26 November 2008

அழுத அமித்து, ஆச்சர்யப்பட்ட அம்மா

நேற்று இரவு நானும் அமித்துவும் விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது அவள் அங்கிருந்த சின்ன நகைப்பெட்டியைக் கேட்டாள். அது வெறும் பெட்டிதான், அதை திறந்து மூடி திறந்து மூடி விளையாடிக்கொண்டிருந்தாள். திடீரென பயங்கர அழுகை. என்னவென்று பார்த்தால் அவளின் சின்னஞ்சிறு விரல் அப்பெட்டியின் பின் பக்கம் மாட்டிக்கொண்டிருந்தது. குழந்தைக்கு வலி தாங்கவில்லை போலும், அழுது கொண்டிருந்தாள். நான் உடனே அவளின் விரலை விலக்கிவிட்டு பாக்ஸை கையில் எடுத்து அதை அடிப்பதை போல் பாவனை செய்தேன். சட்டென அழுகையை நிறுத்தி விட்டு என்னையும் பாக்ஸையும் பார்த்தாள். மறுபடி அழுதாள். உடனே அப்பெட்டினை கையில் எடுத்து பாப்பாவை அழ வெச்சியா நீ, போ நீ வேணாம் என்று அந்த பெட்டியை தூக்கி போட்டேன். அது கதவருகே சென்று விழுந்துவிட்டது. அதைப்பார்த்து விட்டு அவளும் அழுகையை நிறுத்திவிட்டாள். மறுபடி விளையாட ஆரம்பித்துவிட்டோம்.
கொஞ்ச நேரம் கழித்து, ம்மா, அந்த பாக்ஸ் எங்கேடா என்று கேட்டேன். சற்று விழித்தாள். உன் கையை நசுக்குச்சே அந்த பாக்ஸ் எங்கடா என்றேன். சட்டென அவள் கதவருகே கையை நீட்டி த்தோ, அத்தோ என்றாளே பார்க்கலாம். என்னால் அதை வியக்காமல் இருக்க முடியவில்லை. அதனால் அவளின் அப்பா வந்தவுடன் சொன்னேன். இன்று அதிகாலை அவளும் அவளின் அப்பாவும் எழுந்து பேசிக்கொண்டிருந்தனர். வழக்கமாய் அவளை கொஞ்சிக்கொண்டே இருந்த அவர், திடீரென அம்மு, அந்த பாக்ஸ் எங்கடா, உன் கையை நசுக்குச்சே அந்த பாக்ஸ் என்று கேட்டாள், சட்டென திரும்பியவள் மீண்டும் சொன்னாள் : த்தோ, அத்தோ என்று கதவருகே கை நீட்டி.
அவரும், நானும் புன்னகைத்துக்கொண்டோம் புள்ள வெவரமாயிட்டு வருவதையறிந்து.

25 November 2008

அமித்துவின் பிறந்தநாள் நன்றி நவிலல்

எனது வலைப்பூவிற்கு வந்து எனது மகளை வாழ்த்திய அனைவருக்கும்,

என் மகளுக்கு முதல் கிஃப்ட் அனுப்பி, போனில் வாழ்த்து சொல்லி மொய் வரவை தொடங்கி வைத்த பப்பு ஆன்ட்டி க்கும்,

என் மகளை நேரில் வந்து வாழ்த்திய மோனிபுவன் அம்மாவிற்கும் (எனது பள்ளிக்கால தோழி)
மற்றும் போனில் வாழ்த்திய எஸ்.கே (பொலம்பிஃபையிங்) விற்கும்,

ஒரு ஸ்பெசல் பதிவிட்ட ஆயில்ஸ் அண்ணாவிற்கும் (அண்ணா கவிதை சூப்பர்)

அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இப்படிக்கு
உங்களின் அன்பில் நெகிழ்ந்த
அமிர்தவர்ஷினி அம்மாவும்,
உங்களின் அன்பில் மகிழ்ந்த
அமிர்தவர்ஷினியும்.

21 November 2008

மருந்து, பூ, கரடி பொம்மை + அமித்து

நான்கைந்து நாட்களாக உடல்நலம் சரியில்லாததால் மருந்து பாட்டிலை பார்த்தாலே அலர்ஜியாகி விட்டது போலிருக்கிறது அமித்துவிற்கு.

