23 September 2009

மிளகாய் கிள்ளி சாம்பார்

அம்மாவின் காலிடுக்கில் கவிழ்ந்து படுத்து தூங்கும் போது முகத்தில் படும் புடவை வாசம் எப்படி மனதுக்குள் விரிகிறதோ அப்படி அம்மாவை விட்டு இன்னொரு அகத்துக்கு மாறிவிட்டப்பின்பும் தொடர்ந்து கொண்டே வருவது அம்மா வைக்கும் மிளகாய் கிள்ளி சாம்பாரின் வாசம்.

இன்றும் அந்த சாம்பாரை வைத்துவிட்டு ஒரு முறை அம்மா வைக்கும் சாம்பார் நிறத்தையும், வாசத்தையும் நினைத்துக்கொள்வேன். ஏதோ ஒன்று இல்லாதது போலத்தான் இருக்கும்.

அம்மாவின் கரண்டி அக்காவின் கைக்கு மாறிய பின் அம்மா அந்த சாம்பாரை விட்டு விட்டாள். அதனால் அதிகப்படியாய் அதனை நான் உணர்ந்ததும் உண்டதும் எனது பள்ளிக்காலங்களில் தான். மாசக்கடைசியில் தான் அந்த சாம்பார் அதிகம் வைக்கப்படும்.காரணம் அம்மாவின் கைக்கு அதிகப்படியாய் வேறேதும் அகப்படாததுதான்.

தினப்படி ஆழாக்கில் அரிசி அளந்து போடும்போதோ,சாம்பாருக்கு உழக்கில் பருப்பு போடும்போதோ ஒரு கைப்பிடியை எடுத்து விடுவாள். நிறைய நாட்கள் அதை கண்டும் காணாமல் இருந்திருக்கிறேன். ஒரு முறை நான் அரிசி அளக்கும் போதுதான் அந்த ரகசியம் எனக்குறைக்கப்பட்டது. எப்போதும் அளந்தபின் ஒரு கைப்பிடியை எடுத்து வைத்தால் மாசக்கடைசியில் பக்கத்து வீட்டுக்குப் போய் ஒரு கிண்ணம் பருப்பு தாயேன், மொத தேதி வாங்கனவுடனே கொடுத்தடறேன் என்று கீழ் பார்வைப் பார்த்து கடன் வாங்கும் தர்ம சங்கடத்தை தவிர்க்கலாம் என்பதே அது.

அப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு ஊரில் இருந்துதான் அரிசி, பருப்பு வரும். அதுவும் துவரம்பருப்பானது, அரைகுறையாய் தோல் நீக்கப்பட்டு முழுசு முழுசாய் துவரையாகவே வரும். கேஸ் அடுப்பெல்லாம் இல்லாமல் திரி ஸ்டவ்வோடு மாரடிக்கவேண்டும்.

அடுப்பில் உலை வைத்து அரைமணி நேரத்தில் ஆக்கி வைத்துவிட்டு அக்கடான்னு அடுத்த வேலையைப் பார்க்கப்போகும் அம்மாவுக்கு இந்த திரி ஸ்டவ் பெரிய தலைவலியைக் கொடுத்தது.
குடியிருக்கும் வீட்டில் அடுப்பு பத்த வைத்தால் சுவரெல்லாம் கரி, போதாக்குறைக்கு கண்ணெரிச்சல் என்று அடுப்புக்கு தடா போட்டுவிட்டார்கள். ஆனாலும் வீட்டுக்காரங்க வீட்டில் மண்ணெண்ணெய் தீர்ந்துபோகும் காலகட்டங்களில அடுப்புதான் எரிபோடுவார்கள். !!??

அதிலும் இந்த முழுசும் பாதியுமாய் இருக்கும் துவரையை தண்ணீரில் போட்டு கழுவ கழுவ தோல் வந்துகொண்டே இருக்கும். என்னதான் முறத்தில் போட்டு நோம்பி புடைத்து பின் கழுவினாலும் விடாது சிகப்பு. இந்த ப்ராசஸ்க்கே அரைமணி நேரம் ஓடிவிட காயாவது கனியாவது.

