இந்த அழகி எனக்கு அறிமுகமானது பத்தாம் வகுப்பில். மனப்பாடச்செய்யுளில் திருப்பாவையின் ஒரு பாடல் வர, ஆண்டாளை தமிழ் வகுப்பெடுக்கும் சத்யபாமா டீச்சர்தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். தன் தெள்ளத்தெளிவான தமிழ் உச்சரிப்பில் பெரியாழ்வார் மாலை தொடுத்ததையும், அதை கோதை தன் மீது சூடி அழகுப்பார்த்ததையும், அந்த மாலையை கடவுளுக்கு அணிவிக்கும் போது, அதில் கோதையின் தலைமுடி இருந்ததையும், பின்பு அவள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியானதையும் விளக்கும் போது கண்மூடி கேட்டோமோனால் அது மதிய உணவு இடைவேளை முடிந்துவரும் முதல் பீரியடே ஆனாலும் தூக்கம் வர வாய்ப்பே இல்லை. சத்யபாமா டீச்சருக்கு வலது கன்னம் உள் அமிழ்ந்தால் போல இருக்கும், பேசும்போது எதையோ கடித்துக்கொண்டு பேசும்போது தோன்றும், ஆனால் அதை மீறி அவர்கள் பாடம் எடுத்த அழகே தனி.
சத்யபாமா டீச்சருக்கு முன்னரே எனக்கு திருப்பாவை அனுராதா டீச்சர் மூலம் ப்ரேயர் பாடலாக அறிமுகமாகியிருந்தது. மார்கழித்திங்கள், எங்கே சத்தமா பாடுங்கோ, மார்கழித்திங்கள் என்று ப்ரேயரில் ஆரம்பித்தாரானால், ஆஹா தமிழ்ல இது மார்கழி மாசம் போல இருக்கு என்று நினைத்துக்கொள்வேன், அன்று காலையில் பெருமாள் கோவிலில் சர்க்கரைப்பொங்கல் கொடுத்த காரணமும், தெருவடைத்த கலர் கோலங்களின் காரணமும் ப்ரேயரில் நிற்கும்போதுதான் பிடிபடும்.அப்போது கூட பாடலை உற்றுக்கவனித்து பாட மனம் விழையாது, ஆஹா அப்ப இந்த மாசம் ஃபுல்லா கோவில்ல சர்க்கரைப்பொங்கல், சுண்டல் குடுப்பாங்க, மாமாவுக்கு தெரியாம எப்டி போய் வாங்குறது என்பதிலேயே மனம் குறியாய் இருக்கும்.கூடவே இந்த மாசம் ஃபுல்லா எதிர் வீட்டு விஜி கூட சண்டை போடக்கூடாது ஏன்னா அவதான் முன்னாடி ஆளா போய் லைன்ல நிப்பா என ஒவ்வொன்றாய் பின்னி பினணந்து ஊற்றாய் பொங்கி வரும்போது ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்* அப்படின்னு வந்திருக்கும், இங்க விழும் எனக்கு அடி, யசோதை இளஞ்சிங்கம் என்று கோரஸாக சொல்லிவிட்டு, என் முன்னாலிருந்து மூன்று தலைகளும், பின்னாலிருந்து நான்கு தலைகளும் திரும்பி பார்க்கும், போதாக்குறைக்கு என் பின்னாலேயே நின்று கொண்டிருக்கும் எவளாவது ஒருத்தி முடியைப்பிடித்து இழுப்பாள். அன்று க்ளாஸ் முழுக்க ஏம்மா, இளஞ்சிங்கம் இங்க வாம்மா என்றே என் பெயர் இறைபடும்.