டாக்டரிடம் போய் வந்த மறுநாள், அவரின் தாத்தா டேபிள் மேலிருந்த மருந்து பாட்டிலை எடுத்து கையில் வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து, “ஏன்மா, இந்த மருந்துதான் இருக்கே, இதையே ஏன் மறுபடியும் வாங்கிட்டு வந்த” என்றார். நான் இல்லப்பா காலியாகிடுச்சி நெனச்சி வாங்கிட்டு வந்துட்டேன், திருப்பி மருந்து கடையிலியே கொடுத்துடலாம் என்று சொல்லி முடிப்பதற்குள் கீழே எதையோ ஆராய்ந்து கொண்டிருந்த அமித்து அவசரம் அவசரமாய் என் மீது ஏறிக்கொண்டு, சட்டென்று, என் மடியில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள். அவளின் அழுகைக்கு காரணம் இதுதான், எங்கே அவளின் தாத்தா தனக்கு மருந்து கொடுத்துவிடுவாரோ என்று பயந்துபோய் மருந்து பாட்டிலை கையில் எடுத்தவுடன் என்னை நோக்கி ஓடி வந்துவிட்டாள்.
ஆஹா கவனிக்க ஆரம்பிச்சுட்டியா அமித்து.
அதைத்தொடர்ந்தே இதுவும், வீட்டில் இருக்கும் ஒரு பெரிய கரடி பொம்மையை எடுத்து தனது காலருகில் வைத்துக்கொண்டு, பாலாடையை கையில் வைத்துக்கொண்டு ந்தா, ந்தா என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
மருந்துகளின் தாக்கம் அமித்துவிடம் நிறையவாகிவிட்டது போலும்.
வீட்டிற்கு போனவுடன் சேரின் மீது எனது ஹேண்ட்பேக் மற்றும் லன்ச்பேக் ரெண்டையும் வைத்துவிட்டு அவளிடம் கொஞ்சிக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் போனவுடன் அவள் என்னிடம் அத்தோ தோ என்று கையை காட்டினாள், சரி என்று ஹேண்ட்பேக்கை கொடுத்தேன், அவளால் ஜிப்பை திறக்க முடியவில்லை, அதை ஓரங்கட்டி விட்டு மீண்டும் அத்தோ தோ தோ என்று கையை நீட்டினாள். இப்போது லன்ச்பேக், அதை எடுத்துக்கொடுத்தேன், அது ஸ்டிக்கி டைப். கையை வைத்தவுடன் தானாகவே பிரிந்து விட்டது. அப்புறம் அதனுள்ளே இருந்த உருப்படிகளெல்லாம் வீடெங்கும் இரைபட ஆரம்பித்தது.
அமித்துவுக்கு இதுதான் வேணும்னு கேக்க தெரிஞ்சிடுச்சுய்யா.
வீட்டில் இருக்கும் வாடாமல்லிப் பூவை அவரின் தாத்தா பறித்து அவளிடம் கொடுத்திருந்தார். அதை அவள் கொஞ்ச நேரம் வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். பின்பு என்னிடம் நீட்டியபடியே ந்தா, ந்தா என்றாள். நான் நீயே வெச்சுக்கோம்மா என்றேன். உடனே அவள் பூ வைத்திருந்த கையை எடுத்து தலையில் வைத்துக்கொண்டாள்.
கொஞ்ச நேரம் வியந்துவிட்டு, பின்பு எனக்குள் சொல்லிக்கொண்டேன், உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேன் அமித்தும்மா.
நேற்றிலிருந்து ஒரு சின்னக் கரடி பொம்மையை கையில் வைத்துக்கொண்டு என்னை நோக்கி ப்பூ, ப்பூ, ம், ம் , ப்பூ என்றாள், எனக்கு ஒன்னுமே புரியவில்லை. உடனே அவளின் தாத்தா, ம்மா, ஆயாவுக்கு ப்பூ காட்டு என்றாள். உடனே அவள் ஆயாவைப் பார்த்து கரடி பொம்மையைக் காட்டி ப்பூ, ப்பூ என்றாள். உடனே அவர்கள் பயப்படுவது போல் பாசாங்கு செய்தார்கள். அதற்கு அமித்துவிடம் பயங்கர ரியாக்‌ஷன், சிரித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் அதையே செய்து கொண்டிருந்தார்கள் இருவரும்.
அவர்களையே ரொம்ப சந்தோஷமாகவும், கொஞ்சம் வருத்தமாகவும் பார்த்துக்கொண்டிருந்தேன் எனது இயலாத தாய்மையை நொந்தபடி.

20 November 2008

மௌனம்


உனக்கெதிரான

எனது மௌனங்களை

எப்போதும்

எனது எதிர்ப்புக்கானதில்லை

என்று எண்ணிவிடாதே


ஆழ்கடலின்

மௌனம்

பேரமைதிதான்

கூடவே

பேரழிவும்.

