18 November 2009

தொலைத்ததும், பெற்றதும்.

நான் அனேகமாக பொருட்களை தொலைத்ததுமில்லை,அப்படியே தொலைத்தாலும் என் இழப்பீடுகளை சமன்பாடு செய்ய பின் நாட்களில் பொருட்கள் அவ்வளவாக கிட்டியதுமில்லை. சிலருக்கு அஞ்சு ரூபா தொலைத்தால், அடுத்தாற்போல் ஐம்பது ரூபாய் கிடைக்கும் அதிர்ஷடமெல்லாம் இருந்தது.

முதன் முதலாய் நான் தொலைக்க வேண்டிவந்தது பரிசாய் கிடைத்த குண்டு நீல நிற பேனா, கடையில் இங்க் நிரப்ப தந்தால், நிரப்பிவிட்டு பதினைந்து பைசா வாங்கிக்கொள்வார்கள். நார்மல் பேனாவுக்கு பத்து பைசாதான். பட்டையான பித்தளை நிப், மூடியின் கூடுதலாக சில்வர் கம்பியின் முனையில் பட்டாணி கொட்டை சைஸுக்கு குண்டாய் இருக்கும் அது எனக்கு ரொம்ப பிடித்த பேனா, அது எனக்கு மட்டுமல்ல மஹாலஷ்மிக்கும் பிடிக்கும் என்பது பிற்பாடுதான் தெரிய வந்தது.

வழக்கம் போல ஸ்கூலில், நோட்டில் எழுதிவிட்டு அதற்குள்ளேயே பேனாவை வைத்துவிட்டு, சாப்பாட்டு மணி அடித்ததும் ஹோ வென்று மைதானத்துக்கு வந்தாயிற்று. அவசரமாய் விழுங்கிவிட்டு, தலைமுடி பறக்க, முட்டிக்கால் முகத்தில் இடிக்க என எவ்வளவு விளையாட முடியுமோ அவ்வளவு விளையாடுவதற்குள் அடுத்த மணியும் அடித்தாயிற்று. ச்சே எவ்வளவு சீக்கிரம்ப்பா என்று நொந்து வகுப்பறைக்குள் நுழைந்து நோட்டைத் திறந்தால் பேனாவைக் காணோம். அங்குமிங்கும் தேடி, அழாத குறையாக அவளையும் இவளையும் கேட்டதில் நீ க்ளாஸ்ல வெச்சுட்டு போனியா, இல்லை கையோட எடுத்திட்டு போனியா என்று என்னையே குற்றவாளி குண்டில் நிறுத்தினார்கள். பேனாவுக்காக மெனக்கெட்டு யோசித்ததில், போகும் போது வாயைப்பிளந்து கொண்டு குண்டாக இருந்தது நன்றாக ஞாபகமிருந்தது. அதை சொல்ல வருவதற்குள், டீச்சர் வந்து, டீச்சரிடம் சொல்ல வருவதற்குள் அழுகை வந்தது.

சொல்ல வாயெடுப்பதற்குள் கலைச்செல்வி தன்னிடம் இருக்கும் இன்னொரு பேனாவை என் பக்கம் தள்ளி வைத்துவிட்டாள். அப்போதைக்கு கவனம் டீச்சர் மேல் இல்லாவிட்டாலும் இருப்பது காண்பிப்பது ஒரு மாணவியான எனது கடமை, இல்லாவிட்டால் சாப்பிட்டு வந்த முதல் பீரியட் தூக்கமாய் வரும்,அப்படி தூங்கி கொட்டாவி விடுபவர்களை கொட்டுவதற்காகவே டீச்சர் சிலரை நியமித்திருந்தார்கள். ஏற்கனவே இரு முறை கொட்டு வாங்கிய அனுபவத்தால் அப்போதைக்கு டீச்சர், ப்ளாக் போர்ட், புக் என்று பாவ்லா காட்டிக்கொண்டு மானசீகமாய் குண்டு பேனாவை தேடிக்கொண்டிருந்தேன். ம்ஹூம் கிடைக்கவேயில்லை.

