27 November 2009

புடவை

மெயின் ரோட்டை கடந்து லஷ்மிபுரம் நெருங்கியாயிற்று, தெருமுனையின் ஆவின் பால்பூத்தில் பால்பாக்கெட்டுகளை இறக்கிக்கொண்டிருந்தார்கள். மணி மூணாயிடுச்சு போல, பிரதீப் ஸ்கூல் விட்டு வர்றதுக்குள்ள போய் துணி துவைச்சி, குளிச்சிடனும், அவன் வந்தவுடன் ரெண்டு பேரும் சாப்பிடலாம் என்று நினைத்துக்கொண்டே இடக்கையில் இருக்கும் ஒயர் கூடையை வலக்கைக்கு மாற்றி வேகமாக நடக்க ஆரம்பித்தாள் லலிதா.

முன்னே நடக்கையில் பின்னே சில பார்வைகள் தன் மீது படர்வதை அவளால் உணரமுடிந்தது. ம்ஹூம் எத்தனை வருஷமா இந்தத் தெருவுல வந்து போயிட்டு இருக்கோம், இவனுங்களப் பத்தி தெரியாதா என்று பால் பூத் ஆசாமிகளை நினைத்துக்கொண்டாள். இந்த நேரம் என்றில்லை. விடியக்கருக்கலில் வேலைக்கு வரும்போதும் அவளால் அது போன்ற பார்வைகளை தனித்து பிரித்தெடுக்கமுடியும். வக்கீல் வீட்டில் வாசல் தெளித்துக்கொண்டிருக்கும்போதே உணர்ந்துகொள்வாள் அந்த வீட்டு வாட்ச்மேனின் பார்வை எங்கே படிகிறது என்பதை. மீதமிருக்கும் பக்கெட் தண்ணியை விடாசாய் கீழே விசிறி ஊத்தும் போக்கில் அவள் கோபத்தை காண்பித்து போவாள். அதற்கப்புறம் அவன் ஒரு நான்கு நாளைக்கு லலிதா பக்கம் திரும்பமாட்டான். இப்படி நிறைய, தன் செய்கைகளாலேயே தன் மீது படரும் இந்தப் பார்வைகளை, ரெட்டை அர்த்தப் பேச்சை, சீட்டி அடிப்பதை என எல்லாவற்றையும் இடரச்செய்தாள். இல்லையென்றால் இத்தனை வருஷ காலமாய் இந்தத் தெருவில் வேலைக்கு வந்து போய்கொண்டிருக்கமுடியாது. இந்தத் தெருவில் இருக்கும் அத்தனை வீட்டு அய்யா, அம்மாக்களும் லலிதாவிற்கு அத்துப்படி. கூப்பிட்டு நிற்க வைத்து பேசுவார்கள். அந்தத் தெருவில் இருக்கும் ஏறக்குறைய எல்லா வாசல்களிலும் லலிதாவின் கைவண்ணம் இருக்கும், இதைத் தவிர்த்து சில வீடுகளிலும். இப்போதும் அப்படித்தான் சுழன்று, சுழன்று வீட்டு வேலைகளை முடித்து பிள்ளை பள்ளி விட்டு வருவதற்குள் வீட்டில் இருக்கும் வழக்கத்திற்காய் அவசரமாய் ஓடிக்கொண்டிருக்கிறாள்.

லஷ்மிபுரம் தாண்டி, தெருமுனையில் இருக்கும் ஆர்த்தி அபார்ட்மெண்ட்ஸ் பக்கம் திரும்பும் போதுதான் கவனித்தாள். வேகமாக ஒரு பைக் அவளைக் கடந்து போயிற்று. ராஜா மாதிரி இருந்திச்சில்ல என்று நினைத்து திரும்பலாமா என்று எத்தனிக்கும்போதே அந்த பைக் திரும்பி இவளை நோக்கி வந்தது.
சந்தேகமேயில்லை அது ராஜாதான். லலி, லலிதா என்று ஒரு சந்தேகக்குரலோடு பைக்கை நிறுத்தவும், அவள் திரும்பவும் சரியாக இருந்தது. உடலெல்லாம் வியர்த்துக்கொட்டி, கால்கள் பலமிழப்பதை போன்று உணர்ந்தாள். அவனை மாதிரி இருக்குன்னு நினைத்தோம், ஆனா அவனே இப்படி வந்து, தன்னை
கூப்பிடுவான் என்று சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை அவள். சொ, சொல்லு, எப்டியிருக்க, என்னா இந்தப்பக்கம் என்று இயல்பாய் இருப்பவளைப் போல் தன்னைக் காட்டிக்கொண்டாள்.

