08 October 2009

தீபாவளி நினைவுகள்

அம்மா, தீபாளி அந்துச்சு, பார்ரேன், டிவி ல என்று துணிக்கடை விளம்பரங்களையும், மத்தாப்பும், புத்துடையையும் போட்டி போட்டு காட்டி ரெண்டு வயது குழந்தைகளுக்கு அறிய செய்துவிட்டார்கள். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை வாயைப்பிளந்து புரிந்தும் புரியாமலும் பொக்கை வாயை காட்டுகிறது. வாழ்க விளம்பரதாரகள், வளர்க கேபிள் சேனல்கள்.! (டண் டணா டண் விளம்பரத்துக்கு கூட பேக்கிரவுண்டில் மத்தாப்பு ஒளிர்கிறது, எதுக்கு பாஸ்?)

மூணு டெச்சு, யெல்லோ கல்லர், பவுன் (ப்ரவுன்) கலர், அப்புறம் பட்டாச்சு கூட என வகைப் பிரித்து கேட்கத்தெரிந்துவிட்டது அமித்துவுக்கு. (இந்த வயதில் எனக்கு தீபாவளி மத்தாப்பை வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்திருப்பேனாய் இருக்கும். அனேகமாய் புத்தாடைகள் இருக்காது.)

செஞ்சி அருகே இருந்த குக்கிராமத்திலிருந்து சென்னைக்கு இடப்பெயர்ச்சி அடைந்தாலும், மனதால் இடப்பெயர்ச்சி அடையாமல் (அப்போதைய காலகட்டத்தில்) தீபாளி எல்லாம் நம்மூரு வழக்கமில்ல, பொங்கல் தான்.காஞ்சி போன கார்த்தி(கை) வந்தா என்ன,தீஞ்சு போன தீபாளி வந்தா என்ன, மவராசன் பொங்கல் வந்தா மண்டிப்போட்டு திங்கலாம் என்ற ரைமிங்க் டயலாக்கை சொல்லி சொல்லியே, புத்தாடைகளெல்லாம் எடுக்காமல் அதிக பட்சம் இட்டிலி, கறிக்குழம்போடு முடித்துவிடுவார்கள். அதுகூட அக்கம் பக்கத்து பழக்கத்தினால் தான்.

நாளைடைவில் நாங்கள் (நான் + அக்கா பசங்க) வளர வளர, நச்சரிப்பு தாங்காமல் புத்தாடைகள் வந்தன. அதுவும் ரொம்ப ஆடம்பரமான துணிவகைகளெல்லாமில்லை, காட்டன் பாவாடை சட்டை. அதற்கே உன்னைப்புடி, என்னைப்புடி என்றாகிவிடும். பிறகு மாமா தலையெடுத்த பின்னர் (நல்லா சம்பாதிக்க) ஆரம்பிச்ச பின்னர், ஒரு முறை எங்கள் மூவரையும் அழைத்துப்போய் நாயுடு ஹால் கடையில் எனக்கும், லதாவுக்கு சுடிதாரும், சபரிக்கு ட்ரவுசர், சட்டையும் வாங்கித்தந்தது. அதுதான் நான் உடுத்திய முதல் சுடிதார். நீலக்கலரில் பெரிது பெரிதாக பூப்போட்டு இருக்கும். தீபாவளி முடிந்து வரும் சனிக்கிழமையில் ஸ்கூலுக்கு கலர் ட்ரஸ் போட்டுபோகலாம். எப்போதும் யூனிஃபார்மிலே போகும் நான், அந்த வருடம்தான் கம்பீரமாக கலர் ட்ரஸ் போட்டுபோனேன்.

அதற்கடுத்தாற் போல பட்டாசு வகையறாக்கள். ஒரு முறை பென்சில் வெடியை கையில் பிடித்து சுத்தும் போது அது என் கையில் வெடித்து கொப்புளம் விட, அதிலிருந்து ஒன்லி சுறுசுறுவத்தியும், ஜாட்டியும் தான். மாமாதான் புஸ்வாணத்தையெல்லாம் கையில் பிடித்து ஜாலம் காட்டுவார்.

ஆட்டோ ஸ்டாண்டில் ஃபண்டு பிடிக்கும் வழக்கம் வந்தவுடன் வாலாக்களெல்லாம் வீட்டுக்கு வந்தன. மாமா ஊதுவத்தியை கையிலெடுத்துக்கொண்டு போகும்போதே, நாங்கள் காதைப் பொத்திக் கொள்ளுவோம். டம்மால், டும்மீல்னு வெடிச்சு, ரெண்டு, மூணு நெருப்புப்பொறியோட நம்ம ட்ரஸ் மேல விழுந்து, எங்கயாவது துணி பொசுங்கி இருக்கும்.இப்படி காசையும், துணியையும் கரியாக்கதான் கத்து வெச்சிருக்கீங்க என்று அம்மாவின் வசவு விழுந்துகொண்டே இருக்கும். அதே அம்மாதான் பொங்கலுக்கு வேறொரு தோற்றம் கொண்டிருப்பாள்.சென்னையிலிருந்தாலும் மூணுநாள் பொங்கல் கொண்டாடுவோம்.

