூர்த்தி ஆக்ரோஷமாய் இருக்கும் தனது கலங்கலான மஞ்சள் நிற கண்களை இடுக்கிக்கொண்டு, இழுப்பு வந்தால் இருப்பதை விடவும் முகத்தை மிகப்பரிதாபமாக வைத்துக்கொண்டு தன் பெரிய உடலை ஒரு மாதிரி குறுக்கி, தாகமாய் இருப்பவன் குடிக்க ஏதாச்சும் இருந்தா ஊத்து தாயி என்பது போல கையை ஒரு மாதிரி மடக்கி, டேய் ஏதாவது குடுங்கடா என்று காசு எடுத்து கொடுக்கும் வரை அவர்களின் சட்டைப்பாக்கெட்டையே பார்த்துக்கொண்டிருக்கும். காசு கொடுக்கும் நிலையிலிருப்பவர்கள் ஏற்கனவே மூர்த்தியின் கைங்கரியத்தால் மண்டையில் தையல் போட்டிருப்பார்கள். இந்த நிலை கண்டபின்பும் காசு தராமல் இருப்பவன் எப்படியும் கல் நெஞ்சினனாகத்தான் இருப்பான். எப்படியா இருந்தாலும் தனக்கு அண்ணன் முறையா வந்துட்டானே என்று தன் மண்டைத்தையலை தடவிக்கொண்டே தந்துவிட்டுப்போவார்கள்.

குடிக்கு காசு கிடைக்கும் வரைதான் இந்த நிலை, குடித்த பின் இருக்கும் மூர்த்தியே தனி. அப்படியிருக்கும் மூர்த்தியைப் பார்க்கும் போது யாரும் அதுக்கு காக்காவலிப்பு வரும் என்று சத்தியம் செய்தால் கூட நம்பமாட்டார்கள். தண்ணியடித்த பின் மூர்த்திக்கு அதிகபட்ச வீராவேசம் வந்துவிடும். அப்படி வரும்போதெல்லாம் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப்போறியா, இல்லியா, இல்லனா அண்ணனுங்க பாகத்தையும் சேர்த்து எனக்கே எழுதி வை, எனக்குதான் ஒடம்புல குறை இருக்குல்ல, நான் இதையே வெச்சு கடைசி வரைக்கும் சாப்பிட்டுட்டு போறேன் என்று அண்ணன் வீட்டிலிருக்கும் கிழவியை வம்புக்கு இழுக்கும்.

ஏற்கனவே கிழவியை வீட்டோடு வைத்துக்கொண்டிருப்பது மருமகள் வீரம்மாவுக்கு உறுத்த, வலி’ வந்து அடிக்கடி சண்டை போடுது, வாசல்ல நின்னுக்கிட்டு அசிங்கசிங்கமா கத்துது என்று கணவனிடம் பிராது கொடுத்து கிழவியை மூர்த்தியோடே திருப்பி அனுப்பிவிட்டாள். கிழவியும் முக்கி, முனகிக்கொண்டு முடிந்தவரை ஆக்கி அரித்து தள்ளாத வயதில் உடைந்த காலை இழுத்துக்கொண்டு மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பித்தது.

மூர்த்தி நிலை பாவமா இல்லை கிழவி நிலை பாவமா என்று அகப்பட்ட நேரத்தில் ஆளாளுக்கு அவர்கள் கதையை அவலாக்கிக்கொண்டிருந்த போது, வேலைக்குப் போய் மதியானம் வந்த கிழவி வெயில் கிறுகிறுப்பில் உள்ளே போய் சோறு பொங்காமல் படுத்துவிட்டது. யாரிடமோ காசு வாங்கி முட்ட முட்ட குடித்த மிதப்பில் மூர்த்தி வீட்டுக்குள் புகுந்து சோறு இல்லையென்று டங்கு, டமாரென்று பாத்திரங்கள் உருளும் ஓசை கேட்டது. மீண்டும் வந்து கிழவியை, அண்ணன்களை, அண்ணியை, இன்னும் இருப்பவர்களை அனைவரையும் திட்டித்தீர்த்தது. வீட்டைத் தன் பேருக்கு எழுதி வைக்க சொல்லும் நியாய அநியாயங்களுக்கு எல்லோரையும் பஞ்சாயத்துக்கு கூப்பிட்டது. கடந்து செல்லும் எவரும் என்ன ஏது என்று கேட்கவில்லை.