வீட்டுக்குப்போய் விலுக் விலுக்னு உதைச்சிக்காத குறையா எனக்கு ஏன் இந்தப்பேரு வெச்ச என்று அழுதுகொண்டே கத்தினால், ஏய் வாயை மூடமாட்ட என்று கையை ஓங்கி வரும்வரை கத்தி தீர்ப்பேன். கடவுளே, நாளைக்கு காலையில் அந்தப்பாட்ட அனுராதா டீச்சர் பாடக்கூடாதுப்பா ன்னு இன்னிக்கு சாயங்காலத்துல இருந்தே ப்ரார்த்தனை தொடங்கிடும். அப்பவெல்லாம் திருப்பாவை ஆண்டாளால் கண்ணன் மேலுள்ள காதலால் பாடப்பட்டது என்ற விளக்கமெல்லாம் தெரியாது. என்ன கேலி செய்யறதுக்குன்னே யாரோ பாட்டெழுதி வெச்சிட்டு போயிருக்காங்களேன்னு கடுப்பா வரும்.
ஆனால் அதே மார்கழித்திங்களை சத்யபாமா டீச்சர் வகுப்பெடுக்கும் போது, ஆண்டாள் மேல் எனக்கு காதல் பொங்கி வந்தது தனி விஷயம். அதற்குப்பிறகுதான் எனக்கு எங்கள் எதிர்வீட்டிலிருக்கும் விஜியின் ஆயாவின் பெயரின் அர்த்தமே புலப்பட்டது. அவர்களின் பெயர் ஆண்டாளம்மாள். அதுவரை அவர்களை ஆண்டாளு அப்டின்னு யாராச்சும் கூப்பிட்டாங்கன்னா வாசலில் இருக்கும் சில அக்காக்கள் கேலியா சிரிப்பார்கள். ஏனோ தெரியவில்லை அழகான தமிழ் பெயர்களான ஆண்டாளும், அலர்மேலுவும் சென்னையின் ஒரு பகுதியினருக்கு கேலிசித்திரப்பெயர்களாகவே போய்விட்ட காரணம் இன்றுவரை விளங்கவேயில்லை. அதைவிடவும் கொடுமை ஆண்டாளு, அலமேலு என்ற பெயருக்கு முன்னாடி சிலுக்கு என்ற நடிகையின் பெயரும் சேர்த்துக்கொள்ளப்பட்டு அழைக்கப்படுவது. என்ன ஆண்டாளு ஆளையேக்காணோம் என்று சொல்வதில் மிகச்சரியான கிண்டல் தொனியிருக்கும். ஆண்டாளு, அலமேலு என்ற பெயரெல்லாம் காய்கறி விற்பவர்களுக்கும், கூடை தூக்குபவர்களுக்கும் வைக்கும் பெயர் போலத்தான் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.
அதனாலோ என்னவோ அந்தம்மாவுக்கு கடிதம் தரும் போஸ்ட்மேனைத் தவிர அனைவரும் சீட்டுக்காரம்மான்னுதான் கூப்பிடுவார்கள். அவர்கள் சீட்டுவிடும் அழகே தனிதான். ஆயிரத்தையிநூறு ரூபா ஒரு தரம்...., ரெண்டு தரம்........., கேக்கறவங்க கேக்கலாம்.... விட்டுடப்போறேன்.... ஆயிரத்தையிநூறு ரூபா மூணு தரம்... என சொல்லும்போது அவர்களின் உதட்டில் படர்ந்திருக்கும் வெள்ளைத்தேமல் மாத்திரம் தனியாய் அசைவது போல இருக்கும். அதைப்பார்ப்பதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம்
நாளொன்று போனால் வயதொன்று கூடும்னு வருடம் பல கடந்து இருபத்து நான்கு வயதில், பாலஜோதிதான் ஆண்டாளை ரூபமாக அறிமுகப்படுத்தினாள். அதுவும் ஒரு மார்கழி மாதத்தில்தான். அக்கா வர்ரீங்களா, இன்னிக்கு ஆண்டாள் கோவிலுக்கு உங்களைக்கூட்டிக்கிட்டு போறேன் என்றாள். பாலஜோதிக்கு என் வயதோ அல்லது என் வகுப்புத்தோழியோ இல்லை. அவள் என் அக்கா பெண்ணின் உற்ற வகுப்புத்தோழி, கொஞ்சநாள் எங்கள் வீட்டருகில் குடியிருந்தார்கள். அவளும் நானும் நட்பு கொண்டது அதிசுவாரஸ்யம்!