ம், நல்லாதான் இருக்கேன், நீ இங்கதான் எங்கியாவது வேலை செய்றியா, ரெண்டு, மூணு தடவ இந்தப் பக்கம் போயிருக்கேனே, உன்னப் பாத்ததில்லை என்று ராஜா கேட்டபோது, லலிதாவுக்கு தன் மீதே வெறுப்பாய் வந்தது. காலையிலிருந்து வேலைசெய்து துணி ஒரு வேஷம், தலை ஒரு வேஷமுமாய் இருக்கும் தன்னை இத்தனை வருடம் கழித்து இந்தக்கோலத்திலா பார்க்கவேண்டும். ம், ஆமா, லஷ்மிபுரம் தாண்டி என்றாள் பொதுவாக, ஆமா நீ என்ன இந்த பக்கமா?

அதுவா ஒரு ரெண்டு, மூணு நாளா இந்த ஏரியா பக்கமாதான் அலைஞ்சிட்டு இருக்கேன். மூத்தது பெரிய பொண்ணாயிடுச்சு, வீட்டுல அதுக்கு விசேஷம் வெக்கனும்னு ஒரே பிடிவாதம்,நம்ம பழைய கால பழக்கமெல்லாம் இந்த சைடுதானே, அதான் பத்திரிக்கை கொடுக்க வந்து போயிட்டு இருக்கேன். சாயந்திரம் கூட வரவேண்டியிருக்கும், இப்ப ஒரு பார்ட்டி அர்ஜெண்டா போன் பண்ணுச்சுன்னு வேலை விஷயமா செட்டுக்கு போயிட்டு இருக்கேன், சரி ஒன் அட்ரஸ் சொல்லேன்.சாயங்காலம் வீட்டுக்கு வந்து பேசறேன். எத்தன வருஷமாச்சு, முந்தாநேத்து ஒங்க பெரிம்மா வீட்டுக்கெல்லாம் கூட போயிட்டு வந்தேன் என்றான்.

விசேஷம் பண்ற அளவுக்கு அவ்ளோ பெரிய பொண்ணாயிடுச்சா, ம் எம் பையனும் பத்தாவது போப் போறான் இல்ல, எல்லாம் சரியாத்தான் இருக்கும். வீடு இங்கதான். அஞ்சாவது தெருவுல காண்ட்ராக்டர் கண்ணன் வீட்டுல குடியிருக்கோம் என்றாள்.

ஏதோ ஒரு பழைய பாடலின் ட்யூன் செல்போனில் ஒலிக்க, அதை எடுத்துப் பார்த்துக்கொண்டே, சரி சாயங்காலம் வரேன், நாலு தடவைக்கு மேல போன் வந்திடுச்சு என்று பைக்கைத் திருப்பினான். பைக்கைத் திரும்பும் போது ராஜாவின் அதே கண்களை இடுக்கிய பார்வை, சிரித்தான், கிளம்பினான்.

அந்தப் பார்வை உண்டு செய்த மாயங்கள் தான் எத்தனையெத்தனை. இந்தப் பார்வைதானே அடிக்கடி தன்னை தன் பெரியம்மா வீட்டுக்கு போகும் சாக்கை உருவாக்கியது. பெரியம்மா வீட்டுக்கு சற்றுத்தள்ளி எதிரே இருக்கும் மெக்கானிக் ஷெட்டில் தான் அப்போது ராஜா வேலைப்பார்த்துக்கொண்டிருந்தான். லலிதாவின் ஊரில் விவசாயம் பொய்த்துப்போக, தன் அக்காவும் மெட்ராஸில்தானே இருக்கிறாள் இங்கே ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்றெண்ணி வந்த அம்மாவோடு, தன் பெரிம்மா வீட்டுக்கு தஞ்சம் புகுந்திருந்தாள்.

