28 January 2010

மாய வித்தைக்காரி

பத்தாம் வகுப்பு பாதியில் அவள் பூத்துவிட்டாள் என்ற செய்தி வந்தது. தோழி என்றாலும் போய் பார்ப்பதற்கு ஒருவகையான நாணம் குடிகொண்டது. சரி, எப்படியும் வருவாள் என்று பார்க்காமல் விட்டதில் பத்து நாள் கழித்து பள்ளிக்கு வந்தாள். மிக அழகாக மாறியிருந்தாள். எப்போதும் போடும் மடித்துக்கட்டிய இரட்டைப்பின்னல்தான் என்றாலும், இப்போது ஸ்லைடு எடுத்து குத்தி தூக்கி வாரி என்று ஒரு மாதிரியாய் முகமாற்றமும் மலர்ச்சியுமாய் இருந்தது. நடத்தையில் கூட கொஞ்சம் பெரிய பெண் போல மாறியிருந்தாள். அவளோடு தோற்றத்தில் குள்ளமாகவும் ஒல்லியாகவும் இருந்த என்னை சிறுமி போல பாவித்தாள். சிரிப்பு வந்தது. அதுவரை உற்ற தோழியாய் நான் இருந்தாலும் அவளொத்த பெண்களோடு பேசி சிரித்தாள். மதிய உணவு இடைவேளையின் போது சினிமாக்கள் பற்றியும், கதாநாயகர்கள் பற்றியும் அதிகம் பேசினார்கள், அளவில்லாமல் சிரித்தார்கள். காதல் பாடல் வரிகளை அழகாய் மனனம் செய்து சன்னமாய் ராகமிட்டு பாடினார்கள்.

மழைத்துளி என்ன தவம் தான் செய்ததோ, மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே, மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ, நினைக்கையில் உள்ளூரக் கள்ளூறுதே என்ற பாடல் வரிகளை கிறங்கிப்போய் அடிக்கடி முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள். கண்டிப்பாக பரீட்சைக்கு வரும், அப்படி வந்தால் குடுவையை வரைந்து, சமன்பாட்டை எழுதினால் ஐந்து மார்க் சர்வ நிச்சயம் என்று நம்பிய கொஸ்டீனை மறுநாள் டெஸ்ட்டாக சயின்ஸ் டீச்சர் அறிவித்தால் டீச்சருக்கு தலைவலி வரவேண்டும் இல்லை அவர்கள் வீட்டிலிருந்து போன் வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். மாறாய் ஆசிரியை வந்து அமர்ந்து கொண்டால் இன்று டெஸ்ட் வேண்டாம் என்று வேண்டிக்கொண்டதில் இவளும் ஒருத்தியாகிப்போனாள். மாத இடைவெளிகளில் தோன்றிய இந்த மாற்றம் அதுவரை அருகிலிருந்து பார்த்த என்னை அதிரச்செய்தது.

அவசியம் கருதி பள்ளியில் ஏதாவது சயின்ஸ் எக்ஸிபிஸனுக்கோ, ஆர்ட் கேலரிக்கோ அழைத்துச் செல்ல நேர்ந்தால், பெரும்பாலும் அக்கா மாதிரி தோற்றம் கொண்டிருக்கும் அதே வகுப்பு பெண்களோடே அவள் நடந்து போக ஆரம்பித்தாள். சாலையில் நடக்கும் போதோ, இல்லை எக்ஸிபிஸனிலோ இளம் வயது ஆண்களை பார்க்க நேர்ந்தால் அதிகமாய் வெட்கப்பட்டார்கள். தன்னுள் குழுமி சிரிப்பொலி எழுப்பினார்கள். ஸ்ஸ்ஸ், எங்க இருக்கோம்னு நினைச்சிக்கோங்க, இதொன்னும் உங்க வீடில்ல என்று டீச்சர்கள் பக்கமிருந்து எச்சரிக்கை வரும்போது தலை குனிந்து வருந்தும் பாவனை செய்தார்கள் / செய்தாள். சிறுமிகள் போல் தோற்றமிருப்பவர்களை அந்த குழு ஏளனமாய் பார்த்துச் சிரித்தது.