ஆண்டாளுக்கு கோவிலா எங்கடி இருக்கு இந்த மெட்ராஸ்ல, நீங்க வர்றீங்களா சொல்லுங்க, சரிடி வர்ரேன், அப்ப நீங்க இன்னிக்கு சாயங்காலம் 21ல வந்து ராயப்பேட்டை ஹாஸ்பிட்டல் பஸ்ஸ்டாப்ல இறங்கிடுங்க, நான் அங்க வெயிட் பண்றேன். ராயப்பேட்டை ஹாஸ்பிட்டல், நான் பிறந்த பின் நாட்களிலிருந்து கடந்த ஜனவரி 30 வரை அந்த ஆஸ்பத்திரி எனக்கு நிறைய துக்ககர நிகழ்வுகளைத்தான் தந்திருக்கிறது. ஒரு காலகட்டத்தில் தினமும் அந்த வழிதான் போய் வரவேண்டும். இப்போது அவசியத்துக்காக அந்தப்பக்கம் போக நேர்ந்தால் கூட ஆஸ்பத்திரியைப்பார்த்தால் வலுக்கட்டாயமாக முகம் திருப்பிக்கொள்ளவோ, இல்லை குனிந்து கொள்ளவோ வேண்டியிருக்கிறது.
அவள் போன் செய்த அன்று மாலை ராயப்பேட்டை சிக்னல் தாண்டி ஒரு சந்துக்குள் இருந்த பெருமாள் கோவிலுக்கு அழைத்துப்போனாள். என்னடி ஆண்டாள் கோவில்னு சொன்ன, பெருமாள் கோயிலா இருக்கு. வாங்கக்கா என்றவாறே விடுவிடுவென கோவிலுள் நுழைந்து பக்கவாட்டில் அழைத்துப்போனாள். ஒரு சின்ன ஆலயம். உள்ளே பித்தளையில் ஆண்டாள் விக்ரகம். அழகாய் செப்புச்சிலை மாதிரி சின்ன உருவம். கண்கள், மூக்கு, தலை கொண்டையுடன் கூடிய நீள பின்னல்சடை என செய்நேர்த்தியுடன் கூடிய விக்ரகம்.
அக்கா பாருங்கக்கா, அந்தக் கண்ணை மட்டும் பாருங்கக்கா, அய்யோ, அப்படியே கையைப்பிடிச்சு கூட்டிக்கிட்டு போயிடலாம் போல இருக்கே என்றவளை ஒருமாதிரியாய் பார்த்தேன், என்னக்கா கடுப்பாயிட்டீங்களா, நான் காலையில வந்துட்டுப்போனேங்க்கா, நேத்துல இருந்து மார்கழி இல்ல, காலையில தலைக்கு குளிச்சுட்டு, இங்க வந்து திருப்பாவை முழுசும் படிச்சேன். மனசுக்கு ரொம்ப அமைதியா இருந்துச்சுக்கா என்றவாறே இந்தாங்க திருப்பாவை படிங்க என்று 30 பாசுரங்கள் அடங்கிய சின்ன புத்தகம் கொடுத்தாள். அதற்குப்பிறகு நானும் ஆண்டாள் மீது மீண்டும் காதல் தொடர கசிந்துருகி மயிலாப்பூரில் இருக்கும் பெருமாள் கோவில்களில், ஆண்டாளை மட்டும் தனியாகப்போய் பார்த்துவிட்டு வருவோம்.
