04 May 2009

அமித்து அப்டேட்ஸ்

என்ன சொல்றதுன்னு சொல்வதைவிடவும் எவ்வளவு சொல்வது அப்படின்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும்னு நெனைக்கிறேன்.

நிறையவே பேசுகிறாள்.. ம் எங்களின் மனது நிறையவே பேசுகிறாள்.

ம்மா, எச்சோ, காலு, காலு மேல ஏத்தான்.. இது கார்த்தி, ஹரி வீட்டில் சைக்கிள் ஓட்டும் போது அவர்கள் மீது அமித்து சொன்ன புகார், அவர்கள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு கொஞ்சம் நகர்ந்தால் போதும்,

இல்லை அந்த சைக்கிள் இவள் மீது உராய்ந்தால் கூட போதும், உடனே புகார் தொடங்கிவிடும், ம்மா, க்கா, ஆயா, தாத்தா, அத்த, அப்பா என்று எல்லாரிடம் அவர்கள் மீதான புகார் சொல்லப்படும்.

இப்படித்தான் கார்த்தி வீட்டுக்குள் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் போது, நான் காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அவன் சிரித்துக்கொண்டே சைக்கிளை என் காலில் மீது ஏற்றி இறக்கிவிட்டான்.
நான் வலியில், கார்த்தி,, யசோ கால் வலிக்குதுடா என்றேன். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அமித்து, உடனே, ஏ ஏ, காத்தி, காலுடா, ம்மா, காலு, என்றபடியே என் காலின் மீதிருந்த உடையை சற்றி விலக்கி
காலை தேய்த்துவிட்ட அவளின் செய்கையில் இயல்பாய் என் கண் கலங்கியது. அள்ளிக் கொண்டேன் அவளை.

தள்ளான், தள்ளியான் - தள்ளிவிடுகிறான் என்று பொருள் கொள்க...

குளானம் - குளிக்க வைக்கவேண்டும்,
இந்த வெயிலுக்கு கொஞ்சம் கச கச என்று இருந்தாலும் போதும், அமித்து ஆரம்பித்துவிடும்.
ஆயா... வா குளானம் குளாலம் இப்படி இரண்டு வார்த்தைகளில் ஏதேனும் ஒன்றில் கோரிக்கை வைக்கப்படும். வெயிலா இருக்குமா, இன்னும் கொஞ்ச நேரம் போட்டும்மா என்று கோரிக்கை

நிராகரிக்கப்பட்டால் கவலைப்படுவதே அவள். நேராக சென்று தன் உடையின் மீதே நீரை எடுத்து ஊற்றிக்கொள்கிறாள்.

அமித்துவை எந்தக் கடைக்கு அழைத்து சென்றாலும், ம்மா, பாப்பாக்கூ என்று உடனே கேட்கிறாள். ஊருக்கு சென்றிருந்தபோது, வளையல் கடைக்கு சென்றோம். என் கைக்கான வளையல் அளவு பார்க்க, ஒரு வளையலைத் தேர்ந்தெடுத்தபோது, அமித்துவும் தன் கையை நீட்டி எச்சோ, பாப்பாக்கூ என்று ஆரம்பித்தாள். அதுதான் அவளின் முதல் கேட்டல் என்னிடம். சொல்லி மாளாத மகிழ்ச்சி.

