08 December 2009

பள்ளங் க்ளாஸ்

ஹோவென்ற இரைச்சலோடு உணவு இடைவேளை தொடங்கிவிட்டது அந்தப்பள்ளியில். வசதிக்கேற்றார் போல சாப்பாட்டு கூடையும்,சத்துணவுக்கு தட்டுமாய் படையெடுக்க ஆரம்பித்துவிட்டன சிட்டுக்குருவிகள். பத்து நிமிடத்துக்குள் உணவு உள்ளே செல்ல, மீத இருபது நிமிட இடைவெளிகளில், மைதானம் முழுவதும் அங்கங்கே சாப்பாட்டு டப்பாக்கள் புடைசூழ குழு,குழுவாய் அமர்ந்திருக்கும் ஏனைய வகுப்பு மாணவர்களின் ஊடே புகுந்தோடி கால் மண் அவர்கள் மீது தெறிக்க திட்டும், சண்டையுமில்லாமல் கழியும் உணவு இடைவேளையும் ஒரு இடைவேளையா?

ஐந்திலிருந்து எட்டாம்வகுப்பு வரை படிக்கும் ஏ,பி,சி,டி செக்‌ஷன் வகுப்புகளுக்கான கட்டிடம் அது. இரண்டு மாடி.வரிசையாய் வகுப்பறைகள். நீள பச்சை நிற பெஞ்சுகள். உட்கார்வதெல்லாம் தரையில்தான். ஒவ்வொரு வகுப்பறையின் கரும்பலகை மூலையிலும் ப்ரசண்ட்: 35 என்று வெள்ளையெழுத்திலிருக்கும். உடல்நிலையைப் பொறுத்து ஒன்றிரண்டு குறையக்கூடும். கீழ்த்தளத்தில் ஆறு நீள வகுப்பறையின் வலது பக்க கடைசியில்தான் இருந்தது பள்ளங்கிளாஸ். பள்ளவகுப்பு என்று தமிழாசிரியர் கூட குறிப்பிட்டதில்லை. ஏ, போய் பள்ளங்க்ளாஸ்ல விஜயலஷ்மி டீச்சர் இருக்காங்களான்னு பார்த்துட்டு வா என்றுதான் தமிழ் வகுப்பெடுக்கும் கஸ்தூரி டீச்சர் சொல்வார்கள். இந்த வகுப்பறைக்கு மட்டும் நான்கைந்து படிகள் உட்புறமாக இருக்கும், அது இறங்கிதான் வகுப்பறை நுழையவேண்டும். அந்த வகுப்பை ஒட்டித்தான் பெரிய ஸ்டேஜ் இருந்தது. நீள நீளமாய் ஏழெட்டு படிகள்.

எல்லோரும் சாப்பிட்டு, ஓடிக்களைத்து உட்கார்ந்து தலை கவிழ்ந்து மூச்சு வாங்கினால் அந்த படிகள் தான் அதை பெரும்பாலும் வாங்கிக்கொள்ளும். அந்த ஸ்டேஜ் மீதுதான் தையல் க்ளாஸ் நடக்கும். அந்த வகுப்பறையின் வெளிப்புறம் சுவற்றோடு சுவராய் இருக்கும் பெரிய கரும்பலகையில்தான் ரோஸ்பல் டீச்சர் கைவண்ணத்தில் பள்ளியின் சின்னமான ஆலமரம் வேரூன்றி உட்கார்ந்திருக்கும்.

அடையாளம் சொல்ல, உட்கார்ந்து மூச்சு வாங்க, பள்ளங்கிளாஸ் பி செக்‌ஷன் எல்லாத்துலயுமே பர்ஸ்ட் என்பதாய் காலர் தூக்கிக்கொள்ள என பள்ளங்கிளாஸ் ஒரு பெருமையின் சின்னமாய் இருந்தது. எல்லாவற்றையும் விட பழைய டீச்சரான பாலகுஜம்,சகுந்தலா டீச்சரிலிருந்து புதுவரவான பொன்னெழில் டீச்சர் வரை ஒரு குழுவாய் அமர்ந்து உணவருந்துவதும் பள்ளங்கிளாஸ் தான். டீச்சர்கள் சாப்பிட்டு முடித்து வெளியேறும் வரை யாரும் உள்ளே போகக்கூடாது என்பது எழுதப்படாத விதி. அதனால் கிசுகிசுக்களெல்லாம் பிற்பாடுதான் நிகழும்.