போஸ்டர்

”கடுகிற்குள் கடலை புகுத்தும் ஆற்றலுடையவர் சின்னைய்யா”
இந்த போஸ்டர் வாசகம் இரு நாட்களாக என் கண்ணில் பட்டு கவன ஈர்ப்புக்குள்ளாகிறது.
மேற்கண்ட இவ்வாழ்த்துக்கும், வாசகத்துக்கும் உரித்தானவர் நமது F.M. ப.சி. யின் தவப்புதல்வர் கார்த்திக் சிதம்பரம். அவரின் பிறந்த நாளுக்கு ஏதோ ஒரு தொண்டரடிப்பொடி போட்ட போஸ்டர் போலிருக்கிறது. இதில் பாராளுமன்றம் தவப்புதல்வரை கூப்பிடுகிறது. ஆமாங்க அப்படிதான் போஸ்டர்ல இருந்தது. போஸ்டரில் ஒரு பக்கம் பாராளுமன்றம், எதிர்பக்கம் கா.சி. வேட்டி புரள நடக்கிறார் சாரி வருகிறார், நடுவில் அவர் அடிவருடி நம் தொண்டரடிப்பொடி கை கூப்புகிறது, மேலே மேற்கண்ட வாசகம் , கீழே ஏகப்பட்ட உ.செ, ம.செ., ப.செக்களின் பெயர்கள்.
எனக்கு ஒரு டவுட்டு: அது என்னன்னா, கடுகிற்குள்ளயே கடலை புகுத்துறவர கையில் வெச்சிக்கிட்டு ஏன் நதிநீர் இணைப்புத் திட்டத்த செயல்படுத்தாம இருக்காங்க.
ஏங்க இப்படி ஆற்றலயெல்லாம் வெச்சிக்கிட்டு வேஸ்ட் பண்றீங்க சின்னய்யா, அடுத்ததா தேர்தல்ல குதிங்க.
இந்த போஸ்டர பாத்தவுடனே எனக்கு தோன்றிய இன்னொரு இன்சிடெண்ட்.
சில நாட்கள் சே இருக்காது, வருடங்களுக்கு முன்னர், திரு. G.K. வாசன் அவர் எம்.பி (அப்படித்தான் நினைக்கிறேன்) யாகி பாராளுமன்றத்திற்கு போகும் நிகழ்வு என்று நினைக்கிறேன். எல்லா தொண்டரடிப்பொடிகளும் சேர்ந்து மகா, மெகா போஸ்டர் ஒன்னு போட்டிருந்தாங்க. அந்த போஸ்டரில் இருந்த வாசகம் எனக்கு நல்லா நினைவிலிருக்குது.
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும், ஒரு மாசுக்குறையாத மன்னவர் மகனென போற்றி புகழ வேண்டும்.
இப்படித்தான் அடிச்சிருந்தாங்க அந்த போஸ்டரை. இதைப் பார்த்த எனக்கு சிரிப்பு, ஆத்திரம், அவமானம் என பொங்கி வர வழக்கம் போல எதுவுமே செய்யல, பேசிப் பேசி ஆற்றாமைய தீர்த்துக்கிட்டேன். அந்த வார ஜூ.வி, இதை எழுதி அதோட ஆற்றாமைய சொல்லிடுச்சி.
ஆக ஆற்றாமைக்கு ஆற்றாமை சரியாய்ப்போயிடுச்சி.
ஆனா, தமிழ் கூறும், பேசும், பாடும், நல்லுலகில் இருக்கும் தொண்டரடிப்பொடிகளே,
போஸ்டரடிங்க. ஆனா அதப் பாத்து அடிங்க. நீங்க செய்யுற ஸ்பெல்லிங் மிஸ்டேக் உங்க தலைவர்களின் இமேஜை (!?!) பாதிக்குதுல்ல.
அதனால போஸ்டரடிக்கறச்ச கொஞ்சம் பாத்து, வழக்கம் போல ஆவேசப்படாம, வாசகத்த போடுங்க.
நீங்க ஒன்னுக்கெடக்க ஒன்ன எழுதிப்போட்டு அதனால அவுங்க இமேஜ டேமெஜ் ஆக்காதீங்க.
ஆனா இப்ப மேட்டர் மேலிருப்பது அல்ல.
இப்ப பெரும்பான்மையா நமக்கு வர அபீஷியல் மெயில்ல இந்த வாசகத்த பாத்திருப்பீங்க.
let us consider the Environment before printing this e-mail, பக்கத்துல ஒரு மரத்தோட படம் இருக்கும்.
அதாகப்பட்டது, நாம எவ்வளவுக்கெவ்வளோ பேப்பர் யூஸ் பண்றோமோ அதுக்கேத்தா மாதிரி பேப்பர் தயாரிக்க மரக்கூழுக்காக மரத்தை வெட்டுவாங்கோ. சோ நாம கொஞ்சமா பேப்பர் உபயோகிச்சா கொஞ்சமா மரத்த வெட்டுவாங்க, நெறைய உபயோகிச்சா நெறைய வெட்டுவாங்க. மரம் இல்லனா மழை வராது, இந்தக் கதையும் நமக்கு தெரியும்.
(வெட்டுறதும், வெட்டுப்படுவதும், வெட்டுப்படறத பாக்கறகும் நமக்கு சகஜந்தான் வெச்சுக்கோங்க. )
இதுதான்:
“நாம பிரிண்ட் எடுக்கும் A4 sizeக்கு நாம இவ்வளவு யோசிக்கறப்போ, இந்தப் போஸ்டரெல்லாம் அடிக்க எவ்வளவு பேப்பர் செலவாகும், அதற்கு எவ்வளவு மரங்கள் வெட்டப்படும்.
முனியம்மா செத்தா போஸ்டரு, பதினாறாம் நாள் காரியத்துக்கு போஸ்டரு, செல்வி வயசுக்கு வந்தா போஸ்டரு (அடக் கருமமே) , செல்வி மஞ்ச நீராட்டுக்கு மினிஸ்டர் வந்தா போஸ்டரு.(அடக் கண்றாவியே)
இப்படி போஸ்டர் மேல போஸ்டர் அடிக்கறதனால சாரி ஒட்டுறதனால ப்ரயோஜனம் யாருக்குமே இல்ல. (போஸ்டர் அடிக்கறவனுக்கும், ஒட்டுறவனுக்கும் தவிர)
அதனால இப் பூவுலகில் மன்னிக்கவும் போஸ்டர்வுலகில் வாழும் மக்களே,
எதாகப் பட்டதாக இருந்தாலும், எந்த வகையில் எந்த வடிவத்தில் பேப்பர் உபயோகிக்க நேர்ந்தால் உபயோகிக்கும் முன்னர் கொஞ்சம் யோசியுங்கள்.
LET US CONSIDER THE ENVIRONMENT BEFORE TAKING PRINTING OUT.

14 November 2008

SCRIBE

புலம்பும் எஸ். கே கேட்டுக்கொண்ட படியால் இப்பதிவு.