பத்தாம் வகுப்பு முடிந்து பதினோராம் வகுப்பு தொடங்கியபோது கடந்த வகுப்பில் படித்தவர் பாதிபேர் வெவ்வேறு பள்ளிகளுக்கு போக, வீட்டருகில் பள்ளியிருந்தவர்களில் பாதிபேர் எடுத்த மார்க்குக்கு இந்த ஸ்கூலில் இரண்டாவது க்ரூப் கூடிவருவதே பெரிய விஷயம் என்பதாலும், பி செக்‌ஷன், இங்கிலீஷ் குரூப் என்று ஜம்பஸ்தாக சொல்லிக்கொள்ளலாம் என்பதாலும் அவ்வகுப்பில் பயின்ற ஏனையோர் ஒன்று கூடி சயின்ஸ் க்ரூப்பையே தேர்ந்தெடுத்தார்கள். பத்தை தொடர்ந்து பதினொன்றிலும் அக்கா, சிறுமி வேறுபாடுகள் தொடர்ந்தது.

பதினோராம் வகுப்பின் தொடக்கத்திலேயே அவள் தன் வீட்டு விசேஷத்துக்காக எண்ணூரிலிருக்கும் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு செல்வதாக வெள்ளிக்கிழமையே வகுப்பு டீச்சரிடம் விடுப்பு சொல்லிவிட்டாள். போனவள் திங்கள் போய், செவ்வாய் தொடர, புதன்கிழமை தான் வகுப்புக்கு வந்தாள். ஆளே மாறிப்போயிருந்தாள். ஒரே கற்பனை சஞ்சாரம்தான். தீவிர விசாரிப்பிற்குப் பிறகு பெயர் முருகன் என்ற பெயர் வெளியே வந்தது. முதல் நாள் பார்த்தார்களாம். இரண்டாவது நாள் இவளைப் பார்த்தவுடனே பூஜைக்கு வந்த மலரே வா பாடல் அங்கிருந்து பாடப்பட்டதாம். போன விசேஷத்தை முடித்துக்கொண்டு வரும்போது அங்கிருந்து காதலை கையோடு எடுத்து வந்திருந்தாள்.

எப்பொழுதும் தலை கவிழ்ந்து கொண்டோ, இல்லை ஆசிரியர் வகுப்பெடுத்துக்கொண்டிருக்கும் போது கரும்பலகையைப் பார்ப்பது போல் கற்பனையில் சஞ்சாரித்துக்கொண்டோ, இல்லை கீழே குனிந்து கொண்டு நோட்டில் சில “முக்கியமான” இனிஷியல்களை கிறுக்கிக்கொண்டே அதுநாள் வரை இருந்த வந்த சுபா, சுனிதா, துர்கா, கோதை உமா லிஸ்ட்டில் இவளும் சேர்ந்துகொண்டாள். அவர்களோடு சேர்ந்து எடுத்த கிறுக்கல் பயிற்சியில்
இவளுக்கும் நன்றாக ஹார்ட்டின் போடவந்தது. ஃப்ளேம்ஸ் போட்டுப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டாள். கைரேகைகளை இணைத்துப்பார்த்து காதல் கல்யாணம் கைகூடுமா என்று இணையாத கோடுகளை இணைத்துப்பார்த்தார்கள். மீறி அரேஞ்ச்டு மேரேஜ் என்று வந்தாள் ஆங்க், இதெல்லாம் சும்மா என்று கையை உதறிவிட்டுப்போனார்கள்.

வகுப்பின் ஒரு பக்க ஜன்னல் சாலை பார்த்து இருப்பது பெருத்த வசதியாய் போனது. போதாக்குறைக்கு துர்காவின் “ஆள்” என்று சொல்லிக்கொண்ட குள்ளன் ஒருவன் மதிய உணவு இடைவேளையின் போது அந்த சாலையோர ஜன்னல் பக்கமாய் தரிசனம் தர ஆரம்பித்ததும், இங்கேயிருந்து அங்கே பார்த்துவிட்டு, தத்தம் ஆட்களுக்கும் இது போல வரவில்லையே என்பதில் மீதியிருப்பவர்களுக்கு மிகுந்த மனவருத்தம்.
அது கூப்ட்டா வராதுடி, இவன மாறி என்ன வேலையத்தவனா?, எஞ்சினியரிங்க் காலேஜ்ல படிக்கிறாங்கல்ல என்றெல்லாம் ஆளாளுக்கு தன் ஆள் கதை சொல்லிக்கொண்டார்கள்.

