11 May 2009

காக்காணி

இலையோடு இலை கூட அசையவில்லை, காற்றே இல்லை, மேல் துண்டால் விசிறி விசிறி விட்டுக்கொண்ட சின்னையனுக்கு தூக்கமே வரவில்லை, எழுந்து வீட்டுக்குள் போனார், சிம்னி விளக்கு ஆடாமல் அசையாமலிருக்கும் ஒரு சுடரைக் கொண்டு அந்த இருட்டுக்கு ஒளி பிறப்பித்துக்கொண்டிருந்தது. இவர் வீட்டுக்குள் சென்ற சிறு வேகம் அந்தச்சுடரை ஏதேனும் செய்திருக்க வேண்டும்சற்றே இடப்பக்கம் சாய்ந்து பின் நிமிர்ந்தது.

பழக்கப்பட்ட இருள், ஒற்றைச்சுடர் கொண்டு வந்த சிறு வெளிச்சத்தில், ஏற்கனவே கந்தலாகிப் போயிருக்கும் ஒரு வேட்டியின் முனையை கொஞ்சம் கிழித்தார், ஈரப்படுத்திக்கொண்டார், அந்நேரத்தில் மஞ்சளுக்கு எங்கே போவது என்று யோசித்தார்.சாமி படத்தில் குங்குமத்தைப் பற்றி இருந்து கொஞ்ச காய்ந்த மஞ்சளையே அந்த ஈரத்துணியால் துடைத்துக்கொண்டார். கவனமாக ஒரு ரூபாயை முடிச்சிட்டார். சாமி போட்டோ வைத்திருந்து அந்த ஆணி மேலேயே அந்த நாணய முடிச்சை முடிச்சிட்டார். ஒரு பெருமூச்சிட்டு வீட்டுக்கு வெளியில்வந்து பீடியைப் பற்ற வைத்தார். யோசனைகள் அலை பாய்ந்தது. நாளைக்கு அவன் வந்துடுவானோ, இந்த காக்காணியும் இல்லாம பூடுமோ.. அன்னிக்கு வந்த வேகத்துல சரின்னு சொல்லிட்டாலும். இதுவும் கைய விட்டு பூட்டா, என்னாத்த செய்யுறது. நமக்குத்தான் வயசாயிடுச்சி, பாத்துக்க முடியாமபோய்ட்டாலும், போகியத்துக்காவது போட்டு உடலாம், வருசத்துக்கு அஞ்சாறு மூட்டையாவோ, இல்ல பணமாவோ வாங்கிடலாம், காணிய கண்ணுல பாத்துக்கிட்டே இருக்குற இந்த கொற காலத்த ஓட்டிரலாம் என்று எண்ணியிருந்ததின் மீது நாளை கை நாட்டு வைத்துவிடுவோமோ. ம்ஹூம் பொன்னாத்தா, நீயிருந்தா இதெல்லாம் பாத்துப்ப, நான் பாட்டுக்கு கழனிக்கு போனனா, வந்தனான்னு இருந்திருப்பேன். நீயும் போயி, இப்ப நெலமும் போவப்போகுது என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே, கண்ணோரம் ஈரத்தை கைத் துண்டால் துடைத்து, மூக்கை சிந்திப்போட்டார்.

