10 September 2009

ஆறு தன் வரலாறு கூறுதல் (தொடர்பதிவு)

நமக்கு எப்பவுமே சுயபுராணம் பாடறதுனா ரொம்ப புடிக்கும், நம்ம லேபிள் கூட சொந்தக்கதை, சோகக்கதை, அனுபவம் அப்படின்னுதான் இருக்கும். ஆறு தன் வரலாறை கூறுவதும் அந்த வகையில சேர்ந்துடுது பாருங்க :))))

ஏற்கனவே நான் பதிவெழுத வந்த கதையை ரெண்டு மூணு இடத்துல சொல்லிட்டாலும், மறுபடியும் ஒரு சிறுகுறிப்பு. புதிய அலுவலகத்தில் ஆரம்பநாட்களில் வேலை இல்லாமல் ச்சும்மா கூகிலிக்கும் போது நிலவு நணபனின் விதைகள் ப்லாக் தென்பட,அவரின் பதிவுக்கு பின்னூட்டம் போட முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கும் போது நிலவுநண்பனின் உதவியால் தொடங்கப்பட்டதே இந்த வலைப்பூ. வெறும் படத்தைப்போட்டு காலத்தை ஓட்டலாம் என்றெண்ணி எனக்கு மெயிலில் வந்த படங்களையெல்லாம் அப்லோட் செய்து கொண்டிருந்தேன். ஆச்சியின் வலைப்பூ பார்த்து ஆஹா ஆரம்பிச்சிடலாம்பா நம்ம அமிர்தவர்ஷினியின் அப்டேட்ஸை என்றெண்ணி எழுத ஆரம்பித்தேன்.
வர்ஷினியோடவே இந்த வலைப்பூவும் வளர்ந்து வருவது குறித்து எனக்கு மிகவும் சந்தோஷம்.

ஒரு முறை அமித்து அப்டேட்ஸில் திரு. கே.வி.ஆர், இரண்டு வயசுக்குள்ள இப்படி பேசுறாளா உங்க பொண்ணு ஆச்சரியமா இருக்கு அப்படின்னு ஒரு பின்னூட்டமிட்டார், எனக்கு இப்பவும் வர்ஷினி எங்கிருந்தாவது புதுசா ஒரு வார்த்தைய கத்துக்கிட்டு பேசினாலென்றால் அவரின் பின்னூட்டம் ஞாபகம் வரும். அந்தளவுக்கு நம்மக் கூடவே தொடர்ந்து வருகிறது முகம் பார்த்திராத மனிதர்களின் எழுத்தும், அன்பும்.

என் அம்மாவை எல்லோருமே கமலாம்மா என்றுதான் கூப்பிடுவார்கள். தன் மூத்த மகளையே தன் பெயர் அடையாளமாகக் கொண்டு தன் இயற்பெயரான ருக்குவை கையெழுத்திடமட்டும் வைத்துக்கொண்டிருந்தாள் அம்மா. அது போல வர்ஷினி அம்மா என்று யாராவது நம்மை கூப்பிட்டால் எப்படியிருக்கும் என்று குழந்தை பிறந்து கொஞ்ச நாளிலேயே கனவு காணதொடங்கிவிட்டேன். என்னை அடையாளப்படுத்திக்கொள்ள என் மகளின் பெயர்தான் சரி என்று முடிவு செய்த பின்னரே அமிர்தவர்ஷினி அம்மா என்று ப்ரொஃபைலில் பேரிட்டு, பின்னர் பின்னூட்டங்களில் அந்தப் பெயரை நான் கண்டபோது, அமித்து அம்மா என்று வலைப்பூக்களில் விளிக்கும்போது அடைந்த / அடைகிற மகிழ்ச்சிக்கு எல்லை என்ற ஒன்றை என்னால் எந்நாளும் வைக்கமுடியாது.