பேனா தொலைத்ததற்கு வீட்டில் திட்டு வாங்கி, பச்சை நிறத்தில் மொக்கை பேனா ஒன்று கைக்கு வந்தது. நாலைந்து நாள் கழித்து கொடுத்த நோட்டைத் திருப்பி வாங்க, அன்று காலை மஹாலஷ்மி வீட்டுக்குப்போனேன், வீடு திறந்து கிடந்தது, எனது நோட், அதற்குக் கீழே அவளின் நோட், அதற்கு மேலே எனது குண்டுப் பேனா. பார்த்தவுடன் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. வீட்டில் யாரையும் காணோம், மஹா என்று கூப்பிடுவதற்குள் சமையலறையில் இருந்து மஹாவின் அம்மா, மஹா வை கடைக்கு அனுப்பியிருப்பதாக பதில் வந்தது. என் நோட்டு கேட்க வந்தேன் என்று சொன்னாலும், பேனா மீது தான் என் கண்கள் இருந்தது. மஹாவும் வந்துவிட்டாள், சட்டென்று அவளின் முகம் மாறியதாக எனக்குத் தோன்றியது, ஆனால் ஏய் நோட்டு, நான் க்ளாசுல தரேன்ப்பா என்றாள், இல்ல இப்ப வேணும் என்றேன். நோட் கைக்கு வந்தது, ப்பேனா மஹா என்றேன் மிகவும் பரிதாபமாக.

பேனாவா ?, ம்மா இங்க வாயேன் என்றதும் எனக்கு சகலமும் ஒடுங்கிப்போனது, கையில் கரண்டியும் கலைந்த தலையுமாக மஹாவின் அம்மாவைப் பார்த்தவுடன் பேச்சே வரவில்லை, மஹா தான், ம்மா இந்தப் பேனா நம்ம சரவணன் மாமா தானே ஊர்ல இருந்து வாங்கியாந்து தந்தது என்றாள். ஆமாம், இப்ப என்ன அதுக்கு என்ற மஹாவின் அம்மாவையும், மஹாவையும் பார்க்க எனக்கு அழுகை கண்ணில் முட்டிக்கொண்டு வந்தது.

இல்ல ஆண்ட்டி, அது என் பேனா, நான் ஸ்கூல்ல தொலைச்சிட்டேன், நாலு நாளா தேடிக்கிட்டிருக்கேன், எங்கம்மா கூட என்னத் திட்டினாங்க.

ஒலகத்திலயே ஒன் பேனா மாதிரி ஒன்னுதான் இருக்குமா, வேற இருக்காதா, இது உன் பேனாதான்றதுக்கு என்னா அத்தாச்சி? இத கேட்கதான் நோட்டு கேட்கற சாக்குல வந்தியா?

இல்ல அது நீல கலர், குண்டு, முனையில் இன்னொரு குண்டு என்று சொல்லிக்கொண்டே வந்தாலும் அது மஹாவுடைய பேனாதான் என்று நிரூபிக்க அவளின் அம்மா வாதாடிக்கொண்டிருந்தார்கள். மஹா என்னையேப் பார்த்துக்கொண்டிருந்தாள். வாதப் பிரதிவாதங்களின் சாமர்த்தியங்கள் ஏதும் அப்போது என் வாய் வசம் வரும் அனுபவங்களைப் பெற்றிருக்கவில்லை ஆதலால்,சட்டென்று எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு விலகிவிட்டேன். என் முகம் மாறி இருந்ததை கண்ணாடி பார்க்காமலேயே என்னால் உணரமுடிந்தது.

வீட்டில் என்னவென்று கேட்டதற்கு எதுவும் சொல்லாமல், ஸ்கூலுக்கு வந்தாயிற்று. ஸ்கூலில் அதே முகபாவம்தான். யார் பொருட்டும், எதன் பொருட்டும் முகம் மாறவேயில்லை, நிகழ்வுகளையொத்து முகபாவங்கள் மாறும் நாள் என்னிலிருந்து அன்று தான் தொடங்கியிருக்கவேண்டும். மஹா வந்தாள், வழக்கம் போல லேட்டாக.

சகஜமாக எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தாலும், என் மீது அவளின் பார்வை வீச்சு அதிகமாக இருப்பதாகப் பட்டது. அவள் வீட்டில் நடந்த நிகழ்வை நான் அதுவரையிலும் யாரிடமும் சொல்லவேயில்லை.