லயோலா காலேஜில் படித்துக்கொண்டிருக்கும் கண்பார்வையற்ற, பார்வைக் கோளாறினால் பாதிக்கப்பட்ட, கைகளினால் பேனா பிடித்து எழுத முடியாத நிலையிலுள்ள மாணவர்களுக்கு அவர்கள் சொல்வதை அவர்களின் சார்பாக நாம் எழுதவேண்டும்.
S.K.வின் பதிவில் பார்த்து திரு. மேத்யூ (பரீட்சை ஒருங்கிணைப்பாளர்) அவர்களுக்கு போன் செய்ய அவர் சற்று நேரத்தில் எனக்கும் மெயில் செய்தார். 2 நாட்கள் கழித்து எக்ஸாம் டைம்டேபிள் அனுப்பினார். நான் இதனை என் உடன் வேலை செய்யும் நண்பிகளுக்கும், மற்ற எனது தோழ, தோழிமார்களுக்கும் அனுப்பினேன். இதில் நான் உட்பட நால்வர் எழுதினோம்.
முதல் எக்ஸாம் எழுதியது ராகினி. என் உடன் பணிபுரிபவர். இவர் தேர்ந்தெடுத்தது ஆங்கிலம்.
ஆங்கிலப் பரிட்சைதான் எழுதினார். அவருக்கு வந்த மாணவர் கொஞ்சம் கொஞ்சமாக கண்பார்வை மங்கும் நிலைக்கு வருபவர். உதாரணமாக பேப்பர் வெள்ளை என்பது அவருக்கு தெரியுமாம், ஆனால் எழுத்துக்கள் தெரியாதாம். இதை அவரே சொன்னதாக ராகினி சொன்னாள்.
தமிழில் அவர் சொன்னதை இவள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதியதாகவும் சொன்னாள்.
இரண்டாம் எக்ஸாம் எழுதியது சௌமியா. இவரும் என் உடன் பணிபுரிபவரே. இவர் தேர்ந்தெடுத்தது பிசினஸ் மேத்ஸ். ஆனால் எழுதியது தமிழ் தேர்வு. பிஸினஸ் மேத்ஸுக்கு என்று ஒரே ஒரு கேண்டிடேட்தான் இருந்தாராம், அவர் அன்று வராத காரணத்தினால் தமிழ் தேர்வு எழுதினார். (ஒரு கேண்டிடேட்டிற்கு இருவர் பரிட்சை எழுதலாம், அதாவது 1 1/2 மணிநேரம் ஒருவர், மீதி 1 1/2 மணிநேரம் இன்னொருவர். எழுதுபவர் நிறைய இருந்தால் இது போல் செய்வார்களாம்.)
மூன்றாவது முறை தோழர் சுரேஷுடையது. அவருடன் அனுபவம் பகிரமுடியவில்லை.
நான்காம் முறை என்னுடையது. நான் எழுத தேர்ந்தெடுத்தது பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன். ஆனால் தமிழ் தேர்வு எழுத சொன்னார்கள். எனக்கு வந்த மாணவருக்கு கண்பார்வை மற்றும் உடல்நிலை எல்லாம் நன்றாக இருந்தது. அவருக்கு டிஸ்லெக்‌ஷியா என்பது பின்புதான் தெரிந்தது. அவரின் தாய் பரிட்சை -ஹாலுக்கு வந்து அவருக்கு சற்று திக்குவாய் இருப்பதாகவும் அவர் மெதுவாகத்தான் சொல்லுவார் எனவும் சொன்னார்.
எழுதிய தேர்வின் பெயர்: இந்திய ஆட்சிப்பணியில் தமிழ்
கேள்விகளை அவரே வாசித்துக்கொண்டார். எந்த கேள்விகளுக்கும் பதில் சரியான முறையில் தெரியாததால் மிகவும் சிரமப்பட்டார். சில 2 மார்க் கேள்விகளுக்கு நானே சொந்தமாய் பதிலளித்தேன். கேள்விகள் கொஞ்சம் ஈஸியாக இருந்த்தால்.
அடுத்தாற் போல் 5 மார்க் கேள்விகள் எட்டுக்கு விடையளிக்க வேண்டும். பகுதி - ஆ என்று பேப்பரில் எழுதிவிட்டு நான் காத்திருந்தேன். அவர் ஒரு கேள்வியைக் காட்டி இதற்கு நீங்கள் உங்கள் சொந்த நடையில் பதிலளித்து விடுங்கள், அதற்குள் தான் அடுத்த கேள்விக்கான பதிலிற்கு தயார் செய்வதாக கூறினார். எனக்கு சற்று ஆச்சர்யமாகவும், கோபமாகவும் இருந்தது.
அந்தக் கேள்வி மொழிபெயர்ப்பு சம்பந்தமாக இருந்தது. இப்படியே பகுதி - ஆவில் 5-க்கு விடையளித்தோம், இரண்டினை அவர் சொல்லி நான் எழுதினேன், மீதி மூன்றினை நானே எழுதும்படி நேரிட்டது.
அடுத்தது பகுதி - இ , 10 மார்க் வினாக்கள். இதில் ஒரு கேள்வி திருக்குறள் சம்பந்தப்பட்டதாக வந்தது. அவர் அந்தக் கேள்வியை என்னை எழுதச் சொல்லிவிட்டார். சரி முதலில் மறுத்து பின்பு எழுதிவிட்டேன். பின்பு தூது, பரணி, உலா என்ற சிற்றிலயங்களைப் பற்றிய கேள்வி. இதற்கு அவரே பதிலளித்தார். பதில பாடபுத்தகத்தில் இருப்பதில் சிறிதும் சார்ந்தார்போல் இல்லை. பின்பு மத்த கேள்விகளுக்கு விடை தெரியாது எனக் கூறினார். நான் நேரமிருக்கிறது. நீங்கள் இன்னும் சற்று நேரம் யோசித்து விட்டு விடையளியுங்கள் என்றேன். அதற்கு அவர் இல்லை என்று சொல்லிவிட்டார். பின்பு ஹால் சுப்பர்வைசரைக் கூப்பிட்டு அவர் முடித்து விட்டதாக சொன்னேன். சரி அவர் என்னிடமிருந்து பேப்பரை வாங்கிக் கொண்டார். பேப்பரை கொடுத்துவிட்டு திரும்பி பார்த்தால் அவரைக் காணோம். நான் அவரின் தாயாரைப் பார்க்கலாம் என்று சற்று நேரம் தேடினேன். ஆனால் தென்பட வில்லை.
பின்பு சற்று நேரம் திரு. மேத்யூவிடம் பேசினேன். அக்கா, அக்கா என்று வாஞ்சையுடன் பேசினார். visually challenged students எவ்வாறு படித்துக்கொள்வார்கள் என்று கேட்டதற்கு, வகுப்பறையில் ஆசிரியர் பேசுவதை ரெக்கார்ட் செய்தும், பின்பு பாடங்களை மற்ற மாணவர்களையோ அல்லது பிறரையோ பேச சொல்லி கேட்டு ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்டு பின்பு அதைப் புரிந்துகொள்வார்கள் என்றார்.
இதுபோல் ரீடர்களும் தேவைப்படுவார்களாம். பெரும்பாலும் நமது தொலைபேசி என்னை நாம் எழுதும் மாணவர்கள் கேட்டு வாங்கிக்கொள்வார்களாம். ரீடர் தேவைப்படும் போது அவர்களே நமக்கு போன் செய்வார்களாம். மேலும் நான் பரிட்சை எழுதிய மாணவன் “டிஸ்லெக்சியா” என்று சொன்னதும் அவர்தான்.அம்மாணவரிடம் சற்று உரக்கப் பேசினால், கூட்டமாக இருக்க நேர்ந்தால் பயந்து விடுவார் எனவும் சொன்னார். மேலும் இது போன்ற ஸ்பெஷல் மாணவர்களுக்கு பரிட்சை கட்டணம் பாதிதான் எனவும் சொன்னார். அரியர்ஸ் வைத்தால் தான் முழுப் பணம் செலுத்தவேண்டியிருக்கும் என சொன்னார்.
அடுத்த எக்ஸாம் எப்போது வரும் என்று கேட்டதற்கு ஜனவரியில் என்று சொன்னார். அப்போது டைம்டேபிள் அனுப்பும்படி சொல்லிவிட்டு வந்தேன்.
இன்று மறுபடியும் சௌமியாவின் முறை. அவர் தேர்ந்தெடுத்த பாடம் சைக்காலஜி, எழுதியது தமிழ். அவருக்கு இன்று வந்த மாணவர் நன்கு சொன்னதாகவும் அதனால் தான் நன்றாக எழுதியதாகவும் சொன்னார். அவர் மூன்று மணிநேரமும் தானே எழுதித்தருவதா சொன்னாராம். ஆனால் நோக்கியா கம்பெனியில் இருந்து நால்வர் பரிட்சை எழுத ஒப்புக்கொண்டதால் 1 1/2 மணிநேரத்திற்குப் பிறகு அவர்களுக்கு நேரம் ஒதுக்கி தந்துவிட்டார்களாம்.
இப்படியெல்லாம் குறைபாடு இருக்க நேர்பவர்கள் படிக்கிறார்கள். குறைந்த பட்சம் படிக்க முயற்சிக்கிறார்கள். எல்லா உறுப்புகளும் நனறாக அமைந்த மாணவர்களுக்கு பரிட்சை வைத்தால், பரிட்சை ஹாலுக்கு வெளியே வெட்டி மடிகிறார்கள். எல்லாரும் மனித ஜாதியே, இதில் மதம் எங்கிருந்து வந்தது. எங்கோ செத்து மடிபவர்களை எம் இனம் என்று மார் தட்டி மனிதச்சங்கிலி இழுக்கிறோம். இங்கு ஒரே இனத்தவரே ஜாதி வெறி பிடித்து அடித்து மடிகிறோம். பின்பு நாம் ஒரே இனம் சொல்லிக்கொள்ளுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும். ராஜபக்‌ஷே போரை நிறுத்து என்று கோஷம் இடுவதிலும், போஸ்டர் அடித்து ஒட்டுவதிலும் என்ன பயன்.
எனக்கு இன்னொன்றும் புரியவில்லை. இந்திய ஆட்சிப்பணிக்கும் - தூது, உலா, பரணி ஆகிய சிற்றிலக்கியங்களுக்கும் என்ன சம்பந்தம். ஏன் இப்படி முரணான பாட அமைப்புகள். 20 வயது மாணவன் இன்னும் தூது, உலா, பரணி பற்றி படிப்பதால் என்ன பயன். இவை போன்ற விசயங்களை தற்போது வரும் தமிழ் சினிமாக்களே விளக்கி விடுவதால் 10 வயது பையனே நன்றாக இந்த கேள்விக்கு பதிலளிப்பான்.
நமது பாடத்திட்ட முறைமையை மாற்றி அமைப்பது மிகவும் அவசியமானதாகும். அடித்துக்கொள்ளும் மற்றும் அடித்துக்கொள்ளத் தூண்டும் அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் மற்றும் ஏனைய கல்வி அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வார்களா.