எடு அலுமினிய குண்டானை, புடைத்து நோம்பிய பருப்பு, மஞ்சள் தூள், ஒரு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் (வீட்டில் இருந்தால்தான்) ரெண்டு பூண்டுப்பல் என எல்லாவற்றையும் ஒன்னா போட்டு, திரி ஸ்டவ்வில் வைத்தால், அது வேகும், வேகும், வெந்துகொண்டே இருக்கும். ஒரு பதத்திற்கு மேல் விட்டால், அது வேகும், ஆனால் மண்ணெண்ணெய்க்கு எங்கு போவது.
10 லிட்டருக்கு மேல் கொடுப்பது ரேஷன்கடையில் ஆகாத காரியம். அதனால் வெந்த வரைக்கும் போதும் என்று அடுப்பில் கடாயை வைத்து விட்டு, பருப்பை தண்ணி வடித்துவிட்டு சட்டியில் போட்டு மத்தால் கடை கடை என்று கடைந்து தீர்த்தால் பருப்பு மத்த இன்கிரிடென்ஸோட சேர்ந்து வெண்ணெய் பதத்திற்கு வந்திருக்கும். இது கடைபவரின் கையில்தான் இருக்கிறது. என் கையிலெல்லாம் மத்தை கொடுத்தால் பருப்பு கடைசி வரைக்கும் திப்பி திப்பியாகவே இருக்கும். தலையில் ஒரு கொட்டு வைத்து, ஒத்து, ஒன்னுத்துக்கும் லாயக்கில்ல என்று மத்தை வாங்கிய மறுநிமிடம் அது வெண்ணெயாய் திரண்டிருக்கும். இப்போது வைத்த கடாயில் ஒரு கரண்டி எண்ணெய் தான், ஒரே கரண்டிதான் அதுக்கு மேல காட்டினால் அம்மாவிற்கு அன்றிரவு தூக்கம் வராது.

ஊரிலிருந்து செக்காடி எடுத்து வரும் மல்லாட்டை எண்ணெய் (கடலையெண்ணெய்)அடுத்து ஊரிலிருந்து இன்னொரு தூக்கு வரும் வரைக்கும் இது காலியாகாமல் பார்த்துக்கொள்ளும் தலையாய கடமை அம்மாவுக்கு இருந்தது. அதனால் ஒக்க கரண்டிதான். அதில் கடுகைப் போட்டு வெடித்தவுடன், கருவேப்பிலை இருந்தா ரெண்டு உருவி போடறது, இல்லனா மெனக்கெடுவது கிடையாது, ரெண்டு காஞ்ச மிளகாயும் போட்டு அது கொஞ்சம் சிவந்தவுடன் கடைந்து வைத்திருப்பதை எடுத்து அதில் ஊற்றினால், மிளகாய் கிள்ளி சாம்பார் ரெடி.

துவரையின் தோல் சரியாக போகாமல் இருப்பதால், சாம்பார் கொஞ்சம் மஞ்சளும், சிவப்பாக இருக்கும். அதையெல்லாம் பார்க்காமல் வெந்த சோற்றில் சாம்பாரை ஊற்றி, தொட்டுக்கவெல்லாம் ஒன்னும் கிடையாது. அழுது அடம்பிடித்தால், கையிருப்பைப் பொறுத்து 10 பைசாவோ,நாலணாவோ உடன் இலவச இணைப்பான வசவோடு கிடைக்கும். அதை எடுத்துக்கொண்டு பாய் கடையில் விரல் அப்பளம் (அதுவும் மஞ்சள் கலரில்தான் இருக்கும்) வாங்கி விரலுக்கொன்றாய் மாட்டிக்கொண்டு, ஒரு வாய் சோறு, ஒரு விரல் கடி அப்பளம் என்று சாப்பிட்டால் சர்....ரென்று உள்ளே இறங்கும். சாப்பிட்டு ஒரு ஏவ்... விட்டவுடன் அடுத்த வீட்டில் கோழிக்குழம்பே கொதித்தாலும், அந்த ருசிக்கு மனசு அலையாது.

இப்படித்தான் அம்மா ஒன்றுமில்லாத ஒரு சாம்பாரால், எங்களின் பசிக்கு வயிறு நிரப்ப கற்றுத் தேர்ந்திருந்தாள்.

இப்போது நேரமின்மையாக இருந்தால் மட்டுமே இந்த சாம்பாரை வைக்க நேர்கிறது. அம்மா கடைவதை குக்கரின் கூட ஒரு விசில் செய்து விடுகிறது. தாளிப்புக்கு சேர்த்துக்கொள்ள கூட ஒரு வெங்காயம் இருக்கிறது. தொட்டுக்கொள்ள ஏதாவது காரம் சாரமாகவும் உடனிருக்கிறது. ஆனால் பசிக்கும், ருசிக்கும் அலைந்த அந்த வயிறும்..நாக்கும்.. ?