ச்சே, எப்பப் பார்த்தாலும் இதுங்க தொல்லை தாங்க முடியலடா என்று சிறுமி தோற்றங்கள் முனக, ஆமா, நீங்கல்லாம் ரொம்ப நல்லவங்க, இந்த வருஷம் ஆன்வல் டே ல உங்களுக்கு பெஸ்ட் ஸ்டூடண்ட் அவார்டு தருவாங்க வாங்கிக்கோங்க என்று அவர்களும் மாறி, மாறி பொருமிக்கொண்டார்கள். பொருமல் சத்தக்காரர்களை விட முனகல் சத்தத்தில் ஆட்கள் பெரும்பான்மை அதிகமிருந்தமையால் யாரோ யாரிடமோ வத்தி வைக்க சாலையோர ஜன்னல் பக்கம் பள்ளி நிர்வாகம் சீல் வைத்துவிட்டது.

பள்ளி விடுமுறைகளும், வார சனிக்கிழமைகளும் ஸ்பெஷல் க்ளாசாக உருவெடுத்து வெளியே போக வழிவகை செய்துதந்தது போலும். போய்விட்டு வந்து கதையோ கதை அளந்தார்கள். இது அவுங்க வாங்கித்தந்தது, இந்தக் கார்டு பாத்தியா, ஏ, ஹார்ட்டின்ல க்ளிப் பாரேன், இந்த சேட்டர்டே ஸ்கூல் இருந்தா ஒரு சுடிதார் போட்டுட்டு வரேன் பார் என்றெல்லாம் மற்றவர்கள் கிளப்பிவிட்டதில் எண்ணூர் விசேஷத்துக்கு போய்விட்டு வந்தவளுக்கு
எப்படியிருந்தது என்று தெரியவில்லை. மிகுந்த மனச்சோர்வாக இருப்பதாய் காட்டிக்கொண்டாள். இவள் சோகத்தைப் பார்த்ததும், மீதியிருப்பவர்கள் கரிசனமாய் விசாரிக்க, பார்த்து ரொம்பநாளாயிற்று என்று சொன்னதில் நிறைய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ஏதாச்சும் போன் நெம்பர் இருக்குமா, இல்லை வீட்டு முகவரி, கடிதம், இல்லையென்றால் தெரிந்தவர்கள் மூலமாக தூது விடலாமா என்றெல்லாம் கிளப்பிவிட்டதில் அவளுக்கு ஏக சந்தோஷம். இந்த வாரம் கட்டாயம் பார்த்துடுவப் பாரேன் என்று கிளி ஜோசியம் சொல்வதைப்போல சொல்லி வைத்தார்கள். கொஞ்சம் உற்சாகம் ஆனமாதிரி தெரிந்தாள்.

திடீரென ஒருநாள் மிகவும் பளிச்சென வகுப்புக்கு வந்தாள். உற்சாகம் மிகுந்திருந்தது. ஸ்கூல் விட்டு வீட்டுக்கு போயிருக்கும் போது அவர் வீட்டிலிருந்தாராம். சும்மா இந்தப்பக்கம் வந்ததில், எல்லோரையும் ”பார்த்து”விட்டு போகலாமென்று தலைகாட்டினாராம். அம்மா அந்தப்பக்கம், இந்தப்பக்கம் போனதில் இவளுக்கு தனியான கவனிப்பாம். முக்கியமாய் அவருக்கும் பிரிவு வேதனையிருந்ததாம். தாடி வளர்த்திருந்தாராம்!!! முன்பை விட மெலிந்திருந்தாராம். அதுவாம், இதுவாம். டாஆஆஆஅய், பக்கத்தில் உட்கார்ந்திருந்த எங்களுக்கு காது புளித்துப்போனது.