இந்தப் பன்னாட பையன் மட்டும் வரலன்னா, நான் நின்னவாக்குலயே நின்னிருப்பன். அன்னிக்கு அத்தன பங்காளி பயலுவளும் ஒத்துக்கினு எங்கிட்ட பேச வந்தானுங்க, அன்னிக்கி நா இன்னா ஒத்துக்கனன்னா. எத்தினி பேரு எத்தினி சொன்னானுங்க, ரோட்டோரம் நெலமா கெடக்குது, அந்த கம்பேனிக்காரவுனுக்கு வித்துபுடு, அதுவும் உன்னோட காணி கெடக்கறது நடுவுல. சுத்து பட்டுல இருக்குறது உம் பங்காளிகளோடதுதான். அதுவுமில்லாம கெணறும் பாகத்துல வருது, நாலக்கி அவனுவல்லாம் நெலத்த வித்தா கெணத்தோட சேர்த்துதான் விப்பானுங்கோ. அப்ப நீ மட்டும் விக்காம வெவசாயம் பண்ண தண்ணிக்கி எங்கயா போவ. ஒன்னு காஞ்சி கெடுக்குது, இல்ல பேஞ்சி கெடுக்குது இந்த மானம். இத்த நம்பி நீ இன்னாத்த போடுவ. அதுவுமில்லாம வயசாவுதுய்யா உனக்கு, கண்ணும் தெரியலன்னுட்டு சொல்லிகினு திரியற. இந்த லட்சணத்துல நீ ஒருத்தன் எப்டிய்யா இந்த நெலத்தோட போராடிக்கினு கெடக்கப்போற?. பேசாம நாஞ் சொல்றத கேளு. உம் பங்காளிங்கள்ளாம் ஒத்துகினானுங்கோ, செண்ட்டுக்கு 10000 ரூவா, ஏதோ பெரிய கம்பேனிக்காரன் வந்து வாங்கிக்கப்போறானுங்களாம்
நீ ஒருத்தந்தான் மொரண்டு புட்ச்சிகினுகிற. ஒங் காணி ஓரஞ்சாரமா கெடந்தாலும் உட்டு கெடாசிட்டு பூடலாம். நீ நட்ட நடுவுல வெச்சிகினு விக்கமாட்டன்னு புடியா புட்ச்சிகினுகிற. அவனுங்க மட்டும் இன்னா, வேணும்னா விக்கப்போறானுங்க, கடா மாரி வளத்துவுட்ட புள்ளைங்கல்லாம் கெளப்பிவுடுதுங்கோ, நல்ல வெலைக்கு கேட்கறான், குத்துடு, குட்த்துடு, அப்டினு, இவனுங்களும் கொட்ச்சல் தாங்காமத்தான வித்துக்குட்த்துட்டு ஒழிச்சிடலாம்னு நெனைக்கிறானுங்க.

சரி தோ பாரு சின்னைய்யா, இன்னிக்கி இல்லனாலும், நாள பின்ன, மெட்ராஸ்ல இருக்குற ஒம் புள்ள இந்த நெலத்த விக்கத்தான் போறான், அப்ப இன்னா நீ ஒக்காந்து பாத்துக்கிட்டா இருக்கப்போற, இல்ல அப்ப நெலந்தான் இந்த வெளைக்கு போவுமா சொல்லு. இந்த கரம்புக்கெல்லாம் எவன்யா இம்மாங் காசு குட்த்து வாங்குவானுங்கோ. ஏதோ நெல ப்ரோக்கருக்க கம்பெனிகாரனுங்கள் கூப்ட்டுகினு வந்தானுங்களோ, இது இம்மா வெல போவுது, கூட நெலம் வேற ரோட்டோராம் கீது. அதான். பாரு, பட்டுன்னு முடிவெடு, அடுத்த வாரம் அந்த கம்பேனிக்காரவுனுங்க வரானுங்களாம். நெலத்துக்கு பாத்தியத ஆன நீங்க 6 பேரும் ஒன்னா இருந்து கையெழுத்து போட்டுக் கொடுங்க, போட்ட கையோட பணத்த செட்டில் பண்ணிக்குங்க என்றார்கள். டீக்கடையில் இது ஏதோ ஒரு மேடைக்கூட்டம் மாதிரி நடந்த்து. சுற்றிலும் 10 ஊர்க்காரனுங்க, 6 பங்காளிங்க என்று பல்குத்திக்கொண்டும், பீடி குடித்துக்கொண்டும், பேசினா....................ர்கள். இது எதுக்கும் புடி கொடுக்காமல் பேசிவிட்டு வந்தார் சின்னையன். ரெண்டே நாள்தான்.