ஆனால் இரண்டு பீரியட் இடைவேளையின் போது, அவள் தான் என் பெஞ்ச்சில் இருக்கும் எல்லோரிடமும் சொன்னாள், நான் அவள் வீட்டுக்குப்போனதையும், பேனா கேட்டதையும். பாருப்பா இது இவ பேனாவாப்பா, என்று பேனாவை வெளியே எடுத்துக்காட்டிய போது, பேனாவின் முனையிலிருக்கும் சில்வர் குண்டு உடைபட்டிருந்தது, என் பேனாவில் இருந்த பித்தளை நிப் சில்வர் கலராக உருமாறியிருந்தது.

மீண்டும் அழுகை முட்டிக்கொண்டுவந்தது, கலைச்செல்வி என்னைத் தேற்றினாள். அழுவாதப்பா, அவ எல்லாத்தையும் செய்றவதான், நீ அழுவாதப்பா.

இல்ல கலை, என் பேனா வை அவ எடுத்துக்கிட்டது கூட பெரிசில்ல, காலைல அவங்க வீட்டுல பார்க்கும் போது அந்தப் பேனா நல்லா இருந்துச்சு, இப்பப் பாரு, அந்த குண்டு உடைஞ்சுப்போயிருக்கு என்று அழுத அழுகையின் ஊடே தெரிந்த மரப்பெஞ்சின் மழமழப்பு இப்போதும் கண்ணில் பசுமையாய் தெரிகிறது.

நீ ஒன்னுத்துக்கும் லாயக்கில்ல, அதது என்ன ஜித்தா, சாமர்த்தியமா பொழைக்குதுப்பாரு என்று அடிக்கடி முழங்கும் அம்மாவின் கூற்று உண்மைதானோ என்று மனதுக்குள் தோன்றி மறைந்தது.

எடுக்கவும், எடுத்ததை மறைக்கவும், மறைத்ததை தனதென்று வாதாட என்னொத்த மஹாலஷ்மிக்கு கற்றுத்தந்தது எது, அவளொத்த எனக்கு கற்றுத்தராதது எது? இப்படி சில நிகழ்வுகள் தான் சிறுமியாக இருந்த எனக்குள் வார்த்தை ஜாலங்களையும்,வாய் சாமர்த்தியங்களையும் கைக்கொள்ளவில்லையானால், நீ மக்கு என்று எடுத்துக்காட்டியதோ?

வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு பின் எங்க எத சொல்லனும், எங்க எத பேசனும்னு கூட தெரியாதா உனக்கு என்ற கேள்விக்கணைகள் துளைத்த பின்னர், நாசூக்காய் பேச, சிரிக்க என எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கை வந்தது.

நீயா ஏன் எல்லாத்தையும் இப்படி முன்னாடியே உளறிக்கொட்டற என்றும், மற்றவர்கள் வாயில் வந்ததை வைத்தே அவர்களை மடக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இன்னும் பற்பல உபதேசங்கள் சாமர்த்திய வாழ்தலை, பிழைத்தலை முன்னிறுத்தியே சொல்லப்பட்டது. சொல்றத சொல்லிட்டு, கடைசியா சிரிச்சுடு என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அது ஒன்றுதான் இன்று வரை கை மன்னிக்கவும் வாய் வரப் பெறவில்லை.

மனதில் தோன்றியதை சட்டென்று சொல்லவும், செய்யவும் முடியாமல், மறைத்து வைத்துக்கொண்டு எப்படி சிரிப்பது அதுவும் சினேகமாய்?

23 comments:

பா.ராஜாராம் said...

தொட்டதெல்லாம் துலங்குது அமித்தம்மா.மற்றொரு சிக்ஸ்சர்!

beutiful narration!

//மனதில் தோன்றியதை சட்டென்று சொல்லவும், செய்யவும் முடியாமல், மறைத்து வைத்துக்கொண்டு எப்படி சிரிப்பது அதுவும் சினேகமாய்?/

பருக்கை சோறு!

அன்புடன் அருணா said...

/மனதில் தோன்றியதை சட்டென்று சொல்லவும், செய்யவும் முடியாமல், மறைத்து வைத்துக்கொண்டு எப்படி சிரிப்பது அதுவும் சினேகமாய்?/
நான் கற்றுக் கொள்ளாத வித்தையும் அதுவேதான் அமித்தம்மா!