ஒரு மாதம் போயிருக்கும், தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் சோக கீதம். மீண்டும் ஜோசியங்கள், ஆறுதல்கள். பொருமல் செட்டில் ஒருவரை மாற்றி ஒருவருக்கு ஆறுதல் சொன்னதில் ஒருவருடம் ஓடிப்போய் கூண்டோடு கைலாசமாய் பனிரெண்டாம் வகுப்புக்கு படையெடுத்தார்கள். வகுப்பில் பலருக்கு போன வருஷம் இந்த மாதிரி இருக்காதீங்க பிள்ளைகளா, ஏதோ பாஸ் பண்ணனும்னு உங்கள பாஸ் பண்ணிவிட்டோம் என்று எச்சரிக்கை வழங்கப்பட்டது. கால் பரீட்சை வந்தது. எடுத்திருந்த மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு பாதிப்பேருடைய பெற்றோர்களையும் வரவழைத்து பேசியதில்
அடுத்த ஓரிரு மாதத்தில் முன்னேற்றம் அதிகமாகியிருந்தது. மதியத்துக்கு மேல் வீசிங்கெல்லாம் வருவதில்லை. எல்லா ஸ்பெஷல் க்ளாஸும் ஒழுங்காய் அட்டெண்டஸ் வந்தது. ஒரிஜினல் நல்ல பிள்ளைகளுக்கே இவர்களை எ.கா சொல்வது மாதிரி நிலைமை தலைகீழாயிற்று. மார்க்கில் இலக்கங்கள் ஏறியதே ஒழிய இறங்கவேயில்லை. எந்த எஞ்சினியரிங் காலேஜ் நல்லா இருக்கும். எவ்வளவு கட் ஆஃப் என்றெல்லாம் திடீர் நல்ல பிள்ளைகள் பேசுவதைப்பார்த்து ஆக்சுவல் நல்ல பிள்ளைகளுக்கு கொஞ்சமல்ல நிறையவே குமைச்சல்.


திடீர் நல்ல பிள்ளைகளில் இருந்தவர்களில், தனது பழைய பள்ளியிலேயே காதல் வயப்பட்டு பதினோராம் வகுப்போடு இந்தப் பள்ளிக்கு மாறியவர்களை விடவும் எங்களுக்கு ஆச்சர்யம், எங்கள் பள்ளியிலேயே எங்களோடவே ஆறாம் வகுப்பிலிருந்து உடன் வந்த எண்ணூர் விசேஷக்காரியின் மாற்றம் தான் அதிசயத்திலும் அதிசயமாயிருந்தது. படிப்பும் கூடவே ஷார்ட்டண்ட், டைப்ரைட்டிங்க் என ஓவர்டைமில் படிக்கத்தொடங்கினாள்.

மற்றவர்களின் ஆள்”கள் எல்லாம் தாடி வளர்த்து கொண்டதாய் தெரிய வர, இவளின் ஆள் மட்டும் இவளுக்கு அண்ணன் முறையாகிப்போனாள். வேறொன்றுமில்லை. சொந்தம் வழி வந்த சொந்தத்தில் உறவுமுறையில் பூஜைக்கு வந்த மலரை பாடியவன் மாமன் இல்லையாம், அண்ணனாம். அடுத்ததாய் ஒரு வீட்டு விசேஷத்தில் எல்லோரும் கூட அப்போதுதான் அது தெரியவந்ததாம். !!!!!!!

எண்ணூர் விசேஷக்காரிக்கு எதிலும் அவசரம்தான். அவசரமாய் காதல் செய்தாள், அதை விடவும் அவசரமாய் அதையும் இதையும் படித்தாள், படிப்புக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் மார்க்கெட்டிங்க் துறையில் இறங்கினாள். நட்பு பெருகியது. பொருந்தாக் காதலொன்று கைகூடி வந்து கல்யாணத்தையும் அவசரமாய் செய்து கொண்டாள். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள், திரும்பிய பக்கமெல்லாம் பணம் பண்ணும் வித்தையைக் கற்றுக்கொண்டாள். நொடிக்கு நொடி மாறும் வாழ்வில் அவள் செய்த ஜாலங்கள் நிறைய.

மின்னல் வேகத்தில் தன் வாழ்நாளில் முன்னேற்றங்களை அமைத்துக்கொண்டதெல்லாம் சென்ற வருடம் இதே மாதம் முப்பத்தொன்றோடு எங்களை விட்டு போகத்தானா மாய வித்தைக்காரியே?