ஹே, இன்னிக்கு எம் பெஞ்ச்சு கிட்ட உக்காந்துதான் விஜயலஷ்மி டீச்சர் சாப்ட்டாங்க தெரியுமா?, ஆமாம்பா. உன் பெஞ்ச்சுகிட்ட யாரு தெரியுமா, அந்த ரோஸ்மேரி டீச்சர், ப்போ நீ மதியானம் நல்லா தூங்கப்போற அது மாதிரியே, அந்த பாலகுஜம் டீச்சர் இல்ல அது மோரையெல்லாம் என் பெஞ்ச்சு மேல ஊத்தி வெச்சுருந்துது இப்படியாய் பள்ளங்கிளாஸ் பல சம்பாஷனைகளுக்கு கதாநாயகியாய் ?/ கனாய் ? இருந்தது.

எதுவரை,

எப்போழுதும் போல, காலாண்டு பரிட்சைக்கு முன் வந்த அந்த உணவு இடைவேளை வரை.

ஹோவென்ற இரைச்சலுக்குப் பின் டமார் என்ற பேரிரைச்சலும் வரும் என்று தெரியாமல் தொடங்கியது அந்த உணவு இடைவேளை, வழக்கம்போல கிடுகிடு சாப்பாடு, குடுகுடு ஓட்டம். சாப்பாட்டுக்கு முன்னர் வந்த பீரியடில் வனிதாவோடு நிகழ்ந்த ஆகப்பெரும் சண்டையில் முறுக்கிக்கொண்டு விளையாடப்போகாமல் ஒருவளை நிறுத்திவைத்திருந்தது. ஏய், என்னா விளாடப்போல கேள்வி கேட்டது தடியன் ஹரி (முகமெல்லாம் மறந்தே போய்விட்டது) இல்ல என்று தலைகுனிந்த முகவாய்க்கட்டையை பச்சை பெஞ்ச் தாங்கிக்கொண்டது. இனி வனிதா வந்து பக்கத்தில் உட்கார்ந்தால், சண்டையிட்ட அவள் மேல் படாமல் தான் எப்படி உட்கார்வது என்ற சீரிய சிந்தனை. சிந்தனை தொடங்கி வினாடிகள் ஓடி நிமிடம் தொட ஆரம்பிக்கும் தருவாயில் டம்மாஆஆஆஆஆஆஆஆர், ஆஆஆஆஆஆஆஅ, அய்யோ, அய்யோ.....,,,,

எல்லாரும் கிளாஸ விட்டு வெளிய ஓடி வந்துடுங்க, யாரும் க்ளாஸுக்குள்ள இருக்காதீங்க, பள்ளங்கிளாஸ் விழுந்துடுச்சு, பயத்தில் உடம்பு உதற என்ன ஏது என்று நின்று நிதானிப்பதற்குள் பள்ளங்கிளாஸின் விழாமல் நின்றிருந்த ஒரு சுவரின் பின்னர் அமர்ந்திருந்தவளை ஒரு கை வேகமாய் இழுத்துக்கொண்டு வெளியேறியது. இப்போது அனைவரும் கூட்டம் கூட்டமாக இன்னொரு கட்டிடத்துக்கு மாறிக்கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸ் அலறல் கேட்டது. இடிபாடுகள் சிக்கியவர்கள் மீட்கப்பட ஆரம்பித்தனர். எல்லோர் கண்களிலும் மிரட்சி. பயத்தில் அழுகை. இப்போது ஆறுதலுக்கு வனிதா நெருக்கமாய் அமர்ந்திருந்தாள். மற்ற வகுப்பிலும் முக்கியமாய் பள்ளங்கிளாஸின் எல்லாப் பிள்ளைகளும் இருக்கிறார்களா என்று பரிசோதிக்கப்பட்டது.