அமித்து அம்மா என்ற அடைமொழியை என் மகள் எனக்கு தந்தா மாதிரி நான் அவளுக்கு அம்மா என்பதைத் தவிரவும் வேறு என்ன அடையாளத்தை தருவது என்று முதல்முறையாய் உருப்படியாய்!யோசித்து ஏதோ ஒன்னு செய்யனும், ஏதோ ஒன்னு செய்யனும் அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிக்கொண்டு, நிறைய நிறைவான வாசிப்புகளுக்கு என் மனதையும் நேரந்த்தையும் தந்து, எழுத ஆரம்பித்த பின்னர்தான் அந்த ஏதோ ஒன்னு இதுதான் அப்படின்னு நினைத்துக்கொண்டேன். எனக்குள் இருந்த அந்த ஏதோ ஒன்னை கண்டறிய காரணமாக இருந்தது உங்களனைவரின் பின்னூட்டங்களே. நன்றிகள் அனைவருக்கும்

தொட்டதுக்கெல்லாம் கோபமடைந்து என்னையும், என்னைச்சுற்றி இருப்பவரையும் அலைக்கழிப்பதையே தொழிலாக கொண்டிருந்த நான், வலைப்பூவிற்கு வந்தபின்னர் என் மனதை நிறைய செப்பனிட்டு வருகிறேன் என்பதை உணரும் பொழுது, இந்தமாற்றம் ஒன்றே போதும், வலைப்பூவிற்கு வந்த வாழ்நாள் பலனாய் நிறைந்திருக்க.

விதம் விதமாய், மனித மனங்கள் கண்டதை, கேட்டதை,அனுபவித்ததை ரகம் ரகமாய் பிரித்து அவரவர் பாணியில் எழுதுவதைப் பார்க்கும்போது நேரும் பிரமிப்பு அனுதினமும் தொடர்கிறது. விகடன், குமுதம், குங்குமம், தேவதை என வளர்ந்த, வளர்ந்து கொண்டிருக்கும் இதழ்களில் யாராவது ஒருவரின் ப்லாக்ஸ்பாட் அறிமுகத்தையோ, அல்லது எழுத்தையோ கண்டுவிட்டால், ஹைய், இவங்கள எனக்குத் தெரியுமே என மனதுக்குள் ஒரு குரல் எழுந்து அடங்கி புன்னகையுடன் விழிவிரிய நேரிடுகிறது.

இளையராஜவின் இசையில் ஜென்சி பாடிய ஆயிரம் மலர்களே என்ற பாடலில் பின்வரும் வரிகள் வரும்.

”கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்
எழுதிச்செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ”


வலைப்பூ தான் நம் அனைவரையும் சேர்த்துவைத்திருக்கிறது.நட்பால், எழுத்தால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இன்பமோ, துன்பமோ ஏதாவது ஒரு வகையில் பகிர்ந்துகொள்ளவைக்கிறது.
காலதேவனின் கணக்கில் இது ஒரு மிகப்பெரிய கொடுப்பினை. அனுதினமும் எழுத்தை ஏதோ ஒரு வடிவில் சமைத்தும், சுவைத்தும் கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாய் உணர்ந்திருப்பார்கள்.
உணரவைத்த, உறைய வைத்த கணங்கள் நிறைய நெஞ்சினில். மீண்டும் நன்றிகள் அனைவருக்கும்.

இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைத்த சிதறல்கள் தீபாவிற்கு நன்றிகள்

அழைக்கப் போகும் ஐவர்

1. தாமிரா @ ஆதிமூலகிருஷ்ணன் (உங்கள் ட்ராப்ட் பதிவுகளை தடுக்கவே இந்த முயற்சி :)))))))))
2. விபாஷாவின் டைரியை எழுதிக்கொண்டிருக்கும் மிஸஸ். தேவ்
3. ஆபிஸில் ஆணி அதிகமாகி அதனால் அவதியுற்று முதன் முதலாய் வந்து கைகொடுக்க முடியாத தவிப்பில் இருக்கும் நட்புடன் ஜமால்
4. பதிவெழுத வந்து ஒரு வருட காலம் ஆகப்போகும் எழுத்தாளர் பைரவன் @ கண்ணாடி ஜீவன்
5. நத்தையை போட்டுவிட்டு அதற்குப்பிறகு நகராமல் இருக்கும் அ.மு. செய்யது


விதிமுறை:

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 அல்லது அதிலும் கூட பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைப்பவர்களுக்கு அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

(மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.)

26 comments:

ஆயில்யன் said...

//தொட்டதுக்கெல்லாம் கோபமடைந்து என்னையும், என்னைச்சுற்றி இருப்பவரையும் அலைக்கழிப்பதையே தொழிலாக கொண்டிருந்த நான்,//

ஒ அப்ப நீங்களும் டெரர் தானா பாஸ் அவ்வ்வ் இது தெரியாம போச்சே ! :)

ஆயில்யன் said...