இப்படியாக அவரவர்களின் கைக்காசையும், ஈடுபாட்டையும் கருத்தில் கொண்டு தீபாவளி மாமா பண்டிகை, பொங்கல் அம்மா பண்டிகை என்று நாங்களே பிரித்துக்கொண்டோம்.

கடந்த பொங்கலை முடித்த கையோடு எங்களை போட்டது போட்டபடி விட்டுச்சென்றாலும்,எங்கோ எப்போதோ யாரிடமோ கட்டிய தீபாவளி ஃபண்டின் மூலமாக இந்த தீபாவளிக்கு எங்களுக்கு பட்டாசையும், பலகாரத்தையும் வரச்செய்துவிட்டாய் மாமா. என்ன, இந்த தீபாவளிக்கு புத்தாடைகள் அணியப்போவதில்லை. இந்த தீபாவளிக்கு மட்டுமில்லை,யார் வாயிலாகவோ வீடு தேடி வந்து எங்களை கண்ணீரில் நனைய வைத்து, மறைந்தாலும் இருந்து வாழும் உன் அன்பினில் இனி எந்த தீபாவளிக்கும் நாங்கள் அப்படித்தான் இருப்போம்.

கருப்பாய், கனத்த சரீரத்துடன், சாய்வாக சிரித்துக்கொண்டே, புஸ்வாணத்தை கையிலெடுத்து பிடிக்கும் உன் அழகில்,மேலெல்லாம் சின்ன சின்ன நெருப்புப்பொறிகள் பறக்க மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருப்போம். இனிமேலும் எல்லா புஸ்வாணத்தின் பூப்பொறிகளிலும் நீ சிரிப்பாய். நான் பதிலுக்கு புன்னகைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பேன்.

காலம் காற்றைப்போல மிதமாகவும் சில சமயங்களில் சூறாவளியாகவும் சுழற்றிப்போட்டுப்போகிறது வாழ்க்கையை.

இருக்கும் இருப்பை அவ்வப்போது வரும் திருநாட்களும், திருவிழாக்களும் உற்சாகமூட்டினாலும், நிஜத்திலிருந்து பின் நினைவில் வாழும் மனிதர்களோடு ப்ச்.. அதெல்லாம் அவங்களோட போச்சு என்ற ஒரு வார்த்தையை உடன் சேர்த்துவிடுகிறது. சலிப்படைந்தாலும் இருப்பை மேற்கொண்டு நகர்த்தித் தானே ஆகவேண்டியிருக்கிறது இனி எழும் தலைமுறைகளுக்காக.

21 comments:

Anonymous said...

//நிஜத்திலிருந்து பின் நினைவில் வாழும் மனிதர்களோடு ப்ச்.. அதெல்லாம் அவங்களோட போச்சு என்ற ஒரு வார்த்தையை உடன் சேர்த்துவிடுகிறது.//

உண்மைதான் அமித்து அம்மா.
இப்போதெல்லாம் வாரநாட்களில் தீபாவளி வந்தாலும் வாரக்கடைசியில்தான் இங்கெல்லாம் கொண்டாடுவார்கள். குழந்தைகளாய் தீபாவளி கொண்டாடியதற்கும் இப்போது அவ்வளவாய் ஆர்வம் இல்லாமல் கொண்டாடுவதற்கும் ... ம் என்ன சொல்வது.

தமிழ் அமுதன் said...

///இனிமேலும் எல்லா புஸ்வாணத்தின் பூப்பொறிகளிலும் நீ சிரிப்பாய். நான் பதிலுக்கு புன்னகைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பேன்.///

உங்க மாமா இதை மகிழ்வுடன் உணர்வார் ..!

அ.மு.செய்யது said...

//சலிப்படைந்தாலும் இருப்பை மேற்கொண்டு நகர்த்தித் தானே ஆகவேண்டியிருக்கிறது இனி எழும் தலைமுறைகளுக்காக.
//

நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்.

பண்டிகைகள்,திருநாட்கள் எல்லாவற்றிலும், நம்மிடையே இல்லாதபோதும் நாம் விரும்பிய சில மனிதர்களின் நினைவுகள் புதைந்திருக்கின்றன.