பெரியம்மா புத்திசாலி, அம்மாவும் அவளும் இங்கு வந்த மாத்திரத்திலேயே அவர்களின் சக்திகேத்தாற் போல ஒரு வீட்டைப் பார்த்து தந்துவிட்டாள். ஆனால் ராஜாவின் பார்வை லலிதா அங்கே அவளை இருக்கவிடவில்லை. அம்மா கூட அடிக்கடி திட்டுவாள், அவதான் மொதநாளு வாழ எலை, ரெண்டாவது நாளு தைய எலை, மூணாவது நாளு கையிலன்னு காமிச்சுட்டா, நீ என்னமோ ஆனா ஊன்னா அங்க போயி ஒக்காந்துட்டு இருக்க. எங்கூட மாட வந்து எதாச்சும் வேலை செய்யிடி, அந்த அய்யாகிட்ட சொல்லி, ஒம் பத்தாவது படிப்புக்கு எதாவது வேலை வாங்கித் தரசொல்றேன் என்பாள்.

சரியென்று மனதை கட்டுப்படுத்திக்கொண்டு அங்குப்போகாமலிருந்தாலும், நேற்று ராஜாவின் கடையில் ஒலித்த சினிமா பாட்டு ஏதாவது பக்கத்து வீட்டு ரேடியோவில் ஒலிக்கும். சில பாடல்களை இவள் ரசிக்கிறாள் என்று தெரிந்து சற்று சவுண்ட்டு கூட்டி வைப்பான் இல்லையென்றால் மறுபடி அதையே போடுவான், இவளும் புரிந்துகொள்வாள். சரியாய் அந்தபாட்டு இவள் பக்கத்து வீட்டு ரேடியோவில் ஒலிக்க இந்தப்பாம்பும் மகுடிக்கு மயங்கி சரசரவென்று பெரிம்மா வீட்டு திசை நோக்கி போகும். ரெண்டுநாள் வராத பாம்பின் தலையை கண்டவுடன், ஷெட்டில் இருக்கும் ராஜா என்கிற நாகம் சோகப்பாட்டாய் வைக்கும். உருகினாள் / னார்கள். எல்லாக்காதல் பாடல்களிலும் சுற்றி நின்ற வெள்ளை உடை தேவதைகள் இவர்களையும் சுற்றி சுற்றி வருவதாய் நினைத்து காதல் செய்தார்கள். கல்யாணம், குழந்தைகள் என்று எதிர்ப்பார்ப்பு பெரிசாகி கோவில், சினிமா என்று பயணப்பட்டது காதல். ராஜாவின் கைங்கரியத்தில் ஹேர்கிளிப்பில் தொடங்கி புடவை வரை புழக்கமாகியிருந்தது. ஆனால் விஷயம் கேள்விப்பட்ட லலிதாவின் அம்மாவோ, தன் மகளுக்கு கடிமணம் செய்ய ஆயத்தமாகியிருந்தாள்.

ஊரைக்கூட்டி ஒப்பாரி வைக்காமல் காதும் காதும் வைத்தா மாதிரி ஊருக்கு அழைத்துப்போய் ஏற்கனவே பேசி வைத்திருந்த மாப்பிள்ளைக்கு மணமுடித்து சென்னைக்கு அழைத்துவந்துவிட்டாள். மாலையும், கழுத்துமாய் லலிதா போய் நின்றது பெரியம்மா வீட்டுக்குத்தான். அதற்குள் விஷயம் கேள்விப்பட்ட ராஜா அங்கே இல்லவே இல்லை. அங்கிருந்த மூன்று நாட்களும் முள் மேல் நிற்பதாய் உணர்ந்தாள்.