ஒரு நா, பத்து மணி வாக்குல புள்ளகாரன் வீட்டு வாசல்ல வந்து நிக்கறான். திண்ணையில் குந்திக்கொண்டிருந்த சின்னையன், அவன் வந்து நின்றதைப் பார்த்தவுடனே புரிந்துகொண்டார், செத்தாதான் வருவான்னு நெனச்சோம், பரவால்ல உயிரோட இருக்கும்போதே வந்துட்டான், எந்த பொறம்போக்கோ இவனுக்கு போன் பண்ணி சொல்லியிருக்கும், அதான் கலெக்டர் மயிரு வந்துட்டாரு கண்டுக்கிட்டு போவ என்று எண்ணியபடி,துண்டை உதறி மேலே போட்டுக்கொண்டு, இடுப்பு வேட்டியை சரி செய்தார். வா என்று நிலத்தைப் பார்த்து கூப்பிட்டவாறே, உள்ளே போய் ஒரு சொம்பு தண்ணிய எடுத்தாந்து திண்ணையில் வைத்து விட்டு, தொண்டையை கனைத்தார், ஊர்ல புள்ளைங்க, அவ, எல்லாம் சொகந்தானே, படிக்குதுங்களா?. பதிலுக்கு, உம், ரெண்டும் பள்ளிக்கூடத்துக்கு போவுதுங்க. பெரிசுக்கு தான் 2 நாளா காய்ச்ச. இல்லனா ஞாத்திக்கெழமையே வந்திருப்பேன் என்று பதில் சொன்னான்

ராஜேந்திரன், சின்னையன், பொன்னம்மா தம்பதியின் ஒரே மகன். இந்நேரம் பொன்னம்மா இருந்திருந்தா, புள்ள வந்து வாசல்ல நின்னத பாத்தவொடனே, யப்பா, ராசா, வந்தியான்னு மூக்க சிந்திப்போட்டுட்டு, கோழி வெட்டவா, ஏரி மீன் புடிக்க சொல்லவா ந்னு லிஸ்ட்டு போடுவா. இவனும் மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு, மைனர் மாறி ஊர் சுத்திக்கிட்டிருப்பான்.

ஒரே புள்ள, ஊட்டி ஊட்டி வளர்த்து, பத்தாவதுக்கு மேல படிப்பேறாம, ஊர்ல இருக்கறதுங்களோட சேர்ந்துக்கினு மெட்ராஸ்ல போய் கழட்டபோறன்னு போச்சு, அங்க போயி எவன் கிட்ட ஒதையும், திட்டும் வாங்குச்சோ, இன்னாவோ, கார் மெக்கானிக்கா ஆயிடுச்சு. ஒரு நா ஞாயித்துக்கெழமை, ஒரு ஓட்ட கார எடுத்துக்கினு, நாலு பசங்கள கூட்டுக்கினு ஊருக்கு வந்தவுடனே, பொன்னம்மாளுக்கு கை, கால் புரியவில்லை. யப்பா, காரா ஓட்டற, காரா ஓட்டற, என்று புள்ள தேர் ஓட்டுறா மாதிரி 10 தடவயாவது கேட்டாள். பத்தாததுக்கு ஊர் முழுக்க புள்ள கார்ல வந்தத தமுக்கடிச்சா. எவ கண்ணு பட்டுச்சோ, எண்ணி 6 மாசம் கூட ஆவல, ஒரு நா, ஒரு பொண்ண இட்டுக்கினு வந்து, தோ இவளதான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு சொல்றான். எவ்வளவோ வாதாட்டம். பொன்னம்மாவும் மூக்க சிந்திப்பாக்குறா, பட்டினி கெடந்து பாக்குறா, ஒன்னும் வேலைக்காவாத, தான் புட்ச்சதே புடின்னு அவன் கல்யாணம் பண்ணிக்கொண்டான். கொஞ்ச நா, பங்காளிங்களோட பேச்சு வார்த்த கூட இல்லாமதான் இருந்த்து. அப்புறம் பொன்னம்மா செத்தவுடந்தான் ஏதோ ஒரு நா, கெழமைன்ன பண்டம், பலகாரம் குடுக்கன்னு ஒட்டனானுங்க. ம்ஹூம், பொன்னம்மாவோட போச்சு, வாய்க்கு ருசியா சாப்புட்டது, கண்ணுக்கு அழகா கட்டுனதும். அவ வேட்டிய தோச்சான்னா, தும்பப்பூவு கணக்கா இருக்கும். கருவாட்டுக்கொழம்பு வெச்சான்னா, மணக்க மணக்க இருக்கும். இன்னாதான் கழனில, கொள்ளில இல்ல கூலிக்கு போய் மாடு மாதிரி ஒழைச்சிட்டு வந்து அலுப்பு சுலுப்பா இருந்தாலும் முக்கிகிட்டு மொணறிகிட்டாவது ஒரு கொழம்ப வெச்சிடுவா. சுட சோறும், கொழம்பும் ஒரு நா தவறுனதுல்ல.