குழந்தைகள் நாள் வாழ்த்துக்கள்


Add Image



சின்னக்குழந்தைகளே
செல்லக்குழந்தைகளே
ஆடுங்களேன்
பண்பாடுங்களேன்
நம் தேவன் துணைக்கு வந்தான்.
உங்கள் குழந்தைகளுக்கும், உலகக்குழந்தைகளுக்கும் அமிர்தவர்ஷினி மற்றும் அமிர்தவர்ஷினி அம்மாவின் குழந்தைகள் நாள் வாழ்த்துக்கள்.
















12 November 2008

அழிக்கப்பட்ட வாசகம்

ஏனைய கவிதைகளிலும்
இன்ன பிற கதைகளிலும்
பிறிதொருவர் டைரியிலும்

அடிக்கோடிட்ட வாக்கியங்களை
விட
அழுத்தமாய் அடிக்கப்பட்ட
வாக்கியங்களே
கவன ஈர்ப்பிற்குள்ளாகும்.

இது
இயல்பினதுதான்
என்றாலும்
இப்போது
ஏனைய
வலைப்பதிவுகளிலும்
இந்த
வாசகத்தைப் பார்க்க நேரிடின்
”Comment deleted : This post has been removed by the author”
ஆர்வமிகுதி
அதிகமாகத்தான் செய்கிறது
“அப்படி”
என்னதான்
எழுதிப்போட்டிருப்பாங்களோ
என.

சில்லி சிக்கன்

அமுதாவின் பதிவில் ”எலும்பு சூப்” என்ற ரெசிப்பி பதிவினைப் பார்த்ததும் எனக்கும் என் சமையல் ரெசிப்பியை போட்டே தீரவேண்டுமென்ற தீராத அவா.



அதனால் இப்பதிவு.














கவலை தின்னி


நாள்பட நாள்பட

கவலைகளில் தின்பதில்

ஒரு சுகம்

உண்டாகி

மெல்ல மெல்ல

கவலை தின்னியாகிப்

போயிருந்தேன்.


முதலில்

கசக்கத்தான் செய்தது.

பின்பு

கசக்காமல் இருக்க

கற்பனைத்தேனை

குடித்துக் கொண்டேன்.


கவலைகளை

வெளிக்காட்டுவதில்

முகம்தான்

முதலில்

போட்டி போட்டு

ஜெயித்தது.


அதனால்.........


கண்களுக்கு

என்

கனவுகளை

தானமாய் கொடுத்தேன்.

இப்போது

பிரகாசமாய்..


உதட்டில்

சாயத்திற்கு

பதில் புன்னகை

பூசிக்கொண்டேன்

அவ்வப்போது

உலர்ந்தாலும்

நினைவுகளை வைத்து

ஈரப்படுத்திக்கொண்டேன்.