//ஆபிஸில் ஆணி அதிகமாகி அதனால் அவதியுற்று முதன் முதலாய் வந்து கைகொடுக்க முடியாத தவிப்பில் இருக்கும் நட்புடன் ஜமால்//

ஒ அண்ணாச்சிக்கு ஆப்பு வைச்சுட்டாங்களா!

கேக்கவே எவ்ளோ சந்தோஷமா இருக்கு ! அட அண்ணன் பணியாற்றிக்கொண்டிருப்பதில் ஒரு சந்தோசம்தானே!

ஆயில்யன் said...

//ஆச்சியின் வலைப்பூ பார்த்து ஆஹா ஆரம்பிச்சிடலாம்பா நம்ம அமிர்தவர்ஷினியின் அப்டேட்ஸை என்றெண்ணி எழுத ஆரம்பித்தேன்.//

ஒ ஃபார்முலா பை பப்பு சயிண்டிஸ்ட் ஆச்சியா ரைட்டு!

Vidhoosh said...

அமித்து அம்மா.

உங்கள் அறிமுகங்களின் லிங்கும் கொடுத்தால் சௌகரியம். :)

வரலாறு சூப்பர். அமித்தோடையே வாழ்க - வளர்க.

:) வித்யா

குடந்தை அன்புமணி said...

//வலைப்பூ தான் நம் அனைவரையும் சேர்த்துவைத்திருக்கிறது.நட்பால், எழுத்தால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இன்பமோ, துன்பமோ ஏதாவது ஒரு வகையில் பகிர்ந்துகொள்ளவைக்கிறது.
காலதேவனின் கணக்கில் இது ஒரு மிகப்பெரிய கொடுப்பினை.//

நிச்சயமான வார்த்தைகள் அமித்து அம்மா.
உங்கள் சுயபுராணத்தை ஏற்கெனவே படித்திருந்தாலும், மீண்டும் ஒருமுறை புதிதாக படிப்பதுபோலவே உணர்கிறேன்.

தாங்கள் அழைத்தவர்களின் அனுபவங்களையும் படிக்க ஆவலாய்...

ஆகாய நதி said...

good one... :)))

அன்புடன் அருணா said...

ஆறு ஓட ஆரமபிச்சாச்சா?
சூப்பர்!

Deepa said...

//வர்ஷினியோடவே இந்த வலைப்பூவும் வளர்ந்து வருவது குறித்து எனக்கு மிகவும் சந்தோஷம்.//

அவளைப் போலவே வெகு அழகாக....

/வலைப்பூவிற்கு வந்தபின்னர் என் மனதை நிறைய செப்பனிட்டு வருகிறேன் என்பதை உணரும் பொழுது, இந்தமாற்றம் ஒன்றே போதும், வலைப்பூவிற்கு வந்த வாழ்நாள் பலனாய் நிறைந்திருக்க.//

வாழ்த்துக்கள் அமித்து அம்மா.

நீங்கள் அழைத்தவர்கள் பற்றி வரைந்த குறிப்புகள் அருமை! :-)

Thamira said...

நடிகர் சூர்யா மாதிரி மொக்கையாக ஆரம்பித்து பின் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு பிரமிக்கும் வகையில் தன் எழுத்தைச் செம்மைப்படுத்திக்கொண்டு வளர்ந்த பதிவர்களில் நீங்களும் ஒருவர். உங்கள் எழுத்துகள் இதழ்களுக்கு ஏற்றவை. வாழ்த்துகள் உங்களுக்கு.!

அழைப்புக்கு நன்றி.! இரண்டொரு நாளில் எழுதுகிறேன்.

நட்புடன் ஜமால் said...

அழகிய தொடர்பதிவு.

நல்லா எழுத்தோட்டமுன்னு நான் உங்களுக்கு சர்ட்டிஃபிக்கேட் குடுக்க தேவையில்லை.

-----------------------

ஐவரையும் அழகாக சொல்லியிருக்கீங்க

-----------------------

கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்
எழுதிச்செல்லும் விதியின் கைகள் மாறுமோ]]

நிச்சியம் சகோ!

வருவேன் விரைவில்...

மாதவராஜ் said...