ம்க்கும், இப்ப எங்க, உப்பு இருந்தா, ஒரப்பு இல்ல, நான் வெக்குற கொழம்புல என்று நீ.....ண்ட யோசனையை, ஒரு தொண்டை கனைப்பு கலைத்தது. நிமிர்ந்து பாத்தால், புள்ள, இன்னும் ஊர்க்காரனுங்க நாலு பேரும் நிக்கறானுங்க. ராஜேந்திரன் பேசினான், வயசாயிடுச்சு, இனிம இந்த நெலத்த வெச்சிக்கிட்டு இன்னாப் பண்ண போற, நல்ல வெலைக்கு வருது, குடுத்துட்டு, பணத்த நீ பேங்க்குல போட்டுக்க, வர்ர வட்டிய வெச்சு சாப்புடு. பின்னாடி பாத்துக்கலாம். அட கம்னேட்டி, இத சொல்லத்தான் மெட்ராஸ்ல இருந்து வந்தியா என்று நினைத்துக்கொண்டார் சின்னையன்.

சொல்றத கேளு, இனிமே எதுக்கு வேவா வெயில்ல கஷ்டப்பட்டுக்கினு, அம்மாவும் இல்ல. பேசாம வித்துட்டு மெட்ராஸ் பக்கமா ஒரு எடம் வாங்கிப்போடலாம்,. கடசி காலத்துல நீயும் அங்க வந்து வுழுந்து கெட என்றான். ம்க்கும் இம்மான்னாளு இங்க கஷ்டப்பட்ட, கொற நாள மெட்ராஸ்ல வந்து கஷ்டப்பட்டுக்கினு இருன்னு சொல்றியா என்று நினைத்தவாறே, இப்ப இன்னா, அந்தக் காணி இருக்கறது உங்க எல்லார் கண்ணுலயும் உறுத்துது, அம்மாந்தானே, த்தே, இங்க பாருடா, நானும் வித்துக்குடுக்க ஒத்துக்கனன்னு போய் சொல்லிடு, இம்மாந் நாளு அதுதாண்டா எனுக்கு சோறு போட்டிச்சி, பெத்த புள்ள கூடப் போட்டதில்ல ஒரு வா. அத்த விக்கனும்னு ஆய் போச்சு, நாஞ் செய்யலனாலும், என்ன செய்ய வெச்சிட்டீங்க, ப்போய் சொல்லு, சின்னையன் ஒத்துக்கினாருன்னு.