வெள்ளிக்கிழமை விடுமுறையின் போது, நான், அமித்து, அவளின் பாட்டி தாத்தா அனைவரும் கோயிலுக்கு சென்றிருந்தோம். ஒருவர் மாற்றி ஒருவர் அவளை தூக்கிக்கொண்டு நடந்தோம். ஒருவர் மீது அமர்ந்தால், மீதி இருவரை தேட ஆரம்பித்து விடுகிறாள். தாத்தாவிடம் இருந்தாள் என்னையும், அவளின் பாட்டியையும். இப்படியே மாற்றி மாற்றி, ஆனால் ஒருவரையும் மிஸ் பண்ணிவிடாமல் அனைவரையும் உடனே வைத்திருக்கிறாள். வழி நெடுக நிறைய கடைகள், பொம்மைகள், ராட்டினம் இப்படி நிறைய இருக்க, ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே, இங்க பாரேன் கார் பொம்மை, பஸ் பொம்மை, ராட்டினம் என்று சொல்லிக்கொண்டே வந்தோம். பல்லுன்னூ என்று கேட்டதால் பலூன் வாங்கித்தரப்பட்டது. அப்புறம் பால், வள்ளேல் (வளையல்) இப்படியாய் எல்லாம் சொல்லிக்கொண்டும் / கேட்டுக்கொண்டும் வீட்டுக்கு திரும்பி வரும்போது, ஒரு கடையில் காற்றடிக்கப்பட்ட பெரிய பொம்மைகள் தொங்க விடப்பட்டிருந்தன. நான் அதைக் கவனிக்காமல் அமைதியாக வரவும், அமித்து, எச்சொ, பாரேன், மொம்ம என்றாள். நான் அவளுக்கு ஆச்சரியத்தை தர நினைத்தேன். ஆனால் அமித்துவின் பேச்சில் நான் ஆச்சரியத்தில் விளிம்பில்....

காலையில் குப்பை வண்டியின் மணி சத்தம் கேட்டால், உடனே, தாத்தா வாயேன், உப்ப ண்டி என்கிறாள். இது போலவே பூக்காரர் வந்தாலும், பூ, பூ என்று மொழியப்படுகிறது.

ஹரி (நாத்தனார் மகன்), கார்த்தி - நாங்கள் சில சமயங்களில் அவர்கள் இருவரையும் அப்படிக்கூப்பிடுவோம். அதைக்கவனித்த அமித்து இருவரையுமே, அப்பு என்றுதான் கூப்பிடுகிறாள். அப்பு, வா, க்காரு என்கிறாள். ஆனால் அவர்கள் விளையாடும் பொம்மைகள்தான் இவளுக்கும் வேண்டும் என்று கத்தும்போதுதான் சமாதானங்கள் கூட சமாதானமாகிவிடுகிறது. அமித்துவின் அலறல் அடங்கமறுக்கிறது.
வர்ஷினிமா... ப்ளீஸ். வால்யூம் கொஞ்சம் கொறைச்சுக்கோம்மா...

உடை விஷயத்தில் அமித்துவின் செய்கை சொல்லி மாளாது. உதாரணமாய் இந்த ஃப்ராக் மாதிரி உள்ளே துணி வைத்து தைத்த உடைகள் போட்டாலே போதும். ம்மா, உத்துதுமா என்று சிணுங்க ஆரம்பித்து, குத்துது என்று ஃபைன் ட்யூன் செய்து, குத்துது , கேழ்ட்டே (கழட்டு) என்று அழ ஆரம்பித்துவிடுகிறாள். இது போன்ற உடைகளை அவளுக்கு இனிமேல் போட முடியமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
அதுவும் அந்த ஃப்ராக்கை போட்டது போட்டோவுக்காக மட்டுமே. ஆனால் அவள் விட்ட சவுண்டில் அலறி, வேறு உடைக்கு மாற்றிய பின்னர்தான் அவள் அழுகை நிற்கிறது. அதுவரை அமித்துவின் கண்களில் நயாகரா...

அமித்துவின் சமீபத்திய ஆச்சரியம், நண்பர் வாங்கித்தந்த பாடும், ஆடும் பார்பி பொம்மைதான், முதலில் அதைப் பார்த்த போது அய் என்றவள், அப்புறம் மொம்ம என்றாள். நான் அதன் பெயர் பார்பி பொம்மை என்றவுடன், இப்போதெல்லாம் பாபி என்றும் சொல்ல ஆரம்பித்திருக்கிறாள்.

சொல்ல சொல்ல இனிக்கிறது.... அமித்துவின் செய்கைகளை....

27 comments:

சந்தனமுல்லை said...

:-) சுவாரசியமாயிருக்கிறது! அமித்து அசத்துகிறாள்! பேசக் கற்றுக்கொள்ளும் எல்லா தருணங்களுமே மிக ஆச்சரியமாயிருக்கும்!

கார்க்கிபவா said...