இப்படி கோவில் கோவிலாய்ச்சுற்றி ஆண்டாள் விக்ரகங்களைப் பார்த்ததன் விளைவோ என்னவோ எனக்கு ஒரு கனவு வரும், அதாகப்பட்டது ஒரு பழைய கோவில், பாசைப்பிடித்த தரையிலும், சுவற்றின் மீதும் நிறைய பித்தளை விக்ரகங்கள் சிவப்புத்துணியால் சுற்றப்பட்டும், அப்படியேவாகவும் நின்று கொண்டிருக்கும். கோவிலுக்குள் நான் இருப்பேன், இன்னும் சிலரும் இருப்பதாய் புலப்படும். சில விக்ரகங்கள் நகரும், சிரிக்கும். முதல்முறை இந்தக்கனவை கண்டு பயந்து காலையில் அக்காவிடம் சொல்லும்போது, உனக்குன்னு வருது பாரு கனவு என்று சிரித்துக்கொண்டே போய்விட்டது. இந்தக்கனவு வேறு மெகா சீரியல் கணக்காய் ரொம்ப நாள் அடிக்கடி வந்துகொண்டிருந்தது. விக்ரகங்கள் சிரிக்கும் போது பயந்து எழுந்துவிடுவேன், நாளாக நாளாக பயம் மட்டுப்பட்டு போக, அதற்குப்பிறகு அந்தக்கனவு வரவேயில்லை. வந்த நாளும், போன நாளும் ஞாபகமில்லாமல் கனவு போயே போச்.
மார்கழி மாதம் எப்படி குளிராய், மனதுக்கு இதமாய் இருந்து, பெரிய பெரிய கோலங்களையும், சர்க்கரைப்பொங்கல் சுண்டல் ஞாபகங்களையும் கட்டி இழுத்துவருகிறதோ அதைப்போலவே ஆண்டாளையும் கட்டி இழுத்துவருகிறது.இது மார்கழி மாதமென்பதாலும், உடன் நேற்று எனக்கு வந்த ஒரு மெயிலின் கையொப்பத்துக்குக் கீழே இந்தப்பாடல் இருந்தது.
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்*
செய்யும் கிரிசைகள் கேளீரோ* பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி*
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி*
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்*
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்*
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி*
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
ஒரு பத்துதடவையாவது மனதுக்குள் பாடி, சிலாகித்ததில் சில மறக்கமுடியா நினைவுகளும் வர பதிந்தாயிற்று.
28 comments:
அருமையான பதிவு சாரதா
அமித்தம்மா,
எனக்கும் இந்த`அழகீ’ யிடமும், மார்கழி மாதக் கோலங்களிடமும்,
மாறாத காதலுண்டு...
சிறுவயதில், பஜனைக் கோயிலில்
திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை,
திருப்பாவை, போட்டிபோட்டுக் கொண்டு மனனம் செய்தது நினைவுக்கு வருகிறது...
உங்கள் பதிவின் மூலமாக
நினைவூட்டியதற்கு நன்றி..
நானும், மார்கழி நினைவுகளைப் பற்றி
ஒரு பதிவிட வேண்டுமென நினைத்தேன்.
மேலோட்டியாச்சி
ஆழ உழுதுட்டு அப்பாலிக்கா வாறேன்.
எந்த விஷயத்தையும் அழகா சொல்லுவது உங்களுக்கு கைவந்த கலையாகிவிட்டது அமித்து அம்மா.
//ஒரு பத்துதடவையாவது மனதுக்குள் பாடி, சிலாகித்ததில் சில மறக்கமுடியா நினைவுகளும் வர பதிந்தாயிற்று.//
அழகாய் வெகு அழகாய் பதிந்து விட்டிருக்கிறீர்கள் அமித்து அம்மா.