இருப்புகள்

இதயத்தை கனக்கச்செய்தாலும்

இன்சொல் பேச

நாவுக்கு

சொல்லிக்கொடுத்தேன்.



நான் தின்ற

கவலைகள்

இப்போது....

கவலைப்பட ஆரம்பித்துவிட்டன

இவள்

நம்மைப்பற்றி

பேசுவதேயில்லையென..


ஒரு நாள்

உற்ற தோழியை

சந்திக்கும் போது

உண்மையுரைத்தேன்

அப்போது

அவளும் சொன்னாள்

தானும்

வேஷதாரி”யாய்

போனதை.




11 November 2008

சா பூ த்ரீ

சென்ற ஞாயிற்றுக்கிழமை நான், அமித்து, சஞ்சு (என் கணவரின் அண்ணன் மகள்) மூவரும் சா, பூ, த்ரி விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது சா, பூ என்று ஆரம்பித்தால் அமித்துவுக்கு வாய் கொள்ளாத சிரிப்பு, அவள் தன் பாட்டுக்கு கையை ஏதோதோ செய்து கொண்டிருந்தாள்.

நேற்று நானும் அமித்துவும் சா, பூ, த்ரி விளையாடினோம். அப்போதும் சிரித்தாள். ஆனால் நான் த்ரீ என்று சொல்லி முடிக்கும் போது கையை சரியாக க்ளாப் செய்தாற் போல வைத்துக்கொண்டாள். அடுத்த் அடுத்த முறை சொல்லும் போதெ அது போலவே செய்தாள். ஆனால் அவளுக்கு கையை திருப்பி வைப்பது பழகவில்லை.

ஒருநாள், எனது சர்டிபிகேட் ஒன்றை எனது பீரோவில் தேடிக்கொண்டிருந்தேன். நிறைய பேப்பர்கள் வேண்டியது, வேண்டாதது என. அதனால் எல்லாவற்றையும் கீழே எடுத்து வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் சர்டிபிகேட் ஆராய்ச்சிக்கு எனது ஆராய்ச்சி மணி அமித்துவும் மிகவும் “உறுதுணை”யாக இருந்தாள். நான் வேண்டாமென்று போடும் பேப்பரையெல்லாம் கிழிப்பது, இடையிடையே ஆய், ஊய், அச்ச்க்கா, க்காளி என்று தனக்குள்ளே பேசுகிறாள். சற்று நேரத்தில் அது போரடித்து விட்டதால் நான் வேண்டுமென்று எடுத்து வைக்கும் பேப்பர்கள் பக்கம் வந்தாள். அம்மு இதெல்லாம் உனக்கு வேண்டாண்டா என்று சொல்லியவாறே அவள் கிழித்த ஒரு பேப்பரை எடுத்து அவளிடம் கொடுத்து இந்தா, இதை கோழிக்கு போட்டுட்டுவா என்றேன். அவளும் அதை கையில் எடுத்துக்கொண்டு முட்டி போட்டுக்கொண்டே வாசல் தாண்டி போனாள், சிறிது நேரத்தில் வந்துவிட்டாள். மறுபடியும் அதகளம். பொறுக்கமாட்டாமல் மறுபடியும் ஒரு பேப்பர் துண்டினை எடுத்து, இந்தா, இதையும் கோழிக்கு போட்டுட்டுவா என்றேன். மறுபடியும் வாசல் தாண்டி முட்டி போட்டுக்கொண்டு அவளது பயணம். எனக்கு அப்போதுதான் உரைத்தது, குழந்தையை இப்படி வெளியேற்றுகிறோமே, பாவம் அவளுக்கு முட்டி வலிக்குமே, சே என்று என்னை நொந்து எட்டி பார்த்தில் இதோ இதைத்தான் அவள் செய்து கொண்டிருந்தாள்

பேப்பரை கோழி இருக்கும் திசை நீட்டி, ம், ம் கொய்யீ , ந்தா ந்தா, ச்சுக்கா, த்தா என்று ஏதேதோ பேசியவாறு.

சர்டிபிகேட்டாவது ஒன்னாவது, என் பெண்ணை தூக்கி கொஞ்சி அகமகிழ்ந்து போனேன்.

அமித்து ஒரு அஞ்சு மணி அலாரம். ஆம் சரியாய் 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவாள். நமக்குதான் தூக்கம் கண்ணை பிடுங்கும். இதனால் அவளை என் கணவர் எடுத்துக்கொண்டுபோய் கீழ் ரூமில் இருக்கும் அமித்துவின் தாத்தா பாட்டிக் கிட்டே விட்டுவிடுவார். நான் 6 மணிக்கு போய் அமித்துவுக்கு அட்டெனன்ஸ் கொடுத்து விட்டு அடுத்தகட்ட வேலைகளுக்கு ஆயத்தமாவேன். போனவுடன் கையை நெற்றியில் வைத்து குட்மார்னிங் சொல்லுவாள். இப்படி இருக்க, கீழ் வீட்டில் இருக்கும் ஆச்சி, அவரின் பேரன் ராகேஷ் இருவரும் எழுந்து வரும்போது, முந்தா நாள் அமித்து, ஆக்கே ஆக்கே (ராகேஷ்) - என்று கூப்பிட்டு நெற்றியில் கைவத்து குட்மார்னிங் செய்தாளாம். இதை ஆச்சி சொல்லி சொல்லி ஆச்சர்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆத்தி - எதிர் வீட்டு கார்த்திக்கு என் மகள் வைத்திருக்கும் பெயர்.