ஒரு உணவு வெறும் ஞாபகத்தினை மட்டும் கிளறாமல் உணர்வோடு இயைந்தே வரும் பக்குவத்தை அம்மா எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறாள். நான் என் மகளுக்கு..... என்ன தர முடியும்.. ஒரு பையை எடுத்து கையில் மாட்டிக்கொண்டு டெயின்னுக்கு மணாச்சி, பாஆய் என்ற வார்த்தையால் ஒரு குற்ற் உணர்வை என் மனதுக்கு அளிக்கும் நிகழ்வைத் தவிர...

தனக்கு நீளமான முடி வேண்டி மகள் அம்மாவிடம் சொல்வதும், அதற்கு அம்மா, அப்போ உன் பாட்டி ஆபிஸுக்கு போகலைம்மா என்று சொல்வதாய் ஒரு விளம்பரம் ஒன்று வருகிறது. மெய்யோ, பொய்யோ, வியாபார யுக்தியோ எதுவாக இருந்தாலும் குழந்தையின் விருப்பு வெறுப்புகளைக்கூட நமது வசதிக்காவும், நேரத்துக்கும் ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ளும் கால ஓட்டங்கள் நிகழ்வினை மட்டும் மாற்றுவதில்லை உடன் வரும் நேசத்தையும் பாசத்தையும் கூட சற்று மாற்றி வைக்கிறதோ, அலாரத்தில் நேரம் வைத்துக்கொள்வதைப் போல.

37 comments:

☀நான் ஆதவன்☀ said...

”மிளகாய் கிள்ளி சாம்பார்” நினைச்சாலே நாக்கு ஊறுது :) எனக்கு பிடிச்ச ஐயிட்டம் இது. நல்ல பதிவு

அபி அப்பா said...

அருமை அருமை நான் எழுதின மாதிரி இருக்கு. இந்த கேஸ் ஸ்டவ் இருக்கே அதை என் அம்மா வாங்கவே கூடாது ஒரே பிடிவாதம். வெடித்து விடும்ன்னு யாரோ சொல்லிட்டாங்கன்னு. நான் யாருக்கும் தெரியாமல் 1980ல் பதியவைத்து 10 மாதம் கழித்து வந்தது. எங்க நம்பர் 1329.

அப்போ நான் 10ம் வகுப்பு. கிடைத்தவுடன் லூட அம்மா வாங்க விடலை. மிகுந்த சிரமப்பட்டு வாங்கினோம்.

நல்ல பழைய நியாபகம் கிள்றி விட்டீங்க.

Anonymous said...

விரல் அப்பளத்தை நாங்க "குழல்-குடல்" அப்படின்னும் சொல்லுவோம். இங்கேயும் Tatties என்ற பெயரில் கிடைக்கிறது.

butterfly Surya said...

லன்ச் டைம்.

சந்தனமுல்லை said...

//வீட்டுக்காரங்க வீட்டில் மண்ணெண்ணெய் தீர்ந்துபோகும் காலகட்டங்களில அடுப்புதான் எரிபோடுவார்கள். !!??//

அவ்வ்வ்வ்வ்!!!

/ஒரு பையை எடுத்து கையில் மாட்டிக்கொண்டு டெயின்னுக்கு மணாச்சி, பாஆய் என்ற வார்த்தையால் ஒரு குற்ற் உணர்வை என் மனதுக்கு அளிக்கும் நிகழ்வைத் தவிர.../

ஹேய்...நோ ஃபீலிங்ஸ்..நீங்க என்ன தந்தீங்கன்னு அமித்து சொல்றதுக்காக வெயிட்டிங்!!

/விரல் அப்பளம் (அதுவும் மஞ்சள் கலரில்தான் இருக்கும்/

ஆகா...இது சாப்பிடறதுக்கு என்ன திருட்டுத்தனம் செய்வோம்...அதுக்குப்பேரு குடல்!! :)) இப்போ அது gold fingers ஆகிடுச்சு!!

துளசி கோபால் said...

அருமை.

ஆமாம்...கொஞ்சம் புளி சேர்க்கவேணாமா?

என்னென்னவோ நினைவு வந்து போகுது............

தாரணி பிரியா said...

எப்படிங்க இப்படி எல்லாம் எழுதறீங்க. ரகசியத்தை கொஞ்சம் சொல்லி தாங்களேன். நானும் இதே போல அனுபவிச்சு இருக்கேன். ஆனா எழுததான் வர்றது இல்லை.