//அதெல்லாம் அவங்களோட போச்சு// எத்த‌னை அர்த்தம் !!!

நெறைய‌ மிஸ் ப‌ண்றோம் !!!

சென்ஷி said...

:(

மனதைக் கலங்க வைக்கிறது வரிகள் சுமந்திருக்கும் உண்மை!

ஆயில்யன் said...

நிஜத்திலிருந்து பின் நினைவில் கொண்டாடி மகிழும் விழாக்களாகி போனது ப்ச்..

வல்லிசிம்ஹன் said...

அமித்து அம்மா, உங்கள் தீபாவளிக்கு மாமா ஒளியாக வந்து வாழ்த்துகிறார்.

எனக்கு என் தம்பி போகி அன்று,
நினைப்பூட்டுகிறான்.
மனது வருமா பொங்கல் சாப்பிட?
இருந்தாலும் எல்லாம் இயந்திரத்தனமாக செய்துவிடுவேன்.
அவன் என்னோடு இருப்பதாகத்தான் நம்புகிறேன்.

வாசல் போய் இரும்பு கேட்டை மூடும்போது,''நாளைக்குப் பார்க்கலாமா என்று அவன் கடைசியாகக் கேட்டது ஒவ்வொரு தடவையும் நினைவு வருகிறது.

உங்கள் மாமாவை இந்தத் தீபாவளிக்குக் கட்டாயம் நினைப்பேன்.

துளசி கோபால் said...

நினைவுகள் மட்டுமே வாழ்க்கை என்ர அள்வில்தான் எல்லாம் போய்க்கொண்டிருக்கிறது அமித்து அம்மா.

இருக்கோமே என்றுதான் அவைகளைத் திசை திருப்ப என்னென்னவோ செய்துகொண்டிருக்கோம்.

காலம் யாருக்காகவும் நிக்கறதில்லைப்பா.

நட்புடன் ஜமால் said...

என்னடா இது இவ்வளவு சீக்கிரம் போட்டுட்டீங்களேன்னு நினைத்தேன்

நினைவுகள் கனமாய் ...

Karthik said...

இந்த மாமாவ பத்தி ஏற்கனவே ஒருமுறை எழுதியிருக்கீங்களா என்ன? படிச்சா மாதிரி இருக்கு. நல்ல பதிவு.

காமராஜ் said...

'காஞ்சு போன காத்தியும், தீஞ்சு போன தீவாளியும் '.
அமித்தம்மா இன்னும் உரக்கச் சொல்லவேண்டிய சேதி.
அப்புறம்,
பட்டாசு செய்து கொடுக்கிற நாங்கள் சின்னவயதில்
அதை வெடிக்கப் படுகிற பாடு சொல்லி மாளாது.
கடந்த நான்கு வருடங்களாக
சிவகாசிக்கருகில் இரண்டு மூன்று வங்கிக் கிளைகளில்
பணியாற்றியபோது என்னைச்சூழ்ந்து கொண்ட கரிமருந்துப்புகையின்
கமறலுக் குள்ளிருந்து இன்னும் என்னால் வெளியேற முடியவில்லை.
பணம்வாங்க நீட்டுகிற பலகைகள் தீயில்
கருகியவையாகவே இருக்கும், அந்த திருத்தங்கல் கிளையில்.
பெரும்பகுதி உழைப்பாளர்கள் முப்பந்தைந்து வயதுக்குமேல்
காசநோய்க்குள் உருகிப்போவார்கள்.

எல்லாம் ஒளிக்கு அடியில் கிடக்கிற இருட்டு.

என்னை வெகுவாகப் பாதித்த உங்கள் அருமையான இடுகைகளில் ஒன்று இது.

Deepa said...

உங்கள் மாமாவின் நினைவுகளோடு பண்டிகையை நினைவுகூர்ந்த விதம் அருமை. உங்கள் அஞ்சலியை அவர் நிச்சயம் செவிமடுத்திருப்பார்; உங்களுக்கு ஆசிகளுடன்.

//மூணு டெச்சு, யெல்லோ கல்லர், பவுன் (ப்ரவுன்) கலர், அப்புறம் பட்டாச்சு கூட என வகைப் பிரித்து கேட்கத்தெரிந்துவிட்டது அமித்துவுக்கு. //

அடி சக்கை!
அமித்துக் குட்டிக்கு அன்பு முத்தங்களுடன் தீபாவளி வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

//புத்தாடைகளெல்லாம் எடுக்காமல் அதிக பட்சம் இட்டிலி, கறிக்குழம்போடு முடித்துவிடுவார்கள். அதுகூட அக்கம் பக்கத்து பழக்கத்தினால் தான்.//
 
மிக உண்மை. இப்பவும் கிராமங்களில் இப்படித்தான். காலையில் இந்த இட்லியைத் தின்றுவிட்டு காட்டிற்கு களையெடுக்கச் சென்றுவிடுவார்கள். நாங்களெல்லாம் பொட்டிக்கடையில் ஐந்து ரூபாய்க்கு வெடி வாங்கி வெடித்தாலும், " ஏண்டா.. சிவகாசியில கரியைச் காசாக்குறான். ஆனா நீங்க காசைக் கரியாக்குறீங்க" னு சொல்லி திட்டுவார்கள்.
 