அம்மு - மாடு எப்படி கத்தும் - ம்மா ம்மா
காக்கா எப்படி கத்தும் - கா கா
கோழி எப்ப்டி கத்தும் - கொய்யீ
பூனை எப்படி கத்தும் - நாலு பல் தெரிய சிரிப்பாள்
ஆச்சி எப்படி சிரிச்சாங்க - அவர்களை பார்த்துக்கொண்ட்டே க்கா க்கா க்கா
கார்த்தி எப்படி அழுவான் - ஆஆன் ஆஆன் ஆஅன்
அமிர்தவர்ஷினி எப்படி அழுவா - ம் ஆஅன் (அப்புறம் ஒரு சிரிப்பு)

ஆச்சி, அமிர்தவர்ஷினியை நான் ஆபிஸ் வந்ததும் விசாரிப்பார்களாம், அம்மு - யசோ எங்கே - விளையாடுவதை விட்டு விட்டு ஒரு செகண்ட் திரும்பி - BYE BYE என்று கையசைத்துவிட்டு மறுபடியும் விளையாட்டில் ஈடுபடுவாளாம் என் மகள்.

ம்.
என் மகளே,
உன்னைக் கொஞ்ச எனக்கு வாய்த்திருக்கிறது இரவுகள்
உன் குறும்புகளை ரசிக்க வாய்த்திருக்கிறது வார இறுதிகள்
இடைப்பட்ட நேரங்களில்
எல்லோரும் மகிழ, என் காதால் கேட்க
ஏதாவது செய்துகொண்டிரு.
நான் கேட்பதிலாவது இன்புற்றுகொள்கிறேன்.

06 November 2008

சுயம்

பிறரின்

சுயநல

சூதாட்டத்தில்

வெட்டுப்பட்டுக்

கொண்டிருக்கிறது

வாழ்க்கை.


தவறிப்போய்

விழும்

தாயங்களும்

மீட்டெடுத்துக்

கொள்கிறது

தனக்கான

காய்களை


அதிசயமாய்

விழும்

ஆறும்

பன்னிரெண்டும்

நகர்த்திப்போகிறது

நமக்கான

இருப்பிடத்தை


வெட்டுப்படுவதும்,

விட்டுக்கொடுப்பதுமான

வாழ்க்கையில்

தொலைந்தே

போனது

சுயம்

ஆட்டம்

முடிந்ததும்

அழிக்கப்படும்

ஆட்டக்களத்தைப்

போல


(இந்தக் கவிதையை அழகாய் அலைன் செய்ய உதவிய,ஆயில்ஸ் அண்ணாவுக்கும், பப்பு அம்மாவுக்கும் (சந்தனமுல்லை) அவர்களுக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம்)

05 November 2008

வழக்கொழிந்த விளையாட்டுகளும், விழுப்புண்ணும்.

வருங்கால முதல்வரில் எழுதியிருந்த கொழுக்கட்ட கொழுக்கட்ட ஏன் வேகலை? என்ற பாடல் நேற்று முழுவதும் நிறைய ஞாபகங்களை கிளறிவிட்டது. அதன் விளைவே இந்தப்பதிவு.

விளையாட்டு 1
ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்தது, ரெண்டு கொடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்தது.
ரெண்டு பேர் எதிரெதெரே கையை மேலெ உயர்த்தி, இரண்டு பேரின் கை விரல்களையும் சேர்த்து வைத்துக்கொள்ளுவார்கள். ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னர் சற்றே தள்ளி தள்ளி நிற்பார்கள். எல்லாரும் அந்தப் பாடலை பாடிக் கொண்டே அந்தக் கை வளையத்தினுல் நுழைந்து வெளி வரவேண்டும். பாடிக்கொண்டே சட்டென இருவரின் கைகளயும் சேர்த்து லாக் பண்ணுவார்கள் . அப்போது யார் லாக் ஆனார்களோ அவர்கள் அவுட். பூ பூப்பது 7 எண்ணிக்கையை தாண்டிவிட்டால் சற்றே கிட்ட கிட்ட நிற்பார்கள். கட கடவென பாடல் ஓடும், அவுட் ஆகிக்கொண்டே இருப்பார்கள்.

