21 November 2008

மருந்து, பூ, கரடி பொம்மை + அமித்து

நான்கைந்து நாட்களாக உடல்நலம் சரியில்லாததால் மருந்து பாட்டிலை பார்த்தாலே அலர்ஜியாகி விட்டது போலிருக்கிறது அமித்துவிற்கு.

டாக்டரிடம் போய் வந்த மறுநாள், அவரின் தாத்தா டேபிள் மேலிருந்த மருந்து பாட்டிலை எடுத்து கையில் வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து, “ஏன்மா, இந்த மருந்துதான் இருக்கே, இதையே ஏன் மறுபடியும் வாங்கிட்டு வந்த” என்றார். நான் இல்லப்பா காலியாகிடுச்சி நெனச்சி வாங்கிட்டு வந்துட்டேன், திருப்பி மருந்து கடையிலியே கொடுத்துடலாம் என்று சொல்லி முடிப்பதற்குள் கீழே எதையோ ஆராய்ந்து கொண்டிருந்த அமித்து அவசரம் அவசரமாய் என் மீது ஏறிக்கொண்டு, சட்டென்று, என் மடியில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள். அவளின் அழுகைக்கு காரணம் இதுதான், எங்கே அவளின் தாத்தா தனக்கு மருந்து கொடுத்துவிடுவாரோ என்று பயந்துபோய் மருந்து பாட்டிலை கையில் எடுத்தவுடன் என்னை நோக்கி ஓடி வந்துவிட்டாள்.
ஆஹா கவனிக்க ஆரம்பிச்சுட்டியா அமித்து.
அதைத்தொடர்ந்தே இதுவும், வீட்டில் இருக்கும் ஒரு பெரிய கரடி பொம்மையை எடுத்து தனது காலருகில் வைத்துக்கொண்டு, பாலாடையை கையில் வைத்துக்கொண்டு ந்தா, ந்தா என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
மருந்துகளின் தாக்கம் அமித்துவிடம் நிறையவாகிவிட்டது போலும்.
வீட்டிற்கு போனவுடன் சேரின் மீது எனது ஹேண்ட்பேக் மற்றும் லன்ச்பேக் ரெண்டையும் வைத்துவிட்டு அவளிடம் கொஞ்சிக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் போனவுடன் அவள் என்னிடம் அத்தோ தோ என்று கையை காட்டினாள், சரி என்று ஹேண்ட்பேக்கை கொடுத்தேன், அவளால் ஜிப்பை திறக்க முடியவில்லை, அதை ஓரங்கட்டி விட்டு மீண்டும் அத்தோ தோ தோ என்று கையை நீட்டினாள். இப்போது லன்ச்பேக், அதை எடுத்துக்கொடுத்தேன், அது ஸ்டிக்கி டைப். கையை வைத்தவுடன் தானாகவே பிரிந்து விட்டது. அப்புறம் அதனுள்ளே இருந்த உருப்படிகளெல்லாம் வீடெங்கும் இரைபட ஆரம்பித்தது.
அமித்துவுக்கு இதுதான் வேணும்னு கேக்க தெரிஞ்சிடுச்சுய்யா.
வீட்டில் இருக்கும் வாடாமல்லிப் பூவை அவரின் தாத்தா பறித்து அவளிடம் கொடுத்திருந்தார். அதை அவள் கொஞ்ச நேரம் வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். பின்பு என்னிடம் நீட்டியபடியே ந்தா, ந்தா என்றாள். நான் நீயே வெச்சுக்கோம்மா என்றேன். உடனே அவள் பூ வைத்திருந்த கையை எடுத்து தலையில் வைத்துக்கொண்டாள்.
கொஞ்ச நேரம் வியந்துவிட்டு, பின்பு எனக்குள் சொல்லிக்கொண்டேன், உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேன் அமித்தும்மா.
நேற்றிலிருந்து ஒரு சின்னக் கரடி பொம்மையை கையில் வைத்துக்கொண்டு என்னை நோக்கி ப்பூ, ப்பூ, ம், ம் , ப்பூ என்றாள், எனக்கு ஒன்னுமே புரியவில்லை. உடனே அவளின் தாத்தா, ம்மா, ஆயாவுக்கு ப்பூ காட்டு என்றாள். உடனே அவள் ஆயாவைப் பார்த்து கரடி பொம்மையைக் காட்டி ப்பூ, ப்பூ என்றாள். உடனே அவர்கள் பயப்படுவது போல் பாசாங்கு செய்தார்கள். அதற்கு அமித்துவிடம் பயங்கர ரியாக்‌ஷன், சிரித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் அதையே செய்து கொண்டிருந்தார்கள் இருவரும்.
அவர்களையே ரொம்ப சந்தோஷமாகவும், கொஞ்சம் வருத்தமாகவும் பார்த்துக்கொண்டிருந்தேன் எனது இயலாத தாய்மையை நொந்தபடி.

17 comments:

நட்புடன் ஜமால் said...

//ஆஹா கவனிக்க ஆரம்பிச்சுட்டியா அமித்து//

அழகா சொல்லியிருக்கீங்க

சந்தனமுல்லை said...

ம்ம்...இப்போ எப்படி இருக்காங்க அமித்துக்குட்டி?

நல்லாருக்குங்க அமித்து சேட்டைகள்!!

//அவர்களையே ரொம்ப சந்தோஷமாகவும், கொஞ்சம் வருத்தமாகவும் பார்த்துக்கொண்டிருந்தேன் எனது இயலாத தாய்மையை நொந்தபடி.//

:(

சந்தனமுல்லை said...