அப்புறம் அமித்து சொல்லற வரைக்கும் வெயிட் செய்யண்டி. அவளுக்கும் அவ அம்மா ஏதாவது ஸ்பெஷலா தனியா வெச்சு இருப்பாங்க‌

அ.மு.செய்யது said...

கொஞ்ச‌ம் நெருக்கமான‌ ப‌திவாக‌ உண‌ர்கிறேன் அமித்துமா..


//இன்றும் அந்த சாம்பாரை வைத்துவிட்டு ஒரு முறை அம்மா வைக்கும் சாம்பார் நிறத்தையும், வாசத்தையும் நினைத்துக்கொள்வேன். ஏதோ ஒன்று இல்லாதது போலத்தான் இருக்கும்.
//

எங்க‌ள் வீட்டில் வார‌த்துக்கு ஐந்து நாள் அசைவ‌ம் தான் இருக்கும்.இருந்தாலும் அம்மா வைக்கும் முருங்கைக்காய் சாம்பார் தான் என‌க்கு உயிர்.

நீங்க‌ள் சொல்வ‌து போல‌ பூனே வ‌ந்த‌தும் நான் வைக்கும் சாம்பாரை பார்க்கும் போதெல்லாம் என‌க்கும் இந்த‌ உண‌ர்வுக‌ள் ஏற்ப‌டுவ‌துண்டு.

பாத்து எழுதுங்க‌..இங்க‌ இருக்கிற‌வ‌ங்க‌ எல்லாம் அம்மாவை விட்டு பிரிந்து அய‌ல்நாட்டில் வேலைசெய்ப‌வ‌ர்க‌ள் தான்.எல்லோருக்கும் ஞாப‌க‌ம் வ‌ந்து விடும்.

அ.மு.செய்யது said...

மேலும் நீங்க‌ சொன்ன‌ திரிஸ்ட‌வ்வும் கொட‌ல் அப்ப‌ள‌மும் ரேஷ‌ன் க‌டை கிருஷ்ணாயிலும்...

என்னை ஒரு பதினைந்து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் கொண்டு சென்று விட்ட‌து.

அமுதா கிருஷ்ணா said...

அருமையான நினைவுகள்..ம்ம்ம்ம்ம்

ஆயில்யன் said...

ஹய்யய்யோ இந்த சாம்பார்தானா? நான் நிறைய வாட்டி தின்னுருக்கேனே!

பசி முட்டும் இரவில் சுடச்சுட சாதமும் சுடச்சுட சாம்பாரும் அப்புறம் தொட்டுக்க வடகமும் எவ்ளோ நாள் நல்லா ஃபுல் கட்டு கட்டியிருக்கேன் பாஸ் !!!

Karthik said...

இப்படி ஒரு பெயரை இன்னிக்குதான் கேள்விப்படுறேன். ஒருவேளை சாப்பிட்டிருக்கலாம். ஆனா செம பதிவு.

நிஜமா நல்லவன் said...

/அதிலும் இந்த முழுசும் பாதியுமாய் இருக்கும் துவரையை தண்ணீரில் போட்டு கழுவ கழுவ தோல் வந்துகொண்டே இருக்கும். /

எங்க ஊரில் துவரை சாகுபடி உண்டு பாஸ்....பருப்புக்கு பஞ்சமே கிடையாது....நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ எங்க பாட்டி தண்ணீரில் துவரைய போட்டு கழுவுறதை வேடிக்கை பார்த்திட்டு இருப்பேன்...ஜாலியா இருக்கும்:))

நிஜமா நல்லவன் said...

/பருப்பை தண்ணி வடித்துவிட்டு சட்டியில் போட்டு மத்தால் கடை கடை என்று கடைந்து/


ஹா...ஹா..ஹா...ஒன்ஸ் அப்பான் எ டைம் இந்த ப்ராஸஸ் நடந்தப்போ நான் ஹெல்ப் பண்ணுறேன்னு சட்டிய உடைச்சிட்டு நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன்:))

நிஜமா நல்லவன் said...

/இது கடைபவரின் கையில்தான் இருக்கிறது. /

சரியா சொன்னீங்க பாஸ்....என்னைய மாதிரி ஹெல்ப் பண்ணுறேன்னு வர்ற பேர்வழி கைக்கு போனா அப்புறம் சட்டி உடைந்து சாம்பார் கனவு தகர்ந்து வெறும் சோறு தான் சாப்பிடணும்:)

"உழவன்" "Uzhavan" said...