தனிக்குடித்தனம் ஆரம்பமாயிற்று. சகல கெட்டபழக்கங்களில் ஒன்றுக்கும் குறை வைக்காமல் கற்றுத்தேர்ந்திருந்த கணவானாய் இருந்தான் லலிதாவுக்கு வாய்த்த கணவன். ஆகக்கூடி நீ பெரிய தப்பு செஞ்சிருக்க, அதனால அடங்கித்தான் போகனும் என்று வந்த அறிவுரையில் அரண்டு நின்றபோது, லலிதா கர்ப்பமாகியிருந்தாள். குழந்தை ப்ரதீப் பிறந்து ஒரு வயது ஆவதற்குள், ராஜாவின் காதல் விஷயம் கேள்விப்பட்ட கணவன், அடி உதைக்கும் குறைவில்லாமல் அர்ச்சனையை ஆரம்பித்திருந்தான். பொறுத்துப்பொறுத்துப் பார்த்து ஒரு சுபயோக சுபதினத்தில் மறுபடி அம்மா வீட்டுக்கே வந்துவிட்டாள் லலிதா. குழந்தை ப்ரதீப்பை அம்மாவிடம் விட்டுவிட்டு அப்போது சேலையை தூக்கி செருகி வீட்டு வேலைக்கு ஆயத்தமானவள் தான், ஆயிற்று விளையாட்டுப்போல பதினான்கு, பதினைந்து வருடங்கள்.

அவ்வபோது கணவனின் கண்மறைவு டார்ச்சர்கள்,இடையிடையே கேள்விப்பட்ட ராஜாவின் செய்திகள்,பிள்ளை வளர்ப்பு,படிப்பு என வாழ்க்கை அதன் போக்கில் எல்லாவற்றையும் இழுத்துக்கொண்டு ஓடி இதோ ஆர்த்தி அபார்ட்மென்ட்ஸ் தள்ளி அசைபோட்டபடி நடந்துகொண்டிருக்கிறது. எதிரே ஸ்கூல் பிள்ளைகளெல்லாம் வர ஆரம்பித்திருந்தன. கூச்சலில் கவனம் கலைந்து வீடு நோக்கி ஓட்டம்,அவசர அவசரமாய் எல்லாத்துணிகளையும் அலசிப்போட்டு, குளித்துமுடித்தாள்.

புடவை கட்டும்போதுதான் லலிதாவுக்கு சட்டென்று அந்தப் புடவையின் நினைப்பு வந்தது. அதை எடுத்து கட்டினாலென்ன, சாயங்காலம் ராஜா வரும்னு சொல்லியிருக்கே, அதுக்கு ஞாபகமிருக்குமா இந்தப்புடவை என்றெல்லாம் ஒருபக்கம் யோசிக்க, இன்னொரு பக்கம் ஆமா அவனே பொண்ணுக்கு விசேஷம்னு பத்திரிக்கை எடுத்துட்டு வர்ரான் அதுல இதத்தான் யோசிச்சிட்டு இருப்பான் என்று புத்தி சொன்னாலும் மனம் வென்றது.

மேலிருந்து சின்ன ட்ரங்கு பொட்டியை எடுத்தாள், அதிலிருந்த நான்கைந்து நல்ல புடவைகளுக்கு அடியில், அவளின் கல்யாணப்பட்டுப்புடவைக்கு கீழே இருந்தது அந்த இள நீல நிறத்தில் சிறுசிறு பூக்கள் போட்ட காட்டன் புடவை. எடுத்து நீவி வாசம் முகரும் போதே, உள்ளே என்னவோ செய்தது. ஏதோ ஒரு படத்தில் ஒரு நடிகை இதைப்போலவே கட்டியிருந்தாள் என அதுபோலவே கடை கடையாய் ஏறி தனக்காய் வாங்கி வந்திருந்ததாய் சொன்ன வார்த்தைகள், அதைத் தான் கட்டிச் சென்று அவனைப் பார்த்தது, திரும்ப வரும்போது பெய்த மழை என எல்லாம் புடவையைப் பிரிக்க பிரிக்க பழைய நினைவுகள் கிளர்ந்தன.

எடுத்து கட்டிக்கொண்டு ஒரு முறை கண்ணாடிப் பார்க்கலாம் என்று நினைத்தபோது, அம்மா, அம்மா என்று ப்ரதீப்பின் குரல் கேட்டு, அவனை கொஞ்சி, கெஞ்சி ஸ்கூல் விவரமெல்லாம் பேசிக்கொண்டே இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர். என்னம்மா, இன்னிக்கு புதுப் பொடவையெல்லாம் கட்டிக்கிட்டு இருக்க, எங்கயாச்சும் கல்யாணத்துக்குப் போறியாம்மா என்றான்.