ஆழ்ந்த அஞ்சலிகளோடும், மறவா நினைவுகளோடும்....

30 comments:

சந்தனமுல்லை said...

கொஞ்சம் பெரிசா இருந்தாலும் விடாம படிச்சுட்டு வந்தேன்..கடைசிலே ஒரு மாதிரி ஆகிடுச்சு! :-((

குடந்தை அன்புமணி said...

அதீத துள்ளலோடு ஆரம்பித்தது... முடிவில் சோகமயமாகி விட்டது... இந்த நிகழ்விற்குள்ளேயே ஆயிரம் கதைகள் கிளைவிட்டுக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது...
உங்களின் அந்த தோழிக்கு என் அஞ்சலிகள்...

☀நான் ஆதவன்☀ said...

ஆரம்பத்துல சுரத்தே இல்லாம ஆரம்பிச்சு அப்புறம் நிறைய இடங்கள்ல சிரிப்பு தொத்திகிச்சு பாஸ்.

//டாஆஆஆஅய்,//

//ஓடிப்போய் கூண்டோடு கைலாசமாய்//

இப்படி சிரிச்சுகிட்டே படிச்சா கடைசியில..... போங்க பாஸ் :(

மாதேவி said...

நெஞ்சை உருக்குகிறது.

காமராஜ் said...

இந்தக் களம் பழையது ஆனாலும்
மிக நுட்பமான விவரனைகளோடு.
// அதிகமாகப் பேசினார்கள்,அளவுக்கதிகமாக சிரித்தார்கள்//
பெண்ணைப் பெண்ணே
அனுகுவது அலாதியானது.
நின்று ஆலாபனை செய்து சட்டென்று முடிந்து போனது.
அருமை அமித்தம்மா.

பின்னோக்கி said...

பயந்து கொண்டே தான் படித்தேன். எதிர்பார்த்த சோகம் முடிவில். என்ன ஆச்சு அவங்களுக்கு ?

செ.சரவணக்குமார் said...

கடைசியில் கலங்க வைத்துவிட்டீர்கள் அமித்தம்மா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹயோ , டீனேஜ் காலத்தை கண்ணு முன்னால கொண்டுவந்து நிறுத்திட்டீங்க அமிர்தவர்ஷினி அம்மா.. நீங்க எழுத்து வித்தைக்காரி போங்க.. :)

முடிவில் சோகம்
உங்கள் வழக்கம்
:(

Deepa said...

கடைசியில் எதிர்பாராத அதிர்ச்சி. :-(
அந்தச் சிறுமித் தோற்றங்கள் - பெரிய பெண்கள் இடைவெளிய அழகா சொல்லி இருக்கீங்க...

ஆனா கொஞ்சம் அவசரமா எழுதி இருக்கீங்க போலத் தெரியுது. உங்க வழக்கமான அழகிய நடை கொஞ்சம் மிஸ்ஸிங்.

KarthigaVasudevan said...

//சந்தனமுல்லை said...

கொஞ்சம் பெரிசா இருந்தாலும் விடாம படிச்சுட்டு வந்தேன்..கடைசிலே ஒரு மாதிரி ஆகிடுச்சு! :-((//


அதே தான்.ஏற்கனவே சொல்லி இருக்கிங்களோ இவங்களை பத்தி ,போன வருஷம் படிச்சதா ஞாபகம்! புக் பேர் வரதா சொல்லிட்டு இறந்து (தற்கொலை) போன தோழியா இவங்க?!
:(

அமுதா said...

அமித்து அம்மா... கடைசி வரிகள் நான் எதிபார்க்கவில்லை. பாஸிடிவ்வாக மாற்றங்களைப் பார்த்து புன்னகைத்து... இறுதியில் :-( அஞ்சலிகள்...

ப்ரியமுடன் வசந்த் said...

ஒரு நிமிடத்தில் ஆளையே புரட்டிப்போட்டுவிடும் அளவிற்க்கு காதல் ஒரு மேஜிக்?

தோழியின் சிறுவயது இறப்பு ஏற்றுக்கொள்ள இயலாத வருத்தம்

:(

குடுகுடுப்பை said...

nice, but :(

Anonymous said...