//மருந்து பாட்டிலை கையில் எடுத்தவுடன் என்னை நோக்கி ஓடி வந்துவிட்டாள்.//

:-)

//தனது காலருகில் வைத்துக்கொண்டு, பாலாடையை கையில் வைத்துக்கொண்டு ந்தா, ந்தா என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள்//

அறிவுக் குட்டி!

அமுதா said...

/*ஆஹா கவனிக்க ஆரம்பிச்சுட்டியா அமித்து.*/ - very good


/*அவர்களையே ரொம்ப சந்தோஷமாகவும், கொஞ்சம் வருத்தமாகவும் பார்த்துக்கொண்டிருந்தேன் எனது இயலாத தாய்மையை நொந்தபடி*/

ம்... என்ன செய்ய? :-((

SK said...

அமித்து இப்போ எப்படி இருக்காங்க ??

அது என்ன அப்படி இயலாத தாய்மைன்னு சட்டுன்னு சொல்லிடீங்க.. :(

Unknown said...

Amithu chooo chweet... :))

ராமலக்ஷ்மி said...

மொட்டு மலருவதைக் காணுகையில் செடிக்குதான் எவ்வளவு ஆனந்தம்! கடைசியில் அந்த சின்ன வாட்டம்.. வேண்டாமே அமிர்தவர்ஷினி அம்மா.

தமிழ் அமுதன் said...

அவர்களையே ரொம்ப சந்தோஷமாகவும், கொஞ்சம் வருத்தமாகவும் பார்த்துக்கொண்டிருந்தேன் எனது இயலாத தாய்மையை நொந்தபடி.


மேல படிக்கும் போதே தெரியும் கடசில
இப்படி ஏதாவது இருக்கும்னு!

இதுதான் உங்க டச்!

KarthigaVasudevan said...

//இயலாத தாய்மை //

வலிக்கும் தான் ...ஆனாலும் எல்லாம் அவளுக்காகவும்...அவளது எதிர்காலத்துக்காகவும் கூடத்தான் என்று நினைக்க ஆரம்பித்து விட்டால் போதும்,கொஞ்சம் வலி குறையலாம் .என் தங்கை அப்படித்தான் நினைத்துக் கொண்டு கல்லூரிக்கு செல்கிறார்.

ஆயில்யன் said...

//உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேன் அமித்தும்மா.
///


பிரிந்திருக்கும் நேரங்களில் நினைப்புக்களில் உணருங்கள் நிச்சயம் நல்லதொரு தாயாக பரிணாமித்திருப்பீர்கள்

வாழ்த்துக்களுடன்.....!

ஆயில்யன் said...

//ஸ்ரீமதி said...
Amithu chooo chweet... :))
///

பாஸ் இது கீழ பர்த்டே டேட் பார்த்தபிறகு இனிப்பு ஞாபகம் வந்ததால இம்புட்டு ஜ்ஜூவீட்டா சொல்லியிருக்கற மாத்ரி தெரியுது!

அமித்து அம்மா கண்டிப்பா கேக் கொடுப்பாங்க பாஸ் கவலைப்படாதீங்க!

கபீஷ் said...

//அவர்களையே ரொம்ப சந்தோஷமாகவும், கொஞ்சம் வருத்தமாகவும் பார்த்துக்கொண்டிருந்தேன் எனது இயலாத தாய்மையை நொந்தபடி//

அமித்துக்கு இப்போ என்ன வயசாகுது?
உங்க ப்ளாக்குகு புதுசு, நான்

குடுகுடுப்பை said...

அமித்து கலக்க ஆரம்பிச்சாசா, ரொம்ப கவலைப்படாட்தீங்க,தைரியமான அம்மாவா இருங்க.

நானானி said...

மழலைக்குள் நாம் அமிழும் போது மனம் பேரானந்தத்தில் ஆழும். அமித்துவின் செல்ல மழலையும் அப்படித்தான்..அவளின் அம்மாவே!
முடிந்தவரை அள்ளி அள்ளிப் பருகுங்கள்! இந்தப் பருவம் போனால் வராது!!
நானும் எங்கள் வீட்டு மழலைகளின் அமுதத்தை பருகியவள்தான். இப்போது என் பேரன் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறான்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ஜமால்

நன்றி முல்லை

நன்றி அமுதா

நன்றி எஸ். கே

நன்றி ஸ்ரீமா

நன்றி ராம் அம்மா
கடைசியில் அந்த சின்ன வாட்டம்.. வேண்டாமே அமிர்தவர்ஷினி அம்மா.// முயற்சிக்கிறேன்.

நன்றி ஜீவன்
மேல படிக்கும் போதே தெரியும் கடசில
இப்படி ஏதாவது இருக்கும்னு!

இதுதான் உங்க டச்!//
:)-

நன்றி மிஸஸ். டவுட்
முதல் வருகைக்கு

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ஆயில்ஸ் அண்ணா வருகைக்கும், வாழ்த்துகளுக்கும்

நன்றி கபீஷ், அமித்துவுக்கு ஒரு வயசு ஆகப்போகுது.

நன்றி குடுகுடுப்பை அண்ணே

நன்றி நானானி அம்மா, பேரன் கண்டவர்களா நீங்கள்.
உங்கள் பேரனின் பெயரென்ன.

நானானி said...

என் பேரனைப் பத்தி அன்பா விசாரித்ததுக்கு நன்றி! அவன் பேர் சண்முகம்...செல்லமாக ஷன்னு! இப்ப அவனிடம் பேர் கேட்டால் 'சன்' என்கிறான். அவனோடு அடித்த லூட்டி பத்தி பதிவிட்டிருக்கிறேன்.படித்துப்பார்ர்க்கவும், பின்னூட்டமும் இடவும்.சேரியா?

http://9-west.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%20vs%20%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D