ஆறு மிக இயல்பாய் ஓடுகிறது...
வலையுலகம் குறித்து தாங்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் ஆரோக்கியமானவை. வாழ்த்துக்கள்.
//அமித்து அம்மா என்ற அடைமொழியை என் மகள் எனக்கு தந்தா மாதிரி//
இந்த வரி பெரும் தாக்கத்தை தந்துகொண்டே இருக்கின்றன....

சந்தனமுல்லை said...

'மழை'யின் வரலாறு ஓரளவிற்கு தெரியுமெனினும் தங்கள் வார்த்தைகளில் வாசிக்கும் போது மகிழ்ச்சி! :-) நல்லாச் சொல்லியிருக்கீங்க..நிறைய வரிகள் ஆமாம் போட வச்சது!!

Malini's Signature said...

அமித்து அம்மா சூப்பர் :-)

அமுதா said...

/*வலைப்பூ தான் நம் அனைவரையும் சேர்த்துவைத்திருக்கிறது.நட்பால், எழுத்தால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இன்பமோ, துன்பமோ ஏதாவது ஒரு வகையில் பகிர்ந்துகொள்ளவைக்கிறது.
காலதேவனின் கணக்கில் இது ஒரு மிகப்பெரிய கொடுப்பினை. அனுதினமும் எழுத்தை ஏதோ ஒரு வடிவில் சமைத்தும், சுவைத்தும் கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாய் உணர்ந்திருப்பார்கள்.
உணரவைத்த, உறைய வைத்த கணங்கள் நிறைய நெஞ்சினில்.*/
உண்மைதான். ரொம்ப அழகா சொல்லிட்டீங்க. மழையில் ஆற்றின் ஓட்டம் தெளிவாக இருக்கிறது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பின்னூட்டிய அனைவருக்கும் நன்றிகள்

Anonymous said...

//”கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்
எழுதிச்செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ”//

அமித்து அம்மா, எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு இது. நீங்க பரவாயில்லை. நாலு பேரை கூப்புட்டீங்க. எனக்கு யாரை கூப்புடறதுன்னு தெரியலை. சும்மா லூஸ்ல விட்டுட்டன்.

ப்ரியமுடன் வசந்த் said...

// வலைப்பூவிற்கு வந்தபின்னர் என் மனதை நிறைய செப்பனிட்டு வருகிறேன் என்பதை உணரும் பொழுது, இந்தமாற்றம் ஒன்றே போதும், வலைப்பூவிற்கு வந்த வாழ்நாள் பலனாய் நிறைந்திருக்க.//

நிஜம் சகோ....

நானும் இது போல் நிறைய வலைபூக்கள் படிப்பதால் மனசுவிட்டு ரசிச்சு சிரிச்ச்சுக்கிட்டு இருக்கேன் அதனால் கோவம் கொஞ்சம் குறைந்திருக்கிறது..மனிதர்களை ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன்....

தமிழ் அமுதன் said...

//தொட்டதுக்கெல்லாம் கோபமடைந்து என்னையும், என்னைச்சுற்றி இருப்பவரையும் அலைக்கழிப்பதையே தொழிலாக கொண்டிருந்த நான்,//

கோவமாத்தான் ஒரு பதிவு போடுங்களேன்..! பார்க்கணுமே உங்க கோவத்தை...!


//வலைப்பூ தான் நம் அனைவரையும் சேர்த்துவைத்திருக்கிறது.நட்பால், எழுத்தால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இன்பமோ, துன்பமோ ஏதாவது ஒரு வகையில் பகிர்ந்துகொள்ளவைக்கிறது.
காலதேவனின் கணக்கில் இது ஒரு மிகப்பெரிய கொடுப்பினை. ///

உண்மை ..!


// பதிவெழுத வந்து ஒரு வருட காலம் ஆகப்போகும் எழுத்தாளர் பைரவன் @ கண்ணாடி ஜீவன்///


அழைப்புக்கு நன்றி ...!!! இரண்டாம் ஆண்டு துவக்க தினத்தில் எழுதுகிறேன்...!

காமராஜ் said...

முதல் பாராவிலேயே சிரிக்க வைத்து தொடர்ந்து படிக்கவைக்கிரீர்கள்.
முடிக்கும் போந்தான் தெரியுது தொடர் பதிவென்றே.
மனசை இலகுவாக்குகிற பாடல். பதிவு.