உணர்ச்சிகளைக்கையாளுவது உங்களுக்கு லட்டு சாப்பிடற மாதிரி!!!!!

Unknown said...

wht happend to her?

பா.ராஜாராம் said...

:-(

நல்லா எழுதி இருக்கீங்க அமித்தம்மா.

அப்பாவி முரு said...

எல்லோருக்கும் இது போன்று குறைந்த பட்சம் ஒரு நண்பனோ/நண்பி இருப்பார்கள் போலிருக்கு


:((

நட்புடன் ஜமால் said...

அஸால்ட்டு பன்றதுங்கிறது இது தானோ

---------------

பதின்ம வயதின் விடயங்களை அப்படியே கண் முன்னே கொண்டு வந்தீங்க, போற போக்கில் “வீஸிங்” பற்றி சொல்லியது நலம்.

-----------------------

கடைசியில் ... ஹூம் அவங்க தானா :(

Paleo God said...

உங்களால ஜீரணிக்க முடிந்ததை, நுனுக்கமா சொல்லிட்டீங்க, இதுலயே உங்க சோகம் புரியிது..

நெகிழ்ச்சி..

Vidhoosh said...

குடித்தனக் கதைகளையும், இதையும் படிக்கும் போது "யாராவது நம்மளையும்/நம்ம வாழ்க்கையையும் இத்தனை கூர்ப்பா கவனிப்பாங்களோ"ன்னு தோன்றுகிரதுங்க. :( கவுன்சிலிங் தான் போகணும் :))

ரொம்ப அருமையாக இருக்குங்க உங்கள் எழுத்தும் மொழி நடையும்.

மாதவராஜ் said...

ரசித்துக்கொண்டே வந்தேன். மனம் கனத்துப் போய் நிற்கிறேன்.

அ.மு.செய்யது said...

ஆரம்பத்துல தென்மேற்கு பருவக்காற்று,FLAMES,infuations அப்படியே பழைய நினைவுகள கொண்டு வந்துட்டு கடைசியில‌
ஏதோ இழந்த மாதிரி..பெரிய இழப்பு தான் இல்ல.

உங்கள் எண்ணூர் தோழிக்கு எங்கள் இரங்கல்களும் அஞ்சலிகளும் !!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள். இந்த தோழியைக் கடைசியாய் சந்திக்க நேர்ந்தது சென்ற வருட
புத்தகக் கண்காட்சியில். நேரமாகிவிட்டது என அவசர அவசரமாய் அவள் ஆட்டோவில் போனதுதான் நான் கடைசியாய் அவளைப் பார்க்கும்
காட்சி என்று எனக்கு அப்போது தெரியாது. ஒரு வருட காலமாய் எத்தனை இன்ப துன்ப நிகழ்வுகள் தொடர்ச்சியாய் நிகழ்ந்தாலும் எல்லா தினங்களிலும் எப்படியாவது நினைவுக்கு வந்து போகிறவர்கள்
இரண்டு பேர், ஜனவரி 19ல் இறந்த மாமாவும், ஜனவரி 31ல் இறந்த இவளும் :(

கோமதி அரசு said...

தோழியின் மரணம் நெஞ்சை கலங்க
வைத்தது,தோழியின் குழந்தைகளுக்கு என்ன வயது?

உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.

அம்பிகா said...

சிரிப்போடு படித்துக் கொண்டிருந்தேன்,
எதிர்பார்க்கவேயில்லை.
:(

Karthik said...

:((((

sathishsangkavi.blogspot.com said...

கடைசி வரிகளில் மனது வலிக்கிறது....

"உழவன்" "Uzhavan" said...

சிரிச்சுக்கிட்டே படிச்சுக்கிட்டு வந்தேன்.. கடைசியில இப்படி முடிப்பீங்கனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல :-(

Dhiyana said...

முடிவில் சோகம் அமித்து அம்மா...

Thamira said...

முடிவு எதிர்பாராதது. அதைத் தவிர்த்து விட்டுப்பார்த்தால் பெண்களில் பார்வையில் பதின்மப் பெண்கள் குறித்த சிறிய அளவானாலும் அரிதான ஒரு பதிவு இது.