☀நான் ஆதவன்☀ said...

தலைப்பைப் பார்த்ததும் நேரா கடைசிப்பத்தி தான் பார்த்தேன்..... இது தொடர்பதிவான்னு :)

இருங்க படிச்சுட்டு வரேன்

☀நான் ஆதவன்☀ said...

மற்றுமொரு நல்ல பதிவு. அதுவும் நெஞ்சை தொடும் பதிவு பாஸ்.

//சொல்றத சொல்லிட்டு, கடைசியா சிரிச்சுடு என்றும் அறிவுறுத்தப்பட்டது//

இதத்தான் இப்ப வலையுலகம் செஞ்சிட்டு இருக்கு. ஏதாவது ஏடாகூடமா சொல்லிட்டு ஸ்மைலி போட்டா போதும் :) (இது அதுவல்ல)

செ.சரவணக்குமார் said...

அமித்து அம்மா..

அருமையாக எழுதியிருக்கிறீர்கள், உங்களிடமிருந்து மீண்டும் ஒரு சிறந்த இடுகை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\நீ ஒன்னுத்துக்கும் லாயக்கில்ல, அதது என்ன ஜித்தா, சாமர்த்தியமா பொழைக்குதுப்பாரு என்று அடிக்கடி முழங்கும் அம்மாவின் கூற்று உண்மைதானோ என்று மனதுக்குள் தோன்றி மறைந்தது.//

இதே திட்டு இதே ஃபீலிங் ..
கேக்கறதுக்கு முன்னாடி உளறருதுபத்தி சொன்னீங்களே... உளறிஃபையிங் ல டெஸ்ட் வச்சா நான் தான் ஃபர்ஸ்ட் மார்க் வாங்குவேனோன்னு வேற எனக்கு ஃபீலிங்..
போங்க அமித்தும்மா இன்னிக்குப்பாத்து இதைப்போட்டு என்னை ஓவரா ஃபீல் செய்ய வச்சிட்டீங்க..

காமராஜ் said...

ரொம்ப பாந்தமாக, நெகிழ்வாக இருக்கு அமித்தம்மா.
அன்பா, சாமர்த்தியமா என்றால் தோற்றுப்போகும் அன்பே
பெரிது.

ப்ரியமுடன் வசந்த் said...

நினைவுகள் பசுமையா ஏதோ ஒன்றை சொல்லிசெல்கிறது...

பேனாவின் குண்டுமுனை ஞாபகப்படுத்தியவிதம் அருமைங்க..

அ.மு.செய்யது said...

கரு என்னவோ ஒரு பேனா தான் என்றாலும், மென்மையான உணர்வுகளை அழகாக சொல்கிறது
அனுபவம் ? புனைவு ?? கதை ??? எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம்
இல்லையா ??

Pleasure reading !!!

Anonymous said...

எட்டாவது படிக்கும்போது புது ஜியோமெட்ரி பாக்ஸ் தொலைச்சேன் அமித்து அம்மா. கிடைக்கவேயில்லை. அப்பறம் வீட்டுல பழசு தான் தந்தாங்க. புதுசு வாங்கித்தரவேயில்லை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அனைவரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அனைவரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

சந்தனமுல்லை said...

:(( மனதை கனக்க வைத்துவிட்டீர்கள்!

விக்னேஷ்வரி said...

சாப்பாட்டு மணி அடித்ததும் ஹோ வென்று மைதானத்துக்கு வந்தாயிற்று. அவசரமாய் விழுங்கிவிட்டு, தலைமுடி பறக்க, முட்டிக்கால் முகத்தில் இடிக்க என எவ்வளவு விளையாட முடியுமோ அவ்வளவு விளையாடுவதற்குள் அடுத்த மணியும் அடித்தாயிற்று.

வாதப் பிரதிவாதங்களின் சாமர்த்தியங்கள் ஏதும் அப்போது என் வாய் வசம் வரும் அனுபவங்களைப் பெற்றிருக்கவில்லை

அழுகையின் ஊடே தெரிந்த மரப்பெஞ்சின் மழமழப்பு இப்போதும் கண்ணில் பசுமையாய் தெரிகிறது.