பின்னர் தன்னிரக்கம் தாளாமல் அக்கம் பக்கமிருப்பவர்களை நோக்கி எனுக்கு சோறு போடக் கூட யாருமே இல்லையென்று ஓவென்று அழுது தீர்த்தது. பின்பு வீட்டுக்குள் புகுந்து தடாலென்று கதவு சாத்தும் சத்தம். மீண்டும் பாத்திரங்கள் உருளும் சத்தம். உளறல் சத்தம் என்று இரவு போய் காலை வந்தது. வெளியே படுத்திருந்த கிழவியும் அப்படியே எழுந்து வேலைக்குப் போய்விட்டது. எல்லோரும் தத்தம் வேலைகளைப் பார்க்கப்போய்விட்டு சோற்றுக்கு வீடு வந்த மதிய நேரத்தில், அய்யோ, எந்தலையில மண்ண வாரிப்போட்டுட்டானே என்று கதவைத்திறந்த கிழவியின் பெருத்த ஓலக்குரல் கேட்க, வாய்க்கு போன சோறு வயிற்றுக்கு போகாமல் வாசலிலிருக்கும் அனைவரும் வெளியே ஓடிவந்தார்கள். ஆஸ்பத்திரிக்கு எடுத்துப்போக மூர்த்தியின் தடித்த கழுத்திலிருந்த கிழவியின் பழைய புடவையை அறுக்கமாட்டாமல் அறுத்தார்களாம். வலி’ செத்துப்போச்சு, வலி’ மாட்டிக்கிச்சு என்று பேசிப்பேசி தீர்த்தார்கள்.

கடைசியாய் மூர்த்தியின் உடல் மார்ச்சுவரிக்குப்போய், மயானத்திற்குப்போனது. கிழவி மாத்திரம் வலி’, டேய் வலி’ நீ ஒதைச்ச காலு புண்ணுக்கூட ஆறலியேடா என்று செத்துப்போன மூர்த்தியை வலி’ந்து வலி’ந்து கூப்பிட்டுக்கொண்டிருந்தது.

18 January 2010

தூயோன் - கோபிகிருஷ்ணன்

மனநிலைகளை ஈடுகட்டப் பொருளால் என்னமோ முடியப்போவதில்லை. சந்தோஷத்துக்கு ஐம்பது ரூபாயும், எரிச்சலுக்கு ஐம்பத்து ஐந்து ரூபாயும் என்று கணக்கு வைத்துக்கொண்டால் உணர்வுகளுக்கு மதிப்பே அற்றுப்போய்விடும் //

என் தன்மைக்கான காரணங்களைத் தேடி அலைவது கூடுதல் அநீதி. எதையும் நியாயப்படுத்திக்கொள்ள விழைவதே விஷயத்தில் அநியாயம் உறைந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். இயற்கையிலேயே நான் அயோக்கியனாக இருந்தால், அப்படியே இருந்துவிட்டுப்போகிறேனே.

இப்படி முதல்கதையான தூயோனில் எடுத்த வாசிப்பு ஓட்டம் விட்டுவிட்டு ஒரு நான்கு மணி நேரத்துக்குள் கடைசி கதையான எதிர் - உளவியலுக்கு கொண்டு வந்து நிறுத்தியது.

கதையை எங்கும் தேடாமல், வார்த்தைகளுக்கும் மெனக்கெடாமல் இயல்பாய் ஒரு நகைச்சுவையை ஓடவிட்டு தன் வாழ்வனுபவத்தையே பெரும்பாலும் சிறுகதைகளாக்கியிருக்கிறார்.

இரண்டாவது கதையான தெய்வீக அர்ப்பணம், எல்லாம் அவன் செயலாக இருப்பதாகக்கொள்ளப்படும் போது ஓர் உயிரிழப்பும் கூட வாழ்க்கைமுறையை மாற்றிவிடக்கூடிய வலிமையை இழந்துதான் விடுகிறது // என்பதாய் முடியும். படித்தபின் ஒரு பெருமூச்சை மட்டுமே விடமுடிந்தது.