ஆண்டாள் ...நம்ம பேவரிட் காடஸ் ஆச்சே.பக்கத்து ஊர்காரி ,ரொம்ப குளோஸ் பிரெண்டு,தேவ் பொண்ணு பார்க்க வந்துட்டுப் போன பிறகு இந்த மாப்பிள்ளை எனக்குப் பிடிச்சிருக்கு ஒ.கே வா இல்லையா சொல்லுன்னு நான் போய் நின்னது ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் சன்னதியில தான். அவ அழகே அழகே...சொல்லக் கூடுமா அந்தப் பேரழகை,ரங்கமன்னார் கூட துளசி மாலை மணக்க மணக்க அவ நிக்கற அழகை நாள் முழுக்க பார்த்துட்டே இருக்கலாம்.ஆண்டாள் துளசிச் செடிக்கு கீழ பெரியாழ்வாருக்கு கிடைச்ச ஸ்தலம் அது. அவ சுட்டிப் பெண்ணா ஓடி விளையாடி ...கண்ணன் தன்னைத் தேடி வருவானான்னு காத்திருந்த இடம்.சூடின மாலை(சூடிக் கொடுத்த சுடர்க் கொடி நாச்சியார்) அழகா இருக்கானு குனிஞ்சு பார்த்த கிணறு (அப்போ அதான் கண்ணாடி மாதிரி போல!)ஒன்னு இருக்கு கோயிலுக்கு உள்ளே .ம்..சொல்லிட்டே போலாம் ஆண்டாளைப் பத்தி...இந்த சம்மர்ல கண்டிப்பாப் போய் பார்க்கணும் அவளை,ரொம்ப நாள் ஆச்சு அவளைப் பார்த்து.அழகீன்னு அவளைச் சொன்னது சரி தான் சாரதா.
நன்றி தமயந்தி
நன்றி அம்பிகா, பதிவிடுங்க ப்ளீஸ்
நன்றி ஜமால், ஆழ உழுதுட்டு வாங்க :)
நன்றி அம்மிணி
நன்றி ராம் மேடம்
பக்கத்து ஊர்காரி ,ரொம்ப குளோஸ் பிரெண்டு // சூப்பர் கார்த்திகா.
எனக்கும் ஆண்டாள் தெய்வரூபம் என்பதைவிடவும் சக மனுஷி / தோழி என்பது போன்ற ஒரு உணர்வுதான். பேசிப்பேசி எழுதியெழுதி தீராது அவளைப்பற்றி.
பாஸ் அப்பிடியே சங்கமம் படத்துல வர்ற பாட்டும் ஞாபகம் வந்துச்சு...!
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்...
இதுக்கடுத்த வரிகள் ஞாபகமில்லை
சீட்டுவிடும் அழகையும் நல்லா சொல்லியிருக்கீங்க...
//ஆண்டாளுக்கு கோவிலா எங்கடி இருக்கு?//
இது கொஞ்சம் ஓவராதெரிலன்னு உங்க தோழியர் கேக்கலை?
ராயப்பேட்டா ஆஸ்பிட்டல் பக்கம் மட்டுமில்லை எந்த அரசு ஆஸ்பிட்டல் பக்கம் போனாலும் இந்த மாதிரி தான் தோணுது பாஸ்
சென்னையில என்று ஒரு வார்த்தைய சேர்க்க மறந்துட்டேன், சரியா கண்டுபிடிச்சதுக்கு நன்றி.
எல்லா அரசு ஆஸ்பத்திரியும் அதே கதைன்னாலும், ராயபேட்டை ஆஸ்பத்திரி செம்ம டெர்ரர் பாஸ். கேட்டீங்க, பெரிய பதிவா போட்ருவேன் ;)
ரசனையான பதிவு !!!
சின்னவயசில சில ஃபங்கஷன்களுக்கு எங்க அம்மா என்ன கூட்டிட்டு போவாங்க..!
அங்க ஒரே ஒரு அக்காவை மட்டும் மேடையில நிறுத்தி வைச்சி ஃபுல்லா மேக்கப் போட்டு கையில கிளி வச்சி கொண்டை போட்டு,
பிறகு வேற மேக்கப் போட்டு கையில புல்லாங்குழல் கொடுத்து,சக்கரம் கொடுத்து..!!!இப்படி பல வேஷம் போட்டு போட்டோ புடிப்பாங்க..1
அந்த மொத வேஷம் பேரு தான் ஆண்டாள்னு சொல்ல கேள்விப் பட்டிருக்கேன்.
பல நினைவுகளை கிண்டி விட்டது உங்கள் பதிவு.
ஒன்றை தொட்டு ஒன்று அமித்தம்மா.
எவ்வளவு அழகாக பதிகிறீர்கள். பல் கிடு கிடுக்க வாணியங்குடி வீரமாகாளி கோயிலுக்கு,சகோதரிகளின் தாவணி முந்தானைகள் போர்த்திய தலையுடன் போன நினைவு வருகிறது.