எப்போதும் அளந்தபின் ஒரு கைப்பிடியை எடுத்து வைத்தால் மாசக்கடைசியில் பக்கத்து வீட்டுக்குப் போய் ஒரு கிண்ணம் பருப்பு தாயேன், மொத தேதி வாங்கனவுடனே கொடுத்தடறேன் என்று கீழ் பார்வைப் பார்த்து கடன் வாங்கும் தர்ம சங்கடத்தை தவிர்க்கலாம் என்பதே அது.//

சேமிப்பு எங்கெங்கெல்லாம் இருக்கிறது. வியக்கிறேன்.
கொஞ்சம் மனதை நெகிழ வைத்த பதிவு.

ராகவன் said...

ரொம்ப அழகாக இருந்தது உங்கள் நடை, ஐ மீன் எழுத்து நடை.. எல்லோராலும் ரிலேட் பண்ணிக் கொள்ள முடிவதால், இது இன்னும் அழகாக இருக்கிறது.

அம்மாவை விட சுவாரசியமானது அம்மாவின் அடுக்களை ரகசியங்கள். இன்னும் கூடவே இருக்கிறது, அம்மாவின் கறிக்குழம்பும், இட்லியும் நினைவுக் குழிக்குள் எடுக்காமல் விட்ட பணியாரங்களாய்...

வாழ்த்துக்கள்

ராகவன்

அமுதா said...

மனதைக் கிள்ளி நினைவுகளை உசுப்பி விட்ட நெகிழ்வான பதிவு

Unknown said...

என்னுடையதும் விவசாயக் குடும்பம் தான். (இப்பொழுது அப்படி இல்லை)

நீங்கள் அனுபவித்த திரி ஸ்டவ், கெரோசின் நானும் பார்த்து இருக்கேன். துவரை சாம்பார் எல்லாம் எங்க வீட்டில் கூட சமைப்பாங்க. பல வருஷம் முன்னாடி போக வச்சிட்டிங்க. நல்லா எழுதி இருக்கீங்க சாரதா.

நட்புடன் ஜமால் said...

ஞாபகங்களை தூண்டும் விதமாகவே அநேக பதிவுகள் இருக்கு.

என் தாய் ஊது குழல் வைத்து சமைப்பார்கள்.

பருப்பு ஆனம் சொல்வோம் - இது தான் என் ஆல் டைம் ஃபேவரைட்.

பெரிய அவரைக்காய் போடுவாங்க.

கடைசியா அப்பளப்பூ பொரித்து அதில் நீந்த விடுவாங்க.

ரொம்ப பிடிக்கும்,

இப்போ அந்த தரத்தில் பருப்பும் கிடைப்பதில்லை, என் தாயும் சமைப்பதில்லை.

என் அக்காதான் சமையல் கட்டை கட்டோடு எடுத்து கொண்டார்கள்.

தாய்க்கு அடுத்து என் அக்காவின் சமையல் தான் ரொம்ப பிடித்தது ...

தமிழ் அமுதன் said...

காய்கறி ஏதும் போடாமல் பருப்பின் சுவையையே பிரதானமாக கொண்டிருக்கும் அந்த சாம்பார்தானே ??? அது எனக்கும் பிடிக்கும் ..! அந்த சாம்பார் ஒரு சிக்கன சாம்பாராக இருக்கலாம் ஆனால் ? உங்கள் எழுத்தின் தாராளம் சாம்பாரைவிட நன்றாக மணக்கிறது..!

காமராஜ் said...

//இப்படித்தான் அம்மா ஒன்றுமில்லாத ஒரு சாம்பாரால், எங்களின் பசிக்கு வயிறு நிரப்ப கற்றுத் தேர்ந்திருந்தாள்.//

இந்தக்கருத்தில் உங்களுக்கு நான் எதிர்க்கட்சி அமித்தம்மா.
1,சாம்பார் பொடிகள் எனும் மசால், குடலுக்கு பெருந்தீங்கு.
2,அதிலெல்லால் இல்லாத மணம் ருசி வெறும் பருப்புக்கு உண்டு.
அம்மாவின் கையில்
என்ன இல்லை ? அடைமழை நேரத்தில் அரிசி, உளுந்து,
நிலக்கடலை, என்ன தாணியம் கண்னுக்கு தெரிந்தாலும்
வறுத்துக்கொடுக்கும் மழைக்காலம் எனக்கு திரும்ப வரவேயில்லை.
எனக்கு மட்டுமல்ல யாருக்கும்.