ராஜேந்திரன், த்தே, அப்படி ஒன்னு எனாமா, யாசமா நீ ஒன்னும் தூக்கிக்குடுக்க வாணாம், எனக்குன்னா, நா கத்துக்குன கைத்தொழில் இருக்குது, அது கஞ்சி ஊத்தும், எந்த மயிரானாவது வித்துக்குனு போங்க, இல்ல விக்காட்டி போங்க என்று விசுக்கென்று சொல்லியவாறே கூட்டாளிகளோடு குடிக்க போய்விட்டான். மறுபடியும் போதை ஏற்றிக்கொண்டு வந்து இன்னும் நாலு வார்த்த பேசித் தீர்த்தான், கடைசியில அழுது முடித்தான். சின்னையனுக்கு வெறுத்துப்போனது. ச்சே என்று ஆகிவிட்டு, வித்துபோடுவோம் என்று ஒத்துக்கொண்டார்.

இருந்தாலும் ஏதோ மனசு அடித்துக்கொள்ள, விக்காம இருந்தா நல்லா இருக்கும், கடசி காலத்துல எனக்கு தொணையா இருக்கும், என் காலத்துக்குப்பின்ன அவன் வித்து பொழைச்சிக்கிட்டும், என்ற வேண்டுதலோடுதான் ஒற்றை ரூபாயை முடிச்சிட்டார். பொன்னம்மாவின் பழக்கம் அது, என்ன மனக்கஷடமிருந்தாலும், உடம்பு கஷ்டமிருந்தாலும், ஒத்த ரூபா முடிச்சுதான், எண்ணி ஒரு வாரம் எல்லாம் சரியாகிவிடுமென்பது அவளின் நம்பிக்கை. சில சமயம் இரவு நேரங்களில் வெத்தலை பாக்கு போட்டுக்கொண்டே, தான் நேர்ந்து கொண்டதையும் உடன் அது பலித்ததையும் சொல்லிக்கொண்டிருப்பாள். பதிலுக்கு இவர், அப்ப ஒம் புள்ள இழுத்துகினு போம் போது ஒரு ரூவா முடியறதுதானே, திரும்பி வந்துட்டிருப்பான் என்று கேலி பேசுவார். பொன்னம்மாவோ, ஆயிரம் இருந்தாலும் அது நம்ம புள்ள, நேர்ந்துகிட்ட பின்ன அதுக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிப்போச்சுன்னா, நாமதானே வெச்சுக்கினு படனும் என்பாள். இப்படியாய் அன்றிரவு பொன்னம்மாளின் நினைவுகளைப் போர்த்தி உறங்கிப் போனார் சின்னையன்.

மறுநாள் காலை, கம்பெனிகாரனுங்க வந்தானுங்க. அளவெடுத்தானுங்க, இத்தனை செண்ட்டுக்கு இவ்வளோ ரூவா, இத்தனாந் தேதி ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம் என்று பேச்சாகியது. சின்னையன் பேசாமல் கிடந்தார். இரண்டு நா கூட ஆகலை, அரசல் புரசலா செய்தி வந்தது, ஒரு செண்டுக்கு பத்தாயிரம் ரூவா இல்லியாம், அஞ்சாயிரம்னு வேணா பேசி முடிக்க சொல்லியிருப்பதாக ப்ரோக்கர் சொன்னான், காரணம் கேட்டதுக்கு ரியல் எஸ்டேட் பிஸினஸ் கொஞ்சம் இறங்குமுகமாக இருப்பதாகவும் சொன்னான். அவன் அவன் வேலையே இல்லாம வீட்டுக்கு போயிட்டு இருக்கானுங்க, இந்த நெலமையில எங்கத்த நெலத்த வாங்கிப்போடுவானுங்க. ஒயரத்துக்கு போனதெல்லாம், கீழ ஒக்கார ஆரம்பிச்சிருக்கு.அஞ்சுக்கு ஒத்துக்கறீங்களா, இதுவும் நல்ல வெளைதான் இந்த எடத்துக்கு என்றான்.