//இந்த தீபாவளிக்கு புத்தாடைகள் அணியப்போவதில்லை. இந்த தீபாவளிக்கு மட்டுமில்லை,யார் வாயிலாகவோ வீடு தேடி வந்து எங்களை கண்ணீரில் நனைய வைத்து, மறைந்தாலும் இருந்து வாழும் உன் அன்பினில் இனி எந்த தீபாவளிக்கும் நாங்கள் அப்படித்தான் இருப்போம்.//
 
அவர் மீது நீங்கள் கொண்ட அன்பினை இதைவிட வேறு வரிகளால் சொல்லிவிடமுடியாது.:-(

suvaiyaana suvai said...

malarum ninaivukal

suvaiyaana suvai said...

ithu en blog http://susri13.blogspot.com

மோனிபுவன் அம்மா said...

" கருப்பாய், கனத்த சரீரத்துடன், சாய்வாக சிரித்துக்கொண்டே, புஸ்வாணத்தை கையிலெடுத்து பிடிக்கும் உன் அழகில்,மேலெல்லாம் சின்ன சின்ன நெருப்புப்பொறிகள் பறக்க மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருப்போம். இனிமேலும் எல்லா புஸ்வாணத்தின் பூப்பொறிகளிலும் நீ சிரிப்பாய். நான் பதிலுக்கு புன்னகைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பேன்.

காலம் காற்றைப்போல மிதமாகவும் சில சமயங்களில் சூறாவளியாகவும் சுழற்றிப்போட்டுப்போகிறது வாழ்க்கையை"

இதை படிக்கும் போது மாமா பக்கத்தில் நிற்பது போல இருக்கு எனக்கு மாமா அந்த ஆட்டோ சட்டை போட்டுக்கொண்டு வா மா என்று என்னை அழைப்பது நினைவுபடுத்துகிறது பா

Unknown said...

அமித்து அம்மா, இந்தத் தீபாவளியை நீங்கள் கொண்டாடாவிட்டாலும் அடுத்து வரும் தீபாவளிகளை நீங்கள் கொண்டாடுவதே உங்கள் மாமாவுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.

உங்க தீபாவளி நினைவுகள் எனக்கும் பல சிறுவயது நினைவுகளைக் கிளறிவிடுது. அப்பாவுக்கு தீபாவளி கொண்டாடப் பிடிக்காது (பழைய திராவிடர் கழக மிச்சம்). அதனால் வீட்டில் கோலாகலமான பண்டிகை என்றால் அது பொங்கல் தான். அப்படியே பழகிட்டதால தீபாவளி இப்பவும் கொஞ்சம் ஒட்டாமலே தள்ளி நிக்குது.

செஞ்சி - ம்ம் அருமையான ஊர். என் அப்பா 13 வருஷம் செஞ்சிக்கு பக்கத்திலே வேலைப் பார்த்தாங்க. அழகான மனசைக் கொண்ட மனிதர்கள். அந்த ஊரை விட்டு எப்பவோ வந்துட்டாலும் இன்னமும் அப்பாவோட நட்பில் இருப்பவர்கள், மறக்க முடியாதவர்கள்.

Dhiyana said...

நெகிழ்வான நினைவுகளுடன் தீபாவளி பதிவு... அருமை அமித்து அம்மா!!!

மாதவராஜ் said...

நல்ல மனிதர்களோடு வாழ்ந்த நாட்கள் எல்லாமே பொங்கல்தான், தீபாவளிதான்!

சந்தனமுல்லை said...

hmm :((

/ சென்ஷி said...

:(

மனதைக் கலங்க வைக்கிறது வரிகள் சுமந்திருக்கும் உண்மை!

அதே!!

பின்னோக்கி said...

தீபாவளியை வலியோடு பார்க்க உங்களுக்கு மாமா..எனக்கு என் அப்பா...
ஒவ்வொரு குடும்பத்திலும் தீபாவளியை, குழந்தை போல ரசிப்பதற்கு ஒரு பெரியவர் இருந்திருக்கிறார், க்கிறார்.

இரசிகை said...

unarvup poorvamaa irunthuchu...