லலிதாவுக்கு சட்டென்று ஒருமாதிரியாய் இருந்தது. என்ன சொல்வது என்று தெரியாமல், இல்லப்பா ரொம்ப நாளாச்சு கட்டி, ஆசையா இருந்துச்சு, அதான், இதான் என்று ஏதேதோ பேச்சை மாற்ற, சரிம்மா நான் வெளிய விளாடப்போறேன் என்று குதித்தோடினான் ப்ரதீப்.
சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து, கொஞ்சம் வீட்டிலிருக்கும் பொருட்களை ஒழுங்கு செய்து, ராஜா வந்தால் காபி கலந்து கொடுக்கலாம் என்று ஒரு சின்ன பாக்கெட் பால் வாங்கி என ஏதேதோ மனம் போன போக்கில் செய்ய, ரொம்ப அதிகமா செஞ்சிக்கிட்டு இருக்கமோ என்று தன் மீதே ஒரு கேள்வி வந்தது.

இதாங்க லலிதா வீடு என்று குரல் கேட்டு வெளியே எட்டிப்பார்த்தாள், ராஜா நின்றிருந்தான், வாங்க, உள்ள வாங்க என்ற்படி லலிதா உள்ளே போக, வா ராஜி உள்ள என்றான். ராஜாவின் பின்னரே ராஜாவின் பெருத்திருந்த உடலுக்கு சற்றும் குறைவில்லாமல் உடன் ஒரு பெண்,அவன் மனைவியாக இருக்கக்கூடும். பட்டுப்புடவை, நகை என்று தன் ஜம்பஸ்த்துகளை காட்ட முற்பட்டு அதற்கு சற்றும் அவள் தோற்றம் உடன்படாமலிருந்தது. வாங்க உட்காருங்க என்றபடியே பாயை விரித்தாள். காபி சாப்பிடுங்க என்று காபி கலக்க போனாள்.

இல்ல, அதெல்லாம் வேணாம்பா, நாங்க இன்னும் நாளு எடத்துக்கு பத்திரிக்கை வைக்கப்போகனும் என்று இருவரும் நின்று கொண்டிருந்தார்கள். அதுக்கென்ன ராஜா, காபி குடிச்சுட்டு... என்று லலிதாவின் குரல் சற்று உரிமையாய் எழும்ப, சட்டென்று ராஜா, நான் சொன்னேனில்ல ராஜி, எங்க சித்தப்பா வழில, தூரத்து சொந்தம் அப்படின்னு, இதான் அது, பேரு லலிதா. மனைவியைத் தவிர எல்லாப்பெண்களும் தனக்கு தங்கைதான் என்ற அவதானிப்பை தன் மனைவிக்கு உணர்த்த முற்படும் ஒரு அவசரத்தொனியில் அவன் தொடர்ந்து பேசியதெல்லாம் லலிதாவின் காதில் விழவில்லை.

அப்டிங்களாங்க என்று அந்தப் பெண்மணி லலிதாவின் காது,கழுத்து என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே பத்திரிக்கையைக் கொடுத்தாள், ராஜாவின் கையும் பத்திரிக்கையைப் பிடித்திருந்தது. அவசியம் வந்துடுங்க, எங்க வீட்டுல மொத பங்ஷனு என்றவாறே வாசல் தாண்டினாள், பின்னே ராஜாவும். அவள் அசைந்து முன்னே செல்ல, ராஜா இவளைப் பரிதாபமாகப் பார்த்தான். மதியம் பார்த்த பார்வைக்கும், இப்போதைக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாய் உணர்ந்தாள் லலிதா உடன் அவன் பேச்சிலும்.
ம்மா, நான் படிக்கப்போறம்மா என்றவாறே உள் நுழைந்தான் பிரதீப். என்னம்மா, நான் வெளிய போய் வெளாடிட்டு வர்றதுக்குள்ள பழையபுடவை கட்டிக்கிட்டு இருக்க, அந்தப் புடவைல எங்க டீச்சர் மாதிரி இருந்தம்மா, ஏம்மா, கழட்டிட்ட என்றான் இப்போது உடுத்தியிருக்கும் பழைய புடவையை திருகியவாறே.