வயிறு என்ற சிறுகதையில், யதார்த்தத்தை உண்மையிலேயே யாருமே கண்டதில்லை.தத்தம் ஆளுமைக்குத் தகுந்தாற்போல் யதார்த்தத்தின் சுய விளக்கங்களையே காண்கின்றனர். என்று சொல்லியிருப்பார்.

புயல் என்ற சிறுகதையில், புயல் மையம் கொண்ட நாளொன்றில் கணவன் வீட்டிற்கு தாமதமாக வருவான், உள் நுழைந்தவுடன் வேலைக்குச் சென்று வந்த மனைவி ஏன் இப்படி தினமும் லேட்டா வர்றீங்க என்று எரிந்து விழுவாள். இப்படி எரிந்து விழுவதற்கான காரணத்தை அவளிடம் கேட்டறிந்த போது அவள் அன்று முழுவதும் தன் வேலை செய்யுமிடத்தில், வேலை முடித்து குழந்தையை கிரச்சிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், வீட்டிற்கு வந்தபின் ஏற்கனவே அவ்வீட்டில் குடியிருந்துவிட்டுப்போன ஒரு ஆடவன், தெருவில் இருந்த சில காலிப்பயல்கள் என இவர்கள் அனைவரும் மூலமாக தனக்கு நேர்ந்து சிற்சில பாலியல் தொந்தரவுகளை சொல்லுவாள்.

மனைவி சொல்ல சொல்ல அனைத்தையும் கேட்ட கணவன் அவளை நோக்கி, சமூகம் இன்னிக்கி உன்கிட்ட அதோட விஸ்வரூபத்தைக்காட்டியிருக்கு. அவ்வளவுதான் தூங்கு. எல்லாம் சரியாப்போகும் என்பான். அதற்கு மனைவி அழுகையினூடே உலகத்தைத் தெரிஞ்சுக்கனும்னீங்க, புரிஞ்சிக்கிட்ட வரைக்கும் சகிக்கலை என்பாள்.

முடிவிலாத யோசனைகளூடே கணவன் கடைசியில் தன் நடத்தையையும் கொஞ்சம் யோசித்து, தான் எந்தப்பாவமும் செய்யாத புண்ணியாத்மா அல்ல, ஆனாலும் பெண்களிடத்து அசிங்கமாகவோ, விகாரமாகவோ நடந்து கொண்டவனுமல்லன், பெற்றவர்கள் பண்ணிய பாவம் பிள்ளைகளைச் சேரும் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன், ஆனாலும் கணவன் செய்த பாவம் மனைவி தலைமேல் விடியும் என்று எந்தப்பெரியாரும் சொன்னதாக கேள்வி இல்லையே என்பதாய் நினைத்து வெறுப்பின் உச்சத்தில் சாக்கடையில் உழலும் பன்றிகள் என்று சொல்லி தன் இயலாமையை தீர்த்துக்கொள்வான்.

உடைமை என்ற சிறுகதையில், வீட்டு உரிமையாள கிழவியின் அராஜகத்தை தட்டிக்கேட்க இயலாத ஒண்டுக்குடித்தனவாதியின் இயலாமைகளே பிரதிபலிப்பதாய் ஒரு இடத்தில் // சூழல் ஒவ்வாததுதான். ஆனால் செத்தா போய்விடமுடிகிறது ? // என்ற ஒரு ஒற்றை வாக்கியம் வரும். படிக்கும் போது நிறைய இடங்கள் புன்னகைக்க வைத்தன, அதில் பிரதான இடம் இது.

இதே கதையில் தன் குழந்தையைப் பற்றி சொல்லும் ஒரு இடத்தில் // தகப்பன் என்ற ஸ்நானம் வந்துவிட்டாலே என் “செய்” களை, என் “செய்யாதே”க்களை அவளுள் புகுத்துவேன். என் அளவுகோல்களை அவளுக்குக் கற்பிப்பேன், என் கொள்கைகளை அவளுக்குப் போதிப்பேன். வன்முறைதானே இவையெல்லாம் ? (இது தகப்பனுக்கு மட்டுமான வாசகமல்ல, இப்போதைய சூழலில் பெற்றோருக்கான வாசகம்)

இந்தக் கதையின் இறுதியில் கலீல் ஜிப்ரான் வரிகளை தான் நினைப்பதாகவும், ஆனால் தன் மனைவிக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமலிருப்பதாகவும் பின்வரும் வரிகளை நினைவூட்டுவார்.