Jerry Eshananda said...

அம்மாடி,எங்கு பார்த்தாலும் "தொடர்பதிவு ஜுரம் தொடங்கிருச்சே"
தப்பிக்க வழி சொல்லுங்கம்மா.

அமுதா கிருஷ்ணா said...

//தொட்டதுக்கெல்லாம் கோபமடைந்து என்னையும், என்னைச்சுற்றி இருப்பவரையும் அலைக்கழிப்பதையே தொழிலாக கொண்டிருந்த நான்,//


நானும் இப்படிதான்,,நான் மட்டும் இப்படி இல்லை என்பதில் இப்ப மகிழ்ச்சி..சுய பச்சாதாபம் அதிகம் இருந்தது..ஏன் நான் மட்டும் இப்படி என்று...

மாதேவி said...

எழுத ஆரம்பித்த வரலாறு நன்று.

"இன்பமோ, துன்பமோ ஏதாவது ஒரு வகையில் பகிர்ந்துகொள்ளவைக்கிறது" என்பது உண்மைதான்.

செந்தில் நாதன் Senthil Nathan said...

மனச தொட்டுடிங்க போங்க!!

அ.மு.செய்யது said...

நான் வலைக்கு அறிமுகமான ஆரம்ப காலத்தில் வியந்து வாசித்த வலைதளம் உங்களுடையது தான்.

எனக்கும் ஆரம்ப கட்ட அனுபவங்களை எழுத ஆர்வமிருக்கிறது.வாய்ப்புக்கு நன்றி !!!

Unknown said...

//எனக்கு இப்பவும் வர்ஷினி எங்கிருந்தாவது புதுசா ஒரு வார்த்தைய கத்துக்கிட்டு பேசினாலென்றால் அவரின் பின்னூட்டம் ஞாபகம் வரும். //

அன்று அந்தப் பதிவு படிக்கும்போது “அட நம்ம நிலாவும் இப்படியெல்லாம் பேசுவாளோ” என்ற இனம் புரியாத மகிழ்ச்சி கலந்த உணர்வு வந்துச்சு. இப்போ ஒரு வயசுலேயே நிலா நாளுக்கு நாள் நிறைய பேசுறப்போ அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகுது. உங்களது பிற பதிவுகளை சில நேரங்களில் படிக்கத் தவறினாலும் அமித்து அப்டேட்ஸ் படிக்கத் தவறுவதில்லை.

தொடர்ந்து எழுதுங்கள். ஆறு என்றென்றும் வற்றாமல் ஓட வாழ்த்துகள்.

"உழவன்" "Uzhavan" said...

மழை ஆறு பற்றிச் சொல்லப்போகிறதே என்ற ஆவலுடன் படிக்க ஆரம்பித்தேன்.
 
வர்ஷினிமா.. அமிர்தவர்ஷினி அம்மா என்ற உங்களின் இந்தப் பெயர்த் தேர்வு மிக அருமை. இந்தப் பெயர்தான் உங்கள் தளத்தைப் பார்த்தவுடன் முதலில் என்னை ஈர்த்தது.
பொதுவாக நான் என்னுடைய அனைத்து நண்பர்களின் அம்மாக்களையும் அம்மா என்றுதான் அழைப்பேன். அதிலொரு மகிழ்ச்சி, மன நிறைவு இருக்கும். அதே மகிழ்ச்சிதான் உங்களின் இந்தப் பெயரை ஒவ்வொருமுறை உச்சரிக்கும்போதும் ஏற்படுகிறது.
 
சிலரது எழுத்துக்களைப் படிக்கும்போது, அவர்களின் அருகிலிருந்து உரையாடுவது போன்ற ஒரு உணர்வு மேலோங்கி நிற்கும். அது உங்களின் அனைத்து இடுகைகளைப் படிக்கும்போதும் ஏற்படுவது கண்டு வியக்கிறேன்; மகிழ்கிறேன்.
 
சிறுகதைப் பட்டறைக்கு உங்களை எதிர்பார்த்தேன். அதன்பின்னர் பதிவர் உமாசக்தி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது உங்களால் வர இயலவில்லை என்பதை அவர்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.
 
அமித்துவை கேட்டதாகச் சொல்லுங்கள் :-)
 
மகிழ்வுடன்
உழவன்