உங்கள் எழுத்து நடை நீங்கள் என்ன சொன்னாலும் எங்களை வாசிக்க வைக்கும். அருமையான நடைங்க.

மனதில் தோன்றியதை சட்டென்று சொல்லவும், செய்யவும் முடியாமல், மறைத்து வைத்துக்கொண்டு எப்படி சிரிப்பது அதுவும் சினேகமாய்? //
இதே கேள்வி எனக்குள்ளும் பல முறை வருவதுண்டு. ஆனால், அதற்கெல்லாம் பதில் கற்றுத் தருவது தானே வாழ்க்கை.

அமுதா said...

அருமையான பதிவு அமித்து அம்மா. மிக அருமையாக மனதின் உணர்வுகளைப் படம் பிடித்துவிட்டீர்கள். எனக்கு இன்னொரு மகாவால் தொலைந்து போன ஷார்ப்னர் நினைவுக்கு வந்தது

Unknown said...

பேனா தொலைச்சா மட்டும் எனக்கு அது ஈடுகட்ட முடியா சோகம்.. ஆனாலும் அதிலிருந்து ஒரு அழகான வாழ்வியல் தத்துவம் பெற்ற உங்கள என்னன்னு புகழ்வது? :)) அருமை அக்கா. :))

அம்பிகா said...

எத்தனை தடவை வாசித்தாலும் சலிக்காமல் திரும்ப திரும்ப வாசிக்க
வைக்கும் அருமையான எழுத்துநடை உங்களுக்கு அமைந்திருக்கிறது, அமித்தம்மா.

மனதில் தோன்றியதை சட்டென்று சொல்லவும், செய்யவும் முடியாமல், மறைத்து வைத்துக்கொண்டு எப்படி சிரிப்பது அதுவும் சினேகமாய்?

இயல்புகளை தொலைத்து விட்டு இந்த சாமர்த்தியங்களை கட்டாயம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா??

"உழவன்" "Uzhavan" said...

எப்படி ஆரம்பித்து எப்படி முடித்திருக்கிறீர்கள். வியப்பாக உள்ளது. அருமை அமித்துமா. இப்படித்தான் முடிக்கவேண்டும் என்ற திட்டமிடல்தானா இல்லை இயல்பாகவே இப்படி வந்து முடிகிறதா?

தமிழ் அமுதன் said...

அந்த அந்த கால கட்டத்துக்கே அழைத்து செல்லுகிறார் அமித்துஅம்மா...!
குழந்தையாக,சிறுமியாக,வளர்ந்த பெண்ணாக அவர் எழுதும் காலங்கள்
நம் கண்முன்னே வந்துவிடுகிறது...! இந்த பதிவும் அவரது சிறப்பானவைகளில்
ஒன்று...! நன்றி அமித்து அம்மா ..!

பின்னோக்கி said...

தொலைந்து போன பேனா வழியே நிறைய வாழ்க்கை செய்திகள். நன்று.

ராமலக்ஷ்மி said...

//என்னொத்த மஹாலஷ்மிக்கு கற்றுத்தந்தது எது, அவளொத்த எனக்கு கற்றுத்தராதது எது?//

//மனதில் தோன்றியதை சட்டென்று சொல்லவும், செய்யவும் முடியாமல், மறைத்து வைத்துக்கொண்டு எப்படி சிரிப்பது அதுவும் சினேகமாய்?//

தொலைத்ததால் பெற்றதே அதிகம் என நிரூபிக்கும் வரிகள். அருமை அமித்து அம்மா.

தாரணி பிரியா said...

//மனதில் தோன்றியதை சட்டென்று சொல்லவும், செய்யவும் முடியாமல், மறைத்து வைத்துக்கொண்டு எப்படி சிரிப்பது அதுவும் சினேகமாய்? //

அது கை வர வேண்டாம் அமித்து அம்மா. நம் இயல்பை தொலைச்சுட்டு ஒரு வாழ்க்கையா. கண்ணாடியில பாக்கும்போது நாமதான் தெரியுணும் :).

Thamira said...

அருமை (உங்கள் பதிவு). பொறாமை (எனக்கு உங்கள் மீது).

'நீயும்தான் பிளாகர்னு சொல்லிகிறே..' ஹூம்.! (நான் என்னைச்சொன்னேன்)