இல்லப்பா, ரொம்ப வருஷமாச்சுல்ல, புடவைல அங்கங்க நெறைய பொத்தல் விழுந்துடுச்சி, அதான் பாத்திரக்காரனுக்கு போட்டுடலாம்னு எடுத்துவெச்சிட்டேன் என்ற திசையில், ஆசையாய் நீவி, முகர்ந்து பிரித்த புடவை மடிக்கப்படாமல் குவியலாய் இருந்தது.

21 comments:

கே.என்.சிவராமன் said...

முந்தைய கதைக்கும், இதுக்கும் வித்தியாசம் தெரியுது அமித்துமா... எழுத்திலும் சரி, விவரிப்பிலும் சரி.

நல்லா இருக்கு.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ப்ரியமுடன் வசந்த் said...

**விடியக்கருக்கலில்**
**விடாசாய் **
**சீட்டி அடிப்பதை **
**ஒன் **
**முந்தாநேத்து **
**உருகினாள் / னார்கள்**
**அலசிப்போட்டு, **

இதெல்லாம் அமித்தம்மா ஸ்டைல்...வேற யாரும் எழுதி நான் படிச்சதில்ல ஊர்வாசம் வீசுகிறது...

இந்த வரிகள் கவிதையா இருக்கு...

தான் கட்டிச் சென்று அவனைப் பார்த்தது, திரும்ப வரும்போது பெய்த மழை

முடிவென்னவோ சோகம்தான்...அதை உணர முடிகிறது....

Ungalranga said...

flow அருமைம்மா!!

கதை நல்லா வந்திருக்கு.. சிறுகதை முயற்சி என்று லேபிளில் போட்டிருப்பது பாராட்டத்தக்கது..!!

நானும் இதையே ஃப்லோ பண்றேன் இனிமேல்..!!

நல்ல கதை..!! வாழ்த்துக்கள்!

தமிழினிமை... said...

மனதை ஏதோ செய்தது கண்டிப்பாய்... அடக்கி, பின் அடங்கி, எதிர்பார்த்து பின் ஏமாந்து .ரசித்து பின் வெறுத்து என பல நிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது பெண்ணால்....இவளுடையது என்றென்றும் மௌனத்தின் மொழியாகவே ஆகிவிட்டது....ம்ம்ம்ம்..பழயன கழிதலும் புதியன புகுதலும்.....நல்லது...அப்படியே அமித்து குட்டிக்கு எங்கள் அன்பும் ஆயிரம் கோடி முத்தங்களும்...

அ.மு.செய்யது said...

முதல் நான்கைந்து பத்திகள் சாதாரணமாகத் தான் இருந்தன.

//அந்தப் பார்வை உண்டு செய்த மாயங்கள் தான் எத்தனையெத்தனை//

இங்கிருந்து கதை டேக் ஆஃப் ஆவுது.

மத்தபடி ஓக்கே !!!

Thamira said...

அண்ணன் பைத்தியக்காரனை வழிமொழிகிறேன்.!

கணேஷ் said...

'அழகி' யை நினைவுபடுத்துகிறாள்.

:( :(

அவனுடைய வலியை யார் பதிவு செய்வது?

Anonymous said...

நல்ல விவரணை அமித்து அம்மா. கதை அருமை.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கதை நடை எனக்கு மிகவும் பிடித்தது . வாழ்த்துக்கள்.

ச.முத்துவேல் said...

இப்படியொரு கதைய எழுதினது நீங்களான்னு இந்தமுறை நான் ஆச்சரியப்படப்போறதில்ல. ஏன்னா, ஏற்கனவே நீங்க நிரூபிச்சுட்டீங்க. இது இன்னொரு , மேலும் பக்குவம் கொண்ட நிரூபணம்.

என் உற்சாகத்தை,மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறேன்.