பலாப்பழம் கிடைக்கும் என்று எண்ணியிருந்தவர்கள், சுளைதான் கெடைக்கும் என்றாகியபோது, பக் கென்று ஆனார்கள். சின்னையன் நினைத்துக்கொண்டார், என்னிக்குமே எம் மண்ணு, எங் காணி குடி கெடுக்காதுடா. தலைமொறை தலைமொறையா பசி தீர்த்த பூமிடா இது. இத வித்து கூறு போடாதீங்கடான்னு அன்னிக்கே சொன்னேன், கேட்டீங்களா. பத்துக்கு வாய பொளந்தீங்களே, இன்னிக்கு அஞ்சு ந்ன்றான். இப்ப இன்னாடா பண்ணப் போறீங்க என்றார்.அவரின் குரலில் எகத்தாளமிருந்தது. அங்கிருந்த அனைவரும் கலைந்தார்கள். சின்னையன் போய் நிலத்தில் காலை வைத்தார், வெயில் கொளுத்தியது, ஆனால் சின்னையனுக்கு மண் சுடவில்லை, மாறாய் ஈரப்பதம் கொடுத்தது. பொழுதோடு வீட்டுக்கு வந்தவர், மறக்காமல் ஒற்றை ரூபாய் முடிச்சைப் பார்த்தார். அங்கே பொன்னம்மாள் சிரித்துக்கொண்டிருந்தாள்.


டிஸ்கி: என் முதல் சிறுகதை முயற்சி. நிறையோ, குறையோ உங்களின் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்

16 comments:

குடந்தை அன்புமணி said...

தெரில... இது முத கத மாதிரியே தெரில... அருமையா இருக்கு!

அப்துல்மாலிக் said...

முதல் கதை மாதிரி தெரியலேயே

நல்லாயிருகு எழுத்தோட்டம்

வாழ்த்துக்கள்

தொடர்ந்து எழுதுங்க‌

Thamira said...

கதை, நடையெல்லாம் நன்றாகத்தானிருந்தது.. ஆனா கொஞ்சம் நீ...ளமான ஒரு ஃபீலிங்கு.! நான் இண்டர்வெல் விட்டு படிச்சேன்னா பாத்துக்குங்களேன்.

நசரேயன் said...

கலக்கல்.. நேரிலே பார்த்த ஒரு உணர்வு..
பட்டய கிளப்பிடீங்க

அ.மு.செய்யது said...

தேர்ந்த எழுத்தாளருக்கான நடையில் மிளிர்கிறது.

ஆரம்ப வரிகள் ஜெயகாந்தனின் "பொம்மை" சிறுகதையை எனக்கு நினைவு படுத்தியது/

முதல் முயற்சியிலே வெற்றி பெற்று விட்டீர்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

=நன்றிகள் அனைவருக்கும்

அமுதா said...

முதல் கதை மாதிரியே இல்லை. நல்லா எழுதி இருக்கீங்க. நிலம் மற்றும் மனைவியின் மீதான அன்பு என்று கலந்து கலக்கலா எழுதி இருக்கீங்க... தொடர்ந்து எழுதுங்கள்

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு..நடையும் எழுத்தாளுமையும்..ஆனா கொஞ்சம் நீளம் தான் அதிகம்! :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி அமுதா, சந்தனமுல்லை.

ம், ஆமாம்ம்பா, சிறுகதை, பெருங்கதையா ஆகிடுச்சில்ல...

கார்க்கிபவா said...

/ நான் இண்டர்வெல் விட்டு படிச்சேன்னா பாத்துக்குங்களே//

இதனால் சகலமானவருக்கும் சொல்வது என்னவென்றால்.. ஆதி கதையை முழுசா படிச்சாராம்..

ஏங்க, பொதுவா சிறுகதைகள் இதைவிட பெரிதாக இருக்கும்.. பதிவுலகைல் மட்டும்தான் சிறுகதை என்ரால் ஒரு பக்க கதை சைஸில் போடுவார்கள். நிறைய வாசிச்ச ஆதிக்கு இது எப்படி பெருசா தெரியுது?