நீங்க சொல்ரது எல்லாம் பார்த்தா அமித்து அம்மா மாதிரி இல்லை போலிருக்கே. ரொம்ப சமத்தா இருக்காளே? :)))

அமுதா said...

/*சொல்ல சொல்ல இனிக்கிறது.... அமித்துவின் செய்கைகளை....
*/
கேட்க கேட்க இனிக்கிறது ... அமித்துவின் செய்கைகளை

மணிநரேன் said...

ஒரு சில மாதங்களாக தங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்.
இன்றைய அப்டேட்ஸ் மிகவும் இரசிக்க வைத்தது. குழந்தைகள் நமக்கு பல நேரங்களில் ஆச்சரியங்களை அளித்துகொண்டேயிருப்பார்கள்.
இனிமையான விடயங்கள். ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்வோடு அனுபவியுங்கள். வாழ்த்துக்கள்.

குடந்தை அன்புமணி said...

மலர் கண்காட்சி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.மைதானத்தில் நடக்கிறது (மே மாதம் 10 கடைசி தேதி). நேற்று குடும்பத்தோடு சென்றுவந்தோம். மலர்களால் டைனோசர், டீ கப், பொம்மைகள் என்று மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அருகிலேயே மீன் காட்சியும்... அதையெல்லாம் பார்த்ததும் என் மகள் ரம்யா அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை. அங்கிருந்து கிளம்ப மறுத்தவளை சமாதானப்படுத்துவதற்குள்...அப்பா...

குடந்தை அன்புமணி said...

அமித்து நான் வளர்கிறேனே மம்மி என்கிறாளோ... அசத்துகிறது அப்டேட்ஸ்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனக்கும் என்பொண்ணு சின்னதா இருந்தப்ப சொன்னது நினைவுக்கு வருது.. ஒரு சின்ன நூல் அப்படி இப்படி தச்சிருக்ககூடாது குத்துது குத்துது ன்னு அதை அப்பறம் போடவே மாட்டா..

எல்லாம் விசயமும் ரசித்தேன்..
முக்கியமா குளானம்.. குற்றாலமாட்டம் .. :)

ஆயில்யன் said...

/என்ன சொல்றதுன்னு சொல்வதைவிடவும் எவ்வளவு சொல்வது அப்படின்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும்னு நெனைக்கிறேன்.//

அட...!

நல்லா இருக்கே!

ஆட்டோவுக்கு பின்னாடியே எழுதலாம் போல ! :)

ஆயில்யன் said...

//ஆயா... வா குளானம் குளாலம் இப்படி இரண்டு வார்த்தைகளில் ஏதேனும் ஒன்றில் கோரிக்கை வைக்கப்படும்//

நன்றாக கவனியுங்கள் !

நாம சொன்ன நம்மளையே அடிக்கடி குளிப்பாட்டி கலாய்க்கிதே அம்மான்னு அமித்து ஃபீல் பண்ணப்போகுது! :)))

ஆயில்யன் said...

//கேழ்ட்டே//

மழலை மொழி ரசித்தேன்:)

Unknown said...

Hmmm Amithu super... :))

Dhiyana said...

சுவாரசியம்.. அமித்து குட்டிக்கு என் வாழ்த்துகள்.

SK said...

அம்சமான அமித்து அப்டடேஸ் :)

அ.மு.செய்யது said...

ஒரு ஹேண்டிகாம் ஆல் எடுக்கப்பட்ட வீடியோவைப் பார்ப்பது போல பதிவை படிக்கும்போது ஒரு சுவாரஸியம்.

அமித்து அப்டேட்ஸ்..அழகா பதிவு செய்திருக்கீங்க..!!

வல்லிசிம்ஹன் said...

அமித்து குட்டி, அம்மா வால்யூம் குறைக்கணும்னு சொல்றாங்க. நல்லா சவுண்டு விடக் கத்துக்கோ.
இல்லைன்னா வேலைக்காகாது:)

புதியவன் said...

பதிவை படித்து மனம் மழலை மொழியில் நனைந்தது...

அ.மு.செய்யது said...