பள்ளியின் எந்தப்பிள்ளைகளுக்கும் எந்த சேதமுமில்லாமல், பள்ளங்கிளாஸில் சாப்பிட போன டீச்சர்களில் பாதி பேர் காயமுற்றிருந்தனர், அதில் இடுப்பில் பெரிய சுவர் விழ அதிக சேதத்திற்குட்பட்டு, அதுவரை கல்யாணமாகியிராத அழகே உருவான, கரும்பலகையின் இந்தக்கோடிக்கும், அந்தக்கோடிக்குமாய் நடந்துகொண்டே வகுப்பெடுக்கும், டீச்சர்ஸ்டேயின் போது எல்லோரும் போட்டிப்போட்டுக்கொண்டு சிகப்பு, மஞ்சள் ரோஜாக்கள் நீட்ட சிரித்துக்கொண்டே வாங்கும் பொன்னெழில் டீச்சர், நீண்டநாள் கழித்து சக்கர நாற்காலியில் சுழன்று வந்து பாடம் சொல்லித்தந்தார்.

காலப்போக்கில் காட்சிகளிலிருந்து அகன்று போன பள்ளங்கிளாஸின் திட்டுகள் பொன்னெழில் டீச்சரின் சக்கர நாற்காலியோடு சேர்ந்து சுழன்றுகொண்டிருந்தது. கொண்டிருக்கும்.

29 comments:

S.A. நவாஸுதீன் said...

பள்ளங் க்ளாஸ் - என்றென்றைக்கும் நினைவில் நிற்கும். மனதை அதிகம் பாதித்த இடுகை இது.

பொன்னெழில் டீச்சரும் நினைவில் நிற்பார்.

ஆயில்யன் said...

ஸ்கூல் பத்தி சொல்லும் விவரிப்புக்கள் அழகு!

கடைசி வரிகளில் ரணம் !

Rajan said...

ரொம்ப அழுத்தமான பதிவு .... பள்ளிக் குழந்தையின் மனோநிலை வரிகளில் தெரிகிறது ...

அன்பின் ராஜன் ராதாமணாளன்

மாதேவி said...

உணவு இடைவேளையும், விளையாட்டும் மகிழ்வுமாய் போய்கொண்டிருந்த பள்ளங் க்ளாஸ் இறுதியில் மனத்திற்குக் கனமாய் சுழல்கின்றது.

Vidhoosh said...

உங்கள் எழுத்தில் எனக்கு ஏனோ ஸ்டெல்லா ப்ரூஸ் நினைவில் வருகிறார். :)

-வித்யா

Unknown said...

பள்ளிச்சூழல், மாணவர்கள், அவர்களின் குழந்தை மனநிலை - எல்லாவற்றையும் மீறி பொன்னெழில் டீச்சரை கொண்டு வந்து மனசுல உட்கார வச்சிட்டிங்க.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து உங்களுக்கும் பொன்னெழில் டீச்சருக்கும்.

anujanya said...

ஹரி முகம் மறந்து விட்டது சரி. வனிதாவுடன் பேச்சு வார்த்தை? :)))

நல்லா இருக்கு AA

அனுஜன்யா

செல்ல நாய்க்குட்டி மனசு said...

//நீண்டநாள் கழித்து சக்கர நாற்காலியில் சுழன்று வந்து பாடம்சொல்லித்தந்தார்.//
சுறுசுறுப்பு என்பது மனதோடு சம்பந்தப்பட்டது,
கால்களோடு அல்ல.
அதனால் தான் சக்கர நாற்காலியிலும் சுழன்று பாடம் நடத்த முடிகிறது.
ஒரு imotional touch இருந்தது. please visit http://www.venthayirmanasu.blogspot.com

அ.மு.செய்யது said...

இறுதியில் அதிர்ச்சி !!!! வெகுவாக பாதித்தது இடுகை.

சீரான எழுத்தோட்டம் !!!

கலகலப்ரியா said...

அருமையான பதிவு..! நெகிழ்வான நினைவோடை..!

cheena (சீனா) said...

அன்பின் அமித்து அம்மா

பள்ளி ப்ற்றிய இடுகை - அருமை அருமை . வகுப்புக்ளை வர்ணிக்கும் விதம் - ஆசிரியைகளை வர்ணிக்கும் விதம் - மழலைச் செல்வங்கள் இடைவேளையில் சாப்பிடப்போகும் அழகு - அத்தனையும் அருமை

இறுதியில் பள்ளங்கிளாஸ் வீழ்ந்ததே ! பொன்னெழில் டீச்சரும் சக்கர நாற்காலியில் .

மனது கனக்கிறது

நல்ல கடஹி நல்வாழ்த்துகள் அமித்து அம்மா

Anonymous said...