( நானும் நேத்துதான்,'பாலிஸ்டர் சட்டை'ன்னு ஒருகதை எழுதிவச்சுருக்கேன். இன்னும் எங்கயும் பயன்படுத்தல.இந்தக் கதையோட கொஞ்சம் கொஞ்சம் ஒத்துப் போகுது)

☀நான் ஆதவன்☀ said...

நல்லா இருக்கு பாஸ். என்ன........ கொஞ்சம் சோகமான முடிவா இருக்கு :(

Deepa said...

//இல்லப்பா, ரொம்ப வருஷமாச்சுல்ல, புடவைல அங்கங்க நெறைய பொத்தல் விழுந்துடுச்சி, //

:-) சில சமயம் நிதர்சனங்கள் அசாத்திய நிம்மதியைக் கொண்டு வரும்!

//இப்படி நிறைய, தன் செய்கைகளாலேயே தன் மீது படரும் இந்தப் பார்வைகளை, ரெட்டை அர்த்தப் பேச்சை, சீட்டி அடிப்பதை என எல்லாவற்றையும் இடரச்செய்தாள். //

பெண்ணினத்துக்கே பெருமை சேர்க்கிறீர்கள் இது போன்ற எழுத்தால்.
வாழ்த்துக்கள் அமித்து அம்மா!

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா வந்திருக்கு அமித்தம்மா.என்னவோ மனசு கனத்து போச்சு.ஒரு கோயிலை தாண்டும் போது,ஒரு மருதாணி மரத்தை தாண்டும் போது,ஒரு பஸ் நிறுத்தத்தை தாண்டும்போது,மிக பரிச்சியமான ஒரு பாடலை தாண்டும் போது மனசு கனத்து போகுமே..அப்படி கனத்து போனது...அல்லது,

தூக்கி எறிந்தது என சொல்லலாம்.

அமுதா said...

அருமையாக இருக்கிறது.

/*இடக்கையில் இருக்கும் ஒயர் கூடையை வலக்கைக்கு மாற்றி வேகமாக நடக்க ஆரம்பித்தாள் */
சின்ன சின்ன விஷயங்களையும் யதார்த்தமாகக் கூறி அழகான நடையில் எழுதி உள்ளீர்கள். உங்கள் எழுத்து நடை ஈர்க்கின்றது. வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

எழுத்துல ஒரு ஃபீலின்ங்ஸை கொண்டுவந்திட்டீங்க அமித்துமா. அதுதான் படைப்பிற்கான வெற்றி. மீண்டுமொரு நல்ல படைப்புக்கு மிக்க மகிழ்ச்சி.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

Karthik said...

சொன்ன விதம் நல்லா இருந்துச்சு..

அமிர்தவர்ஷினி அம்மா said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

Unknown said...

//லலிதாவின் குரல் சற்று உரிமையாய் எழும்ப, சட்டென்று ராஜா, நான் சொன்னேனில்ல ராஜி, எங்க சித்தப்பா வழில, தூரத்து சொந்தம் அப்படின்னு, இதான் அது, பேரு லலிதா//

இந்த இடம் கதையின் ஆதார முடிச்சாக இருந்தாலும் வீடு வரை வந்த பிறகா மனைவியிடம் ஒரு கணவன் சொல்லுவான். லாஜிக் இடிக்கிதே...

//மனைவியைத் தவிர எல்லாப்பெண்களும் தனக்கு தங்கைதான் என்ற அவதானிப்பை தன் மனைவிக்கு உணர்த்த முற்படும் ஒரு அவசரத்தொனியில்//

:-)

cheena (சீனா) said...

அன்பின் அமித்து அம்மா

அமித்துக்குட்டி நலமா

கதை அருமையாகச் செல்கிறது - இயல்பான நிகழ்வுகள் அழகாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. சின்னஞ்சிறு செய்திகள் ஆங்காங்கே.
புடவை கட்டியதும் அவிழ்த்ததும் மடிக்காமல் குவியலாகப் போட்டதும் - பொத்தல் விழுந்துவிட்டது எனத் தவிர்ப்பதும் - முடிவு சோகமாக இருப்பினும் நல்ல முடிவு.

நல்வாழ்த்துகள் அமித்து அம்மா

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி கே.வி.ஆர், நன்றி சீனா சார்.