விளையாட்டு 2
கல்லாங்கல்
வேறுதுமில்லை.கருங்கற்களை நிறைய தரையில் பரப்பி கற்களை கையால் மேலெழுந்தவாரியாக விட்டு அப்புறம் பிடிப்பதுதான்.
ஒன்னாங்கா, ரெண்டாங்கா, அஞ்சாங்கா வரைக்கும் போகும். இந்த கருங்கல் எடுத்துக்கொண்டு வர பெரிய பெரிய அக்கால்லாம் எங்களை அனுப்பிடுவாங்க. எங்க வீடு கட்டுறாங்களோ அந்த இடத்தில கொட்டுற ஜல்லியை ஆளாளுக்கு கொஞ்சம் பாவாடையில் கட்டி எடுத்துவருவோம். முதன் முதல் எடுத்து வரும் கற்கள் ஒரு மினுமினுப்போடு இருக்கும். நாளடைவில் கைப் பட்டு கைப் பட்டு ஒரு வழவழப்பு வந்துவிடும். அதன் கோனிக்கல் ஷேப்பும் அடடா, அடடா.
அந்தப் பழைய கற்கள் ஒரு பொக்கிசமாகவே பாதுகாக்கப்படும். விளையாட்டு முடிந்தவுடன் கற்களை எண்ணி எண்ணி சேமித்து வைப்போம்.
விளையாட்டு 3
ரிங்கா ரிங்கா ரோஸஸ், பாக்கெட் ஃபுல்லா ரோஸஸ், அஸ்ஸா புஸ்ஸா ஆல் பார் டவுன்.
வட்டமாக ஓடிக்கொண்டே இருப்பவர்கள் டவுன் என்று சொன்னவுடன் உட்கார்ந்திட வேண்டும். நிற்பவர்கள் அவுட்
விளையாட்டு 4
நொண்டி
தரையில் பாக்ஸ் பாக்ஸாக வரைந்துவிட்டு , கையில் ஒரு சில்லை வைத்துக்கொண்டு முகத்தை மேல் நோக்கி வைத்துக்கொண்டு, போதாக்குறைக்கு கண்ணை மூடிக்கொண்டு அதன் மேல் சில்லை வேறு வைத்துக்கொள்ள வேண்டும். அப்புறம் ஒரு ஒரு பாக்ஸாக தாண்டா வேண்டும். தாண்டும் போது ரைட்டா, ரைட்டு, ரைட்டா, ரைட்டு, ரைட்டா, கொய்ட்டு. அபீட்டே, அதாங்க அவுட்டு.
விளையாட்டு 5
ஒரு பத்து பதினைந்து பேர் சேர்ந்து கொண்டு சா பூ த்ரி போடுவோம். சா பூ த்ரியில் அவுட் ஆவோர் வெளியில் வந்து கண்மூடி சுவற்றை நோக்கி நின்று கொள்ளவேண்டும்.
மீதியிருக்கும் கும்பல் ஏதாவ்து ஒரு கலரை தேர்ந்தெடுத்துக்கொண்டு, அந்த சுவற்றை நோக்கி நிற்கும் பெண்ணின் அருகில் நின்று கொண்டு “கலர் கலர் வாட் கலர், டூ யு நோ” என்று கேட்கவேண்டும். ரெட் - இல்ல, ப்ளு - இல்ல, மஞ்சள் - இல்ல, க்ரீன் - இல்ல. பச்ச - ஆமாம். எடு ஓட்டம் ஆளாளுக்கு எங்கெங்கேயோ ஓடுவோம். துரத்திவந்தவர் நம்மைப் பிடித்துவிட்டால், நாம்தான் சுவற்றை நோக்கி நிற்கவேண்டும்.
விளையாட்டு 6
சொப்பு சாமான் விளையாட்டு - இது அனேகம் பேருக்கு தெரிந்திருக்கும். அறுபத்து மூவர் எப்போ வரும் என்று காத்திருந்து விதம் விதமாய் மண்ணில், ஸ்டீலில் சொப்பு சேர்த்த காலம் உண்டு.
(அம்மா அது என்து மா, அவ எடுத்துனு போயிட்டாமா. இப்ப அவுள்துனு சொல்றாமா. கேட்டு வாங்கிக்குடுமா.
சனியனே, வீட்டுக்குள்ளியே வெச்சிக்கினு விளையாடுனு சொன்னா கேக்கறியா, எடுத்துன் போய் வெளிய வெச்சிக்கினு வெளயாடிட்டு இப்ப அவ எடுத்துக்கினா, இவ எடுத்துக்கினா, இனிமே சொப்புன்னு எங்கிட்ட வந்து கேட்டுப்பாரு.)
ஓகே கேம் ஓவர்.
இப்பல்லாம் இந்த மாதிரி டொமஸ்டிக் கேம்ஸ் யாராவது விளையாடுறாங்களான்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.
இப்படி இன்னும் நிறைய உண்டு. சில ஞாபக வலையில் சிக்கவேயில்லை. ஆனால் எனக்கு அவ்வளவாய் விளையாட்டு பிடிக்காது. கல்லாங்கல் தவிர மற்ற விளையாட்டுகள் சற்றே அலர்ஜிதான். வேடிக்கை பார்க்கப்பிடிக்கும். ஓடிப்பிடிக்கும் அத்தனை விளயாட்டில், சீக்கிரம் கொயிட் (அவுட்) ஆகிடுவேன். நமக்கு எப்பவுமே வாசிப்புதான். வெள்ளை பேப்பரில் கருப்பு புள்ளி வெச்சிருந்தா போதும்.
ஸ்கூலில் எனக்கு பிடிக்காத க்ளாஸ் கேம்ஸ் களாஸ், முக்கால்வாசி நாள் உடம்பு சரியில்லை என்று காரணம் காட்டிவிட்டு லைப்ரரியில் உட்கார்ந்து கொள்வேன். இதனால் எனக்கும் கேம்ஸுக்கும் செம அண்டர்ஸடாண்டிங். ஒரு நாள் கேம்ஸ் என்னை கூப்பிட்டு அனுப்பியது, போனேன் என்ன நீ கேம்ஸ் க்ளாஸுக்கே வரதில்ல. எப்ப பாத்தாலும் லைப்ரரியிலே உக்காந்து இருக்கியாம். (ஆஹா எவளோ போட்டு குடுத்துட்டாயா) வந்தாலும் ரிங் தவிர எதையும் விளையாடறதில்ல. ம் என்ன கதை உன்னுது. ஸ்போர்ட்ஸ் டே வரப்போகுது இன்னிக்கு ஒழுங்கா போய் கொக்கோ விளையாடற. நான் இங்கருந்து வாட்ச் பண்ணுவேன். போ . ....... இல்ல மிஸ். எனக்கு,,,,,,,,,,,,,, போய் விளையாடு. ம் வருவதை எதிர்கொள்வோம் என்று கொக்கோ விளையாடப் போனேன். ரூல்ஸும் தெரியாது, ஒரு மண்ணும் தெரியாது.
வரிசையாய் ஒரு பத்து பேரு எதிரும், புதிருமாய் ஒடும் வாக்கில் உட்கார்ந்திருந்தார்கள். நான் போய் கடைசியாய் அதே போல் உட்கார்ந்தேன். உடனே கோ கோ என்று ஒரு குரல் கேட்டது, முதுகில் பலமாய் ஒரு அடி (ஆக்சுவலா அது ஒரு தட்டுதான்) நாம் தான் மிக திடகாத்திரமான ஆளாயிற்று, நமக்கு அது அடியாகிவிட்டது. எங்கே ஓடுவது, தட்டிய வேகத்திலேயே கீழே விழுந்து வாயில் மண்ணைக் கவ்வி, முட்டி, முழங்கை சிராய்த்து, விழுப்புண் பலமாகிவிட்டது. யாரோ என்னைக் கைத்தாங்கலாக க்ளீனிக் அழைத்துப் போனார்கள். வேறு யாருமல்ல போட்டுக்கொடுத்த புண்ணியவதி, என் க்ளாஸ் லீடர்தான் என்னைக் கைத்தாங்கலாக அழைத்துப் போனாள்.
ம்ஹும் வீரர்களுக்கு இதெல்லாம் சகசம்.