கடைசியில பொன்னெழில் டீச்சரை சொல்லி மனசுக்கு சங்கடமாயிடுச்சு. புனைவுதான் என்றாலும்.

காமராஜ் said...

சீராக ஓடிக்கொண்டிருக்கும் நினைவுகளுக்குள் எல்லோருக்குள்ளும் பதுங்கிக்கிடக்கும் 'திடும்'.
கஷ்டமா இருக்கு அமித்தம்மா. பொன்னெழில் எத்தனை அழகான பெயர்.

அமுதா said...

சற்று நேரம் மனம் பதிவையே சுற்றிக்கொண்டிருந்தது. எந்த பள்ளியிலும் இருக்ககூடாது பள்ளங் க்ளாஸ். :-((

☀நான் ஆதவன்☀ said...

விவரிப்புகள் காட்சிகளாக கண் முன் தோன்றுகிறது.

முடிவு :(

தாரணி பிரியா said...

கண்ணு முன்னாடி காட்சிகள் வந்து போச்சு அமித்து அம்மா. பொன்னெழில் டீச்சர் மனசுல நின்னூட்டாங்க

"உழவன்" "Uzhavan" said...

உருக்கமான பதிவு அமித்துமா.. பொன்னெழில்.. பெயரை ரசித்துக்கொண்டே இருக்கிறேன்.

Karthik said...

இன்ட்ரெஸ்டிங்கா இருந்துச்சு. இப்பல்லாம் படிக்க ஆரம்பிக்கும்போதே ஒரு பெரிய சோகம் இருக்கும்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சிடுறேன்.. ;))

பா.ராஜாராம் said...

அனுபவம்,புனைவு என இருப்பதால் கொஞ்சம் குழப்பம் அமித்தமா.

அனுபவமா?புனைவா?

மற்றபடி உங்கள் எழுத்துக்கு சொல்ல வேணுமா?ஆத்மாவில் இருந்து உருட்டி,உருட்டி கைகளில் வைக்க அமித்துக்கு மட்டுமா அம்மா நீங்கள்?

//உங்கள் எழுத்தில் எனக்கு ஏனோ ஸ்டெல்லா ப்ரூஸ் நினைவில் வருகிறார்.//--வித்யா

வாஸ்த்தவம்தான் வித்யா,அமித்தம்மா.மனசுக்கு நெருக்கமாய் உணர்ந்த எழுத்தாய் இருக்கே என தோன்றி கொண்டே இருந்தது.வித்யா சொல்லவும்..ஆம் என சொல்ல தோன்றியது.உங்களின் தனித்துவமும் இருக்கு.

அம்பிகா said...

பள்ளங்க்ளாஸ் - ஏ க்ளாஸ்.

பள்ளாங் க்ளாஸும், பொன்னெழில் டீச்சரும் ஏற்படுத்திய வலி பல நாள்
மனதில் இருக்கும்.

தமிழ் அமுதன் said...

அவரவர் பள்ளி நினைவுகளை கொண்டுவரும் இந்த பதிவு...!

அண்ணாமலையான் said...

பொன்னெழில் பேர் இனிமையா இருக்கு. அழகாக வார்த்தைகளை கோர்த்து அமைத்த பதிவுக்கு வாழ்த்துக்கள்.

நினைவுகளுடன் -நிகே- said...

படித்து முடிந்த பின்னும் மனதில் நிற்கிறது .

நட்புடன் ஜமால் said...

கும்பகோணம் மனதில் வந்து செல்வதை தவிர்க்க இயலவில்லை.

பொன்னெழில் - பார்க்கனும் போலத்தான் இருக்கு ...

Thamira said...

அ.மு.செய்யது said...
இறுதியில் அதிர்ச்சி !!!! வெகுவாக பாதித்தது இடுகை.
சீரான எழுத்தோட்டம் !!!

// வழிமொழிகிறேன்.

யாழினி said...

சீரான எழுத்தோட்டம்

சென்ஷி said...

அருமையான எழுத்து அமித்து அம்மா...

சுந்தரா said...

மனசை ரொம்பப் பாதித்துவிட்டது பள்ளங் க்ளாஸ்.

உங்க எழுத்துநடை ஃபர்ஸ்ட் க்ளாஸ்!