எப்படியோ கதை எனக்கு பிடிச்சது.. நம்புங்க படிச்சேங்க..

Unknown said...

நல்ல கதை அமித்தும்மா. உங்களுக்கு கதை சொல்லும் திறன் நல்லா வருது. எல்லாரும் சொன்ன மாதிரி narration அதிகம். இடையில dialogues இருந்தா அலுப்பு தெரியாமா கதை வழுக்கிகிட்டு ஓடும். ஆனால் முதல் கதையே excellant, only for this length, its a very good story. கதாசிரியை ஆகிட்டீங்க...வாழ்த்துக்கள்..

தமிழ் அமுதன் said...

பச்சை மாங்காய வெட்டி மொளகா பொடி, உப்பு சேர்த்து சாப்பிடுறது போல ஒரு சுவையான கிராமத்து தமிழ்! முதல் கதை போல தெரியல ஒரே மூச்சுல எழுதினது போல
இருக்கு, காட்சிகள கண்ணுக்குள்ள கொண்டு வந்துடீங்க ''ஒன்பது ரூபாய் நோட்டு''
படத்துல வர்ற சத்யராஜ் போல தோனுது உங்க சின்னையா கேரக்டர்!

கதாசிரியைக்கு வாழ்த்துக்கள்!!

"உழவன்" "Uzhavan" said...

அமித்துமா.. சூப்பர்.. எனக்கு பொதுவா இந்த கிராமத்துக் கதைகள் ரொம்ப பிடிக்கும். கதையில் நல்ல மெசேஜ் வேறு. மகிழ்ச்சி

//சின்னையன் போய் நிலத்தில் காலை வைத்தார், வெயில் கொளுத்தியது, ஆனால் சின்னையனுக்கு மண் சுடவில்லை, மாறாய் ஈரப்பதம் கொடுத்தது. //

உண்மை.. இது கற்பனையல்ல. கொளுத்தும் வெயிலில் கூட எங்கள் தோட்டத்தில் வேலை பார்த்த அனுபவம் எனக்கு உள்ளது.

//பொழுதோடு வீட்டுக்கு வந்தவர், மறக்காமல் ஒற்றை ரூபாய் முடிச்சைப் பார்த்தார். அங்கே பொன்னம்மாள் சிரித்துக்கொண்டிருந்தாள்.//

முடித்த விதம் அருமை. :-)

ஆயில்யன் said...

எக்ஸலண்ட்...!


வட்டாரமொழியில சிறுகதைகள் வருவது மிகக்குறைவு !

ஸோ அந்த வகையில்

கண்டினியூ!

கண்டினியூ!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்ல அழகான நடை. ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். நிறைய எழுது ங்கள். நல்ல திறமை இருக்கிறது. பாராட்டுக்கள் .

Deepa said...

எழுதிய அன்றே பார்த்து விட்டேன். ஒரே மூச்சில் படிக்க வேண்டும் என்று நினைத்ததால் சாவகாசமாய் இன்று படித்தேன்.

ரொம்ப அழகான நடை. பலரும் சொல்லி இருப்பது போல் முதல் முயற்சி போலவே இல்லை. நெகிழ்வான கதை. நெஞ்சைத் தொடும், நகைச்சுவை இழையோடும் வரிகள்.

//ஓட்ட கார எடுத்துக்கினு, நாலு பசங்கள கூட்டுக்கினு ஊருக்கு வந்தவுடனே, பொன்னம்மாளுக்கு கை, கால் புரியவில்லை. யப்பா, காரா ஓட்டற, காரா ஓட்டற, என்று புள்ள தேர் ஓட்டுறா மாதிரி 10 தடவயாவது கேட்டாள்.// ரொம்ப ரசித்தேன்!

இன்னும் கொஞ்சம் செதுக்கி மெருகேற்றலாம். உங்களால் முடியும்.