மே 10 டாக்டர் ருத்ரன்,ஷாலினி கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு, என் அக்காவும் அக்கா கணவரும் வருவார்கள்.

உங்களையும் வித்யாவையும் சந்திக்க அவர்களிடம் சொல்லியிருக்கிறேன்.

முரளிகண்ணன் said...

சுவராசியம்

"உழவன்" "Uzhavan" said...

குழல் இனிது யாழ் இனிது.. குறள்தான் ஞாபகத்திற்கு வருகிறது. அமியின் மழலையைப் படிக்கும்போதே இப்படி இனிப்பாக இருக்கிறபோது, அதைக் கேட்கிற உங்களுக்கு எப்படி இருக்கும்.. மழலையோடு மகிழுங்கள் :-)

அபி அப்பா said...

அய்யோ அமித்து செல்லம் நான் உடனே பார்க்க ஆசையா இருக்கு!

தமிழ் அமுதன் said...

//சொல்ல சொல்ல இனிக்கிறது.... அமித்துவின் செய்கைகளை....//

நீங்கள் சொல்வதை கேட்க கேட்கவும் இனிக்கிறது!!

Thamira said...

இனிமை.!

என் சகோதரியின் பெண்ணும் ஃபிராக்கை விரும்புவதில்லை.. நீங்கள் சொன்ன காரணத்துக்காகவே..

விக்னேஷ்வரி said...

ஏ ஏ, காத்தி, காலுடா, ம்மா, காலு, என்றபடியே என் காலின் மீதிருந்த உடையை சற்றி விலக்கி
காலை தேய்த்துவிட்ட அவளின் செய்கையில் இயல்பாய் என் கண் கலங்கியது. அள்ளிக் கொண்டேன் அவளை. //

இது பெண் குழந்தைகளுக்கே உள்ள சிறப்பு.

அதுதான் அவளின் முதல் கேட்டல் என்னிடம். சொல்லி மாளாத மகிழ்ச்சி. //

நீங்கள் சொல்லும் விதத்தில் நானும் மகிழ்கிறேன்.

நான் அவளுக்கு ஆச்சரியத்தை தர நினைத்தேன். ஆனால் அமித்துவின் பேச்சில் நான் ஆச்சரியத்தில் விளிம்பில்.... //

தாய் எட்டடி பாய்ஞ்சா, குட்டி பதினாறடி பாயும். ஆரம்பித்து விட்டாள் அமித்து.

சொல்ல சொல்ல இனிக்கிறது.... அமித்துவின் செய்கைகளை.... //

ஆமா, நிறைய சொல்லுங்க. எங்களுக்கும் இனிக்கிறது.

ராமலக்ஷ்மி said...

//சொல்ல சொல்ல இனிக்கிறது.... அமித்துவின் செய்கைகளை....//

படிக்கப் படிக்க இனிக்கிறது எங்களுக்கும்.

என் தங்கை பெண்ணுக்கும் ஃப்ராக் என்றாலே அலர்ஜி. அழகு என நாம் நினைப்பவவை அவர்களுக்கு அசவுகரியமாக இருக்கிறதே:)!

Unknown said...

அமித்து செல்லத்தை அப்படியே அள்ளி, தூக்கி கொஞ்சிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு அமித்தும்மா...தங்க பாப்பா இவ்ளோ பேசுதா..ச்சோ ஸ்வீட். பெரிய பூசணியா வாங்கி த்ருஷ்டி சுத்திப் போடுங்க...அமித்துவிற்கு ஆயிரம் முத்தங்கள்.

தாரணி பிரியா said...

அமித்து பேச்சு ஒவ்வொண்ணும் அழகு. அமித்துவுக்கு திருஷ்டி சுத்தி போடுங்க அமித்து அம்மா. குட்டிமா பேச்சை எல்லாம் முடிஞ்சா ஆடியோவா போடுங்களேன். உங்க இன்பத்தை நாங்களும் பெறுவோமே

Deepa said...

:-) கண்டிப்பாச் சுத்திப் போடுங்க.. அழகாப் பேசறா உங்க பொண்ணு. ஒவ்வொன்றையும் வெகுவாக ரசித்தேன்.