...”உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவைகள் உங்கள் மூலமாக உலகில் ஜனிக்கின்றன. ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவைகள் உங்களுடனிருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவைகள் அல்ல...”

இப்படியாய் வழி நெடுக நிறைய எள்ளல்களையும், யோசிக்கத்தூண்டும் வரிகளை உட்புகுத்தி வைத்துக்கொண்டு சடங்கு, இரு உலகங்கள், விழிப்புணர்வு, அம்மன் விளையாட்டு,..... என சில கதைகள் செல்கின்றன.

இதுவும் சாத்தியம் தான் என்ற ஒரு சிறுகதை, மிக அழகாக நேர்த்தியாக மிக அழகான ஒரு பெண்ணுக்கும், ஒரு ஆடவனுக்கும் பணியிடத்து தோன்றி வளரும் நட்புணர்வைச் சொல்கிறது.

ஓர் உறவுக்குப் பெயர் சூட்டிப் பாதுகாப்பை தேடிக்கொள்வதும் வரைமுறை வகுப்பதும் எரிச்சலூட்டும் பயந்தாங்கொள்ளித்தனம். தோழமைக்கு ஒரு பழிப்பு; ஒரு கொச்சைப்படுத்துதல், என்னைப்பொறுத்த மட்டில் நிர்ப்பந்திக்கப்படாத அனைத்து உறவுகளும் புனிதமானவையே என்று தன் தோழியுடனான கடைசி சந்திப்பின் போது கதாபாத்திரம் சொல்வதாய் வரும்.

இந்தத் தொகுப்பில் இருக்கும் கடவுளின் கடந்த காலம் என்ற சிறுகதை, அழியாச்சுடர்கள் என்ற இந்த வலைப்பூவில் இதோ இங்கேயிருக்கிறது.

கடைசி கதையான எதிர்-உளவியல் என்ற சிறுகதையில் மனநோயாளி என்று ஆலோசனைக்காக வரும் ஒருவருக்கும், ஆலோசகரான ஒருவருக்குமான உரையாடலே கதை. சுவாரசியமான உரையாடலில் மிக சுவாரசியமானதாக தோன்றுவது //தங்களைத் தாங்களே விமரிசித்துக்கொள்ளும் பழக்கம் உங்களிடமுள்ளதா? அப்படியிருந்திருந்தால் என்னை நாட வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏற்பட்டிருக்காது என்றே தோன்றுகிறது.//

புத்தகத்தின் பெயர்: தூயோன் பதிப்பகம்: தமிழினி விலை: ரூ. 40/-

இயல்பாய், மென்மையாய் ஊடுருவிய சிறுகதைகளின் பாதிப்பு தாளாமல் கோபிகிருஷ்ணனின் எழுத்தின் பால் உள்ள உந்துதலால் கூகிளித்ததில், திரு.ஜ்யோவ்ராம் சுந்தரின் “மொழிவிளையாட்டு” வலைப்பூவில் அவரின் நேர்காணல் தொகுப்பு ஒன்றையும் முழுதுமாக வாசிக்க நேர்ந்தது. மிகச்செறிவான ஒரு எழுத்தாளுமையின் வாழ்வியலை நான்கு பகுதிகளாக (தட்டச்சு செய்து, கடந்த ஏப்ரல் மாதம் தன் வலைப்பூவில் இட்டது இன்றுதான் என் கண்ணில் பட்டது).

கோபிகிருஷ்ணனின் சிறுகதைகளை விடவும் மிகவும் வலி நிறைந்ததாய் இருந்தது அந்தப் பகிர்வு. (மேலும் அவரின் மற்ற படைப்புகளையும் தேடி படிக்கவேண்டும் என்று ஆவலைத்தூண்டியதும் அதே பதிவுகள் தாம்) அதனை பகிர்ந்தளித்த திரு. ஜ்யோவ்ராம் சுந்தருக்கும், அதனை அவருக்குப் பகிர்ந்த திரு. சிவராமனுக்கும் மிகுந்த நன்றிகள்.