காமராஜ் said...

//மனதைக் கிள்ளி நினைவுகளை உசுப்பி விட்ட நெகிழ்வான பதிவு//

ஆஹா.. என்ன கவிதை.. அழகு.

பா.ராஜாராம் said...

ஒரு சாம்பாரில் எவ்வளவு கரைக்கிறீர்கள் அமித்தம்மா,அம்மாவை அப்புறம் எங்களை.

Deepa said...

Brilliant post amithu amma!
One of your masterpieces...

// சாப்பிட்டு ஒரு ஏவ்... விட்டவுடன் அடுத்த வீட்டில் கோழிக்குழம்பே கொதித்தாலும், அந்த ருசிக்கு மனசு அலையாது.//
மிகவும் ரசித்து லயித்த வரிகள்.

மாதவராஜ் said...

நிறைய நினைவுகளையும், ஆண்கள் அறியாத உலகையும் சொல்லிக்கொண்டே வந்து, சட்டென ஒரு வலியை ஏற்படுத்தி விட்டீர்கள்.சின்னச் சின்னதாய் எவ்வலவு விஷயங்கள் நம்மைச்சுற்றிலும் இருக்கின்றன சொல்வதற்கும், புரிந்துகொள்வதற்கும் இல்லையா....!

செந்தில் நாதன் Senthil Nathan said...

அம்மாவின் சமையல்... அதுக்கு நிகர் எதுவுமே இல்ல.. இன்னைக்கு நான் வச்ச சாம்பரா பார்க்கும் போது அம்மாவ ரெம்பவே மிஸ் பண்ணறேன்... அருமையான பதிவு.. படிச்சவுடன அம்மாவுக்கு போன் பண்ணி பேசினேன்.. டச் பண்ணிடிங்க...

Jayaprakash Sampath said...

எதேச்சையாக எதையோ தேடிப்பிடித்து வந்தால், இது..

அருமையான பதிவு. வாழ்த்துகள்.

ஆரூரன் விசுவநாதன் said...

ஒரு நாளின் இயல்பாய் நடந்ததெல்லாம், இன்று ரசிப்பாய், எழுத்தாய், கலையாய்,.....

எழுத்து நடை அருமை. சாம்பாரின் ருசியை விட சொன்ன விதம் மிக ருசியாக. சமைத்து, சாப்பிட்டுவிட்டுச் சொல்கிறேன், கோழிக் குழம்பை விட சுவையா, என்று...

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

சிங்கை நாதன்/SingaiNathan said...

//அப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு ஊரில் இருந்துதான் அரிசி, பருப்பு வரும்.//

அப்போ உங்க வீடு ஊருக்கு வெளிய இருந்துச்சா? :)


//விரல் அப்பளத்தை நாங்க "குழல்-குடல்" //

எங்க ஊரில் போ(Bo)ட்டி என்போம்

அன்புடன்
சிங்கை நாதன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

சிங்கைநாதன் சார்!

நீங்கள் உடல்நலம் தேறிவந்து கமெண்ட் இடுவதைப் பார்ப்பது மனமகிழ்ச்சியைத் தருகிறது.

வாழ்த்துக்கள்

Thamira said...

வாழ்வியலைப்பதிவு செய்யும் தரமான பெண் பதிவர்களில் முக்கியமானவர் நீங்கள். இன்னும் உயரம் தொடுவீர்கள். வாழ்த்துகள்.!

Unknown said...

அருமையான இடுகை அக்கா... :)) ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க.... :))

அம்பிகா said...

என் அண்ணன் (மாதவராஜ்), ‘நீயும் ஒரு பதிவு ஆரம்பித்து எழுது அம்பிகா’ என்று சொல்லியிருக்கிறார். நானும் சரியென்றேன்.உஙகள் பதிவுகளை படிக்கும்போது கொஞ்சம் பயமாக இருக்கிறது, நாம் என்ன எழுத போகிறோம் என்று. அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள். பாரட்டுக்க்ள்

+Ve Anthony Muthu said...

//அம்மாவின் காலிடுக்கில் கவிழ்ந்து படுத்து தூங்கும் போது முகத்தில் படும் புடவை வாசம் எப்படி மனதுக்குள் விரிகிறதோ//

ஆரம்பம அசத்துகிறது.

பின்தொடர்கிறேன்.

இரசிகை said...

nice.......