மார்கழி வந்தாச்சா?
நாற்று வாசனையும்,கருவேலம்பூ வாசனையும் அறை நிறைகிறது..
”அதை மீறி அவர்கள் பாடம் எடுத்த அழகே தனி.”
அதே போல் நீங்கள் எழுதும் தொனியும் அழகாகத்தான் இருக்கிறது. வாழ்த்துக்கள்..
ஆகா..இளஞ்சிங்கமா..இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! :-))))))))))
சுவையான பதிவு பாஸ். ஆண்டாளைப்பற்றி அவ்வளவா எனக்கு தெரியாது. நீங்க ரசிச்சு கும்பிடறதப்படிச்ச பிறகு அந்த ஆண்டாள் புகைப்படம் இப்போ எனக்கும் ரொம்ப அழகா தெரியுது :)
எங்க ஏரியாவுல ஒரு கோயில்ல ஆண்டாள் இருக்குறதா ஞாபகம். கேட்டு சொல்றேன்.
அந்த ராயப்பேட்டை மருத்துவமனையப் பற்றி சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
/ராயபேட்டை ஆஸ்பத்திரி செம்ம டெர்ரர் பாஸ். கேட்டீங்க, பெரிய பதிவா போட்ருவேன் ;)//
அவ்வ்வ்வ்வ் பாஸ் ரொம்ப டெரர்ரா இருந்தா வேணாம் பாஸ் :)
மார்கழி வந்தாலே அழகியின் ஞாபகமும் வரும்.
அழகான நினைவுகளின் பதிவு.அருமை.
நல்ல நடையில் சொல்லியிருப்பதால் ஒரே மூச்சில் முழுவதும் படித்துவிட்டேன். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எத்தனையோ விஷயங்களை உங்களின் நினைவுகளோடும் உணர்வுகளோடும் இணைத்து அதை மாலையாய் கோர்த்திருப்பது அருமை.
சத்யபாமா டீச்சருக்கு நன்றிகள். உங்களை நினைவிடை தோய்ந்து எழுத வைத்ததற்கு
very good narration
நல்ல பதிவு..:)
ஆண்டாளின் அழகு போலவே, இப்பதிவும் அழகு அமித்துமா :-)
அன்பின் அமித்து அம்மா
நல்ல தொரு இடுகை - மலரும் நினைவுகளாக அசை போட்டது நன்று
நானும் சிறு வயதில் மார்கழி மாதம் முழுவதும் காலையில் தெருக்களில் பஜனைக் கூட்டத்துடன் சென்று பிள்ளையார் கோவிலில் பொங்கல் சுண்டல் சாப்பிட்டது நினைவில் அலைமோதுகிறது.
தெருக்களில் வண்ணக் கோலங்களில் - சாணத்தில் பூக்கள் வைத்து - அழகாக ரசித்துக் காணப்பட்ட காட்சி
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் -
அப்புறம் பொங்க்லப்பத்தி சொல்லணுமில்ல - இலை நிறைய சுடச்சுட சக்கரப் பொங்கல் - நெய் ஒழுகும் - நாக்கு சுடும் - அள்ளி அள்ளித் திண்ணது - அடடா அடடா
கொசு வத்தி சுத்த வச்சீட்டீங்க
நல்வாழ்த்துகள்
மார்கழி நினைவு துவட்டல்கள் அழகு...! அருமை...!
அழகான நினைவுகள்
ஆண்டாள் எனக்கு அறிமுகமானது எட்டாவது படிக்கும்போது. திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி இதெல்லாம் விடியற்காலைல கோயில்ல போய் பாடனும் :) பூசணிப்பூ சூடின சாணிப் பிள்ளையார்களையெல்லாம் மிதிக்காம அரை இருட்டில குளிர்ல கோயிலுக்குப் போன நாட்களை இப்ப அசை போட்டா இதமா இருக்கு..
கோலம் போட வழியில்லாத மனைவி ஆர்வக் கோளாறுல அகல்விளக்க flat வாசல்ல வைக்க போய் ஃப்யர் அலாரம் அலறி பெரிய கூட்டத்த கூட்டியாச்சி :))
நல்ல பகிர்வு அமித்து அம்மா..
பனிபொழியும் காலை, வண்ணமயமான வாசல், திருப்பாவை, பஜனை பாடல்கள், கோவில், வெண் பொங்கல், நெய் வாசம் மற்றும் அம்மா... இடுகை படிச்சதும் மனதில் வந்துபோனவை. இந்த வருஷம் ரொம்ப மிஸ் பண்றேன்.. :((((
/ பிரியமுடன்...வசந்த் said...
பாஸ் அப்பிடியே சங்கமம் படத்துல வர்ற பாட்டும் ஞாபகம் வந்துச்சு...!
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்...
இதுக்கடுத்த வரிகள் ஞாபகமில்லை//
மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!
உங்கள் சிறுகதை ஒன்று எனது blog-ல் இந்த வருடத்தின் சிறந்த பதிவுகள் வரிசையில் இடம் பெறுகிறது . விபரங்களுக்கு எனது blog பாருங்கள் அமித்தம்மா
அன்பு அமிர்தவர்ஷிணி அவர்களுக்கு,
அழகி பிறந்த ஊர் என் சொந்த ஊராய் போயிட்டதாலே, மாறாத காதல் எனக்கு ஆண்டாள் மீது. ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரத்தில் பிறந்ததால் இன்னும் கூடுதல் காதல். ரெங்க மன்னாருக்கு போட்டியா எப்போதும் மல்லுக்கட்டுறது அந்த மல்லனுடன்... ஆண்டாள் கோயிலை ஒட்டியுள்ள வடபத்ரசாயி கோயிலும், பிருந்தாவனமும் நினைக்கையில் தித்திக்கும் ஆண்டாள் கோயில் கடையில் கிடைக்கும் அல்வா மாதிரி.. வாழை இலையில் மினுக்கி... உயிருக்குள் இறங்கும் ஒரு காட்சி கிறக்கம்... ரொம்ப அசத்தலான நடை... சும்மா விசுக்கு விசுக்குன்னு பின் கொசுவம் ஆடி ஆடி கிறங்க வைக்குது...
காதலித்ததால் கண்ணனை, அவனை கல்யாணம் பண்ண வேண்டும் என்று அடமாய் இருந்ததால், கவிதையும் எழுதுவாள் என்பதால் அட நம்மள மாதிரியே பாண்டஸி வாழ்க்கை பிடித்திருக்கிறதே இவளுக்குன்னு... நானும் யாராவது கடவுளரை காதலித்து கைபிடிசிடனும்னு என்னுடைய பதின் பருவத்தில் ஒரு வெறி... சுத்தி சுத்தி பார்த்த யாரும் இல்லை... எல்லா அம்மனுக்கும் கல்யாணம் ஆயிடுச்சேன்னு ரொம்ப கவலையா இருந்தப்போ, கன்யாகுமரி மாட்டினா... விழுந்து விழுந்து காதலிச்சேன்... ஒரு சாக்த உபாசகனா, ஒரு அபிராமி பட்டர், ஒரு காளிதாசனா தலைக்கிறுக்கு பிடிச்சி அலைஞ்சேன் ஒரு காலத்தில... உள்ளுக்குள்ள இன்னும் கிறுக்கு இருந்தாலும்.. மேலுக்கு மறைக்க முடியுது இப்போ... மீனாக்ஷி அம்மன் கோயில் உட்பிரகாரத்தில் ஒரு லிங்கத்துக்கு பக்கத்தில ஒக்காந்துக்கிட்டு வரமாட்டேன்னு சொல்றத அம்மா இன்னம் கூட அவளின் பழைய ச்நேஹிதிகள் வரும்போது பேசுவதுண்டு...
நிறைய எழுத தோணுது... ஆனாலும் முடிச்சிக்குறேன்..
அன்புடன்
ராகவன்
Post a Comment